இனநெருக்கடிக்குத் தீர்வைக் காண்பதற்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் நடத்திவரும் பேச்சுக்களைத் துரிதப்படுத்துவதற்கு கடந்த வாரம் இணக்கம் தெரிவித்த அரசாங்கம், பாராளுமன்றத் தெரிவுக்குழு ஒன்றை அமைப்பதற்கான யோசனை ஒன்றை இவ்வாரம் பாராளுமன்றத்தில் சமர்பித்திருக்கின்றது. இனநெருக்கடிக்குத் தீர்வாக முன்வைக்கப்படக்கூடிய அரசியலமைப்புத் திருத்த யோசனைகளை தயாரிப்பது இந்த பாராளுமன்றத் தெரிவுக்குழுவுக்கு வழங்கப்பட்டுள்ள ஆணை. இதற்காக ஆறுமாத கால அவகாசமும் இதற்கு வழங்கப்பட்டுள்ளது.
இது சமாதானப் பேச்சுக்கள் எனக் கூறிக் காலத்தைக் கடத்துவதாகவும், தமிழ்த்தேசியக் கூட்டமைப்புடன் அரச தரப்பு நடத்தும் பேச்சுக்களின் முக்கியத்துவத்தைக் குறைப்பதாகவும் அமையலாம் என்ற சந்தேகத்தை அரசியல் வட்டாரங்கள் தெரிவித்திருக்கின்றன.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் அரசாங்கம் நடத்தும் பேச்சுக்கள் 13 சுற்றுக்களைக் கடந்துள்ள நிலையில்தான் பேச்சுவார்த்தையில் ஆராயப்பட வேண்டிய விடயங்கள் தொடர்பில் நிகழ்ச்சிநிரல் ஒன்று கடந்த வாரத்தில் தயாரிக்கப்பட்டிந்தது. அரசியல் தீர்வுக்கான அடிப்படைகளில் காணப்படும் முரண்பாடுகளைத் தீர்க்கும் வகையிலேயே இந்த நிகழ்ச்சி நிரல் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சி நிரலின் அடிப்படையிலேயே டிசெம்பர் 5 ஆம் திகதி முதல் நான்கு நாட்களுக்குப் பேச்சுக்களை முன்னெடுப்பதற்கும் தீர்மானிக்கப்பட்டிருந்தது.
இந்தப் பேச்சுக்களை டிசெம்பர் இறுதிக்குள் முடிவுக்குக் கொண்டுவந்துவிட வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு விரும்பிய போதிலும் அது சாத்தியமாகப் போவதில்லை என்பதை கடந்த வாரம் தெரிவித்திருந்தோம்.
இந்தநிலையில் அரசாங்கம் தற்போது மேற்கொண்டுள்ள புதிய நகர்வானது, இனநெருக்கடிக்கான அரசியல் தீர்வு என்பது தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் அரசாங்கம் நடத்தும் பேச்சுக்களுடன் மட்டும் தங்கியிருக்கப்போவதில்லை என அரசாங்கம் வெளியிட்டடுள்ள ஒரு மறைமுகமான அறிவித்தலாகவே கருதப்படவேண்டியிருக்கின்றது. பாராளுமன்றத் தெரிவுக்குழுவின் மூலமாகத்தான் அரசியல் தீர்வு முன்னெடுக்கப்படப்போகின்றது என்றால், கூட்டமைப்புடன் இவ்வளவு காலமும் நடத்திய பேச்சுக்கள் அர்த்தமற்றதாகப் போய்விடலாம். ஆக, பேச்சுவார்த்தை என்பது அரசாங்கம் நடத்தும் நாடகம் என்ற சந்தேகத்தை மேலும் வலுப்படுத்துவதாகவே அரசின் இந்த அறிவிப்பு அமைந்திருக்கின்றது.
இனப்பிரச்சினைக்கான தீர்வு குறித்து ஆராய்வதற்காக பாராளுமன்றத் தெரிவுக் குழு ஒன்று அமைக்கப்படும் என ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ சில மாதங்களின் முன்னர் அறிவித்திருந்தார். அதன் அடிப்படையில் அது தொடர்பான பிரேரணை ஒன்று பாராளுமன்றத்தில் ஏற்கனவே சமர்ப்பிக்கப்பட்டிருந்தது. இருந்தபோதிலும், அது தொடர்பில் எந்த நகர்வுகளும் மேற்கொள்ளப்பட்டிருக்கவில்லை. அந்தப் பிரேரணையிலுள்ள சில விடயங்களை மாற்ற வேண்டும் என அரசாங்கம் விரும்பியதால், அந்தப் பிரேரணை மீளப் பெறப்பட்டு இப்போது திருத்தங்கள் சிலவற்றுடன் புதிய பிரேரணை முன்வைக்கப்பட்டிருக்கின்றது.
பாராளுமன்றத் தெரிவுக்குழுவுக்கு குறிப்பாக 3 பணிகள் வழங்கப்பட்டுள்ளதாக பாராளுமன்றத்தில் இது தொடர்பாகச் சமர்ப்பிக்கப்பட்டுள்ள யோசனையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
1. எல்லா மக்களும் தமது தனித்துவங்களைப் பாதுகாப்பதையும், மேம்படுத்துவதையும் அத்துடன் கண்ணியமாகவும் பாதுகாப்பாகவும் ஒரு தேச மக்களாக வாழ்வதை உறுதிப்படுத்துவதற்கும்,
2. இலங்கை மக்களின் ஐக்கியத்தை மேம்படுத்துவதற்கும்,
3. சமூக, பொருளாதார, அரசியல் மற்றும் கலாசார அபிவிருத்தியை மேம்படுத்துவதற்கும் மக்களுக்கும், நாட்டுக்கும் தத்துவமளிப்பதற்கும் அரசியல் மற்றும் அரசியலமைப்பு நடவடிக்கைகளை ஆறு மாத காலத்துக்குள் விதந்துரைப்பதற்கு பாராளுமன்றத் தெரிவுக்குழு நியமிக்கப்பட வேண்டும் என்பதுதான் கடந்த செவ்வாய்கிழமை பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட்ட பிரேரணையாகும்.
இந்தப் பாராளுமன்றத் தெரிவுக்குழுவின் தலைவர் சபாநாயகரால் நியமிக்கப்படுவார். இக்குழுவில் 31 உறுப்பினர்கள் இடம்பெறுவர்கள். இக்குழு தனது நடவடிக்கைகளைப் பூர்த்தி செய்வதற்கு முன்னதாக இடைக்கால அறிக்கைகளைச் சமர்பிக்கும் என்பன போன்ற விடயங்களும் இந்தப் பிரேரணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் நியமிக்கப்படவுள்ள 31 உறுப்பினர்களில் 19 உறுப்பினர்கள் அரசாங்கத் தரப்பைச் சேர்ந்தவர்களாகவும் 12 உறுப்பினர்கள் எதிர்க்கட்சியைச் சேர்ந்தவர்களாகவும் இருப்பார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆளும் கட்சியைப் பொறுத்தவரையில் அதில் பல கட்சிகள் உள்ளடங்கியுள்ளன. அதில் பிரதான கட்சியான சிறிலங்கா சுதந்திரக் கட்சிக்கு 4 இடங்களும் ஏனைய கட்சிகளுக்கு தலா ஒவ்வொரு இடமும் வழங்கப்படும் எனத் தெரிகின்றது.
அரசாங்கம் இந்த நகர்வை மேற்கொண்டுள்ள நிலையில், இந்தப் பாராளுமன்றத் தெரிவுக்குழுவில் நம்பிக்கை வைக்க முடியுமா என்ற கேள்விக்கு அப்பால் இரண்டு பிரதான கேள்விகள் எழுப்பப்படுகின்றது. 1. தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடனான பேச்சுக்களை இது பாதிக்குமா என்பது. 2. எதிர்க்கட்சிகள் இதில் பங்குகொள்ளுமா என்பது.
இலங்கையைப் பொறுத்தவரையில் இவ்வாறான தெரிவுக்குழுக்கள் அமைக்கப்படுவது எப்போதும் காலத்தைக் கடத்துவதற்கான அரசியல் உபாயமாகவே இருந்திருக்கின்றது. 2005 ஆம் ஆண்டுத் தேர்தலில் வெற்றி பெற்று அதிகாரத்துக்கு வந்த பின்னர் இது போன்ற தெரிவுக்குழு ஒன்றை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அமைத்திருந்தார். இனநெருக்கடிக்கு அரசியல் தீர்வைக் காண்பதற்கான யோசனைகளைச் சமர்ப்பிப்பதுதான் அதற்காக வழங்கப்பட்ட பிரதான பணியாக இருந்தது.
அமைச்சர் போராசிரியர் திஸ்ஸ விதாரணை தலைமையிலான இந்தக் குழு இனநெருக்கடிக்காக முன்வைக்கக்கூடிய அரசியல் தீர்வு யோசனைகள் தொடர்பில் சுமார் 4 வருடகாலமாக ஆராய்ந்த பின்னர் சமர்பித்த அதன் இறுதி அறிக்கைக்கு என்ன நடந்தது என்பது எவருக்கும் தெரியாது. இந்த நிலையில் மற்றொரு குழுவின் செயற்பாடுகளில் எவ்வாறு நம்பிக்கை வைக்க முடியும்?
இதனைவிட பாராளுமன்றத் தெரிவுக்குழு என்று குறிப்பிடும் போது, அதில் ஜாதிக ஹெல உறுமய போன்ற பல சிங்களத் தேசியவாதக் கட்சிகளும் இடம்பெறும். அரசாங்கம் இன்று சிங்களத் தேசியவாதிகளை நம்பித்தான் அரசியல் நடத்துகின்றது. இவ்வாறான கட்சிகளின் செல்வாக்கிற்கு உட்பட்ட பாராளுமன்றத் தெரிவுக்குழு தமிழர்களின் அபிலாஷைகளைக் கருத்திற் கொள்ளக்கூடிய ஒரு தீர்வை வழங்கும் என்பதை எவ்வாறு நம்ப முடியும்?
இதனைவிட இந்தத் தெரிவுக்குழுவுக்கு 6 மாத கால அவகாசம் வழங்கப்பட்டிருக்கின்றது. இந்தக் கால அவகாசத்துக்குள் குழுவால் தீர்வொன்றைக் காண முடியவில்லை என்றால் இந்தக் கால அவகாசம் மேலும் 6 மாத காலத்துக்கு நீடிக்கப்படலாம். ஆக, வெறுமனே காலத்தைக் கடத்துவதற்கான ஒரு நாடகமாக மட்டுமே இது அமையும்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடனான பேச்சுக்களை இது பாதிக்குமா எனக் கேட்டால் நிச்சயமாகப் பாதிக்கும் என்றுதான் சொல்ல வேண்டும். காரணம் - 1. கூட்டமைப்பு குறுகிய காலத்துக்குள் பேச்சுக்களை முடிவுக்குக் கொண்டுவர விரும்புகின்றது. இருந்தபோதிலும் பாராளுமன்றத் தெரிவுக்குழு இதற்கு முரணாக அமையலாம். 2. பாராளுமன்றத் தெரிவுக்குழு அரசியல் தீர்வுக்கான யோசனைகளைத் தயாரிக்க முற்படும் போது அதே நோக்கத்தைக் கொண்ட அரசு - கூட்டமைப்பு பேச்சுக்கள் அர்த்தமற்றதாகிவிடும். ஏனெனில் பாராளுமன்றத் தெரிவுக்குழுவின் முடிவுதான் வலுவானதாகக் கருதப்படும்.
எதிர்கட்சிகள் இந்த செயன்முறையில் பங்குகொள்ளுமா என்பதும் கேள்விக்குறியாகத்தான் இருக்கின்றது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இதில் பங்குகொள்ளாது என அதன் பேச்சாளர் சுரேஷ் பிரேமச்சந்திரன் அறிவித்திருக்கின்றார். இது வெறுமனே காலத்தைக் கடத்துவதற்கான உபாயம் என்பதால் அரசின் இந்த உபாயத்துக்கு தாமும் துணை போகப்போவதில்லை என்பதால்தான் இவ்வாறான முடிவை தாம் எடுத்திருப்பதாக அவர் குறிப்பிட்டிருக்கின்றார்.
இருந்தபோதிலும் இந்தத் தெரிவுக்குழுவில் பங்குபற்றுமாறு அரசாங்கம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு நிச்சயமாக அழுத்தம் கொடுக்கும். இந்தியா மற்றும் மேற்கு நாடுகளும் அதேபோன்று அறிவுறுத்தலை கூட்டமைப்புக்குக் கொடுக்கலாம். அவ்வாறான நிலையில் இதில் பங்குகொள்ள கூட்டமைப்பு முடிவெடுக்கலாம். 3 கோரிக்கைகளை முன்வைதது அரசுடனான பேச்சுக்களிலிருந்து வெளிநடப்பச் செய்த கூட்டமைப்பின் தலைவர்கள், பின்னர் அது தொடர்பான கதையே இல்லாமல் பேச்சுக்களில் பங்குகொண்டமை அனைவருக்கும் தெரியும். அந்த நிலையில், பாராளுமன்றத் தெரிவுக் குழுவைப் பயன்படுத்தி அரசு மேற்கொள்ளும் காலங்கடத்தும் நாடகத்தில் இறுதி வேளையில் கூட்டமைப்பும் முக்கிய பாத்திரத்தை ஏற்கலாம்.
அதேவேளையில், பிரதான எதிர்க்கட்சியான ஐ.தே.க.வைப் பொறுத்தவரையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எடுக்கும் நிலைப்பாட்டைத்தான் அவர்களும் எடுப்பார்கள் எனத் தெரிகின்றது. மற்றொரு எதிர்கட்சியான ஜே.பி.வி.யும் இதில் பங்குகொள்ளாது என்றே தெரிகின்றது. ஆக இது ஆளும் தரப்பை மட்டும் கொண்ட ஒரு பாராளுமன்றக் குழுவாகத்தான் இருக்கும் என எதிர்பார்க்கலாம். இருந்தபோதிலும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இவ்விடயத்தில் எடுக்கும் உறுதியான தீர்மானம் முக்கியமானதாக இருக்கும்!
இந்தத் தெரிவுக்குழு என்பது காலத்தைக் கடத்துவதற்கும், சர்வதேச அழுத்தங்களைச் சமாளிப்பதற்குமான அரசாங்கத்தின் ஒரு உபாயமாக மட்டும்தான் இருக்கமுடியும் எனக் கூறுவதற்கு பல காரணங்கள் உள்ளன. அதனால்தான் கூட்டமைப்புடான பேச்சுக்கள் முக்கியமான ஒரு கட்டத்துக்கு வந்திருப்பதாகக் கருதப்படும் ஒரு தருணத்தில் இந்த பாராளுமன்றத் தெரிவுக்குழு யோசனை முன்வைக்கப்பட்டிருக்கின்றது.
அரசியல் தீர்வு எனக்கூறி சர்வதேசத்தின் அழுத்தங்களை மழுங்கடிப்பதற்கான அரசின் இவ்வாறான செயற்பாடுகளை எதிர்கொள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் எதிர்க்கட்சிகளும் எவ்வாறான உபாயத்தைக் கையாளப்போகின்றன என்பதுதான் இன்று எழும் கேள்வி! அல்லது அவையும் இதற்குத் துணை போகப் போகின்றனவா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்!
- சபரி.
ஞாயிறு தினக்குரல்

No comments:
Post a Comment