Wednesday, July 10, 2013

தடைசெய்யப்பட்ட 'ரைம்' சஞ்சிகையும் வலுவடையும் பௌத்த தீவிரவாதமும்


உலகின் முன்னணி சஞ்சிகையான அமெரிக்காவிலிருந்து வெளிவரும் 'ரைம்' வார இதழ் கடந்த வாரம் கட்டுநாயக்க விமான நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டது. பின்னர் சஞ்சிகை தடை செய்யப்பட்டு சுமார் 4,000 பிரதிகளை சுங்கப் பகுதியினர் கைப்பற்றிக்கொண்டார்கள். சர்வதேச ரீதியில் முன்னணியிலுள்ள சஞ்சிகை ஒன்று இலங்கையில் தடைசெய்யப்படுவது இதுதான் முதல் முறை என்பதால் விவகாரம் சர்வதேச கவனத்தைப் பெற்றிருக்கின்றது. ஊடக சுதந்திரம் தொடர்பில் முக்கியமாகப் பேசப்படும் நிலையில் இந்தத் தடை, அதுவும் அமெரிக்காவின் முன்னணி சஞ்சினை ஒன்றின் மீதான தடை அனைவரின் ஊடக சுதந்திரத்துக்காக குரல் கொடுக்கும் அமைப்புக்களின் கவனத்துக்குச் சென்றிருக்கின்றது.

'ரைம்' தடை செய்யப்படுவதற்குக் காரணம் மியன்மாரின் பௌத்த மதத்துறவியான 'விராது' என்பவரைப் பற்றியும், அவரது '969' என்ற இயக்கம் பற்றியும் வெளியாகியிருந்த கட்டுரைதான். இலங்கையின் பலம்வாய்ந்த முன்னணி பௌத்த தேசியவாத அமைப்பான பொது பல சேனாவின் செயற்பாடுகளுடன் 969 இயக்கத்தையும் ஒப்பிட்டு இந்தக் கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ள கருத்துக்கள் பொது பல சேனாவுக்கு சீற்றத்தைக் கொடுத்தது. பொது பல சேனா கொடுத்த அழுத்தம்தான் இந்தத் தடைக்குக் காரணம் எனவும் கூறப்படுகின்றது.

'மியன்மாரின் பின் லேடன்' எனக்குறிப்பிடப்படும் பௌத்த மதத் துறவி அல்லது மதத் தலைவரான விராது இன்று அந்நாட்டில் மிகவும் புகழ்பெற்ற ஒருவர். மியன்மாரின் ,இரண்டாவது பெரிய நகரான மண்டலேயில் அமைந்திருக்கும் ஒரு விகாரையிலிருந்துதான் அவர் தன்னுடைய போதனைகளை வெளியிடுகின்றார். அவரது உபதேசங்களைக் கேட்பதற்காக நூற்றுக்கணக்கானவர்கள் அங்கு தினசரி கூடுகின்றார்கள். ஒரு அமைதியான நிகழ்வாக இது தோன்றினாலும், விராதுவின் உபதேசம் மிகவும் சூடானதாகத்தான் இருக்கும். "உங்களுடைய இரத்தம் கொதித்து வெகுண்டு எழ வேண்டிய தருணம் இது" என விராது உணர்ச்சிவசப்பட்டவராக உபதேசிக்க, அவரது உரையின் சூட்டில் மியன்மாரில் பௌத்தர்களின் இரத்தம் கொதித்தெழுகின்றது.

பௌத்தர்களின் இரத்தம் கொதித்தெழுவது முஸ்லிம்கள் இரத்தம் சிந்துவதில் முடிகின்றது. பௌத்த மதக் குழுக்கள் முஸ்லிம் மக்களை இலக்கு வைக்கின்றன. இந்தப் பின்னணியில் முஸ்லிம்கள் நூற்றுக்கணக்கில் கொல்லப்பட்டுள்ளதாக மனித உரிமை அமைப்புக்கள் குற்றஞ்சாட்டுகின்றன. இதனைவிட மேலும் பெருந்தொகையானவர்கள் வீடு வாசல்களை இழந்து அகதிகளாகியுள்ளார்கள். முஸ்லிம்கள் மீதான இந்தத் தாக்குதல்கள் பல மாதங்களாகத் தொடர்ந்துகொண்டிருந்த போதிலும், மீயன்மார் அரசாங்கம் அதனைக் கண்டும் காணாமலும் இருந்தது. மனித உரிமை அமைப்புக்களின் கரிசனை குறித்து கவனம் செலுத்தப்படவில்லை.

மியன்மாரில் சுமார் ஆறு கோடி மக்கள் உள்ளார்கள். இதில் மிகவும் சிறுபான்மையினராக ஐந்து வீதம் மட்டுமே முஸ்லிம்கள். ஆனால், இந்த முஸ்லிம்கள் மியன்மாருக்கும் அதன் கலாசாரத்துக்கும் அச்சுறுத்தல் என்று விராது கருதுகின்றார். அல்லது அவ்வாறு போதிக்கின்றார். "முஸ்லிம்கள் மிகவும் விரைவாகப் பல்கிப் பெருகுகின்றார்கள். அவர்கள் எங்களுடைய பெண்களைக் கவர்ந்து கற்பழிக்கின்றார்கள்" என்று விராது ரைம் சஞ்சிகைக்கு வழங்கிய பேட்டியின் போது குறிப்பிட்டிருக்கின்றார். "முஸ்லிம்கள் எமது நாட்டை ஆக்கிரமிக்க நினைக்கின்றார்கள். ஆனால் நான் அதற்கு அனுமதிக்கமாட்டேன். மியன்மாரை நாம் ஒருபௌத்த நாடாக வைத்திருக்கவே விரும்புகின்றோம்" எனவும் அவர் உறுதிபடத் தெரிவித்திருக்கின்றார். அவரது உணர்ச்சிகரமான உரை அவருக்குப் பின்பாக பெருந்தொகையானவர்களை ஒன்று திரட்டுகின்றது.

மக்களைக் கவர்ந்திழுக்கக்கூடிய விராதுவின் சக்திவாய்ந்த பேச்சுக்கள் பௌத்த மக்கள் மத்தியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்துகின்றது. மியன்மமாரின் பௌத்த மக்கள் மத்தியில் தமது மதம் அச்சுறுத்தலுக்குள்ளாகியுள்ளது என்ற ஒரு அச்ச உணர்வு காணப்படுகின்றது. இந்த அச்ச உணர்வுக்கு வரலாற்று ரீதியான சில காரணங்களும் உள்ளன. குறிப்பாக ஆசியாவில் பௌத்த மதம் வியாபித்திருந்த பல நாடுகள் இப்போது முஸ்லிம்களின் கட்டுப்பாட்டில் உள்ளது. குறிப்பாக ஆப்கானிஸ்தான். இங்குள்ள பௌத்த புராதனச் சின்னங்கள் பல முஸ்லிம் தீவிரவாதிகளால் அழிக்கப்பட்ட தகவல்கள் வாசகர்களுக்கு நினைவிருக்கலாம். மியன்மாரிலும் முஸ்லிம்களின் தொகை அதிகரித்துவருவதாகக் கருதும் பௌத்த தீவிரவாதிகள் அதன் மூலம் தமக்கு அச்சுறுத்தல் ஏற்படலாம் என அஞ்சுகின்றார்கள். அதேபோல மத்திய கிழக்கு நாடுகளிலிருந்து வரும் நிதி உதவிகள் தொடர்பிலான அச்சமும் இவர்களிடம் காணப்படுகின்றது.

மியன்மாரைப் பொறுத்தவரையில் அங்கு பெரிதும் சிறிதுமாக 135 இனக்குழுக்கள் உள்ளன. இவற்றுக்கிடையிலான ஒற்றுமை என்பது எப்போதும் கேள்விக்குறியாகவே இருந்துள்ளது. தற்போதைய நிலையில் முஸ்லிம்களுக்கு எதிராகக் கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ள பௌத்த இனவாதம்தான் அந்த நாட்டை இரத்தக்களரியாக்கிக்கொண்டிருக்கின்றது. முஸ்லிம்களுக்கு எதிரான பிரச்சாரம் பெருமளவுக்கு திட்டமிட்ட முறையில் முன்னெடுக்கப்படுகின்றது. முஸ்லிம்களின் சனத் தொகை அதிகளவில் பெருகிவருவதாகப் பிரச்சாரம் செய்யும் பௌத்த துறவிகள், முஸ்லிம்கள் இரண்டு குழந்தைகளுக்கு மேல் பெற்றுக்கொள்வதைத் தடை செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்திவருகின்றார்கள். இந்தப் பிரச்சாரங்கள் அனைத்தும் ஏதோ ஒருவகையில் இலங்கையில் பொதுபல சேனா முன்னெடுக்கும் பிரச்சாரத்துடன் ஒத்துப்போவதாகவே அமைந்திருக்கின்றது. இதேபோன்ற சில செயற்பாடுகள் தாய்லாந்திலும் காணப்படுகின்றது.

ரைம் சஞ்சிகையின் கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ள மற்றொரு கருத்தும் கவனத்திற்கொள்ளப்பட வேண்டியதாகும். மதத்தீவிரவாதிகளைப் பட்டியலிடும் போது இந்துத் தேசியவாதிகள், முஸ்லிம் தீவிரவாதிகள், அடிப்படைவாத கிறிஸ்தவர்கள் மற்றும் தீவிரவாத யூதர்கள் என்ற வகையிலான ஒரு கணிப்பீடுதான் அண்மைக்காலம் வரையில் காணப்பட்டது. இந்தப் பட்டியில் பௌத்த தீவிரவாதம் இதுவரைகாலமும் உள்ளடக்கப்படவில்லை.  புத்தரினால் தோற்றுவிக்கப்பட்ட பௌத்த மதம் அன்பு மற்றும் கருணை என்பவற்றை அடிப்படையாகக் கொண்டதாகவே அண்மைக்காலம் வரையில் நோக்கப்பட்டது. ஆனால், ஏனைய மதத் தீவிரவாதிகளையொத்ததாகவே அவர்களுடைய செயற்பாடுகளும் அமைந்திருப்பதை மியன்மாரில் நடைபெற்ற நிகழ்வுகளும் இலங்கையில் இடம்பெறும் சம்பவங்களும் உறுதிப்படுத்துகின்றன.

2003 ஆம் ஆண்டில் முஸ்லிம்களுக்கு எதிராக படுகொலையைத் துண்டிவிட்டவர் என்ற குற்றத்துக்காக கைதான விராது ஏழு வருடங்கள் சிறைவாசம் அனுபவித்தவர். சிறையிலிருந்து விடுதலையான பின்னரும் தன்னுடைய கொள்கையை அவர் விட்டுவிடவில்லை. தொடர்ந்து முஸ்லிம்களுக்கு எதிராக பௌத்த தேசியவாதத்தைப் போசிப்பவராகவே அவர் உள்ளார். சிறைவாசத்தின் பின்னரே 969 என்ற அமைப்பை விராது உருவாக்கினார். 969 என்பது புத்தரின் பல்வேறு குணாம்சங்களைக் குறிப்பிடுவதாக அமைந்திருக்கின்றது. தமது இனத்தையும் மதத்தையும் பாதுகாப்பது என்பது ஜனநாயகத்தைவிட முக்கியமானது என இவ்வமைப்பு பௌத்த மக்களுக்குப் போதிக்கின்றது.

இந்தப் பின்னணியிலேயே முஸ்லிம்களுக்கு எதிரான தாக்குதல்கள் தீவிரமடைந்தன. பல முஸ்லிம்கள் கொல்லப்பட்டனர். சொத்துக்கள் அழிக்கப்பட்டன. இந்த வெறியாட்டத்தைத் தடுத்து நிறுத்துவதற்கு அரச தரப்பு எதனையும் செய்யவில்லை என்ற குற்றச்சாட்டு மனித உரிமைகள் அமைப்புக்காளல் முன்வைக்கப்பட்டது. அதிகமான இடங்களில் இந்த வன்முறை வெறியாட்டங்கள் பிக்குகளின் தலைமையிலேயே நடத்தப்பட்டது.

இது தொடர்பான தகவல்களைத் தாங்கிய ரைம் சஞ்சினை இன நல்லுறவைப் பாதிப்பதாக அமைந்திருப்பதாக தடை செய்யப்படுகின்றது. ஆனால், இன நல்லுறவைப் பாதிக்கும் வகையில் முஸ்லிம் மக்களுக்கு எதிரான செயற்பாடுகளை முன்னெடுக்கும் அமைப்புக்களுக்கு அரச ஆதரவு தாரளமாகக் கிடைக்கின்றது. இதுதான் ஆசியாவின் அதிசயம்!
- பார்த்தீபன்

Tuesday, July 9, 2013

பதவியைத் துறப்பாரா வாசு?

இலங்கையின் தற்போதைய அமைச்சர்களுக்கிடையில், நாட்டிற்குள் இனவாதம் மற்றும் மதவாத தீயை அணைப்பதற்காக நேர்மையாக முயற்சிப்பவர்கள் 50 வீதமானவர்களே என அமைச்சர் வாசுதேவ நாணயக்கார அண்மையில் தெரிவித்திருந்தார். ஏனையவர்களில் பெருபாலானவர்கள், இனவாத, மதவாத செயற்பாடுகளில் நேரடியாக ஈடுபடாவிட்டாலும் அதற்கு ரகசியமான முறையில் பங்களிப்பு செய்து வருகின்றனர் என்பது அவரது குற்றச்சாட்டு. தமது இனம் மற்றும் மதம் தொடர்பில் கொண்டுள்ள குருட்டுத்தனமாக பக்தி காரணமாவே அவர்கள் அவ்வாறு செய்யப்பட்டு வருகிறார்கள் என்பது வாசுதேவாவின் கருத்து.

போரில் வெற்றிகொண்டு இனவாதத்தையே அடிப்படையாகக்கொண்டு அரசியல் நடத்தும் அரசாங்கம் ஒன்றுக்குள் அமைச்சராக இருந்துகொண்டு இவ்வாறான கருத்துக்களை பகிரங்கமாகக் கூறக்கூடிய துணிச்சல் அமைச்சர் வாசுவை விட வேறு யாருக்கும் வராது எனக்கூறலாம். அரசியலமைப்புக்கான 13 ஆவது திருத்தத்தை நீர்த்துப் போகச் செய்வதற்கான செயற்பாடுகளில் அரசாங்கம் ஈடுபட்டுள்ள நிலையில், அதற்கு எதிராக அமைச்சரவைக்குள்ளேயே குரல் கொடுக்கும் முக்கியமானவர் அவர்தான். 13 இல் கைவைத்தால் அரசிலிருந்து வெளியேறுவேன் என்பது அவரது பிந்திய எச்சரிக்கை. இந்த நிலையில் அவரது அரசியல் பற்றி இந்த வாரம் சுருக்கமாகப் பார்ப்போம்.

13 ஐப் பாதுகாப்பதற்கான போராட்டத்தில் இடதுசாரி அமைச்சர்கள் பலர் இணைந்திருந்தாலும், 13 ஐப் பாதுகாக்க முடியாவிட்டால் அரசாங்கத்திலிருந்து விலகுவேன் என்ற அச்சுறுத்தலை விடுக்கக்கூடிய துணிச்சல் உள்ளவராக வாசு மட்டுமே உள்ளார். மற்றவர்கள் அரசுக்கு எச்சரிக்கை விடுத்தாலும் இல்லையெனில் பதவியைத் துறப்போம் என்ற வகையில் எச்சரிக்கைகளை வெளியிட தயாராக இருக்கவில்லை. கொள்கைகளை விட பதவி முக்கியம் என்பதில் அவர்கள் கவனமாக உள்ளார்கள்.

நீண்டகால இடதுசாரிப் பாரம்பரியத்தைக் கொண்டுள்ள அமைச்சர் வாசு ஒரு சட்டத்தரணி. என்.எம். பெரேரா, கொல்வின் ஆகியோரின் கருத்துக்களால் ஈர்க்கப்பட்டு இளமைக் காலத்திலேயே லங்கா சமசமாஜக் கட்சியில் இணைந்து தீவிர அரசியலை முன்னெடுத்தவர். இருந்த போதிலும் கட்சித் தலைமையுடன் ஏற்பட்ட முரண்பாடுகாளால் பின்னர் அதிலிருந்து விலகி விக்கிரமபாகு கருணாரட்ணவுடன் இணைந்து நவ சமசமாஜக் கட்சியை ஆரம்பித்தார். பின்னர் அதிலிருந்தும் விலகினார். இரண்டு தடவை ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்டுத் தோல்வியடைந்தவர். இப்போது ஆளும் கூட்டணியில் இணைந்து அமைச்சராகியிருக்கின்றார். ஆளும் கட்சியுடன் இணைந்து களம் இறங்கினால்தான் தேர்தலில் வெற்றி பெற முடியும் என்ற நிலையும் அவருக்குத் தெரியும்.

சந்திரிகா ஆட்சிக் காலத்திலும் இப்போது மகிந்த ஆட்சிக் காலத்திலும் அரசுக்குள் இருந்துகொண்டே அரசை விமர்சிப்பதற்கு அவர் தயங்கியதில்லை. ஜனாதிபதி ராஜபக்‌ஷவினால் அவருக்குக் கொடுக்கப்பட்ட அமைச்சர் பதவியும் முக்கியமானது. தேசிய மொழிகள் அமுலாக்கல், சமூக ஒருமைப்பாட்டு அமைச்சு அவருக்குக் கொடுக்கப்பட்டது. போர் முடிவடைந்திருக்கும் நிலையில் இந்த அமைச்சு முக்கியமான ஒன்றாகக் கருதப்பட வேண்டியது. இனங்களுக்கு இடையில் நல்லிணக்கத்தையும் நம்பிக்கையையும் ஏற்படுத்துவதில் முக்கிய பொறுப்பை ஏற்கவேண்டிய அமைச்சு. தேசிய மொழிகள் அமுலாக்கலில் அவர் அதிகளவுக்கு அக்கறை கொண்டுள்ளார் என்பதற்கு பல உதாரணங்கள் உள்ளன. குறைந்தளவு பட்ஜெட்டில் அரச இயந்திரங்கள் அனைத்தும் சிங்கள மயப்பட்டவையாக உள்ள நிலையில் இதனைச் செயற்படுத்துவது என்பது எந்தளவுக்கு கடினமானது என்பது புரிந்துகொள்ளக் கூடிய ஒன்றுதான். ஆனால், இவற்றுக்கு மத்தியிலும் அதனைச் செய்ய வேண்டும் என்பதற்காக அவர் கடுமையாகப் போராடுகின்றார் என்பது உண்மை!

13 ஆவது திருத்தம் தொடர்பில் வாசு வெளிப்படுத்திவரும் இறுக்கமான நிலைப்பாடு ஆச்சரியமான ஒன்றல்ல. தன்னுடைய அரசியல் வாழ்க்கையில் ஆரம்பம் முலலே சிறுபான்மையினருக்கு சம உரிமை வழங்கப்பட வேண்டும், அதிகாரப் பரவலாக்கல் என்பவற்றுக்காக கடுமையாக தீவிரமாகக் குரல் கொடுக்கும் ஒருவராகவே வாசு இருந்துள்ளார். இருந்தபோதிலும், இரு மாகாணங்கள் இணைவதைத் தடுப்பதற்கான அரசாங்கத்தின் யோசனைக்கு அவர் ஆதரவை வெளிப்படுத்துகின்றார். இந்த இடத்தில் அவரது கொள்கையில் தடுமாற்றம் தெரிகின்றது. இடதுசாரி அரசியல்வாதிகளிடம் வழமையாகக் காணப்படும் தடுமாற்றம்தான் அது. கொள்கை என்பதற்கு அப்பால் தமது அரசியல் இருப்பைப் பாதுகாத்துக்கொள்வது என்பது இடதுசாரிகளுக்கு எப்போதுமே பிரச்சினையாகத்தான் இருந்துள்ளது. இந்த நிலையில் இப்போது எழும் கேள்வி என்னவென்றால் அரசு 13 இல் கை வைத்தால் வாசு பதவியைத் துறப்பாரா?

(தினக்குரல்- 2013-06-07))

Tuesday, July 2, 2013

மீண்டும் சந்திரிகா!

இலங்கை அரசியலில் 13 ஆவது திருத்தம் தொடர்பில் உருவாகியிருக்கும் குழப்பங்களைத் தொடர்ந்து முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவின் பெயரும் தீவிரமாக அடிபடத் தொடங்கியுள்ளது. அரசாங்கத் தரப்பில் இப்போது உருவாகியிருக்கும் குழப்பங்கள் அனைத்துக்கும் சந்திரிகா குமாரதுங்கவே காரணம் என அமைச்சர் விமல் வீரவன்ச கடுமையான குற்றச்சாட்டை முன்வைக்க, ஒன்றும் தெரியாதவர் போல சந்திரிகா காய்களை நகர்த்திக்கொண்டிருக்கின்றார். சந்திரிகாவின் நிகழ்ச்சி நிரல் என்ன என அறியமுடியாமல் அரச தரப்பு திகைத்துப்போயிருப்பதாகவும் தெரிகின்றது.

கடந்த சில மாதங்களால் வெளிநாட்டில் தங்கியிருந்த சந்திரிகா இந்த விவகாரம் சூடு பிடித்திருக்கும் நிலையில்தான் நாடு திரும்பியிருக்கின்றார். நாடு திரும்பியவுடனேயே அவரது பெயர் சூடான செய்தியாகியிருக்கின்றது. இந்தவாரச் செய்திகளில் பெரிதாக அடிபட்டவர் என்ற முறையில் சந்திரிகாவின் அரசியல், அவரது தற்போதைய இலக்கு என்பன தொடர்பாக இந்த வாரம் பார்ப்போம்.

அரசியலமைப்புக்கான 13 ஆவது திருத்தத்தை நீர்த்துப்போகச் செய்வதற்கு அல்லது அதனை இல்லாதொழிப்பதற்கான முயற்சிகளை அரசாங்கம் தீவிரமாக முன்னெடுத்துவரும் ஒரு நிலையில்தான் சந்திரிகாவின் நகர்வுகளும் தீவிரமடைந்திருப்பதாக அரசு கருதுகின்றது. அரசுக்கு எதிராக அரசுக்குள் இருந்துகொண்டே முதலில் இந்த விடயத்தில் உரத்துக் குரல் கொடுத்தவர் அமைச்சர் ராஜித சேனாரட்ண. அவர் சந்திரிகாவுக்கு நெருக்கமானவர். விஜயகுமாரதுங்க சிறிலங்கா மக்கள் கட்சியை அமைத்தபோது அதில் இணைந்திருந்தவர். இப்போது 13 ஆவது திருத்தத்தைப் பாதுகாக்க வேண்டும் எனக் குரல் கொடுக்கும் அமைச்சர்களின் பின்னணியில் சந்திரிகா இருப்பதாக அரசு நம்புவதற்கு காரணம் உள்ளது.

இந்த நிலைமைகளைப் பயன்படுத்தி சுதந்திரக் கட்சியில் பிளவை ஏற்படுத்தவும், தன்னுடைய மகன் விமுத்தியை அரசியலுக்குக் கொண்டுவரவும் சந்திரிகா முயல்வதாக அரசு கருதுவதாகத் தெரிகின்றது. அரச உயர் மட்டத்தில் காணப்படும் இந்த சந்தேகத்தைத்தான் அமைச்சர் வீரவன்ச ஊடகவியலாளர் மாநாட்டில் பிரதிபலித்தார். சிறிலங்கா சுதந்திரக் கட்சியைப் பொறுத்தவரையில் பண்டாரநாயக்க குடும்பத்துக்கும் ராஜபக்‌ஷ குடும்பத்துக்கும் இடையில் அதிகாரப் போட்டி ஒன்று இடம்பெற்று வருவது புதிதல்ல. அது இப்போது மீண்டும் சூடு பிடித்துள்ளதா என்ற கேள்வி ஒரு புறம் எழுகின்றது.

எதிர்க்கட்சிகளைப் பொறுத்தவரையில் ராஜபக்‌ஷ அரசாங்கத்துக்கு எதிராக சவால்விடக் கூடிய ஒருவரை அவர்கள் தேடிக்கொண்டுள்ளார்கள் என்பது உண்மை. ரணிலால் அது சாத்தியமாகவில்லை. பொன்சேகாவும் களத்தில் இறங்கித் தோற்றவர்தான். அதனால்தான் சந்திரிகா மீது நம்பிக்கை வைக்க வேண்டியவர்களாக எதிர்த்தரப்பினர் உள்ளார்கள். சநதிரிகாவைப் பொறுத்தவரையில் அவர் சிறிலங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்தவர் என்ற முறையில் ஆளும் கட்சிக்குள்ளேயே அவருக்கு ஆதரவாளவர்கள் உள்ளனர். ராஜபக்‌ஷ குடும்ப ஆதிக்கத்தால் அதிருப்தியடைந்த சிலரும் சந்திரிகாவை ஆதரிக்கக்கூடும்.

சந்திரிகாவின் பெயர் தற்போது பரபரப்பாகப் பேசப்படுவதற்கு இவை மட்டும் காரணமல்ல. செப்டம்பரில் நடைபெறவிருக்கும் மாகாண சபைத் தேர்தல்களில் சரத் பொன்சேகாவின் ஜனநாயகக் கட்சியில் தனது ஆதரவாளர்கள் சிலரை களம் இறக்க சந்திரிகா திட்டமிடுவதாகக் கூறப்படுகின்றது. இது தொடர்பில் ஏற்கனவே பேச்சுக்கள் ஆரம்பமாகிவிட்டன.

இந்த ஆரவாரங்களுக்கு மத்தியில் கண்டிக்குச் சென்ற சந்திரிகா அங்கு மகாநாயக்கர்களுடன் ஒரு மணித்தியாலத்துக்கும் அதிகமாகப் பேசியிருக்கின்றார். அரசியல் தலைவர் ஒருவர் மகாநாயக்கர்களைச் சந்தித்துப் பேசுவது என்பது இலங்கையைப் பொறுத்தவரையில் முக்கியமானது. புதிய முயற்சி ஒன்றில் இறங்கும் போதுதான் அவர்கள் மகாநாயக்கர்களைச் சந்தித்து ஆசீர்வாதமும் ஆலோசனையையும் பெறுவதை வழமையாகக் கொண்டுள்ளார்கள். இந்தச் சந்திப்புப் பற்றிய தகவல்கள் எதுவும் வெளியிடப்படவில்லை. காத்திருந்த ஊடகவியலாளர்களிடம் எதனையுமே தெரிவிக்காமல் சந்திரிகா சென்றுவிடடார்.

சந்திரிகா வந்தால் ஏதோ சாதித்துவிடுவார் என்பது போன்ற கருத்துக்கள் சிலரிடம் காணப்படுகின்றது. மக்களுடைய அதிகளவு ஆணையுடன் இரண்டு தடவைகள் ஜனாதிபதியாக வந்த சந்திரிகா குமாரதுங்க தன்னுடைய பதவிக்காலத்தில் இனநெருக்கடிக்குத் தீர்வைக் காண்பதில் பெரிதாக எதனையும் சாதித்துவிடவில்லை. ரணில் விக்கரமசிங்க மேற்கொண்ட முயற்சிகளுக்குத் தடையாக இருந்தவரும் அவர்தான். அதனைவிட 13 என்ற ஒரு ஆயுதத்தை மட்டும் வைத்துக்கொண்டு போரின் வெற்றிக் கோஷத்துடன் அதிகாரத்திலுள்ள ராஜபக்‌ஷ ஆட்சிக்கு சவால்விடுவது என்பது நினைத்துப் பார்க்கக்கூடியதல்ல.

ஆக, சந்திரிகா என்பது வெறும் சலசலப்புத்தான்!

தவசி.
(2013-06-30 ஞாயிறு தினக்குரல்)

Monday, July 1, 2013

19 ஆவது திருத்தம் எதற்காக?

அரசியலமைப்புக்கான 13 ஆவது திருத்தத்தை மாற்றியமைத்து மாகாண சபைகளுக்கான அதிகாரங்களைக் குறைக்கும் முயற்சியில் இறங்கியிருக்கும் அரசாங்கம், அதில் மிகப்பெரிய தடை ஒன்றை எதிர்கெண்டுள்ளது. அடுத்த வாரம் இடம்பெறும் பாராளுமன்றக் கூட்டத் தொடரின் போது 13 ஆவது திருத்தத்தை மாற்றியமைப்பதற்கான 19 ஆவது திருத்தத்தைக் கொண்டுவருவதற்குத் திட்டமிட்டுள்ள அரசாங்கம், அதற்கு முன்னதாக மாகாண சபைகளின் அங்கீகாரத்தைப் பெற்றுவருகின்றது. இந்த வகையில் ஏழு மாகாணங்கள் குறிப்பிட்ட திருத்தத்துக்கான அங்கீகாரத்தை வழங்கியுள்ள போதிலும், கிழக்கு மாகாண சபையின் அங்கீகாரத்தைப் பெற்றுக்கொள்வது என்பதுதான் அரசாங்கத்துக்கு இப்போது பெரும் சவாலாக அமைந்திருக்கின்றது. இந்த சவாலை அரசாங்கம் எவ்வாறு சந்திக்கப்போகின்றது என்பதுதான் இலங்கை அரசியலில் இன்று எழும் முக்கிய கேள்வி.

பாராளுமன்றம் அடுத்தவாரம் கூடும் போது அரசியலமைப்புக்கான 19 ஆவது திருத்தச் சட்டமூலத்தை ஒரு அவசர பிரேரணையாகக் கொண்டுவந்து நிறைவேற்றுவதற்கு கடந்த வாரம் அரசாங்கம் தீர்மானித்தது. இந்த 19 ஆவது திருத்தம் இரண்டு விடயங்களை உள்ளடக்கியுள்ளது. ஒன்று - இரண்டு மாகாண சபைகள் எதிர்காலத்தில் ஒரே மாகாண சபையாக இணைந்து செயற்படுவதைத் தடுத்தல். இரண்டு - மாகாண சபைகள் தொடர்பான சட்டமூலங்களை நிறைவேற்றும் போது மாகாண சபைகள் அனைத்தினதும் அங்கீகாரம் பெறப்பட வேண்டும் என்ற தற்போதைய நிலையை மாற்றி, பெரும்பான்மையான மாகாண சபைகளின் அங்கீகாரத்தைப் பெற்றுக்கொண்டால் போதுமானது என மாற்றியமைத்தல். இந்த இரண்டு விடயங்களையும் அரசியலமைப்புத் திருத்தத்தில் உள்ளடக்க வேண்டும் என அரச தரப்பினர் துடிப்பதற்கான காரணம் புரிந்துகொள்ள முடியாத ஒன்றல்ல!

இந்த விடயங்கள் அமைச்சரவையில் ஆராயப்பட்டு அதன் அங்கீகாரத்தைப் பெற்றிருக்கின்றது. இதனைவிட மாகாண சபைகளுக்கான காணி, பொலிஸ் அதிகாரங்களை இல்லாமல் செய்வதற்கான யோசனை அமைச்சரவைக்குள் காணப்பட்ட கடுமையான எதிர்ப்பையடுத்து பாராளுமன்றத் தெரிவுக்குழுவுக்குப் பாரப்படுத்தப்பட்டுள்ளது. அமைச்சரவையின் அங்கீகாரத்தைப் பெற்றுக்கொண்ட இரு விடயங்களையும் அரசியலமைப்புக்கான 19 ஆவது திருத்தமாகக் கொண்டுவருவதுதான் அரசாங்கத்தின் திட்டம். அதற்காக அவை மாகாண சபைகளின் அங்கீகாரத்தைப் பெற்றுக்கொள்வதற்காக எட்டு மாகாண சபைகளுக்கும் அனுப்பிவைக்கப்பட்டுள்ளன. இதற்கு ஏழு மாகாண சபைகளினதும் அங்கீகாரத்தை அரசாங்கம் பெற்றிருக்கின்றது. வடமாகாண சபை உருவாக்கப்படவில்லை என்பதால், கிழக்கு மாகாண சபையின் அங்கீகாரத்தைப் பெற்றுக்கொள்வது என்பதுதான் அரசாங்கம் இன்று எதிர்கொள்ளும் மிகப் பெரிய நெருக்கடி!

கிழக்கு மாகாண சபையின் அங்கீகாரத்தைப் பெற்றுக்கொள்வதில் அரசாங்கத்துக்கு இரண்டுவிதமான பிரச்சினைகள் இருப்பதாகத் தெரிகின்றது. முதலாவது, கிழக்கு மாகாண சபையின் அடுத்த கூட்டத் தொடர் ஜூலை 23 ஆம் திகதியே நடைபெறவிருக்கின்றது. அதனால் அரசாங்கம் எதிர்பார்ப்பதுபோல பாராளுமன்றத்துக்கு இந்தப் பிரேரணையைக் கொண்டுவருவதற்கு முன்னதாக கிழக்கு மாகாண சபையின் அங்கீகாரம் கிடைத்துவிடப்போவதில்லை. இரண்டாவது பிரச்சினை கிழக்கு மாகாணத்தில் நிர்ணயிக்கும் சக்தியாகவுள்ள சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் இந்தத் தீர்மானத்தை ஏற்றுக்கொள்ளுமா என்பது. இவ்விடயத்தில் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸின் நிலைப்பாடு அரசாங்கத்துக்கு ஏமாற்றத்தைக் கொடுப்பதாகவே அமைந்திருக்கின்றது. பாராளுமன்றத் தெரிவுக்குழுவில் தமக்கு இடம் ஒதுக்கவில்லை என்பதால் சீற்றமடைந்திருக்கும் சிறி லங்கா முஸ்லிம் காங்கிரஸ், 13 ஆவது திருத்தத்தைப் பலவீனப்படுத்தும் முயற்சிகளுக்கு ஆதரவளிக்கப்போவதில்லை என்பதை ஏற்கனவே தெளிவாகத் தெரிவித்திருக்கின்றது. குறிப்பிட்ட பிரேரணையை கிழக்கு மாகாண சபையில் நிறைவேற்ற முடியாத நிலையை இது ஏற்படுத்தியிருக்கின்றது. இந்த நெருக்கடியிலிருந்து மீள்வதற்கு அரசாங்கத்துக்கு இருக்கக்கூடிய ஒரேயொரு வழி உயர் நீதிமன்றத்துக்குச் செல்வதாக இருக்கலாம்.

19 ஆவது திருத்தத்தை ஒரு அவசர சட்டமூலமாகக் கொண்டுவர வேண்டும் என அரசாங்கம் தீர்மானித்தமைக்கு உடனடியான நியாயமான காரணங்கள் எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை. மாகாண சபைகள் பலவீனப்படுத்தப்பட வேண்டும் என உரத்துக் குரல் கொடுக்கும் சிங்கள - பௌத்த தேசியவாதிகளைத் திருப்திப்படுத்துவது மட்டும்தான் இதன் நோக்கமாக இருக்க முடியும். காணி, பொலிஸ் அதிகாரங்களை மாகாண சபைகளிடமிருந்து பறிப்பது உடனடியாகச் சாத்தியமாகப் போவதில்லை என்பது வெளிப்படையாகத் தெரிந்த ஒரு நிலையிலேயே இந்த நகர்வை அரசாங்கம் மேற்கொண்டது. 19 ஆவது திருத்த நகலில் இரு மாகாணங்கள் எதிர்காலத்தில் இணைந்து செயற்படுவதைத் தடுத்தல் எனப் பொதுவாகக் கூறப்பட்டிருந்தாலும் அது வடக்கு, கிழக்கைத்தான் சுட்டிக்காட்டுகின்றது என்பதில் எந்த சந்தேகமும் இருக்கத் தேவையில்லை. வடக்கு கிழக்கு மாகாணங்கள் அண்மைய எதிர்காலத்தில் இணைந்து செயற்படுவதற்கான சூழ்நிலை ஒன்று காணப்படவில்லை என்பதுடன், அது தேசத்தின் பாதுகாப்பைக் கேள்விக்குள்ளாக்கும் ஒரு விஷயமாக இருக்கப்போவதில்லை என்பதும் அனைவருக்கும் தெரிந்தது. வடக்கு - கிழக்கு இணைவது நாட்டின் ஒருமைப்பாட்டையும், இறைமையையும் பாதிக்கும் எனக் கூக்குரலிடுவதன் மூலம் தமது தேச பக்தியை வெளிப்படுத்த சிங்கள தேசியவாத அமைப்புக்கள் மட்டுமன்றி அரசாங்கமும் முற்படுவதாகவே கருத வேண்டியுள்ளது.

மாகாண சபைகள் தொடர்பான சட்டங்களை இயற்றும் போது அனைத்து மாகாண சபைகளினதும் அங்கீகாரத்தையும் பெற்றுக்கொள்ள வேண்டும் எனக் கூறப்பட்டிருப்பதை மாற்றியமைப்பதற்கு அரசாங்கம் முற்படுவதன் பின்னணியும் புரிந்துகொள்ள முடியாத ஒன்றல்ல. திவிநெகும சட்டமூலம் கொண்டுவரப்பட்டபோது வட மாகாண சபையின் அங்கீகாரத்தைப் பெற்றுக்கொள்வது என்பது அரசாங்கத்துக்கு நெருக்கடியைக் கொடுத்தது. மாகாண சபைகள் தொடர்பான சட்டங்களை மாற்றும் போது அனைத்து மாகாண சபைகளினதும் அங்கீகாரத்தைப் பெற்றுக்கொள்வது என்பது சாத்தியமற்றதாகிவிடலாம் என்ற அச்சத்தை இது அரசாங்கத்துக்கு ஏற்படுத்தியிருந்தது. அதனால்தான் இந்தத் திருத்தத்தை அரசு விரும்புகின்றது. ஆனால், கிழக்கு மாகாணத்திலிருந்து இதற்கு இப்போது நெருக்கடி உருவாகும் என்பது அரசாங்கம் எதிர்பார்க்காத ஒன்று. அரசாங்கத்தைப் பொறுத்தவரையில் இதனை அவசரமாகச் செய்ய வேண்டும் என நினைப்பதற்கு இரண்டு காரணங்கள் உள்ளன. ஒன்று வடமாகாண சபை அமைக்கப்பட்டால் அதன் பின்னர் இவற்றைச் செய்வது சாத்தியமற்றதாகிவிடலாம். இரண்டு - வடமாகாண சபைத் தேர்தலுக்கு முன்னதாக சிங்கள - பௌத்த தேசியவாதிகளைத் திருப்திப்படுத்தும் வகையில் எதனையாவது செய்தாகவேண்டும் என்பது.

-2013-06-30 ஞாயிறு தினக்குரல் ஆசிரியர் தலையங்கம்