Sunday, September 18, 2016

சம்பந்தனின் 'கடும்' தொனி

எதிர்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் கடந்த வாரம் தெரிவித்த கருத்து ஒன்று இராஜதந்திர வட்டாரங்களில் பெரிதும் கவனத்தைப் பெற்றிருக்கின்றது. பரபரப்பையும் ஏற்படுத்தியிருக்கின்றது. இலங்கை வந்திருந்த ஐ.நா. செயலாளர் நாயகம் பான் கீ மூனுடனான பேச்சுக்களின் போது தன்னுடைய வழமையான 'தொனி'யை மாற்றி கடுமையான தொனிக்கு சம்பந்தன் மாறினார். "அரசியலமைப்புச் சட்ட வரைபில் அரசாங்கம் தவறு விடுமாக இருந்தால், இதில் எமது எதிர்பார்ப்புக்கள் நிறைவேறாமல் இருக்குமாக இருந்தால் நாம் மீண்டும் ஒரு முறை ஆயுதம் எடுக்கமாட்டோம். ஆனால் எம்மை அவர்கள் ஆள முடியாத நிலையை ஏற்படுத்துவோம்" என எச்சரிக்கும் வகையில் அவர் தெரிவித்திருப்பது மூனையே திடுக்கிட வைத்திருக்கும். புதிய அரசாங்கம் பதவிக்கு வந்தபின்னர் "மென் தொனி"யில் பேசி வந்த சம்பந்தன் இப்போதுதான் முதல் முறையாக "கடும் தொனி"க்கு மாறியிருக்கின்றார்.

மைத்திரி - ரணில் தலைமையிலான நல்லாட்சி அரசாங்கம் பதவிக்கு வந்த காலம் முதல் நம்பிக்கையளிக்கும் வகையிலான கருத்துக்களையே சம்பந்தன் முன்வைத்து வந்திருக்கின்றார். எதிர்கட்சித் தலைவராக அவர் பதவி வகித்தாலும் கூட, ஆட்சி மாற்றத்துக்கு உதவியவர் என்ற வகையில் அரசுக்கு சங்கடத்தை ஏற்படுத்தக்கூடிய செயற்பாடுகளையும் கருத்துக்களையும்  தவிர்த்தே வந்திருக்கின்றார். அரசுடன் ஒருவகையான இணக்க அரசியலையே அவர் முன்னெடுப்பதாக குற்றச்சாட்டுக்களும் முன்வைக்கப்பட்டிருக்கின்றன. "2016 இறுதிக்குள் தீர்வு" என அவர் தெரிவித்துவந்திருப்பது சர்ச்சைகளை உருவாக்குவதாக இருந்தாலும் கூட, புதிய அரசாங்கத்தின் மீது அவர் வைத்துள்ள நம்பிக்கையை அது வெளிப்படுத்தியது. "2016 இறுதிக்குள் தீர்வு என்பது ஊகத்தின் அடிப்படையில் தான் சொன்ன கருத்தே" என சம்பந்தன் பின்னர் தெரிவித்திருந்தார். அவரது இந்தக் கருத்தும் சர்ச்சைகளை ஏற்படுத்தியிருந்தது.

நல்லாட்சி அரசாங்கத்தின் மீது சம்பந்தன் வைத்துள்ள நம்பிக்கை படிப்படியாகத் தேய்ந்து வருகின்றதா என்ற கேள்வியைத்தான் பான் கீ மூனுடனான சந்திப்பின்போது அவர் தெரிவித்த கருத்துக்கள் ஏற்படுத்தியிருக்கின்றது. பான் கீ மூனை யாழ்ப்பாணத்தில் வைத்துச் சந்தித்த சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தூதுக்குழு சுமார் அரை மணி நேரம் அவருடன் பேச்சுக்களை நடத்தியது. முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ஷவுடன் பான் கீ மூன் கைச்சாத்திட்ட கூட்டறிக்கையின் அடிப்படையிலேயே பொறுப்புக் கூறல் உட்பட பல்வேறு செயற்பாடுகள் ஆரம்பமாகியது என்பதைக் குறிப்பிட்ட சம்பந்தன், அதற்காக மூனுக்கு முதலில் நன்றிகளைத் தெரிவித்துக்கொண்டார். இருந்தபோதிலும், அதனை முழுமையாக நடைமுறைப்படுத்துவதில் காணப்படும் மந்த நிலை தொடர்பாகவும் சம்பந்தன் சுட்டிக்காட்டத் தவறவில்லை.

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தடுத்துவைக்கப்பட்டிருப்பவர்கள் இன்னும் விடுதலை செய்யப்படவில்லை. பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்குவதாகத் தெரிவிக்கப்பட்ட வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை. வடக்கு கிழக்கில் இராணுவத்தினரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள பொது மக்களின் காணிகளை விடுவிப்பதில் காட்டப்படும் காலதாமதம் போன்றவற்றை எடுத்து விளக்கிய சம்பந்தன், புதிய அரசியலமைப்பின் மூலம் தமிழ் மக்களின் அபிலாஷைகள் நிறைவேற்றப்படும் என்பதில் தமிழ் மக்களுக்குள்ள நம்பிக்கையும் தேய்வடைந்து செல்கிறது என்பதை சுட்டிக்காட்டினார். "தமிழ் மக்கள் தம்மைத்தாமே ஆளக்கூடிய வகையில் அவர்களுடைய அபிலாஷைகளைப் பூர்த்தி செய்யக்கூடிய தீர்வு ஒன்றை வழங்க அரசாங்கம் தவறுமாக இருந்தால், அவர்கள் எம்மை ஆள முடியாத நிலையை ஏற்படுத்துவோம்" என கடும் தொனியில் சம்பந்தன் தெரிவித்தார்.

புதிய அரசியலமைப்பை உருவாக்குவதற்காக பாராளுமன்றம் அரசியலமைப்பு நிர்ணய வபையாக மாற்றப்பட்டிருக்கின்றது. அதன் கீழ் வழி நடத்தல் குழு ஒன்றும் ஆறு உப குழுக்களும் அமைக்கப்பட்டுள்ளன. அவை தமது செயற்பாடுகளை முன்னெடுத்துவரும் நிலையில் இவ்வருட இறுதிக்குள் புதிய அரசியலமைப்பு நடைமுறைக்குக் கொண்டுவரப்பட்டுவிடும் என அரசாங்கத் தரப்பில் சொல்லப்படுகின்றது. தேர்தல் முறை மாற்றம் தொடர்பில் முன்வைக்கப்பட்டிருக்கும் மாற்றம் சிறிய மற்றும் சிறுபான்மையினக் கட்சிகளுக்கு பாரிய பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் இருப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இதனை ஏற்குமாறு சிறிய கட்சிகள் மீது பெரிய கட்சிகள் நிர்ப்பந்திப்பதாக 'சக வாழ்வு' அமைச்சர் மனோ கணேசன் ஆதங்கப்பட்டிருக்கின்றார். ஆக, தேர்தல் முறை மாற்றத்தையும் உள்ளடக்கிய அரசியலமைப்பு மாற்றத்தில் பெரும்பான்மையினக் கட்சிகள் தமது கருத்துக்களைத் திணிக்க முற்படுகின்றனவா என்ற சந்தேகத்தை இது ஏற்படுத்தியிருக்கின்றது.

இலங்கை சுதந்திரமடைந்த பின்னர் தயாரிக்கப்பட்ட 1972 மற்றும் 1978 ஆம் ஆண்டு அரசியலமைப்புக்களில் தமிழ் மக்களின் கருத்துக்கள் கவனிக்கப்படவில்லை. அவர்களுடைய அபிலாஷைகள் உள்வாங்கப்படவில்லை. இப்போது தமிழ் மக்களின் கருத்துக்கள் கேட்கப்பட்டாலும் அவை உள்ளடக்கப்படுமா என்பது சந்தேகத்துக்குரியதாகவே இருக்கின்றது. அமைச்சர் மனோ கணேசனின் ஆதங்கமும் சம்பந்தனின் எச்சரிக்கையும் இதனைத்தான் உணர்த்துகின்றது. 1960 களில் தந்தை செல்வா நடத்தியதைப் போல ஒரு சட்டமறுப்பு, சத்தியாக்கிரகப் போராட்டத்தை மனதில் வைத்துத்தான் சம்பந்தன் 'ஆள முடியாத நிலையை ஏற்படுத்துவோம்' எனக் குறிப்பிட்டிருப்பதாகக் கருதலாம்.

தமிழ் மக்களின் அபிலாஷைகளைப் பெற்றுக்கொடுப்பதற்காக இரு முனை அணுகுமுறை ஒன்றை சம்பந்தன் கையாண்டுள்ளார். ஒன்று: அரசுடன் நட்புறவைப் பேணுவதன் மூலம் பெற்றுக்கொள்வது. இரண்டு: சர்வதேசத்துக்கு எடுத்துச்சென்று அவர்களுடைய அழுத்தத்தின் மூலமாக காரியங்கசச் சாதிப்பது. இணக்க அரசியலின் மூலம் ஒரு எல்லைக்கு மேல் செல்ல முடியாது என்பது கடந்த ஒன்றரை வருடங்களில் தெளிவாக உணர்த்தப்பட்டுவிட்டது. சர்வதேச சமூகமும் நல்லாட்சிக்கு சங்கடத்தைக் கொடுக்கத் தயாராகவில்லை என்பது தெரிகின்றது. இந்தநிலையில் அடுத்த கட்டத்துக்கு நகரமுடியாதிருக்கும் சம்பந்தன், தமிழ்த் தேசியவாதிகளின் அழுத்தங்களையும் எதிர்கொள்கின்றார். இந்த நிலையில் சர்வதேசத்துக்கும், இலங்கை அரசுக்கும் விடுக்கப்பட்டுள்ள ஒரு எச்சரிக்கையாகவே சம்பந்தனின் கருத்து நோக்கப்பட வேண்டும்.

2016/09/11 ஞாயிறு தினக்குரல்

காலங்கடத்தவா கால அவகாசம்?

ஐ.நா.வுக்குக் கொடுக்கப்பட்டுள்ள வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கு கால அவகாசம் தேவை என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கோரிக்கைவிடுத்திருக்கின்றார். இலங்கைக்கான மூன்று நாள் விஜயத்தை மேற்கொண்டு வந்திருந்த ஐ.நா. செயலாளர் நாயகம் பான் கீ மூனுடன் நடத்திய பேச்சுக்களின் போதே இதற்கான கோரிக்கை இலங்கையினால் முன்வைக்கப்பட்டது. பான் கீ மூனும் இதனை ஏற்றுக்கொண்டிருப்பதாகவே தெரிகின்றது. "புதிய" அரசாங்கத்துக்கு கால அவகாசம் வழங்கப்பட வேண்டும் என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுடனான பேச்சுக்களின் போது பான் கீ மூன் தெரிவித்திருக்கின்றார். வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கான சர்வதேச ரீதியான அழுத்தங்களோ, காலக்கெடுக்களோ இனிமேல் இருக்கப்போவதில்லை என்பதைத்தான் இந்த நிகழ்வுகள் உணர்த்துகின்றன.
ஐ.நா. செயலாளர் நாயகத்தின் தற்போதைய விஜயம் ஊடகங்களில் அதிகளவுக்கு முக்கியத்துவத்தைப் பெற்றுக்கொண்டாலும், அரசியல் ரீதியான தாக்கம் எதனையும் ஏற்படுத்துவதாக அது அமையப்போவதில்லை. அவரது பதவிக்காலம் முடிவுக்கு வரப்போகின்றது. இன்னும் இரண்டு மாதங்களில் அவர் ஓய்வு பெறப்போகின்றார். இந்தக்காலப்பகுதியில் மாற்றங்களை ஏற்படுத்தக்கூடிய நகர்வுகள் எதனையும் அவரால் செய்ய முடியாது. தற்போது அவர் மேற்கொண்டிருப்பது வெறுமனே சம்பிரதாய பூர்வமான ஒரு விஜயம்தான். இதன்போது தெரிவிக்கப்படும் விடயங்கள் பதிவாக இடம்பெறுமே தவிர, அவற்றைக் கையிலெடுத்து அவர் செயற்படுத்த முற்படுவார் என்பது எதிர்பார்க்கக்கூடிய ஒன்றல்ல. இருந்தபோதிலும், அவரது விஜயத்தின்போது தெரிவிக்கப்பட்ட பல விடயங்கள் யதார்த்த நிலைமைகளை வெளிப்படையாக்கியிருக்கின்றது.
போரின் போதும் போருக்குப் பிந்தைய இந்த ஏழரை வருட காலப்பகுதியிலும் இடம்பெற்ற நிகழ்வுகளுடன் பிரிக்க முடியாத ஒருவராகவே பான் கீ மூன் இருக்கின்றார். அதன் அடிப்படையில்தான் அவரது தற்போதைய விஜயத்தைப் பார்க்க வேண்டியிருக்கின்றது. பான் கீ மூன் இலங்கைக்கு மேற்கொள்ளும் இரண்டாவது விஜயம் இது. போர் முடிவுக்கு வந்த உடனடியாக அதாவது, 2009 மே 23 ஆம் திகதி பான் கீ மூன் முதல் தடவையாக இலங்கைக்கு வந்தார். போர் இடம்பெற்ற பகுதிகளை உலங்குவானூர்தியிலிருந்தும், போரால் அகதிகளாகி முட்கம்பி வேலிக்குள் அடைக்கப்பட்டிருந்த மக்களை நேரில் சென்றும் அவர் பார்வையிட்டார். இதன் இறுதியில் அப்போதைய ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ஷவுடன் இணைந்து அவர் வெளியிட்ட கூட்டறிக்கைதான் வரலாற்று முக்கியத்துவம்வாய்ந்தது. பொறுப்புக்கூறல், நல்லிணக்கம், அரசியல் தீர்வு என்பவற்றை உள்ளடக்கியதாக இந்தக்கூட்டறிக்கை அமைந்திருந்தது. போருக்குப் பிந்திய நிகழ்ச்சி நிரலை வடிவமைத்தது இந்தக்கூட்டறிக்கைதான்.
போரின்போது இடம்பெற்ற பாரிய உயிரிழப்புக்களைத் தவிர்ப்பதில் ஐ.நா. தவறியது. இதற்காகப் பயன்படுத்தக்கூடிய பொறிமுறைகள் ஐ.நா. வசம் இருந்தும் அதனைப் பயன்படுத்த ஐ.நா. தவறியது. 'R2P' எனக்குறிப்பிடப்படும் "பாதுகாப்பதற்கான பொறுப்பை" இலங்கை விடயத்தில் ஐ.நா. பயன்படுத்தாததனால்தான் ஆயிரக்கணக்கான தமிழ் மக்கள் கொடூரமான முறையில் கொல்லப்பட்டனர். இதனைப்பயன்படுத்துமாறு ஐ.நா.வுக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டபோது கூட போர் முடிவடையும் வரையில் ஐ.நா. வெறும் பார்வையாளராகவே இருந்தது. ஐ.நா. அமைக்கப்பட்டமைக்காகத் தெரிவிக்கப்படும் கோட்பாடே இங்கு அர்த்தமற்றதாக்கப்பட்டது. இதற்கு இரண்டு காரணங்கள் சொல்லப்படுகின்றன. ஒன்று - முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ஷவுடன் நெருக்கமான உறவுகளை பான் கீ மூன் வைத்திருந்தது. இரண்டு - மேற்கு நாடுகளின் நிகழ்ச்சி நிரலின்படி விடுதலைப் புலிகள் அழித்தொழிக்கப்படும் வரை மௌனமாக இருக்க ஐ.நா. விரும்பியிருக்கலாம் எனச்சொல்லப்படுகின்றது. போர் முடிவுக்கு வந்ததாக அறிவிக்கப்பட்ட ஐந்தாவது தினம்தான் ஐ.நா. செயலாளர் நாயகம் இலங்கை வந்திருந்தார்.
போரின்போது ஏற்பட்ட பாரிய இழப்புக்களைத் தடுப்பதற்குத் தவறிவிட்ட குற்றவுணர்வும், மனித உரிமை அமைப்புக்களின் கடுமையான கண்டனங்களும்தான் மகிந்த ராஜபக்‌ஷவுடன் கூட்டறிக்கை ஒன்றை வெளியிடுவதற்கு பான் கீ மூனைத் தூண்டிய காரணிகளாக இருந்தன. போரின் போது ஏற்பட்ட பாரிய உயிரிழப்புக்களைத் தவிர்க்க ஐ.நா. தவறிவிட்டதை இப்போது மூன் பகிரங்கமாகவே ஒப்புக்கொண்டிருக்கின்றார். ராஜபக்‌ஷ - மூன் கூட்டறிக்கையின் அடிப்படையில்தான் ஜெனீவா தீர்மானங்கள் கொண்டுவரப்பட்டன. அந்தக் கூட்டறிக்கைதான் கடந்த ஏழரை ஆண்டுகாலத்துக்கான நிகழ்ச்சி நிரலை உருவாக்கியது. போர் முடிவுக்கு வந்து இன்று ஏழரை வருடங்கள் சென்றுள்ள போதிலும், கொடுக்கப்பட்ட வாக்குறுதிகள் எதுவும் முழுமையாக நிறைவேற்றப்படவில்லை. இடம்பெயர்ந்த மக்களில் ஒரு பகுதியினர் இப்போதும் முகாம்களுக்குள்தான் இருக்கின்றார்கள். தற்காலிகமாக அமைக்கப்பட்டிருந்த இராணுவ முகாம்கள் பல இன்று நிரந்தர முகாம்களாக்கப்படுகின்றன. இதனை இராணுவம் செய்கின்றது எனச் சொல்லிக்கொண்டாலும் கூட இதற்கான நிதியை அரசாங்கம்தானே வழங்குகின்றது?
இந்த நிலையில் கால அவகாசம் வழங்குமாறு ஜனாதிபதி கேட்பதும், அதனை வழங்குமாறு ஐ.நா. செயலாளர் நாயகம் தமிழ்த் தரப்புக்கு ஆலோசனை வழங்குவதும் சந்தேகத்தை ஏற்படுத்துவதாகவே இருக்கின்றது. நிரந்தர இராணுவ முகாம்களை அமைப்பதிலும், சிங்களவர்களே வசிக்காத பகுதிகளில் புத்தர் சிலைகளைக் குடியேற்றுதில் காட்டப்படும் அவசரத்தை தமிழர்களின் மீள்குடியேற்றத்தில் காட்டப்படுவதில்லை என்பது வெளிப்படையாகவே தெரிகின்றது. ஜனாதிபதியாக மைத்திரிபால பதவியேற்று ஒன்றரை வருடங்கள் சென்றுவிட்டது. புதிய அரசாங்கம் பதவியேற்று ஒரு வருடம் தாண்டிவிட்டது. எந்தவொரு அரசாங்கமும் பதவிக்கு வந்து ஒரு வருடத்துக்குள் சிக்கலான பிரச்சினைகளுக்குத் தீர்வைக்கண்டுவிட வேண்டும். இல்லையெனில் எதிர்க்கட்சிகள் பலம் பெறுவதும், அடுத்த தேர்தலை இலக்கு வைத்த செயற்பாடுகளில் இறங்குவதுதம்தான் வழமையாகிவிடும். இப்போதும் அவ்வாறுதான் நடைபெறப்போகின்றதா என்ற சந்தேகம் ஏற்படுவதைத் தவிர்க்க முடியவில்லை. காலஅவகாசம் காலங்கடத்தலுக்காக இருக்கக்கூடாது.
04-09-2016 Thinakkural