Saturday, October 20, 2012

களம் இறங்கிய பொன்சேகா! கலக்கத்தில் ரணில்!!

எதிர்பார்ப்புகளை  ஏற்படுத்தியிருந்த அரசுக்கு எதிரான ஐக்கிய பிக்குகள் முன்னணியின் பேரணி கொழும்பில் வியாழக்கிழமை நடைபெற்று முடிவடைந்திருக்கின்றது. மழைக்கு மத்தியிலும் பெருந்தொகையானவர்கள் பேரணியில் கலந்துகொண்டமை தமக்குக் கிடைத்த வெற்றி என ஏற்பாட்டாளர்கள் திருப்தியடைந்திருக்கின்றார்கள். நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை இல்லாதொழித்தல் என்பதுதான் இந்தப் பேரணியின் பிரதான கோஷமாக இருந்தது. ஆனால், அரசியலில் அரங்களில் இந்தப் பேரணி பெற்றுக்கொண்ட முக்கியத்துவத்துக்கு அது காரணமல்ல.

இந்த முன்னணியின் மூலமாக முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா தீவிர அரசியலுக்குள் மீண்டும் பிரவேசித்திருப்பது இது பெற்றுக்கொண்ட முக்கியத்துவத்துக்கு பிரதான காரணம். அரசுக்கு அச்சுறுத்தலைக் கொடுக்கும் வகையில் பலமான ஒரு எதிரணியாக இது உருவாகுமா என்ற கேள்வி எழுப்பப்பட்டமை இந்தப் பேரணி பெற்றுக்கொண்ட முக்கியத்துவத்துக்கு இரண்டாவது காரணம். இந்த முன்னணியின் பிரவேசம் பிரதான எதிர்க்கட்சியான ஐ.தே.க.வை எந்தளவுக்குப் பாதிக்கும் என்ற கேள்வியும் இது தொடர்பான கவனம் அதிகரித்திருந்தமைக்கு மற்றொரு காரணம்.

நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை இல்லாதொழித்தல் அரசாங்கத்தைக் கவிழ்த்தல் என்பன இந்த முன்னணியின் நிகழ்ச்சி நிரலில் முதன்மையானவையாக இருக்கின்ற போதிலும், முன்னணியின் பேரணி தொடர்பாக அரசாங்கம் பெரிதாக அலட்டிக்கொண்டதாகக் காட்டிக்கொள்ளவில்லை. ஐக்கிய பிக்கு முன்னணியின் பேரணி பிரதான எதிர்க்கட்சியான ஐ.தே.க.வில் எற்படுத்தியிருந்த நெருக்கடிகள் பற்றிய செய்திகள் நிச்யமாக அரசுக்கு இனிப்பானவையாக இருந்திருக்கும். இதற்கு மேல் தமக்கு ஆபத்து இல்லை எனவும் அரசு கருதியிருக்கலாம்.

அரசுக்கு எதிரான போராட்டம் ஒன்றை சரத் பொன்சேகா பிக்கு முன்னணி மூலமாக ஆரம்பிக்கப்போகின்றார் என்ற தகவல் கசிந்தவுடன் உஷாரானவர்கள் அரசாங்கத் தரப்பினர் அல்ல. ஐ.தே.க. தலைமையே உடனடியாக இதனால் உஷாரடைந்தது. எதிரணி முன்னணி ஒன்றை அமைப்பதற்கான முயற்சியில் தான் இறங்கியிருப்பதாக ரணில் விக்கிரமசிங்க நீண்ட காலமாகவே கூறிவருகின்ற போதிலும், அது ஒரு தேக்க நிலையிலேயே இருக்கின்றது. உட்கட்சி மோதல்களுக்கு மத்தியில் பல்வேறு தரப்பினரையும் அரவணைத்து பலமான ஒரு கூட்டமைப்பை அமைக்க ரணிலினால் முடியவில்லை.

அந்த இடத்தை நிரப்புவதற்கு பொன்சேகா இப்போது முற்பட்டிருப்பது ரணிலுக்கு ஒரு அச்சுறுத்தல் என்பதில் சந்தேகம் இல்லை. பொன்சேகாவின் பிரவேசத்தால் ஜனாதிபதி வேட்பாளர் என்ற அந்தஸ்த்தைக் கூட கடந்த தேர்தலில் இழக்க வேண்டியேற்பட்டதை ரணில் மறந்;திருக்கமாட்டார். பொன்சேகாவின் வருகை ரணிலுக்கு அச்சுறுத்தலாக அமைந்திருப்பதற்கு இரண்டு காரணங்கள் உள்ளன. ஒன்று - மகிந்த ராஜபக்ஷவுக்குச் சவால்விடக்கூடிய தலைவராக பொன்சேகா இருப்பதால் எதிர்க்கட்சி கூட்டணி ஒன்றின் தலைமை பொன்சேகாவிடம் சென்றுவிடலாம் என்பது. இது ரணில் அமைக்கும் எதிரணி கூட்டமைப்பை பலவீனப்படுத்திவிடும். இரண்டு - ஐ.தே.க.வில் அதிருப்தியடைந்திருக்கும் பலர் பொன்சேகாவை நோக்கிச் செல்லலாம் என்பது.

இந்தப் பின்னணியில்தான் பொன்சேகாவின் பேரணிக்குச் செல்பவர்கள் கட்சியின் உறுப்புரிமையை இழப்பார்கள் என ஐ.தே.க. தலைமை அறிவித்தது. அதன்படி பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாண சபை உறுப்பினர்கள் மற்றும் உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்கள் பலருடைய கட்சியின் அடிப்படை உறுப்புரிமை பறிக்கப்பட்டுள்ளது. அவர்கள் மீது ஒழுக்க விசாரணை நடத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதகைவிட பொன்சேகா மீதான தாக்குதலையும் ஐ.தே.க. தீவிரப்படுத்தியிருந்தமையைக் காண முடிந்தது. கடந்த ஜனாதிபதித் தேர்தலில் அவரை நிறுத்தியது தவறு என்பதை தாம் இப்போது உணர்ந்துகொள்வதாக ஐ.தே.க. அறிவித்தது.

நடைபெறும் இந்தச் சம்பவங்களை அவதானிக்கும் போது ஒரு விடயத்தைத் தெளிவாக உணர முடிகின்றது. நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறை ஒழிப்பு, ஆட்சிக் கவிழ்ப்பு என்பவற்றை தமது பிரதான கோஷங்களாக ஐ.தே.க. தலைமையும் பொன்சேகா தரப்பினரும் முன்வைக்கின்ற போதிலும், அதற்கு முன்னதாக தமது தலைமையை உறுதிப்படு;திக்கொள்வதிலேயே அவர்களுடைய கவனம் உள்ளது. ஆட்சியைக் கவிழ்ப்பதை நோக்கமாகக் கொண்டு ரணில் தலைமையில் எதிர்க்கட்சி முன்னணி ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. அதில் இணைய பொன்சேகா தயாராகவில்லை. அதேபோல பொன்சேகாவுக்கு தம்முடன் வந்து இணையுமாறு அழைப்பு விடுத்துள்ள ரணில், பொன்சேகா அணியில் இணையத் தயாராகவில்லை.

இருவருமே தம்மைப் பற்றிய மிகையான கணிப்பு ஒன்றை வைத்திருப்பதுதான் இதற்குக் காரணம். ஆனால், தம்மிடமுள்ள பலவீனங்களை இருதரப்பினரும் உணரும்போது அவர்கள் இணைந்து செயற்படவேண்டிய ஒரு நிர்ப்பந்தம் ஏற்படலாம். ஒன்றாக இணைந்து செயற்பட்டால்தான் தமது இருப்புக்களைத் தக்கவைத்துக்கொள்ள முடியும் என்ற ஒரு நிர்ப்பந்தம் ஒன்று வரும் போது இருவரும் இணைந்து செயற்படும் நிலை உருவாகும் என எதிர்வு கூறுகின்றார் இந்த இரு தரப்பினருடனும் நெருக்கமான உறவுகளை வைத்துள்ள ஒரு மூத்த அரசியல்வாதி. உடனடியாக இல்லாவிட்டாலும் காலப்போக்கில் அவ்வாறான நிலை ஏற்படும் என்பது அவரது கணிப்பு!

அதேவேளையில், பிக்குகள் முன்னணியின் கூட்டத்தில் பொன்சேகா வெளியிட்ட அறிவிப்பும் முக்கியமானது. அடுத்த வருடத்தில் திடீர் ஜனாதிபதித் தேர்தல் ஒன்றை அரசாங்கம் முன்வைக்கலாம் எனவும், அதற்காக ஜனாதிபதி வேட்பாளர் ஒருவரைத் தயார்படுத்த வேண்டும் எனவும் அவர் அறிவித்தார். ஐக்கிய பிக்குகள் முன்னணி மூலமாக மீண்டும் தீவிர அரசியலுக்குள் பொன்சேகா பிரவேசித்தமைக்கு இதுவும் ஒரு காரணமாக இருக்கலாம். அதாவது, அடுத்த ஜனாதிபதித் தேர்தலுக்கான தயாரிப்புக்களில் பொன்சேகா இப்போதே இறங்கிவிட்டாரா என்ற கேள்வியை இது எழுப்புகின்றது. ஐ.தே.க.வை பெரிதாகக் குழப்புவதுதம் இதுதான்.

கடந்த ஜனாதிபதித் தேர்தலில் பொன்சேகாவை நிறுத்திய பொது எதிரணி அவருக்கு முழுமையான ஆதரவை வழங்கியது. ஐ.தே.க.,    தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, மு.கா. மற்றும் ஜே.வி.பி. என்பன அவருடைய வெற்றிக்காகக் களமிற்கியிருந்தன. ஆனால், எதிர்க்கட்சிகள் தரப்பில் இப்போது ஒற்றுமையில்லை. அவ்வாறான ஒற்றுமை ஒன்று உடகடியாக ஏற்படுவதற்கான சாத்தியங்களும் காணப்படவில்லை. திடீர்த் தேர்தல் ஒன்றை நடத்தி தமது இருப்பை உறுதிப்படுத்திக்கொள்வதற்கு இந்தத் தருணத்தை மகிந்த பயன்படுத்திக்கொள்ளலாம் என பொன்சேகா கருதுவதாகத் தெரிகின்றது. இந்தக் கருத்து நிராகரக்கப்படக்கூடிய ஒன்றல்ல.

பொன்சேகாவைப் பொறுத்தவரையில் சிங்கள - பௌத்த வாக்குகளைப் பெற்றுத்தான் இந்த அரசாங்கத்தை மாற்ற முடியும் என்ற கருத்தை அவர் கொண்டுள்ளார். இதற்கான தகமை ரணில் விக்கிரமசிங்கவுக்கு இல்லை எனவும் பொன்சேகா கருதுவதாகத் தெரிகின்றது. அதற்காக தன்னுடைய செயற்பாடுகளை முற்றுமுழுதாக சிங்கள - பௌத்த அடிப்படையில் கொண்டு செல்லவும் அவர் விரும்பவில்லை. அவ்வாறு செல்வது மகிந்தவின் செயற்பாடுகளை ஒத்ததாக அமைந்துவிடும் எனவும் அவர் கருதுகின்றார். அதனால் இதற்குள் தமிழ்த் தரப்பையும் இணைத்துக்கொள்ள அவர் விரும்புவதாகத் தெரிகின்றது. அதனால்தான் ஜனாநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசனுக்கு தன்னுடன் இணையுமாறு அவர் அழைப்பு விடுத்திருக்கின்றார்.

மனோ கணேசனைப் பொறுத்தவரையில் ஐ.தே.க. தலைமையிலான எதிரணிக் கூட்டமைப்பில் இருப்பதால் பொன்சேகாவின் அழைப்பை அவர் ஏற்றுக்கொள்ளவில்லை. அதேவேளையில் இவ்விடயத்தில் ஒரு முக்கியமான நகர்வு  ஒன்றையும ; மனோ கணேசன் செய்திருக்கின்றார். நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறை ஒழிப்பு என்பதற்கு அப்பால் அர்த்தமுள்ள அதிகாரப் பரவலாக்கல் மற்றும் சிறுபான்மையினரின் நியாயமான கோரிக்கைகளையும் உள்ளடக்கியதாக இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி மகஜர் ஒன்றை பொன்சேகாவுக்கு அவர் கொடுத்திருப்பதாகத் தெரிகின்றது. இதே கோரிக்கையை ரணில் விக்கிரமசிங்கவிடமும் அவர் முன்வைத்திருக்கின்றார்.

ஐ.தே.க.வைப் பொறுத்தவரையில் தம்மை சிறுபான்மையினருடைய நியாயமான அபிலாஷைகளை ஏற்றுக்கொண்டுள்ள ஒரு கட்சியாக அவர்கள் காட்டிக்கொள்கின்ற போதிலும், அதனை அவர்கள் வெளிப்படையாகச் சொல்லிக்கொள்வதில் தயக்கத்தையே காட்டுகின்றார்கள். சிங்கள – பௌத்தர்கள் மத்தியில் இது தம்மைப் பாதிக்கலாம் என்ற அச்சம்ஐ.தே.க.வக்கு உள்ளது. இந்த நிலையிலேயே மனோ கணேசன் தன்னுடைய கோரிக்கைகளை ஐ.தே.க.வுக்கும் முன்வைத்துள்ளார்.

எது எப்படியிருந்தாலும் பொன்சேகாவின் மீள்பிரவேசம் தூங்கிக்கொண்டிருந்த ஐ.தே.க.வை விழித்தெழச் செய்திருக்கின்றது என்பது மட்டும் உண்மை. கொழும்பு ஹைட் பாக்கில் பொன்சேகா உரைநிகழ்த்தவிருந்த அதேவேளையில் துண்டுப் பிரசுரங்களுடன் நுகேகொடை சந்தியில் ரணில் விக்கிரமசிங்க வீதியில் இறங்கியிருந்தார். நவம்பர் 8 ஆம் திகதி வரையில் அரசுக்குக் காலக்கெடு விதித்துள்ள ரணில் விக்கிரமசிங்க, அதன்பின்னர் தொடர் போராட்டங்களை நடத்தப்போவதாகவும் அறிவித்திருக்கின்றார். ஆக, அடுத்துவரப்போகும் காலங்கள் எதிரணியினரின் போராட்டங்கள் நிறைந்த ஒரு வாரமாக அமையலாம்.

Monday, October 1, 2012

கூட்டமைப்பின் டில்லி விஜயம் சாதிக்கப்போவது என்ன?

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமை மீண்டும் அடுத்த மாதம் 10 ஆம் திகதி புதுடில்லிக்கு காவடி எடுக்கவுள்ளது. கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் மக்கள் தமக்கு வாக்களித்து வெற்றியைப் பெற்றுத் தந்தால் ஏதோ அதிசயங்கள் காத்திருக்கின்றன என்பது போல பரப்புரை செய்து வந்த சம்பந்தன் குழுவினர், ராவூப் ஹக்கீமின் ஆதரவுக்காகக் கெஞ்சிக் கூத்தாடி  முடிந்திருக்கும் நிலையில், இப்போது இந்தியத் தரப்பைச் சந்திப்பதற்காக புதுடில்லி புறப்படுகின்றார்கள்.

வழமைபோலவே இந்தியா தொடர்பான மாயைகள் கிளப்பப்படுகின்றன. மகிந்த ராஜபக்‌ஷ அரசின் மீது இந்திய அரசு அழுத்தங்களைக் கொடுத்து தீர்வொன்றைப் பெற்றுத் தந்துவிடும் என்பது போல கதைகள் வெளியாகிக்கொண்டிருக்கின்றன. இலங்கை தொடர்பான சர்வதேச மீளாய்வுக் கூட்டம் ஜெனீவாவில் நவம்பர் மாதம் நடைபெறவிருப்பதும், அதில் இந்தியாவின் பங்கு முக்கியமானதாக இருப்பதும் உண்மையாக இருந்தாலும், இனநெருக்கடித் தீர்வில் அழுத்தம் கொடுக்கும் நிலையில் இந்தியா உள்ளதா என்பதும், கூட்டமைப்பினரின் இந்திய விஜயம் இந்த விடயத்தில் செல்வாக்கைச் செலுத்துவதாக இருக்குமா என்பதும்தான் இன்று ஆராயப்பட வேண்டியவையாக உள்ளன.

கிழக்கு மாகாண சபைக்கான தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வெற்றிபெற வேண்டும் என இந்தியா அக்கறை காட்டியது உண்மைதான். தமக்கு சார்பான ஒரு தரப்பு கிழக்கு மாகாணத்தை நிர்வகிப்பது தமக்கு வசதியானதாக இருக்கம் என டில்லி கருதியிருக்கலாம். சுமர் 6,500 வாக்குகளால் ஆட்சியமைப்பதற்கான சந்தர்ப்பத்தை கூட்டமைப்பு தவறவிட்டடிருந்தாலும்கூட, 11 ஆசனங்களைப் பெற்றுக்கொண்டதன் மூலம் தமிழர் தரப்பின் பிரதான பிரதிநிதிகள் தாம்தாம் என்பதை கூட்டமைப்பு மீண்டும் ஒருமுறை வெளிப்படுத்திக்கொட்டியிருந்தது.

இருந்த போதிலும், அரசுடனான பேச்சுக்களைப் பொறுத்தவரையில் கூட்டமைப்பின் இந்த வெற்றி எந்த விதமான மாற்றங்களையும் ஏற்படுத்தும் ஒன்றாக இருக்கப்போவதில்லை. அரசாங்கம் தன்னுடைய நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டு கூட்டமைப்பினரை ஓடிவந்து கட்டியணைக்கப்போவதுமில்லை.

கூட்டமைப்பைப் பொறுத்தவரையில் தேர்தலில் பல வாக்குறுதிகள் அவர்களால் வழங்கப்பட்டது. தம்மை வெற்றி பெறச்செய்வதன் மூலமாக அரசுக்கு எதிரான சர்வதேச அழுத்தங்களை அதிகரிக்கலாம் என்பது அவற்றில் ஒன்று. குறிப்பாக போர்க் குற்றச்சாட்டை மேற்குலகம் தூக்கிப் பிடிப்பதற்கு இந்தத் தேர்தல் முடிவுகள் வழிவகுக்கும் என்பது கூட்டமைப்பின் கருத்தாக வெளிப்பட்டது. நவம்பரில் நடைபெறவிருக்கும் ஐ.நா.வின் இலங்கை தொடர்பான மீளாய்வுக் கூட்டத்தை இலக்காக வைத்துத்தான் கிழக்கு மாகாண சபைக்கான தேர்தலை ஒரு வருடம் முன்கூட்டியே நடத்துவது என்ற முடிவை அரசாங்கம் எடுத்திருந்தது என்றாலும் கூட, இத்தேர்தலின் முடிவுகள் அவ்வாறு குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்துவதாக இருக்கும் என நம்பமுடியாத நிலைதான் உள்ளது.

தமக்கு வாக்களித்த மக்களின் எதிர்பார்ப்புக்களை நிறைவேற்ற முடியாத நிலையில் தற்போது இந்திய விஜயத்தை வைத்து கொஞ்சக்காலத்துக்கு படம் காட்டலாம் என கூட்டமைப்பின் தலைமை நினைக்கின்றது. இந்தியாவைப் பொறுத்தவரையில் இலங்கை விவகாரத்தில் கையாலாகத்தனத்திலேயே அது தொடர்ந்தும் உள்ளது. உள்நாட்டு வெளிநாட்டு அழுத்தங்கள் காரணமாக இலங்கைக்கு எதிராக அமெரிக்கா ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் மார்ச் மாதம் கொண்டு வந்த தீர்மானத்துக்கு ஆதரவாக இந்தியா வாக்களித்தது. அதற்குப் பழிவாங்கும் வகையில் மகிந்த அரசு நடத்தும் தாக்குதல்களில் தற்காப்பு நிலையில் மட்டுமே இந்தியாவினால் நிற்க முடிகின்றது.

இந்தியாவின் இந்த கையாலாகத்தனம் கூட்டமைப்பின் தலைவர்களுக்குத் தெரியாததல்ல. இம்மாத முற்பகுதியில் கடுமையான எதிர்ப்புக்களின் மத்தியில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ஷ இந்தியாவுக்குச் சென்று வந்திருக்கின்றார். தமிழகத்தில் தீக்குளிப்பு, தூதரகம் முற்றுகை, மத்திய பிரதேசத்தில் வைகோவின் வீதிமறிப்புப் போராட்டம் என்பவற்றுக்கு மத்தியில் மகிந்த ராஜபக்‌ஷவுக்கு இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங் இராப்போசன விருந்தளித்துக் கௌரவித்தார். இந்திய ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியும் ஜனாதிபதி மகிந்தவை சந்தித்துப் பேச்சுக்களை நடத்தினார். இந்தச் சந்திப்புக்களின் போது இனநெருக்கடி தொடர்பில் எந்தவிதமாகவும் இந்தியத் தரப்பு கேள்வி எழுப்பவில்லை. அழுத்தங்களையும் கொடுக்கவில்லை.

தனது இந்தியப் பயணத்துக்கு முன்னோடியாக ஒரு உபாயத்தை மகிந்த கையாண்டார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனை அவசரமாக அலரி மாளிகைக்கு அழைத்த அவர், குறுகிய காலப் பேச்சுவார்த்தை ஒன்றை நடத்தினார். கிழக்கு மாகாண சபைத் தேர்தல் தொடர்பாகவும், இன நெருக்கடிக்கு அரசியல் தீர்வைக் காண்பது தொடர்பாகவும் இச்சந்திப்பின்போது முக்கியமாக பேசப்பட்டது.

இனநெருக்கடிக்கு அரசியல் தீர்வு காணப்படவேண்டுமாயின் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்றத் தெரிவுக்குழுவுக்குள் வரவேண்டும் என ஜனாதிபதி 'வழமைபோலவே' இந்தச் சந்திப்பின்போதும் அழைப்பு விடுத்தார்.

கூட்டமைப்பின் தலைவரும் இதற்கு வழமையான பதிலையே கொடுத்தார். "நீங்கள் வழங்கிய வாக்குறுதிகளை முதலில் நிறைவேற்றுங்கள். பாராளுமன்றத் தெரிவுக்குழுவுக்குள் வருவதையிட்டு பின்னர் பார்க்கலாம்" என்பதுதான் சம்பந்தனின் பதிலாக இருந்தது.

"இந்தியப் பயணத்தை முடித்துககொண்டு வந்த பின்னர் இது தொடர்பாக ஆராயலாம்" என சந்திப்பை முடித்துக்கொண்டு சம்பந்தனை வழியனுப்பிவைத்தார் மகிந்தர்.

இன நெருக்கடிக்கான தீர்வைப் பொறுத்தவரையில் இந்தச் சந்திப்பில் எந்த முக்கியத்துவமும் இல்லை. ஆனால், மகிந்தரைப் பொறுத்தவரையில் இதில் முக்கியத்துவம் ஒன்றிருந்தது. சமாதானப் பேச்சுக்கள் பற்றி இந்தியாவில் சொல்வதற்கு இந்தச் சந்திப்பு உதவியது. "டில்லி புறப்பட முன்னர் சம்பந்தனை சந்தித்தேன். இனி கொழும்பு திரும்பியவுடன் பேச்சுக்களை மீண்டும் ஆரம்பிப்போம்"  என மகிந்த இந்தியத் தரப்புக்கு மகிந்தர் சொல்ல, இந்தியத் தரப்பு மௌனமாக்கப்பட்டுவிட்டது.

இந்தியாவை மகிந்தர் மௌனமாக்குவதற்கு சம்பந்தர் தாராளமாக உதவியிருக்கின்றார். மகிந்தவின் இராஜதந்திரத்துக்கு சம்பந்தர் மீண்டும் பலியாகியிருக்கின்றார்.

இதனைச் சொன்ன மகிந்தர் மற்றொரு விடயத்தையும் இந்தியத் தரப்புக்கு நாசூக்காகப்போட்டுவைத்தார். "கூட்டமைப்புடன் பேச்சுக்களை ஆரம்பிக்க நான் தயார். அவர்கள்தான் பாராளுமன்றத் தெரிவுக்குழுவுக்கு வருகின்றார்கள் இல்லை" எனப் புகார் செய்தார் மகிந்தர். இந்தியத் தரப்பு அதனை ஏற்றுக்கொண்டுவிட்டது. கூட்டமைப்பு பாராளுமன்றத் தெரிவுக்குழுவுக்குச் செல்வது ஒன்றுதான் பேச்சுக்களை மீண்டும் ஆரம்பிக்க ஒரே வழி என இந்தியத் தரப்பு இப்போது கருதுவதாகத் தெரிகின்றது.

ஆக, அக்டோபர் 10 ஆம் திகதி கூட்டமைப்பினர் டில்லி செல்லும் போது அங்கு அவர்களுக்குக் காத்திருக்கும் செய்தி என்ன என்பது இப்போது தெளிவானது. "பாராளுமன்றத் தெரிவுக்குழுவுக்குச் செல்லுங்கள்" என்ற செய்தியே சம்பந்தக் குழுவினருக்குச் சொல்லப்படப்டபோகின்றது. ஆக, மகிந்த தரப்புக்கு அல்ல சம்பந்தன் தரப்புக்கே இந்தியா அழுத்தம் கொடுக்கப்போகின்றது. இதற்கு சம்பந்தன் தரப்பு 'தயங்கினால்', "நீங்கள் போங்கள்..மிகுதியை நாங்கள் பார்த்துக்கொள்கின்றோம்" என இந்தியா சொல்லலாம்.

இப்போதுள்ள நிலையில் மகிந்தவைச் சாந்தப்படுத்துவதுதான் இந்தியாவுக்குள்ள தேவை. இலங்கை, பர்மா, ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளை மையப்படுத்தி இந்தியாவைச் சுற்றிவளைக்கும் வியூகத்தை சீனா வெற்றிகரமாக வகுக்கின்றது. இலங்கையைத் தளமாகக் கொண்டு இந்தியாவை வேவுபார்க்கும் திட்டங்களை பாகிஸ்தான் வகுத்திருக்கின்றது. (இது பற்றி மற்றொரு கட்டுரையில் விரிவாகப் பார்ப்போம்) இலங்கையுடன் பகைமையை வளர்ப்பதன் மூலம் தமக்கு எதிரானவர்களுடனேயே கொழும்பு இணைந்துகொள்ளும் என்பதுதான் இந்தியாவின் பிந்திய கண்டுபிடிப்பு.

அதனால் கொழும்பைக் குளிர்விப்பதற்கான செயற்பாடுகளை முன்டுக்க வேண்டிய நிலையில் டில்லி உள்ளது. இதன்மூலமகவே தமது எதிரிகளின் பிடியிலிருந்து கொழும்பை விடுவிக்கலாம் என டில்லி கருதுகின்றது. இதனைவிட கொழும்பின் மீது அழுத்தங்களைக் கொடுப்பது தமக்கே பாதகமானதாக அமையும் என டில்லி அஞ்சுகின்றது.

தமது இந்தியப் பயணத்தின்போது தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவையும் சந்திக்கப்போவதாக மாவை சேனாதிராஜா தெரிவித்திருக்கின்றார். ஜெயலலிதாவைப் பொறுத்தவரையில் இலங்கைப் பிரச்சினையில் சம்பந்தப்பட்ட எந்தத் தரப்பையும் சந்திப்பதில்லை என்பதில் அவர் உறுதியாகவுள்ளார். இந்த நிலையில் கூட்டமைப்பை அவர் சந்திப்பார் என்பது எதிர்பார்க்கக்கூடியதல்ல. வெறுமனே மக்களுக்கு படம்காட்டுவதற்காகத்தான் இதனை அவர் சொல்லியிருக்க முடியும்.

அதேவேளையில் வடபகுதியிலுள்ள பாதுகாப்ப வலயங்கள் தொடர்பாக டில்லியிடம் முறையிடப்போவதாக சுரேஷ் பிரேமச்சந்திரன் கூறியிருக்கின்றார். இது தொடர்பில் கூட்டமைப்பு எத்தனையோ தடவை முறையிட்டுள்ளது. இந்தியாவால் எதுவும் செய்ய முடியவில்லை. இப்போது மட்டும் ஒன்றும் நடந்துவிடப்போவதில்லை என்பதும் சுரேஷ் பிரேமச்சந்திரனுக்கு தெரிந்துதான் இருக்கும். நாம் இந்தியத் தரப்பக்கு சொன்னோம். அவர்கள் அதனையிட்டு கவனமாக செவிமடுத்தார்கள் என்று செய்தி கொடுக்கக்கூடியதாக இருக்குமே தவிர வேறு எதுவும் நடக்கப்போவதில்லை.

ஆக, கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 11 ஆசனங்களைப் பெற்றுக்கொண்டிருக்கின்றது என்பதற்காக மகிந்த அரசின் மீது இந்தியா அழுத்தங்களை அதிகரிக்கும் என்பது எதிர்பார்க்கக்கூடியதல்ல. டில்லி விஜயத்தின் போது இது கூட்டமைப்புக்கு தெளிவாக உணர்த்தப்படும். இனிமேலாவது இந்தியாவைக் காட்டி அரசியலை நடத்தாமல் தமது சொந்தக் காலில் நின்று அரசியல் செய்வதற்கான உபாயங்களை கூட்டமைப்பின் தலைமை வகத்துக்கொள்ள வேண்டும்.

Monday, February 13, 2012

ஆக்கிரமிப்புக்குள் தமிழர்கள்!

பல வருடகால இடைவெளியின் பின்னர் சென்றிருந்தமையால் திருக்கோணேஸ்வரம் கோவில் பகுதியில் ஏற்பட்டிருக்கும் மாற்றங்களை வெளிப்படையாகவே காணக்கூடியதாக இருந்தது.

முன்னரெல்லாம் திருமலை சென்று பின்னர் அங்கிருந்து திருக்கோஸ்வரம் செல்வதற்காக கோணேஸ்வரம் மலையின் படிகளில் ஏறும் போது ஒரு இந்துக்கோவிலுக்குச் செல்கின்றோம் என்ற பயபக்தி தானாகவே மனதுக்குள் குடிகொள்ளும். ஆனால், கடந்தவாரம் அங்கு சென்ற போது, ஒரு பௌத்த விகாரைக்குச் செல்கின்றோமா என்ற சந்தேகம் மேலெழுவதைத் தவிர்க்க முடியவில்லை. காரணம் - திழருக்கோணேஸ்வரப் பெருமானைத் தரிசிக்க சாரையாரையாகச் செல்பவர்களில் கணிசமானவர்கள் சிங்களவர்கள்.

அதுமட்டுமன்றி கோவில் வீதியை ஆக்கிரமித்து கடைபரப்பியிருப்பவர்களும் முழுமையாக சிங்களவர்கள்தான். திருமலை நகரசபையின் உத்தரவையும் மீறி அமைக்கப்பட்டுள்ள இந்தக் கடைகள் ஆக்கிரமிப்பின் மற்றொரு சின்னமாகக் காட்சியளிக்கின்றது.
கோணேஸ்வரம் கோவிலுக்கு செல்லும் பாதை
கிழக்கு மாகாண ஆளுநர் சிங்களவர். திருமலை அரசாங்க அதிபர் சிங்களவர். கோவில் பகுதி ஒரு இராணுவ முகாமுக்கு உட்பட்ட பகுதியாகவே உள்ளது. இந்த நிலையில் துணிச்சலாகக் கடை பரப்பியுள்ள சிங்களவர்களை அனுமதிப்பதைவிட நகர சபைக்கும் வேறு தெரிவுகள் இருந்திருக்காது.

திருக்கோணேஸ்வரம் அமைந்திருக்கும் பிரட்றிக் கோட்டைப் பகுதியை புனித நகராக்குவதற்கு இந்துமதப் பிரமுகர்கள் நீண்டகாலமாக மேற்கொண்ட முயற்சிகள் எதுவும் பலனளிக்கவில்லை. இதுவே ஒரு சிங்களவர்களின் வணக்கத்தலமாக இருந்திருந்தால் கதை வேறு!
கோவில் முன்பாக சிவனுக்கு பாரிய விக்கிரம்
இருந்தபோதிலும் இந்தப் பகுதியைப் பாதுகாக்க வேண்டும் என்பதில் தமிழர்கள் அதிகளவுக்கு அக்கறையாக இருப்பதை கடந்த வாரம் இங்கு சென்றிருந்தபோது அவதானிக்க முடிந்தது. மறுபுறத்தில் இந்தப் பகுதியை முழுமையாக ஆக்கிரமித்துக்கொண்டுவிட வேண்டும் என்பதில் சிங்களவர்களுக்குள்ள வெறியையும் காணக்கூடியதாக இருக்கின்றது. இந்தப் பின்னணியில் திருமலையைப் பொறுத்தவரையில் இனங்களுக்கிடையிலான உறவுகள் ஒரு கொதி நிலையில்தான் உள்ளன என நிச்சயமாகக் கூறலாம்.
கோவில் வீதியை ஆக்கிரமித்துள்ள கடைகள்
திருக்கோணேஸ்வரத்தின் வரலாறு மிகவும் தொன்மையானது. இராமாயணத்துடன் தொடர்புபடுத்தக் கூடிய வகையில் இங்கு காணப்படும் இராணவன் வெட்டு உள்ளது. இந்த ஆலயம் எந்தளவு பழமையானது என்பதற்கு இது சான்று. இராவணனுக்கு இங்கு சிலை வைக்கப்பட்டு மக்கள் வணங்குவதையும் காணலாம்.
இராவணன் விக்கிரகம்
திருமலையின் வரலாற்றிலிருந்து திருக்கோணேஸ்வரத்தின் வரலாற்றைப் பிரிக்க முடியாது. அந்நிய நாடுகள் பலவற்றினதும் படையெடுப்புக்களிலிருந்தும் பாதுகாக்கப்பட்ட திருக்கோணேஸ்வரரம் இப்போது சிங்களவர்களின் படையெடுப்பினால் தன்னுடைய சுயத்தை எவ்வாறு பாதுகாத்துக்கொள்ளப்போகின்றது என்பதுதான் இந்துக்கள் மத்தியில் எழுகின்ற கேள்வி!
கன்னியா வெந்நீரூற்று
பிரித்தானிய ஆட்சியாளர்களிடமிருந்து இலங்கைத் தீவு மீண்ட உடனடியாகவே திருமலையை சிங்கள மயமாக்குவதற்கான முயற்சிகளை சிங்க ஆட்சியாளர்கள் ஆரம்பித்துவிட்டார்கள். அல்லை - கந்தளாய் குடியேற்றத் திட்டத்தின் மூலமாக ஆரம்பமான இந்த ஆக்கிரமிப்பு இன்று திருமலை மாவட்டத்தில் தமிழர்களின் எதிர்கால இருப்பையே கேள்விக்குறியாக்கியிருக்கின்றது.
சுடுதண்ணீர் கிணறு
திருமலை மாவட்டத்தின் எல்லைக் கிராமங்கள் பல சிங்கள மயமாக்கப்பட்டுள்ளதுடன், தமது பாரம்பரியமான தமிழ்ப் பெயர்களையும் இழந்து சிங்களப் பெயர்களைச் சூடிக்கொண்டிருக்கின்றன.

வளம் கொழிக்கும் சம்புரிலிருந்து தமிழர்கள் ஒட்டுமொத்தமாக ஒரே இரவில் வெளியேற்றப்பட்டு இன்று எழு வருடங்களாகப்போகின்றது. அவர்களுடைய முகாம் வாழ்க்கைதான் இன்னும் முடிவுக்கு வரவில்லை. தாம் பிறந்து வளர்ந்த மண்ணைவிட்டு பலவந்தமாக வெளியேற்றப்பட்ட இந்த சம்பூர் மக்களையிட்டு இன்று வரையில் யாரும் கவலைப்படவில்லை.

இந்தப் பின்னணியில் போர் முடிவுக்கு வந்துள்ள நிலைமையைப் பயன்படுத்தி திருமலை நகரப் பகுதியை சிங்கள மயமாக்கும் திட்டம் இப்போது முடுக்கிவிடப்பட்டுள்ளது. திருமலை நகரை அடுத்துள்ள மீன்பிடிக் கிராமங்கள் அனைத்தும் சிங்கள மயமாககப்பட்டுள்ளது. இதனால் திருமலையில் கடல்வளம் முழுமையாகவே சிங்களவர்களின் கைகளுக்குள் சென்றுவிட்டது.
சுடுதண்ணீர் கிணறுகளில் நீராட படையெடுக்கும் சிங்களவர்கள்
திருமலையிலிருந்து பெருமளவு கடலுணவுப் பொருட்கள் வெளிமாவட்டங்களுக்கு அனுப்பப்படுகின்றது. இதனைவிட கருவாடு உற்பத்தியும் சிங்களவர்களின் கைகளிலேயே உள்ளது.

திருமலை நகரப் பகுதியில் எந்த இடத்தில் தடுக்கிவிழுந்தாலும் முன்னால் ஒரு கோவில் இருக்கும். அந்தளவுக்கு நகரப் பகுதிகளில் இந்துக் கோவில்கள் பெருமளவுக்கு நிறைந்துள்ளன. நகரில் தமிழர்களின் தனித்துவத்தையும் அடையாளத்தையும் பாதுகாப்பதில் இந்தக் கோவில்கள்தான் முக்கிய இடத்தைப் பெறுகின்றன. இதில் பிரதானமானதுதான் திருக்கோணேஸ்வரம் கோவில்!

இதனை முறியடிப்பதற்காகத்தான் திருமலை நகரின் மத்தியில் புத்தர் சிலை ஒன்று இரவோடிரவாக அமைக்கப்பட்டு அதற்கு பொலிஸ் பாதுகாப்பும் வழங்கப்பட்டது வாசகர்களுக்கு நினைவிருக்கலாம். இதனைவிட திருமலை நெல்சன் தியேட்டரின் முன்பாக உள்ள பாரிய காணியும் புத்த விகாரை ஒன்றை அமைப்பதற்காக சிங்களவர்களால் கையகப்படுத்தப்பட்டுள்ளது. இந்தக் காணியில் நான்கு அரச மரங்கள் இருப்பதைக் காரணங்காட்டியே இதனை சிங்களவர்கள் இப்போது கைப்பற்றியிருக்கின்றார்கள்.

அரச மரங்களே இன்று தமிழர்களுக்கு எதிரியாகிவிட்ட நிலை!
வெந்நீருற்று பகுதியில் காணப்படும் அறிவித்தல்
திருக்கோணேஸ்வரம் கோவில் பகுதிக்குச் செல்லும் போது கதிர்காமத்தைப் போன்றதொரு நிலை இதற்கும் ஏற்பட்டுவிடுமா என்றே அஞ்சத் தோன்றுகின்றது. பிரெட்றிக் கோட்டைக்குள் திருக்கோணேஸ்வரம் இருப்பதால் முற்றுமுழுதாக இராணுவக் கட்டுப்பாட்டுக்கு உட்பட்ட ஒரு திருக்கோவிலாகவே இது உள்ளது.
வெந்நீரூற்றுப் பகுதியில் குவிந்துள்ள மக்கள்
இந்த நிலையில் திருக்ணோஸ்வரத்துக்கு முன்பாக பாரிய புத்தர் சிலை ஒன்று அமைக்கப்பட்டது. இதற்குப் போட்டியாக பாரிய அளவிலான சிவபெருமான் விக்கிரகம் ஒன்றை தமிழர்கள் கோணேஸ்வரம் கோவிலின் முன்பாக அமைத்திருக்கின்றார்கள். இது சிங்களத் தரப்பினருக்கு ஆத்திரமூட்டுவதாக இருந்தாலும் அமைதியாக இருக்கின்றார்கள்.இப்போது திருமலை நகரில் இருந்துகொண்டே சிவனைத் தரிசிக்க முடியும்!

திருமலையின் கன்னியா பகுதியிலுள்ள சுடுதண்ணீர் கிணறுகள் அமைந்திருக்கும் பகுதியில் இப்போது சிங்களவர்களுடைய ஆக்கிரமிப்புக்கு உள்ளானதாகவே காணப்படுகின்றது. ஆயிரக்கணக்கான சிங்களவர்கள் இந்தப் பகுதிக்கு வந்துசெல்வதுடன், இந்தப் பகுதியில் காணப்பட்ட அரச மரம் ஒன்றின் கீழ் பௌத்த விகாரை ஒன்றும் சின்னதாக அமைக்கப்பட்டுவிட்டது. சுடுதண்ணீர் கிணறு அமைந்திருக்கும் பகுதிக்குச் செல்வதற்கான நுளைவுச் சீட்டு தனிச் சிங்களத்திலேயே அச்சடிக்கப்பட்டுள்ளது. இந்தப் பகுதியின் பாதுகாப்புக் கடமைகளில் இராணுவத்தினரே ஈடுபடுத்தப்பட்டுள்ளார்கள்.
திருமலையைப் பொறுத்தவரையில் அங்கு அமைதி போன்ற நிலை காணப்பட்டாலும், இனங்களுக்கிடையில் கொதிநிலைதான் காணப்படுகின்து. இன்றும் ஒரு சில தசாப்தங்களில் திருமலையின் நிலை எவ்வாறானதாக இருக்கும் என்பது கேள்விக்குரியதாகவே உள்ளது!

Wednesday, February 1, 2012

இலங்கையைத் திணறவைக்கும் அமெரிக்காவின் புதிய நகர்வுகள்

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 19 வது கூட்டத் தொடர் எதிர்வரும் 27 ஆம் திகதி ஜெனிவாவில் ஆரம்பமாகவிருக்கும் நிலையில் அமெரிக்கா மேற்கொண்டுள்ள புதிய காய் நகர்த்தல்கள் கொழும்பைத் திகைக்க வைத்துள்ளன. ஜெனிவாவில் வருவாகக்கூடிய சவால்களைச் சமாளிப்பதற்கு முழு அளவிலான தயாரிப்புக்களில் இலங்கையின் வெளிவிவகார அமைச்சு ஈடுபடுத்தப்பட்டுள்ளது. 

அமெரிக்காவின் போர்க் குற்ற விவகாரங்களுக்குப் பொறுப்பான விஷேட தூதுவர் ஸ்ரேபன் ரப் அடுத்த வாரம் கொழும்பு வரவிருக்கின்றார். சியரலியோன் நாட்டில் இடம்பெற்ற போர்க் குற்றங்கள் தொடர்பில் வழக்கைத் தாக்கல் செய்வதற்கான பொறுப்பை இவரே ஏற்றிருந்தார். போர்க்குற்றம் தொடர்பில் அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவின் ஆலோசகராகவும் பணியாற்றும் இவர் அடுத்த வாரம் பெரும்பாலும் 5 ஆம் திகதி கொழும்பு வருகின்றார் என்ற செய்தி இலங்கை அதிகாரிகளுக்கு வயிற்றைக் கலக்கும் பேதி மருந்தாகவே வந்திருக்கின்றது. 

இந்தக் கலக்கத்தில் கொழும்பு இருக்கும் நிலையில் கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதரகத்தின் துணைத் தூதுவர் கடந்த வெள்ளிக்கிழமை வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸிடம் கடிதம் ஒன்றைக் கையளித்திருக்கின்றார். கடிதத்தை வாங்கி உடைத்துப் படிக்கும் வரையில் அதில் அதிர்ச்சிக் குண்டுகள் ஒன்றல்ல இரண்டு இருக்கின்றது என்பதை பீரிஸ் அறிந்திருக்கவில்லை. 
ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ஷ
அதிர்ச்சியை வெளிக்காட்டாமல் விஷயத்தை ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ஷவிடம் பீரிஸ் தெரிவித்திருக்கின்றார். விஷயம் உடனடியாகவே பத்திரிகைகளில் கசியவில்லை. அமெரிக்க உதவித் தூதுவர் கையளித்த கடிதத்தில் இருந்த இருந்த இரண்டு அதிர்ச்சிக் குண்டுகளும் இவைதான்:

1. ஜெனிவா மாநாட்டில் இலங்கைக்கு எதிராகக் கொண்டுவரப்படும் பிரேரணை தொடர்பானது. இதற்கு அமெரிக்கா ஆதரவளிக்கும் என இச்செய்தியில் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. 

2. நல்லிணக்கம், பொறுப்புக் கூறல் மற்றும் வடமாகாண சபைக்கான தேர்தல் தொடர்பில் இலங்கை அரசின் அணுகுமுறை என்ன என்பது தொடர்பாக ஆராய்வதற்காக வாஷிங்டன் வருமாறு அமெரிக்க வெளிவிவகார அமைச்சர் ஹிலாரி கிளின்டன் அமைச்சர் பீரிஸிற்கு விடுத்துள்ள அழைப்பு.
அமெ. போர்க் குற்றங்களுக்கான தூதுவர் ஸ்ரேபன் ரப்
இந்த இரண்டு விடயங்களிலுமுள்ள செய்தி மிகவும் கடுமையானது. ஜெனிவா மாநாட்டில் இலங்கை பெரும் நெருக்கடியை எதிர்கொள்ளப்போகின்றது என்பது இதன் மூலம் தெளிவாகியிருந்தது. அமெரிக்கா பிரேரணையைக் கொண்டுவரும் போது பிரித்தானியா, கனடா போன்ற மேற்கு நாடுகளும் அதற்கு ஆதரவளிக்கும். இந்தப் பின்னணியில் அதேபோன்ற ஒரு நிலைப்பாட்டை எடுப்பதற்கான நிர்ப்பந்தம் டில்லிக்கும் ஏற்படும். கொழும்பிலள்ள மேற்கு நாடுகளின் இராஜதந்திரிகள் வெளியிடும் கருத்துக்களின்படி இந்தப் பிரேரணைக்கு இந்தியா ஆதரவளிக்கும் என்ற எதிர்பார்ப்பை அவர்கள் கொண்டிருப்பதை உணர்ந்துகொள்ள முடிந்தது.

இந்த நெருக்கடியிலிருந்து மீளவதற்கான வழிதான் இரண்டாவதாக உள்ளது. அதாவது 1. நல்லிணக்கம். 2. பொறுப்புக் கூறல் 3. வடமாகாண சபைத் தேர்தல் ஆகிய மூன்று விடயங்களிலும் சர்வதேச சமூகம் எதிர்பார்க்கும் வகையில் இலங்கை அரசாங்கம் செயற்படுமாயின் ஜெனிவாவில் உருவாகக்கூடிய நெருக்கடியின் தீவிரம் மட்டுப்படுத்தப்படும். அமெரிக்க கொடுத்துள்ள செய்தியில் மறைமுகமாக இந்த அர்த்தமும் பொதிந்திருப்பதை உணர முடிந்தது.
ஹிலாரி கிளின்டன்
நல்லிணக்கம் என்று சொல்லும் போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் அரசாங்கம் தற்போது நடத்தும் பேச்சுக்களையே பிரதானமாகக் குறிப்பிடுகின்றது. ஆனால், இதனை பாராளுமன்றத் தெரிவுக்குழு மூலமாக நல்லிணக்கத்துக்கான முயற்சிகள் இடம்பெறுவதாகக் காட்டிக்கொள்ள அரசு முற்படுகின்றது. அதனால்தான் இந்தத் தெரிவுக்குழுவை அமைப்பதில் அசாதாரண அவசரம் அண்மைக் காலத்தில் காட்டப்படுகின்றது. 

இரண்டாவதாகவுள்ள பொறுப்புக்கூறலைப் பொறுத்தவரையில் கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்கத்துக்கான ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதாக அரசாங்கம் கூறிக்கொள்ள முற்படுகின்றது. இருந்த போதிலும் இதனை சர்வதேசம் ஏற்றுக்கொள்வதாக இல்லை. 

மூன்றாவதாகக் குறிப்பிடப்படும் வடமாகாண சபைக்கான தேர்தலைப் பொறுத்தவரையில் காலத்தைக் கடத்துவதுதான் அரசின் உத்தியாகவுள்ளது. இந்தத் தேர்தலை அரசு எப்போதோ நடத்தியிருக்க முடியும். ஆனால் தமக்குச் சாதகமான நிலை இல்லை என்பதால் மட்டும் அரசு காலத்தைக் கடத்தவில்லை. வடமாகாண சபை உருவாக்கப்பட்டால் வடக்கில் மேற்கொள்ளப்படும் இராணுவ மயமாக்கல் போன்றன பாதிக்கப்படும் என அரசு சிந்திக்கின்றது. தேர்தலை நடத்தி வடமாகாணத்தை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிடம் கொடுத்துவிடவும் அரசு விரும்பவில்லை. 
அமைச்சர் ஜி.எல்.பீரிஸ்
இந்தப் பின்னணியில் அமெரிக்காவின் நகர்வுகள் இலங்கை அரசுக்குப் பெரும் நெருக்கடியைக் கொடுப்பதாக அமைந்திருக்கும் என்பது உண்மை. விருப்பமில்லாத சிலவற்றை செய்யாவிட்டால் நெருக்கடி தவிர்க்க முடியாமல் போகலாம். 

சிறிய நாடுகளைத்தான் அமெரிக்கா தண்டிக்கின்றது என வெளிநாட்டு ஊடகவியலாளர்கள் மத்தியில் உரையாற்றிய போது ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ஷ தெரிவித்திருந்ததும் இந்தப் பின்னணியில்தான்! ஈரானுக்காக பரிதாபப்படுவதாக அவர் காட்டிக்கொண்டாலும் அவரது மனதில் அது மட்டும் இருந்திருக்காது!

மகிந்த விரும்பாத சிலவற்றை மேற்கு நாடுகள் எதிர்பார்க்கின்றன என்பது இப்போது தெளிவாகத் தெரிகின்றது. இதனை மகிந்தர் எப்படிக் கையாளப்போகின்றார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்! வீராவேசப் பேச்சுக்கள் மக்களின் ஆரவாரத்தைப் பெற்றுத்தரலாம். ஆனால் அது மட்டும் பிரச்சினைகளுக்குத் தீர்வாகிவிடாது. 

Sunday, January 29, 2012

பேச்சுக்களில் முட்டுக்கட்டை நிலைமை முடிவுக்கு கொண்டுவர முடியாத டில்லி

இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா இலங்கைக்கு மேற்கொண்ட விஜயம் வெற்றிகரமானதாக அமைந்திருந்தது என இந்திய இராஜதந்தர வட்டாரங்கள் தெரிவிக்கின்ற போதிலும், ஈழத் தமிழர்களின் பிரச்சினைகளைப் பொறுத்தவரையில் இது எந்தவிதமான பலனையும் தராத ஒன்றாகவே முடிவடைந்திருக்கின்றது. இந்திய அமைச்சரின் விஜயத்தின் போது தமக்கு சார்பாக ஏதாவது நடைபெறும் என்பதை தமிழ் மக்கள் எதிர்பார்க்கவில்லையென்றாலும், 13 பிளஸ் என ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ உறுதியளித்ததாக இந்திய அமைச்சர் தெரிவித்தமை வெறுமனே இந்தியாவைத் திருப்திப்படுத்துவதற்கு மட்டும்தான் என்பது இப்போது தெளிவாகியிருக்கின்றது. ஊடகவியலாளர்கள் மத்தியில் அதனை அறிவித்து தமிழர்களைத் திருப்திப்படுத்த இந்தியா மேற்கொண்ட முயற்சிகளும் இப்போது தோல்வியடைந்திருக்கின்றது.

13 பிளஸ் என்பதற்கு கொழும்பு கொடுக்கும் புதுப்புது அர்த்தங்கள் கிருஷ்ணாவின் முகத்தில் கரியைப் பூசுவதைப் போல அமைந்திருந்தாலும் மௌனமாக இருப்பதைத் தவிர இந்தியாவுக்கு வேறு தெரிவுகள் இருக்கப்போவதில்லை!

புதுடில்லியை கொழும்பு ஏமாற்ற, தாம் ஏமாந்ததை மறைப்பதற்காக தமிழர்களை இந்தியா ஏமாற்றும் நிகழ்வுகள்தான் தொடர்கின்றன. இதனைத்தான் கிருஷ்ணாவின் விஜயத்தின் பின்னர் இடம்பெறும் நிகழ்வுகள் உணர்த்துகின்றன.

கிருஷ்ணாவின் விஜயம் இம்முறை முக்கியமாக எதிர்பார்க்கப்பட்டமைக்கு இரண்டு காரணங்கள் இருந்தன.

ஒன்று - தமிழ்த் தேசியக் கூட்டமைப்பக்கும் அரசாங்கத்துக்கும் இடையில் ஒரு வருடகாலமாக இடம்பெறும் பேச்சுக்களில் ஏற்பட்டுள்ள முட்டுக்கட்டை நிலையைத் தகர்த்து பேச்சுக்கள் ஆரோக்கியமான ஒரு பாதையில் செல்வதற்கு வேண்டிய அழுத்தங்களை கிருஷ்ணா கொடுப்பார் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்கள் எதிர்பார்த்தார்கள்.

இரண்டு - மார்ச் மாதத்தில் நடைபெறவிருக்கும் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் கூட்டத் தொடரில் இலங்கை நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ள நிலையில் கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை தொடர்பில் தன்னுடைய நிலைப்பாட்டை இந்தியா வெளிப்படுத்தும் என எதிர்பார்க்கப்பட்டிருந்தது.

இவ்வாறு தெரிவிக்கக்கூடிய கருத்துக்கள் மீள்இணக்கப்பாட்டை ஏற்படுத்துவதற்கும் உந்துசக்தியாக அமைந்திருக்கலாம்.

இருந்த போதிலும் இந்த இரு விடயங்களிலும் இந்தியா எதனையும் செய்யவில்லை. 13 ஆவது திருத்தத்துக்கு மேலாகச் செல்வதற்கு ஜனாதிபதி தயாராக இருக்கின்றார் என்ற தகவல் மட்டும் ஈழத் தமிழர்களயும், இந்தியாவிலுள்ள தமிழ்த் தேசியவாதிகளையும் திருப்திப்படுத்துவதற்குப் போதுமானது என அமைச்சர் கிருஷ்ணா கருதியிருக்கலாம். சர்வதேச அரங்கில் நெருக்கடிகளை எதிர்கொள்வதால் இந்தியாவை ஓரேயடியாகப் பறக்கணித்துச் செல்லக்கூடிய நிலையில் கொழும்பு இருக்கவில்லை என்பதையும் இந்தியா புரிந்துகொண்டே இருந்தது. அதனால், தமது அழுத்தங்களுக்குப் பணிய வேண்டிய நிலையில் கொழும்பு இருந்தது என்பதும் டில்லிக்குத் தெரியும். இருந்தபோதிலும், இதனை தமது நலன்களுக்கு மட்டும் பயன்படுத்திக்கொள்வதுதான் இந்தியாவின் நோக்கமாhக இருந்தது. கொழும்பில் இந்திய அமைச்சர் கைச்சாத்திட்ட உடன்படிக்கைகள் அதனைப் புலப்படுத்துகின்றன.

இந்தியாவைப் பொறுத்தவரையில் இலங்கைiயில் தன்னுடைய பிராந்திய மற்றும் பொருளாதார நலன்களை மட்டும் கருத்திற்கொண்டுதான் அது காய்களை நகர்த்துகின்றது. தமிழர்களின் நலன்கள் என்பது அதற்கு முக்கியமான ஒன்றல்ல. தனது நலன்களுக்காக கொழும்பைப் பாதுகாக்க வேண்டிய தேவையும் அதற்குள்ளது. கிருஷ்ணாவின் விஜயமும் அந்த வகையில்தான் அமைந்திருந்தது. அதாவது, இலங்கையில் தன்னுடைய நலன்களைப் பேணிக்கொள்வதும், அதனை அதிகரிப்பதும்தான் இந்த விஜயத்தின் உண்மையான நோக்கம்!

அதற்காகத்தான் - நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையைப் புகழ வேண்டிய தேவை கிருஷ்ணாவுக்கு ஏற்பட்டது.

அதற்காகத்தான் - பாராளுமன்றத் தெரிவுக்குழுவுக்கு தமிழத் தேசியக் கூட்டமைப்பு செல்ல வேண்டும் என்பதை கிருஷ்ணா வலியுறுத்தினார்.

இந்த இரண்டு விடயங்களிலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முரண்படுகின்றது. கிருஷ்ணா கொழும்பு வருவதற்கு சில தினங்களுக்கு முன்னர்தான் நல்லிணக்க ஆணைக்குழுவுவின் அறிக்கைக்கான தனது பிரதிபலிப்பை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வெளியிட்டிருந்தது. அதேபோல பாராளுமன்றத் தெரிவுக்குழு தொடர்பான தமது நிலைப்பாட்டையும் கூட்டமைப்பு தெளிவாக வெளிப்படுத்தியிருந்தது. இந்தநிலையில், கூட்டமைப்பு தமிழ் மக்களின் உணர்வுகளைப் பிரதிபலிக்க முற்படுகின்றதாயின், கொழும்பின் உணர்வுகளைப் பிரதிபலிப்பதாகவே கிருஷ்ணாவின் கருத்துக்கள் அமைந்திருக்கின்றன.

 இந்தியாவின் முன்னாள் பிரதிப் பாதுகாப்பு ஆலோசகர் சதீ;ஸ் சந்திரா தெரிவித்திருக்கும் கருததுக்கள் இந்த இடத்தில் கவனிக்கத்தக்கவை. ரெடீப்.கொம் என்ற இணையத்தளத்தில் அவர் எழுதியிருக்கும் கட்டுரை ஒன்றில் 'நல்லிணக்க ஆணைக்குழுவை கிருஷ்ணா புகழ்ந்துரைத்திருப்பது நோர்மையான தரகர் என்ற பார்வையில் தமிழர்கள் கொண்டிருந்த நம்பிக்கையை குறைப்பதாகவே உள்ளது" எனக் குறிப்பிட்டிருக்கின்றார்.

தமிழர்களுக்கு ஏதாவது ஒரு மீளிணக்கத்தை ஏற்படுத்துவதில் நல்லிணக்க ஆணைக்குழு தவறியிருக்கின்றது. அதேவேளையில், அதிகாரப் பரவலாக்கல் தொடர்பிலும் இக்குழுவின் அறிக்கை தெளிவற்றதாகவே உள்ளது. இந்த நிலையில்தான் இதனை தமிழத் தேசியக் கூட்டமைப்பு கடுமையாக விமர்சித்திருந்தது. ஆனால், இதனை இந்தியா வரவேற்றிருப்பது இந்தியா நடுநிலையான ஒரு மத்தியஸ்த்தராகச் செயற்படும் என்ற நம்பிக்கையைச் சிதைப்பதாகவே அமைந்திருக்கின்றது.

இந்தப் பின்னணியில்தான் கடந்த வாரம் யாழ்ப்பாணம் சென்றிருந்த அமெரிக்க இராஜதந்திரி ஒருவருடனான பேச்சுக்களின் போது, சமாதானப் பேச்சுக்களுக்கு மூன்றாவது தரப்பு மத்தியஸ்த்தம் தேவை என்பதை வலியுறுத்திய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்கள், அமெரிக்காவோ ஐ.நா.வோ அல்லது ஐரோப்பிய யூனியனோ இவ்வாறான மத்தியஸ்த்;தத்தை வழங்கலாம் எனக் குறிப்பிட்டிருந்தார்கள். கூட்டமைப்பின் தலைமை இந்தியா மீதான நம்பிக்கையைத் தொடர்ந்தும் பேணிவருகின்ற போதிலும், பெரும்பாலானவர்கள் அந்த நம்பிக்கையை இழந்திருக்கின்றார்கள் என்பதை அறிய முடிகின்றது. குறிப்பாக பாராளுமன்றத் தெரிவுக்குழுவில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பங்குபற்ற வேண்டும் என கிருஷ்ணா தெரிவித்திருப்பதையிட்டு கூட்டமைப்பின் ஒரு தரப்பினர் கடுமையாக அதிருப்தியடைந்திருக்கின்றார்கள்.


அதேவேளையில் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையை இந்தியா புகழ்ந்திருப்பதில் மற்றொரு பக்கமும் உள்ளது. அதாவது சர்வதேச ரீதியாக உருவாகியிருக்கும் போர்க்குற்றம் தொடர்பான நெருக்கடிகளிலிருந்து மீள்வதற்காக கொழும்பு மேற்கொள்ளும் பிரயத்தனங்களுடன் தமக்குள்ள நெருக்கத்தை அல்லது உடன்பாட்டை இதன் மூலம் புதுடில்லி புலப்படுத்தியிருக்கின்றது.

இரண்டாவதாக 13 ஆவது திருத்தத்துக்கு மேலாகச் செல்வதற்கு ஜனாதிபதி தயாராக இருப்பதாக பகிரங்கமாக அறிவித்தன் மூலமாக நல்லிணக்க முயற்சி தொடர்பில் மகிந்தவுக்கு சான்றிதழ் கொடுத்திருக்கும் கிருஷ்ணா, காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்களை வழங்க முடியாது என்ற அரசின் பிடிவாதம் தொடர்பாக எதனையும் வெளிப்படுத்தவில்லை. அத்துடன் அரச தரப்புடன் நடந்த பேச்சுக்களின் போது இந்த அதிகாரங்கள் கொடுக்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தவும் இந்தியா தவறியிருந்தது. காணி, பொலிஸ் அதிகாரங்கள் இல்லாமல் 13 பிளஸ் என்று எவ்வாறு கூறமுடியும் என்பது இந்தியாவுக்குத் தெரியாததல்ல!

ஆக, இந்தியா இரண்டு விடயங்களில் தெளிவாக உள்ளது. ஒன்று - கொழும்பைப் பாதுகாத்தல். இரண்டு - தமிழர்களை ஏமாற்றுதல்.

இந்தநிலையில், அரசுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையிலான பேச்சுக்களில் உருவாகியிருக்கும் முட்டுக்கட்டை நிலையையும் இந்தியாவினால் முடிவுக்குக் கொண்டுவர முடியவில்லை. இந்திய வெளிவிவகார அமைச்சர் கொழும்பில் தங்கியிருந்த காலத்தில்தான் கூட்டமைப்புடனான பேச்சுக்களை தொடர்ந்து மூன்று நாட்களாக அரசு பறக்கணித்தது. இதிலுள்ள செய்தி தெளிவானது: 'இந்தியாவின் விருப்பங்களுக்காக நாம் பேசப்போவதுமில்லை. இந்தியாவால் எம்மை எதுவும் செய்யவும் முடியாது" என்பதுதான் அந்தச் செய்தி!

பிரச்சினையைப் பயன்படுத்தி இலங்கையில் தன்னுடைய பொருளாதார மற்றும் கேந்திர ரீதியான நலன்களைப் பேணிக்கொள்வது மட்டும்தான் இந்தியாவின் நோக்கமாக இருந்துள்ளது. இனநெருக்கடி விஷயத்தில் அழுத்தம் கொடுக்கப்போனால் தமது பொருளாதார நலன்களும் பாதிக்கப்படலாம் என்பதால் அதனையிட்டு பெயரளவுக்குச் சொல்லிக்கொள்வதுடன் இந்தியா நிறுத்திக்கொள்கின்றது.  தமிழக உணர்வுகளைத் திருப்திப்படுத்த டில்லிக்கு அது போதுமானதாகவே இருக்கின்றது.

இதனைப் பரிந்துகொண்டும் இந்தியாவிடம் முறையிடுவதற்காக அடுத்த மாதம் புதுடில்லி செல்வதற்கு கூட்டமைப்பு தயாராகிவருவது ஏன் என்பதுதான் புரியவில்லை!

Saturday, January 21, 2012

ஜனாதிபதி மகிந்த '13 பிளஸ்' என சொன்னது யாரைத் திருப்திப்படுத்த?

அரசியலமைப்புக்கான 13 வது திருத்தத்துக்கும் மேலாகச் சென்று அதிகாரப் பரவலாக்கலின் மூலமாக இனப்பிரச்சினைக்குத் தீர்வு காணப்போவதாக ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ஷ மீண்டும் ஒருமுறை வாக்குறுதியளித்துள்ளார். ஜனாதிபதி இவ்வாறு கூறுவது இதுதான் முதன்முறையல்ல. புதுடில்லிக்கு மேற்கொள்ளும் விஜயங்களின்போது இவ்வாறான வாக்குறுதிகளை வழங்குவதை அவர் வழமையாகவே கொண்டிருந்தார். இந்தியாவைத் திருப்திப்படுத்துவதற்கு இவ்வாறான வாக்குறுதிகளை வழங்குவது அவருக்கு அவசியமானதாக இருந்தது. இப்போதும் இலங்கைக்கான விஜயத்தை மேற்கொண்டிருந்த இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்எம்.கிருஷ்ணாவுடன் பேச்சுக்களை நடத்திய போதுதான் இந்த வாக்குறுதியை அவர் வழங்கியிருந்தார்.

'13 பிளஸ்' என ஜனாதிபதி சொல்வது வழமையானதாக இருந்துள்ள போதிலும்கூட, இப்போது அவர் இதனைத் தெரிவித்திருப்பது முக்கியத்துவம் பெறுவதற்கு சில காரணங்கள் உள்ளன. குறிப்பாக காணி, பொலிஸ் அதிகாரங்களைத் தரமுடியாது என்பதுதான் அரசாங்கத்தினதும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ஷவினதும் நிலைப்பாடாக இப்போது வெளியிடப்பட்டுவருகின்றது. பொலிஸ் அதிகாரங்களைக் கொடுத்தால் நாளை வடபகுதிக்குச் செல்லும்போது தமிழ்ப் பொலிஸார் தன்னைக் கூட கைது செய்துவிடலாம் என மகிந்த ராஜபக்‌ஷ கூறியதை யாரும் மறந்திருக்க மாட்டார்கள். வரவு செலவுத் திட்ட விவாதத்தை முடித்துவைத்து உரையாற்றிய போதும் டிசெம்பர் மாதத்தில் இதனைத்தான் ஜனாதிபதி கூறியிருந்தார்.

அரசாங்கத்துக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையில் கடந்த ஒரு வருடகாலமாக நடைபெறும் பேச்சுவார்த்தைகளிலும் இறுதியில் நெருக்கடியை ஏற்படுத்துவதாக இந்தப் பிரச்சினையே இருந்தது. அதாவது 13 திருதத்தின் அடிப்படையில் காணி, பொலிஸ் அதிகாரங்கள் மாகாண சபைகளுக்கு முழுமையாக வழங்கப்பட வேண்டும் என்பதே கூட்டமைப்பின் பிரதான கோரிக்கையாக இருக்கின்றது. காணி, பொலிஸ் அதிகாரங்கள் என்பன தமிழர்களின் கோரிக்கைகளில் அடிப்படையானவையாக இருந்தமையால், அவற்றைவிட்டுக்கொடுக்க தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தயாராகவிருக்கவில்லை. அவற்றை விட்டுக்கொடுப்பது என்பது கூட்டமைப்பின் ஆதரவுத் தளத்தையும் ஆட்டங்காணச் செய்துவிடும்.

மறுபுறத்தில் மாகாண சபைகளுக்கு காணி, பொலிஸ் அதிகாரங்களைக் கொடுக்க முடியாது என்பதில் அரச தரப்பு உறுதியாக இருந்தது. இனவாதக் கட்சிகளும் இவ்விடயத்தில் அரசுக்கு ஊக்கம் கொடுத்தன. இது அரசு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆகிய இரு தரப்பினருக்கும் இடையில் ஒரு பாரிய இடைவெளியை ஏற்படுத்தியிருந்தது. இந்தப் பின்னணியில்தான் 13 பிளஸ் என ஜனாதிபதி கூறியிருப்பதாக வெளியான செய்தி தொடர்பில் அனைத்துத் தரப்பினரது கவனமும் திரும்பியிருந்தது. காணி, பொலிஸ் அதிகாரங்களைத் தவிர்த்துவிட்டு 13 பிளஸ் எனக் கூறுவதில் அர்த்தமிருக்க முடியாது.

எதற்காகச் சொன்னாரோ தெரியவில்லை, 13 பிளஸ் என ஜனாதிபதி சொல்லிவிட்ட நிலையில், அமைச்சர்களுக்குப் புதிய பிரச்சினை ஏற்பட்டிருக்கின்றது. அதனை மறுக்கவும் முடியாது. அதனை அதற்குரிய அர்த்த்தில் ஏற்கவும் முடியாது. அதனால், அதற்கு புதுப்புது அர்த்தங்களைத் தேடுவதில்தான் ஆளும் கட்சிப் பிரமுகர்களின் கவனம் இப்போது திரும்பியுள்ளது.

அமைச்சரவைப் பேச்சாளராக கெஹலிய ரம்புக்வெல 13 க்கு மேலாக செனட்ட சபையைத் தரப்போவதாகக் கூறியிருக்கின்றார். ரம்புக்வெலவின் அர்த்தத்தில் 13 பிளஸ் என்பது செனட் சபைதான். செனட் சபை என்ற யோசளை புதிதான ஒன்றல்ல. கடந்த 2011 மார்ச் மாதத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தன்னுடைய யோசனைளை அரசுக்கு முன்வைத்திருந்தது. இதற்கு ஆகஸ்ட் மாதம் வரையில் பதிலளிக்காத அரச தரப்பு இந்தக் காலப்பகுதியில் செனட் சபையை அமைக்கும் யோசனை ஒன்றை முன்வைத்திருந்தது. இருந்தபோதிலும் அந்த யோசனை தெளிவானதாக இருக்கவில்லை. ஆக, இது புதிதல்ல. பழைய யோசனைகள் சிலவற்றை தூசிதட்டி புதிது போல வெளியிடுவதை அரசு வழமையாகவே கொண்டுள்ளது.

இந்திய வெளிவிவகார அமைச்சர் தனது இந்த விஜயத்தின்போது சில விடயங்களை சற்று கடும் தொனியிலேயே தெரிவித்திருந்தார் என்பது உண்மைதான். குறிப்பாக 13 வது திருத்தத்தின் அடிப்படையில் தமிழ் மக்களின் அபிலாஷைகளை நிறைவேற்றக்கூடிய வகையிலான அரசியல் தீர்வு "மிகவும் அவசியம்" என அவர் அழுத்திக் கூறியிருந்தார். 13 பிளஸ் பிளஸ் என மகிந்த ராஜபக்‌ஷ பல சந்தர்ப்பங்களில் இந்தியாவில் வைத்துத் தெரிவித்திருந்தமையையும் ஜனாதிபதியுடனான பேச்சுக்களின் போது இந்திய அமைச்சர் நினைவூட்டியிருந்தார்.

இந்த நிலையில் அதனை எற்றுக்கொள்வதைவிட ஜனாதிபதிக்கு வேறு தெரிவுகள் இருக்கவில்லை. 13 பிளசுக்கு ஜனாதிபதி தயாராக இருக்கின்றார் என்ற தகவல்கூட அரச தரப்பிலிருந்து வெளிவரவில்லை. இந்திய வெளிவிவகார அமைச்சர்தான் இதனை ஊடகவியலாளர் மாநாட்டில் வைத்து அறிவித்தார். இதனை அரச தரப்பு மறுக்காத அதேவேளையில் உறுதிப்படுத்தவும் இல்லை.

அதிகாரப் பரவலாக்கல் என்பது சாச்சைக்குரிய ஒன்றாக இருக்கும் நிலையில் 13 பிளஸ் என்பதன் மூலம் ஜனாதிபதி எதனை அர்த்தப்படுத்தியிருக்கின்றார் என்பது பிரதான கேள்வியாக இருக்கின்றது. இந்தக்குழப்பத்தைத் தீர்க்க வேண்டிய அரச தரப்பு குழப்பத்தை மேலும் அதிகரிக்கும் வகையிலேயே கருத்துக்களை வெளியிட்டுவருகின்றது. இது தொடர்பில் சிரேஷ்ட அமைச்சர்கள் சிலர் ஜனாதிபதியுடன் பேசிய போது, "அந்த அர்த்தத்தில் நான் அதைச் சொல்லவில்லை" என ஜனாதிபதி கூறியதாகத் தெரிகின்றது. ஆக, கிருஷ்ணா சொன்னதை கொழும்பு உறுதிப்படுத்தப்போவதில்லை என்பது மட்டும் தெளிவாகத் தெரிகின்றது. அதேவேளையில், இந்தியாவின் தேவை இருப்பதால் அதனை மறுக்கவும் கொழும்பு முன்வரப்போவதில்லை.

பெப்ரவரி இறுதிப்பகுதியில் ஜெனிவாவில் ஆரம்பமாகவிருக்கும் மனித உரிமைகள் பேரவையின் 19 வது கூட்டத் தொடரில் இலங்கை பெரும் நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது. அமெரிக்கா, பிரித்தானியா மற்றும் கனடா போன்றன இலங்கைக்கு எதிராக உள்ளமையை கடந்த வாரத்தில் அந்த நாடுகளால் வெளியிடப்பட்ட அறிக்கைகள் புலப்படுத்தியிருந்தன. சீனாவை மட்டும் நம்பி இந்தப் பிரச்சினையிலிருந்து மீளமுடியாது என்பது கொழும்புக்குத் தெரியும். ஏனெனில் ஆசியாவில் சீனா வகுக்கும் வியூகத்துக்கு எதிரான அணுகுமுறையைத்தான் அமெரிக்காவும் ஏனைய மேற்கு நாடுகளும் கொண்டுள்ளன. இந்த நெருக்கடியிலிருந்து மீள்வதற்கு இலங்கைக்கு இன்றிருக்கக்கூடிய ஒரே நம்பிக்கை இந்தியாதான். இந்தியாவும் தன்னைக்கைவிட்டுவிடுமா என்ற ஒரு அச்சம் கொழும்பிடம் உள்ளது.

இந்த அச்சத்தைப் பயன்படுத்திக்கொண்டுதான் இந்தியா தன்னுடைய காய்களை நகர்த்துகின்றது. அதாவது, இலங்கை மீது அழுத்தங்களைப் பிரயோகிப்பதற்கு இந்தியாவுக்குக் கிடைத்துள்ள ஒரு பிடி இதுதான். இதனைப் பயன்படுத்தி இந்தியா இலங்கையில் எதனைச் சாதிக்க முற்படுகின்றது என்பதைப் பார்ப்போம். இந்தியாவைப் பொறுத்தவரையில் அதன் நலன்கள்தான் அதற்கு முக்கியமானவை. அதற்காக இலங்கைத் தமிழர்களின் நலன்களை காலில் போட்'டு மிதிக்கவும் இந்தியா தயங்காது என்பது கடந்த மூன்று தசாப்த கால வரலாறு.

ஈழத் தமிழர்களின் நலன்களை வெறுமனே ரயில்வே பாதை அமைப்பதன் மூலமாகவும், சைக்கிளைக் கொடுப்பதன் மூலமாகவும் மட்டும் பாதுகாக்க முடியாது. அரசியல் அதிகாரத்தைப் பெற்றுக்கொள்வதுதன் ஈழத் தமிழரின் தேவை. ஆனால், அதற்காக எவ்தவிதமான ஆக்கபூர்வமான செயற்பாட்டையும் முன்னெடுக்கா இந்தியா, இலங்கையில் தனது நலன்களை இந்தியா பேணிக்கொள்வதற்கான காய்நகர்த்தல்களைத்தான் மேற்கொள்கின்றது. சம்பூர் அனல் மின்சாரம், திருமலை எண்ணெய்க்குதம், காங்கேசன்துறை துறைமுகம், எரிபொருள் நிநியோகம் என தமது பொருளாதார பாதுகாப்பு நலன்களை இலங்கையில் உறுதிப்படுத்தியுள்ளது. இந்தியாவின் நலன்களைக் கவனித்தால் ஈழத் தமிழர்களைப் பற்றி இந்தியா கவலைப்படாது என்பது மகிந்தவுக்குத் தெரியும்.

அதனால்தான் கிருஷ்ணா சொன்ன அனைத்துக்கும் மகிந்த தலையாட்டியிருக்கின்றார். ஆனால் ஒரு இடத்தில் மட்டும் மகிந்த பொறி வைத்திருக்கின்றார். அதாவது - "பாராளுமன்றத் தெரிவுக்குழுவின் மூலமாக தீர்வு முன்னெடுக்கப்படும். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அதில் பங்குகொள்ள வேண்டும்" என்பதுதான் மகிந்த வைத்துள்ள பொறி! பாராளுமன்றத் தெரிவுக்குழுவில் பங்குகொள்ளுமாறு கூட்டமைப்பினருக்கு இந்தியா அடுத்ததாக ஆலோசனை வழங்கும்.

13 பிளஸ் என மகிந்த கூறினாலும் அது பாராளுமன்றத் தெரிவுக்குழுவுக்குள்ளால் வரும் போது பல மாதங்கள் சென்றுவிடும். அத்துடன் சிங்கள இனவாதக் கட்சிகளும் அங்கு காத்துக்கொண்டிருக்கின்றன. இந்த நிலையில் 13 பிளஸ் என்பது நிராகரிக்கப்பட்டதொன்றாகிவிடலாம். அப்போது பாராளுமன்றத் தெரிவுக்குழு 13 பிளஸை ஏற்கவில்லை என மகிந்த  கூறலாம். அந்த நேரத்தில் ஜெனிவாவில் மனித உரிமைகள் கூட்டத் தொடர் முடிவடைந்திருக்கும்.

இந்திய இராஜதந்திரிகள் திறமையானவர்கள்தான். ஏனென்றால் அவர்கள் கொழும்பிடம்தான் பாடம் படிக்கின்றார்கள்!

Wednesday, January 18, 2012

13 ஆவது திருத்தமும் இந்தியாவுக்கு மகிந்த கொடுத்த வாக்குறுதியும்

செய்திகளைப் படிக்கும்போது அரசியலில் உண்மையில் என்ன நடைபெறுகின்றது என்பதைப் புரிந்துகொள்ளவே கஷ்டமாகத்தான் இருக்கின்றது!

காணி, பொலிஸ் அதிகாரங்களைத் தரமுடியாது என்பதுதான் அரசாங்கத்தினதும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ஷவினதும் நிலைப்பாடாக நேற்று வரை இருந்தது. பொலிஸ் அதிகாரங்களைக் கொடுத்தால் நாளை வடபகுதிக்குச் செல்லும்போது தமிழ்ப் பொலிஸார் தன்னைக் கூட கைது செய்துவிடலாம் என மகிந்த ராஜபக்‌ஷ கூறியதை யாரும் மறந்திருக்க மாட்டார்கள்.

வரவு செலவுத் திட்ட விவாதத்தை முடித்துவைத்து உரையாற்றிய போதும் டிசெம்பர் மாதத்தில் இதனைத்தான் ஜனாதிபதி கூறியிருந்தார்.

அரசாங்கத்துக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையில் கடந்த ஒரு வருட காலமாக நடைபெறும் பேச்சுவார்த்தைகளிலும் இறுதியில் நெருக்கடியை ஏற்படுத்துவதாக இந்தப் பிரச்சினையே இருந்தது.

காணி, பொலிஸ் அதிகாரங்கள் என்பன தமிழர்களின் கோரிக்கைகளில் அடிப்படையானவையாக இருந்தமையால், அவற்றைவிட்டுக்கொடுக்க தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தயாராகவிருக்கவில்லை.

மறுபுறத்தில் மாகாண சபைகளுக்கு காணி, பொலிஸ் அதிகாரங்களைக் கொடுக்க முடியாது என்பதில் அரச தரப்பு உறுதியாக இருந்தது. இனவாதக் கட்சிகளும் இவ்விடயத்தில் அரசுக்கு ஊக்கம் கொடுத்தன.

இந்தப் பின்னணியில்தான் பேச்சுக்களை மேலும் முன்னெடுக்க முடியாத ஒரு நிலை உருவாகியிருந்தது.

குறிப்பிட்ட இந்த அதிகாரங்களைக் கோருவதே தேசத்துரோகம் என்பது போல அமைச்சர்களும், இனவாதக் கட்சிகளின் தலைவர்களும் கருத்துக்களை வெளியிட்டு வந்தார்கள்.

இந்த நிலையில் ஒரு திருப்பத்தை ஏற்படுத்துவதாகவே ஜனாதிபதியின் பிந்திய அறிவிப்பு உள்ளது.

அதாவது அரசியலமைப்புக்கான 13 வது திருத்தத்துக்கும் மேலாகச் சென்று (அதாவது 13 பிளஸ்) அதிகாரப்பரவலாக்கலை வழங்குவதற்கு தாம் தயாராக இருப்பதாக ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ஷ இலங்கைக்கான விஜயத்தை மேற்கொண்டுள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணாவிடம் உறுதியளித்திருக்கின்றார். செவ்வாய்கிழமை நடத்திய ஊடகவியலாளர் மாநாட்டில் இதனை இந்திய அமைச்சர் பகிரங்கமாக அறிவித்தார்.

காணி, பொலிஸ் அதிகாரங்களைத் தவிர்த்துவிட்டு 13 பிளஸ், பிளஸ் எனக் கூறமுடியாது என்பது அனைவருக்கும் தெரியும்!

இந்திய வெளிவிவகார அமைச்சர் தனது இந்த விஜயத்தின்போது சில விடயங்களை சற்று கடும் தொனியிலேயே தெரிவித்திருந்தார். குறிப்பாக 13 வது திருத்தத்தின் அடிப்படையில் தமிழ் மக்களின் அபிலாஷைகளை நிறைவேற்றக்கூடிய வகையிலான அரசியல் தீர்வு "மிகவும் அவசியம்" என அவர் அழுத்திக் கூறியதாக இராஜதந்திரத் தகவல்கள் உறுதிப்படுத்துகின்றன. 13 பிளஸ் பிளஸ் என மகிந்த ராஜபக்‌ஷ பல சந்தர்ப்பங்களில் இந்தியாவில் வைத்துத் தெரிவித்திருந்தமையையும் இந்திய அமைச்சர் நினைவூட்டியிருந்தார்.

இந்த நிலையில் அதனை எற்றுக்கொள்வதைவிட ஜனாதிபதிக்கு வேறு தெரிவுகள் இருக்கவில்லை. 13 பிளசுக்கு ஜனாதிபதி தயாராக இருக்கின்றார் என்ற தகவல்கூட அரச தரப்பிலிருந்து வெளிவரவில்லை. இந்திய வெளிவிவகார அமைச்சர்தான் இதனை ஊடகவியலாளர் மாநாட்டில் வைத்து அறிவித்தார்.

இதேதினத்தில் நடைபெற்ற மற்றொரு நிகழ்வு மகிந்த அரசாங்கத்தின் இந்த பற்றுறுதியைக் கேள்விக்குறியாக்கியிருக்கின்றது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடனான பேச்சுக்களுக்கு நேரம் குறிப்பிட்டிருந்தபோதிலும் அரசு தரப்பு பிரதிநிதிகள் யாரும் அங்கு வரவில்லை. கூட்டமைப்பினர் காத்துக்கொண்டிருந்துவிட்டு ஏமாற்றத்துடன் திரும்பினார்கள்.

அரசாங்கத்தின் இந்த செயற்பாட்டுக்கு மூன்று காரணங்கள் கூறப்படுகின்றன.

1. கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையை நிராகரித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வெளியிட்ட 115 பக்க அறிக்கை அரசாங்கத்துக்குப் பெரும் நெருக்கடியைக் கொடுத்திருக்கின்றது. இந்த அறிக்கை சர்வதேச ரீதியாகப் பெரும் அவதானத்தைப் பெற்றுக்கொண்ட அதேவேளையில் கொழும்புக்கு அது பெரும் சீற்றத்தைக் கொடுத்திருந்தது. இதற்குப் பழிவாங்கும் வகையிலேயே செவ்வாய்கிழமைப் பேச்சுக்களை அரசு தவிர்த்துக்கொண்டது.

2. பாராளுமன்றத் தெரிவுக்குழுவுக்கான தமது பிரதிநிதிகளின் பெயர்களைப் பிரேரிக்குமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு அரசு அழுத்தம் கொடுத்துவருகின்றது. அவ்வாறு பெயர்களைப் பிரேரிக்காவிட்டால் கூட்டமைப்புடனான பேச்சுக்களில் தாம் பங்குகொள்ளப்போவதில்லை என்பதை உணர்த்துவதற்கும் இந்தப் பேச்சுக்களை அரச தரப்பு தவிர்த்திருக்கலாம்.

3.
இதனைவிட 13 வது அரசியலமைப்பை முழுமையாக ஏற்றுக்கொள்வதாக ஜனாதிபதி இந்தியாவிடம் தெரிவித்திருப்பதால் சிங்களக் கடும்போக்களாளர்கள் மத்தியில் உருவாகியிருக்கக்கூடிய உணர்வுக்கொந்தளிப்பைத் தளர்த்த வேண்டிய அவசியம் ஒன்றும் அரசுக்கு இருந்தது.

அதேவேளையில் இனநெருக்கடிக்குத் தீர்வைக் காண்பதில் ஜனாதிபதி வெளிப்படுத்திய பற்றுறுதியை கூட்டமைப்புடனான பேச்சுக்களை முன்னறிவிப்பு இல்லாமல் தவிர்த்துக்கொண்ட இச்சம்பவம் கேள்விக்குறியாக்குவதாக அமைந்திருக்கின்றது என்பது உண்மை.

பெப்ரவரி இறுதிப்பகுதியில் ஜெனிவாவில் ஆரம்பமாகவிருக்கும் மனித உரிமைகள் பேரவையின் 19 வது கூட்டத் தொடரில் இலங்கை பெரும் நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது. அமெரிக்கா, பிரித்தானியா மற்றும் கனடா போன்றன இலங்கைக்கு எதிராக உள்ளமையை கடந்த வாரத்தில் அந்த நாடுகளால் வெளியிடப்பட்ட அறிக்கைகள் புலப்படுத்தியிருந்தன. இந்த நெருக்கடியிலிருந்து மீள்வதற்கு இலங்கைக்கு இன்றிருக்கக்கூடிய ஒரே நம்பிக்கை இந்தியாதான்!

அதனால்தான் கிருஷ்ணா சொன்ன அனைத்துக்கும் மகிந்த தலையாட்டியிருக்கின்றார். ஆனால் ஒரு இடத்தில் மட்டும் மகிந்த பொறி வைத்திருக்கின்றார். அதாவது - "பாராளுமன்றத் தெரிவுக்குழுவின் மூலமாக தீர்வு முன்னெடுக்கப்படும். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அதில் பங்குகொள்ள வேண்டும்."

ஆக, பாராளுமன்றத் தெரிவுக்குழுவில் பங்குகொள்ளுமாறு கூட்டமைப்பினருக்கு இந்தியா அடுத்ததாக ஆலோசனை வழங்கலாம். கூட்டமைப்பினரும் அதனை ஏற்றுக்கொள்ளலாம்.

இதில் கவனிக்க வேண்டிய முக்கிய விடயம் ஒன்றுள்ளது-

அதாவது, 13 பிளஸ் என மகிந்த கூறினாலும் அது பாராளுமன்றத் தெரிவுக்குழுவுக்குள்ளால் வரும் போது பல மாதங்கள் சென்றுவிடும். அத்துடன் சிங்கள இனவாதக் கட்சிகளும் அங்கு காத்துக்கொண்டிருக்கின்றன. அப்போது பாராளுமன்றத் தெரிவுக்குழு 13 பிளஸை ஏற்கவில்லை என மகிந்த  கூறலாம். அந்த நேரத்தில் ஜெனிவாவில் மனித உரிமைகள் கூட்டத் தொடர் முடிவடைந்திருக்கும்.

இந்திய இராஜதந்திரிகள் திறமையானவர்கள்தான்! ஆனால் கொழும்பிடம்தான் அவர்கள் தொடர்ந்தும் பாடம் படிக்கின்றார்கள்!!

Tuesday, January 17, 2012

கூட்டமைப்பின் கோரிக்கைகளும் மகிந்த வழங்கிய பொங்கலும்

"இலங்கையின் இனப் பிரச்சினை விவகாரத்தில் இந்தியா தலையிட்டு, முக்கிய பாத்திரம் ஒன்றை ஏற்று பேச்சுக்களை சரியான பாதையில் கொண்டு செல்வதற்கான செயற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும்" என இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணாவிடம் வலியுறுத்திய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, "இல்லையெனில் பேச்சுவார்த்தைகளைத் தொடர்ந்தும் நடத்த முடியாத நிலை ஏற்படும்" எனவும் சுட்டிக்காட்டியிருக்கின்றது.

"அரச தரப்புடன் பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்பட்டு ஒரு வருட காலம் சென்றுவிட்ட போதிலும் அதில் ஒரு அங்குல முன்னேற்றம் கூட ஏற்படவில்லை. அரசாங்கம் பேச்சுவார்ததைகள் மூலமாக எந்தவொரு தீர்வையும் எடுவதற்கான மனநிலையில் இல்லை. அதனால் இவ்விடயத்தில் இந்தியா தலையிட்டு முக்கிய பாத்திரம் ஒன்றை ஏற்று பேச்சுக்களை சரியான பாதையில் கொண்டு செல்வதற்கான நடவடிக்கைகளை எடுக்காதுவிட்டால் இந்தப் பேச்சுக்களை தொடர முடியாத நிலைமை ஒன்று ஏற்படும்" எனவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இந்திய அமைச்சரிடம் தெளிவாகக் கூறியிருக்கின்றது.

நான்கு நாள் விஜயம் ஒன்றை மேற்கொண்டு திங்கட்கிழமை மாலை கொழும்பை வந்தடைந்த இந்திய வெளிவிவகார அமைச்சர் கொழும்பின் மத்தியிலுள்ள பிரபல ஐந்து நட்சத்திர விடுதியான ஹொட்டல் தாஜ்ஜில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகளை சந்தித்துப் பேசினார். இரா.சம்பந்தன் தலைமையில் சென்றிருந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகள் குழு, அரசுடன் நடைபெறும் பேச்சுக்கள் தொடர்பாக குறிப்பாகவும், வடக்கு கிழக்கு நிலைமைகள் தொடர்பாக பொதுவாகவும் இந்திய அமைச்சருக்கு எடுத்துக்கூறியது.

சுமார் 45 நிமிடங்கள் தொடர்ந்த இந்தச் சந்திப்பில் சம்பந்தனுடன், கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா, சுரேஷ் பிரேமச்சந்திரன், செல்வம் அடைக்கலநாதன், பொன் செல்வராஜா மற்றும் ஏம்.ஏ.சுமந்திரன் ஆகியோரும் பங்குகொண்டார்கள். இந்தச் சந்திப்பு தொடர்பாக சதகவல் தெரிவித்த சுரேஷ் பிரேமச்சந்திரன் பின்வருமாறு குறிப்பிட்டார்:

"அரசுடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நடத்திவரும் பேச்சுக்கள் தொடர்பாகவே இந்திய அமைச்சருக்கு முக்கியமாக விளக்கிக்கூறினோம். இனநெருக்கடிக்கு அரசியல் தீர்வைக்காண்பதற்கான பேச்சுவார்த்தைகள் எனக் கூறிக்கொண்டு காலத்தைக் கடத்துவதற்கான நடவடிக்கைகளைத்தான் அரசாங்கம் மேற்கொண்டுவருகின்றது. ஜனாதிபதியும் அமைச்சர்களும் பாராளுமன்றத்திலும் வெளியிலும் இராணுவத்தை வெளியேற்ற முடியாது, காணி அதிகாரம் தரமுடியாது, பொலிஸ் அதிகாரம் தரமுடியாது என்றுதான் கூறிவருகின்றார்களே தவிர வேறு எதனையும் கூறுகின்றார்கள் இல்லை.

இந்தியப் பிரதமருக்கும் இந்திய அரசாங்கத்துக்கும் சிறிலங்கா ஜனாதிபதியும் அமைச்சர்களும் பல உறுதிமொழிகளை பல சந்தர்ப்பங்களில் கொடுத்திருக்கின்றார்கள். பதின்மூன்றாவது திருத்த்துக்கு மேலாகச் சென்று அதிகாரப் பரவலாக்கலைத் தருவதாகக் கூறினார்கள். இப்போது இந்த பதின் மூன்றாவது திருத்தத்தின் மைனஸ், மைனஸ் கூட இல்லை என்ற நிலைதான் இப்போது காணப்படுகின்றது.

பேச்சுவார்த்தைகள் ஆரம்பமாகி ஒரு வருடம் சென்றுள்ள போதிலும் ஒரு விடயத்தையிட்டுக்கூட நாம் இதுவரையில் எந்தத் தீர்வையும் எட்டவில்லை. இந்த நிலையிலும் பாராளுமன்றத் தெரிவுக்குழு ஒன்றை நியமித்திருக்கும் அரசாங்கம் அதற்குள் நாம் வரவேண்டும் என வலியுறுத்துகின்றது. அது நிச்சயமாக காலத்தைக் கடத்துவதற்கான இடமே தவிர வேறு ஒன்றும்இல்லை. எனவே இவ்விடயத்தில் இந்தியா முக்கியமான ஒரு பாத்திரத்தை ஏற்கவேண்டும் என இந்திய வெளிவிவகார அமைச்சரைக் கேட்டுக்கொண்டோம்.

அரசுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையிலான இந்தப் பேச்சுவார்த்தைகள் இந்தியாவின் ஏற்பாட்டில்தான் ஆரம்பமாகியது. எனவே இதில் இந்தியா முக்கியமான ஒரு பாத்திரத்தை ஏற்று இந்தப் பேச்சுக்களை சரியான ஒரு பாதையில் கொண்டு செல்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லையாயின் இந்தப் பேச்சுக்களை மேலும் தொடரமுடியாத நிலை ஏற்படும் என்பதை இந்தியாவுக்குத் தெரியப்படுத்தியிருக்கின்றோம்" என சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.

கள நிலைமைகளைப் பொறுத்தவரையில் கடந்த முறை இந்திய அமைச்சர் வரும்போது காணப்பட்ட அதேநிலைதான் இப்போதும் காணப்படுவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் தெரிவித்தனர். இராணுவ ஆக்கிரமிப்பு தொடர்கின்றது, மீள்குடியேற்றம் இடம்பெறவில்லை என்பன போன்ற விடயங்களையும் கூட்டமைப்பு இந்திய அமைச்சருக்கு விளக்கியது.

இதற்குப் பதிலளித்த இந்திய அமைச்சர், வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸை தான் சந்திக்க இருப்பதாகவும் அப்போது இவை தொடர்பாக அவருடைய கவனத்துக்கக் கொண்டு செல்வதாகவும் தெரிவித்தார். பீரஸ+டனான சந்திப்பின்போது இருதரப்பு உடன்படிக்கைகள் சில கைச்சாததிடப்படவுள்ளன. இதனைவிட வேறு வாக்குறுதிகள் எதனையும் கிருஷ்ணா வழங்கவில்லை எனத் தெரிகின்றது.

கிருஷ்ணாவின் தற்போதைய விஜயம் வர்த்தக உடன்படிக்கைகள் சிலவற்றில் கைச்சாத்திடுவதை மட்டும் நோக்கமாகக் கொண்டது எனத் தெரிவித்த இராஜதந்திர வட்டாரங்கள், அரசியல் விடயங்கள் தொடர்பாக அவர் கவனத்தைச் செலுத்தியிருந்தாலும் கொழும்புக்கு அவர் உடனடியாக அழுத்தங்களைக் கொடுப்பார் என எதிர்பார்க்க முடியாது எனத் தெரிவிதார்.


அதேவேளையில் கிருஷ்ணா இந்த விஜயத்தின் போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்களைத்தான் முதலில் சந்திப்பார் எனக் கூறப்பட்டபோதிலும், அந்த நிகழ்ச்சிநிரலை ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ஷவின் பொங்கல் விழா மாற்றிவிட்டது. 

விஷேட விமானத்தில் கட்டுநாயக்க வநதிறங்கிய கிருஷ்ணாவை வரவேற்ற வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் நேரடியாக அவரை அலரி மாளிகைக்கே அழைத்துச் சென்றார். அங்கு ஜனாதிபதியால் நடத்தப்பட்ட பொங்கல் நிகழ்வில் கலந்துகொண்ட பின்னர்தான் கூட்டமைப்பினரை சந்திக்க தாஜ் ஹொட்டலுக்கு கிருஷ்ணா சென்றார்.

ஒரு இனவாதி என வர்ணிக்கப்படும் ஜனாதிபதி தமிழர்களின் பண்டிகையான பொங்கலை தனது உத்தியோகபூர்வ இல்லத்தில் இவ்வளவு விமர்சையாகக் கொண்டாடுவது பற்றிய ஒரு உயர்வை அமைச்சர் கிருஷ்ணாவுக்கு இது ஏற்படுத்தியிருக்கும் என்பது கொழும்பின் எதிர்பார்ப்பாக இருக்கலாம். இந்தியாவின் பிரதிபலிப்பு எவ்வாறாக உள்ளது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்!

Sunday, January 15, 2012

கொழும்பு வரும் கிருஷ்ணா!

மூன்று நாள் விஜயம் ஒன்றை மேற்கொண்டு நாளை மறுதினம் திங்கட்கிழமை கொழும்பு வரும் இந்தியாவின் வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா இலங்கையில் மேற்கொள்ளப்போகும் பேச்சுக்கள் எவ்வாறு அமையும் என்பது தொடர்பாகவே அனைவரது கவனமும் இன்று திரும்பியுள்ளது. கிருஷ்ணாவின் இந்த விஜயத்தின் போது பொருளாதார உடன்படிக்கைகள் சிலவற்றுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும் எனக் கூறப்பட்டாலும்கூட, அரசியல் விவகாரங்களே இதில் மேலோங்கியிருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. குறிப்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பக்கும் அரசாங்கத்துக்கும் இடையிலான பேச்சுக்களில் காணப்படும் இறுக்கத்தைத் தளர்த்துவதற்கு கிருஷ்ணாவின் விஜயம் உதவுமா என்பதுதான் இன்று கேள்விக்குறியாகவுள்ள விடயமாகும்.

இலங்கையின் இனப்பிரச்சினையைப் பொறுத்தவரையில் இந்தியாவின் அணுகுமுறை எப்போதும் கவனத்துக்குரிய ஒன்றாகவே இருந்துள்ளது. 1980 களில் தமிழ்ப் போராளி அமைப்புக்களுக்கு ஆயுதப் பயிற்சியைக் கொடுத்து அதன் மூலமாக இலங்கைப் பிரச்சினையில் தன்னுடைய ஆதிக்கத்தைச் செலுத்தக்கூடியளவுக்கு இந்தியா தன்னை உருவாக்கிக்கொண்டது. இந்தியத் தலையீட்டின் மூலம்தான் அரசியலமைப்புக்கான 13 வது திருத்தமும் உருவாக்கப்பட்டது. வடக்கு கிழக்கு மாகாணங்களும் இணைக்கப்பட்டது. இருந்தபோதிலும், நோர்வேயின் மத்தியஸ்த்ததுடன் அரசு - விடுதலைப் புலிகள் பேச்சு இடம்பெற்ற காலத்தில் இந்தியா ஒதுங்கியிருப்பதாகவே காட்டிக்கொண்டது. நேரடியான தலையீட்டை மேற்கொள்ளவில்லை. திரைக்குப் பின்னால் இருந்துகொண்டு பேச்சுக்களை வழிநடத்துவதற்கு இந்தியா முற்பட்டது இரகசியமானதல்ல.

போர் முடிவுக்கு வந்து விடுதலைப் புலிகள் இராணுவ ரீதியாகத் தோற்கடிக்கப்பட்ட பின்னர் பிரச்சினையில் இந்தியா மீண்டும் தன்னை சம்பந்தப்படுத்திக்கொண்டது. இந்தியாவைப் பொறுத்தவரையில் அரசியலமைப்புக்கான 13 வது திருத்தத்தின் மூலமாக பிரச்சினைக்குத் தீர்வு காணப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டையே தொடர்ந்தும் வலியுறுத்திவந்தது. 13 வது திருத்தம் இந்திய அழுத்தங்களால் உருவாக்கப்பட்டது என்பதால், அதனை ஒரு கௌரவப் பிரச்சினையாகவே இந்தியா பார்த்தது. அதனைவிட இனநெருக்கடிக்கான தீர்வாக இதுவரை காலங்களில் உருவாக்கப்பட்ட தீர்வுகளில் 13 வது திருத்தமே அரசாங்கத்தினால் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒன்றாக இருந்துள்ளது.

ஆனால், தமிழ்த் தரப்பைப்பொறுத்தவரையில் 13 வது திருத்தம் என்பது போதுமானதாக இருக்கவில்லை. மாகாண சபைகள் உருவாக்கப்பட்ட காலத்திலிருந்தே தமிழ்த் தரப்பினர் இதனை இந்தியாவுக்குச் சுட்டிக்காட்டி வந்திருக்கின்றார்கள்.

ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவைப் பொறுத்தவரையில் புதுடில்லிக்குச் செல்லும் சந்தர்ப்பங்களில் 13 பிளஸ் எனக் கூறி இந்தியாவை நம்ப வைத்துக்கொண்டார். இதன் மூலம் இந்தியாவை அவரால் குளிர்விக்க முடிந்தது. மறுபுறத்தில் 13 இல் உள்ளவற்றை வெட்டிக்குறைப்பதில் மட்டுமே கவனத்தைச் செலுத்தினார். இதன் மூலம் சிங்கள - பௌத்த கடும்போக்காளர்களை அவரால் திருப்திப்படுத்த முடிந்தது. உள்நாட்டு அரசியல் வெற்றிகளுக்கு இதுவே அவருக்கு அவசியமானதாகவும் இருந்தது.

வடக்கு கிழக்கு பிளவுபடுத்தப்பட்டபோது இந்தியாவால் எதனையும் செய்ய முடியவில்லை. இப்போது 13 வது திருத்தத்தில் உள்ள காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்கள் கேள்விக்குறியாக்கப்பட்டுள்ள நிலையில்தான் இந்திய வெளிவிவகார அமைச்சர் கிருஷ்ணா இலங்கை வருகின்றார்.

இந்தியாவைப் பொறுத்தவரையில் இலங்கைப் பிரச்சினையில் தற்போது அதற்குள்ள மட்டுப்பாடுகள் கவனிக்கப்படவேண்டியவை.

1980 களின் பிற்பகுதியில் ஜெயவர்த்தன அரசாங்கத்தை இந்தியாவால் ஆட்டுவிக்க முடிந்தது என்பது உண்மைதான். இதற்கு இரண்டு காரணங்கள் இருந்தன. ஒன்று - தமிழ்ப் போராளி அமைப்புக்கள் இந்தியாவின் கட்டுப்பாட்டில் இருந்தன. அதனை வைத்து ஜெயவர்த்தனவை அச்சுறுத்தக்கூடிய நிலையில் இந்தியா இருந்தது. இரண்டு - தெற்காசியப் பிராந்தியத்தில் இந்தியாவின் மேலாதிக்க நிலையை வல்லரசு நாடுகள் அனைத்தும் ஏற்றுக்கொண்டிருந்தன. சர்வதேச சட்டங்களை மீறி இலங்கையின் வான் எல்லைக்குள் பிரவேசித்து உணவுப் பொட்டலங்களை இந்தியா போட்டபோது வல்லரசுகள் அனைத்தும் மௌனமாக அதனை அங்கீகரித்தன. இலங்கை இந்திய ஒப்பந்தம் அமெரிக்காவுக்கு பாதகமான அம்சங்கள் சிலவற்றைக் கொண்டிருந்த போதிலும் அமெரிக்கா அதனை வரவேற்றது. இந்தப் பின்னணியில்தான் ஜெயவர்த்தன அடிபணிந்து 13 வது திருத்தத்தை பாராளுமன்றத்துக்கக் கொண்டுவந்து நிறைவேற்றினார்.

இப்போது மகிந்த ராஜபக்ஷ அரசாங்கத்தைப் பணியவைப்பதற்கான பிடி எதுவும் புதுடில்லியிடம் இல்லை. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு புதுடில்லி சொல்வதைக் கேட்கக்கூடிய ஒரு அமைப்பாக இருந்தாலும்கூட, அது பலம்வாய்ந்த ஒரு அமைப்பல்ல. தமிழர்களின் பிரதான பிரதிநிதிகள் என்ற அந்தஸ்த்து அவர்களுக்கு இருந்தாலும், அதற்குரிய பலத்தையோ கட்டமைப்பையே அவர்கள் கொண்டிருக்கவில்லை. சர்வதேச ரீதியாக இருக்கும் அங்கீகாரம் மட்டும்தான் அதற்குள்ள ஒரே பலம். அதேவேளையில் பிராந்தியத்தில் இந்தியாவின் மேலாதிக்க நிலையும் இப்போது கேள்விக்குறியாகியிருக்கின்றது. இதனைக் கேள்விக்குறியாக்கியிருக்கும் சீனா மகிந்த அரசுடன் கொண்டுள்ள உறவுகளும் இந்தியாவுக்குப் பாதகமான ஒன்று. மகிந்தவுக்கு அழுத்தங்களை அதிகரித்தால் அவர் சீனாவுடன் மேலும் நெருங்கிச் சென்றுவிடுவார் என்பதால் இந்தப் பிரச்சினையை மிகவும் அவதானமாகக் கையாள வேண்டிய நிர்ப்பந்தம் இந்தியாவுக்குள்ளது.

போர்க் குற்றங்கள் என்பதை வைத்து மகிந்தவைப் பணியவைப்பதற்காக புதுடில்லி எடுத்த சில முயற்சிகளுக்கு மகிந்த பணிவதாகத் தெரியவில்லை. போர்க் குற்றங்கள் தொடர்பாக விரிவான விசாரணைகள் இடம்பெறுமாயின் அதன் பின்னணியில் இந்தியாவுக்குள்ள சம்பந்தங்களும் வெளிவரலாம் என்பதால் அதனை ஒரு ஆயுதமாகப் பயன்படுத்தக்கூடிய நிலையில் இந்தியா இல்லை. அதேவேளையில், தமிழகத்திலிருந்து உருவாகக்கூடிய உணர்வுகளைத் திருப்திப்படுத்தும் வகையில் எதனையாவது செய்தாக வேண்டும் என்ற தேவையும் புதுடில்லிக்குள்ளது. அதற்காகத்தான் இந்த விஜயங்கள் அக்கறைகள்.

இனநெருக்கடியைப் பொறுத்தவரையில் இந்தியாவால் எதனையும் செய்ய முடியாதிருக்கின்றது என்பதை சாதாரண தமிழர்களே பரிந்துகொண்டிருக்கும் போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மட்டும் இந்தியாவை நம்பியிருப்பது ஏன் என்பதுதான் புரியவில்லை. இது மக்களை ஒரு மாயையில் வைத்திருப்பதற்கே உதவும். 50 ஆயிரம் வீடுகளைக் கட்டுவதற்கான அடிக்கல்லை நாட்டுவதற்காக ஒரு வருடத்துக்கு முன்னர் வந்த அமைச்சர் கிருஷ்ணா, அந்தத் திட்டம் எந்தவிதமான முன்னேற்றத்தையும் காணாத நிலையிலேயே நாளை மீண்டும் வருகின்றார். கொழும்பின் ஒத்துழைப்பின்மைதான் இந்தத் திட்டம் முன்னேற்றமின்றிக் காணப்படுவதற்கக் காரணம் எனக் கூறப்படுகின்றது. ஆக, வீடுகளைக் கட்டிக்கொடுப்பதைக் கூட உருப்படியாகச் செய்ய முடியாத இந்தியாவால் நியாயமான அரசியல் தீர்வு ஒன்றுக்கு மகிந்த ராஜபக்ஷவை எப்படி நிர்ப்பந்திக்க முடியும்?

இந்த நிலையில்தான் இந்தியா என்ன செய்யப்போகின்றது என்ற கேள்வி எழுகின்றது.

கொழும்புக்குக் கூற வேண்டியது என்ன என்பதுபற்றி கிருஷ்ணாவுக்கு நன்றாகவே தெரியும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் சுரேஷ் பிரேமச்சந்திரன் கூறியிருக்கின்றார். உண்மைதான். கிருஷ்ணாவுக்கு மட்டுமல்ல. எல்லோருக்குமே தெரிந்த விடயம்தான் அது. ஆனால், இரண்டு கேள்விகள் உள்ளன. ஒன்று - கிருஷ்ணா அதனைக் கூறுவாரா? இரணடு - கிருஷ்ணா அதனைக் கூறினாலும் மகிந்த அதற்கு செவிமடுப்பாரா?

தற்போது பிரச்சினையாக இருப்பது காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்கள்தான். இவற்றை ஏற்றுக்கொள்ள முடியாது என ஒரேயடியாக மறுத்த அரசாங்கம் இப்போது அவை தொடர்பாகப் பேசத் தயாராக இருப்பதாகக் கூறியிருக்கின்றது. அடுத்த வாரத்தில் நடைபெறவிருக்கும் பேச்சுக்களில் அது தொடர்பாக ஆராயப்படலாம். இந்திய வெளிவிவகார அமைச்சரும் கொழும்பில் உள்ள சந்தர்ப்பத்தில் பேச்சுக்கள் இடம்பெறுவதால் அவருடனான பேச்சுகளிலும் இவ்விடயம் ஆராயப்படும். அரசாங்கத்தைப் பொறுத்தவரையில் இந்த அதிகாரங்களைத் தம்மால் கொடுக்க முடியாது என்பதை அது ஏற்கனவே அறிவித்திருந்தது. தற்போது சர்வதேச அழுத்தங்கள் காரணமாக இது தொடர்பாகப் பேசுவதற்குத் தயாராக இருப்பதாக அரசாங்கம் கூறுகின்றது.

பொலிஸ் அதிகாரத்தைப் பொறுத்தவரையில் சிறு குற்றங்களை விசாரிப்பதற்கான அதிகாரத்தைக் கொடுப்பதற்கும், காணியைப் பொறுத்தவரையில் காணி ஆணைக்குழு ஒன்றை அமைப்பதற்கும் அரசாங்கம் இணங்கலாம் என சில தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கு மேல் செல்வது தமக்கு ஆபத்தாக அமையும் என அரசாங்கம் இந்திய அமைச்சரிடம் கூறலாம் எனத் தெரிகின்றது. இந்தியத் தரப்பு இதனை ஏற்குமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைக் கோரலாம். இதனைவிட வேறு எதனையும் தரும் நிலையில் அரசாங்கம் இல்லை என்பது எந்தளவுக்கு உண்மையோ அதற்கு மேலாக எதனையாவது கொடுங்கள் என அழுத்தம் கொடுக்கும் நிலையில் இந்தியா இல்லை என்பதும் உண்மை.

கனடிய அரசாங்கமும் பிரித்தானிய அரசாங்கமும் கடந்த வாரத்தில் வெளியிட்ட அறிக்கைகள் மேற்கு நாடுகளின் அழுத்தங்கள் அதிகரித்துச் செல்லும் ஒரு போக்கைக் காட்டுவதாக இருந்தது. மார்ச் மாதத்தில் ஜெனிவாவில் உருவாகக் கூடிய நெருக்கடிகளுக்கு கட்டியம் கூறுவதாக இவை உள்ளன. இந்த நிலையில் எதனையாவது கொடுத்து தேசிய நல்லிணக்கம் ஏற்பட்டுவிட்டதாகக் காட்டிக்கொள்ள வேண்டிய தேவை மகிந்தவுக்கு உள்ளது. அதற்காக வரையறுக்கப்பட்ட பொலிஸ் அதிகாரத்தையும், காணி ஆணைக்குழுவையும் அவர் பயன்படுத்தலாம். இந்தியாவைப் பொறுத்தவரையில் சர்வதேச அரங்கில் மகிந்தவைப் பாதுகாக்க வேண்டிய தேவை அதற்குள்ளது. அதனால் இவற்றை ஏற்குமாறு கூட்டமைப்புக்கு இந்தியா ஆலோசனை வழங்கலாம் என தமிழ்க் கட்சிப் பிரமுகர் ஒருவர் குறிப்பிடுகின்றார்.

அதேவேளையில் வடமாகாண சபைக்கான தேர்தலை நடத்துவது தொடர்பாகவும் கிருஷ்ணாவின் விஜயத்தின்போது ஆராயப்படும் எனத் தெரிகின்றது. இரண்டு மாதங்களுக்கு முன்னர் மாலைதீவில் நடைபெற்ற சார்க் உச்சி மாநாட்டில் கலந்துகொள்ள வந்திருந்த இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங் வடமாகாண சபைத் தேர்தல் தொடர்பாக ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவிடம் வினவியுள்ளார். அதனை விரைவில் நடத்தவிருப்பதாக ஜனாதிபதி அப்போது கூறியிருந்தார். இவ்விடயத்தில் ஏற்பட்டுள்ள முன்னேற்றத்தை அறிவதற்கு இந்தியத் தரப்பு விரும்பும். அடுத்த ஒரு சில மாதங்களுக்குள் இது தொடர்பான அறிவித்தல் ஒன்று அரச தரப்பிலிருந்து வெளிவரலாம் என சில தகவல்கள் தெரிவிக்கின்றன. வரையறுக்கப்பட்ட அதிகாரங்களைக் கொடுத்து மாகாண சபைத் தேர்தலையும் நடத்திவிடுவதன் மூலம் சர்வதேச அழுத்தங்களைக் கொஞ்சமாவது குறைக்க முடியும் என்பதுதான் மகிந்தவின் கணிப்பு.

இந்த இடத்தில்தான் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பொறுப்பு அதிகரிக்கின்றது!