Monday, May 27, 2013

13 ஆவது திருத்தம்

மாகாண சபைகளை இன நெருக்கடிக்கான அரசியல் தீர்வாக முன்வைத்த அரசியலமைப்புக்கான 13 ஆவது திருத்தம் மீண்டும் நெருக்கடிக்குள்ளாகியுள்ளது. வடமாகாண சபைக்கான தேர்தல் விரைவில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையிலேயே 13 ஆவது திருத்தம் நீக்கப்படவேண்டும் எனவும், அதிலுள்ள காணி, பொலிஸ் அதிகாரங்கள் அகற்றப்பட வேண்டும் எனவும் குரல்கொடுக்கப்படுகின்றது. அமைச்சர்களாகவுள்ள இருவரது தலைமையிலான கட்சிகள் மட்டுமன்றி, சிங்கள- பௌத்த தேசியவாத அமைப்புக்கள் பலவும் இதற்காகக் குரல் கொடுக்கத் தொடங்கியிருக்கும் நிலையில் அரசாங்கத் தரப்பினருக்கு இது பெரும் நெருக்கடியைக் கொடுக்கும் ஒரு விடயமாக மாறியுள்ளது. தற்போதுள்ள நிலையிலேயே வடமாகாண சபைத் தேர்தல் நடைபெறும் அர அரசாங்கத் தரப்பிலிருந்து உத்தியோகபூர்வமாகத் தெரிவிக்கப்பட்டிருந்தாலும் கூட, இந்த விடயத்தில் அரசாங்கம் உறுதியாக இருக்குமா என்ற கேள்வியை பிரதான எதிர்க்கட்சிகள் எழுப்பியுள்ளன.

எதிர்க்கட்சிகள் இவ்விடயத்தில் சந்தேகத்தை வெளியிடுவதற்கு பல காரணங்கள் உள்ளன. குறிப்பாக கடந்த காலங்களில் பௌத்த - சிங்கள தேசியவாத அமைப்புக்களின் அழுத்தங்களுக்கு இணங்கிப்போகும் வழமையையே அரசாங்கம் கொண்டிருந்தது. இதனைவிட வடபகுதியில் அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்படும் வேலைத் திட்டங்கள் வடமாகாண சபைத் தேர்தலால் பாதிக்கப்படக்கூடாது எனவும் அரசாங்கம் கருதலாம். குறிப்பாக சிங்களக் குடியேற்றங்கள், இராணுவ மயமாக்கல் திட்டங்களைப் பாதிக்காத ஒரு நிலைமை தொடர வேண்டும் என அரசாங்கம் எதிர்பார்க்கலாம். சிங்கள தேசியவாத அமைப்புக்கள் மட்டுமன்றி, இப்போது பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோதாபாய ராஜபக்ஷவும் வடமாகாண சபைக்கான தேர்தல் மற்றும் 13 ஆவது திருத்தம் என்பவற்றுக்கு எதிராக கடுமையாகக் குரல் கொடுத்திருக்கின்றார். இந்த நிலைமைகள் அரசாங்கத்துக்கு தன்னுடைய நிலைப்பாட்டை மீள்பரிசீலனை செய்ய வேண்டிய நிர்ப்பந்தம் ஒன்றை ஏற்படுத்துவதாக அமையலாம்.

அரசாங்கம் 13 ஆவது திருத்தத்தை மாற்றியமைக்காமல் தற்போதுள்ள நிலையின்படியே தேர்தலை நடத்தும் எனக் கூறுபவர்கள் அதற்கு ஒரேஒரு காரணத்தைத்தான் கூறுகின்றார்கள். அதாவது இந்திய வெளிவிவகார அமைச்சர் குர்ஷீத் இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸிடம் தொலைபேசியில் இது தொடர்பில் கடுமையான கருத்துக்களை வெளியிட்டுள்ளார் என்பது. அதாவது: 13 ஆவது திருத்ததை மாற்றியமைக்கக்கூடாது. பொலிஸ் மற்றும் காணி அதிகாரங்களைப் பறிக்கக்கூடாது என இந்திய வெளிவிவகார அமைச்சர் கடும் தொனியில் கூறியிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. 13 ஆவது திருத்தம் சர்ச்சைக்குள்ளாகியிருக்கும் ஒரு நிலையிலேயே இந்திய வெளிவிவகார அமைச்சர் தமது நிலைப்பாட்டை இவ்வாறு வெளிப்படுத்தியிருக்கின்றார். 13 ஆவது திருத்தம் இந்தியாவின் அழுத்தங்களால் கொண்டுவரப்பட்ட ஒன்று என்பதால் மட்டுமன்றி இனநெருக்கடிக்கு நியாயமான ஒரு தீர்வு காணப்பட வேண்டும் என்ற தமிழகத்தின் உணர்வுகளைப் பிரதிபலிக்க வேண்டியவராக இருப்பதாலும் இவ்வாறாக அவர் தனது நிலைப்பாட்டை வெளிப்படுத்தியிருக்கலாம்.

ஆனால், கேள்வி என்னவென்றால் இந்தியாவின் இந்த அழுத்தங்கள் இலங்கையை எந்தளவுக்குப் பாதிக்கும் என்பதுதான். இந்தியாவைப் பொறுத்தவரையில் இலங்கையின் மீது அண்மைக்காலத்தில் எந்தவிதமான அழுத்தங்களையும் பிரயோகிக்கக்கூடிய நிலையில் அது இருக்கவில்லை. மறுபுறத்தில் இந்தியாவின் அழுத்தங்களையிட்டு கவலைப்படும் நிலையில் இலங்கையும் இருக்கவில்லை. ஆனால், 13 ஆவது திருத்தம் இந்தியாவின் எண்ணத்தில் உதித்த ஒன்று என்பதால் இதனை இந்தியா விட்டுவிடாது என்ற கருத்தும் சிலரால் முன்வைக்கப்படுகின்றது. வடக்கு கிழக்கு மாகாணங்கள் பிளவுபடுத்தப்பட்ட போதும் இதே கருத்துத்தான் பலரால் முன்வைக்கப்பட்டது. இரு மாகாணங்களும் இந்தியாவால் இணைக்கப்பட்டவை என்பதால் இந்த விடயஙத்தை டில்லி விட்டுவிடாது என வாதிட்டவர்கள் பலர். இரு மாகாணங்களும் பிரிக்கப்படக்கூடாது என இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங், ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவிடம் சேரடியாகவே கோரிக்கை முன்வைத்தும் இருந்தார். ஆனால், இறுதியில் என்ன நடந்தது என்பது வரலாறு!

இந்தியாவைப் பொறுத்தவரையில் 1897 ஆம் ஆண்டில் அதன் பிராந்திய நலன்களுக்காகக் கொண்டுவரப்பட்டதுதான் இலங்கை - இந்திய உடன்படிக்கை. போராளி அமைப்புக்கள் இந்தியாவைத் தளமாகக் கொண்டிருந்தமையால் ஜெயவர்த்தன அரசைப் பணியவைப்பது அப்போதைய ராஜீவி காந்தி அரசுக்கு சாத்தியமானதாக இருந்தது. தற்போது அவ்வாறான நிலை இல்லை என்பதுடன், இலங்கை அரசைப் பாதுகாப்பதன் மூலமாகவே தன்னுடைய நலன்களைப் பாதுகாப்பதற்கு இந்தியா முற்படுகின்றது. கடந்த வருடங்களில் இதற்குப் பல உதாரணங்கள் உள்ளன. ஆக, இந்தியாவைப் பொறுத்தவரையில் இலங்கையில் தன்னுடைய நலன்களைப் பாதுகாப்பதுதான் அதற்கு அவசியமே தவிர, 13 ஆவது திருத்தத்தைப் பாதுகாப்பது அல்ல. வடக்கு கிழக்கு இணைப்பை இந்தியா எவ்வாறு கைவிட்டதோ அதேபோல 13 ஐ கைவிடுவதுதான் தனது நலன்களுக்கு உகந்தது என்றால் அதனைச் செய்ய இந்தியா தயங்கப்போவதில்லை. அதேவேளையில், இந்தியாவைத் தாண்டி சர்வதேச சமூகம் இதற்காகக் குரல் கொடுக்கும் என்பதும் எதிர்பார்க்க முடியாததது.

இலங்கைத் தமிழர்களின் உரிமைகளுக்காகப் போராடும் கட்சிகள் எதுவும் 13 ஆவது திருத்தத்தை இனநெருக்கடிக்கான நியாயான தீர்வாக ஒருபோதும் ஏற்றுக்கொள்ளவில்லை. இதனை அடிப்படையாகக் கொண்டு இது மேலும் மேம்படுத்தப்பட வேண்டும் என்பதுதான் அவர்களுடைய நிலைப்பாடாக இருந்தது. அதனால்தான் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவும் 13 பிளஸ் என்ற கருத்தை இந்தியத் தலைவர்களிடம் அடிக்கடி கூறிவந்தார். விடுதலைப் புலிகளுடனான போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான உதவிகளைப் பெறுவதற்கு அது ஜனாதிபதிக்குத் தேவையானதாக இருந்தது. ஆனால், போர் முடிந்த பின்னர் 13 மைனஸ் என்பது கூட சாத்தியமா என்ற கேள்விதான் எழுப்பப்படுகின்றது. விடுதலைப் புலிகளைத் தோற்கடித்ததன் மூலம் தமிழ் மக்களின் நியாயமான அரசியல் கோரிக்கைகளையும் முள்ளிவாய்காலில் தோண்டிப் புதைத்துவிட்டதாக பௌத்த - சிங்களத் தேசியவாதிகள் கருதுகின்றார்கள். போர் வெற்றிக்கொண்டாட்டத்தை பிரமாண்டமாகக் கொண்டாடும் அரசாங்கமும் இந்தத் தேசியவாதிகளின் கருத்துக்களைப் பிரதிபலிக்கும் ஒன்றாகவே உள்ளது!

Tuesday, May 21, 2013

இலங்கையில் இந்தியத் தலையீடு : 06 இந்திராவின் கோட்பாடும் ‘றோ” வின் வியூகங்களும்

இலங்கையின் இன நெருக்கடி தொடர்பில் இந்திரா காந்தியின் முதலாவது தூதுவராக வெளிவிவகார அமைச்சர் பி.வி.நரசிம்மராவ் 1983 ஜூலையில் அனுப்பப்பட்ட போதிலும், இந்தியாவின் நோக்கங்களை நிறைவேற்றும் நோக்கிலான அரசியல் நகர்வுகளை முன்னெடுப்பவராக இந்தியாவின் மூத்த இராஜதந்திரியான ஜி.பார்த்தசாரதியே செயற்பட்டார்.83 ஆடிக்கலவரத்துக்குப் பின்னரான இந்திய- இலங்கை அரசியல் நகர்வுகளைப் பொறுத்தவரையில் அதில் பார்த்தசாரதியின் பங்கு பிரதானமானதாக இருந்துள்ளது.

பார்த்தசாரதியின் அரசியல் நகர்வுகளைப் பொறுத்தவரையில் அது இரண்டு வகையான இலக்குகளை அடிப்படையாகக் கொண்வையாக அமைந்திருந்தது.

ஒன்று – இந்தியாவின் பிராந்திய ரீதியான நலன்களைப் பாதுகாத்தல். அதாவது இலங்கையைத் தளமாகப் பயன்படுத்தி இந்தியாவுக்கு எதிரான செயற்பாடுகள் இடம்பெறுவதைத் தடுப்பதற்கான முயற்சிகள்.

இரண்டு – இலங்கைத் தமிழர்களின் அபிலாஷைகளை நிறைவு செய்யக்கூடியதான தீர்வு ஒன்றைகப் காண்பது. இலங்கையில் தமிழர்களின் பிரச்சினை தொடரும் பட்சத்தில் அது இந்தியாவுக்குத் தொடர்ந்தும் தலையிடியைக் கொடுப்பதாக அமையும் என்ற கருத்தும் டில்லியில் காணப்பட்டது.

இந்தப் பின்னணியில் இந்தியாவின் பிராந்திய நலன்களைப் பாதுகாக்கும் அதேவேளையில் இனநெருக்கடிக்குத் தீர்வைக் காண்பது என்ற இரட்டை அணுகுமுறையில் இந்தியா செயற்படத் தொடங்கியது. இந்தியாவைப் பொறுத்தவரையில் இந்த இரட்டை அணுகுமுறைதான் இலங்கைப் பிரச்சினையைக் கையாள்வதில் அதற்கு ஏற்பட்ட தோல்விகளுக்குக் காரணமாக அமைந்திருந்தது என நிச்சயமாகச் சொல்ல முடியும்.

ஈழப் போராளி அமைப்புக்களுக்கு இந்தியாவில் பயிற்சி வசதிகளை ஏற்பாடு செய்த றோ அமைப்பின் முன்னாள் அதிகாரியான கலாநிதி சந்திரசேகரன், கடந்த வாரம் லண்டனில் இடம்பெற்ற கருத்தரங்கு ஒன்றில் நிகழ்த்திய உரையிலும் இது தொடர்பாகக் குறிப்பிட்டிருந்தார். இலங்கை – இந்திய உடன்படிக்கை நல்லதுதான். ஆனால், அதில் இந்தியா தன்னுடைய நலன்களை அதில் முன்னிலைப்படுத்தியிருக்கக் கூடாது. இந்த உடன்படிக்கை இலங்கை அரசுக்கும் போராளிகளுக்கும் இடையிலேயே ஏற்பட்டிருக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்திருந்தமை கவனிக்கத்தக்கதாகும்.

இந்தியாவின் இந்த அணுகுமுறை இரண்டு இலக்குகளைக் கொண்டதாக இருந்த அதேவேளையில், அரசியல் ரீதியான அணுகுமுறையை இந்தியா வெளிப்படையாகவும் ஜெயவர்த்தன அரசுக்கு அழுத்தங்களைக் கொடுப்பதற்கான செயற்பாடுகளை மறைமுகமாகவும் முன்னெடுத்தது.

இந்தியாவின் இந்த அணுகுமுறை உண்மையில் பிரதமர் இந்திரா காந்தியினால் உருவாக்கப்பட்டதாகும். இந்திய வெளியுறவுக் கொள்கையின் ஒரு பகுதியாகவே இலங்கை தொடர்பான அதன் அணுகுமுறை அமைந்திருந்தது. குறிப்பிட்ட காலப்பகுதியில் உள்நாட்டு ரீதியாகவம், சர்வதேச ரீதியிலும் இந்தியா எதிர்கொண்ட சில நெருக்கடிகள் இவ்வாறான ஒரு கொள்கையை நோக்கி இந்தியாவைத் தள்ளியிருக்கலாம் என ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றார்கள்.

இந்திய வெளியுறவுக் கொள்கை தொடர்பான ஆய்வொன்றை மேற்கொண்ட சுர்ஜிர் மான்சிங் இந்திராவின் வெளியுறவக் கொள்கையை இவ்வாறு வர்ணிக்கின்றார்: “இந்திரா காந்தியின் பதவிக்காலத்தை ஒட்டுமொத்தமாக நோக்கும் போது சர்வதேச உறவுகளில் அதிகாரம்தான் தீர்மானிக்கும் சக்தி என்பதை இந்திரா கண்டு கொண்டார். இதுவே அவரது வெளிநாட்டுக்கொள்கை வகுப்பில் பிரதான பங்கை வகித்தது” என அவர் குறிப்பிடுகின்றார்.

இதனை மேலும் விபரிக்கும் அவர் பின்வருமாறு குறிப்பிடுகின்றார்:

‘இந்தியா தனது அதிகார அரசியல் நடவடிக்கையை முழுமையானதாக ஆக்குவதற்கு உப கண்டத்தில் ஏனைய நாடுகளிடமிருந்து குறிப்பிட்ட சில அகுமுறைகளை எதிர்பார்த்தது. அதாவது இந்தியாவின் நலன்களுக்கு எதிரானவை என பொருள்கொள்ளத்தக்க நடவடிக்கைகளை அண்டை நாடுகள் தவிர்க்க வேண்டும் என எதிர்பார்க்கப்பட்டது. பிராந்தியத்தின் உறுதிப்பாடின்மைக்கும் உட்பூசலுக்கும் மூலகாரணமாக இருப்பது வெளிப்புறச் சக்திகளின் தலையீடு என இந்தியா கருதியதால் பிராந்தியத்தில் அதன் நலன்களுக்குத் தீங்கானவையென அது தீர்மானித்த நடவடிக்கைகள் மீது ஒருவிதமான வீட்டோ அதிகாரத்தைப் பயன்படுத்த அது தீர்மானித்தது.”

பிராந்திய ரீதியான இந்தியாவின் அணுகுமுறையை இவ்வாறு வர்ணிக்கக்கூடியதாக உள்ள அதேவேளையில், இந்தியாவின் வெளிப்படையான அரசியல் அணுகுமுறைகளுக்குச் சமாந்தரமான மறைமுக இரகசிய நகர்வு ஒன்றும் இருந்தது. இந்த நகர்வை மேற்கொள்வதற்கான பொறுப்பு இந்தியாவின் புலனாய்வு நிறுவனமான றோ எனப்படும் ஆராய்ச்சி மற்றும் பகுப்பாய்வுப் பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டது. றோவின் செயற்பாடுகளை வெளிப்படையாகச் சொல்வதானால் புலனாய்வுத் தகவல்களைச் சேகரிப்பது, பகுப்பாய்வு செய்வது என்பதுடன் அவற்றின் அடிப்படையிலான இந்தியாவின் நலன்களின் அடிப்படையில் சதி, நாசகாரச் செயல்களைத் திட்டமிட்டுச் செயற்படுத்துவது என்பனவே அதன் பணி எனக் கூறலாம். அதாவது எந்த ஒரு புலனாய்வு அமைப்பும் செய்யக் கூடியதைத்தான் றோவும் செய்கின்றது.

இந்தியாவைப் பொறுத்தவரையில் அரசாங்கத்தின் அதிகாரத்தை மேலும் பலப்படுத்துவதையும், அண்டை நாடுகளின் செயற்பாடுகளைக் கண்காணிப்பதையும் நோக்கமாகக் கொண்டு 1968 ஆம் ஆண்டு இந்திரா காந்தியினால் றோ உருவாக்கப்பட்டது. றோ பிரதமரின் நேரடிக் கட்டுப்பாட்டுக்கு உட்பட்ட ஒரு அமைப்பாகும். காவ் என்பவரே இதன் ஸ்தாபகத் தலைவராக இந்திரா காந்தியினால் நியமிக்கப்பட்டார். இந்திராவின் பெரும் நம்பிக்கைக்குப் பாத்திரமான இவர், றோவின் ஆரம்ப காலச் செயற்பாடுகளிலும், ரோவின் ஆரம்பகால வளர்ச்சி மற்றும் அதற்கான செயல் வடிவங்களை வகுப்பதிலும் முக்கியமான பங்கை வகித்தவர்.

பாகிஸ்தானை உடைத்து பங்களாதேஷை உருவாக்குவதற்கும் 1970 களின் ஆரம்பத்திலிருந்து இவ்வமைப்புத் தான் இந்திரா காந்திக்கு துணையாகச் செயற்பட்டது. இந்திரா காந்தியின் அரசியல் செயற்பாடுகளுக்குத் தேவையான பாதையை அமைத்துக்கொள்வதும், அதற்குள்ள தடைகளை அகற்றுவதும் இவ்வமைப்பின் பிரதான பணியாக அமைந்திருந்தது எனக் கூறலாம். இதற்காக எவ்வாறான வழிவகைகளையும் கையாளக்கூடிய அதிகாரம் இவ்வமைப்புக்கு வழங்கப்பட்டிருந்த அதேவேளையில், அதற்கான திறனும் வசதிகளும் அதற்கு இருந்தது.

இலங்கை விவகாரத்தில் இந்தியாவின் அணுகுமுறை எவ்வாறானது என்பதைப் புரிந்துகொள்வதற்கு றோவின் செயற்பாடுகள் தொடர்பாக நாம் சுருக்கமாகவாவது அறிந்துகொள்வது பயனுள்ளதாக இருக்கும் என்பதால்தான் இந்தக் குறிப்புக்களைப் பகிந்துகொள்ள வேண்டியிருந்துள்ளது.

இலங்கை விவகாரத்தை அரசியல் ரீதியாகக் கையாளும் பொறுப்பை மூத்த இராஜதந்திரியான ஜி.பார்த்தசாரதி தனது கைகளில் எடுத்துக்கொண்ட அதேவேளையில் அதற்குச் சமாந்தரமாக மற்றொரு நிகழ்ச்சி நிரலுடன் றோவும் இந்தப் பிரச்சினையில் பிரவேசித்தது.

1970 முதல் 77 வரையிலான காலப்பகுதியில் அதிகாரத்திலிருந்த சிறிமாவோ பண்டாரநாயக்க இந்தியாவுக்கு நெருக்கமானவராக இருந்த அதேவேளையில், அணிசேராக் கொள்கையையும் கண்டிப்பாகக் கடைப்பிடித்தார் என்று சொல்லலாம். ஆனால், 1977 இல் பதவிக்கு வந்த ஜெயவர்த்தனவோ தானும் அணிசேராக் கொள்கையைக் கடைப்பிடிப்பவராகக் கூறிக்கொண்டாலும் மேற்கு நாடுகளுடன் குறிப்பாக அமெரிக்காவுடன் நெருக்கமான உறவுகளைக் கொண்டிருந்தார். இது இந்தியாவுக்குச் சந்தேகத்தைக் கொடுத்துக்கொண்டிருந்த ஒரு நிலையில்தான் 83 ஜூலைக் கலவரம் வெடித்தது.

இந்தக் கலவரத்தைப் பயன்படுத்திக்கொண்டு அரசியல் ரீதியான தலையீடு ஒன்றை மேற்கொள்ளக் கூடிய நிலை இந்தியாவுக்கு ஏற்பட்ட அதேவேளையில், அகதிகளாக தமிழகத்தில் தஞ்சமடைந்த ஈழத் தமிழர்களும், போராளிகளும் இவ்விடயத்தில் இந்தியாவுக்கு மேலும் சாதகமான ஒரு நிலையை ஏற்படுத்தினார்கள் என்றுதான் சொல்ல வேண்டும்.

ஜூலைக் கலவரத்தையடுத்து போராட்ட அமைப்புக்களின் செயற்பாடுகள் தீவிரமடைய – மேற்கு நாடுகள் சிலவற்றிலிருந்து ஆயுதங்களைப் பெற்றுக்கொள்வதற்கு ஜனாதிபதி ஜெயவர்த்தன முயற்சிக்கின்றார் என்ற செய்தி இந்தியாவுக்கு அதன் பிராந்தியப் பாதுகாப்பு தொடர்பிலான கேள்விகளை ஏற்படுத்தியது. இந்த பிராந்திய பாதுகாப்பு தொடர்பான இந்தியாவின் அச்சம், புதிய கோட்பாடு ஒன்றை இந்திரா காந்தி வகுத்துக்கொள்வதற்கக் காரணமாகியது. ‘இந்திராவின் கோட்பாடு” என பெருமையாகக் கூறப்படும் இந்தக் கோட்பாடு பல அம்சங்களைக் கொண்டது. இந்திய வெளிவிவகாரக் கொள்கை வகுப்பாளர்கள் அதனை பின்வரும் 3 அம்சங்களாக வகைப்படுத்தியுள்ளனர்.

1. தெற்காசிய நாடு ஒன்றின் உள்நாட்டு விவகாரங்களில் தலையிடும் நோக்கம் இந்தியாவுக்கு இல்லை. அத்துடன் வேறு நாடுகளின் தலையீட்டையும் இந்தியா ஏற்றுக்கொள்ளாது.

2. தெற்காசிய நாடு ஒன்றில் காணப்படும் பிரச்சினை ஒன்றில் வெளிநாடுகளின் தலையீடு மறைமுகமாகவோ அல்லது வெளிப்படையாகவோ இந்திய விரோதக் கொள்கை ஒன்றைக் கொண்டிருக்குமாயின் அவ்வாறான தலையீட்டை இந்தியா சகித்துக்கொள்ளாது. அதாவது தெற்காசிய நாடு எதுவும் இந்திய எதிர்ப்புக்கொள்கையைக் கொண்டுள்ள நாடுகளிடமிருந்து இராணுவ உதவிகளைப் பெற்றுக்கொள்ள முடியாது.

3. தெற்காசிய நாடு ஒன்றில் பாரதூரமானளவுக்கு உள்நாட்டுப் பிரச்சினை ஒன்று உருவாகி, அந்த நாட்டுக்கு அது அச்சுறுத்தலானால் அதனைக் கையாள்வதற்கு வெளிநாடு ஒன்றின் உதவி தேவைப்படுமாயின் இந்தியா உட்பட அயல்நாடு ஒன்றின் உதவியையே அந்நாடு கேட்க வேண்டும். இத்தகைய நிகழ்வின் போது இந்தியாவை விலக்கிவைப்பது இந்திய விரோதப் போக்காகவே கருதப்படும்.

இந்திராவின் இந்த சித்தாந்தம் தெற்காசியப் பிராந்தியத்தில் இந்தியாவின் மேலாதிக்க நிலையை உறுதிப்படுத்துவதற்காக உருவாக்கப்பட்டது. உண்மையில் தமது அண்டை நாடுகள் தமக்குக் கீழ்ப்பட்ட நாடுகளாக இருக்க வேண்டும் என்ற கருத்தே இதற்குள் உள்ளடக்கப்பட்டுள்ளது. ஆனால், இந்திராவின் இந்தக் கோட்பாடு சவாலுக்கு உட்பட்ட நிலையில்தான் இலங்கை விவகாரத்தை இரு வழிகளில் கையாள்வதற்கு இந்திரா காந்தி தீர்மானித்தார்.

அது பற்றிய சுவாரஸ்யமான தகவல்களுடன் அடுத்த கட்டுரையில்..

Thursday, May 16, 2013

பயங்கரவாத தடைச் சட்டம்

கைது செய்யப்பட்டு தடுத்துவைக்கப்பட்டிருந்த கொழும்பு மாநகரசபையின் முன்னாள் மேயரும் தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவருமான அசாத் சாலி விடுதலை செய்யப்பட்டுள்ள போதிலும், பயங்கரவாத தடைச் சட்டம் அரசியல் எதிராளிகளை ஒடுக்குவதற்கு எந்தளவுக்கு மோசமாகப் பயன்படுத்தப்படுகின்றது என்பதை இச்சம்பவம் தெளிவாக வெளிப்படுத்தியிருக்கின்றது. அசாத் சாலி ஊடகம் ஒன்றுக்குக் கொடுத்த பேட்டி தொடர்பாக விசாரிப்பதற்காகவே பயங்கரவாதத் தடைச் சட்டம் இங்கு பயன்படுத்தப்பட்டிருக்கின்றது. இதனைவிட, முஸ்லிம்களை ஆயுதமேந்த தூண்டினார் என்பது உட்பட பல்வேறு குற்றச்சாட்டுக்கள் அவர் மீது சரமாரியாகத் தெரிவிக்கப்பட்டன. இறுதியில் சர்வதேச மற்றும் உள்நாட்டு அழுத்தங்கள் அவர் விடுதலை செய்யப்படுவதற்குக் காரணமாக அமைந்தன. எதிர் அரசியல் செயற்பாடுகயும், விமர்சனங்களையும் அடக்குவதற்கு பயங்கரவாதத் தடைச் சட்டம் பயன்படுத்தப்பட்டமையை வன்மையாகக் கண்டித்திருக்கும் சிவில் அமைப்புக்கள், பயங்கரவாதத் தடைச்சட்டம் நீக்கப்பட வேண்டும் என்பதையும் வலியுறுத்தியிருக்கின்றன.

எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவும் இது தொடர்பாக இந்த வார முற்பகுதியில் பாராளுமன்றத்தில்   குரல் கொடுத்திருக்கின்றார். பயங்கரவாதத் தடைச்சட்டம் அரசியல் எதிராளிகளை ஒடுக்குவதற்குப் பயன்படுத்தப்படுவதாகக் குற்றஞ்சாட்டிய ரணில் விக்கிரமசிங்க அது நீக்கப்பட வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தியிருந்தார். இருந்தபோதிலும், இதனை நிராகரித்த பிரதமர் டி.எம்.ஜயரட்ண, பயங்கரவாதத் தடைச்சட்டத்தை நீக்க முடியாது எனக் குறிப்பிட்டார். விடுதலைப் புலிகள் அமைப்புக்கு புத்துயிரளிப்பதற்கான முயற்சிகள் சர்வதேச அரங்கில் இடம்பெறுவதால் பயங்கரவாதத் தடைச் சட்டம் நடைமுறையிலிருக்க வேண்டிய தேவை உள்ளதாகவும் குறிப்பிட்டார். அரசாங்கம் வழமையாகத் தெரிவிக்கும் ஒரு கருத்தாகவே இது அமைந்திருக்கின்றது. ஆனால், அசாத் சாலியின் கைதை நியாயப்படுத்த இது வலுவான காரணமாக இருக்கவில்லை. ஊடகவியலாளர் எஸ்.ஜே.திசநாயகமும் இதே சட்டத்தின் கீழ்தான் கைது செய்யப்பட்டு தடுத்துவைக்கப்பட்டிருந்தார் என்பதும் கவனிக்கத்தக்கது.

பயங்கரவாதத் தடைச் சட்டம் நடைமுறைக்குக் கொண்டுவரப்பட்ட காலத்திலிருந்தே அதற்குக் கடுமையான எதிர்ப்புக்கள் தெரிவிக்கப்பட்டு வருகின்றது. மனித உரிமைகளை மோசமாக மீறும் ஒரு சட்டமாக இது குற்றச்சாட்டப்பட்டுவருகின்றது. விடுதலைப் புலிகளின் செயற்பாடுகளை ஒடுக்குவதற்காக என  1979 ஆம் ஆண்டில் இச்சட்டமூலம் முதல்முறையாகக்  கொண்டுவரப்பட்டபோது, இது ஆறுமாத காலத்துக்கு மட்டுமே நடைமுறையில் இருக்கும் என அப்போதைய ஜே.ஆர்.ஜயவர்த்தன அரசாங்கம் உறுதியளித்திருந்தது. இச்சட்டமூலம் கொடூரமானதாகக் கருதப்பட்டமையால்தான் அதனை ஆறு மாத காலத்துக்கு மட்டுமே பயன்படுத்தப்போவதாக அரசாங்கம் வாக்குறுதி கொடுக்க வேண்டியிருந்தது. ஆனால், மாறிமாறி அதிகாரத்துக்கு வந்த ஒவ்வொரு அரசாங்கத்துக்கும் இது தேவையாக இருந்துள்ளது. விடுதலைப் புலிகளின் செயற்பாடுகளை ஒடுக்குவதற்கு அவசரகாலச்சட்டம் சட்டம் நடைமுறைக்குக்கொண்டுவரப்பட்டாலும் கூட, பயங்கரவாதத் தடைச்சட்டத்தை கைவிட்டுவிடுவதற்கு எந்தவொரு அரசாங்கமும் தயாராகவிருக்கவில்லை. அதேவேளையில், பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் பயன்பாடு நிலைமைகளை மேலும் மோசமடையச் செய்வதற்கும் மனித உரிமை மீறல்களுக்குமே வழிவகுப்பதாக அமைந்திருந்தது என சிவில் அமைப்புக்கள் பலவும் குற்றஞ்சாட்டியிருந்தன.

போர் முடிவுக்கு வந்த பின்னர் நீண்ட காலமாக நடைமுறையிலிருந்த அவசரகாலச் சட்டம் நீக்கப்பட்டது. இது சுயாதீனமான அரசியல் செயற்பாடுகளுக்கு வழிவகுப்பதாக அமையும் என எதிர்பார்க்கப்பட்டது. அதேவேளையில், பயங்கரவாதத் தடைச்சட்டம் நீக்கப்பட வேண்டும் அல்லது அதிலுள்ள சில சரத்துக்கள் மாற்றப்பட வேண்டும் என சிவில் அமைப்புக்கள் பலவும் அப்போது வலியுறுத்தின. ஆனால், அதற்குப் பதிலாக அவசரகாலச் சட்டம் நீக்கப்பட்டபோது பயங்கரவாதத் தடைச்சட்டத்துக்கு வலுவூட்டக்கூடிய சில சரத்துக்கள் கொண்டுவரப்பட்டன. அதாவது, அவசரகாலச்சட்டம் நீக்கப்பட்டாலும், அதிலுள்ள சில அம்சங்களை பயங்கரவாதத் தடைச்சட்டத்தில் இணைத்துக்கொள்ளும் உபாயத்தை அரசு கையாண்டது.  இதன்மூலம் அவசரகாலச் சட்டம் நீக்கப்பட்டதன் பயன்களைப் பெற்றுக்கொள்ள முடியாத ஒரு நிலை உருவாக்கப்பட்டது. அதாவது ஒரு ஆயதத்தை கைவிட்டாலும் மற்றொரு ஆயுதம் அரசின் கைகளுக்குக் கிடைத்தது.

அடிப்படை மனித உரிமைகளை மீறும் வகையில் இதன் சரத்துக்கள் சில அமைந்திருப்பதாகவும் மனித உரிமை அமைப்புக்கள் பலவும் அப்போது சுட்டிக்காட்டியிருந்தன. அரசாங்கத்தினால் நியமிக்கப்பட்ட தேசிய மனித உரிமைகள் செயற் திட்டமும் பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் நடைமுறைகள் மீள்பரிசீலனை செய்யப்படுவதுடன், மனித உரிமை நியமங்களுக்கு அமைவாக அதில் மாற்றங்கள் செய்யப்பட வேண்டும் எனவும் 2011 இல் பரிந்துரை செய்திருந்தது. ஒரு வருடகாலத்தில் இதனைச் செயற்படுத்த வேண்டும் எனவும் அந்தப் பரிந்துரையில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இருந்தபோதிலும் எந்தத் தடைகளும் இன்றி பயங்கரவாதத் தடைச்சட்டம் பயன்படுத்தப்படுகின்றது என்பதைத் தான் அசாத் சாலி கைது செய்யப்பட்டு தடுத்துவைக்கப்பட்ட சம்பவம் உணர்த்துகின்றது.

இப்போது இந்தச்சட்டத்தின் மூலம் யாரையும் கைது செய்து புனர்வழ்வுக்கு உட்படுத்துவதற்காக சிறைக்கு அனுப்பிவிட முடியும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் சுட்டிக்காட்டியிருப்பதும் கவனிக்கத்தக்கது. இவ்வாறு 39 பேர் யாழ்ப்பாணத்தில் கைது செய்யப்பட்டு அனுப்பப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடும் அவர், அவர்கள் ஒரு தடவையேனும் ஒரு நீதிபதிக்கு முன்பாக ஆஜர்படுத்தப்படவில்லை எனவும் தெரிவித்திருக்கின்றார். போர் முடிவுக்கு வந்த பின்னர் சமாதானமும் நல்லிணக்கமும் ஏற்படுத்தப்பட வேண்டிய தருணத்தில் இந்தச் சட்டமூலம் அவசியம்தானா எனவும் சிவில் சமூக அமைப்புக்கள் கேள்வி எழுப்புவதற்குப் பல காரணங்கள் உள்ளன. போர் முடிவுக்கு வந்தாலும் சுயாதீனமான அரசியல் செயற்பாடுகளை முன்னெடுக்க முடியாத நிலை இதன் மூலம் ஏற்படுத்தப்பட்டிருக்கின்றது.  ஆசாத் சாலி இப்போது விடுதலை செய்யப்பட்டுள்ள போதிலும், பயங்கரவாதத் தடைச் சட்டம் நீக்கப்பட வேண்டிய அவசியத்தை வலியுறுத்துவதாக அவர் கைது செய்யப்பட்ட  சம்பவம் அமைந்திருக்கின்றது.

Monday, May 13, 2013

அரசாங்கத்தின் தேர்தல் வியூகமும் தமிழ்க் கட்சிகளின் தடுமாற்றமும்

வடமாகாண சபைக்கான தேர்தலில் தமிழர்கள் உண்மையாகவே அக்கறை கொள்ள வேண்டுமா இல்லையா என்ற கேள்விக்கு அப்பால் - தேர்தலை இலக்கு வைத்த நகர்வுகள் வேகமாக ஆரம்பமாகிவிட்டன. யாழ்ப்பாணத்தில் முக்கிய அரசியல் பிரமுகர் ஒருவரது வீட்டின் மீது நடத்தப்பட்ட தாக்குதலின் மூலம் தேர்தல் நடவடிக்கைகள் அல்லது வன்முறைகள் சூடுபிடித்துவிட்டது எனக் கூறலாம். வடமாகாண சபைக்கான தேர்தலை நடத்துவதன் மூலம் இனநெருக்கடிக்கான தீர்வொன்று கிடைத்துவிடப்போவதில்லை. சில சமயம் இதுதான் தீர்வு எனக் கூறப்பட்டு (கஜேந்திரகுமார் பொன்னம்பலம் எச்சரிப்பது போல) தீர்வுக்கான முயற்சிகள் முடக்கப்பட்டுவிடக்கூடிய  ஆபத்தும் உள்ளது. அதேபோல வெற்றி பெறப்போவது யாராக இருந்தாலும், மாகாண சபைகளுக்கு இருக்கக்கூடிய முழுமையான அதிகாரங்களையும் பயன்படுத்துவதற்கு அவர்கள் அனுமதிக்கப்படுவார்களா என்பதும் கேள்விக்குறியாகவே இருக்கப்போகின்றது. இந்தக் கேள்விக்குறிகளுக்கு மத்தியில் முதலமைச்சர் வேட்பாளர் யார் என்ற கேள்விக்கு பிரதான கட்சிகள் பதில் தேடிக்கொண்டுள்ளன.

வடமாகாண சபைக்கான தேர்தல் அரசாங்கம் விருப்பத்துடன் நடத்தும் ஒன்றாகத் தெரியவில்லை. ஜனாதிபதியின் பொக்கற்றுக்குள் இருக்கக்கூடிய சிங்கள தேசியவாதக் கட்சிகளாக சம்பிக்க ரணவக்கவின் ஜாதிக ஹெல உறுமய, விமல் வீரவன்சவின் தேசிய சுதந்திர முன்னணி என்பன வடமாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கு எதிராக ஏற்கனவே குரல் கொடுக்கத் தொடங்கிவிட்டன. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இத்தேர்தலில் வெற்றி பெறும் என்பதன் அடிப்படையிலேயே அவர்களுடைய எதிர்ப்புக்கள் உருவாகியிருக்கின்றன என்பதும் கவனிக்கத்தக்கது. தேர்தல் அறிவிப்பதற்கான திகதி நெருங்கிவரும் நிலையில் இந்த எதிர்ப்புக்கள் மேலும் தீவிரமடையும் என்பது எதிர்பார்க்கக்கூடியது. அரசின் மறைமுகமான ஆதரவு இல்லாமல் இவர்கள் கிளர்ந்தெழுந்திருப்பார்களா என்பதும் சந்தேகத்துக்குரியதுதான். இறுதிக்கட்டத்தில் தேர்தலை தவிர்ப்பதற்கான ஒரு காரணமாக அரசாங்கம் இதனைப் பயன்படுத்தலாம் என்பதும் எதிர்பார்க்க முடியாத ஒன்றல்ல.

வடமாகாண சபைக்கான தேர்தலை இவ்வருடத்தில் நடத்துவது என்ற அறிவிப்பை அரசாங்கம் வெளியிட்டமைக்கான பிரதான காரணம் சர்வதேச அழுத்தங்கள்தான். அதேவேளையில், செப்டம்பர் மாதத்தில் வடமாகாணத் தேர்தல் நடத்தப்படும் என்ற அறிவித்தலை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள மணலாறில் வைத்து ஏப்ரல் மாதம் 20 ஆம் திகதி வெளியிட்டார். ஜனாதிபதி வெளியிட்ட இந்த அறிவித்தலின் பின்னணியில் இந்தியாவே இருந்துள்ளது. அண்மைக்கால இந்திய - இலங்கை இராஜதந்திர உறவுகளைப் பொறுத்தவரையில் இந்தியா கொடுத்த அழுத்தங்களுக்குப் பணிந்து கொழும்பு ஒரு அறிவித்தலை வெளியிட்டது என்றால் அது இதுவாகத்தான் இருக்க முடியும். இந்தச் சந்தர்ப்பத்தில் மட்டும்தான் இந்தியா தன்னிடமிருந்த துரும்புச் சீட்டை பயன்படுத்தியது.

பொதுநலவாய நாடுகளின் உச்சி மாநாட்டை எதிர்வரும் நவம்பரில் கொழும்பில் நடத்துவது தொடர்பில் இலங்கை அரசாங்கம் எதிர்கொண்ட நெருக்கடியையே இந்தியா பயன்படுத்திக்கொண்டது. ஏப்ரல் இறுதிப் பகுதியில் லண்டனில் நடைபெற்ற பொதுநலவாய அமைச்சர்களின் நடவடிக்கைக் குழுக் கூட்டத்தில் இலங்கை விவகாரம் தொடர்பில் ஆராய்வதைத் தடுப்பதில் இந்தியா முக்கிய பங்காற்றியது. பொதுநலவாய அமைப்பின் செயலாளர்நாயகம் கமலேஷ் சர்மா ஒரு இந்தியராக இருந்தது டில்லியின் இந்தக் காய் நகர்த்தலுக்குப் பெரும் வசதியாக அமைந்திருந்தது. ஜெனீவாவில் இரு தடவைகள் (பிரேரணையின் வீரியத்தைக் குறைத்து) இலங்கையைப் பாதுகாத்தது போல இப்போது பொதுநலவாய உச்சி மாநாட்டு விவகாரத்திலும் இந்தியாவே இலங்கையைப் பாதுகாத்தது.

பொதுநலவாய அமைப்பு நாடுகளின் உச்சி மாநாடு கொழும்பில் நடைபெறுவதை உறுப்பு நாடுகளில் பல கடுமையாக எதிர்த்தன. குறிப்பாக கனடா இதில் முன்னணியில் இருந்தது. ராஜபக்ஷ அரசைப் பொறுத்தவரையில் உச்சி மாநாடு இடமாற்றம் செய்யப்படுவது சர்வதேச ரீதியாக இலங்கை ஓரங்கட்டப்படடுவிட்டது என்பதை உறுதிப்படுத்துவதாக அமைந்துவிடும். உள்நாட்டிலும் சர்வதேச அரங்கிலும் இலங்கையை இது பாதிக்கும். அதனால், என்ன விலையைக் கொடுத்தாவது உச்சி மாநாட்டை நடத்த வேண்டிய தேவை அரசாங்கத்துக்கு இருந்தது. இதன் மூலமாகத்தான் சர்வதேசத்தினால் தாம் முழுiயாக ஓரங்கட்டப்பட்டுவிடவில்லை என்பதை அரசாங்கத்தால் நிரூபிக்க முடியும். இந்த சந்தர்ப்பத்தில்தான் இலங்கையைப் பாதுகாக்க இந்தியா களத்தில் இறங்கியது. இதற்காக இந்தியா கேட்ட விலைதான் 'வடமாகாண சபைத் தேர்தலுக்கான திகதியை அறிவிக்க வேண்டும்' என்பது!

லண்டனில் பொதுநலவாய வெளிவிவகார அமைச்சர்கள் மட்டக் கூட்டம் நடைபெறுவதற்கு சில தினங்களுக்கு முன்னதாக முல்லைத்தீவு சென்ற ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ, அங்கு குடியேற்றப்பட்ட சிங்கள மக்களுக்கு காணி உறுதிகளை வழங்கினார். அதன்பின்னர் நிகழ்த்திய உரையின் போதுதான் செப்டம்பர் மாதத்தில் வடமாகாணத்துக்கான தேர்தல் நடைபெறும் என அறிவித்தார். இந்த அறிவித்தலை எதிர்பார்த்திருந்த இந்தியா, பொதுநலவாய மாநாட்டை நடத்துவதில் இலங்கை எதிர்கொண்டிருந்த நெருக்கடியிலிருந்து இலங்கையைப் பாதுகாத்தது. இதற்காக பெறுமதிவாய்ந்த பரிசு ஒன்றையும் ஜனாதிபதி ராஜபக்ஷவிடமிருந்து இந்தியா பெற்றுக்கொண்டது. பலமாதகாலமாக சர்ச்சைக்குள்ளாகியிருந்த சம்பூர் அனல் மின் நிலையத்தை இந்தியாவுக்கு இலங்கை வழங்கியது. இது தொடர்பில் இரண்டு உடன்படிக்கைகள் விரைவில் கைச்சாத்திடப்படவிருப்பதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன. ஆக, பொதுநலவாய உச்சி மாநாடு கொழும்பில் நடைபெறுவதை உறுதிப்படுத்துவதற்காக இந்தியா கேட்ட விலைதான் வடமாகாண சபைத் தேர்தல் தொடர்பான அறிவித்தல். இப்போது பிரச்சினையை இனவாத அமைப்புக்கள் கையில் எடுத்துள்ளன!

1987 ஆம் ஆண்டு இலங்கை இந்திய உடன்படிக்கையின்படி மாகாண சபைகள் அமைக்கப்பட்ட பின்னர் வடக்கில் நடைபெறும் இரண்டாவது தேர்தல் இதுவாகும். 1988 ஏப்ரல் 28 இல் நடைபெற்ற முதலாவது தேர்தலில் வடக்கு கிழக்கு இணைந்திருந்தது. இத்தேர்தலின்போது வரதராஜப் பெருமாள் வடக்கு கிழக்கு மாகாண முதலமைச்சரானார். வடக்கு கிழக்கு மாகாணங்கள் பிரிக்கப்பட்ட பின்னர் வடக்கில் இடம்பெறப்போகும் முதலாவது தேர்தல் என்பது மட்டும் இத்தேர்தல் முக்கியத்துவம் பெறுவதற்குக் காரணமல்ல. எட்டு மாகாணங்களும் அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் உள்ள நிலையில் வடக்கில் மட்டும் அரசாங்கத்தைச் சாராதவர்கள் அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கான வாய்ப்புக்கள் உருவாகியிருப்பதும் இதற்கான முக்கிய காரணங்களில் ஒன்று!

வடமாகாண சபைக்கான தேர்தல் செப்டம்பர் முதல் வாரத்தில் நடைபெறுவதாக இருந்தால் ஜூன் இறுதியில் அல்லது ஜூலை முதல் வாரத்தில் அது தொடர்பான அறிவித்தல் உத்தியோகபூர்வாக விடுக்கப்பட வேண்டும். வடமாகாண சபைக்கான தேர்தலுடன் இணைந்ததாக மற்றும் இரண்டு மாகாண சபைகளுக்கான தேர்தல்களையும் நடத்துவதற்கு அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. மற்றைய இரண்டு மாகாண சபைகளிலும் வெற்றி நிச்சயம் என்ற நிலைப்பாட்டில்தான் அரசாங்கம் களத்தில் இறங்குகின்றது. வடக்கில் கிடைக்கக்கூடிய தோல்வியை இந்த இரண்டு வெற்றிகளின் மூலமாகவும் மூடிமறைத்துவிடலாம் என அரசாங்கம் கருதலாம்.

வடமாகாணத்தில் ஈ.பி.டி.பி.யுடன் இணைந்தே அரசாங்கம் தேர்தலை எதிர்கொள்ளவுள்ளது. முதலமைச்சர் வேட்பாளராக அமைச்சரும் ஈ.பி.டி.யின் தலைவருமான டக்ளஸ் தேவானந்தா போட்டியிடலாம் எனத் தெரிகின்றது. விடுதலைப் புலிகளின் முன்னாள் பிரமுகர்கள் சிலரைக் களமிறக்குவதும் அரசாங்கத்தின் உபாயமாக இருக்கும். இதில் குறிப்பிடத்தக்கவர் விடுதலைப் புலிளின் முன்னாள் ஊடகப் பேச்சாளர் தயா மாஸ்ட்டர். கே.பி. தொடர்பாகவும் சில பத்திரிகைகள் தகவல்களை வெளியிடுகின்ற போதிலும் அவர் களமிறங்கமாட்டார் எனத் தெரிகின்றது. முன்னாள் புலிகளை களமிறக்குவது வாக்குகளைப் பெற்றுத்தரும் என அரசாங்கம் கருதுவதுபோலத் தெரிகின்றது. அரசாங்கத்தின் இந்த எதிர்பார்ப்பு எந்தளவுக்கு நிதர்சனமாகும் என்பது தெரியவில்லை.

பிரதான தமிழ்க் கட்சியாகவுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைப் பொறுத்தவரையில் தேர்தலை சந்திப்பதற்கான ஏற்பாடுகள் ஆரம்பமாகிவிட்ட போதிலும், முதலமைச்சர் வேட்பாளர் யார் என்பது இன்னும் இறுதியாகவில்லை. கூட்டமைப்பைப் பதிவதாவதா இல்லையா என்பதில் உருவாகியிருக்கும் இழுபறி அடுத்த கட்ட நிலைமைகள் தொடர்பில் அவர்களைச் சிந்திக்கவிடவில்லை. இருந்த போதிலும் தமிழரசுக் கட்சியின் முக்கியஸ்த்தர்கள் சிலரது பெயர்கள் பேசப்படுகின்றது. ஆனால், உறுதிப்படுத்தப்படவில்லை. தமிழரசுக் கட்சியைவிட ஏனைய நான்கு பங்காளிக் கட்சிகளும் இது தொடர்பில் இதுவரையில் ஆலோசிக்கவில்லை. கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி இத்தேர்தலை பகிஷ்கரிப்பது என்ற நிலைப்பாட்டில் உள்ளது. அல்லது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமது சார்பில் சுயேட்சைக்குழு ஒன்றைக் களமிறக்கினால் அதற்கு ஆதரவிக்கத் தயாராகவிருப்பதாகக் கூறியிருக்கின்றது. கூட்டமைப்பு சுயேச்சையாக களம் இறங்குவதற்கான வாய்ப்புக்கள் இல்லை. கூட்டமைப்பின் முக்கிய பிரமுகர்கள் சிலர் முதலமைச்சர் கனவில் இருப்பதால் சுயேச்சைக்குழு ஒன்றை களமிறக்க அவர்கள் விரும்பமாட்டார்கள். இந்த நிலையில் தேர்தல் ஒன்றைச் சந்திப்பதற்கான தயார் நிலையில் தமிழ்க் கட்சிகள் இப்போது இருப்பதாகத் தெரியவில்லை.

- சபரி

Saturday, May 11, 2013

இலங்கையில் இந்தியத் தலையீடு : 04 நரசிம்மராவை அனுப்பிய இந்திரா!

இலங்கையில் வெடித்த 83 ஜூலைக் கலவரம் இந்தியாவில் பெரும் குழப்பமான நிலை ஒன்றை ஏற்படுத்தியிருந்தது என்பதைக் கடந்த வாரம் பார்த்தோம். குறிப்பாக தமிழகத்தில் இது பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருந்தது. இலங்கையைப் போல அருகாமையிலுள்ள நாடொன்றில் உருவாகியிருக்கும் இந்த மோசமான நிலையையிட்டு இந்தியா கரிசனை கொள்ளாமல் இருக்க முடியாது எனத் தெரிவித்த இந்தியப் பிரதமர் இந்திரா காந்தி, தன்னுடைய விஷேட பிரதிநிதியாக வெளிவிவகார அமைச்சர் பி.வி.நரசிம்மராவை அவசரமாக கொழும்புக்கு அனுப்பிவைப்பதற்குத் தீர்மானித்தார்.

வன்முறைகள் வெடித்த மூன்றாவது நாள் அதாவது 1983 ஜூலை 26 ஆம் திகதி கொழும்பு நகர் எரிந்துகொண்டிருந்த ஒரு நிலையில்தான் நரசிம்மராவ் கொழும்பு புறப்பட்டார். ஜூலைக் கலவரம் வெடித்த பின்னர்தான் இந்திரா காந்தி ஈழத் தமிழர் பிரச்சினை தொடர்பாக தன்னுடைய கரிசனையை முதல் தடவையாக பகிரங்கமாக வெளிப்படுத்தியிருந்தாலும் கூட, அது அப்போதுதான் அவருக்கு ஏற்பட்ட ஒரு திடீர் அக்கறை எனக் கருத முடியாது. இதற்கு முன்னரே இராணுவ நடவடிக்கைகளால் யாழ்ப்பாணத்தில் பதற்றமான ஒரு நிலை உருவாகியிருந்தபோதே இந்திய வெளிவிவகார அமைச்சின் செயலாளராக இருந்த கே.எஸ்.பாஜ்பால் இது தொடர்பில் இந்தியாவின் கரிசனையை வெளிப்படுத்தி அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார்.

கொழும்பு சென்ற நரசிம்மராவை வரவேற்ற ஜனாதிபதி ஜெயவர்த்தன, ஆடிக்கலவரம் எவ்வாறு வெடித்தது என்பது தொடர்பில் தன்னுடைய கருத்துக்களை வெளிப்படுத்தினார். அத்துடன் இது அரசியலில் ஏற்படுத்தியுள்ள தாக்கங்கள் தொடர்பான தனது பார்வையையும் வெளிப்படுத்தினார். குறிப்பாக ஆடிக்கலவரம் இடதுசாரிக் கட்சிகளின் ஒரு சதி முயற்சி எனவும், அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கான இவ்வாறான ஒரு கலவரத்தை அவர்கள் தூண்டிவிட்டிருப்பதாகவும் ஜெயவர்த்தன விளக்கினார். இந்தக் கருத்துக்களின் அடிப்படையில் ஜே.வி.பி. உட்பட இடது சாரி அமைப்புக்கள் சில தடை செய்யப்பட அவ்வமைப்புக்களின் தலைவர்கள் தலைமறைவானார்கள்.

இதேவேளையில் கொழும்பு வந்திருந்த நரசிம்மராவ் மரியாதை நிமித்தமாக பிரதமர் ஆர்.பிரேமதாசவையும் தான் சந்திக்க விரும்புவதாகத் தெரிவித்தார். அதற்கான அனுமதி அவருக்கு உடனடியாகவே வழங்கப்பட்டதுடன், பிரதமருக்கும் அது தொடர்பாக அறிவிக்கப்பட்டது. பிரேமதாசவைப் பொறுத்தவரையில் இந்தப் பிரச்சினையில் இந்தியாவின் தலையீட்டை அவர் விரும்பவில்லை. அதற்கு எதிரான நிலைப்பாட்டையே அவர் வெளிப்படுத்தி வந்திருக்கின்றார். இந்தநிலையில் நரசிம்மராவின் வருகைக்கும் தனது அதிருப்தியை வெளிப்படுத்துவதற்கு அவர் விரும்பினார்.

பிரேமதாசவைச் சந்திப்பதற்காக அவரது அலுவலகத்துக்குச் சென்ற நரசிம்மராவை சுமார் 20 நிமிடங்கள் காத்திருக்வைத்தார் பிரேமதாச. அதன்பின்னரே அவரை அழைத்து உரையாடினார். இந்தப் பேச்சுக்களின் போதும் இந்தியத் தலையீடு தொடர்பான தனது அதிருப்தியை பிரேமதாச வெளிப்படுத்தியிருந்தார். பிரேமதாசவைப் பொறுத்தவரையில் அவரது அரசியல் வாழ்வில் உச்சத்துக்கு வருவதற்கும் இந்த இந்திய எதிர்ப்புக் கொள்கைதான் காரணமாக அமைந்திருந்தது எனக் குறிப்பிடலாம். நரசிம்மராவின் வருகையுடன்தான் இவ்வாறான ஒரு அணுகுமுறையை பிரேமதாச கையாள முற்பட்டார் எனக் குறிப்பிடலாம்.

இலங்கை இனநெருக்கடியில் இந்தியாவின் அரசியல் ரீதியான தலையீடு நரசிம்மராவின் இந்த வருகையுடனேயே ஆரம்பமானது எனக்குறிப்பிடலாம். இந்த வருகையின் போது இலங்கைத் தமிழர்களின் நிலை தொடர்பாக தமிழகத்தில் உருவாகியிருக்கும் கொந்தளிப்பான நிலை தொடர்பாகவும், இந்திய அரசாங்கம் இது தொடர்பில் கொண்டுள்ள கரிசனையையிட்டும் நரசிம்மராவ் இலங்கைத் தலைவர்களின் கவனத்துக்கக் கொண்டுவந்தார்.

அத்துடன் இவ்வாறான அக்கறையை வெளிப்படுத்தியதன் மூலமாக இலங்கைப் பிரச்சினையில் தன்னை ஒரு மத்தியஸ்த்தராக இந்தியா உருவகப்படுத்திக்கொண்டுவிட்டது என்றுதான் சொல்ல வேண்டும். குறிப்பாக தமிழக மக்களின் உணர்வுகளைப் புரிந்துகொள்ளாமல் செயற்பட்டால் இலங்கையில் உருவாகக்கூடிய நிலைமைகள் இந்தியாவிலும் பாதிப்புக்களை ஏற்படுத்தும் என்பதை புதுடில்லி கொழும்புக்கு எடுத்துக்கூறியது. இதன் மூலம் இலங்கைப் பிரச்சினையில் தனக்குள்ள கரிசனையை இந்தியா நியாயப்படுத்தியது.

அதாவது இலங்கைப் பிரச்சினை ஒரு உள்நாட்டுப் பிரச்சினையாக இருந்தாலும் கூட, அங்கு தமிழர்களுக்கு எதிராக உருவாகியிருக்கும் நிலைமை தமிழகத்தில் கொந்தளிப்பை ஏற்படுத்துவதுடன், இந்தியாவின் ஒருமைப்பாட்டுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால் இலங்கையில் தமிழர்களுடைய பிரச்சினைக்கு நிரந்தரமான தீர்வு ஒன்றைக் காண்பதில் தனக்குள்ள அக்கறையை வெளிப்படுத்திய இந்தியா அதற்கான முயற்சிகளிலும் தன்னைச் சம்பந்தப்படுத்திக்கொள்ள முற்பட்டது.

அத்துடன் இலங்கைப் பிரச்சினையால் பாதிக்கப்பட்ட தமிழர்கள் அகதிகளாக தமிழகத்துக்கும் படகுகளில் செல்லத் தொடங்கியுள்ள நிலைமைகளால் இலங்கைப் பிரச்சினையில் தலையிடுவதில் தனக்குள்ள உரிமையை இந்தியா நியாயப்படுத்திக்கொண்டது.

அதேவேளையில், ஜெயவர்த்தன அரசாங்கம் கடைப்பிடித்த வெளிவிவகாரக் கொள்கை இந்தியாவுக்கு பாதகமானதாக அமைந்திருந்தமையும் இந்தப் பிரச்சினையை இந்தியா தனது கைகளில் எடுத்துக்கொள்ள முற்பட்டமைக்கு மற்றொரு காரணமாக இருந்தது. 1977 ஆம் ஆண்டு வரையில் ஆட்சி அதிகாரத்திலிருந்த சிறிமாவோ பண்டாரநாயக்க இந்திரா காந்தியுடன் நெருக்கமான உறவுகளைக் கொண்டிருந்த அதேவேளையில் இந்தியாவுக்குச் சார்பான வெளிவிவகாரக் கொள்கையையே பின்பற்றினார்.

ஆனால், ஜெயவர்த்தனவோ திறந்த பொருளாதாரக் கொள்கையைக் கடைப்பிடித்த அதேவேளையில் அமெரிக்காவுடன் நெருக்கமான உறவுகளைப் பேணுவதற்கு முற்பட்டார். சோவியத் சார்பான அணுகுமுறையைக் கொண்டிருந்த இந்தியாவுக்கு அமெரிக்காவுடன் ஜெயவர்த்தன நெருங்கிச் செல்வது ஏற்றுக்கொள்ளக்கூடியதாக இருக்கவில்லை. குறிப்பாக இந்துசமுத்திரப் பிராந்தியத்தில் அது தமது மேலாண்மையைப் பாதிப்பதாக அமையும் எனவும் இந்தியா கருதியது. அதற்கெதிரான வியூகம் ஒன்றை அமைப்பதற்கும் இன நெருக்கடியைத் தமது கைகளில் எடுத்துக்கொள்வது உதவும் என இந்தியா கருதியது.

தமிழகத்தில் உருவாகியிருந்த கொந்தளிப்பான நிலை, பங்களாதேஷில் இந்தியா மேற்கொண்ட தலையீடு என்பவற்றையும் புரிந்துகொண்டிருந்த ஜெயவர்த்தன இந்தியாவின் மத்தியஸ்த்த முயற்சிகளைத் தான் ஏற்றுக்கொள்வதாகத் தெரிவித்தார். இதனை ஒரு தந்திரோபாய நகர்வாகவே அவர் மேற்கொண்டார்.

ஜெயவர்த்தன இந்திய மத்தியஸ்த்த முயற்சிகளை ஏற்றுக்கொண்டுள்ள நிலையில் இந்தப் பிரச்சினையைக் கையாளும் பொறுப்பு முதிர்ந்த ராஜதந்திரியான ஜி.பார்த்தசாரதியிடம் இந்திரா காந்தியால் ஒப்படைக்கப்பட்டது….

Thursday, May 9, 2013

பொதுநலவாய மாநாடும் இலங்கையும்

பொதுநலவாய நாடுகளின் உச்சி மாநாடு இலங்கையில் நடைபெறும் என்பது உறுதிப்படுத்தப்பட்டுவிட்டாலும், இந்த அமைப்பின் தலைமைப் பதவியில் உள்ள பிரித்தானிய மகாராணி வருகை தரப்போவதில்லை என்பது உட்பட பல விடயங்கள் இலங்கைக்கு பாதகமானதாகவே உள்ளது.

லண்டனில் நடைபெற்ற பொதுநலவாய அமைச்சர்கள் மட்ட மாநாட்டில் இலங்கை எதிர்கொண்ட முக்கியமான பிரச்சினை தீர்க்கப்பட்டு மாநாடு இலங்கையில் நடைபெறும் என்பது உறுதிப்படுத்தப்பட்டிருக்கின்றது. இங்கும் இந்தியாவே இலங்கையைப் பாதுகாத்தது என தகவல்கள் கூறுகின்றன. பொதுநலவாய மாநாடு இலங்கையில் நடைபெறப்போகின்றது என்பது மட்டும் கொழும்புக்குத் திருப்தியளித்துவிடக்கூடியதல்ல. பொதுநலவாய அமைப்பிலுள்ள கனடா உட்பட பலம்வாய்ந்த பல நாடுகள் இலங்கையில் உச்சி மாநாடு நடைபெறுவதை தொடர்ந்தும் எதிர்க்கின்றன.

இலங்கையைப் பொறுத்தவரையில் அது அவுஸ்திரேலியாவையே பிரதானமாக நம்பியிருக்கின்றது. இலங்கைக்கு தீவிரமான ஆதரவை வழங்கும் நாடாகவுள்ள அவுஸ்திரேலியாவும், நல்லிணக்கச் செயற்பாடுகள் துரிதமாக முன்னெடுக்கப்படுவதுடன், மனித உரிமை நிலை மேம்படுத்தப்பட வேண்டும் என்பதையும் வலியுறுத்தியிருக்கின்றது. இவை அனைத்தும் பொதுநலவாய உச்சி மாநாடு கொழும்பில் நடைபெறுகின்றது என்பதற்காக மட்டும் திருப்தியடைந்துவிடக்கூடிய நிலையில் இலங்கை இல்லை என்பதைப் புலப்படுத்துகின்றது.

உச்சி மாநாட்டில் பங்குகொள்ளப்போவதாக அறிவித்திருக்கும் பிரித்தானியப் பிரதமர் டேவிட் கமரூன் கூட, மனித உரிமைகள் போன்ற விவகாரங்களுக்கு அழுத்தம் கொடுப்பதற்கு தான் அதனைப் பயன்படுத்தப்போவதாகத் தெரிவித்திருக்கின்றார். ஆக, பிரித்தானியப் பிரதமரின் வருகைகூட இலங்கைக்கு அழுத்தம் கொடுப்பதாகவே இருக்கும்.

உலகின் சக்திவாய்ந்த அமைப்புக்களில் ஒன்றான பொதுநலவாய அமைப்பு நாடுகளின் உச்சி மாநாடு 2013 நவம்பரில் கொழும்பில் நடைபெறும் எனத் தீர்மானிக்கப்பட்ட உடனடியாகவே அதற்கு எதிர்ப்புக்களும் உருவாகத் தொடங்கிவிட்டன. இதனை இங்கு நடத்துவதன் மூலம் சர்வதேச ரீதியாக தமக்கு எதிராக உருவாகியிருக்கும் நெருக்கடிகளைத் தவிர்த்துக்கொள்ள முடியும் என்பது இலங்கை அரசின் கணிப்பு. அதேவேளையில் சர்வதேச ரீதியாக தாம் ஓரங்கட்டப்பட்டுள்ளமையை மூடிமறைப்பதற்கும் இது இலங்கைக்கு உதவும் மாநாட்டை எப்படியும் நடத்திவிட வேண்டும் என்பதில் அரசாங்கம் குறியாகவுள்ளமைக்கு அதுதான் காரணம்.

போரின் இறுதிக்காலப் பகுதியில் இடம்பெற்ற போர்க் குற்றங்களுக்குப் பொறுப்புக் கூறல், நல்லிணக்கத்தை ஏற்படுத்தாமை, மனித உரிமைகள் நிலை, நீதித்துறையில் அரசாங்கத்தின் தலையீடு என்பவற்றின் அடிப்படையில் பொதுநலவாய உச்சி மாநாட்டை இலங்கையில் நடத்தக்கூடாது என வலியுறுத்தப்பட்டது. இவை அனைத்தும் பொதுநலவாய அமைப்பின் விழுமியங்களை மீறும் செயற்பாடுகளாகக் கருதப்படுகின்றது.

இதனை வலியுறுத்ததும் நாடுகளில் கனடா முன்னணியில் உள்ளது. மனித உரிமை அமைப்புக்கள் பலவும் இந்த நிலைப்பாட்டைக் கொண்டவையாகவே உள்ளன. பிரித்தானியாவும் மாநாடு இலங்கையில் நடைபெறுவதை ஆதரிக்கத் தயாராகவில்லை. இந்தியா வழமைபோல மௌனமாக இருந்து மறைமுகமாக இலங்கைக்கு ஆதரவை வழங்குகின்றது. இலங்கைக்கு நேரடியாக ஆதரவு தெரிவிக்கும் நாடுகளில் அவுஸ்திரேலியா முன்னணியில் உள்ளது.

இலங்கைக்கு ஆதரவளிப்பது என்ற நிலைப்பாட்டை அவுஸ்திரேலியா எடுத்திருந்தாலும், சர்வதேச ரீதியாக உருவாகியிருக்கும் நிலைப்பாட்டைப் புறக்கணித்துச் செல்லும் நிலையிலும் அது இல்லை. இலங்கைக்கான விஜயத்தை மேற்கொண்டிருந்த அவுஸ்திரேலிய குடிவரவு மற்றும் பிரஜாவுரிமை விவகாரங்களுக்குப் பொறுப்பான அமைச்சர் பிரென்டன் ஒ கொன்னர் தெரிவித்திருக்கும் கருத்துக்களிலும் இது பிரதிபலிக்கின்றது. கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை அரசாங்கம் நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தியிருக்கும் அவர், இலங்கை அரசாங்கம் தன்னுடைய உறுதிமொழிகளை நிறைவேற்ற வேண்டும் என்பதை தான் இலங்கை அரசாங்கத்துக்கு சுட்டிக்காட்டியதாகவும் குறிப்பிட்டார்.

பொதுநலவாய உச்சி மாநாடு இலங்கையில் நடைபெறுவது முக்கியமானதாகும் எனவும் குறிப்பிட்ட அவுஸ்திரேலிய அமைச்சர், அது நடைபெறும்போது நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதில் கணிசமான முன்னேற்றம் காணப்பட்டிருக்க வேண்டும் என்பதையும் சுட்டிக்காட்டினார். இந்தச் சந்தர்ப்பத்தை இலங்கை பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்பதே அவரது கருத்தாக இருந்தது.

பொதுநலவாய உறுப்பு நாடுகளின் தலைவர்கள் பங்குகொள்ளும் ஒவ்வொரு உச்சி மாநாட்டிலும் அதன் தலைவி என்ற வகையில் கலந்துகொள்ளும் பிரித்தானிய மகாராணியார் நவம்பரில் இலங்கையில் நடைபெறப்போகும் மநாட்டில் பங்குகொள்ளப்போவதில்லை என அறிவித்துள்ளார்.  அவருக்குப் பதிலாள சார்ள்ஸ் இளவரசர் கலந்துகொள்ளப்போகின்றார்.

போர் முடிவுக்கு வந்த நிலையில், இலங்கையைப் பாராட்டுவதற்கான ஒரு சமிஞ்ஞையாக இந்த மாநாட்டை கொழும்பில் நடத்துவதற்குத் தீர்மானிக்கப்பட்டிருக்கலாம். ஆனால், இந்தத் தீர்மானம் இப்போது தவறானதாகக் கருதப்படுகின்றது. போரின் முடிவில் உண்மையான ஒரு நல்லிணக்கம் இந்த நாட்டில் ஏற்படுத்தப்படும் என சர்வதேச சமூகம் நம்பியது.

பொறுப்புக் கூறல் இடம்பெறும் என உலகம் எதிர்பார்த்தது. ஆனால், இவை அனைத்தும் பொய்ப்பித்துப்போயுள்ள நிலையில்தான் பொதுநலவாய உச்சி மாநாட்டை இலங்கையில் நடத்துவதற்கான எதிர்ப்புக்கள் வலுவடைந்துவருகின்றது. இந்த நிலையில் இலங்கைக்கு ஆரவளிக்கும் நாடுகளும் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் நீதித்துறை விவகாரங்களையே முன்னிலைப்படுத்துகின்றன.

இலங்கையைப் பொறுத்தவரையில் ஜெனீவாவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை நிறைவேறுவதில்லை என்பதுதான் அதன் நிலைப்பாடாகவுள்ளது. வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் இதனை வெளிப்படையாகவே தெரிவித்திருந்தார். வடமாகாண சபைக்கான தேர்தல் செப்டம்பரில் நடைபெறும் என்பது மட்டுமே ஜனாதிபதியால் அடிக்கடி உச்சரிக்கப்படுகின்றது. இவ்வாறான உறுதிமொழிகள் பல ஏற்கனவே வழங்கப்பட்டவை என்பதால், நடைபெறும் வரையில் அதில் நம்பிக்கை வைக்க முடியாது.

ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அரசாங்கத்தைப் பொறுத்தவரையில் விடுதலைப் புலிகளுடனான போரில் பெற்றுக்கொண்ட வெற்றியின் கைதியாகவே அது உள்ளது. கொழும்பில் போர் வெற்றிக்கொண்டாட்டங்களுக்கான ஏற்பாடுகள் பாரியளவில் நடைபெறுகின்றது. மற்றொரு சுதந்திரதின வைபவமாக இது கொண்டாடப்படுகின்றது. போர் முடிவுக்கு வந்து நான்கு வருடங்கள் பூர்த்தியடையும் நிலையில், விலைவாசி உயர்வால் திண்டாடும் சிங்கள மக்களுக்கு மீண்டும் ஒருமுறை போரின் வெற்றியை நினைவுபடுத்த வேண்டிய தேவையில் அரசாங்கம் உள்ளது.

போர் வெற்றியின் கைதியாகவுள்ள அரசாங்கம், நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்தும் என எதிர்பார்ப்பது புத்திசாலித்தனமானதல்ல. அவுஸ்திரேலியா போன்ற நாடுகள் அதனை அறிவதற்கு பொதுநலவாய நாடுகளின் மாநாடு முடிவடையும் வரையில் காத்துக்கொண்டிருக்கப்போகின்றனவா?

Monday, May 6, 2013

அச்சுத்தலுக்குள் ஊடகங்கள்!

இலங்கையில் ஊடகங்களுக்கு எதிரான அடக்குமுறைகளைப் பொறுத்தவரையில் வடபகுதிதான் இப்போது மிகவும் சூடான இடமாகவுள்ளது. வட மாகாண சபைக்கான தேர்தல் செப்டம்பர் மாதத்தில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ள ஒரு நிலையில், கருத்துக்களையும் அபிப்பிராயங்களையும் கட்டியெழுப்பவேண்டிய ஊடகங்கள் அதிகளவு அச்சுறுத்தலுக்குள்ளாகியுள்ளன. அல்லது அவை இலக்கு வைக்கப்படுகின்றன. ஊடகத்துறையினருக்கு நம்பிக்கையைக் கொடுக்கும் வகையில் அல்லது அவர்களுடைய பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் அரசாங்கத்தின் செயற்பாடுகள் எதுவும் அமைந்திருக்கவில்லை. இதனால், ஊடகத்துறையினர் சுயதணிக்கையைச் செய்ய நிர்ப்பந்திக்கப்படுகின்றனர். அல்லது தொடர்ந்தும் அச்சத்துடன் பணிபுரிய வேண்டியவர்களாகவுள்ளனர். உயிர்த்துடிப்புடன் செயற்பட வேண்டிய ஊடகத்துறையை இந்த நிலைமை பெருமளவுக்கு மழுங்கடிப்பதாக அமைந்திருக்கின்றது.

புத்தாண்டு பிறப்பதற்கு முதல்நாள் அதாவது ஏப்ரல் 12 ஆம் திகதி யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவரும் உதயன் பத்திரிகையின் அச்சகப் பகுதிக்குள் நுளைந்த ஆயுதபாணிகள் அச்சு இயந்திரத்தையும், அச்சடிக்கப்பட்டிருந்த பத்திரிகைகளையும் தீவைத்து எரித்துள்ளார்கள். இச்சம்பவம் இடம்பெறுவதற்கு சரியாக ஒன்பது நாட்களுக்கு முன்னர் அதாவது ஏப்ரல் 3 ஆம் திகதிதான் உதயன் பத்திரிகையின் கிளிநொச்சி அலுவலகம் தாக்குதலுக்குள்ளானது. இதில் பல ஊழியர்கள் காயமடைந்தனர்.

உதயன் அலுவலகங்கள் தாக்கப்பட்டுள்ள அதேவேளையில், உதயன் பத்திரிகையாளர்களும் அச்சுறுத்தலுக்கும் விசாரணைக்கும் உள்ளாக்கப்படும் சம்பவங்களும் இடம்பெற்றிருக்கின்றன. மார்ச் 30 ஆம் திகதி உதயன் பத்திரிகையாளர் ஒருவர் அச்சுறுத்தப்பட்டுள்ளார். ஜனவரி நடுப்பகுதியில் உதயன் ஆசிரியர் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் விசாரணைக்கு உள்ளாக்கப்பட்டார். மார்ச் 8 ஆம் திகதி யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவரும் வலம்புரி பத்திரிகையின் ஊடகவியலாளர் ஒருவர் தாக்கப்பட்டார். யாழ்ப்பாணம் தினக்குரல் பத்திரிகையின் விநியோகஸ்த்தர் ஒருவர் பெப்ரவரி 7 ஆம் திகதி வடமராட்சிப் பகுதியில் வைத்துத் தாக்கப்பட்டு, அவரது மோட்டார் சைக்கிளும், அவர் கொண்டு சென்றிந்த பத்திரிகைகளும் எரிக்கப்பட்டன. இவை அனைத்தும் இவ்வருடத்தில் முதல் நான்கு மாத காலப்பகுதியில் இடம்பெற்ற நிகழ்வுகள். அதாவது, ஊடகங்களுக்கு எதிராக வன்முறை பிரயோகிக்கப்பட்ட நிகழ்வுகள். 

இதனைவிட பி.பி.சி.யின் தமிழோசை நிகழ்ச்சியில் இடையூறு செய்யப்பட்டதையடுத்து இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் ஊடாக மேற்கொண்ட அஞ்சலை மார்ச் 26 ஆம் திகதி முதல் பி.பி.சி. நிறுத்திக்கொண்டது. நிகழ்வுகளில் இடையூறு செய்வது இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்துடன் தாம் செய்துகொண்ட உடன்படிக்கையை மீறும் ஒரு செயற்பாடு என்பதை பி.பி.சி. சுட்டிக்காட்டிய பின்னரும் இந்த இடையூறு தொடர்ந்ததாலேயே உடன்படிக்கையை தாம் முறித்துக்கொண்டதாக பி.பி.சி. நிறுவனம் இது தொடர்பில் தெரிவித்திருந்தது. விமர்சனங்களையும் கருத்துக்களையும் சகித்துக்கொள்ள முடியாதவர்களாக அரசாங்க உயர் மட்டத்தினர் காணப்படுகின்றார்கள் என்பதையே பி.பி.சி. தமிழோசை நிகழ்ச்சிகள் குழப்பப்பட்டமை உணர்த்துகின்றது. தகவல்களை அறிந்துகொள்வதற்கான சுதந்திரத்தை மீறும் ஒரு செயற்பாடாகவும் இதனைக்கருத வேண்டும். அதேவேளையில் நம்பகத்தன்மையைக் கொண்டுள்ள பி.பி.சி. போன்ற ஒரு சேவையைத் தடுப்பதன் மூலம் வெறும் வதந்திகளை நம்பவேண்டிய நிர்ப்பந்தம் மக்களுக்கு ஏற்படுகின்றது என்பதையும் சுட்டிக்காட்ட வேண்டும்.

வடபகுதியைப் பொறுத்தவரையில் 2000 ஆம் ஆண்டு அக்டோபர் 19 ஆம் திகதி மயில்வாகனம் நிமலராஜன் என்ற ஊடகவியலாளர் கொல்லப்பட்ட பின்னர் இன்றுவரை பல ஊடகவியலாளர்களும் ஊடகப் பணியாளர்களும் கொல்லப்பட்டிருக்கின்றார்கள். பலர் காணாமல் போயிருக்கின்றார்கள். பல ஊடக நிறுவனங்கள் தாக்கப்பட்டுள்ளன. ஊடகவியலாளர்கள் பலர் தமது பாதுகாப்பைக் கருதி வெளிநாடுகளுக்குத் தப்பிச் சென்றிருக்கின்றார்கள்.  இத்தனைக்கு மத்தியிலும் வடபகுதி ஊடகங்கள் துணிச்சலுடன் செயற்பட்டு பல விடயங்களை வெளிக்கொண்டுவருவது பாராட்டப்படவேண்டியது.

கிழக்கு மாகாணத்தில் சுமூகமான ஒரு நிலை காணப்படுவதாக சிலர் கருதலாம். ஆனால், அங்குள்ள நிலைமையும் ஆரோக்கியமாக இல்லை. ஊடகவியலாளர் ஐயாத்துரை நடேசன் கொல்லப்பட்ட பின்னர், ஊடகவியலாளர்கள் பலர் கிழக்கு மாகாணத்திலிருந்து வெளியேறியிருக்கின்றார்கள். குறிப்பாக மட்டக்களப்பு அம்பாறை பகுதிகளைச் சேர்ந்த 10 க்கும் அதிகமான ஊடகவியலாளர்கள் அச்சுறுத்தல்காரணமாக இலங்கையைவிட்டுச் சென்றிருக்கின்றார்கள். இதனைவிட வேறும் சில ஊடகவியலாளர்கள் அச்சம் காரணமாக தமது ஊடகத்துறைப் பணியை நிறுத்திக்கொண்டும் உள்ளார்கள்.

போர் இடம்பெற்ற காலப்பகுதியில் ஊடகத்துறைக்கு எதிரான இடம்பெற்ற தாக்குதல்கள் பல்வேறு காரணங்களைக் கூறி நியாயப்படுத்தப்பட்டன. ஆனால் போர் முடிவுக்கு வந்திருக்கும் நிலையிலும் இவ்வாறான அச்சுறுத்தல்கள் தொடர்வது ஆபத்தான ஒரு நிலைமையையே வெளிப்படுத்துகின்றது. மாற்றுக்கருத்துக்களையும், விமர்சனங்களையும் சகித்துக்கொள்ள முடியாதவர்களாக ஒரு தரப்பினர் உள்ளார்கள் என்பதை இது புலப்படுத்துகின்றது. இந்த நிலையில் சுயதணிக்கைக்கு ஊடகங்கள் தள்ளப்படுகின்றன. சுயதணிக்கை என்பது ஆபத்தான ஒரு விடயம். சுயதணிக்கைக்கு பழக்கப்பட்டவர்கள் ஊடக சுதந்திரத்துக்காக குரல் கொடுக்கப்போவதில்லை. அதிகாரத்திலுள்ளவர்களை சமாளித்துப்போகப் பழகிக்கொள்கின்றார்கள். அதனால்தான் சுயதணிக்கை என்பது ஒடு எல்லைக்கு மேல் செல்லும் போது ஆபத்தானதாகிவிடுகின்றது.

ஊடகவியலாளர்களுக்கு ஆபத்தான நாடுகளில் ஒன்றாக இலங்கை இருப்பதாக சர்வதேச ஆய்வு ஒன்று சில வருடங்களுக்கு முன்னர் தெரிவித்திருந்தது.   இலங்கையிலேயே வடபகுதிதான் ஊடகவியலாளர்களுக்கு ஆபத்தான நாடாகவுள்ளது என்பதை அண்மையில் வெளிவரும் செய்திகள் உறுதிப்படுத்துகின்றன.

வடபகுதியில் அண்மைக்காலத்தில் முன்னெடுக்கப்படும் ஊடகங்களுக்கு எதிராக முன்னெடுக்கப்படும் நகர்வுகள் வடமாகாண சபைத் தேர்தலை இலக்காகக்கொண்டவையாக இருக்கலாம். வடக்கில்  ஊடகத்துறையின் சுதந்திரமான செயற்பாடுகள் உறுதிப்படுத்தப்படாத நிலையில் நியாயமானதும் சுயாதீனமானதுமான தேர்தல் ஒன்றை  எவ்வாறு எதிர்கொள்ள முடியும் என்பதுதான் இன்று எழும் பிரதான கேள்வி!

ஊடகத்துறையின் சுதந்திரத்துக்காகக் குரல் கொடுக்கும் அமைப்புக்கள் வடபகுதி நிலை தொடர்பாக அதிகளவு கவனத்தைச் செலுத்த வேண்டிய ஒரு தேவை உள்ளது என்பதை இந்தச் சந்தர்ப்பத்தில் சுட்டிக்காட்ட வேண்டும். இன்று ஊடக சுதந்திர தினம் அனுஷ்டிக்கப்படும் நிலையில், வடபகுதியில் ஊடகங்களின் சுயாதீனத்தை உறுதிப்படுத்துவதற்கான திட்டம்  ஒன்றை வகுத்துக்கொண்டு அவ்வமைப்புக்கள் செயற்பட வேண்டிய தேவை உள்ளது என்பதும் கவனத்திற்கொள்ளப்பட வேண்டும்.

Wednesday, May 1, 2013

இலங்கையில் இந்தியத் தலையீடு -04 ஈழப் போராட்டமும் எம்.ஜி.ஆரும்..

1983 ஜூலைக் கலவரத்தின் பின்னர்தான் இலங்கைப் பிரச்சினையில் இந்தியா நேரடியாக உத்தியோகபூர்வமாகத் தொடர்புபட்டதெனக் கூறிக்கொண்டாலும், 1982 ஆம் ஆண்டிலேயே ஈழப் பிரச்சினையுடன் தமிழகத்துக்குப் பெருமளவு தொடர்புகள் நேரடியாகவே ஏற்பட்டுவிட்டது என்பதுதான் உண்மை. இந்திய மத்திய அரசும் இலங்கை நிகழ்வுகளை குறிப்பாக வடக்கில் உருவாகியிருக்கும் மாற்றங்களை நுணுக்கமாக அவதானித்துக்கொண்டுதான் இருந்தது.

இலங்கை இராணுவத்தின் அடக்குமுறைகள் காரணமாக 1982 ஆம் ஆண்டிலேயே பெருமளவு தமிழர்கள் வடபகுதியிலிருந்து படகுகள் மூலமாக தமிழகத்துக்கு அகதிகளாகச் செல்லத் தொடங்கிவிட்டனர். இதனைவிட போராளி அமைப்புக்களும் தமக்குரிய பின்தளமாக தமிழகத்தைப் பாவிக்கத் தொடங்கிவிட்டன. போராளிகளுக்கான புகலிடமாக மட்டுமன்றி, அவர்களுக்கான பயிற்சிக் களமாகவும் 1982 ஆம் ஆண்டிலேயே தமிழகம் மாற்றமடைந்திருந்தது.

இதேவருடத்தில் சென்னையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் ஒன்றும் தமிழகத்தில் தமிழ்ப் போராளிகள் இருப்பதை உறுதிப்படுத்தியது. சென்னை பாண்டி பஜார் பகுதியில் இடம்பெற்ற இச்சம்பவத்தையடுத்து விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரன் மற்றும் உமா மகேஸ்வரன் உட்பட மேலும் சிலர் கைது செய்யப்பட்டனர். இச்சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திய இலங்கையின் ஜனாதிபதி ஜெயவர்த்தன அவர்களை இலங்கைக்கு நாடு கடத்துமாறு இந்தியாவைக் கேட்டுக்கொண்டார்.

அப்போது தமிழகத்தின் முதலமைச்சராக இருந்தவர் எம்.ஜி.ஆர். தமிழகத்தில் தஞ்சமடைந்துள்ள போராளிகளின் விவகாரத்தைக் கையாளும் பொறுப்பை அவர் உள்ளுர் பொலிஸாரிடம் ஒப்படைக்கவில்லை. தமிழக டி.ஐ.ஜி.யாக இருந்த மோகனதாஸிடமே இந்தப் பொறுப்பை எம்.ஜி.ஆர். ஒப்படைந்திருந்தார். மோகனதாஸ் எம்.ஜி.ஆரின் நம்பிக்கைக்குரிய ஒருவராக இருந்தமையாலேயே இந்தப் பொறுப்பு அவரிடம் ஒப்படைக்கப்பட்டிருந்து.

இருந்தபோதிலும் கைதான போராளித் தலைவர்களை இலங்கையிடம் ஒப்படைக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டையே மோகனதாஸ் கொண்டிருந்தார். ஆனால், இவ்விடயத்தில் தலையிட்டு, ‘போராளி தலைவர்களுக்கு இந்தியாவில் புகலிடம் தரப்பட வேண்டும். கைது செய்யப்பட்ட போராளிகளைத் திருப்பி அனுப்பக் கூடாது. அங்கு அவர்களுக்கு ஆபத்து உள்ளது” என முதல் தடவையாக குரல் கொடுத்தவர் பழ.நெடுமாறன்தான்.

நெடுமாறனின் இந்தக் கருத்தை எம்.ஜி.ஆரும் எற்றுக்கொண்டார். போராளிகளைத் திருப்பி அனுப்ப வேண்டாம் என தமிழக அரசு மத்திய அரசைக் கேட்டுக்கொண்டது. மத்திய அரசும் இதனை ஏற்றுக்கொண்டது. போராளிகளைத் திருப்பி அனுப்பப்போவதில்லை என்ற அறிவிப்பு மத்திய அரசிடமிருந்தும் வெளியாகியது.

ஆனால், இந்திரா காந்தி இவ்வாறான ஒரு முடிவை எடுத்தமைக்கு தமிழக அரசின் அழுத்தம் மட்டும் காரணமாக இருக்கவில்லை. இலங்கை விவகாரத்தைக் கையாள்வதற்கு இந்தியா வகுத்த திட்டமே இதற்குப் பிரதான காரணமாக இருந்தது.

இக்காலப் பகுதியில் இலங்கை தொடர்பாக இந்தியா எவவாறான திட்டத்தை வகுத்து வைத்திருந்தது என்பதையிட்டு தமிழக டி.ஐ.ஜி.யாகவும் தமிழக முதலமைச்சர் எம்.ஜி.ஆரின் நம்பிக்கைக்குரியவருமாக இருந்த கே.மோகனதாஸ் தான் எழுதிய ‘எம்.ஜி.ஆர். நிஜமும் நிழலும்” என்ற நூலில் பின்வருமாறு குறிப்பிட்டிருக்கின்றார்:

‘நிலைமைகளைத் தமக்குச் சாதகமாக்கிக்கொள்ள டில்லி மாபெரும் திட்டங்களைத் தீட்டியுள்ளது என எனக்குப் பேச்சுவாக்கில் தெரிவிக்கப்பட்டது. டில்லியிலுள்ள எனக்குத் தெரிந்தவர்கள் இலங்கையில் இந்தியா ஒரு பங்களாதேஷை உருவாக்கலாம் என எனக்குத் தெரிவித்தார்கள். இந்து மா சமுத்திரப் பகுதியில் திருமலை ஒரு முக்கிய துறைமுகமாகும். இந்தியா இந்த விஷயத்தில் அக்கறை காட்டுகின்றது என்ற செய்தியும் எனக்குத் தெரிவிக்கப்பட்டது.

பெருமளவுக்கு நம்பத்தகுந்ததான இந்தச் செய்திகளை நான் எம்.ஜ.ஆருக்குச் சொன்னேன். அவர் ஒரு முனிவரைப்போல சலனமற்று அமைதி காத்தார். ஆயுதங்களுடன் மாநிலத்தைச் சுற்றிவரும் இந்த இளைஞர்கள் விரைவில் தமிழகத்தை ஒரு லெபனானாக மாற்றிவிடும் அபாயம் உள்ளது. அத்துடன் புதுடில்லியும் இதனை ஒரு முக்கிய பிரச்சினையாக நினைக்கவில்லை என்பதையும் எம்.ஜி.ஆரிடம் எடுத்துச் சொன்னேன்.”

ஈழப் போராளிகள் தொடர்பில் எம்.ஜி.ஆர். கொண்டிருந்த நிலைப்பாட்டைக் குழப்புவதற்கு 1982 ஆம் ஆண்டிலேயே மோகனதாஸ் முற்பட்டபோதிலும், எம்.ஜி.ஆர். அவ்விடயத்தில் தெளிவாகவே இருந்துள்ளார். அத்துடன் ஈழப் போராளிகளைப் பயன்படுத்தி இலங்கை ஜனாதிபதி ஜெயவர்த்தனவை அடிபணிய வைப்பதற்கு இந்திரா காந்தி போட்டிருந்த உபாயங்களைக் குழப்புவதற்கும் அவர் விரும்பவில்லை என்பது தெரிகின்றது.

இவ்வாறு மத்திய அரசும், தமிழக அரசும் ஈழத் தமிழர் பிரச்சினையில் அக்கறையாக இருந்த ஒரு காலகட்டத்தில்தான் 83 ஜூலைக் கலவரம் வெடித்தது. இது தொடர்பில் வெளியான செய்திகள் தமிழகத்தில் பெரும் உணர்ச்சிக்கொந்தளிப்பை ஏற்படுத்தியது. தமிழகத்தில் இது தன்னிச்சையான எதிர்ப்பைக் கிளறிவிட்டது. அரசியல் கட்சிகள் மட்டுமன்றி, மாணவர்கள், அரச ஊழியர்கள் என அனைத்துத் தரப்பினருமே போராட்டங்களுக்காக வீதிகளில் இறங்கிய நிலையைக் காண முடிந்தது. பெருமளவு ஆர்ப்பாட்டங்கள் ஊர்வலங்கள் தமிழகத்தில் இடம்பெற்றது.

இனப்படுகொலையைத தடுத்து ஈழத் தமிழர்களைப் பாதுகாக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அமைப்புக்கள் பலவும் மத்திய அரசை வலியுறுத்தத் தொடங்கியிருந்தன.

இதன் உச்சகட்டமாக இனப்படுகொலைக்குத் தீர்வைக் காண, மத்திய அரசின் கவனத்தைக் கவர ஒரு வார காலம் துக்கம் அனுஷ்டிப்பதற்கும் அதன் இறுதிநாளில் முழு அடைப்பை மேற்கொள்வதற்கும் முதலமைச்சர் எம்.ஜி.ஆர். தீர்மானித்தார். அவரது அறிவிப்பு வெளியான உடனடியாகவே தமிழகத்திலுள்ள அனைத்துக் கட்சிகளும் அமைப்புக்களும் அதற்கு ஆதரவாக அறிக்கைகளை வெளியிட்டன. இந்தியப் பிரதமர் இந்திரா காந்தி இதற்கும் ஒரு படி மேலே சென்று முழு அடைப்பு நடைபெறும் தினத்தன்று மத்திய அரசின் அலுவலகங்கள் அனைத்தையும் மூடுவதற்கு உத்தரவிட்டார்.

இந்திரா காந்தியின் இந்த உத்தரவு இனப்படுகொலைக்கு உள்ளாகியிருந்த ஈழத் தமிழர்களை அரவணைப்பதாகவும், அவர்களுக்கு நம்பிக்கையளிப்பதாகவும் அமைந்திருந்தது. மத்திய அரசு இவ்வாறான ஒரு நடவடிக்கையை மேற்கொண்டிருப்பது இதுதான் முதன்முறையாக இருக்க வேண்டும்.

இந்திரா காந்தியும், எம்.ஜி.ஆரும் ஈழத் தமிழர்கள் விடயத்தில் இவ்வாறு பெயரெடுப்பது தமிழகத்தில் அப்போது எதிர்க்கட்சித் தலைவராக இருந்த கலைஞர் மு.கருணாநிதிக்குக் குழப்பத்தை ஏற்படுத்தியது. எம்.ஜி.ஆரை முந்திச் செல்லும் வகையில் சென்னையில் ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக பேரணி ஒன்றை நடத்திக்காட்டிய அவர், முழு அடைப்பு அறிவிக்கப்பட்ட தினத்தில் ரயில் மறிப்புப் போராட்டத்தை நடத்தப்போவதாகவும் அறிவித்தார். இதனால் ஏற்படக்கூடிய பாதக விளைவுகளைக் கருத்திற்கொண்ட மத்திய அரசு தமிழகத்துக்கான அனைத்து ரயில் சேவைகளையும் அன்று நிறுத்திவைக்குமாறு உத்தரவிட்டது.

தமிழகத்தின் உணர்வுகள் இந்தளவுக்குக் கொந்தளித்துக்கொண்டிருந்த ஒரு பின்னணியில்தான் இது தொடர்பில் கடுமையான அறிக்கை ஒன்றை இந்தியப் பிரதமர் இந்திரா காந்தி வெளியிட்டார். அருகேயுள்ள நாடொன்றில் நிலைமைகள் இந்தளவுக்கு மோசமாகச் சென்றுகொண்டிருக்கும் நிலையில் இந்தியா மெனமாக இருந்துவிட முடியாது என தனது அறிக்கையில் அவர் குறிப்பிட்டிருந்தது ஜெயவத்தனவுக்கு ஒரு எச்சரிக்கையாகவே அமைந்திருந்தது.

இந்த எச்சரிக்கையை வெளியிட்ட இந்திரா காந்தி, இலங்கை ஜனாதிபதியுடன் பேச்சுக்களை நடத்துவதற்காக தன்னுடைய விஷேட தூதுவராக அப்போது இந்திய வெளிவிவகார அமைச்சராக இருந்த நரசிம்மராவை 1983 ஜூலை 26 ஆம் திகதி கொழும்புக்கு அனுப்பிவைத்தார். அதாவது கொழும்பில் கலவரங்கள் ஆரம்பமாகி மூன்றாவது நாள் நரசிம்மராவ் கொழும்புக்குப் புறப்படுகின்றார். அப்போதும் தென்னிலங்கை எரிந்துகொண்டுதான் இருந்தது.

ஜனாதிபதி ஜெயவர்த்தனவுடன் தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசிய போதே தனது பிரதிநிதியாக நரசிம்மராவை அனுப்பிவைக்கப்போவதாக இந்திரா காந்தி தெரிவித்தார். இதனை ஜெயவர்த்தனவும் ஏற்றக்கொண்டார். தன்னுடைய பிரதிநிதியுடன் நடத்தப்படும் பேச்சுக்களின் மூலம் தமிழர்களுக்கு எதிராக இடம்பெறும் தாக்குதல்கள் முடிவுக்குக் கொண்டுவரப்பட வேண்டும் என இந்திரா காந்தி வலியுறுத்தினார்.
 
‘வரட்டும் பார்ப்போம்” என ஜெயவர்ர்தன அப்போது மனதுக்குள் நினைத்திருக்கலாம். ஏனெனில் அப்போதைய நிலையில் நரசிம்பராவை வரவேற்கும் நிலையில் ஜெயவர்த்தன இருக்கவில்லை. கொழும்பு எரிந்துகொண்டிருக்கும் நிலையில் அங்கு சென்று இறங்கிய நரசிம்மராவ் நடத்திய பேச்சுக்களின் சுவாரஸ்யமான பக்கங்களை அடுத்த கட்டுரையில் பார்ப்போம்…