Tuesday, November 29, 2016

'நம்ப' நடக்கும் கூட்டமைப்பு...


- சபரி-

"இணக்க" அரசியலின் உச்சத்துக்கே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைக் கொண்டு சென்றிருக்கின்றார் சம்பந்தன் ஐயா. போரால் பாதிக்கப்பட்ட பகுதிகளின் மீள்கட்டமைப்புக்கு பட்ஜெட்டில் விஷேட கவனம் செலுத்தப்படவில்லை என கடந்த ஆறு - ஏழு வருடங்களைப் போலவே இவ்வருடமும் கூட்டமைப்பு சபையில் முழங்கியது. ஆனால் வாக்கெடுப்பு வந்தபோது கூட்டமைப்பு எம்.பி.க்கள் அனைவரது கைகளும் உயர்ந்தன.

பட்ஜெட்டுக்கு ஆதரவாக வாக்களித்தால் நாம் எப்படி ஊர் செல்ல முடியும்? மக்களை எவ்வாறு எதிர்கொள்ள முடியும்? என தலைமையைப் பார்த்து கேள்வி எழுப்பியவர்களும் இறுதியில் ஆதரவாகக் கைகளை உயர்த்தியதைத்தான் காண முடிந்தது. வாக்கெடுப்பின் போது பிரசன்னமாகாமல் இருக்கலாம் என்ற கருத்துக்கூட கூட்டமைப்பினரிடம் எடுபடவில்லை. ஆதரவளிப்பது என்ற நிலைப்பாட்டுக்கு அனைவரும் இறுதியில் உடன்பட்டார்கள்.

கூட்டமைப்பு பிரமுகர் ஒருவரிடம் இது தொடர்பாகக் கேட்டபோது, "நாம் உண்மையில் பட்ஜெட்டை ஆதரித்து வாக்களிக்கவில்லை. அரசாங்கத்துக்கு ஆதரவைத் தெரிவிக்கவே வாக்களித்தோம்" என உண்மையைப் போட்டுடைத்தார். "பட்ஜெட்டுக்கு என்றால் நாம் ஆதரவாக வாக்களித்திருக்க முடியாது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு என இதில் எந்த நிவாரணமும் இல்லை. ஆனால், அரசுக்கு எமது ஆதரவை வெளிப்படுத்த வேண்டிய தேவை உள்ளது" என தனது பெயரைக் குறிப்பிட விரும்பாத கூட்டமைப்பு எம்.பி. ஒருவர் தெரிவித்தார்.

அரசியலமைப்பு சீர்திருத்த முயற்சிகள் தற்போது நடபெற்றுவருகின்றது. ஆறு உப குழுக்களின் அறிக்கை வெளியிடப்பட்டிருக்கின்றது. பிரதான குழுவான வழிநடத்தல் குழுவின் அறிக்கை டிசெம்பர் 10 ஆம் திகதி வெளிவரவுள்ளது. இனநெருக்கடிக்கான தீர்வை இந்த அறிக்கையில் கூட்டமைப்பின் தலைமை எதிர்பார்த்துள்ளது. இந்த நிலையில், அரச தரப்புக்கு தமது நல்லெண்ணத்தைக் காட்டுவதற்காகவே கூட்டமைப்பினர் பட்ஜெட்டுக்கு கைகளைத் தூக்கி ஆதரவை வெளிப்படுத்தியிருக்கின்றார்கள்.

"நம்பி நட" என்பதை விட, "நம்ப நடப்போம்" என்ற நிலையிலேயே கூட்டமைப்பின் தலைமை இப்போது காய்களை நகர்த்தியிருக்கின்றது. அரச தரப்புக்கும் இது பலத்தைக் கொடுத்திருக்கின்றது. இந்தப் பலத்தைக் காட்ட வேண்டிய தேவை ஒன்று அரசாங்கத்துக்கு அப்போது இருந்ததுள்ளது என்பது இங்கு கவனிக்கப்பட வேண்டும். பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பலம் தமக்கு உள்ளது என்பதை இந்த வாக்கெடுப்பின் மூலம் அரசாங்கம் வெளிப்படுத்தியிருக்கின்றது.

இந்தப் பலம் உள்ள நிலையிலேயே அரசியலமைப்பு சீர்திருத்தத்துக்கான ஆறு உப குழுக்களின் அறிக்கைகளும் மறுநாள் காலையில் பாராளுமன்றத்தில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவினால் முன்வைக்கப்பட்டிருக்கின்றது. அதிலிருக்கக்கூடிய அரசியல் முக்கியமானது. பலவீனமான நிலையில் இந்தப் பரிந்துரைகள் முன்வைக்கப்படவில்லை என்பதைக் காட்டிக்கொள்ள வேண்டிய தேவை அரசாங்கத்துக்கு இருந்தது.

இதன் அடுத்த காட்சி டிசெம்பர் 10 ஆம் திகதி காலை அரங்கேறவுள்ளது. அன்றுதான் வழிநடத்தல் குழுவின் (இடைக்கால) அறிக்கை பாராளுமன்றத்தில் முன்வைக்கப்படவிருக்கின்றது. இதில்தான் இனநெருக்கடிக்கான தீர்வு யோசனைகள் உள்ளடக்கப்பட்டிருக்கும். அதன் பின்னணியிலும் சுவாரஸ்யமான அரசியல் ஒன்றுள்ளது. அன்று மாலைதான் பட்ஜெட் மூன்றாவது வாசிப்பின் மீதான வாக்கெடுப்பு நடைபெறவுள்ளது.

முதலாவது வாசிப்பின் மீதான வாக்கெடுப்பின்போது, 'நம்ப நடக்க வேண்டும்' என கூட்டமைப்பு முற்பட்டது.  அதற்கான பிரதியபகாரமாக டிசெம்பர் 10 ஆம் திகதி வழிநடத்தல் குழுவின் அறிக்கையில் "அரசாங்கமும் நம்ப நடக்கிறதா?" என்பதைத் தெரிந்துகொள்ளலாம்.

டிசெம்பர் 10 ஆம் திகதி காலை 9.00 மணிக்கு இடைக்கால அறிக்கை வரும் எனத் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது. கூட்டமைப்பின் தலைமை இந்த அறிக்கையில் நம்பிக்கை வைத்திருக்கின்றது. இந்த அறிக்கையின் உள்ளடக்கம் அன்று மாலை நடைபெறப்போகும் பட்ஜெட் மீதான வாக்கெடுப்பில் பிரதிபலிக்கும்.

இவை அனைத்தையும் கருத்திற்கொண்டுதான் ஜனாதிபதியை சம்பந்தன் ஐயா தலைமையில் 16 பாராளுமன்ற உறுப்பினர்களும் வியாழக்கிழமை சந்தித்துப் பேசியிருக்கின்றார்கள். "நாங்கள் நம்ப நடக்கிறோம். நீங்களும் நம்பி நடவுங்கள்" என்பதுதான் இதில் வெளிப்படுத்தப்பட்ட செய்தி!

"2016 இல் தீர்வு" என ஐயா சொல்லிவந்தது உண்மையாகப்போகின்றதா அல்லது அது வெறும் ஊகம்தானா என்பதை டிசெம்பர் 10 இல் உலகம் அறிந்துகொள்ளும். கூட்டமைப்பின் எதிர்காலமும் இந்த அறிக்கையில்தான் தங்கியுள்ளது.

Sunday, November 27, 2016

நினைவுகூரல்

நவம்பர் இறுதிப்பகுதி என்பது தமிழ்ப் பகுதிகளைப் பொறுத்தவரையில் எப்போதும் பதற்றம் மிகுந்ததாகவே இருக்கின்றது. இப்போதும், தமிழ்ப் பகுதிகளில் குறிப்பாக யாழ்ப்பாணத்தில் மாவீரர் வாரத்துடன் ஆரம்பமான பதற்றம் இன்றும் தொடர்ந்துகொண்டு இருக்கின்றது. போரில் உயிரிழந்த பொதுமக்கள் மற்றும் போராளிகளுக்கு அஞ்சலி செலுத்தும் வாரமாக மாவீரர் வாரம் விடுதலைப் புலிகள் அமைப்பால் பிரகடனப்படுத்தப்பட்டிருந்தது. இன்று விடுதலைப் புலிகள் அமைப்பு இல்லாவிட்டாலும்கூட, தமது உறவுகளை இந்த வாரத்தில் நினைவுகூரும் வழமையை மக்கள் கைவிடவில்லை. இதனைத் தடுக்க வேண்டும் என்பதில் பொலிஸார் உஷாராக இருப்பதுதான் பதற்றத்தையும், அச்சத்தையும் அதிகரிப்பதற்குக் காரணமாகவுள்ளது.

பெருமளவு உயிர்களைப் பலியெடுத்த போர் முடிவுக்கு வந்து ஏழரை வருடங்கள் சென்றுவிட்டது. யுத்தத்தின் பாதிப்புக்களிலிருந்து மக்கள் இன்னமும் மீளவில்லை. இன்னுமொரு யுத்தத்தை மக்கள் விரும்பப்போவதுமில்லை. அதற்கான கள நிலையும் இல்லை. இந்த நிலையில் மீண்டும் ஒரு ஆயுதப்போர் வெடிக்கும் என்றோ, விடுதலைப் புலிகளுக்கு புத்துயிரழிக்கப்படும் என்றோ அஞ்சவேண்டிய தேவை இல்லை. ஆனால், வடக்கில் இடம்பெறும் நிகழ்வுகளை புலிகளுக்கு புத்துயிரளிக்கும் நிகழ்வாகக் காட்டிக்கொள்வதன் மூலம் அச்ச நிலை ஒன்றை ஏற்படுத்தவும், இராணுவம் வடக்கில் அதிகளவில் நிலைகொண்டிருப்பதை நியாயப்படுத்தவும் முயற்சிக்கப்படுகின்றதா என்ற கேள்வி நியாயமாகவே எழுகின்றது.

"போரில் கொல்லப்பட்ட பொதுமக்களைள வேண்டுமானால் நினைவுகூரலாம், அஞ்சலி செலுத்தலாம் ஆனால் விடுதலைப் புலிகளை நினைவுகூர முடியாது" என அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான ராஜித சேனாரட்ண தெரிவித்திருக்கின்றார். இதேபோல பாதுகாப்பு அமைச்சர் ரூவான் விஜயவர்த்தனவும், "உயிரிழந்த மக்களை வேண்டுமானால் நினைவுகூரலாம். ஆனால் விடுதலைப் புலிகளை நினைவுகூரமுடியாது. அதற்கு அனுமதிக்கவும் மாட்டோம்" என கடும் தொனியில் தெரிவித்திருந்தார். ஆக, அரசாங்கம் இவ்விடயத்தில் கடுமையான நிலைப்பாட்டை எடுத்திருப்பது வெளிப்படையாகத் தெரிகின்றது.

புதிய அரசியலமைப்பு தனிநாட்டுக்கு வழிவகுக்கப்போகின்றது என மகிந்த ராஜபக்‌ஷவை முன்னிலைப்படுத்தும் பொது எதிரணி பிரச்சாரத்தை முன்னெடுத்துவரும் நிலையில், விடுதலைப் புலிகளை நினைவுகூருவதற்கு அரசாங்கம் அனுமதிக்கும் என்பது எதிர்பார்க்கக்கூடிய ஒன்றல்ல. தென்னிலங்கை சிங்கள கடும் போக்காளர்களின் உணர்வுகளுக்கு முன்னுரிமை கொடுக்கும் வகையிலேயே தமிழர் விவகாரத்தை அரசாங்கம் கையாள்கின்றது என்பது இரகசியமானதல்ல. அதனால்தான் இந்த விவகாரத்தில் அரசாங்கம் கடுமையாக இருக்கின்றது. யாழ் பல்கலைக்கழக மாணவர் விடுதிக்குள் அத்துமீறிச் சென்று மாணவர்களை அச்சுறுத்தும் வகையில் பொலிஸார் நடந்துகொண்டதன் பின்னணியும் இதுதான்.

இறந்தவர்களை நினைவுகூரும் விடயத்தில் கூட, அரசாங்கம் இனவாதக் கண்ணோட்டத்துடனேயே செயற்படுகின்றது என்பதை இந்தச் சம்பவங்கள் உறுதிப்படுத்துகின்றன. பாதுகாப்புத் தரப்பினரும் பொலிஸாரும் இவ்விடயங்களில் நிதானமாகச் செயற்படுவது அவசியம். முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ஷவின் காலத்தில் இந்த நிலை காணப்பட்டது. ஆட்சி மாற்றத்துடன் காட்சிகளும் மாறும் என தமிழ் மக்கள் எதிர்பார்த்தார்கள். அந்த எதிர்பார்ப்பு பொய்த்துப்போயிருப்பதைத்தான் இன்று பார்க்கமுடிகின்றது. இறந்தவர்களை நினைவுகூருவதை இந்தளவுக்கு அச்சத்துடன் பார்க்க வேண்டிய தேவை ஏன் அரசாங்பத்துக்கு ஏற்படுகின்றது என்பது புரியாத புதிராகவே இருக்கின்றது.

1971 இலும் பின்னர் 1989-90 காலப்பகுதியிலும் அரசுக்கு எதிரான ஆயுதப் போராட்டம் ஒன்றை ஜே.வி.பி. முன்னெடுத்திருந்தது என்பதை யாரும் மறந்திருக்கமாட்டார்கள். இந்தக் கிளர்ச்சியின் போது நாட்டின் பல பகுதிகளைக் கூட ஜே.வி.பி. தன்னுடைய கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்திருந்தது. ஆயுதக் கிளர்சியின் மூலம் அதிகாரத்தைக் கைப்பற்றுவதுதான் அவர்களுடைய இலக்காக இருந்தது. இந்த ஆயுதப்போராட்டம் ஒடுக்கப்பட்டபோது ஜே.வி.பி.யின் ஸ்தாபக தலைவர் ரோஹண விஜயவீர உட்பட ஆயிரக்கணக்கான ஜே.வி.பி.யினர் கொல்லப்பட்டனர்.  இன்று விஜயவீர உட்பட ஜே.வி.பி.யின் தலைவர்கள் பகிரங்கமாகவே நினைவுகூரப்படுகின்றார்கள். கார்த்திகை வீரர்கள் தினம் என அவர்களுடைய நினைவு பெரியளவில் அனுஷ்டிக்கப்படுகின்றது. அதனைத் தடைசெய்வதற்கு அரசாங்கம் என்றும் சிந்தித்ததில்லை.

ஜனநாயக முறைப்படி தெரிவு செய்யப்பட்ட அரசாங்கத்துக்கு எதிராக பாரிய ஆயுதப் போராட்டத்தை நடத்திய ஜே.வி.பி. தலைவர்களை நினைவுகூர முடியும் என்றால், விடுதலைப் புலிகளை நினைவுகூர்வதில் என்ன தவறிருக்கப்போகின்றது? இதற்குப் பதிலளிக்கக்கூடிய நிலையில் அரச தரப்பினர் இல்லை. இறந்தவர்களை நினைவுகூருவது நல்லிணக்கத்துக்குப் பாதகமானது என சிலர் கருத்துக்களை முன்வைக்கின்றார்கள். நினைவுகூர்தல் பாதிக்கப்பட்ட மக்களை ஆற்றுப்படுத்துவதில் முக்கிய பங்கை வகிக்கின்றது. நல்லிணக்கத்துக்கான பாதைகளில் அதுவும் ஒன்று. வெறுமனே இனவாதக் கண்ணோட்டத்துடனோ அல்லது, அரசாங்கத்தை நியாயப்படுத்துவதற்காகவோ கருத்துகளை வெளியிடுவதத் தவிர்த்து பரந்தளவு மக்களின் உணர்வுகளைப் புரிந்துகொண்டு செயற்பட வேண்டியது அவசியம். நினைகூருவதைத் தடைசெய்வதும் ஒருவகை அடக்குமுறைதான். அவ்வாறான அடக்குமுறையைச் செய்துகொண்டு நல்லிணக்கம் குறித்துப் பேசுவதில் அர்த்தமிருக்கப்போவதில்லை!

ஞாயிறு தினக்குரல் 2016-11-27

Sunday, November 20, 2016

பிக்குககள் விடயத்தில் ஜனாதிபதி உத்தரவு செயலுருப் பெறுமா?

நாட்டுக்குள் இனிமேல் இனவாதம் பேசும் அனைவருக்கும் எதிராக, தயவு தாட்சண்யமின்றி, இனமத பேதங்கள் பார்க்காமல் நடவடிக்கை எடுக்க பொலிஸ் மாஅதிபருக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உத்தரவிட்டிருக்கின்றார். சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கும் மட்டக்களப்பு மங்களாராம சுமனரத்தின தேரர் விவகாரம் தொடர்பாக தேசிய பாதுகாப்புச் சபையின் கூட்டத்தில் ஆராயப்பட்ட போதே ஜனாதிபதி இந்த உத்தரவைப் பிறப்பித்ததாகத் தெரிவிக்கப்படுகின்றது. நாட்டில் மீண்டும் இனவாதத்தைத் தூண்டிவிடும் வகையில் இடம்பெறும் செயற்பாடுகள் குறித்து இந்தக் கூட்டத்தில் பிரஸ்தாபிக்கப்பட்டது. இதன்போது அமைச்சர்கள், அதிகாரிகளின் கருத்துக்களைக் கேட்டறிந்த பின்னர் ஜனாதிபதி இந்த உத்தரவைப் பிறப்பித்ததார்.

மங்களாராம சுமனரத்தின தேரரின் செயற்பாடுகள் சிறுபான்மையின மக்களுக்கு பெருமளவுக்கு நம்பிக்கையீனத்தை ஏற்படுத்தியிருக்கின்றது. அவருக்கு எதிராக எவ்வித நடவடிக்கையையும் எடுப்பதற்கு அரசாங்கம் தயங்குவது இந்த நம்பிக்கையீனத்தை மேலும் அதிகரிக்கின்றது. இது தொடர்பில் சிறுபான்மையினக் கட்சிகளின் தலைவர்கள் ஏற்கனவே அதிருப்தியை வெளிப்படுத்தியிருக்கின்றார்கள். இனவாதம் பேசும் அனைவருக்கும் எதிராக தயவு தாட்சண்யமின்றி நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி தேசிய பாதுகாப்புச் சபையின் கூட்டத்தில் கடுமையாக உத்தரவிட்டிருக்கின்ற போதிலும், அரசாங்க இயந்திரங்கள் அதற்குத் தயாராக இருப்பதாகத் தெரியவில்லை.

இனவாதம் பேசி - வன்முறைகளுக்கு வித்திடும் சிங்கள - பௌத்த இனவாதிகளுக்கு எதிராகச் செயற்படுவதில் பாதுகாப்புத் தரப்பினர் எப்போதும் மெத்தனப் போக்கையே பின்பற்றிவருகின்றார்கள். ஒருவகையில் அரசின் கொள்கைகளில் ஒன்றாக இனவாதம் கருதப்படுவதும் அதற்கு ஒரு காரணம். அதனால், சிங்களத் தலைவர்களும், மதத் தலைவர்களும் இனவாதம் பேசுவதை வழமையான ஒன்றாகவே பாதுகாப்புத் தரப்பினர் எடுத்துக்கொள்கின்றார்கள். சுமனரத்தின தேரர் இனவாதம் பேசி, அரச அதிகாரிகளுக்கு எச்சரிக்கை விடுப்பதை வெறுமனே பார்வையாளர்களாக இருந்து ரசிக்க மட்டுமே பாதுகாப்புத் தரப்பினரால் முடிந்துள்ளது. அதனைத் தடுப்பதற்கோ இனிமேல் அவ்வாறான சம்பவங்கள் இடம்பெறாமலிருப்பதை உறுதிப்படுத்தவோ அவர்கள் எதனையும் செய்யமுனையவில்லை.

இலங்கையின் அரசியல் இனவாத அரசியலாகத்தான் இருக்கின்றது. அரசாங்க இயந்திரங்கள் அனைத்தும் அதற்குப் பழக்கப்பட்டுவிட்டன. அதிலிருந்து விலகிச் செல்வதற்குத் தயங்கும் நிலை இன்னும் தொடரத்தான் செய்கின்றது. மகிந்த ராஜபக்‌ஷவின் ஆட்சிக் காலத்தில் பொதுபல சேனா வளர்க்கப்பட்டது. அதன் தலைவர் ஞானசார தேரர் பௌத்த மக்கள் மத்தியில் கதாநாகனாக்கப்பட்டார். பௌத்த மதத்தின் காவலாகத் தன்னைக் காட்டிக்கொண்ட அவர், முஸ்லிம் மக்களை இலக்கு வைத்துச் செயற்பட்ட போது பாதுகாப்புத் தரப்பினர் மௌனமாகவே இருந்தார்கள். மதங்களுக்கு இடையில் நல்லிணக்கத்தைச் சிதைப்பதற்கு எதிராக என பொலிஸ் பிரிவு ஒன்று அமைக்கப்பட்டும் கூட எதுவும் நடந்துவிடவில்லை. அது வெறுமனே கண்காட்சிப் பிரிவாக மட்டுமே இருந்தது.

முன்னைய ஆட்சியின் நிலைதான் இப்போதும் எழுகிறதா என்ற கேள்வி தவிர்க்க முடியாத வகையில் எழுகின்றது. இனவாத கருத்துகளுக்கு எதிராக புதிய சட்டமூலத்தை உருவாக்குமாறு, பாதுகாப்புச் சபையின் கூட்டத்தில் கலந்துக்கொண்டிருந்த நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்‌ஷவுக்கு ஜனாதிபதி பணிப்புரை விடுத்திருந்தார். புதிய சட்டமூல வரைபு தயாராகி கொண்டு இருப்பதாகவும், அதுவரையில் இப்போது இருக்கும் குற்றவியல் தண்டனை கோவை சட்ட மூலத்தின் அடிப்படையில் ஓராண்டு சிறைத்தண்டனை வரை வழங்க முடியும் என நீதி அமைச்சர் அப்போது விளக்கமளித்தார். புதிய சட்டம் வரும்வரை காத்திருக்காமல், உடன் செயல்படும்படி, ஜனாதிபதி கூட்டத்தில் கலந்துக்கொண்டிருந்த பொலிஸ் மாஅதிபர் பூஜித ஜயசுந்தரவுக்கு உத்தரவு பிறப்பித்தார் எனவும் செய்திகள் வெளியாகியிருந்தது.

கைகளில் சட்டம் இருக்கின்றது. நீதி அமைச்சரே அதனை உறுதிப்படுத்தியுமிருக்கின்றார். இனவாதத்தைத் தூண்டுவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி கடுமையாக எச்சரித்தும் இருக்கின்றார். இது தொடர்பில் பொலிஸ் மா அதிபருக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த எச்சரிக்கைகள் - உத்தரவுகள் எழுத்திலும், பேச்சிலும் என்பதைத் தாண்டி செயலுருப் பெறுவதாகத் தெரியவில்லை. பௌத்த மதத்துக்கு முன்னுரிமை கொடுக்கும் அரசியலமைப்பைக் கொண்டிருக்கும் இலங்கையில், மங்களாராம சுமனரத்தின தேரர் போன்றவர்கள் தம்மை யாரும் கட்டுப்படுத்த முடியாது எனவும், அராங்கம் தன்னைப் பாதுகாக்கும் கடமைப்பாட்டைக் கொண்டுள்ளது எனவும் கருதுவதில் வியப்பில்லை. அதனால்தான் அவர்கள் சுதந்திரமாகச் செயற்படுகின்றார்கள்.

அவர்கள் சுதந்திரமாகச் செயற்படுவதில் ஆட்சேபனை இல்லை. அவர்களுடைய அந்த சுதந்திரம் சிறுபான்மையினரின் இருப்பையே கேள்விக்குறியாக்குவதாக இருக்கக்கூடாது என்பதுதான் முக்கியம். போர் முடிவுக்கு வந்து நல்லிணக்கம் ஏற்பட்டிருப்பதாக அரசாங்கம் சர்வதேச அரங்கில் பிரச்சாரம் செய்கின்றது. நல்லிணக்கம் என்ற பிரச்சாரத்தின் பின்னணியில் சிறுபான்மையினருக்கு எதிரான பாரிய மறைமுகத் தாக்குதல் ஒன்று இடம்பெறுவதைத்தான் அண்மைக்காலச் சம்பவங்கள் புலப்படுத்துகின்றன. புத்தர் சிலைகளை வைப்பது, திட்டமிட்ட முறையிலான சிங்களக் குடியேற்றங்கள் மூலமான ஆக்கிரமிப்பு! இவற்றின் தொடர்ச்சியாகத்தான் சுமனரத்தின தேரரின் விவகாரத்தையும் பார்க்க வேண்டியிருக்கின்றது. அவருக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்கு அரசாங்கம் தவறும் பட்சத்தில், நல்லிணக்கம், சக வாழ்வு தொடர்பாக அரசாங்கம் பேசிக்கொண்டிருப்பதில் அர்த்தமிருக்கப்போவதில்லை. இந்த இனவாதச் செயற்பாடுகளில் அரசும் ஒரு பங்காளி என்பதுதான் அதன் அர்த்தமாக இருக்க முடியும்!

ஞாயிறு தினக்குரல்: 2016-11-20

Wednesday, November 9, 2016

புத்தர் சிலைகள்: ஆக்கிரமிப்பின் சின்னங்களாக..!

அம்பாறை மாவட்டத்தில் தமிழ்ப் பேசும் மக்கள் செறிவாக வாழும் இறக்காமம் பகுதியில் மாணிக்கமடு கிராமத்தின் அருகே, மாயக்கல்லி மலை மீது அத்துமீறி வைக்கப்பட்டுள்ள புத்தர் சிலையை அகற்றுவதற்கு பௌத்த பிக்குகள் மறுப்புத் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து கடந்த சனிக்கிழமை அங்கு ஆரம்பமான பதற்ற நிலை இன்று வரை தொடர்ந்து கொண்டிருக்கின்றது. பாரம்பரியமாக அங்கு வசித்துவரும் தமிழ் மக்கள் தமது இருப்பு கேள்விக்குறியாகிடுவேமா என்ற அச்சத்துடன் உள்ளார்கள். பௌத்த மக்கள் எவரும் வசிக்காத அந்தப் பகுதியில் திடீரென புத்தர் சிலை கொண்டுவந்து வைக்கப்பட்டதன் உள்நோக்கம் புரிந்துகொள்ள முடியாத ஒன்றல்ல. பாதுகாப்புப் படையினரின் ஆதரவுடன் இவ்வாறு தமிழ், முஸ்லிம் பகுதிகளில் புத்தர் சிலை வைக்கப்படுவது இதுதான் முதல் தடவையுமல்ல. இனமுரண்பாட்டையும், நம்பிக்கையீனங்களையும் அதிகரிக்கும் இவ்வாறான சம்பவங்களை நல்லாட்சி அரசாங்கம் எதற்காக தொடர்ந்தும் அனுமதித்துக்கொண்டிருக்கின்றது?

புத்தரின் போதனைகளுக்கோ, அவரது சிந்தனைகளுக்கோ தமிழர்கள் எதிரானவர்களல்ல. அதேபோல புத்தரின் போதனைகளும் எந்த ஒரு இனத்தையோ மதப் பிரிவையோ இலக்காகக் கொண்டதுமல்ல. அனைத்து உயிரினங்களிடத்தும் அன்பு செலுத்த வேண்டும் என்பதுதான் புத்தரின் முதலாவது போதனை. ஆனால், புத்தர் சிலைகள் இலங்கையில் இப்போது சிங்கள - பௌத்த ஆக்கிரமிப்பின் சின்னங்களாகிவிட்டன. அதனால்தான் புத்தர் சிலைகள் வைக்கப்படுவது அச்சத்தையும் பதற்றத்தையும் ஏற்படுத்துகின்றது. புத்தர் சிலைகள் முதலில் வைக்கப்படும், அதனையடுத்து அந்த இடத்தில் பௌத்த ஆலயம் ஒன்று அமைக்கப்படும். அதனைப் பாதுகாக்க பிக்குகள் வருவார்கள். அவர்களின் பாதுகாப்புக்கு படையினர் வருவார்கள். இறுதியில் அது சிங்களக் குடியேற்றப் பகுதியாகிவிடும். இதுதான் இலங்கையில் நடைபெறுவது. இப்போது தமிழ், முஸ்லிம் மக்களுக்கு ஏற்பட்டுள்ள அச்சத்துக்குக் காரணமும் அதுதான்.

கடந்த சனிக்கிழமை திடீரென வந்த பௌத்த பிக்குகளைக் கொண்ட ஒரு குழுவினரால், தமிழ்க் கிராமமான மாணிக்கமடுவை அடுத்த மாயக்கல்லி மலை மீது புத்தர் சிலை ஒன்று நிறுவப்பட்டது. அந்தப் பகுதியில் பௌத்தர்கள் எவரும் வசிக்காத நிலையில் புத்தர் சிலை நிறுவப்பட்டமையானது அந்தப்பகுதியில் வாழும் தமிழ்ப் பேசும் மக்களிடையே அதிருப்தியையும் விசனத்தையும் ஏற்படுத்தியது. இப்போது அந்தப் பகுதியில் தியான மண்டபம் ஒன்றை அமைப்பதற்கு பிக்குகள் நிலம் கேட்டிருப்பதாகவும் தகவல் வெளியாகியிருக்கின்றது. இதுகுறித்து, அமைச்சர் ரவூப் ஹக்கீமுக்குத் தெரியப்படுத்தப்பட்டதுடன் அவர் அப்பகுதிக்கு வந்து பார்வையிட்டு, மக்களுடன் கலந்துரையாடியிருந்தார். இதனைத் தொடர்ந்து இந்த விவகாரம் தொடர்பாக, ஆராய்வதற்கு அம்பாறை மாவட்டச் செயலகத்தில் கூட்டம் ஒன்று நடத்தப்பட்டது. இது வரையில் இப்பிரச்சிக்கு சுமூகமான முறையில் தீர்வு ஒன்று காணப்படவில்லை.

திருகோணமலை மாவட்டத்தில் ஆத்திமோட்டை பகுதியில் சில வாரங்களுக்கு முன்னர் புத்தர் சிலை ஒன்று வைக்கப்பட்டது. அந்தப் பகுதியில் விகாரை ஒன்றை அமைப்பதற்கான முயற்சிகள் அதனையடுத்து முன்னெடுக்கப்பட்டது. குறிப்பிட்ட பகுதி தமிழ் மக்கள் இதனால் அச்சமடைந்த நிலையில் இருக்கின்றர்கள். அதனையடுத்து கிளிநொச்சி மற்றும் வன்னியின் சில பகுதிகளிலும் இவ்வாறு புத்தர் சிலைகள் அவசரம் அவசரமாகக் கொண்டுவந்து வைக்கப்பட்டன. இப்போது அம்பாறை, மாணிக்கமடு கிராமத்தில் புத்தர் சிலை வைக்கப்பட்டிருக்கின்றது. பௌத்த மக்கள் வசிக்கும் பகுதிகளில் புத்தர் சிலைகளை அமைப்பது ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒரு விடயம். அந்த மக்களின் வழிபாட்டுக்கு அது அவசியமும் கூட. ஆனால், பௌத்த மக்கள் இல்லாத பகுதிகளில் இவ்வாறு கடுமையான எதிர்ப்புக்களின் மத்தியில் புத்தர் சிலைகளைக் கொண்டுவந்துவைப்பது நிச்சயமாக ஆக்கிரமிப்பு நோக்கத்துடன்தான் என தமிழ் முஸ்லிம் மக்கள் கருதுவதில் நியாயமுள்ளது.

போர் முடிவுக்கு வந்துள்ள நிலையில் நல்லிணக்கத்துக்கான முயற்சிகள் முன்னெடுக்கப்படுவதாக அரசாங்கம் சொல்கின்றது. புத்தர் சிலைகளை வைத்து மற்றைய இனங்களின் மீது ஆக்கிரமிப்பைச் செய்துகொண்டிருக்கும் நிலையில் நல்லிணக்கம் குறித்து எப்படிப் பேச முடியும். தமிழ்ப் பகுதிகளில் "புத்தர் சிலைகளை நிறுவுவது" கூட ஒருவகையான யுத்தம்தான். இந்த யுத்தத்தை அரசாங்கம் சேரடியாக நடத்தாமலிருக்கலாம். பாதுகாப்புத் தரப்பின் ஒரு பகுதியினரும், மகாசங்கத்தினரும் இந்தப் "போரை" முன்னெடுப்பவர்களாக இருக்கலாம். ஆனால், இதனைக் கட்டுப்படுத்தக்கூடிய இயலுமை தமக்கு இல்லை என அரசாங்கம் சொல்லிவிட முடியாது. இதனைத் தூண்டி விடுவதற்கோ அல்லது இதனைக் கட்டுப்படுத்துவதற்கோ வேண்டிய வல்லமை அரசாங்கத்துக்கு நிச்சயமாக இருக்கின்றது. அதனைப் பயன்படுத்த அரசாங்கம் எதற்காக அஞ்சுகின்றது என்பதுதான் இன்று எழும் கேள்வி!

இலங்கை பல்லின சமூகத்தைக் கொண்டுள்ள ஒரு நாடாக இருந்தாலும் கூட, அரசியலமைப்பில்  பௌத்த மதத்துக்கே முன்னுரிமை கொடுக்கப்பட்டுள்ளது. மற்றைய மதங்கள் இரண்டாம் பட்சம்தான். அரசியலமைப்பின் 9 வது பிரிவில், "இலங்கை குடியரசில் பௌத்த மதத்திற்கு முதன்மை இடம் வழங்கப்படல் வேண்டும் என்பதோடு, பௌத்த சாசனத்தை பாதுகாத்தலும் பேணி வளர்த்தலும் அரசின் கடமையாக இருத்தல் வேண்டும்" எனக்கூறப்பட்டிருக்கின்றது. புதிதாக உருவாக்கப்படும் அரசியலமைப்பும் இதனையே பின்பற்றும் என எதிர்பார்க்கப்படுகின்றது. அதில் மாற்றங்களைக் கொண்டுவருவது தமக்கு ஆபத்தானதாகிவிடலாம் என்ற அச்சம் ஆட்சியாளர்களுக்குள்ளது. இலங்கை முழுவதையும் சிங்கள மயமாக்கும் இந்தத் திட்டத்துக்கு அரசியலமைப்பில் பௌத்த மதத்துக்குக் கொடுக்கப்பட்டிருக்கும் முதன்மை இடமும் கூட ஒரு காரணம். இந்த நிலைமையை மாற்றியமைப்பதற்கான துணிச்சல் அரசாங்கத்துக்கு வராத வரையில், புத்தர் சிலைகள் தமிழ்ப் பகுதிகளில் வைக்கப்படுவதையும், சிறுபான்மையினத்தவர்கள் அச்சத்துடன் வாழ்வதையும் முடிவுக்குக் கொண்டுவந்துவிட முடியாது!

-ஞாயிறு தினக்குரல்: 06-11-2016