Sunday, January 29, 2012

பேச்சுக்களில் முட்டுக்கட்டை நிலைமை முடிவுக்கு கொண்டுவர முடியாத டில்லி

இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா இலங்கைக்கு மேற்கொண்ட விஜயம் வெற்றிகரமானதாக அமைந்திருந்தது என இந்திய இராஜதந்தர வட்டாரங்கள் தெரிவிக்கின்ற போதிலும், ஈழத் தமிழர்களின் பிரச்சினைகளைப் பொறுத்தவரையில் இது எந்தவிதமான பலனையும் தராத ஒன்றாகவே முடிவடைந்திருக்கின்றது. இந்திய அமைச்சரின் விஜயத்தின் போது தமக்கு சார்பாக ஏதாவது நடைபெறும் என்பதை தமிழ் மக்கள் எதிர்பார்க்கவில்லையென்றாலும், 13 பிளஸ் என ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ உறுதியளித்ததாக இந்திய அமைச்சர் தெரிவித்தமை வெறுமனே இந்தியாவைத் திருப்திப்படுத்துவதற்கு மட்டும்தான் என்பது இப்போது தெளிவாகியிருக்கின்றது. ஊடகவியலாளர்கள் மத்தியில் அதனை அறிவித்து தமிழர்களைத் திருப்திப்படுத்த இந்தியா மேற்கொண்ட முயற்சிகளும் இப்போது தோல்வியடைந்திருக்கின்றது.

13 பிளஸ் என்பதற்கு கொழும்பு கொடுக்கும் புதுப்புது அர்த்தங்கள் கிருஷ்ணாவின் முகத்தில் கரியைப் பூசுவதைப் போல அமைந்திருந்தாலும் மௌனமாக இருப்பதைத் தவிர இந்தியாவுக்கு வேறு தெரிவுகள் இருக்கப்போவதில்லை!

புதுடில்லியை கொழும்பு ஏமாற்ற, தாம் ஏமாந்ததை மறைப்பதற்காக தமிழர்களை இந்தியா ஏமாற்றும் நிகழ்வுகள்தான் தொடர்கின்றன. இதனைத்தான் கிருஷ்ணாவின் விஜயத்தின் பின்னர் இடம்பெறும் நிகழ்வுகள் உணர்த்துகின்றன.

கிருஷ்ணாவின் விஜயம் இம்முறை முக்கியமாக எதிர்பார்க்கப்பட்டமைக்கு இரண்டு காரணங்கள் இருந்தன.

ஒன்று - தமிழ்த் தேசியக் கூட்டமைப்பக்கும் அரசாங்கத்துக்கும் இடையில் ஒரு வருடகாலமாக இடம்பெறும் பேச்சுக்களில் ஏற்பட்டுள்ள முட்டுக்கட்டை நிலையைத் தகர்த்து பேச்சுக்கள் ஆரோக்கியமான ஒரு பாதையில் செல்வதற்கு வேண்டிய அழுத்தங்களை கிருஷ்ணா கொடுப்பார் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்கள் எதிர்பார்த்தார்கள்.

இரண்டு - மார்ச் மாதத்தில் நடைபெறவிருக்கும் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் கூட்டத் தொடரில் இலங்கை நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ள நிலையில் கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை தொடர்பில் தன்னுடைய நிலைப்பாட்டை இந்தியா வெளிப்படுத்தும் என எதிர்பார்க்கப்பட்டிருந்தது.

இவ்வாறு தெரிவிக்கக்கூடிய கருத்துக்கள் மீள்இணக்கப்பாட்டை ஏற்படுத்துவதற்கும் உந்துசக்தியாக அமைந்திருக்கலாம்.

இருந்த போதிலும் இந்த இரு விடயங்களிலும் இந்தியா எதனையும் செய்யவில்லை. 13 ஆவது திருத்தத்துக்கு மேலாகச் செல்வதற்கு ஜனாதிபதி தயாராக இருக்கின்றார் என்ற தகவல் மட்டும் ஈழத் தமிழர்களயும், இந்தியாவிலுள்ள தமிழ்த் தேசியவாதிகளையும் திருப்திப்படுத்துவதற்குப் போதுமானது என அமைச்சர் கிருஷ்ணா கருதியிருக்கலாம். சர்வதேச அரங்கில் நெருக்கடிகளை எதிர்கொள்வதால் இந்தியாவை ஓரேயடியாகப் பறக்கணித்துச் செல்லக்கூடிய நிலையில் கொழும்பு இருக்கவில்லை என்பதையும் இந்தியா புரிந்துகொண்டே இருந்தது. அதனால், தமது அழுத்தங்களுக்குப் பணிய வேண்டிய நிலையில் கொழும்பு இருந்தது என்பதும் டில்லிக்குத் தெரியும். இருந்தபோதிலும், இதனை தமது நலன்களுக்கு மட்டும் பயன்படுத்திக்கொள்வதுதான் இந்தியாவின் நோக்கமாhக இருந்தது. கொழும்பில் இந்திய அமைச்சர் கைச்சாத்திட்ட உடன்படிக்கைகள் அதனைப் புலப்படுத்துகின்றன.

இந்தியாவைப் பொறுத்தவரையில் இலங்கைiயில் தன்னுடைய பிராந்திய மற்றும் பொருளாதார நலன்களை மட்டும் கருத்திற்கொண்டுதான் அது காய்களை நகர்த்துகின்றது. தமிழர்களின் நலன்கள் என்பது அதற்கு முக்கியமான ஒன்றல்ல. தனது நலன்களுக்காக கொழும்பைப் பாதுகாக்க வேண்டிய தேவையும் அதற்குள்ளது. கிருஷ்ணாவின் விஜயமும் அந்த வகையில்தான் அமைந்திருந்தது. அதாவது, இலங்கையில் தன்னுடைய நலன்களைப் பேணிக்கொள்வதும், அதனை அதிகரிப்பதும்தான் இந்த விஜயத்தின் உண்மையான நோக்கம்!

அதற்காகத்தான் - நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையைப் புகழ வேண்டிய தேவை கிருஷ்ணாவுக்கு ஏற்பட்டது.

அதற்காகத்தான் - பாராளுமன்றத் தெரிவுக்குழுவுக்கு தமிழத் தேசியக் கூட்டமைப்பு செல்ல வேண்டும் என்பதை கிருஷ்ணா வலியுறுத்தினார்.

இந்த இரண்டு விடயங்களிலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முரண்படுகின்றது. கிருஷ்ணா கொழும்பு வருவதற்கு சில தினங்களுக்கு முன்னர்தான் நல்லிணக்க ஆணைக்குழுவுவின் அறிக்கைக்கான தனது பிரதிபலிப்பை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வெளியிட்டிருந்தது. அதேபோல பாராளுமன்றத் தெரிவுக்குழு தொடர்பான தமது நிலைப்பாட்டையும் கூட்டமைப்பு தெளிவாக வெளிப்படுத்தியிருந்தது. இந்தநிலையில், கூட்டமைப்பு தமிழ் மக்களின் உணர்வுகளைப் பிரதிபலிக்க முற்படுகின்றதாயின், கொழும்பின் உணர்வுகளைப் பிரதிபலிப்பதாகவே கிருஷ்ணாவின் கருத்துக்கள் அமைந்திருக்கின்றன.

 இந்தியாவின் முன்னாள் பிரதிப் பாதுகாப்பு ஆலோசகர் சதீ;ஸ் சந்திரா தெரிவித்திருக்கும் கருததுக்கள் இந்த இடத்தில் கவனிக்கத்தக்கவை. ரெடீப்.கொம் என்ற இணையத்தளத்தில் அவர் எழுதியிருக்கும் கட்டுரை ஒன்றில் 'நல்லிணக்க ஆணைக்குழுவை கிருஷ்ணா புகழ்ந்துரைத்திருப்பது நோர்மையான தரகர் என்ற பார்வையில் தமிழர்கள் கொண்டிருந்த நம்பிக்கையை குறைப்பதாகவே உள்ளது" எனக் குறிப்பிட்டிருக்கின்றார்.

தமிழர்களுக்கு ஏதாவது ஒரு மீளிணக்கத்தை ஏற்படுத்துவதில் நல்லிணக்க ஆணைக்குழு தவறியிருக்கின்றது. அதேவேளையில், அதிகாரப் பரவலாக்கல் தொடர்பிலும் இக்குழுவின் அறிக்கை தெளிவற்றதாகவே உள்ளது. இந்த நிலையில்தான் இதனை தமிழத் தேசியக் கூட்டமைப்பு கடுமையாக விமர்சித்திருந்தது. ஆனால், இதனை இந்தியா வரவேற்றிருப்பது இந்தியா நடுநிலையான ஒரு மத்தியஸ்த்தராகச் செயற்படும் என்ற நம்பிக்கையைச் சிதைப்பதாகவே அமைந்திருக்கின்றது.

இந்தப் பின்னணியில்தான் கடந்த வாரம் யாழ்ப்பாணம் சென்றிருந்த அமெரிக்க இராஜதந்திரி ஒருவருடனான பேச்சுக்களின் போது, சமாதானப் பேச்சுக்களுக்கு மூன்றாவது தரப்பு மத்தியஸ்த்தம் தேவை என்பதை வலியுறுத்திய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்கள், அமெரிக்காவோ ஐ.நா.வோ அல்லது ஐரோப்பிய யூனியனோ இவ்வாறான மத்தியஸ்த்;தத்தை வழங்கலாம் எனக் குறிப்பிட்டிருந்தார்கள். கூட்டமைப்பின் தலைமை இந்தியா மீதான நம்பிக்கையைத் தொடர்ந்தும் பேணிவருகின்ற போதிலும், பெரும்பாலானவர்கள் அந்த நம்பிக்கையை இழந்திருக்கின்றார்கள் என்பதை அறிய முடிகின்றது. குறிப்பாக பாராளுமன்றத் தெரிவுக்குழுவில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பங்குபற்ற வேண்டும் என கிருஷ்ணா தெரிவித்திருப்பதையிட்டு கூட்டமைப்பின் ஒரு தரப்பினர் கடுமையாக அதிருப்தியடைந்திருக்கின்றார்கள்.


அதேவேளையில் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையை இந்தியா புகழ்ந்திருப்பதில் மற்றொரு பக்கமும் உள்ளது. அதாவது சர்வதேச ரீதியாக உருவாகியிருக்கும் போர்க்குற்றம் தொடர்பான நெருக்கடிகளிலிருந்து மீள்வதற்காக கொழும்பு மேற்கொள்ளும் பிரயத்தனங்களுடன் தமக்குள்ள நெருக்கத்தை அல்லது உடன்பாட்டை இதன் மூலம் புதுடில்லி புலப்படுத்தியிருக்கின்றது.

இரண்டாவதாக 13 ஆவது திருத்தத்துக்கு மேலாகச் செல்வதற்கு ஜனாதிபதி தயாராக இருப்பதாக பகிரங்கமாக அறிவித்தன் மூலமாக நல்லிணக்க முயற்சி தொடர்பில் மகிந்தவுக்கு சான்றிதழ் கொடுத்திருக்கும் கிருஷ்ணா, காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்களை வழங்க முடியாது என்ற அரசின் பிடிவாதம் தொடர்பாக எதனையும் வெளிப்படுத்தவில்லை. அத்துடன் அரச தரப்புடன் நடந்த பேச்சுக்களின் போது இந்த அதிகாரங்கள் கொடுக்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தவும் இந்தியா தவறியிருந்தது. காணி, பொலிஸ் அதிகாரங்கள் இல்லாமல் 13 பிளஸ் என்று எவ்வாறு கூறமுடியும் என்பது இந்தியாவுக்குத் தெரியாததல்ல!

ஆக, இந்தியா இரண்டு விடயங்களில் தெளிவாக உள்ளது. ஒன்று - கொழும்பைப் பாதுகாத்தல். இரண்டு - தமிழர்களை ஏமாற்றுதல்.

இந்தநிலையில், அரசுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையிலான பேச்சுக்களில் உருவாகியிருக்கும் முட்டுக்கட்டை நிலையையும் இந்தியாவினால் முடிவுக்குக் கொண்டுவர முடியவில்லை. இந்திய வெளிவிவகார அமைச்சர் கொழும்பில் தங்கியிருந்த காலத்தில்தான் கூட்டமைப்புடனான பேச்சுக்களை தொடர்ந்து மூன்று நாட்களாக அரசு பறக்கணித்தது. இதிலுள்ள செய்தி தெளிவானது: 'இந்தியாவின் விருப்பங்களுக்காக நாம் பேசப்போவதுமில்லை. இந்தியாவால் எம்மை எதுவும் செய்யவும் முடியாது" என்பதுதான் அந்தச் செய்தி!

பிரச்சினையைப் பயன்படுத்தி இலங்கையில் தன்னுடைய பொருளாதார மற்றும் கேந்திர ரீதியான நலன்களைப் பேணிக்கொள்வது மட்டும்தான் இந்தியாவின் நோக்கமாக இருந்துள்ளது. இனநெருக்கடி விஷயத்தில் அழுத்தம் கொடுக்கப்போனால் தமது பொருளாதார நலன்களும் பாதிக்கப்படலாம் என்பதால் அதனையிட்டு பெயரளவுக்குச் சொல்லிக்கொள்வதுடன் இந்தியா நிறுத்திக்கொள்கின்றது.  தமிழக உணர்வுகளைத் திருப்திப்படுத்த டில்லிக்கு அது போதுமானதாகவே இருக்கின்றது.

இதனைப் பரிந்துகொண்டும் இந்தியாவிடம் முறையிடுவதற்காக அடுத்த மாதம் புதுடில்லி செல்வதற்கு கூட்டமைப்பு தயாராகிவருவது ஏன் என்பதுதான் புரியவில்லை!

Saturday, January 21, 2012

ஜனாதிபதி மகிந்த '13 பிளஸ்' என சொன்னது யாரைத் திருப்திப்படுத்த?

அரசியலமைப்புக்கான 13 வது திருத்தத்துக்கும் மேலாகச் சென்று அதிகாரப் பரவலாக்கலின் மூலமாக இனப்பிரச்சினைக்குத் தீர்வு காணப்போவதாக ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ஷ மீண்டும் ஒருமுறை வாக்குறுதியளித்துள்ளார். ஜனாதிபதி இவ்வாறு கூறுவது இதுதான் முதன்முறையல்ல. புதுடில்லிக்கு மேற்கொள்ளும் விஜயங்களின்போது இவ்வாறான வாக்குறுதிகளை வழங்குவதை அவர் வழமையாகவே கொண்டிருந்தார். இந்தியாவைத் திருப்திப்படுத்துவதற்கு இவ்வாறான வாக்குறுதிகளை வழங்குவது அவருக்கு அவசியமானதாக இருந்தது. இப்போதும் இலங்கைக்கான விஜயத்தை மேற்கொண்டிருந்த இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்எம்.கிருஷ்ணாவுடன் பேச்சுக்களை நடத்திய போதுதான் இந்த வாக்குறுதியை அவர் வழங்கியிருந்தார்.

'13 பிளஸ்' என ஜனாதிபதி சொல்வது வழமையானதாக இருந்துள்ள போதிலும்கூட, இப்போது அவர் இதனைத் தெரிவித்திருப்பது முக்கியத்துவம் பெறுவதற்கு சில காரணங்கள் உள்ளன. குறிப்பாக காணி, பொலிஸ் அதிகாரங்களைத் தரமுடியாது என்பதுதான் அரசாங்கத்தினதும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ஷவினதும் நிலைப்பாடாக இப்போது வெளியிடப்பட்டுவருகின்றது. பொலிஸ் அதிகாரங்களைக் கொடுத்தால் நாளை வடபகுதிக்குச் செல்லும்போது தமிழ்ப் பொலிஸார் தன்னைக் கூட கைது செய்துவிடலாம் என மகிந்த ராஜபக்‌ஷ கூறியதை யாரும் மறந்திருக்க மாட்டார்கள். வரவு செலவுத் திட்ட விவாதத்தை முடித்துவைத்து உரையாற்றிய போதும் டிசெம்பர் மாதத்தில் இதனைத்தான் ஜனாதிபதி கூறியிருந்தார்.

அரசாங்கத்துக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையில் கடந்த ஒரு வருடகாலமாக நடைபெறும் பேச்சுவார்த்தைகளிலும் இறுதியில் நெருக்கடியை ஏற்படுத்துவதாக இந்தப் பிரச்சினையே இருந்தது. அதாவது 13 திருதத்தின் அடிப்படையில் காணி, பொலிஸ் அதிகாரங்கள் மாகாண சபைகளுக்கு முழுமையாக வழங்கப்பட வேண்டும் என்பதே கூட்டமைப்பின் பிரதான கோரிக்கையாக இருக்கின்றது. காணி, பொலிஸ் அதிகாரங்கள் என்பன தமிழர்களின் கோரிக்கைகளில் அடிப்படையானவையாக இருந்தமையால், அவற்றைவிட்டுக்கொடுக்க தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தயாராகவிருக்கவில்லை. அவற்றை விட்டுக்கொடுப்பது என்பது கூட்டமைப்பின் ஆதரவுத் தளத்தையும் ஆட்டங்காணச் செய்துவிடும்.

மறுபுறத்தில் மாகாண சபைகளுக்கு காணி, பொலிஸ் அதிகாரங்களைக் கொடுக்க முடியாது என்பதில் அரச தரப்பு உறுதியாக இருந்தது. இனவாதக் கட்சிகளும் இவ்விடயத்தில் அரசுக்கு ஊக்கம் கொடுத்தன. இது அரசு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆகிய இரு தரப்பினருக்கும் இடையில் ஒரு பாரிய இடைவெளியை ஏற்படுத்தியிருந்தது. இந்தப் பின்னணியில்தான் 13 பிளஸ் என ஜனாதிபதி கூறியிருப்பதாக வெளியான செய்தி தொடர்பில் அனைத்துத் தரப்பினரது கவனமும் திரும்பியிருந்தது. காணி, பொலிஸ் அதிகாரங்களைத் தவிர்த்துவிட்டு 13 பிளஸ் எனக் கூறுவதில் அர்த்தமிருக்க முடியாது.

எதற்காகச் சொன்னாரோ தெரியவில்லை, 13 பிளஸ் என ஜனாதிபதி சொல்லிவிட்ட நிலையில், அமைச்சர்களுக்குப் புதிய பிரச்சினை ஏற்பட்டிருக்கின்றது. அதனை மறுக்கவும் முடியாது. அதனை அதற்குரிய அர்த்த்தில் ஏற்கவும் முடியாது. அதனால், அதற்கு புதுப்புது அர்த்தங்களைத் தேடுவதில்தான் ஆளும் கட்சிப் பிரமுகர்களின் கவனம் இப்போது திரும்பியுள்ளது.

அமைச்சரவைப் பேச்சாளராக கெஹலிய ரம்புக்வெல 13 க்கு மேலாக செனட்ட சபையைத் தரப்போவதாகக் கூறியிருக்கின்றார். ரம்புக்வெலவின் அர்த்தத்தில் 13 பிளஸ் என்பது செனட் சபைதான். செனட் சபை என்ற யோசளை புதிதான ஒன்றல்ல. கடந்த 2011 மார்ச் மாதத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தன்னுடைய யோசனைளை அரசுக்கு முன்வைத்திருந்தது. இதற்கு ஆகஸ்ட் மாதம் வரையில் பதிலளிக்காத அரச தரப்பு இந்தக் காலப்பகுதியில் செனட் சபையை அமைக்கும் யோசனை ஒன்றை முன்வைத்திருந்தது. இருந்தபோதிலும் அந்த யோசனை தெளிவானதாக இருக்கவில்லை. ஆக, இது புதிதல்ல. பழைய யோசனைகள் சிலவற்றை தூசிதட்டி புதிது போல வெளியிடுவதை அரசு வழமையாகவே கொண்டுள்ளது.

இந்திய வெளிவிவகார அமைச்சர் தனது இந்த விஜயத்தின்போது சில விடயங்களை சற்று கடும் தொனியிலேயே தெரிவித்திருந்தார் என்பது உண்மைதான். குறிப்பாக 13 வது திருத்தத்தின் அடிப்படையில் தமிழ் மக்களின் அபிலாஷைகளை நிறைவேற்றக்கூடிய வகையிலான அரசியல் தீர்வு "மிகவும் அவசியம்" என அவர் அழுத்திக் கூறியிருந்தார். 13 பிளஸ் பிளஸ் என மகிந்த ராஜபக்‌ஷ பல சந்தர்ப்பங்களில் இந்தியாவில் வைத்துத் தெரிவித்திருந்தமையையும் ஜனாதிபதியுடனான பேச்சுக்களின் போது இந்திய அமைச்சர் நினைவூட்டியிருந்தார்.

இந்த நிலையில் அதனை எற்றுக்கொள்வதைவிட ஜனாதிபதிக்கு வேறு தெரிவுகள் இருக்கவில்லை. 13 பிளசுக்கு ஜனாதிபதி தயாராக இருக்கின்றார் என்ற தகவல்கூட அரச தரப்பிலிருந்து வெளிவரவில்லை. இந்திய வெளிவிவகார அமைச்சர்தான் இதனை ஊடகவியலாளர் மாநாட்டில் வைத்து அறிவித்தார். இதனை அரச தரப்பு மறுக்காத அதேவேளையில் உறுதிப்படுத்தவும் இல்லை.

அதிகாரப் பரவலாக்கல் என்பது சாச்சைக்குரிய ஒன்றாக இருக்கும் நிலையில் 13 பிளஸ் என்பதன் மூலம் ஜனாதிபதி எதனை அர்த்தப்படுத்தியிருக்கின்றார் என்பது பிரதான கேள்வியாக இருக்கின்றது. இந்தக்குழப்பத்தைத் தீர்க்க வேண்டிய அரச தரப்பு குழப்பத்தை மேலும் அதிகரிக்கும் வகையிலேயே கருத்துக்களை வெளியிட்டுவருகின்றது. இது தொடர்பில் சிரேஷ்ட அமைச்சர்கள் சிலர் ஜனாதிபதியுடன் பேசிய போது, "அந்த அர்த்தத்தில் நான் அதைச் சொல்லவில்லை" என ஜனாதிபதி கூறியதாகத் தெரிகின்றது. ஆக, கிருஷ்ணா சொன்னதை கொழும்பு உறுதிப்படுத்தப்போவதில்லை என்பது மட்டும் தெளிவாகத் தெரிகின்றது. அதேவேளையில், இந்தியாவின் தேவை இருப்பதால் அதனை மறுக்கவும் கொழும்பு முன்வரப்போவதில்லை.

பெப்ரவரி இறுதிப்பகுதியில் ஜெனிவாவில் ஆரம்பமாகவிருக்கும் மனித உரிமைகள் பேரவையின் 19 வது கூட்டத் தொடரில் இலங்கை பெரும் நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது. அமெரிக்கா, பிரித்தானியா மற்றும் கனடா போன்றன இலங்கைக்கு எதிராக உள்ளமையை கடந்த வாரத்தில் அந்த நாடுகளால் வெளியிடப்பட்ட அறிக்கைகள் புலப்படுத்தியிருந்தன. சீனாவை மட்டும் நம்பி இந்தப் பிரச்சினையிலிருந்து மீளமுடியாது என்பது கொழும்புக்குத் தெரியும். ஏனெனில் ஆசியாவில் சீனா வகுக்கும் வியூகத்துக்கு எதிரான அணுகுமுறையைத்தான் அமெரிக்காவும் ஏனைய மேற்கு நாடுகளும் கொண்டுள்ளன. இந்த நெருக்கடியிலிருந்து மீள்வதற்கு இலங்கைக்கு இன்றிருக்கக்கூடிய ஒரே நம்பிக்கை இந்தியாதான். இந்தியாவும் தன்னைக்கைவிட்டுவிடுமா என்ற ஒரு அச்சம் கொழும்பிடம் உள்ளது.

இந்த அச்சத்தைப் பயன்படுத்திக்கொண்டுதான் இந்தியா தன்னுடைய காய்களை நகர்த்துகின்றது. அதாவது, இலங்கை மீது அழுத்தங்களைப் பிரயோகிப்பதற்கு இந்தியாவுக்குக் கிடைத்துள்ள ஒரு பிடி இதுதான். இதனைப் பயன்படுத்தி இந்தியா இலங்கையில் எதனைச் சாதிக்க முற்படுகின்றது என்பதைப் பார்ப்போம். இந்தியாவைப் பொறுத்தவரையில் அதன் நலன்கள்தான் அதற்கு முக்கியமானவை. அதற்காக இலங்கைத் தமிழர்களின் நலன்களை காலில் போட்'டு மிதிக்கவும் இந்தியா தயங்காது என்பது கடந்த மூன்று தசாப்த கால வரலாறு.

ஈழத் தமிழர்களின் நலன்களை வெறுமனே ரயில்வே பாதை அமைப்பதன் மூலமாகவும், சைக்கிளைக் கொடுப்பதன் மூலமாகவும் மட்டும் பாதுகாக்க முடியாது. அரசியல் அதிகாரத்தைப் பெற்றுக்கொள்வதுதன் ஈழத் தமிழரின் தேவை. ஆனால், அதற்காக எவ்தவிதமான ஆக்கபூர்வமான செயற்பாட்டையும் முன்னெடுக்கா இந்தியா, இலங்கையில் தனது நலன்களை இந்தியா பேணிக்கொள்வதற்கான காய்நகர்த்தல்களைத்தான் மேற்கொள்கின்றது. சம்பூர் அனல் மின்சாரம், திருமலை எண்ணெய்க்குதம், காங்கேசன்துறை துறைமுகம், எரிபொருள் நிநியோகம் என தமது பொருளாதார பாதுகாப்பு நலன்களை இலங்கையில் உறுதிப்படுத்தியுள்ளது. இந்தியாவின் நலன்களைக் கவனித்தால் ஈழத் தமிழர்களைப் பற்றி இந்தியா கவலைப்படாது என்பது மகிந்தவுக்குத் தெரியும்.

அதனால்தான் கிருஷ்ணா சொன்ன அனைத்துக்கும் மகிந்த தலையாட்டியிருக்கின்றார். ஆனால் ஒரு இடத்தில் மட்டும் மகிந்த பொறி வைத்திருக்கின்றார். அதாவது - "பாராளுமன்றத் தெரிவுக்குழுவின் மூலமாக தீர்வு முன்னெடுக்கப்படும். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அதில் பங்குகொள்ள வேண்டும்" என்பதுதான் மகிந்த வைத்துள்ள பொறி! பாராளுமன்றத் தெரிவுக்குழுவில் பங்குகொள்ளுமாறு கூட்டமைப்பினருக்கு இந்தியா அடுத்ததாக ஆலோசனை வழங்கும்.

13 பிளஸ் என மகிந்த கூறினாலும் அது பாராளுமன்றத் தெரிவுக்குழுவுக்குள்ளால் வரும் போது பல மாதங்கள் சென்றுவிடும். அத்துடன் சிங்கள இனவாதக் கட்சிகளும் அங்கு காத்துக்கொண்டிருக்கின்றன. இந்த நிலையில் 13 பிளஸ் என்பது நிராகரிக்கப்பட்டதொன்றாகிவிடலாம். அப்போது பாராளுமன்றத் தெரிவுக்குழு 13 பிளஸை ஏற்கவில்லை என மகிந்த  கூறலாம். அந்த நேரத்தில் ஜெனிவாவில் மனித உரிமைகள் கூட்டத் தொடர் முடிவடைந்திருக்கும்.

இந்திய இராஜதந்திரிகள் திறமையானவர்கள்தான். ஏனென்றால் அவர்கள் கொழும்பிடம்தான் பாடம் படிக்கின்றார்கள்!

Wednesday, January 18, 2012

13 ஆவது திருத்தமும் இந்தியாவுக்கு மகிந்த கொடுத்த வாக்குறுதியும்

செய்திகளைப் படிக்கும்போது அரசியலில் உண்மையில் என்ன நடைபெறுகின்றது என்பதைப் புரிந்துகொள்ளவே கஷ்டமாகத்தான் இருக்கின்றது!

காணி, பொலிஸ் அதிகாரங்களைத் தரமுடியாது என்பதுதான் அரசாங்கத்தினதும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ஷவினதும் நிலைப்பாடாக நேற்று வரை இருந்தது. பொலிஸ் அதிகாரங்களைக் கொடுத்தால் நாளை வடபகுதிக்குச் செல்லும்போது தமிழ்ப் பொலிஸார் தன்னைக் கூட கைது செய்துவிடலாம் என மகிந்த ராஜபக்‌ஷ கூறியதை யாரும் மறந்திருக்க மாட்டார்கள்.

வரவு செலவுத் திட்ட விவாதத்தை முடித்துவைத்து உரையாற்றிய போதும் டிசெம்பர் மாதத்தில் இதனைத்தான் ஜனாதிபதி கூறியிருந்தார்.

அரசாங்கத்துக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையில் கடந்த ஒரு வருட காலமாக நடைபெறும் பேச்சுவார்த்தைகளிலும் இறுதியில் நெருக்கடியை ஏற்படுத்துவதாக இந்தப் பிரச்சினையே இருந்தது.

காணி, பொலிஸ் அதிகாரங்கள் என்பன தமிழர்களின் கோரிக்கைகளில் அடிப்படையானவையாக இருந்தமையால், அவற்றைவிட்டுக்கொடுக்க தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தயாராகவிருக்கவில்லை.

மறுபுறத்தில் மாகாண சபைகளுக்கு காணி, பொலிஸ் அதிகாரங்களைக் கொடுக்க முடியாது என்பதில் அரச தரப்பு உறுதியாக இருந்தது. இனவாதக் கட்சிகளும் இவ்விடயத்தில் அரசுக்கு ஊக்கம் கொடுத்தன.

இந்தப் பின்னணியில்தான் பேச்சுக்களை மேலும் முன்னெடுக்க முடியாத ஒரு நிலை உருவாகியிருந்தது.

குறிப்பிட்ட இந்த அதிகாரங்களைக் கோருவதே தேசத்துரோகம் என்பது போல அமைச்சர்களும், இனவாதக் கட்சிகளின் தலைவர்களும் கருத்துக்களை வெளியிட்டு வந்தார்கள்.

இந்த நிலையில் ஒரு திருப்பத்தை ஏற்படுத்துவதாகவே ஜனாதிபதியின் பிந்திய அறிவிப்பு உள்ளது.

அதாவது அரசியலமைப்புக்கான 13 வது திருத்தத்துக்கும் மேலாகச் சென்று (அதாவது 13 பிளஸ்) அதிகாரப்பரவலாக்கலை வழங்குவதற்கு தாம் தயாராக இருப்பதாக ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ஷ இலங்கைக்கான விஜயத்தை மேற்கொண்டுள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணாவிடம் உறுதியளித்திருக்கின்றார். செவ்வாய்கிழமை நடத்திய ஊடகவியலாளர் மாநாட்டில் இதனை இந்திய அமைச்சர் பகிரங்கமாக அறிவித்தார்.

காணி, பொலிஸ் அதிகாரங்களைத் தவிர்த்துவிட்டு 13 பிளஸ், பிளஸ் எனக் கூறமுடியாது என்பது அனைவருக்கும் தெரியும்!

இந்திய வெளிவிவகார அமைச்சர் தனது இந்த விஜயத்தின்போது சில விடயங்களை சற்று கடும் தொனியிலேயே தெரிவித்திருந்தார். குறிப்பாக 13 வது திருத்தத்தின் அடிப்படையில் தமிழ் மக்களின் அபிலாஷைகளை நிறைவேற்றக்கூடிய வகையிலான அரசியல் தீர்வு "மிகவும் அவசியம்" என அவர் அழுத்திக் கூறியதாக இராஜதந்திரத் தகவல்கள் உறுதிப்படுத்துகின்றன. 13 பிளஸ் பிளஸ் என மகிந்த ராஜபக்‌ஷ பல சந்தர்ப்பங்களில் இந்தியாவில் வைத்துத் தெரிவித்திருந்தமையையும் இந்திய அமைச்சர் நினைவூட்டியிருந்தார்.

இந்த நிலையில் அதனை எற்றுக்கொள்வதைவிட ஜனாதிபதிக்கு வேறு தெரிவுகள் இருக்கவில்லை. 13 பிளசுக்கு ஜனாதிபதி தயாராக இருக்கின்றார் என்ற தகவல்கூட அரச தரப்பிலிருந்து வெளிவரவில்லை. இந்திய வெளிவிவகார அமைச்சர்தான் இதனை ஊடகவியலாளர் மாநாட்டில் வைத்து அறிவித்தார்.

இதேதினத்தில் நடைபெற்ற மற்றொரு நிகழ்வு மகிந்த அரசாங்கத்தின் இந்த பற்றுறுதியைக் கேள்விக்குறியாக்கியிருக்கின்றது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடனான பேச்சுக்களுக்கு நேரம் குறிப்பிட்டிருந்தபோதிலும் அரசு தரப்பு பிரதிநிதிகள் யாரும் அங்கு வரவில்லை. கூட்டமைப்பினர் காத்துக்கொண்டிருந்துவிட்டு ஏமாற்றத்துடன் திரும்பினார்கள்.

அரசாங்கத்தின் இந்த செயற்பாட்டுக்கு மூன்று காரணங்கள் கூறப்படுகின்றன.

1. கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையை நிராகரித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வெளியிட்ட 115 பக்க அறிக்கை அரசாங்கத்துக்குப் பெரும் நெருக்கடியைக் கொடுத்திருக்கின்றது. இந்த அறிக்கை சர்வதேச ரீதியாகப் பெரும் அவதானத்தைப் பெற்றுக்கொண்ட அதேவேளையில் கொழும்புக்கு அது பெரும் சீற்றத்தைக் கொடுத்திருந்தது. இதற்குப் பழிவாங்கும் வகையிலேயே செவ்வாய்கிழமைப் பேச்சுக்களை அரசு தவிர்த்துக்கொண்டது.

2. பாராளுமன்றத் தெரிவுக்குழுவுக்கான தமது பிரதிநிதிகளின் பெயர்களைப் பிரேரிக்குமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு அரசு அழுத்தம் கொடுத்துவருகின்றது. அவ்வாறு பெயர்களைப் பிரேரிக்காவிட்டால் கூட்டமைப்புடனான பேச்சுக்களில் தாம் பங்குகொள்ளப்போவதில்லை என்பதை உணர்த்துவதற்கும் இந்தப் பேச்சுக்களை அரச தரப்பு தவிர்த்திருக்கலாம்.

3.
இதனைவிட 13 வது அரசியலமைப்பை முழுமையாக ஏற்றுக்கொள்வதாக ஜனாதிபதி இந்தியாவிடம் தெரிவித்திருப்பதால் சிங்களக் கடும்போக்களாளர்கள் மத்தியில் உருவாகியிருக்கக்கூடிய உணர்வுக்கொந்தளிப்பைத் தளர்த்த வேண்டிய அவசியம் ஒன்றும் அரசுக்கு இருந்தது.

அதேவேளையில் இனநெருக்கடிக்குத் தீர்வைக் காண்பதில் ஜனாதிபதி வெளிப்படுத்திய பற்றுறுதியை கூட்டமைப்புடனான பேச்சுக்களை முன்னறிவிப்பு இல்லாமல் தவிர்த்துக்கொண்ட இச்சம்பவம் கேள்விக்குறியாக்குவதாக அமைந்திருக்கின்றது என்பது உண்மை.

பெப்ரவரி இறுதிப்பகுதியில் ஜெனிவாவில் ஆரம்பமாகவிருக்கும் மனித உரிமைகள் பேரவையின் 19 வது கூட்டத் தொடரில் இலங்கை பெரும் நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது. அமெரிக்கா, பிரித்தானியா மற்றும் கனடா போன்றன இலங்கைக்கு எதிராக உள்ளமையை கடந்த வாரத்தில் அந்த நாடுகளால் வெளியிடப்பட்ட அறிக்கைகள் புலப்படுத்தியிருந்தன. இந்த நெருக்கடியிலிருந்து மீள்வதற்கு இலங்கைக்கு இன்றிருக்கக்கூடிய ஒரே நம்பிக்கை இந்தியாதான்!

அதனால்தான் கிருஷ்ணா சொன்ன அனைத்துக்கும் மகிந்த தலையாட்டியிருக்கின்றார். ஆனால் ஒரு இடத்தில் மட்டும் மகிந்த பொறி வைத்திருக்கின்றார். அதாவது - "பாராளுமன்றத் தெரிவுக்குழுவின் மூலமாக தீர்வு முன்னெடுக்கப்படும். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அதில் பங்குகொள்ள வேண்டும்."

ஆக, பாராளுமன்றத் தெரிவுக்குழுவில் பங்குகொள்ளுமாறு கூட்டமைப்பினருக்கு இந்தியா அடுத்ததாக ஆலோசனை வழங்கலாம். கூட்டமைப்பினரும் அதனை ஏற்றுக்கொள்ளலாம்.

இதில் கவனிக்க வேண்டிய முக்கிய விடயம் ஒன்றுள்ளது-

அதாவது, 13 பிளஸ் என மகிந்த கூறினாலும் அது பாராளுமன்றத் தெரிவுக்குழுவுக்குள்ளால் வரும் போது பல மாதங்கள் சென்றுவிடும். அத்துடன் சிங்கள இனவாதக் கட்சிகளும் அங்கு காத்துக்கொண்டிருக்கின்றன. அப்போது பாராளுமன்றத் தெரிவுக்குழு 13 பிளஸை ஏற்கவில்லை என மகிந்த  கூறலாம். அந்த நேரத்தில் ஜெனிவாவில் மனித உரிமைகள் கூட்டத் தொடர் முடிவடைந்திருக்கும்.

இந்திய இராஜதந்திரிகள் திறமையானவர்கள்தான்! ஆனால் கொழும்பிடம்தான் அவர்கள் தொடர்ந்தும் பாடம் படிக்கின்றார்கள்!!

Tuesday, January 17, 2012

கூட்டமைப்பின் கோரிக்கைகளும் மகிந்த வழங்கிய பொங்கலும்

"இலங்கையின் இனப் பிரச்சினை விவகாரத்தில் இந்தியா தலையிட்டு, முக்கிய பாத்திரம் ஒன்றை ஏற்று பேச்சுக்களை சரியான பாதையில் கொண்டு செல்வதற்கான செயற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும்" என இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணாவிடம் வலியுறுத்திய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, "இல்லையெனில் பேச்சுவார்த்தைகளைத் தொடர்ந்தும் நடத்த முடியாத நிலை ஏற்படும்" எனவும் சுட்டிக்காட்டியிருக்கின்றது.

"அரச தரப்புடன் பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்பட்டு ஒரு வருட காலம் சென்றுவிட்ட போதிலும் அதில் ஒரு அங்குல முன்னேற்றம் கூட ஏற்படவில்லை. அரசாங்கம் பேச்சுவார்ததைகள் மூலமாக எந்தவொரு தீர்வையும் எடுவதற்கான மனநிலையில் இல்லை. அதனால் இவ்விடயத்தில் இந்தியா தலையிட்டு முக்கிய பாத்திரம் ஒன்றை ஏற்று பேச்சுக்களை சரியான பாதையில் கொண்டு செல்வதற்கான நடவடிக்கைகளை எடுக்காதுவிட்டால் இந்தப் பேச்சுக்களை தொடர முடியாத நிலைமை ஒன்று ஏற்படும்" எனவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இந்திய அமைச்சரிடம் தெளிவாகக் கூறியிருக்கின்றது.

நான்கு நாள் விஜயம் ஒன்றை மேற்கொண்டு திங்கட்கிழமை மாலை கொழும்பை வந்தடைந்த இந்திய வெளிவிவகார அமைச்சர் கொழும்பின் மத்தியிலுள்ள பிரபல ஐந்து நட்சத்திர விடுதியான ஹொட்டல் தாஜ்ஜில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகளை சந்தித்துப் பேசினார். இரா.சம்பந்தன் தலைமையில் சென்றிருந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகள் குழு, அரசுடன் நடைபெறும் பேச்சுக்கள் தொடர்பாக குறிப்பாகவும், வடக்கு கிழக்கு நிலைமைகள் தொடர்பாக பொதுவாகவும் இந்திய அமைச்சருக்கு எடுத்துக்கூறியது.

சுமார் 45 நிமிடங்கள் தொடர்ந்த இந்தச் சந்திப்பில் சம்பந்தனுடன், கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா, சுரேஷ் பிரேமச்சந்திரன், செல்வம் அடைக்கலநாதன், பொன் செல்வராஜா மற்றும் ஏம்.ஏ.சுமந்திரன் ஆகியோரும் பங்குகொண்டார்கள். இந்தச் சந்திப்பு தொடர்பாக சதகவல் தெரிவித்த சுரேஷ் பிரேமச்சந்திரன் பின்வருமாறு குறிப்பிட்டார்:

"அரசுடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நடத்திவரும் பேச்சுக்கள் தொடர்பாகவே இந்திய அமைச்சருக்கு முக்கியமாக விளக்கிக்கூறினோம். இனநெருக்கடிக்கு அரசியல் தீர்வைக்காண்பதற்கான பேச்சுவார்த்தைகள் எனக் கூறிக்கொண்டு காலத்தைக் கடத்துவதற்கான நடவடிக்கைகளைத்தான் அரசாங்கம் மேற்கொண்டுவருகின்றது. ஜனாதிபதியும் அமைச்சர்களும் பாராளுமன்றத்திலும் வெளியிலும் இராணுவத்தை வெளியேற்ற முடியாது, காணி அதிகாரம் தரமுடியாது, பொலிஸ் அதிகாரம் தரமுடியாது என்றுதான் கூறிவருகின்றார்களே தவிர வேறு எதனையும் கூறுகின்றார்கள் இல்லை.

இந்தியப் பிரதமருக்கும் இந்திய அரசாங்கத்துக்கும் சிறிலங்கா ஜனாதிபதியும் அமைச்சர்களும் பல உறுதிமொழிகளை பல சந்தர்ப்பங்களில் கொடுத்திருக்கின்றார்கள். பதின்மூன்றாவது திருத்த்துக்கு மேலாகச் சென்று அதிகாரப் பரவலாக்கலைத் தருவதாகக் கூறினார்கள். இப்போது இந்த பதின் மூன்றாவது திருத்தத்தின் மைனஸ், மைனஸ் கூட இல்லை என்ற நிலைதான் இப்போது காணப்படுகின்றது.

பேச்சுவார்த்தைகள் ஆரம்பமாகி ஒரு வருடம் சென்றுள்ள போதிலும் ஒரு விடயத்தையிட்டுக்கூட நாம் இதுவரையில் எந்தத் தீர்வையும் எட்டவில்லை. இந்த நிலையிலும் பாராளுமன்றத் தெரிவுக்குழு ஒன்றை நியமித்திருக்கும் அரசாங்கம் அதற்குள் நாம் வரவேண்டும் என வலியுறுத்துகின்றது. அது நிச்சயமாக காலத்தைக் கடத்துவதற்கான இடமே தவிர வேறு ஒன்றும்இல்லை. எனவே இவ்விடயத்தில் இந்தியா முக்கியமான ஒரு பாத்திரத்தை ஏற்கவேண்டும் என இந்திய வெளிவிவகார அமைச்சரைக் கேட்டுக்கொண்டோம்.

அரசுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையிலான இந்தப் பேச்சுவார்த்தைகள் இந்தியாவின் ஏற்பாட்டில்தான் ஆரம்பமாகியது. எனவே இதில் இந்தியா முக்கியமான ஒரு பாத்திரத்தை ஏற்று இந்தப் பேச்சுக்களை சரியான ஒரு பாதையில் கொண்டு செல்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லையாயின் இந்தப் பேச்சுக்களை மேலும் தொடரமுடியாத நிலை ஏற்படும் என்பதை இந்தியாவுக்குத் தெரியப்படுத்தியிருக்கின்றோம்" என சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.

கள நிலைமைகளைப் பொறுத்தவரையில் கடந்த முறை இந்திய அமைச்சர் வரும்போது காணப்பட்ட அதேநிலைதான் இப்போதும் காணப்படுவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் தெரிவித்தனர். இராணுவ ஆக்கிரமிப்பு தொடர்கின்றது, மீள்குடியேற்றம் இடம்பெறவில்லை என்பன போன்ற விடயங்களையும் கூட்டமைப்பு இந்திய அமைச்சருக்கு விளக்கியது.

இதற்குப் பதிலளித்த இந்திய அமைச்சர், வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸை தான் சந்திக்க இருப்பதாகவும் அப்போது இவை தொடர்பாக அவருடைய கவனத்துக்கக் கொண்டு செல்வதாகவும் தெரிவித்தார். பீரஸ+டனான சந்திப்பின்போது இருதரப்பு உடன்படிக்கைகள் சில கைச்சாததிடப்படவுள்ளன. இதனைவிட வேறு வாக்குறுதிகள் எதனையும் கிருஷ்ணா வழங்கவில்லை எனத் தெரிகின்றது.

கிருஷ்ணாவின் தற்போதைய விஜயம் வர்த்தக உடன்படிக்கைகள் சிலவற்றில் கைச்சாத்திடுவதை மட்டும் நோக்கமாகக் கொண்டது எனத் தெரிவித்த இராஜதந்திர வட்டாரங்கள், அரசியல் விடயங்கள் தொடர்பாக அவர் கவனத்தைச் செலுத்தியிருந்தாலும் கொழும்புக்கு அவர் உடனடியாக அழுத்தங்களைக் கொடுப்பார் என எதிர்பார்க்க முடியாது எனத் தெரிவிதார்.


அதேவேளையில் கிருஷ்ணா இந்த விஜயத்தின் போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்களைத்தான் முதலில் சந்திப்பார் எனக் கூறப்பட்டபோதிலும், அந்த நிகழ்ச்சிநிரலை ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ஷவின் பொங்கல் விழா மாற்றிவிட்டது. 

விஷேட விமானத்தில் கட்டுநாயக்க வநதிறங்கிய கிருஷ்ணாவை வரவேற்ற வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் நேரடியாக அவரை அலரி மாளிகைக்கே அழைத்துச் சென்றார். அங்கு ஜனாதிபதியால் நடத்தப்பட்ட பொங்கல் நிகழ்வில் கலந்துகொண்ட பின்னர்தான் கூட்டமைப்பினரை சந்திக்க தாஜ் ஹொட்டலுக்கு கிருஷ்ணா சென்றார்.

ஒரு இனவாதி என வர்ணிக்கப்படும் ஜனாதிபதி தமிழர்களின் பண்டிகையான பொங்கலை தனது உத்தியோகபூர்வ இல்லத்தில் இவ்வளவு விமர்சையாகக் கொண்டாடுவது பற்றிய ஒரு உயர்வை அமைச்சர் கிருஷ்ணாவுக்கு இது ஏற்படுத்தியிருக்கும் என்பது கொழும்பின் எதிர்பார்ப்பாக இருக்கலாம். இந்தியாவின் பிரதிபலிப்பு எவ்வாறாக உள்ளது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்!

Sunday, January 15, 2012

கொழும்பு வரும் கிருஷ்ணா!

மூன்று நாள் விஜயம் ஒன்றை மேற்கொண்டு நாளை மறுதினம் திங்கட்கிழமை கொழும்பு வரும் இந்தியாவின் வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா இலங்கையில் மேற்கொள்ளப்போகும் பேச்சுக்கள் எவ்வாறு அமையும் என்பது தொடர்பாகவே அனைவரது கவனமும் இன்று திரும்பியுள்ளது. கிருஷ்ணாவின் இந்த விஜயத்தின் போது பொருளாதார உடன்படிக்கைகள் சிலவற்றுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும் எனக் கூறப்பட்டாலும்கூட, அரசியல் விவகாரங்களே இதில் மேலோங்கியிருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. குறிப்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பக்கும் அரசாங்கத்துக்கும் இடையிலான பேச்சுக்களில் காணப்படும் இறுக்கத்தைத் தளர்த்துவதற்கு கிருஷ்ணாவின் விஜயம் உதவுமா என்பதுதான் இன்று கேள்விக்குறியாகவுள்ள விடயமாகும்.

இலங்கையின் இனப்பிரச்சினையைப் பொறுத்தவரையில் இந்தியாவின் அணுகுமுறை எப்போதும் கவனத்துக்குரிய ஒன்றாகவே இருந்துள்ளது. 1980 களில் தமிழ்ப் போராளி அமைப்புக்களுக்கு ஆயுதப் பயிற்சியைக் கொடுத்து அதன் மூலமாக இலங்கைப் பிரச்சினையில் தன்னுடைய ஆதிக்கத்தைச் செலுத்தக்கூடியளவுக்கு இந்தியா தன்னை உருவாக்கிக்கொண்டது. இந்தியத் தலையீட்டின் மூலம்தான் அரசியலமைப்புக்கான 13 வது திருத்தமும் உருவாக்கப்பட்டது. வடக்கு கிழக்கு மாகாணங்களும் இணைக்கப்பட்டது. இருந்தபோதிலும், நோர்வேயின் மத்தியஸ்த்ததுடன் அரசு - விடுதலைப் புலிகள் பேச்சு இடம்பெற்ற காலத்தில் இந்தியா ஒதுங்கியிருப்பதாகவே காட்டிக்கொண்டது. நேரடியான தலையீட்டை மேற்கொள்ளவில்லை. திரைக்குப் பின்னால் இருந்துகொண்டு பேச்சுக்களை வழிநடத்துவதற்கு இந்தியா முற்பட்டது இரகசியமானதல்ல.

போர் முடிவுக்கு வந்து விடுதலைப் புலிகள் இராணுவ ரீதியாகத் தோற்கடிக்கப்பட்ட பின்னர் பிரச்சினையில் இந்தியா மீண்டும் தன்னை சம்பந்தப்படுத்திக்கொண்டது. இந்தியாவைப் பொறுத்தவரையில் அரசியலமைப்புக்கான 13 வது திருத்தத்தின் மூலமாக பிரச்சினைக்குத் தீர்வு காணப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டையே தொடர்ந்தும் வலியுறுத்திவந்தது. 13 வது திருத்தம் இந்திய அழுத்தங்களால் உருவாக்கப்பட்டது என்பதால், அதனை ஒரு கௌரவப் பிரச்சினையாகவே இந்தியா பார்த்தது. அதனைவிட இனநெருக்கடிக்கான தீர்வாக இதுவரை காலங்களில் உருவாக்கப்பட்ட தீர்வுகளில் 13 வது திருத்தமே அரசாங்கத்தினால் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒன்றாக இருந்துள்ளது.

ஆனால், தமிழ்த் தரப்பைப்பொறுத்தவரையில் 13 வது திருத்தம் என்பது போதுமானதாக இருக்கவில்லை. மாகாண சபைகள் உருவாக்கப்பட்ட காலத்திலிருந்தே தமிழ்த் தரப்பினர் இதனை இந்தியாவுக்குச் சுட்டிக்காட்டி வந்திருக்கின்றார்கள்.

ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவைப் பொறுத்தவரையில் புதுடில்லிக்குச் செல்லும் சந்தர்ப்பங்களில் 13 பிளஸ் எனக் கூறி இந்தியாவை நம்ப வைத்துக்கொண்டார். இதன் மூலம் இந்தியாவை அவரால் குளிர்விக்க முடிந்தது. மறுபுறத்தில் 13 இல் உள்ளவற்றை வெட்டிக்குறைப்பதில் மட்டுமே கவனத்தைச் செலுத்தினார். இதன் மூலம் சிங்கள - பௌத்த கடும்போக்காளர்களை அவரால் திருப்திப்படுத்த முடிந்தது. உள்நாட்டு அரசியல் வெற்றிகளுக்கு இதுவே அவருக்கு அவசியமானதாகவும் இருந்தது.

வடக்கு கிழக்கு பிளவுபடுத்தப்பட்டபோது இந்தியாவால் எதனையும் செய்ய முடியவில்லை. இப்போது 13 வது திருத்தத்தில் உள்ள காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்கள் கேள்விக்குறியாக்கப்பட்டுள்ள நிலையில்தான் இந்திய வெளிவிவகார அமைச்சர் கிருஷ்ணா இலங்கை வருகின்றார்.

இந்தியாவைப் பொறுத்தவரையில் இலங்கைப் பிரச்சினையில் தற்போது அதற்குள்ள மட்டுப்பாடுகள் கவனிக்கப்படவேண்டியவை.

1980 களின் பிற்பகுதியில் ஜெயவர்த்தன அரசாங்கத்தை இந்தியாவால் ஆட்டுவிக்க முடிந்தது என்பது உண்மைதான். இதற்கு இரண்டு காரணங்கள் இருந்தன. ஒன்று - தமிழ்ப் போராளி அமைப்புக்கள் இந்தியாவின் கட்டுப்பாட்டில் இருந்தன. அதனை வைத்து ஜெயவர்த்தனவை அச்சுறுத்தக்கூடிய நிலையில் இந்தியா இருந்தது. இரண்டு - தெற்காசியப் பிராந்தியத்தில் இந்தியாவின் மேலாதிக்க நிலையை வல்லரசு நாடுகள் அனைத்தும் ஏற்றுக்கொண்டிருந்தன. சர்வதேச சட்டங்களை மீறி இலங்கையின் வான் எல்லைக்குள் பிரவேசித்து உணவுப் பொட்டலங்களை இந்தியா போட்டபோது வல்லரசுகள் அனைத்தும் மௌனமாக அதனை அங்கீகரித்தன. இலங்கை இந்திய ஒப்பந்தம் அமெரிக்காவுக்கு பாதகமான அம்சங்கள் சிலவற்றைக் கொண்டிருந்த போதிலும் அமெரிக்கா அதனை வரவேற்றது. இந்தப் பின்னணியில்தான் ஜெயவர்த்தன அடிபணிந்து 13 வது திருத்தத்தை பாராளுமன்றத்துக்கக் கொண்டுவந்து நிறைவேற்றினார்.

இப்போது மகிந்த ராஜபக்ஷ அரசாங்கத்தைப் பணியவைப்பதற்கான பிடி எதுவும் புதுடில்லியிடம் இல்லை. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு புதுடில்லி சொல்வதைக் கேட்கக்கூடிய ஒரு அமைப்பாக இருந்தாலும்கூட, அது பலம்வாய்ந்த ஒரு அமைப்பல்ல. தமிழர்களின் பிரதான பிரதிநிதிகள் என்ற அந்தஸ்த்து அவர்களுக்கு இருந்தாலும், அதற்குரிய பலத்தையோ கட்டமைப்பையே அவர்கள் கொண்டிருக்கவில்லை. சர்வதேச ரீதியாக இருக்கும் அங்கீகாரம் மட்டும்தான் அதற்குள்ள ஒரே பலம். அதேவேளையில் பிராந்தியத்தில் இந்தியாவின் மேலாதிக்க நிலையும் இப்போது கேள்விக்குறியாகியிருக்கின்றது. இதனைக் கேள்விக்குறியாக்கியிருக்கும் சீனா மகிந்த அரசுடன் கொண்டுள்ள உறவுகளும் இந்தியாவுக்குப் பாதகமான ஒன்று. மகிந்தவுக்கு அழுத்தங்களை அதிகரித்தால் அவர் சீனாவுடன் மேலும் நெருங்கிச் சென்றுவிடுவார் என்பதால் இந்தப் பிரச்சினையை மிகவும் அவதானமாகக் கையாள வேண்டிய நிர்ப்பந்தம் இந்தியாவுக்குள்ளது.

போர்க் குற்றங்கள் என்பதை வைத்து மகிந்தவைப் பணியவைப்பதற்காக புதுடில்லி எடுத்த சில முயற்சிகளுக்கு மகிந்த பணிவதாகத் தெரியவில்லை. போர்க் குற்றங்கள் தொடர்பாக விரிவான விசாரணைகள் இடம்பெறுமாயின் அதன் பின்னணியில் இந்தியாவுக்குள்ள சம்பந்தங்களும் வெளிவரலாம் என்பதால் அதனை ஒரு ஆயுதமாகப் பயன்படுத்தக்கூடிய நிலையில் இந்தியா இல்லை. அதேவேளையில், தமிழகத்திலிருந்து உருவாகக்கூடிய உணர்வுகளைத் திருப்திப்படுத்தும் வகையில் எதனையாவது செய்தாக வேண்டும் என்ற தேவையும் புதுடில்லிக்குள்ளது. அதற்காகத்தான் இந்த விஜயங்கள் அக்கறைகள்.

இனநெருக்கடியைப் பொறுத்தவரையில் இந்தியாவால் எதனையும் செய்ய முடியாதிருக்கின்றது என்பதை சாதாரண தமிழர்களே பரிந்துகொண்டிருக்கும் போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மட்டும் இந்தியாவை நம்பியிருப்பது ஏன் என்பதுதான் புரியவில்லை. இது மக்களை ஒரு மாயையில் வைத்திருப்பதற்கே உதவும். 50 ஆயிரம் வீடுகளைக் கட்டுவதற்கான அடிக்கல்லை நாட்டுவதற்காக ஒரு வருடத்துக்கு முன்னர் வந்த அமைச்சர் கிருஷ்ணா, அந்தத் திட்டம் எந்தவிதமான முன்னேற்றத்தையும் காணாத நிலையிலேயே நாளை மீண்டும் வருகின்றார். கொழும்பின் ஒத்துழைப்பின்மைதான் இந்தத் திட்டம் முன்னேற்றமின்றிக் காணப்படுவதற்கக் காரணம் எனக் கூறப்படுகின்றது. ஆக, வீடுகளைக் கட்டிக்கொடுப்பதைக் கூட உருப்படியாகச் செய்ய முடியாத இந்தியாவால் நியாயமான அரசியல் தீர்வு ஒன்றுக்கு மகிந்த ராஜபக்ஷவை எப்படி நிர்ப்பந்திக்க முடியும்?

இந்த நிலையில்தான் இந்தியா என்ன செய்யப்போகின்றது என்ற கேள்வி எழுகின்றது.

கொழும்புக்குக் கூற வேண்டியது என்ன என்பதுபற்றி கிருஷ்ணாவுக்கு நன்றாகவே தெரியும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் சுரேஷ் பிரேமச்சந்திரன் கூறியிருக்கின்றார். உண்மைதான். கிருஷ்ணாவுக்கு மட்டுமல்ல. எல்லோருக்குமே தெரிந்த விடயம்தான் அது. ஆனால், இரண்டு கேள்விகள் உள்ளன. ஒன்று - கிருஷ்ணா அதனைக் கூறுவாரா? இரணடு - கிருஷ்ணா அதனைக் கூறினாலும் மகிந்த அதற்கு செவிமடுப்பாரா?

தற்போது பிரச்சினையாக இருப்பது காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்கள்தான். இவற்றை ஏற்றுக்கொள்ள முடியாது என ஒரேயடியாக மறுத்த அரசாங்கம் இப்போது அவை தொடர்பாகப் பேசத் தயாராக இருப்பதாகக் கூறியிருக்கின்றது. அடுத்த வாரத்தில் நடைபெறவிருக்கும் பேச்சுக்களில் அது தொடர்பாக ஆராயப்படலாம். இந்திய வெளிவிவகார அமைச்சரும் கொழும்பில் உள்ள சந்தர்ப்பத்தில் பேச்சுக்கள் இடம்பெறுவதால் அவருடனான பேச்சுகளிலும் இவ்விடயம் ஆராயப்படும். அரசாங்கத்தைப் பொறுத்தவரையில் இந்த அதிகாரங்களைத் தம்மால் கொடுக்க முடியாது என்பதை அது ஏற்கனவே அறிவித்திருந்தது. தற்போது சர்வதேச அழுத்தங்கள் காரணமாக இது தொடர்பாகப் பேசுவதற்குத் தயாராக இருப்பதாக அரசாங்கம் கூறுகின்றது.

பொலிஸ் அதிகாரத்தைப் பொறுத்தவரையில் சிறு குற்றங்களை விசாரிப்பதற்கான அதிகாரத்தைக் கொடுப்பதற்கும், காணியைப் பொறுத்தவரையில் காணி ஆணைக்குழு ஒன்றை அமைப்பதற்கும் அரசாங்கம் இணங்கலாம் என சில தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கு மேல் செல்வது தமக்கு ஆபத்தாக அமையும் என அரசாங்கம் இந்திய அமைச்சரிடம் கூறலாம் எனத் தெரிகின்றது. இந்தியத் தரப்பு இதனை ஏற்குமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைக் கோரலாம். இதனைவிட வேறு எதனையும் தரும் நிலையில் அரசாங்கம் இல்லை என்பது எந்தளவுக்கு உண்மையோ அதற்கு மேலாக எதனையாவது கொடுங்கள் என அழுத்தம் கொடுக்கும் நிலையில் இந்தியா இல்லை என்பதும் உண்மை.

கனடிய அரசாங்கமும் பிரித்தானிய அரசாங்கமும் கடந்த வாரத்தில் வெளியிட்ட அறிக்கைகள் மேற்கு நாடுகளின் அழுத்தங்கள் அதிகரித்துச் செல்லும் ஒரு போக்கைக் காட்டுவதாக இருந்தது. மார்ச் மாதத்தில் ஜெனிவாவில் உருவாகக் கூடிய நெருக்கடிகளுக்கு கட்டியம் கூறுவதாக இவை உள்ளன. இந்த நிலையில் எதனையாவது கொடுத்து தேசிய நல்லிணக்கம் ஏற்பட்டுவிட்டதாகக் காட்டிக்கொள்ள வேண்டிய தேவை மகிந்தவுக்கு உள்ளது. அதற்காக வரையறுக்கப்பட்ட பொலிஸ் அதிகாரத்தையும், காணி ஆணைக்குழுவையும் அவர் பயன்படுத்தலாம். இந்தியாவைப் பொறுத்தவரையில் சர்வதேச அரங்கில் மகிந்தவைப் பாதுகாக்க வேண்டிய தேவை அதற்குள்ளது. அதனால் இவற்றை ஏற்குமாறு கூட்டமைப்புக்கு இந்தியா ஆலோசனை வழங்கலாம் என தமிழ்க் கட்சிப் பிரமுகர் ஒருவர் குறிப்பிடுகின்றார்.

அதேவேளையில் வடமாகாண சபைக்கான தேர்தலை நடத்துவது தொடர்பாகவும் கிருஷ்ணாவின் விஜயத்தின்போது ஆராயப்படும் எனத் தெரிகின்றது. இரண்டு மாதங்களுக்கு முன்னர் மாலைதீவில் நடைபெற்ற சார்க் உச்சி மாநாட்டில் கலந்துகொள்ள வந்திருந்த இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங் வடமாகாண சபைத் தேர்தல் தொடர்பாக ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவிடம் வினவியுள்ளார். அதனை விரைவில் நடத்தவிருப்பதாக ஜனாதிபதி அப்போது கூறியிருந்தார். இவ்விடயத்தில் ஏற்பட்டுள்ள முன்னேற்றத்தை அறிவதற்கு இந்தியத் தரப்பு விரும்பும். அடுத்த ஒரு சில மாதங்களுக்குள் இது தொடர்பான அறிவித்தல் ஒன்று அரச தரப்பிலிருந்து வெளிவரலாம் என சில தகவல்கள் தெரிவிக்கின்றன. வரையறுக்கப்பட்ட அதிகாரங்களைக் கொடுத்து மாகாண சபைத் தேர்தலையும் நடத்திவிடுவதன் மூலம் சர்வதேச அழுத்தங்களைக் கொஞ்சமாவது குறைக்க முடியும் என்பதுதான் மகிந்தவின் கணிப்பு.

இந்த இடத்தில்தான் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பொறுப்பு அதிகரிக்கின்றது!

Tuesday, January 10, 2012

காணி அதிகாரம் பற்றிய சர்ச்சைக்கு இம்மாதத்துக்குள் தீர்வு சாத்தியமா?

தை பிறந்தவுடன் பேச்சுக்கள் மீண்டும் ஆரம்பமாகப் போகின்றது. பொங்கலைத் தொடர்ந்து நடைபெறவிருக்கும் அரசு - கூட்டமைப்பு பேச்சுவார்த்தைகளில் காணி விவகாரம்தான் முக்கியமாக ஆராயப்படவிருக்கின்றது. இந்த விவகாரத்தில் சற்று விட்டுக்கொடுப்புடன் செயற்படுவதற்கு அரச தரப்பு முன்வந்திருப்பதாக வெளியாகியிருக்கும் செய்திகள் சர்வதேச சமூகத்தின் அழுத்தங்களைச் சமாளிப்பதற்கான அரசாங்கத்தின் உபாயமா அல்லது அதுதான் அரசின் உண்மையான நிலைப்பாடா என்பதில்தான் பேச்சுக்களின் எதிர்காலம் தங்கியிருக்கின்றது எனக் கூறலாம்.
 
அரசாங்கப் பிரதிநிதிகளுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையில் இம்மாதம் நடைபெறவிருக்கும் பேச்சுவார்த்தைகள் தீர்க்கமான ஒன்றாக அமையும் என எதிர்பார்க்கப்படுவதற்கு இதுதான் பிரதான காரணம். இம்மாத இறுதியில் மூன்று நாட்களுக்கு தொடர்ச்சியாக இடம்பெறும் பேச்சுக்களின் போது மாகாண சபைகளுக்கான காணி அதிகாரத்தை வழங்கும் விவகாரம் தொடர்பாகவே முக்கிய கவனம் செலுத்தப்படும் என்பதுடன், அது தொடர்பில் இறுதி முடிவு ஒன்றைக்காண வேண்டும் என்பதில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுதியாக இருப்பதாகவும் தெரிகின்றது.

தென்னாபிரிக்காவுக்கான விஜயம் ஒன்றை தற்போது மேற்கொண்டுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உயர் மட்டக்குழு கொழும்பு திரும்பிய பின்னர் எதிர்வரும் 17,18,19 ஆம் திகதிகளில் அடுத்த கட்டப்பேச்சுக்கள் இடம்பெறவிருக்கின்றது. அரசுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குமிடையிலான பேச்சுக்களில் முரண்பாட்டை ஏற்படுத்தியிருக்கும் முக்கிய விடயங்களான காணி, பொலிஸ் அதிகாரங்கள் தொடர்பிலேயே இணக்கப்பாடு காணப்படவேண்டிய நிலை தற்போதுள்ளது. இதில் காணி விவகாரம் தொடர்பாகவே இப்போது ஆராயப்பட்டுவருகின்றது.

காணி விவகாரம் தொடர்பான பேச்சுக்களின் போது அரச தரப்பு முதலில் காட்டிய இறுக்கத்தை ஓரளவுக்காவது தளர்த்திக்கொள்ள இப்போது தயாராகவிருப்பதாகக் கூறப்படுகின்றது. இதற்கு இரண்டு காரணங்கள் சொல்லப்படுகின்றது.

இலங்கைக்கான உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு எதிர்வரும் 16 ஆம் திகதி வரும் இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா கொழும்பில் தங்கியிருக்கும் காலப்பகுதியிலேயே அரசு - கூட்டமைப்பு பேச்சுக்கள் நடைபெறவிருப்பது இதற்கு ஒரு காரணம். இப்பேச்சுக்களின் முக்கியத்துவத்தையும் மேலும் அதிகரிப்பதாக அமைந்திருக்கும் எனவும் இராஜதந்திர வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஏனெனில் பேச்சுக்களின் விபரங்கள் உடனடியாகவே இரண்டு தரப்பினராலும் இந்திய அமைச்சருக்குத் தெரியப்படுத்தப்படும்.

தன்னுடைய இந்த விஜயத்தின் பேர்து ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்களைச் சந்திக்கும் இந்திய வெளிவிவகார அமைச்சர், அரசியலமைப்புக்கான 13 வது திருத்தத்துக்கு உட்பட்ட வகையில் மாகாண சபைகளுக்கு அதிகாரங்களைப் பரவலாக்குவது தொடர்பில் முக்கியமாக ஆராய்வார் எனத் தெரிகின்றது. இது தொடர்பில்   ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ இந்தியத் தலைவர்களுக்கு ஏற்கனவே வழங்கியிருந்த வாக்குறுதிகளையும் இந்த சந்தர்ப்பத்தில் நினைவூட்டுவதற்கு இந்திய அமைச்சர் திட்டமிட்டிருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தப் பேச்சுக்கள் தொடர்பாக கடந்த வாரம் கருத்து வெளியிட்ட இந்திய வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர், அரசியலமைப்புக்கான 13 வது திருத்தத்துக்கு மேலதிகமாக வழங்குவதற்குத் தாம் தயாராக இருப்பதாக, அதாவது 13 பிளஸ் என ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ இந்தியாவுக்கு வழங்கியிருந்த வாக்குறுதிகளை நினைவுகூர்ந்திருந்தார். இவ்வாறான நினைவு கூரல் கொழும்புக்கான மறைமுகமான ஒரு அழுத்தம் என்பதில் சந்தேகம் இல்லை. இந்த நிலையில் இந்திய அமைச்சர் அதனை மீண்டும் நினைவுகூரும் போது, காணி அதிகாரங்களை வழங்க தாம் தயாராகவில்லை என்பதைக் கூறுவது கொழும்புக்கு சங்கடமானதாகவே இருக்கும்.

இதனைவிட மென்போக்கில் செல்வதாக அரசாங்கம் காட்டிக்கொள்வதற்கு மற்றொரு காரணமும் உள்ளது. ஜெனிவாவில் மார்ச் மாதம் நடைபெறவிருக்கும் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் கூட்டத் தொடரில் இலங்கையின் போhக் குற்றவிவகாரம் கொழும்புக்குப் பெரும் நெருக்கடியைக் கொடுக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. மேற்குநாடுகள் பலவும் இதனை சர்ச்சையாக்கத் திட்டமிட்டுள்ளன. இந்தப் பின்னணியில் இலங்கையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கான முயற்சிகள் இடம்பெறுவதாகக் காட்டிக்கொள்ளவேண்டிய நிர்ப்பந்தம் அரசுக்குள்ளது. அதன்மூலம் போர்க் குற்றங்களின் அழுத்தத்தைக் குறைத்துவிடலாம் என அரசு கணக்குப்போடுகின்றது.

இந்தப் பின்னணியில்தான் காணி விவகாரம் தொடர்பில் மென்கோக்கை கடைப்பிடிக்க தாம் தயாராக இருப்பதாக அரசாங்கம் இப்போது கூறிவருகின்றது.

அரச தரப்பினருக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையில் கடந்த ஒருவருடகாலமாக இடம்பெற்றுவரும் பேச்சுக்களில் மூன்று விடயங்கள் விரிசலை ஏற்படுத்தியிருப்பதாக கடந்த மாத நடுப்பகுதியில் அறிவிக்கப்பட்டிருந்தது. வடக்கு - கிழக்கு மாகாணங்கள் மீள இணைக்கப்படவேண்டும் என்பதை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வலியுறுத்துவதும், மாகாண சபைகளுக்கு பொலிஸ் மற்றும் காணி அதிகாரங்களை வழங்குவதற்கு அரசாங்கம் மறுத்துவருவதும்தான் பேச்சுக்களில் இணக்கப்பாட்டை ஏற்படுத்துவதற்குத் தடையாக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்தப் பின்னணியில் காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்களை மாகாண சபைகளுக்கு வழங்க முடியாது என கடந்த மாதத்தில் உறுதியாகத் தெரிவித்திருந்த அரச தரப்பு தமது நிலைப்பாட்டில் தளர்வுப் போக்கொன்றை இம்மாதத்தில் வெளிப்படுத்தியிருக்கின்றது. அதாவது, பொலிஸ் மற்றும் காணி விவகாரங்களைப் பொறுத்தவரையில் மட்டுப்படுத்தப்பட்ட அதிகாரங்களை வழங்குவதற்குத் தாம் தயாராக இருப்பதாகத் தெரிவித்திருக்கும் அரசாங்கம் அது தொடர்பான யோசனைகளை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முன்வைத்தால் அதனையிட்டுப் பரிசீலனை செய்வதற்கு தாம் தயாராக இருப்பதாக தற்போது அறிவித்திருக்கின்றது. அதாவது இந்த மாற்று யோசனைகளை தாமாகவே முன்வைப்பதற்கும் அச தரப்பு  தயாராகவிருப்பதாகத் தெரியவில்லை.

இந்தப் பின்னணியில் இம்மாத இறுதியில் நடைபெறவிருக்கும் பேச்சுக்களின் போது காணி அதிகாரம் தொடர்பில் தீர்க்கமான நிலைப்பாடு என்ன என்பது தெளிவாக வெளிப்படும் என அரசியல் வட்டாரங்கள் எதிர்பார்க்கின்றன. தற்போதைய நிலையில் பேச்சுக்கள் முறிவடைவது தமக்குப் பாதகமானதாக அமையலாம் என்பதால்தான் சில விட்டுக்கொடுப்புக்களைச் செய்வது போலக்காட்டிக்கொண்டு பேச்சுக்களைத் தொடர்வதற்கு அரச தரப்பு முற்படுகின்றது.

மாகாண சபைகளுக்கான காணி அதிகாரத்தைப் பொறுத்தவரையில் அரசியலமைப்புக்கான 13 வது திருத்தத்திலேயே சிலவிடயங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. தமிழர்களைப் பொறுத்தவரையில் சில விடயங்கள்  விட்டுக்கொடுக்க முடியாதவை. காணி, பொலிஸ் இணைப்பு  என்பன. பேச்சுவார்த்தை ஒன்றின் போது சில விடயங்களில் விட்டுக்கொடுப்பதுசமரசம் செய்வது என்பன சகஜம்தான். ஆனால், அடிப்படைகளையே விட்டுக்கொடுக்க வேண்டும் என எதிர்பார்ப்பது சரணாகதியை எதிர்பார்ப்பதற்குச் சமனானதாகவே இருக்கும்.

அரசாங்கத்தைப் பொறுத்தவரையில் இந்த அதிகாரங்களை வழங்க அது ஒருபோதும் தயாராகவில்லை. ஜனாதிபதி உட்பட அரசின் முக்கிய தவைர்கள் பலரின் நிலைப்பாடாகவும் அதுதன் இருந்துள்ளது. கடந்த வாரம் கூட இதனைத்தான் அவர்கள் தெரிவித்துவந்தார்கள். ஜனாதிபதி தனது உரைகளில் இதனைத்தான் கூறிவந்திருக்கின்றார்கள். இந்த நிலையிலிருந்து திடீரென ஒரு தளர்வுப்போக்கை வெளிப்படுத்துவதென்பது வெறுமனே சர்வதேச சமூகத்தைச் சமாளிப்பதற்கான ஒரு முயற்சியாக மட்டுமே இருக்கமுடியும்.

இதுதொடர்பாக கருத்துவெளியிட்ட அமைச்சரவைப் பேச்சாளர் கெஹலிய ரம்புக்வெல, காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்களை வழங்குவதில் அரசாங்கத்துக்கு கொள்கையளவில் பெரும் சிக்கல் காணப்படுவதாகக் கூறியிருக்கின்றார். ஆனால், இந்த அதிகாரங்களை சில வரையறைகள் மற்றும் எல்லைகளுக்கு உட்பட்டதாக வழங்குவது தொடர்பாகவே கூட்டமைப்புடன் பேசப்போவதாகக் கூறியிருக்கின்றார்.

அரசாங்கத்தைப் பொறுத்தவரையில் வரையக்கப்பட்ட சில விட்டுக்கொடுப்புகளைச் செய்து வரையறுக்கப்பட்ட அதிகாரங்களை வழங்குவதற்குத் தயாராக இருப்பதாகக் கூறிக்கொண்டாலும் கூட, சில மறைமுகமான கடிவாளங்களைத் தன்னிடம் வைத்துக்கொண்டுதான் அவற்றை அரசாங்கம் வழங்கும் என நிச்சயமாக எதிர்பார்க்கலாம். கடந்த காலங்களிலும் தமிழர்கள் விடயத்தில் அரசாங்கம் இவ்வாறுதான் நடந்துகொண்டது.

அதனால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இந்தப் பேச்சுக்களில் தொடர்ந்தும் இருக்க வேண்டுமானால் மாநிலங்களுக்கான இந்த அதிகாரங்கள் தொடர்பில் அரசிடமிருந்து திட்டவட்டமான உறுதிப்பாட்டைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என கூட்டமைப்பின் ஒரு பகுதியினர் தெரிவிக்கின்றார்கள். ஆவ்வாறில்லாமல் பேச்சுக்களில் ஈடுபடுவது என்பது அரசின் நிகழ்ச்சி நிரலுக்கு துணைபோவதாகவே அமைந்துவிடும் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Sunday, January 8, 2012

தலைமை தப்பியது! தலையிடி தீரவில்லை!!

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவைப் பொறுத்தவரையில் கட்சித் தலைமைப் பதவியை தேர்தலின் மூலம் அவர் தக்கவைத்துக்கொண்டாலும் கூட, கட்சிக்குள் உருவாகியிருக்கும் தலையிடி தீராத நிலைதான் காணப்படுகின்றது. கட்சியின் தலைமைப் பதவிக்கு உருவாகிய பிரச்சினைக்கு டிசெம்பர் 19 இல் நடைபெற்ற தேர்தலின் மூலம் தீர்வு காணப்பட்டுவிட்டதாக ரணில் விக்கிரமசிங்க கருதினாலும்கூட, கட்சியில் ஒருமைப்பாட்டை ஏற்படுத்த அவரால் இன்றுவரையில் முடியவில்லை. கட்சி இரண்டாகப் பிளவுபட்ட நிலையில் செயற்படுவது தெளிவாகத் தெரியத் தொடங்கியிருக்கின்றது.

அதிருப்தியாளர்களுக்கு எதிரான போராட்டத்தை ரணில் தீவிரப்படுத்தியிருக்கும் அதேவேளையில், தலைமைக்கு எதிரான போராட்டங்களைத் தீவிரப்படுத்த அதிருப்தியாளர்கள் திட்டமிட்டு வருகின்றார்கள். ஆக, கட்சிக்குள் இடம்பெறும் உட்கட்சி மோதல்கள் பற்றிய செய்திகளைத் தொடர்ந்தும் எதிர்பார்க்கலாம்! பிரச்சினை வீதிக்கு வந்துவிட்ட நிலைதான் காணப்படுகின்றது. அதேவேளையில் தொடரும் இந்த உட்கட்சி மோதல் அரசுக்கு எதிரான போராட்டங்கள் எதனையும் தீவிரப்படுத்த முடியாமல் ஐ.தே.க.வைக் கட்டிப்போட்டுவைத்திருக்கும் என்பதும் உண்மை.

கட்சித் தலைமைப் பதவியைத் தக்கவைத்துக்கொண்ட பின்னர் அதிருப்தியாளர்கள் விடயத்தில் மென்மைப்போக்கைக் கடைப்பிடித்து அவர்களை அரவணைத்துச் செல்வதற்குப் பதிலாக அவர்கள் விடயத்தில் கடுமையான அணுகுமுறையை விக்கிரமசிங்க கையாள்வது கட்சிக்குள் பதற்றநிலை ஒன்றைத்தான்தொடர்ந்தும் வைத்திருப்பதாக இருக்கின்றது.  இவ்விடயத்தில் ரணில் விக்கிரமசிங்கவின் இராஜதந்திரம் கேள்விக்குள்ளாக்கப்பட்டுள்ளது.

2012 ஆம் ஆண்டை அதிகார மாற்றத்துக்கான ஆண்டாகப் பிரகடனப்படுத்தியிருக்கும் விக்கிரமசிங்க, அதற்கான செயற்பாடுகளைத் தீவிரப்படுத்துவதை தவிர்த்துவிட்டு அதிருப்தியாளர்கள் மீது போரைத் தொடுத்துள்ளார். அவர்களைத் துரோகிகள் என வர்ணித்துள்ள அவர், அவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் அறிவித்திருக்கின்றார். புத்தாண்டில் அவர் வெளியிட்ட முதலாவது அறிவிப்பாக இதுவே வெளியாகியிருந்தது.

இந்த அறிவிப்புடன் மட்டும் நின்றுவிடாமல், கட்சியின் பிரதி தேசிய அமைப்பாளர் பதவியிலிருந்து அதிருப்தியாளர் குழுவின் முக்கிய உறுப்பினர்களில் ஒருவரான தயாசிறி ஜெயசேகராவை நீக்கியிருக்கின்றார். இதனைவிட கட்சியின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாச பிரதி எதிர்க்கட்சித் தலைவர் என்ற பதவியிலிருந்தும் நீக்கப்பட்டிருக்கின்றார். கட்சியின் தலைமையகத்தில் நடைபெற்ற கட்சி ஆலோசனைக்குழுவின் கூட்டத்திலேயே இது தொடர்பான தீர்மானம் எடுக்கப்பட்டது. புதுவருடத்தில் இடம்பெற்ற ஆலோசனைக்குழுவின் முதலாவது கூட்டத்தில் பலத்த வாதப் பிரதிவாதங்களுக்கு மத்தியில் இத்தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்கின்றது.

கட்சியின் தலைமைப் பதவிக்காக கடந்த மாதம் இடம்பெற்ற தேர்தல் ஜனநாயகத்துக்கு விரோதமானது எனவும், அதனை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் பகிரங்கமாகக் கருத்துத் தெரிவித்தமையால்தான் தயாசிறி ஜெயசேகரா மீது நடவடிக்கை எடுக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது. இதற்காக மன்னிப்புக்கோருமாறு அவர் கட்சித் தலைமையால் கேட்டுக்கொள்ளப்பட்ட போதிலும், அதனை ஏற்றுக்கொள்வதற்கு அவர் மறுத்துவிட்ட நிலையிலேயே ஆலோசனைக்குழு இந்த நடவடிக்கையை எடுத்ததாக கட்சித் தலைமை அறிவித்திருக்கின்றது. இருந்த போதிலும் இதனை ஏற்றுக்கொள்ள முடியாது என தயாசிறி அறிவித்திருக்கின்றார்.

ஐ.தே.க.வில் உருவாகிய தலைமைத்துவப் பிரச்சினை, தலைமைப் பதவிக்காக நடைபெற்ற தேர்தலுடன் முடிவடைந்துவிடவில்லை என்பதைத்தான் கடந்தவாரத்தில் வெளியாகிய  செய்திகள் புலப்படுத்தியிருக்கின்றது. தலைமைப் பதவியைத் தக்கவைத்துக்கொண்ட பின்னர் தனக்கு விரோதமானவர்களை அந்நியப்படுத்துவதற்கான செயற்பாடுகளையே ரணில் விக்கிரமசிங்க தீவிரப்படுத்தியிருப்பதாக கட்சி வட்டாரங்கள் குற்றஞ்சாட்டுகின்றன. அவர்களை வளரவிடுவது எதிர்காலத்திலும் தனக்கு ஆபத்தானதாக அமையலாம் என ரணில் கணக்குப் போட்டுவைத்திருக்கின்றார் போலுள்ளது.  அதேவேளையில் இது ஒரு பழிவாங்கும் நடவடிக்கையாகவும் பார்க்கப்படுகின்றது.

இதேவேளையில், கட்சித் தலைமைப் பதவிக்குப் போட்டியிட்டு தோல்வியடைந்த கரு ஜயசூரிய இப்போது பெருமளவுக்கு அமைதியாக இருந்தாலும், கட்சியின் பிரதித் தலைவரான சஜித் பிரேமதாசவும், தயாசிறி ஜெயசேகராவும் ரணில் மீதான தாக்குதல்களைத் தீவிரப்படுத்தியிருக்கின்றார்கள். அதனால் இந்த இருவரையும் இலக்குவைத்ததாகவே ரணில் விக்கிரமசிங்கவின் தாக்குதல்களும் அமைந்திருக்கின்றன.

சஜித் குழுவினர் கட்சிக்குள் கணிசமான ஆதரவுத் தளத்தைக் கொண்டுள்ளவர்கள் என்பதுடன், அடிமட்ட மக்கள் மத்தியிலும் கணிசமான செல்வாக்கைப் பெற்றுள்ள ஒருவராகவே சஜித் உள்ளார் என்பதும் கவனிக்கப்படவேண்டும். கட்சியின் அடுத்த தலைமைப் பதவிக்கு தன்னைத் தயார்படுத்துவதில் சஜித் தீவிரமாக உள்ளது தெளிவாகத் தெரிகின்றது.

இந்த நிலையில் ரணில் நடத்திய புத்தாண்டு நிகழ்வில் சஜித் குழுவினர் கலந்துகொள்ளாதததும், சஜித்தின் பத்தாண்டு நிகழ்வில் ரணில் குழுவினர் கலந்துகொள்ளாமையும் கட்சி இரண்டாகப் பிளவுபட்டுச்செயற்படுவதை தெளிவாகப் புலப்படுத்தியிருக்கின்றது.

கட்சியைப் பிளவுபடுத்த முயல்பவர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என ரணில் விக்கிரமசிங்க அறிவித்திருக்கும் அதேவேளையில், விக்கிரமசிங்க மீதுதான் முதலில் ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கவேண்டும் என சஜித் பதிலடிகொடுத்திருக்கின்றார். தொடர்ச்சியாக 20 தேர்தல்களில் கட்சிக்கக் கிடைத்த தோல்விகளுக்கு காரணமாக இருந்தவர் என்ற முறையில் அவர் மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க வேண்டும் என சஜித் கூறியிருக்கின்றார்.

ஐ.தே.க.வில் நடைபெறும் நிகழ்வுகள் தலைமைத்துவப் பிரச்சினைக்கு இப்போதைக்குத் தீர்வு கிடைக்கப்போவதில்லை என்பதைப் புலப்படுத்துவதாகவே அமைந்திருக்கின்றது. கட்சியின் அதிருப்தியாளர் குழுவைப் பொறுத்தவரையில் சிங்கள பௌத்த கடும்போக்கைக் கையாள்வதன் மூலமாகத்தான் மகிந்த ராஜபக்ஷ அரசுக்கு எதிரான போராட்டத்தைத் தீவிரப்படுத்த முடியும் என்ற ஒரு நிலைப்பாடு காணப்படுகின்றது.  மகிந்த ராஜபக்ஷ அரசாங்கம் சிங்கள பௌத்த நிலைப்பாட்டில் இருப்பதால் அதேபாதையில் சென்றால்தான்   அரசுக்குச் சவால்விடக்கூடிய ஒரு எதிர்க்கட்சியாக முடியும் என இவர்கள் கருதுவதாகத் தெரிகின்றது.

இரு தரப்பினருக்கும் உள்ள பொதுவான அம்சம் ஒன்று மட்டும்தான் உள்ளது. சிறையில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவை இரு தரப்பினரும் கிரமமாகச் சந்தித்து வருகின்றார்கள்.  சரத்தின் ஆதரவு தமக்குள்ளதாகக் காட்டிக்கொள்ள இருவரும் விரும்புகின்றார்கள். சஜித் குழுவினரைப் பொறுத்தவரையில் பொன்சேகா விடுதலையானால் அவரை முன்னிறுத்தி ரணிலின் முக்கியத்துவத்தைக் குறைக்க முடியும் என்ற ஒரு கணிப்பு உள்ளது. கடந்த ஜனாதிபதித் தேர்தலில் இவ்வாறுதான் நடந்தது.

இந்தப் பின்னணியில்தான் ஐ.தே.க.வின் உட்கட்சி மோதலால்தான் சரத்தின் விடுதலை தடைப்படுகின்றது என்ற கருத்தை ஜனநாயக தேசிய முன்னணியின் பிரமுகர் ஒருவர் வெளிப்படுத்தியிருக்கின்றார்.

ரணில் தரப்பைப் பொறுத்தவரையில் பொன்சேகாவின் விடுதலைக்காக அவர்கள் போராட்டங்களை முன்னெடுத்தாலும், அவர் வெளியே வந்தால் ரணிலின் தலைமைக்கு ஆபத்து ஏற்படலாம் என்ற அச்சம் உள்ளனமையும் புரிந்துகொள்ள முடிகின்றது. ஏனெனில் எதிர்க்கட்சிகளின் கூட்டமைப்பு ஒன்று அமைக்கப்படுமாயின் அதில் அனைவராலும் ஏற்றுக்கொள்ளக் கூடிய தலைவராக பொன்சேகாதான் இருப்பார்.

எது எப்படியிருந்தாhலும், ஐ.தே.க.வின் உட்கட்சிப் போராட்டம் முடிவுக்கு வராத வரையில் பலமான ஒரு எதிரணி உருவாகப்போவதில்லை என்பதுடன், அரசுக்கும் தான் நினைத்ததைச் செய்துகொண்டு போவதற்கு அது வாய்ப்பாகிவிடும் என்பதே உண்மையாகும்!