Monday, May 31, 2010

யாழ்ப்பாணம்: "மீள் குடியேற்றம்" என்ற பிரச்சாரத்தின் மறுபக்கம் - 03

தற்போது போர் முடிவுக்கு வந்துள்ள பின்னணியில் உயர் பாதுகாப்பு வலயப் பிரகடனம் காரணமாக வலிகாமம் வடக்குப் பகுதியிலிருந்து வெளியேற்றப்பட்ட மக்களுடைய மீள்குடியேற்றத்துக்காக எவ்வாறான நடவடிக்கைகள் எடுக்கப்படட்டன, அவை எந்தளவுக்குப் பலனளித்தன என நடராஜாவிடம் கேட்ட போது அது பற்றி அவர் விரிவாக விளக்கினார்: 
'கடந்த வரும்தான் நாம் எமது அமைப்பை ஏற்படுத்தி, இடம்பெயர்ந்த மக்களுடைய மீள்குடியேற்றம் தொடர்பாக அரசியல் தலைவர்களுடன் பேச்சுக்களை நடத்தி சில நடவடிக்கைகளை எடுத்தோம். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்கள் மற்றும் அரசாங்க அதிபருடன் பேச்சுக்களை நடத்தினோம். இரண்டாவது சந்திப்புக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவும் அழைக்கப்பட்டிருந்தார். இருந்தபோதிலும் அமைச்சர் அதில் கலந்துகொள்ளவில்லை. அவரின் பிரதிநிதியே இதில் பங்குகொண்டார். இதில் அரசியலுக்கு அப்பால் இந்தப் பிரச்சினையைக் கையாள்வது எனத் தீர்மானிக்கப்பட்டது. இருந்தபோதிலும் இந்தச் சந்திப்பும் எந்தப் பலனையும் தரவில்லை எனத் தெரிவித்தார்.
"இதனையடுத்து மனித உரிமை இல்லம் ஒரு மநாட்டை நடத்தினார்கள். இதில் நான் வலி வடக்கு இடப்பெயர்வு தொடர்பாக விளக்கினேன். பல கட்சியினரும் இதில் கலந்துகொண்டிருந்தார்கள். இதன் மூலம் இந்தப் பிரச்சினை அனைத்துக் கட்சிகளினதும் கவனத்துக்குரிய ஒரு பிரச்சினையாக்கப்பட்டது. இந்த நிலையில் ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் பசில் ராஜபக்ஷ இவ்வருடம் (2010) ஜனவரி 6 ஆம் திகதி யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்த போது இந்தப் பிரச்சினையும் முக்கிய கவனத்துக்குரியதாகியது. அவருடன் இடம்பெற்ற பேச்சுக்களின் போது 11 அம்சங்களை உள்ளடக்கிய கோரிக்கை ஒன்றை நாம் முன்வைத்தோம்" என அவர் விளக்கினார்.
அப்போது நாடு ஜனாதிபதித் தேர்தலை எதிர்கொண்டிருந்தமையால் தமிழ் மக்களுடைய வாக்குகளைப் பெற்றுக்கொள்வதற்கான ஒரு உபாயமாக இந்த உயர் பாதுகாப்பு வலயப் பிரச்சினையைப் பயன்படுத்திக்கொள்ளலாம் என்ற ஒரு சிந்தனை அரசாங்கத் தரப்பில் காணப்பட்டது. இதனைப் பயன்படுத்திக்கொண்டு அரசாங்கம் எதனையாவது செய்ய முற்படுகின்றதா என்பதை இடம்பெயர்ந்தோர் அமைப்ப அவதானித்தது. 
இது தொடர்பாக யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற கூட்டம் தொடர்பாக நடராஜா மேலும் விளக்ககின்றார்: 
பசில் அளித்த வாக்குறுதி
"இது தொடர்பாக யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் இடம்பெற்ற கூட்டத்தில் நாம் ஆராய்ந்தோம். நாம் உண்மையில் வலி. வடக்கு இடம்பெயர்ந்தவர்களுக்கான அமைப்பாக இருந்தாலும் குடாநாட்டில் இடம்பெயர்ந்துள்ள அனைத்து மக்களுடைய நலன்களையும் கருத்திற்கொண்டுதான் எம்முடைய கோரிக்கைகளை அரசாங்கத்திடம் முன்வைத்திருந்தோம். எமது இந்தக் கோரிக்கைகளை தாம் முழுமையாக ஏற்றுக்கொள்வதாக இந்தக் கூட்டத்தில் பசில் ராஜபக்ஷ தெரிவித்தார். 
அப்போது நாம் முன்வைத்த கோரிக்கையின் பிரதான அம்சமாக இருந்தது என்னவென்றால், காங்கேசன்துறை வீதிக்கு வடக்குப் பக்கமும், மாவட்டபுரம், கீரிமலை வீதிக்கு இடைப்பட்ட பகுதியையும் உள்ளடக்கியதாக சுமார் 10 கிராம சேவகர் பிரிவுகள் அடங்கியிருக்கின்றது. இந்த பத்து கிராமசேவகர் பிரிவுகளிலும் மக்களைக் குடியேற அனுமதிக்க வேண்டும் என்பதுதான் நாம் முன்வைத்த பிரதான கோரிக்கையாகும். ஏனென்றால் இந்தப் பகுதிகள் கண்ணி வெடிகள் அகற்றப்பட்ட பகுதிகள் என அரசாங்கம் தெரிவித்திருந்தது. 
இந்த உயர் பாதுகாப்பு வலயம் தொடர்பாக அரசாங்கம் தொடர்ச்சியாகத் தெரிவித்துவந்த தகவல் என்னவென்றால், இந்த உயர் பாதுகாப்பு வலயத்தின் எல்லையிலுள்ள 600 மீட்டர் தூரத்தை தாம் தாக்குதலற்ற பகுதியாக வைத்திருப்பதாக அரசு கூறிவந்திருக்கின்றது. அதில் வெளிப்பக்கமாக 300 மீட்டர் பகுதியில் 615 குடும்பங்களை மட்டும் மீளக்குடிமர்த்த அனுமதிப்பதாக அரசாங்கம் தொடர்ந்தும் வாக்குறுதியளித்துவந்த போதிலும் அது கூட பின்னர் நிறைவேற்றப்படவில்லை. 
ஜனாதிபதித் தேர்தல் வந்தபோது அரசாங்கத்துக்கு ஒரு நெருக்கடி வந்தது. என்னவென்றால் இந்த விடயத்தில் ஏதாவது செய்ய வேண்டும் என்ற ஒரு நிர்ப்பந்தம் அரசாங்கத்துக்கு ஏற்பட்டது. அதனை நாம் சுட்டிக்காட்டினோம். எங்களுடைய நெருக்குவாரத்தால் இதனை ஏற்றுக்கொள்ள வேண்டிய நிர்ப்பந்தம் அரசாங்கத்துக்கு ஏற்பட்டது. அதனால், பசில் ராஜபக்ஷ உயர் பாதுகாப்பு வலயம் தொடர்பான பிரச்சினைகள் தீர்க்கப்படும் என உறுதியளித்தார். ஆனால் எதுவும் நடைபெறவில்லை”
நிவாரணம் எதுவும் இல்லை
இவ்வாறு தெரிவித்த நடராஜாவிடம், வலிகாமத்திலிருந்து வெளியேறிய மக்களுக்கு ஏதாவது நட்டவீடு வழங்கப்பட்டதா? அவர்கள் தமது வாழ்க்கையைக் கொண்டு செல்வதற்கான உதவிகள் கிடைக்கின்றா எனக் கேட்டபோது,  
"அவர்களுக்கு எந்தவிதமான நட்டவீடும் அரசாங்கத்தினால் வழங்கப்படவில்லை" எனத் தெரிவித்தார். 
வவுனியா மெனிக் பாம் முகாமிலிருந்து விடுவிக்கப்பட்டவர்களில் வலிகாமம் வடக்கைச் சேர்ந்தவர்களும் இருக்கின்றார்களா? என நடராஜாவிடம் கேட்ட போது அதனையிட்டு அவர்   விளக்கினார்:
"வலிகாமத்திலிருந்து இடம்பெயர்ந்து யாழ்ப்பாண முகாம்களிலிருந்த பலர் தமது வாழ்வாதாரங்களைத் தேடிக்கொள்வதற்கான வன்னி சென்றிருந்தார்கள். இவ்வாறு சென்றிருந்தவர்களில் சுமார் ஆயிரம் குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் இப்போது அங்கிருந்து இடம்பெயர்ந்து வந்திருக்கின்றார்கள்.  இப்போது அவர்களும் முகாம்களுக்குள்தான் இருக்கின்றார்கள்.
வலி வடக்குப் பகுதி மக்களுக்காக என அமைக்கப்பட்டிருக்கும் சிறிய குடிசைகளுக்குள்தான் இவர்கள் இப்போது வசிக்க நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளனர். இது பெரும் இட நெருக்கடியை ஏற்படுத்தியிருக்கின்றது. இதனைவிட இவர்களுக்கு தொழில் இல்லை. கூலி வேலைகளும் செய்ய முடியாதுள்ளனர். இவ்வாறு வன்னியிலிருந்து வந்தவர்களுக்கு அரசாங்கம் 25,000 ரூபாவை மட்டுமே நிவாரணமாக வழங்குகின்றது. ஒரு குடும்பத்துக்கு என்ற அடிப்படையில் வழங்கப்படும் இந்தத் தொகை அவர்களால் மீண்டும் ஒரு வாழ்க்கையை ஆரம்பிக்க போதுமானதல்ல. இந்தத் தொகை முடிவடையும் வரையில்தான் அவர்களால் உயிர்வாழ முடியும். இவ்வாறானவர்களையிட்டு யாரும் சிந்திப்பதாகத் தெரியவில்லை."
உயர் பாதுகாப்பு வலயம் காரணமாக வலிகாமம் வடக்கில் எத்தனை பாடசாலைகள் மூடப்பட்டுள்ளன எனக் கேட்டபோது, 17 பாடசாலைகள் வரையில் மூடப்பட்டுள்ளதாகத் தெரிவித்த நடராஜா, இந்தப் பகுதி மாணவர்கள் எதிர்நோக்கியிருக்கும் நெருக்கடிகள் பற்றியும் விளக்கினார். பல மாணவர்கள் முகாம்களிலிருந்து வேறு பாடசாலைகளுக்குச் செல்கின்ற போதிலும், அதனால் அவர்கள் பல்வேறு விதமான நெருக்கடிகளை எதிர்கொள்வதாகவும் தெரிவித்தார்.
பொருளாதாரப் பாதிப்புக்கள்
இந்த உயர் பாதுகாப்பு வலயத்தினால் ஏற்பட்டுள்ள பொருளாதாரப் பாதிப்புக்களையிட்டு ஆராய்ந்த போது பெரும் அதிர்ச்சியான தகவல்களே கிடைக்கின்றன. இலங்கையிலேயே விவசாயத்துக்கு சிறப்பானது எனக் கூறக்கூடிய நிலம் வலிகாமம் வடக்கில்தான் உள்ளது. இங்குள்ள செம்பாட்டு மண்ணை குடாநாட்டில் வேறு எங்கம் காண முடியாது. மரக்கறிகள் இந்த மண்ணில் பெருமளவு விளைச்சலைக்கொடுத்தது. 1970களிலில் இங்கு உற்பத்தி செய்யப்பட்ட மரக்கறிகள், வெங்காயம், மிளகாய், மரவள்ளிக்கிழங்கு என்பனதான் இலங்கை முழுவதிலுமே விநியோகம் செய்யப்பட்டது. 
இலங்கை முழுவதற்கும் விநியோகம் செய்யப்பட்டது என்பதற்கு அப்பால் யாழ்ப்பாணத்திலுள்ள சுன்னாகம் சந்தை, திருநெல்வேலிச் சந்தை என்பன உட்பட குடாநாட்டிலுள்ள அனைத்து மரக்கறிச் சந்தைகளிலும் வலி வடக்கில் உற்பத்தி செய்யப்பட்ட மரக்கறிகளே நிரம்பிக்கிடந்தன என்பது வாசகர்களுக்கு நினைவிருக்கலாம். குறிப்பாக பலாலி கிழங்கு, வசாவிளான் கத்தரிக்காய் என்பன அந்தக் காலத்தில் மிகவும் பிரபலமாக இருந்தன. 
இரண்டாவதாக மீன்பிடியைப் பொறுத்தவரையில் இலங்கையிலேயே அதிகளவு மீன்களைப் பிடிக்கும் ஒரு துறையாக இருந்தது மயிலிட்டிதான். இலங்கையின் ஏனைய பகுதிகளுடன் ஒப்பிடும் போது அதிகளவுக்கு மீன்பிடிக்கப்பட்டமையை இந்தப் பகுதியில்தான் என்பதைக் காணக்கூடியதாக இருந்தது. இங்கு பிடிக்கப்பட்ட மீன்கள் தென்பகுதிக்கும் பெருமளவுக்கு அனுப்பப்பட்டது. ஆனால், கடந்த இருபது வருட காலமாக இந்தப் பகுதி பாதுகாப்பு வலயமாகப் பிரகடனப்படுத்தப்பட்டிருப்பதால் அந்த உற்பத்தியை நாடு இழந்திருக்கின்றது. 
இந்த மீன்பிடிச் சமூகமும் தமது ஜிவனோபாயங்களை இழந்துள்ள நிலையில் அந்தப் பகுதியிலிருந்து வெளியேறியிருக்கின்றது.  இவர்களில் பெரும்பாலானவர்கள் தொழில்தேடி முல்லைத்தீவுப் பகுதிக்குச் சென்றார்கள். பின்னர் அங்கிருந்தும் அகதிகளாகிவிட்டனர். இப்போது மீண்டும் அகதிகளாக வாழ்வாதாரங்கள் இல்லாமல் முகாம்களிலும், நண்பர்கள் உறவினர்களுடைய வீடுகளிலும் இவர்கள் வசிக்கின்றார்கள்...
மயிலிட்டியை ஒரு மீன்பிடித்துறையாக அபிவிருத்தி செய்திருந்தால் மீன்களை ஏற்றுமதி செய்யும் நிலைக்கு நாடு சென்றிருக்கும். அந்தளவுக்கு அதிகளவு மீன்கள் அங்கு கிடைத்தன. ஆனால் அரசாங்கத்தைப் பொறுத்தவரையில் இது தமிழர்களுடைய பொருளாதாரமாக இருப்பதால் அதற்கான நடவடிக்கைகள் எதனையும் செய்யப்போவதில்லை. ஆக, பொருளாதார ரீதியாக யாழ்ப்பாணத்துக்கு மட்டுமன்றி முழு இலங்கைக்குமே இந்தப் பாதுகாப்பு வலயப் பிரகடனம் பாரிய இழப்புக்களையே கொடுத்திருக்கின்றது.  காய்கறி உற்பத்தியும், கடற்றொழிலும் இந்தப் பாதுகாப்பு வலயத்தால் பெருமளவுக்குப் பாதிக்கப்பட்டிருக்கின்றது. 
இந்தச் செய்திகளைச் சேகரித்துக்கொண்டு வலிகாம் வடக்குப் பகுதியிலிருந்து இடம்பெயர்ந்தவர்களுக்காக என கோப்பாய் உதவி அரசாங்க அதபர் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள முகாம் ஒன்றைப் பார்வையிடுவதற்காகச் சென்றோம். சுமார் இரண்hயிரம்  பேர் தங்கியுள்ள அந்த முகாமில் மேலும் அதிர்ச்சிகளே எமக்குக் காத்திருந்தன... 
அவை பற்றி அடுத்த வாரம்.

Saturday, May 29, 2010

பேராசிரியர் பீரிஸ் அமெரிக்காவுக்கு அனுப்பப்பட்ட பின்னணியில் இடம்பெற்ற அரசியல் காய்நகர்த்தல்

உள்நாட்டு அரசியல் விவகாரங்களை மகிந்த ராஜபக்ஷ அரசாங்கத்தினால் மிகவும் இலகுவானமுறையில் சமாளிக்கக்கூடியதாக இருக்கின்ற போதிலும், சர்வதேச ரீதியாக உருவாகியிருக்கும் 'போர்க் குற்றம்' தொடர்பிலான நெருக்கடியைச் சமாளிப்பது பெரும் பிரச்சினையாகத்தான் இருக்கப்போகின்றது. கடந்த இரண்டு வார காலப்பகுதியில் போர்க்குற்றங்கள் தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள புதிய ஆதாரங்களும், அது தொடர்பில் வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் அமெரிக்காவில் நடத்தியிருக்கும் பேச்சுக்களும் இதனைத் தெளிவாக வெளிப்படுத்தியிருக்கின்றது. இலங்கை கடைப்பிடித்த வெளிவிவகாரக் கொள்கை உருவாக்கியிருக்கும் இந்த நெருக்கடியை அரசாங்கம் எவ்வாறு சமாளிக்கப்போகின்றது என்பதுதான் இன்று எழும் கேள்வி.
புதிய வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் பீரிஸின் அமெரிக்க விஜயம் மிகவும் முக்கியமான ஒரு கால கட்டத்திலேயே இடம்பெற்றிருக்கின்றது. விடுதலைப் புலிகளுடனான போர் முடிவுக்கு வந்த ஒரு வருட நிறைவை மிகவும் கோலாகலமாகக் கொண்டாடுவதற்கான ஏற்பாடுகள் (மழை காரணமாக அது பின்னர் ஒத்திவைக்கப்பட்டது என்பது வேறு கதை) செய்யப்பட்டிருந்த ஒரு காலகட்டத்திலேயே போர்க் குற்றம் தொடர்பில் சர்வதேச அரங்கில் மீண்டும் குரல்கள் ஒலிக்கத் தொடங்கியிருந்தன. போர்க் குற்றம் தொடர்பில் புதிய ஆதாரங்களும் வெளியிடப்பட்டிருந்தன. இந்தப் பின்னணியில் பேராசிரியரின் அமெரிக்க விஜயம் மிகவும் கடினமானதாக அமைந்திருக்கும் என்பது எதிர்பார்க்கக்கூடிய ஒன்றுதான்!
அமெரிக்க ஜனப் பிரதிநிதிகள் சபை, சர்வதேச மன்னிப்புச் சபை, சர்வதேச நெருக்கடிக்குழு, மனித உரிமைகள் காப்பகம் என்பன போர்க்குற்றங்கள் தொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட வேண்டும் என்று ஒருமித்த குரலில் கோரிக்கை விடுத்திருந்த ஒரு நிலையிலேயே பேராசிரியர் அமெரிக்காவுக்கான தனது விஜயத்தை மேற்கொண்டார். இவற்றைவிட பிரித்தானியாவின் சனல்4 தொலைக்காட்சியும், மனித உரிமைகள் காப்பகமும் போர்க்குற்றங்கள் தொடர்பில் தம்மிடம் மேலும் ஆதாரங்கள் கிடைத்திருப்பதாகத் தெரிவித்ததுடன் அவற்றில் சிலவற்றை வெளியிட்டும் இருந்தன. ஏனைய ஆதாரங்கள் சந்தர்பம் வரும் போது வெளியிடப்படும் என்ற எச்சரிக்கை கலந்த ஒரு அறிவித்தலை மனித உரிமைகள் காப்பக பேச்சாளர் ஒருவர் பி.பி.சி.க்கு வழங்கிய பேட்டியில் தெரிவித்தமையையும் காணக்கூடியதாக இருந்தது.
இந்தப் பின்னணியில் ஐ.நா. சபையின் முக்கியஸ்த்தர்களையும், அமெரிக்கத் தலைவர்களையும் சந்திப்பதற்காக வாஷிங்டனுக்கு விமானம் ஏறிய பேராசிரியரின் விஜயம் மிகவும் கடினமானதாக இருந்திருக்கும் என்பது புரிந்துகொள்ளக்கூடியதுதான். போரின் இறுதிக்காலப்பகுதியில் இடம்பெற்றிருப்பதாகக் கூறப்படும் போர்க் குற்றங்கள் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுப்பது தொடர்பில் ஆலோசனைக் குழு ஒன்று அமைக்கப்போவதாக ஐ.நா. செயலாளர் நாயகம் பான் கீ மூன் அறிவித்திருந்தார். இவ்வாறான விசாரணைக்குழு அமைக்கப்படுவதைத் தடுப்பதுதான் பேராசிரியர் மேற்கொண்ட இந்த விஜயத்தின் முக்கிய இலக்காக இருந்தது. ஆனால், ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவினால் ஒப்படைக்கப்டபட்ட இந்தப் பணியை நிறைவேற்ற முடியாதவராகவே பேராசிரியர் நாடு திரும்பப்போகின்றார் என்பதைத்தான் வாஷிங்டன் செய்திகள் புலப்படுத்துகின்றன.
மகிந்த ராஜபக்ஷவைப் பொறுத்தவரையில் அவரது முதலாவது பதவிக்காலம் போரை முடிவுக்குக் கொண்டுவருவதிலும், உள்நாட்டு அரசியல் நிலைமைகளைக் கையாள்வதிலும் கவனத்தைக் குவிப்பதாகவே அமைந்திருந்தது. இதில் அவரால் வெற்றியையும் பெறமுடிந்துள்ளது என்பது உண்மைதான். ஆனால், அவரது இரண்டாவது பதவிக் காலம் சர்வதேச சமூகத்தைச் சமாளிப்பதில் கவனத்தைக் குவிப்பதாகவே அமைந்திருக்கும். போர்க் குற்றங்கள் தொடர்பாக கடந்த வருடத்தில் தெரிவிக்கப்பட்ட குற்றச்சாட்டுக்களே இதனைத் தெளிவாக வெளிப்படுத்தியிருந்தது. இதனை நன்கு உணர்ந்திருந்த நிலையில்தான் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸை வெளிவிவகார அமைச்சராக தனது இரண்டாவது பதவிக்காலத்தில் மகிந்த நியமித்தார்.
மேற்கு நாடுகளைச் சமாளிப்பதற்கு பேராசிரியர்தான் பொருத்தமானவர் என மகிந்த கணிப்பிட்டமைக்கு பல காரணங்கள் இருந்துள்ளன. முதலில் சந்திரிகா குமாரதுங்கவின் அமைச்சரவையில் முக்கிய அமைச்சுப் பொறுப்பில் பேராசிரியர் இருந்துள்ளார். அப்போதே மேற்கு நாடுளுடன் நட்புறவு ரீதியான உறவுகளை அவர் வலுப்படுத்தியிருந்தார். அதன் பின்னர் ரணில் விக்கிரமசிங்கவின் அமைச்சரவையிலும் முக்கிய அமைச்சுப் பொறுப்புக்களை அவர் வகித்ததுடன் விடுதலைப் புலிகளுடனான அரசின் பேச்சுவார்த்தைக் குழுவுக்கும் தலைமை தாங்கினார். இவற்றின் மூலம் மேற்கு நாடுகளில் பேராசிரியர் தொடர்பில் நல்லெண்ணம் ஒன்று காணப்படுகின்றது. இந்தப் பின்னணியில்தான் வெளிவிவகார அமைச்சராக பேராசிரியர் நியமிக்கப்பட்டார்.
மகிந்த ராஜபக்ஷ அரசாங்கத்தைப் பொறுத்தவரையில் அது அமெரிக்காவுடனோ மேற்கு நாடுகளுடனோ நெருக்கமான உறவுகளைக் கொண்டிருப்பதில் கடந்த காலங்களில் அக்கறை காட்டவில்லை. அமெரிக்காவுடன் நெருக்கமான உறவுகளை வைத்திருந்த ரணில் விக்கிரமசிங்கவைக் கடுமையான விமர்சித்த மகிந்த ராஜபக்ஷ தரப்பினர், அமெரிக்காவையும் தமது எதிரிகளாகவே உள்நாட்டில் வர்ணித்தார்கள். குறிப்பாக சிங்கள மக்கள் மத்தியில் தம்மை நாட்டுப்பற்றாளர்களாகக் காட்டிக்கொள்வதற்கு அமெரிக்காவுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுக்க வேண்டிய தேவை மகிந்த தரப்பினருக்கு இருந்துள்ளது.
கடந்த ஜனாதிபதித் தேர்தல் காலத்தில் ஜெனரல் பொன்சேகாவின் பிரச்சாரங்களுக்கு அமெரிக்கா நிதி உதவிகளை வழங்கியதாக மகிந்த தரப்பிலிருந்து குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டிருந்தன. இந்தக் குற்றச்சாட்டுக்களுக்கான ஆதாரங்கள் எதுவும் தெரிவிக்கப்படாத போதிலும், மகிந்தவைத் தோற்கடிப்பதற்கு அமெரிக்கா முற்படுகின்றது என்ற ஒரு செய்தி இதன் மூலமாக வெளிப்படுத்தப்பட்டது. இந்தப் பின்னணியில்தான் சரத் பொன்சேகாவை அதிகாரத்துக்குக் கொண்டுவருவதற்கு அமெரிக்கா முற்படுகின்றது என்ற குற்றச்சாட்டு அரச தரப்பால் பிரச்சாரப்படுத்தப்பட்டது. இதன் மூலம் சிங்களக் கடும் போக்களாளர்கள் அனைவரையும் தமக்குப் பின்னாள் அணி திரட்டுவதில் ஆளும் கட்சி வெற்றி பெற்றது.
விடுதலைப் புலிகளை அழிப்பதற்கு அமெரிக்கா மிகவும் முக்கியமான பங்களிப்பை வழங்கிவந்த நிலையிலும், அமெரிக்கா புலிகளுக்கு புத்துயிரளிக்கமுற்படுவதாக ஆட்சியாளர்கள் குற்றச்சாட்டுக்களைத் தெரிவித்துவந்தது சிங்கள மக்களைக் கவர்வதற்கான ஒரு உபாயமாகவே கருதப்படவேண்டும். அத்துடன் அமெரிக்காவுக்கு எதிரான தரப்பினருடனேயே மகிந்த அணி சேர்ந்தார் என்பதையும் கடந்த காலங்களில் காண முடிந்தது. இதன் மூலம் உள்நாட்டில் அதிகளவு அரசியல் இலாபத்தைப் பெற்றுக்கொண்ட மகிந்தவினால் சர்வதேச ரீதியாக நெருக்கடிகளை எதிர்கொள்ள வேண்டிய ஒரு நிர்ப்பந்தம் இப்போது உருவாகியிருக்கின்றது.
உள்நாட்டு அரசியல் நிலைமைகள் அனைத்தையும் இப்போது தன்னுடைய முழுமையான கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்திருக்கும் நிலையில் மேற்கு நாடுகளுடன் சமாதானமாகச் செல்ல வேண்டிய ஒரு தேவை மகிந்தவுக்கு ஏற்பட்டுள்ளது. இதற்கு இரண்டு காரங்கள் உள்ளன. ஒன்று - போர்க் குற்றச்சாட்டுக்களைத் தவிர்த்துக்கொள்வது. இரண்டாவது பொருளாதார ரீதியாகவுள்ள தேவைகள். இந்தநிலையில் முன்னாள் வெளிவிவகார அமைச்சர் ரோகித போகல்லாகமவினால் மேற்கு நாடுகளுடனான உறவுகளைச் சீராக்க முடியவில்லை. அந்த நிலையிலேயே பீரிஸைவிட்டால் மகிந்தவுக்கு வேறு தெரிவுகள் இருக்கவில்லை.
அமெரிக்காவுடன் உறவுகளைச் சீராக்குவதற்கான சமிஞ்ஞைகளைக் காட்டிய மகிந்த ராஜபக்ஷ மற்றொரு நடவடிக்கையையும் மேற்கொண்டார். தெஹ்ரானில் நடைபெற்ற ஜி-15 நாடுகளின் தலைமைப் பதவியை அவர் ஈரானிடமிருந்து பொறுப்பேற்றுக்கொண்டார். ஜி.15 நாடுகளைப் பொறுத்தவரையில் அதுதான் இன்று அமெரிக்காவுக்கு எதிரான நாடுகளைக் கொண்டுள்ள ஒரு அமைப்பாக உள்ளது. இதன் மூலம் தன்னுடைய பலத்தை அமெரிகாவுக்குக் காட்டுவதற்கும் மகிந்த முற்பட்டிருப்பதாக மேற்கு நாட்டு இராஜதந்திரிகள் கருதுகின்றார்கள். இதனைவிட ஜி-15 அமைப்பைப் பயன்படுத்தி அமெரிக்காவுக்கு பாடம் புகட்ட வேண்டும் என்று அமைச்சர்கள் சிலர் ஜனாதிபதிக்கு ஆலோசனை வழங்கியிருப்பதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.
பேராசிரியர் பீரிஸ் அமெரிக்காவுக்கு அவசரமாக அனுப்பப்பட்டமைக்கு இரண்டு காரணங்கள் சொல்லப்படுகின்றன. ஒன்று - இலங்கைக்கு எதிராக போர்க்குற்றச்சாட்டுக்களைச் சுமத்தப்போவதாக அமெரிக்கா தொடர்ந்தும் தெரிவித்துவரும் ஒரு பின்னணியில் அதனைத் தடுத்து நிறுவது அவரது விஜயத்தின் முதலாவது நோக்கமாக இருந்துள்ளது. போர்க்குற்ற விசாரணைகள் தொடர்பில் தனக்கு ஆலோசனை வழங்குவதற்கு நிபுணர்கள் குழு ஒன்றை அமைக்கப்போவதாக ஐ.நா. செயலாளர் நாயகம் அறிவித்திருந்தார். இவ்வாறான குழு எதனையும் நியமிக்காமல் தடுப்பது பேராசிரியர் அமெரிக்காவுக்கு மேற்கொண்ட விஜயத்தின் இரண்டாவது நோக்கமாகும்.
இந்த இரு விடயங்களையும் கையாள்வதற்கு பீரிஸ் பலமான ஆயுதங்கள் எதனையும் கொண்டு செல்லவில்லை. ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அமைக்கப்போவதாகக் கூறியிருந்த நல்லிணக்கத்துக்கான குழு என்ற ஒரேஒரு ஆயுதத்தை மட்டும் பயன்படுத்தித்தான் அமெரிக்காவும், ஐ.நா.வும் வீசிய பந்துகளைத் தடுத்தாடுவதற்கு பேராசிரியர் முற்பட்டிருந்தார். இந்தக் குழுவை நம்பமுடியாது எனத் திட்டவட்டமாகக் கூறிவிட்ட ஐ.நா. செயலாளர் நாயகம் பான் கீ மூன், தனக்கு ஆலோசனை வழங்குவதற்காக அமைக்கத் திட்டமிட்டுள்ள நிபுணர் குழு திட்டமிட்டபடி அமைக்கப்படும் எனவும் உறுதியாகக் கூறிவிட்டார். இது பேராசிரியருக்குப் பெரும் ஏமாற்றத்தைக் கொடுப்பதாக அமைந்திருக்கும்.
இலங்கையின் இராஜதந்திர அணுகுமுறைக்குக் கிடைத்துள்ள ஒரு தோல்வியாகவே இதனைக் கருத வேண்டும். அமெரிக்கா பத்திரிகையாளர் சங்கம் ஏற்பாடு செய்திருந்த கூட்டத்திலில் உரையாற்றாமல் அமைச்சர் பீரிஸ் வெளிநடப்புச் செய்தமை கூட, சங்கடமான நிலைமையைத் தவிர்ப்பதற்கான ஒரு முயற்சியாகவே கருதப்படுகின்றது. மிகவும் செல்வாக்கும் முக்கியத்துவமும் வாய்ந்த அமெரிக்க பத்திரிகையாளர் சங்கத்தில் அமெரிக்க - இலங்கை உறவுகள் என்ற தலைப்பில் அமைச்சர் உரையாற்றவிருந்தார். ஆனால் முன்னறிவித்தல் எதுவும் இல்லாமல் அவர்  அங்கிருந்து வெளிநடப்பச் செய்தமைக்கான காரணம் எதனையும் சொல்ல முடியாத நிலையில் இலங்கை உள்ளது.
இதேவேளையில் ஹிலாரி கிளின்டனுடன் நடத்திய பேச்சுக்கள் ஓரளவுக்கு வெற்றியளித்திருப்பதாக இலங்கை கருதுவதற்குக் காரணம் உள்ளது. இந்தப் பேச்சுக்களின் போதும் அரசாங்கத்தினால் அமைக்கப்பட்டுள்டள நல்லிணக்க ஆணைக்குழுவை முன்னிறுத்தியே பேராசிரியர் தனது வாதங்களை முன்வைத்திருக்கின்றார். ஆனால், முறைப்பாடு செய்யப்படும் போர்க் குற்றங்கள் தொடர்பாகவும் விசாரணை செய்யும் அதிகாரம் இந்தக் குழுவுக்கு வழங்கப்பட வேண்டும்  என ஹிலாரி கிளின்டன் வலியுறுத்தியிருக்கின்றார்.  இதற்கான பதிலைக் கூறக்கூடிய அதிகாரத்துடன் பேராசிரியர் இருக்கவில்லை.  ஆனால், நல்லிணக்கக் குழுவைப் பயன்படுத்தி அமெரிக்காவை ஓரளவுக்குச் சமாதானப்படுத்தி விட்டதாக இலங்கை கருதலாம்.
இருந்தபோதிலும் அமெரிக்காவுக்கும் மேற்கு நாடுகளுக்கும் எதிரான இலங்கையின் செயற்பாடுகள் தொடரும் பட்சத்தில் இந்தப் பேர்க் குற்றச்சாட்டுக்களை கைகளில் எடுத்து இலங்கையை அச்சுறுத்த அமெரிக்கா தயங்காது என்பதே உண்மை.  உள்நாட்டு அரசியல் நலன்கருதிய அரசாங்கத்தின் செயற்பாடுகள் சர்வதேச அரங்கில் பாதகமான நிலைமைகளை ஏற்படுத்தும் என்பதால் இராஜதந்திரத்துடன் காய் நகர்த்த வேண்டி தேவை அரசுக்குள்ளது. ஆனால் ஆளும் கட்சியைச் சேர்ந்தவர்கள் வெளியிட்டுவரும் கருத்துக்கள் தொடர்ந்தும் மேற்கு நாடுகளுக்கு எரிச்சலுட்டுவதாகவே அமைந்திருக்கின்றன. உதாரணத்துக்கு அல்ஜஸ_ரா தொக்காட்சிக்கு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ வழங்கியுள்ள பேட்டி.

கட்சியின் தலைமை பதவியை ரணில் தக்கவைத்துக்கொள்வாரா?

கட்சிக்குள் நெருக்கடிகள் எந்தளவுக்குத் தீவிரமடைந்திருந்தாலும், கட்சியின் தலைமைப் பதவியை ரணில் விக்கிரமசிங்க தொடர்ந்தும் தக்கவைத்தக்கொள்வார் என ஐ.தே.க.வின் விசுவாசியான நண்பர் ஒருவர் திட்டவட்டமாகத் தெரிவித்தார். தற்போதைய நிலையில் சஜீத் பிரேமதாசவினால் சலசலப்பை ஏற்படுத்த முடிந்தாலும், தலைமையைக் கைப்பற்றக் கூடியளவுக்கு கட்சிக்குள் அவருக்கு ஆதரவில்லை எனவும் அவர் குறிப்பிடுகின்றார். பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சிக்குள் உருவாகியிருக்கும் நெருக்கடிகள் தொடர்பாக உரையாடியபோதே அவர் இந்தக் கருத்துக்களைத் தெரிவித்தார்.
அவர் சொல்வதில் எந்தளவுக்கு உண்மையுள்ளது என்பது தெரியவில்லை. ஆனால், கட்சியின் முக்கிய பதவிக்குரியவர்களை இரகசிய வாக்கெடுப்பின் மூலமாகத் தெரிவு செய்வதென்ற தீர்மானத்தை ஐக்கிய தேசியக் கட்சி எடுத்திருப்பதையடுத்து கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க ஒரு தற்காப்பு நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார் என்பது மட்டும் தெளிவாகத் தெரிகின்றது. கட்சியின் கடந்த காலத் தோல்விகளுக்கு தன்னுடைய தலைமை காரணமல்ல என்பதைச் சொல்வதற்கு அவர் முற்பட்டுள்ளமையை அவரது அண்மைக் காலப் பேட்டிகளில் காணக்கூடியதாகவிருக்கின்றது. 
கட்சியின் முக்கிய பதவிகளை வகிக்கவுள்ளவர்களை இரகசிய வாக்கெடுப்பின் மூலமாகத் தெரிவு செய்வது என்ற தீர்மானத்தை எடுத்திருப்பதன் மூலமாக ஐ.தே.க.வுக்குள் உருவாகியிருந்த நெருக்கடி அடுத்த கட்டத்துக்கு நகர்த்தப்பட்டுள்ளது என்றுதான் சொல்ல வேண்டும். முன்னாள் சாநாயகர் ஜோசப் மைக்கல் பெரேரா தலைமையில் அமைக்கப்பட்ட ஆறு உறுப்பினர்களைக் கொண்ட குழு இது தொடர்பில் தன்னுடைய பரிந்துரைகளை முன்வைத்திருக்கின்றது. கட்சியின் செயற்குழுவும் இதற்கான அங்கீகாரத்தை வழங்கியிருப்பதன் மூலம் ஐ.தே.க.வுக்கு புதிய ஜனநாயக வடிவம் ஒன்று கொடுக்கப்பட்டிருக்கின்றது. 
ஐ.தே.க.வின் கடந்தகால நடைமுறைகளைப் பொறுத்தவரையில் இது ஒரு முக்கியமான திருப்புமுனை என்றுதான் சொல்ல வேண்டும். கட்சியின் பிரதித் தலைவர், உப தலைவர் தேசிய அமைப்பாளர், தவிசாளர் போன்ற முக்கியமான பதவிக்குரியவர்களைக் கட்சித் தலைமை நியமிக்கும் ஒரு நடைமுறைதான் கடந்த காலங்களில் காணப்பட்டது. இது கட்சித் தலைவருக்கு அதிகளவு அதிகாரத்தை வழங்கும் ஒரு நடைமுறையாகும். ஆனால், புதிய சீர்திருத்தங்களின்படி இந்தப் பதவிக்குரியவர்கள் மட்டுமன்றி கட்சித் தலைவர் கூட இரகசிய வாக்கெடுப்பின் மூலமாகவே தெரிவு செய்யப்படுவார்கள். இதன் மூலம் கட்சிக்குள் ஜனறாயகம் உருவாக்கப்பட்டுவிட்டதாகக் கூறப்படுகின்றது.
கட்சிச் சீர்திருத்தங்கள் பற்றிய இந்த அறிவிப்பு வெளிவந்திருக்கும் நிலையில், கட்சித் தலைமையை மையப்படுத்தி உருவாகியிருக்கும் நெருக்கடி ஒரு புதிய கட்டத்துக்குள் பிரவேசித்திருப்பதாகவே தெரிகின்றது. கட்சியின் செயற்குழு இந்த யோசனைகளை ஏற்றுக்கொண்டிருக்கும் நிலையில், கட்சியின் பாராளுமன்றக் குழுவில் இதற்கான அங்கீகாரம் பெற்றுக்கொள்ளப்பட வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது. இதனைத் தொடர்ந்து ஜூலை மாதத்தில் நடைபெறவிருக்கும் கட்சியின் வருடாந்தப் பொதுக் கூட்டத்தில் கட்சிப் பொதுக்குழு இதனை ஏற்றுக்கொள்ள வேண்டும். அதன் பின்னரே புதிய சீர்திருத்த யோசனைகள் நடைமுறைப்படுத்தப்படும்.
கட்சியின் அணுகுமுறையில் உருவாகியுள்ள இந்த மாற்றங்கள் அனைத்தும் கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவை ஓரங்கட்டுவதையே நோக்கமாகக் கொண்டிருப்பதாகக் கருதப்படுகின்றது. அண்மைக்காலங்களில் கட்சி எதிர்கொள்ளும் தொடர்ச்சியான தோல்விகளுக்கு ரணிலின் பலவீனமான தலைமைத்துவமே காரணம் எனக்குறிப்பிடும் அவரது எதிரணியினர், தலைமையை மாற்றுவதன் மூலமாகவே வெற்றிப் பாதையில் கட்சியைக் கொண்டு செல்ல முடியும் என்பதையும் வலியுறுத்துகின்றார்கள். இலங்கையின் அரசியலைப் பொறுத்தவரையில் மேல்நாட்டுப் பாணியிலான தலைமைத்துவம் ஒன்றை சிங்களவர்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்பதையும் இவர்கள் சுட்டிக்காட்டுகின்றார்கள்.
இருந்தபோதிலும் ரணில் விக்கிரமசிங்கவைப் பொறுத்தவரையில் கட்சியின் தோல்விகளுக்கு தன்னுடைய தலைமைத்துவம்தான் காரணம் என்பதை ஏற்றுக்கொள்வதற்கு அவர் தயாராகவில்லை. கட்சி உறுப்பினர்கள் கேட்டுக்கொண்டால் தலைமைப் பதவியிலிருந்து விலகிச் செல்வதற்குத் தான் தயாராக இருப்பதாக அவர் தெரிவித்திருந்தாலும்கூட, தலைமைப் பதவியைத் தொடர்ந்தும் தக்கவைத்துக்கொள்ள வேண்டும் எனபதில் அவர் அக்கறையுள்ளவராகவே இருக்கின்றார். இல்லையென்றால் தனக்குப் போட்டியாக உருவாகிய சஜீத் பிரேமதாசவுக்குப் பிரதித் தலைவர் பதவியைத் தருவதாக அவர் தெரிவித்திருக்கவேண்டியதில்லை. 
எது எப்படியிருந்தாலும், கட்சியின் நிலைமைகள் அவருடைய கட்டுப்பாட்டிலிருந்து விலகிச் சென்றுவிட்டது என்பதைத்தான் இரகசிய வாக்கெடுப்பின் மூலம் கட்சியின் முக்கிய பொறுப்புக்குரியவர்களைத் தெரிவு செய்வதற்கு எடுக்கப்பட்டுள்ள தீர்மானம் வெளிப்படுத்துகின்றது. இருந்தபோதிலும் இன்னும் இரண்டு தடைகளைத் தாண்டிச் சென்றால்தான் இது நடைமுறைப்படுத்தப்படும். பாராளுமன்றக் குழுவும், பொதுக்குழுவும் இதனை உடனடியாக ஏற்றுக்கொண்டுவிடும் என்பது எதிர்பார்க்கக்கூடியதல்ல. அதனால் ரணிலுக்கு சாதகமான நிலை இன்னும் இருக்கின்றது என்றுதான் சொல்ல வேண்டும்.
இதேவேளையில், கட்சியின் கடந்தகாலத் தோல்விகளுக்கு தன்னுடைய தலைமைதான் காரணம் என்ற குற்றச்சாட்டுக்குப் பதிலளிப்பதுடன், தனது தலைமையின் முக்கியத்துவத்தை உணர்த்துவதற்கான முயற்சிகளிலும் ரணில் ஈடுபட்டுள்ளார். ஆங்கிலப் பத்திரிகை ஒன்றுக்கு வழங்கியுள்ள நேர்காணல் ஒன்றில் கடந்த காலத் தோல்விகளுக்கான காரணங்களை அவர் தன்னுடைய பார்வையில் வெளிப்படுத்தியிருக்கின்றார். 1994 ஆம் ஆண்டில் கட்சியின் தலைமைப் பதவியைப் பொறுப்பேற்றுக்கொண்ட பின்னர் 2001 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலைத் தவிர அனைத்துத் தேர்தல்களிலும் அவர் தோல்வியையே சந்தித்திருக்கின்றார். 
1999 ஆம் ஆண்டு இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தலில்தான் ரணில் முதல் முறையாகத் தோல்வியடைந்தார். இத்தேர்தலில் சந்திரிகாவுக்கும் தனக்கும் இடையில் கடுமையான போட்டி காணப்பட்ட போதிலும், தேர்தல் பிரச்சாரத்தில் இறுதித் தினத்தில் இடம்பெற்ற தாக்குதலில் சந்திரிகா படுகாயமடைந்தததன் மூலமாகப் பெற்றுக்கொண்ட அனுதாப வாக்ககளே தனது தோல்விக்கு காரணம் என அவர் குறிப்பிடுகின்றார். அதேபோல 2005 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி வாய்ப்புக்கள் தனக்கு இருந்த போதிலும், ; புலிகளின் பகிஷ்கரிப்பு கோரிக்கை காரணமாக தமிழர்கள் வாக்களிக்காமல் விட்டமையினாலேயே தான் மயிரிழையில் தோல்வியைச் சந்தித்ததாக ரணில் குறிப்பிடுகின்றார். 
ரணில் தெரிவித்திருக்கும் விடயங்களில் உண்மையில்லாமல் இல்லை.  இரண்டு ஜனாதிபதித் தேர்தல்களிலும் அவர் சொற்ப வாக்குகளால்தான் தோல்வியைத் தீழுவினார் என்பதுடன் இறுதி நேரத்தில் ஏற்பட்ட மாற்றங்களே அவரது தோல்விக்குக் காரணமாக அமைந்திருந்தன என்பதும் உண்மை. இவற்றை இப்போது சொல்லிக்கொள்வதன் மூலம் கட்சிக்குள் அவருக்குச் சார்பாக அனுதாப அலை ஒன்றை உருவாக்கும் முயற்சிகளில் அவர் இறங்கியிருக்கின்றாரோ தெரியவில்லை. ஆனால், அந்த இறுதிநேர மாற்றங்களைத் துல்லியமாகக் கணித்து அதற்கான மாற்று உபாயங்களைக் கையாளதததுதான் அவரது தோல்விக்குக் காரணமாக இருந்துள்ளது. இது அவரது தலைமைத்துவத்தின் ஒரு தவறேயன்றி வேறல்ல.
ரணில் தோல்வியைச் சந்திக்கும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும், அவருக்கு எதிரான அழுத்தங்கள் அதிகரித்தே வந்திருக்கின்றன.  அவற்றை எல்லாம்  வெற்றிகரமாகச் சமாளித்து தனது தலைமைப் பதவியை அவர் தக்கவைத்தே வந்திருக்கின்றார். இந்த முறையும் அதேபோல அவர் சமாளிப்பார் என அவருக்கு நெருக்கமானவர்கள் கூறுகின்றார்கள்.  தற்போதைய  அரசியல் கள நிலையில் ரணிலுக்கு பதிலாக யார் தலைமைப் பொறுப்பை ஏற்றுக்கொண்டாலும், அவர்களால் கட்சியை வெற்றிப் பாதையில் கொண்டு செல்வது சாத்தியமானதாக இருக்கப்போவதில்லை. இராணுவ வெற்றியை மையப்படுத்திய இனவாத அலையில் மகிந்த  நாட்டைக் கொண்டுவந்து வைத்திருக்கின்றார்.  இந்த நிலையில் ரணிலுக்குப் போட்டியாக உருவாகும் சஜித் போன்றவர்களால் கூட எதுவும் செய்ய முடியாது என்பதே உண்மைகும்.

Thursday, May 27, 2010

யாழ்ப்பாணம்: "மீள் குடியேற்றம்" என்ற பிரச்சாரத்தின் மறுபக்கம் - 02


யாழ்ப்பாணக் குடாநாட்டைப் பொறுத்தவரையில் வலிகாமம் வடக்கில் இடம்பெற்ற இடப்பெயர்வுதான் முதலாவது இடப்பெயர்வு எனக் குறிப்பிலாம் மக்களை தமது சொந்த மண்ணிலிருந்து வெளியேற்றிய இச்சம்பவம் 1986 ஆம் ஆண்டில் ஜனவரி 13 ஆம் திகதி இடம்பெற்றது.  இனநெருக்கடி ஆயுதப் போராக மாற்றமடையத் தொடங்கியிருந்த நிலையில் தமது படைப்பலத்தைக் கொண்டு அதனை ஒடுக்குவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டிருந்த இலங்கை அரசாங்கம் முன்னெடுத்த இராணுவ நடவடிக்கை ஒன்றுடனேயே இந்த இடப்பெயர்வு ஆரம்பமானது.

1985 ஆம் ஆண்டு நடுப்பகுதியில் யாழ்ப்பாணக் குடாநாட்டின் பெரும்பாலான பகுதிகள் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுக்குள் வந்திருந்தது. இராணுவம் பெருமளவுக்கு முகாம்களுக்குள்ளேயே முடக்கப்பட்டிருந்ததுடன், முகாம்களின் பாதுகாப்பும் கேள்விக்குறியாக்கப்பட்டிருந்தது. யாழ்ப்பாணக் குடாநாட்டில் சிவில் நிர்வாகத்தை தமது கட்டுப்பாட்டுக்குள் விடுதலைப் புலிகள் கொண்டுவந்திருந்தார்கள். இந்த நிலையில் பலாலி விமானத் தளத்தின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காக இராணுவம் சில நடவடிக்கைகளை மேற்கொண்டது.

1986 ஜனவரி 13 ஈழத் தமிழ் மக்களைப் பொறுத்தவரையில் ஒரு கரிநாள். அவர்கள் தமது சொந்த இடங்களிலிருந்து வேருடன் அகற்றப்பட்டும் சம்பவங்கள் ஆரம்பமான  நாள். அன்றைய தினம் பலாலி விமானப்படைத் தளத்திலிழருந்து ஏழாலையை நோக்கி குரும்பசிட்டி ஊடாக முன்னெடுக்கப்பட்ட இராணுவ நடவடிக்கை யின் போது மூன்று அப்பாவி  இளைஞர்கள் இராணுவத்தால் சுட்டுக்கொல்லப்பட்டனர். மேலும் சிலர் சிறைப்பிடிக்கப்பட்டு காணாமல் போனார்கள். பல வீடுகள் தரைமட்டமாக்கப்பட்டன. 

சிதைக்கப்பட்ட குரும்பசிட்டி

அன்றைய தினம் வரலாற்றுப்பெருமை மிக்க குரும்பசிழட்டி கிராமம் இராணுவ நடவடிக்கையால் சிதைக்கப்பட்டது. இராணுவத்தால் இவ்வாறு சிதைக்கப்பட்ட முதலாவது தமிழ்க் கிராமம் என குரும்பிட்டி கிராமத்தையே கூற வேண்டும். அதனைத் தொடர்ந்து ஜனவரி 22 ஆம் திகதி பலாலியிலிருந்து தெல்லவிப்பளைக்கு இராணுவ நடவடிக்கை ஒன்று முன்னெடுக்கப்பட்டது. இதன்போது இடம்பெற்ற மோதலில் மேஜர் தரத்திலுள்ள இராணுவ உயர் அதிகாரி ஒருவர் விடுதலைப் புலிகளின் கண்ணிவெடித் தாக்குதலில் கொல்லப்பட்டிருந்தார்.

இதனையடுத்து குரும்பசிட்டி ஊடாகவே மீண்டும் இராணுவ நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. இச்சம்பவத்திலும் சில அப்பாவிப்பொதுமக்கள் கொல்லப்பட்டனர். பெருமளவு வீடுகள் வர்த்தக நிலையங்கள் என்பன இராணுவத்தின் கவச வாகனங்களினாலும் புல்டோசர்களினாலும் தரைமட்டமாக்கப்பட்டன. இது போன்ற இராணுவ நடவடிக்கைகளினால் குரும்பசிட்டி மக்கள் இடம்பெயர வேண்டிய நிலை ஏற்பட்டது. 1986 ஆம் ஆண்டு ஜனவரியில் குரும்பசிட்டி, கட்டுவன், வசாவிளான் போன்ற பகுதிகளைச் சேர்ந்த மக்கள் முழுமையாகவே இடம்பெயர்ந்தார்கள். 

1986 ஆண்டில் முதல் முறையாகவும் பின்னர் 1990 ஆம் ஆண்டிலும் என என வலிகாமம் வடக்குப் பகுதி மக்கள் தமது வளம் மிக்க மண்ணை விட்டு வெளியேறினார்கள். 20 வருடங்களுக்கு முன்னர் தமது வாழ்வாதாரங்களையும்,  வாழ்ந்த நிலத்தையும் இழந்த இந்த மக்கள் இன்று வரையில் தமது சொந்த இடங்களுக்குத் திரும்பிச் செல்ல முடியாதவர்களாகவே உள்ளனர்.  அகதகளாக அனாதைகளாக உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் அல்லல்படுகின்றார்கள்.
கடந்த 20 வருட காலமாக தமது வீடுகளைக் கூட பார்வையிட அனுமதிக்கப்படாதவர்களாகவே இவர்கள் உள்ளனர். உண்மையில் இப்பகுதியிலுள்ள வீடுகள் அனைத்தும் உடைக்கப்பட்டு தரைமட்டமாக்கப்பட்ட நிலைதான் உள்ளது என்பதை அங்கு நேரில் சென்ற சிலர் கண்டுள்ளார்கள்.  வீடுகள் இருந்தமைக்கான அடையாளங்களைக் கூட சில இடங்களில் காண முடியாதிருக்கின்றது.  போரினால் அந்தப் பகுதி சிதைக்கப்பட்டிருப்பதால் தமது வீடுகளை மட்டுமல்ல, தமது காணிகள் எங்கே இருந்தன என்பதைக்கூட அடையாளம்காண முடியாதவர்களாகவே இந்தப் பகுதி மக்கள் உள்ளனர். 

1986 ஜனவரி மாதம் குரும்பசிட்டி, கட்டுவன் மற்றும் வசாவிளான் பகுதிளை இராணுவம் ஆக்கிரமித்துக்கொண்ட போது, மக்கள் முழுமையாகவே அந்தப் பகுதிகளிலிருந்து இடம்பெயர்ந்தார்கள். இருந்தபோதிலும் 1987 ஜூலையில் இந்திய அமைதிப்படை வந்திறங்கிய பின்னர் உருவாகிய சமாதான காலத்தில் இடம்பெயர்ந்த மக்கள் மீண்டும் தமது சொந்த இடங்களில் குடியமர்வதற்கான அனுமதி வழங்கப்பட்டது. ஒன்றரை வருடங்காகத் தொடர்ந்த தமது இடப்பெயர் வாழ்க்கை அத்துடன் முடிவுக்கு வந்துவிட்டதாக அவர்கள் நம்பிய போதிலும் அது உண்மையாக அமையவில்லை.

இரண்டாவது இடப்பெயர்வு

1990 ஆம் ஆண்டு இரண்டாவது ஈழப் போர் ஆரம்பமான பின்னர் வலிகாமம் வடக்கு மக்கள் தமது சொந்த இடங்களைக் கைவிட்டு வெளியேறுவதற்கு மீண்டும் நிர்ப்பந்திக்கப்பட்டனர். இதன் மூலம் வலிகாமத்தில் இரண்டாவது இடப்பெயர்வு ஏற்பட்டது. முழுமையாகவே இந்தப் பகுதி மக்கள் இடம்பெயர்ந்தார்கள். வலிகாமம் வடக்கின் குடித்தொகை அப்போது 83,600 என மதிப்பிடப்பட்டிருந்தது. இது உண்மையில் 1981 ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட குடித்தொகைக் கணிப்பீட்டின் அடிப்படையிலானதாகும். உண்மையில் இத்தொகை அவர்கள் வெளியேறிய போது ஒரு லட்சம் வரையில் அதிகரித்திருந்திருக்கலாம் என மதிப்பிடப்படுகின்றது.

வலிகாமம் வடக்கு தவிர, தென்மராட்சியில் தனக்கிளப்பு மற்றும் அதனையடுத்துள்ள பகுதிகள், காரைநகரில் கடற்படை முகாமையடுத்துள்ள பகுதிகள் என்பனவும் அதி உயர் பாதுகாப்பு வலயங்களாகப் பிரகடனப்படுத்தப்பட்ட போதிலும், வலிகாமம் வடக்கில் மக்களுக்கு ஏற்பட்டளவுக்கு அதிகளவு பாதிப்புக்களை அது ஏற்படுத்தவில்லை. அத்துடன் அங்கிருந்து வெளியேறியவர்களின் தொகையும் வலி வடக்குடன் ஒப்பிடும் போது மிகவும் குறைவானதாகவே இருந்தது. 

2003 ஆம் ஆண்டு அகதிகள் கவுண்சில் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றின்படி யாழ்ப்பாண மாவட்டத்தில் பாதுகாப்பு வலயங்களாகப் பிரகடனப்படுத்தப்பட்ட 18 இடங்கள் காணப்பட்டன. இது 160 சதுர கிலோ மீட்டர் பரப்பை உள்ளடக்கியதாகும். யாழ்ப்பாண நிலப்பரப்பில் இது 18 வீதம் என்பது குறிப்பிடத்தக்கது. விடுதலைப் புலிகள் அமைப்புக்கும் ரணில் விக்கிரமசிங்க அரசாங்கத்துக்கும் இடையேயான பேச்சுக்களில் (2002 – 2004) அதிஉயர் பாதுகாப்பு வலயப் பிரச்சினை முக்கியமானதாக இருந்தமைக்கும் இதுதான் காரணம்.

விடுதலைப் புலிகள் அமைப்பினரால் இக்காலப் பகுதியில் வெளியிடப்பட்ட அறிக்கைகளில், அதிஉயர் பாதுகாப்பு வலயம் காரணமாக 30,000 வீடுகள், 300 பாடசாலைகள், 40 கைத்தொழில் நிறுவனங்கள் பாதிக்கப்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனைவிட 42,000 ஏக்கருக்கும் அதிகமான விவசாய நிலமும் பயிர்ச்செய்கைக்கு உட்படுத்தப்பட முடியாத நிலை ஏற்பட்டிருப்பதாக புலிகள் தெரிவித்திருந்தார்கள்.

யாழ்ப்பாண அரசாங்க செயலகத்தினால் 2005 நவம்பரில் மேற்கொள்ளப்பட்ட மதிப்பீட்டின்படி அதிஉயர் பாதுகாப்பு வலயப் பிரச்சினை காரணமாக இடம்பெயர்ந்தவர்களில் சுமார் 9,000 பேர் முகாம்களில் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனைவிட சுமார் 16,000 குடும்பங்களைச் சேர்ந்த சுமார் 60,000 பேர் தமது உறவினர்கள் மற்றும் நண்பர்களுடைய இல்லங்களில் தங்கியிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது. ஏனையவர்கள் தென்பகுதிக்கு அல்லது வெளிநாடுகளுக்கு இடம்பெயர்ந்துள்ளார்கள்.

முறைப்பாடுகளும் வழக்கும்

போர் நிறுத்தம் நடைமுறையிலிருந்த கால கட்டத்தில், இடம்பெயர்ந்த மக்கள் போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழுவிடமும், மனித உரிமைகள் ஆணைக்குழுவிடமும் இது தொடர்பாக பெருமளவு முறைப்பாடுகளைச் செய்திருந்தார்கள். அதிஉயர் பாதுகாப்பு வலயங்கள் காரணமாக தமது அடிப்படை உரிமைகள் மீறப்படுவதாக அவர்கள் தெரிவித்திருந்தார்கள். குறிப்பாக தமது நடமாடும் சுதந்திரம், தமது வசிப்பிடத்தைத் தெரிவு செய்வதற்கான உரிமை, சட்டத்தின் முன்பாக சமத்துவம் என்பன மீறப்படுவதாக இந்த முறைப்பாடுகளில் தெரிவிக்கப்பட்டிருந்தது. 

2004 ஆகஸ்ட் மாதம் உயர் நீதிமன்றமும் இது தொடர்பான முக்கிய தீர்ப்பு ஒன்றை வழங்கியிருந்தது.  யாழ்ப்பாண வாசி ஒருவர் தாக்கல் செய்திருந்த மனு மீதே இந்தத் தீர்ப்பு வழங்கப்பட்டிருந்தது. சின்னப்பு சிவஞானசம்பந்தர் என்பரால் தாக்கல் செய்யப்பட்ட இந்த மனு மீதான தீர்ப்பில் "மனுதாரர் தனது காணிக்குச் செல்வதற்கும் அங்கு விவசாயச் செய்வதற்கும் அனுமதிக்கப்பட வேண்டும்" என நீதிமன்றம் தெரிவித்திருந்தது. இலங்கை அரசியலமைப்பில்  உறுதியளிக்கப்பட்டுள்ள சுதந்திரம் மீறப்பட்டிருப்பதை இந்த வழக்கு கோடிட்டுக் காட்டுவதாக அமைந்திருந்தது.
  

வலி வடக்குப் பகுதிகளிலிருந்து வெளியேறிய மக்கள் பின்னர் போர் நிறுத்தங்கள் ஏற்பட்ட காலங்களில் மீண்டும் மீளக்குடியேற அனுமதிக்கப்பட்டார்களா என வலி வடக்கு மீள்குடியேற்ற புனர்வாழ்வுக் குழுவின் தலைவர் ஆ.சி.நடராஜாவை யாழ்ப்பாணத்தில் சந்தித்துக் கேட்ட போது அவர் அது தொடர்பாக விளக்கினார்:
"1996 மற்றும் 97 ஆம் ஆண்டுகளில் மீளக்குடியேற அனுமதிக்கப்பட்ட போது, 44 கிராமசேவகர் பிரிவுகளைச் சேர்ந்தவர்களில் 11  பிரிவுகளில் முழுமையாகவும், ஆறு பிரிவுகளில் பகுதி அளவிலும் மீளக்குடியேறுவதற்கு மக்கள் அனுமதிக்கப்பட்டனர். அதன் பின்னர் யாரும் மீளக்குடியேற அனுமதிக்கப்படவில்லை. ஏனைய பகுதிகள் தொடர்ந்தும் உயர் பாதுகாப்பு வலயமாகத்தான் இன்றுவரையில் இருக்கின்றது."

உயர் பாதுகாப்பு வலயம் தொடர்பான பிரகடனம் முதன் தடவையாக 1986 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்டது. அதன்படி பலாலி விமான நிலையத்திலிருந்து ஆயிரம் கிலோ மீட்டர் தூரம் உயர் பாதுகாப்பு வலயமாகப் பிரகடனம் செய்யப்பட்டது. இதுதான் முதலாவது பிரகடனமாகும். இதனைத் தொடர்ந்து இரண்டாவது பிரகடனம் 1990 ஆம் ஆண்டு வலிகாமம் வடக்குப் பகுதி முழுவதும் உயர் பாதுகாப்பு வலயமாகப் பிரகடனம் செய்யப்பட்டது. உண்மையில் இந்தப் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட இராணுவ நடவடிக்கை காரணமாக அப்பகுதி மக்கள் அனைவரும் முழுமையாக வெளியேற்றப்பட்ட பின்னரே இந்தப் பிரகடனம் வெளியிடப்பட்டது.

இவ்வாறு வெளியேற்றப்பட்ட மக்களுக்கு மாற்று ஏற்பாடுகளோ அல்லது அவர்கள் தமது வாழ்வாதாரங்களைக் கொண்டு செல்வதற்கான வசதிகளோ செய்து கொடுக்கப்படவில்லை. இதனால் அவர்கள் வாழ்வில் சந்தித்த சந்திக்கும் அவலங்கள் பல. இன்று வரையில் இவர்களுடைய மீள்குயேற்றத்துக்கான ஆக்கபூர்வமான செயற்பாடுகள் எதுவும் மேற்கொள்ளப்படவில்லை. போர் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டுவிட்டதாகக் கூறப்பட்டாலும், இவர்களுடைய அவலங்களை முடிவுக்குக் கொண்டுவர நடவடிக்கைள் எடுக்கப்படவில்லை.

- மேலும் தகவல்களுடன் அடுத்த வாரம்..

Wednesday, May 26, 2010

கூட்டமைப்புடன் பேச்சு நடத்த அரசாங்கம் முயற்சிக்கின்றதா?

இன நெருக்கடிக்கான தீர்வு முயற்சிகள் தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் பேச்சுக்களை நடத்துவதற்கு அரசாங்கம் தயாராகிவருகின்றதா?
கடந்தவாரப் பத்திரிகை ஒன்று வெளியிட்டிருந்த செய்தி ஒன்றைத் தொடர்ந்து அரசியல் வட்டாரங்களில் எழுப்பப்பட்ட பிரதான கேள்வியாக இதுவே அமைந்திருந்தது. அரசியலமைப்புத் திருத்தம், தேர்தல் முறையில் மாற்றம் என்பன தொடர்பில் செய்திகள் வெளியாகிக் கொண்டிருக்கும் ஒரு தருணத்தில்தான் இந்தச் செய்தியும் வெளியாகியிருந்தது. இச்செய்தி தொடர்பான நம்பகத்தன்மை அதிகமாகக் காணப்பட்டமைக்கு அதுவும் ஒரு காரணம்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் அரசாங்கம் திரைமறைவில் பேச்சுக்களை ஆரம்பித்திருப்பதாக இந்தச் செய்தியில் தெரிவிக்கப்பட்டிருந்தது. அரசியலமைப்புக்கான புதிய சீர்திருத்தங்களை முன்வைப்பதற்கு அரசாங்கம் தயாராகவுள்ள நிலையில் கூட்டமைப்பின் கருத்துக்களையும் "உள்வாங்கும்" நோக்கில் இந்தப் பேச்சுக்களை அரசாங்கம் ஆரம்பித்திருக்கலாம் எனவும் கருதப்பட்டது. 
அதேவேளையில் பொதுத் தேர்தலில் தெரிவுசெய்யப்படும் பிரதான தமிழர் பிரதிநிதிகளுடன் பேச்சுக்களை நடத்தி இனநெருக்கடிக்கு அரசியல் தீர்வைக் காண்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என தேர்தலுக்கு முன்னர் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ பகிரங்கமாகவே அறிவித்திருந்தார். இந்த நிலையில் பேச்சுக்களுக்கான அழைப்பு வரும் என கூட்டமைப்பும் எதிர்பார்த்திருந்த ஒரு பின்னணியிலேயே இந்தச் செய்திகளும் வெளியாகியிருக்கின்றது என்பது கவனிக்கத்தக்கது. 
இருந்தபோதிலும், அரசியலமைப்புச் சீர்திருத்தம் மற்றும் தேர்தல் முறை மாற்றம் என்பன தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உணர்வுகள் எவ்வாறு இருக்கின்றது என்பதை நாடி பிடித்துப் பார்ப்பதற்கான ஒரு முயற்சியையே அரசாங்கம் கடந்த வாரத்தில் மேற்கொண்டதாகத் தெரிகின்றது. பேச்சுவார்த்தைகளோ அல்லது பேச்சுவார்த்தைகளுக்கான ஆயத்தங்களோ எதுவும் இல்லை என கூட்டமைப்பு வட்டாரங்களிலிருந்து கிடைத்த தகவல்கள் தெரிவிக்கின்றன.
புதிய வெளிவிவகார அமைச்சராகப் பதவியேற்றுள்ள பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ்தான் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனைச் சந்தித்திருக்கின்றார். உத்தியோகப்பற்றற்ற ரீதியிலான இந்தச் சந்திப்பின்போது, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மனப்போக்கு எவ்வாறுள்ளது என்பதை அறிந்துகொள்வதற்கு பேராசிரியர் பீரிஸ் முற்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது. ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் உத்தரவின் பேரிலேயே இந்தச் சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டதாகவும் சம்பந்தனிடம் பேராசிரியர் கூறியிருக்கின்றார்.
இருந்தபோதிலும், இது ஒரு திரைமறைவிலான பேச்சுவார்த்தையோ அல்லது பேச்சுக்களுக்கான முன்னோடியோ அல்ல என்பதைத் தமிழ்க் கூட்டமைப்பினர் அடித்துக்கூறுகின்றார்கள். 
13 வது திருத்தம் தொடர்பாக கூட்டமைப்பின் கருத்துக்களை அறிந்துகொள்வதற்கு இந்தச் சந்திப்பின்போது பேராசிரியர் பீரிஸ் முற்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இதற்குப் பதிலளித்த சம்பந்தன், "இது பேச்சுக்களை ஆரம்பிப்பதற்கே உதவாது" என திட்டவட்டமாக நிராகரித்ததுடன், "இதனை நீங்களே முன்னர் தெரிவித்திருந்தீர்கள்" எனவும் பேராசிரியருக்குச் சுட்டிக்காட்டியிருக்கின்றார். 
அரசியலமைப்பு சீர்திருத்த முயற்சிகளைப் பொறுத்தவரையில் அமைச்சர் பீரிஸை அதிகளவுக்குப் பயன்படுத்துவதற்கு அரசாங்கம் முற்பட்டிருப்பது தெரிகின்றது. அரசியலமைப்பு விவகாரங்களில் நிபுணத்துவம் வாய்ந்தவரான பேராசிரியர், சந்திரிகா குமாரதுங்கவின் அரசாங்கத்தில் அரசியலமைப்பு விவகாரங்களைக் கையாண்டவர். பின்னர் ரணில் விக்கிரமசிங்கவின் அரசாங்கத்தில் விடுதலைப் புலிகளுடனான பேச்சுக்களுக்கு அரச தரப்புக் குழுவுக்குத் தலைமைதாங்கியர். அத்துடன் சர்வதேச ரீதியாகவும் பேராசிரியருக்கு நம்பகத்தன்மை உள்ளது. ஆக பேராசிரியரை இந்த முயற்சிகளுக்குப் பயன்படுத்துவது உள்நாட்டு ரீதியாகவும் அனைத்துலக ரீதியாகவும் தமக்குச் சாதகமானது என ஜனாதிபதி கருதுவதாகத் தெரிகின்றது. 
ஆனால், சம்பந்தனுடனான சந்திப்பு தற்போதைய அரசியல் நிலையில் கூட்டமைப்பு எவ்வாறான மனோ நிலையில் உள்ளது என்பதை நாடி பிடித்துப்பார்ப்பதற்காக அரசு மேற்கொண்ட ஒரு முயற்சியாக மட்டுமே கருதப்பட வேண்டும். அரசியலமைப்புச் சீர்திருத்தம் மற்றும், தேர்தல் முறையில் மாற்றங்களைச் செய்வதற்கு முன்னதாக கூட்டமைப்பின் உணர்வுகளை அறிந்துகொள்வதற்கான ஒரு முயற்சியாக இது இருந்திருக்கலாமே தவிர கூட்டமைப்பின் கருத்துக்களை உள்வாங்கிச் செயற்பட வேண்டிய தேவை எதுவும் அரசுக்கு இல்லை. 
தமிழர் தரப்பில் தெரிவு செய்யப்படும் பிரதான பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என அரசாங்கம் தேர்தலுக்கு முன்னர் சொன்னது என்னவோ உண்மைதான். ஆனால், கூட்டமைப்புடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டிய அரசியல் நிர்ப்பந்தம் எதுவும் அரசாங்கத்துக்கு இல்லை என்பதை இந்தப் பகுதியில் முன்னரே குறிப்பிட்டிருந்தோம். 
மூன்றில் இரண்டு பெரும்பான்மைக்கு மிக அண்மித்தான வெற்றியைப் பாராளுமன்றத் தேர்தலில் பெற்றுள்ள அரசு, அரசியலமைப்பைத் திருத்துவதற்கான முயற்சிகளில் இப்போது ஈடுபட்டுள்ளது. புதிய அரசியலமைப்பு யோசனைகள் அடுத்தமாத் அளவில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவிருப்பதாகவும் செய்திகள் வெளியாகியிருக்கின்றன. மூன்றில் இரண்டு பெரும்பான்மையை இதனை நிறைவேற்றுவதற்காகப் பெற்றுக்கொள்ளக் கூடியதாக இருக்கும் எனவும் அரச தரப்பினர் நம்பிக்கை வெளியிட்டுவருகின்றார்கள். 
மூன்றில் இரண்டு பெரும்பான்மையைப் பெற்றுக்கொள்வதற்கு இன்று அரசுக்குத் தேவையாக இருப்பது வெறுமனே ஏழு வாக்குகள்தான். இதனைத் தமிழ்க் கூட்டமைப்பிடமிருந்து பெற்றுக்கொள்வதற்கு அரசு விரும்பாது. கூட்டமைப்பின் ஆதரவைப் பெற்றுக்கொள்ள வேண்டுமாயின் அரசியலமைப்புத் திருத்தம் தமிழர்களின் அபிலாஷைகளைப் ப+ர்த்தி செய்வதாக அமைந்திருக்க வேண்டும். ஆனால், அவ்வாறான ஒரு யோசனையை முன்வைத்தால் சிங்கள ஆதரவுத் தளத்தை அரசு இழக்க வேண்டியிருக்கும். 
அண்மைய தேர்தல்களில் அரசாங்கத்துக்குப் பெரும் வெற்றியைப் பெற்றுக்கொடுத்தது சிங்களக் கடும் போக்காளர்களின் ஆதரவுத் தளம்தான். தமிழர்களுக்கு எதிராக இனவாதத்துடன் கூடிய ஒரு கடும்போக்கை அரசாங்கம் தனது கொள்கையாக வெளிப்படுத்தியமையால்தான் மூன்றில் இரண்டுக்கு அண்மித்தான ஒரு பெரும்பான்மையைப் பாராளுமன்றத்தில் அரசாங்கத்தினால் பெற்றுக்கொள்ள முடிந்தது. 
இந்த நிலையில் தமிழ்க் கூட்டமைப்புடன் பேச்சுக்களை நடத்தி சிறுபான்மையினருடைய அரசியல் அபிலாசைகளுக்குச் சார்பான ஒரு அரசியலமைப்பு மாற்றத்தை அரசாங்கம் முன்வைக்கும் என யாராவது சொல்வார்களாயின் அவர்கள் இந்நாட்டு அரசியலைப் புரிந்துகொள்ளாதவர்களாகவே இருக்க வேண்டும்.
பாராளுமன்றத்தில் கிடைத்துள்ள பெரும்பான்மையைப் பயன்படுத்திக்கொண்டு அரசியலமைப்பை மாற்றியமைப்பதற்கான முயற்சிகளை அரசாங்கம் மேற்கொள்ளும் என்பது எதிர்பார்க்கக்கூடிய ஒன்றுதான். எந்தவொரு அரசாங்கமும் தமக்குக் கிடைக்கக்கூடிய இவ்வாறான சந்தர்ப்பத்தை தமக்குச் சாதகமாகவே பயன்படுத்திக்கொள்வார்கள் என்பது அரசியலில் யதார்த்தம். அந்தவகையில் அரசியலமைப்பை மாற்றியமைப்பதற்கான முயற்சிகளில் அரசாங்கம் இப்போது ஈடுபட்டுள்ளது. 
இந்த அரசியலமைப்புத் திருத்தத்தின் போது தேசம் எதிர்கொண்டுள்ள பிரச்சினைகளுக்குத் தீர்வைக் காண்பதைவிட, கட்சி ரீதியாகவும் தனிப்பட்ட ரீதியாவும் தமக்குள்ள அரசியல் பிரச்சினைகளுக்குத் தீர்வைக் காண்பதற்கே மகிந்த ராஜபக்ஷ முற்படுவார். அரசியலில் இது சகஜம். 1978 ஆம் ஆண்டு இரண்டாவது குடியரசு அரசியலமைப்பைக் கொண்டுவந்த ஜே.ஆர்.ஜெயவர்த்தன நாட்டைப் பற்றியோ மக்களைப் பற்றியோ சிந்திக்கவில்லை. அவ்வாறு அவர் சிந்தித்துச் செயற்பட்டிருந்தால் இந்த நாடு கடந்த காலத்தில் எதிர்கொண்ட பல பிரச்சினைகளைத் தவிர்த்திருக்க முடியும். தன்னுடைய அதிகாரங்களைப் பற்றி மட்டுமே ஜே.ஆர். சிந்தித்தார். அதனால்தான் ஜே.ஆரினால் ஜே.ஆருக்காக உருவாக்கப்பட்ட அரசியலமைப்பு என 1978 ஆண்டு அரசியலமைப்பை அரசியல் விமர்சகர்கள் குறிப்பிட்டிருந்தார்கள்.
தற்போது மகிந்த உருவாக்கும் அரசியலமைப்பும் அவ்வாறான தன்மையைக் கொண்டதாகவே இருக்கும் என எதிர்பார்க்கலாம். அரசாங்கத்தைப் பொறுத்தவரையில் இன்றுள்ள முதலாவது தேவை - ஜனாதிபதிப் பதவிக்காலத்தை மேலும் ஒரு தவணைக்கு நீடிப்பது. இரண்டாவது விகிதாசாரப் பிரதிநிதித்துவ தேர்தல் முறையை நீக்கிவிட்டு முன்னைய தேர்தல் தொகுதி முறையிலான தேர்தல் முறையை மீண்டும் நடைமுறைக்குக் கொண்டுவருவது. இதன் மூலம் இரண்டு நன்மைகளை அரசாங்கம் எதிர்பார்க்கின்றது. ஒன்று - ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் வெற்றியைத் தொடந்தும் உறுதிப்படுத்த முடியும். இரண்டு - ஜே.வி.பி. போன்ற சிறிய கட்சிகள் மற்றும் சிறுபான்மையினக் கட்சிகளின் முக்கியத்துவத்தைக் குறைத்து அவர்கள் சக்தியற்றவர்களாக்கிவிட முடியும். 
இந்த இரண்டு நோக்கங்களையும் அடிப்படையாகக் கொண்டதாகவே அரசியலமைப்புத் திருத்தம் அமையும் என நிச்சயமாக நம்பலாம்.  அதாவது அரசின் நிகழ்ச்சி நிரலில் இவைதான் முன்னணியில் உள்ள விடயங்கள்.  இனப் பிரச்சினைக்கான நியாயமான தீர்வு என்பது மகிந்த சிந்தனையில் இல்லாத ஒன்று. அவ்வாற தீர்வைக்காண வேண்டிய அரசியல் நிர்ப்பந்தம் எதுவும் அரசுக்கு இல்லை. இந்தியாவையும் சர்வதேசத்தையும் சமாதானப்படுத்துவதற்காக இடையிடையே சில அறிவிப்புக்களை வெளியிடுவதைவிட வேறு எதனையும் அரசாங்கம் மேற்கொள்ளும் என எதிர்பார்க்க முடியாது!
இந்த நிலையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் பேச்சுக்களை நடத்த வேண்டிய தேவை அரசாங்கத்துக்கு ஏன் வரப்போகின்றது?

யாழ்ப்பாணம்: "மீள் குடியேற்றம்" என்ற பிரச்சாரத்தின் மறுபக்கம் - 01

"எங்களை எங்களுடைய சொந்த நிலத்தில் மீண்டும் குடியேற்றுவார்கள் என்ற நம்பிக்கையுடன்தான் நாம் வவுனியா மெனிக் பாம் முகாமிலிருந்து யாழ்ப்பாணத்துக்கு வந்தநாங்கள்..ஆனால், இங்கு வந்த பின்னர்தான் தெரிந்தது எங்களை யாழ்ப்பாணத்திலை உள்ள மற்றொரு முகாமுக்குள் வைத்திருப்பதுதான் அவர்களுடைய திட்டம் என்பது" என்று என்று கூறும் மூதாட்டி ஒருவர், "வலிகாமம் வடக்கில் எங்களுக்கு சொந்தமாக நிலங்கள் இருக்குது. எங்களை அங்கு செல்ல அனுமதித்தால் போதும் நாங்கள் அங்கேயே விவசாயம் செய்து பிழைத்துக்கொள்வோம்" என்ற ஆவேசமாகக் கூறுகின்றார்.
வலிகாமம் வடக்குப் பகுதி அதி உயர் பாதுகாப்பு வயமாகப் பிரகடனப்படுத்தப்பட்டிருப்பதால் அங்கிருந்து வெளியேறிய மக்களுக்கான முகாம்கள் யாழ்ப்பாணத்தில் பல இடங்களில் செயற்படுகின்றது. இவ்வாறான முகாம்களில் ஒன்று கோப்பாய் உதவி அரசாங்க அதிபர் பிரிவில் உள்ளது.  அந்த முகாமுக்கு சென்றிருந்தபோது அங்கிருந்த இடம்பெயர்ந்த மக்கள் மத்தியில் இருந்து அந்த மூதாட்டியின் குரல் இவ்வாறு ஒலித்தது. 
"1992 ஆம் ஆண்டு வலிகாமத்திலிருந்து இடம்பெயர்ந்த நாங்கள். கடந்த பதினெட்டு வருட காலமாக முகாம்களுக்குள்ளேயே மாறிமாறி வாழ்ந்துகொண்டிருக்கின்றம்…| என்று தமது சோகக் கதையைச் சொல்லும் இந்த முகாம் மக்கள், விவசாயத்துக்கு மிகவும் வளமான தமது சொந்த மண்ணிலிருந்து பலவந்தமாக தாம் வெளியேற்றப்பட்டதால் தமது குடும்பங்களும் எதிர்காலச் சந்ததியும் சீர்குலைந்து வருவதையிட்டு மிகுந்த வேதனையுடன் இருக்கின்றார்கள். 
போர் முடிவுக்கு வந்திருக்கும் பின்னணியில் யாழ்ப்பாணத்துக்கான ஒரேயொரு தரை வழிப்பாதையான ஏ-9 திறக்கப்பட்டுவிட்டதால், யாழ்ப்பாணத்தில் இயல்பு நிலை திரும்பிவிட்டது எனவும், பொருட்கள் அனைத்தும் தாராளமாகக் கிடைக்கின்றது எனவும் பெருமெடுப்பிலான பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றது. ஏ-09 திறக்கப்பட்டுவிட்டதால் தமிழர்களுடைய பிரச்சினையே தீர்ந்துவிட்டது என்பது போன்ற கருத்துக்களும் முன்வைக்கப்படுகின்றன. அத்துடன் இடம்பெயர்ந்த மக்கள் அனைவரும் மீளக்குடியேற்றப்பட்டுவிட்டார்களள் என்ற கருத்தும் அரசாங்கத்தினால் பிரச்சாரப்படுத்தப்படுகின்றது. 
இருண்டுள்ள எதிர்காலம்
இவற்றுக்கு மத்தியில் இடம்பெயர்ந்த மக்களுடைய வாழ்க்கை எவ்வாறுள்ளது, அவர்கள் வழமையான வாழ்க்கைக்குத் திரும்பக் கூடிய சூழ்நிலை உருவாக்கப்பட்டிருக்கின்றதா என்பதையிட்டு விரிவான ஒரு ஆய்வை மேற்கொள்ளும் நோக்கத்துடன் யாழ்ப்பாணம் சென்றிருந்த போது அதிர்ச்சியான தகவல்களே எமக்குக் கிடைத்தன. ஏ-09 பாதை திறக்கப்பட்டிருப்பதல் குடாநாட்டில் வியாபார நடவடிக்கைகள் பல்கிப் பெருகியிருக்கும் அதேவேளையில், அதன் மறுபக்கத்தில் இடம்பெயர்ந்த மக்களுடைய எதிர்காலம் தொடர்ந்தும் இருண்டதாகவே இருக்கின்றது. அவர்களுக்கு எதிர்காலம் தொடர்பில் நம்பிக்கையளிகக்கூடிய ஆக்கபூர்வமான செயற்பாடுகள் எதனையும் காணக்கூடியதாக இல்லை.
-09 திறக்கப்பட்டுள்ளது என்ற ஆரவாரங்களுக்கு மத்தியில் இடம்பெயர்ந்த மக்களுடைய பிரச்சினைகள், எதிர்காலம் தொடர்பான அவர்களுடைய ஏக்கங்கள் என்பன பெருமளவுக்கு மறைக்கப்பட்டுவிடுகின்றது. இவர்களுடைய பிரச்சினைகளைத் தீர்பதற்கு எந்த விதமான உறுதியான திட்டங்களையும் முன்வைக்காத அரசாங்கம், முகாம்களிலிருந்த மக்களை வெறுமனே விடுதலை செய்துவிட்டு அல்லது மற்றொரு முகாமுக்கு மாற்றிவிட்டு மீள்குடியேற்றப் பணிகள் வெற்றிகரமாக இடம்பெறுவதாக ஆரவாரம் செய்கின்றது. 
இலங்கையின் இனநெருக்கடி போராக மாற்றமடைந்த நிலையில் வடக்கு கிழக்கு பகுதிகளில் பாரிய அளவிலான இடப்பெயர்வு இடம்பெற்றிருக்கின்றது. தமது சொந்த இடங்களிலிருந்து இடம்பெயர்ந்த இந்த மக்களில் பெரும்பாலானவர்கள் வெளிமாவட்டங்களுக்கு இடம்பெயர, ஒரு பகுதியினர் குறிப்பிட்ட மாவட்டத்துக்குள்ளேயே இடம்பெயர்ந்திருக்கின்றார்கள். கணிசமான தொகையினர் இந்த நாட்டில் இருப்பதில் அர்த்தமே இல்லை என்ற தீர்மானத்துடன்  வெளிநாடுகளுக்கும் தப்பிச் சென்றுவிட்டனர்.
போர் முடிவுக்கு வந்து அமைதி நிலையும், வழமையான வாழ்க்கை நிலையும் ஏற்பட்டுவிட்டதாகக் கூறப்படும் இந்தச் சந்தர்ப்பத்தில் இடம்பெயர்ந்த மக்களுடைய வாழ்க்கை எவ்வாறுள்ளது, அவர்களால் மீண்டும் தமது பழைய வாழ்க்கைக்குத் திரும்பக்கூடியதாக இருக்கின்றதா என்பதையிட்டு ஆராயவேண்டியது அவசியமானதாகும். வழமையான வாழ்க்கைக்குத் திரும்புவதற்கு அவர்களுக்குள்ள தடைகள் என்ன என்பதைக் கண்டறிவதும் முக்கியமானதாகும். இவ்வாறான ஒரு பணியையோ யாழ்ப்பாணத்தில் நாம் மேற்கொண்டோம்.
யாழ்ப்பாணத்தில் இடம்பெயர்ந்துள்ள மக்கள் மற்றும், அவர்களுக்கான மீள்குடியேற்றப்பணியில் ஈடுபட்டுள்ள அரசாங்கப் பிரதிநிதிகள் மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்கள் போன்றவற்றின் பிரதிநிதிகளையும், இந்த விவகாரத்தில் அக்கறை கொண்டு செயற்படும் பல்கலைக்கழகப் பேராசிரியர்கள் சிலரையும் சந்தித்து மீள்குடியேற்றப்பணியின் உண்மையான நிலை என்ன என்பதையும், இவை எந்தளவுக்கு உறுதியாக முன்னெடுக்கப்படுகின்றது என்பதையும் அறிந்துகொள்வதற்கு முயன்றோம். 
குடாநாட்டு இடப்பெயர்வு
இடம்பெயர்ந்தவர்களின் மீள்குடியேற்றம் என்பது வடக்கு கிழக்கு மாகாணங்களில் காணப்படும் ஒரு பொதுவான பிரச்சினையாக இருக்கின்ற போதிலும், அதற்கான ஒரு உதாரணமாக மட்டுமே யாழ்ப்பாணத்தை நாம் தெரிவு செய்திருந்தோம். யாழ்ப்பாணத்தை இந்த ஆய்வுக்காக நாம் தெரிவு செய்தமைக்கு சில காரணங்கள் உள்ளன. பாரியளவிலான இடமப்பெயர்வுகள் குடாநாட்டில்தான் அதிகளவுக்கு இடம்பெற்றிருக்கின்றது. 1980 ஆம் ஆண்டுகளிலேயே யாழ்ப்பாணத்தில் போர் காரணமான இடம்பெயர்வுகள் ஆரம்பமாகிவிட்டது. 1981 ஆம் ஆண்டு குடிசன மதிப்பீட்டின்படி 11 இலட்சமாக இருந்த யாழ்ப்பாணத்தின் குடித்தொகை இன்று அரைவாசியாகக் குறைவதற்கும் இந்தப் போரே காரணமாக இருந்துள்ளது. 
1987 மே மாதம் இலங்கைப் படைகளில் வடமராட்சியில் மேற்கொண்ட ~ஒப்பரேஷன் லிபரேஷன்’ என்ற நடவடிக்கையின் போதுதான் முதலாவது பாரிய இடப்பெயர்வைக் காணக்கூடியதாக இருந்தது. இதன்போது சுமார் ஒரு லட்சம் வரையிலான மக்கள்  வடமராட்சியிலிருந்து இடம்பெயர்ந்து யாழ்ப்பாணத்துக்கும், தென்மராட்சிக்கும் சென்றிருந்தார்கள்.
இதன் பின்னர் இந்திய அமைதிப்படையினர் 1987 அக்டோபரின் ஆரம்பித்த நடவடிக்கை காரணமாகவும் பெருந்தொiயானவர்கள் இடம்பெயர்ந்தார்கள்.
இவை அனைத்துக்கும் மேலாக விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுக்குள் இருந்த யாழ்ப்பாணக் குடாநாட்டை தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்காக 1995 இறுதிப் பகுதியில் இலங்கைப் படையினர் மேற்கொண்ட தாக்குதல் நடவடிக்கை காரணமாகவே பெருந்தொகையான மக்கள் இடம்பெயர்ந்தனர். இதன் போது யாழ்ப்பாணத்திலிருந்து பல்லாயிரக்கணக்கான மக்கள் தென்மராட்சிக்கு இடம்பெயர்ந்து பின்னர் அங்கிருந்து வன்னிக்கு இடம்பெயர்ந்தனர். 
இவ்வாறு வன்னிப் பகுதிக்கு இடம்பெயர்ந்தவர்களில் பலர் இப்போது போர் முடிவடைந்துள்ள நிலையில்தான் மீண்டும் யாழ்ப்பாணத்துக்குத் திரும்பியிருக்கின்றார்கள். 
யாழ்ப்பாண மக்களுடைய இடப்பெயர்வை இரண்டு வகையாக வகைப்படுத்த முடியும். 
ஒன்று - போர் காரணமாக ஏற்பட்ட இடப்பெயர்வு.  அவ்வாறான இடப்பெயர்வுகள் தொடர்பாகத்தான் மேலே குறிப்பிடப்பட்டிருக்கின்றது. 
இரண்டு - அதிஉயர் பாதுமுகாப்பு வலயப் பிரச்சினை காரணமாக ஏற்பட்ட இடப்பெயர்வு. 
இந்த இரண்டு காரணிகளும் குடாநாட்டு மக்களில் பெரும்பாலானவர்களை அடிவேருடன் கிளப்பிவிட்டுள்ளது என்றுதான் சொல்ல வேண்டும். 
பாதுகாப்பு வலயம்
பலாலியிலுள்ள விமானப்படைத் தளத்தையும், காங்கேசன்துறையிலுள்ள கடற்படை வசதிகளையும் பாதுகாக்கும் நோக்கத்துடன் வலிகாமம் வடக்குப் பகுதி அதி உயர் பாதுகாப்பு வலயங்களாகப் பிரகடனம் செய்யப்பட்டமையால் அந்தப் பகுதிகளிலிருந்து சுமார் ஒரு லட்சம் பேர் இடம்பெயர்ந்திருக்கின்றார்கள். யாழ்ப்பாணக் குடாநாட்டில் விவசாய உற்பத்திப் பொருட்களுக்கு மிகவும் புகழ்பெற்ற வளமான நிலங்களைக் கைவிட்டு வெளியேற்றப்பட்ட இவர்களுடைய வாழ்வாதாரத்துக்கான எந்தவிதமான ஆக்கபூர்வமான நடவடிக்கையும் அரசாங்கத்தினால் இதுவரையில் செய்துகொடுக்கப்படவில்லை.
இவர்கள் தமது வளம்கொளிக்கும் நிலங்களைக் கைவிட்டு வெளியேறியதால் குடாநாட்டின் விவசாய உற்பத்தியும் பாரியளவில் பாதிக்கப்பட்டது. இதேபோல இலங்கையிலேயே மீன்பிடிக்குப் பெயர்போன மயிலிட்டு துறைப் பகுதியும் அதிஉயர் பாதுகாப்பு வலயப் பிரகடனத்தினால் கைவிடப்பட்ட நிலையில் காணப்படுகின்றது. இதனால் குடாநாட்டின் கடற்றொழிலாளர்கள் குடும்பங்கள் பல நிர்கதிக்குள்ளாகியுள்ளதுடன், குடாநாட்டின் மீன்பிடியும் பெருமளவுக்குப் பாதிக்கப்பட்டுள்ளது. 
இடம்பெயர்வால் மக்கள் தமது வாழ்வாதாரங்களை இழந்திருக்கின்றார்கள் என்பது ஒருபுறமிருக்க இதனால் யாழ்ப்பாணக் குடாநாட்டின் பொருளாதாரமே பெருமளவுக்குப் பாதிக்கப்பட்டிருக்கின்றது. சுயதேவையைப் பூர்த்தி செய்யக்கூடியதாக இருந்த குடாநாட்டின் பொருளாதாரம் இந்தப் போர் மற்றும் பாதுகாப்பு வலயப் பிரகடனம் போன்றவற்றால் ஏ-09 பாதையை எதிர்பார்த்துக் காத்திருக்க வேண்டிய  நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.  
முதலாவது இடப்பெயர்வு
யாழ்ப்பாணக் குடாநாட்டைப் பொறுத்தவரையில் வலிகாமம் வடக்கில் இடம்பெற்ற இடப்பெயர்வுதான் முதலாவது இடப்பெயர்வு எனக் குறிப்பிலாம்.; மக்களை தமது சொந்த மண்ணிலிருந்து வெளியேற்றிய இச்சம்பவம் 1986 ஆம் ஆண்டில் ஜனவரி 13 ஆம் திகதி இடம்பெற்றது.  இனநெருக்கடி ஆயுதப் போராக மாற்றமடையத் தொடங்கியிருந்த நிலையில் தமது படைப்பலத்தைக் கொண்டு அதனை ஒடுக்குவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டிருந்த இலங்கை அரசாங்கம் முன்னெடுத்த இராணுவ நடவடிக்கை ஒன்றுடனேயே இந்த இடப்பெயர்வு ஆரம்பமானது.
1985 ஆம் ஆண்டு நடுப்பகுதியில் யாழ்ப்பாணக் குடாநாட்டின் பெரும்பாலான பகுதிகள் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுக்குள் வந்திருந்தது. இராணுவம் பெருமளவுக்கு முகாம்களுக்குள்ளேயே முடக்கப்பட்டிருந்ததுடன், முகாம்களின் பாதுகாப்பும் கேள்விக்குறியாக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் பலாலி விமானத்தளத்தின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காக இராணுவம் சில நடவடிக்கைகளை மேற்கொண்டது..
அது பற்றிய தகவல்களுடன் அடுத்த வாரம்

Sunday, May 23, 2010

தேர்தல் முறை மாற்றமும் சிறுபான்மையினக் கட்சிகளும்..

அரசியலமைப்பு மாற்றத்துடன் தேர்தல் முறையிலும் மாற்றங்களைச் செய்வதற்கு அரசாங்கம் தீர்மானித்திருக்கின்றது. அரசியலமைப்பு மாற்றம் என்பது அரசாங்கத்தினதும், ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவினதும் எதிர்கால அரசியல் நலன்களை நோக்கமாகக் கொண்டதாக இருக்கும் அதேவேளையில், தேர்தல் முறை மாற்றம் என்பது சிறிய கட்சிகளினதும் சிறுபான்மையின மக்களின் பாராளுமன்றப் பிரதிநிதித்துவத்தை பலவீனப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டதாக அமைந்திருக்கும் என்பதும் நிச்சயம்.
பாராளுமன்றத் தேர்தலில் அரசாங்கத்துக்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மை கிடைக்காத போதிலும், அதற்குக் கிட்டிய பெரும்பான்மையை அரசாங்கம் பெற்றிருக்கின்றது. மூன்றில் இரண்டுக்குத் தேவையாகவுள்ள ஏழு ஆசனங்களைப் பெற்றுக்கொள்வது தமக்கு ஒன்றும் கடினமானதாக இருக்கப்போவதில்லை என்ற நம்பிக்கையுடன் அரசாங்கம் இப்போது காய்களை நகர்த்ததத் தொடங்கியுள்ளது.
தற்போதைய விகிதாசாரப் பிரதிநிதித்துவத் தேர்தல் முறைக்குப் பதிலாக முன்னைய தேர்தல் தொகுதியை அடிப்படையாகக் கொண்ட தேர்தல் முறையை நடைமுறைக்குக் கொண்டுவருவதுதான் அரசாங்கத்தின் நோக்கமாகும். இருந்தபோதிலும் இதற்கு வரக்கூடிய எதிர்ப்புக்களைக் கவனத்திற்கொண்டு இந்த இரண்டையும் இணைத்த ஒரு தேர்தல் முறையை நடைமுறைக்குக் கொண்டுவரப்போவதாக அரசாங்கம் கூறுகின்றது. அதாவது ஜேர்மனியில் இவ்வாறான ஒரு தேர்தல் முறைதான் நடைமுறையில் உள்ளது.
அரசியலமைப்புச் சீர்திருத்தம் என்பதற்கு அப்பால் தற்போதைய தேர்தல் முறையை மாற்றியமைப்பதன் மூலமாகவே கட்சி சார்ந்த முழுமையான நலன்களையும் பெற்றுக்கொள்ள முடியும் என அரசாங்கம் கருதுகின்றது. அரசாங்கத்தின் இந்த நம்பிக்கையில் உண்மை இல்லாமல் இல்லை. தற்போதைய விகிதாசாரப் பிரதிநிதித்துவ முறையைவிட தேர்தல் தொகுதி அடிப்படையிலான நேரடித் தெரிவு என்பதுதான் தமக்குச் சாதகமானது என அரசு கருதுவதில் பெருமளவு உண்மை இருக்கத்தான் செய்கின்றது. 

கடந்த மாதம் நடைபெற்ற தேர்தல் முன்னைய முறையில் - அதாவது தேர்தல் தொகுதி அடிப்படையில் நடத்தப்பட்டிருந்தால் அரசாங்கத்தினால் மூன்றில் இரண்டு பெரும்பான்மையைப் பெற்றிருக்க முடியும். பிரதான எதிர்க்கட்சியான ஐ.தே.க. ஒரு சில ஆசனங்களை மட்டும்தான் பெற்றிருக்க முடியும், ஜே.வி.பி. அல்லது ஜனநாயக தேசிய முன்னணி ஒரு ஆசனத்தையும் பெற்றிருக்க முடியாது. இவை அனைத்தையும் கணக்கில் எடுத்துத்தான் தேர்தல் முறையை மாற்றுவதற்கு அரசாங்கம் முற்படுகின்றது.
அரசாங்கத்தைப் பொறுத்தவரையில் தேர்தல் முறை மாற்றத்தை இரண்டு நோக்கங்களுடன் முன்னெடுக்கின்றது. ஒன்று - பிரதான எதிர்க்கட்சி மற்றும் ஜே.வி.பி. போன்ற தேசிய ரீதியாகவுள்ள சிறிய கட்சிகளின் பிரதிநிதித்துவத்தை இதன் மூலம் குறைக்க முடியும். இதன் மூலம் இவ்வாறான சிறிய கட்சிகளின் அழுத்தங்களையிட்டு அஞ்சத் தேவையில்லை. 2001 மற்றும் 2004 ஆம் ஆண்டுத் தேர்தல்களில் பலம்வாய்ந்த ஒரு கட்சியாக ஜே.வி.பி. வெளிப்பட்டமைக்கு இந்த விகிதாசாரப் பிரதிநித்துவத் தேர்தல் முறையும் ஒரு காரணம்!
அரசாங்கத்தின் இரண்டாவது நோக்கம் - சிறுபான்மையினக் கட்சிகளின் பிரதிநிதித்துவத்தை மட்டுப்படுத்துவது. கடந்த காலங்களில் மலையகக் கட்சிகளும், சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் போன்றனவும் கிங் மேக்கர்கள் போலச் செயற்பட்டமைக்கு இந்த விகிதாசாரப் பிரதிநிதித்துவ முறையிலான தேர்தல் முறையே காரணமாக இருந்துள்ளது. இந்தத் தேர்தல் முறையை மாற்றியமைத்துவிடுவதன் மூலம் சிறுபான்மையினக் கட்சிகளின் செல்வாக்கை மட்டுப்படுத்திவிட முடியும் என அரசு கருதுகின்றது.
இருந்தபோதிலும் வடக்குக் கிழக்கைத் தளமாகக் கொண்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை இதன் மூலம் அரசாங்கம் நினைக்கும் அளவுக்குப் பலவீனப்படுத்திவிட முடியாது. காரணம் அது தமிழ் மக்களின் பாரம்பரிய பிரதேசங்களாகவும் தமிழ் மக்களைப் பெரும்பான்மையாகக் கொண்டவையாகவும் இருப்பதால் தேர்தல் தொகுதி ரீதியான தேர்தல் ஒன்றின் மூலமும் தமது பலத்தை அவர்களால் உறுதிப்படுத்த முடியும். ஏனைய சிறுபான்மையினக் கட்சிகளைத்தான் இது அதிகளவுக்குப் பாதிக்கும்.
தேர்தல் தொகுதி அடிப்படையிலான இறுதித் தேர்தல் 1977 ஆம் ஆண்டுதான் நடைபெற்றது. அத்தேர்தலில் தமிழர் விடுதலைக் கூட்டணி வடக்கு கிழக்கில் 18 ஆசனங்களைப் பெற்றுக்கொண்டதுடன் இரண்டாவது மிகப் பெரிய கட்சியாகவும் வெளிப்பட்டது என்பது கவனிக்கத்தக்கது. இதன் மூலமாக எதிர்க்கட்சித் தலைமைப் பதவி கூட அப்போது முதல் முறையாக ஒரு தமிழரின் கைகளில் கிடைத்தது. கூட்டணியின் செலதிபர் அ.அமிர்தலிங்கம் எதிர்க்கட்சித் தலைவராகப் பதவியேற்றார்.
எதிர்க்கட்சித் தலைமைப்பதவி இனி எந்த ஒரு காலத்திலும் தமிழர்களுக்குக் கிடைக்கக்கூடாது என்ற ஜே.ஆரின் சிந்தனையும் அப்போது தேர்தல் முறையை அவர் மாற்றியமைப்பதற்குக் காரணமாக அமைந்திருந்தது. எதிர்க்கட்சித் தலைவர் பதவி என்பது பிரதமர் பதவிக்குச் சமாந்தரமானது என்பது ஜனநாயக மரபு. பிரதமருக்குரிய அத்தனை வசதிகளும் எதிர்க்கட்சித் தலைவருக்கும் வழங்கப்படுவதுதான் ஜனநாயக நாடுகளில் காணப்படும் வழமை. ஆனால் விகிதாசாரப் பிரதிநிதித்துவ முறையில் தமிழர்கள் ஒரு போதும் எதிர்க்கட்சித் தலைவராக வரமுடியாது.
ஆக, தேர்தல் முறை மாற்றம் என்பது மலையகத் தமிழ்க் கட்சிகளினதும், முஸ்லிம் கட்சிகளினதும் பிரதிநிதித்துவத்துக்குத்தான் உடனடியாக வேட்டுவைப்பதாக அமையும். முலையகக் கட்சிகளைப் பொறுத்தவரையில் தற்போதைய நிலையிலேயே மலையகத் தமிழ்ப் பிரதிநித்துவம் பெரிதும் பாதிக்கப்பட்டிருக்கின்றது. பேரம்பேசும் பலத்தை அவர்கள் இழந்திருக்கின்றார்கள். இந்த நிலையில் தேர்தல் முறையில் செய்யப்படக்கூடிய மாற்றம் அவர்களை மேலும் பாதிப்பதாகவே இருக்கும்.
மலையகத் தமிழ்க் கட்சிகள் இப்போது பெருமளவுக்கு அரசுடன் இணைந்து அமைச்சர் பதவிகளையும் பெற்றுக்கொண்டிருக்கின்றன. இந்தநிலையில் தேர்தல் முறை மாற்றம் தொடர்பில் அவர்கள் குரல் கொடுக்கக்கூடிய நிலையில் இருப்பதாகத் தெரியவில்லை. இதேநிலையில்தான் முஸ்லிம் அமைச்சர்களும் இருக்கின்றார்கள். அரசுடன் இணைந்து செயற்படும் இவர்கள் தமது நிலைப்பாட்டை உறுதியாக வெளிப்படுத்த வேண்டும்.
இந்த நிலையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும், சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ_ம் இணைந்து செயற்பட முன்வந்திருப்பது வரவேற்கப்பட வேண்டிய ஒன்றாகும். சிறுபான்மையின மக்களின் நலன்களைப் பாதிக்கும் விடயங்களில் இவர்கள் இணைந்து செயற்படவேண்டியது காலத்தின் கட்டாயமாகும். அரசுடன் இணைந்திருக்கும் சிறுபான்மையினக் கட்சிகளின் தலைவர்களும் இந்த முன்மாதிரியைப் பின்பற்றுவது அவசியம்.
சிறுபான்மையினக் கட்சிகளைப் பலவீனப்படுத்துவது என்பது இந்த அரசாங்கத்தின் நிகழ்சி நிரலில் பிரதானமானது. அதன் செயற்பாடுகள் அதனைத் தெளிவாகப் புலப்படுத்துகின்றன. ஆதிகாரமில்லாத வெறும் அலங்கார அமைச்சர் பதவிகள் கிடைத்துள்ளது என்பதற்காக தமது இனத்தைப் பலவீனப்படுத்தும் திட்டங்களுக்கே மலையக, மற்றும் முஸ்லிம் தலைமைகள் துணை போகப் போகின்றனவா என்பதுதான் இன்று எழுகின்ற கேள்வியாகும்!