Sunday, August 29, 2010

திருப்பத்தை ஏற்படுத்திய முடிவு


சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் இறுதியாக அரசாங்கத்துக்கு ஆதரவளிப்பது என்ற நிலைப்பாட்டை எடுத்திருக்கின்றது. இதன் மூலம் அரசியலமைப்புத் திருத்தத்தை மேற்கொள்வதற்குத் தமக்குத் தேவையாக இருந்த மூன்றில் இரண்டு பெரும்பான்மையை அரசாங்கம் பெற்றுக்கொண்டுவிட்டது.
அடுத்ததாக அரசியலமைப்புக்கான திருத்தம் செப்டம்பர் முற்பகுதியில் பாராளுமன்றத்தில் கொண்டுவரப்பட்டு நிறைவேற்றப்படும்.

Saturday, July 17, 2010

அரசியலமைப்புத் திருத்தம்

அரசியலமைப்பு சீர்திருத்தமும்
மகிந்த - ரணில் பேச்சுக்களும்
உத்தேச அரசியலமைப்புத் திருத்தம் தொடர்பில் அனைத்துக் கட்சிகளுடனும் கருத்தொருமிப்பை ஏற்படுத்திக் கொள்வது குறித்து ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுடன் ஆரம்பித்த பேச்சுக்கள் அரசியல் அரங்கில் ஒரு புதிய சூழலை ஏற்படுத்தியுள்ளது. இந்தப் பேச்சுக்களைத் தொடர்ந்து சிறுபான்மையினக் கட்சிகள் உட்பட அனைத்து எதிர்க்கட்சிகளுடனும் பேசப்போவதாக எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க அறிவித்திருக்கின்றார். இந்தப் பேச்சுக்களை ஜே.வி.பி. வன்மையாகக் கண்டித்திருக்கின்ற போதிலும், அரசியலமைப்பு சீர்திருத்தங்களைப் பொறுத்தவரையில் தன்னிச்சையாகச் செயற்படாமல் அனைத்துக் கட்சிகளையும் அரவணைத்துக்கொண்டு ஒரு புதிய பாதையில் செல்வதற்கு அரச தரப்பு முற்பட்டிருப்பதை இது வெளிப்படுத்தியிருக்கின்றது.

அரசியலமைப்பு சீர்திருத்தத்தைப் பொறுத்தவரையில் அதனைத் தன்னிச்சையாகச் செயற்படுத்துவதில் அரசாங்கம் சில நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ளது. அதனால்தான் இவ்விடயத்தில் தன்னிச்சையாகச் செயற்படுவதற்கு முனைந்த அரசாங்கம் இப்போது எதிர்க்கட்சிகளுடன் கருத்து ஒருமிப்பை ஏற்படுத்திக்கொண்டு செயற்படுவதற்கு முன்வந்திருக்கின்றது. அரசாங்கத்தின் அணுகுமுறையில் ஏற்பட்டிருக்கும் மாற்றங்களுக்கு முக்கியமாக மூன்று காரணங்கள் சொல்லப்படுகின்றன. முதலாவது - பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையைப் பெற்றுக்கொள்ள முடியாத நிலை. இரண்டாவது - இடதுசாரிக் கட்சிகளின் எதிர்ப்பு. மூன்றாவது சர்வதேச ரீதியாக உருவாகியிருக்கும் நிலைமைகள் காரணமாக எதிர்க்கட்சிகளுடன் இணங்கிச் செயற்பட வேண்டிய நிர்ப்பந்தம்.

இந்த நிலையில் எதிர்க்கட்சிகளுடன் இணைந்து செயற்படுவதற்கு முன்வந்திருக்கும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ, முக்கியமான விட்டுக்கொடுப்பு ஒன்றைச் செய்வதற்கு நிர்ப்பந்திக்கப்பட்டிருக்கின்றார். அதாவது - ஜனாதிபதியின் பதவிக் காலத்தை மூன்று தவணைகளுக்கு நீடிப்பதற்கான திட்டத்தை கைவிட வேண்டிய நிர்ப்பந்தம் அவருக்கு ஏற்பட்டிருக்கின்றது. ஆனால் அதற்குப் பதிலாக நிறைவேற்று அதிகாரங்களைக் கொண்ட பிரதமர் பதவியை ஏற்படுத்துவதற்கு அவர் இப்போது முற்பட்டிருக்கின்றார். அதே அதிகாரங்கள் ஆனால் பதவி மட்டும் மாற்றம். அதாவது இது ஒரு பெயரளவிலான மாற்றமே தவிர வேறு ஒன்றுமில்லை. அதாவது லேபிள்தான் மாற்றப்படுகின்றதே தவிர உள்ளடக்கம் அதேதான்.

ஜனாதிபதி செயலகத்தில் கடந்த சனிக்கிழமை காலை மகிந்த - ரணில் முதலாவது சந்திப்பு இடம்பெற்றது. ஜனாதிபதியின் அழைப்புக்கிணங்க ரணில் விக்கிரமசிங்க ஜனாபதிபதி செயலகத்தில் அவரைச் சந்தித்துள்ளார். எதிர்வரும் ஆகஸ்ட் மாதத்தில் அரசியலமைப்புத் திருத்தத்தை சமர்ப்பிக்க எண்ணியிருக்கும் ஜனாதிபதி அதற்கு எதிரணியின் பூரண ஒத்துழைப்பைப் பெற்றுக் கொள்ளும் நோக்கில் கருத்தொருமிப்பைக் காண்பதில் தீவிரம் காட்டி வருகின்றார் எனவும் இதன் முதற் கட்டமாகவே எதிர்க்கட்சித் தலைவரைச் சந்தித்திருப்பதாக ஜனாதிபதி செயலக செய்திக்குறிப்பு ஒன்றில் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது. இதன் அடுத்த கட்டமாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உட்பட சிறுபான்மையினக் கட்சிகள் மற்றும் ஜே.வி.பி. என்பவற்றுடன் பேச்சுக்கள் நடத்தப்படும்.

முன்னர் திட்டமிட்டிருந்த அரசியலமைப்புத் திருத்த யோசனைகளை அரசு இப்போது கைவிட்டிருக்கின்றது. அதற்குப் பதிலாக நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை ஒழித்துப் பாராளுமன்றத்துக்கு நிறைவேற்று அதிகாரத்தை வழங்கும் வகையில் அரசியலமைப்பைத் திருத்த எண்ணியிருப்பதாக அறியவருகின்றது. இதன்படி நிறைவேற்று அதிகாரம் பிரதமருக்கு வழங்கப்படும். உத்தேச திட்டத்தின் படி ஒருவர் நிறைவேற்று அதிகார பிரதமராக எத்தனை தடவையும் பதவி வகிக்கக்கூடியதாக இருக்கும். அதேசமயம் நிறைவேற்று அதிகார பிரதமரைத் தேர்ந்தெடுக்கும் முறை குறித்தும் கவனம் செலுத்தப்படும். புதிய அரசியலமைப்புத் திருத்தம் தற்போதைய ஜனாதிபதியின் இரண்டாவது பதவிக் காலம் முடிவடைந்த பின்னரே (அதாவது 2016 இல்) நடைமுறைக்குக் கொண்டு வருவதற்கு அரசு தீர்மானித்திருப்பதாகவும் அறிய வருகின்றது.

ஆளும் கட்சியைப் பொறுத்தவரையில் தாம் நினைத்தவாறு அரசியலமைப்பைத் திருத்துவதற்குத் தேவையான மூன்றில் இரண்டு பெரும்பான்மையைப் பெற்றுக்கொள்வதற்கு இன்னும் ஆறு உறுப்பினர்களின் ஆதரவு அவசியம். எதிர்க்கட்சியிலிருந்து சிலரையாவது கட்சி பாயச் செய்வதற்காக மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் வெற்றி பெறவில்லை எனக் கூறப்படுகின்றது. அத்துடன் ஜனாதிபதியின் பதவிக்காலத்தை நீடிப்பதற்கு தாம் ஆதரவளிக்கப்போவதில்லை என இடதுசாரி ஐக்கிய முன்னணியின் தலைவரான வாசுதேவ நாணயக்கார பகிரங்கமாகவே அறிவித்திருந்தார். இந்த நிலையிலேயே அரசாங்கம் ஏற்கனவே தயாரித்திருந்த திட்டத்தைக் கைவிட்டு புதிய திட்டம் ஒன்றை இப்போது முன்வைத்திருக்கின்றது. ஆனால் அடிப்படையில் இது ஒரு பெயர் மாற்றமே தவிர பெரிதாக வேறு எதுவும் இல்லை.

நிறைவேற்று அதிகாரப் பிரதமர் பதவி என்பது பாராளுமன்றத்துக்குப் பதிலளிக்க வேண்டிய கடமைப்பாட்டைக் கொண்டதாக இருக்கும். ஆனால் நிறைவேற்று அதிகார ஜனாதிபதிப் பதவி என்பது அவ்வாறான ஒரு கடமைப்பாட்டைக் கொண்டதல்ல. அதாவது இது ஒருவகையில் அடையாள ரீதியான விட்டக்கொடுப்பாக மட்டுமே இருக்கும். இதனைவிட எந்த அதிகாரங்களையும் இந்த மாற்றங்களின் போது அரசாங்கத்தின் தலைவர் விட்டுக்கொடுப்பார் என எதிர்பார்க்க முடியாது. இதனைவிட சம்பிரதாயபூர்வமான ஜனாதிபதி ஒருவர் நியமிக்கப்படுவார். உண்மையில் இது வெறுமனே ஒரு அலங்காரப் பதவியாக மட்டுமே அமைந்திருக்கும்.

இந்த மாற்றங்களை ஏற்றுக்கொள்வதற்கும், அது தொடர்பாக அரசாங்கத்துடன் பேச்சுக்களை நடத்துவதற்கும் ஐ.தே.க. முன்வந்திருப்பதற்கும் சில காரணங்கள் உள்ளன. குறிப்பாக அரசியலமைப்பு மாற்றங்களுக்கு ஒத்துழைப்பை வழங்காவிட்டால், தமது கட்சியைச் சேர்ந்தவர்களைக் கட்சி மாறச் செய்வதற்கான செயற்பாடுகளில் அரசாங்கம் இறங்கும் என்பது ஐ.தே.க. தலைமைக்குத் தெரியும். ஏற்கனவே இவ்வாறு இடம்பெற்றிருக்கின்றது. இதனைவிட கட்சித் தலைமையில் மாற்றங்களையும் கட்சிப் புனரமைப்பையும் செய்வதற்கான முயற்சிகளை அதிருப்தியாளர்கள் மேற்கொண்டிருக்கும் நிலையில், தன்னைப் பலப்படுத்திக்கொள்வதற்கு இந்தப் பேச்சுக்கள் உதவும் என ரணில் கருதியிரக்கலாம். அத்துடன் நிறைவேற்று அதிகாரப் பிரதமர் பதவி என்பது ஐ.தே.க.வுக்கு ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒன்றுதான்.

இதேவேளையில் இந்தப் பேச்சுக்களை ஜே.வி.பி. வன்மையாகக் கண்டித்திருக்கின்றது. ஆளும் கட்சியும் பிரதான எதிர்க்கட்சியும் தமது அரசியல் தேவைகளின் அடிப்படையிலேயே இந்தப் பேச்சுக்களை ஆரம்பித்திருப்பதாகவும் ஜே.வி.பி. குறிப்பிட்டிருக்கின்றது. ஆளும் கட்சியைப் பொறுத்தவரையில் நிறைவேற்று அதிகார ஜனாதிபதிப் பதவியை நீடிப்பதற்கு உருவாகியிருக்கும் அதிகரித்த எதிர்ப்பினால் அதனைக் கைவிட ஆளும் கட்சி நிர்ப்பந்திக்கப்பட்டிருப்பதாக ஜே.வி.பி. தெரிவிக்கின்றது. அத்துடன் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க கட்சி மறுசீரமைப்புப் பிரச்சினைக்குள் சிக்கியுள்ளார். இந்நிலையில் அவருக்குக் காலத்தைக் கடத்த வேண்டிய தேவையுள்ளது. இந்தப் பின்னணியின் அடிப்படையிலேயே சூழ்ச்சி இடம்பெறுகின்றது என ஜே.வி.பி. கடுமையாகச் சாடியிருக்கின்றது.

இருந்த போதிலும் இப்போது ஜே.வி.பி.க்கும் இந்தப் பேச்சுக்களில் பங்குகொள்வதற்கு அழைப்பு விடுக்கப்பட்டிருக்கின்றது. ஜே.வி.பி. இந்தப் பேச்சுக்களில் நிச்சயமாகக் கலந்துகொள்ளும். ஆனால் நிறைவேற்று அதிகாரப் பிரதமர் பதவியை அவர்கள் எதிர்ப்பார்கள் எனத் தெரிகின்றது. ஜே.வி.பி.யைப் பொறுத்தவரையில் நிறைவேற்று அதிகார ஜனாதிபதிப் பதவியும் ஒன்றுதான் நிறைவேற்று அதிகார பிரதமர் பதவியும் ஒன்றுதான். லேபிள்தான் மாற்றப்படுகின்தே தவிர உள்ளடக்கம் ஒன்றுதான் என்பதுதான் ஜே.வி.பி.யின் கருத்தமாகும். அதனால் குறிப்பிட்ட திருத்தங்களை அவர்கள் அப்படியே ஏற்றுக்கொள்வார்கள் என்பது எதிர்பார்க்கக்கூடியதல்ல.

இதேவேளையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடனும் அடுத்த வாரத்தில் இது தொடர்பில் பேச்சுக்கள் நடத்தப்படும் எனத் தெரிகின்றது. கூட்டமைப்பைப் பொறுத்தவரையில் நிறைவேற்று அதிகார ஜனாதிபதிப் பதவியா அல்லது பிரதமர் பதவியா என்பதைவிட, அரசியலமைப்புச் சீர்திருத்தத்தின் போது இன நெருக்கடிக்கான தீர்வு அதில் எந்தளவுக்கு உள்ளடக்கப்படும் என்பதிலேயே அதிகளவுக்கு அதன் அக்கறை இருக்கும் என நிச்சயமாக எதிர்பார்க்கலாம். குறிப்பாக இலங்கை இந்திய உடன்படிக்கையின் கீழ் உருவாக்கப்பட்ட 13 வது திருத்தம் முழுமையாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்பதை கூட்டமைப்பு வலியுறுத்தும்.

கூட்டமைப்மைப் பொறுத்தவரையில் இந்தப் பேச்சுக்களின் போது தமது அடிப்படையான நிலைப்பாட்டிலிருந்து எதனையாவது அவர்கள் விட்டுக்கொடுப்பார்கள் என்பது எதிர்பார்க்கக் கூடியதாக இல்லை. கடந்த வாரம் புதுடில்லியில் இந்தியத் தலைவர்களுடனும், கொள்கை வகுப்பாளர்களுடனும் கூட்டமைப்பின் தலைமை நடத்திய பேச்சுக்களின் போது இலங்கை அரசுடனான பேச்சுக்களின் போது கூட்டமைப்பு தமது அடிப்படையான நிலைப்பாட்டிலிருந்து எதனையாவது விட்டுக்கொடுக்க வேண்டும் என தாம் எதிர்பார்க்கவில்லை எனத் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது. 13 வது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவதற்கான அழுத்தங்களை இந்தியா கொடுக்கும் என்பதற்கான ஒரு சமிஞ்ஞையாக இது உள்ளது.

Friday, July 16, 2010

யாழ். நிலைமை

குடாநாட்டை உலுக்கிய மர்ம மரணம்!
யாழ்ப்பாணத்தில் கடந்த வார இறுதியில் இடம்பெற்றுள்ள மற்றொரு மர்மக் கொலை யாழ்ப்பாண மக்களை மட்டுமன்றி இலங்கைத் தீவில் வாழும் தமிழர்கள் அனைவரையுமே அதிர்ச்சியில் உறைய வைத்திருக்கின்றது. வேலனை மருத்துவமனையில் பணிபுரியும் மருத்துவ மாது ஒருவதே மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டிருக்கின்றார். 27 வயதான இந்தப் பெண்ணின் சடலம் அவர் தங்கும் அறையில் சீருடையுடன் கழுத்தில் சுருக்கிட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இவரது மரணத்தை தற்கொலை எனச் சித்தரிப்பதற்கு முயற்சிக்கப்பட்டுள்ளமை இதன் மூலம் தெரியவந்திருக்கின்ற போதிலும், இது ஒரு திட்டமிட்ட படுகொலை என அடித்துக்கூறும் வைத்தியசாலை பணியாளர்கள் இங்கு பணி புரியும் சிங்கள மருத்துவர் ஒருவரே இதற்குப் பொறுப்பானவர் எனவும் குற்றஞ்சாட்டியிருப்பதையடுத்து குறிப்பிட்ட மருத்துவர் விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டிருப்பதுடன் யாழ்ப்பாணத்திலிருந்து அவர் வெளியேறுவதற்கும் தடை விதிக்கப்பட்டிருக்கின்றது. 
மருத்துவ பணியாளர்கள் மற்றும் பொது மக்களுடைய ஆர்ப்பாட்டப் போராட்டங்களையடுத்து குறிப்பிட்ட வைத்தியரைக் கைது செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டதையடுத்து அவர் புதன்கிழமை கைது செய்யப்பட்டிருக்கின்றார். இருந்த போதிலும் பொலிஸார் குறிப்பிட்ட வைத்தியருக்குச் சாதகமான முறையில் செயற்படுவதாகவும் குற்றச்சாட்டுக்கள் தெரிவிக்கப்பட்டிருக்கின்ற நிலையில் விசாரணைகள் எந்தளவுக்குப் பக்கச்சார்பற்ற முறையில் நடைபெறும் என்ற கேள்வியும் எழுப்பப்பட்டிருக்கின்றது. அதேவேளையில் யாழ்ப்பாணத்தில் சிங்கள வைத்தியர் ஒரவர் இவ்வாறான குற்றச்சாட்டுக்கு உள்ளாகியிருப்பது அரசாங்கத்துக்கும் பெரும் சங்கடமான ஒரு நிலையை ஏற்படுத்தியிருக்கின்றது. இதனால், அவரைப் பாதுகாப்பதற்கான முயற்சிகளை அரசாங்கம் மெற்கொண்டு வருவதாகவும் சந்தேகம் தெரிவிக்கப்பட்டிரக்கின்றது. 
சுருக்கிட்ட நிலையில் சடலம்
வேலனை வைத்தியசாலையில் மருத்துவ மாதுவாகப் பணிபுரிந்துவந்த கைதடியைச் சேர்ந்த 27 வயதான சரவணை தர்சிகா என்ற பெண்மணியே கடந்த சனிக்கிழமை 10 ஆம் திகதி மர்மமான முறையில் கொல்லப்பட்டிருக்கின்றார். வழமைபோல வெள்ளிக்கிழமை இரவுக் கடமைக்கு வந்த அவரது சடலம் சனிக்கிழமை காலை அவரது அறையில் கழுத்தில் சுருக்கிடப்பட்ட நிலையில் மீட்கப்பட்டிருக்கின்றது. சுனிக்கிழமை காலையில் பணிக்கு வந்த சில மணி நேரத்திலேயே அவரது சடலம் மீட்கப்பட்டிருப்பது வைத்தியசாலைப் பணியாளர்களை அதிர்ச்சியடைவைத்துள்ள அதேவேளையில் வேலனைப் பகுதியிலும் இச்சம்பவம் பெரும் பதற்ற நிலையையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியிருக்கின்றது. 
தர்சிகா சுருக்கிட்டுத் தற்கொலை செய்தகொண்டுள்ளார் எனக் காட்டுவதற்கு முயற்சிக்கப்பட்டுள்ள போதிலும், அங்கு காணப்பட்ட தடயங்கள் மற்றும் சடலம் தரையைத் தொடும் வகையில் இருந்தமை என்பன இது ஒரு கொலையாக இருக்கலாம் என்ற சந்தேகத்தை மருத்துவமனை பணியாளர்களிடம் ஏற்பட்டுள்ளதையடுத்து இங்கு பதற்ற நிலை அதிகரித்திருக்கின்றது. அத்துடன் தர்சிகா தற்கொலை செய்துகொள்வதற்கான எந்த அவசியமும் இல்லை எனக் குறிப்பிடும் மருத்துவமனைப் பணியாளர்கள், குறிப்பிட்ட சிங்கள மருத்துவர் கடந்த சில வாரகாலமாகவே தர்சிகா மீது பாலியல் ரீதியிலான துன்புறுத்தல்களை மேற்கொண்டுவந்ததாகவும் குறிப்பிடுகின்றார்கள்.  அத்துடன்  குறிப்பிட்ட இரவும் சிங்கள மருத்துவரே கடமையிலிருந்தமையால் - அவர் மீதே சந்தேகப் பார்வை திரும்பியுள்ளது.
ஊர்காவற்றுறை பதில் நீதவான் பொலிஸார் சகிதம் உடனடியாகவே சம்பவம் நடைபெற்ற இடத்துக்குச் சென்று சடலத்தைப் பார்வையிட்டதுடன், அதனைப் பிரேத பரிசோதனைக்காக யாழ்ப்பாணம் வைத்தியசாலைக்கு அனுப்பிவைக்குமாறும் உத்தரவிட்டார். இதேவேளையில் - கொலையுண்ட பெண்ணின் கைத்தொலைபேசியில் இறுதியாக எடுக்கப்பட்ட மற்றும் உள்வந்த அழைப்புக்கள் பற்றிய தகவல்களைச் சேகரிக்குமாறும் பொலிஸாருக்கு உத்தரவிட்ட நீதிபதி கிடைத்துள்ள ஆதாரங்களை அடிப்படையாகக் கொண்டு விசாரணைகளைத் துரிதப்படுத்துமாறும் கேட்டுக்கொண்டார். இதேவேளையில் இந்த மரணத்தில் தொடர்புபட்டிருக்கலாம் என சிங்கள டாக்டரான பிரியந்த செனவிரட்ண மீது பணியாளர்கள் சந்தேகம் தெரிவித்ததையடுத்து குறிப்பிட்ட டாக்டர் உடனடியாகவே பாதுகாப்புக் காரணங்களுக்காக அங்கிருந்து வேறு இடத்துக்கு மாற்றப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. குறிப்பிட்ட டாக்டர் மரணமடைந்த பெண்ணை தொடர்ச்சியாகத் துன்புறுத்தி வந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது. 
விஜயகலா அவசரக் கோரிக்கை
தர்சிகா மர்மமான முறையில் மரணம் அடைந்துள்ளமை குடாநாட்டில் பெரும் அதிர்சியலைகளை ஏற்படுத்தியிருக்கும் அதேவேளையில், இதில் சிங்கள வைத்தியர் ஒருவரும் சம்பந்தப்பட்டுள்ளதாகச் சந்தேகம் தெரிவிக்கப்பட்டுள்ளமை இது தொடர்பான விசாரணைகள் உரிய முறையில் நடைபெறுமா என்ற சந்தேகத்தை அனைத்துத் தரப்பினரிடமும் ஏற்படுத்தியிருக்கின்றது. முக்கியமாக சம்பந்தப்பட்ட வைத்தியரைக் காப்பாற்றுவதற்கான நடவடிக்கைகளில் அரசாங்கம் ஈடுபடலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. இது ஒரு அரசியல் விவகாரமாகக் கூடிய சூழ்நிலையும் உருவாகிவருகின்றது. இந்த நிலையில் இந்த மர்ம மரணம் தொடர்பில் உரிய விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் திருமதி விஜய கலா மகேஸ்வரன் அவசரக் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், வேலணை மத்திய மருந்தகத்தில் குடும்பநல மருத்துவ உத்தியோகத்தராக கடமையாற்றிய இந்த இளம் பெண் அங்கு பணியாற்றிய வைத்தியரான பிரியந்த செனவிரட்ண என்பவரால் துன்புறுத்தப்பட்டு வந்ததாகவும் சனிக்கிழமை காலை இவரது சடலம் வைத்தியசாலையிலிருந்து மீட்கப்பட்டுள்ளதாகவும் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது. வரது மரணம் தொடர்பாக பிரேதப் பரிசோதனை நடத்திய சட்ட வைத்திய அதிகாரி இந்த மரணத்தில் தற்கொலைக்கான சான்றுகள் காணப்படவில்லையென்று தெரிவித்துள்ளார். எனவே இது குறித்து உரிய விசாரணைகள் நடத்தப்பட்டு சம்பவத்துடன் குறித்த மருத்துவர் தொடர்புபட்டிருந்தால் அவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும். 
இத்தகைய செயற் பாடுகள் கடமைபுரியும் பெண்களை அச் சுறுத்துவதாகவே அமைந்துள்ளது. யாழ்ப்பாணத்தில் குறிப்பாக தீவகத்தில் இத்தகைய சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன. எனவே இவற்றை இல்லா தொழிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் இது குறித்து பாரபட்சமற்ற விசாரணை நடத்தி குற்றவாளிக்கு உரிய தண்டனை வழங்கப்பட வேண்டும் இந்தச் சம்பவமானது வேலணைப் பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளமையினால் இது குறித்து பொலிஸாரும் நீதித் துறையும் தமது கடமைகளைச் சரிவரச் செய்ய வேண்டும் பெண்கள் பாதுகாப்பாக கடமை புரிவதற்கு உரிய சூழல் குடாநாட்டில் ஏற்படுத்தப்பட வேண்டியது அவசியம்" எனவும் விஜயகலா அவசரக் கோரிக்கை விடுத்திருக்கின்றார்.
யாழ்ப்பாணத்திலுள்ள தீவுப் பகுதிகளில் இவ்வாறான சம்பவங்கள் பரலவாக இடம்பெற்றுவருவது தொடர்பாக விஜயகலா தனது செய்தியில் சுட்டிக்காட்டியிருப்பது கவனிக்கத்தக்கது. குடாநாடு முற்றுமுழுதாக இராணுவக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டிருக்கின்ற நிலையில் பெண்களுக்கு எதிரான இவ்வாறான பல்வேறு சம்பவங்கள் விசாரணைக்கு உள்ளாக்கப்படாமல் விடப்படும் நிலை காணப்படுகின்றது. 
மக்கள் ஆர்ப்பாட்டம்
தர்சிகாவின் மரணம் தொடர்பாக சந்தேகம் தெரிவித்துள்ள பொதுமக்களும் மருத்துவமனைப் பணியாளர்களும், இச்சம்பவம் தொடர்பான விசாரணைகள் துரிதப்படுத்தப்பட வேண்டும் எனவும், சம்பந்தப்பட்ட மருத்துவர் கைது செய்யப்பட வேண்டும் எனவும் கோரி குடாநாட்டில் ஆர்ப்பாட்டங்களை நடத்தியிருக்கின்றார்கள். தர்சிகாவின் சடலம் பிரேத பரிசோதனையின் பின்னர் ஞாயிற்றுக்கிழமை குடும்பத்தவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இருந்த போதிலும் பிரேத பரிசோதனை அறிக்கையின் விபரங்கள் உத்தியோகபூர்வமான முறையில் வெளியிடப்படவில்லை. இந்த நிலையில் திங்கட்கிழமை இடம்பெற்ற அவரது மரணச் சடங்கைத் தொடர்ந்து மருத்துவமனைப் பணியாளர்களும் பொதுமக்களும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனைத் தொடர்ந்து செவ்வாய்கிழமையும் குடும்ப சுகாதார சேவைகள் உத்தியோகத்தர்கள் சங்கம், யாழ். மாவட்ட பொதுச் சுகாதார சேவைகள் சங்கம் என்பன இணைந்து யாழ்ப்பாணத்தில் ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தின. மருத்துவர் மற்றும் சந்தேகத்துக்குரியவர்கள் எனக் கருதப்படுவோரை உடனடியாகக் கைது செய்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். அமைச்சு மட்டத்தில் உடனடியாக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட வேண்டும். பாதிக்கப்பட்ட குடும்பத்தவர்களுடக்கு நட்டவீடு வழங்கப்பட வேண்டும் போன்ற கோரிக்கைகள் இந்த ஆர்ப்பாட்டத்தின் போது முன்வைக்கப்பட்டதுடன், உரிய பாதுகாப்பு உத்தரவாதம் வழங்கப்படாத நிலையில் இரவுக் கடமைக்கு வருமாறு தம்மை நிர்ப்பந்திக்கக்கூடாது எனவும் இவர்கள் வலியுறுத்தியிருக்கின்றார்கள்.
சுகாதாரப் பணிப்பாளர் இந்தக் கோரிக்கைகளை ஏற்றுக்கொண்டதையடுத்து பணிப் பகிஷ்கரிப்பைத் தற்காலிகமாகக் கைவிடுவதற்குத் தீர்மானித்துள்ள பணியாளர்கள் மீண்டும் கடமைக்குச் செல்லத் தொடங்கியிருப்பதையடுத்து மருத்துவமனையின் வழமையான செயற்பாடுகள் மீண்டும் ஆரம்பமாகியுள்ளன. இதேவேளையில் இந்த மர்ம மரணத்தில் தொடர்புபட்டிருப்பதாகக் குறிப்பிடப்படும் சிங்கள மருத்துவரைக் கைது செய்யுமாறு செவ்வாய்கிழமை நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கின்றது. 
சிங்கள மருத்துவர்
வடபகுதியில் தமிழ் மருத்துவர்களுக்குக் காணப்படும் தட்டுப்பாடு காரணமாகவே தென்பகுதியிலிருந்து சிங்கள மருத்துவர்கள் யாழ்ப்பாணம் உட்பட நாட்டின் ஏனைய பகுதிகளுக்கும் அனுப்பிவைக்கப்படுகின்றார்கள். அந்த வகையில்தான்  சிங்கள மருத்துவரான பிரியந்த செனவிரட்ண யாழ்ப்பாணத்தில் பணிக்காக அனுப்பப்பட்டார். நாட்டின்  பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்தவராக அவர் இருப்பதால், அதிகாரத்துடனும், ஆணவத்துடனுமே நடந்துகொண்டதாக மருத்துவமனைப் பணியாளர்கள் தெரிவிக்கின்றார்கள். புடையினரின் பாதுகாப்பும் இருப்பதால் இவர்களுடைய அடாவடித்தனத்துக்கு அஞ்சி நடக்க வேண்டியவராகவே மற்றவர்கள் இருந்துள்ளார்கள்.
இரவு நேரக் கடமையில் இருக்கும் போது பெண் பணியாளர்களைத் துன்புறுத்தும் வகையில் இவர் நடந்தகொண்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இதில் குறிப்பாக இரவுக் கடமைக்கு வரும் தர்சிகா அச்சுறுத்தலுக்கும் துன்புறுத்தலுக்கும் உள்ளாக்கப்பட்டார். இந்த நிலையிலேயே சனிக்கிழமை அவர் சடலமாக மீட்கப்பட்டமை குடாநாட்டில்  கொந்தளிப்பை ஏற்படுத்தியிருக்கின்றது. 

ஐ.நா. வுடனான மோதல்:

மூன்றாவது நாளுடன் முடிவுக்கு வந்த
‘சாகும் வரையிலான’ உண்ணாவிரதம்
தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் அமைச்சருமான விமல் வீரவன்ச தலைமையிலான குழுவினர் கொழும்பிலுள்ள ஐ.நா. சபை அலுவலகத்தை முற்றுகையிட்டு பெரும் ஆரவாரங்களுடன் ஆரம்பித்துள்ள சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டம் மூன்றாவது நாளே கைவிடப்பட்டுவிட்டது. உண்ணாவிரதப் போராட்டங்களையே கேலிக் கூத்தாக்கியிருக்கும் விமல் வீரவன்சவின் இந்தப் போராட்டம், இனவாத அடிப்படையில் போராட்டங்களை முன்னெடுப்பவர்களின் அரசியல் உறுதிப்பாட்டைத் தெளிவாக அம்பலப்படுத்தியிருக்கின்றது. இந்த உண்ணாவிரதப் போராட்டத்தையடுத்து உருவாகியிருக்கும் நிலை இலங்கைக்கும் ஐக்கிய நாடுகள் சபைக்கும் இடையில் ஒருவித மோதல் நிலையை உருவாக்கியிருந்தது. மேற்கு நாடுகளும் இவ்விடயத்தில் தமது அதிர்ச்சியை வெளியிட்டிருந்தன. 
விடுதலைப் புலிகளுடான போரின் இறுதிக் காலப்பகுதியில் இடம்பெற்றதாகக் கூறப்படும் போர்க் குற்றங்கள் தொடர்பில் தமக்கு ஆலோசனைகளை வழங்குவதற்காக மூன்று உறுப்பினர்களைக் கொண்ட நிபுணர் குழு ஒன்றை ஐ.நா. செயலாளர் நாயகம் பான் கீ மூன் அமைத்திருப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்தே இந்தப் போராட்டத்தை விமல் வீரவன்ச ஆரம்பித்தார். கொழும்பு, தும்புளைச் சந்தியிலுள்ள ஐ.நா. அலுவலகத்தின் முன்பாக வீரவன்ச ஆரம்பித்துள்ள இந்த சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டம் ஐ.நா.வின் நிபுணர் குழு கலைக்கப்படும் வரையில் தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் - இதன் அடுத்த கட்டம் எவ்வாறானதாக இருக்கும் என்ற கேள்வி அனைவரிடமும் எழுந்திருந்த நிலை கடந்த வாரத்தில் காணப்பட்டது. 
இவ்வாறான நிபுணர்குழு ஒன்றை அமைக்கும் எண்ணத்தை ஐ.நா. செயலாளர் நாயகம் வெளியிட்ட போதே கொழும்பு அதற்குக் கடுமையான ஆட்சேபனையைத் தெரிவித்திருந்தது. இருந்தபோதிலும் ஐ.நா.வின் விதிமுறைகளுக்குக் கட்டுப்பட்ட ஒரு நாடென்ற முறையில் இதற்கு எதிராக தீவிரமான போராட்டம் எதனையும் முன்னெடுக்கக்கூடிய ஒரு நிலையில் அரசாங்கம் இருக்கவில்லை. இருந்தபோதிலும், அரசாங்கத்தின் ஒரு பங்காளியாகவுள்ள அமைச்சர் விமல் வீரவன்சவையும் ஜாதிக ஹெல உறுமயவையும் இதற்காக அரசாங்கம் பயன்படுத்திக்கொள்ளும் என்பது எதிர்பர்க்கப்பட்டதுதான். விமல் வீரவன்சவும் வழமைபோல தேசப்பற்று என்ற முகமூடியை அணிந்து கொண்டு ஐ.நா.வுக்கு எதிரான போராட்டத்தை ஆரம்பித்தார். தேசப்பற்றாளர்களும் இதனை ஒரு பாரிய போராட்டமாக முன்னெடுக்கலாம் என்ற நம்பிக்கையுடனேயே இருந்தனர்.
உண்ணாவிரததத்தை ஆரம்பிக்க முன்னர் வீரவன்ச தெரிவித்த தகவல்கள் அவரது போராட்டம் பாரிய விளைவுகளை ஏற்படுத்தலாம் என்ற பெரும் அச்சத்தையே உருவாக்கியிருந்தது. இந்தப் போராட்டத்தை மாவட்ட ரீதியாக நடத்த வேண்டும் எனவும், ஐ.நா.வுக்கு எதிராக மக்கள் கிளர்ந்து எழ வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டிருந்தார். அத்துடன் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ கேட்டுக்கொண்டால்கூட தான் தன்னுடைய போராட்டத்தை நிறுத்தப்போவதில்லை எனவும், இந்தப் போராட்டத்தில் தான் கொல்லப்பட்டால் தனக்குப் பின்னால் தேசப்பற்றாளர்கள் அனைவரும் அணிதிரண்டு உண்ணாவிரதப் போராட்டங்களை நடத்த முன்வர வேண்டும் எனவும் அவர் அறைகூவல் விடுத்திருந்தார். அவரது உரையில் காணப்பட்ட அந்த உணர்ச்சி உண்ணாவிரத முடிவில் காணாமல் போய்விட்டது. 
விமல் இவ்வாறு அழைப்பு விடுத்திருந்த போதிலும், அவருக்கு ஆதரவாக மாவட்ட ரீதியாக உண்ணாவிரதப் போராட்டங்களை முன்னெடுப்பதற்கு யாரும் முன்வரவில்லை. இது நாட்டில் கொந்தளிப்பான நிலை ஒன்றை ஏற்படுத்தவும் இல்லை. பதிலாக வீரவன்சவின் போராட்டத்தை அனைவரும் ஒரு கேலிக் கூத்தாகவே பார்த்தனர். சிங்கள மற்றும் ஆங்கிலப் பத்திரிகைகள் கூட இதனை ஒரு கோமாளிக் கூத்து என்றே வர்ணித்தன. பிக்குமார்தான் பெருமளவில் உண்ணாவிரத அரங்கில் கூடி பிரித் ஓதிக்கொண்டிருந்தார்கள். இதனைவிட உண்ணாவிரத அரங்கில் கூட வேடிக்கை பார்க்க வந்தவர்களைவிட உணர்ச்சிகரமாக உண்ணாவிரதத்துக்கு ஆதரவளிக்க வந்தவர்கள் என யாரையும் காணக்கூடியதாக இருக்கவில்லை. அரச ஆதரவு ஊடகங்கள்தான் இந்தப் போராட்டத்துக்கு அதிகளவு முக்கியத்துவத்தைக் கொடுத்தன.
அரசாங்கத்தைப் பொறுத்தவரையில் இந்தப் போராட்டத்தைத் தட்டிவிட்டாலும், ஒரு தேசப்பற்றாளன் என்ற முறையில் மகிந்த ராஜபக்ஷவைவிட விமல் வீரவன்ச பிரபலமடைவதை விரும்பவில்லை. வெள்ளிக்கிழமை இரவு ஜனாதிபதியின் உத்தியோகபூர்வமான வாஸஸ்தலமான அலரி மாளிகையில் நடைபெற்ற இராப்போசன விருந்து வைபவமே இதற்குச் சான்று. பட்ஜெட் சமர்ப்பிக்கப்பட்ட நிலையில் நிதி அமைச்சர் என்ற முறையில் இந்த இராப்போசன விருந்துபசாரத்தை அமைச்சர்களுக்காகவும், எம்.பி.க்களுக்காகவும் ஜனாதிபதி நடத்தினார். தமது அமைச்சரவையில் இடம்பெற்றிருக்கும் கட்சித் தலைவர் ஒருவர் தேசத்துக்காக உண்ணாவிரதம் இருக்கின்றார் என்பதால் இந்த இராப்போசன விருந்துபசாரத்தை ரத்துச் செய்ய வேண்டும் அல்லது ஒத்திவைக்க வேண்டும் என்ற எந்தவிதமான சிந்தனையும் இன்றி கேளிக்கைகளுடன் கூடிய இந்த விரந்துபசாரத்தை அரசாங்கம் நடத்தியிருப்பதே விமல் வீரவன்சவை அரசாங்கம் எந்த இடத்தில் வைத்திருக்கின்றது என்பதற்குச் சிறந்த உதாரணம். 
ஜ.நா.வுக்கு எதிரான இந்தப் போராட்டத்தை உடனடியாகத் தடுத்து நிறுத்துவதற்கோ அல்லது, ஐ.நா.வின் செயற்பாடுகளை சுமூகமான முறையில் முன்னெடுப்பதற்கான வழிவகைகளை ஏற்படுத்திக்கொடுப்பதற்கோ தேவையான நடவடிக்கைகளை எடுக்காததன் மூலம் இந்தப் போராட்டத்தின் பின்னணியில் அரசாங்கம் உள்ளது என்பது உறுதிப்படுத்தப்படுகின்றது. இதனைவிட அமைச்சர் பதவியை இராஜினாமா செய்ய விமல் வீரவன்ச முன்வந்த போதிலும் அதனை ஏற்றுக்கொள்வதற்கு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ மறுத்துவிட்டார். இதன் மூலம் விமலின் இந்தப் போராட்டத்துக்கு ஜனாதிபதியின் ஆசீர்வாதமும் உள்ளது வெளிப்படையாகியிருக்கின்றது. இவ்விடயத்தில் அரசாங்கத்தின் அணுகுமுறை ஐ.நா.வுக்கு மட்டுமன்றி மேற்கு நாடுகளுக்கும் அதிர்ச்சியைக் கொடுத்திருக்கின்றது.
இது தொடர்பாக மேற்கு நாட்டு இராஜதந்திரிகள் வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸைச் சந்தித்து தமது அதிருப்தியை நேரடியாகவே தெரிவித்திருக்கின்றார்கள். அமைதியான முறையில் போராட்டம் ஒன்றை நடத்துவது எந்தவகையிலும் ஜனநாயகத்துக்கு உட்பட்டதாகும் என்பதை ஏற்றுக்கொண்டிருக்கும் அவர்கள், இலங்கை அங்கத்துவ நாடாக இருக்கும் ஐ.நா. சபையின் வாயிலை முற்றுகையிட்டு ஐ.நா. சபையின் அதிகாரிகளைப் பயமுறுத்துவதும் அவர்களைத் துன்புறுத்துவதும் சர்வதேச விதிமுறைகளை மீறும் செயல்களாகவே கருதப்பட வேண்டும் எனவும் சுட்டிக்காட்டியிருக்கின்றார்கள். சர்வதேச ரீதியான இவ்வாறான செயற்பாடு இலங்கைக்குப் பெரும் அபகீர்த்தியை ஏற்படுத்துவதாக அமையும் என்பதையும் அவர்கள் குறிப்பிட்டிருக்கின்றார்கள்.
இலங்கையைப் பொறுத்தவரையில் ஐ.நா.வின் உதவிகள் அதற்குத் தவிர்க்க முடியாதவை. குறிப்பாக போரினால் பாதிக்கப்பட்ட பகுதிகள் ஐ.நா.வுக்கு கீழ் வரும் அமைப்புக்களே பெருமளவு உதவிகளை மேற்கொண்டுவருகின்றன. கொழும்பிலுள்ள ஐ.நா. அலுவலகம் முற்றுகை யிடப்பட்டுள்ளதையடுத்து - வடபகுதிக்கான ஐ.நா. உதவி நிறுவனங்களின் செயற்பாடுகளும் கட்டுப்படுத்தப்பட்டுள்ளன. குறிப்பாக உதவி நிவாரணப் பொருட்களுடனான வாகனங்கள், மற்றும் பணியாளர்கள் அந்தப் பகுதிக்குச் சென்றுவருவதற்கக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இதனால் மீள் குடியேற்றப்பட்ட மக்களுக்கான உதவிகள் மற்றும் நிவாரணங்களை வழங்குவதில் பாரிய பாதிப்புக்கள் ஏற்படலாம் என வடபகுதியிலுள்ள நிவாரண அமைப்புக்கள் சுட்டிக்காட்டியிருக்கின்றன.
இலங்கை ஒரு வளர்முக நாடாக இருப்பதால் ஐ.நா.வின் கீழ் வரும் அமைப்புக்களின் உதவிகள் அதற்குக் கட்டாயம் தேவை. இந்த உதவிகள் தடைப்பட்டால் எதிர்காலத்தில் பாரிய விளைவுகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். குறிப்பாக ஐ.நா. அபிவிருத்தித் திட்டம், உலக உணவுத் திட்டம், யுனிசெப், உலக சுகாதார அமைப்பு, அகதிகளுக்கான ஐ.நா. உயர் ஸ்தானிகராலயம், மனித உரிமைகள் ஆணையகம், சர்வதேச நாணய நிதியம், உலக வங்கி உட்பட பல்வேறு அமைப்புக்களின் உதவிகளையும், ஆதரவையும் எதிர்பார்த்தே இலங்கை உள்ளது. இவற்றின் உதவிகள் தடைப்படுவது பாரிய விளைவுகளை ஏற்படுத்துவதாக அமையும். 
அத்துடன் இந்த சண்டித்தன அரசியலைத்தான் தன்னுடைய இராஜதந்திரமாக அரசாங்கம் கருதுகின்றது. இது சர்வதேச ரீதியாக அரசியல் பிரச்சினைகளையும் உருவாக்கலாம். உள்நாட்டிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். கொழும்புக்கான ஐ.நா.வின் விசேட பிரதிநிதி நில் புனேயை ஐ.நா. அவசரமாக அழைத்திருப்பது பதில் நடவடிக்கை ஒன்றுக்கு ஐ.நா.வும் தயாராக இருப்பதைத்தான் காட்டியிருக்கின்றது. ஆலோசனைகளுக்காக அவர் அழைக்கப்பட்டிருப்பதாகக் கூறப்பட்டாலும், ஐ.நா.வின் அடுத்த கட்டச் செயற்பாடுகள் பற்றிய ஆலோசனைகளுக்காகவே அவர் அழைக்கப்பட்டுள்ளார். அவர் மீள அழைக்கப்பட்டிருப்பது கொழும்புக்குப் பெரும் அதிர்ச்சியைக் கொடுத்திருக்கின்றது. 
ஐ.நா. அமைத்துள்ள நிபுணர்குழுவைக் கலைக்கக் கோரி இந்தப் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ள போதிலும், இதனைக் கலைக்கும் உத்தேசம் எதுவும் தமக்கு இல்லை என்பதை ஐ.நா. செயலாளர் நாயகம் ஏற்கனவே திட்டவட்டமாக அறிவித்திருக்கின்றார். இந்த நிபுணர் குழு தொடர்பாக மிகைப்படுத்தப்பட்ட தகவல்களையே விமல் வீரவன்சவும் அவரது குழுவினரும் கொழும்பில் பரப்பிவருவதும் கவனிக்கத்தக்கது. குறிப்பாக போர்க் குற்றங்களில் ஈடுபட்டதாகக் கூறப்படும் இராணுவத்தினர் ஐ.நா. சபையின் விசாரணைகளையடுத்து தூக்கிலிடப்படுவார்கள் என விமல் வீரவன்ச தனது உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பிப்பதற்கு முன்னதாகத் தெரிவித்திருந்தார். இது போன்ற கருத்துக்களின் மூலமாக மக்களுடைய உணர்வுகளை ஐ.நா.வுக்கு எதிராகத் தூண்டுவதில் அவர்கள் வெற்றி பெற்றிருக்கின்றார் என்றுதான் சொல்ல வேண்டும்.
சர்வதேச ரீதியாக அனைத்து நாடுகளினாலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட சில விதிமுறைகளுக்கு அமைவாகவே ஐ.நா. சபை செயற்பட்டுவருகின்றது. ஈரான் உட்பட சில ஆபிரிக்க நாடுகளுக்கு எதிரான பொருளாதார மற்றும் தடைகள் ஐ.நா. சபையினால் கடந்த காலங்களில் நடைமுறைப்படுத்தப்பட்டன. அமைதியையும் சமாதானத்தையும் உருவாக்குவதற்காக குறிப்பிட்ட நாடுகளுக்கு எதிரான தடைகளை நடைமுறைப்படுத்துவதற்கான அதிகாரம் ஐ.நா.வின் பாதுகாப்புச் சபைக்கு உள்ளது. இவ்வாறான அதிகாரங்களைப் பயன்படுத்தி சில நாடுகளுக்கு எதிரான செயற்பாடுகளை ஐ.நா. சபை கடந்த காலங்களில் எடுத்திருந்த போதிலும், அவ்வாறு தடைகளுக்கு உள்ளான நாடுகள் கூட ஐ.நா. சபையிலிருந்து வெளியேறுவதற்கு முற்படவில்லை. ஐ.நா. சபையின் முக்கியத்துவத்தையும் அதன் மேலாண்மையையும் அவை ஏற்றுக்கொண்டே செயற்பட்டுள்ளன. 
உலகம் ஒரு கிராமமாகச் சுருங்கிவிட்ட இந்தக் காலப்பகுதியில் எந்த ஒரு நாடுமே தனித்துச் செயற்பட முடியாது. ஒவ்வொரு நாடும் மற்றையவைகளைச் சார்ந்திருப்பது தவிர்க்க முடியாது என்பதுடன் இந்த புதிய உலக ஒழுங்கில் ஐ.நா.வின் முக்கியத்துவமும் பிரதானமானதாக இருக்கின்றது. இதனை உணர்ந்துகொண்டுள்ள நிலையில்தான் ஐ.நா.வுக்கு எதிரான போராட்டத்தை ஒரு எல்லையுடன் வரையறுப்பதற்கு இலங்கை அரசாங்கம் முற்பட்டிருக்கின்றது என்பதையும் புரிந்துகொள்ள முடிகின்றது. கொழும்பிலுள்ள ஐ.நா. அலுவலகத்தைச் சுற்றிவளைத்து அங்குள்ள பணியாளர்களைப் பயணமாக வைக்கப்போவதாகவும், ஐ.நா.வின் செயற்பாடுகளை முடக்கப்போவதாகவும் கூறியே வீரவன்ச தலைமையிலான குழுவினர் இந்தப் போராட்டத்தை ஆரம்பித்தார்கள் என்பது கவனிக்கத்தக்கது. இருந்தபோதிலும் பின்னர் அலுவலகத்திலுள்ள பணியாளர்கள் வெளியே செல்வதற்கு அனுமதிக்கப்பட்டனர்.
ஐ.நா.வுக்கு எதிரான போராட்டத்தை விமல் வீரவன்ச முன்னெடுத்தாலும் இதனை ஒரு முழுமையான போராட்டமாக மாற்றுவதற்கு அரசாங்கம் இந்தச் சந்தர்ப்பத்தில் விரும்பவில்லை என்பதை இது புலப்படுத்துகின்றது. சர்வதேச ரீதியாக இவ்வாறான செயற்பாடு தமக்கு அவப்பெயரைத் தேடித்தருவதாக அமையும் என்பது அரசாங்கத்துக்குத் தெரியும். அத்துடன் சர்வதேச அரங்கில் சங்கடமான ஒரு நிலையையும் இது உருவாக்கலாம். எதிர்க்கட்சிகள் இது தொடர்பில் தொடர்ந்தும் அரசாங்கத்தை எச்சரித்துவருகின்றன. இந்தநிலையில் இதனை ஐ.நா.வுக்கு எதிரான போராட்டம் என்பதற்கு அப்பால் அதன் செயலாளர் நாயகம் பான் கீ மூனுக்கு எதிரான ஒரு போராட்டமாக முன்னெடுப்பதற்குத்தான் அரசாங்கமும், விமல் வீரவன்ச குழுவினரும் முற்படுவதையும் புரிந்துகொள்ளக் கூடியதாக இருக்கின்றது. 
சிக்கலான இந்த விவகாரத்தை மிகுந்த இராஜதந்திரத்துடன் கையாள வேண்டிய நிலையில் இதனை வெறுமனே ஒரு சண்டித்தனமான அரசியலாகக் கையாள்வதற்கு அரசாங்கம் முற்படுகின்றது என எதிர்க்கட்சிகள் தெரிவிக்கும் குற்றச்சாட்டில் உண்மை இருக்கத்தான் செய்கின்றது. இராஜதந்திரமாக அணுகுவேண்டிய இந்த விவகாரத்தை தேசப்பற்று என்ற முகமூடியைப் போட்டுக்கொண்டு மக்களைத் தவறான வழியில் கொண்டு செல்வதற்கு அரசாங்கத்தின் ஒரு தரப்பினர் முற்படுவதாகவும் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி குற்றஞ்சாட்டியிருக்கின்றது. 
அரசாங்கத்தைப் பொறுத்தவரையில் இவ்வாறான ஒரு போராட்டத்தை கொழும்பில் நடத்தும் அதேவேளையில், அணிசாரா அமைப்பு மற்றும் சீனா, ரஷ்யா ஆகியவற்றைப் பயன்படுத்தி ஐ.நா. மீதான எதிரான அழுத்தங்களை அதிகரிப்பது அதன் திட்டமாகவுள்ளது. இருந்தபோதிலும் அணிசாரா அமைப்பு 118 நாடுகளைக் கொண்ட எண்ணிக்கையில் பலம் வாய்ந்த ஒரு அமைப்பாக இருந்தாலும், ஐ.நா.வுக்கு அழுத்தத்தைக் கொடுக்கக்கூடியளவுக்கு சக்திவாய்ந்த ஒரு நாடாக அது இல்லை. அதேவேளையில் பாதுகாப்புச் சபையின் நிரந்திர உறுப்பு நாடுகள் என்ற முறையில் ரஷ்யா சீனா என்பன வீட்டோ அதிகாரத்தைப் பயன்படுத்தக் கூடியவையாக இருக்கின்ற போதிலும், குறிப்பிட்ட நிபுணர்குழு ஐ.நா. செயலாளர் நாயகம் தனது விஷேட அதிகாரங்களைப் பயன்படுத்தி அமைக்கப்பட்ட ஒன்றாக இருப்பதால் அந்த நாடுகளாலும் எதுவும் செய்ய முடியவில்லை.
இந்தநிலையில்தான் சாகும் வரையிலான தனது உண்ணாவிரதப் போராட்டத்தை மூன்றாவது நாளே நிறுத்திக்கொண்டு ஜனாதிபதி கொடுத்த இளநீரைப் பருகிக்கொண்டு உண்ணாவிரத அரங்கிலிருந்து விமல் வீரவன்ச எழுந்து சென்றிருக்கின்றார்.

Monday, July 5, 2010

பிக்குகளும் அரசியலும்

பறிபோன தலைமை பதவி: ஜாதிக ஹெல உறுமயவில் நடந்த சதி
ஆட்சி அதிகாரங்களை ஒதுக்கித் தள்ளி துறவறம் பூண்ட கௌதம புத்தரின் பெயரால் நடத்தப்படும் கட்சியில் இப்போது தலைமைத்துவ அதிகாரப் போட்டி உச்ச கட்டத்தை அடைந்திருக்கின்றது. பௌத்த சாசனத்தைப் பாதுபாப்பதுதான் தமது பிரதான நோக்கம் எனக் கூறி ஆரம்பிக்கப்பட்ட ஜாதிக ஹெல உறுமய கட்சியில் இரண்டு சிரேஷ்ட பிக்ககளிடையே உருவாகியிருக்கும் தலைமைத்தவப் போட்டி கட்சியைப் பிளவுபடுத்தும் அளவுக்குச் சென்றிருக்கும் அதேவேளையில், கொழும்பு அரசியல் அரங்கில் முக்கிய பேசுபொருளாகவும் இந்த விவகாரமே உள்ளது.
கட்சியின் வருடாந்த மாநாடு கடந்த வாரம் இடம்பெற்ற பின்னணியிலேயே தலைமைப் பதவி தொடர்பில் பிரபலமான இரண்டு பிக்குகளுக்கு இடையில் இழுபறி ஏற்பட்டிருப்பது வெளிப்படையாகியது. தலைமைப் பதவியைக் கைப்பற்றுவதற்காக திரைமறைவில் தீட்டப்பட்டிருந்த திட்டங்களும் அம்பலமாகியிருக்கின்றது. 
கட்சியின் மாநாட்டுக்குத் தான் திட்டமிட்ட முறையில் அழைக்கப்படவில்லை என வண. எல்லாவலை மெத்தானந்த தேரர் குற்றஞ்சாட்டியிருக்கின்றார். கட்சியின் தலைவராக மநாடு நடைபெறும் நேரம் வரை இருந்த தன்னைத் தலைமைப் பதவியிலிருந்து வெளியேற்றுவதற்காக ஒரு நாடகமே அரங்கேற்றப்பட்டுள்ளது எனவும் அவர் அங்கலாய்க்கின்றார்.
கட்சியின் தலைமைப் பதவியைப் புதிதாகக் கைப்பற்றியிருக்கும் வண. ஓமல்பே சோபித தேரரரோ இவ்வாறான சதி எதுவும் இடம்பெறவில்லை என திட்டவட்டமாக மறுக்கின்றார். ஹெல உறுமயவைப் பொறுத்தவரையில் கட்சியின் தலைமைப் பதவி என்பது ஆயுட்காலத்துக்கு உரியதல்ல எனக் குறிப்பிடும் சோபித தேரர், ஒரு வருடத்துக்கு மட்டுமே தலைமைப் பதவி வரையறுக்கப்பட்டதாக இருப்பதாகவும் குறிப்பிடுகின்றார். இதனால் எல்லாவரை மெத்தானந்த தேரர் பதவியிலிருந்து விலகிச் செல்வதென்பது தவிர்க்க முடியாததாகவே இருந்துள்ளது என்hதுதான் அவரது கருத்து.
ஆனால், மெத்தானந்த தேரர் கடந்த ஏழு வருட காலமாக கேள்விக்கு உட்படுத்தப்படாத வகையில் கட்சியின் தலைவராகத் தொடர்ந்தும் இருந்துள்ளார் என்பது உண்மை!
கட்சித் தலைவர் சமூகமளித்திருக்காத நிலையில் நடைபெற்ற கட்சியின் மாநாட்டிலேயே புதிய தலைவராக சோபித தேரர் தெரிவு செய்யப்பட்டிருக்கின்றார். அதுவும் ஏகமனதான தெரிவு. முன்னைய தலைவர் மெத்தானந்த தேரர் தலைமைப் பதவியிலிருந்து ஓய்வு பெறுவதாகவும் பதிய தலைவர் பதவியேற்றிருப்பதாகவும் உறுமய பத்திரிகைகளுக்குச் செய்தி கொடுத்திருக்கின்றது. மறுநாள் காலை பத்திரிகைகளைப் பார்த்தபோதுதான் தலைமைப் பதவியிலிருந்து தான் தூக்கப்பட்டு புதிய தலைவர் பொறுப்பேற்றிருப்பதை மெத்தானந்த தேரர் அறிந்துகொண்டாராம்.
பாவம்! எந்த ஒரு அரசியல் கட்சித் தலைவருக்கும் ஏற்படக்கூடாத பரிதாபமான நிலை இது!
கட்சியின் தலைவருக்கே தெரியாமல் கட்சியின் மாநாடு நடத்தப்பட்டதா என்ற கேள்வி இவ்விடத்தில் நிச்சயமாக ஏற்படுகின்றது. கட்சி உறுப்பினர்களுக்கு மாநாட்டுக்கான அழைப்பு பதிவுத் தபாலில் அனுப்பிவைக்கப்பட வேண்டும் என்பதுதான் கட்சியின் யாப்பு எனவும். அதன்படி மெத்தானந்த தேரருக்கும் இரண்டு வௌ;வேறான அழைப்பிதழ்கள் அனுப்பிவைக்கப்பட்டிருந்ததாகக் கூறுகின்றார் புதிய தலைவர். அதாவது முன்னாள் தலைவருக்கு எதிரான சதி எதுவும் இடம்பெறவில்லை என்பதுதான் அவரது நிலைப்பாடு!
ஆனால் கட்சி மாநாட்டுக்குத் தலைமைதாங்கியிருக்க வேண்டிய மெத்தானந்த தேரர் வரவில்லை. அவர் ஏன் வரவில்லை என்பதையிட்டுக்கூட யாரும் கவலைப்பட்டதாகத் தெரியவில்லை. தலைமையை மாற்றுவதிலேயே அனைவருடைய கவனமும் இருந்துள்ளது. 
கட்சி மாநாடு நடைபெற்ற போது மெத்தானந்த தேரர் கொழும்பில் இருக்கவில்லை. அவர் முல்லைத்தீவில் தொல்பொருள் ஆய்வுகளில் ஈடுபட்டிருந்தார். அவர் தலைநகரில் இல்லாத நேரம் பார்த்து மாநாடு நடத்தப்பட்டதா அல்லது இது ஒரு தற்செயல் நிகழ்வா என்பதும் தெரியவில்லை. நடைபெற்றுள்ள நிகழ்வுகளைப் பார்க்கும் போது மெத்தானந்த தேரரைத் தலைமைப் பதவியிலிருந்து தூக்குவதற்கான திட்டம் ஒன்றுடன்தான் எதிர்த் தரப்பினர் செயற்பட்டுள்ளார்களா என்ற சந்தேகம் நிச்சயமாக உருவாகின்றது.
ஏ-9 பாதை திறக்கப்பட்ட பின்னர் வடபகுதிக்கு அடிக்கடி சென்று வருபவர்களில்  மெத்தானந்த தேரரும் ஒருவர். வட பகுதி மக்கள் மீது அவருக்குள்ள அன்போ அல்லது அக்கறையோ இதற்குக் காரணமல்ல. வடபகுதியில் சிங்களவர்கள் வாழ்ந்துள்ளார்கள் எனவும், அது சிங்கள மக்களுடைய தாயக பூமி எனவும் உறுதிப்படுத்தும் நோக்கத்துடனான தொல்பொருள் ஆய்வு வேலைகளை அவர் மேற்கொண்டு வருகின்றார். இந்த ஆய்வுகளின் ஒரு பகுதியாகத்தான் முல்லைத்தீவுக்கும் அவர் கடந்த வாரத்தில் சென்றிருந்தார். அவருக்கு  எதிராகச் சதி செய்வதற்கக் காத்திருந்தவர்களுக்கு இந்தச் சந்தர்ப்பம் மிகவும் வாய்ப்பானதாக அமைந்துவிட்டது. 
கட்சித் தலைமையை மீண்டும் கைப்பற்றுவது இலகுவானதல்ல என்பதைப் புரிந்துகொண்டுள்ள மெத்தானந்த தேரர் இப்போது அமைதியாகிவிட்டார். சோபித தேரரின் தரப்பினருக்கே  கட்சியில் அதிகளவு பலம் இருப்பது போலத் தெரிகின்றது. கடந்த செவ்வாய்கிழமை கொழும்பிலுள்ள ஐ.நா. அலுவலகத்தின் முன்பாக மறியல் போராட்டம் ஒன்றை ஏற்பாடு செய்ததன் மூலமாக தன்னுடைய பலத்தை சோபித தேரர் நிரூபித்துக் காட்டியிருக்கின்றார். கட்சியின் சிரேஷ்ட தலைவர்கள் பலரும் சோபித தேரரின் தலைமையை ஆதரிக்கும் நிலைப்பாட்டிலேயே இருப்பதாகத் தெரிகின்றது.
இந்த நிலையில் எல்லாவலை மெத்தானந்த தேரரின் அடுத்தகட்ட நகர்வு என்னவாக இருக்கும் என்ற கேள்வி எழுப்பப்படுகின்றது!
கட்சியிலிருந்து  தன்னை வெளியேற்ற முடியாது எனவும், தான் தொடர்ந்தும் கட்சியின் உறுப்பினராகவும் இருக்கப்போவதாகவும் சொல்லும் மெத்தானந்த தேரர், தான் கட்சிப் பதவிகளில் தொங்கிக்கொண்டிருக்க விரும்பும் ஒருவனல்ல எனவும், பௌத்த சாசனத்தின் நலனுக்காக தொடர்ந்தும் பாடுபடப்போவதாகவும் கூறியிருக்கின்றார். ஆனால் கட்சி தவறான பாதையில் சென்றால் மற்றொரு கட்சியில் இணைந்துகொள்வதற்கோ அல்லது புதிய கட்சி ஒன்றை அமைத்துக்கொள்வதற்கோ தான் தயங்கப்போவதில்லை எனவும் அவர் அறிவித்திருக்கின்றார்.   
கட்சி தன்னை சரியான முறையில் அரவணைத்துக்கொண்டால் கட்சி சரியான பாதையில் செல்கின்றது என அவர் விட்டுவிடலாம். இல்லையென்றால்தான் பிரச்சினை. ஆனால் தனியான கட்சி ஒன்றை அமைத்து அதனை வளர்க்கக்கூடிய நிலையில் மெத்தானந்த தேரர் இல்லை என்பதுதான் உண்மை. ஆளும் கட்சி உட்பட பல கட்சிகள் இனவாதத்தைப் பேசுவதற்கென்றே இருக்கும் நிலையில் இனவாதத்தை அடிப்படையாகக் கொண்டு புதிய கட்சி ஒன்றை உருவாக்கி வெற்றிபெறக் கூடிய நிலை இப்போதில்லை.
ஆளும் கட்சியுடன் இணைந்திருப்பதால்தான் உறுமய நிலைத்திருக்கின்றது. தனியாகச் சென்றால் செல்லாக்  காசாகிவிடும் என்பதற்கு ஜே.வி.பி. உதாரணமாக உள்ளது. இந்த நிலையில் புதிய கட்சி என்று சொல்லலாமே தவிர மெத்தானந்தரால் அதில் சாதிக்க முடியாது. இருக்கின்ற நிலையில் ஆளும் கட்சியுடன் ஐக்கியமாகிவிடுவதுதான் அவருக்குப் பாதுகாப்பானதாக இருக்கும்!

Saturday, July 3, 2010

இனநெருக்கடியும் அரசியலும்

கே.பி. சுயமாகச் செயற்படுகின்றாரா
புலனாய்வுப் பிரிவு இயக்குகின்றதா?
விடுதலைப் புலிகள் அமைப்பின் சர்வதேசப் பொறுப்பாளர் என அறியப்பட்ட 'கே.பி" எனப்படும் குமரன் பத்மநாதன் சுயமாகச் செயற்படுகின்றாரா அல்லது இராணுவப் புலனாய்வுப் பிரிவினரால் இயக்கப்படுகின்றாரா?
இதுதான் தமிழ் வட்டாரங்களில் இன்று எழுப்பப்படும் கேள்வியாக உள்ளது.
விடுதலைப் புலிகள் அமைப்பின் சர்வதேசப் பொறுப்பாளராகச் செயற்பட்ட பத்மநாதன் மலேஷியாவில் வைத்துக் கைது செய்யப்பட்டு கொழும்புக்கு இரகசியமாகக் கொண்டுவரப்பட்ட பின்னர் அவர் தொடர்பாக கசிந்த பல்வேறு தகவல்களும் இப்போது உறுதிப்படுத்தப்படுவதைப் பார்க்கும் போது கொழும்பின் இரகசியத் திட்டங்களைப் புரிந்துகொள்ளக்கூடியதாக இருக்கின்றது. இலங்கை அரசின் பேச்சாளர்கள் வெளியிட்டுவரும் தகவல்களும் கே.பி.யை மையப்படுத்தி அரசாங்கம் மேற்கொண்டுவரும் திட்டங்களை அம்பலப்படுத்துவதாகவே இருக்கின்றது.
களத்தில் விடுதலைப் புலிகள் அமைப்பு மற்றாக அழிக்கப்பட்டாலும், பலம்பெயர்ந்த தமிழர்களின் செயற்பாடுகள்தான் தமக்கு அச்சுறுத்தலாக தற்போதுமிருப்பாதாக பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோதாபாய ராஜபக்ஷ உட்பட, கொழும்பின் கொழும்பின் கொள்கை வகுப்பாளர்கள் பலரும் தொடர்ச்சியாகத் தெரிவித்துவருகின்றார்கள். இவ்வாறு அச்சுறுத்தலாக இருக்கும் தமிழ்ப் பலம்பெயர் சமூகத்தைப் பிளவுபடுத்துவதற்கான தந்திரோபாயங்களுக்கு கே.பி.யை இலங்கையின் இராணுவப் புலனாய்வுப் பிரிவினர் பயன்படுத்துகின்றார்கள என்ற கேள்வியை எழுப்பும் வகையிலேயே கே.பி.யின் அண்மைக்காலச் செயற்பாடுகள் அமைந்திருக்கின்றன.
மலேஷியாவின் தலைநகர் கோலாலம்பூரிலிருந்து கடந்த வருடத்தில் செயற்பட்டுவந்த கே.பி. அங்கு வைத்துக் கைது செய்யப்பட்டு கொழும்புக்குக் கொண்டுவரப்பட்ட பாணியே மர்மமானதாகவும், ஆங்கில மர்மத் திரைப்படங்களில் வரும் மெய் சிலிர்க்க வைக்கும் காட்சிகளைப் போன்றதாகவுமே இருந்தது. அவர் எவ்வாறான சூழ்நிலையில் கைது செய்யப்பட்டார், எவ்வாறு கொழும்புக்குக் கொண்டுவரப்பட்டார் என்பன சந்தேகத்துக்குரியவையாகவே இருந்தன.
விடுதலைப் புலிகள் அமைப்பின் சர்வதேசப் பொறுப்பாளராகவும், அவ்வமைப்பின் ஆயுதக் கொள்வனவுக்குப் பொறுப்பானவராகவும் இருந்த கே.பி. இன்டர்போல் உட்பட பல நாடுகளால் தேடப்படும் ஒருவராகவே இருந்துள்ளார். தாய்லாந்தின் தலைநகர் பாங்கொக்கைத் தளமாகக் கொண்டே அவர் ஆரம்பத்தில் செயற்பட்டுவந்தபோதிலும், அங்கு அவர் மீது வலை விரிக்கப்பட்டதும் அங்கிருந்து அவர் வெளியேறியிருந்தார். கடந்தவருட ஆரம்பம் முதல் முள்ளிவாய்க்கால் பகுதியில் இறுதிக்கட்டப் போர் இடம்பெற்ற காலம் வரையில் மலேஷியாவின் தலைநகருக்குத் தனது தளத்தை மாற்றிக்கொண்ட கே.பி. அங்கிருந்தகொண்டே செயற்பட்டார்.
போரின் இறுதிக் காலத்தில் விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனுடன் மிகவும் நெருக்கமான இடைவிடாத தொடர்பை இவர் வைத்திருந்தார். முள்ளிவாய்க்;கால் போர் தொடர்பான பல்வேறு தகவல்களும் கே.பி. மூலமாகவே சர்வதேசத்தக்குத் தெரியத்தக்க வகையில் வெளியாகிக்கொண்டிருந்தன. விடுதலைப் புலிகள் அமைப்பினரைச் சரணடையச் செய்வதற்கான பேச்சுக்களையும் அவரே சர்வதேச சமூகத்துடன் நடத்தியதாகக் கூறப்படுகின்றது. இறுதியாக போரில் பிரபாகரன் வீரமரணமடைந்தார் என்ற தகவலும் கே.பி.யினால்தான் முதன் முதலில் உத்தியோகபூர்வமான முறையில் வெளியிடப்பட்டது. 
நந்திக்கடலின் கரையில் இடம்பெற்ற இறுதிக்கட்ட மோதல்களின் பின்னர் விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் போன்றே இவர் செயற்பட்ட அதேவேளையில், தன்னுடைய முன்னைய காலங்களைப் போல தொடர்ந்தும் தலைமறைவாக இருந்துகொண்டே செயற்பட முடியாத ஒரு நிலை இவருக்கு ஏற்பட்டது. குறிப்பாக நாடு கடந்த அரசாங்கம் அமைக்கப்பட வேண்டும் எனத் தெரிவித்த கே.பி. அதற்கான யோசனைகளையும் முதன் முதலாக முன்மொழிந்திருந்தார். 
இந்த நிலையில்தான் தன்னுடைய வழமையான தலைமறைவு வாழ்க்கையிலிருந்து சற்று வெளியே வந்து கொலாலம்பூரில் வெளியாட்கள் பலரையும் இவர் சந்தித்துள்ளார். இதன் மூலம் கே.பி. எங்கே இருக்கின்றார் என்ற இரகசியம் மெதுவாக வெளியே கசிந்தது. இந்த நிலையிலேயே சந்திப்பு ஒன்றுக்காக வெளியே சென்றிருந்த கே.பி. காணமல்போனார். இலங்கை மற்றும் மலேஷிய புலனாய்வாளர்கள் மேற்கொண்ட நடவடிக்கை ஒன்றின் மூலம் இவர் கைது செய்யப்பட்டு கொழும்புக்குக் கொண்டுவரப்பட்டதாக பின்னர் செய்திகள் வெளியாகின. 
கொழும்புக்குக் கொண்டுவரப்பட்ட கே.பி. தடுத்துவைக்கப்பட்டு விசாரணைகளுக்கு உள்ளாக்கப்படுவதாகக் கூறப்பட்டாலும் அவர் தொடர்பில் கசிந்த பல்வேறு தகவல்களும் அரசாங்கத்துடன் இணைந்து அவர் செயற்படுகின்றாரா என்ற கேள்வியைத்தான் ஏற்படுத்துவதாக அமைந்திருந்தது. குறிப்பாக பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோதாபாய ராஜபக்ஷவுடன் நெருக்கமான உறவுகளை ஏற்படுத்திக்கொண்டுள்ள கே.பி. அவருடன் பேரம் ஒன்றுக்குச் சென்றிருப்பதபாகக் கூறப்பட்டது. கே.பி. தடுப்புக் காவலிலேயே இருப்பதாகச் சொல்லப்பட்டாலும், அவர் கொழும்பிலள்ள ஐந்து நட்சத்திர விடுதி ஒன்றில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருப்பதாக கசியும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அத்துடன் தென்கிழக்காசியாவிலுள்ள முக்கிய நகர் ஒன்றுக்கு இரண்டு தடவைகளுக்கு மேல் பாதுகாப்பான முறையில் அவர் அழைத்துச் செல்லப்பட்டதாகவும் சொல்லப்படுகின்றது. இந்த விஜயங்களின் போது அவரது பெயரிலிருந்த பல கோடி ரூபா பெறுமதி வாய்ந்த சொத்துக்கள் கைமாற்றப்பட்டதாகவும் சொல்லப்படுகின்றது. இதனைவிட தனது கட்டுப்பாட்டிலிருந்த இரண்டு கப்பல்களில் ஒன்றை இலங்கை அரசாங்கத்துக்குக் கொடுத்துள்ள கே.பி., மற்றொரு கப்பலையும் விரைவில் கைமாற்றும் திட்டத்துடனேயே செயற்படுவதாகவும் சொல்லப்படுகின்றது. 
இந்தப் பின்னணியில் வெளிநாடுகளில் உள்ள விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்கள், மற்றும் புலிகள் அமைப்புக்கு பெருமளவு நிதி உதவிகளை வழங்கியவர்களுடன் தொலைபேசி மூலமாகத் தொடர்புகொண்டு கே.பி. பேசியிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியிருந்தது. குறிப்பாக இலங்கை வந்து வடக்கு கிழக்கு நிலைமைகளை நேரில் பார்வையிடுமாறு இவர்களிடம் கோரிக்கை விடுத்த கே.பி., அரசாங்கத்தின் புனர்வாழ்வுத் திட்டங்களுக்கு உதவுமாறு அவர்களைக் கோரியதாகவும் தகவல்கள் வெளியாகியிருந்தது. 
இவ்வாறு வெளியான தகவல்கள் அனைத்தையும் உண்மை என நிரூபிப்கும் வகையில் கடந்த வாரம் கொழும்பிலிருந்து வெளிவரும் சன்டே ஒப்சேவர் பத்திரிகை செய்தி ஒன்றை வெளியிட்டிருந்தது. கொழும்பு வந்தருந்த புலம்பெயர்ந்த தமிழர் பிரதிநிதிகள் சிலருடன் கே.பி. பேச்சுக்களை நடத்தியிருப்பதாகவும், வடக்கில் மேற்கொள்ளப்படும் புனரமைப்பு நடவடிக்கைகளுக்கு உதவுமாறு கோரிக்கை விடுத்ததாகவும் அந்தச் செய்தியில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்தப் பேச்சுக்களில் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோதாபாயவும் கலந்துகொண்டிருக்கின்றார்.
சன்டே ஒப்சேபர் பத்திரிகை இலங்கை அரசாங்கத்தின் கட்டப்பாட்டிலுள்ள லேக் ஹவுஸ் நிறுவனத்தினால் வெளியிடப்படுவது. இதில் வெளியாகும் செய்திகளைப் பொறுத்தவரையில் அவை அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ அறிவிப்புக்களாகவே கருதப்பட வேண்டியவை. அந்தவகையில் கே.பி. தொடர்பாக ஒப்செவர் பத்திரிகை வெளியிட்டிருந்த செய்தி ஒருவகையில் அரசாங்கத்தின் செய்தியாகப் பார்க்கப்பட வேண்டும் என்பதுடன், கே.பி. ஒரு விசாரணைக் கைதியைப் போலத் தடுத்துவைக்கப்பட்டிருக்கவில்லை என்பதை வெளிப்படுத்துவதாகவும் இந்தச் செய்தி அமைந்திருந்தது. 
புலம்பெயர்ந்த தமிழ்ச் சமூகத்தின் பிரதிநிதிகளாக ஒன்பது பேர்- இவர்கள் பல்வேறு ஐரோப்பிய நாடுகளில் வியாபார நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்கள், கொழும்பு வந்து வடக்கு கிழக்கின் அபிவிருத்தி தொடர்பான முக்கிய மாநாடு ஒன்றில் பங்குகொண்டிருக்கின்றார்கள். இந்தச் சந்திப்பை கே.பி.தான் ஏற்பாடு செய்ததாகச் சொல்லப்படுகின்றது. இந்தச் சந்திப்பைத் தொடர்ந்து விஷேட விமானம் ஒன்றின் மூலமாக யாழ்ப்பாணம் சென்ற இந்தக் குழுவினர் அங்குள்ள நிலைமைகளை நேரில் பார்வையிட்டனர். அபிவிருத்தி முதலீடு தொடர்பான வாய்ப்புக்களைக் கண்டறிவதே இவர்களுடைய பிரதான நோக்கமாக இருந்ததாகக் கூறப்படுகின்றது. 
போரினால் பாதிக்கப்பட்டவர்களுக்கான மீள்கட்டுமாணப் பணிகளை மேற்கொள்ளவென கே.பி.யின் ஏற்பாட்டில் கொழும்பு வந்த இந்தக் குழுவினர் ஜூன் மாதம் 15 ஆம் திகதி முதல் 20 ஆம் திகதி வரையில் வடக்கின் பல பகுதிகளையும் பார்வையிட்டதுடன், கொழும்பில் முக்கிய சந்திப்புக்களையும் மேற்கொண்டனர். யாழ்ப்பாணம். வவுனியா மற்றும் கிளிநொச்சி ஆகிய பகுதிகளுக்கு இவர்கள் சென்றதாகச் சொல்லப்படுகின்றது. கொழும்பில் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோதாபாய, இராணுவப் புலனாய்வுப் பிரிவின் பொறுப்பாளராக நீண்ட காலமாக இருக்கும் மேஜர் ஜெனரல் கபில ஹெந்தவிதாரண மற்றும் வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் ஆகியோரை இந்தக் குழுவினர் சந்தித்துப் பேசியிருக்கின்றார்கள்.
இது தொடர்பாகக் கருத்து வெளியிட்ட கொழும்பு வந்து திரும்பிய லண்டனைத் தளமாகக் கொண்ட மருத்துவர், வேலாயுதபிள்ளை அருட்குமார், இலங்கை அரசின் இராணுவப் புலனாய்வுப் பிரிவினரே கே.பி.யை இயக்கிவருவதாகவும், அவரூடாக இலங்கை அரசிடம் புலம்பெயர்ந்த மக்களை மண்டியிட வைப்பதே அரசின் நோக்கமாக இருப்பதாகவும் குற்றஞ்சாட்டியிருக்கின்றார். புலம்பெயர்ந்த மக்களின் பணத்தைப் பெற்றுக்கொள்வது ஒன்றே அரசின் நோக்கமாக இருப்பதாகவும் கோதாபாய தம்மை மிகுந்த ஆணவத்துடன் நடத்தியதாகவும் அவர் குறிப்பிடுகின்றார்.
புலம்பெயர்ந்த தமிழர்களை கே.பி. ஊடாக உள்வாங்க முற்படுவது அல்லது புலம்பெயர்ந்த தமிழ் சமூகத்தை பல பிரிவுகளாக உடைத்து சின்னாபின்னமாக்கி தமக்கு மண்டியிட வைப்பது என்பதில் இலங்கை அரசாங்கமும், இராணுவப் புலனாய்வாளர்களும் திட்டமிட்ட முறையில் உறுதியாகச் செயற்படுகின்றார்கள் என்பதை கொழும்பில் தாம் நடத்திய பேச்சுக்கள் மற்றும் சந்திப்புக்களின் போது உணர்ந்துகொள்ளக் கூடியதாக இருந்ததாகவும் அவர் குறிப்பிடுகின்றார். 
தமிழர் புனர்வாழ்வு மையம் என்ற பெயரில் ஒரு அமைப்பை உருவாக்குவதும், அதன் தலைவராக கே.பி.யை நியமித்து அதன் மூலமாக புலம்பெய்ந்த தமிழர்களிடமிருந்து பணத்தைப் பெற்றுக்கொள்வதையுமே அரசாங்கம் தமது கொள்கையாககக் கொண்டிருக்கின்றது. இதற்கான திட்டங்கள் தீட்டப்பட்டு செயற்படுத்தப்பட்டுவருவதாகவும் புலனாய்வுப் பிரிவு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.   கிடைக்கும்  செய்திகளைப் பார்க்கும் போது கே.பி. தெரிந்தோ தெரியாமலோ இலங்கையின் புலனாய்வுப் பிரிவின் வலைக்குள் விழுந்துவிட்டார். அதிலிருந்து மீளமுடியாதளவுக்கு உள்வாங்கப்பட்டுவிட்ட அவரைப் பொறுத்தவரையில் புலனாய்வுப் பிரிவினரின் திட்டங்களுக்கு உதவுவதைத் தவிர மாற்றுவழி எதுவும் அவரிடம் இல்லை.  
புலனாய்வுப் பிரிவினரைப் பொறுத்தவரையில் புலம் பெயர் சமூகத்திடமிருக்கக் கூடிய நிதியைப் பெற்றுக்கொள்வது என்பதும், இலங்கை அரசுக்கு எதிரான பலம்வாய்ந்த ஒரு சக்தியாக பலம் பெயர் சமூகம் சர்வதேச அரங்கில் வளர்ந்துவிருவதைத் தடுப்பதும் அவர்களுக்கு அவசரமாகவும் அவசியமாகவும் உள்ளது. அதற்கு கே.பி.  யைப் பயன்படுத்துவது என்ற திட்டத்துடன் அரசாங்கம் செயற்படுகின்றது.  புலம்பெயர் சமூகத்தினர்தான் அரசின் அடுத்த இலக்கு!

Monday, June 28, 2010

போர்க் குற்றச்சாட்டுக்கள்:

ஐ.நா.வின் ஆலோசனைக் குழுவும்
இலங்கையின் ஆட்சேபனையும்...
இலங்கைக்கும் ஐ.நா. சபைக்கும் இடையிலான பனிப் போர் இப்போது நேரடி மோதலாக மாற்றமடைந்திருக்கின்றது. விடுதலைப் புலிகளுடனான இறுதிக்கட்டப் போரின் போது கடந்;த ஏப்ரல், மே மாதங்களில் இடம்பெற்றுள்ளதாகக் கூறப்படும் போர்க் குற்றங்கள் தொடர்பில் ஐ.நா. செயலாளர் நாயகம் பான் கீ மூனுக்கு ஆலோசனை வழங்குவதற்கான நிபுணர் குழு அமைக்கப்பட்டதையடுத்து ஐ.நா. மீதான தாக்குதல்களை கொழும்பு தீவிரப்படுத்தியிருக்கின்றது. சர்வதேச மட்டத்திலும் இந்த விவகாரம் ஒரு பிளவை ஏற்படுத்தியிருக்கின்றது. ஐ.நா. செயலாளர் நாயகத்தின் செயற்பாடுகளை மேற்கு நாடுகள் நியாயப்படுத்தியிருக்கும் அதேவேளையில், கிழக்கத்தேய நாடுகளும் அணிசாரா நாடுகள் அமைப்பும் கொழும்புக்கு ஆதரவாகக் குரல் கொடுத்திருக்கின்றன.
ஐ.நா. செயலாளரின் செயற்பாடுகளுக்கு எதிராக கொழும்பு போர்க்கொடி தூக்கும் என்பது எதிர்பார்க்கப்பட்ட ஒன்றுதான். கொழும்பினுடைய கடுமையான ஆட்சேபனைகளுக்கு மத்தியில்தான் இந்த நிபுணர்குழுவை ஐ.நா. செயலாளர் நாயகம் அமைத்திருக்கின்றார். இந்தோனேஷியாவின் முன்னாள் சட்டமா அதிபர் மர்சுகி தருசுமன் தலைமையிலான இந்தக் குழு சட்டத்துறையிலும், மனித உரிமைகள் விவகாரத்திலும் நிபுணத்துவம் வாய்ந்தவர்களை உள்ளடக்கியிருக்கின்றது.  இந்தக் குழுவின் செயற்பாடுகள் எந்தவகையில் இடம்பெறும் என்பதையிட்டு கருத்துக்கள் எதுவும் வெளியிடப்பாத போதிலும், ஏற்கனவே கிடைத்துள்ள போர்க் குற்றங்கள் தொடர்பான ஆதாரங்களை அடிப்படையாகக் கொண்டே இதன் செயற்பாடுகள் ஆரம்பமாகும் என இராஜதந்திர வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. 
இலங்கை அரசின் கடுமையான ஆட்சேபனைக்கும் எதிர்ப்புக்கும் மத்தியில் அமைக்கப்பட்டுள்ள இந்தக்குழு அடுத்ததாக என்ன செய்யப்போகின்றது என்பதும், அதன் செயற்பாடுகளை அனுமதிக்கப்போவதில்லை என அறிவித்திருக்கும் இலங்கை அடுத்ததாக எவ்வாறான காய்நகர்த்தலை மேற்கொள்ளப் போகின்றது என்பதும்தான் தற்போதைய நிலையில் அவதானிக்கப்படும் விடயங்களாக உள்ளன!
இவ்விடத்தில் இவ்வாறான குழு ஒன்றை அமைப்பதற்கான யோசனை ஐ.நா. செயலாளர் நாயகத்துக்கு ஏன் ஏற்பட்டது என்பதையிட்டுப் பார்ப்போம். கடந்த வருடம் மே மாதம் முள்ளிவாய்க்கால் பகுதியில் போர் முடிவுக்கு வந்த காலப்பகுதியில் ஐ.நா. செயலாளர் நாயகம் இலங்கைக்கான விஜயத்தை மேற்கொண்டிருந்தார். போர்க் குற்றங்கள் தொடர்பில் பெருமளவு குற்றச்சாட்டுக்கள் வெளிப்பட்டுக்கொண்டிருந்த ஒரு நிலையில்தான் அவரது இந்த விஜயம் இடம்பெற்றது. முள்ளிவாய்க்கால் பகுதியை ஹெலிக்காபட்டரிலிருந்து பார்வையிட்ட அவர், ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுடனும் பேச்சுக்களை நடத்தினார். 
அதன் பின்னர் வெளியிடப்பட்ட கூட்டறிக்கையில், பதிலளிக்கும் கடமைப்பாடு உட்பட பல்வேறு விடயங்கள் தொடர்பாகவும் ஜனாதிபதி சில வாக்குறுதிகளை வழங்கியிருந்தார். ஆனால், இந்த வாக்குறுதிகளில் பெரும்பாலானவை நிறைவேற்றப்படவில்லை என்பது ஐ.நா. செயலாளர் நாயகத்தின் ஆதங்கமாக இருக்கின்றது. அது தொடர்பில் உரிய முறையில் பதிலளிக்கப்படாமலிருப்பதால், இலங்கையை வழிக்குக் கொண்டுவருவதற்காக ஐ.நா. கையாண்டுள்ள ஒரு உபாயம்தான் இந்தக் குழுவின் நியமனம்   என இராஜதந்திர வட்டாரத் தகவல்கள் கூறுகின்றன. 
போhக் குற்றங்கள் தொடர்பில் ஐ.நா. செயலாளர் நாயகத்துக்கு ஆலோசனை வழங்குவதற்கான   நிபுணர்குழு அமைக்கப்படுவதைத் தடுப்பதற்கான தீவிர இராஜதந்திர முயற்சிகளை கொழும்பு மேற்கொண்டு வந்தது என்பது இரகசியமான ஒன்றல்ல. வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் மற்றும் சட்டமா அதிபர் மோஹான் பீரிஸ் ஆகிய இருவரும் சர்வதேச அரங்கில் இதற்கான கடுமையான முயற்சிகளை மேற்கொண்டிருந்தார்கள். ஐ.நா. செயலாளர் நாயகம் பான் கீ மூனை நியூயார்க்கில் நேரில் சந்தித்த அமைச்சர் பீரிஸ், இவ்வாறான குழு ஒன்றை அமைக்கும் முயற்சிகளைத் தவிர்க்குமாறு வலியுறுத்திக் கேட்டுக்கொண்டிருந்தார். 
சர்வதேச ரீதியாகவும், உள்நாட்டிலும் தமக்குப் பாதகமான ஒரு நிலையை ஏற்படுத்துவதாகவும், இலங்கையின் நற்பெயரைப் பாதிப்பதாகவும்  இந்தக் குழுவின் நியமனம் அமைந்துவிடும் என்பதால்தான் இதனைத் தடுப்பதற்கான அனைத்து இராஜதந்திர முயற்சிகளையும் இலங்கை அரசு முடுக்கிவிட்டிருந்தது. 
இருந்த போதிலும் ஐ.நா. செயலாளர் நாயகத்துடன் அமைச்சர் பீரிஸ் இரண்டு வாரங்களுக்கு முன்னர் நியூயோர்க்கில் நடத்திய பேச்சுக்களின் போதே தமது திட்டத்தைக் கைவிடுவதற்கு ஐ.நா. தயாராகவில்லை என்பது தெரிவிக்கப்பட்டது. கொழும்பின் இராஜதந்திர முயற்சிகள் தோல்வியடையப்போகின்றது என்பது அப்போதே வெளிப்படையாகத் தெரியத் தொடங்கியது. அதனையடுத்து கடந்த வாரம் கொழும்பு வந்திருந்த ஐ.நா. செயலாளர் நாயகத்தின் விஷேட பிரதிநிதி லின் பஸ்கோவும் இவ்வாறான குழு ஒன்று நியமிக்கப்படவிருப்பதை உறுதிப்படுத்தியதுடன், அக்குழுவின் உறுப்பினர்களின் பெயர்கள் ஒரு வார காலத்துக்குள் வெளியிடப்படும் எனவும் தெரிவித்திருந்தார். இந்த நிலையில் இவ்வாறான குழு ஒன்று அமைக்கப்பட்டிருப்பது எதிர்பார்க்கப்படாத ஒன்றல்ல. 
ஆனால், இதனை எதிர்கொள்வதற்கும், ஐ.நா.வின் காய் நகர்த்தல்களுக்கு எதிரான செயற்பாடுகளுக்கும் கொழும்பு எந்தளவுக்குத் தயாராக இருந்தது என்பதுதான் கவனிக்கப்பட வேண்டியதாகும்.
ஐ.நா.வின் அறிவிப்பு வெளியான உடனடியாகவே அதற்கு எதிராக தமது கடுமையான ஆட்சேபனையை கொழும்பு வெளிப்படுத்தியது. இது எதிர்பார்க்கப்பட்ட ஒன்றுதான்.  இது உள்நாட்டு விவகாரத்தில் தலையிடுவதாகவும், நாட்டின் இறைமையைப் பாதிப்பதாகவும் உள்ளது என்பதுதான் கொழும்பின் நிலைப்பாடாகும்.  
தமது ஆட்சேபனைப் பதிவு செய்துகொண்ட பின்னர் அதிரடியான அறிவிப்பு ஒன்றும் கொழும்பிலிருந்து வெளியிடப்பட்டது.   குறிப்பிட்ட நிபுணர் குழுவின் உறுப்பினர்கள் இலங்கை வருவதற்கு அனுமதிக்கப்படமாட்டார்கள். அவர்களுக்கு விசா வழங்கப்படாது என கொழும்பு அறிவித்தது. ஐ.நா.வுக்கு எதிராக கடுமையான நிலைப்பாட்டில் தாம் இருப்பதையும், ஐநா.வுக்கே சவால்விடக்கூடிய நிலையில் தாம் இருப்பதாகவும் தமது வீர பிரதாபத்தை  சிங்கள சமூகத்துக்குக் காட்டிக்கொள்வதற்கு இந்த அதிரடி அறிவிப்பு உதவியதே தவிர இது ஒரு இராஜதந்திர நகர்வு அல்ல என்பது 24 மணித்தியாலத்துக்குள்ளேயே அம்பலமாகியது. 
குறிப்பிட்ட நிபுணர் குழு ஐ.நா. செயலாளர் நாயகத்துக்கு ஆலோசனை வழங்குவதற்கான ஒரு குழுவே தவிர, இலங்கை வந்து விசாரணைகளை மேற்கொள்வது அந்தக் குழுவின் பணியல்ல என ஐ.நா. தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அத்துடன் குறிப்பிட்ட குழுவினர் தொலைபேசி மூலமாகக் கூட, இலங்கையில் யாருடனும் தொடர்பு கொண்டு பேசப்போவதுமில்லை என ஐ.நா. தரப்பில் தெரிவிக்கப்பட்டது. விசா வழங்கப்படாது என்ற இலங்கை அரசின் அதிரடி அறிவிப்பை இது அர்த்தமற்றதாக்கிவிட்டது. 
ஐ.நா. செயலாளர் நாயகம் அமைத்திருக்கும் நிபுணர்கள் குழு உண்மைகளைக் கண்டறிவதற்கான ஒரு குழுவோ அல்லது, விசாரணைகளை மேற்கொள்வதற்கான ஒரு பொறிமுறையோ அல்ல என்பதைத் தெளிவுபடுத்தியிருக்கும் ஐ.நா.சபை,      சர்வதேச மனித உரிமை விதிமுறைகளும், மனிதாபிமானச் சட்டங்களும் மீறப்பட்டுள்ளனவா என்பதைப் பொறுத்தவரையில் பதிலளிப்பதற்கான இலங்கையின் கடமைப்பாடுகள் தொடர்பாக  ஐ.நா. செயலாளர் நாயகத்துக்கு  ஆலோசனை வழங்குவதற்கான ஒன்றாகவே செயற்படும் எனவும் தெரிவித்திருந்தது.  
அதாவது இந்தக் குழுவினருக்கு இலங்கைக்கு வருவதற்கான தேவையோ அல்லது இங்குள்ளவர்களுடன் தொடர்புகொள்ள வேண்டிய தேவையோ இல்லை என்பதுதான் ஐ.நா. சபையின் கருத்தாகும். இந்த நிலையில் இவர்களுக்கு வீசா வழங்கப்படாது என்ற இலங்கை அரசாங்காத்தின் அறிவிப்பு அவசரப்பட்ட ஒன்றாகவும், இராஜதந்திரத் தோல்வியை மறைப்பதற்கான ஒரு முயற்சியாகவுமே காணப்படுகின்றது. 
இலங்கையின் மூன்றாவது நகர்வு சர்வதேசத்தை நோக்கியதாகும். இவ்விவகாரத்தில் கிழக்கத்தேய நாடுகளையும், அணிசாரா அமைப்பையும் தமக்கு ஆதரவாகத் திரட்டிக்கொள்வதில் இலங்கை அரசாங்கம் வெற்றி பெற்றிருக்கின்றது என்றுதான் சொல்ல வேண்டும். இலங்கையுடன் அண்மைக்காலத்தில் நெருக்கமான உறவுகளை வளர்த்துக்கொண்டிருக்கும் சீனா மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகளுடன் அணிசாரா நாடுகள் அமைப்பும் ஐ.நா. செயலாளர் நாயகத்தின் செயற்பாட்டுக்கு எதிராகக் குரல் கொடுத்திருக்கின்றன. 
சீனாவும் ரஷ்யாவும் ஐ.நா. பாதுகாப்புச் சபையின் நிரந்தர உறுப்பு நாடுகளாக உள்ளன என்பதால் அவற்றின் கருத்துக்கள் முக்கியத்துவம் பெறுகின்றன என்பது உண்மைதான். இருந்தபோதிலும் அணிசாரா அமைப்பு தற்போதைய காலகட்டத்தில் செயலிழந்த ஒன்றாகவும், தற்போதைய காலத்துக்குப் பொருத்தமற்ற ஒன்றாகவும் இருப்பதால் அது பலவீனமான ஒரு அமைப்பாகவே இப்போதுள்ளது. ஆதனால்,   அதனுடைய நிலைப்பாடு தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய ஒன்றாக இருக்கமுடியாது. 
இவ்விடயத்தில் ரஷ்யா தெரிவித்திருக்கும் கருத்துக்கள் கவனத்துக்குரியவை. நிபுணர் குழுவை அமைப்பதற்கான நடவடிக்கையை எடுப்பதற்கு முன்னதாக ஐ.நா. பாதுகாப்புச் சபையில் அல்லது ஐ.நா. பொதுச் சபையில் அது தொடர்பான தீர்மானம் கொண்டுவரப்பட்டு ஆராயப்பட்டிருக்க வேண்டும் என ரஷ்யா தெரிவித்திருக்கின்றது. போர்க் குற்றம் தொடர்பான விவகாரம் ஐ.நா. பாதுகாப்புச் சபையில் கொண்டுவரப்பட்ட முன்னைய சந்தர்ப்பங்களில் எல்லாம் ரஷ்யாவும், சீனாவும்தான் தம்மிடமுள்ள வீட்டோ அதிகாரத்தைப் பயன்படுத்தி அதனை ரத்துச் செய்தன. இப்போதும் பாதுகாப்புச் சபையில் இவ்விவகாரம் கொண்டுவரப்பட்டிருந்தால் அதனையும் இவ்விரு நாடுகளும் தமது வீட்டோ அதிகாரத்தைப் பயன்படுத்தி ரத்துச் செய்திருக்கும் என்பது எதிர்பார்த்திருக்கக்கூடிய ஒன்று. 
இதனை பாதுகாப்புச் சபைக்குக் கொண்டுவராமல் தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி ஐ.நா. செயலாளர் நாயகம் மேற்கொண்டிருப்பதற்கு இதுவும் ஒரு காரணமாக இருக்கலாம். அத்துடன் இவ்வாறான குழு ஒன்றை நியமிப்பதைப் பொறுத்தவரையில் அதற்கு பொதுச் சபையினதோ அல்லது பாதுகாப்புச் சபையினதோ அங்கீகாரத்தைப் பெற்றுக்கொள்ளத் தேவையில்லை என சர்வதேச விவகாரங்கள் தொடர்பான ஆய்வாளர் ஒருவர் சுட்டிக்காட்டுகின்றார்.  ஐ.நா. செயலாளர் நாயகம் தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி இவ்வாறான குழுவை அமைக்க முடியும் எனவும், இந்தக் குழுவின் மூலமாக எடுக்கப்படும் தீர்மானம்தான் பாதுகாப்புச் சபையின் அங்கீகாரத்துக்குச் சமர்ப்பிக்கப்பட வேண்டும் எனவும் அவர் சுட்டிக்காட்டுகின்றார். 
அணிசாரா நாடுகளும்,  சீனா மற்றும் ரஷ்யா போன்றனவும் ஐ.நா.வின் செயற்பாட்டை விமர்சித்திருக்கின்ற போதிலும்,  அமெரிகா, நோர்வே போன்ற மேற்கு நாடுகள் ஐ.நா.வின் நிலைப்பாட்டுக்கு தமது ஆதரவைத் தெரிவித்திருக்கின்றன. இந்தனை இலங்கை பயன்படுத்திக்கொள்ள வேண்டும் எனவும் அமெரிக்கா கேட்டுக்கொண்டிருக்கின்றது.  ஐ.நா.வின் செயற்பாடுகளுக்கு மேற்கு நாடுகளின் ஆதரவு கிடைக்கும் என்பதை இது உறுதிப்படுத்துகின்றது. 
இந்த இடத்தில் நிபுணர் குழுவின் செயற்பாடுகள் எவ்வாறானதாக இருக்கும் என்ற கேள்வி எழுகின்றது. போர்க் குற்றங்கள் தொடர்பில் ஏற்கனவே பெருமளவு ஆதாரங்கள் வெளியாகியிருக்கின்றது. மனித உரிமைகள் பணியகம் உட்பட மனித உரிமைகளுக்காகக் குரல் கொடுக்கும் சர்வதேச அமைப்புக்கள் பலவும் இது தொடர்பில் பெருமளவு ஆதாரங்களை வைத்திருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இவை போலியானவை என அரசாங்கம் தெரிவித்தாலும், அவை உண்மையானவை என்பதே அவற்றின் நிலைப்பாடாக இருக்கின்றது. புகைப்படங்கள், வீடியோ நாடாக்கள் மற்றும் செய்மதி மூலமாக எடுக்கப்பட்ட படங்கள் என்பன சில ஏற்கனவே வெளியிடப்பட்டிருந்தன. இதனைவிட மேலும் ஆதாரங்கள் இருப்பதாக மனித உரிமைகள் காப்பகம் ஏற்கனவே தெரிவித்திருந்தது. 
இந்த ஆதாரங்களை அடிப்படையாக வைத்துத்தான் நிபுணர்குழு தன்னுடைய பணிகளை ஆரம்பிக்கும் என எதிர்பார்க்கலாம் என சர்வதேச விவகாரங்கள் தொடர்பான ஆய்வாளர் ஒருவர் கூறுகின்றார். இந்த ஆதாரங்களின் அடிப்படையில் செயலாளர் நாயகம் எடுக்கக்கூடிய தீர்மானம்தான் பாதுகாப்புச் சபைக்குக் கொண்டுவரப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இவ்வாறு பாதுகாப்புச் சபைக்கு விவகாரம் கொண்டுவரப்படும் போது சீனா அல்லது ரஷ்யாவின் ஆதரவுடன் அதனை வீட்டோ செய்ய முடியும் என்ற நம்பிக்கையுடன் இலங்கை இருக்கலாம்.
இந்த நிபுணர் குழு நியமனம் தொடர்பான விவகாரத்தைப் பொறுத்தவரையில் சுவாரஸ்யமான விடயம் என்னவென்றால் இந்தியாவின் திரிசங்கு நிலைதான். மேற்கு நாடுகள் இதனை ஆதரிக்கின்றன. குpழக்கு நாடுகள் எதிர்க்கின்றன. ஆனால் இந்தியா மௌனமாக இருக்கின்றது. ஆனால் ஆணிசாரா நாடுகள் அமைப்பின் மூலமாக இதனை எதிர்ப்பதென்ற நிலைப்பாட்டை இந்தியா வெளிப்படுத்தியிருக்கின்றது. ஆனால், நேரடியாக எந்தவொரு நிலைப்பாட்டையும் இந்தியா வெளிப்படுத்தாது என்றே எதிர்பார்க்கலாம்!

Tuesday, June 22, 2010

அரசியல்:


இராஜதந்திரிகளின் வருகையும் இராணுவ வெற்றி விழாவும்
விடுதலைப் புலிகள் அமைப்பை இராணுவ ரீதியாகத் தோற்கடித்த முதலாவது ஆண்டு நிறைவுக் கொண்டாட்டங்களால் கொழும்பு களைகட்டியிருந்த ஒரு பின்னணியில் முக்கிய இராஜதந்திரிகளின் விஜயங்கள் இந்த வாரத்தில் அரசாங்கத்தை சுறுசுறுப்பாக்கியிருந்தது. இந்த விஜயங்களின் மூலமாக போரின் இறுதிக்கால கட்டத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் போர்க் குற்றங்கள் தொடர்பில் சர்வதேசம் எவ்வாறான நிலைப்பாட்டை எடுக்கப்போகின்றது என்ற கேள்வி ஒரு புறம் எழுப்பப்பட, மறுபுறத்தில் சர்வதேசத்தின் எந்த நிபந்தனைகளுக்கும் அடிபணியப் போவதில்லை என்ற செய்தியை போர் வெற்றி நிகழ்வின் போது ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அறிவித்தார்.
அமெரிக்கா, ஜப்பான் நாட்டு உயர் இராஜதந்திரிகளுடன் ஐ.நா. சபையின் விஷேட பிரதிநிதி ஒருவரும் இந்த வாரம் கொழும்பை வந்தடைந்து முக்கிய பேச்சுக்களை நடத்தியிருக்கின்றார்கள். வடபகுதிக்குச் சென்று நிலைமைகளை நேரில் பார்வையிடுவதிலும் அவர்கள் அக்கறை காட்டியது கவனிக்கப்பட வேண்டிய ஒன்றாகவே உள்ளது.  இந்த இராஜதந்திரிகளின் கொழும்பு விஜயங்களின் நோக்கங்கள் எவையாக இருந்துள்ளன, இதன் அடுத்த கட்டத்தில் இடம்பெறப்போவது என்ன, இவர்களைச் சமாளிப்பதற்கு கொழும்பு கையாண்ட உபாயங்கள் என்ன என்பது தொடர்பாக சுருக்கமாகப் பார்ப்போம். 
அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவின் பல்கலாச்சார மற்றும் மனித உரிமைகளுக்கான சிறப்பு உதவியாளர் சமந்தா பவர் மற்றும் அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு அவையின் யுத்த குற்றவியல் மற்றும் வன்கொடுமைகளுக்கு பொறுப்பான டேவிட் பிரஸ்மேன் ஆகியோர் திங்கட்கிழமையன்று கொழும்பை வந்தடைந்தார்கள்.  இவர்கள் நான்கு நாட்கள் இலங்கையில் தங்கியிருந்து முக்கிய சந்திப்புக்கள் பலவற்றில் பங்குகொண்டனர். இதனைவிட ஜப்பானின் இலங்கைக்கான விசேட பிரதிநிதி யசூசி அகாசி செவ்வாய்க்கிழமை இரவு கொழும்பை வந்தடைந்து ஞாயிற்றுக் கிழமை வரையில் தங்கியிருந்து சிங்கள,  தமிழ் தலைவர்களுடன் சந்திப்புக்களை மேற்கொண்டுள்ளார். 
இன்னுமொரு முக்கிய விருந்தினர் ஐக்கிய நாடுகள் சபையின் அரசியல்துறை உதவிச்செயலாளர் லின் பெஸ்கோ.  இவர் புதன்கிழமை அதிகாலை கொழும்பை வந்தடைந்தார்.  சனிக்கிழமை வரை இலங்கையில் தங்கியிருந்த இவர், அரசியல் தலைவர்களையும் மற்றும் பாதிக்கப்பட்ட மக்களையும் சந்தித்துள்ளார். வியாழக்கிழமை கொழும்பில் இவர் நடத்திய ஊடகவியலாளர் மாநாட்டில், போர்க் குற்றங்கள் தொடர்பில் ஐ.நா. செயலாளருக்கு ஆலோசனை வழங்குவதற்கான குழு ஒரு வார காலப்பகுதியில் அமைக்கப்படும் என அறிவித்தமை கொழும்புக்கு சற்று அதிருப்தியைக்கொடுப்பதாக அமைந்திருந்தது. 
இலங்கை விஜயத்தின் பின்னர் ஐ.நா. செயலாளர் நாயகத்திடம் இவர் கையளிக்கும் அறிக்கையின் பின்னர் தான் ஐக்கிய நாடுகள் சபை இலங்கை மனித உரிமை விடயத்தில் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கும் என எதிர்பார்க்கப்படுவதால், இவரது வருகையும் கொழும்பில் அவர் நடத்தியிருக்கும் பேச்சுவார்த்தைகளும் மிகவும் முக்கியமானதாகவே பார்க்கப்படுகின்றன. 
இலங்கை வந்தடைந்த அமெரிக்க இராஜதந்திரிகள் மறுதினமே ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை சந்தித்தனர். அவர்களின் சந்திப்பில் போர்க்குற்றங்கள் பற்றியதாக எந்தவொரு கருத்துப் பரிமாற்றமும் இடம்பெறவில்லை. ஆனால் இரு சாராரும் போருக்கு பின்னரான நிலை தொடர்பாக கலந்துரையாடினர்.  அத்துடன் இரு நாடுகளுக்கிடையேயும் உள்ள இராஜதந்திர உறவு முறைகளை வலுப்படுத்தவேண்டிய விடயம் குறித்து இரு தரப்பினரும் ஆலோசனைகளை நடத்தியதாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
கடந்த சில வருடங்களாக இலங்கை அரசு மீது அமெரிக்க அரசு மனித உரிமை பிரச்னையை முன்வைத்து கண்டன அறிக்கைகளை வெளியிட்டு வந்திருக்கின்றது.  அதற்கு பதிலாக இலங்கை அரசும் அமெரிக்கா மீது கடுமையான தாக்குதல்களை நடத்தி பதில் அறிக்கைகளை வெளியிட்டது. விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரில் அமெரிக்கா கணிசமான உதவிகளை இலங்கைக்கு வழங்கியிருப்பினும், மனித உரிமைகள் விவகாரத்தில் கடுமையான நிலைப்பாட்டையே வெளிப்படுத்தி வந்திருக்கின்றது.  விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக அமெரிக்கா செயற்படுகின்றது என சிங்கள தேசியவாதிகள் குரல் கொடுப்பதற்கு இதுவே காரணமாக அமைந்திருக்கின்றது. 
இருந்தபோதிலும், இலங்கையில் சீனாவின் ஆதிக்கம் அதிகரித்துவரும் நிலையில் சமாதான வழிமுறைகளின் மூலமாக, இலங்கையுடன் சுமூகமான உறவுகளைப் பேணுவதற்கே அமெரிக்க இப்போது விரும்புகின்றது.தன்னுடைய பிராந்திய நலன்களைப் பொறுத்தவரையில் கொழும்புடன் சுமூகமான உறவுகளை வைத்திருப்பது அமெரிக்காவுக்கு அவசியம். ஆனால், இலங்கையில் அதிகரித்துவரும் சீனாவின் ஆதிக்கம்தான் அமெரிக்காவுக்கு சங்கடத்தைக் கொடுப்பதாக இருக்கின்றது. இலங்கைக்கு அழுத்தத்தக் கொடுத்து அதனைப் பணியவைப்பதற்குப் போர்க் குற்றச்சாட்டுக்களைப் பயன்படுத்தும் அமெரிக்கா, மறுபுறத்தில் அது சாத்தியமாகாத பட்சத்தில் பொருளாதார உதவிகள் மூலம் தமது நல்லெண்ணத்தையும் வெளிப்படுத்திவருகின்றது. 
இதேவேளையில், ஐ.நா. பிரதிநிதியின் இலங்கை விஜயமும் முக்கியமானதாகும். இலங்கை வந்தவுடன் ஐ.நா.வின் அரசியல்துறை உதவி செயலாளர் முல்லைத்தீவுக்கு விஜயம் செய்தார். இந்த விஜயத்தின் மீள்குடியமர்த்தப்பட்ட மக்களின் நிலைமைகளை அவர் நேரில் அறிந்துகொண்டார். கொழும்பு திரும்பியவுடன் ஜனாதிபதி ராஜபக்சவை சந்தித்துப் பேசினார்.
இச்சந்திப்பின் போது இடம்பெயர்ந்துள்ள தமிழ் மக்களின் மீள்குடியேற்றம், அரசியல் தீர்வு மற்றும் மனித உரிமைகள் சம்பந்தப்பட்ட விடயங்கள் கலந்துரையாடப்பட்டன. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பையும் சந்தித்து மீள்குடியேற்றம், அரசியல் தீர்வு குறித்துக் கலந்துரையாடினார். மீள்குடியேற்றப்படும் மக்களுடைய அவல நிலை தொடர்பாக தமிழ்க் கூட்டமைப்பு விரிவாக விளக்கிக் கூறியதாகத் தெரிவிக்கப்படுகின்றது.  இந்த நிலையில் இலங்கை தொடர்பாக ஐ.நா. அடுத்ததாக எவ்வாறான காய்நகர்த்தலை மேற்கொள்ளப்போகின்றது என்பதிலேயே அனைவரது கவனமும் திரும்பியுள்ளது. 
மேற்கு நாடுகளின் இராஜதந்திரிகள் ஏதோ ஒரு வகையில் மனித உரிமைகள், போர்க் குற்றங்கள் என்பன தொடர்பில் தமது கவனத்தைச் செலுத்தும் அதேவேளையில், ஜப்பானோ இலங்கை அரசுக்கு சாதகமான நிலைப்பாட்டையே வெளிப்படுத்தியிருக்கின்றது. அதாவது சர்வதேச சமூகம் இலங்கை மீது அழுத்தங்களைக் கொடுக்கக்கூடாது என ஜப்பானிய தூதுவர் அகாசி கொழும்பில் தெரிவித்திருக்கின்றார். மேற்கு நாடுகளால் வரக்கூடிய அழுத்தங்களை சமப்படுத்தக்கூடியளவுக்கு கிழக்கு  நாடுகளின் ஆதரவு இலங்கைக்கு உள்ளது என்பதைத்தான் அகாசியின் இந்தக் கருத்துக்கள் வெளிப்படுத்துவதாக அமைந்திருக்கின்றன.
இந்தப் பின்னணியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற போர் வெற்றிக் கொண்டாட்டங்களில் உரையாற்றிய ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ, தன்னுடைய தேசியவாத நிலைப்பாட்டையே மீண்டும் ஒரு முறை வெளிப்படுத்தினார். “நிபந்தனைகளுக்கு அடிபணிந்து நாட்டின் சுதந்திரத்தைக் காட்டுக்கொடுத்து உதவி பெறும் நிலைக்குச் செல்ல நாம் தயாராகவில்லை” எனத் தெரிவித்த ஜனாதிபதி, “உதவிகளாலும் நிவாரணங்களாலும் இந்த நாட்டை பயமுறுத்திய யுகத்துக்கு முற்றுப்பள்ளி வைக்க வேண்டும்” எனவும் குறிப்பிட்டிருக்கின்றார். 
சர்வதேச நிர்ப்பந்தங்கள் எதற்கும் தாம் அடிபணியப் போவதில்லை என்பதுதான் இந்த உரையில் மூலம் மகிந்த தெரிவித்திருக்கும் செய்தியாகும். குறிப்பாக அமெரிக்க மற்றும் ஐ.நா. உயர் இராஜதந்திரிகள் கொழும்பு வந்து சென்றிருக்கும் நிலையில் ஜனாதிபதி வெளிப்படுத்தியிருக்கும் இந்தக் கருத்துக்கள் சர்வதேசத்துக்கு விஷேடமாக மேற்கு நாடுகளுக்குத் தெளிவான சில செய்திகளைச் சொல்லியிருக்கின்றது. இந்த நிலையில் மேற்கு நாடுகளின் பிரதிபலிப்பு எவ்வாறானதாக இருக்கும் என்பதுதான் இப்போது எதிர்பார்க்கப்படுவதாக இருக்கின்றது. 

Friday, June 18, 2010

கட்சி அரசியல்:

ஐ.தே.க.வின் புதிய பாதை!?
பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியின் செல்வாக்கு மிக்க முக்கிய தலைவர்களில் ஒருவரான ரவி கருணாநாயக்க அண்மையில் தெரிவித்த கருத்துக்கள் அரசியல் ரீதியாகப் பெரும் சர்ச்சைகளை உருவாக்கியிருக்கின்றது. ஐ.தே.க. எந்தப் பாதையில் செல்லப் போகின்றது என்ற கேள்வியை மட்டுமன்றி, கட்சியின் இரண்டாம் மட்டத் தலைவர்கள் தமக்குத் தேவையான பாதையில் கட்சியைக் கொண்டு செல்வதற்கு முற்படுகின் றார்களா என்ற கேள்வியையையும் அவருடைய கருத்துக்கள் எழுப்பியிருக்கின்றது. 
இலங்கை விவகாரம் தொடர்பில் இந்தியாவின் தற்போதைய அணுகுமுறை தொடர்பாகக் கருத்து வெளியிட்ட கருணாநாயக்க, இலங்கையின் உள்நாட்டு விவகாரங்களில் இந்தியா தேவையற்ற வகையில் தலையீடுகளை மேற்கொள்வதாகக் குற்றஞ்சாட்டினார். சிறுபான்மையினக் கட்சிகளுடன் பேச்சுக்களை நடத்துவதற்கு முற்படுவதன் மூலமாக இலங்கையில் இன ரீதியான பிளவுக்கு இந்தியா வழிவகுப்பதாகவும் அவர் குறிப்பிட்டிருக்கின்றார். 
இந்தியா தமிழர்களுக்கு எப்போதும் துரோகமிழைத்தே வந்திருக்கின்றது எனவும் அவர் குறிப்பிட்டிருக்கின்றார். தமிழர்களுக்காக ரவி கருணாநாயக்க முதலைக் கண்ணீர் வடிப்பதாக தமிழ் வட்டாரங்கள் இதனைக் குறிப்பிடுவதில் தவறிருப்பதாகவும் தெரியவில்லை. 
பாராளுமன்றத்தில் நிகழ்த்திய உரை ஒன்றின் போதுதான் அவர் இதனைத் தெரிவித்திருப்பதால் அவரது கருத்துக்களின் முக்கியத்துவம் அதிகரிப்பதுடன், மும்மொழிப் பத்திரிகைகளும் இது தொடர்பான செய்திகளை முக்கியத்துவம் கொடுத்து வெளியிட்டிருந்தமையையும் காணக்கூடியதாக இருந்தது. 
ரவி கருணாநாயக்கவின் கருத்துக்கள் அவரது சொந்தக் கருத்துக்களா அல்லது கட்சியின் கருத்துக்களா என ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் எழுப்பிய கேள்விக்கு இதுவரையில் சம்பந்தப்பட்ட தரப்புக்களிலிருந்து பதில் இல்லை. ஐ.தே.க. தலைமை இவ்விடயத்தில் மௌனமாகவே இருக்கின்றது. கட்சி உயர் மட்டத்தில் தற்போது உருவாகியிருக்கும் நெருக்கடிகளின் மத்தியில் இது தொடர்பில் கருத்துக்களை வெளியிடுவது பாதகமான விளைவுகளை ஏற்படுத்தும் என்பது கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுக்குத் தெரியாமலிருக்காது!
சிறுபான்மையினக் கட்சிகளுடன் மட்டுமன்றி, அரசாங்கத்துடனும், ஐ.தே.க. தலைமையுடனும் கூட இந்தியா அடிக்கடி பேச்சுக்களை நடத்தியே வருகின்றது. புதுடில்லியில் பேச்சுக்களை நடத்துவதற்காக ரணில் விக்கிரமசிங்க கடந்த மாதம்தான் இந்தியா சென்றுவந்திருந்தார். அதேபோல ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவும் கடந்த வாரம்தான் புதுடில்லி சென்றுவந்திருந்தார். இந்த இருவருடைய விஜயங்களின் போதும் இன நெருக்கடிக்கான தீர்வு முயற்சிகள் தொடர்பில் முக்கியமாக ஆராயப்பட்டதாக செய்திகள் வெளியாகியிருந்தது. 
இந்த நிலையில் இவ்வாறு அதிரடியான தேசியவாதக் கருத்துக்களை ரவி கருணாநாயக்க முன்வைக்க வேண்டிய அவசியம்தான் என்ன?
இது ஒருவகையில் கட்சியில் உருவாகியிருக்கும் தலைமைத்துப் போட்டியைப் பிரதிபலிப்பதாகக் கொள்ளலாம். ரணிலின் தலைமைத்துவத்துக்கு எதிராக நிறுத்தப்பட்டிருக்கும் சஜித் பிரேமதாச ஓரளவுக்குச் சிங்களத் தேசியவாதியாகவே கருதப்படுகின்றார். இனவாதத்தை அடிப்படையாகக் கொண்டுள்ள தேசியவாதப் போக்குத்தான் மகிந்த ராஜபக்ஷவின் அண்மைக்கால தேர்தல் வெற்றிகளுக்குக் காரணம் எனக் கூறப்படுவதால் அவ்வாறான நிலைப்பாட்டை முன்னெடுக்கக்கூடிய சஜித் பிரேமதாசதான் ரணிலுக்கு மாற்றானவர் என்பதுதான் கட்சியின் ஒரு தரப்பினரது கருத்தாக உள்ளது. மகிந்தவின் தலைமைக்கு ஈடுகொடுக்கக் கூடியவரகவும் அவரே இருப்பார் எனவும் இவர்கள் கூறுகின்றார்கள்.  
சஜித்துக்கு எதிரான பிரச்சாரங்களை முன்னின்று நடத்தும் ரவி கருணாநாயக்க, ஐ.தே.க.வில் தற்போது மேற்கொள்ளப்பட்டுவரும் புனரமைப்பு நடவடிக்கைகளுக்கு எதிரானவர். ரணிலின் தலைமைத்துவம் தொடர வேண்டும் என்பதை விரும்புபவர். அவ்வாறு அவர் வரும்புவதற்கு  சில காரணங்கள் உள்ளன. ரணிலின் தலைமை தொடர்ந்தால் மட்டும்தான் தன்னுடைய இருப்பை ஐ.தே.க.வில் பாதுகாத்துக்கொள்ள முடியும் என அவர் நம்புவது இதற்கு முதல் காரணம். அத்துடன் கட்சியின் உபதலைவராகவும் இருக்கும் அவர், ரணிலுக்குப் பின்னர் கட்சித் தலைமை தனக்குக் கிடைக்க வேண்டும் என்பதை இலட்சியமாகக் கொண்டவர். 
சஜித் கட்சித் தலைமையைப் பொறுப்பேற்றால் கட்சியில் தனக்கு இடம் இல்லாமல் போய்விடும் என ரவி கருணாநாயக்க கருதுவதற்கும்  காரணம் உள்ளது.
இந்தக் காரணங்களால்தான் தேசியவாதக் கருத்துக்களை முன்வைத்து சஜித் பிரேமதாசவின் தேவையை இல்லாமல் செய்வதற்கான முயற்சிகளில் ரவி கருணாநாயக்க ஈடுபட்டிருப்பதாக ஐ.தே.க. வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.  ரணிலின் தலைமைக்கு மாற்றாக சஜீத் கருதப்படுவதற்குக் காரணம் அவரது தேசியவாதக் கருத்துக்களும், சிங்கள மக்களைக் கவரக் கூடிய தன்மையும் என்று கூறப்படுகின்றது. இதனால் சஜித் வகிக்கக்கூடிய பாத்திரத்தை தானே எடுத்துக்கொண்டால், சஜித்துக்குப் பதிலாக தன்னை முன்னுறுத்திக்கொள்ள முடியும் என ரவி கருதுகின்றார் போலும்.
ஜே.வி.பி.யிடம் கடன் வாங்கிய கருத்துக்களையே ரவி கருணாநாயக்க முன்வைத்திருக்கின்றார் எனக் கூறப்படுகின்றது. ஜே.வி.பி.தான் இவ்வாறாக இந்தியாவுக்கு எதிரான கருத்துக்களை வழமையாக முன்வைத்து தமது அரசியல் செயற்பாடுகளை மேற்கொள்கின்றது. ஜே.வி.பி. நீண்டகாலமாகக் கடைப்பிடித்துவரும் தேசிய வாதக் கருத்துக்களுக்கு இது ஏற்புடையதுதான். ஆனால், ஐ.தே.க.வின் கொள்கைகள் மற்றும் அது கடந்துவந்திருக்கும் பாதையைப் பொறுத்தவரையில் இந்தக் கருத்துக்கள் பொருத்தமானவையாகத் தெரியவில்லை. 
ரவியின் கருத்துக்கள் கட்சித் தலைவருக்கு நிச்சயமாக சங்கடமான ஒரு நிலையைக் கொடுத்திருக்கும்!
இனவாத, தேசியவாதப் போக்கில் மகிந்த முன்னெடுக்கும் யெற்பாடுகள்தான் அவரது வெற்றிக்குப் பெரிதும் துணையாக இருந்துள்ளன எனத் தெரிவிக்கப்படும் பின்னணியில், ஐ.தே.க.வும் அதே பாதையில் சென்றால் மட்டும்தான் தேர்தல்களில் வெற்றியைப் பெற்றுக்கொள்ள முடியும் எனத் தெரிவிக்கப்படும் சில கருத்துக்களின் பின்னணியில்தான் ரவி கருணாநாயக்கவும் தன்னுடைய அணுகுமுறையை மாற்றிகொள்வதற்கு முற்பட்டிருக்கின்றார் போலத் தெரிகின்றது. 
வழமையாக கோட்டும் சூட்டுமாகவே அனைத்துக் கூட்டங்களுக்கும் சமூகமளிக்கும் ரவி கருணாநாயக்க, அண்மையில் இடம்பெற்ற வைபவம் ஒன்றில் வேட்டியும், நாஷனலுமாக வந்திருந்தமையையும் காண முடிந்தது.  அதாவது இலங்கையைப் பொறுத்தவரையில் தேர்தலில் வெற்றிபெற வேண்டுமானால் கோட்டும் சூட்டும் பொருத்தமற்றது என்பதை அவர் புரிந்துகொள்ளத் தொடங்கியிருப்பதை இது உணர்த்துகின்றது. அதேவேளையில் ரணிலுக்கு அடுத்ததாக தான்தான் என்பதை உணர்த்துவதற்கு அவர் முற்பட்டிருப்பதையும் இது காட்டுகின்றது. 
சிங்கள மக்களைகன் கவர்வதற்கு இவ்வாறான வேஷம் பொருத்தமானது என ரவி கருணாநாயக்க கருதலாம். ஆனால், ஐக்கிய தேசியக் கட்சியைப் பொறுத்தவரையில் அது நீண்டகாலமாகவே சிறுபான்மையினருடைய வாக்கு வங்கிகளையே தமது தேர்தல் வெற்றிகளுக்காக நம்பியிருந்தது.   இந்தக் கொள்கை மாற்றம் மட்டும் ஐ.தே.க.வை வெற்றியை நோக்கிக் கொண்டு செல்வதாக அமைந்துவிடும் எனக் கருத முடியாது. 

Tuesday, June 15, 2010

இன நெருக்கடித் தீர்வு:

கூட்டமைப்புடனான பேச்சின் அடுத்த கட்டம்...!?
ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகளுக்கும் இடையிலான சந்திப்பு கடந்த திங்கட்கிழமை இடம்பெற்ற போதிலும், இதன் அடுத்த கட்டம் என்ன என்ற கேள்விதான் இப்போது எழுப்பப்படுகின்றது. இந்திய விஜயத்தை முடித்துக்கொண்டு கொழும்பு திரும்பிய பின்னர் பேச்சுக்களைத் தொடர்வது என இணக்கம் காணப்பட்ட போதிலும், மீண்டும் பேச்சுக்கள் இடம்பெறுமா என்பதும், அவ்வாறு பேச்சுக்கள் இடம்பெற்றாலும் அது எந்தளவுக்கு நிரந்தரமான ஒரு தீர்வைக் கொண்டுவருவதாக அமையும் என்பதும் கேள்விக் குறியாகவே இருக்கும் என அரசியல் வட்டாரங்கள் சுட்டிக்காட்டுகின்றன.
ஜனாதிபதி இந்தியாவுக்குச் செல்லும் வேளையில் இந்திய அழுத்தங்களுக்கு உள்ளாக வேண்டியிருக்கும் என்பதன் அடிப்படையிலேயே பேச்சுக்கு வருமாறு கூட்டமைப்புக்கு அவசரமாக அழைப்பு விடுக்கப்பட்டது. ஜனாதிபதியின் நிகழ்ச்சி நிரலில் இந்திய விஜயம் இடம்பெற்றிருக்கவில்லை என்றால் கூட்டமைப்புடனான இந்தச் சந்திப்பும் இடம்பெற்றிருக்காது என இராஜதந்திர வட்டாரங்கள் கூட்டிக்காட்டுகின்றன. இலங்கையில் சீனாவின் செல்வாக்கு அதிகரித்துவரும் பின்னணியில் இலங்கை மீது அதிகளவு அழுத்தங்களைப் பிரயோகிப்பதற்கு இந்தியா முயற்சித்துவருவது அண்மைக்காலத்தில் வெளிப்படையாகவே தெரிகின்றது. 
கொழும்பின் மீது அதிகளவு அழுத்தத்தைப் பிரயோகிப்பதற்கு தமிழகத்திலுள்ள தமது நேச சக்திகளை இந்திய மத்திய அரசு பயன்படுத்த முற்பட்டிருப்பதை கடந்த வாரத்தில் காணமுடிந்தது. வழமையாக மகிந்த ராஜபக்ஷ டில்லி செல்லும் சந்தர்ப்பங்களில் அமைதியாக இருக்கும் தமிழக முதலமைச்சர் மு.கருணாநிதி இம்முறை அவ்வாறு இருக்கவில்லை. இடம்பெயர்ந்த மக்களுடைய பிரச்சினை தீர்க்கப்படவில்லை என இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு சுட்டிக்காட்டிய கருணாநிதி, இனநெருக்கடிக்கு அரசியல் தீர்வைக் காண்பதற்கான அழுத்தங்களைக் கொடுக்க வேண்டும் எனவும் மத்திய அரசாங்கத்தை வலியுறுத்தியிருந்தார்.  
தேவேளையில், தமிழகத்தின் காங்கிரஸ், தி.மு.க. கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களின் குழு ஒன்றும் ஜனாதிபதி ராஜபக்ஷவை டில்லியில் சந்தித்துப் பேசியது. இந்தச் சந்திப்பிலும் மீள்குடியேற்றம் மற்றும் அரசியல் தீர்வு என்பன தொடர்பாகவே பிரதானமாகப் பேசப்பட்டது. இந்தப் பேச்சுக்கள் தமக்குத் திருப்தியளிப்பதாக அமைந்திருக்க வில்லை என அவர்கள் வெளியிட்ட அறிக்கையும் கொழும்பின் மீது அழுத்தங்களைப் பிரயோகிக்க இந்தியா முற்பட்டுள்ளமையைத்தான் பிரதிபலிப்பதாக இருந்தது. 
இடம்பெயர்ந்த மக்களின் நிலை மிக மிக மோசமாக இருந்த காலப்பகுதியில்  கடந்த வருடம் இலங்கை வந்து நிலைமைகளை நேரில் பார்வையிட்ட இந்தக் குழுவினர் முகாம்களின் நிலைமைகள் சிறப்பாக இருக்கின்றது என ராஜபக்ஷவுக்கு நற்சான்று கொடுத்துவிட்டுச் சென்றது நினைவிருக்கலாம். இலங்கை தொடர்பான இந்தியாவின் அணுகுமுறையில் ஏற்பட்டிருக்கும் மாற்றத்தைத்தான் காங்கிரஸ்- தி.மு.க. குழுவினருடைய தற்போதைய அறிக்கையும் கூட  வெளிப்படுத்துவதாகவே இருக்கின்றது. 
இதனைவிட ராஜபக்ஷவுடன் புதுடில்லி சென்றிருந்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தவைக் கைது செய்வதற்காகப் பிறப்பிக்கப்பட்ட பிடியாணையும் கூட கொழும்புக்கு அழுத்தங்கொடுப்பதற்கான ஒரு முயற்சியாகவே உள்ளது. தமிழ் அமைச்சர் ஒருவரும் தன்னுடன் இருக்கின்றார் என்பதைக் காட்டுவதுதான் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை தன்னுடன் அழைத்துச் செல்வதற்கு மகிந்த விரும்புவதற்கான பிரதான காரணமாக இருக்கின்றது. தேவானந்தாவை ஜனாதிபதி இந்தியாவுக்கு அழைத்துச் சென்றிருப்பது இதுதான் முதன் முறையல்ல. ஆனால், இந்த முறை மட்டும் இவ்வாறு அவர் மீது பிடியாணை பிறப்பிக்கப்பட்டமை இலங்கை தொடர்பிலான டில்லியின் அணுகுமுறையில் ஏற்பட்டிருக்கும் மாற்றத்தின் மற்றொரு பிரதிபலிப்பாகும்.
இந்தியாவின் அணுகுமுறையில் ஏற்பட்டிருக்கும் மாற்றங்களை சரியான முறையில் புரிந்துகொண்டமையால்தான் புதுடில்லிக்கு விமானம் ஏறுவதற்கு முதல்நாளே கூட்டமைப்பின் பிரதிநிதிகளை அவசரமாக அழைத்து ஜனாதிபதி பேச்சுக்களை நடத்தியிருக்கின்றார் என்பது உண்மை. கூட்டமைப்புடன் பேச்சுக்களை ஆரம்பித்துவிட்டேன் எனவும், அவர்கள் (கூட்டமைப்பினர்) என்மீது நம்பிக்கை வெளியிட்டுள்ளார்கள் எனவும் புதுடில்லிக்கு அவரால் கூறக்கூடியதாக இருந்துள்ளது. 
கூட்டமைப்புடன் பேச்சுக்களை நடத்த வேண்டும் என்ற அழுத்தம் கடந்த மாதம் பூட்டானில் இடம்பெற்ற சார்க் உச்சி மாநாட்டின் போதே ஆரம்பமாகிவிட்டதாக இராஜதந்திர வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. பூட்டானில் ராஜபக்ஷவைச் சந்தித்த இந்தியப் பிரதமர் கூட்டமைப்புடனான பேச்சுக்கள் உடனடியாக ஆரம்பிக்கப்பட வேண்டும் என வலியுறுத்தியிருந்தார். இதன்போது வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ_ம் உடனிருந்தார். பூட்ட்hனிலிருந்து கொழும்பு திரும்பிய உடனடியாகவே கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனை தொலைபேசியில் தொடர்பு கொண்ட அமைச்சர் பீரிஸ், அவரைச் சந்திக்க விரும்புவதாகத் தெரிவித்தார். இருவரும் கொழும்பில் சந்தித்து உத்தியோகப் பற்றற்ற முறையிலான பேச்சுவார்த்தை ஒன்றை நடத்தியிருந்தார்கள். 
இதனைவிட இந்தியாவின் வெளிவிவகாரச் செயலாளர் நிருபமா ராவும் கூட்டமைப்புடன் பேசுமாறு கொழும்பைக் கேட்டிருந்தததாகத் தெரிகின்றது. 
இந்தப் பின்னணியில்தான் பேச்சுக்களுக்கான அழைப்பை தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு  ஜனாதிபதி விடுத்திருந்தார். மறுபுறத்தில் சிங்களத் தேசியவாதக் கட்சிகள் இந்தியாவுக்கு எதிராக சமிபகாலமாக மீண்டும் ஆரம்பித்திருக்கும் பிரச்சாரங்களின் பின்னணியும் இதுதான்.  இலங்கை விவகாரத்தில் இந்தியா மீண்டும் தலையிடுகின்றது என சிங்களத் தேசியவாதக் கட்சிகள் மட்டுமன்றி, பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி கூட குரல் கொடுத்திருக்கின்றது. 
இனநெருக்கடிக்குத் தீர்வு காண்பதற்காக என 2005 ஆம் ஆண்டு ஜனாதிகதியினால் அமைக்கப்பட்ட அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகள் குழுவில் பங்கேற்குமாறு 22 உறுப்பினர்களைக் கொண்டிருந்த தமிழ்க் கூட்டமைப்பை ஜனாதிபதி அப்போது அழைத்திருக்கவில்லை. கூட்டமைப்புடன் பேச்சுக்களை நடத்துவதென்பது ஜனாதிபதிக்கு பிடித்தமானதாக இருக்கவில்லை. கூட்டமைப்புடன் பேச்சுக்களை நடத்துவதை சிங்களத் தேசிவாதிகள் ஏற்கமாட்டார்கள் என்பது ஜனாதிபதிக்குத் தெரியும். அதனைவிட கூட்டமைப்புடன் பேசி எந்தவிதமான இணக்கத்தையும் ஏற்படுத்திவிட முடியாது என்பதும் அவருக்குத் தெரியும். 
இந்த நிலையில் கூட்டமைப்புடன் பேச்சுக்களை நடத்தாமல் தமக்குத் தேவையான சிங்கள மக்களால் ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒரு தீர்வைத் திணிப்பதே அவரது திட்டமாக இருந்தது. 
ஆனால், இப்போது இந்தியாவின் நிர்ப்பந்தம் அவரது அணுகுமுறையில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தியிருக்கின்றது. போர் முடிவுக்கு வந்துள்ள பின்னணியில் தமிழ்க் கூட்டமைப்புடன் பேச்சுக்களை நடத்துவதற்கு அரசாங்கம் முன்வந்திருப்பது முக்கியமான ஒன்றுதான். தமிழ்ப் பகுதிகளில் அதிகளவுக்குப் பெரும்பான்மையைப் பெற்றிருக்கும் கூட்டமைப்புடன் பேச்சுக்களை நடத்தாமல் இடம்பெயர்ந்த மக்களுடைய பிரச்சினைகளுக்கோ அல்லது, இனநெருக்கடிக்கோ நிரந்தரமான ஒரு தீர்வைக் கண்டுவிட முடியாது. 
இருந்தபோதிலும் தற்போதைய பேச்சுக்களை ஜனாதிபதி முழுமையான விருப்பத்துடன் நடத்தியிருக்கின்றார் எனக் கருத முடியாது. இந்தப் பேச்சுக்களின் போது ஜனாதிபதி தெரிவித்த சில கருத்துக்கள் அவர் பேரினவாத நிலைப்பாட்டில் இருந்துகொண்டுதான் இந்தப் பேச்சுக்களைக் கையாள முற்படுகின்றார் என்பiதைத் தெளிவாகக் காட்டியது. முக்கியமாக மக்கள் தனக்கு வழங்கிய ஆணையைக் கருத்திற்கொண்டு அதற்கு உட்பட்டதாகவே பேச்சுக்கள் அமையும் என ஜனாதிபதி தெரிவித்திருந்தார். இது பேச்சுக்கள் மீது நம்பிக்கை வைக்க முடியாது என்ற ஒரு நிலையை சிறுபான்மையினருக்கு ஏற்படுத்துவதாகவே அமைந்திருந்தது. 
இதேவேளையில், இந்தியாவின் அழுத்தங்கள் வரையறுக்கப்பட்ட ஒன்றாகவே இருக்கும்.  ஒரு எல்லையைத் தாண்டி இந்தியா செல்லும் என்பது எதிர்பார்க்கக் கூடியதல்ல. இந்தியாவைப் பொறுத்தவரையில் இன நெருக்கடிக்குத் தீர்வு காணப்பட வேண்டும் என்பது அதன் தேவையல்ல. இலங்கையில் அதிகரிக்கும் சீனாவின் செல்வாக்கைத் தடுப்பதுதான் இந்தியாவின் பிரச்சினை. அதற்கான ஒரு ஆயுதமாக இன நெருக்கடியைப் பயன்படுத்துவதும், அதனைக் காரணம் காட்டி இலங்கையில் தமது பிரசின்னத்தை அதிகரித்துக்கொள்வதும்தான் இந்தியாவின் நோக்கம். 
அதேவேளையில் தமது அழுத்தங்கள் ஒரு அளவுக்கு மேல் அதிகரித்தால் இலங்கை ஒரேயடியாக சீனாவின் பக்கம் சாய்ந்துவிடும் என்பதும் இந்தியாவுக்குத் தெரியும். இந்தியாவைச் சுற்றியுள்ள நாடுகளில் இலங்கை மட்டும்தான் முழுமையாக சீனாவின் செல்வாக்குக்கு உட்படாத ஒன்றாக இன்றுவரையில் உள்ளது. ஏனைய தெற்காசிய நாடுகளில் இவ்வாறு காய்நகர்த்தக்கூடிய நிலையில் இந்தியா இல்லை. அதனால் இன நெருக்கடி தொடர்பில் இந்தியாவின் அழுத்தங்கள் வரையறுக்கப்பட்ட ஒன்றாகவே இருக்கும் எனச் சுட்டிக்காட்டப்படுகின்றது.