Thursday, November 10, 2011

2018 பொதுநலவாய விளையாட்டுப் போட்டி இலங்கையில்? நாளை இறுதி முடிவு

2018 ஆம் ஆண்டு பொதுநலவாய நாடுகளின் விளையாட்டுப் போட்டியை இலங்கையின் அம்பாந்தோட்டையில் நடத்தும் கனவை நனவாக்க இலங்கை அரசாங்கம 150 பேர் கொண்ட பலமான அணியொன்றை கரிபியன் நாடான சென்.கிற்ஸ் மற்றும் நெவிசுக்கு அனுப்பியுள்ளது. இங்கு நாளை வெள்ளிக்கிழமை நடைபெறும் கூட்டத்தில் இது தொடர்பான இறுதி முடிவு எடுக்கப்படும்.

2018 கொமன்வெல்த் போட்டியை நடத்துவதற்கு அம்பாந்தோட்டையும் அவுஸ்ரேலியாவின் கோல்ட்கோஸ்ட் நகரும் கடும் போட்டியிட்டு வருகின்றன. இந்த நிலையில் சென்.கிற்ஸ் மற்றும் நெவிசில் உள்ள கொமன்வெல்த் விளையாட்டுச் சம்மேளனத்தின் தலைமையகத்தில் இந்தப் போட்டியை நடத்தவுள்ள நாடு எது என்பதைத் தீர்மானிப்பதற்கான வாக்களிப்பு இடம்பெறவுள்ளது. 

கொமன்வெல்த் விளையாட்டு சம்மேளனக் கூட்டம் நேற்றுமுன்தினம் இங்கு ஆரம்பமாகியுள்ளது. 71 நாடுகள் மற்றும் பிராந்தியங்கள் பங்கேற்கும் இந்தக் கூட்டத்தில் 2018 கொமன்வெல்த் போட்டிகளை நடத்தும் நாட்டை தெரிவு செய்வதற்கான வாக்களிப்பு நாளை வெள்ளிக்கிழமை இடமபெறும். மறுநாள் சனிக்கிழமை எங்கு போட்டிகள் நடைபெறும் என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படவுள்ளது. 

இந்தநிலையில் அம்பாந்தோட்டையில் இந்தப் போட்டிகளை நடத்தும் வாய்ப்பை பெற்றுக் கொள்வதற்காக 150 பேர் கொண்ட பாரிய பலம் வாய்ந்த அணியொன்றை கரிபியன் தீவுக்கு இலங்கை அரசாங்கம் அனுப்பி வைத்துள்ளது. 

விளையாட்டுத்துறை அமைச்சர் மகிந்தானந்த அளுத்கமகே மற்றும் மத்திய வங்கி ஆளுனர் அஜித் நிவாட் கப்ரால் ஆகியோரின் தலைமையிலான இந்தக் குழுவில் நாமல் ராஜபக்ச, அரவிந்த டி சில்வா, முத்தையா முரளிதரன், மற்றும் தொழிலதிபர்கள், கலைஞர்கள் பலரும் இடம்பெற்றுள்ளனர். 

இதற்கிடையே, 2018 கொமன்வெல்த் போட்டிகளின் ஆரம்ப நிகழ்வும் இறுதி நிகழ்வும் நடத்துவதற்கு பெயரிடப்பட்டிருந்த அம்பாந்தோட்டை சூரியவெவ மகிந்த ராஜபக்ச துடுப்பாட்ட மைதானம் இராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்ட விவகாரம் கொமன்வெல்த் போட்டியை நடத்தும் வாய்ப்பை இலங்கை பெறுவதற்குச் சிக்கலை ஏற்படுத்தியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

அம்மாந்தோட்டையில் அமைக்கப்படவுள்ள 
விளையாட்டு மைதானத்தின் மாதிரி
மைதானங்களை பராமரிக்க முடியாத இலங்கை அரசினால் எவ்வாறு கொமன்வெல்த் போட்டிகளை நடத்த முடியும் என்று கேள்வி எழுந்துள்ளது. அவுஸ்ரேலியாவின் கோல்ட்கோஸ்ட் நகருக்காக பரப்புரை செய்யும் தரப்பினர் இதுபற்றி கடுமையான கேள்விகளை எழுப்பி வருவதால் கரிபியன் தீவில் பரப்புரைகள் சூடுபிடித்துள்ளன. 

கோல்ட்கோட்ஸ் நகருக்கு இந்த வாய்ப்பை பெற்றுக் கொள்ளும் நோக்கில் அவுஸ்ரேலியாவின் குயின்லாந்து மாகாண பிரதமர் அன்னா பெலி, கோல்ட் கோஸ்ட் நகர முதல்வர் உள்ளிட்ட பலரும் கரிபியன் தீவுக்குச் சென்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment