Tuesday, November 8, 2011

முடக்கப்பட்ட செய்தி இணையத்தளங்கள்: அரசாங்கம் எதற்காக அஞ்சுகின்றது?

ஊடக சுதந்திரத்துக்காகக் குரல் கொடுக்கும் அமைப்புக்கள் பலவற்றின் பலத்த கண்டனத்துக்கு மத்தியிலும் மேலும் ஐந்து செய்தி இணையத் தளங்களைத் தடை செய்துள்ள இலங்கை அரசாங்கம், இலங்கை தொடர்பான செய்திகளை வெளியிடும் இணையத் தளங்கள் அனைத்தும் தகவல் திணைக்களத்தில் பதிவு செய்யப்பட வேண்டும் எனவும் அறிவித்திருக்கின்றது.

தன்மீதான விமர்சனங்களையிட்டு அரசாங்கம் அச்சமடையத் தொடங்கியிருப்பதைத்தான் அரசின் இந்த அறிவித்தல் உறுதிப்படுத்துகின்றது.

லங்கா ஈ-நியூஸ் இணையத்தளம் இலங்கையில் பார்க்க முடியாதவாறு இரு வாரங்களுக்கு முன்னர் அரசாங்கத்தினால் தடைசெய்யப்பட்டது. லங்கா ஈ-நியூஸ் இணையத்தளத்துக்கு எதிராக கடந்த காலங்களில் நடத்தப்பட்ட தொடர்ச்சியான தாக்குதல்களின் இறுதிக்கட்டமாகவே குறிப்பிட்ட இணையத்தளம் முடக்கப்பட்டது. லங்கா ஈ-நியூஸ் இணையத்தள அலுவலகம் சில மாதங்களுக்கு முன்னர் எரியூட்டப்பட்டமையும், அதன் செய்தி ஆசிரியர் காணாமல்போனமையும் கருத்துச் சுதந்திரம் இந்தநாட்டில் எந்தளவுக்கு அச்சுறுத்தலுக்குள்ளாகியிருந்தது என்பதற்கான உதாரணங்களாக அமைந்திருந்தன.

இந்தப் பின்னணியில் இப்போது இலங்கை தொடர்பான செய்திகளை வெளியிடும் அனைத்து சுயாதீன இணையத்தளங்களை முடக்கிவிடுவதற்கு அரசு முடிவெடுத்திருக்கின்றது.

அரசாங்கத்தின் இந்தச் செயற்பாடு கருத்து வெளியீட்டுச் சுதந்திரத்துக்கு மட்டுமன்றி, பொதுமக்களுக்கு இருக்கக்கூடிய தகவல்களை அறிந்துகொள்ளும் சுதந்திரத்துக்கும் விடுக்கப்பட்டுள்ள ஒரு சவாலாகவே அமைந்திருக்கின்றது. அரசாங்கத்தைப் பொறுத்தவரையில், தனக்கு எதிராக வரக்கூடிய விமர்சனங்களையிட்டு மிகவும் அவதாகமாக இருப்பதை இதன் மூலமாகப் புரிந்துகொள்ள முடிகின்றது. இதனை ஒரு முன்ஜாக்கிரதை நடவடிக்கையாகவே அரசாங்கம் மேற்கொண்டுள்ளது.

லங்கா ஈ-நியூஸ் இணையத்தளம் முடக்கப்பட்டதையடுத்து இப்போது மேலும் ஐந்து இணையத்தளங்கள் இலங்கையில் பார்வையிட முடியாதவாறு முடக்கப்பட்டுள்ளன. சிறிலங்கா கார்டியன், பப்பராசி, கொசிப்-9, சிறிலங்கா மிரர், லங்கா வே நியூஸ் என்பனவே அவையாகும். இதில் லங்கா வே நியூஸ் இணையத்தளமானது ஐக்கிய தேசியக் கட்சியின் உத்தியோகபூர்வமான இணையத்தளம் என்பது குறிப்பிடத்தக்கது. இவை அனைத்தும் அரசாங்கத்தின் உத்தரவையடுத்து கடந்த சனிக்கிழமை முடக்கப்பட்டன.

லங்கா ஈ-நியூஸ் இணையத் தளம் முடக்கப்பட்டமைக்கு எதிராக அமெரிக்கா தன்னுடைய ஆழ்ந்த கவலையைத் தெரிவித்திருந்த ஒரு பின்னணியிலேயே மேலும் ஐந்து இணையத் தளங்களை முடக்குவதற்கு அரசாங்கம் முடிவெடுத்திருந்தமை கவனிக்கத்தக்கது. இந்த விவகாரத்தில் சர்வதேசத்தின் அக்கறைகளையிட்டு தாம் கவலைப்படப்போவதில்லை என்பதை இந்த அதிரடியான நடவடிக்கையின் மூலமாக இலங்கை அரசாங்கம் அமெரிக்காவுக்கு உணர்த்தியிருக்கின்றது.

"எந்தவொரு ஊடக நிறுவனத்தினதும் கருத்துக்களை நாம் ஏற்றுக்கொள்ளவில்லை என்ற போதிலும், சுயாதீனமான ஊடகத்துறை ஜனநாயகத்தின் தொடர்ச்சியான செயற்பாட்டுக்கு அவசியம் என்பதே அமெரிக்காவின் நிலைப்பாடாகும்" எனவும் இது தொடர்பாக அமெரிக்கத் தூதரகம் வெளியிட்டிருந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்கின்றது.

"செய்தி இணையத்தளங்களை இடையறாது பார்வையிடும் உரிமையை உள்ளடக்கியதான கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரமானது ஒரு அடிப்படை உரிமை என்பதுடன் அது மதிக்கப்பட வேண்டிய ஒன்றுமாகும். அதனால், லங்கா ஈ-நியூஸ் உட்பட சட்டபூர்வமான இணையத்தளங்கள் அனைத்தையும் இலங்கையில் சுயாதீனமாகப் பார்வையிடுவதைத் தடைசெய்வதற்கான செயற்பாடுகளை நிறுத்திக்கொள்ளுமாறு இலங்கை அதிகாரிகளையும், தொலைத் தொடர்பு நிறுவன முகாமைத்துவத்தையும் கேட்டுக்கொள்கின்றோம்" எனவும் அமெரிக்கத் தூதரகம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

செய்தி இணையத் தளங்களை  இலங்கையில் பார்வையிட முடியாதவாற தடைசெய்யும் விடயத்தில் அமெரிக்கா உட்பட மேற்கு நாடுகள் கொண்டுள்ள அக்கறையை இந்த அறிக்கை பிரதிபலிப்பதாக அமைந்திருக்கின்றது. அமெரிக்காவின் இந்தக் கருத்துக்களையிட்டு கொஞ்சமும் பொருட்படுத்தாமல் மேலும் ஐந்து இணையத்தளங்களைத் தடைசெய்வதென அரசாங்கம் எடுத்துள்ள தீர்மானம், மேற்குநாடுகளை மட்டுமன்றி ஊடக சுதந்திரத்துக்காகக் குரல்கொடுக்கும் அமைப்புக்களையும் சீண்டுவதாக அமைந்திருக்கின்றது.

அரசாங்கத்தின் இந்தச் செயற்பாடு உள்நாட்டில் மட்டுமன்றி, சர்வதேச ரீதியாகவும் விமர்சனங்களை உருவாக்கும் என்பது எதிர்பார்க்கக்கூடியதுதான். உள்நாட்டைப் பொறுத்தவரையில் ஐந்து ஊடக அமைப்பு இதற்கு எதிரான செயற்பாடுகளில் இறங்கலாம் எனத் தெரிகின்றது.

அரசாங்கத்தின் இந்த நடவடிக்கையை முட்டாள்தனமானது என ஐ.தேக. பிரமுகரும் முன்னாள் ஊடகத்துறை அமைச்சருமான மங்கள சமரவீர விமர்சித்திருக்கின்றார். அரசின் இந்தச் செயற்பாட்டை ஜனநாயகத்துக்கு விரோதமான ஒன்று எனவும் குறிப்பிட்டிருக்கும் அவர், இதற்கு எதிரான பிரச்சாரத்தை தாம் தொடர்ந்தும் முன்னெடுக்கப்போவதாகவும், தேவை ஏற்பட்டால் சட்ட நடவடிக்கையில் இறங்குவதற்கும் தாம் தயங்கப்போவதில்லை எனவும் அறிவித்திருக்கின்றார்.

லங்காவே நியூஸ்.கொம் ஐக்கிய தேசியக் கட்சியின் உத்தியோகபூர்வ இணையத்தளம் எனவும் தெரிவித்திருக்கும் அவர், அதனை பரீட்சார்த்தமாகவே தாம் இப்போது நடத்திவந்ததாகவும், விரைவில் அதனை உத்தியோகபூர்வமாகச் செயற்படுத்த இருந்ததாகவும் தெரிவித்தார். இந்த நிலையில் இதனைத் தடைசெய்வதற்கு அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கையை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் தெரிவித்திருக்கும் அவர், சட்டவிரோதமாக அல்லது தவறான செயற்பாடுகளில் இணையத்தளங்கள் ஏதாவது ஈடுபட்டால் சட்டரீதியான முறையில் அவற்றுக்கு எதிரான செயற்பாடுகளை மேற்கொள்ள முடியும் எனவும் சுட்டிக்காட்டியிருக்கின்றார்.

இந்தநிலையில், தன்னுடைய செயற்பாடுகளை நியாயப்படுத்த வேண்டிய தேவை அரசுக்கு ஏற்பட்டுள்ளது. "ஜனாதிபதி, அமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் ஆகியோர் குறித்து தரக்குறைவான தனிப்பட்ட விமர்சனத்தில் ஈடுபட்டதால் இந்த இணைய தளங்களை, வாசகர்கள் அணுகுவது தடுக்கப்பட்டது" என ஊடக அமைச்சகச் செயளாளர் அரசாங்கத்தின் செயற்பாட்டை நியாயப்படுத்தியிருக்கின்றார். "இலங்கையைப் பற்றி செய்தி தரும் எந்த ஒரு இணைய தளமும், அது உலகின் எந்தப் பகுதியிலிருந்து இயங்கினாலும, இலங்கையின் ஊடக அமைச்சிடம் பதிவு செய்து கொள்ளவேண்டும் அல்லது அது சட்டநடவடிக்கையை எதிர்கொள்ள வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டிருக்கின்றார்.

இது தொடர்பாக ஊடக சுதந்திரத்துக்காகக் குரல்கொடுக்கும் அமைப்பு ஒன்றின் பிரதிநிதி ஒருவரிடம் கேட்டபோது, அரசாங்கத்தின் செயற்பாட்டை எந்தவகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது எனத் தெரிவித்தார். இணையத்தளங்கள் தரக்குறைவான விமர்சனங்களை மேற்கொள்கின்றன அல்லது தவறான செய்திகளை வெளியிடுகின்றன என்றால் அதனை ஊடக ஒழுக்கக்கோவையின் மூலமாகக் கையாள முடியும் எனத் தெரிவித்திருக்கும் அவர், அதற்காக ஊடக முறைப்பாட்டு ஆணைக்குழு இலங்கையில் இருக்கின்றது எனவும் இவ்விடயத்தில் அரசாங்கம் இவ்வாறு தன்னிச்சையாகச் செயற்படமுடியாது எனவும் அவர் குறிப்பிடுகின்றார்.

இலங்கையைப் பொறுத்தவரையில் இவ்வாறான செய்தி இணையத்தளங்களைக் கட்டுப்படுத்துவது தொடர்பில் சட்டங்கள் எதுவும் இல்லை. அத்துடன், இது தொடர்பில் அரச தரப்பிலிருந்து வெளியிடப்பட்ட அறிவித்தல் உத்தியோகபூர்வமான அறிவித்தலுக்கான தன்மையைக் கொண்டமதாகவும் இல்லை. குறிப்பாக ஊடகத்துறை அமைச்சின் செயலாளர் வாய்மொழி மூலமாக வெளியிட்ட அறிவிப்பாகவே இது உள்ளது. வர்த்தமானி அறிவித்தலோ அல்லது உத்தியோகபூர்வமான அறிவித்தலோ இல்லாமல் இது தொடர்பில் எவ்வாறு அரசாங்கத்தினால் நடவடிக்கை எடுக்க முடியும் எனத் தெரியவில்லை.

நாட்டில் இணையத் தளங்களை தணிக்கை செய்வது ஒரு நிலைநிறுத்தப்பட்ட போக்காக இருக்கும் நிலையில், இந்த நடவடிக்கை அதற்கு கூடுதல் வலு சேர்க்கிறது என்று சர்வதேச அளவில் செயல்படும் ஆர்வலர்கள் கூறுகிறார்கள். இணையத்தளங்களைத் தடை செய்வது என்பது இலங்கையில் ஒரு நீண்டகாலப் போக்காகவே இருந்துவருகின்றது. போர் தீவிரமாக இடம்பெற்ற காலப்பகுதியில் தமிழ்நெட் இணையத்தளம் தடைசெய்யப்பட்டது. அந்தத் தடை இன்னும் நீடிக்கின்றது.

இப்போது போர் முடிவுக்கு வந்து இரண்டரை வருடங்கள் கடந்திருக்கும் நிலையில், அபிவிருத்தி மீள் கட்டமைப்பு என்பன தொடர்பாகவே முக்கியமாகப் பேசப்படுகின்றது. இந்த நிலையில் செய்தி இணையத்தளங்களைத் தடைசெய்வதற்கான முயற்சிகளை அரசாங்கம் எதற்காக மேற்கொள்ள வேண்டும் என்ற கேள்வி எழுவது நியாயமானதுதான்.

தென்னிலங்கையில் உருவாகக்கூடிய கிளர்ச்சிகளையிட்டுத்தான் அரசாங்கம் அதிகளவுக்கு அக்களை கொண்டிருக்கின்றது என்பது தெரிகின்றது. அரபு நாடுகளில் அண்மைக்காலத்தில் ஏற்பட்ட கிளர்சிகளின் பின்னணியில் இணையத்தளங்களின் செயற்பாடுகள் முக்கியமானதாக இருந்திருக்கின்றது. இந்தப் பின்னணியில் அரசாங்கத்தின் ஒரு முன்ஜாக்கிரதையான நடவடிக்கைதான் இது என எதிர்க்கட்சிப் பிரமுகர் ஒருவர் குறிப்பிட்டிருப்பதும் கவனிக்கத்தக்கது!

1 comment:

  1. சிங்கள ஊடகவியலாளர்கள் மூவரை அண்மையில் மதுரையில் சந்திக்க நேர்ந்தது.அவர்கள் இலங்கை அரசின் அராஜகத்திற்கு பயந்து தமிழகத்தில் தஞ்சம் அடைந்திருப்பதாகச் சொன்னார்கள்.அந்தத் தகவலை இந்தச் செய்தியுடன் பொருத்தி பார்க்க முடிகிறது.

    ReplyDelete