Sunday, December 25, 2011

அரசு - கூட்டடைப்புப் பேச்சுக்களின் அடுத்த கட்டம் எவ்வாறு அமையும்?


0 தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் பேச்சுக்களை தொடர்ந்தும் நடத்துவது அர்த்தமற்றது:  அமைச்சரவைப் பேச்சாளர் கெஹலிய ரட்புக்வெல

0 தொடர்ந்தும் பேசுவதில் ஏதாவது அர்த்தமுள்ளதா என்பதை ஆராய வேண்டிய நிலையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு: சுரேஷ் பிரேமச்சந்திரன்

அரசுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையிலான முறுகல் நிலை தீவிரமடைந்திருக்கும் நிலையில், ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் புதன்கிழமை இரவு சபாநாயகர் வழங்கிய இராப்போசன வைபவத்தில் சந்தித்தப் பேசியிருக்கின்றார். இருந்த போதிலும் இந்த சந்திப்பில் பேச்சுவார்த்தைகளில் ஏற்பட்டுள்ள முறுகல் நிலை தொடர்பில் இருவரும் பேசிக்கொள்ளவில்லை எனத் தெரிகின்றது. 

அரசு - கூட்டமைப்பு பேச்சுக்களில் இறுக்க நிலை ஏற்படும் நேரங்களில் மகிந்தவுக்கும் சம்பந்தனுக்கும் இடையிலான சந்திப்புக்கள் சகஜ நிலையை ஏற்படுத்துவதற்கு வழிவகுத்திருக்கின்ற போதிலும், இப்போது அவ்வாறான ஒரு நிலை காணப்பட்டதாகத் தெரியவில்லை. பேச்சுக்களை புதிய வருடத்திலும் முன்னகர்த்த முடியுமா என்பதைக் கேள்விக்குறியாக்கும் நகர்வுகள்தான் இப்போது தீவிமடைந்திருக்கின்றது. 

2011 ஆம் ஆண்டு முடிவுக்கு வரும் நிலையில் இவ்வருடம் ஜனவரி 10 ஆம் திகதி முதல் இடம்பெற்றுவந்த பேச்சுக்கள் எந்தப் பலனையும் தராத ஒரு நிலையே இப்போது காணப்படுகின்றது. இந்த நிலையில், அரச தரப்பிலிருந்து கடந்த ஒரு வார காலப்பகுதியில் வெளியாகியிருக்கும் நான்கு அறிவிப்புக்கள் தமிழ்த் தரப்பினருக்கு இருக்கக்கூடிய சொற்ப நம்பிக்கையையும் இல்லாமல் செய்வதாகவே அமைந்திருக்கின்றது. 

1. பாராளுமன்றத்தில் இடம்பெற்ற வரவு செலவுத் திட்ட விவாதத்தின் இறுதிநாள் விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ, வடக்கு கிழக்கிலிருந்து இராணுவ முகாம்கள் எதுவும் மூடப்படாது எனத் தெரிவித்திருக்கின்றார். அந்தப் பகுதிகளில் இராணுவம் தொடர்ந்தும் இருக்கும் என்ற அரசாங்கத்தின் நிலைப்பாட்டையும் அவர் வெளிப்படுத்தினார்.

2. செவ்வாய்கிழமை தினசரிப் பத்திகைகளின் பிரதம ஆசிரியர்களுடனான சந்திப்பின்போது பொலிஸ் மற்றும் காணி அதிகாரங்களை மாகாண சபைகளுக்குக் கொடுக்க முடியாது என ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ கூறியிருக்கின்றார்.

3. ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும், பொருளாதார அபிவிருத்தி அமைச்சருமான பசில் ராஜபக்ஷவும் பத்திரிகை ஆசிரியர்களுடனான சந்திப்பு ஒன்றில் காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்களைக் கொடுக்க முடியாது என்பதை திட்டவட்டமாகக் கூறியிருக்கின்றார். 

4. அமைச்சரவையின் பேச்சாளர் கெஹலிய ரம்புக்வெலயும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் பேசுவது அர்த்தமற்றது. அவர்கள் விடுதலைப் புலிகளைப் போல கோரிக்கைகளை முன்வைப்பதைக் கைவிட வேண்டும் எனக் கூறியிருக்கின்றார். அதாவது அரசாங்கம் கொடுப்பதைப் பெற்றுக்கொண்டு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு போய்விட வேண்டும் என்பதே அரசாங்கத்தின் நிலைப்பாடு என்பதைத்தான் அமைச்சரவைப் பேச்சாளரின் இந்தக் கருத்து புலப்படுத்துகின்றது. 

இந்தக் கருத்துக்கள் சாதாரணமானவர்களால் தெரிவிக்கப்பட்டவையல்ல. ஜனாதிபதியினாலும் சக்தி வாய்ந்த அமைச்சர்களாலும் தெரிவிக்கப்பட்டவை. அதாவது அரசாங்கத்தின் கருத்துக்களாகவே இவை வெளிப்பட்டுள்ளன. 

பேச்சுவார்த்தை மேசையில் தீர்மானிக்கப்பட வேண்டிய விடயங்களை பொது மேடைகளில் அச்சுறுத்தல் விடுக்கும் பாணியில் ஜனாதிபதியும் முக்கிய அமைச்சர்களும் அறிவித்துவருவது போரில் வெற்றிபெற்ற மனோபாவத்துடன் அவர்கள் பேச்சுக்களையும் அணுகுகின்றார்கள் என்பதைத்தான் உறுதிப்படுத்துகின்றது. முள்ளிவாய்க்காலில் முடிவுக்கு வந்த போருடன் தமிழ் மக்களுடைய அரசியல் கோரிக்கைகளும் குழிதோண்டிப் புதைக்கப்பட்டுவிட்டன என்பதுதான் அரசாங்கத்தின் மனோபாவமாக இருக்கின்றது. உரிமைகள் பற்றிப் பேசமுடியாது என்பதுதான் அரசின் நிலைப்பாடாக வெளிப்படுகின்றது. 

கூட்டமைப்புடனான பேச்சுக்கள் ஆரம்பமாகி, இன்று சுமார் ஒருவருடம் பூர்தியாகும் நிலையில், இந்தப் பேச்சுக்களை அரச தரப்பு எவ்வாறு நோக்குகின்றது என்பதையும், பேச்சுக்களை புதுவருடத்தில் அரசு எவ்வாறு அணுகப்போகின்றது என்பதையும் இந்த அறிவிப்புக்கள் வெளிப்படுத்தியிருக்கின்றது. டிசெம்பர் மாதத்தில் இடம்பெற்ற பேச்சுக்களில் எந்தவிதமான முன்னேற்றமும் ஏற்படாத ஒரு நிலையில், அரச தரப்பிலிருந்து வெளிப்படும் இவ்வாறான கருத்துக்கள் புதுவருடம் தொடர்பில் தமிழ் மக்கள் நம்பிக்கை வைக்க முடியாத ஒரு நிலையைத்தான் காட்டுகின்றத. 

அரச தரப்பிலிருந்து இவ்வாறு நம்பிக்கையீனத்தைக் கொடுக்கக்கூடிய கருத்துக்கள் வெளிவரும் நிலையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எவ்வாறான அணுகுமுறையைக் கையாளப்போகின்றது என்பதுதான் இன்று எழும் பிரதான கேள்வியாகும். 

இது தொடர்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் சுரேஷ் பிரேமச்சந்திரனிடம் தொடர்புகொண்டு கேட்ட போது, ~~இவ்விடயம் தொடர்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் சந்தித்து தீர்க்கமான ஒரு முடிவை எடுக்க வேண்டியிருக்கின்றது|| எனத் தெரிவித்தார். அரசுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையிலான அடுத்த சுற்றுப் பேச்சுக்கள் ஜனவரி 17,18,19 ஆம் திகதிகளில் நடைபெறும் என ஏற்கனவே இணக்கம் காணப்பட்டுள்ளதால், அதற்கு முன்னதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்றக் குழு கூடி தீர்க்கமான முடிவுகளை எடுக்கவேண்டியிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

அடுத்த கட்டப்பேச்சுக்களுக்கான திகதி நிர்ணயிக்கப்பட்டுள்ள நிலையில்தான் ஜனாதிபதி மற்றும் முக்கிய அமைச்சர்கள் பேச்சுவார்த்தைகளை எவ்வாறு நோக்குகின்றார்கள் என்பதை உணர்த்தும் அறிவிப்பக்கள் வெளியாகியுள்ளன. இந்த நிலையில் அடுத்த கட்டச் சந்திப்புக்களில் கலந்துகொள்வதா இல்லையா என்பதையிட்டும், இல்லையெனில் அதில் கலந்துகொண்டு தமது கருத்துக்களைத் தெரிவிப்பதா என்பதையிட்டு ஆராயவேண்டியிருப்பதாகவும் பிரேமச்சந்திரன் தெரிவித்தார். அதனால் அதற்கு முன்னதாக கூட்டமைப்பு உறுப்பினர்கள் சந்தித்து இது தொடர்பில் தீர்க்கமான முடிவுகளை எடுக்க வேண்டியிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

அரச கூட்டமைப்புப் பேச்சுக்களைப் பொறுத்தவரையில் காணி அதிகாரம் தொடர்பான விடயமே தற்போது ஆராயப்பட்டுவரும் விடயமாக உள்ளது. டிசெம்பர் மாதத்தில் இடம்பெற்ற ஐந்து சுற்றுப்பேச்சுக்களின் போதும் இது தொடர்பாக ஆராயப்பட்ட பொதிலும் அது தொடர்பான இணக்கப்பாடு எதுவும் ஏற்படவில்லை. மாகாண சபைகளுக்கான காணி அதிகாரத்தைப் பொறுத்தவரையில் தற்போதைய 13 வது திருத்தத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளதைவிட அதிகளவு அதிகாரங்கள் தேவை என்பதை கூட்டமைப்பு வலியுறுத்துவதாகத் தெரிகின்றது. 

அரச தரப்பு இவ்விடயத்தை ஏற்றுக்கொள்வதற்குத் தயாராக இருக்கின்ற போதிலும், தற்போதைய அரசியலமைப்பில் மாற்றங்கள் எதனையும் செய்வதற்குத் தயாராக இல்லாத ஒரு நிலைமைதான் காணப்படுகின்றது. அதாவது அரசியலமைப்பில் எந்தவிதாமான மாற்றங்களையும் செய்யாமல் இந்தப் பிரச்சினைக்குத் தீர்வுகாணப்பட வேண்டும் என்பதுதபான் அரசின் நிலைப்பாடாக வெளிப்பட்டது. அதாவது அரசியலமைப்பில் காணி தொடர்பாக இருக்கக்கூடிய சொற்றொடர்களை மாற்றாமல் இதனைச் செய்ய வேண்டும் என்ற ஒரு கருத்து காணப்பட்டது. 

இருந்தபோதிலும், ஜனாதிபதியும், பொருளாதார அபிவிருத்தி அமைச்சரும்  வெளிப்படுத்தியிருக்கும் விடயங்கள் அரச தரப்பு அடுத்த கட்டப்பேச்சுக்களை எவ்வாறு முன்னெடுக்கப்பேகின்றது என்பதற்கான ஒரு முன்னறிவித்தலாகவே உள்ளது. அதாவது அரசாங்கத்தைப் பொறுத்தவரையில் இரு விடயங்களை அது எதிர்பார்க்கின்றது. 

1. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்றத் தெரிவுக்குழுவில் பங்குபற்ற வேண்டும்.

2. இணைப்பு, மாகாணங்களுக்கான காணி மற்றும், பொலிஸ் அதிகாரங்களை கூட்டமைப்பு கைவிட வேண்டும். 

இதற்கான நிகழ்ச்சி நிரலுக்குள் கூட்டமைப்பையும் கொண்டுவருவதுதான் அரசாங்கத்திட்டம். ஆதற்காகத்தான் அச்சுறுத்தும் பாணியிலான கருத்துக்களை அரசு முன்வைத்து வருகின்றது. ஊண்மையில் அரசாங்கத்தைப் பொறுத்தவரையில் எதனையும் கொடுப்பதற்கான திட்டத்துடன் அது இல்லை. சுpங்கள- பௌத்த வாக்க வங்கியைத் தொடர்ந்தும் தக்கவைத்திருக்க வேண்டுமானால் தமிழர்களுக்கு எதனையும் கொடுக்கக்கூடாது என்ற நிலையிலேயே அரச தரப்பு உள்ளது என்பது தெளிவாகத் தெரிகின்றது.  இதில் அரசாங்கம் மிகவும் கவனமாக உள்ளது. 

1958 ஆம் ஆண்டு பண்டா செல்வா உடன்படிக்கை முதல் அனைத்து உடன்படிக்கைகளிலும் காணி அதிகாரம் முன்னிலைப்படுத்தப்பட்டிருந்தது. இந்த நிலையில்,  காணி அதிகாரம் இல்லாத ஒரு தீர்வை தமிழர்கள் ஒரு போதும் ஏற்கமாட்டார்கள் என்பதுடன், அது ஒரு தீர்வாகவும் இருக்கப்போவதில்லை. இவற்றைத் தர முடியாது என்பது அரசின் உறுதியான நிலைப்பாடாக வெளிப்படுத்தப்படும் நிலையில் அரசுடன் தொடர்ந்தும் பேசுவதால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பால் தமிழ் மக்களுக்கு எதனையும் பெற்றுக்கொடுக்க முடியாது என்பதே உண்மை! 

- சபரி
ஞாயிறு தினக்குரல்.

Saturday, December 24, 2011

ரணில் முன்னுள்ள அடுத்த சவால்

ரணில் விக்கிரமசிங்கவின் தலைமைக்கு எதிராக ஐக்கிய தேசியக் கட்சியில் எழுந்த கிளர்ச்சி இறுதியில் அவரது தலைமையைப் பலப்படுத்துவதிலேயே முடிவடைந்திருக்கின்றது. யார் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும், ஐ.தே.க.வில் சர்ச்சைகளுக்கு அப்பாற்பட்ட ஒரு தலைவராக ரணில் விக்கிரமசிங்க இப்போது உருவாகியிருக்கின்றார். அவரது தலைமைப் பதவி பலவீனமானது என கட்சிக்குள் இப்போதைக்கு குற்றச்சாட்டுக்களை முன்வைக்க முடியாத நிலை உருவாக்கப்பட்டிருக்கின்றது.

அவருக்கு மாற்றாக மற்றொருவரை முன்னிலைப்படுத்த முடியாத நிலைமையும் கட்சியில் மறுசீரமைப்பை வலியுறுத்தும் குழுவினருக்கு ஏற்பட்டிருக்கின்றது!

கரு ஜயசூரியவைப் பொறுத்தவரையில் பட்டுவேட்டிக் கனவில் இருந்தபோது கட்டியிருந்த கோவணமும் காணாமல் போன நிலைமை. தலைமைப் பதவிக் கனவில் இருந்தபோது அவரிடமிருந்த பிரதித் தலைவர் பதவியும் இப்போது காணாமல் போய்விட்டது. கட்சியின் இரண்டாவது நிலையில் இருந்த அவர் இன்று ஒரு சாதாரண செயற்குழு உறுப்பினராகியிருக்கின்றார்.

கட்சித் தலைமைக்கான போட்டியில் நன்மையடைந்திருப்பவர்களில் குறிப்பிடக்கூடியவர் சஜித் பிரேமதாசதான். 44 வயதான சஜித், ரணிலுக்கு அடுத்த தலைவர்தான் என்பதை உறுதிப்படுத்தும் வகையில் கட்சியின் பிரதித் தலைவர் பதவியைக் கைப்பற்றிக்கொண்டுள்ளார். பாராளுமன்றத்தில் கட்சிப் பிரதித் தலைவர் பதவிக்கான அலுவலகத்தில் சஜித் விரைவில் குடியேறுவார் என எதிர்பார்க்கலாம்.

கட்சியின் தலைமைப் பதவிக்காக திங்கட்கிழமை இடம்பெற்ற தேர்தலில் ரணில் விக்கிரமசிங்க வெற்றிபெற்றிருப்பது ஆச்சரியமான ஒன்றல்ல. ஏனெனில் ஐ.தே.க.வின் முக்கிய பதவிகளுக்கு போட்டி ஏற்படும் போது, கட்சியின் உயர் மட்டக்குழுவாக உள்ள செயற்குழுதான் இறுதி முடிவை எடுக்கின்றது. இவ்வாறான பதவி ஒன்றுக்கு தேர்தல் நடைபெறுமாயின் அதில் வாக்களிப்பதற்கான உரிமையும் செயற்குழு உறுப்பினர்களுக்கு மட்டும்தான் உள்ளது.

கரு ஜயசூரியவைப் பொறுத்தவரையில் கட்சியின் செயற்குழுவுக்கு வெளியே தனது ஆதரவைப் பெருக்கிக்கொள்வதில் செலுத்திய கவனத்தை கட்சியின் செயற்குழுவின் ஆதரவைத் தக்கவைத்துக்கொள்வதில் செலுத்தவில்லை என்பது உண்மை. இலங்கை அரசியலில் அதிகளவு ஆதிக்கத்தைச் செலுத்தக்கூடியவர்களாகவுள்ள மகாநாயக்கர்களின் ஆதரவைப் பெற்றுக்கொண்ட அவரால், அதற்கான ஆதரவுத் தளத்தை செயற்குழுவில் உருவாக்க முடியாமல் போய்விட்டது.

கட்சித் தலைமையகம் முன்பாக கரு
கட்சியின் செயற்குழு ரணில் விக்கிரமசிங்கவை மீண்டும் தலைவராகத் தெரிவு செய்திருப்பதன் மூலமாக கட்சிக்குள் நீண்டகாலமாக இருந்துவந்த தலைமைத்துவப் போட்டி தற்போதைக்கு முடிவுக்கு வந்திருக்கின்ற போதிலும், செயற்குழுவின் முடிவு ஒட்டுமொத்தமாக கட்சி ஆதரவாளர்களின் முடிவல்ல. தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டபோது, ஐ.தே.க. தலைமையகமான சிறிகொத்தவின் முன்பாக இடம்பெற்ற வன்முறைகள் இதனைத்தான் பிரதிபலிப்பதாக அமைந்திருந்தது.

ரணில் விக்கிரமசிங்கவைப் பொறுத்தவரையில் கட்சியின் தலைமைப் பதவிக்கான தேர்தலில் வெற்றி பெறுவதற்கு அவருக்கு வாய்ப்பான சூழ்நிலை ஒன்று உருவாக்கப்பட்டிருந்தது. கட்சியின் செயற்குழு உறுப்பினர்களைப் பொறுத்தவரையில் அவர்கள் அனைவரும் கட்சியின் தலைவராலேயே நியமிக்கப்படுகின்றார்கள். அதேவேளையில், ஐ.தே.க.வின் செயற்குழுவில் சுமார் 20 வெற்றிடங்கள் இருந்து தேர்தலுக்கு ஒரு வாரத்துக்கு முன்னர்தான் அதற்கான உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டனர். தேர்தலைக் கருத்திற்கொண்டுதான் இந்த நியமனங்களை ரணில் மேற்கொண்டிருப்பார் என்பது சாதாரண அரசியல் தெரிந்த எருக்கும் புரியும். இந்த நிலையில்தான் தேர்தல் முடிவுகள் ஆச்சரியமான ஒன்றாக இருக்கவில்லை.

ஐ.தே.க. வின் தலைமைத்துவப் போட்டியைப் பொறுத்தவரையில் அது கட்சியின் பாராளுமன்றக் குழுவின் பிரச்சினையாகத்தான் இருந்துள்ளது. செயற்குழு ரணில் விக்கிரமசிங்கவுக்குப் பின்பாக அணிவகுத்து நின்றுள்ளது என்பதைத் தேர்தல் முடிவுகளும் உணர்த்தியிருக்கின்றது.

செயற்குழுவின் நிலைப்பாடு எவ்வாறானதாக அமையும் என்பதை நன்கு தெரிந்திருந்துகொண்டிருந்தும், ரணிலுடன் மோதுவதற்கு கரு ஜயசூரிய ஏன் களமிறங்கினார் என்பதுதான் புரியவில்லை.

சஜித், கரு, தயாசிறி கட்சி அலுவலகம் முன்பாக
சிங்கள - பௌத்த ஆதரவுத் தளத்தை வளைத்துப்போடுவதன் மூலம், தனது செல்வாக்கைக் காட்டி செயற்குழு உறுப்பினர்களின் ஆதரவைத் தனதாக்கிக்கொள்ள முடியும் என கரு கணக்குப் போட்டிருக்கலாம். ரணிலைப் பொறுத்தவரையில், அவர் பெருமளவுக்கு சிறுபான்மையினருக்கு ஆதரவான ஒருவர் என்ற கருத்து ஒன்றும் காணப்படுகின்றது. ரணிலின் அண்மைக்கால அரசியல் தோல்விகளுக்கு அதுவும் ஒரு காரணமாகக் கூறப்படுகின்றது. இந்தப் பின்னணியில்தான் மகாநாயக்கர்களின் ஆதரவைப் பெற்றுக்கொள்வதில் கரு ஜயசூரிய வெற்றி பெற்றார்.

இலங்கையின் அரசியலானது பெருமளவுக்கு பௌத்த - சிங்களக் கோட்பாடுகளால் கட்டியமைக்கப்பட்ட ஒன்று. அதில் மகாசங்கங்களுக்கு மிகவும் பிரதானமான புனிதமான ஒரு இடம் வழங்கப்பட்டிருக்கின்றது. தன்னுடைய வெற்றியை உறுதிப்படுத்துவதில் மகாநாயக்கர்களின் ஆதரவு முக்கிய இடத்தை வகிக்கும் என கரு கருதியிருக்கலாம். அதனால்தான் தலைமைப் பதவிக்கான போட்டியில் இறங்குவது எனத் தீர்மானித்த உடனடியாகவே கண்டிக்குச் சென்று மகாநாயக்கர்களின் ஆசீர்வாதத்தையும், ஆதரவையும் கரு பெற்றுக்கொண்டார்.

இதனைவிட, கரு கொழும்பு திரும்பிய உடனடியாகவே ரணில் விக்கிரமசிங்கவுக்கு கடிதம் ஒன்றை அனுப்பிவைத்த மகாநாயக்கர்கள், தலைமைப் பதவிக்கான போட்டியிருந்து விலகுமாறு ரணிலை வலியுறுத்தியிருந்ததுடன், கரு ஜயசூரியவைத் தலைமைப் பதவிக்கு நியமிக்க வேண்டும் என்பதையும் வலியுறுத்தியிருந்தார்கள். கட்சி விவகாரம் ஒன்றில் மகாநாயக்க தேரர்கள் வெளிப்படையாகக் கருத்து வெளியிட்டிருந்தமை இதுதான் முதன் முறையாகும். மகாநாயக்கர்களின் கருத்துக்களைப் புறக்கணித்துச் செயற்படக்;கூடிய துணிச்சல் சிங்கள அரசியல் தலைவர்கள் எவரிடமும் இருப்பதில்லை என்பதால், இது தமக்குச் சாதகமான நிலையை ஏற்படுத்தும் என கரு ஜயசூரிய தரப்பினர் எதிர்பார்த்தனர்.

இருந்த போதிலும், ரணில் விக்கிரமசிங்க அசைந்துகொடுக்கவில்லை. உறுதியாக இருந்து வெற்றியும் பெற்றிருக்கின்றார்.

திங்கட்சிழமை இடம்பெற்ற தேர்தலின் முடிவு கட்சிப் புனரமைப்பை வலியுறுத்தும் குழுவினருக்குப் பலத்த அடியாக விழுந்திருக்கின்ற போதிலும், அவர்கள் கட்சிக்குள் தொடர்ந்தும் தனியான ஒரு குழுவாகவே இயங்குவதைக் காணமுடிகின்றது. “தலைமைப் பதவிக்கான தேர்தலின் முடிவு உண்மையில், கட்சியின் ஒட்டுமொத்தமான நிலைப்பாட்டை பிரதிபலிப்பதாக அமையவில்லை“ எனத் தெரிவிக்கும் கரு ஜயசூரிய, எது எப்படியிருந்தாலும் தான் கட்சியைவிட்டு வெளியேற்போவதில்லை என்பதையும் வலியுறுத்தியிருக்கின்றார்.

வெற்றிக்களிப்பில்...

இருந்தபோதிலும், கட்சி இரண்டாகப் பிளவுபட்டுச் செயற்படும் நிலை தொடர்கின்றது. மீண்டும் கட்சியின் தலைமைப் பதவியைப் பொறுப்பேற்றுக்கொண்டிருக்கும் ரணில் விக்கிரமசிங்கவைப் பொறுத்தவரையில், கட்சியில் ஒற்றுமையை நிலைநாட்டுவதுதான் அவர் முன்பாகவுள்ள பிரதான சவால். தலைமையை மீண்டும் கைப்பற்றிக் கொண்டுள்ள போதிலும், தனித் தனியாகச் செயற்படும் பிரிவினரை  ஒற்றுமைப் படுத்துவதில் அவர் நெருக்கடிகளைத்தான் எதிர்கொண்டுள்ளார் என்பது தெளிவாகத் தெரிகின்றது. இந்தப் பிரச்சினைகளைத் தீர்த்து கட்சியை மீண்டும் கட்டுக்கோப்பான ஒரு தலைமையின் கீழ் இயங்கச் செய்த பின்னரே அரசுக்கு எதிரான போராட்டங்களை இவர்களால் வெற்றிகரமாக முன்னெடுக்கக்கூடியதாக இருக்கும்.

Sunday, December 18, 2011

சர்வதேச சமூத்தின் எதிர்பார்ப்புக்களும் நல்லிணக்க ஆணைக்குழு அறிக்கையும்

எதிர்பார்க்கப்பட்டதைப் போலவே அரசாங்கத்தினால் நியமிக்கப்பட்ட கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு தன்னுடைய இறுதி அறிக்கையின் மூலம் இராணுவத்தைப் பாதுகாப்பதற்கு முற்பட்டிருக்கின்றது. பொதுமக்கள் மீது திட்டமிட்ட முறையில் தாக்குதல்கள் எதுவும் நடத்தப்படவில்லை என நல்லிணக்க ஆணைக்குழுவின் இந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ள போதிலும், இராணுவத்தின் மீது தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டுக்கள், சரணடைந்த விடுதலைப் புலி உறுப்பினர்கள் காணாமல் போனமை தொடர்பான விடயங்களையிட்டு விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆக, இராணுவத்தைப் பாதுகாக்கும் அதேவேளையில், சர்வதேச ரீதியாகத் தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டுக்களுக்கும் ஏதோ ஒருவகையில் பதிலளிப்பதற்கும் ஆணைக்குழு முற்பட்டிருப்பதாகவே தோன்றுகின்றது.

சர்வதேச சமூகத்திலிருந்து உருவாகிய அழுத்தங்களைச் சமாளிப்பதற்காகவே இந்த ஆணைக்குழு அமைக்கப்பட்டதாயினும், நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை பாராளுமன்றத்தில் வெளியிடப்பட்ட இந்த இறுதி அதன் இறுதி அறிக்கை, சர்வதேசத்திகால் ஏற்றுக்கொள்ளப்படுமா என்பதும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ள பரிந்துரைகள் றடைமுறைப்படுத்தப்படுமா என்பதும்தான் இன்று எழுப்பப்படும் பிரதான கேள்விகள். சர்வதேச ரீதியாகவும், உள்நாட்டிலும் பெரும் எதிர்பார்ப்புக்களை ஏற்படுத்தியிருந்த இந்த 407 பக்கங்களைக் கொண்ட அறிக்கை நேற்று முன்தினம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவே இதனை பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பார் என முதலில் அறிவிக்கப்பட்டிருந்த போதிலும், அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவே இதனை சமாப்பித்தார்.


முன்னணி சட்ட நிபுணரான சி.ஆர்.டி சில்வா தலைமையிலான இந்த ஆணைக்குழு, நாடு முழுவதும் பல அமர்வுகளை நடத்தி மக்களிடம் நேரடியாக விபரங்களைக் கேட்டறிந்தனர். விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முக்கியத் தலைவர்களின் உறவினர்கள் உள்ளிட்ட பலர் இந்த ஆணைக்குழு முன்பாக சாட்சியங்களை வழங்கியிருந்தனர். இருந்தும் இந்த ஆணைக்குழுவின் அதிகார வரம்பு மற்றும் இதன் பயன் குறித்து எழுந்த யப்பகேள்விகள் காரணமாக சர்வதேச மன்னிப்பச் சபை,  ஹியூமன் ரைட்ஸ் வோட்ச் உள்ளிட்ட மனித உரிமை அமைப்புக்கள் இந்த ஆணைக்குழுவின் அமர்வில் பங்கு கொள்ள மறுத்துவிட்டன. 2010 ஆம் ஆண்டு மே மாதம் 15 ஆம் திகதி ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவினால் நியமிக்கப்பட்ட இந்த ஆணைக்குழுவின் இறுதி அறிக்கை கடந்த நவம்பர் மாதம் 20 ஆம் திகதி ஜனாதிபதியிடம் சமர்ப்பிக்கப்பட்டிருந்தது.

இறுதிப் போரின் போது பொதுமக்கள் இலக்கு வைத்துக்கொல்லப்படவில்லை என்பதுதான் இலங்கை அரசாங்கத்தின் நீண்டகால நிலைப்பாடாக வெளிப்படுத்தப்பட்டுவந்தது. ஒரு கையில் மனித உரிமைகள் சாசனத்தையும் மறுகையில் துப்பாக்கியையும் வைத்துக்கொண்டுதான் படையினர் போரில் ஈடுபட்டார்கள் என்பதைத்தான் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவும் போர்க் குற்றங்களுக்கான பதிலாக முன்வைத்து வைத்;திருந்தார். ஆனால், இறுதிப் போரின் போது பெருந்தொகையான பொதுமக்கள் கொல்லப்பட்டிருப்பதை இந்த ஆணைக்குழு பதிவு செய்திருக்கின்ற போதிலும், இலங்கை அரசின் உத்தியோகபூர்வ நிலைப்பாட்டை உறுதிப்படுத்துவதாகவே அதன் அறிக்கை அமைந்திருக்கின்றது. அதாவது பொதுமக்கள் இராணுவத்தினால் வேண்டுமென்றே கொல்லப்படவில்லை என்பதுதான் இந்த ஆணைக்குழுவின் முடிவு.

இலங்கை அரசாங்கத்தின் இராணுவ யுக்திகள் மிகவும் கவனமாக திட்டமிடப்பட்டிருந்ததாகவும், அதில் பொதுமக்களின் பாதுகாப்புக்கே முக்கியத்துவம் வழங்கப்பட்டிருந்ததால், பொதுமக்கள் இழப்பை தவிர்ப்பது அல்லது குறைப்பதை அந்த யுக்திகள் மையமாகக் கொண்டிருந்ததாகவும் ஆணைக்குழுவின் அறிக்கை குறிப்பிட்டுள்ளது. அதாவது அரசாங்கத்தின் நிலைப்பாட்டைத்தான் ஆணைக்குழுவின் அறிக்கை பிரதிபலித்துள்ளது.

அரசாங்கப் படைகள் நல்ல முன்னுதாரண அடிப்படையில் செயற்பட்ட போதிலும், அங்கு பெருமளவிலான காணமல்போதல்கள், கடத்தப்படுதல் மற்றும் சட்ட விரோத தடுத்து வைப்புக்கள் இடம்பெற்றுள்ளதாகவும் ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது. இவை குறித்து விசாரிக்க காணாமல்போனவர்களுக்கான ஒரு சிறப்பு ஆணைக்குழு அமைக்கப்ப்பட்டு, சூத்திரதாரிகள் தண்டிக்கப்பட வேண்டும் என்றும் அது கூறியுள்ளது.

இந்த விடயங்களைப் பொறுத்தவரையில், பெருமளவு குற்றச்சாட்டுக்கள் சர்வதேச ரீதியாகத் தெரிவிக்கப்படும் நிலையில், அவை தொடர்பாக விசாரணை நடத்தப்பட வேண்டும் என்ற பரிந்துரையைத் தவிர்ப்பது இந்த ஆணைக்குழுவுக்கு சற்று கடினமானதாகவே இருந்திருக்கும் என்பது புரிந்துகொள்ளக் கூடிய ஒன்றுதான். இருந்த போதிலும், இது தொடர்பில் ஏதாவது செய்தாகவேண்டும் என்ற அழுத்தத்தை இந்தப் பரிந்துரை அரசாங்கத்துக்கு அதிகப்படுத்துவதாகவும் இது அமைந்திருக்கும்.

பொதுமக்கள் திட்டமிட்ட முறையில் இலக்குவைத்துக்கொல்லப்படவில்லை எனக் கூறுவதன் மூலமாக போர்க் குற்றச்சாட்டுக்களை நிராகரிப்பதற்கு இந்த அறிக்கை முற்பட்டிருக்கின்றது. இருந்தபோதிலும், தனிப்பட்ட முறையில் இராணுவத்தினர் இவ்வாறான சம்பவங்களில் ஈடுபட்டிருக்கலாம் எனக் குறிப்பிடுவதன் மூலம் இவற்றை தனிப்பட்ட சம்பவங்களாகக் காட்டிக்கொள்ள ஆணைக்குழு முற்பட்டுள்ளமை புரிகின்றது.

காணாமல் போனவர்களை கண்டுபிடிப்பதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் எடுக்க வேண்டும் என்றும், பயங்கரவதாத் தடுப்புச் சட்டத்தின் கீழ் நீதிமன்றங்களில் குற்றஞ் சுமத்தப்படாமல், பல வருடங்களாக தடுத்து வைக்கப்பட்டிருப்பவர்களின் விவகாரங்களை ஆராய சுயாதீன ஆலோசனைக்குழு ஒன்று நியமிக்கப்பட வேண்டும் என்றும் ஆணைக்குழு பரிந்துரைத்துள்ளது.

பெரும் சர்ச்சைகளை ஏற்படுத்தியிருந்த பிரிட்டனின் சானல் 4 தொலைக்காட்சியால் வெளியிடப்பட்ட இலங்கையின் கொலைக் களம் விவரணப் படத்தின் நம்பகத் தன்மை குறித்து ஆணைக்குழு கேள்வி எழுப்பியுள்ளது. இருந்தபோதிலும் இந்தஆவணப்படத்தின் நம்பகத் தன்மையை ஐ.நா. சபை உறுதிப்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.  ஐ.நா. உறுதிப்படுத்திய ஆவணப்படத்தை ஆணைக்குழு சந்தேகிப்பதை சர்வதேச சமூகம் ஏற்றுக்கொள்ளும் என்பது எதிர்பார்க்கக்கூடியதல்ல.

வடமாகாணத்தில் சிவில் நிர்வாக நடவடிக்கைகளில் இராணுவம் தலையீடு செய்வதாக அடிக்கடி வரும் குற்றச்சாட்டுக்கள் குறித்து கருத்துக் கூறியுள்ள ஆணைக்குழு, சிவில் நடவடிக்கைகளில் இராணுவத் தலையீடு இல்லாது செய்யப்பட வேண்டும் என்று பரிந்துரைத்துள்ளது.

அதேவேளையில், தமிழ் மக்களுக்குப் பொருத்தமான அரசியல் தீர்வு தொடர்பாகவும் ஆணைக்குழு குறிப்பிட்டிருக்கின்றது. தமிழ் மக்கள் மத்தியில் காணப்படும் தற்போதைய வன்செயல்கள், சந்தேகங்கள், தாம் பாரபட்சமாக நடத்தப்படுவதான உணர்வு ஆகியவற்றை நீக்க, மக்களை மையமாகக் கொண்ட அதிகாரப் பகிர்வு முறைமை ஒன்று கொண்டுவரப்பட்டு, அதன் மூலம் உள்ளுராட்சி சபைகள் பலப்படுத்தப்படுவதுடன், தற்போதைய மாகாண சபைகள் முறை திருத்தப்பட்டு, மத்தியில் அதிகாரம் பகிரப்பட வேண்டும் என்றும் நல்லிணக்க ஆணைக்குழு பரிந்துரைத்துள்ளது.

அதாவது நல்லிணக்க ஆணைக்குழுவானது போர்க்காலத்தில் இடம்பெற்ற சம்பவங்களுக்குப் பொறுப்புக்கூறல் மற்றும், அரசியல் தீர்வு என்ற இரு விடயங்கள் தொடர்பாகவும் ஆராய்ந்து தனது அறிக்கையை வெளியிட்டிருப்பதுடன், அவை தொடர்பில் தமது பரிந்துரைகளையும் மேற்கொண்டிருக்கின்றது.

இருந்தபோதிலும், பொறுப்பேற்றல் என்ற விடயத்தைப் பொறுத்தவரையில் பொதுப்படையாகவே தனது கருத்துக்களையும் பரிந்துரைகளையும் ஆணைக்குழு வெளியிட்டுள்ளதே தவிர, தனிப்பட்ட சம்பவங்கள் தொடர்பாகக் கவனம் செலுத்தப்பட்டு விசாரணைகள் முன்னெடுக்கப்படவில்லை என்பதும் கவனிக்கக்கூடியதாக உள்ளது. ஆணைக்குழு முன்பாக பலர்  சாட்சியமளித்திருந்த போதிலும், அவற்றின் அடிப்படையிலான விசாரணைகளை முன்னெடுப்பதற்கான ஆணை இந்த ஆணைக்குழுவுக்கு வழங்கப்பட்டிருக்கவில்லை.

இந்த நிலையில் சர்வதேச ரீதியாக எழுப்பப்பட்டுள்ள பல சர்ச்சைகளுக்குப் பதிலளிப்பதற்கு இந்த ஆணைக்குழுவின் அறிக்கை தவறியுள்ளது.

அதேவேளையில், அரசியல் தீர்வைப் பொறுத்தவரையிலும் கூட, ஆணைக்குழு முன்வைத்துள்ள பரிந்துரைகள் மேலோட்டமானவையாக உள்ளனவே தவிர பிரச்சினை எவ்வாறு உருவாகியது ஏன் இந்தளவுக்கு மோசமடைந்துள்ளது என்பவற்றை ஆழமாக ஆராய்ந்து நிரந்தரமான ஒரு தீர்வை முன்வைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளதாகத் தெரியவில்லை. உள்ளுராட்சி சபைகளைப் பலப்படுத்துவதோ அல்லது மாகாண சபை முறை திருத்தப்படுவதோ மட்டும் பிரச்சினைகளுக்குத் தீர்வாகிவிடமுடியாது என்பதுதான் வரலாற்றிலிருந்த கற்றுக்கொண்ட பாடம். அரசியலமைப்பைத் திருத்தாமல் இந்தப் பிரச்சினைக்குத் தீர்வைக்காண முடியாது என்பதைத்தான் கடந்த காலப்பேச்சுவார்த்தைகள் உணர்த்தியிருக்கின்றது. ஆனால், ஆணைக்குழுவின் பரிந்துரைகளோ வெறும் மேலோட்டானவையாகவே உள்ளன.

காணாமல் போனவர்களைக் கண்டுபிடிப்பது, இராணுவத்தினர் யாராவது குற்றமிழைத்திருந்தால் அவர்களை விசாரணைக்கு உட்படுத்துவது போன்ற சில சிபார்சுகளை இந்த ஆணைக்குழு தெரிவித்திருந்தாலும், அவை அரசாங்கத்தினால் நடைமுறைப்படுத்தப்படுமா என்பதுதான் அடுத்ததாகவுள்ள மிகப்பெரிய கேள்வி.

நல்லிணக்க ஆணைக்குழு 2010 செப்டம்பர் 13 ஆம் திகதி தனது இடைக்கால அறிக்கையை வெளியிட்டிருந்தது. அதிலும் இது போன்ற சில சிபார்சுகள் தெரிவிக்கப்பட்டிருந்தன. குறிப்பாக தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்கள் பிரச்சினை, நீண்டகாலமா விசாரணைகள் இன்றி சிறையிலுள்ள தமிழ் இளைஞர்களின் விடுதலை மற்றும் காணாமல்போனவர்கள் விவகாரம் உட்பட பல விடயங்களில் ஆணைக்குழு பரிந்துரைகளை வெளியிட்டிருந்தது. இதனை நடைமுறைப்படுத்தவதற்கான குழுக்களும் அமைக்கப்பட்டன. இருந்த போதிலும், அதனை நடைமுறைப்படுத்துவதற்கான எந்தவிதமான நடவடிக்கையும் அரசாங்கத்தினால் பின்னர் எடுக்கப்படவில்லை.

இருந்த போதிலும் சர்வதேச சமூகத்தின் அதிகரித்த அழுத்தங்கள் காரணமாக இப்போது வெளியிடப்பட்டுள்ள இறுதி அறிக்கையின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதற்கு அல்லது நடைமுறைப்படுத்துவது போலக் காட்டிக்கொள்வதற்கு அரசாங்கம் முற்படலாம். அவ்வாறு நடைமுறைப்படுத்த முற்படுவது மேற்குலகின் அழுத்தங்களை மேலும் மென்மைப்படுத்துவதற்கு வழிவகக்கலாம். ஆனால், அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படக்கூடிய இவ்வாறான விசாரணை ஒன்று உண்மைகளைக் கண்டறிவதை நோக்கமானதாகக் கொண்டிருக்குமா அல்லது சர்வதே சமூகத்தின் அழுத்தங்களை மென்மைப்படுத்துவதை மட்டும்தான் இலக்காகக் கொண்டதாக இருக்குமா என்பதை நாம் சொல்லித்தான் நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டுமென்பதில்லை.


- சபரி
ஞாயிறு தினக்குரல்

Friday, December 16, 2011

நல்லிணக்க ஆணைக்குழுவின் இறுதி அறிக்கை பாராளுமன்றில் சமர்ப்பிப்பு

கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக் குழுவின் இறுதி அறிக்கை இன்று வெளிக் கிழமை அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வாவால் பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டது.

ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவே இதனை பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பார் என முதலில் தெரிவிக்கப்பட்டுள்ள போதிலும், அமைச்சா நிமல் சிறிபால டி சில்வாவே இதனை இன்று சமாப்பிதார். 

2010 ஆம் ஆண்டு மே மாதம் 15 ஆம் திகதி ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவினால் நியமிக்கப்பட்ட கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்கம் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் இறுதி அறிக்கை கடந்த நவம்பர் மாதம் 20 ஆம் திகதி ஜனாதிபதியிடம் சமர்ப்பிக்கப்பட்டது.

அமைச்சர் நிமால் உரை

ஆணைக்குழுவின் அறிக்கையை இன்று சபையில் சமர்ப்பித்து உரையாற்றிய சபை முதல்வர் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா- இறுதிக் கட்ட யுத்தத்துடன் தொடர்புடைய சர்வதேச மனிதாபிமான சட்டம் பற்றிய விபரங்களை கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு விரிவாக தமது அறிக்கை மூலம் தெளிவுபடுத்தியுள்ளதாக கூறியுள்ளார்.

இது தொடர்பாக தமது ஆய்வுகள் மற்றும் சிபாரிசுகளை ஆணைக்குழு முன்வைத்துள்ளதாக சபை முதல்வர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தம்மிடம் அளிக்கப்பட்ட சாட்சியங்களின் அடிப்படையில் தொடர்ந்தும் விசாரணைக்குட்படுத்த வேண்டிய சில சம்பவங்களை கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு தமது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

சர்ச்சையை ஏற்படுத்தியிருந்த காணொளிகள் தொடர்பாக கருத்து வெளியிட்ட அமைச்சர்- அவற்றின் நம்பகத்தன்மை மற்றும் உள்ளடக்கம் தொடர்பில் சந்தேகத்தை தோற்றுவிக்கும் தொழில்நுட்ப பிரச்சினைகள் உள்ளதாக ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளதாகவும் கூறினார்.

சட்டம் மீறப்பட்டிருந்தால் நாட்டிலுள்ள சட்டத்தின் பிரகாரம் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்பதை அரசாங்கம் பல்வேறு சந்தர்ப்பங்களில் வலியுறுத்தியிருந்ததாகவும் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

ஒரு சில சம்பவங்களை சுட்டிக்காட்டியுள்ள ஆணைக்குழு அந்த சம்பவங்கள் ஏற்படுவதற்கான காரணங்கள் குறித்து ஆராய்ந்து பார்ப்பது உகந்ததாக அமையும் என சிபாரிசு செய்துள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

மோதலின் இறுதிக்கட்டங்கள் தொடர்பான
சர்வதேச மனிதநேயச் சட்டம் சாரந்த விடயங்கள் பற்றிய விரிவான காண்புகளையூம் விதப்புரைகளையூம் இவ்வறிக்கையின் மூலம் ஆணைக்குழு எம்மிடம் சமர்ப்பித்துள்ளது.

சிவில் குடிகளின் உயிர்ப் பாதுகாப்பை உறுதிசெய்வது- யூத்த நடவடிக்கைகளை அமுல்படு;த்துவது- குறித்த கொள்கைகளை வகுப்பதில் முக்கிய ஒரு காரணியாக அமைந்திருந்ததென்பதையூம் சிவில் குடிகளை வேண்டுமென்றே இலக்கு வைத்து தாக்குதல்களை மேற்கொள்வது ஒரு போதும் அக்கொள்கையின் ஓரங்கமாக இருக்கவி;ல்லை என்பதை இவ்வறிக்கை தௌpவாக ஏற்றுக்கொள்கிறது.

தொழில்சார் மட்டத்தில் படை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. எனினும் ஆளெவரினாலும் வரம்பு மிறிச் செயற்பட்டமை குறித்த சான்றுகள் எவையேனும் இருப்பின் அவை குறித்து உண்மையில் விசாரணைக்கு உட்படுத்தப்படவேண்டும்

தம்மிடம் முன்வைக்கப்பட்ட சாட்சியங்களின் அடிப்படையில் செயலாற்றி தமது அபிபப்ராயப்படி மேலும் விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டிய குறிப்பான சில சம்பவங்கள் அணைக்குழுவினால் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்த அறிக்கையின் முக்கியமான சாராம்சம் இங்கு தரப்படுகின்றது:

பொது மக்கள் உயிரிழப்பு

இலங்கைப் போரின் இறுதி கட்டத்தில் இலங்கை இராணுவம் பொதுமக்கள் தரப்பில் உயிர் இழப்பை தவிர்க்க தம்மால் முடிந்த அனைத்தையும் செய்துள்ளது. இருந்த போதிலும், மிகவும் முக்கியமாக இந்த இறுதிப் போரின் போது கணிசமான அளவு பொதுமக்கள் இழப்பு ஏற்பட்டதை இந்த அறிக்கை ஒப்புக்கொண்டுள்ளது.

அப்பாவி மக்களை பயங்கரவாதிகளின் பிடியில் இருந்து மீட்பதற்கான மனிதாபிமான நடவடிக்கையாக இலங்கை அரசாங்கத்தால் விபரிக்கப்பட்டுவந்த இந்தப் போரில், கணிசமான பொதுமக்கள் இழப்பு ஏற்பட்டதை இலங்கை அரசாங்கத்தினால் உருவாக்கப்பட்ட ஒரு ஆணைக்குழு ஒப்புக்கொள்வது இதுதான் முதற்தடவையாகும்.

அத்துடன் விடுதலைப் புலிகள்தான் மக்களை மனிதக் கேடயங்களாக பயன்படுத்தியதாகவும் ஆணைக்குழுவின் அறிக்கை தெரிவிக்கின்றது.

அதே நேரம் இராணுவம் பொதுமக்கள் இருந்த பகுதிகள் மீது ஷெல் தாக்குதல்களை நடத்தியதாகக் கூறப்படும் குறிப்பிட்ட குற்றச்சாட்டுக்கள் தொடர்பாகவும், போரின் இறுதி கட்டத்தில் சரணடைந்த விடுதலைப் புலிகள் அதன் பிறகு காணமல் போனதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் குறித்தும் விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என்றும் ஆணைக்குழு பரிந்துரை செய்துள்ளது.

போர்க் குற்றம் குறித்து சர்வதேச அளவில் அழுத்தங்கள் அதிகமானதை அடுத்தே கடந்த ஆண்டு இலங்கை அரசு இந்த விசாரணைக் குழுவை அமைத்தது.

முன்னணி சட்ட நிபுணரான சி ஆர். டி சில்வா தலைமையிலான இக் குழுவினர் நாடு முழுவதும் பல அமர்வுகளை நடத்தி மக்களிடம் நேரடியாக விபரங்களைக் கேட்டறிந்தனர். விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முக்கியத் தலைவர்களின் உறவினர்கள் உள்ளிட்ட பலர் இந்த ஆணைக்குழு முன்பாக சாட்சியங்களை வழங்கியிருந்தனர்.

இருந்தும் இந்த ஆணைக்குழுவின் அதிகார வரம்பு மற்றும் இதன் பயன் குறித்து எழுந்த ஐயப்பாடுகள் காரணமாக அம்னெஸ்ட்டி இன்டர்நேஷனல், ஹுமன் ரைட்ஸ் வாட்ச் உள்ளிட்ட மனித உரிமை அமைப்புக்கள் இந்த ஆணைக்குழுவின் அமர்வில் பங்கு கொள்ள மறுத்துவிட்டன.

இலங்கை அரசாங்கத்தின் இராணுவ யுக்திகள் மிகவும் கவனமாக திட்டமிடப்பட்டிருந்ததாகவும், அதில் பொதுமக்களின் பாதுகாப்புக்கே முக்கியத்துவம் வழங்கப்பட்டிருந்ததால், பொதுமக்கள் இழப்பை தவிர்ப்பது அல்லது குறைப்பதை அந்த யுக்திகள் மையமாகக் கொண்டிருந்ததாகவும் ஆணைக்குழுவின் அறிக்கை குறிப்பிட்டுள்ளது.

பொதுமக்கள் இழப்பை தவிர்ப்பதற்காக இலங்கை இராணுவத்தின் நடவடிக்கைகள் வேண்டுமென்றே மிகவும் தாமதப்படுத்தப்பட்டதாகவும் அந்த அறிக்கை கூறுகிறது.

எப்படியிருந்த போதிலும் சில தருணங்களில் பலப்பிரயோகம் அளவுக்கு அதிகமாக இருந்ததாகவும், அவை குறித்து மேலதிக புலன் விசாரணைகள் தேவை என்றும் அந்த ஆணைக்குழு கூறியுள்ளது.

அளவுக்கு அதிகமான தாக்குதல்

அதாவது விடுதலைப்புலிகள் பொதுமக்கள் மத்தியில் இருந்து தாக்குதல் நடத்திய காரணத்தால், அதற்கான இலங்கை இராணுவத்தின் பதில் தாக்குதல்கள் சில வேளைகளில் அளவுக்கு அதிகமாக இருந்திருக்கலாம் என்றும், அவை குறித்து விசாரிக்கப்பட வேண்டும் என்றும் அது கூறுகின்றது. அந்தத் தாக்குதல்கள் தேவைக்கு அளவானதாக இருந்ததா என்பது குறித்து ஆராயப்பட வேண்டும் என்றும் அது கூறுகிறது.

இந்த விடயத்தில் இராணுவத்தின் பொதுவான நற்பெயருக்கு களங்கம் ஏற்படுவதை தவிர்ப்பதற்காக, குற்றங்காணப்படும் இலங்கை இராணுவச் சிப்பாய்களுக்கு உரிய தண்டனை வழங்கப்பட வேண்டும் என்றும் அது பரிந்துரைத்துள்ளது. அதேவேளை பாதிக்கப்பட்டவர்களின் நெருங்கிய உறவினர்களுக்கு உரிய நட்ட ஈடு வழங்கப்பபட வேண்டும் என்றும் அது கூறியுள்ளது.

மருத்துவமனை மீதான தாக்குதல்

 
போர் வேளையில் மருத்துவமனைகள் மீது எறிகணைத் தாக்குதல் நடத்தப்பட்டதாகக் கூறப்படும் சர்ச்சைக்குரிய விவகாரம் குறித்து தனது கருதத்தைக் கூறியுள்ள நல்லிணக்க ஆணைக்குழு, மருத்துவமனைகள் மீது எறிகணைத் தாக்குதல்கள் நடத்தப்பட்டிருக்கின்ற போதிலும், அந்தத் தாக்குதலை யார் நடத்தினார்கள் என்று முடிவுக்கு வருவது கடினம் என்று கூறியுள்ளது.

விடுதலைப்புலிகள் அமைப்பு உறுப்பினர் ஒருவரின் சாட்சியின்படி, விடுதலைப்புலிகள் புதுமாத்தளன் மருத்துவமனை மீது தாக்குதல் நடத்திவிட்டு அதற்கான மன்னிப்பு கோரியதாகவும் ஆணைக்குழு ஒரு சம்பவத்தை சுட்டிக் காட்டியுள்ளது.

போர்ச் சட்டங்களில் மாற்றம் தேவை

 
சர்வதேச போர்ச் சட்டங்கள் குறித்து தனது பரிந்துரையில் குறிப்பிட்டுள்ள நல்லிணக்க ஆணைக்குழு, தற்போதைய சர்வதேச மனித உரிமைச் சட்டங்கள், அரசாங்கங்களுக்கும், அரசாங்கம் அல்லாத போராட்டக் குழுக்களுக்கும் இடையிலான போர்களுக்கு உகந்த வகையில் மறுசீரமைக்கப்பட வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளது. 


அரசாங்கம் அல்லாத குழுக்கள் எந்த விதமான விதிகளையும் பின்பற்றாத காரணத்தால், அதற்கேற்றவாறு சர்வதேச சட்டங்களை மாற்றுவது தொடர்பில் சர்வதேச சமூகம் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் அது கூறியுள்ளது.

மருந்துப் பற்றாக்குறை

 
பொதுமக்கள் தஞ்சமடைவதற்காக அறிவிக்கப்பட்ட தாக்குதல் சூனியப் பிரதேசங்களில் போதுமான மருந்து மற்றும் உணவுப்பொருட்களின் விநியோகம் இருக்கவில்லை என்ற குற்றச்சாட்டு குறித்து கருத்துக் கூறியுள்ள ஆணைக்குழு, அரசாங்கம் போதுமான விநியோகத்தை அங்கு அனுப்பிய போதிலும், அவற்றில் ஒரு பகுதியை விடுதலைப்புலிகள் பறித்துக்கொண்டு விட்டதாக கூறியுள்ளது. இருந்த போதிலும், அங்கு மருந்துப்பொருட்களின் விநியோகம் போதுமானதாக இல்லை என்று அது ஒப்புக்கொண்டுள்ளது.

காணாமல் போனவர்களுக்கான சிறப்பு ஆணைக்குழு

அரசாங்கப் படைகள் நல்ல முன்னுதாரண அடிப்படையில் செயற்பட்ட போதிலும், அங்கு பெருமளவிலான காணமல்போதல்கள், கடத்தப்படுதல் மற்றும் சட்ட விரோத தடுத்து வைப்புக்கள் இடம்பெற்றுள்ளதாக ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது. இவை குறித்து விசாரிக்க காணாமல்போனவர்களுக்கான ஒரு சிறப்பு ஆணைக்குழு அமைக்கப்ப்பட்டு, சூத்திரதாரிகள் தண்டிக்கப்பட வேண்டும் என்றும் அது கூறியுள்ளது.

இந்த விவகாரங்கள் தொடர்பில் சாட்சியமளித்த சிலர் ஈ பி டி பி, கருணா குழு, தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் ஆகிய அமைப்புக்கள் மீது ஆட்கள் கடத்தப்பட்டமை குறித்து புகார் செய்துள்ளதாகவும். ஆனால், அந்த அமைப்புக்கள் அவற்றை மறுத்துள்ளதாகவும் கூறியுள்ள ஆணைக்குழுவின் அறிக்கை, சட்ட விரோத ஆயுதக் குழுக்கள் குறித்த மேலதிக விசாரணைகள் தேவை என்றும் குறிப்பிட்டுள்ளது.

காணாமல் போனவர்களை கண்டுபிடிப்பதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் எடுக்க வேண்டும் என்றும், பயங்கரவதாத் தடுப்புச் சட்டத்தின் கீழ் நீதிமன்றங்களில் குற்றஞ் சுமத்தப்படாமல், பல வருடங்களாக தடுத்து வைக்கப்பட்டிருப்பவர்களின் விவகாரங்களை ஆராய சுயாதீன ஆலோசனைக்குழு ஒன்று நியமிக்கப்பட வேண்டும் என்றும் ஆணைக்குழு பரிந்துரைத்துள்ளது.

பிரிட்டனின் சானல் 4 தொலைக்காட்சியால் வெளியிடப்பட்ட இலங்கையின் கொலைக் களம் விவரணப் படத்தின் நம்பகத் தன்மை குறித்து ஆணைக்குழு கேள்வி எழுப்பியுள்ளது.

இராணுவ தலையீடு


வடமாகாணத்தில் சிவில் நிர்வாக நடவடிக்கைகளில் இராணுவம் தலையீடு செய்வதாக அடிக்கடி வரும் குற்றச்சாட்டுக்கள் குறித்து கருத்துக் கூறியுள்ள ஆணைக்குழு, சிவில் நடவடிக்கைகளில் இராணுவத் தலையீடு இல்லாது செய்யப்பட வேண்டும் என்று பரிந்துரைத்துள்ளது.

அதிகாரப் பகிர்வு தேவை

தமிழ் மக்கள் மத்தியில் காணப்படும் தற்போதைய ''வன்செயல்கள், சந்தேகங்கள், தாம் பாரபட்சமாக நடத்தப்படுவதான உணர்வு'' ஆகியவற்றை நீக்க, மக்களை மையமாகக் கொண்ட அதிகாரப் பகிர்வு முறைமை ஒன்று கொண்டுவரப்பட்டு, அதன் மூலம் உள்ளுராட்சி சபைகள் பலப்படுத்தப்படுவதுடன், தற்போதைய மாகாண சபைகள் முறை திருத்தப்பட்டு, மத்தியில் அதிகாரம் பகிரப்பட வேண்டும் என்றும் நல்லிணக்க ஆணைக்குழு பரிந்துரைத்துள்ளது.

வெளியுலகுக்கு வெளிப்படையாகத் தெரியும் வகையில் அதிகாரங்கள் பரவலாக்கப்படுதலில் முன்னேற்றம் காணப்பட வேண்டும் என்றும் அது குறிப்பிட்டுள்ளது.


இந்த அறிக்கையின் ஆங்கில மூலத்தை முழுமையாகப் படிக்க இங்கே கிளிக் பண்ணவும்.

சிவில் சமூகத்தின் மகஜருக்கு கூட்டமைப்பின் பதில் என்ன?

இலங்கை தமிழர் விவகாரம் குறித்து தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு தமிழ் சிவில் சமூகம் என்ற பெயரில் வடக்கு கிழக்கு தமிழ் முக்கியஸ்தர்கள் சிலர் கையெழுத்திட்ட கடிதம் ஒன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மத அமைப்புக்கள், பொது நல அமைப்புக்கள், கல்விமான்கள், தொழில்சார் நிபுணர்கள் மற்றும் ஏனைய முக்கியஸ்தர்கள் பலர் இந்தக் கடிதத்தில் கையெழுத்திட்டுள்ளார்கள்.

அரசாங்கத்துடனான பேச்சுவார்த்தைகள், தீர்வுக்கான அடிப்படைகள், வடக்கு மாகாண சபைக்கான தேர்தல் போன்ற பல விடயங்கள் குறித்து அந்தக் கடிதத்தில் பல விடயங்கள் வலியுறுத்தப்பட்டுள்ளன. பேச்சுவார்த்தைகள் இழுத்தடிக்கப்படக் கூடாது என்றும், தேசியம், அக சுயநிர்ணய உரிமை போன்றவற்றின் அடிப்படையில் அவை அமைய வேண்டும் என்றும் தாம் அந்தக் கடிதத்தில் வலியுறுத்தியுள்ளதாக அந்தக் கடிதத்தில் கையெழுத்திட்டவர்களில் ஒருவரான மன்னார் மறைமாவட்ட கத்தோலிக்க ஆயர் இராயப்பு ஜோசப்பு தெரிவித்தார்.

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற வைபவம் ஒன்றில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முக்கிய தலைவர்களில் ஒருவரான மாவை சேனாதிராஜாவிடம் இந்த மகஜர் கையளிக்கப்பட்டது. அரசாங்கத்துடனான தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பேச்சுவார்த்தைகள் நடைபெறும் விதம் குறித்தும் இந்தக் கடிதம் விமர்சனங்களை முன்வைத்துள்ளது. த. தே. கூட்டமைப்பின் தலைவரான இரா. சம்பந்தர் அவர்கள், ஓரிரு தினங்களில் இந்தக் கடிதம் குறித்து தமது கருத்தை தெரிவிப்பதாகக் கூறியுள்ளார்.

சிவில் சமூகத்தினரால் அனுப்பப்பட்டுள்ள கடிதத்தின் முழு விபரமும் வருமாறு:

தமிழ்த் தேசியத்தினது வாழ்விலும் எதிர்காலத்திலும் அக்கறையுள்ள தமிழ் சிவில் சமூகம் என்ற அடிப்படையில் நாம் பின்வரும் விடயங்களை எமது நாடாளுமன்றப் பிரதிநிதிகளான உங்களது கவனத்திற்கு கொண்டு வர விரும்புகின்றோம்:

1. அரசாங்கத்துடனான பேச்சுவார்த்தை அரசியல் தீர்வு தொடர்பிலானது:

அ) பல சுற்று பேச்சுவார்த்தைகளின் பின்னர் பேச்சுவார்த்தைகளின் போது பேச்சளவில் முன்னேற்றங்கள் ஏற்பட்டிருப்பது போல் தென்பட்டபோதிலும் அரசாங்கத்திடமிருந்து மூன்று முக்கிய விடயங்கள் தொடர்பில் எழுத்து வடிவில் விளக்கம் கிடைக்கப் பெறும் வரை அடுத்த சுற்றுப் பேச்சுவார்த்தைக்கான திகதியை நிர்ணயிக்கப் போவதில்லை என்ற தீர்மானத்தை கடந்த 04 ஓகஸ்ட் 2011 அன்று நீங்கள் எடுத்திருந்தீர்கள்.

உங்களது அறிக்கையில் அது வரையிலான பேச்சுவார்த்தைகளை 'ஏமாற்றும்' தன்மையானவை – [deceitful process]’ என வர்ணித்திருந்தீர்கள்.
இந்நிலைப்பாட்டை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எடுத்திருந்தமை தமிழ் மக்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றது என்பது சிவில் சமூகத்தினர் என்ற வகையில் நாம் அறிந்துள்ளோம்.
இது இவ்வாறிருக்க 14 செப்டம்பர் 2011 அன்று திடீரென பேச்சுவார்த்தைகள் மீள ஆரம்பிக்கப்படும் என்ற அறிவிப்பு தங்களிடமிருந்து வந்த போது நாம் பெருவியப்படைந்தோம்.

பேச்சுவார்த்தையில் மீளக் கலந்து கொள்ளும் உங்களது இந்தத் தீர்மானமானது தங்களது ஓகஸ்ட் 4 திகதியிட்ட அறிக்கையை முற்றிலும் அர்த்தமற்றதாக்கிய செயற்பாடாகவே நாம் கருதுகின்றோம்.

குறிப்பாக ஐ.நா மனிதஉரிமை பேரவையின் கூட்டத் தொடர் நடைபெற்றுக் கொண்டிருந்த காலப்பகுதியில் - அரசாங்கத்துக்கெதிரான அனைத்துலக அழுத்தம் அதிகரித்து வந்து கொண்டிருந்த காலப்பகுதியில் - பேச்சுவார்த்தையில் மீளக் கலந்து கொள்ள சம்மதம் தெரிவித்த தங்கள் முடிவானது அரசாங்கத்தைக் காப்பாற்றும் விதத்தில் அமைந்து விட்டதாக நியாயமான விமர்சனம் ஒன்று முன்வைக்கப்படுகின்றது.

இதற்கான விளக்கத்தை தமிழ்மக்களுக்கு வழங்க வேண்டியது தங்களது தார்மீகக் கடமையாகும்.

அண்மையில், டிசம்பர் 1 அன்று நடைபெற்ற பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து நாடாளுமன்றத் தெரிவுக் குழுவிற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பெயர்களைப் பிரேரிக்கத் தவறியமையால் பேச்சில் விரிசல் நிலை அடைந்திருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது.

ஆனால் தொடர்ந்து பேச்சுவார்த்தை டிசம்பர் 6 அன்று இடம்பெற்றன. வடக்குக் கிழக்கு இணைப்பு, காவல்துறை மற்றும் காணி அதிகாரங்கள் தொடர்பில் அரசாங்கம் தமது நிலைப்பாட்டில் விடாப்பிடியாக நிற்பதாகக் கூறப்படுகின்றது.

இவை மூன்றும் மறுக்கப்படின் தொடர்ந்து பேசுவதில் அர்த்தமில்லை. பேச்சுக்களில் உண்மையில் என்ன நடைபெறுகின்றது என்பது தொடர்பிலான விளக்கத்தை தமிழ் மக்களுக்கு வழங்க வேண்டியது தங்களது கடமையாகும்.

ஆ) புதுடில்லியில் கடந்த ஓகஸ்ட் 23 மற்றும் 24 திகதிகளில்இந்திய காங்கிரஸ் உறுப்பினர் சுதர்சனநாச்சியப்பன் அவர்களால் கூட்டப்பட்ட பல்-தமிழ் கட்சி மகாநாட்டில் 'தேசியம், சுயநிர்ணயம்' என்ற வார்த்தைப் பிரயோகங்கள் உள்ளடங்கிய தீர்மானமொன்றில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சார்பில் பங்குபற்றிய அதன் ஆரம்பகால அங்கத்துவ கட்சிகளின் உறுப்பினர்கள் கையெழுத்திட மறுத்தமை எமக்குப் பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியது.

கருத்தொருமிப்பு ஏற்படாததால் கையெழுத்திடவில்லை என்ற விளக்கம் எந்த வகையிலும் ஏற்புடையதன்று.

இந்த வார்த்தைப் பிரயோகங்கள் உள்ளடக்கப்படுவதை எதிர்த்த தமிழர் விடுதலைக் கூட்டணி மற்றும் புளொட் போன்ற அமைப்புக்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அண்மைக்காலத்தில் தம்மை இணைத்துக் கொண்டவர்கள். [இந்த வார்த்தைப் பிரயோகங்களை எதிர்த்த மற்றைய இரு உதிரிக் கட்சிகள் ஈ.பி.ஆர்.எல்.எஃப். - பத்மநாபா அணியும், ஈ.என்.டி.எல்.எஃப்பும்.].

மேற்சொன்ன தமிழர் விடுதலைக் கூட்டணி மற்றும் புளொட் ஆகிய கட்சிகளை அண்மைக்காலத்தில் உள்வாங்கி கடந்த உள்ளூராட்சித் தேர்தல்களில் நீங்கள் போட்டியிட்டமை யாவரும் அறிந்தது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கொள்கைகளுக்கு எதிராக அவர்கள் செயற்படுமிடத்து அவர்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அடிப்படை அரசியற் கோட்பாடுகளுக்கு உட்பட வேண்டிய கடப்பாட்டை அவர்களுக்கு நீங்கள் இடித்துரைத்திருக்க வேண்டும் அல்லது அவர்களது நிலைப்பாட்டுக்கான விளக்கத்தை கேட்டிருக்க வேண்டும்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அவ்வாறான வலியுறுத்தலை மேற்கொள்ளாமல் போனதை அல்லது அவர்களின் விளக்கத்தை கோராது விட்டதை அவர்களது கொள்கை நிலைப்பாட்டை நீங்களும் - தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு - ஒப்புக் கொள்வதான சமிக்ஞையாகவே கருத வேண்டியுள்ளது.

இலக்கற்ற ஒற்றுமை என்பதில் அர்த்தமில்லை. தமிழ் அரசியல் கட்சிகளுக்கிடையிலான ஒற்றுமை என்பது தமிழ்த் தேசிய அரசியலுக்குத் துணை செய்வதாக வலிமை சேர்ப்பதாக இருக்க வேண்டும். அதனை அழிப்பதற்கான ஒற்றுமையில் பயனேதுமில்லை.

இ) தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினது அரசியல்தீர்வு தொடர்பான நிலைப்பாடு தொடர்பாக அரசாங்கத்தோடு பேச்சுவார்த்தைகளில் கலந்து கொள்கின்றவர்களும் கட்சியின் பிரதான அனைத்துலக தொடர்பாளர்களுமாகிய சம்பந்தன் அவர்களும் சுமந்திரன் அவர்களும் செய்து வருகின்ற பொது வெளிப்படுத்தல்கள் கட்சியின் அடிப்படைக் கொள்கைகளிலிருந்து முரண்படுவதை நாம் அவதானித்து வருகின்றோம்;.

தீர்வு 'தேசியம்' 'சுயநிர்ணயம்' என்ற அடிப்படைகளிலன்றி தமிழர்கள் சிறுபான்மையினர் சம உரிமைகள் தேவை என்ற அடிப்படையிலேயே முன்வைக்கப்படுவதாக மீளவும் மீளவும் தெரிவிக்கப்படுகின்றது. [உதாரணமாக:சுமந்திரனினால் 26 ஏப்பிரல் அன்று வழங்கப்பட்ட அமரர் எஸ். ஜே. வி. செல்வநாயகம் நினைவுப் பேருரை சம்பந்தனின் 04 ஒக்டோபர் 2011 திகதியிட்ட கல்முனை மாநகரசபைத் தேர்தலை ஒட்டிய அறிக்கை போன்றவை]

சிறுபான்மையினங்கள் கோரி நிற்பது மொழி மற்றும் கலாசார உரிமைகளையே. தம்மை ஒரு தேசமாகக் கருதுகின்ற மக்களைக் கொண்ட ஒரு தேசிய இனத்துக்கே தன்னாட்சி உரிமைகளை தமக்கிருக்கும் சுயநிர்ணயத்திற்கான உரிமையின் அடிப்படையில் கேட்கும் உரிமை உள்ளது.

தமிழர்களாகிய நாம் எம்மை ஒரு தேசமாகக் கருதியே எமக்குரித்தான சுயநிர்ணயத்திற்கான உரிமையின் அடிப்படையில் சுயாட்சியைக் கோருகின்றோம்.

அதேபோன்று சமவுரிமைகளைக் கேட்பதானது சுயாட்சியைக் கேட்பதாகாது. சட்டத்தின் ஆட்சியும் [ Rule of Law] நல்லாட்சியும் [ Good Governance] பூர்த்தி செய்யப்படும் ஒரு நாட்டில் சகலரதும் 'சமவுரிமைகள்' பாதுகாக்கப்படும்.

தமிழர்களது பிரச்சனைகள் வெறுமனே சட்டத்தின் ஆட்சியை உறுதி செய்வதினூடாக தீர்க்கப்பட முடியாதவை. சுயாட்சியைப் பெற்றுக் கொள்வதினூடாகவே எமது அரசியற் பிரச்சனைகள் தீர்க்கப்படலாம்.

தொடர்ந்து வந்த ஆட்சியாளர்களின் செயற்பாடுகளினால் ஏற்பட்ட பட்டறிவின் பயனாகவே எமது முன்னைய தலைவர்களும் மக்களும் ஈற்றில் 1976இலும் 1977இலும் தமிழ்த்தேசியம், சுயநிர்ணய உரிமை, சுயாட்சி என்ற அரசியல் கோட்பாடுகளைத் தமது அரசியல் அபிலாசைகளாகக் கொள்ளும் நிலைப்பாட்டை வந்தடைந்தனர்.

பின்னர் வந்த எமது 30 ஆண்டு வாழ்வும் அரசியல் வரலாறும் இந்த அடிப்படையிலேயே இயங்கியது. இப்போது ஒருசிலருக்கு ஏற்புடையதாக இல்லை என்பதற்காக இந்த அடிப்படைகளை விட்டுவிட்டோ அல்லது மறைத்தோ எமது அரசியல் பயணத்தை நாம் தொடரமுடியாது.

தேசியம், சுயநிர்ணயம் என்று கூறுவதன் மூலம் தனிநாட்டைக் கோருவதாகப் பொருள் கொள்ள வேண்டிய அவசியமில்லை. இந்த அபிலாசைகளைப் பூர்த்தி செய்வதற்குரிய நிறுவன ரீதியான ஏற்பாடுகள் தொடர்பாக நாம் பேச்சுவார்த்தை மேசையில் பேசித் தீர்மானித்துக் கொள்ளலாம்.

ஆனால் தேசியம்,சுயநிர்ணயம் என்ற அடிப்படையிலான ஒரு தீர்வுக்கு நாம் செல்லத் தவறுவோமாயின் நாம் உண்மையான சுயாட்சியைப் பெற்றுக் கொள்ள முடியாததாகி விடும்.

இந்த அடிப்படைகளை ஏற்றுக் கொள்ளாத உள்ளடக்காத எந்த ஒரு அரசியல்தீர்விலும் பிரயோசனம் இல்லை. மாறாக இந்த அடிப்படைகளை ஏற்றுக் கொள்கின்ற தீர்வு மட்டுமே நீடித்து நிலைக்கக் கூடிய ஓர் அரசியல் தீர்வைத் தருவதோடு, இத்தீவின் இனங்களுக்கிடையில் நீடித்து நிலைக்கக்கூடிய நல்லிணக்கத்தையும் ஏற்படுத்தும் வெளியார் தலையீட்டுக்கான தேவையையும் இல்லாமல் செய்யும்.

தமிழர் ஒரு தேசிய இனம், தமிழர் ஒரு தேசம், எமக்கு சுயநிர்ணய உரிமை உண்டு என்ற அரசியல் நிலைப்பாட்டை நாம் எடுத்தமையில் எந்தத் தவறும் இல்லை என்ற மனவுறுதி உங்களிடத்தில் எப்போதும் வெளிப்பட வேண்டும்.

இத்தகைய மனவுறுதி உள்ளவர்கள் தான் தமிழர் சார்பில் பேச வேண்டும். பேச முடியும். தனியே இவற்றை கோசங்களாக முன்வைப்பதனூடாக நாம் இந்த இலக்கை அடைந்து கொள்ள முடியாது என்பது உண்மையே.

அரசியல் உபாயங்கள்மிகவும் அவசியம். ஆனால் அரசியல் உபாயங்களுக்காக எமது இந்த அரசியல் அடிப்படைகளைஅபிலாசைகளை விட்டுக் கொடுத்துவிட முடியாது. இவை பேரம் பேசும் பொருட்களல்ல. விட்டுக்கொடுப்போமெனின் எதற்காக நாம் அரசியல் செய்கின்றோம் என்ற கேள்விக்கு மக்களுக்கு விடைகூற வேண்டியிருக்கும்;.

2. எதிர்வரும் மாகாண சபைத் தேர்தல் தொடர்பாக.

எதிர்வரும் 2012 ல் வடக்கு மாகாண சபைத் தேர்தல் நடைபெறவிருப்பதாக அரசாங்கத் தரப்பில் கூறப்பட்டு வருகின்றது. இந்தத் தேர்தலை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சந்திக்குமானால் அதில் அமோக வெற்றி பெறும் என்பதில் எமக்கு சந்தேகமில்லை. ஆனால் இதனையே அரசாங்கமும் விரும்புகின்றது என்பதில் உள்ள சூட்சுமத்தை விளங்கிக் கொள்ள வேண்டும்.

இலங்கையின் அரசியல் யாப்பின் ஓரங்கமான 13ம் திருத்தத்தின் நடைமுறை வடிவத்திற்கப்பால் எவற்றையுமே தீர்வு தொடர்பில் கருத்தில் கொள்ள விரும்பாத அரசாங்கம், 13ம் திருத்தத்தை ஏற்க மாட்டோம் என்ற தேர்தல் விஞ்ஞாபனத்தின் அடிப்படையில் மக்களிடமிருந்து ஆணை பெற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை மாகாணசபைத் தேர்தலில் போட்டியிட வைத்து அத்தேர்தலில் அது வெற்றி பெறுவதையும் விரும்புகின்றதென்றால் அதற்கான உள்நோக்கம் பூடகமானதல்ல.

மாகாணசபை முறைமையினை தமிழர்கள் ஒரு தீர்வாக ஏற்றுக் கொண்டு விட்டதாகப் பரப்புரை செய்வதற்காகவே அரசாங்கம் இதனை முயற்சிக்கின்றது.

அமெரிக்க, இந்திய அரசாங்கங்களும் 13 வது திருத்தத்தை தீர்விற்கான ஆரம்பப் புள்ளியாக ஏற்றுக் கொள்ளுமாறு வலியுறுத்துவதிலிருந்து இவ்வரையறைக்கப்பால் செல்லுவதை அவர்கள் விரும்பவில்லை என்பதைச் சுட்டுவதாக கருதமுடியும்.

ஆகவே மாகாண ஆட்சியைக் கைப்பற்றிய பின்னர் இன்னும் மேலதிகமாக கேட்டு வாங்கலாம் என்ற உபாயம் ஆபத்தானது.

13வது திருத்தம் என்ற வரையறைக்குள்ளிருந்து ஓர் எல்லைக்கப்பால் பயணிக்க முடியாது என்பதை சட்டஅறிஞர்கள் பலரை உங்கள் மத்தியில் வைத்திருக்கின்ற உங்களுக்கு நாங்கள் சொல்லவேண்டியதில்லை.

கட்டம் கட்டமாக அரசியல் தீர்வைப் பெற்றுக் கொள்ளலாம் என்ற சிந்தனையும் மேற்சொன்ன காரணங்களுக்காக சாத்தியப்படாது. 13வது திருத்தத்தை அல்லது அது தொடர்பில் மேற்கொள்ளப்படும் சில திருத்தங்களை அடிப்படையாகக் கொண்ட ஓரு தீர்வுப்பொதியை இடைக் காலத் தீர்வாகக் கருதவும் முடியாது.

மக்களுடைய அன்றாடப் பிரச்சனைகளுக்குக் கூடத் தீர்வுகளைத் தர முடியாத இவ்வகை இடைக்காலத் தீர்வுகளால் எந்தப் பயனும் இல்லை.

இவை எல்லாவற்றிற்கும் மேலதிகமாக பிரிந்த வடக்குக்கிழக்கில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு போட்டியிடுவதனால் ஏற்படக்கூடிய அரசியல் அபத்தத்தையும் மனதில் கொள்ள வேண்டியுள்ளது.

வடக்குக் கிழக்கு இணைப்பு என்பது ஒரு போதும் விட்டுக் கொடுக்கப்பட முடியாதது, பேச்சுவார்த்தைக்கு உட்படுத்த முடியாதது. இதை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இந்திய, அமெரிக்க அரசுகளுக்கு வலியுறுத்த வேண்டுமே அன்றி இந்த அழுத்தங்களுக்கு பயந்து தமிழ்த் தேசத்தின் ஒட்டுமொத்த அரசியல் எதிர்காலத்தை மீள முடியா பாழுக்குள் தள்ளக்கூடாது.

எதிர்வரும் மாகாணசபைத் தேர்தல்கள் எமது அரசியல் தீர்வுதொடர்பில் நாம் முன்நோக்கி நகர்வதற்கு ஒரு பெரும் தடைக்கல்லாக அமையும். மேலும் குறிப்பாகச் சொல்லுவதாயின் மாகாணசபையை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கைப்பற்றும் தருவாய் என்பது எமது நீண்ட அரசியல் பயணத்தின் அவல முடிவாக அமைந்து விடும்.

அத்தகைய நிகழ்வு ஈற்றில் முற்றுமுழுதான அரசியல் முள்ளிவாய்க்காலாகவும் அமைந்து விடும். இது நடைபெறாமல் தடுக்கும் வரலாற்றுக்கடமை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிடமே இன்று உள்ளது.

பேச்சுவார்த்தைகள் நடைபெற்றுக் கொண்டிருப்பதாகச் சொல்லப்படும் இந்தத் தறுவாயில் மாகாணசபைத் தேர்தலுக்கான அறிவிப்பு பொருத்தமற்றது எனவும் தேவையற்றதெனவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நிலைப்பாடெடுக்கவும், அதை பேச்சுவார்த்தை மேசையிலும் அனைத்துலகத்திடமும் வலியுறுத்தவும் தேவையான நியாயப்பாடு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிடம் உள்ளது.

அதேபோல் இன்னுமொரு தேர்தலில் தமிழ் மக்களின் ஆணையைப் பெற்றுத்தான் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமிழ் மக்களின் அபிலாசைகளை அரசுக்கும் உலகுக்கும் அறிவிக்க வேண்டுமென்றுமில்லை.

அரசாங்கம் இதனை மீறி தேர்தல்களை நடாத்துமாயின் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நேரடியாகப் பங்கெடுக்கக் கூடாது.

மாறாக தமிழ்த் தேசிய விரோதசக்திகள் அல்லது அரசசார்பு சக்திகள் மாகாணசபையைக் கைப்பற்றுவதைத் தடுக்க நாம் வேறு மாற்று உபாயங்கள் தொடர்பில் சிந்திக்கலாம். இவை தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மக்களோடு கலந்தாலோசிக்க வேண்டும்.

தேர்தல் அரசியலுக்கப்பால் ஓர் அரசியல் விடுதலை இயக்கமாக செயற்பட வேண்டும் என்ற நோக்கில் ஆரம்பிக்கப்பட்ட ஓர் இயக்கமாகவே தமிழ் மக்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைக் கருதுகின்றார்கள்.

இந்தக் குறிக்கோளின் அடிப்படையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தொடர்ந்து செயற்படும் என்ற நம்பிக்கையிலேயே தமிழ் மக்கள் தொடர்ந்து வந்த சகல தேர்தல்களிலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு தமது ஆணையை வழங்கி வருகிறார்கள்.

வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இந்தத் தருணத்தில் இந்த விண்ணப்பத்தை எமது தேசத்தின் ஆன்ம வெளிப்பாடாக உங்களிடத்து முன்வைக்கின்றோம்.இலட்சக் கணக்கில் மரணித்த எம்மக்களினது எதிர்பார்ப்பும் இதுவே.

தொடர்ச்சியான ஒடுக்குமுறைக்குட்பட்டிருக்கும் எமது மக்களின் அவாவும் இதுவே. ஒரு கௌரவமான நீடித்து நிலைக்கக் கூடிய அரசியல் தீர்வொன்றை அடைய சரியான முடிவை மக்களின் அபிலாசைகளுக்கமைவாக எடுப்பீர்கள் என்ற நம்பிக்கையில் நிறைவு செய்கின்றோம்.

Thursday, December 15, 2011

'காணி அதிகாரம்' தொடர்பிலான பிரச்சினைக்கு தீர்வு சாத்தியமா?

மாகாண சபைகளுக்குக் கொடுக்கப்பட வேண்டிய காணி அதிகாரங்கள் தொடர்பில் அரசுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையிலான நேற்றைய 17 வது சுற்றுப் பேச்சுக்களின் போது ஆராயப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இது தொடர்பல் இரு தரப்பினருக்கும் இடையில் சுமார் இரு மணி நேரம் பேச்சுக்கள் இடம்பெற்ற போதிலும், இறுதி முடிவு எதுவும் எட்டப்படாமையால் பேச்சுக்கள் எதிர்வரும் 19 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டிருக்கின்றது. 19 ஆம் திகதி இரு தரப்புக்கும் இடையில் இடம்பெறும் 18 வது சுற்றுப்பேச்சுக்களின் போதும் காணி அதிகாரங்கள் தொடர்பாகவே தொடர்ந்தும் பேசப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

காணி அதிகாரங்களைப் பொறுத்தவரையில் அவை மாகாணசபைகளுக்கு உரித்தாக்கப்பட வேண்டும் என்பதே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாடாகும். இருந்தபோதிலும், அரசியலமைப்பின்படி அரச காணிகள் மத்திய அரசுக்கே சொந்தமாக்கப்பட்டுள்ளது. இந்த நிலையை விட்டுக்கொடுக்க அரச தரப்பினர் தயாராகவில்லை. 


இதனால் அரசியலமைப்புக்கு உட்பட்டதாக மாகாண சபைகளுக்குக் காணிகளைப் பகிர்ந்தளிப்பது தொடர்பாக நேற்றைய பேச்சுக்களின் போது கவனம் செலுத்தப்பட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன. எது எப்படியிருந்தாலும், அரசியலமைப்பில் திருத்தத்தைச் செய்யாமல் இது எந்தளவுக்குச் சாத்தியமானதாகும் என்ற கேள்வியை அரசியலமைப்பு நிபுணர் எழுப்புகின்றார்கள்.

ஆனால், அரசாங்கத்தைப் பொறுத்தவரையில் இன நெருக்கடிக்குத் தீர்வைக்காண்பதற்காக அரசியலமைப்பில் மற்றொரு திருத்த்தைச் செய்வதற்கு அது தயாராகவில்லைப் போலுள்ளது. தற்போதைய அரசியலமைப்புக்கு உட்பட்டதாகவே தீர்வு காணப்பட வேண்டும் என்பதுதான் அரசின் நிலைப்பாடு.

மாகாண சபைகள் உருவாக்கப்படுவதற்குக் காரணமாக இருந்த 1987 நவம்பர் 14 ஆம் திகதி பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மாகாண சபைகள் சட்டத்தில் (Provincial Councils Act No 42 of 1987) மாகாணங்களுக்கான காணி அதிகாரங்கள் தொடர்பாகக் குறிப்பிடப்பட்டுள்ள போதிலும், மாகாண சபைகளுக்கு உரித்தான காணி, மத்திய அரசுக்கு உரித்தான காணி எனத் தனித் தனியாகக் காணப்படுகின்றது. 


இதில் மத்திய அரசுக்குச் சொந்தமாகவுள்ள அரச காணியை மாகாண சபைகளுக்குப் பயன்படுத்துவதற்கான நடைமுறைகள் சோக்கப்படவேண்டியவையாக உள்ளன. ஆக, அரசியலமைப்பில் திருத்தம் செய்யாமல் இந்தப் பிரச்சினையைத் தீர்க்க முடியாது என்பதுதான் அரசியலமைப்பு நிபுணர்களின் கருத்தாகும்.

அரசுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையிலான பேச்சுவார்த்தைகளைப் பொறுத்தவரையில் சிக்கலானது - இணக்கத்தை ஏற்படுத்துவதில் சிரமமானது என அடையாளங்காணப்பட்ட 3 விடயங்களில் காணி அதிகாரமும் ஒன்றாகும். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கடந்த மார்ச் மாதம் அரசிடம் முன்வைத்த யோசனைகளில் காணி அதிகாரங்கள் மாகாண சபைகளுக்கு வழங்கப்பட வேண்டும் என்பதும் குறிப்பிடப்பட்டிருக்கின்றது. 


இதனைவிட, வடக்கு கிழக்கு மாகாணங்கள் இணைக்கப்பட வேண்டும், மாகாணங்களுக்கு பொலிஸ் அதிகாரம் வழங்கப்பட வேண்டும் என்ற யோசனைகளையும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முன்வைத்திருந்தது.

மார்ச் மாதத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினால் பேச்சுவார்த்தைகளுக்காக முன்வைக்கப்பட்ட இந்த யோசனைகளுக்கான பதில் கடந்த வாரத்திலேயே அரசாங்கத்தினால் வழங்கப்பட்டது. அதாவது, இந்த மூன்று யோசனைகளையும் தம்மால் ஏற்றுக்கொள்ள முடியாதிருப்பதாகவும், கூட்டமைப்பின் யோசனைகளுடன் தாம் முரண்படுவதாகவும் அரச தரப்பு தெரிவித்தது. 


இது எதிர்பார்க்கப்பட்ட ஒரு பதில்தான். முரண்பாடுகள் காணப்பட்டபோதிலும், அவை தொடர்பாக அடுத்த சுற்றுக்களின் போது பேசித் தீர்த்துக்கொள்வதற்கு இது தரப்பினரும் இணக்கம் தெரிவித்ததன் அடிப்படையிலேயே நேற்றைய தினம் இந்த விவகாரம் பேச்சுக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இவ்வருட இறுதிக்குள் பேச்சுக்களை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் என்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கோரிக்கை சாத்தியமாகப் போவதில்லை என்பதைத்தான் இணக்கமற்ற நிலையில் சந்திப்புக்கள் ஒத்திவைக்கப்படுவது உணர்த்துகின்றது. 


எதிர்வரும் 19 ஆம் திகதிக்குப் பின்னர் பெரும்பாலும் கிறிஸ்மஸ் புதுவருட விடுமுறைகள் வருவதால் அடுத்த வருடத்திலும் பேச்சுக்கள் தொடரத்தான் போகின்றது. காணி மற்றுமன்றி, மாகாண அலகு, சட்டம் ஒழுங்கு அதிகாரங்கள், நிதி, மற்றும் ஆளுநருக்கு உள்ள அதிகாரங்கள் என்பனவும் பேச்சுவார்த்தைகளில் சிக்கல்களை ஏற்படுத்துவதாகவே இருக்கும். 17 சுறறுக்கள் முடிவடையும் வரை எந்த ஒரு விடயத்திலும் தீர்வற்றநிலை.

ஆக, அடுத்த வருடமும் பேச்சுவார்த்தைகளாகத்தான் இருக்கப்போகின்றது!

Wednesday, December 14, 2011

சர்வதேசத்தின் நலன்சார் போட்டியில் எம் முன்னுள்ள சவால்கள் கடமைகள்

தமிழ்த் தேசத்தினை கருவியாகப் பயன்படுத்தி சர்வதேச நலன்கள் மட்டும் அடையப்பட்டு எமது நலன்கள் புறக்கணிக்கப்படுவதை நாம் ஏற்றுக்கொள்ளக் கூடாது. அதற்காக சர்வதேச தரப்புக்களின் நலன்களுக்கு எதிராகச் செயற்பட வேண்டிய நோக்கமும் எம்மிடம் இருக்கக்கூடாது.

ர்வதேச அரசியலில் இலங்கைத் தீவின் முக்கியத்துவத்தினை கடந்த பத்தியில் விளக்கியிருந்தேன். அப் பத்தியில் தத்தம் நலன் சார் நடவடிக்கைகளை மையப்படுத்தி இயங்குகின்ற நாடுகள், இலங்கைத்தீவின் ஆட்சியினை தமக்குச் சார்பானதாக மாற்றியமைப்பதற்கு ஏற்ற வகையில், பூகோள அரசியலின் போக்கு எவ்வாறு உள்ளது என்பதனையும் சுட்டிக்காட்டியிருந்தேன். 

தமிழ்த் தேசத்தின் சமகால வாய்ப்புகள்; தொடர்பாக இப் பத்திகளின் வாயிலாகத் தெரியப்படுத்தி வருகின்றோம். இந் நிலையில் தமிழ் மக்களுக்கு எந்ளவிற்கு முக்கியத்துவமும், வாய்ப்புக்களும் உள்ளதோ, அதேயளவிற்கு, தமிழ்த் தேசத்திற்கு கிடைக்கின்ற வாய்ப்புக்களையும், முக்கியத்துவத்தினையும், தமிழ்த் தரப்புக்கள் சரியான முறையில் பயன்படுத்தாது விட்டால் ஆபத்துக்களும் உள்ளன. அத்துடன், இன்று, தமிழ் தேசத்திற்கு சார்பாக உருவாகியுள்ள வாய்ப்புக்களையும், முக்கியத்துவத்தினையும், தமிழ் அரசியல் தலைமைகளும், தமிழ் மக்களும் உரிய முறையில் புரிந்து, அதற்கேற்றவகையில் தமது செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும் என்ற நோக்கில் இப்பத்தி எழுதப்படுகிறது.

இந்த வகையில் இலங்கைத் தீவினுள் தத்தம் நலன்சார்ந்த விடயங்களுக்கான நகர்வுகளை நாடுகள் முன்னெடுத்துச் செல்கையில், அவ்வப்போது கிடைக்கின்ற சந்தர்ப்பங்களை சரியாக பயன்படுத்திக் கொள்ளாது அரசுக்கு வெளிப்படையாகவும் மறைமுகமாகவும் ஒத்துழைத்து வாய்ப்புக்களைத் தொலைத்துக்கொண்ட சந்தர்ப்பங்கள் தமிழ்த் தேசத்தினுடைய வரலாற்றில் உண்டு. இவ்வாறாக இழக்கப்பட்ட சந்தர்ப்பங்கள், பின்னர் தமிழ்த் தேசதத்தினை எவ்வாறு நெருக்கடிக்குள்ளாக்கியது என்ற வரலாற்று உதாரணங்களையும் முன்வைத்து இப் பத்தி நகர்கிறது.

பிராந்திய மற்றும் பூகோள ரீதியான அரசியல் காரணங்களை அடிப்படையாக வைத்து, 1980 களில் தமிழ்த் தேசத்தின் போராட்டத்தினை இந்தியா தனது நலன்சார்ந்த நடவடிக்கைகளுக்காக  கையில் எடுத்திருந்தது.  இதனூடாக, இந்தியா, தனது பிராந்தியத்தில் இருக்கின்ற இலங்கைத் தீவில், ஏனைய சக்திகளின் பலம் ஓங்குவதைத் கட்டுப்படுத்த முற்பட்டது. 

அதனடிப்படையில், உருவான இலங்கை - இந்திய ஒப்பந்தத்தின் வாயிலாக, தனது நலன்கள் காப்பாற்றப்பட்ட சூழ்நிலையில், இந்தியா செயற்பட்ட விதம் வெளித்தெரிந்த விடயமாகும். அதாவது, தனது நலனை கருத்தில்கொண்டு தமிழ் தேச விடுதலைப் போராட்டத்திற்கு, ஆயுதமும், பயிற்சியும் வழங்கிய இந்தியா, பின்னர் சிங்கள தேசத்துடன் இணைந்து தமிழ்த் தேசத்திற்கு எதிராக செயற்பட்டமை குறிப்பிடத்தக்கது.

அன்றைய காலப்பகுதியில் செயற்பட்ட தமிழ் அரசியல் தரப்புக்கள், எமது மக்களின் அடிப்படை அரசியல் கொள்கைகள் என்ற விடயத்தில் விட்டுக் கொடுப்புக்கள் இன்றி, நேர்மையாகவும் ஒற்றுமையாகவும் செயற்பட்டிருந்தால், இன்று தமிழ்த் தேசத்தின் இருப்பு அங்கீகரிக்கப்பட்டு, தமிழ் மக்கள் கௌரவமாகவும், பாதுகாப்பாகவும் வாழக்கூடிய சூழல் ஏற்பட்டிருக்கக்கூடும்.

கடந்த காலத்தில் ஏற்பட்டது போன்ற ஆபத்தான சூழ்நிலைகளை இனி வருங்காலத்திலும் தமிழ்த் தேசமானது எதிர்கொள்ளக்கூடாது என்பதற்காகவே, மேற்குறிப்பிட்ட கருத்துக்களை வரலாற்றின் வழி நின்று நான் சுட்டிக்காட்டுகிறேன். இன்று, இலங்கைத் தீவினை மையமாகக் கொண்ட சர்வதேச நலன்சார் போட்டிகள் உச்சம் பெற்றுள்ள நிலையில், அப் போட்டியினுள் தமிழ்த் தேசம் தனக்கு உரித்தான சுயநிர்ணய உரிமையைப் பணயம் வைத்து அல்லது விட்டுக்கொடுத்து விட்டு சகலதையும் இழக்கும் ஆபத்துக்குள் சிக்கிக் கொள்ளக் கூடாது.

கடந்த காலத்தில், இலங்கைத் தீவினை மையப்படுத்திய சர்வதேசத்தின் அரசியல் நலன் சார் போட்டிகளுக்கிடையில், தமிழ்த் தேசத்தின் இருப்பு பாதுகாக்கப்படுவதற்கு தமிழீழ விடுதலைப் புலிகளே காரணமாக இருந்தனர். ஆயினும், தமிழ் மக்களின் நலன்களுக்கு மாறாக, வெளிப்படையாகவும், மறைமுகமாகவும் செயற்பட்ட தமிழ் அரசியல் தலைமைகள் மற்றும் ஆயுதத் குழுக்களினால்,   சர்வதேச நலன்சார் போட்டிகளுக்கு மத்தியில் விடுதலைப் போராட்டம் வெற்றி பெறமுடியவில்லை. இவ்வாறு, கடந்த காலத்தில் செயற்பட்டவர்களது தவறுகளை கருத்தில் கொண்டு, அவ்வாறான தவறுகள் இனியும் ஏற்படாதவாறு, இயலுமான வரை நிதானத்துடன் செயற்பட வேண்டியவர்களாக நாம் இருக்கின்றோம். ஆகவே, இந்த பணியை சரியாக முன்னெடுக்க வேண்டும். இவ் வகையில் சமகால விடயங்களில் மக்கள் தெளிவாகவும் நிதானமாகவும் இருக்கவேண்டும் என்ற கட்டாயத் தேவையுள்ளது.

முன்னைய பத்திகள் வாயிலாக தமிழர் பிரச்சினைகளை முன்வைத்து சர்வதேச நலன்சார் போட்டிகள் நகர்த்தப்படுகின்றன என்பதைக் கூறியிருந்தேன். இவ்வாறாகப் பார்க்கையில் தத்தம் நலன்களின் நோக்கில் முத்தரப்பாக தலையிடுகின்ற நாடுகள், எவ்வாறாக தமிழ்த் தேசத்தின் பிரச்சினைகளை மையப்படுத்தி செயற்படப் போகின்றன என்பது பற்றியும், அத்தகைய தருணத்தில், நாம் எத்தகைய சவால்களை எதிர்கொள்ளும் நிலை ஏற்படும் என்பது பற்றியும் தரப்புகள் வாரியாகப் பார்கப்படவேண்டியுள்ளது.

தற்போது, சிறீலங்கா அரசு, இலங்கைத் தீவில் சீனாவின் நலன்களுக்கு  இடமளிக்கும் வகையிலேயே நடந்து கொள்கின்றது. இதனை, தற்போதைய ஆட்சிப் பீடத்;தோடு உருவான மாற்றமாக நாம் பார்க்க முடியும். ஆகவே தனது நலன்களின் அடிப்படையில் நாடுகள் தலையீட்டை மேற்கொள்கையில், சீனாவுக்கு தமிழ்த் தேசத்தின் பிரச்சினையை ஓர் கருவியாக கையில் எடுக்க வேண்டிய தேவைபாடுகள் குறைவு.

அமெரிக்கா தலைமையிலான மேற்குலகு விரும்பும் ஆட்சி மாற்றத்திற்கு முக்கிய காரணம், சிறீலங்காவின் இன்றைய ஆட்சிபீடம் மேற்குலகின் நிகழ்ச்சி நிரலுக்குள் இல்லை என்பதுவும் அதன் காரணமாக தமது நலன்சார் நிலைமைகள் பேணப்படாது போவதுமேயாகும்.

தமிழ்த் தேசத்தின் மீது, சிங்கள தேசத்தினால்  மேற்கொள்ளப்படும் இன அழிப்பு மற்றும் மனித உரிமை மீறல்களை நோக்குகையில், அது இன்று நேற்று அதாவது சிறீலங்காவின் இன்றைய ஆட்சிபீடத்துடன் ஆரம்பிக்கப்பட்டதொன்றல்ல. அது காலகாலமாக, மாறி மாறி ஆட்சிக்கு வந்த சிங்கள ஆட்சியாளர்களின் ஒர் தொடர்ச்சியான அரச கொள்கையாகவே அமைகின்றது. இவ்வாறாக, படிப்படியாக அரங்கேற்றப்பட்டு வந்த இன அழிப்பு மற்றும் மனித உரிமை மீறல்கள் உச்சக் கட்டத்தினை அடைந்தது, 

சிறீலங்காவின் இன்றைய ஆட்சிக்காலத்திலேயே ஆகும். இவற்றை இக்கட்டுரையில் எடுத்துரைப்பதன் நோக்கம் சிங்களத் தேசத்தில் ஏற்படப்போகும் வெறும் ஆட்சி மாற்றம் மட்டும் தமிழர் தரப்பிற்கு எதனையும் பெற்றுத்தரும் என கற்பனை கொள்ளக் கூடாது என்பதற்காகவே. 

அதேவேளை, அமெரிக்கா தலைமையிலான மேற்குலகு விரும்புவது போன்று சிங்கள தேசத்தில் ஏற்படுத்தப் படக்கூடிய வெறும் ஆட்சிமாற்றம், தமிழ்த்தேசம் பிரச்சினைகளுக்கு ஒருபோதும் தீர்வாகாது.

இலங்கையில் ஆட்சி மாற்றத்திற்காக, சிங்கள தேசத்தினால் தமிழ் தேசத்திற்கு எதிராக இழைக்கப்பட்ட போர்க் குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் போன்ற விடயங்களை மேற்குலகு கையிலெடுத்துக்கொண்டாலும், அது அவர்களின் நலன்களை மையப்படுத்துவதாவே அமைகின்றது. மேற்குலகினால் ஆட்சி மாற்றம் ஒன்று ஏற்படுத்தப்பட்டு, அதன்வாயிலாக மேற்கிற்குச் சார்பான ஓர் ஆட்சி உருவாகியதும், நலன்சார் அடிப்படையில் மேற்குலகின் முன்னுள்ள பிரச்சினைகள் தீர்வுக்குள்ளாகிவிடும். எனவே, மேற்குலகு விரும்புவது போன்ற ஆட்சிமாற்றம் ஏற்படுத்தப்படும் இடத்து, இலங்கைத் தீவில் காணப்படும் தமிழ்த் தேசத்தின் அரசியல் பிரச்சினைகளை கையாளவேண்டிய சூழல்  மேற்குலகிற்கு இல்லாமல் போய்விடக்கூடும்.

இதேவேளை, மேற்குலகினால் ஆட்சிக்குக் கொண்டுவரப்படும் ஆட்சியாளர்களும், தேர்தல், அரசியல் என்று வருகையில் சிங்கள தேசத்தின் வாக்கு வங்கியிலேயே தங்கியிருக்கப்போகின்றார்கள். மேற்குலகினால் புதிதாகக் கொண்டுவரப்படும் ஆட்சியாளர்கள், சிங்கள தேசத்தின் வாக்கு வங்கியில் தங்கியிருக்கையில், அவர்கள் சிங்கள தேசத்தின் விருப்புக்கும், மனநிலைக்கும் மாறாக தமிழ்த் தேசத்துடன் நியாயபூர்வமான தீர்வொன்றுக்குச் செல்ல முடியாத நிலையே யதார்த்தத்தில் நிலவும். எனவே தான் புதிதாக ஆட்சிக்கு வருவோர், சிங்கள பேரினவாதத்தினால் ஆட்சியிலிருந்து தூக்கிவீசப்படாது இருப்பதற்கான உத்தியாக அரசியலமைப்பில் ஏற்கனவே உள்ளடக்கப்பட்டுள்ள எந்தவிதத் தீர்வுமற்ற 13 ஆவது திருத்தச் சட்டத்தினையே (மாகாண சபைகளை) தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினைகளுக்கான தீர்வாக திணிக்க மேற்குலகு முற்படுகிறது.

தமது நலன்களை நோக்காகக் கொண்டு, தமக்கு சார்பான ஆட்சியாளர்கள், தமது நலன் சார் கடமைகளைத் திறம்பட ஆற்றவேண்டும் என்றே மேற்குலகினர் எதிர்பார்ப்பார்களே தவிர, ஆட்சியில் அமரும் புதிய ஆட்சியாளர் தமிழர் விடயத்திற்காக சிக்கல்கல்களைச் சந்திப்பதை விரும்ப மாட்டாகள்;.

இந்த அடிப்படையிலேயே தமிழ்த் தேசத்தின் பிரச்சினைக்கான தீர்வு விடயத்தில், தமக்குச் சார்பான  ஆட்சியாளர்கள் சிக்கல்களை எதிர்கொள்ளா வண்ணம் இருப்பதற்காக, எமது பிரச்சினை விடயத்தில்,  எவ்வித பெறுமதியுமற்ற 13 ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தினைத் ஒரு ஆரம்பப்புள்ளியாக பயன்படுத்த வேண்டும் என்பதை மேற்குலகு வலியுறுத்தி வருகிறது. இதனூடாக, தமிழ்த் தேசத்தினை அமைதிப்படுத்தி, சிங்கள தேசத்தின் அதிருப்தியினை சமாளித்துவிட அது விரும்புகிறது.

யதார்த்தத்தில், மேற்கின் அபிலாசைப்படி இலங்கைத் தீவில் ஒருவர் ஆட்சிக்கு வந்தால் கூட, அவர் தமிழ் மக்களுக்கு எதுவித உரிமைகளையும் கொடுக்க மாட்டார் என்பது திண்ணம். இதனை மீறி, புதிதாக ஆட்சியில் அமருபவர் எதையாவது தமிழ் மக்களுக்கு கொடுக்க முற்பட்டால், அவர் சிங்கள பௌத்த தேசத்தினால் ஆட்சியில் இருந்து  தூக்கிவீசப்படும் நிலையே ஏற்படும். சிங்கள ஆட்சியாளர்களுக்கும் தமிழ்த் தலைவர்களுக்குமிடையில் இனப்பிரச்சினைத் தீர்வை மையப்படுத்தி ஏற்கனவே செய்துகொள்ளப்பட்ட ஒப்பந்தங்கள் மற்றும் உடன்படிக்கைகள் பேரினவாத நெருக்குதல்களால் கிழ்த்தெறியப்பட்ட முன்னுதாரணங்கள் இங்கு நினைவுகூரத்தக்கன.

அரசியல் தீர்வு விடயத்தில் 13 ஆவது அரசியலமைப்புத் திருத்தத்திற்குள் (மாகாண சபைக்குள்) தமிழ்த் தேசம் கட்டுண்டு போகது, எமது தேசத்தின் நலனை நோக்காகக் கொண்டு, நாம் ஒரு தனித் தேசம் எனவும், இறைமை உடையவர்கள் எனவும், சுயநிர்ணய உரிமைக்கு உரித்துடையவர்கள் எனவும், தாயகத்திலும், சர்வதேசரீதியிலும் உறுதியுடன் செயற்பட வேண்டியவர்களாக உள்ளோம். இவ்விடத்தில், இலங்கைத் தீவில் இடம்பெற்றது ஓர் இன அழிப்பு என்பதுடன், அது தற்போதைய ஆட்சிக் காலத்திலேயே உச்சக்கட்டத்தை அடைந்தது என்பதுவும் நாம் அறிந்தது. இதனையே நாம் வெளியுலகிற்கும் வலியுறுத்த வேண்டியுள்ளது.

மேற்குலகின் தற்போதைய உடனடி தேவை ஆட்சிமாற்றம் ஒன்றை ஏற்படுத்துவதாகும். சுருக்கமாகக் கூறுவதாயின் சீன சார்புடைய தற்போதைய ஆட்சியை மாற்றி மேற்கு சார்பு அரசாங்கம் ஒன்றை நிலைகொள்ளச் செய்வது இவர்களது நோக்கமாகும்.  இவ்வாறு, மேற்குலகினால் மேற்கொள்ளப்படும் ஆட்சிமாற்றமானது, சிங்கள தேசத்தவரால் ஏற்றுக்கொள்ளப்பட்டு, நிலைத்திருக்க வேண்டுமாயின், அவ் ஆட்சியானது தமிழர்களுக்கு நியாயமான தீர்வொன்றை வழங்க முடியாது. ஆகவேதான், மேற்குலகம் இப்போதிருந்தே தமிழ் மக்களுக்கான இனப்பிரச்சினைத் தீர்வாக 13 ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தினை அடிப்படையாகக் கொண்ட மாகாணசபைகளையே தீர்வொன்றாக வலியுறுத்த வேண்டும் என விரும்புகின்றது.

கட்டம் கட்டமாக அரசியல் தீர்வொன்றை பெற்றுக்கொள்ளலாம் என்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அணுகுமுறை  இந்த நிகழ்ச்சி நிரலை நிறைவேற்றுவதற்கானதே. இது தமிழ்த் தேசத்தின் இருப்புக்கு முரணனதும், ஆபத்தானதுமாகும் என்பதனை நாம்  தெளிவுபடுத்துகின்றோம். இன்று, தமிழர் தரப்பு தொடர்பில் சர்வதேச சமூகம் பார்வையைச் செலுத்தும்  நிலையில் நாம் இந்தப்பொறிக்குள் வீழ்ந்துவிடாது எமது முழுமையான கோரிக்கைகளை முன்வைத்து பேசவேண்டும் என்பதை வலியுறுத்த விரும்புகின்றோம்.

இலங்கைத் தீவில் சீனாவின் மேலாண்மை அதிகரிக்கக் கூடாது என்பதில் மேற்கைப் போன்றே இந்தியாவும் தீவிர அக்கறை செலுத்துகிறது. அதேவேளை, தன்னை மீறி வேறு எந்தவொரு சக்தியும் இலங்கைத் தீவில் ஆதிக்கம் செலுத்திவிடக்கூடாது என்பதிலும் அது கவனமாகவுள்ளது.

சிறீலங்கா அரசாங்கம் சீனாவின் நிகழ்ச்சி நிரலுக்குள் சென்றுவிடக்கூடாது என்பதைக் காரணங்காட்டி, இந்தியா சர்வதேச அரங்கில் சிறீலங்காவை பாதுகாத்து வருகிறது. அதேவேளை, சிறீலங்கா அரசாங்கத்தை தனது காட்பாட்டிற்குள் வைத்திருப்பதற்கான அழுத்தம் கொடுக்கும் கருவியாக தமிழ்த் தேசத்தின் அரசியலை இந்தியா பயன்படுத்த வேண்டிய தேவையும் முன்னரை விடவும் வளர்ந்து வருகிறது. ஆயினும், அதனை மேற்கொள்வதற்கு சவாலாக தமிழ் மக்களின் இன்றைய மனோநிலையுள்ளது. ஏனெனில், தமிழர்களின் விடுதலைப் போராட்டத்தை தோற்கடித்தில் இந்தியாவின் வகிபாகம் உள்ளது என்ற ஆழமான கருத்துருவாக்கமே அதற்கான காரணமாகும்.

இதனை முறியடிக்க வேண்டும் என்ற காரணத்திற்காக, தமக்குச் சார்பான தமிழ் அரசியல் தலைமைகள் ஊடாக, இந்தியாவே பலம் வாய்ந்த விடுதலைப் புலிகளை அழித்ததுடன், சிறீலங்கா அரசாங்கத்தின் மீதும் செல்வாக்கு செலுத்தக்கூடிய ஒரே சக்தியான நிலையிலுள்ளது என்ற கருத்துருவாக்கத்தை அது உண்டுபண்ண முற்படுகிறது. இதனூடாக, தமிழ் அரசியல் தலைமைகள் இந்தியாவின் நிகழ்ச்சி நிரலுக்கு இணங்கியே செல்ல வேண்டும் என்பதை இந்தியா வலியுறுத்த முயற்சிக்கிறது. இதற்கான உத்தியாக, தமிழர்களை  தோல்வி மனப்பான்மைக்குள் தக்க வைத்து, இந்தியாவின் தயவிலேயே தமிழர்கள் வாழவேண்டும் என்ற கருத்துருவாக்கத்தை மேற்கொள்வதில் இந்தியா குறியாகவுள்ளது.  அத்துடன், 13ஆவது அரசியலமைப்புத் திருத்த சட்டத்தின் அடிப்படையிலான மாகாண சபைகளையே தீர்வாகத் திணிப்பதில் இந்தியாவும், மேற்குலகும்  ஒரே நிலைப்பாட்டிலேயே உள்ளன.

தனியே தமிழ்த் தேசத்தினை ஓர் கருவியாகப் பயன்படுத்தி சர்வதேச நலன்கள் மட்டும் பேணப்பட்டு தமிழ்த் தேசத்தின் நலன்கள் அடையப்படாது புறக்கணிக்கப் படுவதை நாம் ஏற்றுக்கொள்ளக் கூடாது. அதற்காக சர்வதேச தரப்புக்களின் நலன்களுக்கு எதிராகச் செயற்படவேண்டிய நோக்கமும் எம்மிடம் இருக்கக்கூடாது. அதேவேளை சர்வதேசத்தின் நலன்களும் தமிழ் மக்களின் நலன்களும் ஒருங்கே அடையத் தக்க ஒரு புள்ளியில் நாம் இருதரப்பும் சந்திக்கவேண்டும் என்பதே இன்றைய தேவையாகும். சர்வதேச நலன்களும் தமிழர் தரப்பு நலன்களும் ஒரு பொது வேலைத் திட்டத்தில் அடையத் தக்கதான சந்தர்ப்பங்கள் பலவுள்ளன. அதனை அடையாளப்படுத்துவதே தமிழ்த் தலைமைகளது வேலையாகும். ஆகவே இதனை மையமாக வைத்து செயற்பட வேண்டியதே தமிழ் தலைமைகள் முன்னுள்ள இன்றைய சிறந்த இராஜதந்திரமாகவும் அமைகின்றது.

- கஜேந்திரகுமார் பொன்னம்பலம்

Tuesday, December 13, 2011

சரத் பொன்சேகாவின் விவகாரத்தில் இறுகும் அமெரிக்க அணுகுமுறை?

முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா தொடர்பில் அமெரிக்க அரசாங்கம் எடுத்துள்ள அண்மைக்கால அணுகுமுறை மகிந்த ராஜபக்ஷ அரசாங்கத்துக்குப் பெரும் சங்கடமான ஒரு நிலையைக் கொடுத்திருக்கின்றது.

வெள்ளைக்கொடி வழக்கில் பொன்சேகாவுக்கு 3 வருட சிறைத் தண்டனை வழங்கித் தீர்ப்பளிக்கப்பட்ட பின்னரே அமெரிக்கா இது தொடர்பில் தன்னுடைய புதிய நகர்வுகளை மேற்கொண்டிருக்கின்றது.

பொன்சேகா விடுதலை செய்யப்பட வேண்டும் எனவும் இல்லையெனில் அடுத்த வருடம் மார்ச் மாதத்தில் ஜெனிவாவில் நடைபெறவிருக்கும் ஐ.நா.வின் மனித உரிமைகள் பேரவையின் கூட்டத் தொடரில் இலங்கை நெருக்கடிகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் எனவும் அமெரிக்கா மகிந்த அரசுக்கு இராஜதந்திர வழிமுறைகளில் எச்சரிக்கை ஒன்றை விடுத்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மகிந்த ராஜபக்ஷ அரசாங்கத்தின் சிரேஷ்ட அமைச்சா ஒருவரை சந்தித்த கொழும்பிலுள்ள அமெரிக்க தாதுவா அமெரிக்க அரசாங்கத்தின் இந்த அணுகுமுறை தொடாபில் சில சமிஞ்ஞைகளைக் காட்டியதையடுத்து மகிந்த அரசாங்கம் அதாச்சியடைந்திருப்பதாகத் தெரிகின்றது. .

பொன்சேகா
பொன்சேகாவின் விடுதலை தொடர்பாக அமெரிக்காவில் வசித்துவரும் அவரது மகள் அப்சரா பொன்சேகா அமெரிக்க இராஜாங்கத் திணைக்கள் அதிகாரகளைச் சந்தித்து மேற்கொண்ட பரப்புரைகளைத் தொடர்ந்தே இவ்வாறான ஒரு எச்சரிக்கையை அமெரிக்கா விடுத்திருந்ததாக இராஜதந்திர வட்டாரங்கள் கூறுகின்றன.

இதனைத் தொடர்ந்தே ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவிடமிருந்து இது தொடர்பான அறிவித்தல் ஒன்று வெளிவந்தது. பொன்சேகாவின் குடும்பத்தினர் தன்னிடம் கேட்டுக்கொண்டால் தான் பொன்சேகாவுக்கு மன்னிப்பை வழங்கத் தயாராக இருப்பதாகவும், இதற்காக அமெரிக்காவிடமோ அல்லது ஐ.நா.விடமோ குடும்பத்தினர் செல்லத் தேவையில்லை எனவும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச மகிரங்கமாகவே அறிவித்திருந்தார்.

இதேகருத்தை கடந்த வாரம் நீதி அமைச்சர் ஹக்கீம் பாராளுமன்றத்தில் தெரிவித்திருந்தமையும் கவனிக்கத்தக்கது.
பொன்சேகா குடும்பத்துடன்
இந்தநிலையில் இப்போது அமெரிக்காவை மையப்படுத்தி முன்னெடுக்கப்படும் மற்றொரு நடவடிக்கையும் அரசாங்கத்துக்கு அதாச்சியைக் கொடுத்திருக்கின்றது. வெள்ளைமாளிகையின் உத்தியோகபூர்வ இணையத் தளத்தில் ஒன்லைன் பெட்டிசம் ஒன்று இதற்காகப் பெறப்பட்டுவருவதும், இது தொடர்பில் அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் வெளியிட்டுள்ள கருத்துக்களும் கொழும்புக்குப் பெரும் அதிர்சியைக் கொடுத்திருக்கின்றது.

குறிப்பிட்ட ஒன்லைன் பெட்டிசத்தில் 25,000 க்கும் அதிகமான கையொப்பங்கள் பெறப்படுமாயின் பொன்சேகாவின் விவகாரம் தொடர்பாக தம்மால் அழுத்தம் கொடுக்க முடியும் என அமெரிக்க அரசாங்கம் தெரிவித்திருக்கின்றது. தன்னுடைய தந்தையின் விடுதலைக்காகக அப்சரா பொன்சேகா இந்த ஒன்லைன் பெட்டிசத்தை அமெரிக்காவில் ஆரம்பித்திருக்கின்றார்.

இதன்மூலம் அமெரிக்காவின் அழுத்தங்கள் அதிகரிக்கலாம் என்ற நிலையில் அமெரிக்காவை சமாதானப்படுத்துவதற்கான முயற்சிகளில் மகிந்த ராஜபக்ச அரசு இறங்கும் எனத் தெரிகின்றது.