Tuesday, November 19, 2013

விழாக் கோலமும் போர்க் கோலமும்

பொதுநலவாய அமைப்பு நாட்டுத் தலைவர்களின் உச்சி மாநாட்டுக்காக தலைநகர் கொழும்பும், தென்பகுதியும் விழாக்கோலம் பூண்டிருந்த அதேவேளையில் வடபகுதி மக்கள் போர்க் கோலம் பூண்டிருந்தமையைக் காணமுடிந்தது. உலகத் தலைவர்களினதும் ஊடகவியலாளர்களதும் கவனத்தைக் கவரும் வகையில் தென்பகுதி அலங்கரிக்கப்பட்டு கோலாகலமாகக் காணப்பட்டது. ஆனால், போரால் உறவுகளை இழந்தவர்களும், படையினரிடம் தமது நிலங்களைப் பறிகொடுத்த மக்களும் வடபகுதியில் நடத்தியுள்ள போராட்டங்கள் சர்வதேச கவனத்தைப் பெரிதும் ஈர்ந்துள்ளது. குறிப்பாக பிரித்தானிய பிரதமர் டேவிட் கமரூன் யாழ்ப்பாணத்தில் இந்த நிலைமைகளை நேரில் பார்வையிட்டுள்ளதுடன், மக்களை நேரில் சந்தித்து அவர்களுடைய பிரச்சினைகளைக் கேட்டறிந்துகொண்டுள்ளார். வடக்கு நிலைமைகளை மூடிமறைப்பதற்கு மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் தோல்வியடைந்துள்ளன. 

பொதுநலவாய நாடுகளின் உச்சி மாநாட்டை இலங்கையில் நடத்த வேண்டும் என ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அரசாங்கம் எடுத்த முயற்சிகளுக்கு பிரதான காரணமாக இருந்தது சர்வதேச சமூகத்தின் முன்பாக தம்மை ஒரு பொறுப்பு வாய்ந்த அரசாங்கமாகக் காட்டிக்கொள்ள வேண்டும் என்ற அவர்களின் அவாதான். போர்க் குற்றங்கள் பற்றிய நெருக்கடிகள், மனித உரிமை மீறல் பற்றிய பிரச்சினைகள் சர்வதேச அழுத்தங்களை அதிகரித்திருக்கும் நிலையில்தான் இந்த மாநாட்டை அரசாங்கம் நடத்தியது. போர் முடிவுக்கு வந்து நிலைமைகள் வழமைக்குத் திரும்பிவிட்டது என்பதைக் காட்டிக்கொள்ள வேண்டிய ஒரு தேவை அரசாங்கத்துக்கு இருந்தது. அதேவேளையில் பொதுநலவாய தலைமையைப் பெற்றுக்கொள்வதன் மூலம் சர்வதேச அழுத்தங்கள் குறையும் என்ற எதிர்பார்ப்பும் அரசிடம் காணப்பட்டது. அதற்காகத்தான் பாரியளவிலான பணச் செலவில் இந்த மாநாடு நடத்தப்பட்டது. 

பொதுநலவாய உச்சி மாநாடு முடிவடைந்திருக்கும் நிலையில் இதன் தலைமைப் பொறுப்பு இப்போது இலங்கைக்குக் கிடைத்திருக்கின்றது. இதனை ஒரு வரப்பிரசாதமாக மாபெரும் வெற்றியாகக் காட்டிக்கொள்வதுதான் இலங்கை அரசாங்கத்தின் நோக்கம். ஆனால், இது வெறுமனே ஒரு சம்பிரதாயம்தான். உச்சி மாநாட்டை நடத்தும் நாட்டிடம் அடுத்த இரண்டு வருடங்களுக்குத் தலைமைப் பதவி ஒப்படைக்கப்படுவது ஒரு வழமை. ஆனால், உண்மையில் இந்தத் தலைமைப் பதவியைப் பெற்றுக் கொண்டிருப்பதன் மூலம் இலங்கைக்கான பொறுப்பு அதிகரிக்கப் போகின்றது. பல கடப்பாடுகளை நிறைவேற்ற வேண்டிய நிர்ப்பந்தம் அரசாங்கத்துக்கு ஏற்படப்போகின்றது. மனித உரிமை மீறல், ஊடக சுதந்திரம், நல்லாட்சி, சட்டத்தின் ஆட்சி உட்பட பல விடயங்கள் குறித்து சர்வதேசத்தின் கவனம் இலங்கை மீது குவியப்போகின்றது. இது இலங்கைக்கு ஒரு நெருக்கடியாகத்தான் இருக்கும்.

பொதுநலவாய மாநாட்டு அமர்வு உத்தியோகபூர்வமாக வெள்ளிக்கிழமை ஆரம்பமாகிய நிலையில், அதன் சம்பிரதாய நிகழ்வுகளின் காட்சிப் பதிவுகளை பின்தள்ளிவிட்டு வடக்கில் இடம்பெற்ற மக்கள் போராட்டங்களில் அனைத்துலக ஊடகங்களும் தமது கவனத்தைக் குவித்தன. பிரித்தானிய பிரதமர் டேவிட் கமரூனும் நண்பகலுடனேயே உச்சி மாநாட்டு மண்டபத்திலிருந்து புறப்பட்டு யாழ்ப்பாணம் சென்ற போது பெருமளவிலான ஊடகவியலாளர் குழு ஒன்றும் அவருடன் சென்றது. உச்சி மாநாட்டு நிகழ்வுகளுடன் மட்டும் ஊடகவியலாளர்களின் செயற்பாடுகளைக் கட்டுப்படுத்திவைப்பதற்கு அரசாங்கம் மேற்கொண்ட முயற்சிகள் தோல்வியடைந்தன. வடக்கின் உண்மை நிலை என்ன என்பதை சர்வதேச ஊடகவியலாளர்கள் நேரில் பார்ப்பதை அரசாங்கத்தினால் தடுக்க முடியாமல் போய்விட்டது. இலங்கையில் காணப்படும் இரு வேறு உள்ளக சூழலை சர்வதேசம் இப்போது நேரடியாகப் பார்த்திருக்கின்றது. 

போர் முடிவுக்கு வந்திருந்தாலும், பொறுப்புக் கூறல் இடம்பெறவில்லை என்பதையும், நாட்டில் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதில் ஒரு அங்குலம் கூட முன்னேற்றம் இடம்பெறவில்லை என்பதையும் வடக்கில் இடம்பெற்ற மக்களி போராட்டங்கள் உணர்த்தியுள்ளன. பொறுப்புக் கூறல் நடைபெறாமல் நல்லிணக்கம் சாத்தியமில்லை என்பதுதான் தமிழர் தரப்பின் வாதமாகவுள்ளது. போரின்போது இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள், மனிதாபிமானமற்ற செயற்பாடுகள் குறித்து வெளியாகும் ஆதாரங்களை உடனடியாக நிராகரிப்பதைவிட அரசாங்கம் எதனையும் செய்யவில்லை. இவை தொடர்பில் சர்வதேச விசாரணை ஒன்றுக்கு அரசாங்கம் தயாராகவில்லை. அதேவேளையில், வடக்கில் பொதுமக்களின் காணிகள் ஆக்கிரமிக்கப்பட்டு இராணுவ மயமாக்கல் இடம்பெற்றிருப்பதையும், காணாமல் போனவர்கள் குறித்த பொறுப்புக் கூறல் இடம்பெறவில்லை என்பதையும் வடக்கில் வெடித்த மக்கள் போராட்டங்கள் உணர்த்தியுள்ளன.

நாட்டின் எந்தப் பகுதிக்கும் சென்று வரலாம். நிலைமைகளை நேரில் வந்து பாருங்கள் என சர்வதேசத் தலைவர்களுக்கும் ஊடகவியலாளர்களுக்கும் அழைப்பு விடுத்த அரசாங்கம், அதற்கான பாதுகாப்பை வழங்கவில்லை. சனல் -4 ஊடகவியலாளர்கள் வடக்கு நோக்கிச் சென்றபோது அனுராதபுரத்தில் தடுக்கப்பட்டனர். ஊடகவியலாளர்கள் சென்ற ரயிலைத் தடுத்தவர்களைக் கலைப்பதற்கு பொலிஸார் எந்த நடவடிக்கையையும் மேற்கொள்ளவில்லை. பதிலாக சனல் 4 ஊடகவியலாளர்களை திரும்பிச் செல்லுமாறு பொலிஸார் வலியுறுத்தினார்கள். ஆக, வடக்கே சுதந்திரமாக சென்று செய்தி சேகரிப்பதற்கான சூழ்நிலை இருக்கவில்லை. அரசாங்கமும் அதனை விரும்பவில்லை. பிரித்தானியப் பிரதமருடன் சென்றதால்தான் பெருமளவு வெளிநாட்டு ஊடகவியலாளர்களால் யாழ். மண்ணில் கால் பதிக்க முடிந்தது. உண்மை நிலைமைகளை சர்வசேத்தின் கவனத்துக்குக் கொண்டுவர முடிந்தது.

பொதுநலவாய மாநாட்டை வெற்றிகரமாக நடத்திவிட்டோம் தலைமைப் பதவியை வசப்படுத்திவிட்டோம் என அரசாங்கம் இறுமாப்பில் இருந்துவிட முடியாது என்பதைத்தான் இந்தச் சம்பவங்கள் உணர்த்ததுகின்றன. பொறுப்புக் கூறல் முக்கியமானது. போரின் போது யாருமே காணாமல் போகவில்லை என சர்வதேசத்தின் முன்பாக அரசாங்கம் தொடர்ந்தும் சொல்லிக்கொண்டிருக்க முடியாது. யாழ்ப்பாணத்தை கண்ணீர்க் குளமாக்கிய தாய்மார்களின் துன்பம் பொய்யானது அல்லது போலியானது என அரசாங்கம் கூறிவிட முடியாது. மக்கள் இன்னும் அகதிகளாக முகாம்களில் இருக்கும் நிலையில் உயர் பாதுகாப்பு வலயம் என ஒன்று இல்லை. மக்களை முழுமையாக மீளக்குயேற்றிவிட்டோம் என அரசாங்கம் சொல்வதை இனியும் உலகம் நம்பாது. பிரித்தானிய பிரதமரே நிலைமைளை நேரில் பார்த்துள்ளார். பொதுநலவாயத்தின் தலைமைப் பொறுப்பை ஏற்றுக்கொண்டுள்ள இலங்கைக்கான கடப்பாடுகள் இப்போது அதிகரித்துள்ளன.

(ஞாயிறு தினக்குரல் 2012-11-17: ஆசிரியர் தலையங்கம்)


Saturday, November 16, 2013

மன்மோகன் சிங்கின் 'வருகை' (?)

இலங்கையில் இன்னும் சில தினங்களில் ஆரம்பமாகவுள்ள பொதுநலவாய நாடுகளின் உச்சி மாநாட்டில் தான் கலந்துகொள்வது இந்தளவுக்கு சர்ச்சைக்குள்ளாகும் என்பதை இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் சற்றும் எதிர்பார்த்திருக்கமாட்டார். மன்மோகன் சிங் வருவாரா என்பதையிட்டு உத்தியோகபூர்வமாக இந்திய அரசு இதுவரையில் அறிவிக்காத போதிலும், அவரது வருகை சாத்தியமாகாது என்பதைத்தான் நேற்றுக்காலை வெளியான இந்தியப் பத்திரிகைகள் அனைத்தும் செய்தியாக வெளியிட்டிருந்தன. இந்திய வெளிவிவகாரக் கொள்கை வகுப்பாளர்களுக்கும் தமிழகத்தின் உணர்வுகளைப் பிரதிபலிக்கும் காங்கிரஸ் கட்சிப் பிரகர்களுக்கும் இடையிலான ஒரு பலப்பரீட்சையாகவே இந்த விவகாரம் காணப்பட்டது. இலங்கை விவகாரத்தை எவ்வாறு கையாள்வது என்பதில் இந்தியத் தரப்பில் காணப்பட்ட தடுமாற்றங்களின் உச்ச கட்டமாகவே இந்தப் பிரச்சினையைப் பார்க்கவேண்டியுள்ளது.

சர்வதேச சமூகத்தின் மத்தியில் இலங்கையை ஒரு பொறுப்புள்ள நாடாகக் காட்டிக் கொள்ளுவதற்காகவே இந்த மாநாட்டை நடத்தும் பொறுப்பை இலங்கை எடுத்தது. மன்மோகன் சிங்கின் வருகையை இலங்கை அரசாங்கம் முக்கியமாகப் பார்த்தமைக்குப் பல காரணங்கள் உள்ளன. இலங்கை குறித்த இந்தியாவின் அணுகுமுறை சர்வதேச ரீதியில் பாதிப்பை ஏற்படுத்தக்கூடியது. குறிப்பாக இதனை ஒரு முன்னுதாரணமாக மற்றைய நாடுகளும் எடுத்துக்கொள்ளக்கூடிய ஆபத்துள்ளது. இதனை  கொழும்பு தெளிவாக உணர்ந்தேயுள்ளது. தெற்காசியப் பிராந்தியத்தில் இந்தியாவின் மேலாதிக்க நிலையை பெரும்பாலான மேற்கு நாடுகள் ஏற்றுக்கொள்கின்றன. இலங்கை தொடர்பான தமது அணுகுமுறையை வரையறுப்பதற்கு முன்னதாக இந்தியாவின் கருத்தை அறிவதற்கு அமெரிக்கா மட்டுமன்றி ஐரோப்பிய நாடுகளும் முற்படுவதைக் கடந்த காலங்களில் நாம் கண்டிருக்கின்றோம். இலங்கை விவகாரத்தில் மத்தியஸ்த்த முயற்சிகளை மேற்கொண்ட நோர்வே கூட தமது ஒவ்வொரு நகர்வுகளுக்கு முன்பாகவும் டில்லியின் கருத்துகளுக்கு முக்கியத்துவம் கொடுத்திருந்தது கவனிக்கத்தக்கது.

இலங்கை மீது அழுத்தங்களைப் பிரயோகிப்பதற்கு இந்தியாவுக்குள்ள ஒரேயொரு பிடி இதுதான். இந்த துரும்புச் சீட்டை நன்கு பயன்படுத்திக்கொள்ள வேண்டும் எனச் சிந்தித்துத்தான் இந்தியக் கொள்கை வகுப்பாளர்களும் காய்நகர்த்தினார்கள். அதில் அவர்கள் வெற்றிபெற்றிருப்பதாகவே கருதுகின்றார்கள். இந்தியாவின் வேளிவிவகாரக் கொள்கையைத் தீர்மானிப்பது இந்தியாவின் வெளியுறவுத்துறை மற்றும் இந்திய உள்ளக வெளியக புலனாய்வு அமைப்புக்களே. இதனை தமது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பவர்கள் பார்ப்பனீய கருத்தியலைக் கொண்டவர்கள் என்ற குற்றச்சாட்டு நீண்ட காலமாகவே உள்ளது. அது இயல்பாகவே தமிழர்களுக்கு எதிரானது என்பதும் வெளிப்படை. ஆளும் காங்கிரஸ் அரசு அதற்கு இசைவாக இருந்தபடியால் அண்மைக்காலம் வரை அது ஒரு பிரச்சினையாக இருக்கவில்லை. ஆனால், கடந்த பொதுத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி தமிழகத்தில் கற்றுக்கொண்ட பாடங்கள்தான் தற்போதைய நெருக்கடிக்குக் காரணம்.

இலங்கை அரசுக்கு எதிரான தமிழகப் போராட்டங்கள் உச்சம் பெற கூட்டணிக்காக ஒட்டியும் ஒட்டாமலும் இருக்கும் தி.மு.க. தலைவர் மு.கருணாநிதி போன்றவர்கள் தேர்தலை மையமாக வைத்து காய்களை நகர்த்த, காங்கிரஸ் சிந்திக்கத் தலைப்பட்டது. மன்மோகன் சிங் இலங்கை சென்றால் அதற்கான விளைவுகளை காங்கிரஸ்தான் அனுபவிக்க வேண்டியிருக்கும் என கருணாநிதி விடுத்த எச்சரிக்கை நிச்சயமாக அடுத்த வருடத்தில் நடைபெறப்போகும் பொதுத் தேர்தலை அடிப்படையாகக் கொண்டதுதான். கடந்த பொதுத் தேர்தலில் தமிழகத்தில் காங்கிரஸ் கூட்டணி சந்தித்த பாரிய தோல்விக்கு இலங்கைப் பிரச்சினை தொடர்பாக இந்திய அரசின் அணுகுமுறைதான் காரணம். இதனைத் தெளிவாக உணர்ந்துகொண்டுள்ள நிலையில்தான் தமிழக காங்கிரஸ் பிரமுகர்கள் கட்சித் தலைமைக்கு கடுமையான அழுத்தத்தைக் கொடுக்கத் தொடங்கினார்கள். குறிப்பாக அமைச்சர்கள் ப.சிதம்பரம், ஏ.கே.அந்தோனி, ஜி.கே.வாசன் போன்ற பலம்வாய்ந்தவர்கள் களத்தில் இறங்கியிருப்பது இந்திய வெளிவிவகார அமைச்சின் முடிவை கேள்விக்குள்ளாக்கியிருக்கின்றது.

இந்தியாவின் வெளிவிவகாரக் கொள்கை வகுப்பில் நேரடியாகச் சம்பந்தப்பட்ட சவுத் புளொக் 'அதிகாரிகள்' மன்மோகன்சிங் இந்த மாநாட்டில் பங்குகொள்ள வேண்டும் என்பதில் தீவிர அக்கறையைக் கொண்டிருந்தார்கள். "மன்மோகன்சிங் மாநாட்டில் கலந்து கொள்ளாவிட்டால் அது அனைத்துலக அளவில் குறிப்பாக பொதுநலவாய நாடுகளிடையே இந்தியாவின் நிலையை பாதிக்கும்’’ என்றும் இந்திய வெளிவிவகார அமைச்சர் சல்மான் குர்ஷித் உள்ளிட்ட சிலர் குரல் எழுப்பியிருந்தனர். "இந்தியாவுக்கு இலங்கை கொடுத்த வாக்குறுதிகளை ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ஷ நிறைவேற்றிருக்கின்றார். அதனால், மன்மோகன் சிங் இலங்கை செல்ல வேண்டும். இல்லையெனில் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை அது பாதிக்கும். சீனாவின் பக்கம் இலங்கை மேலும் செல்வதற்கு அது காரணமாகிவிடும்" என இந்தியக் கொள்கை வகுப்பாளர்கள் அடித்துக்கூறுவதைக் கேட்கும் நிலையில் காங்கிரஸ் தலைமை இருக்கவில்லை.

இலங்கை அரசாங்கம் நிறைவேற்றிய வாக்குறுதிகளாக இந்தியக் கொள்கை வகுப்பாளர்கள் கருதுவது வடக்கில் தேர்தலை நடத்தியதை மட்டும்தான். வடக்கு மாகாண சபைத் தேர்தலை நடத்தியமைக்கு இந்தியாவின் அழுத்தம் காரணமாக இருந்துள்ளது என்பது உண்மைதான். இப்போது வடக்கில் தேர்தலை நடத்தி மாகாண அரசாங்கம் ஒன்றும்  உருவாக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பிரச்சினைகளையே தீர்த்துவைத்துவிட்டது போலக் காட்டிக்கொள்ள இலங்கை அரசாங்கம் முற்படுகின்றது. ஆனால், இந்த மாகாண சபை வடக்கில் உள்ள ஒரு கல்லை நகர்த்துவதற்கான அதிகாரத்தைக்கூட கொண்டதாக இல்லை. மாகாண முதலமைச்சராக ஆளுநராக அதிக அதிகாரத்தைக் கொண்டவர் என்பதில் ஒரு கயிறிழுப்பு இடம்பெறுகின்றது. பொதுநலவாய மாநாடு முடிவடைந்த பின்னர் இந்த முரண்பாடுகள் தீவிரமடையலாம். இந்த நிலைமைகள் இந்தியாவுக்குத் தெரியாதவையல்ல.

டில்லியைப் பொறுத்தவரையில் தமிழகத்தின் உணர்ச்சிக் கொந்தளிப்பை தமது கேந்திர நலன்களுக்காகப் பயன்படுத்திக்கொள்வதைத்தான் அது தனது வெளியுறவுக்கொள்கையாகக் கொண்டிருந்தது. இந்திரா காந்தியின் காலத்திலிருந்து இந்த நிலைமை காணப்பட்டது. காங்கிரஸ் கட்சியின் தேர்தல் நலன்கள் இதனுடன் முரண்படாத நிலையில் இவ்வளவு காலமும் இது பிரச்சினையாகவில்லை. இப்போது தமிழக காங்கிரஸ் கட்சியும் தமிழ்த் தேசியத்துக்கு முரணாகப் போகமுடியாதளவுக்கு ஒரு எழிச்சி தமிழகத்தில் உருவாகியுள்ளது. மன்மோகன் சிங்கின் வருகை கேள்விக்குறியாகியிருப்பது இதனால்தான். இந்தியக் கொள்கை வகுப்பாளர்கள் தமிழர்களின் நலன்களைப் பாதுகாப்பதாகக் கூறிக்கொண்டு தமது கேந்திர நலன்களில் மட்டும் அக்கறை கொண்டு செயற்பட்டமைதான் இந்தக் குழப்பங்களுக்குக் காரணம். இலங்கை தொடர்பில் ஒரு தெளிவான உறுதியான கொள்கையை இந்தியா வகுத்துக்கொள்ள வேண்டும் என்பதைத்தான் இந்தக் குழப்பங்கள் உணர்த்துகின்றன.
ஞாயிறு தினக்குரல் 2012-011-10 ஆசிரியர் தலையங்கம்

Friday, November 1, 2013

பொலிஸ் அதிகாரம் யாரிடம்? கோதா சொல்வது சாத்தியமா?

- சபரி -

பொலிஸை கட்டுப்படுத்தும் அதிகாரம் மாகாண சபைகளுக்கு உரியதா அல்லது மத்திய அரசுக்குள்ளதா?

வடமாகாண சபை உருவாகியிருக்கும் நிலையில் அதிகளவில் கேட்கப்படும் ஒரு கேள்வியாக இது உள்ளது. சர்ச்சைக்குரிய இந்தக் கேள்விக்கு பதிலைக் கூறுவதற்கு பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோதாபாய ராஜபக்ஷ முற்பட்டிருக்கின்றார். இரு பக்கத்தையும் சமாளிக்க அவர் முற்பட்டிருப்பது தெரிகின்றது. ஆனால், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் இதனை ஏற்றுக்கொள்ளத் தயாராக இருப்பதாகத் தெரியவில்லை.

கோதாபாய பாதுகாப்பு செயலாளராக இருந்தாலும், உண்மையில் ஒரு பாதுகாப்பு அமைச்சர் போன்றுதான் அவர் செயற்படுகின்றார். ஜெயவர்த்தன ஜனாதிபதியாக இருந்த போது தேசிய பாதுகாப்பு அமைச்சராக இருந்த லலித் அத்துலத்முதலிதான் போரை நடத்தினார். ரணசிங்க பிரேமதாச ஜனாதிபதியாக இருந்தபோது பிரதிப் பாதுகாப்பு அமைச்சராக இருந்த ரஞ்சன் விஜயரட்ணதான் போரை நடத்தினார். சந்திரிகா குமாரதுங்க ஜனாதிபதியாக இருந்தபோது அனுருத்த ரத்வத்தைதான் பிரதிப் பாதுகாப்பு அமைச்சராக இருந்து போரை நடத்தினார்.

ஆனால், தற்போதைய பாதுகாப்புச் செயலாளரின் கடமைகளில் யாரும் தலையிடக் கூடாது என்பதற்காகத்தான் பிரதிப் பாதுகாப்பு அமைச்சர் ஒருவரை நியமிப்பதை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தவிர்த்துக்கொண்டார். அதனால், ஒரு அதிகாரியாக இருந்தாலும் சக்திவாய்ந்த ஒரு அமைச்சர் போல கோதாபாய ராஜபக்ஷவினால் செயற்பட முடிகின்றது. ஒரு அமைச்சின் செயலாளர் என்பதைவிட நாட்டின் தலைவிதியைத் தீர்மானிக்கக்கூடிய ஒருவர் என்ற வகையிலேயே அவரது கருத்துக்கள் இன்று முக்கியத்துவம் பெறுகின்றன.

கொழும்பிலுள்ள தமிழ்ப் பத்திரிகைகளின் பிரதம ஆசிரியர்களை புதன் கிழமை கொழும்பிலுள்ள பாதுகாப்பு அமைச்சின் தலைமையகத்தில் சந்தித்துப் பேசிய போதே பொலிஸ் மற்றும் சட்டம், ஒழுங்கு அதிகாரங்கள் தொடர்பான கருத்துக்கள் பரிமாறப்பட்டன. வடபகுதியில் குற்றச்செயல்கள் அதிகரித்து வருவது தொடர்பில் பத்திரிகை ஆசிரியர் ஒருவர் கேள்வி எழுப்பினார். இதற்குப் பதிலளித்த கோதாபாய, 3 விடயங்களைக் குறிப்பிட்டார்.

1. வடபகுதியில் இருந்த இராணுவம் பெருமளவுக்குக் குறைக்கப்பட்டுள்ளது. இராணுவச் சோதனைச் சாவடிகள் நீக்கப்பட்டுள்ளன. இதனால் குற்றவாளிகள் இலகுவாக நடமாட முடிகின்றது.

2. வடபகுதியில் சட்டத்தையும் ஒழுங்கையும் பாதுகாக்கும் பொறுப்பு மாகாண முதலமைச்சரிடமே உள்ளது. அவர்தான் அதனைப் பார்த்துக்கொள்ள வேண்டும். இப்போது சட்டம் ஒழுங்கு விடயத்தில் இராணுவத்தின் தலையீடு இல்லை. பொலிஸார்தான் இதனைப் பார்த்துக்கொள்கின்றார்கள்.

3. இவ்வாறான குற்றச்செயல்களைத் தடுப்பதற்கு மக்கள் வழிப்புக் குழுக்கள் போன்றவற்றை அமைத்து கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும்.

~~வடபகுதியில் சட்டத்தையும் ஒழுங்கையும் பாதுகாக்கும் பொறுப்பு மாகாண முதலமைச்சரிடமே உள்ளது. அவர்தான் அதனைப் பார்த்துக்கொள்ள வேண்டும்|| என பாதுகாப்புச் செயலாளரே தெரிவித்ததுதான் பத்திரிகை ஆசிரியர்களுக்குப் பெரிதும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ முன்பாக தனக்குரிய அமைச்சுப் பொறுப்புக்களுக்காக முதலமைச்சர் விக்னேஸ்வரன் பதவிப் பிரமாணம் செய்தபோது ஒரு விடயம் முக்கியமாக அவதானிக்கப்பட்டது. அவர் பொறுப்பேற்ற அமைச்சுக்களில் பிரதானமானதாக சட்டம் - ஒழுங்கு என்பதும் காணப்பட்டது.

அரசியலமைப்புக்கான 13 ஆவது திருத்தம் நீக்கப்பட வேண்டும் அல்லது மாகாண சபைகளுக்கான அதிகாரங்கள் குறைக்கப்பட வேண்டும் என முதன் முதலாக குரல் கொடுத்து அதற்கான முயற்சிகளை ஆரம்பித்து வைத்தவர் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோதாபாயதான். குறிப்பாக மாகாண சபைகளுக்கான காணி, கட்டம் ஒழுங்கு அதிகாரங்களுக்கு எதிரான போரை ஆரம்பித்து வைத்தவர் கோதாதான்! இது தனியான ஒரு அரசை அமைப்பதற்கான வழியை ஏற்படுத்தும் என அவர் எச்சரித்திருந்தார்.

வடமாகாண சபைத் தேர்தலுக்கு முன்னதாக இதற்கான சட்டமூலம் ஒன்றைப் பாராளுமன்றத்துக்குக் கொண்டுவருவதற்கு அரசாங்கம் திட்டமிட்டிருந்த போதிலும், உள்ளிருந்தும் சர்வதேச ரீதியாகவும் உருவாகிய எதிர்ப்புக்களையடுத்து அந்தத் திட்டத்தை அரசாங்கம் கைவிட்டிருந்தது. ஆனால், இந்தப் பிரச்சினையை முதலில் கிளப்பிய கோதாபாய ராஜபக்ஷவே இப்போது, ~~வடபகுதியில் சட்டத்தையும் ஒழுங்கையும் பாதுகாக்கும் பொறுப்பு மாகாண முதலமைச்சரிடமே உள்ளது. அவர்தான் அதனைப் பார்த்துக்கொள்ள வேண்டும்" எனக்கூறியிருப்பது ஒரு திருப்பம் போல தெரியலாம்.

இது குறித்து அவர் தெரிவித்தபோது பத்திரிகை ஆசிரியர்கள் இரண்டு கேள்விகளை எழுப்பினார்கள்.

1. அப்படியானால் பொலிஸ் அதிகாரம் மாகாண சபைகளிடம் உள்ளதா?

2. பொலிஸாருக்கு உத்தரவிடும் அதிகாரம் மாகாண முதலமைச்சருக்கு உள்ளதா?

இவைதான் அந்த இரண்டு கேள்விகளும்.

இதற்குப் பதிலளித்த கோதாபாய கொடுத்த விளக்கம் சமாளிக்கும் வகையில் இருந்ததே தவிர, சட்ட ரீதியானதாக இருக்கவில்லை.

“பொலிஸ் அதிகாரம் மத்திய அரசிடம்தான் இருக்கும். மாகாண முதலமைச்சர் பொலிஸாருக்குக்கு உத்தரவிட முடியாது. ஆனால், மாகாண சபை பொலிஸ_டன் இணைந்து செயற்பட முடியும்.  உதாரணமாக மத்திய அமைச்சர்களிடம் பொலிஸாருக்கு உத்தரவிடுவதற்கான அதிகாரம் இல்லாவிட்டாலும், பிரச்சினைகள் வரும் போது பொலிஸாருடன் இணைந்து செயற்பட முடியும். அதேபோலத்தான் முலமைச்சரும் பொலிஸாருடன் இணைந்து செயற்பட முடியும்” என கோதாபாய விளக்கமளித்தார்.

அரசியலமைப்புக்கான 13 ஆவது திருத்தத்தின் மூலம் மாகாண சபைகளுக்கு காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ள போதிலும்,  அவை மத்திய அரசாங்கத்தினால் முடக்கப்பட்டவையாகவே உள்ளன. இதுவரையில் இருந்த மாகாண சபைகள் எதுவுமே அதிகாரப் பரவலாக்கலைக் கேட்காத - அதற்காகப் போராட மாகாண சபைகளாக இருந்தமையால் இது ஒரு பிரச்சினையாக இருக்கவில்லை. ஆனால், வடக்கு அதிகாரங்களைக் கோரும் ஒரு மாகாண சபை. குறிப்பாக காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்களுக்கான கோரிக்கையை முன்வைப்பதுடன், அதற்காக போராடும் ஒரு மாகாணமாகவும் இருக்கப்போகின்றது என்பதுதான் அரசுக்கு இப்போதுள்ள பிரச்சினை!

வடக்கின் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் இதனைத் தெளிவாகவே சொல்லிவிட்டார். மாகாண சபைகளுக்குரிய சட்டரீதியான அதிகாரங்களைப் பெறுவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என்பதை அவர் உறுதியாகக் கூறியிருக்கின்றார். அதேவேளையில், அரசியலமைப்பிலுள்ள அதிகாரப் பரவலாக்கலை முழுமையாக வழங்குவதற்கான செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என்பதை இந்தியாவும் வலியுறுத்தியிருக்கின்றது. இந்தப் பின்னணியில்தான் வடக்கின் சட்டம் ஒழுங்கு விவகாரத்தை கையாள வேண்டியவர் முதலமைச்சர் விக்னேஸ்வரனே என கோதாபாய ராஜபக்ஷ கூறியிருக்கின்றார். கோதாபாயவின் இந்தக் கருத்து ஒருவகையில், இந்தியாவையும் சர்வதேசத்தையும் திருப்திப்படுத்த கூறப்பட்ட கருத்தாக அமைந்திருக்கலாம். அவர்களுடைய அழுத்தங்கள் அதன் பின்னணியில் இருந்திருக்கலாம்.

ஆனால், பொலிஸ் அதிகாரத்தை மத்திய அரசாங்கம் தன்னுடைய கைகளில் வைத்துள்ள நிலையில் சட்டம் ஒழுங்கை முதலமைச்சர் பயன்படுத்திக்கொள்வது எவ்வாறு? கோதாவின் கூற்று எந்தளவுக்குச் சாத்தியமாகும் என்ற கேள்வி இங்கு எழுப்பப்படுகின்றது.

இதனைவிட, மாகாண அரசின் அதிகாரங்களில் மத்திய அரசு தலையிடுவதற்கு எதிரான அர்த்தமுள்ள கட்டுப்பாடுகள் எதுவும் 13 ஆவது திருத்தத்தில் இல்லை. பகிர்ந்தளிக்கப்பட்ட அதிகாரங்களில் மத்திய அரசு நினைத்தபடி தலையிடுவதும், கைவைப்பதும் சாத்தியம் என்பதை கடந்த காலங்களில் பல்வேறு சம்பவங்கள் உறுதிப்படுத்தியுள்ளன. ஓற்றையாட்சி முறையின் பலவீனத்தைத்தான் இது பெருமளவுக்குப் புலப்படுத்துவதாக அமைந்திருக்கின்றது.

இந்தப் பின்னணியில் வடக்கில் சட்டம் ஒழுங்குப் பிரச்சினைகளுக்கு முதலமைச்சர் விக்னேஸ்வரன்தான் பொறுப்பு என கோதாபாய ராஜபக்ஷ சொல்வாராயின்  அது எந்தளவுக்கு உண்மையானதாக இருக்கும்?

வடமாகாண சபையின் முதலாவது அமர்வில் கொள்ளை விளக்க உரையை நிகழ்த்திய விக்னேஸ்வரன் தெரிவித்த கருத்துக்கள் அதிகாரத்துக்கான போட்டி இனித்தான் ஆரம்பமாகப் போகின்றது என்பதைக் காட்டியிருக்கின்றது.  வடமாகாண சபை கோரும் அதிகாரங்களை வெறும் வார்த்தைகளால் வழங்கிவிட முடியாது. எழுத்து மூலமாக சட்டரீதியாக இந்த அதிகாரங்கள் வழங்கப்பட வேண்டும்.

(ஞாயிறு தினக்குரல்: 2013-10-27)

கொழும்பு மாநாடும் இந்தியாவும்

கொழும்பில் அடுத்த மாதம் நடைபெறவிருக்கும் பொதுநலவாய நாடுகளின் உச்சி மாநாட்டில் இந்தியா எந்த வகையிலும் கலந்துகொள்ளக் கூடாது என்ற தீர்மானத்தை தமிழக சட்டப்பேரவை எடுத்துள்ளதையடுத்து அனைவரது கவனமும் இப்போது புதுடில்லியின் பக்கம் திரும்பியுள்ளது. தமிழக சட்டப் பேரவையில் இதற்கான தீர்மானத்தை தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா கொண்டுவந்தார். பிரதான எதிர்க்கட்சிகளான தி.மு.க. மற்றும் காங்கிரஸ் என்பவற்றின் ஆதரவுடன் ஏகமனதாக இதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்கின்றது. தீர்மானத்துக்கு எதிராக எந்தவொரு பிரதான கட்சியும் வாக்களிக்க முன்வரவில்லை. தமிழகத்தில் காணப்படும் உணர்வுகளை மீறிச் செயற்படுவதற்கு எந்தவொரு கட்சியும் தயாராகவில்லை என்பதை இது வெளிப்படுத்தியிருக்கின்றது. இந்த நிலையில் கொழும்பு மாநாடு தொடர்பிலான தமது நிலைப்பாடு என்ன என்பதை இந்திய மத்திய அரசு இன்னும் திட்டவட்டமாக வெளிப்படுத்தவில்லை. அதனால்தான் அனைத்துத் தரப்பினரது கவனமும் டில்லியின் பக்கம் திரும்பியிருக்கின்றது.

புதுடில்லியைப் பொறுத்தவரையில், இவ்விடயத்தில் எவ்வாறான தீர்மானத்தை எடுப்பது என்பதில் குழப்பமடைந்திருக்கின்றது. தமது நிலைப்பாட்டை அறிவிப்பதை தொடர்ந்தும் டில்லி ஒத்திவைத்துக்கொண்டுவருவது அதனால்தான். இந்தியப் பொதுத் தேர்தல் அடுத்த வருடத்தில் நடைபெறவிருப்பதால் தமிழகத்தின் பொங்கியெழுந்திருக்கும் உணர்வுகளை மீறிச் செயற்படுவதற்கு டில்லியால் முடியாதிருக்கும். மறுபக்கத்தில் கொழும்புக்கு எதிராகச் செயற்படுவதும் இந்திய நலன்களைப் பாதிப்பதாக அமையலாம். குறிப்பாக கொழும்புடனான உறவுகளை அது பாதிக்கும். இந்தியாவுக்கு எதிரான சக்திகளுடன் தமது உறவுகளை வலுப்படுத்திக்கொள்வதற்கு இலங்கையை அது தள்ளலாம். இலங்கை குறித்த இந்தியாவின் அண்மைக்கால அணுகுமுறை தமிழகத்தை ஏதோ வகையில் சமாளித்துக்கொண்டு கொழும்பைப் பாதுகாப்பதாகவே அமைந்திருந்தது. ஆனால், இந்தியப் பொதுத் தேர்தல் அடுத்த வருடத்தில் நடைபெறவிருப்பதால் இவ்விடயத்தில் நிதானமாக காய்களை நகர்த்துவதற்கே டில்லி விரும்புகின்றது.

புதுடில்லியின் இந்த இரண்டக நிலையைப் புரிந்துகொண்டுள்ள இலங்கை அரசாங்கமும் அச்சுறுத்தும் வகையிலான சில கருத்துக்களை வெளியிட்டிருக்கின்றது. பொதுநலவாய மாநாட்டைப் பகிஷ்கரித்தால் இந்தியா தனிமைப்படுத்தப்பட்டுவிடும் என வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் கருத்து வெளியிட்டிருக்கின்றார். மநாட்டை பகிஷ்கரிக்கும் கனடாவுக்கும் இதேபோன்ற ஒரு எச்சரிக்கையை கொழும்பு விடுத்திருந்தது. சிங்கள தேசியவாத அமைப்பான தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் தலைவர் குணதாச அமரசேகர இதற்கு ஒரு படி மேலே சென்று இந்தியாவை எச்சரித்திருக்கின்றார். இலங்கையின் உள்ளக விவகாரங்களில் இந்தியா தொடர்ந்தும் அழுத்தம் கொடுத்து வந்தால் இலங்கை அரசாங்கம் இந்தியாவுடனான உறவுகளை முறித்துக்கொண்டு சீனா மற்றும் ரஷ்யாவுடனான உறவுகளைப் பலப்படுத்த வேண்டும் எனத் தெரிவித்திருக்கும் அவர், ஆகாய மார்க்கமாக பருப்பு மூட்டைகளை வீசுவதற்கு இந்தியாவுக்கு மீண்டும் அனுமதிக்க மாட்டோம் எனக் கூறியிருக்கின்றார். இது சிங்கள தேசியவாத அமைப்புக்கள் வழமையாக விடுக்கும் எச்சரிக்கைதான். ஆனால், இந்தக் கருத்துக்களைப் புறக்கணித்துவிட்டுச் செயற்படும் நிலையில் டில்லி இல்லை!

கொழும்பு மாநாட்டில் பங்குகொள்வதா அல்லது அதனைப் பகிஷ்கரிப்பதா என்பதையிட்டுத் தீர்மானிக்க முடியாத நிலையில் டில்லி தடுமாறுவதற்கு இவைதான் காரணம். இந்த நிலையில் இரண்டு தரப்பையும் சமாளிக்கும் வகையிலான தீர்மானம் ஒன்றை எடுப்பதற்கு இந்தியா முற்பட்டது. பிரதமர் மன்மோகன் சிங் தலைமையிலான ஒரு குழுவை அனுப்பாமல் இரண்டாம் மட்டக்குழு ஒன்றை மாநாட்டுக்கு அனுப்புவதுதான் அந்தத் தீர்மானம். ஆனால், அதனை ஏற்றுக்கொள்வதற்குக் கூட தமிழகம் தயாராகவில்லை. இந்தியாவின் பிரதிநிதித்துவம் எந்தவகையிலும் இருக்கக்கூடாது என்பதில் தமிழக அரசியல் தலைவர்கள் உறுதியாகவுள்ளார்கள். இதற்கான மக்கள் போராட்டங்கள் தமிழகத்தில் முடுக்கிவிடப்பட்டுள்ளன. தமிழக காங்கிரஸ் கட்சியும் இந்தக் கோரிக்கையுடன் இணைந்திருப்பது கவனிக்கத்தக்கது. பொதுத் தேர்தலில் தமது வாக்கு வங்கிகளைப் பாதுகாக்க வேண்டுமானால் இந்தக் கோரிக்கையுடன் இணைந்திருக்க வேண்டும் என தமிழக காங்கிரஸ் கட்சியும் திட்டமிட்டுச் செயற்படுகின்றது. இது காங்கிரஸ் தலைமைக்கான அழுத்தத்தை மேலும் அதிகப்படுத்துவதாக அமையும்.

இலங்கை குறித்த தன்னுடைய கொள்கையை வகுத்துக்கொள்வதில் இரண்டு விடயங்களையிட்டு இந்தியா எப்போதும் கவனத்திற்கொண்டிருந்தது. ஒன்று - தமிழகத்தின் உணர்வுகள். இரண்டு - இலங்கையின் கேந்திர முக்கியத்துவம். மற்றும் இலங்கையுடனான உறவு. இந்த இரண்டும் ஒன்றுடன் ஒன்று முரண்படும் நிலையில்தான் இப்போது ஒரு தீர்மானத்தை எடுப்பதில் இந்தியா தடுமாறுகின்றது. கொழும்பு மாநாட்டில் பங்குகொள்வதில்லை என்ற தீர்மானத்தை இந்தியா எடுத்துக்கொண்டால், அவ்வாறான முடிவை எடுத்த நாடாக இந்தியா மட்டும் இருக்காது. கனடா இவ்வாறான தீர்மானத்தை ஏற்கனவே எடுத்திருக்கின்றது. இலங்கையில் இந்த மாநாடு நடைபெறுவதை ஆரம்பம் முதலே கனடா எதிர்த்துவந்திருக்கின்றது. இந்த மாநாட்டில் கலந்துகொள்வது என்பது மனித உரிமைகள் விடயத்தில் சர்வதேசத்தின் கரிசனைகளையிட்டு கவலைப்படாமல் செயற்படும் மகிந்த ராஜபக்ஷ அரசுக்கு வழங்கப்படும் அங்கீகாரமாக அமைந்துவிடும் என்பதுதான் கனடாவின் கருத்து. இந்த மாநாட்டில் பங்குகொள்ளக் கூடாது என்ற அழுத்தத்துக்குள்ளாகியிருக்கும் மற்றொரு நாடு பிரித்தானியா. ஆனால், மாநாட்டில் பங்குகொண்டு மனித உரிமைகள் குறித்து கேள்வி எழுப்பப்போவதாக பிரித்தானியப் பிரதமர் அறிவித்திருக்கின்றார்.

கனடா மற்றும் பிரித்தானியாவை விட இலங்கை விவகாரம் இந்தியாவுக்கு முக்கியமானது. ஆனால், இலங்கை விவகாரத்தில் ஒரு உறுதியான தீர்மானத்தை எடுக்கக்கூடிய நிலையில் இந்தியா இல்லை. இராஜதந்திர ரீதியில் இலங்கையிடம் இந்தியா எப்போதும் தோல்வியடைந்தே வந்திருக்கின்றது. தமிழர் நலன்கள் குறித்து தமிழகத்திலிருந்து வரக்கூடிய அழுத்தங்களை தமது நலன்களைப் பாதுகாப்பதற்கான துருப்புச் சீட்டாகவே இந்தியா பயன்படுத்திவருகின்றது. இப்போது கூட, சம்பூரைப் பெற்றுக்கொள்வதில் இந்தியா காட்டிய அக்கறையில் ஒரு வீததத்தைக் கூட சம்பூரிலிருந்து வெளியேற்றப்பட்ட மக்களின் எதிர்காலம் குறித்து காட்டவில்லை. கொழும்புக்குக் கிடைத்த வெற்றி இதுதான். இந்த நிலையில் தமிழக சட்டப்பேரவைத் தீர்மானம் மற்றும் தமிழகத்தில் உருவாகியிருக்கும் எழிச்சி என்பனவற்றை இந்தியா எவ்வாறு பயன்படுத்திக்கொள்ளப்போகின்றது?

(ஞாயிறு தினக்குரல் ஆசிரியர் தலையங்கம்: 2013-10-27)