Monday, February 13, 2012

ஆக்கிரமிப்புக்குள் தமிழர்கள்!

பல வருடகால இடைவெளியின் பின்னர் சென்றிருந்தமையால் திருக்கோணேஸ்வரம் கோவில் பகுதியில் ஏற்பட்டிருக்கும் மாற்றங்களை வெளிப்படையாகவே காணக்கூடியதாக இருந்தது.

முன்னரெல்லாம் திருமலை சென்று பின்னர் அங்கிருந்து திருக்கோஸ்வரம் செல்வதற்காக கோணேஸ்வரம் மலையின் படிகளில் ஏறும் போது ஒரு இந்துக்கோவிலுக்குச் செல்கின்றோம் என்ற பயபக்தி தானாகவே மனதுக்குள் குடிகொள்ளும். ஆனால், கடந்தவாரம் அங்கு சென்ற போது, ஒரு பௌத்த விகாரைக்குச் செல்கின்றோமா என்ற சந்தேகம் மேலெழுவதைத் தவிர்க்க முடியவில்லை. காரணம் - திழருக்கோணேஸ்வரப் பெருமானைத் தரிசிக்க சாரையாரையாகச் செல்பவர்களில் கணிசமானவர்கள் சிங்களவர்கள்.

அதுமட்டுமன்றி கோவில் வீதியை ஆக்கிரமித்து கடைபரப்பியிருப்பவர்களும் முழுமையாக சிங்களவர்கள்தான். திருமலை நகரசபையின் உத்தரவையும் மீறி அமைக்கப்பட்டுள்ள இந்தக் கடைகள் ஆக்கிரமிப்பின் மற்றொரு சின்னமாகக் காட்சியளிக்கின்றது.
கோணேஸ்வரம் கோவிலுக்கு செல்லும் பாதை
கிழக்கு மாகாண ஆளுநர் சிங்களவர். திருமலை அரசாங்க அதிபர் சிங்களவர். கோவில் பகுதி ஒரு இராணுவ முகாமுக்கு உட்பட்ட பகுதியாகவே உள்ளது. இந்த நிலையில் துணிச்சலாகக் கடை பரப்பியுள்ள சிங்களவர்களை அனுமதிப்பதைவிட நகர சபைக்கும் வேறு தெரிவுகள் இருந்திருக்காது.

திருக்கோணேஸ்வரம் அமைந்திருக்கும் பிரட்றிக் கோட்டைப் பகுதியை புனித நகராக்குவதற்கு இந்துமதப் பிரமுகர்கள் நீண்டகாலமாக மேற்கொண்ட முயற்சிகள் எதுவும் பலனளிக்கவில்லை. இதுவே ஒரு சிங்களவர்களின் வணக்கத்தலமாக இருந்திருந்தால் கதை வேறு!
கோவில் முன்பாக சிவனுக்கு பாரிய விக்கிரம்
இருந்தபோதிலும் இந்தப் பகுதியைப் பாதுகாக்க வேண்டும் என்பதில் தமிழர்கள் அதிகளவுக்கு அக்கறையாக இருப்பதை கடந்த வாரம் இங்கு சென்றிருந்தபோது அவதானிக்க முடிந்தது. மறுபுறத்தில் இந்தப் பகுதியை முழுமையாக ஆக்கிரமித்துக்கொண்டுவிட வேண்டும் என்பதில் சிங்களவர்களுக்குள்ள வெறியையும் காணக்கூடியதாக இருக்கின்றது. இந்தப் பின்னணியில் திருமலையைப் பொறுத்தவரையில் இனங்களுக்கிடையிலான உறவுகள் ஒரு கொதி நிலையில்தான் உள்ளன என நிச்சயமாகக் கூறலாம்.
கோவில் வீதியை ஆக்கிரமித்துள்ள கடைகள்
திருக்கோணேஸ்வரத்தின் வரலாறு மிகவும் தொன்மையானது. இராமாயணத்துடன் தொடர்புபடுத்தக் கூடிய வகையில் இங்கு காணப்படும் இராணவன் வெட்டு உள்ளது. இந்த ஆலயம் எந்தளவு பழமையானது என்பதற்கு இது சான்று. இராவணனுக்கு இங்கு சிலை வைக்கப்பட்டு மக்கள் வணங்குவதையும் காணலாம்.
இராவணன் விக்கிரகம்
திருமலையின் வரலாற்றிலிருந்து திருக்கோணேஸ்வரத்தின் வரலாற்றைப் பிரிக்க முடியாது. அந்நிய நாடுகள் பலவற்றினதும் படையெடுப்புக்களிலிருந்தும் பாதுகாக்கப்பட்ட திருக்கோணேஸ்வரரம் இப்போது சிங்களவர்களின் படையெடுப்பினால் தன்னுடைய சுயத்தை எவ்வாறு பாதுகாத்துக்கொள்ளப்போகின்றது என்பதுதான் இந்துக்கள் மத்தியில் எழுகின்ற கேள்வி!
கன்னியா வெந்நீரூற்று
பிரித்தானிய ஆட்சியாளர்களிடமிருந்து இலங்கைத் தீவு மீண்ட உடனடியாகவே திருமலையை சிங்கள மயமாக்குவதற்கான முயற்சிகளை சிங்க ஆட்சியாளர்கள் ஆரம்பித்துவிட்டார்கள். அல்லை - கந்தளாய் குடியேற்றத் திட்டத்தின் மூலமாக ஆரம்பமான இந்த ஆக்கிரமிப்பு இன்று திருமலை மாவட்டத்தில் தமிழர்களின் எதிர்கால இருப்பையே கேள்விக்குறியாக்கியிருக்கின்றது.
சுடுதண்ணீர் கிணறு
திருமலை மாவட்டத்தின் எல்லைக் கிராமங்கள் பல சிங்கள மயமாக்கப்பட்டுள்ளதுடன், தமது பாரம்பரியமான தமிழ்ப் பெயர்களையும் இழந்து சிங்களப் பெயர்களைச் சூடிக்கொண்டிருக்கின்றன.

வளம் கொழிக்கும் சம்புரிலிருந்து தமிழர்கள் ஒட்டுமொத்தமாக ஒரே இரவில் வெளியேற்றப்பட்டு இன்று எழு வருடங்களாகப்போகின்றது. அவர்களுடைய முகாம் வாழ்க்கைதான் இன்னும் முடிவுக்கு வரவில்லை. தாம் பிறந்து வளர்ந்த மண்ணைவிட்டு பலவந்தமாக வெளியேற்றப்பட்ட இந்த சம்பூர் மக்களையிட்டு இன்று வரையில் யாரும் கவலைப்படவில்லை.

இந்தப் பின்னணியில் போர் முடிவுக்கு வந்துள்ள நிலைமையைப் பயன்படுத்தி திருமலை நகரப் பகுதியை சிங்கள மயமாக்கும் திட்டம் இப்போது முடுக்கிவிடப்பட்டுள்ளது. திருமலை நகரை அடுத்துள்ள மீன்பிடிக் கிராமங்கள் அனைத்தும் சிங்கள மயமாககப்பட்டுள்ளது. இதனால் திருமலையில் கடல்வளம் முழுமையாகவே சிங்களவர்களின் கைகளுக்குள் சென்றுவிட்டது.
சுடுதண்ணீர் கிணறுகளில் நீராட படையெடுக்கும் சிங்களவர்கள்
திருமலையிலிருந்து பெருமளவு கடலுணவுப் பொருட்கள் வெளிமாவட்டங்களுக்கு அனுப்பப்படுகின்றது. இதனைவிட கருவாடு உற்பத்தியும் சிங்களவர்களின் கைகளிலேயே உள்ளது.

திருமலை நகரப் பகுதியில் எந்த இடத்தில் தடுக்கிவிழுந்தாலும் முன்னால் ஒரு கோவில் இருக்கும். அந்தளவுக்கு நகரப் பகுதிகளில் இந்துக் கோவில்கள் பெருமளவுக்கு நிறைந்துள்ளன. நகரில் தமிழர்களின் தனித்துவத்தையும் அடையாளத்தையும் பாதுகாப்பதில் இந்தக் கோவில்கள்தான் முக்கிய இடத்தைப் பெறுகின்றன. இதில் பிரதானமானதுதான் திருக்கோணேஸ்வரம் கோவில்!

இதனை முறியடிப்பதற்காகத்தான் திருமலை நகரின் மத்தியில் புத்தர் சிலை ஒன்று இரவோடிரவாக அமைக்கப்பட்டு அதற்கு பொலிஸ் பாதுகாப்பும் வழங்கப்பட்டது வாசகர்களுக்கு நினைவிருக்கலாம். இதனைவிட திருமலை நெல்சன் தியேட்டரின் முன்பாக உள்ள பாரிய காணியும் புத்த விகாரை ஒன்றை அமைப்பதற்காக சிங்களவர்களால் கையகப்படுத்தப்பட்டுள்ளது. இந்தக் காணியில் நான்கு அரச மரங்கள் இருப்பதைக் காரணங்காட்டியே இதனை சிங்களவர்கள் இப்போது கைப்பற்றியிருக்கின்றார்கள்.

அரச மரங்களே இன்று தமிழர்களுக்கு எதிரியாகிவிட்ட நிலை!
வெந்நீருற்று பகுதியில் காணப்படும் அறிவித்தல்
திருக்கோணேஸ்வரம் கோவில் பகுதிக்குச் செல்லும் போது கதிர்காமத்தைப் போன்றதொரு நிலை இதற்கும் ஏற்பட்டுவிடுமா என்றே அஞ்சத் தோன்றுகின்றது. பிரெட்றிக் கோட்டைக்குள் திருக்கோணேஸ்வரம் இருப்பதால் முற்றுமுழுதாக இராணுவக் கட்டுப்பாட்டுக்கு உட்பட்ட ஒரு திருக்கோவிலாகவே இது உள்ளது.
வெந்நீரூற்றுப் பகுதியில் குவிந்துள்ள மக்கள்
இந்த நிலையில் திருக்ணோஸ்வரத்துக்கு முன்பாக பாரிய புத்தர் சிலை ஒன்று அமைக்கப்பட்டது. இதற்குப் போட்டியாக பாரிய அளவிலான சிவபெருமான் விக்கிரகம் ஒன்றை தமிழர்கள் கோணேஸ்வரம் கோவிலின் முன்பாக அமைத்திருக்கின்றார்கள். இது சிங்களத் தரப்பினருக்கு ஆத்திரமூட்டுவதாக இருந்தாலும் அமைதியாக இருக்கின்றார்கள்.இப்போது திருமலை நகரில் இருந்துகொண்டே சிவனைத் தரிசிக்க முடியும்!

திருமலையின் கன்னியா பகுதியிலுள்ள சுடுதண்ணீர் கிணறுகள் அமைந்திருக்கும் பகுதியில் இப்போது சிங்களவர்களுடைய ஆக்கிரமிப்புக்கு உள்ளானதாகவே காணப்படுகின்றது. ஆயிரக்கணக்கான சிங்களவர்கள் இந்தப் பகுதிக்கு வந்துசெல்வதுடன், இந்தப் பகுதியில் காணப்பட்ட அரச மரம் ஒன்றின் கீழ் பௌத்த விகாரை ஒன்றும் சின்னதாக அமைக்கப்பட்டுவிட்டது. சுடுதண்ணீர் கிணறு அமைந்திருக்கும் பகுதிக்குச் செல்வதற்கான நுளைவுச் சீட்டு தனிச் சிங்களத்திலேயே அச்சடிக்கப்பட்டுள்ளது. இந்தப் பகுதியின் பாதுகாப்புக் கடமைகளில் இராணுவத்தினரே ஈடுபடுத்தப்பட்டுள்ளார்கள்.
திருமலையைப் பொறுத்தவரையில் அங்கு அமைதி போன்ற நிலை காணப்பட்டாலும், இனங்களுக்கிடையில் கொதிநிலைதான் காணப்படுகின்து. இன்றும் ஒரு சில தசாப்தங்களில் திருமலையின் நிலை எவ்வாறானதாக இருக்கும் என்பது கேள்விக்குரியதாகவே உள்ளது!

Wednesday, February 1, 2012

இலங்கையைத் திணறவைக்கும் அமெரிக்காவின் புதிய நகர்வுகள்

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 19 வது கூட்டத் தொடர் எதிர்வரும் 27 ஆம் திகதி ஜெனிவாவில் ஆரம்பமாகவிருக்கும் நிலையில் அமெரிக்கா மேற்கொண்டுள்ள புதிய காய் நகர்த்தல்கள் கொழும்பைத் திகைக்க வைத்துள்ளன. ஜெனிவாவில் வருவாகக்கூடிய சவால்களைச் சமாளிப்பதற்கு முழு அளவிலான தயாரிப்புக்களில் இலங்கையின் வெளிவிவகார அமைச்சு ஈடுபடுத்தப்பட்டுள்ளது. 

அமெரிக்காவின் போர்க் குற்ற விவகாரங்களுக்குப் பொறுப்பான விஷேட தூதுவர் ஸ்ரேபன் ரப் அடுத்த வாரம் கொழும்பு வரவிருக்கின்றார். சியரலியோன் நாட்டில் இடம்பெற்ற போர்க் குற்றங்கள் தொடர்பில் வழக்கைத் தாக்கல் செய்வதற்கான பொறுப்பை இவரே ஏற்றிருந்தார். போர்க்குற்றம் தொடர்பில் அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவின் ஆலோசகராகவும் பணியாற்றும் இவர் அடுத்த வாரம் பெரும்பாலும் 5 ஆம் திகதி கொழும்பு வருகின்றார் என்ற செய்தி இலங்கை அதிகாரிகளுக்கு வயிற்றைக் கலக்கும் பேதி மருந்தாகவே வந்திருக்கின்றது. 

இந்தக் கலக்கத்தில் கொழும்பு இருக்கும் நிலையில் கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதரகத்தின் துணைத் தூதுவர் கடந்த வெள்ளிக்கிழமை வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸிடம் கடிதம் ஒன்றைக் கையளித்திருக்கின்றார். கடிதத்தை வாங்கி உடைத்துப் படிக்கும் வரையில் அதில் அதிர்ச்சிக் குண்டுகள் ஒன்றல்ல இரண்டு இருக்கின்றது என்பதை பீரிஸ் அறிந்திருக்கவில்லை. 
ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ஷ
அதிர்ச்சியை வெளிக்காட்டாமல் விஷயத்தை ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ஷவிடம் பீரிஸ் தெரிவித்திருக்கின்றார். விஷயம் உடனடியாகவே பத்திரிகைகளில் கசியவில்லை. அமெரிக்க உதவித் தூதுவர் கையளித்த கடிதத்தில் இருந்த இருந்த இரண்டு அதிர்ச்சிக் குண்டுகளும் இவைதான்:

1. ஜெனிவா மாநாட்டில் இலங்கைக்கு எதிராகக் கொண்டுவரப்படும் பிரேரணை தொடர்பானது. இதற்கு அமெரிக்கா ஆதரவளிக்கும் என இச்செய்தியில் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. 

2. நல்லிணக்கம், பொறுப்புக் கூறல் மற்றும் வடமாகாண சபைக்கான தேர்தல் தொடர்பில் இலங்கை அரசின் அணுகுமுறை என்ன என்பது தொடர்பாக ஆராய்வதற்காக வாஷிங்டன் வருமாறு அமெரிக்க வெளிவிவகார அமைச்சர் ஹிலாரி கிளின்டன் அமைச்சர் பீரிஸிற்கு விடுத்துள்ள அழைப்பு.
அமெ. போர்க் குற்றங்களுக்கான தூதுவர் ஸ்ரேபன் ரப்
இந்த இரண்டு விடயங்களிலுமுள்ள செய்தி மிகவும் கடுமையானது. ஜெனிவா மாநாட்டில் இலங்கை பெரும் நெருக்கடியை எதிர்கொள்ளப்போகின்றது என்பது இதன் மூலம் தெளிவாகியிருந்தது. அமெரிக்கா பிரேரணையைக் கொண்டுவரும் போது பிரித்தானியா, கனடா போன்ற மேற்கு நாடுகளும் அதற்கு ஆதரவளிக்கும். இந்தப் பின்னணியில் அதேபோன்ற ஒரு நிலைப்பாட்டை எடுப்பதற்கான நிர்ப்பந்தம் டில்லிக்கும் ஏற்படும். கொழும்பிலள்ள மேற்கு நாடுகளின் இராஜதந்திரிகள் வெளியிடும் கருத்துக்களின்படி இந்தப் பிரேரணைக்கு இந்தியா ஆதரவளிக்கும் என்ற எதிர்பார்ப்பை அவர்கள் கொண்டிருப்பதை உணர்ந்துகொள்ள முடிந்தது.

இந்த நெருக்கடியிலிருந்து மீளவதற்கான வழிதான் இரண்டாவதாக உள்ளது. அதாவது 1. நல்லிணக்கம். 2. பொறுப்புக் கூறல் 3. வடமாகாண சபைத் தேர்தல் ஆகிய மூன்று விடயங்களிலும் சர்வதேச சமூகம் எதிர்பார்க்கும் வகையில் இலங்கை அரசாங்கம் செயற்படுமாயின் ஜெனிவாவில் உருவாகக்கூடிய நெருக்கடியின் தீவிரம் மட்டுப்படுத்தப்படும். அமெரிக்க கொடுத்துள்ள செய்தியில் மறைமுகமாக இந்த அர்த்தமும் பொதிந்திருப்பதை உணர முடிந்தது.
ஹிலாரி கிளின்டன்
நல்லிணக்கம் என்று சொல்லும் போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் அரசாங்கம் தற்போது நடத்தும் பேச்சுக்களையே பிரதானமாகக் குறிப்பிடுகின்றது. ஆனால், இதனை பாராளுமன்றத் தெரிவுக்குழு மூலமாக நல்லிணக்கத்துக்கான முயற்சிகள் இடம்பெறுவதாகக் காட்டிக்கொள்ள அரசு முற்படுகின்றது. அதனால்தான் இந்தத் தெரிவுக்குழுவை அமைப்பதில் அசாதாரண அவசரம் அண்மைக் காலத்தில் காட்டப்படுகின்றது. 

இரண்டாவதாகவுள்ள பொறுப்புக்கூறலைப் பொறுத்தவரையில் கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்கத்துக்கான ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதாக அரசாங்கம் கூறிக்கொள்ள முற்படுகின்றது. இருந்த போதிலும் இதனை சர்வதேசம் ஏற்றுக்கொள்வதாக இல்லை. 

மூன்றாவதாகக் குறிப்பிடப்படும் வடமாகாண சபைக்கான தேர்தலைப் பொறுத்தவரையில் காலத்தைக் கடத்துவதுதான் அரசின் உத்தியாகவுள்ளது. இந்தத் தேர்தலை அரசு எப்போதோ நடத்தியிருக்க முடியும். ஆனால் தமக்குச் சாதகமான நிலை இல்லை என்பதால் மட்டும் அரசு காலத்தைக் கடத்தவில்லை. வடமாகாண சபை உருவாக்கப்பட்டால் வடக்கில் மேற்கொள்ளப்படும் இராணுவ மயமாக்கல் போன்றன பாதிக்கப்படும் என அரசு சிந்திக்கின்றது. தேர்தலை நடத்தி வடமாகாணத்தை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிடம் கொடுத்துவிடவும் அரசு விரும்பவில்லை. 
அமைச்சர் ஜி.எல்.பீரிஸ்
இந்தப் பின்னணியில் அமெரிக்காவின் நகர்வுகள் இலங்கை அரசுக்குப் பெரும் நெருக்கடியைக் கொடுப்பதாக அமைந்திருக்கும் என்பது உண்மை. விருப்பமில்லாத சிலவற்றை செய்யாவிட்டால் நெருக்கடி தவிர்க்க முடியாமல் போகலாம். 

சிறிய நாடுகளைத்தான் அமெரிக்கா தண்டிக்கின்றது என வெளிநாட்டு ஊடகவியலாளர்கள் மத்தியில் உரையாற்றிய போது ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ஷ தெரிவித்திருந்ததும் இந்தப் பின்னணியில்தான்! ஈரானுக்காக பரிதாபப்படுவதாக அவர் காட்டிக்கொண்டாலும் அவரது மனதில் அது மட்டும் இருந்திருக்காது!

மகிந்த விரும்பாத சிலவற்றை மேற்கு நாடுகள் எதிர்பார்க்கின்றன என்பது இப்போது தெளிவாகத் தெரிகின்றது. இதனை மகிந்தர் எப்படிக் கையாளப்போகின்றார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்! வீராவேசப் பேச்சுக்கள் மக்களின் ஆரவாரத்தைப் பெற்றுத்தரலாம். ஆனால் அது மட்டும் பிரச்சினைகளுக்குத் தீர்வாகிவிடாது.