Sunday, October 30, 2016

லசந்தவைக் கொன்றது யார்? தோண்டப்படும் புதைகுழிகள்: உண்மைகள் வெளிவருமா?


- சபரி -

'சன்டே லீடர்' பத்திரிகையின் ஸ்தாப ஆசிரியர் சலந்த விக்கிரமதுங்கவின் கொலை விசாரணையில் ஏற்கனவே காணப்பட்ட குழப்பங்களை இராணுவப் புலனாய்வு அதிகாரி ஜெனமானேயின் தற்கொலை அதிகரித்திருக்கின்றது. 57 வயதான மூன்று பிள்ளைகளின் தந்தையான ஜெயமானே, லசந்த விக்கிரமதுங்கவைக் கொலை செய்தது தானே என கடிதம் ஒன்றை எழுதி வைத்துவிட்டு அக்டோபர் 14 ஆம் திகதி தன்னுடைய வீட்டில் தூக்கில் தொங்கி தற்கொலை செய்துகொண்டிருக்கின்றார். லசந்தவின் கொலை வழக்கில் இச்சம்பவம் ஒரு திருப்பத்தை ஏற்படுத்தியிருக்கின்றது. புதிய கோணத்திலிருந்து விசாரணைகளை முன்னெடுக்க பொலிஸார் நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளனர்.

இவ்விடயத்தில் பொலிஸாரை இரு விடயங்கள் முதலில் குழப்பத்தில் ஆழ்த்தியது. ஒன்று இது தற்கொலையா என்பது. இரண்டாவது குற்ற ஒப்புதல் கடிதம் அவரால் எழுதப்பட்டதா என்பது.  இந்த இரு விடயங்களிலும் இப்போது பொலிஸாருக்குத் தெளிவு ஏற்பட்டிருக்கின்றது. இது தற்கொலைதான் என்பதை சட்ட மருத்துவ அதிகாரிகள் உறுதிப்படுத்தியிருக்கின்றார்கள். இரண்டாவதாக, குறிப்பிட்ட கடிதம் அவரால்தான் எழுதப்பட்டது என்பதை அவரது மகன் உறுதிப்படுத்தியிருக்கின்றார். இதனால், விசாரணை இப்போது அடுத்த கட்டத்துக்குச் சென்றிருக்கின்றது.

லசந்தவின் கொலைக்கு ஜெயமானேதான் காரணம் என்றால், அவர் எதற்காக அது தொடர்பில் காவல் துறையினரிடம் வாக்குமூலம் ஒன்றைக் கொடுக்காமல் தற்கொலை செய்துகொள்ள வேண்டும்?  இந்தக் கொலைக்கு உத்தரவிட்டவர்கள் யாராக இருக்க முடியும்? மற்றொரு இராணுவப் புலனாய்வு அதிகாரிக்கும் இந்தக் கொலைக்கும் சம்பந்தமில்லை எனவும், அவரை விடுதலை செய்ய வேண்டும் எனவும் ஜெயமானே கூறியிருப்பது எதற்காக? இது போன்ற கோள்விகளுக்கு பதில் காணப்பட வேண்டும். இதனைவிட ஜெயமானேக்கு யாராவது அழுத்தம் கொடுத்தார்களா என்பதும் கண்டறியப்பட வேண்டிய விடயமாகவுள்ளது. இந்த விடயங்களைக் கண்டறியும் நோக்கத்துடன்தான் பொலிஸாரின் விசாரணைகள் தற்போது முடுக்கிவிடப்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இதனைவிட, ஜெயமானேயின் கடிதம் உணர்வுபூர்வமானதாக இல்லாமல், அதிகளவுக்கு "உத்தியோகபூர்வ"த் தன்மையைக் கொண்டதாக இருப்பதாகவும் சுட்டிக்காட்டப்பட்டிருக்கின்றது. அதவது, தற்கொலை செய்யத்துணியும் ஒருவரது கடிதம் உணர்வுபூர்வமானதாகவே இருக்கும். அதனால் இந்தக் கடிதம் மற்றொருவரின் தேவைக்காக எழுதப்பட்டதா என்ற கேள்வியும் எழுப்பப்பட்டுள்ளது. அத்துடன் கடிதத்துக்குக் கீழ் கையொப்பமிடப்படவில்லை. இந்த விடயங்கள் தொடர்பிலும், சந்தேகம் தெரிவிக்கப்பட்டிருக்கும் நிலையில் பல்வேறு கோணங்களிலிருந்து பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துவருகின்றார்கள்.

புலனாய்வுப் பிரிவில்
20 வருட கால சேவை


ஜெயமானே 1985 ஆம் ஆண்டு இலங்கை இராணுவத்தின் கெமுனு படைப்பிரிவில் இணைந்துகொண்டவர். அதன்பின்னர் இராணுவ புலனாய்வுப் பிரிவில் 1987 ஆம் ஆண்டில் நியமிக்கப்பட்டவர். 2007 நவம்பரில் சேவையிலிருந்து ஓய்வுபெறும் வரையில் புலனாய்வுப் பிரிவிலேயே கடமையாற்றியவர். அதாவது புலனாய்வுப் பிரிவில் 20 வருடகால அனுபவம் அவருக்குள்ளது. லசந்த விக்கிரமதுங்க கொல்லப்பட்டது 2009 ஜனவரி 8 ஆம் திகதி. அதாவது சேவையிலிருந்து அவர் ஓய்வு பெற்று ஒரு வருடமும் இரண்டு மாதங்களும் கடந்துள்ள நிலையிலேயே லசந்தவின் கொலை இடம்பெற்றது.

தற்கொலை செய்துகொண்ட ஜெயமானேயின் உடல் கேகாலையிலுள்ள பொது மயாமன் ஒன்றில் அக்டோபர் 16 ஆம் திகதி புதைக்கப்பட்டது. புதைக்கப்பட்ட மூன்றாவது தினம் அதாவது அக்டோபர் 19 ஆம் திகதி நீதிமன்ற உத்தரவையடுத்து உடல் மீண்டும் தோண்டியெடுக்கப்பட்டது. ஜெயமானேயின் கைவிரல் அடையாளங்கள் உட்பட மேலும், ஆதாரங்கள் பெறப்படாமல் உடல் அவசராக புதைக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டதையடுத்தே உடலை தோண்டியெடுக்கும் உத்தரவு நீதிமன்றத்தினால் பிறப்பிக்கப்பட்டது. மேலதிக விசாரணைகளுக்காக உடல் கேகாலை வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டது.

ஜெயமானேயின் மனைவி வெளிநாடு ஒன்றில் தொழில் செய்வதாகத் தெரிவிக்கப்படுகின்றது. மூன்று பிள்ளைகளில் ஒருவர் சம்பவம் நடைபெற்ற போது வெளிநாடு சென்றிருந்தார். மற்றொரு மகன் தனியாக வாழ்ந்துவருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. ஜெயமானேயுடன் அவரது இறுதி மகன் மட்டும்தான் வசித்து வந்திருக்கின்றார். சம்பவம் நடைபெற்றபோது அவரும் வெளியில் சென்றிருந்ததாகத் தெரிவிக்கப்படுகின்றது. வீட்டில் ஒருவரும் இல்லாத நிலையிலேயே ஜெயமானே தற்கொலை செய்துகொண்டிருக்கின்றார்.

புலனாய்வுப் பிரிவு
துரித விசாரணை


குற்றப் புலனாய்வுப் பிரிவினரின் வேண்டுகோலையடுத்தே ஜெயமானேயின் உடல் மீண்டும் தோண்டப்பட்டது. பொலிஸ் மா அதிபர் பூஜித ஜெயசுந்தரவின் உத்தரவையடுத்து விஷேட பொலிஸ் குழு ஒன்று இப்போது விசாரணைகளைத் துரிதப்படுத்தியிருக்கின்றது. ஜெயமானே தற்கொலை செய்துகொள்வதற்கு முன்னர் இரண்டு அல்லது மூன்று நாட்கள் முன்னதாக வீட்டில் இருக்கவில்லை என்ற தகவல் சி.ஐ.டி.யினருக்குக் கிடைத்துள்ளது. இந்த நாட்களில் அவர் எங்கு சென்றிருந்தார் யாரையெல்லாம் சந்தித்திருக்கின்றார் என்பதை அறிவதற்கு சி.ஐ.டி.யினர் முயற்சிக்கின்றார்கள். ஜெயமானேயின் தற்கொலையின் பின்னணியை அறிவதற்கு இந்த விபரங்கள் அவசியம் என அவர்கள் கருதுவதாகத் தெரிகின்றது.

லசந்த கொலை வழக்கில் சம்பந்தப்பட்டுள்ளார் எனக் கருதப்பட்டு றிமாண்டில் வைக்கப்பட்டுள்ள இராணுவப் புலனாய்வு அதிகாரியான பிரேமானந்த உடலகம குற்றமற்றவர் எனவும் அவர் விடுதலை செய்யப்பட வேண்டும் எனவும் ஜெயமானே தன்னுடைய தற்கொலைக் குறிப்பில் தெரிவித்திருந்தார். உடலகமவுக்கும் ஜெயமானேக்கும் இடையிலான தொடர்புகளையிட்டும் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளைத் துரிதப்படுத்தியிருக்கின்றார்கள். இது தொடர்பான ஆதாரங்களைப் பெற்றுக்கொள்வதற்கு ஜெயமானேயின் கைப்பேசியிலுள்ள தரவுகள் அவசியம். அவரது கைப்பேசியை கேகாலை பொலிஸார் சி.ஐ.டி.யினரிடம் ஒப்படைத்துள்ளார்கள். இருந்தபோதிலும் அதிலுள்ள பதிவுகள் அழிக்கப்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது. குறிப்பிட்ட தொலைபேசி நிறுவனத்திடமிருந்து அந்தப் பதிவுகளை மீளப் பெற்றுக்கொள்வதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இதேவேளையில், ஜெயமான்னேயுடன் பணியாற்றிய 200 இராணுவப் புலனாய்வாளர்களை அடுத்து வரும் வாரங்களில் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரிக்கத் திட்டமிட்டுள்ளனர். இவர்களில் பலர் ஓய்வு பெற்றுவிட்டதாக குற்றப் புலனாய்வுப் பிரிவினர் தெரிவித்தனர். ஜெயமான்னேயுடன் பணியாற்றிய இராணுவப் புலனாய்வு அதிகாரிகளின் பட்டியலை தருமாறு குற்றப் புலனாய்வுப் பிரிவினர் இராணுவத் தலைமையகத்திடம் கோரியுள்ளனர். ஜெயமானேயின் சடலத்தை கண்டு பொலிஸாருக்குத் தகவல் கொடுத்த ஆட்டோ சாரதியின் வாக்குமூலத்தையும் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் முக்கியமானதாகக் கருதுகின்றார்கள்.

லசந்த விக்கிரமதுங்கவின் உடல் ஏழு வருடங்களின் பின்னர் கடந்த மாதம்தான் தோண்டி எடுக்கப்பட்டது. அதன் மூலம் விசாரணைகள் புதிய கோணத்தில் முன்னெடுக்கப்பட்டது. அந்த நிலையில்தான் இப்போது ஜெயமானேயின் தற்கொலை இடம்பெற்றிருக்கின்றது. அவரது சடலமும் தோண்டியெடுக்கப்பட்டுள்ளது. தோண்டியெடுக்பப்படும் இந்தச் சடலங்கள் மூலம் உண்மைகள் வெளிக்கொண்டுவரப்படுமா?
ஜெயமானேயின் பூதவுடல் தோண்டி எடுக்கப்படுகின்றது
 ஞாயிறு தினக்குரல்: 2016-10-30

ஆயுத குழுக்களும் யாழ்ப்பாணமும்


'ஆவா குழு' என்ற பெயரில் செயற்படும் அமைப்பின் நடவடிக்கைகள் யாழ்ப்பாணத்தில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ள பின்னணியில், இது போன்ற ஆறு குழுக்கள் அங்கு இயங்குவதாக செய்தி வந்துள்ளது. ஆவா குழு உருவாக்கப்பட்டதன் பின்னணியில் இராணுவப் புலனாய்வாளர்கள் இருந்துள்ளார்கள் என மற்றொரு செய்தி கூறுகின்றது. இந்தப் பரபரப்புக்களுக்கு மத்தியில் ஆவா குழுவை எதிர்கொள்வதற்காக தாம் இன்னொரு குழுவை களமிறக்கப்போவதாக சிங்கள தேசியவாத அமைப்பான 'ராவண பலய' எச்சரிக்கை விடுத்துள்து.

போருக்குப் பின்னர் அமைதி வாழ்வை விரும்பும் மக்களின் எதிர்காலத்தைக் கேள்விக்குள்ளாக்கும் வகையில் இந்தச் செய்திகள் உள்ளன. குடாநாட்டு மக்களைப் பயணமாக வைத்து யாரோ சிலர் அரசியல் சூதாட்டத்தில் இறங்கியுள்ளார்களா என்ற கேள்விதான் இவற்றைப் பார்க்கும் போது எழுகின்றது. இந்தச் சூதாட்டத்தில் பலியாகப்போவது அமைதியை விரும்பும் யாழ்ப்பாண மக்கள்தான். யாழ்ப்பாணத்தில் உருவாகும் இந்த நிலை நாட்டின் ஏனைய பகுதிகளிலும் எதிரொலிக்கக்கூடியது.

பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் கொல்லப்பட்டமையும், அதன்பின்னர் இடம்பெறும் சம்பவங்களும் எழுப்பியிருக்கும் சந்தேகங்கள் பல. அமைதியைக் குழப்பி, நெருக்கடி நிலை ஒன்றை ஏற்படுத்துவதற்கு சில சக்திகள் திட்டமிட்டுச் செயற்படுகின்றனவா என்ற கேள்வியை இவை எழுப்பியிருக்கின்றன. இவற்றை வெறுமனே தனிப்பட்ட சம்பவங்களாகவோ, தற்செயல் நிகழ்ச்சிகளாகவோ பார்க்க முடியாது.

திட்டமிட்ட நிகழ்ச்சி நிரலின் அங்கங்களாகவே இவை கருதப்பட வேண்டியவை. ஒன்றன் தொடர்ச்சியாக மற்றொன்று இடம்பெற்று வருகின்றது. இவ்விடயத்தில் பாதுகாப்புத் தரப்பினரது செயற்பாடுகளை மக்கள் சந்தேகத்துடனேயே பார்க்கின்றார்கள். இதற்கு நியாயமான சில காரணங்கள் உள்ளன. மக்களுக்கு நம்பிக்கையைக் கொடுக்கக்கூடிய வகையில் பாதுகாப்புத் தரப்பினரது செயற்பாடுகள் அமைந்திருக்கவில்லை.

ஆவா குழுவோ அதுபோன்ற மற்றைய குழுக்களோ யாழ்ப்பாணத்துக்குத் திடீரென வந்தவையல்ல. கடந்த சில வருடகாலமாகவே அவற்றின் செயற்பாடுகளால் யாழ்ப்பாணம் அமைதியிழந்திருக்கின்றது. மக்கள் அச்சமடைந்திருக்கின்றார்கள். இந்த அச்சத்தைப் போக்குவதற்குப் பதிலாக அதனை அதிகப்படுத்துவதாகவே பாதுகாப்புத் தரப்பினரது செயற்பாடுகள் அமைந்திருக்கின்றன.

இப்போது ஆவா குழு போன்ற ஆறு குழுக்கள் யாழ்ப்பாணத்தில் செயற்படுவதாகவும், அவற்றைக் கண்டுபிடிப்பதற்கான நடநடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகின்றன. யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் கொக்குவில் பகுதியில் வைத்துச் சுட்டுக்கொல்லப்பட்ட பின்னர் தொடர்ச்சியாக இடம்பெறும் சம்பவங்கள் மக்கள் மத்தியில் அச்சத்தை மட்டுமன்றி சந்தேகங்களையும் ஏற்படுத்தியிருக்கின்றது.

சுன்னாகம் பகுதியில் பொலிஸார் இருவர் மீது நடத்தப்பட்ட வாள்வெட்டுத் தாக்குதலுக்கு ஆவா குழுவின் பெயரில் உரிமை கோரப்பட்டது. இதன்மூலம் ஆவா குழு என்பதை ஒரு புரட்சிகரமான அமைப்பு என்பது போல காட்டிக்கொள்வதற்கான முயற்சி மேற்கொள்ளப்பட்டது. வாள்வெட்டு போன்ற குற்றச் செயல்களுடன் தொடர்புபட்டதாகவே ஆவா குழு அறியப்பட்டிருந்தது. இந்த உரிமைகோரல் துண்டுப்பிரசுரத்தின் மூலம் ஆவா குழுவுக்கு மக்கள் மத்தியில் ஆதரவை ஏற்படுத்தும் முயற்சி ஒன்று முன்னெடுக்கப்பட்டிருப்பதாகவே தோன்றுகின்றது.

இதன்மூலம் மாணவர் கொலையை விட ஆவாகுழுவின் செய்திகள் முக்கியத்துவம் பெறத் தொடங்கிவிட்டன. மாணவர் கொலை விவகாரம் பின்னுக்குத் தள்ளப்பட்டுவிட்டது. ஆவா குழுவின் பெயரிலான துண்டுப் பிரசுரங்கள் குடாநாட்டின் பல பகுதிகளிலும் விநியோகிக்கப்பட்டன. ஒரு சிலரை மட்டும் உறுப்பினராகக் கொண்ட சிறிய குழு ஒன்று பாதுகாப்புப் பலப்படுத்தப்பட்டுள்ள குடாநாட்டில் துண்டுப் பிரசுரங்களை எவ்வாறு பரவலாக விநியோகிக்க முடியும் என்ற கேள்வி மக்கள் மத்தியில் பரவலாக எழுப்பப்பட்டது. இது பலத்த சந்தேகங்களையும் எழுப்பியிருக்கின்றது.

இராணுவக் குறைப்பு, தமிழ்ப் பொலிஸார் நியமனம் என்பன தொடர்பில் வடக்கிலிருந்து குரல் கொடுக்கப்படுகின்றது. மாகாண சபைக்கு பொலிஸ் அதிகாரம் கொடுக்கப்பட்டிருந்தால் மாணவர் கொலை போன்ற சம்பவங்களைத் தவிர்த்திருக்க முடியும் என நல சமசமாஜக் கட்சித் தலைவர் கலாநிதி விக்கிரமாகு கருணாரட்ண தெரிவித்திருக்கின்றார். இந்த நிலையில், வடபகுதியில் ஆயுதக் குழுக்கள் செயற்படுகின்றன என்ற செய்தி படையினர் நிலைகொண்டிருப்பதை நியாயப்படுத்துவதற்கு உதவலாம்.

இதற்கு மேலாக இந்த வாள்வெட்டுக் குழுக்கள் என அடையாளம் காணப்படும் குழுக்களின் செயற்பாடுகளைக் கட்டுப்படுத்துவதற்கு விஷேட அதிரடிப்படை களமிறக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இந்தச் சம்பவங்களைப் பார்க்கும் போது குடாநாட்டின் நிகழ்வுகள், குறிப்பாக பல்கலைக்கழக மாணவர்களின் கொலையைத் தொடர்ந்து இடம்பெறும் சம்பவங்கள் ஒரு நிகழ்ச்சிநிரலின் அடிப்படையில் இடம்பெறுகின்றனவா என்ற சந்தேகத்தையே எழுப்புகின்றது.

போருக்குப் பின்னைய யாழ்ப்பாண சமூகத்தில் இராணுவத்தின் செல்வாக்கு அதிகம். குறிப்பாக இராணுவப் புலனாய்வாளர்களின் கண்களுக்கு அகப்படாமல் அங்கு எதுவுமே நடைபெற முடியாது என்ற நிலை உள்ளது. பல்வேறு சம்பவங்களின் போதும் இதனை அறிந்துகொள்ள முடிந்திருக்கின்றது.

ஆனால், குடாநாட்டில் செயற்படும் ஆறு ஆயுதக் குழுக்களை மட்டும் அவர்களால் ஏன் கட்டுப்படுத்த முடியவில்லை? இதன் பின்னணியில் அரசியல் உள்நோக்கம் இருக்கின்றதா என்ற சந்தேகம் சாதாரண மக்கள் மத்தியிலும் உருவாகியிருப்பதைக் காணமுடிகின்றது. மக்களின் இந்த சந்தேகத்தைப் போக்கும் வகையில் அரசாங்கத்தின் செயற்பாடுகள் அமைய வேண்டும் என்பதை வலியுறுத்த வரும்புகின்றோம்.

ஞாயிறு தினக்குரல்: 2016-10-30

Monday, October 24, 2016

சர்ச்சையை ஏற்படுத்திய உரை: தேசிய அரசில் வெடிப்பு?


- சபரி -

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் சர்ச்சைக்குரிய இலங்கை மன்றக் கல்லுரி உரை ஏற்படுத்திய அதிர்வுகள், கொழும்பு அரசியலில் தொடர்ந்தும் எதிரொலித்துக்கொண்டிருக்கும் நிலையில், லஞ்ச ஊழல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் டில்ரூக்‌ஷி டயஸ் விக்கிரமசிங்க தனது பதவியை ராஜினாமா செய்திருக்கின்றார். தனது இராஜினாமாவுக்கான காரணத்தை டில்ரூக்‌ஷி தெரிவிக்காத போதிலும், ஜனாதிபதியின் உரை ஏற்படுத்திய தாக்கம்தான் அதற்குக் காரணம் என்பதில் சந்தேகம் இல்லை. குறிப்பாக தற்போது முன்னெடுக்கப்பட்டுவரும் விசாரணைகள் "அரசியல் உள் நோக்கத்துடனானவை" என மைத்திரிபால தெரிவித்திருக்கும் நிலையிலேயே டில்ரூக்‌ஷி தனது பதவியைத் துறந்திருக்கின்றார்.

ஜனாதிபதியின் உத்தரவையா அல்லது பிரதமரின் உத்தரவையா முன்னெடுப்பது என்பதில் அதிகாரிகள் குழம்பிப்போயுள்ளதைத்தான் டில்ரூக்‌ஷியின் பதவிதுறப்பு வெளிப்படுத்துவதாக சிவில் அமைப்பைச் சேர்ந்த ஒருவர் தெரிவிக்கின்றார். அரசின் பங்காளிகளாகவுள்ள இரு கட்சிகளும் வெவ்வேறான நிகழ்ச்சி நிரலில் செயற்படும் போது முக்கிய அதிகாரிகள் இவ்வாறான அழுத்தங்களுக்குள்ளாவது வழமை. டில்ரூக்‌ஷி தனது பதவிதுறப்புக்கான காரணத்தைத் தெரிவிக்காத போதிலும், இந்த அழுத்தங்களுக்குள் செயற்பட முடியாத நிலைமை அதற்குக் காணமாக இருக்கலாம். நல்லாட்சி மீது நம்பிக்கையை இழக்கச் செய்யும் ஒரு சம்பவம் இது.

மைத்திரியின் உரையிருந்து டில்ரூக்‌ஷியின் இராஜினாமா வரை இடம்பெற்றுள்ள சம்பவங்கள் இரண்டு வருடத்தைக் கூட நிறைவு செய்யாத நல்லாட்சியில் கீறல் விழுந்திருப்பதை தெளிவாகக் காட்டியிருக்கின்றது. அத்துடன், எந்த வாக்குறுதியுடன் நல்லாட்சி அரசாங்கம் பதவிக்கு வந்ததோ அதனை மீறுவதாக ஜனாதிபதியின் உரை அமைந்திருப்பதும் அரசியல் வட்டாரங்களில் அதிர்வை ஏற்படுத்தியிருக்கின்றது. இந்த சர்ச்சைகளின் மத்தியில் வெளிநாட்டுப் பயணங்களை மேற்கொண்டிருந்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க வெள்ளிக்கிழமை நாடு திரும்பியிருக்கிறார். உருவாகியிருக்கும் நெருக்கடியைத் தணிப்பதற்கு இரு தரப்பினரும் அடுத்ததாக என்ன செய்யப்போகின்றார்கள் என்பதுதான் இப்போது எழுப்பப்படும் கேள்வி.

குற்றப் புலனாய்வுத் திணைக்களம், நிதிக் குற்றப் புலனாய்வுத் திணைக்களம், லஞ்ச ஊழல் ஆணைக்குழு ஆகிய மூன்றுமே ஜனாதிபதியின் கடும் தாக்குதலுக்கு உள்ளாகியிருந்தது. நல்லாட்சியை உறுதிப்படுத்துவதில் இந்த மூன்று பிரிவினருமே முக்கிய பங்கை வகிக்க வேண்டியவர்கள். இவை மூன்றுமே அரசியல் மயப்படுத்தப்பட்டிருப்பதாகக் குற்றஞ்சாட்டிய ஜனாதிபதி தேவை ஏற்பட்டால், அதன் செயற்பாடுகளில் தான் தலையிட வேண்டியிருக்கும் எனவும் எச்சரித்திருந்தார். இவ்வாறான தாக்குதல் ஒன்றை ஜனாதிபதி பகிரங்கமாக நடத்துவார் என ஐ.தே.க. ஒருபோதும் எதிர்பார்த்திருக்காது. என்ன நோக்கத்துடன் இந்தத் தாக்குதலை ஜனாதிபதி நடத்தியிருந்தாலும், இதனால் பாதிக்கப்பட்டிருப்பது அரசாங்கத்தின் நம்பகத்தன்மைதான்.

இதன் காரணமாகவே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இடையிலான சந்திப்பு உடனடியாக இடம்பெற்றது. சட்டம் ஒழுங்கு அமைச்சர் சாகல ரட்னாயக்கவும் இந்த சந்திப்பில் கலந்துகொண்டிருந்தார். சட்டம் ஒழுங்கு அமைச்சின் செயற்பாடுகளே ஜனாதிபதியின் சீற்றத்துக்குக் காரணமாக இருந்தமையால் அவரும் பேச்சுக்களில் பங்குகொண்டிருந்தார். குற்றப்புலனாய்வுத் திணைக்களம் மற்றும் நிதிக் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் என்பன சட்டம் ஒழுங்கு அமைச்சின் கீழ் வருகின்றது என்பது கவனிக்கத்தக்கது. இந்த அமைச்சை ஜனாதிபதி தன்னுடைய கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரலாம் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தேசிய அரசாங்கத்திலுள்ள இரு கட்சிகளுக்கும் இடையில் பதற்றநிலை காணப்பட்டது. ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் இடையிலான சந்திப்பையடுத்து இந்த பதற்ற நிலை ஓரளவுக்கு முடிவுக்குக் கொண்டுவரப்பட்டது.

தேசிய அரசாங்கத்துக்குள் உருவாகியிருக்கும் நெருக்கடியை முடிவுக்குக் கொண்டுவரும் வகையில், சில நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கும் இந்தச் சந்திப்பின்போது தீர்மானிக்கப்பட்டிருக்கின்றது. முக்கியமாக கொள்கைத் திட்டங்கள் தொடர்பான தீர்மானங்களை எடுப்பதில் இரு பிரதான கட்சிகளையும் உள்ளடக்கிய குழு ஒன்று அமைக்கப்பட்டது. இந்தக் குழு கடந்த திங்கட்கிழமை முதல் முறையாகச் சந்தித்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இருந்தபோதிலும், வரவு செலவுத் திட்டம் உட்பட சில விடயங்களில் ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தரப்பினர் அதிருப்தியமடைந்திருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. நவம்பர் 10 ஆம் திகதி அரசின் வரவு செலவுத் திட்டம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவிருக்கின்றது. பட்ஜெட்டில் வெளியேயிருந்து மட்டுமன்றி அரசுக்கு உள்ளேயிருந்தும் எதிர்ப்புக்கள் கிளம்பும் எனத் தெரிகின்றது.

மகிந்த ராஜபக்‌ஷவினால் கட்சியில் பாரிய பிளவு ஒன்றை எதிர்கொண்டுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தன்னுடைய நிலையைப் பாதுகாப்பதற்கான ஒரு முயற்சியாகவே இலங்கை மன்றக் கல்லூரி உரையை நிகழ்த்தியிருந்தார். படைத் தரப்பின் ஆதரவையும், சுதந்திரக் கட்சி தீவிர விசுவாசிகளையும் ராஜபக்‌ஷ தனது பக்கத்துக்கு கவர்ந்துவருகின்றார். இந்தநிலையில் முன்னாள் படைத் தளபதிகளும், ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முக்கியஸ்த்தர்களும் விசாரணைகளுக்காக அழைத்துச் செல்லப்படுவதை ராஜபக்‌ஷ தனது அரசியலுக்குப் பயன்படுத்திக்கொள்வார் என்பது மைத்திரிக்குத் தெளிவாகத் தெரியும். கூட்டுறவுத் தேர்தல்களில் ராஜபக்‌ஷ தரப்பின் ஆதரவு அதிகரித்துவருவது மைத்திரிக்கு ஒரு ஆபத்தான சமிஞ்ஞையாகவே உள்ளது.

ரணிலையும் ஒரேயடியாகப் பகைத்துக்கொள்ளாமல், ராஜபக்‌ஷவின் ஆதரவுத் தளம் வளர்ச்சியடைவதையும் தடுக்க வேண்டும் என்ற நிலையிலேயே மைத்திரி இப்போது காய் நகர்த்தத் தொடங்கியிருக்கின்றார். ரணிலும் இதனைப் புரிந்துகொண்டுள்ளவராகவே தனது அரசியலை முன்னெடுக்கின்றார்.

ஞாயிறு தினக்குரல்: 2016-10-23

Sunday, October 23, 2016

யாழ் பல்கலைக்கழக மாணவர் கொலை

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் வியாழக்கிழமை நள்ளிரவு கொக்குவில் பகுதியில் வைத்து பொலிஸாரால் சுட்டுக்கொல்லப்பட்டிருக்கின்றார்கள். இச்சம்பவம் நாடு முழுவதிலும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கின்றது. யாழ் பல்கலைக்கழகத்தின் செயற்பாடுகள் ஸ்தம்பிதமடைந்திருக்கின்றன. சட்டத்தையும் ஒழுங்கையும் பாதுகாக்க வேண்டிய பொலிஸார் அத்துமீறிச் சென்று நடந்திருப்பது இதுதான் முதல் தடவையல்ல. போர் முடிவுக்கு வந்து சமாதானம் நிலைநாட்டப்பட்டிருப்பதாகச் சொல்லப்படும் நிலையில் பொலிஸார் அமைதியை முற்றாகச் சீர்குலைக்கும் வகையில் செயற்பட்டிருக்கின்றார்கள். இது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று. எதிர்காலம் குறித்த நம்பிக்கையுடன் இருந்த இரு மாணவர்களின் உயிர் இடைநடுவில் கொடூரமாகப் பறிக்கப்பட்டிருக்கின்றது. அவர்களை நம்பியிருந்த குடும்பங்களையும், உறவுகளும் சோகக் கடலில் மூழ்கியுள்ளன. அவர்களுக்கு இது ஈடுசெய்ய முடியாத இழப்பு.

யாழ்ப்பாணத்தில் பொலிஸாரின் செயற்பாடுகள் எப்போதும் கேள்விக்குள்ளாக்கப்படும் வகையிலேயே இருந்துள்ளது. இப்போதும் அவர்கள் போர்க்கால மனோ நிலையிலும், ஆதிக்க மனப்போக்கிலும்தான் உள்ளார்கள் என்பதை இந்தச் சம்பவம் பகிரங்கப்படுத்தியுள்ளது. வாள் வெட்டுக் குழுக்கள் உட்பட போதை வஸ்த்துக் கடத்தல்கள் தீவிரமாக அதிகரித்துவரும் நிலையில், அவற்றைக் கட்டுப்படுத்துவதற்கு ஆக்கபூர்வமான நடவடிக்கைகள் எதனையும் பொலிஸார் மேற்கொள்ளவில்லை என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகின்றது. போதைப் பொருட்கள் யாழ்ப்பாணத்துக்கக் கொண்டுவரப்படுவது தீவிரமாக அதிகரித்திருப்பதை அன்றாட செய்திகள் உறுதிப்படுத்துகின்றன. இருந்தபோதிலும், இவை கொண்டுவரப்படும் பாதையத் தடுக்கவோ, சம்பந்தப்பட்டவர்களை சட்டத்தின் முன்பாக நிறுத்தி போதைப் பொருட்கள் கொண்டுவரப்படுவதை முற்றாக நிறுத்தவோ பொலிஸாரால் முடியவில்லை.

இது தொடர்பில் பொலிஸார் மீது கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டிருக்கும் நிலையில்தான், யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் வீதியில் வைத்துச் சுட்டுக் கொல்லப்பட்டிருக்கின்றார்கள். வியாழக்கிழமை இரவு 11.30 மணியளவில் மோட்டார் சைக்கிள் ஒன்றில் சென்ற மாணவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டிருக்கின்றது. மோட்டார் சைக்கிளை ஓட்டிச்சென்ற மாணவனை துப்பாக்கிக் குண்டு துளைத்துச் சென்றுள்ளது. இதனால் கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் அருகேயுள்ள மதில் ஒன்றில் மோதியுள்ளது. மோட்டார் சைக்கிளின் பின்னால் இருந்து பயணம் செய்த மாணவனும் படுகாயமடைந்து மரணமடைந்திருக்கின்றார். இதனை ஒரு விபத்தாகக் காட்டிக்கொள்வதற்கான முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் குற்றஞ்சாட்டுகின்றார்கள். இருந்தபோதிலும், மாணவனின் உடலில் காணப்பட்ட துப்பாக்கிச் சூட்டு அடையாளம் என்ன நடந்தது என்பதை உறுதிப்படுத்தியிருக்கின்றது.

அமைதியையும், ஒழுங்கையும் நிலைநாட்டுவதற்காக அனுப்பப்படும் பொலிஸார் நிதானமாகச் செயற்படுவது அவசியம். மோட்டார் சைக்கிள் ஒன்று நிறுத்தாமல் செல்கின்றது என்றால், அவர்கள் மீது துப்பாக்கிச் சூட்டை நடத்தும் அதிகாரம் பொலிஸாருக்கு இல்லை. அதனைத் தடுத்து நிறுத்துவதற்கான முயற்சிகளையே அவர்கள் முன்னெடுத்திருக்க வேண்டும். இதற்கும் மேலாக படுகாயமடைந்த மாணவர்களை மருத்துவமனையில் சேர்ப்பதற்கோ, உடனடி மருத்துவ உதவிகளை வழங்குவதற்கோ பொலிஸார் எந்த நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவில்லை. துப்பாக்கிச் சூட்டில் மோட்டார் சைக்கிளை ஓட்டிச்சென்ற மாணவன் மரணமடைய, பின்னால் இருந்த மற்றைய மாணவன் மோட்டார் சைக்கிள் மதிலில் மோதியதால் மரணமடைந்திருக்கலாம் எனக் கருதப்படுகின்றது. உடனடியாக சிகிச்சை வழங்கப்பட்டிருந்தால் ஒரு மாணவனையாவது காப்பாற்றியிருக்க முடியும். அதனைக்கூட பொலிஸார் செய்யவில்லை.

இதில் சம்பந்தப்பட்ட 5 பொலிஸார் கைது செய்யப்பட்டிருக்கின்றார்கள். அவர்கள் சேவையிலிருந்தும் இடைநிறுத்தப்பட்டிருக்கின்றார்கள். ஜனாதிபதியின் உத்தரவையடுத்து விஷேட பொலிஸ் குழு ஒன்று யாழ்ப்பாணத்துக்கு அனுப்பட்டு விசாரணைகளை முன்னெடுத்துள்ளது. மாணவர்களின் மரணத்துக்குக் காரணமானவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜெயசுந்தர தெரிவித்துள்ளார். இந்தச் சம்பவம் தொடர்பான விசாரணைகள் குற்றப் புலனாய்வுப் பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. கொல்லப்பட்ட மாணவனின் மார்பிலேயே துப்பாக்கிச் சன்னங்கள் துளைத்துச் சென்றிருப்பதை சட்ட மருத்துவ பரிசோதனையின் போது தெரிந்துகொள்ள முடிந்துள்ளது. குறிப்பிட்ட மாணவர்கள் தப்பிச் செல்வதற்கு முற்பட்டபோதுதான் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டிருக்குமாயின் மார்பிலல்ல முதுகிலேயே துப்பாக்கிச் சன்னம் துளைத்துச் சென்றிருக்க வேண்டும் என்பதும் சுட்டிக்காட்டப்படுகின்றது. அதனால் இது தொடர்பில் பல சந்தேகங்கள் கிளப்பப்படுகின்றள.

மாணவர்களின் மரணத்தையடுத்து கொந்தளிப்பான நிலை யாழ்ப்பாணத்தில் உருவாகியிருக்கின்றது. குறிப்பாக மாணவர்கள் அமைதியிழந்திருக்கின்றார்கள். இலங்கை போன்ற நாடுகளில் பல்கலைக்கழகத்துக்கு மாணவர்கள் தெரிவாவதென்பதே மிகவும் கடினமானது. அவ்வாறு உயர் கல்விக்குத் தெரிவான இரு மாணவர்கள் சுட்டுக்கொல்லப்பட்டிருப்பது எந்தவகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று.  பொலிஸாரின் அத்துமீறிய செயற்பாடுகள் காரணமாகத்தான் குடாநாட்டில் கடந்த காலங்களில் பெரும் கலவரங்கள் இடம்பெற்றிருக்கின்றது. நாடுமுழுவதற்கும் பரவியும் இருக்கின்றது. இது தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும், பொலிஸ் மா அதிபரும் உறுதியளித்திருக்கின்றார்கள். நடவடிக்கை எடுக்கப்படுவதற்கு மேலாக எதிர்காலத்தில் இவ்வாறான சம்பவங்கள் எதுவும் இடம்பெறாமலிருப்பதை உறுதிப்படுத்துவதும் அரசாங்கத்தின் பொறுப்பாகும்..

மீண்டும் பௌத்தத்துக்கு முன்னுரிமை?


- யாதவன் -

புதிய அரசியலமைப்பு தொடர்பான இடைக்கால அறிக்கை நவம்பர் மாத நடுப்பகுதியில் வெளிவரும் என அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில், மூன்று விடயங்கள் இப்போது சர்ச்சைக்குள்ளாகியிருக்கின்றது. இலங்கை தொடர்ந்தும் ஒரு மதச்சார்பான நாடாக அதாவது பௌத்த மதத்துக்கு முன்னுரிமை கொடுக்கும் ஒரு நாடாக இருக்குமா அல்லது ஒரு மதச்சர்பற்ற நாடாகுமா என்பது முதலாவது. ஒற்றையாட்சி தொடருமா என்பது இரண்டாவது. தேர்தல் சீர்திருத்தம் எவ்வாறு அமையும் என்பது மூன்றாவது.

இந்த மூன்று விடயங்களிலும் பிரதான தேசியக் கட்சிகள் கையாளப்போகும் அணுகுமுறைதான் இனப்பிரச்சினைக்கு நியாயமான தீர்வு ஒன்றைக் காண்பதில் அக்கட்சிகளின் மனப்போக்கைப் பகிரங்கப்படுத்துவதாக அமையும். புதிய அரசியலமைப்பு தொடர்பான இடைக்கால அறிக்கையைத் தயாரிப்பதில் இந்த மூன்று விடயங்களும் ஏற்கனவே சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், சிறுபான்மையினரது நம்பிக்கை சிதைவடைந்து செல்வதையும் காணக்கூடியதாகவிருக்கின்றது.

அண்மைக்கால அரசியல் நகர்வுகளும், அரசாங்கத்தின் முக்கியஸ்த்தர்கள் வெளிப்படுத்திவரும் கருத்துக்களும் இரண்டு விடயங்களை உறுதிப்படுத்தியிருக்கின்றது. தற்போதைய அரசியலமைப்பில் காணப்படும் ஒற்றையாட்சிக்கான உறுப்புரையும், பௌத்த மதத்துக்கான முன்னுரிமையளிக்கும் உறுப்புரையும் ஏதோ ஒரு வடிவில் புதிய அரசியலமைப்பிலும் இடம்பெறத்தான் போகின்றது. அரசாங்கத்தின் முக்கிய தலைவர்கள் சிலர் இதனை இப்போது பகிரங்கமாகவே தெரிவிக்கத் தொடங்கிவிட்டார்கள். இந்த நிலைப்பாட்டிலிருந்து இறங்கிவரும் நிலையில் அரசாங்கம் இல்லை. சமஷ்டியையும், மதச்சார்பற்ற அரசாங்கத்தையும் கேட்பவர்கள் தீவிரவாதிகளாகவும், குழப்பவாதிகளாகவும் சித்தரிக்கப்படும் நிலை உருவாக்கப்படுவது இதனால்தான்.

இடைக்கால அறிக்கை தயாரிக்கப்படுவதற்கு முன்னதாகவே அவசரப்பட்டு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க வெளியிட்ட கருத்து ஒன்று பல கேள்விகளையு எழுப்பியியிருக்கின்றது. "புதிய அரசியலமைப்பில் பௌத்த மதத்துக்கு முன்னுரிமை வழங்கும் விடயத்தில் இணக்கப்பாடு ஏற்பட்டிருக்கின்றது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உட்பட அனைத்துக் கட்சிகளும் இதனை ஏற்றுக்கொண்டுள்ளன" என பிரதமரின் அறிவிப்பு அவரது உள்நோக்கத்தை வெளிப்படுத்தியிருக்கின்றது. இந்த அறிவிப்பு தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குத்தான் நெருக்கடியைக் கொடுத்திருக்கின்றது. கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் உடனடியாக இதற்கு பதில் அளித்தார்.  "அரசியலமைப்பாக்க சபையின் வழிகாட்டல் குழுவில் இவ்விடயம் இது வரை பேசப்படவில்லை" என்றும் மதச் சார்பற்ற நாடு என்ற தமது நிலைப்பாட்டில் மாற்றமில்லை என்றும் சுமந்திரன் கூறியிருக்கின்றார்.

இந்தியாவைப் பொறுத்தவரையில் அங்கு 80 வீதத்துக்கும் அதிகமானவர்கள் இந்துக்கள். ஆனால், இந்தியா ஒரு மதச்சார்பற்ற நாடாகவுள்ளது. இலங்கையில் பௌத்த மதத்தைப் பின்பற்றுபவர்கள் 70 வீதமானவர்கள். இலங்கை பௌத்த மதத்துக்கு முன்னுரிமை கொடுக்கும் நாடாகப் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. அரசியலமைப்பின் ஒன்பதாவது உறுப்புரையில் இது தொடர்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. "இலங்கைக் குடியரசு பௌத்த மதத்துக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும். இதன்படி பௌத்த மதத்தை அரசாங்கம் பேணி, பாதுகாக்க வேண்டும்" என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. 1972 ஆம் ஆண்டின் அரசியலமைப்பில் குறிப்பிடப்பட்டிருக்கும் இவ்விடயம், 1978 ஆம் ஆண்டின் அரசிலயமைப்பிலும் இடம்பெற்றிருக்கின்றது. இப்போது கொண்டுவரப்படவிருக்கும் புதிய அரசியலமைப்பிலும் இது இடம்பெறப்போகின்றது.

சுமந்திரன் குறிப்பிடுவது போல, அரசியலமைப்பு பேரவையில் இது குறித்து ஆராயப்பட்டு முடிவெதுவும் எடுக்கப்படவில்லை என்பது உண்மையாக இருக்கலாம். ஆனால், மதத்லைவர் ஒருவர் தெரிவித்த கருத்துத் தொடர்பில் அமைச்சர் லக்‌ஷ்மன் கிரியெல்லை அரசியலமைப்புப் பேரவையில் பிரஸ்தாபித்திருப்பதாகத் தெரிகின்றது. பௌத்த மத மக்கள் பெரும்பான்மையாக இருப்பதால் அந்த மதத்துக்கு முன்னுரிமை வழங்கலாம் என குறிப்பிட்ட  மதத் தலைவர் தெரிவித்ததாக செய்தி ஒன்று வெளிவந்திருந்தது. அதனை அடிப்படையாகக் கொண்டுதான் அமைச்சர் கிரியெல்லை இங்கு கருத்து வெளியிட்டிருப்பதுடன், புதிய அரசியலமைப்பில் பௌத்த மதத்துக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும் எனவும் கோரியிருக்கின்றார். இதன்போது கூட்டமைப்பு உட்பட மற்றைய கட்சிகள் ளெனமாகவே இருந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. மௌனம் சம்மதம் என்ற அடிப்படையில்தான் பிரதமரின் கருத்து வெளியாகியிருக்கின்றது.

பல்லினத்தவர்கள் வாழும் ஒரு நாட்டில் ஒரு மதத்துக்கு முன்னுரிமை கொடுப்பது ஆபத்தானது என இலங்கைக்கு வருகை தந்திருந்த சிறுபான்மையின விவகாரங்கள் குறித்த ஐ.நா. விஷேட ஆணையாளர் றிட்டா ஐசாக் நாடியா தெரிவித்திருந்தது கவனிக்கத்தக்கது. அரசியலமைப்பில் முன்னுரிமை வழங்கப்பட்டிருப்பதால்தான் மேலாதிக்க நிலைப்பாட்டில் பௌத்த மதத்தவர்கள் சிலர் செயற்படுகின்றார்கள் என்ற குற்றச்சாட்டும் உள்ளது. பௌத்தர்களே இல்லாத இடங்களில் விகாரைகளை அமைத்தல், ஏனைய மதத்தவர்களின் வணக்கத்தலங்கள் மீது தாக்குதல் நடத்தப்படுவது என்பனவற்றுக்கும் இந்த முன்னுரிமை ஏதோ ஒருவகையில் காரணமாகின்றது.  நாட்டில் நல்லிணக்கத்தையும், சமாதானத்தையும் ஏற்படுத்துவதற்காக எனக் கொண்டுவரப்படும் புதிய அரசியலமைப்பு கூட, சிறுபான்மை மதங்களை இரண்டாம் இடத்தில் வைப்பது பிரச்சினைகளுக்குத் தீர்வைக்கொண்டுவரப்போவதில்லை.

"பௌத்த மதத்துக்கு முன்னுரிமை கொடுக்கப்பட வேண்டும். அதனைப் பேணிப் பாதுகாக்க அரசாங்கம் கடமைப்பட்டுள்ளது. அதேவேளையில் ஏனைய மதங்களுக்கு உரிமை உள்ளது" என்ற வகையிலேயே தற்போதைய அரசியலமைப்பு உள்ளது. புதிய அரசியலமைப்பு இதனை மாற்றப்போவதில்லை என்றே தெரிகின்றது. "புதிய மொந்தையில் பழைய கள்" என்ற நிலைதான் இது. "மதச்சார்பற்ற நாடு" என்ற நிலைப்பாட்டில் தாம் உறுதியாக இருப்பதாக சுமந்திரன் சொல்கின்றார். "30 வருடம் போராடி ஒன்றையும் காணவில்லை. இன்னும் இரண்டு மாதங்கள் பொறுங்கள்" என தமிழ் மக்களை அவர் கேட்கின்றார். தென்னிலங்கையில் மாற்றமடைந்துவரும் அரசியல் போக்கு சிங்கள தேசியவாதம் மீண்டும் பலமடைவதையே உணர்த்துகின்றது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் சர்ச்சைக்குரிய இலங்கை மன்றக் கல்லூரி உரையும், அதன் பின்னரான அரசியல் நகர்வுகளும் சிறுபான்மையினரின் நம்பிக்கை வெறும் காணல் நீராகப் போகின்றதா என்ற கேள்வியை எழுப்புகின்றது.

ஞாயிறு தினக்குரல்: 2016-10-23

Tuesday, October 18, 2016

ஜனாதிபதி மைத்திரி சொல்வது என்ன?

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கடந்த புதன்கிழமை வெளியிட்ட அறிவிப்பு கொழும்பு அரசியல் வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கின்றது. பிரமர் ரணில் விக்கிரமசிங்க அரசாங்கத்துடனான அவருடைய தேன்நிலவு முடிவுக்கு வரப்போகின்றதா என்ற கேள்வியையும் இது எழுப்பியிருக்கின்றது. முன்னாள் இராணுவ அதிகாரிகள் மீதான விசாரணையில் அரசாங்கம் நடந்துகொள்ளும் முறையை பகிரங்கமாக அவர் விமர்சித்திருக்கின்றார். ஜனாதிபதியாகப் பதவியேற்றுக்கொண்ட பின்னர் மைத்திரிபால சிறிசேன இந்தளவுக்கு கடும் தொனியில் கருத்து வெளியிட்டிருப்பது இதுதான் முதல்தடவை என்பதால், அரசியல் மற்றும் ஊடகத் தரப்பினரது கவனத்தை இது அதிகளவுக்குப் பெற்றிருக்கின்றது.

ஊழல் மோசடிகளுக்கு எதிராகச் செயற்படும் மூன்று அமைப்புக்களை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தன்னுடைய இந்த உரையின் போது சாடியிருந்தார். சுயாதீன இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவும் இதற்குள் அடங்கும். அரசியல் நோக்கத்துடன் இந்த ஆணைக்குழுக்கள் செயற்படுவதாகக் குற்றஞ்சாட்டிய ஜனாதிபதி, அந்த ஆணைக்குழுக்களின் செயலாளர்களையும் எச்சரித்திருந்தார். இந்த செயலாளர்களை ஜனாதிபதியே நியமித்திருந்தார் என்பது கவனிக்கத்தக்கது. இருந்தபோதிலும், அவர்கள் தமக்குரிய எல்லைகளை மீறிச் செயற்படுவதாக ஜனாதிபதி குறிப்பிட்டார். குறிப்பாக அரசியல் ரீதியில் முக்கியத்துவம் வாய்ந்த விடயங்களில் செயற்படும் போது அது குறித்து தனக்குத் தெரியப்படுத்தியிருக்க வேண்டும் என ஜனாதிபதி சுட்டிக்காட்டியிருக்கின்றார்.

முன்னாள் படை அதிகாரிகள் மூவர் மற்றும் முன்னாள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஆகியோர் விசாரணைக்காக அழைக்கப்பட்ட முறையே ஜனாதிபதியைச் சீற்றத்துக்குள்ளாக்கியிருக்கின்றது.  ஆட்சி மாற்றத்தின் பின்னர் முன்னைய அரசாங்கத்தின் அதிகாரிகள் மற்றும் அரசியல் தலைவர்களை விசாரணைக்குள்ளாக்குவதில் மூன்று ஆணைக்குழுக்கள் சம்பந்தப்பட்டுள்ளன. நிதிக் குற்ற விசாரணைப் பிரிவு, குற்றவியல் விசாரணைப் பிரிவு, சுயாதீன இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு என்பனவே அவையாகும். இந்த மூன்று ஆணைக்குழுக்களின் செயற்பாடுகளையும் கண்டனத்துக்குள்ளாக்கிய ஜனாதிபதி சிறிசேன, இவை அரசியல் நிகழ்சி நிரலுக்கு அமையச் செயற்படக்கூடாது எனவும் எச்சரித்தார். விடுதலைப் புலிகளை ஒழிப்பதில் முக்கிய பங்காற்றிய இராணுவத் தளபதிகளை விசாரணைக்குக் கொண்டு செல்வதன் மூலம் அவர்களை துன்புறுத்தலுக்குள்ளாகக் கூடாது எனவும் அவர் அங்கு தெரிவித்தார்.

ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கத்துடன் பனிப்போர் ஒன்றில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இறங்கியிருக்கின்றார் என்ற தகவல்கள் ஏற்கனவே வெளிவந்திருந்தாலும், ஜனாதிபதியின் இந்த உரை அதனை உறுதிப்படுத்துவதாகவே அமைந்திருக்கின்றது. இரண்டு பிரதான கட்சிகள் இணைந்து தேசிய அரசாங்கம் ஒன்றை அமைத்திருந்தாலும், இரு தரப்பினருக்கும் இடையிலான முறுகல் நிலை தீவிரமடைந்திருப்பதன் வெளிப்பாடுதான் மைத்திரியின் இந்த உரை எனக் கருதலாம். பாரம்பரியமாகவே எதிர் - எதிர் அணிகளாக இருந்து செயற்பட்ட இரண்டு பிரதான கட்சிகள் இணைந்து தேசிய அரசாங்கம் ஒன்றை அமைக்கும் போது சில பிரச்சினைகள் உருவாகுவது வழமைதான். இரு அணிகளுக்கும் கூட்டுச் சேர்வதற்கு சில நிர்ப்பந்தங்கள் இருந்துள்ளன. அந்த நிர்ப்பந்தம்தான் இன்று வரையில் தேசிய அரசாங்கத்தைப் பாதுகாக்கின்றது.

இந்த நிலையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தற்போதைய அதிரடியான அறிவிப்பின் பின்னணி என்ன என்ற கேள்வி அரசியல் வட்டாரங்களில் எழுப்பப்படுகின்றது. ஐ.தே.க.வின் ஆதரவுடனேயே மைத்திரிபாலவினால் ஜனாதிபதியாக வரமுடிந்தது. அதேபோல மைத்திரியின் ஆதரவு இருப்பதால்தான் ரணில் விக்கிரமசிங்கவினால் ஆட்சியை அமைத்து பிரதமராக முடிந்தது. ஆனால் மற்றொரு தேர்தலை எதிர்கொள்வதில் மைத்திரி தரப்பு நெருக்கடியை எதிர்கொள்கின்றது. அவர் தலைமைதாங்கும் ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஒரு தரப்பு முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ஷவுடன் அணிவகுத்து நிற்கின்றது. தனியான கட்சி ஒன்றை அமைத்துக்கொள்வதில் அவர்கள் உறுதியாக இருக்கின்றார்கள். சிறிசேன எதிர்கொள்ளும் மிகப்பெரிய அரசியல் நெருக்கடி இதுதான். உள்ளுராட்சிமன்றத் தேர்தலில் சிறிசேன தரப்புக்கு இது பிரச்சினையைக் கொடுக்கும். ஐ.தே.க.வும் இதனைத் தமக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொள்ளும் நிலை உள்ளது.

மைத்திரி தரப்பின் மீது மகிந்த தரப்பினரால் இன்று முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்களில் பிரதானமாக இருப்பது இரண்டு விடயங்கள்தான். ஒன்று: ஶ்ரீலங்காக சுதந்திரக் கட்சியை ஐ.தே.க.விடம் அவர் அடகுவைத்துவிட்டார் என்பது. இரண்டு: போர் வெற்றியின் கதாநாயகர்கள் பழிவாங்கப்படுவதை அவர் பார்த்துக்கொண்டிருக்கின்றார் என்பது. இதன் மூலம் சுதந்திரக் கட்சி ஆதரவாளர்களைத் தன்னுடன் அணி திரட்டுவதற்கும், சிங்களக் கடும் போக்காளர்களை மைத்திரியிடமிருந்து தனிமைப்படுத்தவும் மகிந்த தரப்பு முயன்றுள்ளது. அதேவேளையில், போர் வெற்றிக் கோஷத்தைத்தான் மகிந்த தரப்பு தமது கட்சியைப் பலப்படுத்துவதற்குப் பிரதானமாக நம்பியிருக்கின்றது. இந்தப் பின்னணியில் தன்னுடைய தரப்பைப் பலப்படுத்துவதற்கான ஒரு உபாயமாகவே ஜனாதிபதியின் இந்த உரையைப் பார்க்கவேண்டியிருக்கின்றது. அதாவது சிங்களத் தேசியவாதிகளைக் கவர்ந்திழுப்பதற்காக தனது தொனியை அவர் மாற்றிக்கொண்டிருக்கின்றார்.

இலங்கையின் அரசியலைப் பொறுத்தவரையில் தேசத்தின் நலன்கள் என்பதைவிடவும், கட்சியின் நலன்கள் சார்ந்த செயற்பாடுகளே வரலாற்றில் மாற்றங்களை ஏற்படுத்தியிருக்கின்றது. இனநெருக்கடி தீவிரமடையவும் அதுதான் காரணம். இப்போதும், தேசிய அரசாங்கத்தில் இணைந்திருக்கும் இரு பிரதான கட்சிகளும், கூட்டு எதிரணி என தம்மை அடையாளப்படுத்திக்கொள்ளும் மகிந்த ராஜபக்‌ஷ தரப்பும் நாட்டின் எதிர்கால நலன்கள் குறித்ததான அக்கறயைவிட, தமது கட்சியின் நலன்சார்ந்த நகர்வுகளுக்கே முக்கியத்துவம் கொடுக்கின்றன. இது சிங்களத் தேசியவாதிகளுக்கு உற்சாகமளிப்பதாக அமையலாம். ஆனால், நியாயமான அரசியல் தீர்வு ஒன்றுக்காகக் காத்திருக்கும் சிறுபான்மையின மக்களுக்கு ஏமாற்றத்தைக் கொடுப்பதாகவே அமையும்.

ஆசிரியர் தலையங்கம்: ஞாயிறு தினக்குரல்: 2016-10-16

பயங்கரவாத தடைச் சட்டம்?

சர்வதேச ரீதியாக கடுமையான விமர்சனங்களைப் பெற்றுள்ள பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்குவதாகக் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றுவதில் அரசாங்கம் புதிய உபாயம் ஒன்றைக் கையாள்வதற்கு முற்பட்டிருக்கின்றதா என்ற கேள்வி தற்போது எழுப்பப்பட்டிருக்கின்றது. அதற்குப் பதிலாக புதிய சட்டமூலம் ஒன்று கொண்டுவரப்படும் என அரசாங்கத் தரப்பில் உள்நாட்டிலும், சர்வதேச அரங்கிலும் ஏற்கனவே வாக்குறுதியளிக்கப்பட்டிருக்கின்றது. இவ்வாறு அரசாங்கத்தினால் கொண்டுவரப்படவிருக்கும் புதிய சட்டமூலம் முன்னைய சட்டமூலத்தை விடவும் மோசமானதாக இருக்கப்போகின்றது என்ற அச்சத்தை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் இப்போது வெளியிட்டிருக்கின்றார். ஆக, சட்டியிலிருந்து இப்போது அடுப்புக்குள் விழுந்த கதையா என்ற கேள்வி தற்போது எழுப்பப்பட்டிருக்கின்றது.

ஆயுதப் போராட்டம் தீவிரமடையத் தொடங்கிய காலப்பகுதியில் அதனை அடக்குவதற்காக படையினருக்கும் பொலிஸாருக்கும் அதிகளவு அதிகாரங்களைக் கொடுப்பதற்காகவே பயங்கரவாதத் தடைச் சட்டம் 1978 ஆம் ஆண்டில் கொண்டுவரப்பட்டது. கேட்டுக்கேள்வியின்றி தமிழ் இளைஞர்களைக் கைது செய்து கால வரையறையின்றி அவர்களைத் தடுத்து வைத்திருப்பதற்கான அதிகாரத்தை படையினருக்கு இச்சட்டமூலம் வழங்கியது. இச்சட்டத்தின் கீழ் கைதான பலர் காணாமலும் போயிருக்கின்றார்கள். சிலர் சடலங்களாகவும் மீட்கப்பட்டிருக்கின்றார்கள். இதனால்தான் தென்னாபிரிக்காவில் இருந்ததை விடவும் கொடூரமான ஒரு சட்டமூலமாக இது வர்ணிக்கப்பட்டது. அதனால்தான் இச்சட்டம் நீக்கப்பட வேண்டும் என மனித உரிமை அமைப்புக்கள் குரல் கொடுத்தன. மனிதாபிமானத்துக்கு முரணான ஒரு சட்டமாகவே இது பார்க்கப்பட்டது.

போர் முடிவடைந்த பின்னர் இந்தச் சட்டமூலத்தை தொடர்ந்தும் வைத்திருப்பதை எந்த வகையிலும் நியாயப்படுத்த அரசாங்கத்தினால் முடியவில்லை. மகிந்த ராஜபக்‌ஷவின் ஆட்சிக் காலத்தில் இது தொடர்பாக அவர் பெரிதாக அலட்டிக்கொள்ளவில்லை. இருந்தபோதிலும் ஆட்சி மாற்றத்தின் பின்னர் நல்லிணக்கச் செயற்பாடுகளின் ஒரு அம்சமாக இந்தச் சட்டமூலம் நீக்கப்படும் என்ற வாக்குறுதியை நல்லாட்சி வழங்கியிருந்தது. இறுதியாக இடம்பெற்ற ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் ஜெனீவா கூட்டத் தொடரிலும் இவ்விடயம் எதிரொலித்தது. "நல்லிணக்க செயற்பாடுகள் விடயத்தில் அரசாங்கம் வழங்கிய இன்னும் பல வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாமல் உள்ளன. பயங்கரவாத தடைச் சட்டம் நீக்கப்பட வேண்டும். அதற்கு பதிலாக சர்வதே தரத்துடன் கூடிய சட்டம் வரவேண்டும். பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்கள் விடுவிக்கப்பட வேண்டும்" என்று சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகம் வலியுறுத்தியிருந்தது.

இந்த அழுத்தங்களின் பின்னணியிலேயே பங்கரவாதத் தடைச்சட்டத்தை நீக்குவதற்கும் அதற்குப் பதிலாக சர்வதேச தரத்துடனான புதிய சட்டமூலம் ஒன்றை நடைமுறைக்குக் கொண்டுவருவதற்கும் அரசாங்கம் இணக்கம் தெரிவித்திருந்தது. பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கூட அண்மையில் நியூசிலாந்துக்குச் சென்றிருந்த வேளையில் இது தொடர்பாகத் தெரிவித்திருந்தார். இது தொடர்பில் இலங்கைக்கு அழுத்தம் கொடுக்குமாறு சர்வதேச மன்னிப்புச் சபை நியூசிலாந்துப் பிரதருக்குக் கோரிக்கை விடுத்திருந்தது.  ரணில் விக்கிரமசிங்க நியூசிலாந்து புறப்பட்ட நிலையிலேயே இந்தக் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. ஆக, இலங்கைத் தலைவர்கள் செல்லும் இடங்களிலெல்லாம் இது தொடர்பாகக் கேள்வி எழுப்ப்படுவது இலங்கைக்குச் சங்கடத்தைக் கொடுப்பதாக இருக்கும். எப்படியாவது பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்க வேண்டும் என்ற அழுத்தத்தை அவர்களுக்குக் கொடுப்பதாக அது அமைந்திருக்கும். இந்த இடத்தில்தான் புதிய சட்டமூலம் எப்படியானதாக இருக்கும் என்ற கேள்வி எழுப்பப்படுகின்றது.

இந்தக் கேள்விக்கு கூட்டமைப்பின் பேச்சாளர் சுமந்திரன் தெளிவாகப் பதிலளித்திருக்கின்றார். குற்றவியல் நடவடிக்கை முறை சட்டக்கோவை (திருத்த) சட்டமூலம் மற்றும் சட்ட ஆணைக்குழு திருத்தச் சட்டமூலத்தின் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு பாராளுமன்றத்தில் ஆற்றிய உரையிலேயே அரசாங்கத்தின் திட்டங்களை சுமந்திரன் அம்பலப்படுத்தியிருக்கின்றார். அவர் அங்கு தெரிவித்த விடயங்கள் முக்கியமானவை. "பயங்கரவாத தடைச் சட்டத்துக்குப் பதிலாக புதிய வரைபு ஒன்றைத் தயாரிக்குமாறு சட்ட ஆணைக்குழுவுக்கு அரசாங்கம் பரிந்துரைத்திருந்தது. அதற்கமைய ஆணைக்குழு முன்பாக நான் கருத்துக்களைத் தெரிவித்திருந்தேன். இவ்வரைவு தயாரிக்கப்பட்டபோதிலும் அதனை நான் காணவில்லை. அது குப்பைத் தொட்டிக்குள் போடப்பட்டிருக்கலாம். பதிலாக பாதுகாப்புடன் சம்பந்தப்பட்ட குழு ஒன்று தற்போது புதிய வரைபு ஒன்றைத் தயாரித்துள்ளது. அவ்வாறு தயாரிக்கப்பட்ட வரைபு தற்போதுள்ள சட்டத்தைவிட மோசமானது என்ற தகவல் கிடைத்திருக்கின்றது." இவ்வாறு சுமந்திரன் தெரிவித்திருக்கின்றார்.

பயங்கரவாதத் தடைச் சட்டம் நீக்கப்பட வேண்டும் எனக் குரல் கொடுக்கப்படுவதற்கு அதிலுள்ள மோசமான அம்சங்களே காரணம். அதை நீக்குவதாகக் கூறிவிட்டு அதிலுள்ள மோசமான அம்சங்களை மற்றொரு பெயரில் கொண்டுவருவதற்கான சதி நடைபெறுகின்றதா என்ற கேள்விதான் அரசாங்கத்தின் செயற்பாடுகளைப் பார்க்கும் போது எழுகின்றது. தடுத்துவைத்தல், ஒப்புதல் வாக்குமூலம் பெறுதல் போன்ற மனிதாபிமானத்துக்கும் சர்வதேச மனிதாபிமானச் சட்டத்துக்கும் புறம்பான விடயங்கள் அரசாங்கத்தின் உத்தேச புதி சட்டமூலத்தில் உள்ளடக்கப்படவிருப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது. சர்வதேசத்தையும், மனித உரிமைகள் அமைப்புக்களையும் ஏமாற்றுவதற்கு அரசாங்கம் முற்படுகின்றதா என்ற கேள்வி சுமந்திரன் அம்பலப்படுத்தியிருக்கும்  தகவல்களின் மூலம் எழுகின்றது. பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்கும் விடயத்தில் அரசாங்கம் வெளிப்படைத் தன்மையுடனும், சர்வதேசத் தரங்களைப் பேணும் வகையிலும் செயற்பட வேண்டும் என்பதை வலியுறுத்த விரும்புகின்றோம். மனித உரிமைகள் அமைப்புக்களும் இவ்விடயத்தில் அதிகளவுக்கு வழிப்புடன் இருப்பது அவசியம்!

ஆசிரியர் தலையங்கம்: ஞாயிறு தினக்குரல்: 2016-10-09

தமிழரசுக் கட்சியின் எதிர்பார்ப்பும் 'எழுக தமிழ்' சொல்லும் அரசியலும்


- சபரி -

யாழ்ப்பாணத்தில் இரண்டு வாரங்களுக்கு முன்னர் இடம்பெற்ற 'எழுக தமிழ்' நிகழ்வு இலங்கைத் தமிழர்களின் அரசியல் தலைமைகள் இரண்டு துருவங்களாகப் பிரிந்து செயற்படும் நிலைமை உருவாகியுள்ளதை வெளிப்படுத்தியிருந்தது. அதன் பின்னர் கடந்த வாரம் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற மு.திருநாவுக்கரசுவின் நூல் அறிமுகக் கூட்டத்தில் இடம்பெற்ற குழப்பங்களும் இதனை மேலும் உறுதிப்படுத்தியிருக்கின்றது. போருக்குப் பின்னரான காலப் பகுதியில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளிடையே முரண்பாடுகள் காணப்பட்டிருப்பினும், தேர்தல் என்று வரும் போது அவை ஒன்றாக நிற்பது வழமை. கூட்டமைப்புக்கு ஒருங்கணைப்புக் குழு என்று ஒன்று இருந்தாலும் கூட, அதனால் பங்காளிக் கட்சிகளை தொடர்ந்தும் ஒருங்கிணைக்கக்கூடியதாக இருக்குமா என்ற கேள்வி இப்போது எழுப்பப்படுகின்றது.

வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தலைமையில் தமிழ் மக்கள் பேரவை அமைக்கப்பட்ட போதே கூட்டமைப்புக்கு மாற்றான அரசியலை அது முன்னெடுக்கப்போகின்றது என்பது தெளிவாகத் தெரிந்தது. கூட்டமைப்பின் தலைமையில் அதிருப்தியடைந்திருந்த கட்சிகள் அதில் இணைந்துகொண்டமை இதனை மேலும் உறுதிப்படுத்தியது. கூட்டமைப்பின் மிதவாதப் போக்கும், அரசுடன் அவர்கள் முன்னெடுக்கும் 'இணக்க அரசியல்' மூலமாக எதனையும் பெற்றுக்கொடுக்காத நிலையும், பேரவையின் அவசியத்தை தமிழ் மக்களுக்கு உணர்த்தியது. தமக்கு அரசியல் நோக்கம் எதுவும் இல்லை என பேரவையின் இணைத் தலைவர்களில் ஒருவரான வடக்கு முதலமைச்சர் கூறிக்கொண்டாலும் கூட, பேரவையின் செயற்பாடுகள் கூட்டமைப்பின்  தலைமைக்கு அழுத்தத்தை அதிகரிப்பதாகவே அமைந்திருக்கின்றது.

கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளில் புளொட், ஈ.பி.ஆர்.எல்.எப். என்பன பேரவையில் இணைந்திருக்கின்றன. அத்துடன் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியும் பேரவையுடன் இணைந்து செற்படுகின்றது. ரெலோவும் தமிழரசுக் கட்சியும் இதற்கு எதிர் முகாமில் உள்ளன. ரெலோவின் தலைமை தமிழரசுக் கட்சியுடன் இணைந்து நின்றாலும்கூட, பேரவை நடத்திய 'எழுக தமிழ்' பேரணியில் ரெலோவின் முக்கிய புள்ளிகள் சிலரைக் காணமுடிந்தது. அதனால், தமிழரசுக் கட்சியுடன் இணைந்து செயற்படுவதில் ரெலோவின் தலைமை எதிர்காலத்தில் உள்ளக அழுத்தங்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என எதிர்பார்க்கலாம். இருந்தபோதிலும் ரெலோ தலைமை தமது நிலைப்பாட்டில் உறுதியாக நிற்கும் என எதிர்பார்ப்பதற்கு சில காரணங்கள் உள்ளன.

தமிழரசுக் கட்சியின்
நம்பிக்கை இதுதான்

'எழுக தமிழ்' பேரணி தொடர்பாக தமிழரசுக் கட்சித் தலைமை எடுத்த நிலைப்பாடு ஆச்சரியமானதல்ல. இந்தப் பேரணில் தமது கட்சியைச் சேர்ந்த எவரும் கலந்துகொள்ளக்கூடாது என தமிழரசுக் கட்சித் தலைமை அறிவுறுத்தியிருந்தது. மக்கள் ஆதரவுடன் நடைபெறும் பேரணியில் தாம் கலந்துகொள்ளவில்லை என்றால் தமது ஆதரவுத் தளம் ஆட்டம் காணலாம் என தமிழரசுக் கட்சி உறுப்பினர்கள் சிலர் தடுமாறிக்கொண்டிருந்த நிலையில் வெளியான இந்த அறிவிப்பு உறுதியானதாக இருந்தது. "மக்கள் போராட்டங்களுக்கு நாம் எதிரல்ல. ஆனால், போராட்டங்களை நடத்துவதற்கான தருணம் இதுவல்ல" என கூட்டமைப்பின் பேச்சாளரான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்திருந்தார். தலைவர் இரா.சம்பந்தனின் நிலைப்பாடாகவும் இதுவே இருந்தது.

"புதிய அரசியலமைப்பு ஒன்றை உருவாக்குவதற்கான முயற்சிகள் இப்போது இடம்பெற்றுவருகின்றது. இந்த நிலையில் இது போன்ற பேரணிகள் எதிர்மறையான பலன்களைத்தான் கொண்டுவரும்" என்பது கூட்டமைப்புத் தலைமையின் கருத்தாக இருந்தது. "பேரவை"யின் செயற்பாடுகள் தமக்கு சங்கடத்தைக் கொடுப்பதாக இருப்பதையிட்டு தமிழரசுத் தலைமை அதிருப்தியடைந்திருந்தாலும் கூட, பங்காளிக் கட்சிகள் தனியாகச் சென்றுவிடும் நிலை உருவாகிவருவதையிட்டு அவர்கள் குழப்பமடையவில்லை. "போவதானால் போகட்டும்" என்ற நிலைப்பாட்டிலேயே அவர்கள் இருப்பதாகத் தெரிகின்றது. அடுத்ததாக வரப்போகும் தேர்தலில் தனியாகக் களம் இறங்குவதற்கு அவர்கள் தயாராக இருப்பதாகவே தெரிகின்றது. பேரவையின் வருகையும் அவர்கள் முன்னெடுக்கும் போராட்டங்களுக்குக் கிடைக்கக்கூடிய மக்கள் ஆதரவும் தமக்கு அச்சுறுத்தலைக் கொடுக்கப்போவதில்லை என தமிழரசுத் தலைமை கருதுவதற்குக் காரணம் உள்ளது.

நவம்பரில் வரப்போதும் புதிய அரசியலமைப்பு தொடர்பான இடைக்கால அறிக்கையைத்தான் தமிழரசுக் கட்சியினர் நம்பியிருக்கின்றார்கள். ஐ.நா. செயலாளர் நாயகம் பான் கீ முனுடனான சந்திப்பின் போது "கடும் தொனி"யில் சில கருத்துக்களை சம்பந்தன் தெரிவித்திருந்தாலும் கூட, இவ்வருட இறுதிக்குள் திருப்திகரமான தீர்வு ஒன்று முன்வைக்கப்படும் என்பதில் நம்பிக்கை வைத்தவராகவே சம்பந்தன் உள்ளார். பல சந்தர்ப்பங்களில் அதனை அவர் வெளிப்படையாகச் சொல்லியும் இருக்கின்றார். தான் சொன்னதை நிரூபிப்பதற்கு அவர் எதிர்பார்த்திருப்பது நவம்பரில் வரப்போகும் இந்த இடைக்கால அறிக்கையைத்தான். இந்த இடைக்கால அறிக்கை தமிழர்களின் அபிலாஷைகளை நிறைவு செய்யக் கூடிய வகையில் அமையுமாயின் அது சம்பந்தனுக்கும், சுமந்திரனுக்கும் கிடைத்த வெற்றியாகக் கருதப்படும். அவ்வாறான நிலையில், அந்தத் தீர்வைப் பெற்றுக்கொடுத்தவர்கள் நாமே என்ற முறையில் அடுத்த தேர்தல்களில் தமிழரசுக் கட்சி தனித்து களம் இறங்க முடியும் என்ற நம்பிக்கையுடன் அவர்கள் செயற்படுவதாகத் தெரிகின்றது.

இடைக்கால அறிக்கையும்
அது தரப்போகும் தீர்வும்...

இந்த இடத்தில்தான் வரப்போகும் தீர்வு எவ்வாறானது என்ற கேள்வி எழுப்பப்படுகின்றது. அது குறித்து திட்டவட்டமாக எதனையும் சொல்லமுடியாவிட்டாலும், தேசிய நல்லிணக்கத்துக்கான தேசிய கொள்கைத் திட்டம் ஒன்றை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்வைத்திருக்கின்றார். 11 பக்கங்களைக் கொண்ட இந்தக் கொள்கைத் திட்டம் அமைச்சரவையின் அங்கீகாரத்துக்காக முன்வைக்கப்பட்டிருக்கின்றது. அதிகாரப் பகிர்வின் மூலம் அனைத்து இன மக்களினதும் அபிலாஷைகள் நிறைவு செய்யப்பட வேண்டும் என்பது இதில் தெரிவிக்கப்படும் முக்கிய அம்சமாகும். இருந்தபோதிலும், அரசியலமைப்புக்கான வழிநடத்தல் குழு ஒன்று தனியாகச் செயற்படுகின்றது. அந்தக்குழுவின் கீழ் அமைக்கப்பட்டுள்ள உப குழு ஒன்றுதான் அரசியலமைப்பில் இடம்பெற வேண்டிய அதிகாரப் பகிர்வு தொடர்பில் ஆராய்கின்றது. இந்தக்குழுவின் பரிந்துரை அரசியலமைப்பு குறித்த இடைக்கால அறிக்கையில் இடம்பெறக்கூடிய சாத்தியக்கூறுகள் காணப்படுகின்றது. இருந்த போதிலும், இது எவ்வாறானதாக அமையும் என்பது குறித்து இதுவரையில் உறுதியான தகவல் இல்லை.

இது குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்கள் ஏற்கனவே அரச தரப்புடன் பேச்சுக்களை நடத்தியிருப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது. கலாநிதி ஜெயம்பதி விக்கிரமநாயக்க இதில் முக்கியமான பாத்திரத்தை வகிப்பதாகவும் தெரிகின்றது. இந்தப் பேச்சுக்களின் அடிப்படையில்தான் "ஒற்றையாட்சிக்குள் சமஷ்டி" என்ற கருத்தை சம்பந்தன் முன்வைத்தரா என்பது தெரியவில்லை.  ஒற்றையாட்சி என்பதை விட்டுக்கொடுக்கும் நிலையில் அரசாங்கம் இல்லை என்பது வெளிப்படை. அவ்வாறு விட்டுக்கொடுத்தால் சிங்களக் கடும் போக்காளர்களுக்கு அது வாய்ப்பைக்கொடுப்பதாகிவிடும் என்ற அச்சம் அவர்களுக்கு உள்ளது. கிடைக்கப்பெறும் தீர்வை தம்மால் தமிழ் மக்கள் மத்தியில் 'விற்பனை' செய்ய முடிந்தால் மட்டுமே அடுத்த தேர்தல்களை தனித்துச் சந்திக்க முடியும் என்பது தமிழரசுக் கட்சிக்குத் தெரியும். அதனால் ஏதோ ஒரு வகையில் இதற்கான அழுத்தத்தை அவர்கள் அரசாங்கத்துக்குக் கொடுக்க வேண்டியிருக்கும். பான் கீ மூனுடனான பேச்சுக்களில் கடும் தொனியில் சம்பந்தன் கதைத்தது கூட இதற்காக இருக்கலாம்.

இந்தியாவின்
அணுகுமுறை

புதிய அரசியலமைப்பு உருவாக்கம் மற்றும் தமிழ் மக்கள் பேரவையின் செயற்பாடுகள் போன்றவற்றை புதுடில்லி நுணுக்கமாக அவதானித்துக்கொண்டிருப்பதாக இராஜதந்திர வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அரசாங்கத்துடன் அதிகளவுக்கு "என்கேஜ்ட்" ஆக இருக்குமாறு கூட்டமைப்புக்கு புதுடில்லி ஏற்கனவே அறிவுறுத்தியிருந்தது. அதன்மூலமாகவே தேசியப் பிரச்சினைத் தீர்வுக்கான அழுத்தங்களைக் கொடுக்க முடியும் என புதுடில்லி கருதுகின்றது. மறுபுறத்தில் பேரவையினால் நடத்தப்பட்ட "எழுக தமிழ்" பேரணி குறித்த தகவல்களும் உடனுக்குடன் யாழ்ப்பாணத்திலிருந்து புதுடில்லிக்குத் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது. எழுக தமிழ் பேரணியை புதுடில்லி "பொஸிட்டிவ்"வாகவே பார்த்ததாக பேரவையின் பிரமுகர் ஒருவர் குறிப்பிட்டார்.

"தென்னிலங்கையிலிருந்து எதிர்புக் குரல்கள் வருகின்றன என்பதற்காக தமிழர்களுடைய அபிலாஷைகளை வெளிப்படுத்துவதை அடக்கிவைத்திருக்கத் தேவையில்லை" என்ற அர்த்தத்தில் இந்தியத் தரப்பிலிருந்து பேரவையின் பிரமுகர் ஒருவருக்குத் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது. பேரணி முடிவடைந்த பின்னர் இந்தியத் தரப்பினர் அது தொடர்பில் பேரவையின் பிரமுகர்களுடன் பேசியிருப்பதாகவும் தெரியவந்திருக்கின்றது. அதன்போது பேரணி தொடர்பில் ‘பொசிட்டிவ்’வான கருத்தையே இந்தியத் தரப்பு முன்வைத்ததாகத் தெரிவிக்கப்படுகின்றது.

கொழும்பின் அதிகாரம் மாறிய பின்னரும் சீனா தொடர்பான கொழும்பின் அணுகுமுறையில் பெரியளவிலான மாற்றம் ஏற்படாதது புதுடில்லிக்கு ஏமாற்றத்தையே கொடுத்திருக்கின்றது. கொழும்பு துறைமுக நகரத் திட்டத்தை தொடர்ந்து முன்னெடுப்பதற்கு சீனாவுக்கு அனுமதி வழங்கப்பட்டிருக்கின்றது. இதற்காக சீனாவின் கப்பல்கள் கொழும்புத் துறைமுகத்தை நோக்கி வரத் தொடங்கியுள்ளன. சம்பூரில் இந்தியாவுக்கு வழங்கப்படவிருந்த அனல் மின் திட்டம் ரத்துச் செய்யப்பட்டிருக்கின்றது. பாகிஸ்தானுடனான முறுகல் நிலை தீவிரமடைந்திருப்பதால் பதற்றமடைந்திருக்கும் புதுடில்லியைப் பொறுத்தவரையில் கொழும்பின் இந்தச் செயற்பாடுகள் சீற்றத்தை ஏற்படுத்துவதாக அமையலாம். இவ்வாறான நிலையில் கொழும்பை வழிக்குக் கொண்டுவர தமிழர் தரப்பை புதுடில்லி கையாள்வது வழமை. பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இந்த வார ஆரம்பத்தில் இந்தியாவுக்கு மேற்கொண்ட விஜயத்தின் போதுகூட இவற்றுக்கு விளக்கமளிக்க வேண்டியவராக இருந்துள்ளார்.

இந்தியா மற்றும் சர்வதேச அழுத்தங்கள் காரணமாக தமிழ் மக்கள் ஏற்றுக்கொள்ளத்தக்க தீர்வு ஒன்று முன்வைக்கப்பட்டாலும் கூட, சர்வஜன வாக்கெடுப்புக்கு அது முன்வைக்கப்படும் போது அதன் எதிர்காலம் என்னவாகும் என்பது கேள்விக்குறிதான்! ஒவ்வொரு தடைகளையும் தாண்டி வந்தாலும் அந்தத் தடையைத் தாண்டுவதில் ஏற்படக்கூடிய நெருக்கடி தமிழரசுக் கட்சியின் எதிர்பார்ப்புக்களையும் தகர்த்துவிடலாம்.

ஞாயிறு தினக்குரல்: 2016-10-09