Monday, March 1, 2010

நட்சத்திர அரசியல்..

பொதுத் தேர்தலுக்கான வேட்பமனு கோரப்பட்ட உடனடியாகவே மூத்த அரசியல்வாதிகள் பலருக்கும் இந்தக் காலத்தில் பதற்றம் தொற்றிக்கொள்கின்றது. தேர்தல் காலங்களில் அனுபவம்வாய்ந்த அரசியல்வாதிகளுக்கொல்லாம் அதிகளவு "மௌவுசு" இருந்தது அந்தக் காலம். ஆனால் அந்தப் போக்கில் அண்மைக்காலங்களில் ஒரு மாற்றம் வந்துவிட்டது. திரைஉலக- விளையாட்டுத்துறை நட்சத்திரங்கள் தேர்தல் களத்தில் குதிப்பதால் மூத்த அரசியல்வாதிகள் ஓரங்கட்டப்படும் போக்கு ஒன்று இன்று ஏற்பட்டிருக்கின்றது.
மாகாண சபைத் தேர்தல்களுடன் ஆரம்பமான இந்தப் போக்கு இப்போது பாராளுமன்றத் தேர்தலின் போதும் பிரதிபலித்திருக்கின்றது. கிரிக்கெட் வீரர் சனத் ஜயசூரிய, ஓட்ட வீராங்களை சுசந்திகா ஆகியோர்தான் இம்முறை விளையாட்டு அரங்கிலிருந்து அரசியல் அரங்குக்குப் பிரவேசித்திருக்கின்றார்கள். ஏற்கனவே அர்ஜூனா ரணதுங்க அரசியல் அரங்கில் இருக்கின்றார். சிறிலங்கா சுதந்திரக் கட்சியில் இணைந்த அவர் இப்போது ஜே.வி.பி.க்கும் சரத் பொன்சேகாவுக்கும் இடையில் தடுமாறிக்கொண்டிருக்கின்றார்.
சிங்கள சின்னத்திரை நடிகையான உபாக்ஷா சுவர்ணமாலியும் இம்முறை தேர்தல் களத்தில் குதிக்கின்றார். சர்ச்சைக்குரிய சிங்கள நடிகையான இவர் கம்பஹா மாவட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சியின் யானை சின்னத்தில் போட்டியிடுகின்றார். கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போது ஜெனரல் சரத் பொன்சேகாவை ஆதரிக்கும் பிரச்சாரத்தில் ஈடுபட்டமையால் இவர் சர்ச்சைகளுக்கு உள்ளாக்கப்பட்டிருந்தார். சின்னத்திரையின் கவர்ச்சி வாக்குகளை அறுவடை செய்வதற்கு எந்தளவுக்கு உதவப் போகின்றது என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.
இந்த இடத்தில்தான் இரண்டு கேள்விகள் எழுகின்றன. ஒன்று - இந்த விளையாட்டுத்துறை அல்லது திரை உலக நட்சத்திரங்களை கட்சித் தலைமைகள் தேடிச் சென்று அவர்களுக்கு ஆசனங்களை வழங்குவது எதற்காக? இரண்டு - இந்த நட்சத்திரங்கள்; அரசியலுக்குள் நுளைய விரும்புவது எதனால்?
நடிகர்களாலும் நாடாள முடியும் என முதன்முதலில் நிரூபித்துக்காட்டியவர் யார் என சரித்திரத்தைப் புரட்டிப் பார்த்தால் முன்னணியில் இருப்பவர் எம்.ஜி.ஆர்.தான். திரைப்பட்டத்தில் தான் பெற்றிருந்த செல்வாக்கை சற்றும் குறையாமல் அரசியலிலும் பெற்றுக்காட்டியவர் அவர் மட்டும்தான். தி.மு.க. விலிருந்து கலைஞர் கருணாநிதியால் வெளியேற்றப்பட்டபோது தமிழகத்தின் அரசியல் வரலாற்றையே இந்த நடிகரால் மாற்றியெழுத முடியும் என யாருமே நினைக்கவில்லை.
எம்.ஜி.ஆர். உயிருடன் இருக்கும் வரையில் முதல்வர் பதவிக்கான ஆசனத்தை கலைஞரால் நினைத்துக்கூட பார்க்க முடியவில்லை. எம்.ஜி.ஆரின் மறைவுக்குப் பின்னரும் அவரது பெயரை உச்சரித்துத்தான் ஜெயலலிதா ஆட்சியைக் கைப்பற்றினார்.
நடிப்பின் மூலமாகப் பெறக்கூடிய மக்களின் அபிமானத்தை அரசியலிலும் பிரயோகிக்க முடியும் என்பதற்கு எம்.ஜி.ஆர்.தான் முன்னோடி. ஆனால் எம்.ஜி.ஆரைப் பின்பற்றிய பலரும் மண்ணைக் கௌவ்வியதுதான் வரலாறாகிவிட்டது. எம்.ஜி.ஆரிடம் இருந்த அந்த வசீகர சக்தி அரசியல் அபிலாஷையைக் கொண்டிருந்த வேறு எந்தவொரு நடிகரிடமும் இருக்கவில்லை என்பது உண்மை.
அரசியலுக்கு அப்பால் மக்களால் போற்றப்படும் கதாநாயகர்களாக இருப்பவர்கள் யாரெனப் பார்த்தல். திரை உலக - விளையாட்டு உலக நட்சத்திரங்கள்... மற்றும் இப்போது இராணுவ அதிகாரிகள் அல்லது தளபதிகள். இவர்கள்தால் தலைமை வழிபாட்டுக்குரியவர்களாக இலங்கையில் உள்ளர். இவ்விதமாக ~ஹீரோ வேர்ஷிப்| தெற்காசிய நாடுகளில் காணப்படும் ஒரு பண்பாக உள்ளது. அது ஒரு கலாசாரமாக மாறிவருகின்றது எனவும் சொல்லலாம்.
மக்களின் இந்தப் பலவீனத்தை தமது அரசியல் நலன்களுக்குப் பயன்படுத்தும் முயற்சியாகத்தான் கட்சித் தலைமைகள் வசீகரமிக்க நட்சத்திரங்களை தேர்தல் களத்தில் இறக்குகின்றன. அதாவது இந்த நட்சத்திரங்களுக்கு கண்மூடித்தனமான ஒரு ரசிகர் கூட்டம் உள்ளது. அதனால் அவர்களை தேர்தல் களத்தில் இறக்கினால் - அவர்களின் பின்னாலுள்ள ரசிகர் கூட்டம் தமது கட்சிக்குப் பின்னால் வந்துவிடும் என்ற எதிர்பார்ப்புடன் கட்சித் தலைமைகள் செயற்படுகின்றன.
அரசியலைப் பொறுத்தவரையில் ~கொள்கை|கள் முக்கியத்துவத்தைப் பெற்றுக்கொள்ளாத ஒரு நிலைதான் இன்றுள்ளது. ஐ.தே.க.வும் ஜே.வி.பி.யும் எந்தக் கொள்கையின் அடிப்படையில் ஜனாதிபதித் தேர்தலில் இணைந்தன எந்தக் கொள்கை முரண்பாட்டால் இப்போது பிரிந்து நிற்கின்றன எனக் கேட்டால் பதில் சொல்லக் கூடியவர்கள் யார் உள்ளனர்?
ஆக கட்சித் தலைமைகளின் ஆளுமைகளே முக்கிய விடயங்களைத் தீர்மானிக்கும் காரணியாக இன்றுள்ளது. திரை, விளையாட்டு உலக நட்சத்திரங்களை தமது கட்சிக்குள் கொண்டுவருவதற்காக வலைவீசும் கட்சித் தலைமைகள் குறிப்பிட்ட நட்சத்திரங்களின் கொள்கைகளையிட்டுக் கவலைப்படுவதில்லை. அவர்களுக்கு அவ்வாறு ஒரு கொள்கை இருப்பதில்லை என்பது வேறு விடயம்.
இலங்கையைப் பொறுத்தவரையில் அரசியலில் பிரவேசித்து வெற்றிபெற்ற நடிகர்கள் எனக் கூறினால் இருவரைக் குறிப்பிடலாம். ஒருவர் விஜயகுமாரதுங்க. மற்றவர் - காமினி பொன்சேகா. இதில் விஜய் சுதந்திரக் கட்சியில் இணைந்து அரசியல் வாழ்வை ஆரம்பித்த போதிலும் பின்னர் சிறிமாவோ பண்டாரநாயக்கவுடன் முரண்பட்டு தனிக் கட்சியைத் தொடங்கியவர்.
ஆனால், அவரது துரதிஷ்டம் எந்தவொரு தேர்தலையும் சந்திப்பதற்கு முன்பாகவே 1988 பெப்ரவரியில் அவர் சுட்டுக்கொல்லப்பட்டடுவிட்டார். அரசியலிலும் வசீகரம் மிக்க ஒரு தலைவராக தன்னை நிலைப்படுத்திக்கொண்ட விஜய் கொல்லப்படாதிருந்தால் இலங்கை அரசியலில் ஒரு திருப்பத்தை ஏற்படுத்தியிருப்பார். விஜயைத ; தொடர்ந்து அரசியலில் குதித்த சிங்கள நடிகர்களால் அவரளவுக்கு மக்கள் ஆதரவைப் பெற்றுக்கொள்ள முடியவில்லை.
இப்போது களம் இறங்கும் திரைப்பட- விளையாட்டுத் துறை நட்டத்திரங்கள் சிறு சலசலப்பை ஏற்படுத்துவதற்கு அப்பால் அரசியலில் எந்தவிதமான தாக்கத்தையும் ஏற்படுத்தக் கூடியவர்களா இல்லை. காரணம் அவர்களிடம் எந்தவிதமான அரசியலும் இல்லை.
தென்மாகாண rபைக்கான தேர்தலில் கடந்த வருடம் போட்டியிட்ட பிரபல சிங்களத் திரைப்பட நடிகை அனார்கலி அரசியலில் ஏற்படுத்திய சலசலப்புக்கு அப்பால் அவரால் எதனையுமே செய்ய முடியவில்லை என்பது தெளிவாகவே தெரிந்தது. அத்துடன் உட்கட்சிப் பூசலாக விருப்பு வாக்குகளுக்கான போட்டிகளுக்கும் இந்தத் திரை உலக நட்சத்திரங்களின் வருகை காரணமாகிறது.
திரை மற்றும் விளையாட்டு உலக நட்சத்திரங்களை வாக்கு வங்கிகளைக் கவர்வதற்கான ஒரு கவர்ச்சிப் பொருளாக மட்டுமே கட்சித் தலைமைகள் கருதுகின்றன.
இந்த நட்சத்திரங்களைப் பொறுத்தவரையில் திரை மற்றும் விளையாட்டு உலகில் மக்களை வசீகரிக்கும் வகையில் அவர்கள் பெற்றிருக்கும் சக்தி அவர்களுக்கு ஒரு மயக்கத்தைக் கொடுக்கின்றது. அந்தத் துறைகளிலிருந்து தாம் ஓய்வு பெறும் போது அந்த வசீகர சக்தி அவர்களை விட்டுச் சென்றுவிடும். அதனால் அதனைத் தக்க வைப்பதற்கான ஒரு உபாயமாக அவர்கள் அரசியலில் பிரவேசிக்கின்றார்கள்.
இந்த நட்சத்திரக் கவர்ச்சி அரசியலில் ஆரோக்கியமற்ற ஒரு போக்கைத்தான் உருவாக்கியுள்ளது.