Friday, November 11, 2011

வன்னியில் பிரபலமடைந்துவரும் குடிசைக் கைத்தொழில்கள் முயற்சிகள்

இலங்கையின் வடபகுதியில் போரினால் பாதிக்கப்பட்டு மீளக் குடியேறியவர்கள் மத்தியில் ஒரு மாற்றுத் தொழிலாக கோழி வளர்ப்பு, வீட்டுத் தோட்டம், தேனீ வளர்ப்பு என்பன பிரபலமடைந்துவருவதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றார்கள்.

"கோழி வளர்ப்புக்காகவும், வீட்டுத் தோட்டங்களைச் செய்வதற்காகவும் பெருமளவு விண்ணப்பங்கள் எமக்குக் கிடைத்திருக்கின்றன" என இலங்கை வங்கியின் பிராந்திய முகாமையாளரான பிரேம்குமார்  IRIN  செய்திச் சேவைக்கு வவுனியாவில் தெரிவித்தார்.

"வேலைவாய்ப்புக்களைப் பெற்றுக்கொள்வது கடினமாகியிருக்கும் நிலையில், சொந்தமாக சிலவற்றை ஆரம்பிப்பதில் மக்கள் அக்கறைகாட்டுகின்றார்கள்" எனவும் குறிப்பிடும் அவர், வாய்ப்புக்கள் அதிகமாக உள்ள துறைகளை அவர்கள் தெரிவு செய்கின்றார்கள் எனவும் சுட்டிக்காட்டுகின்றார்.

இவ்வாறு வேலைவாய்ப்புக்கள் உருவாக்கப்படுவதால், வேலையற்றோரின் தொகை 20 வீதமாகக் குறைவடைந்திருப்பதாகக் குறிப்பிடும் அரசாங்க அதிகாரிகள், முன்னர் போர் இடம்பெற்ற பகுதிகளில் விருமானத்தைப் பெற்றுத் தரும் துறைகளில் குடிசைக் கைத்தொழில்கள் முக்கிய இடத்தைப் பெற்றுக்கொள்வதாகவும் குறிப்பிடுகின்றார்கள்.

"இவ்வாறு குடிசைக் கைத்தொழில்களில் ஈடுபடுபவர்கள் விருமானத்தைப் பெற்றுத் தரும் முயற்சிகளில் முக்கியமான ஒரு இடத்தைப் பெற்றுக்கொண்டிருக்கின்றார்கள்" என வவுனியா அரசாங்க அதிபர் சார்ள்ஸ் தெரிவிக்கின்றார்.

இவ்வாறு வன்னி மக்கள் தெரிவு செய்யும் குடிசைக் கைத்தொழில்களின் வரிசையில் கோழி வளர்ப்புதான் முதலாவது இடத்தில் இருக்கின்றது. "கோழி வளர்ப்பை மேற்கொள்பவர்களுக்கு உடனடியான சந்தை வாய்ப்புக்கள் இருப்பதுதான் இதற்குக் காரணம். இதனை மேற்கொள்பவர்கள் போக்குவரத்துப் பிரச்சினைகளையிட்டு கூட பெரிதாகக் கவலைப்பட வேண்டிய தேவை இல்லை" எனவும் குறிப்பிடுகின்றார் வவுனியா வடக்கு பலநோக்குக் கூட்டுறவுச் சங்கத்தின் பொதுமுகாமையாளர் கனகசபாபதி உதயகுமார்.

ஒரு கிலோ கோழி இறைச்சி 350 ரூபாவுக்கு (3 அமெரிக்க டாலர்) விற்பனை செய்யப்படுகின்றது. அண்மையில் 200 கோழிகளை விற்பனை செய்ததன் மூலமாக பலநோக்குக் கூட்டுறவுச் சங்கத்துக்கே 80,000 ரூபா வருமானமாகக் கிடைத்தது.

"கிறிஸ்மஸ் நேரத்தில் இதனை 500 ஆக அதிகரிப்பதற்குத் தாம் திட்டமிட்டிருப்பதாகவும் உதயகுமார் தெரிவித்தார்.

முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள ஆலங்குளம் பகுதியில் 100 கோழிகளை விற்பனை செய்வதன் மூலமாக இதேபோன்ற வருமானத்தைப் பெற்றுக்கொள்ளக் கூடியதாக இருக்கும் எனவும் செல்வகுமார் அருந்தா என்ற பெண் தெரிவிக்கின்றார். சுமார் 30,000 ரூபா முதலீட்டுடன் கோழிப்பண்ணை ஒன்றை 2010 ஆம் ஆண்டு ஆரம்பித்த இவர் இதில் தொழில் புரிவதற்காக ஆறு பெண்களை நியமித்திருக்கின்றார். இப்போது அவர்கள் ஒவ்வொருவரும் தினசரி சுமார் 250 ரூபா உழைக்கின்றார்கள்.

மேலும் சில பெண்கள் இதேபோன்ற ஒரு முயற்சியை ஆரம்பித்திருக்கின்றார்கள். ஆனால், இவர்கள் காய்கறித் தோட்டம் ஒன்றை இதேபோல ஆரம்பித்திருக்கின்றார்கள். அடுத்த முறை புகையிலை உற்பத்தியில் ஈடுபடப்போவதாகத் தெரிவிக்கும் தங்கராஜா சிவா, இதன் மூலமாக தம்மால் அதிகளவு வருமானத்தைப் பெற்றுக்கொள்ளக் கூடியதாக இருக்கும் எனவும் குறிப்பிடுகின்றார்.

No comments:

Post a Comment