Saturday, November 5, 2011

வட, கிழக்கில் அரசின் சிங்கள மயக் கொள்கை: மனோ கணேசன் குற்றச்சாட்டு

பிரதேச, மாவட்ட எல்லைகளை மாற்றுதல், பௌத்த புனித பிரதேசங்கள் மற்றும் பௌத்த விகாரைகள் கட்டுவித்தல், புதிய சிங்கள குடியிருப்புகளை ஏற்படுத்துதல், இராணுவத்தினருக்கு குடும்பங்களுடன் கூடிய இராணுவ குடியிருப்புகளை ஏற்படுத்துதல், பித்தலாட்ட அகழ்வாராச்சி நடவடிக்கைகளை முன்னெடுத்தல், அரச நிர்வாக கட்டமைப்புகளில் அதிரடி மாற்றங்களை ஏற்படுத்துதல் ஆகியவை மூலமாக பௌத்த சிங்களமய கொள்கையை இந்த அரசாங்கம் முன்னெடுக்கின்றது என ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் குற்றஞ்சாட்டியுள்ளார்.

அரசாங்கத்தின் இந்த திட்டமிட்ட சிங்கள மயமாக்கல் நடவடிக்கைகளுக்கு எதிராக தமிழர் தலைமை தேசிய, சர்வதேசிய போராட்டங்களை முனைப்புடன் முன்னெடுக்க வேண்டும். வடகிழக்கு மக்களின் தலைமைகள் போராட்டங்களை முன்னெடுக்கும் போது அவற்றுக்கு துணையாக செயற்படுவதற்கு நாங்கள் தயாராகவே இருக்கின்றோம் எனவும் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

கொழும்பு வாரப் பத்திரிகை ஒன்றுக்களித்திருக்கும் பேட்டி ஒன்றில் நடைபெற்ற உள்ளுராட்சிமன்றங்களுக்கான தேர்தல் முடிவுகள், வடக்கு கிழக்கு நிலை உட்பட பல விடயங்கள் தொடர்பாகவும் மனோ கணேசன் கருத்து வெளியிட்டார். அவரது பேட்டியின் விபரம்:

நடைபெற்று முடிந்த உள்ளுராட்சி மன்றத் தேர்தல்களில் குறிப்பாக நீங்கள் போட்டியிட்ட கொழும்பில் கிடைத்துள்ள பெறுபேறுகளை எவ்வாறு நோக்குகின்றீர்கள்?

2001ம் வருடம் ஸ்தாபிக்கப்பட்ட எமது கட்சி 2002ம் வருடத்தில் நடைபெற்ற கொழும்பு மாநகரசபைத் தேர்தலிலே முதன் முதலில் ஏணிச் சின்னத்தில் தனித்து போட்டியிட்டு 12,000 வாக்குகளுடன் மூன்று ஆசனங்களை பெற்றது. அதன் பின்னர் 2006ம் வருடம் நடைபெற்ற இதே மாநகரசபைக்கான தேர்தலில் 16,000 ஆயிரம் வாக்குகளுடன் நான்கு ஆசனங்களை பெற்றது. இம்முறை நடைபெற்ற தேர்தலில் 26 ஆயிரத்திற்கு மேற்பட்ட வாக்குகளுடன் 6 ஆசனங்களை பெற்றுள்ளோம். கடந்த முறையுடன் இதை ஒப்பிடும் போது 65 விகித வளர்ச்சியாகும். 

இதற்கு மேலதிகமாக தெகிவளை-கல்கிசை மாநகரசபையிலும், கொலொன்னாவை நகரசபையிலும் முதன் முறையாக ஆசனங்களை பெற்றுள்ளோம். ஒட்டு மொத்தமாக கொழும்பு மாவட்டத்தில் 30,000 வாக்குகளை நாங்கள் பெற்றுள்ளோம். கொழும்பு மாவட்டத்தில் உள்ள அவிசாவளை, மொரட்டுவை போன்ற இடங்களை வாழ்கின்ற தமிழர்களின் வாக்குகள் இந்த தொகையில் சேர்த்துக்கொள்ளப்படவில்லை. அதேபோல் சுமார் 44,100 (45 விகித) தமிழ் வாக்காளர்களே வாக்களிப்பில் கலந்துகொண்டுள்ளதாக வாக்குச் சாவடிகளிலிருந்து எமக்கு கிடைத்துள்ள தரவுகள் தெரிவிக்கின்றன. 

இதில் வழமையாக தமிழ் வாக்குகளை பெருவாரியாக பெறுகின்ற ஐக்கிய தேசியக் கட்சிக்கும், அதேபோல் ஆளுங்கட்சிக்கும் சுமார் 15 ஆயிரம் தமிழர்களே வாக்களித்துள்ளனர். முதன் முறையாக பெரும்பான்மை தேசியக் கட்சிகளைவிட ஒரு தமிழ் கட்சி என்ற முறையில் நாங்கள் அதிக தமிழ் வாக்குகளை பெற்றுள்ளோம். இவை அனைத்தும் கட்சி வளர்ச்சியின் அடையாளங்கள். இந்த பின்னணிகளில் பார்க்கும் பொழுது ஒரு கட்சி தலைவர் என்ற முறையில் எமக்கு கிடைக்கப்பெற்ற பெறுபேறுகளையிட்டு நான் திருப்தி அடைகின்றேன். ஆனால் ஒரு தமிழன் என்ற முறையிலே என்னால் திருப்தி அடைய முடியாது. இது ஏன் என்று நீங்கள் கேட்டால் பதில் கூறுவேன்.

நடைபெற்றது உள்ளுராட்சி மன்றத் தேர்தல்களாக இருந்தாலும், இதற்கு தேசிய ரீதியிலான முக்கியத்துவம் ஒன்று இருப்பதாக நீங்கள் கருதுகின்றீர்களா?

ஆம். இலங்கையில் போர் நடந்து முடிந்துவிட்ட நிலையில், இலங்கை அரசாங்கம் இன்று சர்வதேசத்தை எதிர்கொள்கின்றது. இந்நிலையில் சர்வதேசத்தை பார்த்து, நாங்கள் தமிழர்களுக்கு நியாயம் வழங்கவில்லையென நீங்கள் கூறுகிறீர்கள்: ஆனால் தமிழர்கள் எங்களுடன்தான் இருக்கின்றார்கள்: என்று சொல்ல வேண்டிய அவசியம் இன்று அரசாங்கத்திற்கு ஏற்பட்டுள்ளது. அதனால்தான் வடக்கிலும், கிழக்கிலும் நடைபெற்ற தேர்தல்களும் முக்கியத்துவம் பெற்றன. அதேபோலவே கொழும்பு மாவட்டத்தில் நடைபெற்ற தேர்தல்களும் தேசிய முக்கியத்துவம் பெற்றன. 

தமிழர்களை பொறுத்தவரையில் நாங்கள் அரசாங்கத்துடனோ அல்லது ஏனைய பெரும்பான்மை கட்சிகளுடனோ இல்லை: நாங்கள் தமிழ் தேசியத்தை முன்னெடுக்கும் ஜனநாயக மக்கள் முன்னணியுடன் இருக்கின்றோம் என்று எடுத்துக்காட்ட வேண்டிய தேவை ஏற்பட்டது. இந்த நோக்கத்தை நாங்கள் கணிசமான அளவு பல்வேறு சவால்களுக்கு மத்தியில் நிறைவேற்றி காட்டியிருக்கின்றோம். இதுதான் நான் காணும் சர்வதேசத்திற்கு செய்தி சொல்லகின்ற தேசிய முக்கியத்துவமாகும்.

கொழும்பிலும், தெகிவளை கல்கிசை மாநகரசபையிலும் உங்களுடைய ஜனநாயக மக்கள் முன்னணி இன்னும் அதிகப்படியான இடங்களைப் பெற்றிருக்க முடியும் என சில விமர்சகர்கள் கூறுகின்றார்கள். இது பற்றிய உங்கள் கருத்து என்ன?

உண்மைத்தான். அதனால்தான் எமது பெறுபேறுகள் தொடர்பிலே கட்சி ரீதியான திருப்தி எனக்கு இருந்தாலும், தமிழன் என்ற முறையிலே நான் திருப்தி அடையவில்லையென மேலே குறிப்பிட்டிருந்தேன். தமிழ் மக்களின் வாக்களிப்பு விகிதம் அதிகரித்திருக்குமேயானால் அதிகப்படியான வாக்குகளையும், ஆசனங்களையும் நாங்கள் பெற்றிருக்க முடியும். 

இதற்கு காரணம், நாடு முழுக்க வாழ்கின்ற தமிழர்களுக்கு இன்று பிடித்திருக்கின்ற ஒரு வியாதியாகும். கொழும்பு, தெகிவளை-கல்கிசையில் மாத்திரம் இது நடக்கவில்லை, கல்முனையிலும் நடந்திருக்கின்றது. முதலாம், இரண்டாம் கட்ட உள்ளுராட்சி சபைத் தேர்தல்களின் போது வடக்கில் வாக்காளராக பதிவு செய்யப்பட்டு, தேர்தல் தினங்களில் தமது வீடுகளில் இருந்த கணிசமானோர் வெளியேவந்து வாக்களிக்கவில்லை. 

இதுதொடர்பிலே தமிழ் கட்சிகளும், அரசியல் விமர்சகர்களும், ஊடகவியலாளர்களும், தமிழ் புத்திஜீவிகளும் இணைந்து தமிழர்கள் மத்தியிலேயே வாக்குரிமை தொடர்பிலான விழிப்புணர்வு இயக்கத்தை நடத்தவேண்டும். இது பற்றி ஏற்கனவே நான் கருத்து தெரிவித்திருக்கின்றேன். தமிழர்கள் கணிசமான அளவு நாட்டைவிட்டு வெளியேறிவிட்டோம். இதனால் எங்களுக்குரிய ஆசனங்களின் தொகைகள் குறைக்கப்படுகின்றன. இந்நிலையில் எங்களிடம் இருக்கின்ற ஒரே ஆயுதம் வாக்குச் சீட்டுத்தான். எனவே வேறேந்த சகோதர இனத்தவர்களைவிட வாக்குச் சீட்டை மிக அதிகப்பட்சமாக பயன்படுத்த வேண்டும்.

கொழும்பு மாநகரசையில் உங்களுடைய கட்சி 6 இடங்களைக் கைப்பற்றியிருந்தாலும், தீர்மானிக்கும் சக்தியாகியுள்ளது. இந்த நிலையில் மாநகரசையைக் கைப்பற்றியுள்ள ஐ.தே.க. தலைமையும், அரச தரப்பினரும் குறிப்பாக ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவும் உங்களுடன் பேசியுள்ளார்கள். அவர்கள் பேசிய விடயங்கள் தொடர்பாகவும், தீர்மானிக்கும் சக்தியாகவுள்ள நீங்கள் எதிர்காலத்தில் மாநகரசபையில் எவ்வாறான அணுகுமுறையைக் கையாள்வீர்கள் என்பதையும் கூற முடியுமா?

கொழும்பு மாநகரசபையில் எந்தவொரு கட்சியும் அறுதிப்பெருப்பான்மையை பெறவில்லை. மொத்தம் உள்ள 53 ஆசனங்களில் ஐதேக 24 ஆசனங்களை பெற்றுள்ளது. அரசாங்கம் 16 ஆசனங்களை பெற்றுள்ளது. முஸ்லிம் காங்கிரஸ், துவா மற்றும் சுயேட்சைக்குழு உட்பட 6  ஆசனங்களை சேர்த்து அரசாங்கத்தின் சக்தி 22 ஆக உயர்ந்துள்ளது. ஜேவிபியின் ஒரு ஆசனத்தை தவிர்த்து எமது 6 ஆசனங்களின் முக்கியத்துவம் தற்போது உணரப்பட்டுள்ளது.

பாராளுமன்றத்திலும், மாகாணசபையிலும் ஆட்சி அமைக்கும் கட்சி தனித்தோ அல்லது வேறுகட்சிகளை சேர்த்து கூட்டணியாகவோ பெரும்பான்மையை நிரூபித்தால் மாத்திரமே; ஆட்சி அமைக்க முடியும். ஆனால் இன்று நிலவுகின்ற உள்ளுராட்சி மன்ற சட்டத்தின்;படி அதிக ஆசனங்களை பெற்றுள்ள கட்சி மாநகரசபையில் நிர்வாகத்தை அமைத்து ஆட்சியை முன்னெடுக்கலாம். 

அதன்படி ஐதேகவின் நிர்வாகம் ஏற்படும். இதில் பிரச்சனையில்லை.  ஆனால் சட்டத்தில் திருத்தத்தை கொண்டுவந்து மாநகரசபையில் கூட்டணி ஆட்சியை ஏற்படுத்துவதற்கு அரசாங்கம் முயற்சிப்பதாக கதை காற்றுவாக்கில் அடிபடுகின்றது. இது ஐக்கிய தேசியக் கட்சிக்கு அபாய சங்கை ஊதுகின்றது. எங்களை பொறுத்தவரையில் நாங்கள் எமது மக்கள் எமக்கு வழங்கியுள்ள ஆணையின்படி நடந்துகொள்வோம். ஐக்கிய தேசியக் கட்சிக்கு நிபந்தனையற்ற ஆதரவை நாங்கள் வழங்க முடியாது. மாநகரசபையில் ஐதேக கொண்டுவரக்கூடிய  தீர்மானங்கள் மற்றும் அந்நிர்வாகத்தின் செயற்பாடுகள் ஆகியவற்றை ஒவ்வொன்றாக ஆய்வு செய்து எமது நிலைப்பாடுகளை வெளிப்படுத்துவோம்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக் தொலைபேசியில் என்னை அழைத்து எமது வெற்றிகளுக்காக எனக்கு தனது வாழ்த்துகளை தெரிவித்தார். அரசியல் நாகரீகத்தின் அடிப்படையில் அவருக்கு நான் எனது நன்றிகளை தெரிவித்தேன். தொலைபேசியில் பேசியதற்காக ஓடோடிவந்து அரசாங்கத்தில் நான் இணைந்துகொள்ளமாட்டேன் என்பது அவருக்கு நன்றாக தெரியும். எனவே அவரது தொலைபேசி அழைப்பில் வேறு எந்த அரசியல் அர்த்தத்தையும் நான் தேடவில்லை.

கடந்த காலங்களில் ஐதேகவிற்கு நிபந்தயைற்ற ஆதரவை வழங்கிவந்த நீங்கள். ஏன் தற்போது உங்களுடைய அணுகுமுறையை மாற்றிக்கொண்டுள்ளீர்கள்?

உங்களது கேள்வியிலேயே பதில் இருக்கின்றது. கடந்த காலங்களில் நாம் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து, ஐக்கிய தேசிய முன்னணி என்ற கூட்டணியில் இடம்பெற்றிருந்தோம். தற்சமயம் ஐதேமு என்ற கூட்டணி கிடையாது. அதை ஐக்கிய தேசியக் கட்சியே தன்னிச்சையாக உடைத்துக்கொண்டது. இதற்கு ஐக்கிய தேசியக் கட்சியில் உள்ள ஒரு சில அகம்பாவம்  பிடித்த பேரினவாத பிரிவினரே காரணம். இவர்கள் தமிழர்களை வாக்கு வங்கிகளாகவும், தமிழ் கட்சிகளை கிள்ளுக்கீரையாகவும் நினைக்கின்றார்கள். இதனாலேயே கூட்டணி உடைந்தது. 

கூட்டணி என்று ஒன்று இருந்தால், கூட்டணி கட்சிகளுக்கிடையிலே நிபந்தனையற்ற ஆதரவுகளை கொடுத்து, வாங்கிக்கொள்ளலாம். தற்சமயம் கூட்டணி கிடையாது. எனவே எமது ஆதரவை மாநகரசபையின் நிர்வாகத்தின் நடவடிக்கைகளை பொறுத்துத்தான் வழங்க முடியும்.

ஐக்கிய தேசியக் கட்சி உங்களிடம் ஆதரவு கோரவில்லையா?

இரகசியமாக ஆதரவு கோருகிறார்கள். ஆனால் பகிரங்கமாக வாய்சவடால்களை அடிக்கின்றார்கள்.  அதற்கு மேலதிகமாக ஐதேகவில் ஒரு ஆண்டுக்கு முன் வந்து இணைந்துகொண்ட ஆர்.யோகராஜன் என்ற தேசியப்பட்டியல் அரசியல்வாதி நமது கட்சியின் வெற்றியை கொச்சைப்படுத்தும் விதத்திலே கருத்து தெரிவித்து வருகின்றார்.  500 வாக்குகளைகூட திரட்ட முடியாத இந்நபர் என்மீது தனிப்பட்ட முறையில் காழ்ப்புணர்ச்சியும், பொறாமையும் கொண்டு தெரிவிக்கும் கருத்துகளை  ஐதேக தலைவர் ரணில் விக்கிரமசிங்க தனக்கு சம்பந்தமில்லை என்பதைப்போல் காட்டிக்கொள்கின்றார். 

இதைவிட, எமது கட்சியைவிட்டு விலகி ஐக்கிய தேசியக் கட்சியில் வந்து இணைந்துக்கொள்ளும்படி ரணில் விக்கிரமசிங்க அழைப்பு விடுத்ததாக எமது கட்சியில் மிக முக்கியப்பதவி அந்தஸ்தில் இருக்கும் ஒருவரிடம், ஆர்.யோகராஜன் சில தினங்களுக்கு முன்னர் கூறியிருக்கின்றார். அதுமட்டுமல்லாமல் எமது கட்சிக்கு துரோகம் செய்து அரசாங்கத்தில் சேர்ந்துள்ள ஒரு அரசியல்வாதியையும் ஐதேகவில் சேர்த்துக்கொள்வதற்கு ரணில் விக்கிரமசிங்கவும், ரவி கருணாநாயக்கவும் விரும்புவதாக யோகராஜன் மேலும் கூறியிருக்கின்றார். இத்தகைய அரைவேக்காட்டு நபர்களை வைத்துக்கொண்டுதான் ஐக்கிய தேசியக் கட்சி இன்று செயற்படுகின்றது.

தேர்தல் காலத்தில் எனக்கு எதிரான கருத்துக்களை தெரிவித்திருந்தாலும்கூட கொழும்பு மாநகரசபையின் முதல்வராக தெரிவு செய்யப்பட்டுள்ள முஸாமில் எனது நல்ல நண்பர். உண்மையில் அரசியல் பக்குவமற்ற தனிப்பட்ட நிகழ்ச்சிநிரல்களை கொண்ட நபர்கள் மத்தியில் இன்று முஸாமில் சிக்கிக்கொண்டுள்ளார். இத்தகைய நபர்கள் தொடர்பிலும் அரசாங்கத்தில் இரகசிய தொடர்புகள் கொண்டுள்ள சில ஐதேககாரர்கள் தொடர்பிலும் கவனமாக இருக்கும்படி சில தினங்களுக்கு முன்னர் அவருக்கு நான் ஆலோசனை கூறினேன்.

மாநகரசபையில் நிர்வாகம் பொறுப்பேற்கப்பட்டு சபை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் பொழுது ஜனநாயக மக்கள் முன்னணியின் நிலைப்பாடுகள் தெளிவாக தெரியவரும்.  எமது கட்சியின் ஆரவு தமக்கு தேவையென்றால் அதை ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் அதிகாரப்பூர்வமாக எமக்கு தெரிவிக்க வேண்டும். 

அதுவே அரசியல் நாகரீகமாகும். அத்தகைய  ஆதரவு அதிகாரப்பூர்வமாக கோரப்படவில்லை. மேலும் எமது ஆதரவு தேவையில்லை என ஊடகங்களில் சில ஐதேககாரர்கள் சொல்கிறார்கள். அதற்கு மேல் எமது கட்சியை அழிப்பதற்கு சதிவேலைகளையும் ஐக்கிய தேசியக் கட்சியின் சில மர்ம மனிதர்கள் செய்கிறார்கள். இந்நிலையில் விழுந்தடித்துக்கொண்டு சென்று ஐக்கிய தேசியக் கட்சிக்கு நிபந்தனையற்ற ஆதரவை வழங்க முடியுமா? நாம் அவ்விதம் தன்மானத்தை இழந்து செயற்படுவதற்கு எமக்கு வாக்களித்த தன்மான தமிழர்கள் உடன்படமாட்டார்கள்.

வடக்கு கிழக்கில் காணப்படும் நிலைமைகள் தொடர்பில், குறிப்பாக அங்கு இடம்பெற்றுவருவதாகக் கூறப்படும் சிங்களக் குடியேற்றங்கள் தொடர்பில் உங்களுடைய நிலைப்பாடு என்ன?

இந்த அரசாங்கம் விடுதலை புலிகளின் இராணுவ தோல்வியை, தமிழ் மக்கள் தோல்வியாக மாற்றிக்காட்ட முயற்சி செய்கின்றது. முஸ்லிம்களையும் அடக்கி ஆள்வதற்கு முனைப்புடன் செயற்படுகின்றது. கூட்டமைப்பையும், எமது கட்சியையும் தவிர ஏனைய அனைத்து தமிழ் கட்சிகளும் அரசாங்கத்துடன் சங்கமமாகி இருக்கின்றன. முஸ்லிம் மக்கள் தொடர்பிலே குரல் எழுப்புவதற்கு எந்தவொரு முஸ்லிம் கட்சியும் கிடையாது. 

இதை ஏன் கூறுகின்றேன் என்றால் தமிழ் பேசும் மக்களை வெற்றி பெற்றுவிட்டோம் எனவும், இந்நாடு சிங்கள நாடு எனவும் பொருள் கொண்ட கருத்தை தமிழ், முஸ்லிம் மக்கள் மனங்களிலே திணிப்பதற்கு இந்த அரசாங்கம் முயற்சி செய்கின்றது. இவ்வடிப்படையில்தான் அம்பாறையிலும், திருகோணமலையிலும் நீண்ட காலத்திற்கு முன்னரே தமிழ் பேசும் மக்களின் காணிகள் பறிபோய்விட்டன.

மட்டக்களப்பு, வவுனியா, முல்லைத்தீவு, மன்னார் ஆகிய மாவட்டங்களிலும் இந்த முயற்சிகள் தற்சமயம் முனைப்புடன் முன்னெடுக்கப்படுகின்றன. பிரதேச, மாவட்ட எல்லைகளை மாற்றுதல், பௌத்த புனித பிரதேசங்கள் மற்றும் பௌத்த விகாரைகள் கட்டுவித்தல், புதிய சிங்கள குடியிருப்புகளை ஏற்படுத்துதல், இராணுவத்தினருக்கு குடும்பங்களுடன்கூடிய இராணுவ குடியிருப்புகளை ஏற்படுத்துதல், பித்தலாட்ட அகழ்வாராச்சி நடவடிக்கைகளை முன்னெடுத்தல், அரச நிர்வாக கட்டமைப்புகளில் அதிரடி மாற்றங்களை ஏற்படுத்துதல் ஆகியவை மூலமாக இத்தகைய பௌத்த சிங்களமய கொள்கையை இந்த அரசாங்கம் முன்னெடுக்கின்றது.

தற்சமயம் நிகழ்ந்துள்ள மன்னார் அரச அதிபர் மாற்றத்திற்கு பின்னால் தீய நோக்கம் இருக்கின்றது. திருக்கேதிஸ்வர ஆலயப்பகுதியில் அகழ்வாராச்சி வேலைகள் நடைபெறப்போகின்றன என்ற செய்திகள் வெளியாகியுள்ளன. முல்லைத்தீவு கரையோரங்களில் சிங்கள மீன்பிடி கிராமங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. இவை தொடர்பாக தமிழர் தலைமை தேசிய, சர்வதேசிய போராட்டங்களை முனைப்புடன் முன்னெடுக்க வேண்டும். வடகிழக்கு மக்களின் தலைமைகள் போராட்டங்களை முன்னெடுக்கும் போது அவற்றுக்கு துணையாக செயற்படுவதற்கு நாங்கள் தயாராகவே இருக்கின்றோம்.

உள்ளுராட்சி மன்றத் தேர்தல்களில் தனித்துப் போட்டியிட்டிருந்தாலும், எதிர்காலத்தில் வரக்கூடிய மாகாண சபை மற்றும், பாராளுமன்றத் தேர்தல்களையும் இதேவகையில் உங்களால் எதிர்கொள்ளக் கூடியதாக இருக்குமா?

ஒன்றை நீங்கள் தெளிவாக புரிந்துகொள்ள வேண்டும் எப்போதும் நாங்கள் தனித்துத்தான் போட்டியிடுகின்றோம். எமது சின்னத்தில் போட்டியிட்டாலும், கூட்டணி சின்னத்தில் போட்டியிட்டாலும் எமது செயற்பாடு எப்போதும் தனித்துத்தான் இருந்து வருகின்றது. நடைமுறையில் உள்ள தேர்தல் சட்டங்கள் காரணமாக நாம் வேறுகட்சிகளுடன் கூட்டு சேரவேண்டிய நிர்பந்தத்திற்கு தள்ளப்படுகின்றோம். வடகிழக்கிற்கு வெளியே தமிழர்கள் சிறுபான்மையாக வாழும் பகுதிகளில் நாம் தேர்தல் உடன்பாடுகளை சில பெரும்பான்மை கட்சிகளுடன் ஏற்படுத்தி செயற்பட்டிருக்கி;ன்றோம். 

கொழும்பு மாநகரசபைத் தேர்தலை எடுத்துக்கொண்டால் கடந்த காலங்களில் எல்லாம் தனித்துத்தான் போட்டியிட்டிருந்தோம். அப்பொழுது எல்லாம் எம்மை எவரும் கண்டுகொள்ளவில்லை. ஆனால் இம்முறை எமது இந்த தனித்த போட்டி பலருக்கு கோபத்தை ஏற்படுத்தியிருந்தது. நாம் தனித்து போட்டியிடமால், எமது வேட்பாளர்களை தமது பட்டியலில் போட்டியிட வைக்க வேண்டுமென ஐதேக நினைத்தது. அரசாங்கத்தை தோற்கடிப்பதற்காக  நாம் ஒன்று சேரவேண்டும் என இதற்கு அவர்கள் காரணம் கூறினார்கள். 

ஆனால் அதற்காக எந்த விட்டுக்கொடுப்புக்கும் அவர்கள் தயாராக இருக்கவில்லை. ஐதேக பட்டியலில் போட்டியிட வேண்டும் என்றால் நமது வேட்பாளர்கள் அக்கட்சியின் உறுப்புரிமையை பெற்றுக்கொள்ள வேண்டும் என கூறினார்கள். இதை ஒரு தன்மானமுள்ள தனித்துவமான தமிழ் கட்சியின் தலைவன் என்ற முறையிலே என்னால் ஏற்றுக்கொள்ள முடியுமா? ஆகவேதான் நாங்கள் அதை நிராகரித்து தனித்து போட்டியிட்டோம். எமது பலத்தை எம்மாலேயே உணர்ந்து கொள்ளும் அளவிற்கு கணிசமான வாக்குகளை பெற்றுக்கொண்டுள்ளோம். 

ஆகவே எப்போதும் நாங்கள் அரசியல் ரீதியாக தனித்துத்தான் செயற்பட்டுக்கொண்டிருக்கின்றோம். தற்சமயம் கொழும்பு மாவட்டத்தில் எமது ஏணிச்சினத்தின் கீழ் ஒரு இலட்சம் வாக்குகளை பெறுவதற்கு திட்டமிட்டு செயற்பட்டுக்கொண்டிருக்கின்றோம். நடைமுறை தேவைகள் காரணமாக எதிர்காலத்திலே வேறு கட்சிகளுடன் இணைந்து செயற்பட வேண்டும் என்றால்கூட அதற்கான ஒரே வழி ஐக்கிய தேசியக் கட்சியாக மாத்திரம் இருக்கப்போவதில்லை. கூட்டமைப்பு உட்பட தமிழ் கட்சிகளுடன் இணைந்து செயற்படுவது பற்றியும் எமது கட்சிக்குள்ளே கருத்து நிலவுகின்றது.

- பாரதி.
ஞாயிறு தினக்குரல்

No comments:

Post a Comment