Wednesday, November 9, 2011

'சார்க்' மாநாட்டிலும் இலங்கை விவகாரம்: பிளேக் தலைமையிலான குழு மாலே விரைவு

சார்க் நாடுகளின் உச்சி மாநாடு மாலைதீவில் நாளை வியாழக்கிழமை ஆரம்பமாகவிருக்கும் நிலையில் மாநாட்டு மண்டபத்துக்கு வெளியே தலைவர்கள் மட்டத்தில் இலங்கை இனப் பிரச்சினை உட்பட பல விடயங்கள் தொடர்பாகவும் முக்கியமாக ஆராயப்படவிருப்பதாக இராஜதந்திர வட்டாரங்கள் தெரிவித்தன. 


மாநாட்டில் ஆராயப்படும் விடயங்களைப் போலவே மாநாட்டு மண்டபத்துக்கு வெளியே இடம்பெறும் இந்தப் பேச்சுக்களின் போது ஆராயப்படவுள்ள விடயங்களும் முக்கியத்துவத்தப் பெறும் எனவும் இந்த வட்டாரங்கள் குறிப்பிடுகின்றன.

குறிப்பாக தெற்கு, மத்திய ஆசியப் பிராந்தியங்களுக்கான அமெரிக்க உதவி இராஜாங்கச் செயலர் றொபேட் ஓ பிளேக் தலைமையிலான குழுவொன்றும் இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக மாலைதீவு புறப்பட்டுள்ளது. அமெரிக்க குழு ஒன்று சார்க் உச்சி மாநாட்டில் பார்வையாளர்களாகக் கலந்துகொள்வது இதுதான் முதல் முறையல்ல. 2007 ஆம் ஆண்டு முதல் அமெரிக்காவுக்கு சார்க் உச்சி மாநாட்டில் பார்வையாளர் அந்தஸ்த்து வழங்கப்பட்டுள்ளது. 


பிளேக் தலைமையில் செல்லும் இந்தக் குழுவினருடன் இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ நடத்தவுள்ள பேச்சுக்களும், இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்குடன் ஜனாதிபதி மகிந்த நடத்தும் பேச்சுக்களும் இம்முறை சார்க் மாநாட்டுக்குப் புறம்பாக முக்கியத்துவம் பெறும் என எதிர்பார்க்கப்படுகின்றது.


சார்க் வெளிவிவகார அமைச்சர்களின் மாநாடு இன்று நடைபெறவிருக்கும் நிலையில் சார்க் நாடுகளின் தலைவர்கள் கலந்துகொள்ளும் உச்சி மாநாடு நாளை வியாழக்கிழமையும், நாளை மறுதினமும் மாலைதீவில் நடைபெறவுள்ளது. இந்த மாநாட்டில் இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட சார்க் அமைப்பில் அங்கம் வகிக்கும் ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், இந்தியா, பங்களாதேஸ், பூட்டான், நேபாளம், மாலைதீவு ஆகிய 8 நாடுகளின் தலைவர்கள் கலந்து கொள்ளவுள்ளனர். 
ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ


ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ இம்மாநாட்டில் பங்கு கொள்வதற்காக இன்று காலை கொழும்பிலிருந்து புறப்பட்டுச் சென்றுள்ளார். இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் உட்பட சார்க் நாடுகளின் தலைவர்கள் அனைவரும் இன்று மாலைதீவை வந்தடைவார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது. 

இந்த மாநாட்டில் பார்வையாளராக கலந்து கொள்ளவுள்ள அமெரிக்க குழுவுக்கு அமெரிக்காவின் உதவி இராஜாங்கச் செயலர் றொபேட் ஓ பிளேக் தலைமையேற்கவுள்ளார். சார்க் மாநாட்டில் பங்கேற்பதற்காக றொபேட் ஓ பிளேக் நேற்று மாலைதீவு பயணமானதாகவும், இவர் எதிர்வரும் 13ம் நாள் வரை அங்கு தங்கியிருப்பார் என்றும் அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் அறிவித்துள்ளது. 

சார்க் மாநாட்டில் பங்கேற்பதற்கும் அமெரிக்க குழுவில் இலங்கை மற்றும் மாலைதீவுக்கான அமெரிக்க தூதுவர் பற்றீசியா புற்ரெனிசும் இடம்பெறவுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த மாநாட்டில் பங்கேற்கும் தெற்காசிய நாடுகளின் தலைவர்கள் மற்றும் அதிகாரிகளுடன் அமெரிக்க அதிகாரிகள் விரிவான பேச்சுக்களை நடத்தவுள்ளதாகவும் இராஜாங்கத் திணைக்களம் கூறியுள்ளது. 

ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அமெரிக்க உதவி இராஜாங்கச் செயலர் றொபேட் ஓ பிளேக் சந்தித்துப் பேசவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன்போது, இலங்கை அரசாங்கத்தினால் நியமிக்கப்பட்ட கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை, அதனை விரைவில் பகிரங்கப்படுத்துவது, அறிக்கையின் பரிந்துரைகளின் மீதான மேல் நடவடிக்கைகள் குறித்து அவர், ஜனாதிபதி மகிந்தவிடம் வலியுறுத்தவுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பிரதமர் மன்மோகன் சிங்
நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை எதிர்வரும் 15 ஆம் திகதி ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவிடம் கையளிக்கப்படவிருப்பதாக அறிவிக்கப்பட்டிருக்கின்றது. அதனை அடுத்த ஒரு சில தினங்களுக்குள் ஜனாதிபதி அதனைப் பகிரங்கப்படுத்துவார் என எதிர்பார்க்கப்படும் நிலையில், இந்த ஆணைக்குழுவின் அறிக்கை தொடர்பாக சர்வதேசத்தின் கவனம் முழுமையாகத் திரும்பியிருக்கின்றது.


இந்த நிலையில் றொபேர்ட் ஓ பிளேக் ஜனாதிபதியைச் சந்திப்பது ஜனாதிபதிக்கு அதிகளவு அழுத்தங்களைக் கொடுப்பதாக அமையும் என இராஜதந்திர வட்டாரங்கள் சுட்டிக்காட்டுகின்றன. 

இதேவேளையில், ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுடன் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் நடத்தவிருக்கும் பேச்சுக்களும் முக்கியமானதாக அமையும் என இராஜதந்திர வட்டாரங்கள் தெரிவித்தன. தமிழக மீனவர்கள் மீது தொடர்ச்சியாக நடத்தப்படும் தாக்குதல்கள் மற்றும் இனநெருக்கடிக்கான அரசியல் தீர்வு உட்பட்ட விடயங்களே இந்தப் பேச்சுக்களின் போது முக்கியமாக ஆராயப்படும் எனவும் இந்த இராஜதந்திர வட்டாரங்கள் தெரிவித்தன.  


தமிழக மீனவர்கள் மீது இலங்கைக் கடற்படை கடந்த வாரத்திலும் தாக்குதல்களை நடத்தியதாகக் குற்றஞ்சாட்டப்பட்டுவரும் நிலையில், இது தொடர்பாக இந்திய மத்திய அரசு கடுமையான நடவடிக்கையை எடுக்க வேண்டும் என தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா ஜெயராம் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு கடிதம் ஒன்றை அனுப்பிவைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


இந்தப் பின்னணியில் ஜனாதிபதி மகிந்தவுடனான பேச்சுக்களின் போது மீனவர் விவகாரம் முக்கியமாக பிரதமர் மன்மோகன் சிங்கினால் எழுப்பப்படும் என இந்திய இராஜதந்திரி ஒருவரை மேற்கோள் காட்டி இந்தியப் பத்திரிகை ஒன்று இன்று செய்தி வெளியிட்டுள்ளது. 

1 comment:

  1. SAARC
    SAARC- SRILANKA War Crimes against Humanity and Genocide Tamils
    Attacks Abraham, Moses, Buddha, Krishna, Zoroaster, Christ and Muhammad
    Oneness of the humAn family
    where disunity is increasingly Recognized as the ultimate source of danger and suffering
    Nation-building has come to an end and World unity is the goal towards which a harassed humanity is striving.

    ReplyDelete