Sunday, January 29, 2017

மகிந்த - முதலமைச்சர்கள் தோல்வியடைந்த சந்திப்பு

0 மைத்திரி தலைமையை ஏற்கவேண்டும்: முதலமைச்சர்களின் கோரிக்கை
0 ராஜபக்‌ஷ கேட்ட 'தீர்மானம் எடுக்கக்கூடிய' அதிகாரத்தைக் கொண்ட பதவி
0 அடுத்த மாகாண சபைத் தேர்தலையிட்டு அச்சமடையும் முதலமைச்சர்கள்
0 சுதந்திரக் கட்சியை மீண்டும் ஒற்றுமைப்படுத்துவது சாத்தியமானதா?


- பாரதி -

கொழும்பு அரசியல் கள நிலவரங்களைப் பொறுத்தவரையில் இந்த வாரத்திலும் செய்திகளில் அதிகளவில் பேசப்படும் நபராக மகிந்த ராஜபக்‌ஷதான் உள்ளார். அவருடன் சம்பந்தப்பட்ட இரு நகர்வுகள் அவரை நோக்கி அனைவரது கவனத்தையும் திருப்பியிருந்தது. மாகாண சபை முதலமைச்சர்களுடன் மகிந்த நடத்திய பேச்சுக்கள் முதலாவது. வெள்ளிக்கிழமை நுகேகொடயில் அவரது கட்சி நடத்திய பேரணி இரண்டாவது விடயம். தலைநகர அரசியலில் மகிந்த தவிர்க்க முடியாத ஒரு இடத்தைப் பெற்றுக்கொண்டு வருகின்றார் என்பதையும், பிரதான அரசியல் நகர்கள் அவரை மையப்படுத்தியதாக இடம்பெற்றுவருவதையும் இந்தச் சம்பவங்கள் உணர்த்தியுள்ளன.

ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் உருவாகியிருக்கும் தலைமைத்துவப் போட்டியும், கட்சி பிளவுபடலாம் என்ற அச்சமும்தான் ராஜபக்‌ஷவுடன் முதலமைச்சர்கள் நடத்திய அவசரப் பேச்சுக்கு அடிப்படை. கட்சிப் பிளவைத் தடுப்பதற்கான இறுதி முயற்சியாக இதனை அவர்கள் மேற்கொண்டிருப்பதாகவே தெரிகின்றது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஒப்புதலுடன்தான் இந்தப் பேச்சுக்கள் இடம்பெற்றுள்ளன. மகிந்தவுக்கு மைத்திரி காட்டிய இறுதியான சமாதான சமிஞ்ஞையாக இதனைக் கருதலாம். கட்சி பிளவுபடுவது தம்மையும் பலவீனப்படுத்திவிடும் என்ற அச்சம் இருவருக்குமே இருக்கின்றது. அதனால்தான் இந்தச் சந்திப்பு இடம்பெற்றது. இதற்கு முதலமைச்சர்கள் மத்தியஸ்த்தர்களாகச் சென்றிருக்கின்றார்கள். இருவரையும் மீண்டும் ஒட்டவைப்பது சாத்தியமில்லை என்பது இந்தப் பேச்சுக்களின் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

வடக்கு கிழக்கைத் தவிர்ந்த ஏனைய ஏழு மாகாண சபைகளும் இப்போது ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் வசம்தான் உள்ளது. மே மாதம் அளவில் உள்ளுராட்சி மன்றங்களுக்கான தேர்தல் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகின்றது. அதனைத் தொடர்ந்து மூன்று மாகாண சபைகளின் பதவிக் காலம் இவ்வருட நடுப்பகுதியுடன் முடிவுக்கு வருகின்றது. அவற்றின் தேர்தல்களுடன் ஏனைய மாகாண சபைகளையும் கலைத்து அவற்றுக்கான தேர்தலையும் நடத்தும் திட்டம் அரசுக்குள்ளது. அவ்வாறான நிலையில் மீண்டும்தாம் முதலமைச்சர்களாக வர வேண்டுமானால் ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பிளவு தடுக்கப்பட வேண்டும் என முதலமைச்சர்கள் சிந்திக்கின்றார்கள். அந்தச் சிந்தனையின் விளைவுதான் இந்த சமரச முயற்சி என்கிறார் விபரமறிந்த ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சிப் பிரமுகர் ஒருவர்.

மத்தியஸ்த்தர்களாக
சென்ற முதல்வர்கள்


ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஏழு முதலமைச்சர்களில் ஆறு மாகாண முதலமைச்சர்கள் கடந்த ஞாயிற்றுக்கிழமை காலை மகிந்த ராஜபக்‌ஷவை கொழும்பிலுள்ள அவரது உத்தியோகபூர்வ இல்லத்தில் சந்தித்தார்கள். வடமத்திய மாகாண முதலமைச்சர் பேஷால ஜெயரட்ண மட்டும் இந்தச் சந்திப்பில் கலந்துகொள்ளவில்லை. ஏற்கனவே ஏற்பாடாகியிருந்த வேறு நிகழ்வுக்குச் செல்லவேண்டியிருந்தமையால் அவர் வரவில்லை என மகிந்தவிடம் சொல்லப்பட்டது. ஆனால், அவர் மைத்திரியின் தீவிர ஆதரவாளர் என அரசியல் வட்டாரங்கள் குறிப்பிடுகின்றன. அதனால் இந்தச் சந்திப்பை அவர் தவிர்திருக்கலாம் எனவும் நம்ப இடமுள்ளது.   மகிந்த ராஜபக்‌ஷவுடன் அவரது அணியின் முக்கியஸ்த்தர்களான பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ், காமினி லொக்குகே, பந்துல குணவர்த்தன ஆகியோர் இந்தச் சந்திப்பில் கலந்துகொண்டனர்.

உள்ளுராட்சி மன்றத் தேர்தல்களுக்கு முன்னதாக கட்சியை ஒன்றுபடுத்துவதுதான் முதலமைச்சர்களின் பிரதான நோக்கமாக இருந்தது. மைத்திரியின் தலைமையை ஏற்றுக்கொண்டு சுதந்திரக் கட்சியிலிருந்துகொண்டே ராஜபக்‌ஷ செயற்பட வேண்டும் என்பதுதான் முதலமைச்சர்களால் முன்வைக்கப்பட்ட கோரிக்கை. இதன்மூலம் கட்சிப் பிளவைத் தவிர்த்துக்கொள்ள முடியும் என்பதுடன், உள்ளுராட்சி மன்றத் தேர்தல்களில் வெற்றிபெற முடியும் எனவும் அவர்கள் சுட்டிக்காட்டியதாகத் தெரிகின்றது. ராஜபக்‌ஷவைப் பொறுத்தவரையில் "தேசிய ஒருமைப்பாட்டு அரசாங்கத்துக்கு" தன்னால் ஆதரவளிக்க முடியாது என்பதில் உறுதியாக இருந்துள்ளார். இந்த அரசில் ஐ.தே.க.வே பிரதான பங்காளியாக இருப்பதால் அதற்குத் தன்னால் ஆதரவளிக்க முடியாது என்பதில் விட்டுக்கொடுக்க முடியாத நிலைப்பாட்டை அவர் எடுத்ததால் பேச்சுவார்த்தைகளில் எந்தவித இணக்கத்தையும் எட்டமுடியவில்லை என இரு தரப்புத் தகவல்களும் தெரிவிக்கின்றன.

ராஜபக்‌ஷவைச் சந்தித்த முதலமைச்சர்கள் மத்தியஸ்த்தர்களாகச் சென்றார்களே தவிர, பேச்சுக்களின் ஒரு தரப்பாகச் செல்லவில்லை. அதனால், முக்கியமான விடயங்களில் முடிவெடுக்கக்கூடியவர்களாக அவர்கள் இருக்கவில்லை. "இந்தப் பேச்சுக்களின் விபரங்களை கட்சித் தலைமைக்கும், மத்திய குழுவுக்கும் தெரியப்படுத்துவோம். முக்கியமான விடயங்களில் முடிவெடுக்கும் அதிகாரம் எமக்கு இருக்கவில்லை. கட்சித் தலைமைதான் அதனையிட்டுத் தீர்மானிக்க வேண்டும்" என பேச்சுக்களின் முடிவில் முதலமைச்சர்கள் சார்பில் தெரிவிக்கப்பட்டது. முடிவெடுக்கக்கூடிய அதிகாரம் இல்லாமல் பேச்சுக்குச் செல்லும்போது, சர்ச்சைக்குரிய விடயங்களுக்கு உரிய தீர்வை முன்வைக்கக்கூடியவர்களாக முதலமைச்சர்கள் இருக்கவில்லை. பேச்சுக்களின் போது சில சந்தர்ப்பங்களில் கடுமையான வாதப் பிரதிவாதங்கள் இடம்பெற்றதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

மகிந்த தரப்பினரின்
நிலைப்பாடு இது


மகிந்த தரப்பினர் ஒரு விடயத்தில் விடாப்பிடியாக இருந்துள்ளார்கள். பேச்சுக்களின் தோல்விக்கு அதுதான் காரணம் எனச் சொல்லப்படுகின்றது. "ஐ.தே.க.வுக்கும் அதன் அரசியல் நிகழ்ச்சி நிரலுக்கும் எதிராகச் செயற்படுவதற்காக என்றால் இணைந்து செயற்பட நான் தயார். ஆனால், ஐ.தே.க.வுடன் இணைந்து தேசிய அரசாங்கமாகச் செயற்படுவதற்காக மைத்திரியின் தலைமையை ஏற்க தயாராகவில்லை" என்ற நிலைப்பாட்டில் மகிந்த உறுதியாக இருந்துள்ளார். "ஐ.தே.க.வின் கொள்கைகளை நடைமுறைப்படுத்தும் ஒரு அரசுடன் இணைந்து செயற்பட நான் தயாராகவில்லை" எனவும் அங்கு அவர் அடித்துக்கூறிவிட்டதாகத் தெரிகின்றது. இது மைத்திரி தரப்பால் ஏற்றுக்கொள்ள முடியாத - நடைமுறைச்சாத்தியமற்ற ஒன்று என்பது மகிந்தவுக்குத் தெரியாததல்ல. ஜனாதிபதிப் பதவிக்கு மைத்திரி வருவதற்கு ஐ.தே.க.வின்  வாக்குகள்தான் பெருமளவுக்கு உதவியிருந்தன. அத்துடன், பாராளுமன்றத்தில் 105 எம்.பி.க்களுடன் பெரும்பான்மையாக இருப்பதும் ஐ.தே.க.தான். அதனால், ஐ.தே.க.வின் உறவை துண்டித்துக்கொள்ள மைத்திரி துணியமாட்டார்.

புரிந்துணர்வு உடன்படிக்கை ஒன்றின் மூலம் ஐ.தே.க.வுடன் இணைந்து தேசிய ஒருமைப்பாட்டு அரசாங்கம் ஒன்றை அமைத்திருப்பதை முதலமைச்சர்கள் நியாயப்படுத்தியதாகத் தெரிவிக்கப்படுகின்றது. அரசியலமைப்புச் சீர்திருத்தங்களைச் செய்வற்கு இவ்வாறான ஏற்பாடு ஒன்று அவசியம் என்பதை இந்தப் பேச்சுககளின் போது முதலமைச்சர்கள் வலியுறுத்தினார்கள். மகிந்த குழு - முதலமைச்சர்கள் சந்திப்பில் இணக்கப்பாட்டை ஏற்படுத்துவதற்குத் தடையாக இந்தக்கொள்கை முரண்பாடே காரணமாக இருந்துள்ளது என முதலமைச்சர் ஒருவர் தெரிவித்திருக்கின்றார். இவ்வாறு சொல்லிக்கொண்டாலும் இரு தலைவர்களுக்கும் இடையிலான ஆளுமைப் போட்டியின் பிரதிபலிப்புத்தான் இவை.

உள்ளுராட்சிமன்றத் தேர்தல்களுக்கு முன்னதாக கட்சியின் முக்கிய தீர்மானங்களை எடுக்கும் பொறுப்பு மகிந்த ராஜபக்ஷவுக்கு வழங்கப்பட வேண்டும் என்பது அவரது தரப்பின் முக்கிய கோரிக்கைகளில் ஒன்று. "கட்சியின் ஒற்றுமை" என்பதைத் துரும்புச் சீட்டாகப் பயன்படுத்தி அவர்கள் பெற்றுக்கொள்ள நினைப்பது அதனைத்தான். எந்தவகையிலாவது மகிந்தவை 'உள்ளே' விடுவது தமக்கு ஆபத்தாக முடிந்துவிடும் என்ற அச்சம் மைத்திரிக்கும் அவருக்கு நெருக்கமானவர்களுக்கும் உள்ளது. மைத்திரிக்கு விசுவாசமாகக் காட்டிக்கொள்ளும் சிலர் "காற்றடிக்கும் பக்கத்துக்குச் சாயக்கூடியவர்களாக"வே உள்ளார்கள். இது மைத்திரிக்கும் நன்றாகத் தெரியும். இந்த நிலையில் மகிந்தவின் நிபந்தனைகள் எதனையும் மைத்திரி ஏற்றுக்கொள்வார் என்பது எதிர்பார்க்கக் கூடியதல்ல.

சுதந்திரக் கட்சிக்குள்
ஒற்றுமை சாத்தியமா?

மகிந்தவைப் பொறுத்தவரையில் பதிய கட்சி ஒன்றை ஆரம்பிக்கப்போவதாக 'பில்ட் அப்' கொடுத்துக்கொண்டிருக்கும் அதேவேளையில், ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்குள் மீண்டும் சென்று இணைவதற்கான திட்டமும் அவரிடம் உள்ளது. அவரை முன்னிலைப்படுத்தியே புதிய கட்சி ஆரம்பிக்கப்பட்டிருக்கின்ற போதிலும், அதன் தலைமையை அவர் உடனடியாக ஏற்றுக்கொள்ளாமலிருப்பது அதனால்தான். புதிய கட்சியைக் காட்டிப் பயமுறுத்தி ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இணைவதுதான் அவரது முதலாவது தெரிவு. அதனால்தான் முதலமைச்சர்கள் அழைத்த போது அவர் பேச்சுவார்த்தைக்குச் சென்றார்.

"மூன்றாவது கட்சி"யின் எதிர்காலம் குறித்த கேள்விகள் அவரிடம் உள்ளது. ஆனால், கட்சியில் தன்னுடைய நிலையை உறுதிப்படுத்திக்கொள்ளாமல் மீண்டும் சுதந்திரக் கட்சிக்குள் செல்வது தன்னுடைய எதிர்காலத்தைப் பாதிக்கும் என்பதால்தான் முடிவெடுக்கக்கூடிய முக்கிய பொறுப்பு தனக்குத் தரப்பட வேண்டும் என்பது முக்கிய நிபந்தனையாக அவரால் முன்வைக்கப்பட்டது. அதனை ஏற்றுக்கொள்வதற்கு மைத்திரி ஒருபோதும் தயாராகவில்லை. ஆக, கட்சிக்குள் மீண்டும் ஒற்றுமையைக் கட்டியெழுப்புவதென்பது இப்போதைக்குச் சாத்தியமானதாக இருக்கப்போவதில்லை.

ஞாயிறு தினக்குரல்: 2017-01-29

காணாமலாக்கப்பட்டோர்; நீதி கிடைக்கவேண்டும்

காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்களால் வவுனியாவில் முன்னெடுக்கப்பட்ட உண்ணாவிரதப் போராட்டத்தின் விளைவாக, அவர்களை நேரில் சந்தித்துப் பேசுவதற்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க முன்வந்திருக்கின்றார். பெப்ரவரி 9 ஆம் திகதி இந்தச் சந்திப்பு அலரி மாளிகையில் இடம்பெறவிருக்கின்றது. காணாமலாக்கப்பட்டவர்களுக்கு என்ன நடந்தது என்பதற்கான தெளிவாக பதிலொன்றை இந்தச் சந்தர்ப்பத்தில் அரசாங்கம் வழங்கும் என உறவினர்கள் நம்புகின்றார்கள். எட்டுவருட காலமாக தமது உறவுகளைத் தேடி பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்த அவர்கள் விரக்தியின் விளிம்புக்கே வந்திருந்தார்கள். இந்த நிலையிலேயே சாகும்வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்திருந்தார்கள். போராட்டத்தில் அவர்கள் கொண்டிருந்த உறுதியும், அதற்கான ஆதரவு பல்கிப் பெருகியமையும்தான் அரசாங்கத்தை இறங்கிவரச் செய்திருக்கின்றது.

போர் தீவிரமடைந்த காலத்திலிருந்தே வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் விவகாரம் ஆரம்பமாகிவிட்டிருந்தாலும், இறுதிப்போரின்போதுதான் இது உச்சகட்டத்துக்குச் சென்றிருந்தது. அப்போதுதான் பெருந்தொகையானவர்கள் சரணடைந்தார்கள் அல்லது உறவினர்களால் பாதுகாப்புத் தரப்பினரிடம் ஒப்படைக்கப்பட்டார்கள். இதனைவிட பலர் ஆயுதப் படையினரால் கைது செய்யப்பட்டனர். மேலும் சிலர் கடத்திச் செல்லப்பட்டு காணாமல்போகச் செய்யப்பட்டார்கள். இவ்வாறு "இனந்தெரியாதவர்களால்" கடத்தப்பட்ட பலர் பின்னர் இராணுவ முகாம்களில் இருந்தமையும் அவதானிக்கப்பட்டுள்ளது. அல்லது அவர்கள் இராணுவத் துணைக்குழுக்களால் கடத்தப்பட்டிருந்தார்கள். தலைநகர் கொழும்பில் இவ்வாறு கடத்தப்பட்டு காணாமலலாக்கப்பட்ட பலருடைய விவகாரத்தின் பின்னணியில் கடற்படையினர் இருந்துள்ளார்கள் என்பது விசாரணைகள் மூலம் உறுதிப்படுத்தப்பட்டிருக்கின்
றது.

இவ்வாறு காணாமல்போகச்செய்யப்பட்டவர்களுக்கு என்ன நடந்தது என்பதற்கான பதிலைச் சொல்ல வேண்டிய பொறுப்பு அரசாங்கத்துக்கே இருக்கின்றது. முன்னைய ஆட்சிக்காலத்தில்தான் பெருந்தொகையானவர்கள் காணாமற்போகச் செய்யப்பட்டார்கள். போரில் வெற்றிபெற்ற பெருமிதத்துடன் நின்ற ராஜபக்‌ஷ அரசாங்கம் அதற்குப் பொறுப்புக்கூறும் என்ற எதிர்பார்ப்பு யாருக்கும் இருக்கவில்லை. வலிந்துகாணாமல்போனவர்கள் விவகாரத்தில் குற்றஞ்சாட்டப்படும் படைத் தரப்பை பாதுகாப்பதன் மூலமாகவே சிங்களக் கடும்போக்காளர் மத்தியில் தாம் கதாநாயகர்களாக இருக்க முடியும் என்று ராஜபக்‌ஷ அரசு கருதிச்செயற்பட்டது. அந்த ஆட்சியில் நீதி கிடைக்கப்போவதில்லை என்பதால்தான் தமிழ் மக்கள் ஆட்சி மாற்றத்தை விரும்பினார்கள். அதற்கு ஆதரவாக வாக்களித்தார்கள்.

இரண்டு வருடகால மைத்திரி - ரணில் ஆட்சியிலும் பொறுப்புக்கூறல் இடம்பெறாத நிலையில்தான் சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டம் என்ற முடிவை உறவினர்கள் எடுத்தார்கள். காணாமல்போனவர்கள் அனைவரும் கோவில் திருவிழாவிலோ அல்லது வேறு நிகழ்வுகளிலோ காணாமல்போனவர்களல்ல. அதிகபட்சமானவர்கள் சரணடைந்தவர்கள். பெற்றோரால் அல்லது நெருங்கிய உறவினர்களால் படையினரிடம் ஒப்படைக்கப்பட்டவர்கள். போர் முடிவுக்கு வந்தவேளையில் படையினர் அவர்களை நேரில் அழைத்துச்சென்றதைப் பார்த்தவர்கள். இவ்வாறு அழைத்துச்செல்லப்பட்டவர்கள் உயிருடன் இருக்கின்றார்களா, இல்லையெனில் அவர்களுக்கு என்ன நடந்தது என்பதற்கு அரசாங்கம் பதிலளிக்க வேண்டும் என்பதுதான் உண்ணாவிரதமிருந்தவர்களின் கோரிக்கை.

போர் முடிவுக்கு வந்து எட்டு வருடங்கள் கடந்துவிட்டன. புதிய அரசாங்கம் பதவிக்கு வந்து இரண்டு வருடங்கள் சென்றுவிட்டன. இதற்குப் பின்னரும் பொறுப்புக்கூறுவதற்கு கடுமையான அழுத்தங்களைப் பிரயோகிக்க வேண்டும் என்ற நிலைதான் உள்ளது. சாகும்வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தில் உறவுகள் உறுதியாக இருந்ததும், அவர்களுடைய உடல்நிலை மோசமடைந்துவந்ததும்தான் அராங்கத்தை பேச்சுவார்தைக்குக் கொண்டுவந்தது. தமது பாதுகாப்பு அமைச்சரையே களத்துக்கு அவசரமாக அனுப்பிவைக்கும் அளவுக்கு அரசாங்கத்துக்கு அழுத்தங்கள் அதிகரித்திருப்பதைப் புரிந்துகொள்ள முடிகின்றது. போராட்டத்துக்குப் பெருகிவந்த ஆதரவும், சர்வதேச ரீதியாக அது பெற்றுக்கொண்ட கவனமும்கூட அரசாங்கத்தின் இந்த நிலைப்பாட்டுக்குக் காரணம்.

போராட்டங்கள் தீவிரமடையும்போது இது போன்ற வாக்குறுதிகளை வழங்கி அதனை வலுவிழக்கச் செய்யும் உபாயத்தை அரசாங்கம் கடைப்பிடிப்பது இதற்கு முன்னரும் இடம்பெற்றிருக்கின்றது. ஐ.நா.மனித உரிமைகள் பேரவையின் கூட்டத் தொடர் அடுத்த மாதம் ஜெனீவாவில் ஆரம்பமாகள்ள நிலையில் இவ்வாறான போராட்டங்கள் இடம்பெறுவதை அரசாங்கம் விரும்பப்போவதில்லை. இலங்கை அரசின் ஆதரவுடன் இறுதியாக ஜெனீவாவில் நிறைவேற்றப்பட்ட பிரேரணையிலும் காணாமலாக்கப்பட்டவர்கள் தொடர்பாகக் குறிப்பிடப்பட்டிருக்கின்றது. இங்கு கொடுக்கப்பட்ட வாக்குறுதிகளில் எதுவுமே அரசாங்கத்தினால் நிறைவேற்றப்படவில்லை. காணாமலாக்கப்பட்டோர் குறித்த அலுவலகம் கூட இதுவரை அமைக்கப்படவில்லை. இந்தநிலையில் போராட்டங்கள் இடம்பெறுவது ஜெனீவாவிலும் இலங்கை மீதான அழுத்தங்களை அதிகரிப்பதாகவே இருக்கும்.

பதிலளிக்கவேண்டிய கடப்பாட்டுக்கு அரசாங்கத்துக்கு ஏற்கனவே பலவருட காலம் அவகாசம் வழங்கப்பட்டுவிட்டது. இப்போது இரண்டுவார கால அவகாசம் வழங்கப்பட்டிருக்கின்றது. படையினரால் கொண்டு செல்லப்பட்ட தமது உறவுகளுக்கு என்ன நடைபெற்றது என்பதைத் தெரிந்துகொள்வதற்கான உரிமை அவர்களுக்கு உள்ளது. இதற்குப் பதிலளிக்கவேண்டிய பொறுப்பும் அரசாங்கத்துக்கு உள்ளது. இப்போது பெற்றுக்கொண்டுள்ள அவகாசத்தைப் போராட்டத்தை பலவீனப்படுத்தவோ வலுவிழக்கச்செய்யவோ பயன்படுத்தாவது உறுதியான பதிலை அரச தரப்பு சொல்ல வேண்டும். தென்பகுதி அரசியல்நலன்களை மட்டும் இலக்காகக்கொண்டு செயற்பட்டால், சிறுபான்மையினரின் நம்பிக்கையை அரசாங்கம் முழுமையாக இழக்கவேண்டிய நிலைதான் உருவாகும். 
 
ஞாயிறு தினக்குரல்: 2017-01-29

Monday, January 23, 2017

அரசியலமைப்பாக்க முயற்சி 20 ஆவது திருத்தத்துடன் முடிவுக்கு வரப்போகிறதா?

0 புதிய அரசியலமைப்பு குறித்து ஒப்பாரி வைக்க வேண்டியவர்கள் யார்? மகிந்தவா? கூட்டமைப்பா?
0 மைத்திரி பிரிவின் முடிவால் புதிய பாதையில் செல்லும் அரசியலமைப்பாக்க முயற்சிகள்
0 சர்வஜனவாக்கெடுப்பைக் கோரும் த.தே.கூட்டமைப்பும் தயங்கும் மைத்திரி தரப்பினரும்
0 தேர்தல் சீர்திருத்தத்தில் உருவாகியிருக்கும் சர்ச்சையும், சிறிய கட்சிகள் வெளியிடும் அச்சமும் 

- பாரதி -
அரசியலமைப்பு சீர்திருத்த முயற்சிகள் குறித்து அமைச்சர் மனோ கணேசன் தனது முகப்புத்தகத்தில் குறிப்பு ஒன்றை பதிவேற்றியுள்ளார். உண்மையில் என்ன நடைபெறுகின்றது என்பதை  அந்தப் பதிவு வெளிப்படுத்தியிருக்கின்றது. "நாட்டைப் பிரிக்கும் அரசியலமைப்பு என மகிந்த பிரிவினர்தான் ஒப்பாரி வைக்கின்றார்கள். ஆனால், கூட்டமைப்பினரல்லவா ஒப்பாரி வைக்க வேண்டும்" என்பதுதான் அவருடைய பதிவு. சுருக்கமான பதிவுதான். என்ன நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது என்ன நடைபெறவில்லை என்பதை மறைமுகமாகக் குறிப்பிடும் தெளிவான ஒரு பதிவு! கூட்டமைப்பினர் மீதான குற்றச்சாட்டு ஒன்றும் இதில் மறைந்திருக்கின்றது.. 

ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மைத்திரி பிரிவினர் அண்மையில் எடுத்திருக்கும் முடிவு அரசியலமைப்பாக்க முயற்சிகள் புதிய ஒரு பாதையில் பயணிக்கத் தொடங்கியிருப்பதைத் தெளிவாகக் காட்டியிருக்கின்றது. தேசிய நலன் என்பது இப்போது கட்சி சார்ந்த, தனிநபர் சார்ந்த அரசியல் நலனாக மாற்றப்பட்டுவிட்டதையும் இது உறுதிப்படுத்துகின்றது. என்ன நக்கிறது? என்ன நடக்கப்போகின்றது? என்பது அனைத்துத் தரப்பினருக்கும் தெரிந்தாலும் நம்பிக்கையைக் கொடுக்கும் வகையிலான கருத்துக்களைத்தான் அரசியல் தலைமைகள் வெளிப்படுத்திவருகின்றன. ஒப்பாரி வைக்கும் மகிந்த அணியினரைத் தவிர. 

அரசியலமைப்புப் பேரவையின் இடைக்கால அறிக்கை வெளியிடப்படுவது இரண்டு தடவைகள் ஒத்திவைக்கப்பட்டு, அது எப்போது வெளியாகும் என்றே தெரியாத நிலைதான் இப்போது உள்ளது. பெப்ரவரி 10 ஆம் திகதிக்கு முன்னர் இதனை வெளியிட வேண்டும். இல்லையெனில் அரசியலமைப்புப் பேரவையைக் கலைத்துவிட வேண்டும் என அமைச்சர் மனோ கணேசன் அறிக்கை மூலம் காலலக்கெடு விதித்திருக்கிறார். இல்லையென்றால் அவர் என்ன செய்வார் என்று தெரியவில்லை. 2016 இல் தீர்வை எதிர்பார்த்த எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தனோ அமைதியாக இருக்கின்றார். 

மகிந்தவின் நகர்வுகளும்
மைத்திரி பிரதிபலிப்பும்

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ஷவின் மீள்எழுச்சிதான் இந்த நிலைமைகளுக்குக் காரணமாகச் சொல்லப்படுகின்றது.  அரசியல் களத்தில் தன்னைப் பலப்படுத்திக்கொள்வதற்காக மகிந்த எடுக்கும் ஒவ்வொரு நகர்வுக்கும் பிரதிபலிப்பை வெளிப்படுத்தும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தன்னுடைய பிடியில் தளரத் தொடங்கிவிட்டதை உணர முடிகின்றது. தேர்தலில் கொடுத்த வாக்குறுதிகள், மக்கள் வழங்கிய ஆணை என்பவற்றுக்கு முரணாக தமது அதிகாரத்தைத் தக்கவைத்துக்கொள்வதற்கான நகர்வுகளை முன்னெடுக்க வேண்டியவராக மைத்திரி இன்று உள்ளார். 

அரசியலமைப்புத் திருத்த முயற்சிகளை முன்னெடுப்பதற்கான பொறுப்பு வழிநடத்தல் குழுவிடம்தான் உள்ளது. இந்தக் குழு ராஜபக்‌ஷ பிரிவினரின் செல்வாக்குக்கு உட்பட்டதாகவே தோன்றுகின்றது. இந்தக் குழுவுக்கு மைத்திரியால் நியமிக்கப்பட்டவர்களே மகிந்தவுக்கு ஆதரவாகச் செயற்படுகின்றார்களா என்ற சந்தேகம் வலுவடையத் தொடங்கியிருக்கின்றது. இறுதியாக நடைபெற்ற வழிநடத்தல் குழுவின் கூட்டத்தில் கால அவகாசத்தைக் கேட்டவர்கள் இருவர். ஒருவர் மகிந்த அணியைச் சேர்ந்த தினேஷ் குணவர்த்தன. மற்றவர் மைத்திரி அணியைச் சேர்ந்த நிமால் சிறிபால டி சில்வா. 

இதில் நிமால் சிறிபால டி சில்வா மகிந்தவுக்கு ஆதரவாகச் செயற்படுகின்றாரா என்ற சந்தேகம் மைத்திரி தரப்புக்கு ஏற்பட்டிருப்பதாக அரசியல் வட்டாரங்களிலிருந்து தெரியவருகின்றது. இதனைவிட அமைச்சர் சம்பிக்க ரணவக்க அரசாங்கத்துடன் இணைந்திருந்தாலும், மகிந்த அணியினரின் கொள்கைகளுக்கு ஒத்ததாகவே அவரது செயற்பாடுகளும் அமைந்திருக்கின்றன. இந்தப் பின்னணியில் சிறுபான்மையினருக்குச் சாதகமான முறையில் அரசியலமைப்புச் சீர்திருத்தம் நடைபெறும் என யாராவது நம்பினால் அது வெறும் பகற்கனவாகவே இருக்க முடியும். 

சுதந்திரக் கட்சியின்
முடிவின் பின்னர்..

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று எதிர்கொள்ளும் பிரச்சினைகள்தான் அரசியலமைப்புச் சீர்திருத்த முயற்சிகளைப் புதிய பாதைக்குக் கொண்டு சென்றிருக்கின்றது. அவரது தலைமையிலான ஐ.ம.சு.மு.வில் 95 பாராளுமன்ற உறுப்பினர்கள் இன்றுள்ளார்கள். இதில் சுமார் 50 முதல் 55 வரையிலானவர்கள் மகிந்தவுக்கு ஆதரவாக உள்ளனர் என்பது வெளிப்படை. ஆனால், மேலும் சிலர் உள்ளே இருந்துகொண்டே மறைமுகமாக மகிந்தவுக்கு ஆதரவாகச் செயற்படுவதாகச் சொல்லப்படுகின்றது. 

இதில் அதிர்ச்சியளிக்கக்கூடிய விஷயம் என்னவென்றால், நிறைவேற்று அதிகாரங்களைக் கொண்ட ஜனாதிபதிக்கு ஆதரவான குழுவினர் இன்று பாராளுமன்றத்தில் மூன்றாவது இடத்தில்தான் உள்ளார்கள்.  அவர்களைப் பொறுத்தவரையில் இது ஒரு ஆபத்தான நிலைதான். இந்த நிலையில் நிறைவேற்று அதிகாரத்தையும் துறந்துவிட்டு அதிகாரப் பரவலாக்கலையும் வழங்குவது தற்கொலைக்குச் சமமானது என்ற கருத்து மைத்திரி தரப்பிலிருந்தே முன்வைக்கப்படுகின்றது. இது 'றிஸ்க்'கான விடயம் என அவர்கள் கருதுவதற்கு இரண்டு காரணங்கள் உள்ளன. 

ஒன்று: அரசியலமைப்பு மாற்றத்துக்காக சர்வஜன வாக்கெடுப்பு ஒன்றுக்குச் செல்வதற்கு அவர்கள் தயாராகவில்லை. அரசியலமைப்பில் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை மாற்றுவதென்றால், அல்லது 13 ஆவது திருத்தத்துக்கு மேலாகச் செல்வதென்றால் சர்வஜன வாக்கெடுப்பு ஒன்றுக்குச் செல்ல வேண்டும். அதற்கு மக்களுடைய அங்கீகாரத்தைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என த.தே.கூ. பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் சொல்கின்றார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனும் அதனைத்தான் வலியுறுத்துகின்றார். 

சர்வஜன வாக்கெடுப்பு;
தயங்கும் மைத்திரி அணி

ஆனால், சர்வஜனவாக்கெடுப்பு ஒன்றுக்குச் செல்வதற்கு மைத்திரி அணியினர் தயாராகவில்லை. அவ்வாறு மக்களின் கருத்துக்கு அரசியலமைப்பு விடப்பட்டால், அங்கு வைத்து அதனைத் தோற்கடிக்க மகிந்த தரப்பு தயாராகவே இருக்கும். அவ்வாறான 'றிஸ்க்' ஒன்றை எடுப்பதற்கு மைத்திரி அணி தயாராகவில்லை. இரண்டாவதாக, நிறைவேற்று அதிகார முறை நீக்கப்படும் நிலையில் பிரதமராக வருவதற்கான அனைத்து முயற்சிகளையும் மகிந்த ராஜபக்‌ஷ முன்னெடுப்பார் என்பதும் அவர்களுக்குத் தெரியும். அதுவும் தமக்கு ஆபத்தானதாகிவிடும் என மைத்திரி தரப்பு கணக்குப் போடுகின்றது. சர்வஜன வாக்கெடுப்பில் தோற்கடிக்கப்பட்டால் அரசாங்கம் பதவி விலக வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படும் என்பதையும் கணக்குப் பார்ததுத்தான் மைத்திரி அணி செயற்படுகின்றது. 

இந்தப் பின்னணியில்தான் ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அமைச்சர்களின் கூட்டத்தில் முக்கியமான தீர்மானங்கள் இரண்டு எடுக்கப்பட்டிருக்கின்றன. நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை மாற்றியமைப்பதில்லை என்பதும், 13 ஆவது திருத்தத்துக்கு அப்பால் செல்வதில்லை என்பதும்தான் அந்தத் தீர்மானங்கள். இதற்கு கட்சியின் மத்திய குழு இதுவரையில் அங்கீகாரத்தைக் கொடுக்கவில்லை. ஆனால், அதனைப் பெற்றுக்கொள்வது கடினமானதாக இருக்கப்போவதில்லை. ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி இவ்வாறான ஒரு தீர்மானத்தை எடுத்திருக்கும் நிலையில் அதற்கு மேலாக ஐ..க.வினால் செல்ல முடியும் என எதிர்பார்க்க முடியாது. 

தேர்தல் சீர்திருத்தம்
மட்டும்மே கையில்

இதன்படி பார்த்தால் தேர்தல் சீர்திருத்தம் மட்டும்தான் இப்போது கைகளில் உள்ளது. அதுகூட இப்போது சர்ச்சைக்குள்ளாகியிருக்கின்றது. சிறிய மற்றும் சிறுபான்மையினக் கட்சிகள் இது தொடர்பில் அச்சத்தை வெளியிட்டிருக்கின்றன. அவசரப்பட வேண்டாம் என்றும் கேட்டுள்ளன. இறுதியில் பாரிய அரசியலமைப்புச் சீர்திருத்தம் அல்லது புதிய அரசியலமைப்பு என்று பெரிதாகத் தொடங்கிய நகர்வு வெறுமனே தேர்தல் சீர்திருத்தத்துடன் முடிந்துவிடக்கூடிய ஆபத்து உள்ளது. அதாவது அரசியலமைப்புக்கான 20 ஆவது திருத்துடன் அனைத்தும் முடிவுக்கு வந்துவிடக்கூடிய நிலைதான் உள்ளது. 

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைப் பொறுத்தவரையில், இந்த அரசியலமைப்புச் சீர்திருத்த முயற்சிகளில் முக்கியமான ஒரு பாத்திரம் அதற்கு இருக்கின்ற போதிலும் கூட இந்த அரசியல் நகர்வுகளைப் பொறுத்தவரையில் அது வெறும் பார்லைவயாளனாகவே இருக்கின்றது. மகிந்தவின் ஒப்பாரிக்கு அஞ்சி எதனையும் கொடுப்பதற்குத் தயங்கும் நிலையில் மைத்திரி இருப்பது வெளிப்படை. இந்த நிலையில் தமிழ் மக்களுக்கு தீர்வைப் பெற்றுக்கொடுப்பதாகக் கூறிய கூட்டமைப்புத்தான் ஒன்றும் இல்லாததால் ஒப்பாரி வைக்க வேண்டும் என்பதுதான் மனோ கணேசன் போட்டுள்ள பதிவின் அர்த்தமா?

r.bharati@gmail.com

ஞாயிறு தினக்குரல் 2017-01-022

Sunday, January 22, 2017

ஜல்லிக்கட்டு தடையும் மாணவரின் எழுச்சியும்

ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்கக்கோரி தமிழகத்தில் கிளர்ந்தெழுந்த மாணவர்களின் அறவழிப் போராட்டம் வெற்றிபெற்றிருக்கின்றது. ஜல்லிக்கட்டுக்கு அனுமதியளிப்பதற்கான அவசர சட்டமூலம் தயாராகியிருக்கின்றது. இந்தியக் குடியரசுத் தலைவரின் ஒப்புதல் கிடைத்தவுடன் நேற்று சனிக்கிழமையே இதனைச் சட்டமூலமாக்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. 15 பேருடன் தொடங்கி 200 பேராகி இறுதியில் இலட்சக்கணக்கான மாணவர்களும், அவர்களுடைய குடும்பங்களும் கலந்துகொண்ட போராட்டமாக மத்திய அரசையும், மாநில அரசையும் அடிபணியச் செய்திருக்கின்றார்கள் மாணவர்கள். மாணவர் சக்தி மகப்தான சக்தி என்பதை நிரூபித்திருக்கின்றார்கள். உலகமே தமிழகத்தைத் திரும்பிப்பார்க்கச் செய்திருக்கின்றது இந்தப் போராட்டம்.

சென்னையில் ஆரம்பமான இந்தப் போராட்டம் தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளுக்கும் பரவியுள்ளது. இந்தியாவுக்கு வெளியே இலங்கையில் வடக்கு கிழக்குப் பகுதிகளிலும் கொழும்பிலும், மேற்கு நாடுகளிலும் கூட இதன் எதிரொலியைக் காண முடிந்தது. இந்தப் போராட்டங்கள் அனைத்துமே தன்னிச்சையான, ஒருவிதமான ஒழுங்கோடு, தலைமை ஏதுமின்றி நடைபெற்றுவருகின்றன. 1965ல் நடைபெற்ற இந்தி எதிர்ப்புப் போராட்டத்திற்குப் பிறகு, இவ்வளவு பெரிய அளவில் ஒரு தன்னெழுச்சியான போராட்டம் தமிழகத்தில் நடக்கவில்லை என்பதை பலரும் சுட்டிக்காட்டியுள்ளார்கள். அரபுலக வசந்தம் போல சமூக ஊடகங்கள் மூலமாக அணிதிரண்ட மாணவர்களே ஆச்சரியப்படத்தக்க வகையில் இந்தப் போராட்த்தை நடத்தினார்கள்.

அரபு வசந்தம் முதல் அத்தனை போராட்டங்களுக்கும் பின்னால் அமெரிக்காவோ அரசியல் அமைப்புகளோ நிச்சயமாக இருந்திருக்கின்றன.  தமிழக மாணவர்களின் போராட்டம் அவ்வாறிருக்கவில்லை. இது தன்னெழுச்சியானது. தமிழகத்தின் தற்போதைய அரசியல் தலைமைகளால் இவ்வாறான பாரிய - பரந்தளவான போராட்டங்களை முன்னெடுக்க முடியாது என்பதை ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றார்கள். அவ்வாறான தலைவர்கய் யாரும் இன்று தமிழகத்தில் இல்லை என்பதும் சுட்டிக்காட்டப்படுகின்றது. உரிமைப் போராட்டங்களுக்கு அரசியல் தலைவர்களை நம்பியிருக்கப்போவதில்லை என்பதையும் இந்தப் போராட்டத்தின் மூலம் மாணவர்கள் உணர்த்திவிட்டார்கள்.  இது அரசியல் தலைவர்களுக்கு அச்சத்தைக் கொடுக்கக்கூடிய ஒன்று!

அமைதியான முறையில் இந்தப் போராட்டங்கள் ஒருங்கிணைக்கப்படுவது, வன்முறையின்றி தொடர்ந்து நடத்தப்படுவது, பெண்களும் பெரிய அளவில் பங்கேற்பது ஆகியவை இந்தப் போராட்டத்தின் குறிப்பிடத்தகுந்த பண்புகளாக சுட்டிக்காட்டப்படுகின்றன. இரவு பகல் என்றில்லாமல் இலட்சக்கணக்கான மாணவர்கள் அணிதிரண்டு நடத்தும் இந்தப் போராட்டம் இந்தியாவை மட்டுமன்றி, உலகத்தையே ஆச்சரியப்பட வைத்திருக்கின்றது. இது வெறுமனே ஜல்லிக்கட்டு தடைக்கு எதிராக நடத்தப்படும் போராட்டம் அல்ல. பல்வேறு அதிருப்திகளின் தொடர்ச்சியாக அதன் உச்சகட்டமாகவே இந்தப் போராட்டம் எழுந்திருக்கிறது என்பதே உண்மை. தமிழகத்தின் உணர்வுகள் தொடர்ச்சியாக அடக்கப்பட்டதன் விளைவுதான் இது. பொறுமையிழந்த நிலையிலேயே ஜல்லிக்கட்டு தமிழகத்தை ஒருங்கிணைத்திருக்கின்றது. 

"மக்கள் உணர்வுபூர்வமான விஷயங்களுக்கே முக்கியத்துவம் தருவார்கள். தற்போதைய காலகட்டத்தில் எல்லோருக்குமே ஒரு அடையாளம் தேவைப்படுகிறது. அம்மாதிரியான ஒரு அடையாளத்தில் கைவைக்கப்படும்போது எல்லோரும் கிளர்ந்தெழுகிறார்கள். சமூக வலைதளங்கள் இதனைக் கண்ணுக்குத் தெரியாமல் ஒருங்கிணைக்கின்றன"  என சமூக ஆய்வாளர் ஒருவர் சுட்டிக்காட்டியிருக்கின்றார். ஆனால், இதுபோன்ற போராட்டங்களுக்கு ஒரு நீண்ட காலத் தன்மை இருப்பதில்லை. அண்ணா ஹசாரேவின் போராட்டம், பிரபாகரனின் மகன் பாலச்சந்திரன்  சுட்டுக் கொல்லப்பட்டதை உறுதிப்படுத்தும் புகைப்படங்கள் வெளியான போது கிளர்ந்த போராட்டம் என்பன அந்தந்தத் தருணங்களோடு முடிந்துவிட்டன என்பதும் கவனிக்கத்தக்கது. அந்தப் போராட்டங்களுக்குத் தெளிவான அரசியல் இலக்கு ஒன்று இருக்கவில்லை என்பதும் அவற்றின் தோல்விக்குக் காரணம். இப்போது வெற்றிபெறும்வரை நகர்வதில்லை என்பதில் உறுதியாகவிருந்து தமது போராட்டத்தில் மாணவர்கள் வெற்றி பெற்றிருக்கின்றார்கள்.

பொங்கல் பண்டிகையோடு பிரிக்கவே முடியாத உறவைக் கொண்டவை மாடுகள். ஜல்லிக்கட்டு விளையாட்டானது கிராமப்புறத் தமிழகத்துடன் உணர்வு ரீதியாகப் பிணைக்கப்பட்டது. இதனை வெளியிலிருந்து பார்ப்பவர்களால் எளிதாகப் புரிந்துகொள்ள முடியாது. நீதிமன்றங்களில் தொடுக்கப்பட்ட வழக்குகள், மத்திய அரசின் நகர்வுகளின் விளைவாக 2014 இல் ஜல்லிக்கட்டுக்கு தமிழகத்தில் தடை விதிக்கப்பட்டது. ஜல்லிக்கட்டுத் தடைக்கு பல அமைப்புகள் காரணமாக இருந்துள்ளன. அதில் முக்கியமானது 'பீட்டா' அமைப்பு.  அந்த அமைப்பையும் தடைசெய்ய வேண்டும் என தமிழக மாணவர்கள் கேட்பது அதனால்தான். அமெரிக்காவைத் தளமாகக் கொண்ட அந்த அமைப்பு தமிழகத்தின் பாரம்பரிய விளையாட்டைத் தடுப்பதற்கான அதிகாரத்தை எவ்வாறு பெற்றுக்கொண்டது என மாணவர்கள் கேள்வி எழுப்புகின்றார்கள்.

"ஜல்லிக்கட்டு விளையாட்டானது உள்ளூர் மாட்டினங்களைப் பாதுகாக்கும் செயல்பாட்டோடு தொடர்புடையது; ஜல்லிக்கட்டுக்குத் தடை கோருபவர்களின் பின்னணியில் சர்வதேசச் சந்தை அரசியல் இருக்கிறது" என்பது ஜல்லிக்கட்டு ஆதரவாளர்கள் முன்வைக்கும் வாதங்களில் ஒன்று  இது புறந்தள்ளிவிடக்கூடியதொன்றல்ல. அடுத்த தலைமுறையினர் நவீனமாகவும் அதே சமயம் கலாச்சார வேர்களை விடாதவர்களாகவும் இருக்கிறார்கள் என்பதற்கும் இந்தப் போராட்டம் ஒரு உதாரணம். தமிழ் சமூகத்தின் அடையாளங்களில் ஒன்றான, வீரத்துக்குப் பெயர் பெற்ற ஜல்லிக்கட்டை நடத்த முடியாததால் தமிழக மக்கள் கொதித்துத்தெழுந்தார்கள். பொருளாதாரம், அரசியல், காப்பரேட் நிறுவனங்களின் ஆக்கிரமிப்பு, பண்பாட்டைப் பாதுகாக்க வேண்டும் என்ற ஆதங்கம் என அனைத்தும் இங்கு குவிந்துள்ளன. மக்களின் உரிமைகளையும், உணர்வுகளையும், பாரம்பரியங்களையும் காக்க வேண்டிய உச்சநீதிமன்றம், பீட்டாவின் வாதத்தை ஏற்று தமக்கு எதிராக நிற்கிறது என்பதுதான் அவர்கள் கோபம். இந்தப் போராட்டத்தில் அவர்கள் பெற்றுள்ள வெற்றி ஒரு புதிய அத்தியாயத்தின் ஆரம்பமாக இருக்கும்!

ஞாயிறு தினக்குரல் 2017-01-22

Wednesday, January 18, 2017

மகிந்தவின் அதிரடி நகர்வுகள்; தற்காப்பு நிலையில் மைத்திரி?

0 நிறைவேற்று அதிகார ஜனாதிபதியை தக்கவைக்க சுதந்திரக் கட்சி முடிவு!
0 மீண்டும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்கு மைத்திரி சம்மதம்?
0 அதிகாரத்தை மீண்டும் கைப்பற்ற மகிந்தவிடம் உள்ள உபாயம் என்ன?
0 அரசியலமைப்பு சீர்திருத்த முயற்சிகள் கைவிடப்பட்டுவிடுமா?

- பாரதி -

கூட்டு எதிரணியினரால் உருவாக்கப்பட்டுள்ள 'பொது ஜன பெரமுன'வின் முதலாவது பகிரங்கக் கூட்டம் எதிர்வரும் 27 ஆம் திகதி நுகேகொடையில் நடைபெறவிருக்கின்றது. முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ஷவும் இதில் கலந்துகொள்வார். பொது ஜன பெரமுனவில் மகிந்த ராஜபக்‌ஷ உத்தியோகபூர்வமாக இணைந்துகொள்ளவில்லை என்றாலும், இக்கட்சி அவரை மையப்படுத்தியதாகவே உருவாக்கப்பட்டிருக்கின்றது. முன்னாள் அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் இதன் தலைவராக தற்போதைக்கு அறிவிக்கப்பட்டிருக்கின்றார். மகிந்த பின்னர் தலைவராகப் பொறுப்பேற்பார் என்பதுதான் ஏற்பாடு. இவ்வருடத்தில் ஆட்சியைக் கைப்பற்றப்போவதாக மகிந்த ராஜபக்‌ஷ சூழுரைத்திருக்கும் நிலையில், இந்தப் பொதுக்கூட்டத்தில் தமது பலத்தைக் காட்டுவதற்கு நிச்சயமாக முயற்சிப்பார்கள் என எதிர்பார்க்கலாம். அதனைவிட அதிகாரத்தைக் கைப்பற்றப்போவதாக மகிந்த அறிவித்த பின்னர் இடம்பெறும் முதலாவது பொதுக்கூட்டமாகவும் இதுவே இருப்பதால் அதன் முக்கியத்துவம் அதிகமாகின்றது.

மகிந்த ராஜபக்‌ஷவின் அதிரடியான நடவடிக்கைகளால் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி நெருக்கடிக்குள் தள்ளப்பட்டிருக்கின்றது என்பது இரகசியமானதல்ல. பிரதி அமைச்சர் ஒருவர் பதவி விலகியிருக்கின்றார். மேலும் சிலர் "அந்தப் பக்கத்துக்கு"ச் செல்லலாம் எனச் செய்திகள் வெளியாகிக்கொண்டிருக்கின்றன. இந்த நெருக்கடிகளின் பின்னணியில்தான் ஜனாதிபதி கடந்த வாரம் யாழ்ப்பாணத்துக்கு மேற்கொள்ளவிருந்த விஜயமும் பின்போடப்பட்டது. தேசிய அரசாங்கமானது தனது இரண்டாம் ஆண்டில் காலடி வைத்திருக்கும் நிலையில் பல்வேறு நெருக்கடிகளுக்கு முகங்கொடுத்துள்ளது. பொருளாதாரம் நலிவுற்றுள்ளதுடன் அரசாங்கத்திற்குள் இடம்பெறும் கூர்மையான முரண்பாடுகள் வெளிப்படையாகியுள்ளன. ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகிய இரு தலைவர்களிடமிருந்தும் வெளிப்படுத்தப்படும் முரணான கருத்துக்கள் அவர்களது ஒற்றுமையின்மையைப் பிரதிபலிக்கின்றது. இந்த முரண்பாடுகள் தேசிய அரசாங்கத்துக்கு உடனடியாக ஆபத்தை ஏற்படுத்துமா என்பதுதான் சாதாரண மக்கள் மத்தியில் எழும் கேள்வி!

ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி
அமைச்சர்களுடன் பேச்சு

இந்தப் பின்னணியில்தான் ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அமைச்சர்கள் முக்கியமான இரு தீர்மானங்களை எடுத்திருக்கின்றார்கள். வாரந்த அமைச்சரவைக கூட்டத்தின் பின்னர் ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அமைச்சர்களை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனியாகச் சந்தித்துப் பேசியிருக்கின்றார். 2017 ஆம் ஆண்டுக்கான தன்னுடைய திட்டங்கள் தொடர்பில் பேசுவதற்காகவே தமது கட்சி அமைச்சர்களை ஜனாதிபதி சந்தித்தார். இதன்போது, நிறைவேற்று அதிகார ஜனாதிபதிப் பதவியைத் தொடர வேண்டும் எனவும் மைத்திரிபால சிறிசேன அடுத்த தேர்தலில் போட்டியிட வேண்டும் எனவும் இரு தீர்மானங்கள் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டிருக்கின்றன. ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் செயலாளர் துமிந்த திசாநாயக்க இது தொடர்பான தீர்மானத்தை முன்வைத்து, சக அமைச்சர்களின் ஆதரவைக் கோரிய போது ஜனாதிபதி மைத்திரிபால தனது வழமையான புன்னகையுடன் அமைதியாக இருந்துள்ளார். மௌனம் சம்மதத்துக்குத்தான் அறிகுறி!

ஜனாதிபதியின் இந்தச் சந்திப்பின்போது முக்கியமாக இரு விடயங்கள் குறித்துக் கவனம் செலுத்தப்பட்டது. முதலாவது, அரியலமைப்புத் திருத்தம் தொடர்பானது. 13 ஆவது திருத்தத்துக்கு உட்பட்டதாக மட்டுமே இனநெருக்கடிக்கான தீர்வு அமையவேண்டும் என்பதுடன், வடக்கு - கிழக்கும் இணைப்பு இல்லை. புதிய அரசியலமைப்புக்கு சர்வஜன வாக்கெடுப்பு நடத்தத் தேவையில்லை. பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையே இதற்குப் போதுமானது என்பவைதான் அந்த இரு தீர்மானங்காகும். ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அமைச்சர்கள் எடுத்துள்ள இந்தத் தீர்மானங்கள் ஒரு விடயத்தைத் தெளிவாப் புலப்படுத்துகின்றன. அதாவது, அவர்களின் தீர்மானத்தின்படி பார்த்தால் புதிய அரசியலமைப்புக்கான தேவையே இல்லாமல் போய்விடுகின்றது.

மூன்று நோக்கங்களுக்காகத்தான் அரசியலமைப்புச் சீர்திருத்தம் இடம்பெறுவதாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது. அதில் முதலாவது: நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை இல்லாதொழிப்பது. அந்த முறை தொடர்த்தான் வேண்டும் என்பது ஶ்ரீல.சு.க.வின் நிலைப்பாடாக இருந்தால் புதிய அரசியலமைப்புக்கான தேவை இல்லை. இரண்டாவது: இனநெருக்கடிக்குத் தீர்வைக் காண்பது. 13 க்குள்தான் தீர்வு என்றால் அதற்காகவும் அரசியலமைப்புச் சீர்திருத்தம் அவசியமில்லை. எஞ்சியிருக்கப்போவது தேர்தல் முறை மாற்றம் மட்டும்தான். அதற்காக மட்டும்தான் அரசியலமைப்புச் சீர்திருத்தம் இடம்பெற வேண்டும் என்பதுதான் ஶ்ரீல.சு.க.வின் பிந்திய நிலைப்பாடா? அமைச்சர் எஸ்.பி.திசாநாயக்க கடந்த வாரம் தெரிவித்திருக்கும் கருத்தும் இதனைப் பிரதிபலிப்பதாகவே இருக்கின்றது.

மைத்திரி தரப்பின்
அரசியல் நகர்வுகள்

மைத்திரிபால சிறிசேன என்னதான் நிறைவேற்று அதிகார ஜனாதிபதியாக இருந்தாலும், மகிந்த ராஜபக்‌ஷவின் அதிரடி நகர்வுகளுக்கான பிரதிபலிப்பான நகர்வுகளைத்தான் அவரிடம் காணக்கூடியதாக இருக்கின்றது. இனநெருக்கடிக்கான தீர்வு விடயத்தில் மகிந்த கடுமையான நிலைப்பாட்டை எடுக்கும் நிலையில், மகாசங்கத்தினரைச் சந்தித்து, சமஷ்டியும் இல்லை இணைப்பும் இல்லை மதச்சார்பற்ற நாடு என்ற நிலையும் இல்லை என அவர் விளக்கம் கொடுத்துவிட்டு வந்தார். இப்போது, அதிகாரத்தைக் கைப்பற்றப்போவதாக மகிந்த அறிவித்துவரும் நிலையில்தான் ஶ்ரீல.சு.க. அமைச்சர்களின் இந்த முடிவு அறிவிக்கப்பட்டிருக்கின்றது. நல்லாட்சி அரசாங்கம் எதற்காக அமைக்கப்பட்டதோ அதற்கு முற்றிலும் முரணானதாகவே இந்தத் தீர்மானம் உள்ளது என்பது வெளிப்படை!

அவ்வாறான ஒரு நிலைக்கு மைத்திரியும் அவரது ஆதரவாளர்களும் தள்ளப்பட்டுள்ளார்கள். பாராளுமன்றத்தில் இன்று ஶ்ரீல.சு.க.வைப் பிரதானமாகக் கொண்டுள்ள ஐ.ம.சு.மு.வின் சார்பில் 95 உறுப்பினர்கள் இன்று பாராளுமன்றத்தில் உள்ளார்கள். அதில் 52 பேர் மகிந்தவுக்கு ஆதரவளிப்பதாகச் சொல்லப்படுகின்றது. மைத்திரியுடன் இருப்பவர்களில் அவருக்கு விசுவாசமாக இருப்பவர்கள் எத்தனை பேர் என்பது அவருக்கே தெரியாது. அதிகாரத்தைக் கைப்பற்றுவேன் என மகிந்த துணிச்சலாக அறிவித்திருப்பதற்கு இதுவும் ஒரு காரணம். பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அதிகளவுக்கு அதிகாரம் மிக்கவராகச் செயற்படுவதற்கும் இதுதான் காரணம். பாராளுமன்றத்தில் மைத்திரி தரப்பு மூன்றாவது பெரும்பான்மையைக் கொண்டதாகத்தான் உள்ளது.

இந்த நிலையில் எண்ணிக்கையில் மாற்றங்களைச் செய்வதன் மூலமாகத்தான் அதிகாரத்தைக் கைப்பற்ற முடியும் என மகிந்த சிந்திக்கின்றார். 19 ஆவது திருத்தத்தின்படி 4 வருடங்களுக்கு பாராளுமன்றத்தைக் கலைக்க முடியாது. அத்துடன், ஒருவர் ஜனாதிபதியாக இரண்டு பதவிக்காலங்களுக்கு மட்டுமே செயற்பட முடியும். ஆனால், பாராளுமன்றப் பெரும்பான்மையில் மாற்றங்களைச் செய்வதன் மூலம் ஆட்சியை மாற்ற முடியும். அதற்கான உபாயத்துடன்தான் மகிந்த செயற்படுவதாகச் சொல்லப்படுகின்றது. தன்னால் பிரதமராக வரமுடியும் எனவும் அவர் சொல்லியிருக்கின்றார். அதனால்தான், தன்னுடைய ஆதரவாளர்களைத் தக்கவைத்துக்கொள்ளும் முயற்சியில் மைத்திரி இறங்கியிருக்கின்றார்.

ஜனாதிபதி ஆட்சி
முறை தொடருமா?

ஶ்ரீல.சு.க. விலுள்ள மைத்திரியின் ஆதரவாளர்கள் இரண்டு விடயங்களை அண்மைக்காலத்தில் சொல்லிவருகின்றார்கள். ஒன்று: நாம் மேலே குறிப்பிட்ட ஜனாதிபதி ஆட்சி முறை தொடரும் என்பதும், மைத்திரி மீண்டும் போட்டியிடுவார் என்பதும். இரண்டாவது: அடுத்த ஜனாதிபதித் தேர்தல் 2020 இல் அல்ல. 2021 இலேயே நடைபெறும் என்பது. அதாவது மைத்திரியை இன்னும் 4 வருடங்களுக்கு அசைக்க முடியாது என்பதுதான் அவர்களது கருத்து.  இது மகிந்தவுக்கு அவர்கள் சொல்லும் செய்தி.

பாராளுமன்ற எண்ணிக்கையில் மாற்றங்களைச் செய்ய மகிந்த தரப்பு முற்பட்டாலும், நிறைவேற்று அதிகாரங்களைக் கொண்டவராக மைத்திரியே இருப்பார் என்பதுதான் அவர்களது கருத்து. அதாவது, அடுத்த 4 வருடங்களுக்கு மைத்திரியை மீறி எதுவும் நடந்துவிட முடியாது எனச் சொல்லிக்கொள்வதற்கு அவர்கள் முற்படுகின்றார்கள். நிறைவேற்று அதிகாரத்தை மாற்றினால், அது மகிந்தவுக்கு வாய்ப்பாகிவிடும் என்ற அச்சம் அவர்களுக்கு இப்போது ஏற்பட்டிருப்பதாகவே தெரிகின்றது. அதனை மாற்றத் தேவையில்லை என ஶ்ரீல.சு.க. அமைச்சர்கள் தீர்மானித்திருப்பதன் பின்னணி இதுதான்.

அதேவேளையில், ஜனாதிபதித் தேர்தலில் மைத்திரியை விட்டால் களத்தில் இறக்கக்கூடிய வசீகரத் தன்மையைக்கொண்ட ஆளுமைகள் யாரும் ஶ்ரீலசு.க.வில் இல்லை. அதனால்தான் அவரை மீண்டும் களமிறக்கப்போவதாக சு.க. அமைச்சர்கள் முடிவெடுத்திருக்கின்றார்கள். மைத்திரியும் புன்னகையுடன் ஏற்றுக்கொண்டிருப்பதாகவே சொல்லப்படுகின்றது. 19 ஆவது திருத்தத்தின்படி மகிந்த மீண்டும் போட்டியிட முடியாது. மற்றொருவரை அவர் களமிறக்குவார். ஐ.தே.க. மீண்டும் 'பொது வேட்பாளர்' என மைத்திரியை ஏற்றுக்கொள்ளும் என எதிர்பார்க்கமுடியாது. ரணில் களமிறங்குவார். ஆக, அவ்வாறான ஒரு தேர்தல் மைத்திரிக்கு சாதகமாக அமையப்போவதில்லை. இவை அனத்தையும் சீர்தூக்கிப் பார்த்துத்தான் இப்போது ஒரு முடிவை எடுக்க வேண்டியராக மைத்திரி உள்ளார்.

ஆனால் ஒன்று மட்டும் தெளிவாகத் தெரிகின்றது. தாக்குதல் நிலையில் இன்று மகிந்த உள்ளார். தற்காப்பு நிலையில் மைத்திரி உள்ளார்.

ஞாயிறு தினக்குரல்: 2017-01-15

Sunday, January 15, 2017

ராஜபக்‌ஷ விருப்பங்களை நிறைவேற்றும் நல்லாட்சி?

நல்லிணக்கப் பொறிமுறைகள் தொடர்பான கலந்தாலோசனைப் பிரிவின் ஆலோசனைகள் இலங்கை அரசியலில் ஒரு புயலைக் கிளப்பியுள்ளது. போர்க் குற்ற விசாரணையில் சர்வதேச நீதிபதிகள் சம்பந்தப்பட வேண்டும் என்பது உட்பட பல பரிந்துரைகளை உள்ளடக்கிய இந்தப் பிரிவின் அறிக்கையை இலங்கை அரசாங்கம் உடனடியாகவே நிராகரித்தது. அறிக்கையின் உள்ளடக்கமும், அரசாங்கம் அதனை அவசரமாக நிராகரித்தமையும் சர்வதேச ரீதியாக பலத்த வாதப் பிரதிவாதங்களை ஏற்படுத்தியிருக்கின்றது. நிராகரிப்பின் மூலம் சிங்களத் தேசியவாதிகளின் பாராட்டுதல்களை அரசாங்கம் பெற்றிருக்கின்றது. மறுபுறத்தில் சர்வதேச அமைப்புக்களின் கண்டனங்களையும் அரசு எதிர்கொள்ள வேண்டியிருக்கின்றது. சர்வதேச அரங்கில் இலங்கை மீதான நம்பகத்தன்மையைச் சிதறடிக்கும் மற்றொரு சம்பவமாக இது அமைந்திருக்கின்றது.

சிரேஷ்ட சட்டத்தரணி மனோரி முத்தெட்டுவேகம தலைமையிலான 17 உறுப்பினர்களை உள்ளடக்கிய உயர் குழு ஒன்றே கடந்த ஒரு வருட காலமாக நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் முன்னெடுத்த கலந்தாலோசனைகளின் பின்னர் இந்த அறிக்கையைத் தயாரித்திருந்தது. சமூகத்தின் பல்வேறு தரப்பினரையும் உள்ளடக்கியதாக இந்தக் கலந்துரையாடல் இருந்துள்ளது என்பதுடன், இக்குழுவின் உறுப்பினர்களும் பல்வேறு சமூகங்களிலிருந்தும் தெரிவு செய்யப்பட்டிருந்தார்கள். ஆக, இந்தக் குழுவின் அறிக்கை நடுநிலையானதும், நம்பகத்தன்மையானதும் என்பதில் சந்தேகம் இருக்கத் தேவையில்லை. தன்னால் நியமிக்கப்பட்ட குழு ஏகமனதாக வழங்கிய அறிக்கையையே அவசரமாக நிராகரித்திருப்பதன் மூலம் தன்மீதான நம்பகத் தன்மையையே அரசாங்கம் கேள்விக்குறியாக்கியிருக்கின்றது.

ஆணைக்குழுக்களின் அறிக்கைகளை எழுந்தமானமாக நிராகரிப்பதன் மூலம் நல்லாட்சி அரசாங்கமும் முன்னைய மகிந்த ராஜபக்‌ஷ அரசாங்கத்தின் பாதையில்தான் செல்கின்றதா என்ற கேள்வி எழுவது தவிர்க்க முடியாததாகியிருக்கின்றது. மகிந்த ராஜபக்‌ஷ தன்னுடைய ஆட்சிக் காலத்தில் நியமித்த ஆணைக்குழுக்களில் இரண்டு முக்கியமானவை. ஒன்று - கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்கத்துக்கான ஆணைக்குழு. இரண்டு - அனைத்துக் கட்சிகள் பிரதிநிதிகள் குழு. இவ்விரு குழுக்களின் அறிக்கைகளையும் ராஜபக்‌ஷ குப்பைக் கூடைக்குள் போட்டார். சமூகத்தின் மதிப்புவாய்ந்தவர்களை உள்ளடக்கிய ஆணைக்குழுக்களை நியமிப்பதன் மூலம், சர்வதேச சமூகத்துக்கு ஒரு செய்தியைக் கொடுத்த ராஜபக்‌ஷ, தாம் எதிர்பார்த்த பரிந்துரைகளை அவை வெளியிடாத போது அதனை நிராகரிப்பதை வழமையாகக் கொண்டிருந்தார். 

நல்லாட்சியிலும் இன்று அதுதான் நடைபெற்றிருக்கின்றது. சர்வதேச நீதிபதிகளையும் உள்ளடக்கியதாக விசாரணைக் குழுக்கள் நியமிக்கப்பட வேண்டும் என்ற பரிந்துரைதான் இந்த நிராகரிப்புக்குக் காரணம். அவ்வாறான பரிந்துரையை அரசாங்கம் எதிர்பார்த்திருக்கவில்லை. தாம் எதிர்பர்க்கும் பெறுபேறு கிடைக்கவில்லை என்பதற்காக பரிந்துரைகளை நிராகரிப்பதென்றால், இவ்வாறான குழுக்களை நியமிப்பதே அர்த்தமற்றது. அது சர்வதேசத்தை ஏமாற்றும் ஒரு முயற்சி. உள்நாட்டு அரசியல் நிலைமைகள்தான் இதற்குக் காரணம் என்பதையும் புரிந்துகொள்ள முடிகின்றது. இவ்வாறான ஒரு அணுகுமுறையில் செல்லும் அதேவேளையில், சர்வதேசத்துடனான உறவுகளை அரசாங்கத்தினால் எதிர்காலத்தில் எவ்வாறு பேணிக்கொள்ள முடியும்?

நல்லாட்சி அரசாங்கத்தைப் பொறுத்தவரையில் இரண்டு சாதகமான அம்சங்கள் அதற்குள்ளது. ஒன்று - சர்வதேச சமூகத்துடனான அதன் நல்லுறவு. ராஜபக்‌ஷ யுகத்தில் இவ்வாறான உறவு இருக்காததால் சர்வதேச அழுத்தங்களை அதிகளவுக்கு இலங்கை எதிர்கொண்டது. இப்போது அவ்வாறான நிலை இல்லை. இது மிகவும் சாதகமான நிலை. இரண்டு- பிரதான தமிழ்க் கட்சியான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நிபந்தனையற்ற ஆதரவை நல்லாட்சிக்கு வழங்குகின்றது. ராஜபக்‌ஷவுக்கு அவ்வாறான ஆதரவு இருக்கவில்லை. சர்வதேசத்தின் மூலமாகவும், இந்தியா ஊடாகவும் ராஜபக்‌ஷ அரசுக்கு கூட்டமைப்பு நெருக்கடி கொடுத்தது. நல்லாட்சிக்கு இந்த இரு பக்க அழுத்தங்களும் இல்லை. அவர்களுக்குள்ளது ராஜபக்‌ஷவின் அழுத்தம் மட்டும்தான். அதனால் ராஜபக்‌ஷ எதனை விரும்புவாரோ அதனை அவர்கள் செய்கின்றார்கள்.

நல்லாட்சி அரசாங்கத்தைப் பொறுத்தவரையில் இரண்டு விடயங்களில் அது தெளிவாக இருக்கின்றது. சர்வதேச சமூகம் தமக்கு அழுத்தங்களைத் தரப்போவதில்லை என்பதும், கூட்டமைப்பு தமது நிபந்தனையற்ற ஆதரவைத் திரும்பப் பெறப்போவதில்லை என்பதும்தான் அவை. தாம் நியமித்த குழுவின் அறிக்கையையே அவர்களால் மிகவும் இலகுவாக குப்பைத் தொட்டிக்குள் தூக்கிப் போட்டுவிட முடிந்தது அதனால்தான். அதேபோல அரசியல் தீர்வை உள்ளடக்கிய அரசியலமைப்புச் சீர்திருத்த முயற்சிகளும் காலவரையறையின்றிப் பின்போடப்பட்டுள்ளன. அரசியலமைப்புச் சீர்திருத்ததே இப்போதைக்குத் தேவையில்லை என்ற விதமாக அரசாங்கத்தின் சக்திவாய்ந்த ஒரு பிரிவினர் கருத்துருவாக்க முயற்சியில் இறங்கியிருக்கின்றார்கள்.

ராஜபக்‌ஷவின் மீள்பிரவேசம் குறித்த அச்சமே இதற்குக் காரணம். ராஜபக்‌ஷ தன்னுடைய ஆட்சிக் காலத்தில் தான் நினைத்த அனைத்தையும் நேரடியாகவே செய்தார். ராஜபக்‌ஷ குறித்த அச்சத்தில் அவர் விரும்பும் அனைத்தையுமே நல்லாட்சி இப்போது செய்துகொண்டிருக்கின்றது. ராஜபக்‌ஷவை "தர்மாவேசம்" கொள்ள வைக்கக்கூடாது என்பதில் நல்லாட்சி மிகவும் அவதானமாக இருக்கின்றது. சர்வதேசம் தம்மைப் பாதுகாக்கும் என்ற நல்லாட்சியின் நம்பிக்கையும், கூட்டமைப்பு வழங்கும் நிபந்தனையற்ற ஆதரவும் இருக்கும் வரையில் இந்த நிலையில் மாற்றம் ஏற்படப்போவதில்லை. அதுவரையில் இதுபோன்ற நிராகரிப்புக்கள் தொடரத்தான் செய்யும்!

(ஞாயிறு தினக்குரல் ஆசிரியர் தலையங்கம்: 2017-01-15)

Thursday, January 12, 2017

புதிய அரசியலமைப்பு யோசனைகளை கூட்டமைப்பு எவ்வாறு அணுகுகிறது?

0 நம்ப நடக்கும் கூட்டமைப்பின் அணுகுமுறை வெற்றியைத் தருமா?
0 மகாநாயக்கர்களுக்கு ஜனாதிபதி மைத்திரி கொடுத்த 5 வாக்குறுதிகள்
0 கால அவகாசம் பிரச்சினையைத் தீர்ப்பதற்கா மோசமாக்குவதற்கா?
0 4 சிறுபான்மைக் கட்சிகள் இணைந்து தயாரிக்கும் புதிய தீர்வுத் திட்டம்


- பாரதி -

அரசியல் தீர்வு மீண்டும் பின்போடப்பட்டிருக்கின்றது. அரசியலமைப்புப் பேரவையின் பிரதான வழிநடத்தல் குழு அதனுடைய "இடைக்கால அறிக்கை"யை வெளியிட முடியாத நிலையில் இருப்பதால், நாளை முதல் மூன்று நாட்களுக்குப் பாராளுமன்றத்தில் இடம்பெறவிருந்த அரசியலமைப்பு குறித்த விவாதம் காலம் குறிப்பிடாமல் பின்போடப்பட்டிருக்கின்றது. இந்த அறிக்கை பெப்ரவரி இறுதிப்பகுதியில் வெளிவருமா அல்லது மார்ச் மாதம் இடம்பெறப்போகும் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் ஜெனீவா கூட்டத் தொடரின் பின்னர் வெளியிடப்படுமா என்ற கேள்விகளுக்கு மத்தியில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புக் குழு நேற்று முன்தினம் கூடி இது தொடர்பில் விரிவாக ஆராய்ந்திருக்கின்றது.

வழிநடத்தல் குழு 5 ஆம் திகதி கூடிய போது இடைக்கால அறிக்கை இதில் இறுதியாக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு காணப்பட்டது. ஆனால், கூட்டம் ஆரம்பமானபோதே, இது தொடர்பில் ஆராய்வதற்குத் தமக்கு கால அவகாசம் தேவை என ஐ.ம.சு.மு. பிரதிநிதியும் அமைச்சருமான நிமால் சிறிபால டி சில்வா கேட்டுக்கொண்டார். கூட்டு எதிரணியின் முக்கியஸ்தர் தினேஷ் குணவர்த்தனவும் இதே கோரிக்கையை முன்வைத்தார். இதற்கு மேலதிகமாக நான்கு கட்சிகள் இணைந்து தமது யோசனைகள் அடங்கிய ஆவணம் ஒன்றை வெளியிடப்போவதாகவும், அதற்காக கால அவகாசம் தேவை எனவும் கோரிக்கை விடுத்தன. இதனையடுத்தே திகதி குறிப்பிடாமல் வழிநடத்தல் குழுவின் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது.

அமைச்சர் மனோ கணேசன் தலைமையிலான தமிழ் முற்போக்கு கூட்டமைப்பு, அமைச்சர் ராவூப் ஹக்கீம் தலைமையிலான ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், அமைச்சர் றிசாட் பதியூதீன் தலைமையிலான ஶ்ரீலங்கா மக்கள் காங்கிரஸ், டக்ளஸ் தேவானந்தா தலைமையிலான ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி என்பன இணைந்து கூட்டாக தீர்வு யோசனை ஒன்றை முன்வைக்கப் போவதாகத் தெரிவித்திருக்கின்றன. இவர்களின் தீர்வு யோசனை அவசரம் அவசரமாக வரையப்படுவதாகவும் தெரியவந்திருக்கின்றது. அதிகாரப் பகிர்வு, ஜனாதிபதி முறை, மாகாண அலகுகள், மதம், தேசிய கீதம், தேர்தல் சீர்திருத்தம் போன்ற விடயங்கள் தொடர்பில் போன்ற விடயங்களை உள்ளடக்கியதாக தமது யோசனைகள் தயாரிக்கப்பட்டுவருதாக டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார். வழிநடத்தல் குழுவின் அடுத்த கூட்டத்தில் இந்த யோசனை முன்வைக்கப்படும்.

மகாநாயக்கர்களுக்கு
மைத்திரி வாக்குறுதி


அரசியலமைப்பு சீர்திருத்த முயற்சிகள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனாவுக்கே அதிகளவுக்கு நெருக்கடிகளைக் கொடுப்பதாக அமைந்திருக்கின்றது. மகிந்த ராஜபக்‌ஷவின் கூட்டு எதிரணி தன்னைப் பலப்படுத்துவதற்கு இதனைப் பயன்படுத்த முற்பட்டிருக்கின்றது. 2017 இல் அதிகாரத்தைக் கைப்பற்றுவேன் என சவால்விட்டிருக்கும் மகிந்த, தன்னுடைய அரசியல் நிகழ்சித் திட்டத்தை வகுத்துக்கொள்வதற்கு இதனையே நம்பியிருக்கின்றார். இனவாதத்தைக் துண்டிவிட்டு சிங்கள வாக்குகளைக் கவர்வது இலகுவானது என்பது அவருக்குத் தெரியும். இவ்வருடத்தில் இரு தேர்தல்கள் நடைபெறவுள்ளன. ஒன்று: உள்ளுராட்சிமன்றங்களுக்கான தேர்தல். அது பெரும்பாலும் ஏப்ரல் மாதம் நடைபெறும். இரண்டு: மூன்று மாகாண சபைகளுக்கான தேர்தல்களும் இவ்வருட நடுப்பகுதியில் இடம்பெறும்.

இந்த இரு தேர்தல்களிலும் தன்னுடைய பலத்தைக் காட்டவேண்டும் என்ற இலக்குடன் செயற்படும் மகிந்த, அரசியலமைப்பு மாற்றத்தை அதற்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொள்வார். கூட்டுறவுத் தேர்தல்கள் அவரது செல்வாக்கு அதிகரித்திருப்பதை வெளிப்படுத்தியிருக்கின்றது. அந்த உற்சாகத்துடன் மற்றைய தேர்தல்களையும் எதிர்கொள்ள அவர் தயாராகிவருகின்றார். மகிந்தவின் இந்த நகர்வுகள் மைத்திரி தரப்பைக் குழப்புகின்றது என்பது வெளிப்படை. பிரதி அமைச்சர் ஒருவர் பதவி துறந்திருக்கின்றார். அவர் மகிந்தவின் ஆதரவாளர். மேலும் சிலர் மகிந்த தரப்புக்குத் தாவலாம் எனச் சொல்லப்படும் செய்திகளை மைத்திரி மறுத்திருந்தாலும், குழப்ப நிலை ஒன்று உருவாகியிருப்பதை அவதானிக்க முடிகின்றது. ஐ.தே.க.வின் பின்வரிசை உறுப்பினர்கள் 25 பேர் மைத்திரியை அவசரமாகச் சந்தித்துப் பேசியதும் இந்தப் பின்னணியில்தான்.

இதன்தொடர்ச்சியமாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கண்டியில் மகாசங்கத்தினரைச் சந்தித்திருக்கின்றார். புதுவருடத்துக்கு ஆசீர்வாதம் பெற அவர் சென்றதாகச் சொல்லப்பட்ட போதிலும், கொழும்பில் உருவாகியிருக்கும் அரசியல் நெருக்கடிதான் அவரை அங்கு செல்லத் துண்டியது. மகாநாயக்கர்களுக்கு அவர் கொடுத்திருக்கும் வாக்குறுதிகள் மகிந்த தரப்புப் பிரச்சாரங்களுக்குக் கொடுக்கப்பட்ட பதிலாகவே உள்ளது. ஐந்து விடயங்கள் தொடர்பில் ஜனாதிபதி அங்கு உறுதிமொழி வழங்கியிருக்கின்றார். ஒன்று; ஒற்றையாட்சி மாற்றப்படாது. இரண்டு: வடக்கு கிழக்கு இணைக்கப்படாது. மூன்று: பௌத்த மதத்துக்கு முதன்மை இடம். நான்கு: பொது மக்களின் கருத்துக்கள் மீண்டும் பெறப்படும். ஐந்து: மகாநாயக்க தேரர்களின் ஆசீர்வாதம் இல்லாமல் அரசியலமைப்பு வரையப்படாது. இந்த உறுதிமொழிகளை ஜனாதிபதி நிறைவேற்ற முற்படும் போது, தமிழர்களுக்கான தீர்வு எதுவும் எஞ்சியிருக்கப்போவதில்லை.

த.தே.கூட்டமைப்பின்
அணுகுமுறை என்ன?


புதிய அரசியலமைப்பு தொடர்பில் தென் இலங்கையில் உருவாகிவரும் இந்த நிலையிலும், நம்பிக்கையைக் கொடுக்கும் வகையில் கூட்டமைப்பின் தலைமை செயற்பட்டுவருகின்றது. தமிழ் மக்களுடைய பிரதான கோரிக்கைகள் தொடர்பில் இரு பிரதான கட்சிகளின் செயற்குழுக் கூட்டங்களிலும் எடுக்கப்பட்டிருக்கும் தீர்மானமும் வழிநடத்தல் குழுவில் தெரிவிக்கப்பட்டுவிட்டது. அதனைவிட, ஜே.வி.பி.யும் தமிழ் மக்களுடைய அபிலாஷைகளுக்காகக் குரல் கொடுக்கும் நிலையில் இல்லை. ஒருங்கிணைப்புக் குழுவை அவசரமாகக் கூட்டுமாறு சிவசக்தி ஆனந்தன் முன்வைத்த கோரிக்கைக்கும் இதுதான் காரணம்.

மகாநாயக்கர்களுக்கு ஜனாதிபதி வழங்கியுள்ள வாக்குறுதிகளின் அடிப்படையில்தான் வழிநடத்தல் குழு அரசியலமைப்புப் பேரவையை வழிநடத்தப்போகின்றது என்பதில் சந்தேகம் இருக்கத் தேவையில்லை. அந்தப் பாதையிலிருந்து மற்றொரு பாதைக்குச் செல்வதற்கான அரசியல் துணிச்சல் மைத்திரிக்கோ, ரணிலுக்கோ, மகிந்தவுக்கோ இல்லை. தனிப்பட்ட முறையில் அவர்கள் எவ்வாறானதாக இருந்தாலும் அரசியல் ரீதியில் அந்தப் பாதையிலிருந்து அவர்கள் விலகினால்  விபத்தையே சந்திக்க வேண்டியிருக்கும். அதனால் அதற்கு அவர்கள் துணிய மாட்டார்கள்.

இவ்வாறான நிலையில் கூட்டமைப்பிடம் இருக்கக்கூடிய மாற்றுத் திட்டம் என்ன? வெள்ளிக்கிழமை இரவு சுமார் 4 மணி நேரம் இடம்பெற்ற கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புக் குழுவின் கூட்டத்தல் கேட்கப்பட்ட பிரதான கேள்வி இதுதான். கூட்டமைப்புத் தலைமையிடம் இதற்குத் திட்டவட்டமான பதில் இல்லை. ஏற்கனவே சொல்லப்பட்டதைப்போல, "நம்ப நடக்க வேண்டும்" என்ற அணுகுமுறையிலேயே கூட்டமைப்பின் தலைமை செல்கின்றது. சிங்களத் தரப்பைப் பொறுத்தவரையில் தம்மை வெற்றிபெற்ற தரப்பாகவே அவர்கள் கருதிச் செயற்படுவது தெரிகின்றது. புலிகள் இல்லை. பிரச்சினையும் இல்லை! தீர்வு எதற்கு? என்பதுதான் அவர்களுடைய மனப்போக்காக உள்ளது. மைத்திரியும் ரணிலும் என்னதான் சிந்தித்தாலும் மனப்பூர்வமாகச் சொன்னாலும் சிங்களத் தேசிவாதத்தின் இந்தப்போக்கிற்கு முரணாகச் செல்ல முடியாதவர்களாகவே அவர்கள் இருப்பதைதான் கடந்த வாரச் சம்பவங்கள் உணர்த்துகின்றன.

இந்தநிலையில் கூட்டமைப்பினரும் "நம்ப நடப்போம்" என தொடர்ந்தும் நல்லெண்ணத்தைக் காண்பித்துக்கொண்டிருப்பது அவர்களுடைய பலவீனத்தை வெளிப்படுத்துவதாகவே கருதப்படுகின்றது. தம்முடைய நிலைப்பாட்டை முன்வைத்து பேரம்பேசக்கூடிய நிலையில் கூட்டமைப்பு இன்று இல்லையா? மகிந்த ராஜபக்‌ஷவின் ஆட்சிக் காலத்தில் இரண்டு வருடங்களாகத் தொடர்ந்த பேச்சு முறிவடையக் காரணம் சர்வகட்சி மாநாட்டில் பேசுவோம் என்ற அரசின் அழைப்புத்தான். நேரடியாகப் பேசுவதுதான் அப்போது கூட்டமைப்பின் நிலைப்பாடாக இருந்தது. இப்போது நிலைமை மாறியுள்ளது. ஒருவகையில் தோல்விமனப்பான்மையுடன்தான் கூட்டமைப்பு இந்தப் பேச்சுக்கணை அணுகுகிறதா என்ற சந்தேகமும் ஏற்படுகின்றது!

ஞாயிறு தினக்குரல்: 2017-01-08

Monday, January 9, 2017

அரசியலமைப்பும் கட்சி அரசியலும்

புதிய அரசியலமைப்பு யோசனை தொடர்பாக சமர்ப்பிக்கப்பட்டுள்ள உப குழுக்களின் அறிக்கைகள் குறித்து பாராளுமன்றத்தில் நாளை ஆரம்பமாகவிருந்த விவாதம் ஒத்திவைக்கப்பட்டிருக்கின்றது. வழிநடத்தல் குழுவின் இடைக்கால அறிக்கையை நாளை சமர்பிக்க முடியாத நிலை இருப்பதாலேயே இந்த விவாதமும் மீண்டும் பின்போடப்பட்டுள்ளது. வழிநடத்தல் குழு அறிக்கை டிசெம்பர் 10 ஆம் திகதிதான் சமர்பிக்கப்படவிருந்தது. பின்னர் ஜனவரி 9 க்கு ஒத்திவைக்கப்பட்டு இப்போது மீண்டும் காலம் குறிப்பிடப்படாமல் தள்ளிப்போடப்பட்டிருக்கின்றது. ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு கால அவகாசம் கேட்டதையடுத்தே அறிக்கையைச் சமர்பிப்பதற்கான தினம் பின்போடப்பட்டது. இந்தக் காலங்கடத்தல் பிரச்சினையைத் தீர்ப்பதற்காகவா அல்லது பிரச்சினையை மோசமடையச் செய்வதற்காகவா என்ற கேள்வி எழுவது தவிர்க்க முடியாததாகவே உள்ளது.

இலங்கையைப் பொறுத்தவரையில் அரசியலமைப்பு சீர்திருத்தம் என்பது எப்போது கட்சி நலன் சார்ந்ததாகவே இருந்துவருகின்றது. இலங்கையின் அரசியமைப்பு அடிக்கடி மாற்றத்துக்குள்ளாவதற்கும், திருத்தங்கள் செய்யப்படுவதற்கும் அதுதான் காரணம். அமெரிக்காவில் அதன் அரசியலமைப்பு 1776 ஆம் ஆண்டில்தான் கொண்டுவரப்பட்டது. பிரித்தானியாவிடமிருந்து அமெரிக்கா சுதந்திரமடைந்தடைந்த போது அந்த அரசியலமைப்பு கொண்டுவரப்பட்டது. கடந்த 227 வருட காலத்தில் 27 திருத்தங்கள் மட்டுமே இதற்குச் செய்யப்பட்டுள்ளன. இந்தியாவிலும் இதேபோன்ற ஒரு நிலைதான் உள்ளது. அவை தனிநபர் நலன் சார்ந்ததாகவோ கட்சி நலன்சார்ந்ததாகவே இருக்கவில்லை. ஒட்டுமொத்த நாட்டு நலனே அங்கு கவனத்திற்கொள்ளப்பட்டது.

இலங்கை நிலை அவவாறிருக்கவில்லை. இலங்கையை சுதந்திரமடைந்த போது சோல்பரி அரசிலமைப்பு 1947 ஆம் ஆண்டில் கொண்டுவரப்பட்டது. சிறுபான்மையினரின் நலன்களை உறுதிசெய்யும் வகையில் இதிலிருந்த ஒரேயொரு சரத்தையும் நீக்கியமாக முதலாவது குடியரசு அரசியலமைப்பு ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினால் 1972 இல் கொண்டுவரப்பட்டது. 1977 இல் பதவிக்கு வந்த ஐ.தே.க. அரசு அடுத்த வருடமே மற்றொரு அரசியலமைப்பைக் கொண்டுவந்தது. ஜே.ஆரால் ஜே.ஆருக்காகக் கொண்டுவரப்பட்ட அரசியலமைப்பு என்றே அது வர்ணிக்கப்பட்டது. அந்த அரசியலமைப்பு கொண்டுவரப்பட்ட பின்னர் கடந்த 38 வருடங்களில் இதற்கு 19 திருத்தங்கள் செய்யப்பட்டுவிட்டன.

அரசியலமைப்பை மாற்றுவதோ அல்லது அதற்குத் திருத்தங்களைச் செய்வதோ தவறானவையல்ல. சில சந்தர்ப்பங்களில் அது தேவையானதுதான். ஆனால், சோல்பரி அரசியலமைப்பின் பின்னர் கொண்டுவரப்பட்ட இரு அரசியலமைப்புக்களும் அப்போது அதிகாரத்திலுள்ள கட்சிகளின் அல்லது தனிநபர்களின் நலன் சார்ந்தவையாகவே இருந்துள்ளன. இதில் அவதானிக்கக்கூடியதாகவுள்ள மற்றொரு அம்சம் சிறுபான்மையினரை மேலும் ஒடுக்குவதை இலக்காகக்கொண்டவையாகவுமே இந்த அரசியலமைப்புக்கள் இருந்துள்ளன. சிங்கள - பௌத்த மேலாதிக்கத்துக்கு அரசியலமைப்பு மூலமான அங்கீகாரத்தைக் கொடுப்பதும் அதன் நோக்கமாக இருந்துள்ளது. நாட்டின் பிரச்சினைகளையோ, அல்லது அதன் தன்மையையோ புரிந்துகொண்டு அதற்கிசைவான அரசியலமைப்பு ஒன்றை உருவாக்குவதற்கு முன்னைய தலைவர்கள் தவறியிருந்தார்கள். இந்தத் தவறுகளின் பலன்களைத்தான் கடந்த 60 வருடகாலமாக நாடு அனுபவிக்கின்றது.

வரலாற்றிலிருந்து நாம் எவற்றையும் கற்றுக்கொள்ளவில்லை என்பதை உறுதிப்படுத்துவதாகவே தற்போதைய அரசிலமைப்பாக்க முயற்சிகளும் உள்ளன. அரசியலமைப்புச் சீர்திருத்தம் மூன்று முக்கிய நோக்கங்களை அடிப்படையாகக் கொண்டதாக இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. முதலாவது- நிறைவேற்று அதிகார ஜனாதிபதிமுறையை இல்லாதொழிப்பது. இரண்டு - தேர்தல் சீர்திருத்தம். மூன்று - இனநெருக்கடிக்கான தீர்வு. இதில் முதல் இரு விடயங்களையும் பொறுத்தவயைில் பிரதான கட்சிகள் இரண்டும் தமது கட்சி சார்ந்த நலனுக்கு எது பொருத்தமானதாக இருக்கும் என்ற அளவுகோலைக் கொண்டே தமது நிலைப்பாட்டைத் தீர்மானிக்கின்றன. இனநெருக்கடிக்கான தீர்வைப் பொறுத்தவரையில், சிங்கள - பௌத்த மேலாதிக்கத்துக்கு அரசியலமைப்பு மூலமான அங்கீகாரத்தைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்பதில் பிரதான கட்சிகள் மட்டுமன்றி, சிங்கள தேசியவாத ஜாதிக ஹெல உறுமய, ஜே.வி.பி. என்பனவும் உள்ளன.

இரண்டு பிரதான கட்சிகளையும் இணைந்த தேசிய அரசாங்கம் உருவாக்கப்பட்ட போது சிறுபான்மையினரிடம் காணப்பட்ட நம்பிக்கை இப்போது காணாமல் போய்விட்டது. "ஒன்றும் நடக்கப்போவதில்லை" என்ற மனோ நிலைக்குத் தமிழ் மக்கள் வந்துவிட்டார்கள். குறிப்பாக மகாசங்கத்தினருக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வழங்கிய வாக்குறுதியும், அரசியலமைப்பாக்க முயற்சிகளுக்கு கால அவகாசம் பெறப்பட்டிருப்பதும் தமிழ் மக்களுடைய நம்பிக்கை முற்றாகச் சிதறடித்துள்ளது. மகாசங்கத்தினரின் தலையீடு தமிழ் மக்களின் அபிலாஷைகளுக்கு முற்றுமுழுதாக எதிரானதாகவே இருக்கும். கால அவகாசம் பிரச்சினையைத் தீர்பதற்குப் பதிலாக அதனை மோசமடையச் செய்வதாகவே அமையும். இனவாத சக்திகளின் ஆதிக்கம் மேலோங்கும் நிலையிலேயே இந்த ஒத்திவைப்பு இடம்பெற்றிருக்கின்றது. அவர்கள் தம்மைப் பலப்படுத்திக்கொண்டு களத்தில் இறங்க இந்த கால அவகாசம் பயன்படும்.  நல்லாட்சியை நம்பி களத்தில் இறங்கிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமை இந்த விடயங்களை வெளிப்படைத் தன்மையுடன் பேசுவதும், இதற்கான மாற்றுத் திட்டம் ஒன்றை உருவாக்கிக்கொள்வதும் அவசியம்!

ஞாயிறு தினக்குரல் 2017-01-08

Sunday, January 1, 2017

இரண்டாவது சபை தீர்வைத் தருமா?

அரசியலமைப்பு நிர்ணய சபையால் அமைக்கப்பட்டுள்ள வழிநடத்தல் குழுவின் இடைக்கால அறிக்கை இதுவரையில் வெளியிடப்படாவிட்டாலும் கூட, அதிலிருக்கக்கூடிய முக்கியமான சில அம்சங்கள் ஊடகங்கள் மூலமாகக் கசிந்திருக்கின்றன. அவ்வாறு சகிந்திருக்கும் அம்சங்களில் ஒன்றுதான் இரண்டாவது சபை அல்லது செனட் சபை என்பதாகும். எதிர்வரும் 9 ஆம் திகதி பாராளுமன்றத்தில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படும் வழிநடத்தல் குழுவின் இடைக்கால அறிக்கையில் செனட் சபை ஒன்றை அமைப்பதற்கான யோசனையும் முன்வைக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் கசிந்துள்ளன. இனநெருக்கடிக்காக முன்வைக்கப்படும் தீர்வுகளில் ஒன்றாக ‘செனட் சபை’ யை காட்டிக்கொள்வதற்கான திட்டத்துடன்தான் இந்த யோசனை முன்வைக்கப்பட்டிருப்பதாகவும் தெரியவந்திருக்கின்றது. இலங்கையைப் பொறுத்தவரையில் செனட் சபை என்பது ஒன்றும் புதிதல்ல. இலங்கையின் அரசியல் வரலாற்றில் செனட் சபை ஏற்கனவே இருந்திருக்கின்றது என்பதுடன், அதன்மூலம் எந்தப் பயனும் இல்லை என்ற நிலையில்தான் அது இல்லாதொழிக்கப்பட்டது என்பதும் கவனிக்கத்தக்கது. இந்தப் பின்னணியில் மீண்டும் ஒரு செனட் சபை அமைக்கப்படுவதன் நோக்கம் என்ன? அது எவ்வாறான பலனைக்கொடுக்கும்? என்பதும் ஆராயப்பட வேண்டிய கேள்விகள்.

தற்போது முன்னெடுக்கப்பட்டுவரும் அரசியலமைப்பு சீர்திருத்தம் என்பது மூன்று நோக்கங்களைக்கொண்டதாகத் தெரிவிக்கப்பட்டது. ஒன்று – நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை இல்லாதொழிப்பது. இரண்டு – தேர்தல் முறையை மாற்றியமைப்பது. மூன்று – இனநெருக்கடிக்கு அதிகாரப் பரவலாக்கல் மூலமாகத் தீர்வைக்கொண்டுவருவது. இதில் இனநெருக்கடிக்குத் தீர்வைக்காண்பதற்கான பொறிமுறைகளில் ஒன்றாக செனட் சபை அமைக்கப்படுவதாகக் காட்டிக்கொள்வதற்கே வழிநடத்தல் குழு முற்படுகின்றது என்பதைப் புரிந்துகொள்ள முடிகின்றது. 13 பிளஸ் என பிரதான கட்சிகள் வெளியே சொல்லிக்கொண்டாலும், 13 ஆது திருத்தத்துக்கு மேலாகச் சென்று தீர்வு ஒன்றைத் தருவதற்கு பிரதான கட்சிகள் தயாராகவில்லை. இந்த நிலையில் 13க்கு மேலாக நாம் சென்றுவிட்டோம் என இந்தியாவுக்கும், மேற்கு நாடுகளுக்கும் சொல்லிக்கொள்வதற்கு இந்த செனட் சபை அரசாங்கத்துக்கு உதவும். அதாவது இந்த செனட் சபைதான் 13 பிளஸ் என வழிநடத்தல் குழுவில் உள்ள பிரதான கட்சிகள் காட்டிக்கொள்ளப்போகின்றன.

அரசாங்கத்தைக் கடுமையாக விமர்சிக்கும் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ஷ கூட இந்த செனட் சபைத் திட்டத்தை எதிர்க்கவில்லை. அதனைப் பரிசீலனை செய்யலாம் என அவர் சொல்லியிருக்கின்றார். நல்லாட்சி அரசாங்கத்திலுள்ள ஐக்கிய தேசியக் கட்சியும், ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் செனட் சபை அமைக்கப்படுவதற்கு ஆதரவாகவே இருக்கின்றன. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இது தொடர்பில் தமது நிலைப்பாட்டை இதுவரையில் பகிரங்கமாக வெளிப்படுத்தவில்லை. இருந்தபோதிலும் கூட்டமைப்பை வழிநடத்தல் குழுவில் பிரதிநிதித்துவப்படுத்தும் இரா.சம்பந்தனும், எம்.ஏ.சுமந்திரனும் இதற்கு ஆதரவான நிலைப்பாட்டில்தான் இருப்பதாகத் தெரிகின்றது. வழிநடத்தல் குழுவின் கூட்டங்களில் இதனை அவர்கள் எதிர்க்கவில்லை.  ஆக, வரப்போகும் புதிய அரசியலமைப்பில் செனட் சபை இடம்பெறப்போகின்றது என்பது அனேகமாக உறுதியாகியிருக்கின்றது.

இந்தியாவில் மாநிலங்கள் அவை எனக்குறிப்பிடப்படும் மேல் சபையை ஒத்ததாக இலங்கையிலும் இரண்டாவது சபையை உருவாக்குவதுதான் திட்டம் என ஊகிக்க முடிகின்றது. ஒன்பது மாகாணங்களிலிருந்தும் ஐந்து மாகாண சபை உறுப்பினர்கள் செனட் சபைக்குத் தெரிவு செய்யப்படுவார்கள். அதனைவிட பாராளுமன்றத்தினால் நியமிக்கப்படும் 10 உறுப்பினர்களையும் சேர்த்து செனட் சபை மொத்தம் 55 உறுப்பினர்களைக் கொண்டதாக செனட் சபை இருக்கும். மாகாணங்களின் முதலமைச்சர்களையும் செனட் உறுப்பினர்களாக்குவற்கான யோசனை ஒன்றும் முன்வைக்கப்பட்டிருக்கின்றது. மாகாணங்களின் பிரச்சினைகளை செனட் சபையில் ஒலிக்கச் செய்வதுதான் இதன்நோக்கம் எனச் சொல்லப்படுகின்றது. இது 13 ஆவது திருத்தத்தில் இல்லாதது. இதனை வழங்குவதன் மூலம் 13 ஐயும் தாண்டிச் சென்றுள்ளோம் எனக் காட்டிக்கொள்வதுதான் இதனை உருவாக்குபவர்களின் நோக்கமாக இருக்கலாம்.

செனட் சபைக்கு இருக்கப்போகும் அதிகாரங்களுக்கு மேலாக அதன் உறுப்பினர்கள் எவ்வாறு செயற்படப்போகின்றார்கள் என்பதும்தான் இதன் செயற்பாடுகளை நிர்ணயிப்பதாக இருக்கும். பாராளுன்றத்தில் நிறைவேற்றப்படும் சட்டமூலம் ஒன்றை ‘வீட்டோ’ செய்வதற்கான அதிகாரம் பொதுவாக செனட் சபைக்கு வழங்கப்படும். இதன்மூலம் எந்தவொரு சட்டமூலமும் நிறைவேற்றப்படுவதற்கு இரண்டாவது சபையின் அங்கீகாரமும் அவசியம். இலங்கையில் அமைக்கப்பட உத்தேசியக்கப்பட்டுள்ள செனட் சபை சிறுபான்மையினரின் நலன்களைப் பாதுகாப்பதில் எந்தளவுக்கு உறுதியாக இருக்கும் என்பது கேள்விக்குறிதான். ஒவ்வொரு மாகாணங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் தலா ஐந்து உறுப்பினர்கள் செனட் சபைக்குச் செல்லும் போது, வடக்கு கிழக்கிலிருந்து செல்லப்போது 10 உறுப்பினர்கள் மட்டுமே. அதனால், சிறுபான்மையினரின் நலன்களைப் பாதுகாப்பதாகவோ, அதிகாரப் பரவலாக்கல் திட்டத்தின் காவலனாகவோ செனட் சபை இருக்கப்போவதில்லை. ‘செனட்டர்கள்’ என்ற பெயருடன் சிலர் வலம்வரலாம், செனட் சபையில் சிலவற்றைப் பேசலாம் என்பதைவிட இதில் எந்தப் பலனும் இருக்கப்போவதில்லை.

வடக்கு- கிழக்கு இணைப்பு இல்லை. பொலிஸ் காணி அதிகாரங்கள் இல்லை. பௌத்தத்துக்கு முதன்மை இடம் என அனைத்திலும் சிறுபான்மையினரின் அபிலாஷைகளுக்கு முரணாகவே வழிநடத்தல் குழு சென்றுகொண்டிருக்கின்றது. இந்த நிலையில் ‘செனட் சபை’ என்பதை ஒரு கவர்ச்சியாகக் காட்டி இதற்குள் தீர்வு உள்ளது என்பது போல நம்பவைக்கும் ஒரு முயற்சியாகவே செனட் யோசனை உள்ளது. இவ்விடயத்தில் தமிழத் தலைமைகள் எவ்வாறான நிலைப்பாட்டில் உள்ளன என்பது மூடுமந்தரிமாக இருக்கத் தேவையில்லை. வெளிப்படையானதும் ஆரோக்கியமானதுமான விவாதமே இன்று எமக்கு அவசியம்!

(ஞாயிறு தினக்குரல் ஆசிரியர் தலையங்கம்)