Wednesday, March 1, 2017

நொயார் மீதான தாக்குதல்; நீதி நிலைநாட்டப்படுமா?


- பாரதி -

'த நேஷன்' பத்திரிகையின் முன்னாள் பிரதி ஆசிரியர் கீத் நொயார் (Keith Noyahr) கடத்திச் செல்லப்பட்டு தாக்கப்பட்ட சம்பவம் இடம்பெற்ற எட்டு வருடங்கள் கடந்துள்ள நிலையில், அது தொடர்பில் இராணுவப் புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த ஐந்து பேர் கைதாகியுள்ளனர். கீத் நொயார் விவகாரம் பெருமளவுக்கு மறக்கப்பட்டிருந்த நிலையில் இடம்பெற்றிருக்கும் இந்தக் கைதுகள், அரசியல் மற்றும் ஊடகத்துறையில் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கின்றது. பரபரப்பாக இடம்பெற்ற லசந்த விக்கிரதுங்க, பிரகீத் எக்னெலியகொட  கொலை விசாரணைகளில் மந்த நிலை ஏற்பட்டிருக்கும் பின்னணியில், நொயார் கடத்தல் விவகாரம் 8 வருடங்களின் பரபரப்பாக்கப்பட்டிருப்பது ஆச்சரியமானதுதான். பாதுகாப்புத் துறையில் முக்கிய பதவியிலிருந்த ஒருவர் மீது சந்தேகத்தை ஏற்படுத்தும் வகையில் இந்த விசாரணைகள் இடம்பெறுவதும் இந்த ஆச்சரியத்துக்குக் காரணம். ஆனால், இறுதியில் ஒன்றும் இல்லாமல் விசாரணைகள் கைவிடப்பட்டுவிடுமா என்ற கேள்வியும் ஊடகத்துறை செயற்பாட்டாளர்களிடம் காணப்படுகின்றது.

கீத் நொயார் கடத்தப்பட்டு சுமார் 8 வருடங்களின் பின்னரே அது குறித்த விசாரணை குற்றப் புனாய்வுப் பிரிவினரால் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டிருக்கின்றது. நொயார் கடத்தப்பட்ட போதே சி.ஐ.டி.யினர் அது குறித்து பலருடைய வாக்குமூலங்களைப் பதிந்திருந்தார்கள். குறிப்பாக நொயாருடன் பணிபுரிந்த பலருடைய வாக்குமூலங்கள் பதியப்பட்டன. விசாரணைகளுக்கு ஒத்துழைக்குமாறு நோயாரிடமும் சி.ஐ.டி.யினர் கோரியிருந்தார்கள். இருந்த போதிலும், அந்த வேளையில் அந்த விசாரணைகள் வெறும் கண்துடைப்பாகவே இருந்தது. யாரும் கைதாகவும் இல்லை. ஒரு அளவுக்கு மேல் விசாரணை முன்னெடுக்கப்படவும் இல்லை. கடத்தப்பட்டு, பலமாகத் தாக்கப்பட்டு வீதியில் கொண்டுவந்து போடப்பட்ட நொயார், மருத்துவசிகிச்சைக்குப் பின்னர் அவுஸ்திரேலியாவுக்குச் சென்றுவிட இந்தச் சம்பவம் மறக்கப்பட்டுவிட்டது. ஊடக சுதந்திரத்துக்காக குரல் கொடுக்கும் அமைப்புக்கள் அவ்வப்போது இதனையிட்டு குறிப்பிட்டதைவிட, இச்சம்பவம் பெரிதாகப் பேசப்படவும் இல்லை.

ஆணயிட்டவர் யார்?

2008 மே மாதம் இடம்பெற்ற இந்தத் தாக்குதல் சம்பவம் தொடர்பில் 5 இராணுவத்தினர் கைதாகியிருப்பதாக கடந்த சனிக்கிழமை (பெப்ரவரி 18) குற்றப் புலனாய்வுத்துறை அறிவித்த போது, அரசியல் வட்டாரங்களில் பரபரப்பு ஏற்பட்டது. இந்தச் சம்பவத்தின் பின்னணியில் இராணுவத்தினர் இருந்துள்ளார்கள் என்ற ஊடகத்துறையினருடைய சந்தேகத்தையும் அது உறுதிப்படுத்தியது. கைதானவர்களில் மேஜர் புலத்வத்தை முக்கியமானவர். சிரேஷ்ட இராணுவ அதிகாரியான இவர், ரிவிர பத்திரிகையின் முன்னாள் ஆசிரியர் உபாலி தென்னக்கோன் மீதான தாக்குதலிலும் தொடர்புடையவராகக் கருதப்படுகின்றார். உபாலி மீதான தாக்குதல் 2009 முற்பகுதியில் இடம்பெற்றது. ஊடகவியாளர்கள் மீதான தாக்குதலுக்கு தெரிவு செய்யப்பட்ட சிலர் பயன்படுத்தப்பட்டுள்ளார்களா என்ற கேள்வியையும் இது எழுப்புகின்றது.

கைதான படையினர் ஐவரும் மார்ச் 2 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். சி.ஐ.டி.யினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளார்கள். கைதானவர்கள் அம்பாகச் செயற்பட்டவர்கள்தான். இந்த அம்புகளை 'எய்தவர்' யார் என்பதுதான் பதில் காணப்பட வேண்டிய பிரதான கேள்வி. பாதுகாப்புடன் சம்பந்தப்பட்ட முக்கியமான ஒருவரே இதன் பின்னணியில் இருந்திருப்பதாக வெளியிடப்படும் சந்தேகங்களும் நியாயமானவையாகத்தான் உள்ளன. அதற்குத் தேவையான உறுதிப்படுத்தக்கூடிய ஆதாரங்கள் எதுவும் இதுவரையில் சிக்கியதாகத் தெரியவில்லை. லங்கா ஈ நியூஸ் ஆசிரியர் பிரகீத் எக்னெலியகொட காணமல் போனமை, சன்டே லீடர் ஆசிரியர் லசந்த விக்கிரமங்க கொலை தொடர்பான விசாரணைகளிலும் இதேபோல இராணுவப் புலனாய்வு அதிகாரிகள் பலர் கைதானபோதிலும், இப்போது விசாரணைகள் மந்த கதியில் செல்வதையே காணமுடிகின்றது.

கைதான இராணுவ அதிகாரிகள் யாருமே நொயார் மீது தாக்குதலை நடத்துவதற்கு தனிப்பட்ட எந்தக் காரணமும் இருக்கவில்லை. 'மேலிடத்து' உத்தரவை அவர் செயற்படுத்தியிருக்கின்றார்கள். இந்த 'மேலிடத்தை' கண்டுபிடிப்பதும், கண்டுபிடித்தால் அதனை சட்டத்தின் முன்பாகக் கொண்டுவருவதும்தான் குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்குப் பெரும் சவாலாகவே அமையப்போகின்றது. கடந்த இரண்டு வருட காலத்தில் இடம்பெற்ற விசாரணைகள் அனைத்துமே ஒரு கட்டத்துக்கு மேல் செல்லாமலிருப்பது வெளிப்படை. அந்த நிலையில், நொயார் மீதான தாக்குதல் விசாரணை இந்த 5 இராணுவ அதிகாரிகள் கைதுடன், முடிவடைந்துவிடுமா அல்லது அடுத்த கட்டத்துக்குச் செல்லுமா என்ற கேள்வி எழுவது தவிர்க்க முடியாததாகவே இருக்கும்.

கடத்தப்பட்டது ஏன்?

தெஹிவளை, வைத்தியா மாவத்தையிலுள்ள அவருடைய வீட்டு வாசலில் வைத்தே கீத் நொயார் கடத்தப்பட்டார். 2008 மே 22 ஆம் திகதி இரவு 10.30 மணியளவில் இச்சம்பவம் இடம்பெற்றது. 'நேஷன்' பத்திரிகையின் பிரதி ஆசிரியராக மட்டுமன்றி, அதன் பாதுகாப்பு விவகார பத்தியாளராகவும் நொயார் இருந்துள்ளார். சன்டே ரைம்பஸில் வெளிவரும் பாதுகாப்பு விவகார பத்திக்கு நிகராக வாசகர்கள் மத்தியில் பெரும் அவதானிப்பைப்பெற்ற ஒரு பத்தியாக இது இருந்தது. இராணுவத் தலைமையை கடுமையாக விமர்சிக்கும் கட்டுரை ஒன்றை கடந்தப்படுவதற்கு இரு வாரங்களுக்கு முன்னர் அவர் எழுதியிருந்தார். பல்வேறு விடயங்கள் தொடர்பாக இராணுவத் தலைமையின் மீது இந்த விமர்சனம் முன்வைக்கப்பட்டிருந்தது. பாதுகாப்புத் துறை வட்டாரங்களில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் இந்தப் பத்தி ஏற்படுத்தியிருந்தது.

இந்தக் கட்டுரை பரபரப்பை ஏற்படுத்தி இரு வாரங்களின் பின்னர் நொயார் கடத்தப்பட்டார். தெஹிவளையிலுள்ள தன்னுடைய வீட்டை நோக்கி வந்துகொண்டிருந்த நொயார், 10.30 க்கு சில நிமிடங்கள் முன்னர், மனைவிக்கு தொலைபேசி அழைப்பை எடுத்தார். தான் அருகே வந்துவிட்டதால், கதவைத் தறக்குமாறு கூறியிருக்கின்றார். கதவைத் திறந்து 15 நிமிடங்களாகியும் கணவர் வராததால் ஆச்சரியடைந்த மனைவி, வாசலுக்கு வெளியே வந்து பார்த்த போதுதான் அதிர்ச்சி காத்திருந்தது. வாசலில் நொயாரின் கார் நின்றது. அதன் கார் என்ஜின் வேலை செய்துகொண்டிருந்தது. லைற் எரிந்துகொண்டிருந்தது. முன்பக்கக் கதவு அகலத் திறந்திருந்தது. ஆனால், கணவன் மட்டும் இருக்கவில்லை. அருகில் தேடிப்பார்த்தும் கணவரைக் காணவில்லை என்றவுடன், "ஏதோ நடந்துவிட்டது" என்பது மனைவிக்கு உறைத்தது.

உடனடியாகவே நேஷன் ஆசிரியர் லலித் அழகக்கோன் உட்பட முக்கியமானவர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட அனைவருமே தெஹிவளைக்கு விரைந்தார்கள். முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோதாபாய ராஜபக்‌ஷ, முன்னார் ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ஷ ஆகியோருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. நொயரை விடுவிக்க உதவுமாறு  அவர்களிடம் கோரப்பட்டது. "நொயார் காணாமல் போனமைக்கு இராணுவம் காரணமல்ல" என உடனடியாகவே கோதாபாய மறுத்திருக்கின்றார். ஊடகவியலாளர்கள் பலர் உடனடியாகவே தெஹிவளை பொலிஸ் நிலையம் முன்பாகக் கூடி நொயாரை விடுவிக்குமாறு அழுத்தம் கொடுத்தார்கள். பொலிஸாரோ எதனையும் செய்யக் கூடிய நிலையில் இருக்கவில்லை.

கைப்பேசி 'சிக்னல்'

நொயாரின் கடத்தல் தொடர்பில் உடனடியாகவே கொழும்பிலுள்ள வெளிநாட்டுத் தூதரகங்கள், ஊடக அமைப்புக்களுக்குத் தகவல் கொடுக்கப்பட்டது. அவற்றின் மூலமாகவும் அரசுக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டது. நொயாரின் கைத்தொலைபேசி அணைக்கப்பட்டிருந்தது. இருந்தபோதிலும் அதிலிருந்து ஏதாவது சமிஞ்ஞை வருகிறதா என அவதானிக்குமாறு சம்பந்தப்பட்ட தொலைபேசி நிறுவனம் கேட்டுக்கொள்ளப்பட்டிருந்தது. நள்ளிரவுக்கு மேலாக தொம்பே பகுதியிலிருந்து சமிஞ்ஞை ஒன்று கிடைத்திருப்பதாக குறிப்பிட்ட நிறுவனம் தெரிவித்தது. கடத்தல்காரர்கள்  ஏதோ தேவைக்காக அப்போது தொலைபேசியை செயற்படுத்தியிருக்க வேண்டும். கடத்தப்பட்ட பத்திரிகையாளர் தொம்மே பகுதியில் தடுத்து வைக்கப்பட்டிருக்க வேண்டும் என்பதை இது உணர்த்தியது.

பொலிஸ் விசாரணையில் கொஞ்சம் கூட நம்பிக்கை வைக்காத நொயாரின் சகாக்கள் உடனடியாகவே அந்தப் பகுதியை நோக்கி விரையத் தொடங்கினார்கள்.  விடுதலைப் புலிகளுடனான போரின் போது இராணுவப் புலனாய்வுப் பிரிவினர் தொம்மேயில் தமது இரகசிய பாதுகாப்பு முகாம்கள் பலவற்றை வைத்திருந்தார்கள். தொம்பேயிலிருந்து வந்த 'சிக்னல்' இந்தக் கடத்தலின் பின்னணியில் இராணுவப் புலனாய்வாளர்கள் இருந்திருக்க வேண்டும் என்பதை உணர்த்தியது. தொம்பே பகுதியில் விடிய விடிய பத்திரிகையாளர்கள் தேடுதல் நடத்தியபோதிலும், எதனையும் அவர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை. இருந்தபோதிலும், மறுநாள் அதிகாலை தெஹிவளையிலுள்ள தனது வீட்டுக்கு சற்றுத் தொலைவில் குற்றுயிராகப் போடப்பட்டிருந்த நிலையில் நொயார் காணப்பட்டார். உடைகள் கிழிக்கப்பட்டு. உடலில் கடும் காயங்களுடன் மயக்க நிலையில் அவர் இருந்தார். கடுமையாகத் தாக்கப்பட்டு சித்திரவதைக்குள்ளாக்கப்பட்டிருப்பதை இது உணர்த்தியது. உடனடியாக மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார்.

இரவோடிரவாக அரசுக்குக்கொடுக்கப்பட்ட அழுத்தங்களும், பத்திரிகையாளர்கள் தொம்பேயில் தேடுதல் நடத்தியதும் அவரது உடனடியான விடுதலைக்கு காரணமாக இருந்திருக்கலாம். முன்னைய அரசின் உயர் மட்டம் இதன் பின்னணியில் இருந்திருக்க வேண்டும் என்ற சந்தேகத்தையும் இது உணர்த்தியது. நேஷன் பத்திரிகையில் தொடர்ச்சியாக சென்பதி (Senpathi) என்ற பெயரில் அவர் எழுதி வந்த பாதுகாப்பு விவகாரம் தொடர்பான பத்திதான் அவரது கடத்தலுக்குக் காரணமாக இருந்திருக்கின்றது எனத் நேஷன் பத்திரிகை நிர்வாகம், இதற்காக அவருக்கு கொலை அச்சுறுத்தல் இருந்துவந்தமையையும் உறுதிப்படுத்தியது. ஊடகத்துறையைச் சேர்ந்தவர்களை மௌனிக்கச் செய்யும் கலாச்சாரத்தின் ஒரு பகுதியாகத்தான் இந்தக் கடத்தலும் இடம்பெற்றது. பாதுகாப்புப் பத்தியை எழுதுவதற்கான தகவல்களை நொயார் யாரிடமிருந்து பெற்றுக்கொள்கின்றார் என்பதை அறிந்துகொள்வதற்காகவே தான் கடத்தப்பட்டு தாக்கப்பட்டதாக நொயார் பின்னர் தெரிவித்தார். வைத்தியசாலையிலிருந்து வீடு திரும்பிய சில தினங்களிலேயே அவுஸ்திரேலியா சென்ற, நொயார் இன்றுவரையில் தாயகம் திருப்பவே இல்லை. அன்று இரவு நடந்த அச்சம்பவம் அவரையும் குடும்பத்தையும் அந்தளவுக்குப் பாதித்தது.

8 வருடங்களின் பின்னர் இப்போது விசாரணை ஆரம்பமாகியிருக்கின்றது. இராணுவப் புலனாய்வுத் துறையைச் சேர்ந்த ஐவர் கைதாகியுள்ளார்கள். மேலும் சிலர் பைதாகலாம் எனச் சொல்லப்படுகின்றது. இத்தத் தாக்குதலுடன் தொடர்புபட்டவர்களே லசந்த, உபாலி விவகாரங்களிலும் சம்பந்தப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தை சுதந்திர ஊடக அமைப்பு வெளியிட்டிருக்கின்றது. அதனால், விசாரணைகள் துரிதப்படுத்தப்பட வேண்டும் எனவும் அவ்வமைப்பு வலியுறுத்தியுள்ளது. ஆனால் இப்போதும் எழும் கேள்வி இதுதான். இந்த விவகாரத்திலாவது நீதி நிலைநிறுத்தப்படுமா? குற்றவாழிகள் தண்டனையிலிருந்து தப்பித்துக்கொள்ளும் நிலை முடிவுக்கு வருமா?

(26-02-2017 ஞாயிறு தினக்குரல்)

டில்லி சொன்னதும் சொல்லாவையும்

வடக்கு - கிழக்கு இணைப்பு விவகாரத்தில் இந்தியாவின் நிலைப்பாடு என்ன என்பதில் எந்தவிதமான இரகசியமும் இருக்கவில்லை. இணைப்பைக் கைவிட இந்தியா இணங்காது என்ற ஒரு எண்ணப்பாட்டை சில தமிழ்க் கட்சிகள்தான் கட்டிவளர்த்திருந்தன. இந்தியாவினால் கொண்டுவரப்பட்ட உடன்படிக்கையில் உள்ள ஒரு அம்சம்தான் "இணைப்பு" என்பதால், அதனை நீக்கினால் இந்தியா சீற்றமடையும் என்ற நம்பிக்கை தமிழகளுக்கும் ஏற்படுத்தப்பட்டிருந்தது. டில்லி மீது அதீத நம்பிக்கை வைத்து அரசியலை நடத்தும் நடைமுறையின் ஒரு பகுதிதான் இது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்களுடனான கடந்த வாரச் சந்திப்பின்போது, இணைப்பை வலியுறுத்திக்கொண்டிருப்பதைவிட, கிடைக்கும் தீர்வை ஏற்றுக்கொள்ளுங்கள் என்ற கருத்துப்பட இந்திய வெளிவிவகாரச் செயலாளர் எஸ்.ஜெய்சங்கர் அறிவுரை கூறியிருக்கின்றார். இணைப்பு விடயத்தில் டில்லியின் அணுகுமுறை என்ன என்பதை இது வெளிப்படுத்தியிருக்கின்றது.

ஜெய்சங்கரின் இந்தச் செய்தி பல விடயங்களைத் தமிழர்களுக்கு உணர்த்தியிருக்கின்றது. எமது நியாயமான அபிலாஷைகளுக்குப் பின்னால் இந்தியா நிற்கும், அதற்கான அழுத்தத்தைக் கொடுக்கும் என்பது வீணான ஒரு நம்பிக்கை என்பது அதில் முக்கியமானது. வடக்கு - கிழக்கு இணைந்திருக்க வேண்டும் என்ற தேவை இந்தியாவுக்கு இல்லை என்பது இரண்டாவது. தமிழர்களின் அபிலாஷைகளுக்காகக் குரல்கொடுக்கப்போய் சிங்களத் தரப்பின் சீற்றத்துக்குள்ளாகிவிடக் கூடாது என்பது அடுத்தது. இலங்கையில் அதிகரிக்கும் சீனாவின் ஆதிக்கத்தைச் சமப்படுத்துவதற்கான திட்டங்களை முன்னெடுப்பதற்கு, கொழும்பின் நல்லெண்ணம் அவசியம் என்பதை இந்தியா உணர்கின்றது. 'இணைப்பு' அவசியம் என்பதை வலியுறுத்தப்போய் கொழும்பின் நல்லெண்ணத்தைக் கோட்டைவிட்டுவிட இந்தியா இப்போதைக்குத் தயாராகவில்லை.

அதனால்தான் வடக்கு கிழக்கு இணைக்கப்படுவதற்கு இந்தியா அழுத்தம் கொடுக்க வேண்டும் என்ற சுரேஷ் பிரேமச்சந்திரனின் கோரிக்கைக்கு ஆறுதலிளிக்கக்கூடிய பதில் எதனையும் ஜெய்சங்கரால் கொடுக்க முடியவில்லை.  "இணைப்பு என்பதில் தொங்கிக்கொண்டிருக்காமல் ஏதோ ஒரு சமரசத்துக்குச் செல்லுங்கள், இன்றைய காலகட்டத்தில் அதுதான் புத்திசாலித்தனமானது" என வலியுறுத்துவதாகவே அவரது பதில் அமைந்திருந்தது. பிரேமச்சந்திரன் இது குறித்துக் கேள்வியை எழுப்பியிருந்தாலும், கூட்டமைப்புத் தலைமையின் அணுகுமுறை கிட்டத்தட்ட ஜெய்சங்கரின் நிலைப்பாட்டை ஒத்ததாகவே இருந்தது. இருக்கின்றது. அரசியலமைப்பு வழிநடத்தல் குழுவின் கூட்டங்களில் கூட்டமைப்பைப் பிரதிநிதித்துவப்படுத்தும் இரா.சம்பந்தனோ, எம்.ஏ.சுமந்திரனோ இணைப்பை வலியுறுத்தியதாக எந்தவொரு பதிவும் இல்லை. ஆக, அவர்களும் கொழும்புக்கு நோகாமல் தீர்வு ஒன்றைப் பெற்றுக்கொள்வதில்தான் அவதானமாக இருக்கின்றார்கள்.

இணைப்பு என்பது தமிழர்களின் நலன்களுக்கு முக்கியமானதாக இருக்கலாம். ஆனால், இந்தியாவின் நலன்களுக்கு அது "இப்போது" அசியமற்றது. நாடுகளின் நலன்கள் காலத்துக்குக் காலம் மாறுபடக்கூடியது. 1987 ஆம் ஆண்டு இலங்கை - இந்திய உடன்படிக்கையின் மூலம்தான் வடக்கு - கிழக்கு இணைக்கப்பட்டது. அதுவும் ஒரு தற்காலிகமான இணைப்புத்தான். ஒரு வருடத்தில் கிழக்கு மாகாணத்தில் நடத்தப்படும் சர்வஜன வாக்கெடுப்புத்தான் அதன் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் என்பது உடன்படிக்கையின் முக்கிய அம்சம். அப்போது தற்காலிக இணைப்பு நிரந்தரமானதாக்கப்பட வேண்டும் என்பதை தமிழ் அமைப்புக்கள் இந்தியாவிடம் வலியுறுத்தின. இந்தியா அதற்குக் கொடுத்த பதில் முக்கியமானது. அவ்வாறிருந்தாலும், சர்வஜன வாக்கெடுப்பு நடைபெறாமல் நாம் பார்ததுக்கொள்வோம் என்பதுதான் டில்லியின் உறுதிமொழி. ஆனால், சர்வஜன வாக்கெடுப்பு இல்லாமலே இணைப்பு நீக்கப்பட்டபோது இந்தியாவினால் எதுவும் செய்ய முடியவில்லை.

1980 களின் பிற்பகுதியில் ஆயுதம் தாங்கிய தமிழ்ப் போராளி அமைப்புக்களைப் பயன்படுத்தி இலங்கையைப் பணிய வைக்க வேண்டிய தேவை இந்தியாவுக்கு இருந்தது. அதனை இந்தியா திட்டமிட்டுச் செய்தது. அதன் பலன்தான் 87 ஜூலை உடன்படிக்கை. அதில்கூட இணைப்பை நிரந்தரமாக்க டில்லியால் முடியவில்லை. ஜே.ஆர்.ஜெயவர்த்தனவை இணங்கச் செய்வதற்காகவே "ஒரு வருடத்தில் சர்வஜன வாக்கெடுப்பு" என்ற சரத்து சேர்க்கப்பட்டது. அவ்வாறு வாக்கெடுப்பு நடைபெறாது என போராளி அமைப்புக்களுக்கு இரகசியமாக வாக்களிக்கப்பட்டது. இலங்கையில் தன்னுடைய நலன்களைப் பேணிக்கொள்வதற்காக அவ்வாறு செயற்பட வேண்டிய தேவை இந்தியாவுக்கு அப்போது இருந்தது. இணைப்பு விடயத்தில் உறுதியான ஒரு நிலைப்பாட்டில் அப்போது கூட இந்தியா இருக்கவில்லை. இரு தரப்பையும் சமாளிக்கும் வகையிலேயே டில்லியின் அணுகுமுறை இருந்தது.

இந்த நிலையில், இப்போது இணைப்பை இந்தியா வலியுறுத்தும் என எவ்வாறு நம்பமுடியும்? இதற்கும் மேலாக தன்னுடைய பிராந்திய நலன்களை முன்னிலைப்படுத்தியதாகவே தமது வெளியுறுவுக்கொள்கையை இந்தியா வகுத்துக்கொள்ளும். இலங்கை தொடர்பான டில்லியின் வெளியுறுவுக்கொள்கையை வகுத்துக்கொள்வதில் சீனா முக்கிய இடத்தைப் பெறுகின்றது. தென்பகுதியில், சீனாவின் செல்வாக்கு அதிகரித்துவருவது இரகசியமான ஒன்றல்ல. வடக்கு கிழக்கில் சீனா செல்வாக்குச் செலுத்தக்கூடாது என்பதுதான் இப்போது இந்தியாவின் கரிசனை. அதனால்தான் சீனன்குடா, சம்பூர், வடக்கில் பலாலி விமான நிலைய புனரமைப்பு என பல திட்டங்களை தன்னுடைய கைகளில் இந்தியா எடுக்கின்றது. இவற்றில் கால்பதிக்கும் நிலையில் இணைப்பு குறித்தும் குரல்கொடுக்க முற்பட்டால் தென்னிலங்கையில் அதன் பிரதிபலிப்பு எவ்வாறானதாக இருக்கும் என்பதை மதிப்பிடுவது இந்தியாவுக்கு கடினமானதல்ல. தமிழ் மக்களுடைய அபிலாஷைகள் குறித்துப் பேசுவதை விட அவற்றையிட்டுப் பேசாமலிருப்பதுதான் இந்தியாவின் நலன்களுக்கு இன்று தேவையானது. அதனைத்தான் இந்தியா செய்கின்றது.

புதுடில்லியின் இந்த அணுகுமுறையைப் புரிந்துகொள்ளாமல், வெறுமனே இந்தியா வரும் பெற்றுத் தரும் என நம்பிக்கொண்டிருப்பதில் அர்த்தமிருக்கப்போவதில்லை. அவ்வாறான நம்பிக்கையை மக்களுக்குக் கொடுப்பதையும் தமிழ்க் கட்சிகள் தவிர்க்க வேண்டும். பதிலாக இந்த நம்பிக்கை அரசியலைக் கைவிட்டுவிட்டு, தம்மால் என்ன செய்ய முடியும் என்பதையிட்டுப் பார்ப்பதுதான் பொருத்தமானது. குறிப்பாக இது தொடர்பில் முஸ்லிம் தலைமைகளுடன் பேச்சுக்களை ஆரம்பிக்க வேண்டும். இரு இன மக்களுக்கும் இடையிலான புரிந்துணர்வின் மூலமாகத்தான் இந்தப் பிரச்சினைக்கு நிரந்தரமான ஒரு தீர்வைக்கொண்டுவரமுடியும். கிழக்கு மாகாண சபையின் செயற்பாடுகளில் இந்தப் புரிந்துணர்வைப் பெருமளவுக்குக் காணமுடிகின்றது. இதனை மேலும் வரிவுபடுத்த வேண்டும். முஸ்லிம்களும் ஏற்றுக்கொள்ளும் வகையில் இதற்கான ஒரு தீர்வைக்காண்பதற்கான கலந்துரையாடல்களை ஆரம்பிப்பதுதான் இன்றைய காலகட்டத்தின் தேவையாகும்!

(26-01-2017 தினக்குரல் ஆசிரியர் தலையங்கம்)

இதற்காகத்தான் வாக்களித்தோமா?

வடமாகாண சபை செயற்படத் தொடங்குவதற்கு முன்னதாகவே சபையைக் கைப்பற்றிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கூட்டுக் கட்சிகளிடையேயான முரண்பாடுகள் சூடுபிடிக்கத் தொடங்கிவிட்டன. முலமைச்சரின் பதவியேற்புக்கு கூட்டுக்கட்சிகளின் தலைவர்கள் பலரும் வரவில்லை. அதேபோல அமைச்சர்கள், மாகாண சபை உறுப்பினர்களின் பதவியேற்பு யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற போது அதிலும் கட்சித் தலைவர்கள் பலர் பங்குகொள்ளவில்லை. நிகழ்வை அவர்கள் புறக்கணித்தார்கள். கூட்டமைப்பின் மாகாண சபை உறுப்பினர்கள் சிலர் முதலமைச்சர் முன்பாக பதவியேற்க மறுத்து தனியாக பதவிப் பிரமாணம் செய்யவிருப்பதாக அறிவித்திருக்கின்றார்கள். இதன்மூலம் வடமாகாண சபையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆளும் கட்சியாகவுள்ள நிலையில் அதற்குள்ளேயே ஒரு தரப்பினர் எதிர்க்கட்சி போன்று செயற்படும் நிலை உருவாகியிருக்கின்றது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் பாரிய நம்பிக்கை வைத்து அதற்கு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒரு வெற்றியைப் பெற்றுக்கொடுத்த மக்கள் கடந்த இரண்டு வாரகாலமாக அங்கு இடம்பெறும் குத்துவெட்டுக்களால் அதிர்ந்துபோயுள்ளார்கள். இதற்காகத்தான் வாக்களித்தோமா என்ற கேள்வியை எழுப்பாத வாக்காளர்கள் இல்லை என்று சொல்லும் அளவுக்கு நிலைமைகள் மோசமாகியுள்ளன.

போர் முடிவுக்கு வந்து நான்கு வருடங்கள் கடந்துள்ள நிலையில் இருளுக்குள் இருக்கும் மக்களுக்குத் தொலைவில் தெரியும் ஒரு ஒளிக்கீற்றாகத்தான் மாகாண சபை உருவாகியது. மாகாண சபைக்கான அதிகாரங்கள் பறிக்கப்பட்ட அல்லது முடக்கப்பட்ட நிலை ஒருபுறம். மாகாண சபைகளுக்கு எதனையும் கொடுக்கக்கூடாது என்ற சிங்களத் தேசியவாதிகளின் கூக்குரல் மறுபுறம். இதற்கு மத்தியிலும் போரால் சிதைந்துபோயுள்ள வடக்கு மக்களின் பிரமாண்டமான தேவைகளை இந்த மாகாண சபை எவ்வாறு பெற்றுக்கொடுக்கப்போகின்றது என்ற கேள்வி எழாமலில்லை. போரினால் அனைத்தையும் இழந்து மீள்குடியேற்த்துக்காக ஏங்கிக்கொண்டிருக்கும் மக்களின் எதிர்பார்ப்புக்கள். காணாமல்போன உறவுகளைத் தேடியலையும் மக்களின் வேதனைகள். குடும்பத் தலைவரை இழந்து வாழ்வாதாரத்துக்காக தினசரி போராடிக்கொண்டிருக்கும் குடும்பங்கள். விதவைகள், அங்கவீனர்கள். இவர்களுடன் முன்னாள் போராளிகள் சமூகத்தில் எதிர்கொள்ளும் நெருக்கடிகள் என ஏராளமான பிரச்சினைகள் மாகாண சபையின் முன்பாக உள்ளன. இவை அனைத்துக்கும் நியாயமானதும், கௌரவமானதுமான ஒரு தீர்வை மாகாண சபை பெற்றுத் தரும் என்ற நம்பிக்கையுடன்தான் தமிழர்கள் பாரியளவில் வாக்களித்து வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த வெற்றி ஒன்றை தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குப் பெற்றுக்கொடுத்தார்கள்.

நெருக்கடியான ஒரு காலகட்டத்தில் கிடைத்திருக்கக்கூடிய ஒரு சிறிய வாய்ப்பாகத்தான் வட மாகாண சபை அமையப்பெற்றிருக்கின்றது. உடனடியாகத் தீர்க்கப்பட வேண்டிய விடயங்கள், நீண்டகால அடிப்படையில் தீர்க்கப்பட வேண்டிய பிரச்சினைகள் என திட்டங்களை வகுத்துச் செயற்பட வேண்டிய நிலையில் மாகாண சபை உள்ளது. முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனும் பதவியேற்ற உடன் வெளியிட்ட அறிக்கையிலும் இது தொடர்பாகக் குறிப்பிட்டிருந்தார். இந்தப் பொறுப்பை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சிறப்பாக முன்னெடுக்கும் என்ற நம்பிக்கையைத்தான் தமது வாக்குகளின் மூலம் தமிழர்கள் உணர்த்தியிருந்தார்கள். போர் முடிவுக்கு வந்த பின்னர் இடம்பெற்ற பாராளுமன்ற மற்றும் ஜனாதிபதித் தேர்தல்களை விட மாகாண சபைத் தேர்தலில் அதிகளவில் தமிழர்கள் பங்குகொண்டு வாக்களித்தது இந்த நம்பிக்கையில்தான். தமக்கு உறுதியான - கௌரவமான ஒரு எதிர்காலத்தை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பெற்றுத்தரும் என அவர்கள் எதிர்பார்த்தார்கள். நம்பிமானார்கள். கூட்டமைப்பின் தலைவர்கள் எதிர்பார்த்ததைவிடவும் அதிகமான ஒரு வெற்றியை மக்கள் பெற்றுக்கொடுத்தார்கள். மக்களின் ஆணையைப் பெற்றுக்கொண்ட கூட்டமைப்பு இப்போது என்ன செய்யப்போகின்றது?

இந்த இடத்தில் கூட்டமைப்பின் தலைவர்கள் ஒரு விடயத்தைத் தெளிவாகப் புரிந்துகொள்வது அவசியம். தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு அளிக்கப்பட்ட வாக்குகள் அவர்களால் முன்வைக்கப்பட்ட தேர்தல் அறிக்கைக்காக, அவர்கள் முன்னெடுத்த பிரசாரத்துக்காக அளிக்கப்பட்ட வாக்குகள். கூட்டமைப்பு என்பதற்காகத்தான் அந்த வாக்குகள் அளிக்கப்பட்டன. கூட்டமைப்பிலுள்ள தனிப்பட்ட கட்சிகளை அடையாளம்கண்டு அதற்காக மக்கள் வாக்களிக்கவில்லை. அவ்வாறு வாக்களித்திருந்தால் பொது வேட்பாளராக களமிறங்கிய நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரனால் எவ்வாறு அதிகளவு விருப்பு வாக்குகளைப் பெற்றுக்கொள்ள முடிந்தது? கூட்டமைப்பிலுள்ள கூட்டுக்கட்சிகள் தமது தனிப்பட்ட அடையாளங்களை மறந்து ஒற்றுமையாகச் செயற்பட்டு தமிழர்களுக்கு கௌரவமான ஒரு தீர்வைப் பெற்றுத்தர வேண்டும் என்பதற்காகத்தான் மக்கள் வாக்களித்திருந்தார்கள். மன்னார் மாவட்ட ஆயர் ராயப்பு ஜோசெப் கூட, தனிப்பட்ட அடையாளங்களைக் கைவிட்டு கூட்டமைப்பு என்ற ஒரே அடையாளத்துக்குள் செயற்படுவதற்கு அதிலுள்ள கட்சிகள் முன்வர வேண்டும் என்பதை வலியுறுத்திருந்தார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலுள்ள கட்சிகளைப் பொறுத்தவரையில் தேர்தல் காலங்களில் வெளிப்படுத்தும் ஒற்றுமை தேர்தல் முடிவடைந்ததும் சிதைநதுபோய்விடும் நிலைதான் தொடர்கின்றது.

பொது நலன்களை முன்னிலைப்படுத்துவதாகக் கூறிக்கொண்டாலும், கூட்டுக்கட்சிகள் தமது தனிப்பட்ட கட்சி நலன்களின் அடிப்படையில்தான் செயற்படுகின்றனவா என்ற சந்தேகம் வாக்களித்த அனைவருக்கும் எழுகின்றது. குறிப்பாக கடந்த இரண்டு வாரகாலமாக அமைச்சர் பதவிகள் தொடர்பில் இடம்பெற்ற இழுபறி இந்த சந்தேகத்தை அதிகப்படுத்தியிருக்கின்றது. போரால் சிதைந்போயுள்ள ஒரு பிரதேச மக்களின் நலன்களை முன்னிலைப்படுத்துவதற்குப் பதிலாக கட்சி நலன்களை முன்னிலைப்படுத்துவதாகவே இந்த இழுபறிகள் அமைந்திருந்தன. கூட்டமைப்பில் ஐந்து கட்சிகள் இருந்தாலும் அதில் தமிழரசுக்கட்சியின் மேலாதிக்கம் தமது நலன்களைப் பாதிப்பதாக மற்றைய கட்சிகள் கருதுகின்றன. தம்மைப் பலவீனப்படுத்திவிட்டு கூட்டமைப்பு என்றால் தமிழரசுக்கட்சி என்ற நிலையை உருவாக்க அந்த கட்சி முயல்வதாக ஏனைய கட்சிகளின் தலைலவர்கள் குமுறுகின்றார்கள். இதனால் மற்றைய கட்சிகள் ஒருவித தற்காப்பு நிலையிலேயே எப்போதும் உள்ளன. கூட்டமைப்புக்குள் ஒரு முறுகல் நிலை தொடர்வதற்கு இதுதான் காரணம். கூட்டமைப்பிலுள்ள கூட்டுக்கட்சிகள் தமது கட்சிகளைக் கலைத்துவிட்டு கூட்டமைப்பை தனியான ஒரு கட்சியாகப் பதிவு செய்து ஜனநாயக ரீதியாகச் செயற்படுவதற்கான நகர்வுகளை மேற்கொள்ளாதவரையில் இந்த நிலை தொடரத்தான் போகின்றது. இதற்காகத்தான் வாக்களித்தோமா என மக்கள் பெருமூச்சு விடும் நிலையை கூட்டமைப்பின் தலைவர்கள் ஏற்படுத்தமாட்டார்கள் என நம்புவோம்!


(ஞாயிறு தினக்குரல் ஆசிரியர் தலையங்கம்:2013-10-13)

அதுவும் இல்லை; இதுவும் இல்லை

ஜெனீவாவில் கொடுத்த வாக்குறுதியிலிருந்து விலகிச் செல்வதற்கான காய்நகர்த்தல்களை அரசாங்கம் மிகுந்த இராஜதந்திரத்துடன் முன்னெடுத்துவருகின்றது. "தேசியப் பிரச்சினைக்கு நிரந்தரமான தீர்வொன்றைக் காண்கதற்கான முயற்சிகளை புதிய அரசியலமைப்பை உருவாக்குவதன் மூலம் முன்னெடுத்துவருகின்றோம். அதுதான் இப்போது முக்கியமானது. இந்த நிலையில் பொறுப்புக் கூறல் என்பதை நிர்ப்பந்தித்து அரசியலமைப்பாக்க முயற்சிகளைக் குழப்பிட வேண்டாம்" என்பதுதான் சர்வதேசத்துக்கு  அரசாங்கம் இப்போது கொடுக்கும் செய்தி. ஜனாதிபதி, பிரதமர், வெளிவிவகார அமைச்சர்  ஆகியோர் இந்த உபாயத்துடன் தமது இராஜதந்திர நகர்வுகளை ஏற்கனவே ஆரம்பித்துவிட்டார்கள். முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவும் இப்போது இதே இலக்குடன் களம் இறங்கியிருக்கின்றார். வெளிநாட்டு ஊடகவியலாளர்களை புதன்கிழமை சந்தித்து சந்திரிகா குமாரதுங்க தெரிவித்திருக்கும் தகவல்கள் இதனைத்தான் பிரதிபலிப்பதாக அமைந்திருக்கின்றது.

சந்திரிகா குமாரதுங்க மக்களால் தெரிவு செய்யப்பட்ட பதவிகள் எதிலும் இல்லாத போதிலும், அரசாங்கத்தினால் அமைக்கப்பட்டுள்ள தேசிய ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்துக்கான பணியகத்தின் தலைவராக உள்ளார். மைத்திரி - ரணில்  அரசாங்கத்தை அமைத்துக்கொள்வதில் முக்கிய பங்கை வகித்தவர். அதனால், அரசாங்கத்தின் முக்கியமான ஒருவராகவே கருதப்படுகின்றார். அரசாங்கத்தின் கொள்கை வகுப்பில் இவருக்கு முக்கியமான இடம் இருப்பதாகவே தெரிகின்றது. அதனால், இவரது கருத்துக்கள் அரசாங்கத்தின் கொள்கைகளைப் பிரதிபலிப்பதாகவே கருதப்பட வேண்டும். அந்த நிலைல் அவர் தெரிவித்திருக்கும் கருத்துக்கள் வாதப்பிரதிவாதங்களை ஏற்படுத்தியிருக்கின்றது. வெளிநாட்டு ஊடகவியலாளர்களுடனான சந்திப்பின்போது பல விடயங்களை அவர் தெரிவித்திருந்தாலும், பொறுப்புக் கூறல் மற்றும் அரசியல் தீர்வு போன்ற தமிழ் மக்களுடன் தொடர்புபட்ட விடயங்களையிட்டு அவர் தெரிவித்திருக்கும் கருத்துக்கள் முக்கியமானவை. தமிழ் மக்களுக்கு ஆச்சரியத்தையும் ஏமாற்றத்தையும் தரத்தக்கதாக அவை அமைந்திருக்கின்றன.

"போரின் இறுதிக்கட்டங்களில் இடம்பெற்ற மீறல்களுக்கு யாரோ சிலர் பொறுப்பேற்க வேண்டும். மீறல்கள் தொடர்பான விசாரணைகள் நல்லிணக்க விவகாரங்களுடன் தொடர்புபடவில்லை என்று நான் கூறவரவில்லை. ஆனால், வடக்கு – கிழக்கில் உள்ள தமிழ் மக்கள், தமது எதிர்காலம் குறித்தே அதிகம் கரிசனை கொள்கின்றனர். தேசிய நல்லிணக்கத்துக்கான கொள்கையும், புதிய அரசியலமைப்புமே தற்போது அவசியமானவை. இதற்கே முன்னுரிமை கொடுக்கப்பட வேண்டும். இதனை அனைத்துலக சமூகமும் ஏற்றுக் கொண்டுள்ளது. நல்லிணக்க செயல்முறைகளின் ஒரு அங்கம் தான் பொறுப்புக்கூறல். எமது நீதித்துறையால்  சரியாக செய்ய முடியுமானால், வெளிநாட்டு நீதிபதிகளுக்கு தேவையிருக்காது" என்று சந்திரிகா குமாரதுங்க தெரிவித்துள்ளார். சந்திரிகாவின் கருத்துக்கள் அரசாங்கத்தின் நிலைப்பாட்டைப் பிரதிபலிப்பவை. புதிய அரசியலமைப்பு உருவாக்கத்தையும் பொறுப்புக் கூறலையும் தொடர்புபடுத்தி அவர் தெரிவித்திருக்கும் கருத்துக்கள் அரசாங்கம் செல்லப்போகும் பாதை எது என்பதை வெளிப்படுத்தக்கூடியவை.

அது குறித்து சந்திரிகா இவ்வாறு கூறுகின்றார்: "புதிய அரசியல் அமைப்பின் உருவாக்கத்திற்கு மகிந்த அணி, ஜாதிக ஹெல உறுமய மற்றும் பொது பல சேனா ஆகியன பாரிய சவாலாக உள்ளன. இதன் காரணமாக கருத்துக் கணிப்பில் தோல்வி அடைந்துவிடக்கூடும் என்ற ஐயம் முன்வைக்கப்படுகின்றது. இருந்தாலும், அதில் வெற்றிபெற முடியும். போர்க்குற்ற விசாரணைக்கான தீர்ப்பாயம் உருவாக்கப்பட்டால், அரசியல் அமைப்பை உருவாக்கும் முயற்சிகள் பாதிக்கப்படும்." இதுதான் சந்திரிகாவின் கருத்து. சர்வதேசத்துக்கும் இதனைத்தான் அவர்கள் சொல்லிவருகின்றார்கள். ஜெனீவாவில் ஆரம்பமாகவுள்ள ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் கூட்டத் தொடரில் மேலும் இரு வருடகால அவகாசத்தைக் கேட்பதற்கு அரசாங்கம் தயாராகிவருகின்றது. போர்க்குற்ற விசாரணை, பொறுப்புக் கூறல் என்பவற்றை ஆரம்பித்தால் இப்போது முன்னெடுக்கப்பட்டுவரும் அரசியலமைப்பாக்க முயற்சிகள் பாதிக்கப்பட்டுவிடும் என்பதுதான் சர்வதேச சமூகத்துக்கு அரசாங்கம் கொடுக்கும் செய்தி. அதாவது, கால அவகாசம் கோருவதை நியாயப்படுத்த அரசியலமைப்பாக்க முயற்சியை துரும்புச் சீட்டடாக அரசாங்கம் பயன்படுத்தப்போகின்றது என்பது வெளிப்படையாகத் தெரிகின்றது.

நல்லிணக்கம் முக்கியமானது. அதற்காக பொறுப்புக் கூறலை வலியுறுத்தக்கூடாது என்பதுதான் அரசாங்கம் இப்போது எடுக்கும் நிலைப்பாடாக உள்ளது. தமிழ் மக்களின் பிரதான கட்சியாகவுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமையும் ஏதே ஒருவகையில் இந்த நிலைப்பாட்டை ஏற்றுக்கொண்டிருப்பதாகவே தெரிகின்றது. அதனால்தான் பொறுப்புக் கூறலை அதிகளவுக்கு வலியுறுத்தாமல், புதிய அரசியலமைப்பில் நம்பிக்கையை அவர்கள் வெளியிட்டுவருகின்றார்கள். அரசாங்கத்தின் நிலைப்பாட்டின் பிரதிபலிப்பாகவே அதுவும் உள்ளது. கால அவகாசம் என்பது இலங்கை அரசாங்கத்துக்குப் புதிதல்ல. அதனை அவர்கள் கேட்கப்போது இதுதான் முதன்முறையும் அல்ல. ஏற்கனவே பல சந்தர்ப்பங்களில் கால அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது. இப்போது மீண்டும் கால அவகாசம் கேட்பது பொறுப்புக்கூறலைச் செயற்படுத்துவதற்காகவாக இருக்கப்போவதில்லை என மனித உரிமைகள் அமைப்புக்கள் கடுமையாக எச்சரிக்கின்றது. இந்த விவகாரத்தை மேலும் நீர்த்துப்போகச் செய்வதற்காக கால அவகாசத்தைப் பெற்றுக்கொள்வதற்காகவே இந்த அவகாசம் அவர்களுக்குத் தேவையாக இருக்கின்றது. சந்திரிகா குமாரதுங்க கால அவகாசத்தை நேரடியாகக் கேட்கவில்லை. பொறுப்புக் கூறலை வலியுறுத்தினால், அரசியலமைப்புச் சீர்திருத்தத்துக்கான வாய்ப்பு இல்லாமல் போய்விடும் என்ற எச்சரிக்கையைத்தான் அவர் விடுக்கின்றார்.

அரசியலமைப்புச் சீர்திருத்தம் என்பதை துரும்புச் சீடாகப் பயன்படுத்தி காலஅவகாசத்தைப் பெற்றுக்கொள்வது அரசாங்கத்துக்கு கடினமானதாக இருக்கப்போவதில்லை. மைத்திரி - ரணில் அரசாங்கத்தைப் பாதுகாக்க வேண்டும் என்ற தேவை சர்வதேச சமூகத்துக்கு உள்ளது. குறிப்பாக மேற்கு நாடுகளுக்கு உள்ளது. 2015 இல் ஜெனீவாவில் அமெரிக்காவினால் கொண்டுவரப்பட்ட தீர்மானத்துக்கு இலங்கையும் அனுசரணை வழங்கியது. அனுசரணையை வழங்கியதன் மூலம் சர்வதேச சமூகத்தின் முன்பாக தன்னை ஒரு படி உயர்திக்கொண்டது. இதிலும் ஒரு இராஜதந்திரம் இருந்தது. தாமும் அனுசரணை வழங்குவதற்குத் தயாராகவிருப்பதைக் காட்டி பிரேரணையின் காரத்தைக் குறைப்பதில் இலங்கை அரசு பெருமளவுக்கு வெற்றியும் பெற்றது. இப்போது மேலும் கால அவகாசத்தைப் பெற்றுக்கொள்வது பிரேரணயின் உள்ளடக்கத்தை மேலும் நீர்த்துப்போகச் செய்வதற்கே உதவும். இவ்விடயத்தில் இலங்கை அரசாங்கம் கையாளும் இராஜதந்திரம் மேற்கு நாடுகளை மயக்கிவிடுகின்றது. ஆக, பொறுப்புக் கூறல் என்பது காணாமல் போகப் போகின்றதா என்ற சந்தேகம் இயல்பாகவே எழுகின்றது.

நிரந்தரத் தீர்வு என்பது பொறுப்புக் கூறலிலிருந்தே ஆரம்பமாக வேண்டும். மீள நிகழாமைக்கு அடிப்படையாக இருக்கப்போவது பொறுப்புக்கூறல்தான். மீள நிகழாமையை உறுதிப்படுத்துவதன் மூலமாகவே நிரந்தமான தீர்வை உருவாக்க முடியும். அதற்கான கள நிலை மட்டுமல்ல, மன நிலையும் இங்கு இல்லை. அதேவேளை சந்திரிகா குமாரதுங்க சொல்லிக்கொள்வது போல அரசியலமைப்பாக்க முயற்சிகள் மூலமாக தேசியப் பிரச்சினைக்கு தீர்வு காணப்படும் நிலை உள்ளதா? 13 ஆவது திருத்தத்துக்கு மேலே செல்ல இரு பிரதான கட்சிகளும் தயாராகவில்லை. அதிலுள்ள பொலிஸ், காணி அதிகாரத்தை மாகாண சபைகளுக்கு வழங்குவதற்கும் அவர்கள் பின்நிற்கின்றார்கள். ஏற்கனவே உள்ள பௌத்தத்துக்கு முன்னுரிமை போன்ற விடயங்களை மாற்றிக்கொள்ளவும் அவர்கள் தயாராகவில்லை. இனநெருக்கடிக்குத் தீர்வாக புதிய அரசியலமைப்பில் எதுவும் வரப்போவதில்லை என்பதை இவை உறுதிப்படுத்துகின்றன. ஆக, எதுவுமே இல்லாத அரசியலமைப்பாக்க முயற்சியைக் காட்டி பொறுப்புக்கூறலலிருந்து தப்பித்துக்கொள்ள அரசு முற்படுகின்றது. "அதுவும் இல்லை; இதுவும் இல்லை" என்ற நிலைக்கு தமிழர்களை அரசாங்கம் கொண்டு சென்றுகொண்டிருக்கின்றது என்பதைத்தான் சந்திரிகாவின் கருத்துக்கள் உணர்த்துகின்றன!

(19-02-2017தினக்குரல் ஆசிரியர் தலையங்கம்)

Monday, February 20, 2017

அலரி மாளிகை பேச்சுக்கள்

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களுக்கும் அரசாங்கத்துக்கும் இடையில் வியாழக்கிழமை அலரி மாளிகையில் நடைபெற்ற பேச்சுவார்த்தைகள் இணக்கப்பாடு எதுவுமின்றி முடிவடைந்திருக்கின்றது. தோல்வியில் பேச்சுக்கள் முடிவடைந்திருப்பது அடுத்த கட்டம் என்ன என்ற கேள்வியை எழுப்பியிருக்கின்றது. காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் அரசாங்கத்தின் மீதான நம்பிக்கையை முற்றாக இழந்திருக்கின்றார்கள். இது வெளிப்படையாத் தெரிகின்றது. அதனால்தான் சாகும்வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தை அவர்கள் வவுனியாவில் ஆரம்பித்தார்கள். அலரி மாளிகைப் பேச்சுக்களில் ஓரளவுக்காவது நம்பிக்கை வைத்தார்கள். உண்ணாவிரதத்தை இடைநிறுத்தி கொழும்புக்கு அவர்கள் வந்தது அந்த நம்பிக்கையில்தான். அலரி மாளிகை பேச்சுக்களும் இப்போது தோல்வியில் முடிந்திருக்கின்றது.

போர்க்காலத்தில் உருவான இந்த காணாமல் ஆக்கப்பட்டோர் பிரச்சினை, போரின் முடிவுடன் தீவிரமடைந்தது.  30 ஆயிரம் பேர் வரையில் காணாமல் ஆக்கப்பட்டிருப்பதாக ஒரு தகவல் சொல்கின்றது. இதில் பெரும்பாலானவர்கள் படையினரிடம் சரணடைந்தவர்கள், அல்லது கைதானவர்கள். மேலும் சிலர் கடத்தப்பட்டு காணாமல் போகச்செய்யப்பட்டிருக்கின்றார்கள். இவ்வாறு கடத்தப்பட்டு பின்னர் காணாமல் ஆக்கப்பட்டோர் பட்டியலில் உள்ள சிலர் ஆயுதப் படையினரால்தான் கடத்தப்பட்டிருந்தார்கள். இதனை நீதிமன்ற விசாரணைகள் கூட வெளிப்படுத்திவருகின்றன. காணாமல் ஆக்கப்பட்டவர்களின் விவகாரத்தில் படையினரே பின்னணியில் இருந்துள்ளார்கள் எனக் கூறுவதற்கு இதனைவிட மேலும் பல ஆதாரங்கள் உள்ளன. இந்த நிலையில், படையினரைப் பாதுகாக்கும் வகையில்தான் அரசாங்கம் செயற்படுகின்றதா என்ற கேள்வியைத்தான் அலரிமாளிகைப் பேச்சுக்களும் எழுப்புகின்றன.

காணாமல் ஆக்கப்பட்டவர்கள் விவகாரத்தை விசாரணை செய்வதற்கு பல குழுக்கள் அமைக்கப்பட வேண்டும் எனவும், அதற்கு மேலும் கால அவகாசம் தேவை எனவும் அலரி மாளிகைப் பேச்சுக்களின் போது அரசாங்கத் தரப்பால் சொல்லப்பட்டது. இது தொடர்பில் ஏற்கனவே விசாரணைக் குழுக்கள் அமைக்கப்பட்டன. விசாரணைகள் நடைபெற்றன. அறிக்கைகள் சமர்ப்பிக்கப்பட்டன. அந்த அறிக்கைகளும் பின்னர் காணாமல் ஆக்கப்பட்டன. இவ்வளவுக்குப் பின்னரும் "குழுக்கள் அமைக்கப்பட வேண்டும். கால அவகாசம் தேவை" என அவராங்கம் சொல்லிக்கொள்கின்றது. இது வெறுமனே காலத்தைக் கடத்துவதற்கான ஒரு உபாயமாக மட்டுமே இருக்க முடியும். இந்தக் காலங்கடத்தும் அரசாங்கத்தின் உபாயங்களால் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் ஏற்கனவே விரக்தியடைந்திருக்கின்றார்கள். மீண்டும் கால அவகாசத்தை அரசாங்கம் கேட்டபோதே அவர்கள் சீற்றமடைந்தார்கள்.

காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரத்தில் படையினர் சம்பந்தப்பட்டுள்ளார்கள் என்பது அரசாங்கத்துக்குத் தெரியாததல்ல. அது குறித்த விசாரணைகளை முன்னெடுக்கச் சென்றால், "போர் வெற்றியைப் பெற்றுக்கொடுத்தோரை அரசாங்கம் காட்டிக்கொடுக்கின்றது" என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்படும். அதனைத்தான் ராஜபக்‌ஷ அணியினரும் எதிர்பார்த்துள்ளார்கள். உள்நாட்டு அரசியலுக்கு அது அவர்களுக்குத் தேவையாகவுள்ளது. மைத்திரியை வீழ்த்துவதற்கு அவர்களிடம் இருக்கின்ற ஒரு துரும்புச் சீட்டு அது. அதனால் என்ன போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டாலும், இந்த விவகாரத்தில் அரசாங்கம் இறங்கிவரும் என்பது எதிர்பார்க்கக்கூடியதல்ல. காலத்தைக் கடத்துவதற்காக விசாரணைக் குழுக்கள் அமைக்கப்படலாம். காணாமல் ஆக்கப்பட்டவர்களைப் பற்றிய தகவல் எதுவும் தெரியவரவில்லை என இந்தக் குழுக்கள் கையை விரிப்பதற்கு அப்பால் எதுவும் நடைபெறப்போவதில்லை.

அதனால்தான், சர்வதேச விசாரணையைக் கோரி போராட்டங்களை முன்னெடுக்கப்போவதாக உறவினர்கள் தெரிவித்திருக்கின்றார்கள். ஐ.நா.மனித உரிமைகள் பேரவையின் அடுத்த கூட்டத் தொடர் இம்மாத இறுதியில் ஜெனீவாவில் ஆரம்பமாகவுள்ள நிலையில் அதனைக் கவரும் வகையில் இந்தப் போராட்டங்களை முன்னெடுப்பதுதான் அவர்களின் திட்டம் எனத் தெரிகின்றது. ஜெனீவாவில் கொடுத்த வாக்குறுதிகள் எதுவுமே அரசாங்கத்தினால் நிறைவேற்றப்படவில்லை. இது தொடர்பில் ஜெனீவாவிலிருந்து மேலும் அழுத்தங்கள் வரும் என்பதும் எதிர்பார்க்கக்கூடியதாக இல்லை. மைத்திரி - ரணில் அரசுக்கு நெருக்கடியைக் கொடுப்பதற்கு மேற்கு நாடுகள் தயாராக இல்லை என்பதும் தெரிகின்றது. இதனைப்பயன்படுத்தி மேலும் இரு வருடகால அவகாசத்தைப் பெற்றுக்கொள்வது அரசாங்கத்தின் நோக்கம் எனவும் சொல்லப்படுகின்றது.

இவற்றைப் பார்க்கும் போது காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களின் ஆதங்கம் எந்தளவுக்குக் கவனத்தைப் பெறும் என்பது கேள்விக்குறியாகத்தான் இருக்கும். போரில் இடம்பெற்ற மிகப்பெரிய மனிதாபிமானப் பிரச்சினை காணாமல் ஆக்கப்படுதல்தான். அவர்களின் உறவினர்களின் துயரம் அளவிட முடியாதது. புறக்கணிக்க முடியாததது. தமது உறவுகளுக்கு என்ன நடந்தது என்பதை அறிந்துகொள்வதற்கான முழு உரிமையும் அவர்களுக்கு உள்ளது. அது அவர்களுக்குத் தெரிவிக்கப்பட வேண்டும். அவர்கள் கொல்லப்பட்டிருந்தால், யாரால், எப்போது எதற்காகக் கொல்லப்பட்டார்கள் என்பது தெரிவிக்கப்பட வேண்டும். அதற்கான நீதி விசாரணை வேண்டும். அதற்குரிய நட்டவீடு வழங்கப்பட வேண்டும். உள்நாட்டு விசாரணை ஒன்றின் மூலம் அவை நடக்கும் என்பது எதிர்பார்க்கக்கூடியதல்ல. அதனால்தான் சர்வதேச விசாரணை ஒன்று அவசியம் என்பதை உறவினர்கள் சொல்கின்றார்கள். அலரி மாளிகைப் பேச்சுக்களின் முடிவும் இதனைத்தான் உணர்த்துகின்றது. 
(ஞாயிறு தினக்குரல் 2017-02-12)

ஜெனீவாவை கூட்டமைப்பு பயன்படுத்திக்கொள்ளுமா?



0 உள்ளுராட்சிமன்றத் தேர்தல்கள் அண்மைக்காலத்தில் நடைபெறப்போவதில்லை
0 சர்வஜன வாக்கெடுப்பை ஏற்றுக்கொள்ள தயாராகவில்லாத ஶ்ரீல.சுதந்திரக் கட்சி
0 வழிநடத்தல் குழுவில் இணக்கப்பாடு ஏற்படாதுள்ள 2 விடயங்கள்
0 13 க்குள்தான் தீர்வு என்றால் கூட்டமைப்பு எடுக்கப்போகும் நிலைப்பாடு என்ன?

- பாரதி -

மைச்சர் லக்ஷமன் கிரியெல்லை தெரிவித்த இரண்டு கருத்துக்கள் அரசியலரங்கில் சர்ச்சைகைளையும், வாதப் பிரதிவாதங்களையும் ஏற்படுத்தியிருக்கின்றது. அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்துக்கு அமைவாவே அதிகாரப் பகிர்வு வழங்கப்படும் எனவும், அதற்கு மேல் ஒரு அங்குலம் கூட செல்லப்போவதில்லை எனவும் அவர் தெளிவாகக் கூறிவிட்டார். இதனைவிட, மக்கள் கருத்தை அறிவதற்காக புதிய அரசியலமைப்பு சர்வஜன வாக்கெடுப்புக்கு விடப்படும் எனவும் அவர் சொல்லியிருக்கின்றார். அதுதான் அரசாங்கத்தின் நிலைப்பாடு எனவும் அவர் அடித்துக் கூறுகின்றார். ஆனால், "இது அரசாங்கத்தின் நிலைப்பாடு அல்ல. அரசாங்கத்தில் இருக்கும் .தே..வின் நிலைப்பாடுதான் இது. சர்வஜனவாககெடுப்புக்கு ஶ்ரீல.சு.. ஆதரவளிக்கப்போவதில்லை" என அக்கட்சி பிரமுகர் ஒருவர் சொல்கின்றார். ஆக, தெளிவை விட குழப்பங்களே அதிகரிக்கின்றது. அரசியலமைப்புச் சீர்திருத்தத்தின் மூலம் தீர்வு எதுவும் கிடைக்கப்போவதில்லை என்பதை கிரியெல்லையின் அறிவிப்பு மீண்டும் உறுதிப்படுத்துவதாகவே கொள்ள முடியும்.

புதிய அரசியலமைப்பைத் தயாரிப்பதற்காக அமைக்கப்பட்ட அரசியலமைப்புப் பேரவையின் வழிநடத்தல் குழுவின் செயற்பாடுகள் மந்த கதியில் சென்றுகொண்டிருக்கின்றது. கடந்த 7,8,9 ஆம் திகதிகளில் வழிநடத்தல் குழு கூடும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், 7 ஆம் திகதி கூடியபோது ஶ்ரீல.சு.க. மேலும் காலஅவகாசம் கேட்டதால் எதிர்வரும் 21 ஆம் திகதிக்கு இது ஒத்திவைக்கப்பட்டிருக்கின்றது. 21 ஆம் திகதியாவது ஶ்ரீல.சு.க. தமது யோசனைகளை முன்வைக்குமா என்பது நிச்சயமற்றதுதான். புதிய அரசியலமைப்பு தொடர்பாக ஒரு வரி கூட இதுவரை எழுதப்படவில்லை என உத்தியோகபூர்வமாகச் சொல்லப்படுகின்ற போதிலும், ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமான கருத்துக்களை முன்வைத்துவருகின்றார்கள். "சாதாரண மக்களும் புரிந்துகொள்ளத்தக்கவகையில் எழிமையான மொழியில் புதிய அரசியலமைப்பை எழுத வேண்டும்" என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அறிவுறுத்தியிருப்பதாக கூட்டமைப்பு எம்.பி. எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்திருக்கின்றார்.

மைத்திரியின் நோக்கம்

ைத்திரி இவ்வாறு சொல்லியிருப்பதன் நோக்கம் என்ன என்பதைப் புரிந்துகொள்வது கடினமானதல்ல. புதிய அரசியலமைப்பு தொடர்பில் சிங்கள மக்களைக் குழப்பும் வகையில் மகிந்த ராஜபக் செயற்பட்டுவருகின்றார். நாட்டைப் பிளவுபடுத்துவதற்காகத்தான் இந்த அரசியலமைப்பு என்ற பிரச்சாரம் அவரால் முன்னெடுக்கப்பட்டுவருகின்றது. வழிநடத்தல் குழுவில் கூட்டு எதிரணியைப் பிரதிநித்துவப்படுத்துபவர்கள் கூட இவ்வாறான பிரச்சாரத்தைத்தான் முன்னெடுக்கின்றார்கள். இந்த நிலையில், புதிய அரசியலமைப்பு குறித்து சிங்கள மக்களை யாரும் குழப்பக்கூடாது என்ற நோக்கத்துடன்தான் இவ்வாறான அறிவுறுத்தலை மைத்திரி விடுத்திருக்கின்றார். மைத்திரியின் எதிர்பார்ப்பின்படி பார்த்தாலும் 13 க்கு மேல் செல்ல வாய்ப்பில்லை. ஶ்ரீல.சு.. அது தொடர்பில் ஏற்கனவே முடிவெடுத்துவிட்டது. இந்த ஒரு புள்ளியில் மட்டும்தான் .தே..வும், ஶ்ரீல.சு..வும் சந்திக்கின்றன. 13க்கு மேல் தமிழர்களுக்கு எதுவும் கிடைக்கப்போவதில்லை என்பதைத்ததான் லக்ஷமன் கிரியெல்லையின் அறிவிப்பும், மைத்திரியின் அறிவுறுத்தலும் உணர்த்துகின்றன.

அரசியலமைப்பு சீர்திருத்தம் 3 நோக்கங்களுக்காகச் செய்யப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது. அதில் ஒன்றுதான் அதிகாரப் பரவலாக்கல். அதனைப் பொறுத்தவரையில் 13 க்குள் தீர்வு என்பதில் இரு பிரதான கட்சிகளுடன் மகிந்த ராஜபக்ஷவின் கூட்டு எதிரணியும் இணங்கிப்போய்விடும். கூட்டமைப்பின் தலைமையும் அதற்கு மேலாக எதனையும் வலியுறுத்தும் என்பதையும் எதிர்பார்க்க முடியாது. ஏனைய இரு விடயங்களைப் பொறுத்தவரையிலும், முரண்பாடுகள் நீடிப்பதாவே தெரிகின்றது. நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை இல்லாதொழிக்க வேண்டும் என்பதில் காணப்பட்ட கருத்தொருமைப்பாடு இப்போது காணாமல்போய்விட்டது. ஶ்ரீல.சு..வின் மைத்திரி பிரிவினர் ஜனாதிபதி முறை தொடர வேண்டும் என்ற நிலைப்பாட்டை இப்போது எடுத்திருக்கின்றார்கள். கட்சிக்குள் உருவாகியிருக்கும் பிளவு இதற்குக் காரணமாக இருக்கலாம். ஆனால், இந்தநிலை வழிநடத்தல் குழுவின் செயற்பாடுகளை மேலும் காலதாமதப்படுத்துவதாகவே இருக்கும்.

இதேபோலத்தான் தேர்தல் முறை மாற்றம் குறித்தும் இணக்கப்பாடு எதுவும் ஏற்பட்டுவிடவில்லை. தற்போதைய தேர்தல் முறை மாற்றப்படுவதை .தே..விரும்பவில்லை. முன்னைய தேர்தல் தொகுதி அடிப்படையிலான தேர்தல் முறையைத்தான் ஶ்ரீல.சு.. விரும்புகின்றது. இரண்டையும் இணைத்த கலப்பு தேர்தல் முறை தொடர்பில் முழு அளவிலான இணக்கம் எதுவும் இதுவரையில் ஏற்பட்டுவிடவில்லை.  உள்ளுராட்சி மன்றங்களுக்கான எல்லை நிர்ணயம் குறித்த அறிக்கை சமர்பிக்கப்பட்டுவிட்ட போதிலும், உள்ளுராட்சி மன்றத் தேர்தல்கள் இப்போதைக்கு நடைபெறப்போவதில்லை. சிரேஷ்ட அமைச்சர் ஒருவர் இதனை தினக்குரலுக்கு நேற்றைய தினம் உறுதிப்படுத்தியிருக்கின்றார். தேசிய அரசில் உள்ள இரு பிரதான கட்சிகளுக்கு இடையில் காணப்படும் முரண்பாடுகளும், மகிந்த ராஜபக் தரப்பினரது செயற்பாடுகளும்தான் இதற்குக் காரணம் எனவும் அவர் குறிப்பிடுகின்றார்.

சர்வஜன வாக்கெடுப்பு?

இவ்வாறு முரண்பாடுகள் நிறைந்திருக்கும் நிலையில் (13க்குள் அதிகாரப்பரவலாக்கல் என்பதைத் தவிர) பிரதான 2 விவகாரங்கள் தொடர்பில் வழிநடத்தல் குழுவில் இணக்கப்பாடு எதுவும் ஏற்படப்போவதில்லை. மேலும் காலதாமதப்படுத்தப்படும் நிலைதான் காணப்படுகின்றது. அதேவேளையில், புதிய அரசியலமைப்பு சர்வஜனவாக்கெடுப்புக்கு விடப்படும் என்ற கருத்தை அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்லை முன்வைத்திருக்கின்றார். இதுவும் சர்ச்சைக்குரய ஒன்றாகத்தான் உள்ளது. 13க்கு மேலாகச் செல்ல வேண்டும் என்றால் அல்லது நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை மாற்ற வேண்டும் என்றால் மட்டுமே சர்வஜனவாக்கெடுப்பு அவசியம் என அரசியலமைப்பு நிபுணர்கள் குறிப்பிடுகின்றார்கள். ஜனாதிபதி மைத்திரிபால தரப்பினர் இதற்குத் தயாராகவில்லை என்பது தெரிகின்றது. வழிநடத்தல் குழுவில் உள்ள ஶ்ரீலசு.. அமைச்சர்கள் பலரும் இதனை எதிர்ப்பதாக உள்ளகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதற்கு இரண்டு காரணங்கள் சொல்லப்படுகின்றன. ஒன்று: ஶ்ரீல.சு..வில் இப்போது உருவாகியிருக்கும் தலைமைத்துவ முரண்பாடுகளால் 'ஜனாதிபதிப் பதவி' தொடர்ந்தும் இருப்பது தமக்குப் பாதுகாப்பானது என மைத்திரி தரப்பினர் கருதுகின்றார்கள். இரண்டாவது: சர்வஜன வாக்கெடுப்புக்குச் செல்வதை 'றிஸ்க்'கான ஒரு விடயமாக அவர்கள் கருதுகின்றார்கள். இதில் தோல்வியடைந்தால் அரசாங்கம் பதவி விலக நிர்ப்பந்தம் கொடுக்கப்படலாம். சர்வஜன வாக்கெடுப்பு என்பது வெறுமனே குறிப்பிட்ட விடயத்துடன் நிற்பதாக இருக்காது. அரசங்கத்துக்கான ஆதரவை அளவிடுவதாகவும் இருக்கும். விலைவாசி உயர்வு உட்பட பல விடயங்கள் இதில் செல்வாக்கைச் செலுத்தும். அரசாங்கத்தைத் தோற்கடிக்க வேண்டும் என்பதற்காக ராஜபக் தரப்பினர் களத்தில் இறங்கி கடுமையாக உழைப்பார்கள். அந்த றிஸ்க்கை எடுப்பதற்கு மைத்திரி தரப்பு தற்போதைக்குத் தயாராகவில்லை என்பதுதான் உண்மை.

கூட்டமைப்பின் நிலை

உருவாகியிருக்கும் முரண்பாடுகளைப் பார்க்கும் போது ஒரு விடயம் தெளிவாகத் தெரிகின்றது. அதிகாரப்பரவலாக்கல் தெடர்பில் தற்போதுள்ள 13 வது திருத்தத்துக்கு மேலாக எதுவும் இடம்பெறப்போவதில்லை. நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறை மாற்றப்படப்போவதில்லை. ஜனாதபதி ஆட்சி முறை தொடர்பான மைத்திரி தரப்பின் இந்த நிலைப்பாட்டுக்கு சிறுபான்மையினக் கட்சிகளும் ஆதரவளிக்கும் என எதிர்பார்க்கலாம். ஆக, தேர்தல் முறை மாற்றப்பட வேண்டும் என்பதில் மட்டும்தான் பொது இணக்கப்பாடு உள்ளது. அதுவும் கூட எவ்வாறு செய்யப்பட வேண்டும் என்பதில் முரண்பாடுகள் தொடர்கின்றன. இதனால்தான், அரசியலமைப்பு சீர்திருத்தம் என்பது தேர்தல் முறையை மாற்றுவதற்கான 20 வது திருத்தத்துடன் முடிந்துவிடலாம் என முன்னைய கட்டுரை ஒன்றில் குறிப்பிட்டிருந்தோம்.

இவ்வாறு நடைபெறும் நிலையில் கூட்டமைப்பு என்ன செய்யும் என்ற கேள்வி பரவலாகவுள்ளது. கூட்டமைப்பின் முக்கிய தலைவர்களாகவுள்ள சம்பந்தனும், சுமந்திரனும் நம்பிக்கையை இழந்துவிடவில்லை. "தமிழ் மக்கள் விரும்பாத எந்தவொரு தீர்வையும் நாம் ஏற்கப்போவதில்லை" என அடிக்கடி சொல்லும் சம்பந்தன் அதற்கு மேல் ஒன்றும் சொல்வதாக இல்லை. அரசாங்கத்தின் செயற்பாடுகளும், அது குறித்த கூட்டமைப்பின் நிலைப்பாடும் தமிழ் மக்கள் பேரவைக்கு ஆதரவை அதிகரிப்பதாகவும், அவர்களுடைய பிரச்சாரங்களை நியாயப்படுத்துவதாகவுமே உள்ளது. மட்டக்களப்பில் நேற்று முன்தினம் நடைபெற்ற எழுக தமிழ் நிகழ்வுக்கு கிடைத்த அமோக ஆதரவும் இதன் பிரதிபலிப்புதான்! காலம் கடத்தப்படும் நிலையில் தீர்வுக்கான வாய்ப்புக்களே இல்லாமல் போய்க்கொண்டிருக்கின்றது.

இம்மாத இறுதியில் மனித உரிமைகள் பேரவையின் ஜெனீவா கூட்டத் தொடர் ஆரம்பமாகின்றது. இலங்கை விவகாரமும் அதில் வரப்போகின்றது. இவையெல்லாம் அரசின் மீது அழுத்தத்தைக் கொடுப்பதற்காக கூட்டமைப்புக்குக் கிடைத்திருக்கும் துரும்புச் சீட்டுகள். கையில் இருக்கும் துரும்புச் சீட்டு. 16 உறுப்பினர்களைக் கொண்டுள்ள கூட்டமைப்பிடம்தான் எதிர்க்கட்சித் தலைமையும் உள்ளது. தமிழ் மக்களின் ஏக பிரதிநிதிகள் என்ற அந்தஸ்த்தும் அவர்களுக்குத்தான் உள்ளது. இது அவர்களுக்குக் கிடைத்திருக்கும் ஒரு சர்வதேச அந்தஸ்த்து. இதனைக் கூட்டமைப்பு பயன்படுத்துமா
(ஞாயிறு தினக்குரல் 2017-02-12)