Friday, November 4, 2011

பொன்சேகா - சம்பந்தன் இரகசிய உன்படிக்கை: விக்கிலீக்ஸ் அம்பலப்படுத்தும் புதிய தகவல்

"தமிழ் மக்களுக்கு அனைத்தையும் கொடுப்பதற்கு சரத் பொன்சேகா இணங்கிவிட்டார். அதற்கான உடன்படிக்கையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுடன் கைச்சாத்திட்டும் விட்டார்" என்பதுதான் கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போது எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக நிறுத்தப்பட்ட சரத் பொன்சேகாவுக்கு எதிராக ஆளும் கட்சி மேற்கொண்ட உச்ச கட்டப் பிரச்சாரமாக இருந்தது.

சிங்களவர்களின் வாக்குகனள ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுக்கு பெருமளவுக்குக் குவியச் செய்ததும் இந்தப் பிரச்சாரம்தான். இதனை எதிர்க்கட்சிகள் மறுத்துவந்த போதிலும், 'விக்கிலீக்ஸ்' இப்போது வெளியிட்டுள்ள இரகசியத் தகவல்கள் இது உண்மை என்பதை உறுதிப்படுத்தியிருக்கின்றது.

2010 ஜனவரியில் இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தல் பிரச்சாரத்தின் உச்ச கட்டத்தில் 'பொன்சேகா சம்பந்தன் இரகசிய உடன்படிக்கை' என்ற பிரச்சாரமே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதுடன், தேர்தல் கள நிலைமையில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்துவதாகவும் அமைந்திருந்தது. லங்காதீப பத்திரிகை இது தொடர்பான செய்தியை வெளியிட்டதையடுத்து அரசாங்கத் தரப்பின் முக்கிய பிரச்சாரமாக இது அமைந்திருந்த அதேவேளையில், இதனை மறுப்பதற்கு எதிர்க்கட்சிகள் மிகுந்த சிரமங்களை எதிர்கொள்ள வேண்டியவையாகவும் இருந்தன.

இரா. சம்பந்தன்
விடுதலைப் புலிகளுக்கு எதிரான போருக்குத் தலைமைதாங்கியவர் என்ற முறையில் சரத் பொன்சேகாவுக்கு வாக்களிப்பதா என்ற கேள்விதான் தமிழர்கள் மத்தியில் முதலில் எழுந்திருந்தது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் இது தொடர்பில் தீர்மானம் எடுப்பதில் பெரும் நெருக்கடிகளை எதிர்கொண்டது. இருந்த போதிலும் இறுதிக்கட்டத்தில் பொன்சேகாவை ஆதரிப்பது என்ற தீர்மானத்தை எடுப்பதற்கு இந்த உடன்படிக்கையும் காரணமாக இருந்துள்ளது.

பொன்சேகா கையொப்பமிட்ட இந்த உடன்படிக்கையின் பிரதி ஒன்று சம்பந்தனால் கொழும்பிலுள்ள அமெரிக்க தூதரகத்துக்கு அப்போது வழங்கப்பட்டது. சரத் பொன்சேகாவுடன் தான் பேச்சுக்களை நடத்தியிருப்பது தொடர்பாக சம்பந்தன் அப்போது பொதுக்கூட்டங்களில் தெரிவித்த போதிலும், சரத் பொன்சேகா கைச்சாத்திட்ட உடன்படிக்கை ஒன்று தன்னிடம் தரப்பட்டிருப்பதாக பகிரங்கமாகத் தெரிவிக்கவில்லை என்பது கவனிக்கத்தக்கது.

சிங்கள மக்கள் மத்தியில் இது எதிர்விளைவுகளை ஏற்படுத்தும் என்பதால்தான் சம்பந்தன் அப்போது மெளனம் காத்தார். இருந்தபோதிலும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கிழக்கு மாகாண எம்.பி. ஒருவர் இது தொடர்பில் தெரிவித்த கருத்துக்கள் ஆளும் கட்சியின் பிரச்சாரத்துக்குப் பெருமளவுக்கு தீனி போடுவதாக அமைந்திருந்தமையும் கவனிக்கத்தக்கது.

சம்பந்தனுடன் கொழும்பிலுள்ள அமெரிக்க தூதரகம் நடத்திய சந்திப்பு, 2010 ஜனாதிபதித் தேர்தலில் பொன்சேகாவை ஆதரிப்பதென சம்பந்தன் அறிவித்த பின்னர் ஏற்பட்டிருந்த அரசியல் கள நிலைமைகள் தொடர்பாக அமெரிக்க தூதரகம் வாஷிங்டனிலுள்ள அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்துக்கு அனுப்பிவைத்த இரகசிய கேளிள் தகவலை விக்கிலீக்ஸ் இப்போது அம்பலமாக்கியுள்ளது. இது தொடர்பான தகவல்கள் ஆங்கில இணையத்தளம் ஒன்றில் இன்று வெளியிடப்பட்டிருக்கின்றது.

அமெரிக்க தூதுவர்
2010 ஜனவரி 1 ஆம் திகதி இரகசியமானது “CONFIDENTIAL”  எனக் குறிப்பிடப்பட்டு பொழும்பிலுள்ள அமெரிக்க தூதுவர் பற்றீசியா ஏ. புட்ரனீஸினால் இந்தக் கேபிள் அனுப்பப்பட்டிருக்கின்றது.

அதிகளவில் அதிகாரங்களைப் பரவலாக்கம் செய்வதற்கும் அதற்குத் தேவையான அரசியலமைப்புத் திருத்தங்களைச் செய்வதற்கும் சரத் பொன்சேகா இந்த உடன்படிக்கையின் மூலமாக இணக்கம் தெரிவித்திருந்தார். இந்த உடன்படிக்கையில் எதிரணிகளின் பொதுவேட்பாளராக நிறுத்தப்பட்ட சரத் பொன்சேகாவும், ஐக்கிய தேசிய முன்னணியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவும் கைச்சாத்திட்டிருந்தார்கள்.

சிங்கள, தமிழ், முஸ்லிம் மற்றும் பேகர் இன மக்களினால் ஏற்றுக்கொள்ளத்தக்க வகையில் நியாயமான அதிகாரப்பரவலாக்கலை வழங்குவதற்கு இந்த உடன்படிக்கையில் உறுதியளிக்கப்பட்டிருந்தது. அதிகாரப் பகிர்வு மத்தியிலும் கீழ் மட்டத்திலும் இடம்பெறும் எனவும் இதில் குறிப்பிடப்பட்டிருக்கின்றது.

மகிந்த ராஜபக்ஷ அரசாங்கத்தினால் பிரிக்கப்பட்ட 'வடக்கு - கிழக்கு' என்பது இந்த உடன்படிக்கையில் ஒரு அலகுபோலக் காட்டப்பட்டிருப்பதும் குறிப்பிடத்தக்க ஒன்றாகும். தேசிய பாதுகாப்பு, நிதிக்கொள்கை, குடிவரவு என்பற்றைத் தவிர ஏனைய அதிகாரங்களை வடக்கு கிழக்குக்கு வழங்குவதற்கும் இதில் இணக்கம் தெரிவிக்கப்பட்ருக்கின்றது.

பொன்சேகா நல்லுரில்
"அண்மைக் காலத்திலும், பொன்சேகாவை ஆதரிப்பது என அறிவித்த பின்னரும் சம்பந்தனை நாம் பல தடவைகள் சந்தித்திருக்கின்றோம்" என தனது கேபிள் செய்தியில் குறிப்பிட்டிருக்கும் அமெரிக்கத் தூதுவர், "இந்தத் தீர்மானம் அவருக்குப் பெரும் பொறுப்பைக் கொடுத்திருக்கின்றது" எனவும் குறிப்பிட்டிருக்கின்றார்.

ராஜபக்ஷவுக்கும் பொன்சேகாவுக்கும் இடையில் சிங்கள வாக்குகள் பிளவுபட்டிருக்கும் நிலையில் தமிழர்களுடைய ஆதரவு மிகவும் பெறுமதியுடையதாக இருக்கும் என்ற தனது கருத்தையும் அமெரிக்க தூதுவர் முன்வைத்திருக்கின்றார்.

இவ்வாறான ஒரு தீர்மானத்தை எடுக்கவேண்டியிருந்தமையையிட்டு தான் கவலையடைவதாகவும் அமெரிக்கத் தூதுவரிடம் தெரிவித்த சம்பந்தன், இருந்தபோதிலும் இடம்பெயர்ந்த மக்களை விடுவித்ததைத் தவிர வேறு எதனையும் ராஜபக்ஷ செய்யவில்லை எனவும் குறிப்பிட்டிருக்கின்றார்.

தன்னுடைய இந்த அறிவிப்பு தமிழ் வாக்ககளைப் பொன்சேகாவுக்குப் பெற்றுக்கொடுப்பதாக அமையும் என்பதுடன், வெற்றிபெறுவதற்கான வாய்ப்பு உண்மையில் பொன்சேகாவுக்குத்தான் உள்ளது என்பதை மற்றவர்கள் ஏற்றுக்கொள்ளச் செய்வதாகவும் அமையும் எனவும் சம்பந்தன் சுட்டிக்காட்டினார்.

ஜனாதிபதி தேர்தலில் சரத் பொன்சேகாவை ஆதரிப்பது என்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முடிவை உத்தியோகபூர்வமாக அறிவித்த சம்பந்தன், தாம் இரு தரப்பினருடனும் பேச்சுக்களை நடத்தியதாகவும், ஆனால், சரத் பொன்சேகா மட்டுமே தமக்குச் சாதகமாகப் பதிலளித்ததாகவும் தெரிவித்தார். மகிந்த ராஜபக்ஷ மேலும் ஒரு தவணைக் காலத்துக்குப் பதவி வகிப்பது நாடு முழுவதற்குமோ அல்லது தமிழர்களுக்கோ பலனைத் தருவதாக இருக்கப்போவதில்லை எனவும் சம்பந்தன் தெரிவித்தார்.

No comments:

Post a Comment