Tuesday, November 29, 2011

பிற சக்திகளின் நலன்களா? தமிழ்த் தேசத்தின் நலன்களா?

சர்வதேச சமூகத்தின் நிகழ்ச்சி நிரலுக்கு ஏற்ப நாம் செயற்ப்படுவதா, அல்லது எமது நிலைப்பாட்டில் உறுதியாக நின்று,  சர்வதேச சமூகம் நிராகரிக்க முடியாத வகையில் எமது கொள்கையினை முன்வைப்பதா? 
கடந்த பத்தியில் சுயநிர்ணய உரிமைக்கும் அதிகாரப் பகிர்வுக்கும் இடையிலான கொள்கை முரண்பாடு பற்றி ஆராயப்பட்டிருந்தது. அதில், அதிகாரப்பகிர்வு வழிமுறையிலான தீர்வுக்கு இணங்கிப்போவது, தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமையினை நிர்மூலமாக்கும் செயற்பாடு என்பதையும் சுட்டிக்காட்டியிருந்தோம். இம்முறை பத்தியானது, இரு தேசங்கள் ஒரு நாடு என்ற நிலைப்பாடு எவ்வாறாக சர்வதேசத்தினால் நோக்கப்படும் என்பது பற்றி ஆராயவுள்ளது.
 
சர்வதேசத்தினைப் பொறுத்த வரையில், அது இலங்கை தொடர்பில் நிலையான வெளியுறவுக் கொள்கையினை கொண்டதாக இல்லை. சர்வதேசமானது இலங்கை தொடர்பில் இந்தியா, அமெரிக்கா தலைமையிலான மேற்குலகு, மற்றும் சீன தலைமையிலான நாடுகள் என மூன்று அணிகளாக செயற்படுகின்றது. இவ்வாறாக சர்வதேசம் மூன்று அணிகளாக செயற்படுகின்ற நிலையில், அவர்கள் தத்தமது நாடுகளின் நலன் சார்ந்த விடயங்களை முதன்மைப்படுத்திய தீர்வினையே எமது இனப்பிரச்சினைக்குத் தீர்வாக வலியுறுத்துகின்ற நிலைமை உள்ளது.
 
சர்வதேச சமூகம் தமது நலன்களைக் பேணத்தக்க வகையில், இலங்கைத் தீவின் உள்நாட்டு விவகாரங்கள் எவ்வாறு அமைய வேண்டும் என்பதில் தங்களுக்கென ஓர் நிலைப்பாட்டினைக் கொண்டுள்ளது. அந்த நிலைப்பாடென்பது, அவர்களது நலனை கவனத்திற்கொள்வதாகவே இருக்கும். அதனடிப்படையில் அழுத்தத்தினை பிரயோகிப்பதற்கான முக்கியமான ஒரு கருவியாக, தமிழ் அரசியல் உருவாகியுள்ளது. ஆதலால், சர்வதேசத்தினை மட்டும் திருப்திப்படுத்தும் முகமாக கருத்துக்கள் தெரிவிப்பதை விடுத்து,   தமிழ்மக்களின் நலன்களை விட்டுக்கொடுக்காது பேணப்படத்தக்கவகையிலும், அதேவேளை, சர்வதேச சமூகம் நிராகரிக்க முடியாத வகையிலும், தமிழ் அரசியல் தலைமைகள் தமது நிலைப்பாட்டினை உறுதியாகவும், வெளிப்படையாகவும் தெரிவிக்கவேண்டும்.
 
ஏனெனில், தமது நலனை பேணத்தக்க வகையிலேயே சர்வதேசம் இலங்கை மீதான அழுத்தத்தை அதிகரிக்கும் அல்லது குறைக்கும். குறைந்த அழுத்தத்துடன் தமது நாட்டின் நலன் பேணப்படுமாயின், தமிழ்மக்களுக்கு குறைந்தபட்சத் தீர்வினையே திணித்துவிட முயற்சிப்பார்கள். 
 
இலங்கைத் தீவின் இனப் பிரச்சினைக்கு நிலையானதும், நீதியானதுமான  தீர்வினைப் பெற்றுக் கொடுப்பதைக் காட்டிலும், தமிழ் அரசியல் தலைமைகளை ஒரு கருவியாக பயன்படுத்தி,  சிங்களத் தரப்பினை தமது தேவைக்கேற்ப வழிநடத்துவதிலேயே சர்வதேச சமூகம் கவனம் செலுத்துகிறது.
 
அதற்காக, தமிழ் அரசியல் தலைமைகள்; சிறீலங்கா அரசின் நலன்களுக்கு நேரடியாகவே இணங்கிச் செயற்படுகின்ற தரப்பாக  இருக்கக் கூடாது எனவும் சர்வதேசம் எதிர்பார்க்கும். 
 
ஆகவே, தமிழ்த் தேசத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் அரசியல் தலைமைகள், பூகோளஅரசியலில், தமிழ்மக்களுக்கு சார்பாக உருவாகியுள்ள வாய்ப்பை உரியமுறையில் பயன்படுத்த வேண்டும்.   
 
புதிய நாடு என்ற விடயம் சர்வதேசத்தின் தற்போதைய ஒழுங்குகளை மாற்றியமைக்கும் எனக்கூறி, அதனை சர்வதேசம் நிராகரித்து வருகிறது. அதேவேளை, இறைமையும், சுயநிர்ணய உரிமையும் உள்ள தமிழர் தேசம், அதேபோன்ற சமஅந்தஸ்த்துடன் உள்ள சிங்கள தேசத்துடன் ஓரு நாட்டுக்குள் இணைந்து வாழக்கூடியவகையிலான  அரசியல் நிலைப்பாட்டை வலியுறுத்திகொண்டிருக்கும் வரை, அதனை சர்வதேச சமூகம் நிராகரிக்கமுடியாத சூழல் உருவாகும். மேலும், தமிழ்த் தேசம் தாராளவாத ஜனநாயக கோட்பாட்டினை அரவணைத்து செல்லும் வரை, தமிழ்மக்களின் நிலைப்பாடு சர்வதேச அரங்கில் நிராகரிக்க முடியாததாக அமையும். 
 
இந்த அடிப்படையில் தான் சென்ற பத்தியில் கூட இரு தனித்துவமான இறைமை கொண்ட தேசங்கள், சுயநிர்ணய உரிமையினை வலியுறுத்திய கூட்டினை நிராகரிக்க முடியாது என்றிருந்தேன்.

மேலேகூறப்பட்ட விடயங்களை சுருக்கமாகச் சொன்னால், சர்வதேச சமூகத்தின் நிகழ்ச்சி நிரலுக்கு ஏற்ப நாம் செயப்படுவதா, அல்லது எமது நிலைப்பாட்டில் உறுதியாக நின்று,  சர்வதேச சமூகம் நிராகரிக்க முடியாத வகையில் எமது கொள்கையினை முன்வைப்பதா என்ற கேள்வி எழுகிறது? தமது நலன்களை முன்னிறுத்திய சர்வதேச சமூகத்தின் நிகழ்சிசி நிரலானது, இறைமையும், சுயநிர்ணய உரிமையும் உடைய தமிழர் தேசத்தின் நலன்களை பேணாது. ஆகவே, எமது நிலைப்பாட்டில் உறுதியாக நின்று,  சர்வதேச சமூகம் நிராகரிக்க முடியாத வகையில், தாராளவாத ஜனநாயக கோட்பாட்டினை அடிப்படையாக வைத்து, எமது கொள்கையினை முன்வைக்கவேண்டும்.  அந்த அடிப்படையில்தான், இரு சுயநிர்ணய உரிமையை அடிப்படையாகக் கொண்ட தேசங்களுடைய கூட்டாக தீர்வு அமைய வேண்டும் என்ற நிலைப்பாட்டை வலியுறுத்தி வருகிறோம்.   
 
இவைகள் இவ்வாறிருக்க, சிங்கள தேசத்தின் தலைமைத்துவமான சிறீலங்கா அரசாங்கத்திற்கும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையில் நடைபெறுகின்ற பேச்சுவார்த்தைகள் அவசியமாக நோக்கத்தக்க விடயமாகவுள்ளது.
 
கடந்த வாரப் பத்தியில், அதிகாரப் பகிர்வு என்ற பாதையில் தமிழ் அரசியல் தலைமைகள்; நகர்வதானது, நாம் சுயநிர்ணய உரிமையினை எவ்வாறு இழப்பதாக அமையும் என்பதைத் தெளிவுபடுத்தியிருந்தேன். அது அவ்வாறிருக்க, இன்றைய சூழ் நிலையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அதிகாரப்பகிர்வு என்ற விடயத்திலும் பார்க்க குறைந்த பாதையான அதிகாரப் பரவலாக்கம் என்ற அடிப்படையில் முன்வைக்கப்பட்ட மாகாண சபைகள் என்பதை அடிப்படையாகக் கொண்டே பேச்சுக்கள் நடைபெற்றுக் கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
 
மாகாண சபைகள் என்ற விடயத்தினை முன்வைத்து பேச்சுக்கள் நடக்கையில், பதின்மூன்றாவது அரசியலமைப்புத் திருத்தத்தின் வாயிலாக உருவாக்கப்பட்ட மாகாண சபைகள் எவ்வாறானவை என்பது அனைவரும் கவனத்திலெடுக்க வேண்டிய விடயமாகும். இந்த மாகாண சபையில், ஆளுநர், முதலமைச்சர் தலைமையிலான அமைச்சரவை மற்றும் மாகாண சபை உறுப்பினர்கள் என மூன்று அங்கங்கள் இருப்பதனை நாம் அவதானிக்கலாம்.
 
மாகாண சபைகளுக்கு தனியான இருப்புக் கிடையாது. சிங்கள தேசத்தின் தயவில் தங்கியிருக்க வேண்டிய இருப்பே உள்ளது. இம் முறைமையில்; சிங்கள தேசத்தின் ஜனாதிபதியால் நியமிக்கப்படுகின்ற ஆளுநரினாலேயே, மக்களால் தெரிவு செய்யப்படுகின்ற முதலமைச்சர் கட்டுப்படுத்தப்படுகின்றார். ஜனாதிபதியினால் நியமிக்கப்படுகின்ற ஆளுநரினால் நிiவேற்று அதிகாரம் மாகாண சபைகள் மீது பிரயோகிக்கப்படுகின்றது. நிறைவேற்று அதிகாரத்தினை அமைச்சரவை ஊடாகவும் திணைக்களங்களின் தலைவர்கள் ஊடாகவும் ஆளுநர் பிரயோகிக்கின்றார்.
 
அதாவது, முதலமைச்சருக்கும்,  அமைச்சர்களுக்கும் ஆக்கபூர்வமான அதிகாரங்கள் எதுவும் இல்லை. அவர்கள் தனித்து ஆளுநரின் நிறைவேற்று அதிகாரத்தை பியோகிப்பதற்கு உதவுவதற்கும் ஆலோசனை வழங்குவதற்குமே மட்டுமே உள்ளனர். அதேவேளை, அமைச்சரவையின் ஆலோசனைகளைப் புறக்கணித்து அல்லது கவனத்தில் எடுத்துக்கொள்ளாமலே ஆளுநரால் தன்னிச்சையாக செயற்பட முடியும் என்பது ஆழமாக அவதானிக்கப்பட வேண்டியது.
 
ஜனாதிபதி விரும்பிய நேரத்தில் மக்களால் தெரிவுசெய்யப்பட்ட மாகாண சபைகளைக் கலைக்கலாம். இது தமிழ்த் தேசத்து மக்கள் ஜனநாயக முறைப்படி தெரிவு செய்த பிரதிநிதிகளை சிங்கள தேசத்து தலைவர் கேட்டுக் கேள்வியின்றி அகற்றுவதாக அமைகின்றது. அத்துடன், 13 ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தினை செயல்வடிவம் கொடுக்கக்கத்தக்கதாக சட்டங்களை பாராளுமன்றம் இயற்றவேண்டும்;. அவ்வாறாக இயற்றிய சட்டத்தினை (உதாரணமாக மாகாண சபைகள் சட்டம் ) சாதாரண பெரும்பான்மை மூலம் பாராளுமன்றம் நீக்கவோ மாற்றவோ முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
 
ஆளுநரின் உத்தரவுப் படியே மாகாண சபைகள் நடந்துகொள்ளவேண்டும். இதன் அர்த்தம், ஜனாதிபதியின் விருப்பத்திற்கும் உத்தரவிற்கும் அடங்கிய வகையிலேயே மாகாண சபைகள் செயற்பட வேண்டும் என்பதாகும்.
மாகாண சபைகளின் நிதி சம்மந்தமான விடயங்கள் கூட ஜனாதிபதியினதும் சிங்கள தேசத்தினதும் கட்டுப்பாட்டுக்குள்ளேயேயுள்ளது. மாகாண அமைச்சரவை ஆளுநருடன் இணங்க மறுத்தால், ஜனாதிபதி அமைச்சரவையினை கலைக்க முடியும்.
 
சுருக்கமாகக் கூறுவதாயின், மாகாண சபை முறையில், மக்களால் தெரிவுசெய்யப்பட்ட மாகாண அமைச்சரவைக்கு அமைச்சரவை அதிகாரங்கள் இல்லை. அதேவேளை, ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட ஆளுனருக்கு அனைத்து அதிகாரங்களும் உள்ளன. இதனை இன்னுமொரு வகையில் கூறுவதாயின், பல அதிகாரங்கள், ஆளுனருக்கும் அப்பாற்பட்டதாக இருக்கும் ஒரு மோசமான நிலையே உள்ளது. 
 
மாகாண சபைகள் உண்மையில் நிதியைக் கூட கையாள முடியாத ஒரு புகழப்பட்ட  உள்ளுராட்சி சபைகளாக மட்டுமே உள்ளன. இது மட்டுமல்லாமல், மாகாண சபைகளினால் எடுக்கப்படும் தீர்மானங்களை “தேசிய கொள்கை” என்ற பெயரில் பாராளுமன்றத்தினால் கொண்டுவரப்படும் சட்டங்களின் வாயிலாக செல்லுபடியற்றதாகச் செய்ய முடியும் என்ற நிலையும் காணப்படுகின்றது.
 
தமிழ் மக்களது விருப்பாக அவர்களது அடிப்படை உரிமையான சுயநிர்ணய உரிமையே உள்ளது. ஆனால், அதிகாரப் பகிர்வென்பது சுயநிர்ணய உரிமையை நிராகரிக்கும்; ஒரு அம்சமாகவே உள்ளது என்பதைனை எனது முன்னைய பத்திகளில் சுட்டிக்காட்டியிருந்தேன். மாகண சபையென்பது அந்த அதிகாரப் பகிர்வையும் விட மோசமானது என்பதுடன், வெறும் அதிகாரப் பரவலாக்கத்தை  மட்டுமே கொண்டுள்ளது.
 
இந்த மாகாண சபையென்பது ஒற்றையாட்சி முறைக்குள் உருவாக்கப்பட்ட ஒரு விடயமாகும். சிறீலங்கா அரசு ஓற்றையாட்சி முறைக்குள் அமைந்திருக்கின்றமையே இனப்பிரச்சினை தோற்றம் பெற்று நீண்டு செல்வதற்கான பிரதான காரணமாகும். இந்த நிலையில், மாகாண சபையை கட்டியெழுப்பலாம் என முற்பட்டால், அந்த மாற்றங்கள் ஒற்றையாட்சியை மீறுகின்ற விடயமாக இருப்பின், அந்த திருத்தத்திற்கு நாடாளுமன்றத்தில் மூன்றிலிரண்டு பொரும்பான்மையினையும், ஒரு சர்வஜன வாக்கnடுப்பில் பெரும்பான்மை ஆதரவினையும் பெறவேண்டி இருக்கும். இது, இன்றைய சிங்கள தேசத்தின் மனோநிலையை கருத்தில் கொள்ளும் போது சாத்தியமற்ற விடயம் என்பதை முன்னைய கட்டுரைகள் ஊடாக எடுத்துக் காட்டியிருந்தேன்.

இதனை, தமிழ் மக்களால் உணர்வுபூர்வமாக அனுஸ்டிக்கும் புனித வாரத்தில்; மனதிற்கொள்வோமாக.

-   கஜேந்திரகுமார் பொன்னம்பலம்.
ஞாயிறு தினக்குரல்.

Sunday, November 27, 2011

பாராளுமன்றத் தெரிவுக் குழுவா? கூட்டமைப்புடனான பேச்சுக்களா?

இனநெருக்கடிக்குத் தீர்வைக் காண்பதற்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் நடத்திவரும் பேச்சுக்களைத் துரிதப்படுத்துவதற்கு கடந்த வாரம் இணக்கம் தெரிவித்த அரசாங்கம், பாராளுமன்றத் தெரிவுக்குழு ஒன்றை அமைப்பதற்கான யோசனை ஒன்றை இவ்வாரம் பாராளுமன்றத்தில் சமர்பித்திருக்கின்றது. இனநெருக்கடிக்குத் தீர்வாக முன்வைக்கப்படக்கூடிய அரசியலமைப்புத் திருத்த யோசனைகளை தயாரிப்பது இந்த பாராளுமன்றத் தெரிவுக்குழுவுக்கு வழங்கப்பட்டுள்ள ஆணை. இதற்காக ஆறுமாத கால அவகாசமும் இதற்கு வழங்கப்பட்டுள்ளது.

இது சமாதானப் பேச்சுக்கள் எனக் கூறிக் காலத்தைக் கடத்துவதாகவும், தமிழ்த்தேசியக் கூட்டமைப்புடன் அரச தரப்பு நடத்தும் பேச்சுக்களின் முக்கியத்துவத்தைக் குறைப்பதாகவும் அமையலாம் என்ற சந்தேகத்தை அரசியல் வட்டாரங்கள் தெரிவித்திருக்கின்றன.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் அரசாங்கம் நடத்தும் பேச்சுக்கள் 13 சுற்றுக்களைக் கடந்துள்ள நிலையில்தான் பேச்சுவார்த்தையில் ஆராயப்பட வேண்டிய விடயங்கள் தொடர்பில் நிகழ்ச்சிநிரல் ஒன்று கடந்த வாரத்தில் தயாரிக்கப்பட்டிந்தது. அரசியல் தீர்வுக்கான அடிப்படைகளில் காணப்படும் முரண்பாடுகளைத் தீர்க்கும் வகையிலேயே இந்த நிகழ்ச்சி நிரல் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சி நிரலின் அடிப்படையிலேயே டிசெம்பர் 5 ஆம் திகதி முதல் நான்கு நாட்களுக்குப் பேச்சுக்களை முன்னெடுப்பதற்கும் தீர்மானிக்கப்பட்டிருந்தது.

இந்தப் பேச்சுக்களை டிசெம்பர் இறுதிக்குள் முடிவுக்குக் கொண்டுவந்துவிட வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு விரும்பிய போதிலும் அது சாத்தியமாகப் போவதில்லை என்பதை கடந்த வாரம் தெரிவித்திருந்தோம்.

இந்தநிலையில் அரசாங்கம் தற்போது மேற்கொண்டுள்ள புதிய நகர்வானது, இனநெருக்கடிக்கான அரசியல் தீர்வு என்பது தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் அரசாங்கம் நடத்தும் பேச்சுக்களுடன் மட்டும் தங்கியிருக்கப்போவதில்லை என அரசாங்கம் வெளியிட்டடுள்ள ஒரு மறைமுகமான அறிவித்தலாகவே கருதப்படவேண்டியிருக்கின்றது. பாராளுமன்றத் தெரிவுக்குழுவின் மூலமாகத்தான் அரசியல் தீர்வு முன்னெடுக்கப்படப்போகின்றது என்றால், கூட்டமைப்புடன் இவ்வளவு காலமும் நடத்திய பேச்சுக்கள் அர்த்தமற்றதாகப் போய்விடலாம். ஆக, பேச்சுவார்த்தை என்பது அரசாங்கம் நடத்தும் நாடகம் என்ற சந்தேகத்தை மேலும் வலுப்படுத்துவதாகவே அரசின் இந்த அறிவிப்பு அமைந்திருக்கின்றது.

இனப்பிரச்சினைக்கான தீர்வு குறித்து ஆராய்வதற்காக பாராளுமன்றத் தெரிவுக் குழு ஒன்று அமைக்கப்படும் என ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ சில மாதங்களின் முன்னர் அறிவித்திருந்தார். அதன் அடிப்படையில் அது தொடர்பான பிரேரணை ஒன்று பாராளுமன்றத்தில் ஏற்கனவே சமர்ப்பிக்கப்பட்டிருந்தது. இருந்தபோதிலும், அது தொடர்பில் எந்த நகர்வுகளும் மேற்கொள்ளப்பட்டிருக்கவில்லை. அந்தப் பிரேரணையிலுள்ள சில விடயங்களை மாற்ற வேண்டும் என அரசாங்கம் விரும்பியதால், அந்தப் பிரேரணை மீளப் பெறப்பட்டு இப்போது திருத்தங்கள் சிலவற்றுடன் புதிய பிரேரணை முன்வைக்கப்பட்டிருக்கின்றது.

பாராளுமன்றத் தெரிவுக்குழுவுக்கு குறிப்பாக 3 பணிகள் வழங்கப்பட்டுள்ளதாக பாராளுமன்றத்தில் இது தொடர்பாகச் சமர்ப்பிக்கப்பட்டுள்ள யோசனையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

1. எல்லா மக்களும் தமது தனித்துவங்களைப் பாதுகாப்பதையும், மேம்படுத்துவதையும் அத்துடன் கண்ணியமாகவும் பாதுகாப்பாகவும் ஒரு தேச மக்களாக வாழ்வதை உறுதிப்படுத்துவதற்கும்,

2. இலங்கை மக்களின் ஐக்கியத்தை மேம்படுத்துவதற்கும்,

3. சமூக, பொருளாதார, அரசியல் மற்றும் கலாசார அபிவிருத்தியை மேம்படுத்துவதற்கும் மக்களுக்கும், நாட்டுக்கும் தத்துவமளிப்பதற்கும் அரசியல் மற்றும் அரசியலமைப்பு நடவடிக்கைகளை ஆறு மாத காலத்துக்குள் விதந்துரைப்பதற்கு பாராளுமன்றத் தெரிவுக்குழு நியமிக்கப்பட வேண்டும் என்பதுதான் கடந்த செவ்வாய்கிழமை பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட்ட பிரேரணையாகும்.

இந்தப் பாராளுமன்றத் தெரிவுக்குழுவின் தலைவர் சபாநாயகரால் நியமிக்கப்படுவார். இக்குழுவில் 31 உறுப்பினர்கள் இடம்பெறுவர்கள். இக்குழு தனது நடவடிக்கைகளைப் பூர்த்தி செய்வதற்கு முன்னதாக இடைக்கால அறிக்கைகளைச் சமர்பிக்கும் என்பன போன்ற விடயங்களும் இந்தப் பிரேரணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் நியமிக்கப்படவுள்ள 31 உறுப்பினர்களில் 19 உறுப்பினர்கள் அரசாங்கத் தரப்பைச் சேர்ந்தவர்களாகவும் 12 உறுப்பினர்கள் எதிர்க்கட்சியைச் சேர்ந்தவர்களாகவும் இருப்பார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


ஆளும் கட்சியைப் பொறுத்தவரையில் அதில் பல கட்சிகள் உள்ளடங்கியுள்ளன. அதில் பிரதான கட்சியான சிறிலங்கா சுதந்திரக் கட்சிக்கு 4 இடங்களும் ஏனைய கட்சிகளுக்கு தலா ஒவ்வொரு இடமும் வழங்கப்படும் எனத் தெரிகின்றது.

அரசாங்கம் இந்த நகர்வை மேற்கொண்டுள்ள நிலையில், இந்தப் பாராளுமன்றத் தெரிவுக்குழுவில் நம்பிக்கை வைக்க முடியுமா என்ற கேள்விக்கு அப்பால் இரண்டு பிரதான கேள்விகள் எழுப்பப்படுகின்றது. 1. தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடனான பேச்சுக்களை இது பாதிக்குமா என்பது. 2. எதிர்க்கட்சிகள் இதில் பங்குகொள்ளுமா என்பது.

இலங்கையைப் பொறுத்தவரையில் இவ்வாறான தெரிவுக்குழுக்கள் அமைக்கப்படுவது எப்போதும் காலத்தைக் கடத்துவதற்கான அரசியல் உபாயமாகவே இருந்திருக்கின்றது. 2005 ஆம் ஆண்டுத் தேர்தலில் வெற்றி பெற்று அதிகாரத்துக்கு வந்த பின்னர் இது போன்ற தெரிவுக்குழு ஒன்றை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அமைத்திருந்தார். இனநெருக்கடிக்கு அரசியல் தீர்வைக் காண்பதற்கான யோசனைகளைச் சமர்ப்பிப்பதுதான் அதற்காக வழங்கப்பட்ட பிரதான பணியாக இருந்தது. 


அமைச்சர் போராசிரியர் திஸ்ஸ விதாரணை தலைமையிலான இந்தக் குழு இனநெருக்கடிக்காக முன்வைக்கக்கூடிய அரசியல் தீர்வு யோசனைகள்  தொடர்பில்  சுமார் 4 வருடகாலமாக ஆராய்ந்த பின்னர் சமர்பித்த அதன் இறுதி அறிக்கைக்கு என்ன நடந்தது என்பது எவருக்கும் தெரியாது. இந்த நிலையில் மற்றொரு குழுவின் செயற்பாடுகளில் எவ்வாறு நம்பிக்கை வைக்க முடியும்?

இதனைவிட பாராளுமன்றத் தெரிவுக்குழு என்று குறிப்பிடும் போது, அதில் ஜாதிக ஹெல உறுமய போன்ற பல சிங்களத் தேசியவாதக் கட்சிகளும் இடம்பெறும். அரசாங்கம் இன்று சிங்களத் தேசியவாதிகளை நம்பித்தான் அரசியல் நடத்துகின்றது. இவ்வாறான கட்சிகளின் செல்வாக்கிற்கு உட்பட்ட பாராளுமன்றத் தெரிவுக்குழு தமிழர்களின் அபிலாஷைகளைக் கருத்திற் கொள்ளக்கூடிய ஒரு தீர்வை வழங்கும் என்பதை எவ்வாறு நம்ப முடியும்?

இதனைவிட இந்தத் தெரிவுக்குழுவுக்கு 6 மாத கால அவகாசம் வழங்கப்பட்டிருக்கின்றது. இந்தக் கால அவகாசத்துக்குள் குழுவால் தீர்வொன்றைக் காண முடியவில்லை என்றால் இந்தக் கால அவகாசம் மேலும் 6 மாத காலத்துக்கு நீடிக்கப்படலாம். ஆக, வெறுமனே காலத்தைக் கடத்துவதற்கான ஒரு நாடகமாக மட்டுமே இது அமையும்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடனான பேச்சுக்களை இது பாதிக்குமா எனக் கேட்டால் நிச்சயமாகப் பாதிக்கும் என்றுதான் சொல்ல வேண்டும். காரணம் - 1. கூட்டமைப்பு குறுகிய காலத்துக்குள் பேச்சுக்களை முடிவுக்குக் கொண்டுவர விரும்புகின்றது. இருந்தபோதிலும் பாராளுமன்றத் தெரிவுக்குழு இதற்கு முரணாக அமையலாம். 2. பாராளுமன்றத் தெரிவுக்குழு அரசியல் தீர்வுக்கான யோசனைகளைத் தயாரிக்க முற்படும் போது அதே நோக்கத்தைக் கொண்ட அரசு - கூட்டமைப்பு பேச்சுக்கள் அர்த்தமற்றதாகிவிடும். ஏனெனில் பாராளுமன்றத் தெரிவுக்குழுவின் முடிவுதான் வலுவானதாகக் கருதப்படும்.

எதிர்கட்சிகள் இந்த செயன்முறையில் பங்குகொள்ளுமா என்பதும் கேள்விக்குறியாகத்தான் இருக்கின்றது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இதில் பங்குகொள்ளாது என அதன் பேச்சாளர் சுரேஷ் பிரேமச்சந்திரன் அறிவித்திருக்கின்றார். இது வெறுமனே காலத்தைக் கடத்துவதற்கான உபாயம் என்பதால் அரசின் இந்த உபாயத்துக்கு தாமும் துணை போகப்போவதில்லை என்பதால்தான் இவ்வாறான முடிவை தாம் எடுத்திருப்பதாக அவர் குறிப்பிட்டிருக்கின்றார்.

இருந்தபோதிலும் இந்தத் தெரிவுக்குழுவில் பங்குபற்றுமாறு அரசாங்கம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு நிச்சயமாக அழுத்தம் கொடுக்கும். இந்தியா மற்றும் மேற்கு நாடுகளும்  அதேபோன்று அறிவுறுத்தலை கூட்டமைப்புக்குக் கொடுக்கலாம். அவ்வாறான நிலையில் இதில் பங்குகொள்ள கூட்டமைப்பு முடிவெடுக்கலாம். 3 கோரிக்கைகளை முன்வைதது அரசுடனான பேச்சுக்களிலிருந்து வெளிநடப்பச் செய்த கூட்டமைப்பின் தலைவர்கள், பின்னர் அது தொடர்பான கதையே இல்லாமல் பேச்சுக்களில் பங்குகொண்டமை அனைவருக்கும் தெரியும். அந்த நிலையில்,  பாராளுமன்றத் தெரிவுக் குழுவைப் பயன்படுத்தி அரசு மேற்கொள்ளும் காலங்கடத்தும் நாடகத்தில் இறுதி வேளையில் கூட்டமைப்பும் முக்கிய பாத்திரத்தை ஏற்கலாம்.

அதேவேளையில், பிரதான  எதிர்க்கட்சியான ஐ.தே.க.வைப் பொறுத்தவரையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எடுக்கும் நிலைப்பாட்டைத்தான் அவர்களும் எடுப்பார்கள் எனத் தெரிகின்றது. மற்றொரு எதிர்கட்சியான ஜே.பி.வி.யும் இதில் பங்குகொள்ளாது என்றே தெரிகின்றது. ஆக இது ஆளும் தரப்பை மட்டும் கொண்ட ஒரு பாராளுமன்றக் குழுவாகத்தான் இருக்கும் என எதிர்பார்க்கலாம்.  இருந்தபோதிலும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இவ்விடயத்தில் எடுக்கும் உறுதியான தீர்மானம் முக்கியமானதாக இருக்கும்!

இந்தத் தெரிவுக்குழு என்பது  காலத்தைக் கடத்துவதற்கும், சர்வதேச அழுத்தங்களைச் சமாளிப்பதற்குமான அரசாங்கத்தின் ஒரு உபாயமாக மட்டும்தான் இருக்கமுடியும் எனக் கூறுவதற்கு பல காரணங்கள் உள்ளன. அதனால்தான் கூட்டமைப்புடான பேச்சுக்கள் முக்கியமான ஒரு கட்டத்துக்கு வந்திருப்பதாகக் கருதப்படும் ஒரு தருணத்தில் இந்த பாராளுமன்றத் தெரிவுக்குழு யோசனை முன்வைக்கப்பட்டிருக்கின்றது.

அரசியல் தீர்வு எனக்கூறி சர்வதேசத்தின் அழுத்தங்களை மழுங்கடிப்பதற்கான அரசின் இவ்வாறான செயற்பாடுகளை எதிர்கொள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் எதிர்க்கட்சிகளும் எவ்வாறான உபாயத்தைக் கையாளப்போகின்றன என்பதுதான் இன்று எழும் கேள்வி! அல்லது அவையும் இதற்குத் துணை போகப் போகின்றனவா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்!


- சபரி.
ஞாயிறு தினக்குரல்

Wednesday, November 23, 2011

சுயநிர்ண உரிமையா அதிகாரப்பகிர்வா? தமிழ் மக்கள் எதனைத் தேர்ந்தெடுப்பது?

• சிங்கள தேசமும் தமிழ்த் தேசமும் பேசி ஓர் கூட்டு இறைமை என்ற முடிவுக்கே வரவேண்டியுள்ளது. இன்றைய நிலையில் இதனை விடுத்து அதிகாரங்களை கேட்டுப் பெற்றுக் கொள்ளும் வண்ணம் நாம் நடந்து கொண்டால் எமது சுயநிர்ணய உரிமையினை நாமே புறந்தள்ளும் செயற்பாடாக அது அமையும்
 
• சுயநிர்ணய உரிமைக்கான ஆணையை தமிழ் மக்கள் வழங்கியுள்ள நிலையில் அதனை வலியுறுத்துவதை விடுத்து பின்னர் ஒரு சந்தர்பத்தில் மீண்டும் வலியுறுத்தலாம் என்பது சர்வதேச ஒழுங்கின் அடிப்படையில் முடியாத காரியம்

இனப் பிரச்சினைத் தீர்வில் அதிகாரப்பகிர்வுக்கு சிங்கள தேசம் தயாரில்லை என்ற யதார்த்தத்தினை கடந்த வார பத்தியில் விளக்கியிருந்தேன். அதிகாரப் பகிர்வுக்குத் தயாhரில்லாத சிங்கள தேசம் அதற்கு நேர் எதிரான பாதையிலேயே பயணிக்கின்றது என்பதனால் சிங்கள பௌத்த நிலைப்பாடுகளுக்கு மத்தியில் அதிகாரப் பகிர்வு என்பது சாத்தியமற்றது என்பதனை ஆதாரங்களுடன் கடந்த கட்டுரையில் எடுத்துக்காட்டியிருந்தேன். அக் கட்டுரையின் நோக்கம் இன்றும் அதிகாரப் பகிர்வு இனப்பிரச்சினைத் தீர்வுக்கு சாத்தியம் என கற்பனைகொள்வோர்  தெளிவடைய வேண்டும் என்பற்காகவேயாகும்.
 
தமிழ்த் தேசம் தேர்தல்கள் வாயிலாக காலங்காலமாக அளித்துவரும் சுயநிர்ணயம் தேசம் என்ற தீர்ப்புக்கு அதிகாரப் பகிர்வு என்ற விடயம் பொருத்தமானதா என்பதை ஆராய்வதாக இக்கட்டுரை அமைகின்றது.
 
அதிகாரப் பகிர்வு என நாம் எமது பிரச்சினைக்கான தீர்வை அணுகுவோமாயின் அதிகாரத்தின் உறைவிடம்  இலங்கை (சிங்கள பௌத்த அரசிடமே)  இருப்பதை ஏற்றுக் கொள்வதாக அமைந்து விடும். சிங்கள பௌத்த தேசியத்திடம் (அரசிடம்) இருக்கும் இறைமையில் பங்கு கேட்பதாக கருத்துப் படும். இது எமக்கு சுயமாக இறைமை இருக்கிறது - சுயநிர்ணய உரிமை இருக்கின்றது என்பதை மழுங்கடிப்பதாக அமையும். ஏனெனில் சுயநிர்ணய உரிமை என்பது கேட்டுப்பெறுவதல்ல.  அதிகாரப் பகிர்வு அணுகுமுறைக்கும் சுயநிர்ணய உரிமை  அணுகுமுறைக்கும்  இடையிலான அடிப்படை வித்தியாசம் இது தான். இதனை நாம் தெளிவாக விளங்கிக் கொள்ள வேண்டும். அதிகாரப் பகிர்வு அணுகுமுறையின் கீழ் அவர்கள்(சிங்கள பௌத்த அரசு பகிர்ந்து தருவதை) மீள எடுத்துக் கொள்ள உரிமை உடையவர்கள். ஆகவே அது எமக்கு ஒரு போதும் நிலையான தீர்வைத் தரப்போவதில்லை.
 
தேர்தல்கள் வாயிலாக தமிழ் மக்கள் அளித்து வருகின்ற சுயநிர்ணயம் மற்றும் தமிழ்த் தேசம் போன்ற மக்கள் ஆணையானது ஓர் வரலாற்று விடயம் என்பதனால் எமது கடந்தகால வரலாற்று நிலைநினறே அதனை நுணுக்கமாக ஆராயவேண்டியுள்ளது.
 
நாம் சுயநிர்ணய உரிமைக்கும் தனித் தேசத்திற்கும் உரித்துடையவர்களாக இருந்தும் கூட 1977 ஆம் ஆண்டு வரையில் தமிழ் மக்களுக்கு தலைமை வகித்த கட்சிகள்  மேற்கூறிய சுயநிர்ணயம் தனித் தேசம் போன்றவற்றுக்கு கூடிய முக்கியத்துவமளிக்கவில்லை. நடைமுறையில் தமிழ் மக்ககளின் இனப்பிரச்சினையை சிங்களத் தரப்புக்களுடன் இணைந்து அரசியல் யாப்புத் திருத்தங்களின் ஊடாகத் தீர்க்கலாம் என்ற நம்பிக்கையையே அப்போது  தமிழ்த் தலைமைகள் கொண்டியங்கின. ஒற்றையாட்சி முறைமையில் இருந்து அதிகாரப் பகிர்வை நோக்கியதாக அரசியலமைப்பினை மாற்றியமைத்து இனப் பிரச்சினைக்கான தீர்வினை எட்ட முடியுமெனனவும் அவை நம்பின.
 
அரசியலமைப்பில் மாற்றத்தினைக் கொண்டுவருவதாயின் அதற்கான முன்நிபந்தனையாக தேசிய அரசுப் பேரவையில் (அன்றைய பாராளுமன்றத்திற்கு வழங்கப்பட்ட பெயர்) மூன்றில் இரண்டு பெரும்பான்மையை எட்டவேண்டியிருந்தது. ஆகவே அரசியலமைப்பில் மாற்றங்களை ஏற்படுத்தி இனப்பிரச்சினையைத் தீர்க்கலாம் என்ற விடயத்தினை நடைமுறைச் சாத்தியமாக்குவதாயின் அதற்காக தேசிய அரசுப் பேரவையில் சிங்களத் தரப்புக்களின் ஆதரவு கட்டாயமானதாக இருந்தது.   இதன் அர்த்தம்  இலங்கை அரசு என்ற கட்டமைப்பில் 75 சதவீதம் சிங்களவர்களாக இருக்கையில் சிங்களவர்களின் விருப்பின்றி நாம் எதனையும் சாதித்துவிடமுடியாது என்பதாகும். எமது இனத்தின் நலன்களுக்கு எதிரான முடிவுகளை எம்முடைய கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியிலும் சிங்கள தேசத்தினால் தன்னிச்சையாக நிறைவேற்றத் தக்கதாக ஆட்சிக்கட்டமைப்பு உள்ளது.
 
இதனை நாம் எமது இனத்திற்கு எதிராகக் கடந்த காலத்தில் கொண்டுவரப்பட்ட சட்டங்கள் மற்றும் தீர்மானங்கள் வாயிலாக தெளிவாக விளங்கிக்கொள்ள முடியும் ( சென்ற வாரம் இது விபரிக்கப்பட்டிருந்தது.). அதிகாரப் பகிர்வு என்பதை முன்வைத்து 1977 வரை அமோக வெற்றியடைந்த தமிழரசுக் கட்சி பெற்ற மக்கள் ஆணை கூட இலகுவான முறையில் அன்று உதாசீனப்படுத்தப்பட்டது. இதிலிருந்து வெளிப்படையாக தமிழ் மக்கள் தேர்தல்கள் வாயிலாக அளித்துள்ள எந்த ஆணைக்கும் சிங்களத்தரப்புக்கள் மதிப்பளிக்கவோ கருத்தில் கொள்ளவோ தேiயில்லை என்பது நிரூபணமாகின்றது. காரணம் பெரும்பான்மை ஜனநாயகத்தில் சனத்தொகை அடிப்படையில் நாம் சிங்களவர்களைக் காட்டிலும் குறைவாக இருக்கினறோம். இதனால்;;; சிங்கள பௌத்தத்தினை பாதுகாக்கும் இலங்கைத் தீவின் ஆட்சிக் கட்டமைப்பிற்குள் நாம் வலுவிழந்து விடுகின்றோம்.
 
ஆகவே கடந்த காலத்தினைப் போன்றே தற்போதும் தமிழ்  மக்களது ஆணைக்கு சிங்களத் தரப்பு மதிப்பளிப்பதில்லை. எதிர்காலத்திலும் மதிப்பளிக்கத் தக்க நிலையில் அது இல்லை. எனவே இலங்கையில் சிங்கள தேசம் உருவாக்கிக் கொண்ட அரச கட்டமைப்பிற்குள் தமிழ்த்தேசத்திற்கு எந்தவித இடமும் இல்லை என்பதை எமது மக்கள் விளங்கிக் கொள்ளவேண்டும். எதிர்காலத்திலும் எந்தவொரு அங்கீகாரத்தினையும் தமிழ் மக்கள் பெறமுடியாது. சிக்குண்டு இருக்கும் வரை எமது தேசம் அழிக்கப்படும் என்பதுவே உண்மையாகும். கண்முன்னால் இதுவே நடைபெறுகின்றது.
 
இதனை உணர்ந்ததன் வெளிப்பாடே எஸ்.ஜே.வி.செல்வநாயகம் அவர்கள் இலங்கை அரச கட்டமைப்பிற்குள் நின்று கொண்டு அதிகாரப் பகிர்வு என்ற வழிமுறை சாத்தியம் இல்லை என்பதை உணர்ந்தார். அதன்வழி 1972 இல் காங்கேசன்துறைத் தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் பதவியினை அவர் இராஜிநாமாச் செய்தார். பின்னர் இடைத்தேர்தலில் வெற்றிபெற்றதன் மூலம் அதிகாரப்பகிர்வு என்ற பாதைக்கு முற்றுப்புள்ளிவைத்து சுயநிர்ணயம் என்ற புதிய பாதையினை அவர் தொடக்கிவைத்தார். இப் புதிய பாதைக்கு முழுத் தமிழ்த் தேசமும் 1977 தேர்தலில் தமது ஆணையை வழங்கியிருந்தது.
 
ஆகவே தற்போது இனப்பிரச்சினைத் தீர்வு பற்றி பேசுகையில் நாம் இரண்டு சுயநிர்ணய உரிமை உடைய தேசங்கள் சந்திக்கின்ற புள்ளியையே கவனத்தில் கொள்ளவேண்டும். இருதேசக்கோட்பாடு என்ற எண்ணக்கரு இதனடிப்படையிலேயே எழுச்சியடைந்தது.
 
தமிழ்த் தேசமும் சிங்களத் தேசமும் ஒரு அரசியல் ஒப்பந்தந்தின் ஊடாக உருவாக்குகின்ற அரசே தமிழர்களுக்கு ஏற்புடையதாக அமையும். இந்த இரு தேசங்களும் ஒரு நாட்டிற்குரிய புதிய அரசொன்றை ஏற்படுத்தும் பொருட்டு இறைமையின் தேவையான பகுதிகளை மட்டும் ஒன்று கூட்டி (விட்டுக் கொடுத்து அன்றி) உருவாக்கப்படுகின்ற புதிய ஏற்பாடாக இது அமையும். தற்போதைய அரசு உருவாக்கப்பட்டுள்ள கருத்தாக்கத்தில் இருந்து  (அதாவது சிங்கள பௌத்த தேசத்தை அடிப்படையாகக் கொண்டு அமைக்கப்பட்டுள்ள அரசு என்ற கருத்தாக்கத்திலிருந்து)  ஒரு உடைப்பை செய்து உருவாக்கப்படுகின்ற இரு தேசத்திற்கும் பொதுவான அரசு இது. இத்தகைய அரசொன்றல்லாத ஒன்றில் நாம் கூட்டாக சிங்கள தேசத்துடன் வாழ்வது சாத்தியம் இல்லை.
 
மேலும் நாம் நம்மை சுயநிர்ணய உரிமை கொண்டவர்களாக வெளிப்படுத்தும் போது தான் சட்ட ரீதியிலும் சர்வதேச அளவிலும் நாங்கள் ஓர் தனித்துவ இறைமை கொண்ட தரப்பாக எம்மை அடையாளப்படுத்த முடியும். இறைமையின் நடைமுறை வடிவமே சுயநிர்ணய உரிமையாகும். தமிழ் மக்கள் சுயநிர்ணய உரிமை உடையவர்கள் என்ற வகையில் சிங்கள பௌத்த ஆதிக்கத்தினை முழுமையாகக் கொண்டுள்ள சிங்கள தேசத்தின் இறைமையினை பகிர்ந்து கொள்ளும் பாதைக்கு நாம் செல்ல முயற்சிப்பது எமது இனத்தினை நாமே அழிவு நிலைக்குக் கொண்டு செல்வதாக அமைந்துவிடும்.
 
எனவே தான் சிங்கள தேசமும் தமிழ்த் தேசமும் பேசி ஓர் கூட்டு இறைமை என்ற முடிவுக்கே வரவேண்டியுள்ளது. அதிகாரப் பகிர்வுக்கே இணங்கமுடியாது எனச் சொல்கின்ற சிங்களத் தேசம் எப்படி சுயநிர்ணய உரிமையை ஏற்றுக்  கொள்ளும் என்று வாசகர்கள் கேட்கலாம். இவ்விடத்தில் எனது முதலாவது கட்டுரையான ஞாயிறு தினக்குரல் நவம்பர் 6 ஆம் திகதிய “இன்றைய சர்வதேச அரசியல் சூழலில் தமிழ் மக்களின் அரசியல் பலம் எவ்வாறானது” என்ற தலையங்கத்தினைக் கொண்ட கட்டுரையை வாசகர்கள் மீள வாசித்துப் பார்க்கலாம்.
 
அந்தக் கட்டுரையில் நாம் இன்று எடுக்கின்ற நிலைப்பாட்டை சர்வதேசம் நிராகரிக்க முடியாது என்றும் சர்வதேசத்தின் தற்போதைய பூகோள அரசியலுக்கு தமிழர் அரசியல் தேவைப்படுகின்றது என்றும் விளக்கியிருந்தேன்;. அதேவேளை முக்கியமாகக் கருத்தில் கொள்ளவேண்டிய விடயம் யாதெனில் மக்கள் சுயநிர்ணயத்திற்கான ஆணையை தேர்தல்கள் வாயிலாக வழங்கியுள்ள நிலையில் அந்த ஆணையை வலியுறுத்திச் செயற்படுவதை தற்போது தலைமைகள் கைவிட்டுவிட்டு பின்னர் ஒரு சந்தர்ப்பத்தில் மீண்டும் சுயநிர்ணய உரிமையினை வலியுறுத்தலாம் என்று கூறுவது சர்வதேச ஒழுங்கிலும் சர்வதேச அனுபவங்களின் அடிப்படையிலும் முடியாத காரியமாகும்.

- கஜேந்திரகுமார் பொன்னம்பலம்.

Sunday, November 20, 2011

13 சுற்றுப் 'பேச்சுக்களுக்கு'ப் பின்னர் தயாரிக்கப்பட்டிருக்கும் நிகழ்ச்சி நிரல்

தமது சர்ச்சைக்குரிய வெளிநாட்டுப் பயணத்தை முடித்துக்கொண்டு நாடு திரும்பிய கையோடு மற்றொரு சுற்றுப் பேச்சுவார்த்தையை அரச தரப்போடு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நடத்தி முடித்திருக்கின்றது. 

கூட்டமைப்பின் வெளிநாட்டுப் பயணத்தை அரச தரப்பினர் கடுமையாக விமர்சித்திருந்த போதிலும், கடந்த புதன்கிழமை இடம்பெற்ற இந்த ஒரு மணி நேரப் பேச்சுக்களின் போது அது தொடர்பில் அரச தரப்பினர் கூட்டமைப்பிடம் பிரஸ்தாபிக்கவே இல்லை. கூட்டமைப்பினரும் அதனையிட்டு வாய்திறக்காமல் வழமையாகப் பேச்சுக்களுக்குச் செல்வதுபோல சென்றுவந்திருக்கின்றார்கள். 

ஆனால், இம்முறை பேச்சுக்கள் வழமையைவிட வேறுபடுகின்றது ஏனெனில், அடுத்த கட்டப் பேச்சுக்கான நிகழ்சி நிரல் தயாரிக்கப்பட்டுள்ளதுடன், அடுத்த மாதத்தில் நான்கு தடவைகள் சந்திப்பதற்கும் இணக்கம் காணப்பட்டுள்ளது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் கடந்த ஒரு வருட காலமாக அரசாங்கம் நடத்திவரும் பேச்சுக்களைப் பொறுத்தவரையில் இந்தப் பேச்சுக்கள் ஒரு குறிப்பிடத்தக்கதாக அமைந்திருப்பதற்கு இந்த இரு விடயங்களும்தான் காரணம். அதாவது, ஒன்று - பேச்சுக்களைத் துரிதப்படுத்தும் நோக்கத்துடன், அடுத்த மாதத்தில் நான்கு தடவைகள் சந்தித்துப் பேசுவதற்கு இணக்கம் காணப்பட்டிருக்கின்றது. அதற்கான திகதிகளும் ஒதுக்கப்பட்டுள்ளன. இரண்டு - அடுத்த கட்டப் பேச்சுக்களின் போது ஆராயப்பட வேண்டிய விடயங்கள் தொடர்பில் இணககம் காணப்பட்டுள்ளது. அதாவது அதிகாரப்பரவலாக்கல் விடயத்தைப் பொறுத்தவரையில் சர்ச்சைக்குரிய விடயங்களாக - பேசித் தீர்க்கப்பட வேண்டிய விடயங்களாக உள்ளவை எவை உள்ளன என இனங்காணப்பட்டு அடுத்த சுற்றுப் பேச்சுக்களின் போது அவை தொடர்பில் பேசித் தீர்ப்பதற்கு இணக்கம் காணப்பட்டிருக்கின்றது.

13 சுற்றுப் பேச்சுக்களின் பின்னர் ஏற்பட்டுள்ள இந்த உடன்படிக்கை, இதுவரையில் இடம்பெற்றுவந்த பேச்சுக்களின் போக்கில் ஒரு புதிய திருப்பத்தை ஏற்படுத்துவதாக அமைந்திருக்கின்றது என்பது உண்மைதான். பேச்சுக்கள் ஆரம்பிக்கப்பட்டபோது போரினால் இடம்பெயர்ந்த மக்களின் மீள்குடியேற்றம், சரணடைந்த அல்லது கைது செய்யப்பட்டவர்களின் விடுதலை, அதி உயர் பாதுகாப்பு வலயங்களை நீக்குதல் போன்றவற்றையிட்டே முக்கியமாக ஆராயப்பட்டது. இந்த விடயங்களில் அரச தரப்பு கொடுத்த வாக்குறுதிகள் எதுவும் நிறைவேற்றப்படாத நிலையிலேயே இப்போது அரசியல் தீர்வக்கான அடிப்படைகள் தொடர்பில் ஆராய்வதற்கு இணக்கம்காணப்பட்டுள்ளது.

நிறைவேற்றப்படாத வாக்குறுதிகள் தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் அழுத்தம் கொடுத்ததாகத் தெரியவில்லை. அரச தரப்பும் அவற்றை நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதில் அக்கறையுடன் செயற்பட்டதாகத் தெரியவில்லை. அந்த விவகாரங்களை அப்படியே விட்டுவிட்டு இப்போது அரசியல் விவகாரங்கள் தொடர்பில் பேச்சுவார்த்தைகளைத் தொடர்வதற்கு நிகழ்ச்சிநிரல் தயாரிக்கப்பட்டுள்ளது. அதிகாரப் பரவலாக்கல் தொடர்பில் தமது யோசனைகளை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஏற்கனவே அரச தரப்பிடம் கைளித்திருந்தது. இருந்த போதிலும் அவை தொடர்பில் அரச தலப்பு இதுவரையில் கருத்துக்கள் எதனையும் வெளிப்படுத்தியிருக்கவில்லை. இந்த நிலையில், எவ்வாறான விடயங்களையிட்டுப் பேசுவது என்பதில் இணக்கம் காணப்பட்டிருப்பது இந்தப் பேச்சுவார்தைகளை ஒரு நிகழ்சிநிரலுக்கு உட்பட்டதாக முன்னெடுக்க உதவுவதாக அமையும் என நம்பலாம்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைப் பொறுத்தவரையில் இவ்வருட இறுதிக்குள் பேச்சுவார்த்தைகள் முடிவுக்குக் கொண்டுவரப்பட வேண்டும் என்பதை அது வலியுறுத்தியது. காலக்கெடு ஒன்று இல்லாமல் பேச்சுக்களை நடத்தினால் காலங்கடத்துவதற்கு அதனை அரசாங்கம் பயன்படுத்திக்கொள்ளலாம் என்கதாலும், தமிழர்களின் பிரச்சினைக்கு விரைவாகத் தீர்வைக்காண வேண்டும் என்பதாலுமே இதனைத் தாம் வலியுறுத்தியதாக கூட்டமைப்பின் பிதிநிதி ஒருவர் தெரிவித்திருந்தார். இருந்த போதிலும் டிசெம்பரில் நடைபெறவிருக்கும் நான்கு சுற்றுப்பேச்சுக்களுடன் இது முடிவுக்கு வந்துவிடும் என்பது எதிர்பார்ப்பதற்கில்லை. ஜனவரி அல்லது பெப்ரவரிக்குள் பேச்சுக்களை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் என்பதே கூட்டமைப்பின் தற்போதைய எதிர்பார்ப்பாக உள்ளதாகத் தெரிகின்றது.

கூட்டமைப்பினர் இவ்வாறு விரும்புவதற்கு இரண்டு காரணங்கள் கூறப்படுகின்றன.

ஒன்று - அடுத்த வருட முற்பகுதியில் வடமாகாண சபைக்கான தேர்தலை நடத்துவதற்கு அரசு திட்டமிடுகின்றது. அதற்கு முன்னர் அதிகாரப்பரவலாக்கல் விடயங்களில் இணக்கம் ஏற்படுவது அவசியம் என கூட்டமைப்பு கருதுகின்றது.

இரண்டு - அடுத்த மார்ச்சில் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் கூட்டத் தொடர் இடம்பெறவிருப்பதால் அதற்கு முன்னர் காணப்படும் அழுத்தங்களால் எதனையாவது செய்வதற்கு அரசு முன்வரலாம்.

இந்தப் பின்னணியில் அதிகாரப்பரவலாக்கல் தொடர்பாக டிசெம்பர் மாதத்தில் இடம்பெறவிருக்கும் பேச்சுக்கள் முக்கியமானதாக இருக்கும். மாகாண சபைகளைப் பொறுத்தவரையில் சர்ச்சைக்குரிய விவகாரங்களாக உள்ள காணி, பொலிஸ், நிதி, அதிகாரங்கள் என்பவற்றுடன் ஆளுநருக்கு தற்போதுள்ள அதீதமான அதிகாரங்கள் தொடர்பாகவும் அடுத்த கட்டப் பேச்சுக்களின் போது ஆராய்வதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இவற்றைவிட இரண்டாவது சபை ஒன்றை அமைத்தல், மாகாணத்துக்கான அலகு என்பன தொடர்பாகப் பேசுவதற்கும் இணக்கம் காணப்பட்டிருக்கின்றது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் பேச்சுக்களை நடத்துவது என்பது மகிந்த ராஜபக்ஷ அரசாங்கத்தின் நிகழ்ச்சிநிரலில் இல்லாத ஒரு விடயம் என்பதையும், சர்வதேச அழுத்தங்கள் காரணமாகத்தான் வேண்டா வெறுப்பாக அரசாங்கம் பேச்சுக்களை முன்னெடுத்து வருகின்றது என்பதையும் முன்னர் பார்த்திருந்தோம். அதனால்தான் கடந்த சுமார் ஒரு வருடமாக எதனையுமே கொடுக்காமல் அரசு பேச்சுக்கள் எனக் காலங்கடத்திக்கொண்டிருந்தது. இப்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உயர் மட்டத் தலைவர்களின் வெளிநாட்டுப் பயணங்களின் பின்னர் அரசின் மீதான இந்த அழுத்தங்கள் மேலும் அதிகரித்திருக்கின்றது. அதிகாரப்பரவலாக்கலின் சர்ச்சைக்குரிய விடயங்கள் தொடர்பில் ஆராய்வதற்கும் பேச்சுக்களைத் துரிதப்படுத்தவும் அரச தரப்பு இணங்கியிருப்பது இந்தப் பின்னணியில்தான்.

ஆக, இதன் மூலம் பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வு கிடைத்துவிடும் என யாராவது நம்புவார்களாயின் அவர்கள் இலங்கையின் இனவாத அரசியலின் வரலாற்றைச் சரியாகப் படிக்காதவர்களாகத்தான் இருக்க வேண்டும். உடன்படிக்கைகள் கைச்சாத்திடப்பட்டு பின்னர் கைச்சாத்திட்ட தேசத் தலைவர்களாலேயே அவை கிழித்தெறியப்பட்ட ஒரு நாட்டில்தான் நாம் வாழ்கின்றோம். அத்துடன் தமிழர்களின் உரிமைகளை உறுதிப்படுத்தக்கூடிய அரசியலமைப்பு ஏற்பாடுகளைக் கூட செயற்படாமல் தடை செய்யக்கூடிய சிங்களத் தலைமைகளையும் இலங்கைத்தீவு கண்டுள்ளது. 

கூட்டமைப்புடன் பேச்சுக்களை நடத்தும் அரசாங்கம் அதில் ஏற்படக்கூடிய இணக்கப்பாடுகளுக்கு எதிரான போராட்டங்களை முன்னெடுக்குமாறு சிங்களத் தேசியவாத அமைப்புகளைத் தட்டிவிடக்கூடிய வாய்ப்புக்களும் உள்ளன. கூட்டமைப்புடன் அரசுக்கு தற்போது எற்பட்டுள்ள உடன்படிக்கை சர்வதேசத்தை ஏமாற்றுவதற்கான ஒன்றே என்ற கருத்தில் ஜாதிக ஹெல உறுமய அறிக்கை ஒன்றை வெளியிட்டிருப்பது இதற்கு உதாரணம். ஜாதிக ஹெல உறுமய அரசில் இணைந்துள்ள ஒரு கட்சி என்பது கவனிக்கத்தக்கது.

அதனால் சர்வதேச அழுத்தங்களைச் சமாளிப்பதற்கு அரசாங்கம் மேற்கொள்ளும் நகர்வுகளில் ஒன்றுதான் கூட்டமைப்புடன் தற்போது ஏற்பட்டுள்ள இணக்கப்பாட்டைப் பார்க்க வேண்டியுள்ளதே தவிர இதனை ஒரு முன்னேற்றமாகக் கருத முடியாது. அரசாங்கத்தைப் பொறுத்தவரையில் அடுத்த மார்ச் மாதம் ஜெனிவாவில் நடைபெறவிருக்கும் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் கூட்டத் தொடர் தமக்குப் பாதகமானதாக அமைந்துவிடலாம் என அஞ்சுகின்றது போலத் தெரிகின்றது. இதில் போர்க் குற்றச்சாட்டுக்களை அடிப்படையாகக் கொண்டு இலங்கைக்கு எதிரான பிரேரணை ஒன்று கொண்டுவரப்பட்டு நிறைவேற்றப்படக்கூடிய ஆபத்தான நிலை காணப்படுவதாகவும் இராஜதந்திர வட்டாரங்கள் கொழும்பை எச்சரித்திருக்கின்றன.

இவ்வாறு சர்வதேச ரீதியாக உருவாகிவரும் ஆபத்தைத் தவிர்ப்பதற்கான உபாயங்களில் ஒன்றாகத்தான் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் பேச்சுக்களை நடத்தி சிறுபான்மையின மக்களின் பிரச்சினைகளுக்கு நியாயமான தீர்வொன்றைக் காண்பதற்குத் தாம் தயாராவதாகக் காட்டிக்கொள்ள வேண்டிய தேவை அரசுக்கு ஏற்பட்டிருக்கின்றது. அடுத்ததாக கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்கத்துக்கான ஆணைக்குழுவின் அறிக்கையை அரசாங்கம் நம்பியிருக்கின்றது. இவற்றின் மூலமாக இலங்கைக்கு எதிராகப் பாயப்போகும் போர்க் குற்றச்சாட்டுக்களின் தீவிரத் தன்மையை மழுங்கடித்துவிட முடியும் என மகிந்த ராஜபக்ஷ அரசாங்கம் கருதுவதாகத் தெரிகின்றது.

விடுதலைப் புலிகளுடனான போரின் இறுதிக்காலப்பகுதியில் (அதாவது: 2009 ஏப்ரல் மே மாத காலப்பகுதியில்) இடம்பெற்றிருக்கக்கூடிய மனித உரிமை மீறல்கள் மற்றும் மனிதாபிமானத்துக்கு விரோதமான சம்பவங்கள் தொடர்பில் பொறுப்புக் கூறும் கடமைப்பாட்டிலிருந்து இலங்கை அரசாங்கம் தப்பித்துக்கொள்ள முடியாது என சர்வதேச ரீதியாகக் கொடுக்கப்பட்ட அழுத்தங்களையடுத்தே கற்றுக்கொண்ட பாடங்களும், நல்லிணக்கத்துக்குமான ஆணைக்குழு ஜனாதிபதியால் ஒரு வருடத்துக்கு முன்னர் நியமிக்கப்பட்டது. இதன் இறுதி அறிக்கை இன்று ஞாயிற்றுக்கிழமை வெளியிடப்படுகின்றது. இதன் மூலம் சர்வதேச சமூகத்தை திருப்திப்படுத்த முடியும் என அரசாங்கம் கருதுகின்றது.

இந்த அறிக்கை தொடர்பில் அமெரிக்கா உட்பட மேற்கு நாடுகள் பெருமளவு எதிர்பார்ப்புக்களை வெளியிட்டுள்ளன. இருந்த போதிலும், மேற்கு நாடுகளின் எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றும் வகையில் இந்த அறிக்கை அமைந்திருக்கப்போவதில்லை என்பதை சட்டத்துறை வட்டாரங்கள் சுட்டிக்காட்டுகின்றன. காரணம் இந்த ஆணைக்குழுவுக்குக் கொடுக்கப்பட்ட ஆணை விடுதலைப் புலிகளுக்கும் அரசுக்கும் இடையில் 2002 இல் கைச்சாத்திடப்பட்ட போர் நிறுத்த உடன்படிக்கை தொடர்பாகவும், அது ஏன் முறிவடைந்தது என்பது தொடர்பாகவும் ஆராய்வதுதான். இந்த நிலையில் போரின் இறுதிக்காலப்பகுதி நிகழ்வுகள் தொடர்பில் இந்த அறிக்கையில் உள்ளடக்கப்படும் என எதிர்பார்க்க முடியாத நிலைதான் காணப்படுவதாகவும் இந்த வட்டாரங்கள் குறிப்பிடுகின்றன.

நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை சர்வதேச சமூகத்துக்குத் திருப்தியளிப்பதாக அமையவில்லை எனில் சர்வதேச அழுத்தங்கள் அதிகரிக்கும். அந்த நிலையில் கூட்டமைப்புடனான பேச்சுக்களை மட்டும்தான் தமக்கான தற்காப்பு ஆயுதமாக அரசு பய்படுத்திக்கொள்ள முடியும். அதனால்தான் கூட்டமைப்பின் வெளிநாட்டுப் பயணங்களைக் கடுமையாக விமர்சித்த அரசாங்கம், அவர்கள் கொழும்பு திரும்பிய உடனடியாகவே மற்றொரு சுற்றுப்பேச்சுக்காக அவசரமாக அவர்களை அழைத்திருந்தது. இது ஒரு வகையில் அரசாங்கம் தற்காப்பு நிலையில் இருப்பதை புலப்படுத்துகின்றது இந்த நிலையில் இன்ற ஜனாதிபதியிடம் கையளிக்கப்படும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை மீதே அனைவரது கவனமும் திரும்பியுள்ளது. அடுத்த கட்ட அரசியல் நகர்வுகளை நிர்ணயிக்கப்போவதாகவும் அதுதான் அமைந்திருக்கும்!

- சபரி. 
ஞாயிறு தினக்குரல் 

Thursday, November 17, 2011

இத்தாலியில் தஞ்சம் கோருவோர் மீது கொடுமை: அதிரவைக்கும் வீடியோ காட்சிகள்

இலங்கைத் தமிழர்கள் உட்பட பெருந்தொகையான மூன்றாம் உலக நாட்டவர்கள் அரசியல் மற்றும் பொருளாதாரக் காரணங்களுக்காக இத்தாலியில் தஞ்சமடைந்துவரும் நிலையில், இவ்வாறு தஞ்சமடைபவர்கள் மீது அந்நாட்டு அரசாங்கம் கொடுமைகளைக் கட்டவிழ்த்துவிட்டுள்ளமையை புதிதாக வெளியிடப்பட்ட ஒளிநாடா ஒன்று அம்பலப்படுத்தியிருக்கின்றது.

repubblica.it என்ற இத்தாலிய இணையத்தளத்தின் ஊடகவியலாளர் ஒருவர் இது தொடர்பான தகவல்களைப் பெற்றிருப்பதுடன், அங்கு இடம்பெறும் அதிர்ச்சியூட்டும் சில சம்பவங்களை இரகசியமாக ஒளிப்பது செய்து வெளியிட்டுள்ளார்.

அதிபிருத்தியடைந்த நாகரீகமடைந்த நாடுகளிலும் இவ்வாறான அநாகரீக சம்பவங்கள் இடம்பெறுகின்றதா என்ற கேள்வியை எழுப்புவதாகவும் இந்தச் சம்பவங்கள் அமைந்திருக்கின்றன. 

இது தொடர்பான வீடியோவை கீழே உள்ள இணைப்பில் காணலாம்:

Wednesday, November 16, 2011

அதிகாரப் பரவலாக்கல் விவகாரம் தொடர்பில் ஆராய்வதற்கு அரசு - கூட்டமைப்பு இணக்கம்

மாகாண சபைகளுக்கு அதிகாரங்களை வழங்குவதில் சர்ச்சைக்குரிய விடயங்கள் தொடர்பில் அடுத்த மாதம் முதல் விரிவான முறையில் பேச்சுக்களை நடத்துவதற்கு அரசுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் இடையில் இன்று புதன்கிழமை நடைபெற்ற பேச்சுக்களின் போது இணக்கம் காணப்பட்டுள்ளது.

கொழும்பில் ஜனாதிபதி செயலகத்தில் இன்று மாலை நடைபெற்ற இரு தரப்பினருக்கும் இடையிலான 13 வது சுற்றுப்பேச்சுக்கள் சுமூகமானதாக இடம்பெற்றதாகவும், பேச்சுக்களைத் துரிதப்படுத்துவதற்காக அடுத்த மாதத்திலிருந்து மாதத்துக்கு 4 தடவைகளாவது பேச்சுக்களை நடத்துவதற்கு இணக்கம் காணப்பட்டதாகவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வட்டாரங்கள் தெரிவித்தன.

இன்று மாலை 4.00 மணிக்கு ஆரம்பமான பேச்சுக்கள் சுமார் ஒரு மணி நேரத்துக்கு நீடித்ததாகவும் தெரிவித்த இந்த வட்டாரங்கள், அதிகாரப்பரவலாக்கலில் காணப்படும் சர்ச்சைக்குரிய விடயங்கள் தொடர்பில் அடுத்த கட்டப் பேச்சுக்களில் ஆராய்வதற்கு இணக்கம் காணப்பட்டுள்ள அதேவேளையில், அவ்வாறான விடயங்கள் இன்றைய பேச்சுக்களின் போது அடையாளம் காணப்பட்டதாகவும் தெரிவித்தன.

மத்திய அரசுக்கும், மாகாண சபைகளுக்கும் இருக்க வேண்டிய அதிகாரங்கள், மத்திய அரசிடமிருந்து மாகாண சபைகளுக்கு வழங்கப்பட வேண்டிய அதிகாரங்கள், மாகாண சபைகளுக்கான நிதி அதிகாரம், ஆளுநருக்கு இருக்க வேண்டிய அதிகாரங்கள் போன்றவற்றுடன், மாகாண அலகு தொடர்பாகவும் அடுத்த கட்டப் பேச்சுக்களின் போது ஆராய்வதற்கு இணக்கம் காணப்பட்டுள்ளது.

அதேவேளையில் பேச்சுக்களைத் துரிதப்படுத்தும் வகையில் அடுத்த மாதத்தில் நான்கு தடவைகளாவது சந்தித்துப் பேசுவதற்கும் இன்றைய பேச்சுக்களின் போது இணக்கம் காணப்பட்டிருக்கின்றது.

இன்றைய பேச்சுக்களுக்கு அரசு தரப்பில் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தலைமையிலான குழுவில் அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ், சஜித் வாஸ் குணவர்த்தன, பேராசிரியர் ராஜீவ விஜயசிங்க ஆகியோரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் இரா.சம்பந்தன் தலைமையிலான குழுவில் மாவை சேனாதிராஜா, சுரேஷ் பிரேமச்சந்திரன், எம்.ஏ.சுமந்திரன் மற்றும் ஜனாதிபதி சட்டத்தரணி கனக ஈஸ்வரன் ஆகியோரும் கலந்துகொண்டனர்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உயர் மட்டப் பிரதிநிதிகள் குழு ஒன்று அமெரிக்க விஜயத்தை முடித்துக்கொண்டு நாடு திரும்பிய பின்னர் இடம்பெற்றுள்ள முதலாவது பேச்சுவார்த்தை இது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியத் தொலைக்காட்சிக்கு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ விஷேட பேட்டி


Tuesday, November 15, 2011

பேச்சுவார்த்தைகளின் தோல்விகளுக்கு சர்வதேசமே பொறுப்பு: உருத்திரகுமாரன்

"விடுதலைப் புலிகள் சமாதானப் பேச்சு வார்த்தைகளில் உளச்சுத்தியுடன் ஈடுபட்டனர். ஆனால் இந்தப் பேச்சுவார்த்தைகள் நடக்கும்போதே, விடுதலைப் புலிகள் அமைப்பை பயங்கவரவாதம் என்ற கண்ணாடியினூடாகவே பார்த்து அவர்கள் இலங்கை அரசிடம் கொண்டிருந்த சமநிலையைக் குலைத்த, சர்வதேச சமூகம்தான் இந்தப் பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்ததற்குக் காரணம்" என்று விடுதலைப் புலிகளின் சார்பில் பேச்சுவார்த்தைக் குழுவில் இடம்பெற்றிருந்த வீ.உருத்திரகுமாரன் குற்றஞ்சாட்டியுள்ளார்.

இலங்கையின் இனப்பிரச்சனையில் நோர்வேயின் மத்தியஸ்த முயற்சிகள் குறித்து நோர்வேயினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை குறித்து நேற்று திங்கட்கிழமை பிபிசி தமிழோசைக்கு வழங்கிய செவ்வி ஒன்றிலேயே நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமராகவும் உள்ள உருத்திரகுமாரன் இக்கருத்தினை தெரிவித்துள்ளார்.

விடுதலைப் புலிகள் இந்தப் பேச்சுவார்த்தைகளின் போது, பல விட்டுக்கொடுப்புகளைச் செய்தனர் என்று கூறிய உருத்திரகுமாரன், போர் நிறுத்த மீறல்கள் விடயத்தில், இலங்கை அரசே பாரிய மீறல்களில் ஈடுபட்டது எனவும் குறிப்பிட்டார்.

யுத்த நிறுத்த மீறல்கள் விடயத்த்தில், இலங்கை போர் நிறுத்தக் கண்காணிப்பு குழு கூட, மீறல்கள் குறித்த எண்ணிக்கையை மேலோட்டமாகப் பார்க்கக்கூடாது, அதன் கீழுள்ள தார்ப்பரியத்தைப் பார்க்கவேண்டும் எனவும் அவர் எடுத்துரைத்தார்.

இதேவேளை இனி இலங்கை இனப்பிரச்சினையில், புலம்பெயர் தமிழர்கள் முன்னணி நிலையை எடுக்காமல், தலைமைத்துவத்தை, இலங்கையில் வசிக்கும் தமிழர்கள் எடுக்கவேண்டும் என்று நோர்வே அமைச்சர் எரிக் சோல்ஹெய்ம் குறிப்பிட்டதைப் பற்றிக் கருத்து தெரிவித்த உருத்திரகுமாரன், "இது போன்று, புலம்பெயர் தமிழர்கள், உள்நாட்டில் களத்தில் வாழும் தமிழர்கள் என்ற பேதம் உண்மையானதல்ல, இலங்கையில் வாழும் தமிழர்களுக்கு தங்களது கருத்துக்களை சுதந்திரமாகக் கூறவும் செயல்படவும் தேவையான அரசியல் வெளி, இலங்கையில் இருக்கவில்லை. இலங்கை ஒரு ஜனநாயக ரீதியாகத் தோல்வியடைந்த நாடு என்று இந்த அறிக்கையே கூறுகிறது, எனவே புலம்பெயர்தமிழர்கள், இலங்கைப் பிரச்சினையில் குரல் கொடுப்பதில் தவறில்லை" என்று தெரிவித்தார்.

இலங்கை இனப்பிரச்சனை விவகாரத்தில் நோர்வேயின் தலைமையில் இடம்பெற்ற பேச்சுவார்தைகளில் தமிழீழ விடுதலைப்புலிகளின் பிரதிநிதியாக கலந்து கொண்டதோடு விடுதலைப் புலிகளின் சட்ட ஆலோசகராகவும் உருத்திரகுமான் இருந்தமை இங்கு குறிப்பிடதக்கது.
 
(உருத்திரகுமாரன் கருத்துக்களின் ஒலிவடிவத்தைக் கேட்க கீழே கிளிக் பண்ணவும்)

செய்தி மூலம் : பிபிசி தமிழோசை

Monday, November 14, 2011

இலங்கையின் சமாதான முயற்சியில் நோர்வே ஏன் தோல்வியடைந்தது?


அதேவேளை தோல்வியடைந்த இலங்கையின் சமாதான முயற்சிகள் தொடர்பாக ஆராய நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கையில் மேலும் பலதரப்பட்ட நிகழ்வுகள் மற்றும் சம்பவங்களும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதில் குறிப்பாக இந்தியாவின் செல்வாக்கும், சமாதான முயற்சிகள் உடைந்துபோக இந்தியா எவ்வாறு காரணமாக இருந்தது என்பது குறித்தும்  இந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.



இலங்கையின் உள்நாட்டு இன முரண்பாட்டுக்கு உள்ளக ரீதியிலான தீர்வொன்றை காண முடியாத நிலையேற்பட்டபோது இந்தியா இலங்கை விவகாரங்களில் தலையிட ஆரம்பித்தது. அதன் தலையீடு காரணமாக உருவானதே இந்திய இலங்கை ஒப்பந்தமாகும்.

காலப்போக்கில் இந்திய இலங்கை ஒப்பந்தமானது தனது இலக்கை எட்டமுடியாமல் போகவே இன முரண்பாடனது சர்வதேசம் செல்வாக்குச் செலுத்தும் விவகாரமாகியது.

இனமுரண்பாடுகள் கூர்மையடைந்த நாடுகளில் சர்வதேசத்தின் மத்தியஸ்தம் அல்லது தலையீடு என்பது தவிர்க்க முடியாததாகியபோது இலங்கையும் அதில் புகவேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டது.

அந்த வகையில்  இலங்கை விவகாரத்தில் அமெரிககா உள்ளிட்ட வல்லரசு நாடுகளின் ஆசியுடன் நோர்வே தன்னை முழுமையாக ஈடுபடுத்த ஆரம்பித்தது. அதன் பயனாக அன்றைய பிரதமராகவிருந்த ரணில் விக்கிரமசிங்கவுக்கும், புலிகளின் தலைவர் பிரபாகரனுக்குமிடையே போர் நிறுத்த ஒப்பந்தம் கைசாத்திடப்பட்டது.

ஓப்பந்தம் குறித்து அப்போது நிறைவேற்றதிகாரத்தை தன்வசம் கொண்டிருந்த சந்திரிக்கா குமாரதுங்க தலைமையிலான பொதுஜன ஐக்கிய முன்னணி, சிஙகள் கடுப்போக்குவாதிகள் மற்றும் மாற்று தமிழ் இயக்கங்கள் கடுமையாக விமர்சனங்களை மேற்கொண்டபோதும் அவற்றை செவிமடுக்காத நேர்வே போர்நிறுத்த ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்ட ரணிலும் பிரபாகாரனும் அதில் உறுதியை பேண வேண்டுமென்பதில் விடாப்பிடியாக இருந்தது.

இதன் காரணமாக நோர்வே பலதரப்பட்ட உதவிகளை ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கத்திற்கும், பிரபாகரன் தலைமையிலான அரசாங்கத்திற்கு தாராளமாக வழங்கியது. குறிப்பாக இந்த போர்நிறுத்த ஒப்பந்தத்தை தமக்கு சார்பாக பயன்படுத்துவதில் ரணில் விக்கிரமசிஙகவும், பிரபாகரனும் அதீத ஆர்வத்தை வெளிப்படுத்தினர்.

இதனால் இனநெருக்கடிக்கு அரசியல் தீர்வு காணப்பட வேண்டுமென்ற உயர் நோக்கத்திற்கு அப்பால் தமது நலன்கள் நிறைவேற்றப்பட வேண்டுமென இருதரப்பினரும் முயற்சிகளை மேற்கொண்டனர். இதனால் போர்நிறுத்த ஒப்பந்தம் மீறப்படுவதாக இருதரப்பினரும் பரஸ்பரம் குற்றம்சுமத்தினர்.

இங்கு சிங்கள ஊடகங்கள் புலிகள் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறுவதாக குற்றம் சுமத்தியதைபபோன்றே, தமிழ் ஊடகங்கள் தென்னிலங்கை ரணில் அரசாங்கமும் அரச படைகளும் போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறுவதாக குற்றம்சுமத்தின.

இதனால் சிங்கள, தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களிடையே போர்நிறுத்த ஒப்பந்தம் குறித்து சந்தேகங்களும், நம்பிக்கையீனமும் ஏற்படத்தொடங்கியது.

இந்நிலையில்தான் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கத்தை கலைத்தார். இது மற்றுமொரு பாராளுமன்றத் தேர்தலுக்கு வழிவகுத்தது. அந்தத் தேர்தலில் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கம் தோல்வியை தழுவியது. இதனால் ரணில் பிரபா ஒப்பந்தம் தேக்கநிலை அடைந்தது.

இருந்த போதும் சர்வதேச சமூகத்தின் அச்சுறுத்தல் மற்றும் உதவிகளை காரணம் காட்டி சந்திரிக்காவோ அல்லது மஹிந்த ராஜபக்ஸவோ போர் நிறுத்த ஒப்பந்தத்தை ரத்துச் செய்யாமலிப்பதற்காக நோர்வே கடும் பிரயத்தனம் மேற்கொண்டது. ஆனாலும் அரசாங்கம் மற்றும் புலிகளுக்கிடையே சந்தேகம் தலைவிரித்தாடிய நிலையில போர் நிறுத்த ஒப்பந்தம் என்பது எந்நேரத்திலும் முறிவடைந்துவிடும் என்ற நிலைதோன்றி, அவ்வாறே மஹிந்த ராஜபக்ஸ ஜனாதிபதியாக பதவியேற்றதும் போர் நிறுத்த ஒப்பந்தம் முறிவடைந்து, கண்காணிப்பு பணயிலிருந்தும் நோர்வே விலகி, இறுதிக்கட்ட யுத்தமும் ஏற்பட்டு அதில் புலிகள் இராணுவ ரீதியிலான தோல்வியையும் தழுவநேரிட்டது.

இவ்வாறான நிலையிலதான் இலங்கையில் சமாதான முயற்சிகள் ஏன் தோல்வியடைந்தன என்பதை கண்டறிவதற்காக நோர்வே அரசாங்கத்தின் ஆதரவுடன் நோர்வேயின் மைகேல்சன் நிலையம், லண்டனின் கீழ்திசை நிலையம் மற்றும் ஆபிரிக்கா கல்வி நிலையம் ஆகியன இணைந்து ஆய்வு மேற்கொண்டன அந்த ஆய்வின் முடிவுகள் நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை ஒஸ்லோவில் வெளியாகியுள்ளது.

இந்த அறிக்கை வெளியிடும் நிகழ்வில் இலங்கைக்கான முன்னாள் சமாதானத் தூதுவரும்,  அமைச்சருமான எரிக்சொல்ஹெய்ம், அமெரிகக முன்னாள் வெளியுறவுத்துறை துணைச்செயலாளர் றிச்சர்ட் ஆர்மிடேச், முன்னாள் அமைச்சர் மிலிந்த மொறகொட உள்ளிட்ட பலர் கலந்துகொண்டுள்ளனர்.

208 பக்கங்களை கொண்டமைந்துள்ள இந்த அறிக்கைக்கு (Pawns of Peace) என தலைப்பிடப்பட்டுள்ளது. நோர்வே வெளிவிவகார அமைச்சின் ஆவணங்கள் மற்றும் சமாதானச் செயற்பாட்டில் ஈடுபாடுகாட்டிய முக்கியஸ்தர்களுடனான பேட்டிகள் ஆகியவற்றின் அடிப்படையில் இந்த அறிக்கை தயாரிக்கப்ட்டுள்ளது.

இலங்கையின் உள்நாட்டு யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவர மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் மற்றும் அது தோல்வியடைந்தமைக்கான காரணங்கள் குறித்தும் இந்த அறிக்கையில் விரிவாக கூறப்பட்டுள்ளது.

இந்த அறிக்கை வெளியீட்டு நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றியுள்ள மிக்கெல்சன் நிலையத்தைச் சேர்ந்த குன்னர் சேர்போ, இலங்கையில் நோர்வே மேற்கொண்ட சமாதான முயற்சி வெற்றிபெறாமைக்கு 4 முக்கிய காரணங்களை குறிப்பிட்டுள்ளார்.

1- இலங்கையின் அரசாங்கமும், புலிகளும் சமாதான முயற்சிகளில் பஙகுகொண்டபோதும்கூட தமது நிலைப்பாடுகளை கைவிடாமலேயே இருந்தனர். இதனால் இருதரப்பினரும் அரசியல் தீர்வை காணும் செயற்பாட்டில் உளச்சுத்தியுடன் ஈடுபடவில்லை என்று கூறிவிட முடியாது. ஆனால் இந்த சமாதான முயற்சி எப்படி அரசியல் ரீதியாக நிறைவுறவேண்டும் என்று இருதரப்பினரும் அவர்கள் வரையறுத்துக்கொண்ட நிலையிலிருந்து குறிப்பிடத்தக்க அளவில் எந்தவொரு மாற்றத்தையும் செய்யவில்லை.

2-  இலங்கை நாடு மற்றும் அரசியலில் இருந்த கட்டமைப்பு ரீதியான நடைமுறைகளும் நோர்வே மேறகொண்ட சமாதான முயற்சியை பாதித்தன. இலங்கையில் நிலவிய பரம்பரை அரசியல், ஊட்கட்சிப் போட்டிகள், முக்கியமானவர்களுக்கு நன்மை செய்யும் அரசியல், தேசியவாத அணிச்சேர்ப்பு போன்றனவும் நாட்டை சீர்திருத்துவதற்கும், சர்வதேச நாடுகள் தலையிடுவதற்கும் தடங்கலாக இருந்தன.

3 - ஒரு பேச்சுவார்த்தை மூலமான தீர்வுக்கு இருந்த வாய்ப்பு என்பது மிகவும் குறுகிய வாய்ப்புதான். இராணுவ ரீதியிலான சமநிலை இருக்கும் ஒரு நிலை, மேற்கு நாடுகளோடு ஒத்த கருத்துணர்வில் இயங்கும் ஒரு அரசு இருப்பது, பல தரப்பட்ட சர்வதேச நாடுகளின் ஆதரவு பேச்சுவார்த்தைகளுக்கு இருந்தது என்று ஒரு சாதகமான சூழ்நிலை போன்றவை மிகவிரைவிலேயே மாறிவிட்டன. முக்கியமாக 2004 இல் புலிகள் இயக்கம் பிளவுண்டமையானது இராணுவ சமநிலையை அரசுக்கு சாதகமாக மாற்றியதுடன், புலிகளின் இந்த பிளவுக்கு பிறகு இருதரப்புகளுமே மற்றத் தரப்புக்கு குறிப்பிடத்தக்க சலுகைகளை காட்டவேண்டியதற்கான தேவையைக் குறைத்துவிட்டது.

4- ஐக்கிய தேசியக் கட்சியின் சமாதான வழிமுறை, பாதுகாப்பு உத்தரவாதஙகள், சர்வதேச உதவி, பொருளாதார சீர்தீருத்தங்கள் போன்றன சிங்கள தேசியவாத எதிர்விiiயை ஏற்படுத்தின. இதனால் ஒரு தேசியவாத கட்சி ஆட்சிக்கு வந்ததுடன்;, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ ஆசிய நாடுகளின் உதவியுடன் புதிய சர்வதேச பாதுகாப்பு வட்டத்தை தனக்காதரவாக அமைத்துக்கொண்டு புலிகள் மீது கடும் அணுகுமுறையை கைக்கொள்ள உதவியது.

மேலும் ஒரு பலவீனமான, மென்மையான நோர்வேயினால் சில இயங்கு சக்திகளை எதிர்க்க முடியவில்லை. தோலைநோக்கு திட்டம் அற்நிலையில இந்த சமாதான முயற்சி பாதிக்கப்பட்டது. இருதரப்பும் ஒப்பந்தங்களை பின்பற்றச் செய்வதற்கு நோர்வேயினால் இயலாமல் போனது.

இலங்கை அரசியலில் தான் ஒரு சதுரங்கப் பகடையாக பயன்படுத்தப்படுவதை உணர்ந்து, நோர்வே அதை தடுத்திருக்கவேண்டும். ஜெனீவா சுற்றுப்பேச்சு தோல்வியில் முடிவடந்தபோதே மத்தியஸ்த செயற்பாட்டிலிருந்து நோர்வே விலக்கிக்கொண்டிருக்க வேண்டுமெனவும், இலங்கையின் சமாதான முயற்சிகளிருந்து கற்கவேண்டிய நிறைய பாடங்கள் காணப்படுவதாகவும்  மிக்கெல்சன் நிலையத்தைச் சார்ந்த குன்னர் செர்போ மேலும் தெரிவித்துள்ளார்.

இந்தியாவுடன் நோர்வே பிரத்தியேக சந்திப்புகளை மேற்கொண்டபோது நோர்வே புலிகளின் நெருங்கிய நண்பன் என்று இந்திய தரப்பிலிருந்து விமர்சிக்கப்பட்டதாகவும், புலிகளை அவர்களின் இடத்தில் வைக்க வேண்டுமென்று கூறியதாகவும் இந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மேலும் இந்தியாவின் விடுதலைப் புலிகளுக்கு எதிரான நிலைப்பாடானது இலங்கைக்கு யுத்தத்தை கொண்டுநடாத்த பெரும் சக்தியாக இருந்ததெனவும், 2004 இல் இந்தியாவில் காங்கிரஸ் ஆட்சிப்பொறுப்பேற்றபோது அங்கு சக்திவாய்ந்த நபராக சோனியா காந்தி மாறியது திடீர் திருப்பததை ஏற்படுத்தியதாகவும், பொதுமக்களின் இழப்புகளை குறைப்பதில் இந்தியா ஆர்வம் செலுத்தியபோதும், புலிகள் தோற்கடிக்கப்பட வேண்டுமென்பதில் இந்தியா உறுதியாக செயற்பட்டதாகவும் அறிக்கையில் விபரிக்கப்பட்டுள்ளது.

இவற்றுடன் யுத்தத்தின் இறுதிக்கட்டத்தில் இந்தியாவின் பாராளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் தோல்வியடைந்துவிடுமோவென்ற அச்சம் இலங்கையிடம் நிலவியதாகவும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த அறிக்கையில் அதிக கவனத்தைப் பெறும் விடயமாக இந்தியாவின் மத்தியமைச்சர் பா. சிதம்பரம் புலிகளின் தலைவர் பிரபாகரனுடன் தொடர்கொண்டு, முன்வரையு யோசனையை ஏற்று ஆயுதங்களை கீழே போட இணஙகுமாறு ஆலோசனை கூறியதாகவும், ஆனால் இந்நகர்வை அறிந்த வைகோ, இது காங்கிரஸின் தந்திரம் என்று நிராகரிக்குமாறும், தேர்தலில் பீ.ஜே.பி. ஆட்சியைப் பிடிக்குமென்றும் புலிகளை மீட்குமென்று அவர் உறுதி கூறியதாகவும். ஆனால் அது நடக்கவில்லையென்றும் இந்திய பாராளுமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாகிக்கொண்டிருந்தபோது புலிகளின் தலைவர் பிரபாகரன் கொல்லப்பட்டிருந்தார் என்றும் நோர்வேயின் அந்த அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளது.

இலங்கையின் உள்நாட்டு யுத்தம் முடிவடைந்து இரண்டு வருடங்கள் கடந்துவிட்ட நிலையில் வெளிவந்திருக்கும்; இந்த அறிக்கை இலங்கை அரசாங்கத்தையோ அல்லது புலிகளையே குறைகூறுவதை காட்டிலும் இந்தியாவை விமர்சிப்பதை நாம் நோக்கலாம். இதன்மறை கருத்தாக இந்தியாதான் போர்நிறுத்த ஒப்பந்தத்திற்கு குந்தகம் விளைவித்ததோ என்று சிந்திக்குமளவு அதிகளவு விடயங்கள் இந்தியாவை சுற்றி பின்னப்பட்டிருப்பதையும் அவதானிக்க முடிகிறது.

அதேவேளை இலங்கையின் உள்நாட்டு யுத்தம் நிறைவடைந்துவிட்டபின் வெளியிடப்பட்டுள்ள இந்த அறிக்கை, இலங்கை ஆட்சியாளர்கள் அரசியல் தீர்வை முன்வைப்பதிலோ அல்லது நல்லிணக்கத்தை கட்டியெழுப்புவதிலோ நோர்வேயின் பலனை பெற்றுக்கொடுக்குமா என்பதில் பலத்த சந்தேகங்கள் இருக்கவே செய்கிறது.

ஆனாலும் உலகளாவிய ரீதியில் மத்தியஸ்த்த செயற்பாடுகளில் ஈடுபட்டுள்ள நோர்வே சிலவேளைகளில், இலங்கையின் தோல்வியடைந்த சமாதான முயற்சிகளிலிருந்து பாடத்தை கற்றுக்கொள்ள சந்தர்ப்பஙகள் உண்டு எனலாம்..!

- மொஹகமத் அன்சிர்.
(ஞாயிறு தினக்குரல்)

நோர்வே மீளாய்வு அறிக்கை வெளியீட்டு நிகழ்வின் முழுமையான ஒளிப்பதிவு

இலங்கையில் விடுதலைப் புலிகளுக்கும் அரசாங்கத்துக்கும் இடையில் நோர்வே மேற்கொண்ட சமாதான முயற்சிகள் தோல்வியடைந்தமைக்கான காரணணங்களைக் கண்டறிவதற்கான மீளாய்வு அறிக்கை கடந்த வெள்ளிக்கிழமை ஒஸ்லோவில் வெளியிடப்பட்டது. அந்த நிகழ்வின் முழுமையாள ஒளிநாடா இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. (நன்றி: Norway News)

இனப்பிரச்சினையானது அதிகாரப்பகிர்வு வழியில் தீர்க்கப்படக் கூடியதா?

சென்ற கட்டுரையில் இன்றைய சர்வதேச அரசியல் சூழ்நிலைகளில் தமிழ்த் தரப்பானது துவண்டுபோக வேண்டியதில்லை எனக் கூறியிருந்ததுடன் எங்களது இறைமை தொடர்பான விடயத்தில் நாம் ஒரு தேசம்இ எமக்கென ஒரு தனித்துவம் உள்ளது;இ நாம் சுயநிர்ணய உரிமைகளுக்கு உரித்துடையவர்கள் என்ற விடயத்தை முன்னிறுத்தியிருந்தோம்.  

நாம் இவற்றின் அடிப்படையிலேயே தீர்வுக்குப் போக வேண்டியவர்கள் என்பதையும் வலியுறுத்தியிருந்தோம்;. இக் கட்டுரையில் அதிகாரப்பகிர்வு மூலம் இனப்பிரச்சினைக்குத் தீர்வினை எட்டிவிடலாம் என சிலர் நம்பிக்கை வெளியிட்டு வருவதனால் அதிகாரப் பகிர்வானது எமது இனப்பிரச்சினைத் தீர்வுக்கு உகந்ததா இல்லையா என்பது பற்றி பார்வையைச் செலுத்துகின்றோம்.

சிங்களத் தரப்புக்களுடன் நியாயம் போசி தற்போது நடைமுறையில் உள்ள ஒற்றை ஆட்சியில் இருந்து சமஷ்டி ஆட்சியை நோக்கிய ஓர் தீர்வினை அடையலாம் என்ற ஓர் நம்பிக்கை ஒருசிலரிடம் உள்ளதாகத் தெரிகின்றது. ஆனால் யதார்த்தத்தில் அவ்வாறானதோர் தீர்வினை அடையத்தக்கதாக அரசியலமைப்பினை மாற்றியமைக்க முடியுமா எனவும் அதற்கான மனநிலை சிங்கள பௌத்தர்களிடம் உள்ளதா எனவும் கேள்வியெழுகின்றது. 

தீர்வு பற்றி நாம் கவனம் செலுத்துகையில் எமது முரண்பாட்டுக்கு உரிய தரப்பான சிங்களத் தரப்புக்களுடன் பேசியே  ஓர் முடிவுக்கு வரமுடியும். இப்படியான ஓர் சூழ்நிலையில் தான் சிங்களத் தரப்பின் நோக்கங்கள் மற்றும் கொள்கைகள் பற்றி நாம் தெளிவாக விளங்கிக்கொள்ளவேண்டிய தேவை தமிழ்த் தரப்பிற்கு உள்ளது. முரண்பாட்டில் மற்றொரு தரப்பாக உள்ள சிங்களத் தரப்பினை நாம் நன்கு புரிந்து கொள்ளும் பட்சத்தில் தான் நாம் எமது நகர்வுகளை உரியவகையில் மேற்கொள்ள முடியும்.

சிங்களத் தரப்புக்களை நாம் விளங்கிக் கொள்ளும் அதேவேளை எம்மவர்களிடத்தில் உள்ள சில கருத்துக்களையும் நாம் கண்டுகொள்ள வேண்டியுள்ளது. இன்றைக்கும் கூட தமிழ் மக்களில் குறிப்பிட்ட ஒரு தரப்பினர் சிங்களத் தரப்புக்களுடன் நியாயம் பேசி அவர்களுக்கு எமது பிரச்சினைகளைத் தெளிவு படுத்த முடியும் என முனைகின்றனர். இதன்வாயிலாக சிங்கள பௌத்த அரசாக இருக்கின்ற இலங்கை அரசை மாற்றியமைத்து ஓர் தீர்வுக்கு வரமுடியும் எனவும் நம்புகின்றனர்.

இப்படியாக நிலைமைகள் தொடர்கையில் சிங்கள தேசம் எது என்பதை விளங்கிக்கொண்டு அதிகாரப் பகிர்வு பொறிமுறையை அல்லது பாதையை வகுத்துக்கொள்வது பற்றி வரலாற்று ரீதியான விடயங்களை முன்னிறுத்தி நாம் இக் கட்டுரையில் அவதானத்தினைச் செலுத்த வேண்டியுள்ளது.
சோல்பரி அரசியலமைப்பு

இலங்கைத் தீவிலிருந்து பிரித்தானியர் வெளியேறிய போது தீவில் இருக்கின்ற பல்வேறு இனக்குழுக்களிடத்திலும் ஓர் இணக்கப்பாட்டினை ஏற்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. இந்தவகையில் ஒவ்வொரு இனத்தவர்களுக்கும் தீவில் இடமளிக்கும் வகையில் இலங்கை அரசு அமைய வேண்டும் என்ற நோக்குடன் சோல்பரி யாப்பானது உருவாக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இனங்களிடையே பன்மைவாதம் (pடரசயடளைஅ) ஏற்படுத்தப்பட வேண்டும் என்பதற்காகவும் இனங்களிடையே இணக்கப்பாட்டினை ஏற்படுத்தவேண்டும் என்பதற்காகவும் சோல்பரி அரசியலமைப்பில் 29 (2) சரத்தானது ஏற்படுத்தப்பட்டதாகக் கூறப்பட்டது. இது இனங்களிடையே இணக்கப்பாட்டினை ஏற்படுத்துவதற்கு ஆணிவேர் போன்றாக அமையும் என்றும் கூறப்பட்டது.

இது நாட்டில் உள்ள ஒரு மக்கள் குழுவுக்கு மேம்பட்ட உரித்துக்கள் வழங்கப்படுவதை தடைசெய்கிறது. ஒரு இனம் சமயம் மொழி சாதி பாதிக்கப்படாத வகையில் சட்டங்கள் அமைய வேண்டும் என வலியுறுத்துகின்றது.  இதனை மேலுமொரு வகையில் கூறுவதாயின் பல தேசங்கள் கொண்ட இலங்கைத் தீவானது  தேசிய இனங்களிடையே ஒரு புரிந்துணர்வை கொண்ட நாடாக உருவாக்குவதற்கு இந்த 29(2) சரத்து மிக முக்கியமானதாகுமெனவும் இனங்கிடையே சமத்துவத்தினை ஏற்படுத்துவதற்கானதெனவும்  நம்பினார்கள்.

இந்த சரத்தானது இனங்களுக்கிடையே சமத்துவத்தினை பேணும் ஓர் ஒப்பந்தமாகும். இந்த ஒப்பந்தம் கடைப்பிடிக்கப்படும் வரையிலேயே ஒரு நாட்டிற்குள் அனைத்து இனங்களும் ஒற்றுமையாக வாழமுடியும் எனக் கருதப்பட்டது. இவ்வாறாக முக்கியத்துவமுடைய இந்தச் சரத்து மீறப்படுமானால் இலங்கை அரசின் அத்திபாரமே சிதறத்தக்கதாக அமைந்திருந்த போதும் இச் சரத்தினை மீறும் வகையில் சிங்களத் தரப்புக்கள் செயற்பட்டு இருக்கிறார்கள் என்பது கண்கூடு.

அரசியலமைப்பில் இவ் ஏற்பாடுகள் இருக்கத்தக்கதாகவே மீறல்கள் பலசந்தர்ப்பத்தில் இடம்பெற்றுள்ளன.  இந்த வகையில் 1948 ஆம் ஆண்டின் 18 ஆம் இலக்க பிரஜாவுரிமைச் சட்டம் அதனைத் தொடர்ந்து மலையகத் தமிழ் மக்களின் பிரஜாவுரிமையை பறித்த நிகழ்வுஇ 1956 ஆம் ஆண்டின் 33 ஆம் இலக்க அரச கருமமொழிச்சட்டம் எனக் கொண்டுவரப்பட்ட தனிச் சிங்களச் சட்டம் போன்ற நிகழ்வுகள் எதைக் காட்டுகின்றன என்றால் உண்மையில் அரசை சிங்களமயப்படுத்தும் நடவடிக்கையினை சிங்களத்தரப்பு ஆரம்பித்துள்ளது  என்பதையேயாகும்.

இந்த இடத்தில் சிங்களத் தரப்புக்களிடத்தில் சிங்கள பௌத்த மனநிலை என்பது காணப்படும் வரை சோல்பரி யாப்பில் கூறப்பட்ட 29(2) போன்ற சமத்துவத்திற்கான எவ்வாறான ஏற்பாடுகள் கொண்டுவரப்பட்டாலும் அவை பயனளிக்கப் போவதில்லை என்பதனையும் தமிழர் தரப்பு படிப்பினை ரீதியாக கண்டுகொண்டுவிட்டது. கட்டுரையில் மேற் சொன்ன உதாரணங்கள் இதனையே எடுத்துக் காட்டுகின்றன.

முதலாம் குடியரசு அரசியலமைப்பு-1972
 

அடுத்து 1972 ஆம் ஆண்டில் கொண்டுவரப்பட்ட முதலாவது குடியரசு யாப்பின்  நோக்கம் பிரித்தானிய காலனித்துவ ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைப்பதாகக் கூறப்பட்டபோதும் அது இலங்கை அரசினை சிங்கள பௌத்த மயப்படுத்துவதனை முழுமைப்படுத்துவதாகவே அமைந்திருந்தது. இந்தவகையில் அரசியலமைப்பில் ஒற்றையாட்சி என்பது உத்தியோகபூர்வமாகவே சேர்க்கப்பட்டுள்ளது. ஓற்றையாட்சி என்று குறிப்பிட்டதன் மூலம் அரசின் ஆட்சி அதிகாரமானது ஒருமையத்தில் குவிக்கப்பட்டிருக்கின்றது. இவ்வாறாக ஒருமையத்தினுள் ஆட்சி அதிகாரம் அமைகையில் பல்லினங்கள் வாழ்கின்ற தேர்தல் முறை ஜனநாயகத்தில் 75 சதவீதமாக வாழ்கின்ற சிங்களவர்கள் தான் முடிவுகளை எடுக்கப்போகின்றார்கள். அதுவே எமது விடயத்தில் நடந்தது. இலங்கை அரசு ஒரு சிங்கள அரசாகச் செயற்படுவதற்கான அத்திபாரமே மீண்டும் மீண்டும் சகலவகையிலும்  போடப்பட்டது என்பதனை நாம் கண்டுகொள்ள முடிகின்றது.

இதேவேளை சோல்பரி அரசியலமைப்பில் காணப்பட்ட 29(2) ஆவது சரத்து  முதலாவது குடியரசு யாப்பில் இருந்து அகற்றப்பட்ட போதும் அதற்கு ஈடான எந்தவொரு சரத்தும் மீண்டும் அவ்யாப்பில்  உள்ளடக்கப்பட இல்லை என்பது கூட அவதானிக்கத்தக்கது. மேலதிகமாக பௌத்த சமயத்திற்கு நடைமுறையிலும் யாப்பு ரீதியிலும் முன்னுரிமை அளிக்கப்பட்டது. சிங்களம் அரச கரும மொழி என்பதை அரசியலமைப்பில் கொண்டுவந்தனர். இது சாதாரண சட்டமாக இருந்த ஓர் விடயத்திற்கு நாட்டின் மிக உயர்ந்த சட்டமான அரசியலமைப்புச் சட்டத்தில் இடம் வழங்கப்பட்ட நிலைமையாகும். இவ்வாறாக 1972 ஆம் ஆண்டு யாப்பு வழியாக இலங்கைத் தீவு முழுவதும் சிங்களத் தேசமாக மாற்றப்பட்டு அரசானது சிங்கள பௌத்த அரசாக மாற்றியமைக்கப்பட்டது. அடிப்படையில் சிங்கள பௌத்த மக்கள் மட்டுமே சிறிலங்கா அரசை ஆள்பவர்கள் என்ற நிலைமையும் 1972 ஆம் ஆண்டு யாப்பின் ஊடாக உருவாக்கப்பட்டது.

இரண்டாம் குடியரசு அரசியலமைப்பு-1978
 

சிங்கள தேசத்தால் கொண்டு வரப்பட்ட 1978 ஆம் ஆண்டு யாப்பின் வாயிலாகவும் தமிழ்தரப்புக்களின் பிரச்சினைகளுக்கான தீர்வுக்கு சந்தர்ப்பமளிக்கப்படவில்லை. அன்றைய காலத்திற்கு ஏற்ற பொருளாதார அபிவிருத்தியை ஏற்படுத்தக்கூடிய பலமான தலைமைத்துவத்திற்காக நிறைவேற்று அதிகாரத்தினை ஏற்படுத்துகின்றோம் எனக்கூறினர். இக்கூற்றை சாட்டாகக் கூறிக்கொண்டு முதலாவது குடியரசு யாப்பினைப் போன்றே இவ் இரண்டாம் குடியரசு யாப்பிலும் சிங்கள பௌத்த அரசிற்கான மாற்றங்களையே நிரந்தரமாகப் புகுத்தினர்.

இவ்வாறாக நடைபெற்ற விடயங்களை ஒற்றை ஆட்சியினைப் பிரகடனப்படுத்துவதற்கானது என்று மட்டும் நாம் பார்க்க முடியாது. எல்லாவற்றுக்கும் மேலாக பௌத்த சமயத்திற்கு முன்னுரிமை வழங்குவதையும் நோக்காக் கொண்டது என்பதையும் புரிந்துகொள்ள வேண்டும். மேலும் யாப்பில் இவ்விடயங்கள் தொடர்பான  மாற்றங்கள் கூட மூன்றிலிரண்டு பெரும்பான்மை ஊடாகவும் சர்வஜன வாக்கெடுப்பின் ஊடாகவுமே கொண்டுவரப்படமுடியும் எனக்கூறப்பட்டு பௌத்த சிங்களக் கட்டமைப்பு நிரந்தரமாக்கப்பட்டதும் பாதுகாக்கப்பட்டதும் கண்டுகொள்ளப்படவேண்டிய உண்மைகளாகும். மேலும் அரசியல் யாப்பின் ஆறாவது திருத்தத்தின் வாயிலாக இந்த நிலைமைகளை எதிர்த்து மாற்றுத்திட்டங்களை முன்வைக்கத்தக்க சூழலும் இல்லாமல் செய்யப்பட்டது.

இவ்வாறாக பிரித்தானியர் ஆட்சிக்குப் பின்பான கடந்த அறுபது வருடங்களுக்கு மேலாக  நடந்தேறிய விடயங்கள்; சிங்கள ஆட்சியாளர்கள் இலங்கையில் முழுமையான சிங்கள பௌத்த நாடாக மாற்றுவதற்கான வேலைத்திட்டங்களையே தீவிரப்படுத்தி முன்னெடுத்துவருகின்றனர் என்பதையே காட்டுகின்றது. இலங்கை அரசினை மாற்றியமைப்பதற்கான வேலைத்திட்டங்கள் நடைபெறுகின்றதாயின் அது மேலும் மேலும் சிங்கள பௌத்த நாடாக இலங்கையை மாற்றியமைப்பதற்கான வேலைத்திட்டமாகவேயுள்ளது. இதனை நாம் கடந்த கால அனுபவங்கள் ஊடு தெளிவாகக் கண்டுள்ளோம்.

இப்படியானதோர் அபாயமிக்க சூழலில் அதிகாரங்களைப் பகிர்ந்து கொள்ளத்தக்க வகையில் இலங்கை அரசு தன்னைத்தானே மாற்றியமைக்கும் என யாரும் நினைக்கின்றார்கள் ஆயின் அது நடைமுறையில் இலங்கையில் இருக்கின்ற பௌத்த சிங்கள மயமாக்கல் என்ற போக்கிற்கு நேர் எதிரான பாதையாகவே அமைகின்றது.  இந்த இடத்தில் எழுப்பப்படும் கேள்வி யாதெனில் இலங்கை அரசு பயணிக்கின்ற பாதைக்கு நேர் எதிரான விடயமாகவுள்ள அதிகாரப் பகிர்வுக்கு சாத்தியம் உள்ளதா என்பதாகும். இந்தக் கேள்விக்கான பதிலை சிங்கள தேசம்  கடந்த அண்மைக்காலமாக நடந்துகொண்ட நடத்தையினை வைத்து நாம் ஆராய்ந்து பார்க்கத்தக்கதாகவுள்ளது.

அதாவது புலிகள் இருக்கும் வரையில் அவர்களுடன் சமரசத்திற்கு வந்தால் சிங்கள பௌத்த தேசம் என்ற இலக்கினை இழக்க வேண்டும் என்ற ஒரு காரணத்திற்காக சமரசம் என்பதைத் தவிர்த்து போரை  அரசு நடத்தியது. இவ்வாறாக சிங்கள பௌத்தம் என்ற பெயரை நிலை நாட்டுவதற்கான போரை அரசு நடத்தி இனப்படுகொலையாளர்கள் போர்க்குற்றவாளிகள் என்பதற்கு முகங்கொடுத்துள்ளது. உலக அரங்கில் இனப்படுகொலை மற்றும் போர்க்குற்றங்கள் மிக வெறுக்கத்தக்க கீழ் நிலைச் செயலாகப் பார்க்கப்படுகின்ற போது சிங்கள பௌத்தம் என்பதை நிலைநிறுத்துவதற்காக எதற்கும் முகங்கொடுக்கத்தக்க நிலையில் தான் இலங்கை அரசு உள்ளது. இதிலிருந்து எவ்வளவு தூரம் சிங்கள பௌத்தம் என்கின்ற கொள்கையில் ஆட்சியாளர் உறுதியாக உள்ளனர் என்பது எமக்குத் தெளிவாகிறது.

இப்படியான அவதானிப்புக்களிலும் அனுபவங்களிலும் தமிழர் தரப்பு நின்றுகொண்டு யதார்த்தத்தில் இலங்கை அரசானது தானாகவே தன்னை மாற்றியமைத்து ஓர் அதிகாரப் பகிர்வினை வழங்கும் என்று கருதினால் பகல் கனவாகவே அமையும். இவ்வாறாக நினைப்பவர்கள் அதனை தங்களைத் தாங்களே ஏமாற்றிக் கொள்கின்ற ஓர் விடயமாக மட்டும் பார்க்கமுடியாது. 

மாறாக அது தமிழினத்தையே மிக மோசமாக ஏமாற்றுகின்ற ஒரு செயலாகவே பார்க்கவேண்டியுள்ளது. இவை எல்லாவற்றையும் சீர்தூக்கிப் பார்த்து  தமிழ் மக்களுக்கான தீர்வு என்ற விடயத்தினை அணுகுகின்ற போது அதிகாரப்பகிர்வு என்ற அரசியல் பாதை நடைமுறைச் சாத்தியமற்றதாகும். இவ்விடத்தில் அதிகாரப்பகிர்வு பற்றி அதிக கரிசனை செலுத்தி பாடுபட்ட எஸ்.ஜே.வி. செல்வநாயகம் அவர்கள் கூட 1972 ஆம் ஆண்டிலேயே அதிகாரப் பகிர்வு வாயிலாக இனநெருக்கடிக்குத் தீர்வு பெறுவது சாத்தியமற்றது என்ற முடிவுக்கு வந்து செயலாற்றியமை நோக்கத்தக்கது. 

- கஜேந்திரகுமார் பொன்னம்பலம்.

Sunday, November 13, 2011

கூட்டமைப்பின் விஜயத்தினையடுத்து மேற்குலகின் அடுத்த நகர்வு என்ன?

சிங்களக் கடும்போக்குத் தேசியவாதிகள் மத்தியில் உருவாகியிருந்த கடுமையான எதிர்ப்புக்கு மத்தியில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகள் தமது மூன்று நாடுகளுக்கான விஜயத்தை முடித்துக்கொண்டு கொழும்பு திரும்பியிருக்கின்றார்கள். 
இந்த விஜயத்தின் பெறுபேறு என்ன என்பதை அறிவதில் தமிழர்கள் மட்டுமன்றி சிங்களவர்களும் ஆர்வமாகத்தான் உள்ளார்கள். மேற்கு நாடுகளுக்கான தமது விஜயம் தொடர்பில் பத்திரிகையாளர் மாநாடு ஒன்றை நடத்தி விபரங்களை வெளியிடப்போவதாக கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் அறிவித்திருக்கின்றார்.

இருந்தபோதிலும், கூட்டமைப்பின் தலைவர்களிடமிருந்து கிடைத்துள்ள தகவல்களின்படி, ஈழத் தமிழர்களுடைய பிரச்சினைகளில் மேற்குநாடுகள் முன்னரைவிட இப்போது அதிகளவுக்கு தீவிரமான அக்கறையைக் கொண்டுள்ளன என்பதைப் புரிந்துகொள்ள முடிகின்றது. இது தொடர்பான தீர்மானங்களை எடுப்பதில் கூட்டமைப்பினருடனான பேச்சுக்களின் போது பெறப்பட்ட தகவல்கள் செல்வாக்கைச் செலுத்துவதாக அமையலாம். சர்வதேசத்தின் இந்த அதிகரித்த அக்கறை இலங்கை அரசுக்கு அழுத்தங்களை அதிகரிப்பதாக அமையலாம். இது தொடர்பான அரசாங்கத்தின் பிரதிபலிப்பு எவ்வாறானதாக இருக்கும் என்பதை கூட்டமைப்புடனான அரசின் அடுத்த சுற்றுப் பேச்சுக்களின் போது அறிந்துகொள்ளக்கூடியதாக இருக்கும்.

கூட்டமைப்பினர் அமெரிக்காவுக்கான விஜயத்தை மேற்கொள்கின்றார்கள் என்ற உடனடியாகவே சிங்களத் தேசியவாதிகளிடமிருந்து எதிர்ப்புக்கள் கிளம்பும் என்பது எதிர்பார்க்கப்பட்டதுதான். இனநெருக்கடிக்கு நியாயமான ஒரு தீர்வை சிங்களத் தரப்பினர் ஒருபோதுமே விரும்பியதில்லை. பிரச்சினை அமெரிக்கா மற்றம் ஐ.நா. வரை சென்றால், நியாயமான தீர்வு ஒன்றுக்கான அழுத்தங்கள் அதிகரிக்கும் என்பதுதான் இந்த அமைப்புக்களின் அச்சத்துக்கக் காரணமாக இருந்திருக்க வேண்டும். கூட்டமைப்பின் பயணம் தொடர்பில் அரச தரப்பும் திருப்தியாக இருக்கவில்லை என்பதும் வெளிப்பட்டது.

கூட்டமைப்பின் இந்த விஜயங்கள் பிரச்சினையை சர்வதேச மட்டத்துக்குக் கொண்டுசெல்ல உதவியுள்ளது என்பதை இந்தப் பகுதியில் முன்னரே பார்த்திருந்தோம். இந்தியாவுக்கு அப்பால் மேற்கு நாடுகளும் இந்தப் பிரச்சினையில் சம்பந்தப்பட வேண்டிய தேவை ஒன்று உருவாகியிருப்பதை இந்த விஜயங்கள் உணர்த்தியிருக்கின்றன. இன்னொரு வகையில் பார்த்தால் இந்தப் பிரச்சினையில் இந்தியாவின் தலையீடு எந்தவிதமான பலனையும் தராத நிலையில் மேற்குநாடுகள் இதில் சம்பந்தப்பட வேண்டிய தேவை ஒன்று உருவாக்கப்பட்டிருக்கின்றது.

இந்த விஜயத்தின்போது கூட்டமைப்பினர் பிரதானமாக நான்கு தரப்பினரைச் சந்தித்திருக்கின்றார்கள்.

1. அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் உயர் அதிகாரிகள்.

2. கனடிய வெளிவிவகார அமைச்சின் உயர் அதிகாரிகள் மற்றும் எம்.பி.க்கள்.

3. ஐ.நா. சபையின் உயர் அதிகாரிகள். குறிப்பாக செயலாளர் நாயகத்துக்கு அடுத்த நிலையில் உள்ளவர்கள்.

4. பிரித்தானியாவின் வெளியுறவுத்துறை அதிகாரிகள் மற்றும் எதிர்க்கட்சி முக்கியஸ்த்தர்கள்.

இதனைவிட மனித உரிமை அமைப்புக்கள் மற்றும் புலம்பெயர்ந்த தமிழர்களின் அமைப்புக்கள்.

வோஷிங்டனில் இராஜாங்கத் திணைக்களத்தில் நடைபெற்ற சந்திப்புக்களின் போது தெற்கு மற்றும் தெற்காசிய விவகாரங்களுக்கான அமெரிக்க இராஜாங்க அமைச்சர் றொபோர்ட் ஓ பிளேக், அமெரிக்க இராஜாங்கத் திணைக்கள அரசியல் விவகாரங்களுக்கான செயலாளர் வென்டி ஷேர்மன் (இவர் அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் மூன்றாவது உயர் அதிகாரியாவார்), போர்க் குற்ற விவகாரங்களுக்குப் பொறுப்பாகவுள்ள ஸ்ரெபன் ரப் ஆகியோரை தாம் சந்தித்துப் பேச்சுக்களை நடத்தியதாக  கூட்டமைப்பின் பிரதிநிதி எம்.ஏ.சுமந்திரன் தினக்குரலுக்குத் தெரிவித்தார்.

தமது விஜயத்துக்கான ஏற்பாடுகளை அமெரிக்க இராஜாங்கத் திணைக்களமே மேற்கொண்டதாகத் தெரிவித்த சுமந்திரன், அமெரிக்க வெளிவிவகார அமைச்சர் ஹிலாரி கிளின்டனுடனான சந்திப்பு எதுவும் நிகழ்ச்சி நிரலில் உள்ளடக்கப்பட்டிருக்கவில்லை எனவும் குறிப்பிட்டார். இலங்கையின் இனநெருக்கடி விவகாரத்தில் தற்போதைய நிலைமைகள், வடக்கு கிழக்கில் காணப்படும் மனிதாபிமானப் பிரச்சினைகள், கற்றறிந்த பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் செயற்பாடுகள் என்பன தொடர்பாக தாம் இராஜாங்கத் திணைக்கள அதிகாரிகளுடன் உரையாடியதாகவும் அவர் தெரிவித்தார்.

அமெரிக்காவைப் பொறுத்தவரையில் அதன் வெளிவிவகாரக் கொள்கையை வரையறுப்பதில் இராஜாங்கத் திணைக்களம் முக்கிய பங்கை வகிக்கின்றது. இந்தவகையில், அரசியல் மற்றும் போர்க் குற்ற விவகாரங்களில் தீர்மானம் எடுக்கக்கூடியவர்களுடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் நடத்திய பேச்சுக்கள் முக்கியமானவையாகும். இலங்கை நல்லிணக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாகவும், நல்லிணக்க ஆணைக்குழு உண்மைகளைக் கண்டறியும் வகையிலான விசாரணைகளை முன்னெடுத்துவருவதாகவும் இலங்கை அரசாங்கத்தினால் சர்வதேச ரீதியாக மேற்கொள்ளப்பட்டுவரும் பிரச்சாரங்களின் மறுபக்கத்தை அறிவதில் கூட்டமைப்பின் பிரநிதிகளுடனான இந்தச் சந்திப்பை அமெரிக்க இராஜாங்கத் திணைக்கள அதிகாரிகள் பயன்படுத்திக்கொண்டதாகத் தெரிகின்றது.

ஐ.நா.வில் கூட்டமைப்பினர் நடத்திய பேச்சுவார்த்தைகளும் முக்கியமானவையாகும். செயலாளர் நாயகம் பான் கீ முனைச் சந்திப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்த போதிலும், பிரான்ஸ் நாட்டுக்ககான விஜயம் ஒன்றை அவர் மேற்கொண்டிருந்தமையால் அந்த சந்திப்பு இடம்பெறவில்லை. நவம்பர் 1 ஆம் திகதி பிற்பகல் 3.30 மணிக்கு இச்சந்திப்பு இடம்பெறும் என ஐ.நா. அதிகாரிகள் முதலில் தெரியப்படுத்தியிருந்தார்கள். இருந்தபோதிலும் செயலாளர் நாயகத்துக்கு மூன்றாவது இடத்தில் உள்ள லியன் பாஸ்க்கோ உட்பட ஐ.நா.வின் உயர் மட்ட அதிகாரிகளுடன் கூட்டமைப்பினர் நடத்திய சந்திப்பு முக்கியமானதாகும். 

கனடாவிலும் வெளிளிவகார அமைச்சின் உயர் அதிகாரிகள் மற்றும் எம்.பி.க்களுடன் இலங்கை நிலைமை தொடர்பில் விரிவான பேச்சுக்களை கூட்டமைப்பினர் நடத்தியிருந்தார்கள். இதனைவிட கனடாவில் புலம்பெயர்ந்து வாழும் தமிழர்கள் மத்தியிலும் கூட்டமைப்பின் பிரதிநிதிகள் உரையாற்றினார்கள். கூட்டமைப்பின் பிரதிநிதிகளுக்கு கனடாவிலுள்ள தமிழர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு காணப்பட்டமையையும் அவதானிக்க முடிந்தது.

இதனைத் தொடர்ந்து லண்டனை வந்தடைந்த கூட்டமைப்பினர் பிரித்தானிய வெளிவிவகார அமைச்சு பிரதிநிதிகளுடன் நடத்திய பேச்சுக்கள் முக்கியமானவையாகும். இதில் தெற்காசிய விவகாரங்களுக்குப் பொறுப்பான அமைச்சர் அலிஸ்டர் போர்ட், அரசியல் கட்சிகளின் தலைவர்கள், நிழல் வெளிவிவகார அமைச்சர் உட்பட முக்கிய அதிகாரிகளுடன் பேச்சுக்கள் இடம்பெற்றன. லண்டனில் புலம்பெயர்ந்துள்ள தமிழர்கள் மத்தியிலும் கூட்டமைப்பின் தலைவர்கள் உரையாற்றினார்கள்.

இதனைவிட மனித உரிமைகளுக்காகக் குரல் கொடுக்கும் மனித உரிமைகள் காப்பகம் (ஹியூமன் ரைட் வோச்), சர்வதேச மன்னிப்புச் சபை என்பவற்றின் பிரதிநிதிகள் உட்பட அரச சார்பற்ற மனித உரிமைகள் அமைப்புக்கள் பலவற்றுடன் தாம் பேச்சுக்களை நடத்தியதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார். இதில் முக்கியமாக எவ்வாறான விடயங்களைத் தெரிவித்திர்கள் என சுரேஷ் பிரேமச்சந்திரனிடம் கேட்டபோது,

"எமது மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பாக அவர்களுடன் விரிவாக விவாதித்தோம். தமிழர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு ஒரு நீதியான நியாயமான தீர்வ கிடைக்க வேண்டும். அதேபோல போரில் பல்லாயிரக்கணக்கானவர்கள் கொல்லப்பட்டுள்ளார்கள். மக்கள் கொல்லப்படும் சந்தர்ப்பங்களிலெல்லாம் அது தொடர்பாக பாராளுமன்றத்திலும் நாம் தெரிவித்திருந்தோம். அதனால் இவை தொடர்பாக நாம் தெரிவிக்கும் தகவல்கள் புதிதல்ல. அந்த மக்களுக்கு நீதி கிடைக்க வேண்டும். ஆயிரக்கணக்கான மக்கள் குறிப்பாக பெண்கள் தமது உறவுகளைத் தேடி இப்போதும் அலைந்துகொண்டிருக்கின்றார்கள். இவை தொடர்பாக விசாரணைகள் எதுவும் இடம்பெறவில்லை. இராணுவத்திடம் போய்த் தஞ்சமடைந்த பல இளைஞர்களுக்கு என்ன நடந்தது என்பதே தெரியவில்லை. இதேபோல போரின் இறுதிக்காலத்தில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் போன்ற செயற்பாடுகளால் ஆயிரக்கணக்கான குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. அந்த மக்களுக்கு நீதி கிடைக்க வேண்டும். இந்த அடிப்படையிலேயே விஷயங்கள் பேசப்பட்டன" என பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.

அதாவது பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி கிடைக்க வேண்டுமாயின் உண்மை கண்டறியப்பட வேண்டும். அதற்கு போரின் இறுதிக்காலப் பகுதியில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள், மனிதாபிமானத்துக்கு அப்பாற்றப்பட்ட செயற்பாடுகள் தொடர்பில் விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என்பதன் அடிப்படையிலேயே கூட்டமைப்பின் கருத்துக்கள் அமைந்திருந்ததாகத் தெரிகின்றது.

போர்க் குற்றங்கள் தொடர்பாக இந்த நாடுகளின் நிலைப்பாடு எவ்வாறானதாக உள்ளது? உங்களிடம் அது தொடர்பாக அவர்கள் எதிர்பார்த்தது என்ன? என்று சுமந்திரனிடம் கேட்டபோது, "போர்க் குற்றச்சாட்டு தொடர்பாக எமது நிலைப்பாட்டை அவர்கள் கேட்டார்கள். அதற்கு நாம் உண்மைகள் கண்டறியப்பட வேண்டும். அதற்கு சுயாதீனமான விசாரணை அவசியம் என்பதை வலியுறுத்தினோம்" எனத் தெரிவித்தார்.

நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை எதிர்வரும் 20 ஆம் திகதி வெளிவரவிருக்கும் நிலையில், போர்க் குற்ற விசாரணை தொடர்பான சர்வதேச சமூகத்தின் அழுத்தங்களை எதிர்கொள்வதற்கு இதனை அரசாங்கம் பயன்படுத்திக்கொள்ள முற்பட்டிருக்கும் நிலையில் அது தொடர்பாகக் கருத்து வெளியிட்ட சுமந்திரன், "விடுதலைப் புலிகளுடனான போர் நிறுத்த உடன்படிக்கை முறிவடைந்தமைக்கான காரணத்தை கண்டறிவதுதான் இந்த ஆணைக்குழுவுக்குக் கொடுக்கப்பட்டுள்ள ஆணையாகும். அதனால், போரின் இறுதிக் காலப்பகுதியில் இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பில் இந்த அறிக்கையில் உள்ளடக்கப்படும் என எதிர்பார்க்க முடியாது" எனத் தெரிவித்தார். இது தொடர்பில் நாம் நடத்திய பேச்சுக்களின்போதும் தெளிவுபடுத்தியதாகவும் அவர் குறிப்பிட்டார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மேற்கு நாடுகளில் நடத்தியுள்ள பேச்சுக்கள் உள்நாடு அரசியலிலும், சர்வதேச அணுகுமுறையிலும் மாற்றங்களை ஏற்படுத்துவதாக அமையலாம். குறிப்பாக அமெரிக்கா மற்றும் மேற்கு நாடுகளின் அணுகுமுறை மேலும் இறுக்கமடையலாம். கூட்டமைப்பினருடனான சந்திப்பையடுத்து மாலைதீவில் நடைபெற்ற சார்க் உச்சி மாநாட்டுக்கு பார்வையாளராக வந்த அமெரிக்க குழுவுக்குத் தலைமை தாங்கிய றொபோர்ட் பிளேக், ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுடன் பேச்சுக்களை நடத்தியிருப்பதாக செய்திகள் வெளியாகியிருந்தன. அரசாங்கத்தினால் நியமிக்கப்பட்ட நல்லிணக்க ஆணைக்குழு தனது அறிக்கையை அடுத்த வாரம் வெளியிடவிருக்கும் நிலையில், இந்தச் சந்திப்பு முக்கியமானதாகும்.

இதனைவிட, இந்தியப் பிரதமா மன்மோகன்சிங்குடன் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ நடத்திய பேச்சுக்களும் திருப்திகரமானதாக அமைந்திருக்கவில்லை. தமிழக மீனவர்கள் தாக்கப்படுவது தொடர்பில் அவர் கடுமையான நிலைப்பாட்டை வெளிப்படுத்தியதாகத் தெரிகின்றது. சம்பூர் அனல்மின் நிலையம் தொடர்பான உடன்படிக்கையை இலங்கை இறுதி நேரத்தில் பின்போட்டமையும் இந்தியாவுக்குச் சீற்றத்தை ஏற்படுத்தியிருப்பதாகத் தெரிகின்றது. இதனைவிட இலங்கைக்கு விஜயம் செய்யுமாறு ஜனாதிபதி விடுத்த அழைப்பையும் மன்மோன் சிங் நிராகரித்திருப்பதாக செய்திகள் வெளியாகியிருக்கின்றன. மீனவர்கள் மீதான தாக்குதல்கள் நிறுத்தப்பட்டு, இடம்பெயர்ந்த மக்கள் மீளக் குடியமர்த்தப்படும் வரையில் தான் இலங்கை வரப்போவதில்லை என அவர் தெரிவித்ததாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.

சர்வதேச ரீதியாக அதிகரித்துவரும் அழுத்தங்களின் பிரதிபலிப்பாகவே இதனை நோக்க முடியும்.

சர்வதேச விசாரணை ஒன்று அவசியம் என்பதை அமெரிக்கா மற்றும் ஐ.நா. உணர்வதாகத் தெரிகின்றது. இருந்தபோதிலும் இதற்கான பொறிமுறைகளை எவ்வாறு உருவாக்குவது என்பதில்தான் தெளிவற்ற நிலை காணப்படுவதாக இராஜதந்திர வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. எதிர்வரும் 15 ஆம் திகதி வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நல்லிணக்க ஆணைக் குழுவின் அறிக்கை 20 ஆம் திகதி வெளியிடப்படும் என இப்போது அறிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த வாரம் வெளிவரும் இந்த அறிக்கையின் உள்ளடக்கமும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் அரசாங்கம் நடத்தவிருக்கும் அடுத்த கட்டப் பேச்சுக்களும் சர்வதேச சமூகத்தின் அடுத்த கட்ட நகர்வுகளைத் தீர்மானிப்பதாக அமையலாம்!


- சபரி. 
ஞாயிறு தினக்குரல் (13/11/11)