Monday, April 8, 2013

மாத்தளைப் புதைகுழி மர்மம் என்ன? பலியானோர் ஜே.வி.பி.யினரா?

புதைகுழிகளின் சகாப்தம் முடிவுக்கு வந்துவிட்டது என எண்ணியிருக்கும் நிலையில் மாத்தளைப் புதைகுழி விவகாரம் இப்போது விஸ்வரூபம் எடுத்துள்ளது. சடலங்களைப் புதைகுழிகளுக்குள் போட்டு மூடி கொலைகளை மறைத்தமையைப் போல, புதைகுழி விவகாரத்தை அரசாங்கத்தினால் மூடி மறைத்துவிட முடியவில்லை. கடந்த மாதத்தில் கண்டுபிடிக்கப்பட்ட மாத்தளைப் புதைகுழிகள் ஜே.வி.பி.யின் இரண்டாவது கிளர்ச்சி உச்சகட்டத்திலிருந்த காலகட்டத்தைச் சேர்ந்தவையாகும். தற்போதைய ஆட்சியாளர்கள் அப்போது பதவியிலிருக்கவில்லை என்கின்ற போதிலும், சில அதிகாரிகள் இந்தப் பிரச்சினையில் சிக்கிக்கொள்ளலாம் என்பதால், அரசாங்கம் நிதானமாக காய்களை நகர்த்த வேண்டிய நிர்ப்பந்தத்தில் உள்ளது.

இது தொடர்பில் முழுமையான விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என ஜே.வி.பி. கோரிக்கை விடுத்துள்ளது. குறிப்பிட்ட காலப்பகுதியில் காணாமல்போன தமது உறுப்பினர்களின் விபரங்களைச் சேகரிக்கும் பணியில் ஜே.வி.பி. இறங்கியிருக்கின்றது. கொல்லப்பட்டு அந்தப் புதைகுழியில் போடப்பட்டவர்கள் ஜே.வி.பி.யினராக இருக்கலாம் என்ற சந்தேகம் நியாயமானதுதான். அந்த வகையில்தான் இது தொடர்பில் விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கையை ஜே.வி.பி. முன்வைத்திருக்கின்றது. ஆனால், அரசாங்கத்தைப் பொறுத்தவரையில் அதற்கு இது ஒருவித சங்கடமான நிலையை ஏற்படுத்தியிருக்கின்றது.

மாத்தளை வைத்தியசாலையின் அருகே புதிய கட்டம் ஒன்றுக்காக அத்திபாரத்தை வெட்டியபோதுதான் ஒன்றொன்றாக எலும்புக்கூடுகள் வெளிப்படத் தொடங்கின. ஒன்று - இரண்டு என 160 பேருடைய எலும்புக்குடுகள் வெளிப்பட்டபோது நாடே அதிர்ச்சியடைந்தது. பிரத்தானிய ஆட்சிக்காலத்தின்போது பரவிய தொற்று நோய் ஒன்றால் பலியானவர்களின் சடலங்களாக இவை இருக்கலாம் என்றே முதலில் கருதப்பட்டது. ஆனால், எலும்புகளையும் மனித எச்சங்களையும் பரிசோதனைக்குட்படுத்திய சட்டமருத்துவ அதிகாரிகள் சமர்ப்பித்த அறிக்கை அதிர்ச்சியின் உச்சத்துக்கே அனைவரையும் கொண்டு சென்றது.


மீட்கப்பட்ட மனித எச்சங்கள் 1989-90 ஆம் ஆண்டு காலப்பகுதியைச் சேர்ந்தவை என சட்ட மருத்துவ அதிகாரிகள் தெரிவித்தனர். இதனைவிட மற்றொரு கருத்தும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது. கொடூரமான சித்திரவதையின் பின்னரே இவர்கள் கொல்லப்பட்டுள்ளார்கள் இந்த அறிக்கையில் காணப்படும் இரண்டாவது அம்சம்.

இரண்டு விடயங்களை இந்த அறிக்கை வெளிப்படுத்தியிருக்கின்றது. ஜே.வி.பி.யின் இரண்டாவது கிளர்ச்சி உச்சத்திலிருந்த காலப்பகுதியில் கொல்லப்பட்டவர்களே இங்கு புதைக்கப்பட்டுள்ளார்கள் என்பது முதலாவது. அதற்கு முன்னர் தடுத்துவைக்கப்பட்டு கடுமையான சித்திரவதைகளுக்கு இவர்கள் உளளாக்கப்பட்டுள்ளார்கள் என்பது இரைண்டாவது.

இதன்அடிப்படையில்தான் ஜே.வி.பி.யின் இரண்டாவது கிளர்ச்சி இடம்பெற்ற காலப்பகுதியில் காணாமற்போனவர்களின் உறவினர்கள் நேரில் வந்து மனித உச்சங்களை அடையாளம்காட்டலாம் என சட்ட மருத்துவ அதிகாரி கடந்த ஞாயிற்றுக்கிழமை கோரிக்கை ஒன்றை விடுத்திருந்தார். இருந்தபோதிலும் கண்டெடுக்கப்பட்ட எலும்புக்கூடுகளையும், மண்டையோடுகளையும் மட்டும் வைத்துக்கொண்டு அடையாளம் காண்பதென்பது சாத்தியமானதல்ல. அதனால்தான் முழு அளவிலான விசாரணை ஒன்றின் அவசியத்தை வலியுறுத்தியிருக்கும் ஜே.வி.பி., இது தொடர்பான தகவல்களைச் சேகரிக்கும் பணிகளையும் முடுக்கிவிட்டுள்ளது.

கொடூரமான உள்நாட்டுப்போர்கள் மற்றும் கிளர்சிகள் முடிவுக்கு வரும்போது, அதில் இடம்பெற்றிருக்கக்கூடிய மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க் குற்றங்களை மூடிமறைப்பதற்கே எந்த அரசாங்கமும் விரும்பும். போருக்குப் பின்னரான நல்லிணக்க முயற்சிகளை இந்த போர்க் குற்ற விசாரணைகள் பாதிப்பதாக அமையும் என்பதுதான் தமது நிலைப்பாட்டை நியாயப்படுத்துவதற்காக அரசாங்கங்கள் கூறும் காரணமாக உள்ளது. ஆனால், இவ்வாறான குற்றங்களில் சம்பந்தப்படும் இராணுவத் தரப்பைச் சீற்றமடையச் செய்யக்கூடாது என்பதுதான் இதற்கான உண்மையான காரணம்.

மாத்தளை புதைகுழிகளைப் பொறுத்தவரையில் அது முன்னைய அரசாங்கத்தின் காலத்தைச் சேர்ந்தது என்பதற்காக விசாரணை ஒன்றுக்கு உத்தரவிடும் நிலையில் அரசாங்கம் இல்லை. ஆனால் இது அரசாங்கத்துக்குப் பாரிய நெருக்கடியைக் கொடுப்பதாக அமையலாம் எனக் கருதுவதற்கு காரணம் உள்ளது: அதாவது இதில் பாதிக்கப்பட்ட தரப்பு ஜே.வி.பி.! தமது அரசியலை முன்னகர்த்துவதற்கு இது அவர்களுக்குக் கிடைத்துள்ள ஒரு நல்ல வாய்ப்பு. கட்சி பலவீனப்பட்டுப் போயிருக்கும் நிலையில், அரசாங்கத்தை நெருக்கடிக்குள் தள்ளும் வகையில் இந்த விவகாரத்தை ஜே.வி.பி. முடிந்தளவுக்குப் பயன்படுத்தும் என நிச்சயமாக எதிர்பார்க்கலாம்.

அரசாங்கம் இது தொடர்பில் பதற்றமடைந்திருப்பதற்குப் பல காரணங்கள் உள்ளன. புதைகுழி கண்டுபிடிக்கப்பட்ட இடத்துக்கு அருகே 1989-90 காலப்பகுதியில் இராணுவத்தின் சித்திரவதைக்கூடம் ஒன்று இருந்ததாகக் கூறப்படுகின்றது. அப்போது அங்கு தடுத்துவைக்கப்பட்டிருந்த ஜே.வி.பி. உறுப்பினர்கள் பலரும் இதனை உறுதிப்படுத்தியிருக்கின்றர்கள். மாத்தளை விஜய வித்தியாலயத்தில் இயங்கிவந்த இந்த சித்திரவதைக் கூடத்துக்குப் பொறுப்பாக இலங்கை இராணுவத்தின் கஜபா ரெஜிமென்டே இருந்துள்ளதாகவும் சொல்லப்படுகின்றது. கஜபா ரெஜிமென்டின் மாத்தளை மாவட்டத்துக்கான கட்டளைத் தளபதியாக அப்போது கடமையாற்றியவர் கோதாபாய ராஜபக்‌ஷ எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

ஜே.வி.பி. இதனைப் பெரிதுபடுத்தும் என எதிர்பார்க்கப்படுவதற்கான காரணத்தை இப்போது இலகுவாகப்புரிந்துகொள்ள முடியும். ஜே.வி.பி.யின் முதலாவது தோல்வியடைந்த கிளர்ச்சி 1971 இல் இடம்பெற்றது. இதன்போதும் சுமார் 70,000 வரையிலான சிங்கள இளைஞர்கள் கொல்லப்பட்டனர். இரண்டாவது கிளர்ச்சி 1989-90 காலப்பகுதியில் இடம்பெற்ற போதும் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் கொடூரமாகச் சித்திரவதை செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்டார்கள். மேலும் ஆயிரக்கணக்கானவர்கள் காணாமல்போயிருந்தார்கள். இவ்வாறு காணாமல்போனவர்களின் புதைகுழகளில் ஒன்றாகவே மாத்தளைப் புதைகுழி அமைந்திருக்கலாம் எனக் கருதப்படுகின்றது.

இந்தப் புதைகுழி தொடர்பில் முழுஅளவிலான விசாரணை ஒன்றின் அவசியத்தை வலியுறுத்தியிருக்கும் ஜே.வி.பி., தன்னுடைய பங்கிற்கு இது பற்றிய விசாரணைகளை முன்னெடுக்கவிருக்கின்றது. அரச தரப்பின் பிரதிபலிப்புக்கள் இதுவரையில் வெளிப்படவில்லை. எதிர்த்தரப்பில் இருக்கும் போது இது போன்ற விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் எனக் கோருவது இலகுவானதாக இருக்கலாம். ஆனால், அதிகாரத்துக்கு வந்தபின்னர் அது சாத்தியமற்றதாகிவிடலாம்.

1993 ஆம் ஆண்டில் ஐ.தே.க. அதிகாரத்திலிருந்த போது சந்திரிகா குமாரதுங்க திடீரென புகழின் உச்சத்துக்குச் செல்வதற்கும் புதைகுழி ஒன்றுதான் காரணமாக இருந்தது. தனக்குக் கிடைத்த தகவல் ஒன்றையடுத்து ஊடகவியலாளர்கள், சட்டத்தரணிகள் மற்றும் கட்சி ஆதரவாளர்களையும் அழைத்துக்கொண்டு தென்பகுதியிலுள்ள சூரியகந்தைப் பகுதிக்குச் சென்ற சந்திரிகா, அங்கு பாரிய புதைகுழி ஒன்றைத் தோண்டுவதற்கு உத்தரவிட்டார். அப்போது நீதிபதி ஒருவரும் அங்கு அழைக்கப்பட்டிருந்தார். ஜே.வி.பி. கிளர்ச்சியின்போது கொல்லப்பட்ட பலருடைய உடற்பாகங்கள் அதற்குள் இருந்து மீட்கப்பட்டன. அங்கிருந்து உணர்ச்சிகரமாக சந்திரிகா ஆரம்பித்த பிரச்சாரமே குறுகிய காலத்துக்குள் அவரை ஜனாதிபதிப் பதவிக்கு உயர்த்தியது.

பதவிக்கு வந்தபின்னர் சந்திரிகாவால் நியமிக்கப்பட்ட ஆணைக்குழு ஒன்று கிளர்ச்சியின் போது 30,000 போர் வரையில் காணாமற்போயிருப்பதாகப் பட்டியல் போட்டது. ஆனால், அதன் தொடர்ச்சியாக எந்தவிதமான நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படவில்லை. அந்தக்கொலைகளுக்குப் பொறுப்பானவர்கள் சுதந்திரமாக நடமாட அனுமதிக்கப்பட்டார்கள். காலத்துக்குக் காலம் இதுபோன்ற பல புதைகுழிகள் கண்டுபிடிக்கப்பட்டபோதிலும், அதில் சம்பந்தப்பட்டவர்கள் தண்டனைக்குள்ளாக்கப்பட்ட நிகழ்வுகள் எதுவும் இடம்பெறவில்லை.

இலங்கையின் வரலாற்றில் 1971, பின்னர் 1983, 89,90 என பாரியளவில் காணாமல்போன சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. இதனைவிட யாழ்ப்பாணத்தை இராணுவம் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்த 1995 ஆம் ஆண்டுப் பகுதியில் செம்மணிப்புதைகுழி மற்றும் அங்காங்கே பல புதைகுழிகள் கண்டுபிடிக்கப்பட்டன. இந்தப் புதைகுழிகள் கண்டுபிடிக்கப்பட்டதற்கு அப்பால் எதுவும் நடைபெறவில்லை. நான்காவது ஈழப் போரின் முடிவில் காணாமல்போனவர்களின் நிலையும் இவ்வாறானதாகத்தான் உள்ளது.

89-90 காலப்பகுதியில் நாட்டை இரத்தக்காடாக்கிய ஜே.வி.பி.யின் கிளர்ச்சி எவ்வாறு அடக்கப்பட்டது என்பது பலருக்கும் தெரியாதிருக்கலாம். ஆயிரக்கணக்கான இளைஞர்கள் கொடூரமாகக் கொல்லப்பட்டே இந்தக் கிளர்ச்சி முடிவுக்குக் கொண்டுவரப்பட்டது.

இதன்போது இடம்பெற்ற மனிதாபிமானத்துக்கு முரணாச சம்பவங்கள் சர்வதேசத்தை அதிர்ச்சியடைய வைத்தது. இது தொடர்பான தகவல்கள், புகைப்படங்களை ஜெனீவாவுக்குக் கொண்டு சென்று பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதிகேட்கப் புறப்பட்டவர்களில் முக்கியமானவர் மகிந்த ராஜபக்‌ஷ என்பது குறிப்பிடத்தக்கது. தன்னுடைய கைப்பையில் மறைத்துவைக்கப்பட்ட புதைப்படங்கள் மற்றும் ஆவணங்களுடன் ஜெனீவா புறப்பட்டபோது கொழும்பு விமான நிலையத்தில் அவர் தடுத்து நிறுத்தப்பட்டு, அவரிடமிருந்த ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இவ்வாறு மனித உரிமை மீறல்களுக்கு எதிராகப் போராடியவர்தான் இன்று இந்த நாட்டின் ஜனாதிபதி.

இந்த நிலையில் தான் போராடிய மனித உரிமைகள் விவகாரத்தில் முக்கியமான நகர்வு ஒன்றை முன்னெடுப்பதற்கான அதிகாரம் இன்று ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ஷவின் கைகளில் உள்ளது. அவர் என்ன செய்யப்போகின்றார்?

- சபரி

No comments:

Post a Comment