Friday, April 19, 2013

இலங்கையில் இந்தியத் தலையீடு 02: செல்வாக்கு செலுத்திய காரணிகள்

லங்கையின் இனப் பிரச்சினையில் இந்தியா எவ்வாறு சம்பந்தப்பட்டது, இதனை எவ்வாறு பயன்படுத்தியது என்பவற்றைப் பார்ப்பதற்கு முன்னதாக தென்னாசிப் பிராந்தியத்தில் இந்தியா பெற்றுள்ள முக்கியத்துவம் என்ன என்பதையும், இந்தியா தன்னுடைய வெளிவிவகாரக் கொள்கையை எவ்வாறு வகுததுக்கொண்டது  என்பதையும் பார்ப்பது அவசியம். இலங்கை விவகாரத்தை இந்தியா ஏன் தன்னுடைய கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முற்பட்டது என்பதைப் பார்ப்பதற்கு இந்தப் பின்னணியைத் தெரிந்துவைத்திருப்பது அவசியமாகும்.

தெற்காசியப் பிராந்தியத்தைப் பொறுத்தவரையில் இந்தியா புவியியல் ரீதியாக மத்திய இடத்தைப் பெற்றிருக்கின்றது. தென்னாசியாவிலுள்ள ஏனைய நாடுகளுடனான உறவுகளைப் பொறுத்தவரையில் இந்தப் புவியியல் அமைப்பு தனித்துவமான ஒன்றாக உள்ளது. தெற்காசியாவிலுள்ள நாடுகள் அனைத்துமே இந்தியாவுக்கு அடுத்ததாக அதாவது இந்தியாவுடன் ஒட்டிக்கொண்டதாகவே அமைந்திருக்கின்றன. அதனால் எந்தவொரு நாட்டிலிருந்து மற்றொரு தெற்காசிய நாட்டுக்குச் செல்வதாயின் இந்திய வான் பரப்பைப் பயன்படுத்தித்தான் செல்ல வேண்டும்.

மாலைதீவு மட்டும் இதற்கு விதிவிலக்கு. ஆனால், மாலைதீவில் 1988 இல் இடம்பெற்ற சதிப் புரட்சி முயற்சியை முறியடிப்பதற்குத் தன்னுடைய படைகளை அனுப்பியதன் மூலம் மாலைதீவு கூட தன்னுடைய ஆளுகைக்கு உட்பட்ட ஒன்றாகவே இருக்கின்றது என்பதை இந்தியா உணர்த்தியது. புளொட் அமைப்பின் ஆதரவுடன் மாலைதீவின் அரச அதிருப்தியாளர்கள் மேற்கொண்ட ஆயுதப் புரட்சியில் கிட்டத்தட்ட மாலைதீவு முழுமையாகக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்ட நிலையில்தான் இந்தியப் படை மாலைதீவுக்கு அனுப்பப்பட்டடு அதனை மீட்டெடுத்தது என்பது கவனிக்கப்படவேண்டிய ஒன்றாகும். (இது பற்றிய தகவல்களை பின்னர் மற்றொரு அத்தியாயத்தில் பார்ப்போம்)

இந்தியாவின் இந்தப் பலம் இந்தியர்களைப் பொறுத்தவரையில் வரவேற்கத்தக்க ஒன்றாக இருந்தாலும் கூட, அதனைச் சுற்றியுள்ள நாடுகளுக்கு அச்சத்தைக் கொடுக்கக்கூடிய ஒன்று. தெற்காசியாவைப் பொறுத்தவரையில் ஏனைய நாடுகள் அனைத்தையும் விட இந்தியா பெரியது. இந்தியாவின் இந்தப் பருமனும், அதன் பலமும், சுற்றியுள்ள நாடுகளில் அதன் செல்வாக்கும், அந்த அயல்நாடுகளின் மனதில் இந்தியா தொடர்பான ஒரு அச்சத்தை ஏற்படுத்துவதாகவே அமைந்திருக்கின்றது.

குறிப்பாகச் சொல்லப்போனால் தமது நாட்டில் பிரச்சினைகளைத் தோற்றுவிக்க இந்தியாவுக்கு உள்நோக்கமும், ஆற்றலும் இருப்பதாக அயல் நாடுகள் கருதுகின்றன. இந்த அச்சத்துக்கு நியாயமான காரணங்களும் உள்ளன. இதில் கவனிக்கப்பட வேண்டிய மற்றொரு விடயமும் உள்ளது. தென்னாசிய வட்டாரத்திலுள்ள நாடுகளைப் பொறுத்தவரையில் இனத்துவக்குழுக்கள் அங்கு பெருமளவுக்கு உள்ளன என்பதுடன், அவற்றிடையே பிரச்சினைகளும் உள்ளன. இந்தப் பிரச்சினைகள் அதிகார வர்க்கத்துடனானதாக இருப்பதால் இதனை இந்தியா பயன்படுத்திக்கொள்ளலாம் என்ற அச்சம் அண்டை நாடுகளுக்கு இருப்பதில் நியாயம் இருக்கத்தான் செய்கின்றது.

சுதந்திரத்துக்குப் பிற்பட்ட இந்தியாவின் வரலாற்றைப் படித்தால் இவ்வாறு அயல் நாடுகளில் குழப்பங்களை ஏற்படுத்தக்கூடிய வகையிலான இந்தியாவின் செயற்பாடுகள் தொடர்பாக பெருமளவு தகவல்கள் உள்ளன. அயல்நாடுகளை இந்தியா சந்தேகத்துடன் நோக்குவதும் இந்தியாவை அயல்நாடுகள் சந்தேகத்துடன் நோக்குவதும் ஒரு தொடர் கதைபோல தொடர்ந்துகொண்டே செல்கின்றது.

சரித்திரத்துக்கு முற்பட்ட காலத்தைப் பார்த்தால் 1935 க்கு முற்பட்ட காலத்தில் பர்மா (மியன்மார்) கூட இந்தியாவின் ஒரு பகுதியாகத்தான் இருந்தது. சுதந்திரத்தின் போது இந்தியாவைப் பிரித்துதான் பாகிஸ்தான் உருவாக்கப்பட்டது. பின்னர் 1971 இல் இந்தப் பாகிஸ்தானிலிருந்து பிரித்துத்தான் பங்களாதேஷ் உருவாக்கப்பட்டது. பங்களாதேஷ் உருவாக்கப்பட்டதில் இந்தியாவின் பங்களிப்பு பிரதானமானது. இந்திய இராணுவத்தின் உதவி இல்லையெனில் பங்களாதேஷ் உருவாக்கப்பட்டிருக்காது.

தெற்காசியப் பிராந்தியத்தில் இந்தியாவின் வகிபாகம் என்ன என்பதையிட்டு ஆராய முற்படும் எவரும் இந்த உண்மைகளைக் கவனத்திற்கொள்ள வேண்டும். இன்று காணப்படுகின்ற நிலைமைகளுக்கு மட்டுமன்றி இனிமேல் நிகழப்போகும் சம்பவங்களுக்கும் இது முன்னோடியாக இருக்கும். அத்துடன் இதில் படித்துக்கொண்ட பாடங்களும் எதிர்காலத்தில் பங்களிப்பைச் செலுத்துவதாக அமையும்.

இதனைவிட இலங்கை தொடர்பிலான இந்தியாவின் கொள்கையை வகுத்துக்கொள்வதில் தமிழகத்தின் உணர்வுகளும் முக்கியமானவையாக இருந்துள்ளன. தமிழ்த் தேசியத்தின் உணர்வூற்றாக தமிழகம் திகழும் அதேவேளையில், இலங்கை விவகாரத்தில் தாக்கத்தை எற்படுத்தக் கூடியதாகவும் அது உள்ளது. அந்தளவுக்கு தமிழகத்தின் உணர்வுகள் இலங்கை தொடர்பான இந்தியாவின் கொள்கை வகுப்பில் செல்லாக்கைச் செலுத்தக்கூடிய ஒன்றாகவே சி.என்.அண்ணாத்துரை முதலமைச்சராக இருந்த காலம் முதல் இருந்துள்ளது.

அதன் பின்வந்த காலங்களில் தமிழகத் தலைவர்களின் ஈழத்தமிழர் மீதான பற்றுறுதியின் அடிப்படையில் இது பல ஏற்றத்தாள்வுகளைச் சந்தித்து வருவதைக் காணலாம். ஆனால், இலங்கை தொடர்பிலான இந்தியாவின் அணுகுமுறையைத் தீர்மானிப்பதில் தமிழகத்தைப் புறக்கணித்துவிட்டு எதுவும் செய்ய முடியாது என்பது மட்டும் உண்மை. இந்த நிலை இன்று வரையில் தொடர்வதைக் காணலாம். இது உள்நாட்டு தேர்தல் – அரசியலுடன் தொடர்புபட்டதாக இருந்தாலும் கூட, இந்திய வெளியுறவுக் கொள்கை வகுப்பில் தமிழகத்தின் முக்கியத்துவம் கவனத்திற்கொள்ளப்பட வேண்டிய ஒன்றாகவே உள்ளது.

இந்தியாவின் வெளியுறவக்கொள்கையை வகுப்பதில் முன்னோடியாகச் செயற்பட்டவர் ஜவஹர்லால் நேரு. நேருவின் வெளியுறவுக்கொள்கை புவியியல் செயற்றின் காரணிகளாலும், இனத்துவத் தேசியத்தினாலும் உந்தப்பெற்ற ஒன்றாகவே இருந்துள்ளது என விமர்சகர்கள் குறிப்பிடுகின்றார்கள். நேரு பாதுபாப்பு அம்சங்களைப் புறக்கணித்துவிடவில்லை. இந்திய இராணுவ பலத்தைக் கட்டியெழுப்பினார். இந்தியா தன்னை ஒரு உலக வல்லரசாகக் காட்டிக்கொள்ள அல்லது கட்டியெழுப்ப விரும்பியது. இந்த விருப்பத்தை முன்னெடுப்பதாயின் அயல்நாடுகளுடனான உறவுகளைச் சிறப்பாகப் பேணிக்கொள்ள வேண்டும்.

நேருவின் காலத்தில் உருவாக்கப்பட்ட இந்த இலக்கை அடைவதில் இந்தியாவுக்குச் சில சிக்கல்கள் இருந்துள்ளன. குறிப்பாக தமது அண்டைநாடுகளுடனான உறவுகளைச் சிறப்பாகப் பேண முடியாத நிலை இந்தியாவுக்கு அதன் சுதந்திரத்தின் பின்னர் காணப்பட்டது. இதனால் இந்திரா காந்தியின் காலத்தில் இந்தியா தெற்காசியாவில் ஒரு பொலிஸ்காரனாகச் செயற்பட முற்படுகின்றது எனக் கூறத்தக்க வகையில் அதன் செயற்பாடுகளில் மாற்றம் ஏற்பட்டது. அதாவது தன்னுடைய அயல்நாடுகளில் காணப்படும் பிரச்சினைகள் தொடர்பில் தன்னிடம் முறையிட வேண்டும் என்ற எதிர்பார்ப்பு இந்தியாவுக்கு ஏற்பட்டது.

இது இந்திரா காந்தியால் உருவாக்கப்பட்ட ஒரு கொள்கையாக இருந்தமையால் இது இந்திரா கோட்பாடு என அழைக்கப்பட்டது.

இந்தியாவின் வெளியுறவுக்கொள்கைக்கான அடிச்சட்டம் ஒன்று இருந்தபோதிலும், காலத்துக்கும் தேவைகளுக்கும் ஏற்றவகையில் அதில் மாற்றங்கள் செய்யப்பட்டன. அத்துடன் குறிப்பிட்ட காலத்தில் பிரதமராக இருந்தவர்களின் ஆளுமைகளும் இதனைத் தீர்மானிப்பதில் முக்கிய பங்கை வகிப்பதாக இருந்தது. இருந்த போதிலும் இலங்கை தொடர்பாக கொள்கை வகுப்பைப் பொறுத்தவரையில் இந்தியப் பிரதமரின் ஆளுமை மட்டுமன்றி தமிழக முதலமைச்சராக இருப்பவர்களின் ஆளுமைகளும் ஈழத் தமிழர் பிரச்சினையில் அவர்களுக்குள்ள பற்றுதலும் கூட இந்தியக் கொள்கை வகுப்பில் செல்வாக்கைச் செலுதக்கக்கூடிய காரணிகளாக இருந்துள்ளன.

இந்தக் கருத்துக்களை அடிப்படையாகக் கொண்டு 1983 இல் என்ன நடந்தது என்பதை அடுத்த கட்டுரையில் பார்ப்போம்..


தொடர்புகளுக்கு : webeditor9@gmail.com

No comments:

Post a Comment