Wednesday, April 17, 2013

இலங்கையில் இந்தியத் தலையீடு 01: இந்திய - புலிகள் போரின் ஆரம்பம்!

1987 அக்டோபர் 10 ஆம் திகதி அதிகாலை அமைதியாக இருந்த யாழ்ப்பாணத்தின் அமைதியைக் குலைத்துக்கொண்டு அடுத்தடுத்து பாரிய குண்டு வெடிப்புச் சத்தங்கள் யாழ்ப்பாணத்தையே அதிரவைக்கின்றன. குறுகிய கால அமைதி சீர்குலைந்துவிட்டது என்பதைப் புரிந்துகொண்ட மக்கள் பரபரப்புடன் எழுந்துவிட்டனர்.

என்ன நடைபெற்றது என்பது உடனடியாக யாருக்கும் தெரியவில்லை. ஆனால் ஏதோ நடந்துவிட்டது. இன்னும் நடக்கப்போகின்றது என்பதைப் புரிந்துகொண்ட மக்கள் வீதிக்கு வீதி சந்திக்கு சந்தி நின்று நிலைமைகளை அலசத் தொடங்குகின்றார்கள். இப்போது போல அப்போது தொலைபேசி வசதிகள் இல்லாமையால் தகவல்கள் முதலில் வதந்திகளாகவே வெளிவரும்!

வடக்கு – கிழக்குப் பகுதிகளில் இந்திய (அமைதி காக்கும்) படையினருக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் உருவாகியிருந்த முறுகல் நிலை – போராக வெடித்துவிட்டது என்பதைப் புரிந்துகொள்ள மக்களுக்கு நீண்ட நேரம் செல்லவில்லை. போர் ஆரம்பமாகிவிட்டது என்பதையும், குடாநாடு மீண்டும் போர்க்களமாகப் போகின்றது என்பதையும் அறிவிக்கும் ஒலிகளாகவே அந்த அதிகாலை வேளையில் அதிரவைத்த அந்தக் குண்டுச் சத்தங்கள் அமைந்திருந்தன.

யாழ்ப்பாணத்திலிருந்து வெளியாகும் ஈழமுரசு மற்றும் முரசொலி பத்திரிகைகளின் காரியாலயங்களே அந்த அதிகாலை வேளையில் குண்டு வைத்துத் தகர்க்கப்பட்டன. பத்திரிகைகளை அச்சடிக்கப் பயன்படுத்தப்படும் இயந்திரங்களுக்குள் குண்டுகளைப் பொருத்தி வெடிக்கவைத்து அவற்றைத் தகர்த்த இந்தியப் படையினர், பத்திரிகைகளின் அலுவலகங்களுக்கும் பாரிய சேதங்களை ஏற்படுத்தி விட்டுச் சென்றார்கள்.

இரவுக் கடமையை முடித்துவிட்டு அதிகாலையில் புறப்படத் தயாராக இருந்த ஊழியர்களையும், பத்திரிகையாளர்களையும் துப்பாக்கி முனையில் வைத்துக்கொண்டே இந்தக் கைங்கரியத்தை இந்தியப் படையினர் செய்து முடித்தார்கள்.

யாழ்ப்பாணத்தில் அப்போது நான்கு பத்திரிகைகள் வெளிவந்துகொண்டிருந்தன. மிகவும் பழைமையானது ஈழநாடு. அதனைவிட ஈழமுரசு, முரசொலி மற்றும் உதயன் ஆகிய பத்திரிகைகள் தினசரியாக வெளிவந்துகொண்டிருந்தன. யாழ்ப்பாண மக்களைப் பொறுத்தவரையில் காலையில் எழுந்தவுடன் பத்திரிகைகளைப் படிக்கும் பழக்கத்தைக் கொண்டவர்களாக அவர்கள் இருந்தமையால் இந்த நான்கு பத்திரிகைகளுமே யாழ்ப்பாணத்தில் அதிகளவுக்கு விற்பனையைக் கொண்ட பத்திரிகைகளாக இருந்தன.

இதில் ஈழமுரசும், முரசொலியும்தான் கொஞ்சம் தீவிரமான கருத்துக்களைப் பிரசுரித்துவருவதாகக் கருதியே அவற்றைத் தகர்ப்பதற்கு இந்தியப் படையினர் தீர்மானித்தார்கள். அதிகாலை வேளையில் அதிரடியாக இரண்டு பத்திரிகைக் காரியாலயங்களுக்குள்ளும் புகுந்துகொண்ட இந்தியப் படையினர் அங்கு பணிபுரியும் ஊழியர்களைத் தாக்கி அவர்களைத் துப்பாக்கி முனையில் வைத்துக்கொண்டு இயந்திர சாதனங்களில் வெடிகுண்டுகளைப் பொருத்தி அவற்றைத் தகர்த்தெறிந்தார்கள்.

இதேவேளையில் இந்தியப் படையின் மற்றொரு பிரிவினர் விடுதலைப் புலிகளின் தொலைக்காட்சி நிலையமான நிதர்சனம் அமைந்துள்ள கொக்குவில் பகுதியை நோக்கிச் சென்று கொண்டிருந்தார்கள். புலிகளின் குரல் வானொலியும் இங்கிருந்துதான் செயற்பட்டுவந்தது. நிதர்சனம் அலுவலகத்தையும் அதிகாலையில் சுற்றிவளைத்துத் தாக்குதல் நடத்திய இந்தியப் படையினர், அங்கிருந்த பெருந்தொகையான ஒலிபரப்பு மற்றும் ஒளிபரப்பு இயந்திர சாதனங்களை அழித்ததுடன், சிலவற்றைக் கைப்பற்றிக்கொண்டும் சென்றார்கள்.

வடக்கு கிழக்கில் விடுதலைப் புலிகள் மீது தாக்குதலைத் தொடுப்பதற்குத் தீர்மானித்த இந்தியப் படையினர், அதற்கு முன்னதாக குடாநாட்டில் தமிழர்களின் குரலாக வெளிவந்துகொண்டிருந்த ஊடகங்களை முடக்குவதற்கு முற்பட்டனர். போர் ஒன்றில் முதலில் மரணிப்பது உண்மை என்று கூறுவார்கள். ஆனால், இந்தியப் படையோ போரைத் தொடங்குவதற்கு முன்னரே உண்மைகள் வெளிவருவதற்கு இருந்த வழிகளைத் தடுத்துவிட்டனர். போர் பற்றிய செய்திகள் மக்களைச் சென்றடையக் கூடாது என்பதைத் திட்டமிட்டே இந்தியப் படை இதனைச் செய்தது.

குறிப்பாக அமைதி காக்க எனக் கூறி வடக்கு கிழக்கில் குவிக்கப்பட்ட இந்தியப் படை முன்னெடுக்கப்போகும் போர் மோசமாக இருக்கும் என்பதால் அது தொடர்பான பதிவுகள் இருப்பதை இந்தியத் தரப்பு விரும்பவில்லை.

ஊடகங்கள் மீதான தாக்குதல்களையடுத்து சில மணி நேரம் காணப்பட்ட மயான அமைதி மீண்டும் குலைந்தது. இந்தியப் படையின் மூன்று பட்டாலியன்களைக் கொண்டுள்ள 91 ஆவது படைப் பிரிவு பிரிகேடியர் ஜே.ராலி தலைமையில் யாழ்ப்பாணத்தை நோக்கிய தனது பாரிய படை நகர்வை கோட்டைப் பகுதியிலிருந்து ஆரம்பிக்க ஆயுத பாணிகளாக யாழ் நகரில் நிறுத்தப்பட்டிருந்த விடுதலைப் புலிகள் எதிர்த் தாக்குதல்களைத் தொடுத்தார்கள்.

இந்திய – விடுதலைப் புலிகள் போர் ஆரம்பமாகியது!

இந்தியாவுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையிலான இந்தப் போர் சுமார் இரண்டரை வருடங்களாகத் தொடர்ந்தது. இந்தியாவின் வியட்னாம் என வர்ணிக்கப்படும் அளவுக்கு மோசமான பின்னடைவுகளையும், இழப்புக்களையும் ஈழ மண்ணில் இந்தியா சந்தித்தது.

தமிழர்களுக்கு ஆதரவாக இருப்பதாக நம்பப்படும் இந்தியாவை விடுதலைப் பலிகளுக்கு எதிரான போருக்குத் தூண்டிவிட்டதன் மூலம் தமிழர்களுக்கு இந்தியாவை எதிரியாக்குவதில் வெற்றி பெற்றார் அப்போதைய ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்தன. ஜெயவர்த்தனவின் இராஜதந்தரக் காய் நகர்த்தல்களில் தோற்றுப்போன இந்தியா இன்றும் அதன் பலன்களை அனுபவிக்கின்றது.

இலங்கையில் உருவான இந்த இன நெருக்கடியில் இந்தியா எவ்வாறு சம்பந்தப்பட்டது? இனநெருக்கடியைப் பயன்படுத்தி தமது பிராந்திய நலன்களைப் பேணிக்கொள்வதற்காக இந்திய புலனாய்வுப் பிரிவுகள் வகுத்த திட்டங்கள்…அதில் தமிழ் அமைப்புக்கள் எவ்வாறு பலிக்காடாவாக்கப்பட்டது? தமிழகத் தலைவர்கள் குறிப்பாக எம்.ஜி.ஆர். இந்தப் போராட்ட அமைப்புக்களுடன் ஏற்படுத்தியிருந்த உறவுகள் எவ்வாறிருந்தது?

இந்திய – புலிகள் போருக்கு வித்திட்ட காரணிகள்… இதனை சிங்கள அரசு தனது நலன்களுக்கு எவ்வாறு பயன்படுத்திக்கொண்டது என்பது போன்ற நீங்கள் இதுவரையில் அறிந்திருக்காத புதிய உள்ளகத் தகவல்களுடன் இந்த அரசியல் வரலாற்றுத் தொடர் தொடர்ந்து வெளிவரும்.

தொடர்புகளுக்கு:  webeditor9@gmail.com

No comments:

Post a Comment