Wednesday, April 10, 2013

வடபகுதி காணிப்பிரச்சினை

போர் முடிவுக்கு வந்து நான்கு வருடங்கள் பூர்த்தியாகப்போகும் நிலையிலும் வடபகுதியில் உருவாகியுள்ள காணிப்பிரச்சினைக்கு இன்னும் தீர்வு காணப்படவில்லை. போர்க்காலத்தின்போது அதி உயர் பாதுகாப்பு வலயம் எனப் பிரகடனம் செய்யப்பட்டு மக்கள் வெளியேற்றப்பட்ட பல பகுதிகளில் மீளக்குடியேற்றத்துக்கு இன்னும் அனுமதி வழங்கப்படவில்லை. பாதுகாப்பு வலயங்கள் என எதுவும் இல்லை என அரச தரப்பு உத்தியோகபூர்வமாகக் கூறிக்கொண்டாலும், மக்கள் தாம் வாழ்ந்த பகுதிகளில் குடியேறமுடியாதவர்களாகவே இருக்கின்றார்கள். இதற்கு மேலதிகமாக இராணுவத்துக்கு காணிகளைப் பெறுவதற்காக மேற்கொள்ளப்படும் புதிய முயற்சிகள் மக்களை மேலும் அச்சமடையச் செய்திருக்கின்றது. அத்துடன் வடபகுதியை இராணுவக் கட்டுப்பாட்டுக்கு உட்பட்ட ஒரு பிரதேசமாக வைத்திருக்க அரசாங்கம் முயல்கின்றதா என்ற கேள்வியையும் இது எழுப்புகின்றது.

யாழ்ப்பாண மக்களின் காணிப் பிரச்சினைக்குத் தீர்வு காணும் பொருட்டு ஆரம்பித்து வைக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்ட காணி அபிவிருத்தி அமைச்சின் யாழ்.மாவட்ட அலுவலகம் படையினருக்குக் காணி சூவீகரிக்கும் செயற்பாடுகள் முழுவீச்சில் மும்முரமாக மேற்கொண்டு வருவதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. யாழ்ப்பாணத்தில் படையினரால் கோரப்பட்ட பெருமளவு தனியார் காணிகளைச் சூவீகரிக்கும் பகிரங்க அறிவித்தல்கள் மாவட்டக் காணி சூவீகரிப்பு அலுவலகம் ஊடாக வெளியிடப்பட்டுள்ளன. அதி உயர் பாதுகாப்பு வலயம் என்ற பெயரில் படையினரிடம் போர்க்காலத்தில் தாரைவார்த்த காணிகளுக்கு மேலாக, இப்போது சமாதானம் ஏற்பட்டுவிட்ட காலப்பகுதியிலும் தாரைவர்க்க வேண்டிய நிர்ப்பந்தம் மக்களை அதிர்ச்சியடையச் செய்திருக்கின்றது.

யாழ்ப்பாண மக்களின் காணிப் பிரச்சினைகள் தீர்த்து வைக்கப்படும் என்றும், அதற்காகவே இந்த அலுவலகம் திறந்து வைக்கப்பட்டுள்ளதாகவும் காணி அமைச்சர் யாழ்ப்பாணத்தில் வைத்து திறப்பு விழாவின் போது கூறியிருந்தார். அத்துடன் பொதுமக்களின் காணிகளை படையினர் சுவீகரிக்கமாட்டார்கள் என்றும், அதற்காக இந்த அலுவலகம் திறந்து வைக்கப்படவில்லை என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்திருந்தார். இது மக்களுக்கு சற்று நம்பிக்கையைக் கொடுத்ததது. சுமார் ஒரு மாதத்துக்கு முன்னர்தான் இந்த அலுவலகம் யாழ்ப்பாணத்தில் திறந்துவைக்கப்பட்டது.  ஆனால், ஒரு மாத காலப்பகுதியிலேயே இராணுவத்துக்காகக் காணிபிடிக்கும் செயற்பாடுகள் இந்த அலுவலகத்தினால் தீவிரமாக முன்னெடுக்கப்படுவது மக்கள் மத்தியில் சந்தேகங்களை ஏற்படுத்தியிருக்கின்றது.  தனியார் காணிகளைச் சுவீகரிப்பதற்கான செயற்பாடுகளே இந்த அலுவலகத்தினால் இப்போது முழுவீச்சில் முன்னெடுக்கப்படுகின்றது.

உயர்பாதுகாப்பு வலயப் பகுதியினுள் உள்ளடங்கும் தனியார் காணிகளின் சுவீகரிப்புத் தொடர்பில் பகிரங்க அறிவித்தல் விடுப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது. குறிப்பாக வலிகாமம் வடக்கில் தமக்குச் சொந்தமான வளம் நிறைந்த காணிகளை நிரந்தரமாகவே இழக்க வேண்டிய நிர்ப்பந்தம் மக்களுக்கு ஏற்பட்டுள்ளது. வலிகாமம் வடக்கு மக்கள் சுமார் இருபது வருடங்களுக்கு முன்னர் வெளியேற்றப்பட்டனர். மீளக்குடியமர்வு தொடர்பில் பல வாக்குறுதிகள் அவர்களுக்கு வழங்கப்பட்டாலும் எதுவும் நிறைவேற்றப்படவில்லை. யாழ்ப்பாணத்தில் அரச காணிகள் தொடர்பான விடயத்தை ஆளுநர் கையாள்கின்றார். தனியார் காணிகள் தொடர்பான விடயத்தை யாழ்.மாவட்ட காணி மற்றும் காணி அபிவிருத்தி அமைச்சின் காணி சுவீகரிப்பு அதிகாரி கையாள்கின்றார். இவை தொடர்பில் அரசாங்க அதிபர் அதிகாரங்கள் எதுவும் இல்லாதவராகவே இருக்கின்றார்.

வடமாகாண சபைக்கான தேர்தலை எதிர்வரும் செப்டம்பரில் நடத்தப்போவதாக அரசாங்கம் சர்வதேச சமூகத்துக்கு வாக்குறுதியளித்திருக்கும் ஒரு நிலையிலேயே இந்தக் காணிபறிப்புச் சம்பவங்கள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. யாழ்ப்பாணத்தில் மட்டுமன்றி வன்னிப்பிராந்தியத்திலும் இவ்வாறு காணிகளைச் சுவீகரிக்கும் செயற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள முள்ளியவளை மத்திய பகுதி, பொன்னர் பகுதி என்பவற்றில் காடுகளை அழித்து பாரிய படை முகாம்களையும், முஸ்லிம் முடியேற்றங்களையும் மேற்கொள்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இந்தத் திட்டங்களை முன்னெடுப்பதற்காக இந்தப் பகுதிகளில் நீண்டகாலமாகக் குடியிருக்கும் தமிழர்கள் அங்கிருந்து வெளியேறுமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளார்கள். இந்தப் பிரச்சினை இப்போது நீதிமன்றம்வரையில் சென்றிருக்கின்றது.

வடபகுதித் தேர்தல் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இந்தச் செயற்பாடுகள் துரிதப்படுத்தப்பட்டிருப்பது பல்வேறு சந்தேகங்களை உருவாக்குகின்றது. போரின்போது இடம்பெயர்ந்த மக்களின் மீள்குடியேற்றம் முழுமையடையாத நிலையில்தான் இவ்வாறான காணி பறிப்புக்கள் இடம்பெறுகின்றன என்பது கவனிக்கத்தக்கது. மீள்குடியேற்றச் செயற்பாடுகளை இது பெருமளவுக்குப் பாதிப்பதாக அமைந்திருக்கின்றது. அதேவேளையில், அவசரமாக மேற்கொள்ளப்படும் சிங்களக் குடியேற்றங்கள் மாவட்டத்தின் இன விகிதாசாரத்தில் செயற்கையான ஒரு மாற்றத்தை ஏற்படுத்துவதாக அமைந்திருக்கின்றது என்பதுடன், அது இனங்களுக்கு இடையில் முரண்பாடுகளைத் தோற்றுவிப்பதாகவும் அமைந்திருக்கின்றது.

படையினரின் தேவைகளுக்காக என சுவீகரிக்கப்படும் காணிகள் வடபகுதியில் படையினரின் அதிகரித்த பிரசன்னம் தொடர்ந்தும் இருக்கப்போகின்றது என்ற உண்மையையே வெளிப்படுத்துகின்றது. கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளில் வடபகுதியில் இராணுவத்தின் பிரசன்னம் குறைக்கப்பட வேண்டும் என்பது முக்கியமாக வலியுறுத்தப்பட்டிருக்கின்றது. ஜெனீவா தீர்மனத்திலும் இது முக்கியமாகக் குறிப்பிடப்பட்டிருக்கின்றது. அரசாங்கமும் இதனை தனது வாக்குறுதியாக பல முறை வெளிப்படுத்தியிருக்கின்றது.

போர் முடிவுக்கு வந்திருக்கும் நிலையில், இராணுவத்தை திரும்பப் பெற்று சட்டத்தையும் ஒழுங்கையும் பாதுகாக்கும் செயற்பாடுகளில் பொலிஸாரையே ஈடுபடுத்த வேண்டும் என்பது பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒன்று. ஆனால், அவசரமவசரமாக வடபகுதியில் படையினருக்காக காணி சுவீகரிக்கப்படுவது அரசாங்கத்தின் நோக்கங்களில் சந்தேகத்தையே ஏற்படுத்துகின்றது. மக்களின் விருப்பத்துக்கு முரணாண குடியேற்றங்களை மேற்கொள்வதுடன், இராணுவப் பிரசின்னத்தை அதிகளவில் வைத்திருப்பதன் மூலம் மக்களை அடக்கிவைத்திருக்கலாமே தவிர, உண்மையான சமாதானத்தை ஏற்படுத்திவிட முடியாது. அரசாங்கம் விரும்புவது எதனை?

No comments:

Post a Comment