Friday, April 12, 2013

புதிய கட்சியும் சரத் பொன்சேகாவும்





இந்த வாரச் செய்திகளில் அதிகளவுக்குப் பெயர் அடிபட்டவராக மீண்டும் சரத் பொன்சேகா உள்ளார். ஜெனீவா தீர்மானம் தொடர்பில் அவர் தெரிவித்த கருத்துக்கள் ஏற்படுத்திய சர்ச்சைகளை ஏற்படுத்தியிருந்தாலும், அவரது கட்சியான ஜனநாயகக் கட்சியின் பதவி தேர்தல் திணைக்களத்தினால் ஏற்றுக்கொள்ளப்பட்டதை யடுத்து அரசியல் களத்தில் அவரது பெயர் மீண்டும் ஒரு சலசலப்பை ஏற்படுத்தியிருக்கின்றது.

ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ஷவின் ஆட்சியைக் கவிழ்த்து புதிய ஆட்சி ஒன்றை உருவாகக்கக்கூடிய வல்லமையைக்கொண்ட ஒருவராக தான் மட்டுமே உள்ளதாகக் கூறி அரசியல் அரங்கில் தனக்கென ஒரு தனியான இடத்தைப் பிடித்துக்கொள்வதற்கு பொன்சேகா முற்பட்டுள்ளார். புதிய கட்சிப் பதிவுடன் பொன்சேகா ஏற்படுத்திய சலசலப்பு தற்காலிமானதா அல்லது நீடிக்கக்கூடியதா என்ற கேள்வி அவரது ஆதரவாளர்கள் மத்தியிலும் எழுப்பப்பட்டுள்ளது.

இதற்கான பதிலைத்தான் நாமும் இந்த வாரத்தில் தேடப்போகின்றோம்.

2009 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் பொது எதிரணி வேட்பாளராகக் களமிறங்கி மகிந்த ராஜபக்‌ஷவிடம் தோல்வியடைந்தவர்தான் பொன்சேகா. இப்போது கட்சிப் பதிவுடன் அவர் மீண்டும் களத்தில் இறங்குவது மற்றொரு தேர்தலை இலக்காகக் கொண்டதாக இருக்கலாம். 2016 ஆம் ஆண்டில்தான் அடுத்த ஜனாதிபதித் தேர்தல் நடைபெற வேண்டும். ஆனால், அடுத்த வருடத்தில் திடீர்த் தேர்தல் ஒன்றை நடத்துவதற்கான எண்ணத்துடன் மகிந்த ராஜபக்‌ஷ செயற்படுகின்றார் என பொன்சேகாதான் முன்னர் ஒரு தடவை கூறியிருந்தார். அதற்காக எதிரணிகள் தம்மைத் தயார்படுத்திக்கொள்ள வேண்டும் எனவும் அவர் அழைப்பு விடுத்திருந்தார்.

ஜனாதிபதித் தேர்தலை விட்டால் இவ்வருட இறுதியிலும் அடுத்த வருடத்திலும் குறைந்த பட்சம் நான்கு மாகாண சபைகளுக்கான தேர்தலாவது நடைபெறவுள்ளது. தென்னிலங்கையில் உருவாகியிருக்கும் புதிய அரசியல் கூட்டணிகளுக்கான ஒரு பரீட்சைக்களமாகவும் இந்தத் தேர்தல்கள் அமையலாம். ஆனால், பொன்சேகாவைப் பொறுத்தவரையில் இந்தத் தேர்தல்களுக்காக தன்னைத் தயார்படுத்திக்கொள்வராக அவர் காணப்படவில்லை. ஜனாதிபதித் தேர்தலை இலக்காகக்கொண்டதாகவே அவரது நகர்வுகள் அனைத்தும் உள்ளன.

ஜனாதிபதித் தேர்தலைச் சந்திப்பதற்கு முன்னதாக பல தடைகளை அவர் தாண்டிச்செல்லவேண்டியுள்ளது. முதலாவது அவரது குடியுரிமை தொடர்பானது. இரண்டாவது, எதிர்க்கட்சிகள் பொது வேட்பாளராக அவரை ஏற்றுக்கொள்ளுமா என்பது.

ஜனாதிபதி ராஜபக்‌ஷவைப் பொறுத்தவரையில் எதிர்க்கட்சிகள் பலவீனமாக இருப்பது மட்டும்தான் அவருக்குச் சாதகமானது எனக்கூறமுடியாது. எதிர்க்கட்சிகள் பிளவுபட்டுப் போயிருப்பதும் அவருக்கு வரப்பிரசாதமாகவுள்ள மற்றொரு விடயம்.

சரத் பொன்சேகா ஜனநாயகக் கட்சியைக் காட்சிக்கு வைத்து அரசியலில் அடுத்த நகர்வை மேற்கொண்டுள்ள அதேவேளையில், ரணில் விக்கிரமசிங்கவும் சும்மாவிருக்கவில்லை. எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பு இயக்கம் என்ற பத்துக் கட்சிகளை உள்ளடக்கிய அமைப்பை உருவாக்கி, அடுத்த தேர்தலுக்குத் தன்னைத் தயார்படுத்தத் தொடங்கியுள்ளார். ராஜபக்‌ஷ ஆட்சியை வீட்டுக்கு அனுப்பும் பலம் தன்னிடம்தான் உள்ளது என்பதுதான் ரணிலின் பிரகடனம். இவை இரண்டிலும் இணையாமல் ஜே.வி.பி.யும் தனியான ஒரு பாதையில் செல்வதற்கு முற்பட்டிருக்கின்றது.

கடந்த ஜனாதிபதித் தேர்தலில் பொது எதிரணி ஒன்றை உருவாக்கி களத்தில் குதித்த பொன்சேகாவைப் பொறுத்தவரையில், இப்போது அந்த நிலை இல்லை. அப்போது ஒன்றாகக் குவிந்திருந்த எதிர்க்கட்சிகளின் பலம் இப்போது மூன்றாகப் பிளவுபட்டுப்போயிருக்கின்றது. இவை அனைத்தையும் ஓரணியின் கீழ் கொண்டுவருவதற்கான ஏற்பாடுகள் எதுவும் இப்போதைக்கு இல்லை என்றுதான் கூறவேண்டும்.

இந்த நிலையில், ராஜபக்‌ஷவைக் கவிழ்ப்பதற்கான பலம் தன்னிடம்தான் உள்ளது எனக்கூறிக்கொண்டு மூன்றாவது நபராக சந்திரிகா குமாரதுங்கவும் களத்தில் குதிப்பதற்கான தருணத்தைப் பார்த்துக்கொண்டுள்ளார். அதாவது, ஆட்சிக்கவிழ்ப்பைச் செய்வதற்கான பலம் தம்மிடம்தான் உள்ளது எனக் கூறிக்கொண்டு இன்று மூன்று நபர்கள் உள்ளார்கள்.

ரணிலைப் பொறுத்தவரையில் கடந்த ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதைத் தவிர்த்து அச்சந்தர்ப்பத்தை பொன்சேகாவுக்குக் கொடுத்திருந்தார். அதேபோல மீண்டும் ஒருமுறை ரணில் விட்டுக்கொடுப்பார் என எதிர்பார்க்கமுடியாது. ரணிலும் பொன்சேகாவும் தனித்தனியான பாதைகளில் செல்வதற்கு முற்பட்டால், அது ராஜபக்‌ஷவின் ஆட்சி தொடர்வதை உறுதிப்படுத்துவதாகவே அமையும்.

பொன்சேகா அரசியலுக்குப் புதியவர். அவரது கட்சியும் புதியது. இக்கட்சிக்குப் பாரிய தொண்டர்படை ஒன்று இல்லை. அவருக்கு வலது இடது கரங்களாக இருந்தவர்கள் இப்போது அவரிடம் இல்லை. ஏனைய கட்சிகளிலிருந்து பிரித்து எடுக்கக்கூடியவர்களை மட்டும்தான் அவர் நம்பியிருக்க வேண்டும். அவருக்கு இன்று இருப்பதெல்லாம் ஒன்றே ஒன்றுதான். அதாவது- முன்னாள் இராணுவத் தளபதி என்ற இமேஜ் மட்டும்தான் அவரிடம் எஞ்சியுள்ளது. பாரிய ஒரு ஆதரவுத் தளத்தையோ அல்லது நிரந்தரமான வாக்கு வங்கியையோ கொண்டிருக்கமல் அவர் களத்தில் இறங்க முற்படுவது புத்திசாலித்தனமாக இருக்கும் போலத் தெரியவில்லை.

ஜெனீவாவில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டுவந்த பிரேரணை சூடாக விவாதிக்கப்பட்டுக்கொண்டிருந்தபோது பரபரப்பான அறிக்கைகள் சிலவற்றை பொன்சேகா வெளியிட்டார். இவற்றில் இரண்டு விடயங்களை அவதானிக்க முடிந்தது:

1. போரில் வெற்றிபெற்ற இராணுவத்தின் தளபதி தானே என்பதை நினைவுபடுத்த அவர் முற்பட்டிருந்தார்.

2. ஐ.நா. பிரேரணைக்கு எதிரான கருத்துக்களை முன்வைத்ததன் மூலம் சிங்களத் தேசியவாதிகளின் அபிமானத்தைப் பெற்றுக்கொள்வதற்கு அவர் முயன்றார்.

ஆனால், இவை இரண்டும் ராஜபக்‌ஷவின் வாக்கு வங்கியை உடைப்பதற்கான வலிமையைக் கொண்டதாக இருக்கவில்லை. ஆளும் கட்சியினர் பலர் தம்முடன் இணைந்துகொள்ள இரகசியப் பேச்சுக்களைத் தம்டன் நடத்தியிருப்பதாக அவர் கூறியிருப்பது ஒரு உளவியல் ரீதியான தாக்குதலாக மட்டுமே இருக்கலாம். இப்போதைய நிலையில், ஆளும் கட்சியில் அதிருப்திகள் அதிகரித்திருந்தாலும் கூட, அரசனை நம்பிப் புருசனைக் கைவிடுவதற்கு ஆளும் கட்சியில் யாரும் தயாராகவில்லை.

ஆக, புதிய கட்சியை அமைத்துக்கொண்டதன் மூலமாக இப்போது பொன்சேகா ஏற்படுத்தியிருக்கும் சலசலப்பு வலிமையானதாக இருக்க வேண்டுமானால் அவர் தாண்டிச்செல்ல வேண்டிய தடைகள் பல உள்ளன.!

No comments:

Post a Comment