நம்பிக்கையின் சின்னமாக சித்திரைப் புத்தாண்டுக் கொண்டாட்டங்கள் களைகட்டியிருந்தாலும் கூட, ஈழத் தமிழர்களைப் பொறுத்தவரையில் நம்பிக்கையளிக்கும் எந்தவொரு நகர்வையும் காணமுடியவில்லை. போர் முடிந்து நான்கு வருடங்கள் பூர்த்தியாகப்போகின்றது. ஆனால், இடம்பெயர்ந்த தமிழர்கள் தமது முன்னைய வாழ்விடங்களில் மீளக்குடியேறி நிம்மதியான ஒரு வாழ்வை ஆரம்பிக்கும் நிலை இன்னமும் உருவாகவில்லை. ஆபத்தானது எனத் தெரிந்திருந்தும் படகுப் பயணங்களைத் தமிழர்கள் தொடர்ந்து தெரிவு செய்வது நிம்மதியானதும் நிரந்தரமானதுமான வாழ்வை அவர்கள் தேடியலைகின்றார்கள் என்பதையே வெளிப்படுத்துகின்றது. இதனை வெறுமனே பொருளாதார நோக்கத்தை அடிப்படையாகக் கொண்டது என வரையறுத்துவிடவும் முடியாது.
கடந்த ஒரு வார காலத்தில் மட்டும் இரண்டு சம்பவங்கள் ஊடகங்களில் பரபரப்பான செய்திகளாக வெளிவந்திருந்தது. முதலாவது - தமிழகத்திலிருந்து சுமார் 120 இலங்கைத் தமிழர்களுடன் புறப்பட்ட படகு ஒன்று நடுக்கடலில் தத்தளித்துக்கொண்டிருந்தபோது இந்திய கரையோர காவல்படையினரால் மீட்கப்பட்டிருக்கின்றது. தமிழகக் கரையிலிருந்து அவுஸ்திரேலியாவுக்குப் புறப்பட்டுச் சென்ற போதே நடுக்கடலில் இந்தப் படகின் இயந்திரம் பழுதடைந்தது. இந்தப் படகிலிருந்த அனைவரும் தமிழக முகாம்களில் உள்ள இலங்கைத் தமிழ் அகதிகள். இரண்டாவது சம்பவத்தில் சுமார் 60 பேருடன் மற்றொரு படகு அவுஸ்திரேலியா சென்றடைந்திருக்கின்றது. இந்தப் படகு எங்கிருந்து புறப்பட்டது என்பது இதுவரையில் அறிவிக்கப்படவில்லை. ஆனால், இலங்கை அல்லது இந்திய கரையிலிருந்துதான் இந்தப் படகும் புறப்பட்டிருக்க வேண்டும்.
இந்த இரு நாடுகளிலிருந்தும்தான் இலங்கைத் தமிழர்கள் அபாயம் நிறைந்த படகுகளில் அவுஸ்திரேலியாவை இலக்கு வைத்துச் செல்கின்றார்கள் என்பதை ஊடகச்செய்திகள் உறுதிப்படுத்துகின்றன. போர் முடிவுக்கு வந்த நான்கு வருடகாலப்பகுதியில் மட்டும் சுமார் 8,000 இலங்கைத் தமிழர்கள் அவுஸ்திரேலியாவை சட்டவிரோதமான முறையில் சென்றடைந்திருக்கின்றார்கள். இவர்களில் சிலர் திருப்பியனுப்பப்பட்டும் உள்ளார்கள். படகுப் பயணத்தை ஆரம்பித்து பிடிபட்டவர்கள், தென்கிழக்காசிய நாடுகளில் கைவிடப்பட்டவர்கள் என இந்தப் பட்டியல் நீண்டுகொண்டே செல்கின்றது. மேலும் பலர் முகவர்களிடம் பணத்தைக்கொடுத்துவிட்டு படகுகளுக்காகக் காத்திருக்கலாம்.
சட்டவிரோதமாக இடம்பெறும் இவ்வகையான படகுப் பயணங்களுக்கு எதிரான தீவிர பிரச்சாரத்தை அவுஸ்திரேலிய அரசாங்கம் அதன் தூதரகத்தின் மூலமாக இலங்கையில் முன்னெடுத்துவருகின்றது. இந்தப் பயணங்கள் ஆபத்தானவை எனவும், அந்த ஆபத்தையும்தாண்டி அவுஸ்திரேலியா வந்தடைந்தாலும் எந்தவிதமான பலன்களையும் பெற்றுக்கொண்டுவிட முடியாது எனவும் அவுஸ்திரேலிய தூதரகம் ஊடகங்கள் மூலமாக தொடர்ச்சியாகப் பிரச்சாரப்படுத்திவருகின்றது. அவுஸ்திரேலியா வந்தடைபவர்கள் கிறிஸ்மஸ் தீவுக்கே அனுப்பப்படுகின்றார்கள். இந்த நிலைமைகள் எதுவும் தெரியாமல்தான் தமிழர்கள் படகுப் பயணங்களைத் தெரிவு செய்கின்றார்கள் எனக்கருத முடியாது. இவை அனைத்தையும் தெரிந்துகொண்டும் தமிழர்கள் எதற்காக உயிரைப் பயணம் வைத்து படகுகளில் ஏறுகின்றர்கள் என்பதுதான் ஆராயப்பட வேண்டியது.
இலங்கையில் காணப்படும் நிச்சயமற்ற உள்நாட்டு நிலைமைகள்தான் இவர்களுடைய முடிவுக்கு பிரதான காரணமாகவுள்ளது. போருக்குப் பின்னர் நல்லிணக்க முயற்சிகள் எதுவும் இடம்பெறவில்லை என்பதை ஐ.நா. மனித உரிமைகள் பேரவையே ஏற்றுக்கொண்டிருக்கின்றது. இடம்பெயர்ந்த வன்னி மக்கள் மீளக்குடியேறினாலும் அங்கு வாழ முடியாத நிலை. இராணுவத்துக்காக அபகரிக்கப்படும் காணிகள், சிங்களக் குடியேற்றங்கள் என வடபகுதியின் அடையாளமே மாறிக்கொண்டிருக்கின்றது. கிழக்கு மாகாணத்திலும் பல தமிழ்க் கிராமங்கள் அடையாளத்தை இழந்துகொண்டிருக்கின்றது. அவுஸ்திரேலியாவுக்குப் படகுகளில் செல்பவர்களில் பெரும்பாலானவர்கள் வடக்கு கிழக்கு மக்களாக இருப்பதும் உறுதிப்படுத்தப்பட்ட ஒன்று. கௌரவமாக வாழக்கூடிய நிலை ஒன்று உருவாகும் என்ற நம்பிக்கை இருந்தால் எதற்காக இந்த மக்கள் நிச்சயமற்ற படகுப் பயணங்களைத் தெரிவு செய்கின்றார்கள்?
படகுப் பயணங்களை மேற்கொள்பவர்களில் இரண்டாது இடத்தில் இருப்பவர்கள் இந்தியாவில் அகதி முகாம்களில் வசிக்கும் இலங்கைத் தமிழர்கள். 120 அகதிகளுடன் புறப்பட்ட படகு கடந்த வாரம் நடுக்கடவில் தத்தளித்துக்கொண்டிருந்த நிலையில் மீட்கப்பட்டது. இச்சம்பவம் தமிழக ஊடகங்களில் அதிக முக்கியத்துவத்தைப் பெற்றதுடன், பல கேள்விகளையும் எழுப்பியிருக்கின்றது. தமிழகத்தில் சுமார் 115 முகாம்களில் ஒரு இலட்சம் இலங்கைத் தமிழர்கள் அகதிகளாகவுள்ளதாக பதிவுகள் கூறுகின்றன. இதில் பலர் 20 முதல் 30 வருடங்களாக முகாம்களில் 'அகதி' என்ற அந்தஸ்த்துடன் வாழ்பவர்கள். தமிழக வாழ்வில் இதனைவிட வேறு எந்த அந்தஸ்த்தும் அவர்களுக்குக் கிடைக்கப்போவதில்லை. மேற்கு நாடுகளில் அல்லது அவுஸ்திரேலியாவில் குறிப்பிட்ட வருடங்களுக்கு மேல் வாழ்ந்தால் பிரஜாவுரிமை கிடைக்கும். அதற்குரித்தான சலுகைகளையும் எதிர்பார்க்கலாம். ஆனால், தமிழகத்தில் அகதி என்ற பெயரிலேயே தமது சாரிசுகளும் வளர்வதை யார்தான் விரும்புவார்கள்? தாயகம் திரும்பினால் கௌரவமாக வாழலாம் என்ற நிலையும் இல்லை. தமிழக முகாம்களில் உள்ள இலங்கைத் தமிழர் ஆபத்து எனத் தெரிந்தும் படகுகளில் ஏறுவதற்கு இதுதான் காரணம்.
முன்னர் வியட்நாமியர்கள்தான் படகு மக்கள் என அழைக்கப்பட்டார்கள். போரினால் இடம்பெயர்ந்த நிரந்தரமாக வாழ்வதற்கு இடமின்றி அவர்கள் அலைந்தார்கள். இன்று அதேநிலையில் இலங்கைத் தமிழர்களும் உள்ளார்கள். தமிழர்கள் பெருமளவுக்கு படையெடுப்பது அவுஸ்திரேலியா போன்ற நாடுகளுக்கு நெருக்கடியைக் கொடுப்பதாக அமையலாம். அதனைத் தடுப்பதற்காக அவர்கள் எடுக்கும் நடவடிக்கைகளும் புரிந்து கொள்ளப்படவேண்டியவைதான். அதேவேளையில் இலங்கையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்காகவும், வடகிழக்கில் தமிழர்கள் சுதந்திரமான வாழ்க்கையை உறுதிப்படுத்துவதற்காகவும் செய்யவேண்டிய பணிகள் பல உள்ளன என்பதை சர்வதேசம் படகுத் தமிழர்களின் அவலங்களிலிருந்தாவது புரிந்துகொள்ள வேண்டும்!
(ஞாயிறு தினக்குரல்: 2013-04-14)
No comments:
Post a Comment