இலங்கையின் தென்பகுதியில் கொழும்பை அடுத்துள்ள பிப்பிலியானையில் முஸ்லிம்களுக்குச் சொந்தமான பிரபல ஆடை விற்பனை நிலையம் தாக்கிச் சேதமாக்கப்பட்டுள்ளது. முஸ்லிம் வர்த்தக நிலையங்களுக்கு எதிராக காழ்ப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் முன்னெடுக்கப்பட்டுவந்த பிரச்சாரங்களின் தொடர்ச்சியாகவே இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
புதுவருட விற்பனைக்காகக் கொண்டுவரப்பட்டிருந்த பெருமளவு ஆடைகளுடன் விற்பனை நிலையம் மற்றும் அங்கு நிறுத்தப்பட்டிருந்த வாகனங்களும் தாக்குதல் நடத்திய குழுவினரால் சேதமாக்கப்பட்டுள்ளன. இது நன்கு திட்டமிடப்பட்ட ஒரு தாக்குதல் என்பதற்கு அப்பால், எதிர்பார்க்கப்பட்ட ஒன்றாகவும் இருந்துள்ளது. இவ்வாறான நிலையிலும் இதனைத் தடுப்பதற்கான முன்னேற்பாடுகள் எதுவும் செய்யப்பட்டிருக்கவில்லை. இதற்கும் மேலாக நிலைமைகளைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்கு பாதுகாப்புத் தரப்பினருக்கு ஒரு மணி நேரத்துக்கு மேல் சென்றுள்ளது. இவை அனைத்தும் ஆபத்தான பல உண்மைகளை உணர்த்துவதாக உள்ளது.
பொது பல சேனா என்ற சிங்கள - பௌத்த தேசியவாத அமைப்பு ஆரம்பித்து வைக்கப்பட்டபோதே சிறுபான்மையினருக்கு எதிரான அச்சுறுத்தல்கள் தீவிரமடையத் தொடங்கியது. குறிப்பாக முஸ்லிம்களுக்கு எதிரான பிரச்சாரங்களை இவ்வமைப்பு வெளிப்படையாகவே ஆரம்பித்தது. பள்ளிவாசல்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட பிரச்சாரங்கள் பின்னர் தாக்குதல்களாக மாற்றமடைந்தன. பல பள்ளிவாசல்கள் தாக்கப்பட்டபோது அரச தரப்பு மௌனமாகவே இருந்தது. சட்டத்தையும் ஒழுங்கையும் நிலைநாட்ட வேண்டிய பொலிஸார் வெறுமனே பார்வையாளர்களாகவே இருந்தார்கள். முஸ்லிம் அரசியல் தலைவர்களும் எதிர்ப்புக்களைப் பகிரங்கமாக வெளிப்படுத்த அஞ்சியவர்களாகவே இருந்தார்கள். அரசாங்கத்தில் இணைந்து அவர்கள் பெற்றிருந்த அமைச்சர் பதவிகள் அவர்கள் வாயைத் திறக்கவிடவில்லை.
இந்த நிலையில் அடுத்த நகர்வாக ஹலாலுக்கு எதிரான பிரச்சாரங்கள் பொது பல சேனாவினால் முன்னெடுக்கப்பட்டன. ஹலாவை நிறுத்துவதற்கான காலக்கெடுவை விதித்து தீர்மானத்தை நிறைவேற்றிய பொது பல சேனா அதில் வெற்றியும் பெற்றுவிட்டது. இந்த வெற்றிப் பெருமிதத்துடன்தான் அவர்களுடைய அடுத்த கட்ட நகர்வு இப்போது ஆரம்பமாகியிருக்கின்றது.
முஸ்லிம்களின் வர்த்தக நிலையங்களை இலக்காக வைத்த பிரச்சாரங்களை பொதுபல சேனா அண்மைக்காலமாக முழுவீச்சுடன் முன்னெடுத்துவருவது தெரியாத ஒன்றல்ல. பொது பல சேனா அண்மையில் நடத்திய மகாநாடு ஒன்றிலும், குறிப்பிட்ட வர்த்தக நிலையத்தை பெயர் குறிப்பிட்டு அதன் முக்கிய தலைவர் ஒருவர் உரையாற்றியிருந்தார். இவ்வாறு சொல்வதால் நீங்கள் உணர்ச்சி வசப்பட்டு அந்த வர்த்தக நிலையத்தின் மீது தாக்குதலை நடத்திவிடக் கூடாது என்று மறைமுகமான ஒரு செய்தியையும் தெரிவித்திருந்தார். இதன் தொடர்ச்சியாகவே வியாழக்கிழமை இரவுத் தாக்குதல் இடம்பெற்றிருக்கின்றது.
பொதுபல சேனாவின் மாநாடுகளில் தொடர்ச்சியாகத் தெரிவிக்கப்பட்டுவரும் கருத்துக்கள் சிறுபான்மையினரை அச்சுறுத்துவதாகவே அமைந்திருக்கின்றது. இவர்களால் தெரிவிக்கப்படும் கருத்துக்களில் முக்கியமானது இந்த நாடு பல்லினங்களைக் கொண்ட ஒன்றல்ல. இது பௌத்த சிங்களவர்களுக்குரிய நாடு என்பதாகும். பாணந்துறையில் இறுதியாக இடம்பெற்ற பொது பல சேனாவின் மாநாட்டில் இந்தக் கருத்தே முக்கியமாக முன்வைக்கப்பட்டது. இதன் அர்த்தம் என்ன என்பது புரிந்துகொள்ள முடியாத ஒன்றல்ல.
ஏற்கனவே கொதிநிலையில் உள்ள இன நல்லுறவுகளைப் பொறுத்தவரையில், இவ்வாறான கருத்துக்கள் பாரிய பின்விளைவுகளை ஏற்படுத்தக்கூடியவை. ஆனால், இவ்வாறான கருத்துக்களை முன்வைத்து அவற்றுக்குச் செயல்வடிவம் கொடுக்கும் பொதுபல சேனாவின் இந்தப் பிரச்சாரங்கள் குறித்தோ அவர்களின் செயற்பாடுகள் பற்றியோ அரசாங்கம் எந்தவகையிலும் அக்கறைப்படாதிருப்பது ஆச்சரியமான ஒன்றுதான்!
பொதுபல சேனாவின் தலைவர்கள் தெரிவித்துவரும் மற்றொரு கருத்தும் ஆபத்தானது. 'ஒவ்வொரு பௌத்தனும் முஸ்லிம் தீவிரவாதத்துக்கு எதிராக அதிகாரபூர்வமற்ற காவல்துறை போன்று செயற்பட வேண்டும்' என பொதுபல சேனாவின் மாநாட்டில் பகிரங்கமாகவே அறிவிக்கப்பட்டிருக்கிறது. இது சட்டத்தை தமது கைககளில் அவர்கள் எடுத்துக்கொள்வதை நியாயப்படுத்துவதற்கான ஒரு அறிவிப்பு. முஸ்லிம் மக்களுக்கு எதிரான அண்மைக்காலத்தில் நடத்தப்பட்ட பல்வேறு தாக்குதல்களின் போதும் சட்டத்தை தமது கைகளில் எடுத்துக்கொண்டவர்களாகவே அவர்கள் செயற்பட்டுள்ளனர் என்பது வெளிப்படை. மறுபுறுத்தில் சட்டத்தை கைகளில் வைத்துள்ளவர்கள் வெறுமனே பார்வையாளர்களாகவே இருந்துள்ளார்கள். அல்லது பொது பல சேனாவின் கட்டளைகளுக்குக் கட்டுப்பட்டவர்களாக அவர்கள் நடந்துகொண்டுள்ளார்கள்.
ஜாதிக ஹெல உறுமய, தேசப்பற்றுள்ள தேசிய இயக்கம் போன்ற அமைப்புக்கள் ஏற்கனவே இனவாதத்தைப் பேசிக்கொண்டுள்ள நிலையில், பொதுபல சேனா, சிங்கள ராவய போன்ற புதிய அமைப்புக்கள் இப்போது களம் இறங்கியுள்ளன. இவர்கள் தமது இலக்கை அடைவதற்கு வன்முறைகளையும் பயன்படுத்க்கூடியவர்களாகவுள்ளார்கள் என்பது அண்மைய நிகழ்வுகளின் மூலம் உறுதியாகியுள்ளது. இந்த நிலையில் சட்டத்தையும் ஒழுங்கையும் பாதுகாக்க வேண்டிய அமைப்புக்கள் கையாலாகாத்தனத்துடன் இருப்பது பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்தலாம்.
தற்போதைய நிலை இனங்களிடையே நம்பிக்கையீனத்தை ஏற்படுத்தக்கூடியது. 30 வருட காலப் போர் ஒன்றிலிருந்து மீண்டிருக்கும் நிலையில், இன நல்லிணக்கத்தைக் கட்டியெழுப்புதற்கான செயற்பாடுகளே அவசியமானவை. சிறுபான்மையினரின் பாதுகாப்பு மட்டுமன்றி அவர்கள் தமது மதத்தை, கலாசாரத்தைப் பின்பற்றுவதற்கான உரிமையும் உறுதிப்படுத்தப்பட வேண்டும். அவர்களுடைய தொழில்முயற்சிகளுக்கான பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படவேண்டும்.
ஆனால், அரசின் செயற்பாடுகள் சிறுபான்மையின மக்களுக்கு நம்பிக்கையீனத்தை அதிகரிப்பதாகவே அமைந்துள்ளது. இதில் மிகவும் மோசமானதுதான் வியாழக்கிழமை நடைபெற்ற தாக்குதல். பொதுபல சேனாவின் பிரச்சாரங்கள் தொடர்பில் தமது நிலைப்பாடு என்ன என்பதை அரசாங்கம் பகிரங்கமாக வெளிப்படுத்த வேண்டும். அவர்களுடன் செயற்பாடுகளை அரசு ஏற்கவில்லை என்றால், சிறுபான்மையினருக்கு குறிப்பாக முஸ்லிம் மக்களுக்கு எதிரான அவர்களின் செயற்பாடுகளுக்கு அரசு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். அரசு அதனைச் செய்யுமா?
No comments:
Post a Comment