Monday, April 29, 2013

வட பகுதியில் காணி அபகரிப்பும் உயர் பாதுகாப்பு வலயமும்

உயர் பாதுகாப்பு வலயங்கள் என எதுவும் வடபகுதியில் இல்லை என அரச தரப்பும், இராணுவத் தரப்பும் தொடர்ச்சியாகத் தெரிவித்துவரும் நிலையில், யாழ்ப்பாணத்தில் 7 ஆயிரத்துக்கும் அதிகமான ஏக்கர் காணி இராணுவத்துக்காகச் சுவீகரிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான தகவல்கள் இந்த வார முற்பகுதியில் வெளிவந்ததையடுத்து காணிகளை இழந்துள்ள மக்கள் அதிர்ச்சியடைந்திருக்கின்றார்கள். இதற்கு எதிராக மக்கள் போராட்டங்களும் முடுக்கிவிடப்பட்டுள்ளன.

இந்தப் போராட்டங்கள் வெறுமனே அடையாளப் போராட்டங்களாக முடிவடைந்துவிடப் போகின்றதா அல்லது தொடர் போராட்டங்களாக இடம்பெறப்போகின்றதா என்பது தெரியவில்லை. யாழ்ப்பாணத்தில் விஜயத்தை மேற்கொண்டுள்ள எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவும் சுவீகரிக்கப்பட்ட நிலங்களை நேரில் பார்வையிடச் சென்ற போது திருப்பியனுப்பப்பட்டுள்ளார். இந்தப் பிரச்சினை எந்தளவுக்குத் தீவிரமானது என்பதை இது ரணில் விக்கிரமசிங்கவுக்கு உணர்த்தியிருக்கும்.

யாழ். மாவட்டத்தில் இராணுவத்தின் தேவைக்காக வலிகாமம் வடக்கிலும், கிழக்கிலும் 6,400 ஏக்கர் காணி சுவீகரிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பிலான அறிவித்தல்கள் குறிப்பிட்ட பகுதிகளில் இந்த வார முற்பகுதியில் வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பல வருடகாலமாக இந்த நிலங்களை படையினர் ஆக்கிரமித்துக்கொண்டிருப்பதால், இப்பகுதி மக்கள் முகாம்களிலும், உறவினர், நண்பர்கள் வீடுகளிலுமே தங்கியுள்ளார்கள். போர் முடிவடைந்த பின்னர் தமது நிலங்களுக்குத் திரும்பிச் செல்லலாம் என்ற அவர்களின் கனவு படையினரின் புதிய அறிவித்தலின் மூலம் சிதறடிக்கப்பட்டுள்ளது. குறிப்பிட்ட பகுதிகளிலுள்ள முகாம்கள் நிரந்தரமாகப் போகின்றன என்பதைத்தான் இராணுவத்தின் அறிவிப்பு புலப்படுத்தியிருக்கின்றது.

இதேவேளையில் வடமராட்சி கிழக்கிலும் தனியாருக்குச் சொந்தமான 700 ஏக்கர் காணியை சுவீகரிக்கும் நடவடிக்கைகள் ஆரம்பமாகியுள்ளன. மருதங்கேணி பகுதியில் ஐவருக்குச் சொந்தமான இந்தத் தென்னங் காணியைச் சுவீகரிப்பது தொடர்பில் உரிமையாளர்களுக்குக் கடிதங்கள் அனுப்பப்பட்டுள்ளன. கடந்த மூன்று வருடங்களாக இந்தப் பகுதியில் படையினரே நிலைகொண்டுள்ளார்கள். குறிப்பிட்ட காணிகளைவிட்டு படையினர் வெளியேற வேண்டும் என அதன் உரிமையாளர்கள் தொடர்ச்சியாக வலியுறுத்திவரும் நிலையிலேயே இராணுவம் அவற்றைச் சுவீகரிக்கப்போவதாக இப்போது அறிவித்திருக்கின்றது. அந்தக் காணிகளைச் சுவீகரிப்பதற்கு இப்போது மேற்கொள்ளப்பட்டுவரும் முயற்சிகள் குறிப்பிட்ட இடங்களில் உள்ள முகாம்கள் நிரந்தரமாகப் போகின்றன என்பதற்கான முன்னறிவித்தலாக உள்ளது.

இந்த இரண்டும் இந்த வாரத்தில் இடம்பெற்ற நிகழ்வுகள். யாழ்ப்பாணத்தைப் பொறுத்தவரையில் இதற்கு முன்னதாகவே இராணுவத்துக்காக பெருமளவு நிலங்கள் சுவீகரிக்கப்பட்டிருக்கின்றன. குறிப்பாக வலிகாமம் வடக்கு, தென்மராட்சி, வடமராட்சி கிழக்கு என பல பகுதிகள் இராணுவ முகாம்களுக்காக பெருமளவு நிலம் ஏற்கனவே சுவீகரிக்கப்பட்டிருக்கின்றது. வடபகுதியை இராணுவ முற்றுகைக்கு உட்பட்ட ஒரு பகுதியாக வைத்திருப்பதுதான் இப்போது முன்னெடுக்கப்படும் அவசர காணி சுவீகரிப்புக்களின் நோக்கமா என்ற சந்தேகம் எழுகின்றது. இலங்கை இராணுவத்தின் 19 பிரிவுகளில் 16 பிரிவுகள் வடமாகாணத்தில் நிலைகொண்டிருப்பதாக முன்னாள் உயர் நீதிமன்ற நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன் நேற்று முன்தினம் இடம்பெற்ற தந்தை செல்வா நினைவுச் சொற்பொழிவில் தெரிவித்திருந்தார். இந்த சந்தேகத்தை மேலும் வலுப்படுத்துவதாகவே நீதியரசரின் தகவலும் அமைந்திருக்கின்றது.

வடக்கு கிழக்குப் பகுதிகளியிலிருந்து இராணுவம் குறைக்கப்பட வேண்டும் என அரசாங்கத்தினால் நியமிக்கப்பட்ட கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்கத்துக்கான ஆணைக்குழுவின் அறிக்கை பரிந்துரை செய்திருக்கின்றது. ஜெனீவா தீர்மானத்திலும் இது வலியுறுத்தப்பட்டிருக்கின்றது. போர் முடிவடைந்திருக்கும் நிலையில் இந்தளவுக்குப் பெருமளவு இராணுவம் வடக்கில் நிலைகொண்டிருக்கத் தேவையில்லை என்ற கருத்தை அனைவரும் ஏற்றுக்கொள்கின்றார்கள். அரசாங்கமும் வடபகுதியிலிருந்து இராணுவக் குறைப்பு இடம்பெறும் என பல்வேறு சந்தர்ப்பங்களிலும் உறுதியளித்திருந்தது.

இராணுவ முகாம்களுக்காக என தொடர்ச்சியாக பெருமளவு நிலங்கள் அபகரிக்கப்படுவது இந்த உறுதிமொழிகளில் சந்தேகங்களையே ஏற்படுத்துகின்றது. பாரிய இராணுவத் தளங்களையும், பெருமளவு இராணுவத்தையும் வடபகுதியில் தொடர்ந்தும் வைத்திருக்கும் இராணுவத்தின் திட்டத்தைதான் இது உறுதிப்படுத்துகின்றது. போர் முடிவுக்கு வந்து நான்கு வருடங்கள் பூர்த்தியாகப்போகின்றது. ஜனநாயக அரசியலையும், சாத்வீகப் போராட்டங்களையும்தான் தமிழ்த் தலைமைகள் இப்போது முன்னெடுக்கின்றன. இந்த நிலையில் பாரிய இராணுவக் கொத்தளங்கள் எதற்காக?

வடமாகாண சபைக்கான தேர்தல் எதிர்வரும் செப்டம்பர் மாதத்தில் நடைபெறும் என அரசாங்கம் ஏற்கனவே உறுதியளித்திருக்கின்றது. மாகாண சபைத் தேர்தலை இலக்காகக் கொண்டதாகவே பிரதான அரசியல் கட்சிகள் அனைத்தினதும் நகர்வுகள் அமைந்திருக்கின்றன. மாகாண சபைத் தேர்தல் சுயாதீனமாகவும், நியாயமானதாகவும் இடம்பெறுவதற்கு இராணுவக் குறைப்பும் அவசியம், சிவில் விவகாரங்களில் தலையீடு தவிர்க்கப்படுவதும் அவசியம். பாரியளவில் இராணுவம் குறிக்கப்பட்டுள்ள நிலையில் சிவில் விவகாரங்களில் இராணுவத்தின் தலையீடும் அதிகமாகின்றது. இந்த நிலையில் சுயாதீனமான தேர்தல் ஒன்றை எதிர்பார்க்கவும் முடியாது.

பொதுமக்களின் காணிகளை இராணுவம் தமது தேவைகளுக்குச் சுவீகரிப்பதானால் அதற்கான சில நடைமுறைகள் உள்ளன. அடாத்தனமான ஆக்கிரமித்துள்ள காணிகளை பின்னர் சுவீகரிப்பதாக அறிவிப்பது முறையான செயற்பாடு அல்ல. ஆனால், இராணுவம் இவ்வாறுதான் தமது செயற்பாடுகளை முன்னெடுத்துவருகின்றது.  போர் முடிவடைந்த நான்கு வருடங்கள் கடந்துள்ள நிலையிலும் பெருந்தொகையானவர்கள் இன்னும் மீளக்குடியேற முடியாதவர்களாக இருப்பதற்கு   இராணுவத்தின் இந்த உயர் பாதுகாப்பு வலயங்கள்தான் காரணமாகவுள்ளது. உயர் பாதுகாப்பு வலயங்கள் என எதுவும் இல்லை எனக் கூறிக்கொள்வது இந்தப் பிரச்சினைக்கான தீர்வல்ல. நடைமுறையில் அவை இல்லாதொழிக்கப்படவேண்டும். மக்களுடைய காணிகளை இராணுவம் ஆக்கிரமித்துள்ள நிலையில், முகாம்களிலுள்ள மக்களுடன் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவது எவ்வாறு சாத்தியமாகும்?
(ஞாயிறு தினக்குரல: 2013-04-28)

Thursday, April 25, 2013

இலங்கையில் இந்தியத் தலையீடு 03: கொழும்பில் தாக்கப்பட்ட றோ அதிகாரி


1983 ஜூலை..! இலங்கைத் தமிழர்களின் வாழ்க்கையில் மறக்க முடியாத ஒரு மாதம். ஒவ்வொரு தமிழர்களின் வாழ்க்கையிலும் ஏதோ ஒரு தாக்கத்தையோ அல்லது ஞாபகப் பதிவையோ ஏற்படுத்திய மாதம். ஈழத் தமிழர்களுடைய அரசியல் வாழ்க்கையிலும் ஒரு திருப்பத்தை ஏற்படுத்திய மாதம்.

யாழ்ப்பாணம், திருநெல்வேலியில் பலாலிவீதியால் சென்றுகொண்டிருந்த இராணுவ வாகனம் ஒன்று ஜூலை 21 ஆம் திகதி நள்ளிரவு தபாற்பெட்டிச் சந்தியில் வைத்துத் தாக்குதலுக்குள்ளாகின்றது.

விடுதலைப் புலிகள் அந்தக் காலப்பகுதியில் நடத்திய தாக்குதலில் மிகப்பெரிய தாக்குதல் இது. புலிகள் அமைப்பின் தலைவர் வே.பிரபாகரன் தலைமையில் அப்பகுதியில் மறைந்திருந்த போராளிகளால் நன்கு திட்டமிட்டு நடத்தப்பட்ட இத்தாக்குதலில் இராணுவ வாகனத்தில் பயணம் செய்த 13 படையினர் அந்த இடத்திலேயே கொல்லப்படுகின்றார்கள்.

இச்சம்பவத்தில்தான் விடுதலைப் புலிகளின் மூத்த தளபதி செல்லக்கிளி அம்மான் வீரமரணமடைகின்றார். விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன், தளபதி கிட்டு, அருணா, பண்டிதர், சீலன்… என புலிகளின் மூத்த தளபதிகள் பலர் களத்தில் ஒன்றாக இணைந்திருந்து நடத்திய ஒரு தாக்குதல் இது. இந்தளவு அதிகளவு படையினர் ஒரே சமயத்தில் கொல்லப்படுவது இதுதான் முதல்முறை என்பதால் அதிர்ச்சி அலை இலங்கை முழுவதையும் ஸ்தம்பிக்க வைக்கின்றது. தென்பகுதியில் குறிப்பாக சிங்களப் பகுதிகள் அதிர்ச்சியால் உறைந்துபோன நிலை.

இந்த நிலையில்தான் தென்பகுதியில் தமிழர்களுக்கு எதிரான தாக்குதல்கள் கட்டவிழ்த்து விடப்படுகின்றன. சிலர் நினைக்கலாம்… திருநெல்வேலித் தாக்குதலால் ஆத்திரமடைந்துதான் சிங்களவர்கள் இந்தக் கலவரத்தில் இறங்கினர்கள் என்று. ஆனால் உண்மை நிலை அது அல்ல. தமிழர்கள் மீது தாக்குதல்களை நடத்துவதற்கு ஆட்களைச் சேர்ப்பதற்கு இந்தச் சம்பவம் உதவியிருந்தாலும் கூட, இந்தக் கலவரம் ஏற்கனவே திட்டமிடப்பட்டிருந்த ஒன்றாகும். பெருமளவு வாள்கள் மற்றும் ஆயுதங்கள் இதற்காக ஏற்கனவே தயாரிக்கப்பட்டு தயாராக வைக்கப்பட்டிருந்தன. திருநெல்வேலித் தாக்குதலை காடையர்கள் தமக்கான வாய்ப்பாகப் பயன்படுத்திக்கொண்டனர்.

ஜெயவர்த்தன அரசாங்கத்தில் அமைச்சர்களாகவும், திணைக்களத் தலைவர்களாகவும் இருந்த பலர் இந்தக் கலவரத்தில் நேரடியாகச் சம்பந்தப்பட்டிருந்தனர். குறிப்பாக அப்போது விஞ்ஞானக் கைத்தொழில் அமைச்சராக இருந்த சிறில் மத்யூ பெருமளவு உறுப்பினர்களைக் கொண்ட சிங்களக் காடையர் குழு ஒன்றை வழிநடத்துபவராக இருந்தார். கொழும்பு, கம்பஹா பகுதிகளில் நடைபெற்ற தாக்குதல்களுக்கு அவரே தலைமை தாங்கினார் என்பதுடன், அதற்கான திட்டங்களை வகுத்துக்கொடுத்தவராகவும் அவரே இருந்தார்.

ஜனாதிபதி ஜெயவர்த்தன கலவரத்தைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கை எதனையும் எடுக்கவில்லை. அனைத்தையும் அவர் மௌனமாகப் பார்த்துக்கொண்டிருந்தார். ஒரு சந்தர்ப்பத்தில் இது சிங்களவர்களின் உணர்ச்சி… அதனைக் கட்டுப்படுத்துவதற்கு தான் விரும்பவில்லை என அவர் தெரிவித்திருந்தார்.

இதன் மூலம் கலவரத்துக்கு அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ ஆதரவு அல்லது அநுசரணை கிடைத்தது. கலவரத்தில் ஈடுபடுபவர்களுக்கு எதிராக நடவடிக்கை எதுவும் எடுக்கக்கூடாது என்று காவல்துறைக்கும், முப்படைகளுக்கு அறிவுறுத்தல் கொடுக்கப்பட்டிருந்தமையால் அவர்கள் வெறுமனே பார்வையாளர்களாகவே இருந்தார்கள். சில சந்தர்ப்பங்களில் சிங்களக் காடையர்களுக்கு அவர்கள் உதவினார்கள்.

கொழும்பு நகர் எரிந்கொண்டிருந்தது. தமிழர்களுடைய கடைகள், வீடுகள் உடைத்துச் சூறையாடப்பட்ட பின்னர் அவை தீவைத்துக்கொழுத்தப்பட்டன. வீதிகளில் சென்ற வாகனங்கள் சோதனையிடப்பட்டு தமிழர்கள் வாகனங்களுடன் வைத்துத் தீ மூட்டிக்கொழுத்தப்பட்டனர். வீதிகளில் எரிந்துபோன வாகனங்களும், எரிந்கொண்டிருக்கும் வாகனங்களும் வீதிகளைப் புகைமண்டலமாக்கிக்கொண்டிருந்தன. நாதி அற்ற நிலையில் தமிழர்கள் ஓடிக்கொண்டிருந்தார்கள்.

இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக நடந்துகொண்டிருந்த இந்த இன சங்காரம் உலகத்தின் மனச்சாட்சியைத் தொடுவதாக இருக்கவில்லை. தமிழர்கள் இவ்வாறு கொல்லப்படுவதையிட்டு யாருமே அலட்டிக்கொள்ளவில்லை. மொழியால் இணைந்திருந்த தமிழகத்தில் மட்டும் இது பெருமளவு உணர்வலைகளை ஏற்படுத்தியது.

தென்னிலங்கை பற்றி எரிந்துகொண்டிருந்த இந்த நிலையில் கொழும்பில் ஒரு காட்சி. கொழும்பிலுள்ள இந்தியத் தூதரகத்தின் இராஜதந்திரியாகப் பணியாற்றிகொண்டிருந்த மத்யூ ஏப்ரஹாம் தனது காரில் காலி வீதியூடாகச் சென்று கொண்டிருக்கின்றார். கொழும்பு நிலை எவ்வாறு உள்ளது என்பதைப் பார்ப்பதும், அது தொடர்பாக விரிவான அறிக்கை ஒன்றை புதுடில்லிக்கு அனுப்பிவைப்பதும்தான் அவரது நோக்கமாக இருந்தது. தான் இந்திய இராஜதந்திரியாக இருப்பதால் தனக்கு ஆபத்து இல்லை என அவர் எதிர்பார்த்திருந்தார்.

தமிழர்களின் வீடுகள், வர்த்தக நிலையங்கள் மற்றும் வாகனங்கள் என்பவற்றை தீவைத்துக் கொழுத்திக் கொண்டிருந்த சிங்களக் காடையர் கூட்டம் திடீரென ஏப்ரஹாமின் காரை நிறுத்தியது. தனக்கு ஆபத்து என அவர் உணர்ந்து கொள்வதற்கு முன்னதாகவே காரின் கண்ணாடி ஜன்னல்கள் பொல்லுகளால் அடித்து நொருக்கப்பட்டன. காரிலிருந்து வெளியே இழுத்து எடுக்கப்பட்ட இந்திய இராஜதந்திரி மீது சரமாரியான தாக்குதல் தொடுக்கப்பட்டது. தான் ஒரு தமிழர் அல்ல எனவும், தான் ஒரு இந்திய இராஜதந்திரி எனவும் அவர் எவ்வளவோ சொல்லியும் சிங்களக் காடையர்கள் தாக்குதலை நிறுத்தவில்லை. பதிலாக அவர்கள் தாக்குதலைத் தீவிரப்படுத்தினார்கள். அவரது காரின் மீது பெற்றோல் ஊற்றப்பட்டு தீவைத்துக் கொழுத்தப்பட்டது. கார் எரிந்துகொண்டிருக்கும் நிலையில் அவர் கடுமையாகத் தாக்கப்பட்டார். ஆனால், அதிஷ்டவசமாக கடுமையான காயங்களுடன் அவர் மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டு பின்னர் கடும் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்றுத் தேறினார். புதுடில்லிக்குச் செய்தி அனுப்புவதற்காக நிலைமைகளைப் பார்வையிட களத்தில் இறங்கிய அவரே பின்னர் புதுடில்லிக்கு செய்தியானார்.

1983 ஜூலைக் கலவரத்தைப் பொறுத்தவரையில் இது இந்தியாவுக்கு ஒரு சிறிய செய்திதான். ஆனால் இதன் பின்னணியில் அப்போதைய சிங்களவர்களின் மனநிலையைத்தான் புரிந்துகொள்ள வேண்டும். இந்தியர்கள் என்றால் அவர்கள் அனைவருமே தமிழர்கள்தான் என்ற ஒரு எண்ணம் சாதாரண சிங்கள மக்களிடம் அப்போது காணப்பட்டது. அது தமிழத் திரைப்படங்கள் ஏற்படுத்திய தாக்கமாக இருக்கலாம். அத்துடன் இந்தியா எப்போதும் தமிழர்களுக்கு ஆதரவான நாடு அதனால் சிங்களவர்களுக்கு ஆபத்து என்ற ஒரு கருத்தும் சிங்களவர்களின் அடி மனதில் பதிந்துபோயிருந்தது.

1971 கிளர்ச்சியில் ஈடுபட்ட ஜே.வி.பி., இந்திய விஸ்தரிப்பு என்பதை தமது பிரச்சாரங்களில் பிரதானமான ஒன்றாக எடுத்திருந்தது. இது ஒருவகையில் இனவாதத்தையும் கலந்த ஒரு பிரச்சாரமாகவே இருந்தது. ஜே.வி.பி.யின் பிரச்சாரங்கள் சிங்களவர்களை முழுமையாகக் கவரவில்லை என்ற போதிலும் இந்த இந்திய விஸ்தரிப்புவாதம் என்ற கருத்து சிங்கள மக்களின் மனதில் பதிந்திருந்தது. இந்தியா பற்றிய ஒரு அச்சம் அவர்களிடம் பதிந்திருந்தது.

இந்தப் பின்னணியில் தமிழ்ப் போராளிகளின் ஆயுதப் பயிற்சி முகாம்கள் தென்னிந்தியாவில் செயற்படுவதாக 1982 நடுப்பகுதியில் வெளியான செய்திகளும், பிரபாகரன் மற்றும் உமா மகேஸ்வரன் ஆகியோரை நாடு கடத்துவதற்கு இந்தியா மறுத்திருந்தமையும் இந்தியாவையும் தமது எதிரியாகக் கருதும் ஒரு மனப்பான்மையை சிங்களவர்களிடம் ஏற்படுத்தியிருந்தது. இந்தியத் தூதரக அதிகாரி என ஏப்ரஹாம் தன்னை வெளிபடுத்திய பின்னரும் அவர் தாக்கப்பட்டமைக்கு இவைதான் காரணம்.

ஆனால் இந்த இடத்தில்தான் மற்றொரு முக்கியமான உண்மையைப் பார்க்க வேண்டும். மத்யூ ஏப்ரஹாம் தன்னை ஒரு இந்தியத் தூதரக இராஜதந்திரி என அறிமுகப்படுத்திக்கொண்ட போதிலும், அவரது இந்த இராஜதந்திர நியமனத்தின் பின்னணியில் ஒரு மர்மம் உள்ளது. உண்மையில் அவர் ஒரு உளவாளி. வெளிநாட்டுப் புலனாய்வுத் தகவல்களைத் திரட்டுவதற்காக இந்தியாவால் அமைக்கப்பட்ட றோ (Research And Analysis Wing- RAW) என்ற பலனாய்வு அமைப்பின் ஒரு சிரேஷ்ட் உறுப்பினராகவே அவர் கொழும்புக்கு அனுப்பப்பட்டிருந்தார். கொழும்பில் இந்தியத் தூதரகத்தில் இராஜதந்திரப் பணி என்பது அவரது பாதுகாப்புக்காக வழங்கப்பட்டிருந்த ஒரு ‘கவர்" என்று சொல்லலாம்.

இவ்வாறு கொழும்பில் புலனாய்வு நடவடிக்கைகளை 1982 ஆம் ஆண்டிலேயே ஆரம்பித்திருந்த இந்தியா, இலங்கையைக் கையாள்வதற்கான சில திட்டங்களையும் வகுத்திருந்தது. அந்த நிலையில்தான் ஜூலைக் கலவரம் வெடித்தது. தமிழகத்தின் இது ஏற்படுத்திய உணர்வலைகளையடுத்து கொழும்புக்கு விஷேட தூதுவர் ஒருவரை அனுப்ப இந்தியா தீர்மானித்தது. இதன் மூலமாக அரசியல் காய்நகர்த்தல் ஒன்றையும் இந்திரா காந்தி மேற்கொண்டார்.

கொழும்பு எரிந்துகொண்டிருந்த நிலையிலேயே இந்தியப் பிரதமர் இந்திரா காந்தியால் அனுப்பப்பட்ட அந்தத் தூதுவர் கொழும்புக்கு விமானம் ஏறினார்…

அது பற்றிய தகவல்களுடன் அடுத்த கட்டுரை.
 

Sunday, April 21, 2013

வடமாகாண தேர்தலும் கள நிலைமையும்

வடக்கில் ஊடகத்துறை மீது மீண்டும் ஒரு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. வடமாகாண சபைக்கான தேர்தல் செப்டம்பர் மாதத்தில் நடைபெறும் என சர்வதேச சமூகத்தின் முன்பாக அரசாங்கம் உறுதியளித்திக்கும் நிலையில், வடபகுதியின் பாதுகாப்பு நிலை அச்சமூட்டும் வகையில் மாற்றமடைந்து செல்கின்றது. கடந்த ஒரு மாத காலப்பகுதிக்குள் அரசியல் கட்சிச் செயலகங்கள், ஊடகத்துறை என்பவற்றின் மீது மூன்று தாக்குதல்;கள் இடம்பெற்றிருக்கின்றன. வடபகுதி இராணுவ மயமாக்கப்பட்டுள்ளது என்பதைப் புலப்படுத்தும் வகையில் அங்குள்ள இராணுவத்தின் எண்ணிக்கையை வெளியிட்டமைக்காக யாழ். மாவட்ட எம்.பி. சுரேஷ் பிரேமச்சந்திரன் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் விசாரணைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார். சுதந்திரமான அரசியல் செயற்பாடுகளுக்கும், ஊடகத்துறையின் சுயாதீனத்துக்கும் வடக்கில் காணப்படும் அச்சுறுத்தலைத்தான் இந்தச் சம்பவங்கள் உறுதிப்படுத்துவதாக அமைந்திருக்கின்றது. இந்த நிலையில் வடபகுதியில் சுயாதீனமான ஒரு தேர்தலை எதிர்கொள்ளக் கூடியதாக இருக்குமா என்பதுதான் இன்று எழுப்பப்படும் பிரதான கேள்வி! அதேவேளையில் சுயாதீனமானதும், நியாயமானதுமான ஒரு தேர்தலுக்கான கள நிலவரத்தை உருவாக்கக்கோரி அரசுக்கு அழுத்தங்கொடுக்க வேண்டிய ஒரு தேவையும் உருவாக்கப்பட்டுள்ளது.
 
போர் முடிவுக்கு வந்து நான்கு வருடங்கள் பூர்த்தியாகும் நிலையில் கூட, வடமாகாண சபைக்கான தேர்தலை நடத்துவதில் விருப்பமற்ற ஒரு நிலையிலேயே அரசாங்கம் இருந்துவருகின்றது. அரசாங்கத்தின் இந்த விருப்பமின்மைக்கான காரணம் புரிந்துகொள்ள முடியாத ஒன்றல்ல. ஆளும் கட்சி வெற்றிபெறுவதற்கான வாய்ப்புக்கள் வடபகுதியில் இருந்தால் அரசாங்கம் தேர்தலை எப்போதோ நடத்திமுடித்திருக்கும். தேர்தலை உடனடியாக நடத்த வேண்டும் என சர்வதேச சமூகத்தினால் கொடுக்கப்பட்டுவரும் அழுத்தங்களின் விளைவாகவே செப்டம்பரில் தேர்தலை நடத்தப்போவதாக அரசாங்கம் உறுதியளித்திருக்கின்றது. இதற்கு முன்னரும் இவ்வாறான உறுதிகள் வழங்கப்பட்டிருந்தாலும், .நா. மனித உரிமைகள் பேரவையின் தீர்மானத்திலும் இது இணைக்கப்பட்டிருப்பது அரசுக்கான அழுத்தத்தை அதிகரித்திருக்கின்றது. இது எவ்வாறிருந்தாலும், தேர்தலை மீண்டும் ஒத்திவைப்பதற்குக் கிடைக்கக்கூடிய எந்த ஒரு காரணத்தையும் பயன்படுத்திக்கொள்ள அரசாங்கம் தயாராகவே இருக்கின்றது. அரசாங்கத்தின் செயற்பாடுகளே அதனை உறுதிப்படுத்துவதாக உள்ளது.
 
தேர்தல் செப்டம்பரில் நடைபெறும் என அரசாங்கம் அறிவித்திருந்தாலும், அதற்கான களநிலைமைகள் உருவாக்கப்பட்டுவிட்டதா என்பது ஆராயப்பட வேண்டிய ஒன்றாக உள்ளது. வடக்கில் திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்கள் தீவிரப்படுத்தப்பட்டுள்ள அளவுக்கு, போரால் இடம்பெயர்ந்தவர்களுக்கான மீள்குடியேற்றத்துக்கு அக்கறை காட்டப்படவில்லை. இதனால், மீள்குடியேற்றம் என்பது பூர்த்தியடையாத ஒன்றாகவே உள்ளது. வடக்கில் இராணுவப் பிரசன்சம் குறைக்கப்படவில்லை. வடபகுதியில் சிவில் விவகாரங்களில் இராணுவத் தலையீடுகள் இன்னும் தொடர்வதாகவே செய்திகள் கூறுகின்றன. இவற்றுக்கு மேலாக சுதந்திரமான அரசியல் செயற்பாடுகளுக்கும் ஊடகங்களின் சுயாதீனத்துக்கும் அச்சுறுத்தலான ஒரு நிலை வடக்கில் உருவாக்கப்பட்டுள்ளது. வடக்கில் நேரில் சென்று நிலைமைகளை ஆராய்ந்த கபே அமைப்பின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கீர்த்தி தென்னக்கோனும் இதனை உறுதிப்படுத்தியிருக்கின்றார்.
 
யாழ். தெல்லிப்பளையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரால் நடத்தப்பட்ட சாத்வீகப் போராட்டத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதலிலிருந்து, கிளிநொச்சியில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அலுவலகத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதல் வரை உணர்த்தியிருப்பது ஒன்றைத்தான். அதாவது சுதந்திரமான அரசியல் செயற்பாடுகளுக்கு அங்கு இடமில்லை என்பதுதான் அது. இதனைவிட ஊடகத்துறையினர் மீது நடத்தப்பட்டுள்ள தாக்குதல்கள் சுதந்திரமான ஊடகச் செயற்பாடுகளைக் கேள்விக்குள்ளாக்கியுள்ளது. வடபகுதியில் ஊடகத்துறை அச்சுறுத்தலுக்குள்ளாவது இன்று வழமையானதொரு நிகழ்வாகிவிட்டது. இந்தத் தாக்குதல்களுடன் சம்பந்தப்பட்டவர்கள் யாரும் கைது செய்யப்படவோ அல்லது விசாரணைக்குள்ளாக்கப்படவோ இல்லை. பெருமளவுக்கு இராணுவம் உள்ள நிலைமையிலும் தாக்குதல்தாரிகள் இலகுவாகத் தப்பிச் செல்வது தொடர்பில் எதிர்க்கட்சிகள் எழுப்பும் நியாயமான கேள்விகளுக்கு அரச தரப்பிலிருந்து உரிய பதில் கிடைப்பதில்லை.
 
வடமாகாண சபைக்கான தேர்தல் செப்டம்பரில் நடத்தப்படும் என அரச தரப்பினரால் உறுதியளிக்கப்பட்டுள்ள நிலையில், வடபகுதியில் இடம்பெறும் இவ்வாறான நிகழ்வுகள் சர்வதேசத்தின் அக்கறைக்குள்ளாகியுள்ளன. உதயன் பத்திரிகை அலுவலகத்தின் மீது யாழ்ப்பாணத்தில் கடந்தவாரம் இடம்பெற்ற தாக்குதல் தொடர்பில் அமெரிக்கா கண்டனத்தை வெளியிட்டுள்ளதுடன், இதில் சம்பந்தப்பட்டவர்கள் சட்டத்தின் முன்பாக நிறுத்தப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தியிருந்தது. அரச தரப்பிலிருந்து இவ்விடயம் தொடர்பில் முரண்பாடான பிரதிபலிப்புக்களே முதலில் வெளிவந்திருந்தது. ஆனால், மூன்று பொலிஸ் குழுக்கள் இது தொடர்பில் விசாரணைகளை நடத்திவருவதாக பொலிஸ் தரப்பில் இப்போது கூறப்பட்டிருக்கின்றது. தாக்குதல் சம்பவங்கள் தொடர்பில் கண்டனங்கள் உருவாகும் போது விசாரணைகளுக்காக பொலிஸ் குழுக்களை அமைப்பது என்பது இலங்கையில் வழமையானதொன்றுதான். ஆனால், இந்த விசாரணைகளுக்கு பின்னர் என்ன நடைபெறுகின்றது என்பது ஒருவருக்கும் தெரிவதில்லை. யுhழ்ப்பாணத்தில் 13 வருடங்களுக்கு முன்னர் ஊடகவியலாளர் எம்.நிமலராஜன் கொல்லப்பட்டதிலிருந்து ஊடகத்துறை மீது நடத்தப்பட்ட எந்தவொரு தாக்குதலுடனும் சம்பந்தப்பட்டவர்கள் கைது செய்யப்பட்டு விசாரணைக்குள்ளாக்கப்பட்டதாக தகவல் இல்லை. ஆந்த வகையில் அரசாங்கம் கூறும் விசாரணை என்பதில் நம்பிக்கையிழந்தவர்களாகவே மக்கள் உள்ளார்கள்.
 
வடமாகாண சபைக்கான தேர்தல் நடத்தப்பட்டு அதன் நிர்வாகம் மக்கள் பிரதிநிதிகளிடம் ஒப்படைக்கப்படுவது எந்தளவுக்கு முக்கியமோ, சுதந்திரமான அரசியல் செயற்பாடுகளுக்கும், சுயாதீன ஊடகத்துறைக்கும் உத்தரவாதமளிக்கப்படுவதும் அவசியமானதாகும். இதன் மூலமாகவே நியாயமானதும், சுயாதீனமானதுமான ஒரு தேர்தலை எதிர்பார்க்க முடியும். போர் முடிவுக்கு வந்து நான்கு வருடங்கள் சென்றுள்ள நிலையிலும், வடமாகாணத்தில் அவ்வாறான ஒரு நிலை உருவாக்கப்படவில்லை. அரசாங்கத்தினால் நியமிக்கப்பட்ட கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்கத்துக்கான ஆணைக்குழவின் அறிக்கையிலும் இது தொடர்பில் முக்கியமாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், அதற்கான செயற்பாடுகள் எதுவும் முடுக்கிவிடப்படவில்லை. இப்போது தேர்தலுக்கான தயாரிப்புக்கள் ஆரம்பமாகியுள்ளன. இந்த நிலையில் நேர்மையானதும், சுயாதீனமானதுமான தேர்தலை உறுதிப்படுத்தும் வகையில் அரசாங்கம் செய்ய வேண்டிய பணிகள் பல உள்ளன. சுயாதீனமான ஊடகத்துறை, சுதந்திரமான அரசியல் செயற்பாடுகள் உறுதிப்படுத்தப்படுவது அவற்றில் முக்கியமானவை. இவற்றை அரசாங்கம் செய்யுமா?
 
தினக்குரல்: 2013-04-21)

Friday, April 19, 2013

இலங்கையில் இந்தியத் தலையீடு 02: செல்வாக்கு செலுத்திய காரணிகள்

லங்கையின் இனப் பிரச்சினையில் இந்தியா எவ்வாறு சம்பந்தப்பட்டது, இதனை எவ்வாறு பயன்படுத்தியது என்பவற்றைப் பார்ப்பதற்கு முன்னதாக தென்னாசிப் பிராந்தியத்தில் இந்தியா பெற்றுள்ள முக்கியத்துவம் என்ன என்பதையும், இந்தியா தன்னுடைய வெளிவிவகாரக் கொள்கையை எவ்வாறு வகுததுக்கொண்டது  என்பதையும் பார்ப்பது அவசியம். இலங்கை விவகாரத்தை இந்தியா ஏன் தன்னுடைய கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முற்பட்டது என்பதைப் பார்ப்பதற்கு இந்தப் பின்னணியைத் தெரிந்துவைத்திருப்பது அவசியமாகும்.

தெற்காசியப் பிராந்தியத்தைப் பொறுத்தவரையில் இந்தியா புவியியல் ரீதியாக மத்திய இடத்தைப் பெற்றிருக்கின்றது. தென்னாசியாவிலுள்ள ஏனைய நாடுகளுடனான உறவுகளைப் பொறுத்தவரையில் இந்தப் புவியியல் அமைப்பு தனித்துவமான ஒன்றாக உள்ளது. தெற்காசியாவிலுள்ள நாடுகள் அனைத்துமே இந்தியாவுக்கு அடுத்ததாக அதாவது இந்தியாவுடன் ஒட்டிக்கொண்டதாகவே அமைந்திருக்கின்றன. அதனால் எந்தவொரு நாட்டிலிருந்து மற்றொரு தெற்காசிய நாட்டுக்குச் செல்வதாயின் இந்திய வான் பரப்பைப் பயன்படுத்தித்தான் செல்ல வேண்டும்.

மாலைதீவு மட்டும் இதற்கு விதிவிலக்கு. ஆனால், மாலைதீவில் 1988 இல் இடம்பெற்ற சதிப் புரட்சி முயற்சியை முறியடிப்பதற்குத் தன்னுடைய படைகளை அனுப்பியதன் மூலம் மாலைதீவு கூட தன்னுடைய ஆளுகைக்கு உட்பட்ட ஒன்றாகவே இருக்கின்றது என்பதை இந்தியா உணர்த்தியது. புளொட் அமைப்பின் ஆதரவுடன் மாலைதீவின் அரச அதிருப்தியாளர்கள் மேற்கொண்ட ஆயுதப் புரட்சியில் கிட்டத்தட்ட மாலைதீவு முழுமையாகக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்ட நிலையில்தான் இந்தியப் படை மாலைதீவுக்கு அனுப்பப்பட்டடு அதனை மீட்டெடுத்தது என்பது கவனிக்கப்படவேண்டிய ஒன்றாகும். (இது பற்றிய தகவல்களை பின்னர் மற்றொரு அத்தியாயத்தில் பார்ப்போம்)

இந்தியாவின் இந்தப் பலம் இந்தியர்களைப் பொறுத்தவரையில் வரவேற்கத்தக்க ஒன்றாக இருந்தாலும் கூட, அதனைச் சுற்றியுள்ள நாடுகளுக்கு அச்சத்தைக் கொடுக்கக்கூடிய ஒன்று. தெற்காசியாவைப் பொறுத்தவரையில் ஏனைய நாடுகள் அனைத்தையும் விட இந்தியா பெரியது. இந்தியாவின் இந்தப் பருமனும், அதன் பலமும், சுற்றியுள்ள நாடுகளில் அதன் செல்வாக்கும், அந்த அயல்நாடுகளின் மனதில் இந்தியா தொடர்பான ஒரு அச்சத்தை ஏற்படுத்துவதாகவே அமைந்திருக்கின்றது.

குறிப்பாகச் சொல்லப்போனால் தமது நாட்டில் பிரச்சினைகளைத் தோற்றுவிக்க இந்தியாவுக்கு உள்நோக்கமும், ஆற்றலும் இருப்பதாக அயல் நாடுகள் கருதுகின்றன. இந்த அச்சத்துக்கு நியாயமான காரணங்களும் உள்ளன. இதில் கவனிக்கப்பட வேண்டிய மற்றொரு விடயமும் உள்ளது. தென்னாசிய வட்டாரத்திலுள்ள நாடுகளைப் பொறுத்தவரையில் இனத்துவக்குழுக்கள் அங்கு பெருமளவுக்கு உள்ளன என்பதுடன், அவற்றிடையே பிரச்சினைகளும் உள்ளன. இந்தப் பிரச்சினைகள் அதிகார வர்க்கத்துடனானதாக இருப்பதால் இதனை இந்தியா பயன்படுத்திக்கொள்ளலாம் என்ற அச்சம் அண்டை நாடுகளுக்கு இருப்பதில் நியாயம் இருக்கத்தான் செய்கின்றது.

சுதந்திரத்துக்குப் பிற்பட்ட இந்தியாவின் வரலாற்றைப் படித்தால் இவ்வாறு அயல் நாடுகளில் குழப்பங்களை ஏற்படுத்தக்கூடிய வகையிலான இந்தியாவின் செயற்பாடுகள் தொடர்பாக பெருமளவு தகவல்கள் உள்ளன. அயல்நாடுகளை இந்தியா சந்தேகத்துடன் நோக்குவதும் இந்தியாவை அயல்நாடுகள் சந்தேகத்துடன் நோக்குவதும் ஒரு தொடர் கதைபோல தொடர்ந்துகொண்டே செல்கின்றது.

சரித்திரத்துக்கு முற்பட்ட காலத்தைப் பார்த்தால் 1935 க்கு முற்பட்ட காலத்தில் பர்மா (மியன்மார்) கூட இந்தியாவின் ஒரு பகுதியாகத்தான் இருந்தது. சுதந்திரத்தின் போது இந்தியாவைப் பிரித்துதான் பாகிஸ்தான் உருவாக்கப்பட்டது. பின்னர் 1971 இல் இந்தப் பாகிஸ்தானிலிருந்து பிரித்துத்தான் பங்களாதேஷ் உருவாக்கப்பட்டது. பங்களாதேஷ் உருவாக்கப்பட்டதில் இந்தியாவின் பங்களிப்பு பிரதானமானது. இந்திய இராணுவத்தின் உதவி இல்லையெனில் பங்களாதேஷ் உருவாக்கப்பட்டிருக்காது.

தெற்காசியப் பிராந்தியத்தில் இந்தியாவின் வகிபாகம் என்ன என்பதையிட்டு ஆராய முற்படும் எவரும் இந்த உண்மைகளைக் கவனத்திற்கொள்ள வேண்டும். இன்று காணப்படுகின்ற நிலைமைகளுக்கு மட்டுமன்றி இனிமேல் நிகழப்போகும் சம்பவங்களுக்கும் இது முன்னோடியாக இருக்கும். அத்துடன் இதில் படித்துக்கொண்ட பாடங்களும் எதிர்காலத்தில் பங்களிப்பைச் செலுத்துவதாக அமையும்.

இதனைவிட இலங்கை தொடர்பிலான இந்தியாவின் கொள்கையை வகுத்துக்கொள்வதில் தமிழகத்தின் உணர்வுகளும் முக்கியமானவையாக இருந்துள்ளன. தமிழ்த் தேசியத்தின் உணர்வூற்றாக தமிழகம் திகழும் அதேவேளையில், இலங்கை விவகாரத்தில் தாக்கத்தை எற்படுத்தக் கூடியதாகவும் அது உள்ளது. அந்தளவுக்கு தமிழகத்தின் உணர்வுகள் இலங்கை தொடர்பான இந்தியாவின் கொள்கை வகுப்பில் செல்லாக்கைச் செலுத்தக்கூடிய ஒன்றாகவே சி.என்.அண்ணாத்துரை முதலமைச்சராக இருந்த காலம் முதல் இருந்துள்ளது.

அதன் பின்வந்த காலங்களில் தமிழகத் தலைவர்களின் ஈழத்தமிழர் மீதான பற்றுறுதியின் அடிப்படையில் இது பல ஏற்றத்தாள்வுகளைச் சந்தித்து வருவதைக் காணலாம். ஆனால், இலங்கை தொடர்பிலான இந்தியாவின் அணுகுமுறையைத் தீர்மானிப்பதில் தமிழகத்தைப் புறக்கணித்துவிட்டு எதுவும் செய்ய முடியாது என்பது மட்டும் உண்மை. இந்த நிலை இன்று வரையில் தொடர்வதைக் காணலாம். இது உள்நாட்டு தேர்தல் – அரசியலுடன் தொடர்புபட்டதாக இருந்தாலும் கூட, இந்திய வெளியுறவுக் கொள்கை வகுப்பில் தமிழகத்தின் முக்கியத்துவம் கவனத்திற்கொள்ளப்பட வேண்டிய ஒன்றாகவே உள்ளது.

இந்தியாவின் வெளியுறவக்கொள்கையை வகுப்பதில் முன்னோடியாகச் செயற்பட்டவர் ஜவஹர்லால் நேரு. நேருவின் வெளியுறவுக்கொள்கை புவியியல் செயற்றின் காரணிகளாலும், இனத்துவத் தேசியத்தினாலும் உந்தப்பெற்ற ஒன்றாகவே இருந்துள்ளது என விமர்சகர்கள் குறிப்பிடுகின்றார்கள். நேரு பாதுபாப்பு அம்சங்களைப் புறக்கணித்துவிடவில்லை. இந்திய இராணுவ பலத்தைக் கட்டியெழுப்பினார். இந்தியா தன்னை ஒரு உலக வல்லரசாகக் காட்டிக்கொள்ள அல்லது கட்டியெழுப்ப விரும்பியது. இந்த விருப்பத்தை முன்னெடுப்பதாயின் அயல்நாடுகளுடனான உறவுகளைச் சிறப்பாகப் பேணிக்கொள்ள வேண்டும்.

நேருவின் காலத்தில் உருவாக்கப்பட்ட இந்த இலக்கை அடைவதில் இந்தியாவுக்குச் சில சிக்கல்கள் இருந்துள்ளன. குறிப்பாக தமது அண்டைநாடுகளுடனான உறவுகளைச் சிறப்பாகப் பேண முடியாத நிலை இந்தியாவுக்கு அதன் சுதந்திரத்தின் பின்னர் காணப்பட்டது. இதனால் இந்திரா காந்தியின் காலத்தில் இந்தியா தெற்காசியாவில் ஒரு பொலிஸ்காரனாகச் செயற்பட முற்படுகின்றது எனக் கூறத்தக்க வகையில் அதன் செயற்பாடுகளில் மாற்றம் ஏற்பட்டது. அதாவது தன்னுடைய அயல்நாடுகளில் காணப்படும் பிரச்சினைகள் தொடர்பில் தன்னிடம் முறையிட வேண்டும் என்ற எதிர்பார்ப்பு இந்தியாவுக்கு ஏற்பட்டது.

இது இந்திரா காந்தியால் உருவாக்கப்பட்ட ஒரு கொள்கையாக இருந்தமையால் இது இந்திரா கோட்பாடு என அழைக்கப்பட்டது.

இந்தியாவின் வெளியுறவுக்கொள்கைக்கான அடிச்சட்டம் ஒன்று இருந்தபோதிலும், காலத்துக்கும் தேவைகளுக்கும் ஏற்றவகையில் அதில் மாற்றங்கள் செய்யப்பட்டன. அத்துடன் குறிப்பிட்ட காலத்தில் பிரதமராக இருந்தவர்களின் ஆளுமைகளும் இதனைத் தீர்மானிப்பதில் முக்கிய பங்கை வகிப்பதாக இருந்தது. இருந்த போதிலும் இலங்கை தொடர்பாக கொள்கை வகுப்பைப் பொறுத்தவரையில் இந்தியப் பிரதமரின் ஆளுமை மட்டுமன்றி தமிழக முதலமைச்சராக இருப்பவர்களின் ஆளுமைகளும் ஈழத் தமிழர் பிரச்சினையில் அவர்களுக்குள்ள பற்றுதலும் கூட இந்தியக் கொள்கை வகுப்பில் செல்வாக்கைச் செலுதக்கக்கூடிய காரணிகளாக இருந்துள்ளன.

இந்தக் கருத்துக்களை அடிப்படையாகக் கொண்டு 1983 இல் என்ன நடந்தது என்பதை அடுத்த கட்டுரையில் பார்ப்போம்..


தொடர்புகளுக்கு : webeditor9@gmail.com

Wednesday, April 17, 2013

இலங்கையில் இந்தியத் தலையீடு 01: இந்திய - புலிகள் போரின் ஆரம்பம்!

1987 அக்டோபர் 10 ஆம் திகதி அதிகாலை அமைதியாக இருந்த யாழ்ப்பாணத்தின் அமைதியைக் குலைத்துக்கொண்டு அடுத்தடுத்து பாரிய குண்டு வெடிப்புச் சத்தங்கள் யாழ்ப்பாணத்தையே அதிரவைக்கின்றன. குறுகிய கால அமைதி சீர்குலைந்துவிட்டது என்பதைப் புரிந்துகொண்ட மக்கள் பரபரப்புடன் எழுந்துவிட்டனர்.

என்ன நடைபெற்றது என்பது உடனடியாக யாருக்கும் தெரியவில்லை. ஆனால் ஏதோ நடந்துவிட்டது. இன்னும் நடக்கப்போகின்றது என்பதைப் புரிந்துகொண்ட மக்கள் வீதிக்கு வீதி சந்திக்கு சந்தி நின்று நிலைமைகளை அலசத் தொடங்குகின்றார்கள். இப்போது போல அப்போது தொலைபேசி வசதிகள் இல்லாமையால் தகவல்கள் முதலில் வதந்திகளாகவே வெளிவரும்!

வடக்கு – கிழக்குப் பகுதிகளில் இந்திய (அமைதி காக்கும்) படையினருக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் உருவாகியிருந்த முறுகல் நிலை – போராக வெடித்துவிட்டது என்பதைப் புரிந்துகொள்ள மக்களுக்கு நீண்ட நேரம் செல்லவில்லை. போர் ஆரம்பமாகிவிட்டது என்பதையும், குடாநாடு மீண்டும் போர்க்களமாகப் போகின்றது என்பதையும் அறிவிக்கும் ஒலிகளாகவே அந்த அதிகாலை வேளையில் அதிரவைத்த அந்தக் குண்டுச் சத்தங்கள் அமைந்திருந்தன.

யாழ்ப்பாணத்திலிருந்து வெளியாகும் ஈழமுரசு மற்றும் முரசொலி பத்திரிகைகளின் காரியாலயங்களே அந்த அதிகாலை வேளையில் குண்டு வைத்துத் தகர்க்கப்பட்டன. பத்திரிகைகளை அச்சடிக்கப் பயன்படுத்தப்படும் இயந்திரங்களுக்குள் குண்டுகளைப் பொருத்தி வெடிக்கவைத்து அவற்றைத் தகர்த்த இந்தியப் படையினர், பத்திரிகைகளின் அலுவலகங்களுக்கும் பாரிய சேதங்களை ஏற்படுத்தி விட்டுச் சென்றார்கள்.

இரவுக் கடமையை முடித்துவிட்டு அதிகாலையில் புறப்படத் தயாராக இருந்த ஊழியர்களையும், பத்திரிகையாளர்களையும் துப்பாக்கி முனையில் வைத்துக்கொண்டே இந்தக் கைங்கரியத்தை இந்தியப் படையினர் செய்து முடித்தார்கள்.

யாழ்ப்பாணத்தில் அப்போது நான்கு பத்திரிகைகள் வெளிவந்துகொண்டிருந்தன. மிகவும் பழைமையானது ஈழநாடு. அதனைவிட ஈழமுரசு, முரசொலி மற்றும் உதயன் ஆகிய பத்திரிகைகள் தினசரியாக வெளிவந்துகொண்டிருந்தன. யாழ்ப்பாண மக்களைப் பொறுத்தவரையில் காலையில் எழுந்தவுடன் பத்திரிகைகளைப் படிக்கும் பழக்கத்தைக் கொண்டவர்களாக அவர்கள் இருந்தமையால் இந்த நான்கு பத்திரிகைகளுமே யாழ்ப்பாணத்தில் அதிகளவுக்கு விற்பனையைக் கொண்ட பத்திரிகைகளாக இருந்தன.

இதில் ஈழமுரசும், முரசொலியும்தான் கொஞ்சம் தீவிரமான கருத்துக்களைப் பிரசுரித்துவருவதாகக் கருதியே அவற்றைத் தகர்ப்பதற்கு இந்தியப் படையினர் தீர்மானித்தார்கள். அதிகாலை வேளையில் அதிரடியாக இரண்டு பத்திரிகைக் காரியாலயங்களுக்குள்ளும் புகுந்துகொண்ட இந்தியப் படையினர் அங்கு பணிபுரியும் ஊழியர்களைத் தாக்கி அவர்களைத் துப்பாக்கி முனையில் வைத்துக்கொண்டு இயந்திர சாதனங்களில் வெடிகுண்டுகளைப் பொருத்தி அவற்றைத் தகர்த்தெறிந்தார்கள்.

இதேவேளையில் இந்தியப் படையின் மற்றொரு பிரிவினர் விடுதலைப் புலிகளின் தொலைக்காட்சி நிலையமான நிதர்சனம் அமைந்துள்ள கொக்குவில் பகுதியை நோக்கிச் சென்று கொண்டிருந்தார்கள். புலிகளின் குரல் வானொலியும் இங்கிருந்துதான் செயற்பட்டுவந்தது. நிதர்சனம் அலுவலகத்தையும் அதிகாலையில் சுற்றிவளைத்துத் தாக்குதல் நடத்திய இந்தியப் படையினர், அங்கிருந்த பெருந்தொகையான ஒலிபரப்பு மற்றும் ஒளிபரப்பு இயந்திர சாதனங்களை அழித்ததுடன், சிலவற்றைக் கைப்பற்றிக்கொண்டும் சென்றார்கள்.

வடக்கு கிழக்கில் விடுதலைப் புலிகள் மீது தாக்குதலைத் தொடுப்பதற்குத் தீர்மானித்த இந்தியப் படையினர், அதற்கு முன்னதாக குடாநாட்டில் தமிழர்களின் குரலாக வெளிவந்துகொண்டிருந்த ஊடகங்களை முடக்குவதற்கு முற்பட்டனர். போர் ஒன்றில் முதலில் மரணிப்பது உண்மை என்று கூறுவார்கள். ஆனால், இந்தியப் படையோ போரைத் தொடங்குவதற்கு முன்னரே உண்மைகள் வெளிவருவதற்கு இருந்த வழிகளைத் தடுத்துவிட்டனர். போர் பற்றிய செய்திகள் மக்களைச் சென்றடையக் கூடாது என்பதைத் திட்டமிட்டே இந்தியப் படை இதனைச் செய்தது.

குறிப்பாக அமைதி காக்க எனக் கூறி வடக்கு கிழக்கில் குவிக்கப்பட்ட இந்தியப் படை முன்னெடுக்கப்போகும் போர் மோசமாக இருக்கும் என்பதால் அது தொடர்பான பதிவுகள் இருப்பதை இந்தியத் தரப்பு விரும்பவில்லை.

ஊடகங்கள் மீதான தாக்குதல்களையடுத்து சில மணி நேரம் காணப்பட்ட மயான அமைதி மீண்டும் குலைந்தது. இந்தியப் படையின் மூன்று பட்டாலியன்களைக் கொண்டுள்ள 91 ஆவது படைப் பிரிவு பிரிகேடியர் ஜே.ராலி தலைமையில் யாழ்ப்பாணத்தை நோக்கிய தனது பாரிய படை நகர்வை கோட்டைப் பகுதியிலிருந்து ஆரம்பிக்க ஆயுத பாணிகளாக யாழ் நகரில் நிறுத்தப்பட்டிருந்த விடுதலைப் புலிகள் எதிர்த் தாக்குதல்களைத் தொடுத்தார்கள்.

இந்திய – விடுதலைப் புலிகள் போர் ஆரம்பமாகியது!

இந்தியாவுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையிலான இந்தப் போர் சுமார் இரண்டரை வருடங்களாகத் தொடர்ந்தது. இந்தியாவின் வியட்னாம் என வர்ணிக்கப்படும் அளவுக்கு மோசமான பின்னடைவுகளையும், இழப்புக்களையும் ஈழ மண்ணில் இந்தியா சந்தித்தது.

தமிழர்களுக்கு ஆதரவாக இருப்பதாக நம்பப்படும் இந்தியாவை விடுதலைப் பலிகளுக்கு எதிரான போருக்குத் தூண்டிவிட்டதன் மூலம் தமிழர்களுக்கு இந்தியாவை எதிரியாக்குவதில் வெற்றி பெற்றார் அப்போதைய ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்தன. ஜெயவர்த்தனவின் இராஜதந்தரக் காய் நகர்த்தல்களில் தோற்றுப்போன இந்தியா இன்றும் அதன் பலன்களை அனுபவிக்கின்றது.

இலங்கையில் உருவான இந்த இன நெருக்கடியில் இந்தியா எவ்வாறு சம்பந்தப்பட்டது? இனநெருக்கடியைப் பயன்படுத்தி தமது பிராந்திய நலன்களைப் பேணிக்கொள்வதற்காக இந்திய புலனாய்வுப் பிரிவுகள் வகுத்த திட்டங்கள்…அதில் தமிழ் அமைப்புக்கள் எவ்வாறு பலிக்காடாவாக்கப்பட்டது? தமிழகத் தலைவர்கள் குறிப்பாக எம்.ஜி.ஆர். இந்தப் போராட்ட அமைப்புக்களுடன் ஏற்படுத்தியிருந்த உறவுகள் எவ்வாறிருந்தது?

இந்திய – புலிகள் போருக்கு வித்திட்ட காரணிகள்… இதனை சிங்கள அரசு தனது நலன்களுக்கு எவ்வாறு பயன்படுத்திக்கொண்டது என்பது போன்ற நீங்கள் இதுவரையில் அறிந்திருக்காத புதிய உள்ளகத் தகவல்களுடன் இந்த அரசியல் வரலாற்றுத் தொடர் தொடர்ந்து வெளிவரும்.

தொடர்புகளுக்கு:  webeditor9@gmail.com

Monday, April 15, 2013

முடிவுக்கு வருகின்றதா சோமவன்சவின் அரசியல்?!

லைமைப் பதவியை பொருத்தமான ஒருவரிடம் கொடுத்துவிட்டு தான் ஒதுங்கியிருக்கப் போவதாக   அறிவித்திருப்பதன் மூலம் இலங்கையின் அரசியல் களத்தில் ஜே.வி.பி.யின் தலைவர் சோமவன்ச அமரசிங்க பரபரப்பை ஏற்படுத்தியிருக்கின்றார். ஏனையவர்களுக்கு இது ஒரு முன்மாதிரியாக இருக்கும் எனவும் அவர் அறிவித்திருக்கின்றார். இந்த நிலையில், ஜே.வி.பி.யின் அடுத்த தலைவர் யார் என்ற கேள்வியும் பலமாக எழுப்பப்பட்டுள்ளது.

தலைமைப் பதவியிலிருந்து சோமவன்ச விலகப்போகின்றார் என்ற செய்தி சில வாரங்களுக்கு முன்னரே வெளிவந்திருந்தது. அப்போது அவ்வமைப்பு அதனைத் திட்டவட்டமாக மறுத்திருந்தது. சோமவன்சவே தான் தலைமைப் பதவியிலிருந்தும் விலகப்போவதாக இப்போது மறைமுகமாக அறிவித்திருக்கின்றார். குருநாகலில் இடம்பெற்ற கூட்டம் ஒன்றில் உரையாற்றிய சோமவன்ச, இது தொடர்பில் கூறியிருக்கின்றார். அவரது உரையின் சாரம்சம் இதுதான்:

"தலைமைப்பீடத்தில் மாற்றம் ஒன்றை நாம் ஏற்படுத்த முடியாதா? அரசியல்வாதிகள் முச்சக்கரவண்டிகளில் பாராளுமன்றம் செல்லும் நிலையை மாற்றியமைக்க முடியாதா? தலைவர்களும் கட்சி உறுப்பினர்களும் இதனை உணர்ந்துகொள்ள வேண்டும். நாம் கட்சி உறுப்பினர்களை இணைத்துக்கொள்வது கட்சித் தலைவர்களாக அவர்கள் வருவார்கள் என்பதற்காக அல்ல. கட்சித் தலைவர் கட்சியின் சாதாரண உறுப்பினராவதற்கும், கட்சிக்காக அர்ப்பணித்துப் பணியாற்றிய உறுப்பினர் ஒருவர் தலைவராவதற்குமான தருணம் இப்போது வந்திருக்கின்றது. இவ்வாறான ஒரு முன்னுதாரணத்தை ஜே.வி.பி. ஏற்படுத்தும்."

சோமவன்ச சர்ச்சைக்குரிய இந்த அறிவித்தலை வெளியிட்டிருக்கும் தருணம் முக்கியமானது. கடந்த தேர்தல்களில் தோல்வியடைந்து அடுத்த கட்ட நகர்வை எவ்வாறு மேற்கொள்வது என்பதில் ஜே.வி.பி. குழம்பிப்போயுள்ள ஒரு தருணத்தில்தான் இந்த அறிவித்தலை சோமவன்ச வெளியிட்டுள்ளார். விலைவாசி உயர்வுக்கு எதிரான போராட்டம், அமெரிக்க,  இந்திய எதிர்ப்புப் போராட்டம் என எந்த ஒன்றையும் ஜே.வி.பி. அண்மைக்காலத்தில் கையில் எடுக்காததது அவ்வமைப்பு பலவீனப்பட்டுப்போயுள்ளதா என்ற கேள்வியை எழுப்பியிருக்கின்றது. எதிர்ப்புப் போராட்டங்கள் மூலமாகவே வளர்ச்சியடைந்த கட்சி கடந்த சில மாதகாலமாக போராட்டங்களுக்கான சந்தப்பம் இருந்தும் கூட அதனைப் பயன்படுத்தத் தவறிவிட்டது ஏன்?

ஆயுதப்போராட்டத்தின் மூலம் ஆட்சியைக் கைப்பற்றலாம் எனப் புறப்பட்ட அமைப்புத்தான் ஜே.வி.பி.! 1971 இல் இவர்கள் மேற்கொண்ட புரட்சி தோல்வியில் முடிவடைந்தபோது சுமார் 70,000 இளைஞர்கள் கொல்லப்பட்டனர். இதன் ஸ்தாபக தலைவர் றோஹண விஜயவீர உட்பட முக்கியமானவர்கள் கைது செய்யப்பட்டு தடுத்துவைக்கப்பட்டனர். 1977 இல் அதிகாரத்துக்கு வந்த ஜெயர்த்தனவின் ஆட்சிக்காலத்தில் விடுதலை செய்யப்பட்ட விஜயவீர, பின்னர் தேசிய அரசியல் நீரோட்டத்தில் இணைந்தார். 1982 ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். 1983 ஆம் ஆண்டுக் கலவரத்துக்கான பொறுப்பை ஜே.வி.பி. மீது சுமத்தி அவ்வமைப்பை ஜெயவர்த்தன தடை செய்த போது விஜயவீர தலைமறைவானார்.

தலைமறைவானவர் சும்மா இருக்கவில்லை. அடுத்த புரட்சிக்குத் தன்னைத் தயார்படுத்தினார். இரண்டாவது கிளர்ச்சி 1989-90 காலப்பகுதியில் பிரேமதாச அரசால் ஒடுக்கப்பட்டபோது விஜயவீர உட்பட ஜே.வி.பி.யின் தலைவர்கள் அனைவருமே கைது செய்யப்பட்டு கொரூரமாகக் கொல்லப்பட்டனர். ஜே.வி.பி.யின் உயர் பீடமான அரசியல் குழுவில் இருந்தவர்களில் ஒருவர் மட்டுமே அப்போது உயிர் தப்பினார். அவர்தான் சோமவன்ச. பிரேமதாச அரசின் சக்திவர்ந்த அமைச்சராக இருந்த சிறிசேன குரேயின் மிகவும் நெருங்கிய உறவினராக இருந்தமையால்தான் அவரால் தப்ப முடிந்தது. நீர்கொழும்பிலிருந்து படகில் தமிழகம் சென்ற அவர், பின்னர் அங்கிருந்து ஐரோப்பா சென்று செயற்படத் தொடங்கினார்.

ஜே.வி.பி. மீண்டும் அரசியல் நீரோட்டத்தில் இணைந்துகொண்ட நிலையில் இலங்கை திரும்பிய சோமவன்ச, 1989-90 காலக் கிளர்ச்சியின் போது உயிர் தப்பிய ஒரேயொரு ஜே.வி.பி.யின் பொலிட்பீரோ உறுப்பினர் என்ற முறையில் தலைவராக ஏகமனதாகத் தெரிவானார். சோமவன்ச கட்சியின் தலைவரான கதை இதுதான்!

2002 க்கு பிற்பட்ட காலம் ரணில் விக்கிரமசிங்க அரசுக்கும் விடுதலைப் புலிகள் அமைப்புக்கும் இடையில் சமாதானப் பேச்சுக்கள் இடம்பெற்ற காலமாகும். அரசியல் களத்தில் உச்ச நிலைக்குச் செல்வதற்கு இது ஜே.வி.பி.க்குப் பயன்பட்டது. அதாவது பேச்சுக்களுக்கு எதிரான போராட்டங்களை ஜே.வி.பிதான் முன்னின்று நடத்தியது. இதன் மூலம் 2004 பொதுத் தேர்தலில் பொது ஜன முன்னணியுடன் இணைந்து 44 இடங்களை ஜே.வி.பி.யினால் பெற முடிந்தது. ஆனால், மகிந்த அரசுடன் இணைந்து ஆட்சி அமைத்த பின்னர் ஜே.வி.பி.யின் வாக்கு வங்கிகள் அரித்துச் செல்லப்பட்டன. 2010 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் இது தெளிவாகத் தெரிந்தது. சரத் பொன்சேகாவுடன் இணைந்து களம் இறங்கிக்கூட 6 இடங்களைத்தான் பெறமுடிந்தது.

அடுத்தாக இடம்பெறக்கூடிய தேர்தல் ஒன்றில் மகிந்தவுடனோ, பொன்சேகாவுடனோ கூட்டுச் சேரும் நிலையில் ஜே.வி.பி. இல்லை. ஜே.வி.பி.யில் தீவிரமாகச் செயற்பட்டுவந்த குமார் குணரட்ணம் குழுவினரும் அங்கிருந்து வெளியேறிவிட்டனர். ஜே.வி.பி. பயன்படுத்திய ஏகாதிபத்திய எதிர்ப்பு, இந்திய எதிர்ப்பு என்பற்றை ஆளும் கட்சியே கையில் வைத்திருப்பதால் அவற்றைப் பயன்படுத்தி மக்கள் ஆதரவைப்பெறும் நிலையில் ஜே.வி.பி. இல்லை. அத்துடன் பொதுபல சேனா, சிங்கள ராவய, இராவண பாலய என்பனவும் இனவாதத்தையும், இந்திய எதிர்ப்பையும் தமது சொத்துக்களாக்கிவிட்டன. இந்த நிலையில் ஜே.வி.பி.யின் கையில் இன்று எதுவும் இல்லை. மற்றொரு தேர்தல் நடந்தால் இது தெளிவாகத் தெரியும்.

இந்தப் பின்னணியில்தான் தலைமைப்பதவியில் மாற்றம் ஒன்றைச் செய்து கட்சியைப் புதிய வடிவத்துடன் மக்கள் முன்கொண்டுவர ஜே.வி.பி. முற்படுகின்றதா என்ற கேள்வி எழுகின்றது. கட்சி ஒரு உச்ச நிலையில் உள்ளபோது தலைமைப் பதவியை விட்டுக்கொடுப்பது என்பது ஒரு முன்மாதிரியாக பெருந்தன்மைக்கு உதாரணமாக இருக்கலாம். அதாவது நெல்சன் மண்டேலா செய்ததைப்போல. ஆனால், இப்போது...?!

Sunday, April 14, 2013

படகுத் தமிழர்கள்

நம்பிக்கையின் சின்னமாக சித்திரைப் புத்தாண்டுக் கொண்டாட்டங்கள் களைகட்டியிருந்தாலும் கூட, ஈழத் தமிழர்களைப் பொறுத்தவரையில் நம்பிக்கையளிக்கும் எந்தவொரு நகர்வையும் காணமுடியவில்லை. போர் முடிந்து நான்கு வருடங்கள் பூர்த்தியாகப்போகின்றது. ஆனால், இடம்பெயர்ந்த தமிழர்கள் தமது முன்னைய வாழ்விடங்களில் மீளக்குடியேறி நிம்மதியான ஒரு வாழ்வை ஆரம்பிக்கும் நிலை இன்னமும் உருவாகவில்லை. ஆபத்தானது எனத் தெரிந்திருந்தும் படகுப் பயணங்களைத் தமிழர்கள் தொடர்ந்து தெரிவு செய்வது நிம்மதியானதும் நிரந்தரமானதுமான வாழ்வை அவர்கள் தேடியலைகின்றார்கள் என்பதையே வெளிப்படுத்துகின்றது. இதனை வெறுமனே பொருளாதார நோக்கத்தை அடிப்படையாகக் கொண்டது என வரையறுத்துவிடவும் முடியாது.

கடந்த ஒரு வார காலத்தில் மட்டும் இரண்டு சம்பவங்கள் ஊடகங்களில் பரபரப்பான செய்திகளாக வெளிவந்திருந்தது. முதலாவது - தமிழகத்திலிருந்து சுமார் 120 இலங்கைத் தமிழர்களுடன் புறப்பட்ட படகு ஒன்று நடுக்கடலில் தத்தளித்துக்கொண்டிருந்தபோது இந்திய கரையோர காவல்படையினரால் மீட்கப்பட்டிருக்கின்றது. தமிழகக் கரையிலிருந்து அவுஸ்திரேலியாவுக்குப் புறப்பட்டுச் சென்ற போதே நடுக்கடலில் இந்தப் படகின் இயந்திரம் பழுதடைந்தது. இந்தப் படகிலிருந்த அனைவரும் தமிழக முகாம்களில் உள்ள இலங்கைத் தமிழ் அகதிகள். இரண்டாவது சம்பவத்தில் சுமார் 60 பேருடன் மற்றொரு படகு அவுஸ்திரேலியா சென்றடைந்திருக்கின்றது. இந்தப் படகு எங்கிருந்து புறப்பட்டது என்பது இதுவரையில் அறிவிக்கப்படவில்லை. ஆனால், இலங்கை அல்லது இந்திய கரையிலிருந்துதான் இந்தப் படகும் புறப்பட்டிருக்க வேண்டும்.

இந்த இரு நாடுகளிலிருந்தும்தான் இலங்கைத் தமிழர்கள் அபாயம் நிறைந்த படகுகளில் அவுஸ்திரேலியாவை இலக்கு வைத்துச் செல்கின்றார்கள் என்பதை ஊடகச்செய்திகள் உறுதிப்படுத்துகின்றன. போர் முடிவுக்கு வந்த நான்கு வருடகாலப்பகுதியில் மட்டும் சுமார் 8,000 இலங்கைத் தமிழர்கள் அவுஸ்திரேலியாவை சட்டவிரோதமான முறையில் சென்றடைந்திருக்கின்றார்கள். இவர்களில் சிலர் திருப்பியனுப்பப்பட்டும் உள்ளார்கள். படகுப் பயணத்தை ஆரம்பித்து பிடிபட்டவர்கள், தென்கிழக்காசிய நாடுகளில் கைவிடப்பட்டவர்கள் என இந்தப் பட்டியல் நீண்டுகொண்டே செல்கின்றது. மேலும் பலர் முகவர்களிடம் பணத்தைக்கொடுத்துவிட்டு படகுகளுக்காகக் காத்திருக்கலாம்.

சட்டவிரோதமாக இடம்பெறும் இவ்வகையான படகுப் பயணங்களுக்கு எதிரான தீவிர பிரச்சாரத்தை அவுஸ்திரேலிய அரசாங்கம் அதன் தூதரகத்தின் மூலமாக இலங்கையில் முன்னெடுத்துவருகின்றது. இந்தப் பயணங்கள் ஆபத்தானவை எனவும், அந்த ஆபத்தையும்தாண்டி அவுஸ்திரேலியா வந்தடைந்தாலும் எந்தவிதமான பலன்களையும் பெற்றுக்கொண்டுவிட முடியாது எனவும் அவுஸ்திரேலிய தூதரகம் ஊடகங்கள் மூலமாக தொடர்ச்சியாகப் பிரச்சாரப்படுத்திவருகின்றது. அவுஸ்திரேலியா வந்தடைபவர்கள் கிறிஸ்மஸ் தீவுக்கே அனுப்பப்படுகின்றார்கள். இந்த நிலைமைகள் எதுவும் தெரியாமல்தான் தமிழர்கள் படகுப் பயணங்களைத் தெரிவு செய்கின்றார்கள் எனக்கருத முடியாது. இவை அனைத்தையும் தெரிந்துகொண்டும் தமிழர்கள் எதற்காக உயிரைப் பயணம் வைத்து படகுகளில் ஏறுகின்றர்கள் என்பதுதான் ஆராயப்பட வேண்டியது.

இலங்கையில் காணப்படும் நிச்சயமற்ற உள்நாட்டு நிலைமைகள்தான் இவர்களுடைய முடிவுக்கு பிரதான காரணமாகவுள்ளது. போருக்குப் பின்னர் நல்லிணக்க முயற்சிகள் எதுவும் இடம்பெறவில்லை என்பதை ஐ.நா. மனித உரிமைகள் பேரவையே ஏற்றுக்கொண்டிருக்கின்றது. இடம்பெயர்ந்த வன்னி மக்கள் மீளக்குடியேறினாலும் அங்கு வாழ முடியாத நிலை. இராணுவத்துக்காக அபகரிக்கப்படும் காணிகள், சிங்களக் குடியேற்றங்கள் என வடபகுதியின் அடையாளமே மாறிக்கொண்டிருக்கின்றது. கிழக்கு மாகாணத்திலும் பல தமிழ்க் கிராமங்கள் அடையாளத்தை இழந்துகொண்டிருக்கின்றது. அவுஸ்திரேலியாவுக்குப் படகுகளில் செல்பவர்களில் பெரும்பாலானவர்கள் வடக்கு கிழக்கு மக்களாக இருப்பதும் உறுதிப்படுத்தப்பட்ட ஒன்று. கௌரவமாக வாழக்கூடிய நிலை ஒன்று உருவாகும் என்ற நம்பிக்கை இருந்தால் எதற்காக இந்த மக்கள் நிச்சயமற்ற படகுப் பயணங்களைத் தெரிவு செய்கின்றார்கள்?

படகுப் பயணங்களை மேற்கொள்பவர்களில் இரண்டாது இடத்தில் இருப்பவர்கள் இந்தியாவில் அகதி முகாம்களில் வசிக்கும் இலங்கைத் தமிழர்கள். 120 அகதிகளுடன் புறப்பட்ட படகு கடந்த வாரம் நடுக்கடவில் தத்தளித்துக்கொண்டிருந்த நிலையில் மீட்கப்பட்டது. இச்சம்பவம் தமிழக ஊடகங்களில் அதிக முக்கியத்துவத்தைப் பெற்றதுடன், பல கேள்விகளையும் எழுப்பியிருக்கின்றது. தமிழகத்தில் சுமார் 115 முகாம்களில் ஒரு இலட்சம் இலங்கைத் தமிழர்கள் அகதிகளாகவுள்ளதாக பதிவுகள் கூறுகின்றன. இதில் பலர் 20 முதல் 30 வருடங்களாக முகாம்களில் 'அகதி' என்ற அந்தஸ்த்துடன் வாழ்பவர்கள். தமிழக வாழ்வில் இதனைவிட வேறு எந்த அந்தஸ்த்தும் அவர்களுக்குக் கிடைக்கப்போவதில்லை. மேற்கு நாடுகளில் அல்லது அவுஸ்திரேலியாவில் குறிப்பிட்ட வருடங்களுக்கு மேல் வாழ்ந்தால் பிரஜாவுரிமை கிடைக்கும். அதற்குரித்தான சலுகைகளையும் எதிர்பார்க்கலாம். ஆனால், தமிழகத்தில் அகதி என்ற பெயரிலேயே தமது சாரிசுகளும் வளர்வதை யார்தான் விரும்புவார்கள்? தாயகம் திரும்பினால் கௌரவமாக வாழலாம் என்ற நிலையும் இல்லை. தமிழக முகாம்களில் உள்ள இலங்கைத் தமிழர் ஆபத்து எனத் தெரிந்தும் படகுகளில் ஏறுவதற்கு இதுதான் காரணம்.

முன்னர் வியட்நாமியர்கள்தான் படகு மக்கள் என அழைக்கப்பட்டார்கள். போரினால் இடம்பெயர்ந்த நிரந்தரமாக வாழ்வதற்கு இடமின்றி அவர்கள் அலைந்தார்கள். இன்று அதேநிலையில் இலங்கைத் தமிழர்களும் உள்ளார்கள். தமிழர்கள் பெருமளவுக்கு படையெடுப்பது அவுஸ்திரேலியா போன்ற நாடுகளுக்கு நெருக்கடியைக் கொடுப்பதாக அமையலாம். அதனைத் தடுப்பதற்காக அவர்கள் எடுக்கும் நடவடிக்கைகளும் புரிந்து கொள்ளப்படவேண்டியவைதான். அதேவேளையில் இலங்கையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்காகவும், வடகிழக்கில் தமிழர்கள் சுதந்திரமான வாழ்க்கையை உறுதிப்படுத்துவதற்காகவும் செய்யவேண்டிய பணிகள் பல உள்ளன என்பதை சர்வதேசம் படகுத் தமிழர்களின் அவலங்களிலிருந்தாவது புரிந்துகொள்ள வேண்டும்!
 

(ஞாயிறு தினக்குரல்: 2013-04-14)
 




Friday, April 12, 2013

புதிய கட்சியும் சரத் பொன்சேகாவும்





இந்த வாரச் செய்திகளில் அதிகளவுக்குப் பெயர் அடிபட்டவராக மீண்டும் சரத் பொன்சேகா உள்ளார். ஜெனீவா தீர்மானம் தொடர்பில் அவர் தெரிவித்த கருத்துக்கள் ஏற்படுத்திய சர்ச்சைகளை ஏற்படுத்தியிருந்தாலும், அவரது கட்சியான ஜனநாயகக் கட்சியின் பதவி தேர்தல் திணைக்களத்தினால் ஏற்றுக்கொள்ளப்பட்டதை யடுத்து அரசியல் களத்தில் அவரது பெயர் மீண்டும் ஒரு சலசலப்பை ஏற்படுத்தியிருக்கின்றது.

ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ஷவின் ஆட்சியைக் கவிழ்த்து புதிய ஆட்சி ஒன்றை உருவாகக்கக்கூடிய வல்லமையைக்கொண்ட ஒருவராக தான் மட்டுமே உள்ளதாகக் கூறி அரசியல் அரங்கில் தனக்கென ஒரு தனியான இடத்தைப் பிடித்துக்கொள்வதற்கு பொன்சேகா முற்பட்டுள்ளார். புதிய கட்சிப் பதிவுடன் பொன்சேகா ஏற்படுத்திய சலசலப்பு தற்காலிமானதா அல்லது நீடிக்கக்கூடியதா என்ற கேள்வி அவரது ஆதரவாளர்கள் மத்தியிலும் எழுப்பப்பட்டுள்ளது.

இதற்கான பதிலைத்தான் நாமும் இந்த வாரத்தில் தேடப்போகின்றோம்.

2009 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் பொது எதிரணி வேட்பாளராகக் களமிறங்கி மகிந்த ராஜபக்‌ஷவிடம் தோல்வியடைந்தவர்தான் பொன்சேகா. இப்போது கட்சிப் பதிவுடன் அவர் மீண்டும் களத்தில் இறங்குவது மற்றொரு தேர்தலை இலக்காகக் கொண்டதாக இருக்கலாம். 2016 ஆம் ஆண்டில்தான் அடுத்த ஜனாதிபதித் தேர்தல் நடைபெற வேண்டும். ஆனால், அடுத்த வருடத்தில் திடீர்த் தேர்தல் ஒன்றை நடத்துவதற்கான எண்ணத்துடன் மகிந்த ராஜபக்‌ஷ செயற்படுகின்றார் என பொன்சேகாதான் முன்னர் ஒரு தடவை கூறியிருந்தார். அதற்காக எதிரணிகள் தம்மைத் தயார்படுத்திக்கொள்ள வேண்டும் எனவும் அவர் அழைப்பு விடுத்திருந்தார்.

ஜனாதிபதித் தேர்தலை விட்டால் இவ்வருட இறுதியிலும் அடுத்த வருடத்திலும் குறைந்த பட்சம் நான்கு மாகாண சபைகளுக்கான தேர்தலாவது நடைபெறவுள்ளது. தென்னிலங்கையில் உருவாகியிருக்கும் புதிய அரசியல் கூட்டணிகளுக்கான ஒரு பரீட்சைக்களமாகவும் இந்தத் தேர்தல்கள் அமையலாம். ஆனால், பொன்சேகாவைப் பொறுத்தவரையில் இந்தத் தேர்தல்களுக்காக தன்னைத் தயார்படுத்திக்கொள்வராக அவர் காணப்படவில்லை. ஜனாதிபதித் தேர்தலை இலக்காகக்கொண்டதாகவே அவரது நகர்வுகள் அனைத்தும் உள்ளன.

ஜனாதிபதித் தேர்தலைச் சந்திப்பதற்கு முன்னதாக பல தடைகளை அவர் தாண்டிச்செல்லவேண்டியுள்ளது. முதலாவது அவரது குடியுரிமை தொடர்பானது. இரண்டாவது, எதிர்க்கட்சிகள் பொது வேட்பாளராக அவரை ஏற்றுக்கொள்ளுமா என்பது.

ஜனாதிபதி ராஜபக்‌ஷவைப் பொறுத்தவரையில் எதிர்க்கட்சிகள் பலவீனமாக இருப்பது மட்டும்தான் அவருக்குச் சாதகமானது எனக்கூறமுடியாது. எதிர்க்கட்சிகள் பிளவுபட்டுப் போயிருப்பதும் அவருக்கு வரப்பிரசாதமாகவுள்ள மற்றொரு விடயம்.

சரத் பொன்சேகா ஜனநாயகக் கட்சியைக் காட்சிக்கு வைத்து அரசியலில் அடுத்த நகர்வை மேற்கொண்டுள்ள அதேவேளையில், ரணில் விக்கிரமசிங்கவும் சும்மாவிருக்கவில்லை. எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பு இயக்கம் என்ற பத்துக் கட்சிகளை உள்ளடக்கிய அமைப்பை உருவாக்கி, அடுத்த தேர்தலுக்குத் தன்னைத் தயார்படுத்தத் தொடங்கியுள்ளார். ராஜபக்‌ஷ ஆட்சியை வீட்டுக்கு அனுப்பும் பலம் தன்னிடம்தான் உள்ளது என்பதுதான் ரணிலின் பிரகடனம். இவை இரண்டிலும் இணையாமல் ஜே.வி.பி.யும் தனியான ஒரு பாதையில் செல்வதற்கு முற்பட்டிருக்கின்றது.

கடந்த ஜனாதிபதித் தேர்தலில் பொது எதிரணி ஒன்றை உருவாக்கி களத்தில் குதித்த பொன்சேகாவைப் பொறுத்தவரையில், இப்போது அந்த நிலை இல்லை. அப்போது ஒன்றாகக் குவிந்திருந்த எதிர்க்கட்சிகளின் பலம் இப்போது மூன்றாகப் பிளவுபட்டுப்போயிருக்கின்றது. இவை அனைத்தையும் ஓரணியின் கீழ் கொண்டுவருவதற்கான ஏற்பாடுகள் எதுவும் இப்போதைக்கு இல்லை என்றுதான் கூறவேண்டும்.

இந்த நிலையில், ராஜபக்‌ஷவைக் கவிழ்ப்பதற்கான பலம் தன்னிடம்தான் உள்ளது எனக்கூறிக்கொண்டு மூன்றாவது நபராக சந்திரிகா குமாரதுங்கவும் களத்தில் குதிப்பதற்கான தருணத்தைப் பார்த்துக்கொண்டுள்ளார். அதாவது, ஆட்சிக்கவிழ்ப்பைச் செய்வதற்கான பலம் தம்மிடம்தான் உள்ளது எனக் கூறிக்கொண்டு இன்று மூன்று நபர்கள் உள்ளார்கள்.

ரணிலைப் பொறுத்தவரையில் கடந்த ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதைத் தவிர்த்து அச்சந்தர்ப்பத்தை பொன்சேகாவுக்குக் கொடுத்திருந்தார். அதேபோல மீண்டும் ஒருமுறை ரணில் விட்டுக்கொடுப்பார் என எதிர்பார்க்கமுடியாது. ரணிலும் பொன்சேகாவும் தனித்தனியான பாதைகளில் செல்வதற்கு முற்பட்டால், அது ராஜபக்‌ஷவின் ஆட்சி தொடர்வதை உறுதிப்படுத்துவதாகவே அமையும்.

பொன்சேகா அரசியலுக்குப் புதியவர். அவரது கட்சியும் புதியது. இக்கட்சிக்குப் பாரிய தொண்டர்படை ஒன்று இல்லை. அவருக்கு வலது இடது கரங்களாக இருந்தவர்கள் இப்போது அவரிடம் இல்லை. ஏனைய கட்சிகளிலிருந்து பிரித்து எடுக்கக்கூடியவர்களை மட்டும்தான் அவர் நம்பியிருக்க வேண்டும். அவருக்கு இன்று இருப்பதெல்லாம் ஒன்றே ஒன்றுதான். அதாவது- முன்னாள் இராணுவத் தளபதி என்ற இமேஜ் மட்டும்தான் அவரிடம் எஞ்சியுள்ளது. பாரிய ஒரு ஆதரவுத் தளத்தையோ அல்லது நிரந்தரமான வாக்கு வங்கியையோ கொண்டிருக்கமல் அவர் களத்தில் இறங்க முற்படுவது புத்திசாலித்தனமாக இருக்கும் போலத் தெரியவில்லை.

ஜெனீவாவில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டுவந்த பிரேரணை சூடாக விவாதிக்கப்பட்டுக்கொண்டிருந்தபோது பரபரப்பான அறிக்கைகள் சிலவற்றை பொன்சேகா வெளியிட்டார். இவற்றில் இரண்டு விடயங்களை அவதானிக்க முடிந்தது:

1. போரில் வெற்றிபெற்ற இராணுவத்தின் தளபதி தானே என்பதை நினைவுபடுத்த அவர் முற்பட்டிருந்தார்.

2. ஐ.நா. பிரேரணைக்கு எதிரான கருத்துக்களை முன்வைத்ததன் மூலம் சிங்களத் தேசியவாதிகளின் அபிமானத்தைப் பெற்றுக்கொள்வதற்கு அவர் முயன்றார்.

ஆனால், இவை இரண்டும் ராஜபக்‌ஷவின் வாக்கு வங்கியை உடைப்பதற்கான வலிமையைக் கொண்டதாக இருக்கவில்லை. ஆளும் கட்சியினர் பலர் தம்முடன் இணைந்துகொள்ள இரகசியப் பேச்சுக்களைத் தம்டன் நடத்தியிருப்பதாக அவர் கூறியிருப்பது ஒரு உளவியல் ரீதியான தாக்குதலாக மட்டுமே இருக்கலாம். இப்போதைய நிலையில், ஆளும் கட்சியில் அதிருப்திகள் அதிகரித்திருந்தாலும் கூட, அரசனை நம்பிப் புருசனைக் கைவிடுவதற்கு ஆளும் கட்சியில் யாரும் தயாராகவில்லை.

ஆக, புதிய கட்சியை அமைத்துக்கொண்டதன் மூலமாக இப்போது பொன்சேகா ஏற்படுத்தியிருக்கும் சலசலப்பு வலிமையானதாக இருக்க வேண்டுமானால் அவர் தாண்டிச்செல்ல வேண்டிய தடைகள் பல உள்ளன.!

Wednesday, April 10, 2013

வடபகுதி காணிப்பிரச்சினை

போர் முடிவுக்கு வந்து நான்கு வருடங்கள் பூர்த்தியாகப்போகும் நிலையிலும் வடபகுதியில் உருவாகியுள்ள காணிப்பிரச்சினைக்கு இன்னும் தீர்வு காணப்படவில்லை. போர்க்காலத்தின்போது அதி உயர் பாதுகாப்பு வலயம் எனப் பிரகடனம் செய்யப்பட்டு மக்கள் வெளியேற்றப்பட்ட பல பகுதிகளில் மீளக்குடியேற்றத்துக்கு இன்னும் அனுமதி வழங்கப்படவில்லை. பாதுகாப்பு வலயங்கள் என எதுவும் இல்லை என அரச தரப்பு உத்தியோகபூர்வமாகக் கூறிக்கொண்டாலும், மக்கள் தாம் வாழ்ந்த பகுதிகளில் குடியேறமுடியாதவர்களாகவே இருக்கின்றார்கள். இதற்கு மேலதிகமாக இராணுவத்துக்கு காணிகளைப் பெறுவதற்காக மேற்கொள்ளப்படும் புதிய முயற்சிகள் மக்களை மேலும் அச்சமடையச் செய்திருக்கின்றது. அத்துடன் வடபகுதியை இராணுவக் கட்டுப்பாட்டுக்கு உட்பட்ட ஒரு பிரதேசமாக வைத்திருக்க அரசாங்கம் முயல்கின்றதா என்ற கேள்வியையும் இது எழுப்புகின்றது.

யாழ்ப்பாண மக்களின் காணிப் பிரச்சினைக்குத் தீர்வு காணும் பொருட்டு ஆரம்பித்து வைக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்ட காணி அபிவிருத்தி அமைச்சின் யாழ்.மாவட்ட அலுவலகம் படையினருக்குக் காணி சூவீகரிக்கும் செயற்பாடுகள் முழுவீச்சில் மும்முரமாக மேற்கொண்டு வருவதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. யாழ்ப்பாணத்தில் படையினரால் கோரப்பட்ட பெருமளவு தனியார் காணிகளைச் சூவீகரிக்கும் பகிரங்க அறிவித்தல்கள் மாவட்டக் காணி சூவீகரிப்பு அலுவலகம் ஊடாக வெளியிடப்பட்டுள்ளன. அதி உயர் பாதுகாப்பு வலயம் என்ற பெயரில் படையினரிடம் போர்க்காலத்தில் தாரைவார்த்த காணிகளுக்கு மேலாக, இப்போது சமாதானம் ஏற்பட்டுவிட்ட காலப்பகுதியிலும் தாரைவர்க்க வேண்டிய நிர்ப்பந்தம் மக்களை அதிர்ச்சியடையச் செய்திருக்கின்றது.

யாழ்ப்பாண மக்களின் காணிப் பிரச்சினைகள் தீர்த்து வைக்கப்படும் என்றும், அதற்காகவே இந்த அலுவலகம் திறந்து வைக்கப்பட்டுள்ளதாகவும் காணி அமைச்சர் யாழ்ப்பாணத்தில் வைத்து திறப்பு விழாவின் போது கூறியிருந்தார். அத்துடன் பொதுமக்களின் காணிகளை படையினர் சுவீகரிக்கமாட்டார்கள் என்றும், அதற்காக இந்த அலுவலகம் திறந்து வைக்கப்படவில்லை என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்திருந்தார். இது மக்களுக்கு சற்று நம்பிக்கையைக் கொடுத்ததது. சுமார் ஒரு மாதத்துக்கு முன்னர்தான் இந்த அலுவலகம் யாழ்ப்பாணத்தில் திறந்துவைக்கப்பட்டது.  ஆனால், ஒரு மாத காலப்பகுதியிலேயே இராணுவத்துக்காகக் காணிபிடிக்கும் செயற்பாடுகள் இந்த அலுவலகத்தினால் தீவிரமாக முன்னெடுக்கப்படுவது மக்கள் மத்தியில் சந்தேகங்களை ஏற்படுத்தியிருக்கின்றது.  தனியார் காணிகளைச் சுவீகரிப்பதற்கான செயற்பாடுகளே இந்த அலுவலகத்தினால் இப்போது முழுவீச்சில் முன்னெடுக்கப்படுகின்றது.

உயர்பாதுகாப்பு வலயப் பகுதியினுள் உள்ளடங்கும் தனியார் காணிகளின் சுவீகரிப்புத் தொடர்பில் பகிரங்க அறிவித்தல் விடுப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது. குறிப்பாக வலிகாமம் வடக்கில் தமக்குச் சொந்தமான வளம் நிறைந்த காணிகளை நிரந்தரமாகவே இழக்க வேண்டிய நிர்ப்பந்தம் மக்களுக்கு ஏற்பட்டுள்ளது. வலிகாமம் வடக்கு மக்கள் சுமார் இருபது வருடங்களுக்கு முன்னர் வெளியேற்றப்பட்டனர். மீளக்குடியமர்வு தொடர்பில் பல வாக்குறுதிகள் அவர்களுக்கு வழங்கப்பட்டாலும் எதுவும் நிறைவேற்றப்படவில்லை. யாழ்ப்பாணத்தில் அரச காணிகள் தொடர்பான விடயத்தை ஆளுநர் கையாள்கின்றார். தனியார் காணிகள் தொடர்பான விடயத்தை யாழ்.மாவட்ட காணி மற்றும் காணி அபிவிருத்தி அமைச்சின் காணி சுவீகரிப்பு அதிகாரி கையாள்கின்றார். இவை தொடர்பில் அரசாங்க அதிபர் அதிகாரங்கள் எதுவும் இல்லாதவராகவே இருக்கின்றார்.

வடமாகாண சபைக்கான தேர்தலை எதிர்வரும் செப்டம்பரில் நடத்தப்போவதாக அரசாங்கம் சர்வதேச சமூகத்துக்கு வாக்குறுதியளித்திருக்கும் ஒரு நிலையிலேயே இந்தக் காணிபறிப்புச் சம்பவங்கள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. யாழ்ப்பாணத்தில் மட்டுமன்றி வன்னிப்பிராந்தியத்திலும் இவ்வாறு காணிகளைச் சுவீகரிக்கும் செயற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள முள்ளியவளை மத்திய பகுதி, பொன்னர் பகுதி என்பவற்றில் காடுகளை அழித்து பாரிய படை முகாம்களையும், முஸ்லிம் முடியேற்றங்களையும் மேற்கொள்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இந்தத் திட்டங்களை முன்னெடுப்பதற்காக இந்தப் பகுதிகளில் நீண்டகாலமாகக் குடியிருக்கும் தமிழர்கள் அங்கிருந்து வெளியேறுமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளார்கள். இந்தப் பிரச்சினை இப்போது நீதிமன்றம்வரையில் சென்றிருக்கின்றது.

வடபகுதித் தேர்தல் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இந்தச் செயற்பாடுகள் துரிதப்படுத்தப்பட்டிருப்பது பல்வேறு சந்தேகங்களை உருவாக்குகின்றது. போரின்போது இடம்பெயர்ந்த மக்களின் மீள்குடியேற்றம் முழுமையடையாத நிலையில்தான் இவ்வாறான காணி பறிப்புக்கள் இடம்பெறுகின்றன என்பது கவனிக்கத்தக்கது. மீள்குடியேற்றச் செயற்பாடுகளை இது பெருமளவுக்குப் பாதிப்பதாக அமைந்திருக்கின்றது. அதேவேளையில், அவசரமாக மேற்கொள்ளப்படும் சிங்களக் குடியேற்றங்கள் மாவட்டத்தின் இன விகிதாசாரத்தில் செயற்கையான ஒரு மாற்றத்தை ஏற்படுத்துவதாக அமைந்திருக்கின்றது என்பதுடன், அது இனங்களுக்கு இடையில் முரண்பாடுகளைத் தோற்றுவிப்பதாகவும் அமைந்திருக்கின்றது.

படையினரின் தேவைகளுக்காக என சுவீகரிக்கப்படும் காணிகள் வடபகுதியில் படையினரின் அதிகரித்த பிரசன்னம் தொடர்ந்தும் இருக்கப்போகின்றது என்ற உண்மையையே வெளிப்படுத்துகின்றது. கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளில் வடபகுதியில் இராணுவத்தின் பிரசன்னம் குறைக்கப்பட வேண்டும் என்பது முக்கியமாக வலியுறுத்தப்பட்டிருக்கின்றது. ஜெனீவா தீர்மனத்திலும் இது முக்கியமாகக் குறிப்பிடப்பட்டிருக்கின்றது. அரசாங்கமும் இதனை தனது வாக்குறுதியாக பல முறை வெளிப்படுத்தியிருக்கின்றது.

போர் முடிவுக்கு வந்திருக்கும் நிலையில், இராணுவத்தை திரும்பப் பெற்று சட்டத்தையும் ஒழுங்கையும் பாதுகாக்கும் செயற்பாடுகளில் பொலிஸாரையே ஈடுபடுத்த வேண்டும் என்பது பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒன்று. ஆனால், அவசரமவசரமாக வடபகுதியில் படையினருக்காக காணி சுவீகரிக்கப்படுவது அரசாங்கத்தின் நோக்கங்களில் சந்தேகத்தையே ஏற்படுத்துகின்றது. மக்களின் விருப்பத்துக்கு முரணாண குடியேற்றங்களை மேற்கொள்வதுடன், இராணுவப் பிரசின்னத்தை அதிகளவில் வைத்திருப்பதன் மூலம் மக்களை அடக்கிவைத்திருக்கலாமே தவிர, உண்மையான சமாதானத்தை ஏற்படுத்திவிட முடியாது. அரசாங்கம் விரும்புவது எதனை?

Monday, April 8, 2013

மாத்தளைப் புதைகுழி மர்மம் என்ன? பலியானோர் ஜே.வி.பி.யினரா?

புதைகுழிகளின் சகாப்தம் முடிவுக்கு வந்துவிட்டது என எண்ணியிருக்கும் நிலையில் மாத்தளைப் புதைகுழி விவகாரம் இப்போது விஸ்வரூபம் எடுத்துள்ளது. சடலங்களைப் புதைகுழிகளுக்குள் போட்டு மூடி கொலைகளை மறைத்தமையைப் போல, புதைகுழி விவகாரத்தை அரசாங்கத்தினால் மூடி மறைத்துவிட முடியவில்லை. கடந்த மாதத்தில் கண்டுபிடிக்கப்பட்ட மாத்தளைப் புதைகுழிகள் ஜே.வி.பி.யின் இரண்டாவது கிளர்ச்சி உச்சகட்டத்திலிருந்த காலகட்டத்தைச் சேர்ந்தவையாகும். தற்போதைய ஆட்சியாளர்கள் அப்போது பதவியிலிருக்கவில்லை என்கின்ற போதிலும், சில அதிகாரிகள் இந்தப் பிரச்சினையில் சிக்கிக்கொள்ளலாம் என்பதால், அரசாங்கம் நிதானமாக காய்களை நகர்த்த வேண்டிய நிர்ப்பந்தத்தில் உள்ளது.

இது தொடர்பில் முழுமையான விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என ஜே.வி.பி. கோரிக்கை விடுத்துள்ளது. குறிப்பிட்ட காலப்பகுதியில் காணாமல்போன தமது உறுப்பினர்களின் விபரங்களைச் சேகரிக்கும் பணியில் ஜே.வி.பி. இறங்கியிருக்கின்றது. கொல்லப்பட்டு அந்தப் புதைகுழியில் போடப்பட்டவர்கள் ஜே.வி.பி.யினராக இருக்கலாம் என்ற சந்தேகம் நியாயமானதுதான். அந்த வகையில்தான் இது தொடர்பில் விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கையை ஜே.வி.பி. முன்வைத்திருக்கின்றது. ஆனால், அரசாங்கத்தைப் பொறுத்தவரையில் அதற்கு இது ஒருவித சங்கடமான நிலையை ஏற்படுத்தியிருக்கின்றது.

மாத்தளை வைத்தியசாலையின் அருகே புதிய கட்டம் ஒன்றுக்காக அத்திபாரத்தை வெட்டியபோதுதான் ஒன்றொன்றாக எலும்புக்கூடுகள் வெளிப்படத் தொடங்கின. ஒன்று - இரண்டு என 160 பேருடைய எலும்புக்குடுகள் வெளிப்பட்டபோது நாடே அதிர்ச்சியடைந்தது. பிரத்தானிய ஆட்சிக்காலத்தின்போது பரவிய தொற்று நோய் ஒன்றால் பலியானவர்களின் சடலங்களாக இவை இருக்கலாம் என்றே முதலில் கருதப்பட்டது. ஆனால், எலும்புகளையும் மனித எச்சங்களையும் பரிசோதனைக்குட்படுத்திய சட்டமருத்துவ அதிகாரிகள் சமர்ப்பித்த அறிக்கை அதிர்ச்சியின் உச்சத்துக்கே அனைவரையும் கொண்டு சென்றது.


மீட்கப்பட்ட மனித எச்சங்கள் 1989-90 ஆம் ஆண்டு காலப்பகுதியைச் சேர்ந்தவை என சட்ட மருத்துவ அதிகாரிகள் தெரிவித்தனர். இதனைவிட மற்றொரு கருத்தும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது. கொடூரமான சித்திரவதையின் பின்னரே இவர்கள் கொல்லப்பட்டுள்ளார்கள் இந்த அறிக்கையில் காணப்படும் இரண்டாவது அம்சம்.

இரண்டு விடயங்களை இந்த அறிக்கை வெளிப்படுத்தியிருக்கின்றது. ஜே.வி.பி.யின் இரண்டாவது கிளர்ச்சி உச்சத்திலிருந்த காலப்பகுதியில் கொல்லப்பட்டவர்களே இங்கு புதைக்கப்பட்டுள்ளார்கள் என்பது முதலாவது. அதற்கு முன்னர் தடுத்துவைக்கப்பட்டு கடுமையான சித்திரவதைகளுக்கு இவர்கள் உளளாக்கப்பட்டுள்ளார்கள் என்பது இரைண்டாவது.

இதன்அடிப்படையில்தான் ஜே.வி.பி.யின் இரண்டாவது கிளர்ச்சி இடம்பெற்ற காலப்பகுதியில் காணாமற்போனவர்களின் உறவினர்கள் நேரில் வந்து மனித உச்சங்களை அடையாளம்காட்டலாம் என சட்ட மருத்துவ அதிகாரி கடந்த ஞாயிற்றுக்கிழமை கோரிக்கை ஒன்றை விடுத்திருந்தார். இருந்தபோதிலும் கண்டெடுக்கப்பட்ட எலும்புக்கூடுகளையும், மண்டையோடுகளையும் மட்டும் வைத்துக்கொண்டு அடையாளம் காண்பதென்பது சாத்தியமானதல்ல. அதனால்தான் முழு அளவிலான விசாரணை ஒன்றின் அவசியத்தை வலியுறுத்தியிருக்கும் ஜே.வி.பி., இது தொடர்பான தகவல்களைச் சேகரிக்கும் பணிகளையும் முடுக்கிவிட்டுள்ளது.

கொடூரமான உள்நாட்டுப்போர்கள் மற்றும் கிளர்சிகள் முடிவுக்கு வரும்போது, அதில் இடம்பெற்றிருக்கக்கூடிய மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க் குற்றங்களை மூடிமறைப்பதற்கே எந்த அரசாங்கமும் விரும்பும். போருக்குப் பின்னரான நல்லிணக்க முயற்சிகளை இந்த போர்க் குற்ற விசாரணைகள் பாதிப்பதாக அமையும் என்பதுதான் தமது நிலைப்பாட்டை நியாயப்படுத்துவதற்காக அரசாங்கங்கள் கூறும் காரணமாக உள்ளது. ஆனால், இவ்வாறான குற்றங்களில் சம்பந்தப்படும் இராணுவத் தரப்பைச் சீற்றமடையச் செய்யக்கூடாது என்பதுதான் இதற்கான உண்மையான காரணம்.

மாத்தளை புதைகுழிகளைப் பொறுத்தவரையில் அது முன்னைய அரசாங்கத்தின் காலத்தைச் சேர்ந்தது என்பதற்காக விசாரணை ஒன்றுக்கு உத்தரவிடும் நிலையில் அரசாங்கம் இல்லை. ஆனால் இது அரசாங்கத்துக்குப் பாரிய நெருக்கடியைக் கொடுப்பதாக அமையலாம் எனக் கருதுவதற்கு காரணம் உள்ளது: அதாவது இதில் பாதிக்கப்பட்ட தரப்பு ஜே.வி.பி.! தமது அரசியலை முன்னகர்த்துவதற்கு இது அவர்களுக்குக் கிடைத்துள்ள ஒரு நல்ல வாய்ப்பு. கட்சி பலவீனப்பட்டுப் போயிருக்கும் நிலையில், அரசாங்கத்தை நெருக்கடிக்குள் தள்ளும் வகையில் இந்த விவகாரத்தை ஜே.வி.பி. முடிந்தளவுக்குப் பயன்படுத்தும் என நிச்சயமாக எதிர்பார்க்கலாம்.

அரசாங்கம் இது தொடர்பில் பதற்றமடைந்திருப்பதற்குப் பல காரணங்கள் உள்ளன. புதைகுழி கண்டுபிடிக்கப்பட்ட இடத்துக்கு அருகே 1989-90 காலப்பகுதியில் இராணுவத்தின் சித்திரவதைக்கூடம் ஒன்று இருந்ததாகக் கூறப்படுகின்றது. அப்போது அங்கு தடுத்துவைக்கப்பட்டிருந்த ஜே.வி.பி. உறுப்பினர்கள் பலரும் இதனை உறுதிப்படுத்தியிருக்கின்றர்கள். மாத்தளை விஜய வித்தியாலயத்தில் இயங்கிவந்த இந்த சித்திரவதைக் கூடத்துக்குப் பொறுப்பாக இலங்கை இராணுவத்தின் கஜபா ரெஜிமென்டே இருந்துள்ளதாகவும் சொல்லப்படுகின்றது. கஜபா ரெஜிமென்டின் மாத்தளை மாவட்டத்துக்கான கட்டளைத் தளபதியாக அப்போது கடமையாற்றியவர் கோதாபாய ராஜபக்‌ஷ எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

ஜே.வி.பி. இதனைப் பெரிதுபடுத்தும் என எதிர்பார்க்கப்படுவதற்கான காரணத்தை இப்போது இலகுவாகப்புரிந்துகொள்ள முடியும். ஜே.வி.பி.யின் முதலாவது தோல்வியடைந்த கிளர்ச்சி 1971 இல் இடம்பெற்றது. இதன்போதும் சுமார் 70,000 வரையிலான சிங்கள இளைஞர்கள் கொல்லப்பட்டனர். இரண்டாவது கிளர்ச்சி 1989-90 காலப்பகுதியில் இடம்பெற்ற போதும் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் கொடூரமாகச் சித்திரவதை செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்டார்கள். மேலும் ஆயிரக்கணக்கானவர்கள் காணாமல்போயிருந்தார்கள். இவ்வாறு காணாமல்போனவர்களின் புதைகுழகளில் ஒன்றாகவே மாத்தளைப் புதைகுழி அமைந்திருக்கலாம் எனக் கருதப்படுகின்றது.

இந்தப் புதைகுழி தொடர்பில் முழுஅளவிலான விசாரணை ஒன்றின் அவசியத்தை வலியுறுத்தியிருக்கும் ஜே.வி.பி., தன்னுடைய பங்கிற்கு இது பற்றிய விசாரணைகளை முன்னெடுக்கவிருக்கின்றது. அரச தரப்பின் பிரதிபலிப்புக்கள் இதுவரையில் வெளிப்படவில்லை. எதிர்த்தரப்பில் இருக்கும் போது இது போன்ற விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் எனக் கோருவது இலகுவானதாக இருக்கலாம். ஆனால், அதிகாரத்துக்கு வந்தபின்னர் அது சாத்தியமற்றதாகிவிடலாம்.

1993 ஆம் ஆண்டில் ஐ.தே.க. அதிகாரத்திலிருந்த போது சந்திரிகா குமாரதுங்க திடீரென புகழின் உச்சத்துக்குச் செல்வதற்கும் புதைகுழி ஒன்றுதான் காரணமாக இருந்தது. தனக்குக் கிடைத்த தகவல் ஒன்றையடுத்து ஊடகவியலாளர்கள், சட்டத்தரணிகள் மற்றும் கட்சி ஆதரவாளர்களையும் அழைத்துக்கொண்டு தென்பகுதியிலுள்ள சூரியகந்தைப் பகுதிக்குச் சென்ற சந்திரிகா, அங்கு பாரிய புதைகுழி ஒன்றைத் தோண்டுவதற்கு உத்தரவிட்டார். அப்போது நீதிபதி ஒருவரும் அங்கு அழைக்கப்பட்டிருந்தார். ஜே.வி.பி. கிளர்ச்சியின்போது கொல்லப்பட்ட பலருடைய உடற்பாகங்கள் அதற்குள் இருந்து மீட்கப்பட்டன. அங்கிருந்து உணர்ச்சிகரமாக சந்திரிகா ஆரம்பித்த பிரச்சாரமே குறுகிய காலத்துக்குள் அவரை ஜனாதிபதிப் பதவிக்கு உயர்த்தியது.

பதவிக்கு வந்தபின்னர் சந்திரிகாவால் நியமிக்கப்பட்ட ஆணைக்குழு ஒன்று கிளர்ச்சியின் போது 30,000 போர் வரையில் காணாமற்போயிருப்பதாகப் பட்டியல் போட்டது. ஆனால், அதன் தொடர்ச்சியாக எந்தவிதமான நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படவில்லை. அந்தக்கொலைகளுக்குப் பொறுப்பானவர்கள் சுதந்திரமாக நடமாட அனுமதிக்கப்பட்டார்கள். காலத்துக்குக் காலம் இதுபோன்ற பல புதைகுழிகள் கண்டுபிடிக்கப்பட்டபோதிலும், அதில் சம்பந்தப்பட்டவர்கள் தண்டனைக்குள்ளாக்கப்பட்ட நிகழ்வுகள் எதுவும் இடம்பெறவில்லை.

இலங்கையின் வரலாற்றில் 1971, பின்னர் 1983, 89,90 என பாரியளவில் காணாமல்போன சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. இதனைவிட யாழ்ப்பாணத்தை இராணுவம் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்த 1995 ஆம் ஆண்டுப் பகுதியில் செம்மணிப்புதைகுழி மற்றும் அங்காங்கே பல புதைகுழிகள் கண்டுபிடிக்கப்பட்டன. இந்தப் புதைகுழிகள் கண்டுபிடிக்கப்பட்டதற்கு அப்பால் எதுவும் நடைபெறவில்லை. நான்காவது ஈழப் போரின் முடிவில் காணாமல்போனவர்களின் நிலையும் இவ்வாறானதாகத்தான் உள்ளது.

89-90 காலப்பகுதியில் நாட்டை இரத்தக்காடாக்கிய ஜே.வி.பி.யின் கிளர்ச்சி எவ்வாறு அடக்கப்பட்டது என்பது பலருக்கும் தெரியாதிருக்கலாம். ஆயிரக்கணக்கான இளைஞர்கள் கொடூரமாகக் கொல்லப்பட்டே இந்தக் கிளர்ச்சி முடிவுக்குக் கொண்டுவரப்பட்டது.

இதன்போது இடம்பெற்ற மனிதாபிமானத்துக்கு முரணாச சம்பவங்கள் சர்வதேசத்தை அதிர்ச்சியடைய வைத்தது. இது தொடர்பான தகவல்கள், புகைப்படங்களை ஜெனீவாவுக்குக் கொண்டு சென்று பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதிகேட்கப் புறப்பட்டவர்களில் முக்கியமானவர் மகிந்த ராஜபக்‌ஷ என்பது குறிப்பிடத்தக்கது. தன்னுடைய கைப்பையில் மறைத்துவைக்கப்பட்ட புதைப்படங்கள் மற்றும் ஆவணங்களுடன் ஜெனீவா புறப்பட்டபோது கொழும்பு விமான நிலையத்தில் அவர் தடுத்து நிறுத்தப்பட்டு, அவரிடமிருந்த ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இவ்வாறு மனித உரிமை மீறல்களுக்கு எதிராகப் போராடியவர்தான் இன்று இந்த நாட்டின் ஜனாதிபதி.

இந்த நிலையில் தான் போராடிய மனித உரிமைகள் விவகாரத்தில் முக்கியமான நகர்வு ஒன்றை முன்னெடுப்பதற்கான அதிகாரம் இன்று ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ஷவின் கைகளில் உள்ளது. அவர் என்ன செய்யப்போகின்றார்?

- சபரி