Tuesday, December 3, 2013

தென்னாபிரிக்க 'மத்தியஸ்த்தம்'?

பொதுநலவாய மாநாடு முடிவடைந்திருக்கும் நிலையில் தென்னாபிரிக்க மத்தியஸ்த்தம் தொடர்பான தகவல்கள் மீண்டும் வெளியாகத் தொடங்கியுள்ளன. இலங்கையின் இனநெருக்கடிக்கு அரசியல் தீர்வு ஒன்றைக் காண்பதற்கு தென்னாபிரிக்காவின் அனுபவங்களைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற கருத்து போர் முடிவுக்கு வந்த பின்னர் முன்வைக்கப்படுகின்ற போதிலும், அது குறித்து திட்டவட்டமான அறிவிப்பு எதுவும் வெளியிடப்படவில்லை. அரசாங்கத் தரப்பும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகளும் தென்னாபிரிக்கா சென்று அந்த நாட்டின் அனுபவங்களைப் ~படித்து| வந்ததுடன், அது தொடர்பான ஆரவாரங்கள் காணாமல் போயிருந்தன. இப்போது பொதுநலவாய மாநாட்டுக்காக வந்திருந்த தென்னாபிரிக்க ஜனாதிபதி ஜக்கொப் சுமா அரசாங்கத் தரப்புடனும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடனும் பேச்சுக்களை நடத்தியிருக்கும் நிலையில் தென்னாபிரிக்காவின் மத்தியஸ்த்தம் அல்லது அநுசரணை குறித்த எதிர்பார்ப்புக்கள் மீண்டும் வெளியாகத் தொடங்கியுள்ளன.

இனநெருக்கடிக்கான அரசியல் தீர்வொன்றைக் காண்பதற்காகவென இலங்கை அரசுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையில் ஒரு வருடகாலமாக நடைபெற்றுள்ள பேச்சுக்கள் முட்டுக்கட்டை நிலையை அடைந்து இரண்டு வருடங்களாகப்போகின்றது. இரு தரப்பையும் மீண்டும் பேச்சுவார்த்தை மேசையில் கொண்டுவருவதற்கான முயற்சிகள் எதுவும் சாத்தியமாகவில்லை. இரு தரப்பினருக்கும் இடையில் ஒரு வருடமாக பேச்சுக்கள் இடம்பெற்ற நிலையில் பாராளுமன்றத் தெரிவுக்குழு என்ற ஒன்றை உருவாக்கிய அரசாங்கம், எந்த ஒரு தீர்வும் அதன் மூலமாகவே முன்னெடுக்கப்பட வேண்டும் என அறிவித்ததையடுத்தே பேச்சுவார்த்தைகள் ஸ்தம்பித நிலையை அடைந்தன. சிங்கள பௌத்த தேசியவாத அமைப்புக்களின் அழுத்தங்களைப் புறக்கணித்துவிட்டு தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடனான பேச்சுக்களைத் தொடர்வதற்கும் அரசாங்கம் தயாராகவில்லை. அதற்கான துணிச்சல் அரசிடம் இல்லை. அதேவேளையில், தீர்வு முயற்சியில் எந்தவொரு வெளிநாட்டு சம்மதத்தையும் ஏற்றுக்கொள்ள முடியாது என்பதில் உறுதியாகவுள்ள அரசாங்கம், இப்போது தென்னாபிரிக்க அனுசரணையை ஏற்றுக்கொள்வதாகக் காட்டிக்கொள்வதன் பின்னணி என்ன என்ற கேள்வியும் எழுகின்றது.

பொதுநலவாய மாநாட்டை தமது பிரச்சினைகளுக்கான தீர்வாக அரசாங்கம் எதிர்பார்த்த போதிலும், இது பிரச்சினைகளை மேலும் அதிகரித்துள்ளது. இந்த மாநாட்டுக்குப் பின்னர் இலங்கை மீதான சர்வதேச அழுத்தம் மேலும் அதிகரித்துள்ளது என பிரித்தானியப் பிரதமர் டேவிட் கமரூன் தெரிவித்திருக்கிறார். இங்கு இடம்பெற்றது பொதுநலவாய மாநாடு என்பதைவிட, இலங்கையின் மனித உரிமை நிலை குறித்து ஆராயும் ஒரு மாநாடு போன்றே தோற்றமளித்தது. சர்வதேச அரங்கில் இலங்கை எதிர்கொள்ளும் நெருக்கடிகளின் பிரதிபலிப்புதான் இது. பிரித்தானியப் பிரதமர் கொழும்பில் ஊடகவியலாளர்கள் மத்தியில் தெரிவித்த மற்றொரு கருத்து இலங்கை எதிர்கொண்டுள்ள நெருக்கடி எந்தளவுக்கு மோசமானது என்பதை வெளிப்படுத்தியது. போர்க் குற்றச்சாட்டுக்கள் குறித்து மாhச் மாதத்துக்குள் நம்பகரமான விசாரணைகள் நடத்தப்படாவிட்டால் சர்வதேச விசாரணைகள் தவிர்க்க முடியாததது என கெமருன் பகிரங்கமாகவே அறிவித்திருந்தார். இது தொடர்பான தீர்மானம் ஒன்றை தயாரிக்கும் பணிகள் ஆரம்பமாகிவிட்டதாகவும்  தகவல்கள் தெரிவிக்கின்றன. இது மார்ச் மாதத்தில் இலங்கை எதிர்கொள்ளப்போகும் நெருக்கடியை வெளிப்படுத்தியது.

இலங்கை குறித்த தீர்மானம் ஒன்று ஜெனிவாவில் கொண்டுவரப்படுவது இதுதான் முதல் தடவையல்ல. கடந்த இரண்டு வருடங்களில் இரண்டு தீர்மானங்கள் ஜெனீவாவில் கொண்டுவரப்பட்டு நிறைவேற்றப்பட்டன. இந்த இரண்டு தீர்மானங்களையும் ஆதரித்து இந்தியா வாக்களித்திருந்த போதிலும், தீர்மானத்தின் காரத்தை குறைத்த பின்னரே ஆதரித்து வாக்களித்தது. ஆனால், மார்ச் மாதத்தில் இந்தியாவினால் அவ்வாறு செய்யக் கூடியதாக இருக்கும் என எதிர்பார்க்க முடியாது. காரணம்: ஏப்ரல் மாதத்தில் இந்தியப் பொதுத் தேர்தல் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுவதால் இலங்கை விடயத்தில் மென்போக்கைக் கையாள்வது காங்கிரஸ் கட்சிக்கு ஆபத்தானதாகிவிடலாம். இந்த நிலையில் மார்ச் மாதம் ஆபத்தான ஒரு கண்டமாவே இலங்கைக்கு இருக்கப்போகின்றது. ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் உள்ள உறுப்பு நாடுகளின் ஆதரவைத் திரட்டுவதன் மூலம் இந்த நெருக்கடியைத் தவிர்ப்பதற்கு இலங்கை முற்படலாம். இதில், ஆபிரிக்காவிலுள்ள சிறிய நாடுகள் பலவற்றை இலங்கை குறிவைக்கின்றது.

இந்தப் பின்னணியில்தான் தென்னாபிரிக்கவின் மத்தியஸ்தம் தொடர்பிலான செய்திகள் இப்போது வெளிவரத் தொடங்கியுள்ளன. வெளிநாட்டுத் தலையீடு எதனையும் ஏற்கமுடியாது என்பதில் உறுதியாக இருந்த இலங்கை அரசாங்க பிரதிநிதிகள், தென்னாபிரிக்க மத்தியஸ்த்தம் குறித்து அந்த நாட்டு ஜனாதிபதி ஜக்கொப் சுமாவுடன் பேச்சுக்களை நடத்தியிருக்கின்றார்கள். தென்னாபிரிக்காவும் நீண்டகால உள்நாட்டுப் போர் ஒன்றைச் சந்தித்த நாடு. கறுப்பின மக்களின் உரிமைகள் ஒடுக்கப்பட்டதால் இந்தப் போர் ஏற்பட்டது. இப்போது அங்கு கறுப்பினத்தவரின் ஆட்சி ஏற்படுத்தப்பட்டுள்ளது. பிரச்சினையில் முடிவில் உண்மைகளைக் கண்டறிவதற்கான குழு ஒன்று அமைக்கப்பட்டது. அந்தக் குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையிலேயே தென்னாபிரிக்காவில் சமாதான சூழ்நிலை ஏற்படுத்தப்பட்டது. இதுதான் தென்னாபிரிக்க அனுபவம். இலங்கையில் அமைக்கப்பட்ட கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்கத்துக்கான ஆணைக்குழுவும் இதனைப் போன்ற ஒன்று என்ற கருத்தே இலங்கை அரசாங்கத்தினால் முன்வைக்கப்பட்டது.

இப்போது தென்னாபிரிக்க அனுபவம் குறித்து அதிகம் பேசப்பட்hலும் தென்னாபிரிக்கப் பிரச்சினையும் இலங்கைத் தமிழர் பிரச்சினையும் ஒப்பிடக்கூடியவையல்ல. இலங்கையில் ஒடுக்கப்பட்ட சிறுபான்மையினரான தமிழர்கள் தனிநாடு கோரி போராடினார்கள். தென்னாபிரிக்காவில் பெரும்பான்மையினரான கறுப்பினத்தவர்கள் வெள்ளையர்களின் ஒடுக்குமுறைக்கு உள்ளாக்கப்பட்டனர். அவர்கள் தனிநாடு கோரிப் போராடியவர்களல்ல. ஆக, தென்னாபிரிக்கப் பிரச்சினையும் இலங்கைப் பிரச்சினையும் வௌ;வேறான பரிமாணங்களைக் கொண்டவை. இலங்கைப் பிரச்சினைத் தீர்வுக்கு தென்னாபிரிக்க அனுபவம் எந்தளவுக்குப் பொருத்தமானது என்பது கேள்விக்குறிதான். அதேவேளையில், தென்னாபிரிக்கா ஜனாதிபதி மனித உரிமை பிரச்சினைகள் குறித்து கருத்து எதனையும் வெளியிடாமல், இலங்கை அரசுக்கு சாதகமான முறையில் செயற்பட்டார் என்ற ஒரு குற்றச்சாட்டும் மனித உரிமை அமைப்புக்களால் முன்வைக்கப்படுகின்றது. இந்த நிலையில் தென்னாபிரிக்க மத்தியஸ்தம் என்பது மார்ச்சில் இலங்கை எதிர்கொண்டுள்ள அழுத்தங்களைக் குறைக்க உதவுமே தவிர, நிரந்தரமான ஒரு தீர்வுக்கு வழிகோலப்போவதில்லை என்பதே உண்மை!

ஞாயிறு தினக்குரல்: 2013-11-24 ஆசிரியர் தலையங்கம்

Tuesday, November 19, 2013

விழாக் கோலமும் போர்க் கோலமும்

பொதுநலவாய அமைப்பு நாட்டுத் தலைவர்களின் உச்சி மாநாட்டுக்காக தலைநகர் கொழும்பும், தென்பகுதியும் விழாக்கோலம் பூண்டிருந்த அதேவேளையில் வடபகுதி மக்கள் போர்க் கோலம் பூண்டிருந்தமையைக் காணமுடிந்தது. உலகத் தலைவர்களினதும் ஊடகவியலாளர்களதும் கவனத்தைக் கவரும் வகையில் தென்பகுதி அலங்கரிக்கப்பட்டு கோலாகலமாகக் காணப்பட்டது. ஆனால், போரால் உறவுகளை இழந்தவர்களும், படையினரிடம் தமது நிலங்களைப் பறிகொடுத்த மக்களும் வடபகுதியில் நடத்தியுள்ள போராட்டங்கள் சர்வதேச கவனத்தைப் பெரிதும் ஈர்ந்துள்ளது. குறிப்பாக பிரித்தானிய பிரதமர் டேவிட் கமரூன் யாழ்ப்பாணத்தில் இந்த நிலைமைகளை நேரில் பார்வையிட்டுள்ளதுடன், மக்களை நேரில் சந்தித்து அவர்களுடைய பிரச்சினைகளைக் கேட்டறிந்துகொண்டுள்ளார். வடக்கு நிலைமைகளை மூடிமறைப்பதற்கு மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் தோல்வியடைந்துள்ளன. 

பொதுநலவாய நாடுகளின் உச்சி மாநாட்டை இலங்கையில் நடத்த வேண்டும் என ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அரசாங்கம் எடுத்த முயற்சிகளுக்கு பிரதான காரணமாக இருந்தது சர்வதேச சமூகத்தின் முன்பாக தம்மை ஒரு பொறுப்பு வாய்ந்த அரசாங்கமாகக் காட்டிக்கொள்ள வேண்டும் என்ற அவர்களின் அவாதான். போர்க் குற்றங்கள் பற்றிய நெருக்கடிகள், மனித உரிமை மீறல் பற்றிய பிரச்சினைகள் சர்வதேச அழுத்தங்களை அதிகரித்திருக்கும் நிலையில்தான் இந்த மாநாட்டை அரசாங்கம் நடத்தியது. போர் முடிவுக்கு வந்து நிலைமைகள் வழமைக்குத் திரும்பிவிட்டது என்பதைக் காட்டிக்கொள்ள வேண்டிய ஒரு தேவை அரசாங்கத்துக்கு இருந்தது. அதேவேளையில் பொதுநலவாய தலைமையைப் பெற்றுக்கொள்வதன் மூலம் சர்வதேச அழுத்தங்கள் குறையும் என்ற எதிர்பார்ப்பும் அரசிடம் காணப்பட்டது. அதற்காகத்தான் பாரியளவிலான பணச் செலவில் இந்த மாநாடு நடத்தப்பட்டது. 

பொதுநலவாய உச்சி மாநாடு முடிவடைந்திருக்கும் நிலையில் இதன் தலைமைப் பொறுப்பு இப்போது இலங்கைக்குக் கிடைத்திருக்கின்றது. இதனை ஒரு வரப்பிரசாதமாக மாபெரும் வெற்றியாகக் காட்டிக்கொள்வதுதான் இலங்கை அரசாங்கத்தின் நோக்கம். ஆனால், இது வெறுமனே ஒரு சம்பிரதாயம்தான். உச்சி மாநாட்டை நடத்தும் நாட்டிடம் அடுத்த இரண்டு வருடங்களுக்குத் தலைமைப் பதவி ஒப்படைக்கப்படுவது ஒரு வழமை. ஆனால், உண்மையில் இந்தத் தலைமைப் பதவியைப் பெற்றுக் கொண்டிருப்பதன் மூலம் இலங்கைக்கான பொறுப்பு அதிகரிக்கப் போகின்றது. பல கடப்பாடுகளை நிறைவேற்ற வேண்டிய நிர்ப்பந்தம் அரசாங்கத்துக்கு ஏற்படப்போகின்றது. மனித உரிமை மீறல், ஊடக சுதந்திரம், நல்லாட்சி, சட்டத்தின் ஆட்சி உட்பட பல விடயங்கள் குறித்து சர்வதேசத்தின் கவனம் இலங்கை மீது குவியப்போகின்றது. இது இலங்கைக்கு ஒரு நெருக்கடியாகத்தான் இருக்கும்.

பொதுநலவாய மாநாட்டு அமர்வு உத்தியோகபூர்வமாக வெள்ளிக்கிழமை ஆரம்பமாகிய நிலையில், அதன் சம்பிரதாய நிகழ்வுகளின் காட்சிப் பதிவுகளை பின்தள்ளிவிட்டு வடக்கில் இடம்பெற்ற மக்கள் போராட்டங்களில் அனைத்துலக ஊடகங்களும் தமது கவனத்தைக் குவித்தன. பிரித்தானிய பிரதமர் டேவிட் கமரூனும் நண்பகலுடனேயே உச்சி மாநாட்டு மண்டபத்திலிருந்து புறப்பட்டு யாழ்ப்பாணம் சென்ற போது பெருமளவிலான ஊடகவியலாளர் குழு ஒன்றும் அவருடன் சென்றது. உச்சி மாநாட்டு நிகழ்வுகளுடன் மட்டும் ஊடகவியலாளர்களின் செயற்பாடுகளைக் கட்டுப்படுத்திவைப்பதற்கு அரசாங்கம் மேற்கொண்ட முயற்சிகள் தோல்வியடைந்தன. வடக்கின் உண்மை நிலை என்ன என்பதை சர்வதேச ஊடகவியலாளர்கள் நேரில் பார்ப்பதை அரசாங்கத்தினால் தடுக்க முடியாமல் போய்விட்டது. இலங்கையில் காணப்படும் இரு வேறு உள்ளக சூழலை சர்வதேசம் இப்போது நேரடியாகப் பார்த்திருக்கின்றது. 

போர் முடிவுக்கு வந்திருந்தாலும், பொறுப்புக் கூறல் இடம்பெறவில்லை என்பதையும், நாட்டில் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதில் ஒரு அங்குலம் கூட முன்னேற்றம் இடம்பெறவில்லை என்பதையும் வடக்கில் இடம்பெற்ற மக்களி போராட்டங்கள் உணர்த்தியுள்ளன. பொறுப்புக் கூறல் நடைபெறாமல் நல்லிணக்கம் சாத்தியமில்லை என்பதுதான் தமிழர் தரப்பின் வாதமாகவுள்ளது. போரின்போது இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள், மனிதாபிமானமற்ற செயற்பாடுகள் குறித்து வெளியாகும் ஆதாரங்களை உடனடியாக நிராகரிப்பதைவிட அரசாங்கம் எதனையும் செய்யவில்லை. இவை தொடர்பில் சர்வதேச விசாரணை ஒன்றுக்கு அரசாங்கம் தயாராகவில்லை. அதேவேளையில், வடக்கில் பொதுமக்களின் காணிகள் ஆக்கிரமிக்கப்பட்டு இராணுவ மயமாக்கல் இடம்பெற்றிருப்பதையும், காணாமல் போனவர்கள் குறித்த பொறுப்புக் கூறல் இடம்பெறவில்லை என்பதையும் வடக்கில் வெடித்த மக்கள் போராட்டங்கள் உணர்த்தியுள்ளன.

நாட்டின் எந்தப் பகுதிக்கும் சென்று வரலாம். நிலைமைகளை நேரில் வந்து பாருங்கள் என சர்வதேசத் தலைவர்களுக்கும் ஊடகவியலாளர்களுக்கும் அழைப்பு விடுத்த அரசாங்கம், அதற்கான பாதுகாப்பை வழங்கவில்லை. சனல் -4 ஊடகவியலாளர்கள் வடக்கு நோக்கிச் சென்றபோது அனுராதபுரத்தில் தடுக்கப்பட்டனர். ஊடகவியலாளர்கள் சென்ற ரயிலைத் தடுத்தவர்களைக் கலைப்பதற்கு பொலிஸார் எந்த நடவடிக்கையையும் மேற்கொள்ளவில்லை. பதிலாக சனல் 4 ஊடகவியலாளர்களை திரும்பிச் செல்லுமாறு பொலிஸார் வலியுறுத்தினார்கள். ஆக, வடக்கே சுதந்திரமாக சென்று செய்தி சேகரிப்பதற்கான சூழ்நிலை இருக்கவில்லை. அரசாங்கமும் அதனை விரும்பவில்லை. பிரித்தானியப் பிரதமருடன் சென்றதால்தான் பெருமளவு வெளிநாட்டு ஊடகவியலாளர்களால் யாழ். மண்ணில் கால் பதிக்க முடிந்தது. உண்மை நிலைமைகளை சர்வசேத்தின் கவனத்துக்குக் கொண்டுவர முடிந்தது.

பொதுநலவாய மாநாட்டை வெற்றிகரமாக நடத்திவிட்டோம் தலைமைப் பதவியை வசப்படுத்திவிட்டோம் என அரசாங்கம் இறுமாப்பில் இருந்துவிட முடியாது என்பதைத்தான் இந்தச் சம்பவங்கள் உணர்த்ததுகின்றன. பொறுப்புக் கூறல் முக்கியமானது. போரின் போது யாருமே காணாமல் போகவில்லை என சர்வதேசத்தின் முன்பாக அரசாங்கம் தொடர்ந்தும் சொல்லிக்கொண்டிருக்க முடியாது. யாழ்ப்பாணத்தை கண்ணீர்க் குளமாக்கிய தாய்மார்களின் துன்பம் பொய்யானது அல்லது போலியானது என அரசாங்கம் கூறிவிட முடியாது. மக்கள் இன்னும் அகதிகளாக முகாம்களில் இருக்கும் நிலையில் உயர் பாதுகாப்பு வலயம் என ஒன்று இல்லை. மக்களை முழுமையாக மீளக்குயேற்றிவிட்டோம் என அரசாங்கம் சொல்வதை இனியும் உலகம் நம்பாது. பிரித்தானிய பிரதமரே நிலைமைளை நேரில் பார்த்துள்ளார். பொதுநலவாயத்தின் தலைமைப் பொறுப்பை ஏற்றுக்கொண்டுள்ள இலங்கைக்கான கடப்பாடுகள் இப்போது அதிகரித்துள்ளன.

(ஞாயிறு தினக்குரல் 2012-11-17: ஆசிரியர் தலையங்கம்)


Saturday, November 16, 2013

மன்மோகன் சிங்கின் 'வருகை' (?)

இலங்கையில் இன்னும் சில தினங்களில் ஆரம்பமாகவுள்ள பொதுநலவாய நாடுகளின் உச்சி மாநாட்டில் தான் கலந்துகொள்வது இந்தளவுக்கு சர்ச்சைக்குள்ளாகும் என்பதை இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் சற்றும் எதிர்பார்த்திருக்கமாட்டார். மன்மோகன் சிங் வருவாரா என்பதையிட்டு உத்தியோகபூர்வமாக இந்திய அரசு இதுவரையில் அறிவிக்காத போதிலும், அவரது வருகை சாத்தியமாகாது என்பதைத்தான் நேற்றுக்காலை வெளியான இந்தியப் பத்திரிகைகள் அனைத்தும் செய்தியாக வெளியிட்டிருந்தன. இந்திய வெளிவிவகாரக் கொள்கை வகுப்பாளர்களுக்கும் தமிழகத்தின் உணர்வுகளைப் பிரதிபலிக்கும் காங்கிரஸ் கட்சிப் பிரகர்களுக்கும் இடையிலான ஒரு பலப்பரீட்சையாகவே இந்த விவகாரம் காணப்பட்டது. இலங்கை விவகாரத்தை எவ்வாறு கையாள்வது என்பதில் இந்தியத் தரப்பில் காணப்பட்ட தடுமாற்றங்களின் உச்ச கட்டமாகவே இந்தப் பிரச்சினையைப் பார்க்கவேண்டியுள்ளது.

சர்வதேச சமூகத்தின் மத்தியில் இலங்கையை ஒரு பொறுப்புள்ள நாடாகக் காட்டிக் கொள்ளுவதற்காகவே இந்த மாநாட்டை நடத்தும் பொறுப்பை இலங்கை எடுத்தது. மன்மோகன் சிங்கின் வருகையை இலங்கை அரசாங்கம் முக்கியமாகப் பார்த்தமைக்குப் பல காரணங்கள் உள்ளன. இலங்கை குறித்த இந்தியாவின் அணுகுமுறை சர்வதேச ரீதியில் பாதிப்பை ஏற்படுத்தக்கூடியது. குறிப்பாக இதனை ஒரு முன்னுதாரணமாக மற்றைய நாடுகளும் எடுத்துக்கொள்ளக்கூடிய ஆபத்துள்ளது. இதனை  கொழும்பு தெளிவாக உணர்ந்தேயுள்ளது. தெற்காசியப் பிராந்தியத்தில் இந்தியாவின் மேலாதிக்க நிலையை பெரும்பாலான மேற்கு நாடுகள் ஏற்றுக்கொள்கின்றன. இலங்கை தொடர்பான தமது அணுகுமுறையை வரையறுப்பதற்கு முன்னதாக இந்தியாவின் கருத்தை அறிவதற்கு அமெரிக்கா மட்டுமன்றி ஐரோப்பிய நாடுகளும் முற்படுவதைக் கடந்த காலங்களில் நாம் கண்டிருக்கின்றோம். இலங்கை விவகாரத்தில் மத்தியஸ்த்த முயற்சிகளை மேற்கொண்ட நோர்வே கூட தமது ஒவ்வொரு நகர்வுகளுக்கு முன்பாகவும் டில்லியின் கருத்துகளுக்கு முக்கியத்துவம் கொடுத்திருந்தது கவனிக்கத்தக்கது.

இலங்கை மீது அழுத்தங்களைப் பிரயோகிப்பதற்கு இந்தியாவுக்குள்ள ஒரேயொரு பிடி இதுதான். இந்த துரும்புச் சீட்டை நன்கு பயன்படுத்திக்கொள்ள வேண்டும் எனச் சிந்தித்துத்தான் இந்தியக் கொள்கை வகுப்பாளர்களும் காய்நகர்த்தினார்கள். அதில் அவர்கள் வெற்றிபெற்றிருப்பதாகவே கருதுகின்றார்கள். இந்தியாவின் வேளிவிவகாரக் கொள்கையைத் தீர்மானிப்பது இந்தியாவின் வெளியுறவுத்துறை மற்றும் இந்திய உள்ளக வெளியக புலனாய்வு அமைப்புக்களே. இதனை தமது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பவர்கள் பார்ப்பனீய கருத்தியலைக் கொண்டவர்கள் என்ற குற்றச்சாட்டு நீண்ட காலமாகவே உள்ளது. அது இயல்பாகவே தமிழர்களுக்கு எதிரானது என்பதும் வெளிப்படை. ஆளும் காங்கிரஸ் அரசு அதற்கு இசைவாக இருந்தபடியால் அண்மைக்காலம் வரை அது ஒரு பிரச்சினையாக இருக்கவில்லை. ஆனால், கடந்த பொதுத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி தமிழகத்தில் கற்றுக்கொண்ட பாடங்கள்தான் தற்போதைய நெருக்கடிக்குக் காரணம்.

இலங்கை அரசுக்கு எதிரான தமிழகப் போராட்டங்கள் உச்சம் பெற கூட்டணிக்காக ஒட்டியும் ஒட்டாமலும் இருக்கும் தி.மு.க. தலைவர் மு.கருணாநிதி போன்றவர்கள் தேர்தலை மையமாக வைத்து காய்களை நகர்த்த, காங்கிரஸ் சிந்திக்கத் தலைப்பட்டது. மன்மோகன் சிங் இலங்கை சென்றால் அதற்கான விளைவுகளை காங்கிரஸ்தான் அனுபவிக்க வேண்டியிருக்கும் என கருணாநிதி விடுத்த எச்சரிக்கை நிச்சயமாக அடுத்த வருடத்தில் நடைபெறப்போகும் பொதுத் தேர்தலை அடிப்படையாகக் கொண்டதுதான். கடந்த பொதுத் தேர்தலில் தமிழகத்தில் காங்கிரஸ் கூட்டணி சந்தித்த பாரிய தோல்விக்கு இலங்கைப் பிரச்சினை தொடர்பாக இந்திய அரசின் அணுகுமுறைதான் காரணம். இதனைத் தெளிவாக உணர்ந்துகொண்டுள்ள நிலையில்தான் தமிழக காங்கிரஸ் பிரமுகர்கள் கட்சித் தலைமைக்கு கடுமையான அழுத்தத்தைக் கொடுக்கத் தொடங்கினார்கள். குறிப்பாக அமைச்சர்கள் ப.சிதம்பரம், ஏ.கே.அந்தோனி, ஜி.கே.வாசன் போன்ற பலம்வாய்ந்தவர்கள் களத்தில் இறங்கியிருப்பது இந்திய வெளிவிவகார அமைச்சின் முடிவை கேள்விக்குள்ளாக்கியிருக்கின்றது.

இந்தியாவின் வெளிவிவகாரக் கொள்கை வகுப்பில் நேரடியாகச் சம்பந்தப்பட்ட சவுத் புளொக் 'அதிகாரிகள்' மன்மோகன்சிங் இந்த மாநாட்டில் பங்குகொள்ள வேண்டும் என்பதில் தீவிர அக்கறையைக் கொண்டிருந்தார்கள். "மன்மோகன்சிங் மாநாட்டில் கலந்து கொள்ளாவிட்டால் அது அனைத்துலக அளவில் குறிப்பாக பொதுநலவாய நாடுகளிடையே இந்தியாவின் நிலையை பாதிக்கும்’’ என்றும் இந்திய வெளிவிவகார அமைச்சர் சல்மான் குர்ஷித் உள்ளிட்ட சிலர் குரல் எழுப்பியிருந்தனர். "இந்தியாவுக்கு இலங்கை கொடுத்த வாக்குறுதிகளை ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ஷ நிறைவேற்றிருக்கின்றார். அதனால், மன்மோகன் சிங் இலங்கை செல்ல வேண்டும். இல்லையெனில் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை அது பாதிக்கும். சீனாவின் பக்கம் இலங்கை மேலும் செல்வதற்கு அது காரணமாகிவிடும்" என இந்தியக் கொள்கை வகுப்பாளர்கள் அடித்துக்கூறுவதைக் கேட்கும் நிலையில் காங்கிரஸ் தலைமை இருக்கவில்லை.

இலங்கை அரசாங்கம் நிறைவேற்றிய வாக்குறுதிகளாக இந்தியக் கொள்கை வகுப்பாளர்கள் கருதுவது வடக்கில் தேர்தலை நடத்தியதை மட்டும்தான். வடக்கு மாகாண சபைத் தேர்தலை நடத்தியமைக்கு இந்தியாவின் அழுத்தம் காரணமாக இருந்துள்ளது என்பது உண்மைதான். இப்போது வடக்கில் தேர்தலை நடத்தி மாகாண அரசாங்கம் ஒன்றும்  உருவாக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பிரச்சினைகளையே தீர்த்துவைத்துவிட்டது போலக் காட்டிக்கொள்ள இலங்கை அரசாங்கம் முற்படுகின்றது. ஆனால், இந்த மாகாண சபை வடக்கில் உள்ள ஒரு கல்லை நகர்த்துவதற்கான அதிகாரத்தைக்கூட கொண்டதாக இல்லை. மாகாண முதலமைச்சராக ஆளுநராக அதிக அதிகாரத்தைக் கொண்டவர் என்பதில் ஒரு கயிறிழுப்பு இடம்பெறுகின்றது. பொதுநலவாய மாநாடு முடிவடைந்த பின்னர் இந்த முரண்பாடுகள் தீவிரமடையலாம். இந்த நிலைமைகள் இந்தியாவுக்குத் தெரியாதவையல்ல.

டில்லியைப் பொறுத்தவரையில் தமிழகத்தின் உணர்ச்சிக் கொந்தளிப்பை தமது கேந்திர நலன்களுக்காகப் பயன்படுத்திக்கொள்வதைத்தான் அது தனது வெளியுறவுக்கொள்கையாகக் கொண்டிருந்தது. இந்திரா காந்தியின் காலத்திலிருந்து இந்த நிலைமை காணப்பட்டது. காங்கிரஸ் கட்சியின் தேர்தல் நலன்கள் இதனுடன் முரண்படாத நிலையில் இவ்வளவு காலமும் இது பிரச்சினையாகவில்லை. இப்போது தமிழக காங்கிரஸ் கட்சியும் தமிழ்த் தேசியத்துக்கு முரணாகப் போகமுடியாதளவுக்கு ஒரு எழிச்சி தமிழகத்தில் உருவாகியுள்ளது. மன்மோகன் சிங்கின் வருகை கேள்விக்குறியாகியிருப்பது இதனால்தான். இந்தியக் கொள்கை வகுப்பாளர்கள் தமிழர்களின் நலன்களைப் பாதுகாப்பதாகக் கூறிக்கொண்டு தமது கேந்திர நலன்களில் மட்டும் அக்கறை கொண்டு செயற்பட்டமைதான் இந்தக் குழப்பங்களுக்குக் காரணம். இலங்கை தொடர்பில் ஒரு தெளிவான உறுதியான கொள்கையை இந்தியா வகுத்துக்கொள்ள வேண்டும் என்பதைத்தான் இந்தக் குழப்பங்கள் உணர்த்துகின்றன.
ஞாயிறு தினக்குரல் 2012-011-10 ஆசிரியர் தலையங்கம்

Friday, November 1, 2013

பொலிஸ் அதிகாரம் யாரிடம்? கோதா சொல்வது சாத்தியமா?

- சபரி -

பொலிஸை கட்டுப்படுத்தும் அதிகாரம் மாகாண சபைகளுக்கு உரியதா அல்லது மத்திய அரசுக்குள்ளதா?

வடமாகாண சபை உருவாகியிருக்கும் நிலையில் அதிகளவில் கேட்கப்படும் ஒரு கேள்வியாக இது உள்ளது. சர்ச்சைக்குரிய இந்தக் கேள்விக்கு பதிலைக் கூறுவதற்கு பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோதாபாய ராஜபக்ஷ முற்பட்டிருக்கின்றார். இரு பக்கத்தையும் சமாளிக்க அவர் முற்பட்டிருப்பது தெரிகின்றது. ஆனால், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் இதனை ஏற்றுக்கொள்ளத் தயாராக இருப்பதாகத் தெரியவில்லை.

கோதாபாய பாதுகாப்பு செயலாளராக இருந்தாலும், உண்மையில் ஒரு பாதுகாப்பு அமைச்சர் போன்றுதான் அவர் செயற்படுகின்றார். ஜெயவர்த்தன ஜனாதிபதியாக இருந்த போது தேசிய பாதுகாப்பு அமைச்சராக இருந்த லலித் அத்துலத்முதலிதான் போரை நடத்தினார். ரணசிங்க பிரேமதாச ஜனாதிபதியாக இருந்தபோது பிரதிப் பாதுகாப்பு அமைச்சராக இருந்த ரஞ்சன் விஜயரட்ணதான் போரை நடத்தினார். சந்திரிகா குமாரதுங்க ஜனாதிபதியாக இருந்தபோது அனுருத்த ரத்வத்தைதான் பிரதிப் பாதுகாப்பு அமைச்சராக இருந்து போரை நடத்தினார்.

ஆனால், தற்போதைய பாதுகாப்புச் செயலாளரின் கடமைகளில் யாரும் தலையிடக் கூடாது என்பதற்காகத்தான் பிரதிப் பாதுகாப்பு அமைச்சர் ஒருவரை நியமிப்பதை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தவிர்த்துக்கொண்டார். அதனால், ஒரு அதிகாரியாக இருந்தாலும் சக்திவாய்ந்த ஒரு அமைச்சர் போல கோதாபாய ராஜபக்ஷவினால் செயற்பட முடிகின்றது. ஒரு அமைச்சின் செயலாளர் என்பதைவிட நாட்டின் தலைவிதியைத் தீர்மானிக்கக்கூடிய ஒருவர் என்ற வகையிலேயே அவரது கருத்துக்கள் இன்று முக்கியத்துவம் பெறுகின்றன.

கொழும்பிலுள்ள தமிழ்ப் பத்திரிகைகளின் பிரதம ஆசிரியர்களை புதன் கிழமை கொழும்பிலுள்ள பாதுகாப்பு அமைச்சின் தலைமையகத்தில் சந்தித்துப் பேசிய போதே பொலிஸ் மற்றும் சட்டம், ஒழுங்கு அதிகாரங்கள் தொடர்பான கருத்துக்கள் பரிமாறப்பட்டன. வடபகுதியில் குற்றச்செயல்கள் அதிகரித்து வருவது தொடர்பில் பத்திரிகை ஆசிரியர் ஒருவர் கேள்வி எழுப்பினார். இதற்குப் பதிலளித்த கோதாபாய, 3 விடயங்களைக் குறிப்பிட்டார்.

1. வடபகுதியில் இருந்த இராணுவம் பெருமளவுக்குக் குறைக்கப்பட்டுள்ளது. இராணுவச் சோதனைச் சாவடிகள் நீக்கப்பட்டுள்ளன. இதனால் குற்றவாளிகள் இலகுவாக நடமாட முடிகின்றது.

2. வடபகுதியில் சட்டத்தையும் ஒழுங்கையும் பாதுகாக்கும் பொறுப்பு மாகாண முதலமைச்சரிடமே உள்ளது. அவர்தான் அதனைப் பார்த்துக்கொள்ள வேண்டும். இப்போது சட்டம் ஒழுங்கு விடயத்தில் இராணுவத்தின் தலையீடு இல்லை. பொலிஸார்தான் இதனைப் பார்த்துக்கொள்கின்றார்கள்.

3. இவ்வாறான குற்றச்செயல்களைத் தடுப்பதற்கு மக்கள் வழிப்புக் குழுக்கள் போன்றவற்றை அமைத்து கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும்.

~~வடபகுதியில் சட்டத்தையும் ஒழுங்கையும் பாதுகாக்கும் பொறுப்பு மாகாண முதலமைச்சரிடமே உள்ளது. அவர்தான் அதனைப் பார்த்துக்கொள்ள வேண்டும்|| என பாதுகாப்புச் செயலாளரே தெரிவித்ததுதான் பத்திரிகை ஆசிரியர்களுக்குப் பெரிதும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ முன்பாக தனக்குரிய அமைச்சுப் பொறுப்புக்களுக்காக முதலமைச்சர் விக்னேஸ்வரன் பதவிப் பிரமாணம் செய்தபோது ஒரு விடயம் முக்கியமாக அவதானிக்கப்பட்டது. அவர் பொறுப்பேற்ற அமைச்சுக்களில் பிரதானமானதாக சட்டம் - ஒழுங்கு என்பதும் காணப்பட்டது.

அரசியலமைப்புக்கான 13 ஆவது திருத்தம் நீக்கப்பட வேண்டும் அல்லது மாகாண சபைகளுக்கான அதிகாரங்கள் குறைக்கப்பட வேண்டும் என முதன் முதலாக குரல் கொடுத்து அதற்கான முயற்சிகளை ஆரம்பித்து வைத்தவர் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோதாபாயதான். குறிப்பாக மாகாண சபைகளுக்கான காணி, கட்டம் ஒழுங்கு அதிகாரங்களுக்கு எதிரான போரை ஆரம்பித்து வைத்தவர் கோதாதான்! இது தனியான ஒரு அரசை அமைப்பதற்கான வழியை ஏற்படுத்தும் என அவர் எச்சரித்திருந்தார்.

வடமாகாண சபைத் தேர்தலுக்கு முன்னதாக இதற்கான சட்டமூலம் ஒன்றைப் பாராளுமன்றத்துக்குக் கொண்டுவருவதற்கு அரசாங்கம் திட்டமிட்டிருந்த போதிலும், உள்ளிருந்தும் சர்வதேச ரீதியாகவும் உருவாகிய எதிர்ப்புக்களையடுத்து அந்தத் திட்டத்தை அரசாங்கம் கைவிட்டிருந்தது. ஆனால், இந்தப் பிரச்சினையை முதலில் கிளப்பிய கோதாபாய ராஜபக்ஷவே இப்போது, ~~வடபகுதியில் சட்டத்தையும் ஒழுங்கையும் பாதுகாக்கும் பொறுப்பு மாகாண முதலமைச்சரிடமே உள்ளது. அவர்தான் அதனைப் பார்த்துக்கொள்ள வேண்டும்" எனக்கூறியிருப்பது ஒரு திருப்பம் போல தெரியலாம்.

இது குறித்து அவர் தெரிவித்தபோது பத்திரிகை ஆசிரியர்கள் இரண்டு கேள்விகளை எழுப்பினார்கள்.

1. அப்படியானால் பொலிஸ் அதிகாரம் மாகாண சபைகளிடம் உள்ளதா?

2. பொலிஸாருக்கு உத்தரவிடும் அதிகாரம் மாகாண முதலமைச்சருக்கு உள்ளதா?

இவைதான் அந்த இரண்டு கேள்விகளும்.

இதற்குப் பதிலளித்த கோதாபாய கொடுத்த விளக்கம் சமாளிக்கும் வகையில் இருந்ததே தவிர, சட்ட ரீதியானதாக இருக்கவில்லை.

“பொலிஸ் அதிகாரம் மத்திய அரசிடம்தான் இருக்கும். மாகாண முதலமைச்சர் பொலிஸாருக்குக்கு உத்தரவிட முடியாது. ஆனால், மாகாண சபை பொலிஸ_டன் இணைந்து செயற்பட முடியும்.  உதாரணமாக மத்திய அமைச்சர்களிடம் பொலிஸாருக்கு உத்தரவிடுவதற்கான அதிகாரம் இல்லாவிட்டாலும், பிரச்சினைகள் வரும் போது பொலிஸாருடன் இணைந்து செயற்பட முடியும். அதேபோலத்தான் முலமைச்சரும் பொலிஸாருடன் இணைந்து செயற்பட முடியும்” என கோதாபாய விளக்கமளித்தார்.

அரசியலமைப்புக்கான 13 ஆவது திருத்தத்தின் மூலம் மாகாண சபைகளுக்கு காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ள போதிலும்,  அவை மத்திய அரசாங்கத்தினால் முடக்கப்பட்டவையாகவே உள்ளன. இதுவரையில் இருந்த மாகாண சபைகள் எதுவுமே அதிகாரப் பரவலாக்கலைக் கேட்காத - அதற்காகப் போராட மாகாண சபைகளாக இருந்தமையால் இது ஒரு பிரச்சினையாக இருக்கவில்லை. ஆனால், வடக்கு அதிகாரங்களைக் கோரும் ஒரு மாகாண சபை. குறிப்பாக காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்களுக்கான கோரிக்கையை முன்வைப்பதுடன், அதற்காக போராடும் ஒரு மாகாணமாகவும் இருக்கப்போகின்றது என்பதுதான் அரசுக்கு இப்போதுள்ள பிரச்சினை!

வடக்கின் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் இதனைத் தெளிவாகவே சொல்லிவிட்டார். மாகாண சபைகளுக்குரிய சட்டரீதியான அதிகாரங்களைப் பெறுவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என்பதை அவர் உறுதியாகக் கூறியிருக்கின்றார். அதேவேளையில், அரசியலமைப்பிலுள்ள அதிகாரப் பரவலாக்கலை முழுமையாக வழங்குவதற்கான செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என்பதை இந்தியாவும் வலியுறுத்தியிருக்கின்றது. இந்தப் பின்னணியில்தான் வடக்கின் சட்டம் ஒழுங்கு விவகாரத்தை கையாள வேண்டியவர் முதலமைச்சர் விக்னேஸ்வரனே என கோதாபாய ராஜபக்ஷ கூறியிருக்கின்றார். கோதாபாயவின் இந்தக் கருத்து ஒருவகையில், இந்தியாவையும் சர்வதேசத்தையும் திருப்திப்படுத்த கூறப்பட்ட கருத்தாக அமைந்திருக்கலாம். அவர்களுடைய அழுத்தங்கள் அதன் பின்னணியில் இருந்திருக்கலாம்.

ஆனால், பொலிஸ் அதிகாரத்தை மத்திய அரசாங்கம் தன்னுடைய கைகளில் வைத்துள்ள நிலையில் சட்டம் ஒழுங்கை முதலமைச்சர் பயன்படுத்திக்கொள்வது எவ்வாறு? கோதாவின் கூற்று எந்தளவுக்குச் சாத்தியமாகும் என்ற கேள்வி இங்கு எழுப்பப்படுகின்றது.

இதனைவிட, மாகாண அரசின் அதிகாரங்களில் மத்திய அரசு தலையிடுவதற்கு எதிரான அர்த்தமுள்ள கட்டுப்பாடுகள் எதுவும் 13 ஆவது திருத்தத்தில் இல்லை. பகிர்ந்தளிக்கப்பட்ட அதிகாரங்களில் மத்திய அரசு நினைத்தபடி தலையிடுவதும், கைவைப்பதும் சாத்தியம் என்பதை கடந்த காலங்களில் பல்வேறு சம்பவங்கள் உறுதிப்படுத்தியுள்ளன. ஓற்றையாட்சி முறையின் பலவீனத்தைத்தான் இது பெருமளவுக்குப் புலப்படுத்துவதாக அமைந்திருக்கின்றது.

இந்தப் பின்னணியில் வடக்கில் சட்டம் ஒழுங்குப் பிரச்சினைகளுக்கு முதலமைச்சர் விக்னேஸ்வரன்தான் பொறுப்பு என கோதாபாய ராஜபக்ஷ சொல்வாராயின்  அது எந்தளவுக்கு உண்மையானதாக இருக்கும்?

வடமாகாண சபையின் முதலாவது அமர்வில் கொள்ளை விளக்க உரையை நிகழ்த்திய விக்னேஸ்வரன் தெரிவித்த கருத்துக்கள் அதிகாரத்துக்கான போட்டி இனித்தான் ஆரம்பமாகப் போகின்றது என்பதைக் காட்டியிருக்கின்றது.  வடமாகாண சபை கோரும் அதிகாரங்களை வெறும் வார்த்தைகளால் வழங்கிவிட முடியாது. எழுத்து மூலமாக சட்டரீதியாக இந்த அதிகாரங்கள் வழங்கப்பட வேண்டும்.

(ஞாயிறு தினக்குரல்: 2013-10-27)

கொழும்பு மாநாடும் இந்தியாவும்

கொழும்பில் அடுத்த மாதம் நடைபெறவிருக்கும் பொதுநலவாய நாடுகளின் உச்சி மாநாட்டில் இந்தியா எந்த வகையிலும் கலந்துகொள்ளக் கூடாது என்ற தீர்மானத்தை தமிழக சட்டப்பேரவை எடுத்துள்ளதையடுத்து அனைவரது கவனமும் இப்போது புதுடில்லியின் பக்கம் திரும்பியுள்ளது. தமிழக சட்டப் பேரவையில் இதற்கான தீர்மானத்தை தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா கொண்டுவந்தார். பிரதான எதிர்க்கட்சிகளான தி.மு.க. மற்றும் காங்கிரஸ் என்பவற்றின் ஆதரவுடன் ஏகமனதாக இதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்கின்றது. தீர்மானத்துக்கு எதிராக எந்தவொரு பிரதான கட்சியும் வாக்களிக்க முன்வரவில்லை. தமிழகத்தில் காணப்படும் உணர்வுகளை மீறிச் செயற்படுவதற்கு எந்தவொரு கட்சியும் தயாராகவில்லை என்பதை இது வெளிப்படுத்தியிருக்கின்றது. இந்த நிலையில் கொழும்பு மாநாடு தொடர்பிலான தமது நிலைப்பாடு என்ன என்பதை இந்திய மத்திய அரசு இன்னும் திட்டவட்டமாக வெளிப்படுத்தவில்லை. அதனால்தான் அனைத்துத் தரப்பினரது கவனமும் டில்லியின் பக்கம் திரும்பியிருக்கின்றது.

புதுடில்லியைப் பொறுத்தவரையில், இவ்விடயத்தில் எவ்வாறான தீர்மானத்தை எடுப்பது என்பதில் குழப்பமடைந்திருக்கின்றது. தமது நிலைப்பாட்டை அறிவிப்பதை தொடர்ந்தும் டில்லி ஒத்திவைத்துக்கொண்டுவருவது அதனால்தான். இந்தியப் பொதுத் தேர்தல் அடுத்த வருடத்தில் நடைபெறவிருப்பதால் தமிழகத்தின் பொங்கியெழுந்திருக்கும் உணர்வுகளை மீறிச் செயற்படுவதற்கு டில்லியால் முடியாதிருக்கும். மறுபக்கத்தில் கொழும்புக்கு எதிராகச் செயற்படுவதும் இந்திய நலன்களைப் பாதிப்பதாக அமையலாம். குறிப்பாக கொழும்புடனான உறவுகளை அது பாதிக்கும். இந்தியாவுக்கு எதிரான சக்திகளுடன் தமது உறவுகளை வலுப்படுத்திக்கொள்வதற்கு இலங்கையை அது தள்ளலாம். இலங்கை குறித்த இந்தியாவின் அண்மைக்கால அணுகுமுறை தமிழகத்தை ஏதோ வகையில் சமாளித்துக்கொண்டு கொழும்பைப் பாதுகாப்பதாகவே அமைந்திருந்தது. ஆனால், இந்தியப் பொதுத் தேர்தல் அடுத்த வருடத்தில் நடைபெறவிருப்பதால் இவ்விடயத்தில் நிதானமாக காய்களை நகர்த்துவதற்கே டில்லி விரும்புகின்றது.

புதுடில்லியின் இந்த இரண்டக நிலையைப் புரிந்துகொண்டுள்ள இலங்கை அரசாங்கமும் அச்சுறுத்தும் வகையிலான சில கருத்துக்களை வெளியிட்டிருக்கின்றது. பொதுநலவாய மாநாட்டைப் பகிஷ்கரித்தால் இந்தியா தனிமைப்படுத்தப்பட்டுவிடும் என வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் கருத்து வெளியிட்டிருக்கின்றார். மநாட்டை பகிஷ்கரிக்கும் கனடாவுக்கும் இதேபோன்ற ஒரு எச்சரிக்கையை கொழும்பு விடுத்திருந்தது. சிங்கள தேசியவாத அமைப்பான தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் தலைவர் குணதாச அமரசேகர இதற்கு ஒரு படி மேலே சென்று இந்தியாவை எச்சரித்திருக்கின்றார். இலங்கையின் உள்ளக விவகாரங்களில் இந்தியா தொடர்ந்தும் அழுத்தம் கொடுத்து வந்தால் இலங்கை அரசாங்கம் இந்தியாவுடனான உறவுகளை முறித்துக்கொண்டு சீனா மற்றும் ரஷ்யாவுடனான உறவுகளைப் பலப்படுத்த வேண்டும் எனத் தெரிவித்திருக்கும் அவர், ஆகாய மார்க்கமாக பருப்பு மூட்டைகளை வீசுவதற்கு இந்தியாவுக்கு மீண்டும் அனுமதிக்க மாட்டோம் எனக் கூறியிருக்கின்றார். இது சிங்கள தேசியவாத அமைப்புக்கள் வழமையாக விடுக்கும் எச்சரிக்கைதான். ஆனால், இந்தக் கருத்துக்களைப் புறக்கணித்துவிட்டுச் செயற்படும் நிலையில் டில்லி இல்லை!

கொழும்பு மாநாட்டில் பங்குகொள்வதா அல்லது அதனைப் பகிஷ்கரிப்பதா என்பதையிட்டுத் தீர்மானிக்க முடியாத நிலையில் டில்லி தடுமாறுவதற்கு இவைதான் காரணம். இந்த நிலையில் இரண்டு தரப்பையும் சமாளிக்கும் வகையிலான தீர்மானம் ஒன்றை எடுப்பதற்கு இந்தியா முற்பட்டது. பிரதமர் மன்மோகன் சிங் தலைமையிலான ஒரு குழுவை அனுப்பாமல் இரண்டாம் மட்டக்குழு ஒன்றை மாநாட்டுக்கு அனுப்புவதுதான் அந்தத் தீர்மானம். ஆனால், அதனை ஏற்றுக்கொள்வதற்குக் கூட தமிழகம் தயாராகவில்லை. இந்தியாவின் பிரதிநிதித்துவம் எந்தவகையிலும் இருக்கக்கூடாது என்பதில் தமிழக அரசியல் தலைவர்கள் உறுதியாகவுள்ளார்கள். இதற்கான மக்கள் போராட்டங்கள் தமிழகத்தில் முடுக்கிவிடப்பட்டுள்ளன. தமிழக காங்கிரஸ் கட்சியும் இந்தக் கோரிக்கையுடன் இணைந்திருப்பது கவனிக்கத்தக்கது. பொதுத் தேர்தலில் தமது வாக்கு வங்கிகளைப் பாதுகாக்க வேண்டுமானால் இந்தக் கோரிக்கையுடன் இணைந்திருக்க வேண்டும் என தமிழக காங்கிரஸ் கட்சியும் திட்டமிட்டுச் செயற்படுகின்றது. இது காங்கிரஸ் தலைமைக்கான அழுத்தத்தை மேலும் அதிகப்படுத்துவதாக அமையும்.

இலங்கை குறித்த தன்னுடைய கொள்கையை வகுத்துக்கொள்வதில் இரண்டு விடயங்களையிட்டு இந்தியா எப்போதும் கவனத்திற்கொண்டிருந்தது. ஒன்று - தமிழகத்தின் உணர்வுகள். இரண்டு - இலங்கையின் கேந்திர முக்கியத்துவம். மற்றும் இலங்கையுடனான உறவு. இந்த இரண்டும் ஒன்றுடன் ஒன்று முரண்படும் நிலையில்தான் இப்போது ஒரு தீர்மானத்தை எடுப்பதில் இந்தியா தடுமாறுகின்றது. கொழும்பு மாநாட்டில் பங்குகொள்வதில்லை என்ற தீர்மானத்தை இந்தியா எடுத்துக்கொண்டால், அவ்வாறான முடிவை எடுத்த நாடாக இந்தியா மட்டும் இருக்காது. கனடா இவ்வாறான தீர்மானத்தை ஏற்கனவே எடுத்திருக்கின்றது. இலங்கையில் இந்த மாநாடு நடைபெறுவதை ஆரம்பம் முதலே கனடா எதிர்த்துவந்திருக்கின்றது. இந்த மாநாட்டில் கலந்துகொள்வது என்பது மனித உரிமைகள் விடயத்தில் சர்வதேசத்தின் கரிசனைகளையிட்டு கவலைப்படாமல் செயற்படும் மகிந்த ராஜபக்ஷ அரசுக்கு வழங்கப்படும் அங்கீகாரமாக அமைந்துவிடும் என்பதுதான் கனடாவின் கருத்து. இந்த மாநாட்டில் பங்குகொள்ளக் கூடாது என்ற அழுத்தத்துக்குள்ளாகியிருக்கும் மற்றொரு நாடு பிரித்தானியா. ஆனால், மாநாட்டில் பங்குகொண்டு மனித உரிமைகள் குறித்து கேள்வி எழுப்பப்போவதாக பிரித்தானியப் பிரதமர் அறிவித்திருக்கின்றார்.

கனடா மற்றும் பிரித்தானியாவை விட இலங்கை விவகாரம் இந்தியாவுக்கு முக்கியமானது. ஆனால், இலங்கை விவகாரத்தில் ஒரு உறுதியான தீர்மானத்தை எடுக்கக்கூடிய நிலையில் இந்தியா இல்லை. இராஜதந்திர ரீதியில் இலங்கையிடம் இந்தியா எப்போதும் தோல்வியடைந்தே வந்திருக்கின்றது. தமிழர் நலன்கள் குறித்து தமிழகத்திலிருந்து வரக்கூடிய அழுத்தங்களை தமது நலன்களைப் பாதுகாப்பதற்கான துருப்புச் சீட்டாகவே இந்தியா பயன்படுத்திவருகின்றது. இப்போது கூட, சம்பூரைப் பெற்றுக்கொள்வதில் இந்தியா காட்டிய அக்கறையில் ஒரு வீததத்தைக் கூட சம்பூரிலிருந்து வெளியேற்றப்பட்ட மக்களின் எதிர்காலம் குறித்து காட்டவில்லை. கொழும்புக்குக் கிடைத்த வெற்றி இதுதான். இந்த நிலையில் தமிழக சட்டப்பேரவைத் தீர்மானம் மற்றும் தமிழகத்தில் உருவாகியிருக்கும் எழிச்சி என்பனவற்றை இந்தியா எவ்வாறு பயன்படுத்திக்கொள்ளப்போகின்றது?

(ஞாயிறு தினக்குரல் ஆசிரியர் தலையங்கம்: 2013-10-27)

Sunday, October 20, 2013

இராஜதந்திர நகர்வு!

வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ முன்னிலையில் மீண்டும் ஒரு முறை சத்தியப்பிரமாணம் செய்திருக்கின்றார். வடமாகாணத்துக்கான அமைச்சுப் பொறுப்புக்களுக்காகவே அவர் இப்போது இந்தப் பதவிப் பிரமாணத்தை மேற்கொண்டிருக்கின்றார். விக்னேஸ்வரன் வடமாகாணத்தின் முதலமைச்சராகவுள்ள அதேவேளையில் முக்கியமான 16 அமைச்சுப் பொறுப்புக்களையும் தன்வசம் எடுத்துக்கொண்டிருக்கின்றார். இதில் கவனிக்கப்பட வேண்டிய முக்கிய விடயம் ஒன்றுள்ளது. சட்டம், ஒழுங்கு மற்றும் காணி போன்ற சர்ச்சைக்குரிய விடயங்களுக்கான அமைச்சுப் பொறுப்புக்களையும் அவர் தன்வசம் எடுத்துக்கொண்டிருக்கின்றார் என்பதுதான் அது. எதனைச் செய்யக்கூடாது என ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ நினைத்திருந்தாரோ அதனைச் செய்வதற்கு நிர்ப்பந்திக்கப்பட்டிருக்கின்றார்.

வடமாகாண சபைக்கு இந்த அதிகாரங்கள் கொடுக்கப்படக்கூடாது என்பதற்காக ஜனாதிபதியும், அவரது அரசாங்கமும் சிங்கள தேசியவாதக் கட்சிகளுடன் இணைந்து செயற்பட்டனர் என்பது இலகுவில் மறந்துவிடக்கூடியதல்ல. இதற்காக 13 ஆவது திருத்தத்தை மாற்றியமைப்பதற்கான பிரேரணை ஒன்றும் பாராளுமன்றத்துக்குக் கொண்டுவரப்படவிருந்தது. இந்த மாற்றத்தைச் செய்யாமல் வடமாகாண சபைக்கான தேர்தலை நடத்தினால் பதவி துறக்கப்போவதாக அமைச்சர் ஒருவரும் அதிரடியாக அறிவித்திருந்தார். இவ்வளவுக்குப் பின்னரும் சட்டம், ஒழுங்கு காணி அதிகாரங்களை உள்ளடக்கிய அமைச்சுப் பொறுப்புக்களை விக்னேஸ்வரனிடம் கையளித்து ஜனாதிபதி கைச்சாத்திட்டிருப்பது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் இராஜதந்திர காய்நகர்த்தல்களுக்குக் கிடைத்த ஒரு வெற்றியாகக் கருதலாம். ஆனால், இந்த அதிகாரங்களை மாகாண சபையால் பயன்படுத்தக்கூடியதாக இருக்குமா அல்லது இதனைப் பயன்படுத்துவதற்காகப் போராட வேண்டியிருக்குமா என்ற முக்கியமான கேள்வியும் இங்கு எழுகின்றது.

ஆனால், உண்மையில் இதனை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் இராஜதந்திர வெற்றி என மட்டும் கூறிவிட முடியாது. சர்வதேச அரங்கில் உருவாகியிருக்கும் இலங்கைக்கு எதிரான நெருக்குதல்களே இதற்கான கள நிலையை கூட்டமைப்புக்கு ஏற்படுத்திக்கொடுத்திருந்தது. விடுதலைப் புலிகளுடனான போரை அரசாங்கம் முடிவுக்குக் கொண்டுவந்திருந்தாலும், அதன்போது இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள், போர்க் குற்றங்கள் என்பன சர்வதேச அரங்கில் இலங்கை மீதான அழுத்தங்களைத் தீவிரமாக்கியிருக்கின்றது. பொறுப்புக் கூறல், நல்லிணக்கம் என்பவற்றின் அடிப்படையில் எதனையாவது செய்தாகவேண்டிய நிர்பந்தம் கொழும்புக்கு உள்ளது. அரசாங்கம் விரும்பாத போதிலும் வடமாகாண சபைக்கான தேர்தலை நடத்தியமைக்கும் இந்த நிர்ப்பந்தமே காரணம். மாகாண சபையின் அதிகாரங்களைப் பிடுங்கிக்கொள்ளாமல் விட்டதன் பின்னணியும் அதுதான். போரின் பின்னர் ஏற்பட்டுள்ள இந்தக் கள நிலைமைதான் கூட்டமைப்பு இலகுவாக காய்நகர்த்துவதற்கான  வாய்ப்பான நிலையை ஏற்படுத்திக்கொடுத்திருக்கின்றது.

இலங்கை அரசாங்கம் தன்னுடைய சிங்கள தேசியவாத கடும்போக்கைத் தளர்த்திக்கொண்டுள்ளமைக்கு தற்போதைய நிலையில் இரண்டு விடயங்கள் காரணமாகவுள்ளன. ஒன்று - அடுத்த மாதம் நடைபெறவிருக்கும் பொதுநலவாய நாட்டுத் தலைவர்களின் உச்சி மாநாடு. இரண்டாவது - மார்ச் மாதம் நடைபெறவிருக்கும் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் ஜெனீவா கூட்டத் தொடர். பல நெருக்கடிகளுக்கு மத்தியில்தான் பொதுநலவாய உச்சி மாநாடு கொழும்பில் நடைபெறவுள்ளது. சர்வதேச சமூகத்தில் தான் ஓரங்க்டப்பட்டுவிடவில்லை என்பதைக் காட்சிப்படுத்துவதற்கு இலங்கை அரசாங்கத்துக்கு இந்த மாநாடு அவசியமானதாகவுள்ளது. ஆனால், இந்த மாநாட்டுக்கு வருகைதரவுள்ள பிரித்தானிய போன்ற நாடுகளின் தலைவர்கள் கேள்விக் கணைகளுடன்தான் வரவுள்ளார்கள். கனடா வரப்போவதில்லை என திட்டவட்டமாக அறிவித்துவிட்டது. இந்தியா நிலைமைகளை உன்னிப்பாக அவதானித்துக்கொண்டிருக்கின்றது.

இலங்கைக்குள்ள இரண்டாவது பிரச்சினை ஜெனீவா! ஜெனீவாவில் இலங்கைக்கு எதிராகக் கொண்டுவரப்பட்ட இரண்டு பிரேரணைகள் நிறைவேற்றப்பட்டிருந்தாலும், அந்தத் தீர்மானங்கள் பலவீனப்படுத்தப்பட்டமைக்கு இந்தியாவே பின்னணியில் செயற்பட்டது. ஆனால், அடுத்த மார்ச் மாதத்தில் அதேபோன்ற ஒரு பங்களிப்பை வழங்க இந்தியாவினால் முடியாது போகலாம். ஏப்ரல் மாதத்தில் இந்தியப் பொதுத் தேர்தல் நடைபெறவிருப்பது இதற்குக் காரணம். இந்தத் தேர்தலின் போது தமிழகத்தின் அதிகரித்த நிர்ப்பந்தத்தை எதிர்கொள்ள வேண்டிய நிலை  டில்லிக்கு இருக்கும். தமிழர்களை அரவணைக்கும் வகையில் பிரதான எதிர்க்கட்சியான பாரதிய ஜனாதா கட்சி வியூகங்களை அமைப்பது காங்கிரஸ் அரசுக்கு மேலும் நிர்ப்ந்தங்களை ஏற்படுத்தும். இதனால் இம்முறை ஜெனீவாவில் இலங்கையைப் பாதுகாக்க இந்தியா முற்படும் என எதிர்பார்க்க முடியாது.  ஆக, பொறுப்புக்கூறல் மற்றும் நல்லிணக்கம் போன்றவற்றில் கணிசமான முன்னேற்றத்தைக் காட்டாத வரையில் வரப்போகும் ஜெனீவா கூட்டத் தொடர் இலங்கைக்கு நெருப்பாறாகத்தான் இருக்கும்!

இந்தப் பின்னணியில் வடமாகாண சபையின் செயற்பாடுகளைப் பாதிக்கும் வகையில் எதனையாவது செய்யப்போவது ஆபத்தானதாக அமையும் என்பதை கொழும்பு  உணர்ந்துகொண்டுள்ளதாகவே தெரிகின்றது. இனவாதத்தைக் கக்கும் அரசாங்கத்தின் பங்காளிக் கட்சிகளின் அசாதாரண மௌனம் கூட இதனை உறுதிப்படுத்துவதாகத்தான் உள்ளது. இதனை மற்றொருவகையில் சொன்னால், மாகாண சபைகளுக்கான அதிகாரங்கள் உட்பட தமிழர்களின் நலன்சார்ந்த விடயங்களைப் பொறுத்து காய் நகர்த்துவதற்கான ஒரு சிறப்பான வாய்ப்பாக இதனைக் கருதலாம். தான் விரும்பாவிட்டாலும், சட்டம், ஒழுங்கு மற்றும் காணி போன்ற விடயங்களை உள்ளடக்கிய அமைச்சுப் பொறுப்புக்களை விக்னேஸ்வரனிடம் கொடுக்க நிர்ப்பந்திக்கப்பட்டதைப்போல இன்னும் பல நிர்ப்பந்தங்கள் ஜனாதிபதிக்கு ஏற்படலாம். உட்கட்சிப் பூசல்களைத் தவிர்த்து திட்டமிட்ட முறையில் காய்களை நகர்த்துவதன் மூலம் மேலும் பலவற்றை கூட்டமைப்பினரால் சாதிக்க முடியும். ஆதற்கான கள நிலமையை சர்வதேசம் இப்போது ஏற்படுத்திக்கொடுத்திருக்கின்றது. சாதிப்பார்களா கூட்டமைப்பினர்?

(ஞாயிறு தினக்குரல் ஆசிரியர் தலையங்கம்: 2013-10-20)

Tuesday, October 15, 2013

இதற்காகத்தான் வாக்களித்தோமா?

வடமாகாண சபை செயற்படத் தொடங்குவதற்கு முன்னதாகவே சபையைக் கைப்பற்றிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கூட்டுக் கட்சிகளிடையேயான முரண்பாடுகள் சூடுபிடிக்கத் தொடங்கிவிட்டன. முலமைச்சரின் பதவியேற்புக்கு கூட்டுக்கட்சிகளின் தலைவர்கள் பலரும் வரவில்லை. அதேபோல அமைச்சர்கள், மாகாண சபை உறுப்பினர்களின் பதவியேற்பு யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற போது அதிலும் கட்சித் தலைவர்கள் பலர் பங்குகொள்ளவில்லை. நிகழ்வை அவர்கள் புறக்கணித்தார்கள். கூட்டமைப்பின் மாகாண சபை உறுப்பினர்கள் சிலர் முதலமைச்சர் முன்பாக பதவியேற்க மறுத்து தனியாக பதவிப் பிரமாணம் செய்யவிருப்பதாக அறிவித்திருக்கின்றார்கள். இதன்மூலம் வடமாகாண சபையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆளும் கட்சியாகவுள்ள நிலையில் அதற்குள்ளேயே ஒரு தரப்பினர் எதிர்க்கட்சி போன்று செயற்படும் நிலை உருவாகியிருக்கின்றது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் பாரிய நம்பிக்கை வைத்து அதற்கு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒரு வெற்றியைப் பெற்றுக்கொடுத்த மக்கள் கடந்த இரண்டு வாரகாலமாக அங்கு இடம்பெறும் குத்துவெட்டுக்களால் அதிர்ந்துபோயுள்ளார்கள். இதற்காகத்தான் வாக்களித்தோமா என்ற கேள்வியை எழுப்பாத வாக்காளர்கள் இல்லை என்று சொல்லும் அளவுக்கு நிலைமைகள் மோசமாகியுள்ளன.

போர் முடிவுக்கு வந்து நான்கு வருடங்கள் கடந்துள்ள நிலையில் இருளுக்குள் இருக்கும் மக்களுக்குத் தொலைவில் தெரியும் ஒரு ஒளிக்கீற்றாகத்தான் மாகாண சபை உருவாகியது. மாகாண சபைக்கான அதிகாரங்கள் பறிக்கப்பட்ட அல்லது முடக்கப்பட்ட நிலை ஒருபுறம். மாகாண சபைகளுக்கு எதனையும் கொடுக்கக்கூடாது என்ற சிங்களத் தேசியவாதிகளின் கூக்குரல் மறுபுறம். இதற்கு மத்தியிலும் போரால் சிதைந்துபோயுள்ள வடக்கு மக்களின் பிரமாண்டமான தேவைகளை இந்த மாகாண சபை எவ்வாறு பெற்றுக்கொடுக்கப்போகின்றது என்ற கேள்வி எழாமலில்லை. போரினால் அனைத்தையும் இழந்து மீள்குடியேற்த்துக்காக ஏங்கிக்கொண்டிருக்கும் மக்களின் எதிர்பார்ப்புக்கள். காணாமல்போன உறவுகளைத் தேடியலையும் மக்களின் வேதனைகள். குடும்பத் தலைவரை இழந்து வாழ்வாதாரத்துக்காக தினசரி போராடிக்கொண்டிருக்கும் குடும்பங்கள். விதவைகள், அங்கவீனர்கள். இவர்களுடன் முன்னாள் போராளிகள் சமூகத்தில் எதிர்கொள்ளும் நெருக்கடிகள் என ஏராளமான பிரச்சினைகள் மாகாண சபையின் முன்பாக உள்ளன. இவை அனைத்துக்கும் நியாயமானதும், கௌரவமானதுமான ஒரு தீர்வை மாகாண சபை பெற்றுத் தரும் என்ற நம்பிக்கையுடன்தான் தமிழர்கள் பாரியளவில் வாக்களித்து வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த வெற்றி ஒன்றை தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குப் பெற்றுக்கொடுத்தார்கள்.

நெருக்கடியான ஒரு காலகட்டத்தில் கிடைத்திருக்கக்கூடிய ஒரு சிறிய வாய்ப்பாகத்தான் வட மாகாண சபை அமையப்பெற்றிருக்கின்றது. உடனடியாகத் தீர்க்கப்பட வேண்டிய விடயங்கள், நீண்டகால அடிப்படையில் தீர்க்கப்பட வேண்டிய பிரச்சினைகள் என திட்டங்களை வகுத்துச் செயற்பட வேண்டிய நிலையில் மாகாண சபை உள்ளது. முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனும் பதவியேற்ற உடன் வெளியிட்ட அறிக்கையிலும் இது தொடர்பாகக் குறிப்பிட்டிருந்தார். இந்தப் பொறுப்பை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சிறப்பாக முன்னெடுக்கும் என்ற நம்பிக்கையைத்தான் தமது வாக்குகளின் மூலம் தமிழர்கள் உணர்த்தியிருந்தார்கள். போர் முடிவுக்கு வந்த பின்னர் இடம்பெற்ற பாராளுமன்ற மற்றும் ஜனாதிபதித் தேர்தல்களை விட மாகாண சபைத் தேர்தலில் அதிகளவில் தமிழர்கள் பங்குகொண்டு வாக்களித்தது இந்த நம்பிக்கையில்தான். தமக்கு உறுதியான - கௌரவமான ஒரு எதிர்காலத்தை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பெற்றுத்தரும் என அவர்கள் எதிர்பார்த்தார்கள். நம்பிமானார்கள். கூட்டமைப்பின் தலைவர்கள் எதிர்பார்த்ததைவிடவும் அதிகமான ஒரு வெற்றியை மக்கள் பெற்றுக்கொடுத்தார்கள். மக்களின் ஆணையைப் பெற்றுக்கொண்ட கூட்டமைப்பு இப்போது என்ன செய்யப்போகின்றது?

இந்த இடத்தில் கூட்டமைப்பின் தலைவர்கள் ஒரு விடயத்தைத் தெளிவாகப் புரிந்துகொள்வது அவசியம். தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு அளிக்கப்பட்ட வாக்குகள் அவர்களால் முன்வைக்கப்பட்ட தேர்தல் அறிக்கைக்காக, அவர்கள் முன்னெடுத்த பிரசாரத்துக்காக அளிக்கப்பட்ட வாக்குகள். கூட்டமைப்பு என்பதற்காகத்தான் அந்த வாக்குகள் அளிக்கப்பட்டன. கூட்டமைப்பிலுள்ள தனிப்பட்ட கட்சிகளை அடையாளம்கண்டு அதற்காக மக்கள் வாக்களிக்கவில்லை. அவ்வாறு வாக்களித்திருந்தால் பொது வேட்பாளராக களமிறங்கிய நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரனால் எவ்வாறு அதிகளவு விருப்பு வாக்குகளைப் பெற்றுக்கொள்ள முடிந்தது? கூட்டமைப்பிலுள்ள கூட்டுக்கட்சிகள் தமது தனிப்பட்ட அடையாளங்களை மறந்து ஒற்றுமையாகச் செயற்பட்டு தமிழர்களுக்கு கௌரவமான ஒரு தீர்வைப் பெற்றுத்தர வேண்டும் என்பதற்காகத்தான் மக்கள் வாக்களித்திருந்தார்கள். மன்னார் மாவட்ட ஆயர் ராயப்பு ஜோசெப் கூட, தனிப்பட்ட அடையாளங்களைக் கைவிட்டு கூட்டமைப்பு என்ற ஒரே அடையாளத்துக்குள் செயற்படுவதற்கு அதிலுள்ள கட்சிகள் முன்வர வேண்டும் என்பதை வலியுறுத்திருந்தார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலுள்ள கட்சிகளைப் பொறுத்தவரையில் தேர்தல் காலங்களில் வெளிப்படுத்தும் ஒற்றுமை தேர்தல் முடிவடைந்ததும் சிதைநதுபோய்விடும் நிலைதான் தொடர்கின்றது.

பொது நலன்களை முன்னிலைப்படுத்துவதாகக் கூறிக்கொண்டாலும், கூட்டுக்கட்சிகள் தமது தனிப்பட்ட கட்சி நலன்களின் அடிப்படையில்தான் செயற்படுகின்றனவா என்ற சந்தேகம் வாக்களித்த அனைவருக்கும் எழுகின்றது. குறிப்பாக கடந்த இரண்டு வாரகாலமாக அமைச்சர் பதவிகள் தொடர்பில் இடம்பெற்ற இழுபறி இந்த சந்தேகத்தை அதிகப்படுத்தியிருக்கின்றது. போரால் சிதைந்போயுள்ள ஒரு பிரதேச மக்களின் நலன்களை முன்னிலைப்படுத்துவதற்குப் பதிலாக கட்சி நலன்களை முன்னிலைப்படுத்துவதாகவே இந்த இழுபறிகள் அமைந்திருந்தன. கூட்டமைப்பில் ஐந்து கட்சிகள் இருந்தாலும் அதில் தமிழரசுக்கட்சியின் மேலாதிக்கம் தமது நலன்களைப் பாதிப்பதாக மற்றைய கட்சிகள் கருதுகின்றன. தம்மைப் பலவீனப்படுத்திவிட்டு கூட்டமைப்பு என்றால் தமிழரசுக்கட்சி என்ற நிலையை உருவாக்க அந்த கட்சி முயல்வதாக ஏனைய கட்சிகளின் தலைலவர்கள் குமுறுகின்றார்கள். இதனால் மற்றைய கட்சிகள் ஒருவித தற்காப்பு நிலையிலேயே எப்போதும் உள்ளன. கூட்டமைப்புக்குள் ஒரு முறுகல் நிலை தொடர்வதற்கு இதுதான் காரணம். கூட்டமைப்பிலுள்ள கூட்டுக்கட்சிகள் தமது கட்சிகளைக் கலைத்துவிட்டு கூட்டமைப்பை தனியான ஒரு கட்சியாகப் பதிவு செய்து ஜனநாயக ரீதியாகச் செயற்படுவதற்கான நகர்வுகளை மேற்கொள்ளாதவரையில் இந்த நிலை தொடரத்தான் போகின்றது. இதற்காகத்தான் வாக்களித்தோமா என மக்கள் பெருமூச்சு விடும் நிலையை கூட்டமைப்பின் தலைவர்கள் ஏற்படுத்தமாட்டார்கள் என நம்புவோம்!

(ஞாயிறு தினக்குரல் ஆசிரியர் தலையங்கம்:2013-10-13)

Wednesday, July 10, 2013

தடைசெய்யப்பட்ட 'ரைம்' சஞ்சிகையும் வலுவடையும் பௌத்த தீவிரவாதமும்


உலகின் முன்னணி சஞ்சிகையான அமெரிக்காவிலிருந்து வெளிவரும் 'ரைம்' வார இதழ் கடந்த வாரம் கட்டுநாயக்க விமான நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டது. பின்னர் சஞ்சிகை தடை செய்யப்பட்டு சுமார் 4,000 பிரதிகளை சுங்கப் பகுதியினர் கைப்பற்றிக்கொண்டார்கள். சர்வதேச ரீதியில் முன்னணியிலுள்ள சஞ்சிகை ஒன்று இலங்கையில் தடைசெய்யப்படுவது இதுதான் முதல் முறை என்பதால் விவகாரம் சர்வதேச கவனத்தைப் பெற்றிருக்கின்றது. ஊடக சுதந்திரம் தொடர்பில் முக்கியமாகப் பேசப்படும் நிலையில் இந்தத் தடை, அதுவும் அமெரிக்காவின் முன்னணி சஞ்சினை ஒன்றின் மீதான தடை அனைவரின் ஊடக சுதந்திரத்துக்காக குரல் கொடுக்கும் அமைப்புக்களின் கவனத்துக்குச் சென்றிருக்கின்றது.

'ரைம்' தடை செய்யப்படுவதற்குக் காரணம் மியன்மாரின் பௌத்த மதத்துறவியான 'விராது' என்பவரைப் பற்றியும், அவரது '969' என்ற இயக்கம் பற்றியும் வெளியாகியிருந்த கட்டுரைதான். இலங்கையின் பலம்வாய்ந்த முன்னணி பௌத்த தேசியவாத அமைப்பான பொது பல சேனாவின் செயற்பாடுகளுடன் 969 இயக்கத்தையும் ஒப்பிட்டு இந்தக் கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ள கருத்துக்கள் பொது பல சேனாவுக்கு சீற்றத்தைக் கொடுத்தது. பொது பல சேனா கொடுத்த அழுத்தம்தான் இந்தத் தடைக்குக் காரணம் எனவும் கூறப்படுகின்றது.

'மியன்மாரின் பின் லேடன்' எனக்குறிப்பிடப்படும் பௌத்த மதத் துறவி அல்லது மதத் தலைவரான விராது இன்று அந்நாட்டில் மிகவும் புகழ்பெற்ற ஒருவர். மியன்மாரின் ,இரண்டாவது பெரிய நகரான மண்டலேயில் அமைந்திருக்கும் ஒரு விகாரையிலிருந்துதான் அவர் தன்னுடைய போதனைகளை வெளியிடுகின்றார். அவரது உபதேசங்களைக் கேட்பதற்காக நூற்றுக்கணக்கானவர்கள் அங்கு தினசரி கூடுகின்றார்கள். ஒரு அமைதியான நிகழ்வாக இது தோன்றினாலும், விராதுவின் உபதேசம் மிகவும் சூடானதாகத்தான் இருக்கும். "உங்களுடைய இரத்தம் கொதித்து வெகுண்டு எழ வேண்டிய தருணம் இது" என விராது உணர்ச்சிவசப்பட்டவராக உபதேசிக்க, அவரது உரையின் சூட்டில் மியன்மாரில் பௌத்தர்களின் இரத்தம் கொதித்தெழுகின்றது.

பௌத்தர்களின் இரத்தம் கொதித்தெழுவது முஸ்லிம்கள் இரத்தம் சிந்துவதில் முடிகின்றது. பௌத்த மதக் குழுக்கள் முஸ்லிம் மக்களை இலக்கு வைக்கின்றன. இந்தப் பின்னணியில் முஸ்லிம்கள் நூற்றுக்கணக்கில் கொல்லப்பட்டுள்ளதாக மனித உரிமை அமைப்புக்கள் குற்றஞ்சாட்டுகின்றன. இதனைவிட மேலும் பெருந்தொகையானவர்கள் வீடு வாசல்களை இழந்து அகதிகளாகியுள்ளார்கள். முஸ்லிம்கள் மீதான இந்தத் தாக்குதல்கள் பல மாதங்களாகத் தொடர்ந்துகொண்டிருந்த போதிலும், மீயன்மார் அரசாங்கம் அதனைக் கண்டும் காணாமலும் இருந்தது. மனித உரிமை அமைப்புக்களின் கரிசனை குறித்து கவனம் செலுத்தப்படவில்லை.

மியன்மாரில் சுமார் ஆறு கோடி மக்கள் உள்ளார்கள். இதில் மிகவும் சிறுபான்மையினராக ஐந்து வீதம் மட்டுமே முஸ்லிம்கள். ஆனால், இந்த முஸ்லிம்கள் மியன்மாருக்கும் அதன் கலாசாரத்துக்கும் அச்சுறுத்தல் என்று விராது கருதுகின்றார். அல்லது அவ்வாறு போதிக்கின்றார். "முஸ்லிம்கள் மிகவும் விரைவாகப் பல்கிப் பெருகுகின்றார்கள். அவர்கள் எங்களுடைய பெண்களைக் கவர்ந்து கற்பழிக்கின்றார்கள்" என்று விராது ரைம் சஞ்சிகைக்கு வழங்கிய பேட்டியின் போது குறிப்பிட்டிருக்கின்றார். "முஸ்லிம்கள் எமது நாட்டை ஆக்கிரமிக்க நினைக்கின்றார்கள். ஆனால் நான் அதற்கு அனுமதிக்கமாட்டேன். மியன்மாரை நாம் ஒருபௌத்த நாடாக வைத்திருக்கவே விரும்புகின்றோம்" எனவும் அவர் உறுதிபடத் தெரிவித்திருக்கின்றார். அவரது உணர்ச்சிகரமான உரை அவருக்குப் பின்பாக பெருந்தொகையானவர்களை ஒன்று திரட்டுகின்றது.

மக்களைக் கவர்ந்திழுக்கக்கூடிய விராதுவின் சக்திவாய்ந்த பேச்சுக்கள் பௌத்த மக்கள் மத்தியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்துகின்றது. மியன்மமாரின் பௌத்த மக்கள் மத்தியில் தமது மதம் அச்சுறுத்தலுக்குள்ளாகியுள்ளது என்ற ஒரு அச்ச உணர்வு காணப்படுகின்றது. இந்த அச்ச உணர்வுக்கு வரலாற்று ரீதியான சில காரணங்களும் உள்ளன. குறிப்பாக ஆசியாவில் பௌத்த மதம் வியாபித்திருந்த பல நாடுகள் இப்போது முஸ்லிம்களின் கட்டுப்பாட்டில் உள்ளது. குறிப்பாக ஆப்கானிஸ்தான். இங்குள்ள பௌத்த புராதனச் சின்னங்கள் பல முஸ்லிம் தீவிரவாதிகளால் அழிக்கப்பட்ட தகவல்கள் வாசகர்களுக்கு நினைவிருக்கலாம். மியன்மாரிலும் முஸ்லிம்களின் தொகை அதிகரித்துவருவதாகக் கருதும் பௌத்த தீவிரவாதிகள் அதன் மூலம் தமக்கு அச்சுறுத்தல் ஏற்படலாம் என அஞ்சுகின்றார்கள். அதேபோல மத்திய கிழக்கு நாடுகளிலிருந்து வரும் நிதி உதவிகள் தொடர்பிலான அச்சமும் இவர்களிடம் காணப்படுகின்றது.

மியன்மாரைப் பொறுத்தவரையில் அங்கு பெரிதும் சிறிதுமாக 135 இனக்குழுக்கள் உள்ளன. இவற்றுக்கிடையிலான ஒற்றுமை என்பது எப்போதும் கேள்விக்குறியாகவே இருந்துள்ளது. தற்போதைய நிலையில் முஸ்லிம்களுக்கு எதிராகக் கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ள பௌத்த இனவாதம்தான் அந்த நாட்டை இரத்தக்களரியாக்கிக்கொண்டிருக்கின்றது. முஸ்லிம்களுக்கு எதிரான பிரச்சாரம் பெருமளவுக்கு திட்டமிட்ட முறையில் முன்னெடுக்கப்படுகின்றது. முஸ்லிம்களின் சனத் தொகை அதிகளவில் பெருகிவருவதாகப் பிரச்சாரம் செய்யும் பௌத்த துறவிகள், முஸ்லிம்கள் இரண்டு குழந்தைகளுக்கு மேல் பெற்றுக்கொள்வதைத் தடை செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்திவருகின்றார்கள். இந்தப் பிரச்சாரங்கள் அனைத்தும் ஏதோ ஒருவகையில் இலங்கையில் பொதுபல சேனா முன்னெடுக்கும் பிரச்சாரத்துடன் ஒத்துப்போவதாகவே அமைந்திருக்கின்றது. இதேபோன்ற சில செயற்பாடுகள் தாய்லாந்திலும் காணப்படுகின்றது.

ரைம் சஞ்சிகையின் கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ள மற்றொரு கருத்தும் கவனத்திற்கொள்ளப்பட வேண்டியதாகும். மதத்தீவிரவாதிகளைப் பட்டியலிடும் போது இந்துத் தேசியவாதிகள், முஸ்லிம் தீவிரவாதிகள், அடிப்படைவாத கிறிஸ்தவர்கள் மற்றும் தீவிரவாத யூதர்கள் என்ற வகையிலான ஒரு கணிப்பீடுதான் அண்மைக்காலம் வரையில் காணப்பட்டது. இந்தப் பட்டியில் பௌத்த தீவிரவாதம் இதுவரைகாலமும் உள்ளடக்கப்படவில்லை.  புத்தரினால் தோற்றுவிக்கப்பட்ட பௌத்த மதம் அன்பு மற்றும் கருணை என்பவற்றை அடிப்படையாகக் கொண்டதாகவே அண்மைக்காலம் வரையில் நோக்கப்பட்டது. ஆனால், ஏனைய மதத் தீவிரவாதிகளையொத்ததாகவே அவர்களுடைய செயற்பாடுகளும் அமைந்திருப்பதை மியன்மாரில் நடைபெற்ற நிகழ்வுகளும் இலங்கையில் இடம்பெறும் சம்பவங்களும் உறுதிப்படுத்துகின்றன.

2003 ஆம் ஆண்டில் முஸ்லிம்களுக்கு எதிராக படுகொலையைத் துண்டிவிட்டவர் என்ற குற்றத்துக்காக கைதான விராது ஏழு வருடங்கள் சிறைவாசம் அனுபவித்தவர். சிறையிலிருந்து விடுதலையான பின்னரும் தன்னுடைய கொள்கையை அவர் விட்டுவிடவில்லை. தொடர்ந்து முஸ்லிம்களுக்கு எதிராக பௌத்த தேசியவாதத்தைப் போசிப்பவராகவே அவர் உள்ளார். சிறைவாசத்தின் பின்னரே 969 என்ற அமைப்பை விராது உருவாக்கினார். 969 என்பது புத்தரின் பல்வேறு குணாம்சங்களைக் குறிப்பிடுவதாக அமைந்திருக்கின்றது. தமது இனத்தையும் மதத்தையும் பாதுகாப்பது என்பது ஜனநாயகத்தைவிட முக்கியமானது என இவ்வமைப்பு பௌத்த மக்களுக்குப் போதிக்கின்றது.

இந்தப் பின்னணியிலேயே முஸ்லிம்களுக்கு எதிரான தாக்குதல்கள் தீவிரமடைந்தன. பல முஸ்லிம்கள் கொல்லப்பட்டனர். சொத்துக்கள் அழிக்கப்பட்டன. இந்த வெறியாட்டத்தைத் தடுத்து நிறுத்துவதற்கு அரச தரப்பு எதனையும் செய்யவில்லை என்ற குற்றச்சாட்டு மனித உரிமைகள் அமைப்புக்காளல் முன்வைக்கப்பட்டது. அதிகமான இடங்களில் இந்த வன்முறை வெறியாட்டங்கள் பிக்குகளின் தலைமையிலேயே நடத்தப்பட்டது.

இது தொடர்பான தகவல்களைத் தாங்கிய ரைம் சஞ்சினை இன நல்லுறவைப் பாதிப்பதாக அமைந்திருப்பதாக தடை செய்யப்படுகின்றது. ஆனால், இன நல்லுறவைப் பாதிக்கும் வகையில் முஸ்லிம் மக்களுக்கு எதிரான செயற்பாடுகளை முன்னெடுக்கும் அமைப்புக்களுக்கு அரச ஆதரவு தாரளமாகக் கிடைக்கின்றது. இதுதான் ஆசியாவின் அதிசயம்!
- பார்த்தீபன்

Tuesday, July 9, 2013

பதவியைத் துறப்பாரா வாசு?

இலங்கையின் தற்போதைய அமைச்சர்களுக்கிடையில், நாட்டிற்குள் இனவாதம் மற்றும் மதவாத தீயை அணைப்பதற்காக நேர்மையாக முயற்சிப்பவர்கள் 50 வீதமானவர்களே என அமைச்சர் வாசுதேவ நாணயக்கார அண்மையில் தெரிவித்திருந்தார். ஏனையவர்களில் பெருபாலானவர்கள், இனவாத, மதவாத செயற்பாடுகளில் நேரடியாக ஈடுபடாவிட்டாலும் அதற்கு ரகசியமான முறையில் பங்களிப்பு செய்து வருகின்றனர் என்பது அவரது குற்றச்சாட்டு. தமது இனம் மற்றும் மதம் தொடர்பில் கொண்டுள்ள குருட்டுத்தனமாக பக்தி காரணமாவே அவர்கள் அவ்வாறு செய்யப்பட்டு வருகிறார்கள் என்பது வாசுதேவாவின் கருத்து.

போரில் வெற்றிகொண்டு இனவாதத்தையே அடிப்படையாகக்கொண்டு அரசியல் நடத்தும் அரசாங்கம் ஒன்றுக்குள் அமைச்சராக இருந்துகொண்டு இவ்வாறான கருத்துக்களை பகிரங்கமாகக் கூறக்கூடிய துணிச்சல் அமைச்சர் வாசுவை விட வேறு யாருக்கும் வராது எனக்கூறலாம். அரசியலமைப்புக்கான 13 ஆவது திருத்தத்தை நீர்த்துப் போகச் செய்வதற்கான செயற்பாடுகளில் அரசாங்கம் ஈடுபட்டுள்ள நிலையில், அதற்கு எதிராக அமைச்சரவைக்குள்ளேயே குரல் கொடுக்கும் முக்கியமானவர் அவர்தான். 13 இல் கைவைத்தால் அரசிலிருந்து வெளியேறுவேன் என்பது அவரது பிந்திய எச்சரிக்கை. இந்த நிலையில் அவரது அரசியல் பற்றி இந்த வாரம் சுருக்கமாகப் பார்ப்போம்.

13 ஐப் பாதுகாப்பதற்கான போராட்டத்தில் இடதுசாரி அமைச்சர்கள் பலர் இணைந்திருந்தாலும், 13 ஐப் பாதுகாக்க முடியாவிட்டால் அரசாங்கத்திலிருந்து விலகுவேன் என்ற அச்சுறுத்தலை விடுக்கக்கூடிய துணிச்சல் உள்ளவராக வாசு மட்டுமே உள்ளார். மற்றவர்கள் அரசுக்கு எச்சரிக்கை விடுத்தாலும் இல்லையெனில் பதவியைத் துறப்போம் என்ற வகையில் எச்சரிக்கைகளை வெளியிட தயாராக இருக்கவில்லை. கொள்கைகளை விட பதவி முக்கியம் என்பதில் அவர்கள் கவனமாக உள்ளார்கள்.

நீண்டகால இடதுசாரிப் பாரம்பரியத்தைக் கொண்டுள்ள அமைச்சர் வாசு ஒரு சட்டத்தரணி. என்.எம். பெரேரா, கொல்வின் ஆகியோரின் கருத்துக்களால் ஈர்க்கப்பட்டு இளமைக் காலத்திலேயே லங்கா சமசமாஜக் கட்சியில் இணைந்து தீவிர அரசியலை முன்னெடுத்தவர். இருந்த போதிலும் கட்சித் தலைமையுடன் ஏற்பட்ட முரண்பாடுகாளால் பின்னர் அதிலிருந்து விலகி விக்கிரமபாகு கருணாரட்ணவுடன் இணைந்து நவ சமசமாஜக் கட்சியை ஆரம்பித்தார். பின்னர் அதிலிருந்தும் விலகினார். இரண்டு தடவை ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்டுத் தோல்வியடைந்தவர். இப்போது ஆளும் கூட்டணியில் இணைந்து அமைச்சராகியிருக்கின்றார். ஆளும் கட்சியுடன் இணைந்து களம் இறங்கினால்தான் தேர்தலில் வெற்றி பெற முடியும் என்ற நிலையும் அவருக்குத் தெரியும்.

சந்திரிகா ஆட்சிக் காலத்திலும் இப்போது மகிந்த ஆட்சிக் காலத்திலும் அரசுக்குள் இருந்துகொண்டே அரசை விமர்சிப்பதற்கு அவர் தயங்கியதில்லை. ஜனாதிபதி ராஜபக்‌ஷவினால் அவருக்குக் கொடுக்கப்பட்ட அமைச்சர் பதவியும் முக்கியமானது. தேசிய மொழிகள் அமுலாக்கல், சமூக ஒருமைப்பாட்டு அமைச்சு அவருக்குக் கொடுக்கப்பட்டது. போர் முடிவடைந்திருக்கும் நிலையில் இந்த அமைச்சு முக்கியமான ஒன்றாகக் கருதப்பட வேண்டியது. இனங்களுக்கு இடையில் நல்லிணக்கத்தையும் நம்பிக்கையையும் ஏற்படுத்துவதில் முக்கிய பொறுப்பை ஏற்கவேண்டிய அமைச்சு. தேசிய மொழிகள் அமுலாக்கலில் அவர் அதிகளவுக்கு அக்கறை கொண்டுள்ளார் என்பதற்கு பல உதாரணங்கள் உள்ளன. குறைந்தளவு பட்ஜெட்டில் அரச இயந்திரங்கள் அனைத்தும் சிங்கள மயப்பட்டவையாக உள்ள நிலையில் இதனைச் செயற்படுத்துவது என்பது எந்தளவுக்கு கடினமானது என்பது புரிந்துகொள்ளக் கூடிய ஒன்றுதான். ஆனால், இவற்றுக்கு மத்தியிலும் அதனைச் செய்ய வேண்டும் என்பதற்காக அவர் கடுமையாகப் போராடுகின்றார் என்பது உண்மை!

13 ஆவது திருத்தம் தொடர்பில் வாசு வெளிப்படுத்திவரும் இறுக்கமான நிலைப்பாடு ஆச்சரியமான ஒன்றல்ல. தன்னுடைய அரசியல் வாழ்க்கையில் ஆரம்பம் முலலே சிறுபான்மையினருக்கு சம உரிமை வழங்கப்பட வேண்டும், அதிகாரப் பரவலாக்கல் என்பவற்றுக்காக கடுமையாக தீவிரமாகக் குரல் கொடுக்கும் ஒருவராகவே வாசு இருந்துள்ளார். இருந்தபோதிலும், இரு மாகாணங்கள் இணைவதைத் தடுப்பதற்கான அரசாங்கத்தின் யோசனைக்கு அவர் ஆதரவை வெளிப்படுத்துகின்றார். இந்த இடத்தில் அவரது கொள்கையில் தடுமாற்றம் தெரிகின்றது. இடதுசாரி அரசியல்வாதிகளிடம் வழமையாகக் காணப்படும் தடுமாற்றம்தான் அது. கொள்கை என்பதற்கு அப்பால் தமது அரசியல் இருப்பைப் பாதுகாத்துக்கொள்வது என்பது இடதுசாரிகளுக்கு எப்போதுமே பிரச்சினையாகத்தான் இருந்துள்ளது. இந்த நிலையில் இப்போது எழும் கேள்வி என்னவென்றால் அரசு 13 இல் கை வைத்தால் வாசு பதவியைத் துறப்பாரா?

(தினக்குரல்- 2013-06-07))

Tuesday, July 2, 2013

மீண்டும் சந்திரிகா!

இலங்கை அரசியலில் 13 ஆவது திருத்தம் தொடர்பில் உருவாகியிருக்கும் குழப்பங்களைத் தொடர்ந்து முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவின் பெயரும் தீவிரமாக அடிபடத் தொடங்கியுள்ளது. அரசாங்கத் தரப்பில் இப்போது உருவாகியிருக்கும் குழப்பங்கள் அனைத்துக்கும் சந்திரிகா குமாரதுங்கவே காரணம் என அமைச்சர் விமல் வீரவன்ச கடுமையான குற்றச்சாட்டை முன்வைக்க, ஒன்றும் தெரியாதவர் போல சந்திரிகா காய்களை நகர்த்திக்கொண்டிருக்கின்றார். சந்திரிகாவின் நிகழ்ச்சி நிரல் என்ன என அறியமுடியாமல் அரச தரப்பு திகைத்துப்போயிருப்பதாகவும் தெரிகின்றது.

கடந்த சில மாதங்களால் வெளிநாட்டில் தங்கியிருந்த சந்திரிகா இந்த விவகாரம் சூடு பிடித்திருக்கும் நிலையில்தான் நாடு திரும்பியிருக்கின்றார். நாடு திரும்பியவுடனேயே அவரது பெயர் சூடான செய்தியாகியிருக்கின்றது. இந்தவாரச் செய்திகளில் பெரிதாக அடிபட்டவர் என்ற முறையில் சந்திரிகாவின் அரசியல், அவரது தற்போதைய இலக்கு என்பன தொடர்பாக இந்த வாரம் பார்ப்போம்.

அரசியலமைப்புக்கான 13 ஆவது திருத்தத்தை நீர்த்துப்போகச் செய்வதற்கு அல்லது அதனை இல்லாதொழிப்பதற்கான முயற்சிகளை அரசாங்கம் தீவிரமாக முன்னெடுத்துவரும் ஒரு நிலையில்தான் சந்திரிகாவின் நகர்வுகளும் தீவிரமடைந்திருப்பதாக அரசு கருதுகின்றது. அரசுக்கு எதிராக அரசுக்குள் இருந்துகொண்டே முதலில் இந்த விடயத்தில் உரத்துக் குரல் கொடுத்தவர் அமைச்சர் ராஜித சேனாரட்ண. அவர் சந்திரிகாவுக்கு நெருக்கமானவர். விஜயகுமாரதுங்க சிறிலங்கா மக்கள் கட்சியை அமைத்தபோது அதில் இணைந்திருந்தவர். இப்போது 13 ஆவது திருத்தத்தைப் பாதுகாக்க வேண்டும் எனக் குரல் கொடுக்கும் அமைச்சர்களின் பின்னணியில் சந்திரிகா இருப்பதாக அரசு நம்புவதற்கு காரணம் உள்ளது.

இந்த நிலைமைகளைப் பயன்படுத்தி சுதந்திரக் கட்சியில் பிளவை ஏற்படுத்தவும், தன்னுடைய மகன் விமுத்தியை அரசியலுக்குக் கொண்டுவரவும் சந்திரிகா முயல்வதாக அரசு கருதுவதாகத் தெரிகின்றது. அரச உயர் மட்டத்தில் காணப்படும் இந்த சந்தேகத்தைத்தான் அமைச்சர் வீரவன்ச ஊடகவியலாளர் மாநாட்டில் பிரதிபலித்தார். சிறிலங்கா சுதந்திரக் கட்சியைப் பொறுத்தவரையில் பண்டாரநாயக்க குடும்பத்துக்கும் ராஜபக்‌ஷ குடும்பத்துக்கும் இடையில் அதிகாரப் போட்டி ஒன்று இடம்பெற்று வருவது புதிதல்ல. அது இப்போது மீண்டும் சூடு பிடித்துள்ளதா என்ற கேள்வி ஒரு புறம் எழுகின்றது.

எதிர்க்கட்சிகளைப் பொறுத்தவரையில் ராஜபக்‌ஷ அரசாங்கத்துக்கு எதிராக சவால்விடக் கூடிய ஒருவரை அவர்கள் தேடிக்கொண்டுள்ளார்கள் என்பது உண்மை. ரணிலால் அது சாத்தியமாகவில்லை. பொன்சேகாவும் களத்தில் இறங்கித் தோற்றவர்தான். அதனால்தான் சந்திரிகா மீது நம்பிக்கை வைக்க வேண்டியவர்களாக எதிர்த்தரப்பினர் உள்ளார்கள். சநதிரிகாவைப் பொறுத்தவரையில் அவர் சிறிலங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்தவர் என்ற முறையில் ஆளும் கட்சிக்குள்ளேயே அவருக்கு ஆதரவாளவர்கள் உள்ளனர். ராஜபக்‌ஷ குடும்ப ஆதிக்கத்தால் அதிருப்தியடைந்த சிலரும் சந்திரிகாவை ஆதரிக்கக்கூடும்.

சந்திரிகாவின் பெயர் தற்போது பரபரப்பாகப் பேசப்படுவதற்கு இவை மட்டும் காரணமல்ல. செப்டம்பரில் நடைபெறவிருக்கும் மாகாண சபைத் தேர்தல்களில் சரத் பொன்சேகாவின் ஜனநாயகக் கட்சியில் தனது ஆதரவாளர்கள் சிலரை களம் இறக்க சந்திரிகா திட்டமிடுவதாகக் கூறப்படுகின்றது. இது தொடர்பில் ஏற்கனவே பேச்சுக்கள் ஆரம்பமாகிவிட்டன.

இந்த ஆரவாரங்களுக்கு மத்தியில் கண்டிக்குச் சென்ற சந்திரிகா அங்கு மகாநாயக்கர்களுடன் ஒரு மணித்தியாலத்துக்கும் அதிகமாகப் பேசியிருக்கின்றார். அரசியல் தலைவர் ஒருவர் மகாநாயக்கர்களைச் சந்தித்துப் பேசுவது என்பது இலங்கையைப் பொறுத்தவரையில் முக்கியமானது. புதிய முயற்சி ஒன்றில் இறங்கும் போதுதான் அவர்கள் மகாநாயக்கர்களைச் சந்தித்து ஆசீர்வாதமும் ஆலோசனையையும் பெறுவதை வழமையாகக் கொண்டுள்ளார்கள். இந்தச் சந்திப்புப் பற்றிய தகவல்கள் எதுவும் வெளியிடப்படவில்லை. காத்திருந்த ஊடகவியலாளர்களிடம் எதனையுமே தெரிவிக்காமல் சந்திரிகா சென்றுவிடடார்.

சந்திரிகா வந்தால் ஏதோ சாதித்துவிடுவார் என்பது போன்ற கருத்துக்கள் சிலரிடம் காணப்படுகின்றது. மக்களுடைய அதிகளவு ஆணையுடன் இரண்டு தடவைகள் ஜனாதிபதியாக வந்த சந்திரிகா குமாரதுங்க தன்னுடைய பதவிக்காலத்தில் இனநெருக்கடிக்குத் தீர்வைக் காண்பதில் பெரிதாக எதனையும் சாதித்துவிடவில்லை. ரணில் விக்கரமசிங்க மேற்கொண்ட முயற்சிகளுக்குத் தடையாக இருந்தவரும் அவர்தான். அதனைவிட 13 என்ற ஒரு ஆயுதத்தை மட்டும் வைத்துக்கொண்டு போரின் வெற்றிக் கோஷத்துடன் அதிகாரத்திலுள்ள ராஜபக்‌ஷ ஆட்சிக்கு சவால்விடுவது என்பது நினைத்துப் பார்க்கக்கூடியதல்ல.

ஆக, சந்திரிகா என்பது வெறும் சலசலப்புத்தான்!

தவசி.
(2013-06-30 ஞாயிறு தினக்குரல்)

Monday, July 1, 2013

19 ஆவது திருத்தம் எதற்காக?

அரசியலமைப்புக்கான 13 ஆவது திருத்தத்தை மாற்றியமைத்து மாகாண சபைகளுக்கான அதிகாரங்களைக் குறைக்கும் முயற்சியில் இறங்கியிருக்கும் அரசாங்கம், அதில் மிகப்பெரிய தடை ஒன்றை எதிர்கெண்டுள்ளது. அடுத்த வாரம் இடம்பெறும் பாராளுமன்றக் கூட்டத் தொடரின் போது 13 ஆவது திருத்தத்தை மாற்றியமைப்பதற்கான 19 ஆவது திருத்தத்தைக் கொண்டுவருவதற்குத் திட்டமிட்டுள்ள அரசாங்கம், அதற்கு முன்னதாக மாகாண சபைகளின் அங்கீகாரத்தைப் பெற்றுவருகின்றது. இந்த வகையில் ஏழு மாகாணங்கள் குறிப்பிட்ட திருத்தத்துக்கான அங்கீகாரத்தை வழங்கியுள்ள போதிலும், கிழக்கு மாகாண சபையின் அங்கீகாரத்தைப் பெற்றுக்கொள்வது என்பதுதான் அரசாங்கத்துக்கு இப்போது பெரும் சவாலாக அமைந்திருக்கின்றது. இந்த சவாலை அரசாங்கம் எவ்வாறு சந்திக்கப்போகின்றது என்பதுதான் இலங்கை அரசியலில் இன்று எழும் முக்கிய கேள்வி.

பாராளுமன்றம் அடுத்தவாரம் கூடும் போது அரசியலமைப்புக்கான 19 ஆவது திருத்தச் சட்டமூலத்தை ஒரு அவசர பிரேரணையாகக் கொண்டுவந்து நிறைவேற்றுவதற்கு கடந்த வாரம் அரசாங்கம் தீர்மானித்தது. இந்த 19 ஆவது திருத்தம் இரண்டு விடயங்களை உள்ளடக்கியுள்ளது. ஒன்று - இரண்டு மாகாண சபைகள் எதிர்காலத்தில் ஒரே மாகாண சபையாக இணைந்து செயற்படுவதைத் தடுத்தல். இரண்டு - மாகாண சபைகள் தொடர்பான சட்டமூலங்களை நிறைவேற்றும் போது மாகாண சபைகள் அனைத்தினதும் அங்கீகாரம் பெறப்பட வேண்டும் என்ற தற்போதைய நிலையை மாற்றி, பெரும்பான்மையான மாகாண சபைகளின் அங்கீகாரத்தைப் பெற்றுக்கொண்டால் போதுமானது என மாற்றியமைத்தல். இந்த இரண்டு விடயங்களையும் அரசியலமைப்புத் திருத்தத்தில் உள்ளடக்க வேண்டும் என அரச தரப்பினர் துடிப்பதற்கான காரணம் புரிந்துகொள்ள முடியாத ஒன்றல்ல!

இந்த விடயங்கள் அமைச்சரவையில் ஆராயப்பட்டு அதன் அங்கீகாரத்தைப் பெற்றிருக்கின்றது. இதனைவிட மாகாண சபைகளுக்கான காணி, பொலிஸ் அதிகாரங்களை இல்லாமல் செய்வதற்கான யோசனை அமைச்சரவைக்குள் காணப்பட்ட கடுமையான எதிர்ப்பையடுத்து பாராளுமன்றத் தெரிவுக்குழுவுக்குப் பாரப்படுத்தப்பட்டுள்ளது. அமைச்சரவையின் அங்கீகாரத்தைப் பெற்றுக்கொண்ட இரு விடயங்களையும் அரசியலமைப்புக்கான 19 ஆவது திருத்தமாகக் கொண்டுவருவதுதான் அரசாங்கத்தின் திட்டம். அதற்காக அவை மாகாண சபைகளின் அங்கீகாரத்தைப் பெற்றுக்கொள்வதற்காக எட்டு மாகாண சபைகளுக்கும் அனுப்பிவைக்கப்பட்டுள்ளன. இதற்கு ஏழு மாகாண சபைகளினதும் அங்கீகாரத்தை அரசாங்கம் பெற்றிருக்கின்றது. வடமாகாண சபை உருவாக்கப்படவில்லை என்பதால், கிழக்கு மாகாண சபையின் அங்கீகாரத்தைப் பெற்றுக்கொள்வது என்பதுதான் அரசாங்கம் இன்று எதிர்கொள்ளும் மிகப் பெரிய நெருக்கடி!

கிழக்கு மாகாண சபையின் அங்கீகாரத்தைப் பெற்றுக்கொள்வதில் அரசாங்கத்துக்கு இரண்டுவிதமான பிரச்சினைகள் இருப்பதாகத் தெரிகின்றது. முதலாவது, கிழக்கு மாகாண சபையின் அடுத்த கூட்டத் தொடர் ஜூலை 23 ஆம் திகதியே நடைபெறவிருக்கின்றது. அதனால் அரசாங்கம் எதிர்பார்ப்பதுபோல பாராளுமன்றத்துக்கு இந்தப் பிரேரணையைக் கொண்டுவருவதற்கு முன்னதாக கிழக்கு மாகாண சபையின் அங்கீகாரம் கிடைத்துவிடப்போவதில்லை. இரண்டாவது பிரச்சினை கிழக்கு மாகாணத்தில் நிர்ணயிக்கும் சக்தியாகவுள்ள சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் இந்தத் தீர்மானத்தை ஏற்றுக்கொள்ளுமா என்பது. இவ்விடயத்தில் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸின் நிலைப்பாடு அரசாங்கத்துக்கு ஏமாற்றத்தைக் கொடுப்பதாகவே அமைந்திருக்கின்றது. பாராளுமன்றத் தெரிவுக்குழுவில் தமக்கு இடம் ஒதுக்கவில்லை என்பதால் சீற்றமடைந்திருக்கும் சிறி லங்கா முஸ்லிம் காங்கிரஸ், 13 ஆவது திருத்தத்தைப் பலவீனப்படுத்தும் முயற்சிகளுக்கு ஆதரவளிக்கப்போவதில்லை என்பதை ஏற்கனவே தெளிவாகத் தெரிவித்திருக்கின்றது. குறிப்பிட்ட பிரேரணையை கிழக்கு மாகாண சபையில் நிறைவேற்ற முடியாத நிலையை இது ஏற்படுத்தியிருக்கின்றது. இந்த நெருக்கடியிலிருந்து மீள்வதற்கு அரசாங்கத்துக்கு இருக்கக்கூடிய ஒரேயொரு வழி உயர் நீதிமன்றத்துக்குச் செல்வதாக இருக்கலாம்.

19 ஆவது திருத்தத்தை ஒரு அவசர சட்டமூலமாகக் கொண்டுவர வேண்டும் என அரசாங்கம் தீர்மானித்தமைக்கு உடனடியான நியாயமான காரணங்கள் எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை. மாகாண சபைகள் பலவீனப்படுத்தப்பட வேண்டும் என உரத்துக் குரல் கொடுக்கும் சிங்கள - பௌத்த தேசியவாதிகளைத் திருப்திப்படுத்துவது மட்டும்தான் இதன் நோக்கமாக இருக்க முடியும். காணி, பொலிஸ் அதிகாரங்களை மாகாண சபைகளிடமிருந்து பறிப்பது உடனடியாகச் சாத்தியமாகப் போவதில்லை என்பது வெளிப்படையாகத் தெரிந்த ஒரு நிலையிலேயே இந்த நகர்வை அரசாங்கம் மேற்கொண்டது. 19 ஆவது திருத்த நகலில் இரு மாகாணங்கள் எதிர்காலத்தில் இணைந்து செயற்படுவதைத் தடுத்தல் எனப் பொதுவாகக் கூறப்பட்டிருந்தாலும் அது வடக்கு, கிழக்கைத்தான் சுட்டிக்காட்டுகின்றது என்பதில் எந்த சந்தேகமும் இருக்கத் தேவையில்லை. வடக்கு கிழக்கு மாகாணங்கள் அண்மைய எதிர்காலத்தில் இணைந்து செயற்படுவதற்கான சூழ்நிலை ஒன்று காணப்படவில்லை என்பதுடன், அது தேசத்தின் பாதுகாப்பைக் கேள்விக்குள்ளாக்கும் ஒரு விஷயமாக இருக்கப்போவதில்லை என்பதும் அனைவருக்கும் தெரிந்தது. வடக்கு - கிழக்கு இணைவது நாட்டின் ஒருமைப்பாட்டையும், இறைமையையும் பாதிக்கும் எனக் கூக்குரலிடுவதன் மூலம் தமது தேச பக்தியை வெளிப்படுத்த சிங்கள தேசியவாத அமைப்புக்கள் மட்டுமன்றி அரசாங்கமும் முற்படுவதாகவே கருத வேண்டியுள்ளது.

மாகாண சபைகள் தொடர்பான சட்டங்களை இயற்றும் போது அனைத்து மாகாண சபைகளினதும் அங்கீகாரத்தையும் பெற்றுக்கொள்ள வேண்டும் எனக் கூறப்பட்டிருப்பதை மாற்றியமைப்பதற்கு அரசாங்கம் முற்படுவதன் பின்னணியும் புரிந்துகொள்ள முடியாத ஒன்றல்ல. திவிநெகும சட்டமூலம் கொண்டுவரப்பட்டபோது வட மாகாண சபையின் அங்கீகாரத்தைப் பெற்றுக்கொள்வது என்பது அரசாங்கத்துக்கு நெருக்கடியைக் கொடுத்தது. மாகாண சபைகள் தொடர்பான சட்டங்களை மாற்றும் போது அனைத்து மாகாண சபைகளினதும் அங்கீகாரத்தைப் பெற்றுக்கொள்வது என்பது சாத்தியமற்றதாகிவிடலாம் என்ற அச்சத்தை இது அரசாங்கத்துக்கு ஏற்படுத்தியிருந்தது. அதனால்தான் இந்தத் திருத்தத்தை அரசு விரும்புகின்றது. ஆனால், கிழக்கு மாகாணத்திலிருந்து இதற்கு இப்போது நெருக்கடி உருவாகும் என்பது அரசாங்கம் எதிர்பார்க்காத ஒன்று. அரசாங்கத்தைப் பொறுத்தவரையில் இதனை அவசரமாகச் செய்ய வேண்டும் என நினைப்பதற்கு இரண்டு காரணங்கள் உள்ளன. ஒன்று வடமாகாண சபை அமைக்கப்பட்டால் அதன் பின்னர் இவற்றைச் செய்வது சாத்தியமற்றதாகிவிடலாம். இரண்டு - வடமாகாண சபைத் தேர்தலுக்கு முன்னதாக சிங்கள - பௌத்த தேசியவாதிகளைத் திருப்திப்படுத்தும் வகையில் எதனையாவது செய்தாகவேண்டும் என்பது.

-2013-06-30 ஞாயிறு தினக்குரல் ஆசிரியர் தலையங்கம்

Monday, June 24, 2013

டில்லியின் அடுத்த நகர்வும் மேனனும்!

ந்தியாவைப் பொறுத்தவரையில் அதன் வெளிவிவகாரக் கொள்கையைத் தீர்மானிப்பது 'சவுத் புளொக்'தான். பிரதமரின் அலுவலகம் மட்டுமன்றி பாதுகாப்பு, வெளிவிவகார அமைச்சு அலுவலகமும் அதற்குள்தான் அமைந்திருக்கின்றன. இந்த சவுத்புளொக்கை ஆக்கிரமித்து இந்திய வெளிவிவகாரக் கொள்கையைத் தீர்மானிப்பதில் செல்வாக்குச் செலுத்துபவர்கள் மலையாளிகள். அவ்வாறு இந்தியக் கொள்கை வகுப்பில் தற்போது முக்கியமான ஒரு நபராக இருக்கும் ஒரு மலையாளியைப் பற்றித்தான் இந்த வாரம் பார்க்கப்போகின்றோம். அவர்தான் சிவ்சங்கர் மேனன்!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்கள் இந்தியாவுக்கான விஜயத்தை கடந்த வாரத்தில் மேற்கொண்டிருந்த நிலையில் சிவ்சங்கர் மேனனின் பெயர் செய்திகளில் அதிகளவுக்கு இடம்பெற்றிருந்தமையைக் காணமுடிந்தது. அரசியலமைப்புக்கான 13 ஆவது திருத்தத்தை நீர்த்துப்போகச் செய்யும் செயற்பாடுகளை இலங்கை அரசு தீவிரமாக முன்னெடுத்துவரும் நிலையில் இலங்கையின் பாதுகாப்புச் செயலாளர் கோதாபாய ராஜபக்‌ஷவுடன் தொடர்புகொண்ட மேனன்அந்த முயற்சிகள் கைவிடப்பட வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தியதாக செய்திகள் வெளியாகியிருந்தன.

இதனைத் தொடர்ந்து புதுடில்லியில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடனான பேச்சுவார்த்தைகளின் போதும் மேனன்னின் பங்களிப்பு முக்கியமானதாக இருந்தது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகள் மேனனை இரண்டு தடவை சந்தித்துப் பேசியுள்ளார்கள். இன்று இலங்கை தொடர்பாக இந்தியா எடுக்கப்போகும் தீர்மானத்தைபபொறுத்தவரையில் சிவ்சங்கர் மேனனின் பங்களிப்பு பிரதானமாக இருக்கும் எனக் கருதப்படும் நிலையில், மேனின் இராஜதந்திரப் பணிகள் தொடர்பில் இந்த வாரம் சுருக்கமாகப் பார்ப்போம்:

இந்தியப் பிரதமரின் பாதுகாப்பு ஆலோசகராக சிவ்சங்கர் மேனன் இப்போது பணியாற்றினாலும், அடிப்படையில் அவர் ஒரு இராஜதந்திரி! கேரளவில் பாலக்காட்டைப் பிறப்பிடமாகக் கொண்ட மேனனின் குடும்பமே இராஜதந்திரிகள்தான். அவரது தந்தை நாராயண மேனன் இரு சிறந்த இராஜதந்திரி எனப் பெயர் பெற்றவர். அவரது பாட்டனார் கே.பி.எஸ்.மேனன்தான் இந்தியாவின் முதலாவது வெளிவிவகாரச் செயலாளர். நேருவுடன் பணியாற்றியவர். மேனனின் மாமனாரும் ஒரு இராஜதந்திரி.

1972 ஆம் ஆண்டில் 23 ஆவது வயதில் இந்திய வெளியுறவுச் சேவைக்குள் பிரவேசித்த மேனன், தன்னுடைய 41 வருடகால அனுபவத்தில் மிகப்பெரிய சவாலாக இன்று இலங்கைப் பிரச்சினையை எதிர்கொண்டிருக்கின்றார். இலங்கையில் உயர் ஸ்தானிகராகப் பணியாற்றியதன் மூலம் இலங்கைப் பிரச்சினையில் ஆழமான அறிவைக்கொண்டுள்ள மேனன், அதன் பின்னர் இந்திய வெளிவிவகாரச் செயலாளராகப் பணியாற்றிய காலத்திலும் இலங்கைப் பிரச்சினையை பிரதானமாகக் கையாண்டவர்.

இப்போது இலங்கை தொடர்பில் இந்தியா என்ன செய்யப்போகின்றது என்ற கேள்வி பலமாக எழுந்துள்ள நிலையில் அனைவருடைய கவனமும் மேனனின் பக்கமே திரும்பியுள்ளது. இதற்கு இரண்டு காரணங்கள் உள்ளன. முதலாவது: இந்தியாவைப் பொறுத்தவரையில் அதன் வெளிவிவகாரக் கொள்கையை வகுத்துக்கொள்வதில் அரசியல்வாதிகளைவிட அதிகாரிகளுடைய பங்கே முக்கியமானதாக - செவ்வாக்கைச் செலுத்துவதாக இருக்கின்றது. அந்த வகையில் வெளிவிவகாரச் சேவையில் அனுபவத்தையும் கொண்டுள்ள பாதுகாப்பு ஆலோசகர் மேனன் இந்த விடயத்தில் முக்கிய பங்காற்றக் கூடியவர்.

இரண்டாவதாக: தற்போது உருவாகியிருக்கும் நெருக்கடியைக் கையாள்வதற்காக அடுத்த மாத நடுப்பகுதியில் கொழும்புக்கான விஜயம் ஒன்றை அவர் மேற்கொள்ளவிருக்கின்றார். இந்த விஜயம் முக்கியமானதாகக் கருதப்படுவதற்குப் பல காரணங்கள் உள்ளன.

கொழும்பில் இடம்பெறும் நிகழ்வுகள் - குறிப்பாக 13 ஆவது திருத்தத்துக்கு எதிரான செயற்பாடுகள் டில்லிக்கு பெரும் சங்கடத்தைக் கொடுப்பதாக அமைந்திருக்கின்றது. இந்தத் திருத்தம் இலங்கை - இந்திய உடன்படிக்கை மூலம் கொண்டுவரப்பட்ட ஒன்று என்பதால் ஒரு தலைப்பட்சமாக அதனை நீர்த்துப்போகச் செய்வதற்காக எடுக்கப்படும் செயற்பாடுகள் இந்தியாவை அமானப்படுத்துவதாகவே இருக்கும். இதனைவிட '13 பிளஸ்' என டில்லிக்கு இலங்கைத் தலைவர்கள் கொடுத்த வாக்குறுதிகளை அப்பட்டமாக மீறுவதாகவும் இவை அமைந்திருக்கின்றன.

இவை அனைத்துக்கும் மேலாக இந்தியாவின் மேலாதிக்க நிலைக்குச் சவால்விடும் சீனாவை கொழும்பு அரவணைத்துச் செல்வதும், அந்த நாட்டுடன் பாதுகாப்பு உடன்படிக்கை ஒன்றைச் செய்திருப்பதாக வந்திருக்கும் செய்திகளும் டில்லிக்கு அதிர்ச்சியைக் கொடுத்திருக்கின்றது. இலங்கைக்குள் சீனா அதிகளவுக்குத் தலையைப் போடுவது தமக்கு ஆபத்தானது என இந்தியா கருதுகின்றது. இவை தொடர்பில் டில்லியின் கரிசனையைக் கணக்கில் எடுக்க கொழும்பு தயாராகவில்லை. இந்த நிலைமைகள் அடுத்த வருடம் நடைபெறவிருக்கும் இந்தியப் பொதுத் தேர்தலில் காங்கிரஸைப் பாதிக்கும்.

இவை அனைத்தையும் கருத்திற்கொண்டு பார்க்கும் போது இலங்கை விவகாரத்தில் இந்தியா தன்னுடைய மென்போக்கான அணுகுமுறையை மாற்றிக்கொள்ளலாம் என இராஜதந்திர வட்டாரங்களில் கருதப்படுகின்றது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்களும் இந்தக் கருத்தைத்தான் வெளிப்படுத்தியிருந்தார்கள். இந்தியா கையாளப்போகும் எந்த அணுகுமுறையானாலும் அதில் மேனனின் பங்களிப்பு முக்கியமானதாக இருக்கும். நாம் முன்னர் குறிப்பிட்டது போல தனது 41 வருடகால இராஜதந்திர அனுபவத்தில் இந்தியா சந்திக்கும் மிகப்பெரிய இராஜதந்திர சவாலை எதிர்கொள்ள மேனனிடம் உள்ள உபாயம்தான் என்ன?

- தவசி

Tuesday, June 18, 2013

இலங்கையில் இந்திய தலையீடு :07 ஈழப்பிரச்சினையில் பார்த்தசாரதியின் பிரவேசம்

1983 ஜூலைக் கலவரத்துக்கு பிந்திய இலங்கை இந்திய அரசியல் நகர்வுகளில் இந்திய வெளிவிவகார அமைச்சர் பி.வி.நரசிம்மராவின் கொழும்பு வருகைக்கு அடுத்தாக 83 ஆகஸ்டில் இலங்கை வெளிவிவகார அமைச்சர் ஏ.சி.எஸ்.ஹமீத்தின் புதுடில்லி விஜயம் முக்கியமானதாக அமைந்திருந்தது. புதுல்லியில் இடம்பெற்ற தெற்காசிய வெளிவிவகார அமைச்சர்களின் கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக புதுடில்லி சென்ற அமைச்சர் ஹமீத், அந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக்கொண்டு இலங்கை நிலை தொடர்பாக இந்தியத் தலைவர்களுக்கு விளக்கமளித்தார்.

இந்த விஜயத்தின் மூலமாக இரு நாடுகளுக்கும் இடையில் இராஜதந்திர மட்டத்தில் காணப்பட்ட இறுக்கம் தணிந்து இலங்கையின் இனநெருக்கடிக்குத் தீர்வைக் காண்பதற்காக இந்தியாவின் உதவிகளைப் பெற்றுக்கொள்வது தொடர்பாக சில தீர்மானங்கள் எடுக்கப்பட்டன. ஹமீத்தின் விஜயத்தையடுத்து, இந்தியப் பிரதமர் இந்திரா காந்திக்கும் ஜனாதிபதி ஜெயவர்த்தனவுக்கும் இடையிலான தொலைபேசி உரையாடல் ஒன்றும் இடம்பெற்றது. ஆகஸ்ட் 5 ஆம் திகதி இடம்பெற்ற இந்தப் பேச்சுக்ளில் இந்திய ஆதரவுடன் இனநெருக்கடிக்குத் தீர்வொன்றைக் காண்பதற்கான முயற்சிகள் தொடர்பில் மேலும் விரிவாக ஆராயப்பட்டது. தீர்வு முயற்சிகளுக்கு தமது அனுசரணையை வழங்குவதற்கு இந்தியா தெரிவித்த விருப்பத்தை இதன்போது ஜெயவர்த்தன ஏற்றுக்கொண்டார்.

இது தொடர்பான விரிவான பேச்சுக்களை நடத்துவதற்காக தன்னுடைய விஷேட தூதுவராக தனது சகோதரர் எச்.டபிள்யூ.ஜெயவர்த்தனவை அனுப்பிவைப்பதாக ஜனாதிபதி தெரிவித்தமையை இந்திரா காந்தி ஏற்றுக்கொண்டார். எச்.டபிள்யூ.ஜெயவர்த்தன ஒரு கீர்த்திமிக்க சட்டத்தரணியாகவும், ஜனாதிபதியின் நம்பிக்கைக்குரிய ஒரு ஆலோசகராகவும் இருந்தார். இந்தியாவுடனான உறவுகளில் உருவாகிவரும் நெருக்கடிகளை உணர்ந்துகொண்ட ஜனாதிபதி தனக்கு நம்பிக்கைக்குரியவராகவும், இராஜதந்திர விவகாரங்களைச் சிறப்பாகக் கையாளக்கூடியவராகவுமுள்ள ஒருவரையே இந்தியாவுக்கு தனது விஷேட பிரதிநிதியாக அனுப்பிவைக்கத் தீர்மானித்தார். அந்தத் தீர்மானத்தின்படியே தனது சகோதரரை அனுப்பவதற்கு அவர் முன்வந்தார்.

இதனையடுத்து ஒரு சில தினங்களிலேயே புதுடில்லிக்குப் பயணமான எச்.டபிள்யூ.ஜெயவர்த்தன இந்தியப் பிரதமருடன் விரிவான பேச்சுக்களை நட்த்தினார். இந்தப் பேச்சுக்கள் பெருமளவுக்கு சுமூகமானதாகவே இடம்பெற்றது.  இந்தப்பேச்சுக்கள் தொடர்பாக ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த இந்திரா காந்தி, ‘இலங்கையின் சுதந்திரம், ஒருமைப்பாடு ஒற்றுமை என்பவற்றுக்கு ஆதரவான இந்தியாவின் நிலைப்பாட்டை உறுதிப்படுத்துவதற்கு இந்தப் பேச்சுக்களை நான் பயன்படுத்திக்கொண்டேன். மற்றைய நாடுகளின் உள்நாட்டு விவகாரங்களில் இந்தியா ஒருபோதும் தலையிடாது. இருந்தபோதிலும், இந்த இரு நாட்டு மக்களுக்கும் இடையிலான, குறிப்பாக தமிழர்களுக்கும் எமக்கும் இடையிலான சரித்திர, கலாசார மற்றும் நெருக்கமான உறவுகள் காரணமாக அங்கு இடம்பெறும் நிகழ்வுகளால் நாம் பாதிக்கப்படாமல் இருக்க முடியாது” எனத் தெரிவித்தார்.

இலங்கை விடயத்தில் தலையிடுவதை இந்திரா காந்தி இவ்வாறு தெளிவாக இராஜதந்திரமாக நியாயப்படுத்தினார். இதற்கு எதிராக எந்தவிதமான நகர்வுகளையும் மேற்கொள்ள முடியாத நிலை ஜெயவர்த்தனவக்கு ஏற்பட்டது.  இந்தப் பின்னணியில் ஆகஸ்ட் 15 ஆம் திகதி ஜனாதிபதி ஜெயவர்த்தனவுடன் தொலைபேசியில் தொடர்புகொண்ட இந்திரா காந்தி, இந்தியக் கொள்கைத் திட்டமிடல் குழுவின் தலைவரான கோபாலசாமி பார்த்தசாரதியை தன்னுடைய விஷேட தூதுவராக கொழும்புக்கு அனுப்பிவைப்பதாகத் தெரிவித்தார். இலங்கையில் காணப்படும் இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வொன்றைக் காண்பதற்கான அநுசரணையை அவர் வழங்குவார் எனவும் தெரிவிக்கப்பட்டது.

ஜெயவர்த்தனவைச் சந்திப்பதற்கு கொழும்பு புறப்படுவதற்கு முன்னதாக புதுடில்லியில் இந்திய வெளிவகார அமைச்சு அதிகாரிகள் மற்றும் பிரதமர் இந்திரா காந்தியுடன் விரிவான பேச்சுக்களை நடத்திய பார்த்தசாரதி, அதனையடுத்து சென்னைக்குச் சென்றார். சென்னையில் தமிழக அரசியல் தலைவர்கள் மற்றும் அப்போது சென்னையில் தங்கியிருந்த தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர்கள் மற்றும் தமிழ்ப் போராளி அமைப்புக்களின் தலைவர்களைச் சந்தித்துப் பேசினார். இனநெருக்கடிக்கு எவ்வாறான தீர்வைக் காணவேண்டும் என்பது தொடர்பில் இவர்கள் தமது கருத்துக்களை பார்த்தசாரதியிடம் தெரிவித்தார்கள்.

தமிழர் தரப்பினரதும் இந்தியத் தரப்பினரதும் கருத்துக்களைப் பெற்றுக்கொண்ட பார்த்தசாரதி, ஆகஸ்ட் 25,(1983) ஆம் திகதி கொழும்பு வந்து ஜனாதிபதி ஜெயவர்த்தனவைச் சந்தித்தார். தமிழர் தரப்புக்கு அதிகாரப்பரவலாக்கலை வழங்குவதற்கு இணக்கம் தெரிவித்த ஜனாதிபதி, அதற்காக மாவட்ட அபிவிருத்திச் சபைகளை நடைமுறைப்படுத்த தான் தயாராக இருப்பதாகத் தெரிவித்தார். ஜெயவர்த்தனவின் இந்தக் கருத்து இந்தியாவுக்கு அதிர்ச்சியளிப்பதாக இருந்தது.

1981 ஆம் ஆண்டில் முன்வைக்கப்பட்டு வெற்றியளிக்காமல் செயலிழந்துபோன பழைய திட்டத்தையே ஜெயவர்த்தன மீண்டும் எடுத்துவிட்டது தமிழர் தரப்பாலும் ஏற்றுக்கொள்ளக்கூடியதாக இருக்கவில்லை. ஜெயவர்த்தனவை வழிக்கக் கொண்டுவர அதிகளவுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என இந்தியா கருதியது. …அதேவேளையில் தமிழகத்திலும் ஈழத் தமிழர்களுக்கு ஆதரவான அலை வேகமாக வீசத் தொடாங்கியது. ..