Saturday, November 16, 2013

மன்மோகன் சிங்கின் 'வருகை' (?)

இலங்கையில் இன்னும் சில தினங்களில் ஆரம்பமாகவுள்ள பொதுநலவாய நாடுகளின் உச்சி மாநாட்டில் தான் கலந்துகொள்வது இந்தளவுக்கு சர்ச்சைக்குள்ளாகும் என்பதை இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் சற்றும் எதிர்பார்த்திருக்கமாட்டார். மன்மோகன் சிங் வருவாரா என்பதையிட்டு உத்தியோகபூர்வமாக இந்திய அரசு இதுவரையில் அறிவிக்காத போதிலும், அவரது வருகை சாத்தியமாகாது என்பதைத்தான் நேற்றுக்காலை வெளியான இந்தியப் பத்திரிகைகள் அனைத்தும் செய்தியாக வெளியிட்டிருந்தன. இந்திய வெளிவிவகாரக் கொள்கை வகுப்பாளர்களுக்கும் தமிழகத்தின் உணர்வுகளைப் பிரதிபலிக்கும் காங்கிரஸ் கட்சிப் பிரகர்களுக்கும் இடையிலான ஒரு பலப்பரீட்சையாகவே இந்த விவகாரம் காணப்பட்டது. இலங்கை விவகாரத்தை எவ்வாறு கையாள்வது என்பதில் இந்தியத் தரப்பில் காணப்பட்ட தடுமாற்றங்களின் உச்ச கட்டமாகவே இந்தப் பிரச்சினையைப் பார்க்கவேண்டியுள்ளது.

சர்வதேச சமூகத்தின் மத்தியில் இலங்கையை ஒரு பொறுப்புள்ள நாடாகக் காட்டிக் கொள்ளுவதற்காகவே இந்த மாநாட்டை நடத்தும் பொறுப்பை இலங்கை எடுத்தது. மன்மோகன் சிங்கின் வருகையை இலங்கை அரசாங்கம் முக்கியமாகப் பார்த்தமைக்குப் பல காரணங்கள் உள்ளன. இலங்கை குறித்த இந்தியாவின் அணுகுமுறை சர்வதேச ரீதியில் பாதிப்பை ஏற்படுத்தக்கூடியது. குறிப்பாக இதனை ஒரு முன்னுதாரணமாக மற்றைய நாடுகளும் எடுத்துக்கொள்ளக்கூடிய ஆபத்துள்ளது. இதனை  கொழும்பு தெளிவாக உணர்ந்தேயுள்ளது. தெற்காசியப் பிராந்தியத்தில் இந்தியாவின் மேலாதிக்க நிலையை பெரும்பாலான மேற்கு நாடுகள் ஏற்றுக்கொள்கின்றன. இலங்கை தொடர்பான தமது அணுகுமுறையை வரையறுப்பதற்கு முன்னதாக இந்தியாவின் கருத்தை அறிவதற்கு அமெரிக்கா மட்டுமன்றி ஐரோப்பிய நாடுகளும் முற்படுவதைக் கடந்த காலங்களில் நாம் கண்டிருக்கின்றோம். இலங்கை விவகாரத்தில் மத்தியஸ்த்த முயற்சிகளை மேற்கொண்ட நோர்வே கூட தமது ஒவ்வொரு நகர்வுகளுக்கு முன்பாகவும் டில்லியின் கருத்துகளுக்கு முக்கியத்துவம் கொடுத்திருந்தது கவனிக்கத்தக்கது.

இலங்கை மீது அழுத்தங்களைப் பிரயோகிப்பதற்கு இந்தியாவுக்குள்ள ஒரேயொரு பிடி இதுதான். இந்த துரும்புச் சீட்டை நன்கு பயன்படுத்திக்கொள்ள வேண்டும் எனச் சிந்தித்துத்தான் இந்தியக் கொள்கை வகுப்பாளர்களும் காய்நகர்த்தினார்கள். அதில் அவர்கள் வெற்றிபெற்றிருப்பதாகவே கருதுகின்றார்கள். இந்தியாவின் வேளிவிவகாரக் கொள்கையைத் தீர்மானிப்பது இந்தியாவின் வெளியுறவுத்துறை மற்றும் இந்திய உள்ளக வெளியக புலனாய்வு அமைப்புக்களே. இதனை தமது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பவர்கள் பார்ப்பனீய கருத்தியலைக் கொண்டவர்கள் என்ற குற்றச்சாட்டு நீண்ட காலமாகவே உள்ளது. அது இயல்பாகவே தமிழர்களுக்கு எதிரானது என்பதும் வெளிப்படை. ஆளும் காங்கிரஸ் அரசு அதற்கு இசைவாக இருந்தபடியால் அண்மைக்காலம் வரை அது ஒரு பிரச்சினையாக இருக்கவில்லை. ஆனால், கடந்த பொதுத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி தமிழகத்தில் கற்றுக்கொண்ட பாடங்கள்தான் தற்போதைய நெருக்கடிக்குக் காரணம்.

இலங்கை அரசுக்கு எதிரான தமிழகப் போராட்டங்கள் உச்சம் பெற கூட்டணிக்காக ஒட்டியும் ஒட்டாமலும் இருக்கும் தி.மு.க. தலைவர் மு.கருணாநிதி போன்றவர்கள் தேர்தலை மையமாக வைத்து காய்களை நகர்த்த, காங்கிரஸ் சிந்திக்கத் தலைப்பட்டது. மன்மோகன் சிங் இலங்கை சென்றால் அதற்கான விளைவுகளை காங்கிரஸ்தான் அனுபவிக்க வேண்டியிருக்கும் என கருணாநிதி விடுத்த எச்சரிக்கை நிச்சயமாக அடுத்த வருடத்தில் நடைபெறப்போகும் பொதுத் தேர்தலை அடிப்படையாகக் கொண்டதுதான். கடந்த பொதுத் தேர்தலில் தமிழகத்தில் காங்கிரஸ் கூட்டணி சந்தித்த பாரிய தோல்விக்கு இலங்கைப் பிரச்சினை தொடர்பாக இந்திய அரசின் அணுகுமுறைதான் காரணம். இதனைத் தெளிவாக உணர்ந்துகொண்டுள்ள நிலையில்தான் தமிழக காங்கிரஸ் பிரமுகர்கள் கட்சித் தலைமைக்கு கடுமையான அழுத்தத்தைக் கொடுக்கத் தொடங்கினார்கள். குறிப்பாக அமைச்சர்கள் ப.சிதம்பரம், ஏ.கே.அந்தோனி, ஜி.கே.வாசன் போன்ற பலம்வாய்ந்தவர்கள் களத்தில் இறங்கியிருப்பது இந்திய வெளிவிவகார அமைச்சின் முடிவை கேள்விக்குள்ளாக்கியிருக்கின்றது.

இந்தியாவின் வெளிவிவகாரக் கொள்கை வகுப்பில் நேரடியாகச் சம்பந்தப்பட்ட சவுத் புளொக் 'அதிகாரிகள்' மன்மோகன்சிங் இந்த மாநாட்டில் பங்குகொள்ள வேண்டும் என்பதில் தீவிர அக்கறையைக் கொண்டிருந்தார்கள். "மன்மோகன்சிங் மாநாட்டில் கலந்து கொள்ளாவிட்டால் அது அனைத்துலக அளவில் குறிப்பாக பொதுநலவாய நாடுகளிடையே இந்தியாவின் நிலையை பாதிக்கும்’’ என்றும் இந்திய வெளிவிவகார அமைச்சர் சல்மான் குர்ஷித் உள்ளிட்ட சிலர் குரல் எழுப்பியிருந்தனர். "இந்தியாவுக்கு இலங்கை கொடுத்த வாக்குறுதிகளை ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ஷ நிறைவேற்றிருக்கின்றார். அதனால், மன்மோகன் சிங் இலங்கை செல்ல வேண்டும். இல்லையெனில் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை அது பாதிக்கும். சீனாவின் பக்கம் இலங்கை மேலும் செல்வதற்கு அது காரணமாகிவிடும்" என இந்தியக் கொள்கை வகுப்பாளர்கள் அடித்துக்கூறுவதைக் கேட்கும் நிலையில் காங்கிரஸ் தலைமை இருக்கவில்லை.

இலங்கை அரசாங்கம் நிறைவேற்றிய வாக்குறுதிகளாக இந்தியக் கொள்கை வகுப்பாளர்கள் கருதுவது வடக்கில் தேர்தலை நடத்தியதை மட்டும்தான். வடக்கு மாகாண சபைத் தேர்தலை நடத்தியமைக்கு இந்தியாவின் அழுத்தம் காரணமாக இருந்துள்ளது என்பது உண்மைதான். இப்போது வடக்கில் தேர்தலை நடத்தி மாகாண அரசாங்கம் ஒன்றும்  உருவாக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பிரச்சினைகளையே தீர்த்துவைத்துவிட்டது போலக் காட்டிக்கொள்ள இலங்கை அரசாங்கம் முற்படுகின்றது. ஆனால், இந்த மாகாண சபை வடக்கில் உள்ள ஒரு கல்லை நகர்த்துவதற்கான அதிகாரத்தைக்கூட கொண்டதாக இல்லை. மாகாண முதலமைச்சராக ஆளுநராக அதிக அதிகாரத்தைக் கொண்டவர் என்பதில் ஒரு கயிறிழுப்பு இடம்பெறுகின்றது. பொதுநலவாய மாநாடு முடிவடைந்த பின்னர் இந்த முரண்பாடுகள் தீவிரமடையலாம். இந்த நிலைமைகள் இந்தியாவுக்குத் தெரியாதவையல்ல.

டில்லியைப் பொறுத்தவரையில் தமிழகத்தின் உணர்ச்சிக் கொந்தளிப்பை தமது கேந்திர நலன்களுக்காகப் பயன்படுத்திக்கொள்வதைத்தான் அது தனது வெளியுறவுக்கொள்கையாகக் கொண்டிருந்தது. இந்திரா காந்தியின் காலத்திலிருந்து இந்த நிலைமை காணப்பட்டது. காங்கிரஸ் கட்சியின் தேர்தல் நலன்கள் இதனுடன் முரண்படாத நிலையில் இவ்வளவு காலமும் இது பிரச்சினையாகவில்லை. இப்போது தமிழக காங்கிரஸ் கட்சியும் தமிழ்த் தேசியத்துக்கு முரணாகப் போகமுடியாதளவுக்கு ஒரு எழிச்சி தமிழகத்தில் உருவாகியுள்ளது. மன்மோகன் சிங்கின் வருகை கேள்விக்குறியாகியிருப்பது இதனால்தான். இந்தியக் கொள்கை வகுப்பாளர்கள் தமிழர்களின் நலன்களைப் பாதுகாப்பதாகக் கூறிக்கொண்டு தமது கேந்திர நலன்களில் மட்டும் அக்கறை கொண்டு செயற்பட்டமைதான் இந்தக் குழப்பங்களுக்குக் காரணம். இலங்கை தொடர்பில் ஒரு தெளிவான உறுதியான கொள்கையை இந்தியா வகுத்துக்கொள்ள வேண்டும் என்பதைத்தான் இந்தக் குழப்பங்கள் உணர்த்துகின்றன.
ஞாயிறு தினக்குரல் 2012-011-10 ஆசிரியர் தலையங்கம்

No comments:

Post a Comment