Friday, November 1, 2013

கொழும்பு மாநாடும் இந்தியாவும்

கொழும்பில் அடுத்த மாதம் நடைபெறவிருக்கும் பொதுநலவாய நாடுகளின் உச்சி மாநாட்டில் இந்தியா எந்த வகையிலும் கலந்துகொள்ளக் கூடாது என்ற தீர்மானத்தை தமிழக சட்டப்பேரவை எடுத்துள்ளதையடுத்து அனைவரது கவனமும் இப்போது புதுடில்லியின் பக்கம் திரும்பியுள்ளது. தமிழக சட்டப் பேரவையில் இதற்கான தீர்மானத்தை தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா கொண்டுவந்தார். பிரதான எதிர்க்கட்சிகளான தி.மு.க. மற்றும் காங்கிரஸ் என்பவற்றின் ஆதரவுடன் ஏகமனதாக இதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்கின்றது. தீர்மானத்துக்கு எதிராக எந்தவொரு பிரதான கட்சியும் வாக்களிக்க முன்வரவில்லை. தமிழகத்தில் காணப்படும் உணர்வுகளை மீறிச் செயற்படுவதற்கு எந்தவொரு கட்சியும் தயாராகவில்லை என்பதை இது வெளிப்படுத்தியிருக்கின்றது. இந்த நிலையில் கொழும்பு மாநாடு தொடர்பிலான தமது நிலைப்பாடு என்ன என்பதை இந்திய மத்திய அரசு இன்னும் திட்டவட்டமாக வெளிப்படுத்தவில்லை. அதனால்தான் அனைத்துத் தரப்பினரது கவனமும் டில்லியின் பக்கம் திரும்பியிருக்கின்றது.

புதுடில்லியைப் பொறுத்தவரையில், இவ்விடயத்தில் எவ்வாறான தீர்மானத்தை எடுப்பது என்பதில் குழப்பமடைந்திருக்கின்றது. தமது நிலைப்பாட்டை அறிவிப்பதை தொடர்ந்தும் டில்லி ஒத்திவைத்துக்கொண்டுவருவது அதனால்தான். இந்தியப் பொதுத் தேர்தல் அடுத்த வருடத்தில் நடைபெறவிருப்பதால் தமிழகத்தின் பொங்கியெழுந்திருக்கும் உணர்வுகளை மீறிச் செயற்படுவதற்கு டில்லியால் முடியாதிருக்கும். மறுபக்கத்தில் கொழும்புக்கு எதிராகச் செயற்படுவதும் இந்திய நலன்களைப் பாதிப்பதாக அமையலாம். குறிப்பாக கொழும்புடனான உறவுகளை அது பாதிக்கும். இந்தியாவுக்கு எதிரான சக்திகளுடன் தமது உறவுகளை வலுப்படுத்திக்கொள்வதற்கு இலங்கையை அது தள்ளலாம். இலங்கை குறித்த இந்தியாவின் அண்மைக்கால அணுகுமுறை தமிழகத்தை ஏதோ வகையில் சமாளித்துக்கொண்டு கொழும்பைப் பாதுகாப்பதாகவே அமைந்திருந்தது. ஆனால், இந்தியப் பொதுத் தேர்தல் அடுத்த வருடத்தில் நடைபெறவிருப்பதால் இவ்விடயத்தில் நிதானமாக காய்களை நகர்த்துவதற்கே டில்லி விரும்புகின்றது.

புதுடில்லியின் இந்த இரண்டக நிலையைப் புரிந்துகொண்டுள்ள இலங்கை அரசாங்கமும் அச்சுறுத்தும் வகையிலான சில கருத்துக்களை வெளியிட்டிருக்கின்றது. பொதுநலவாய மாநாட்டைப் பகிஷ்கரித்தால் இந்தியா தனிமைப்படுத்தப்பட்டுவிடும் என வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் கருத்து வெளியிட்டிருக்கின்றார். மநாட்டை பகிஷ்கரிக்கும் கனடாவுக்கும் இதேபோன்ற ஒரு எச்சரிக்கையை கொழும்பு விடுத்திருந்தது. சிங்கள தேசியவாத அமைப்பான தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் தலைவர் குணதாச அமரசேகர இதற்கு ஒரு படி மேலே சென்று இந்தியாவை எச்சரித்திருக்கின்றார். இலங்கையின் உள்ளக விவகாரங்களில் இந்தியா தொடர்ந்தும் அழுத்தம் கொடுத்து வந்தால் இலங்கை அரசாங்கம் இந்தியாவுடனான உறவுகளை முறித்துக்கொண்டு சீனா மற்றும் ரஷ்யாவுடனான உறவுகளைப் பலப்படுத்த வேண்டும் எனத் தெரிவித்திருக்கும் அவர், ஆகாய மார்க்கமாக பருப்பு மூட்டைகளை வீசுவதற்கு இந்தியாவுக்கு மீண்டும் அனுமதிக்க மாட்டோம் எனக் கூறியிருக்கின்றார். இது சிங்கள தேசியவாத அமைப்புக்கள் வழமையாக விடுக்கும் எச்சரிக்கைதான். ஆனால், இந்தக் கருத்துக்களைப் புறக்கணித்துவிட்டுச் செயற்படும் நிலையில் டில்லி இல்லை!

கொழும்பு மாநாட்டில் பங்குகொள்வதா அல்லது அதனைப் பகிஷ்கரிப்பதா என்பதையிட்டுத் தீர்மானிக்க முடியாத நிலையில் டில்லி தடுமாறுவதற்கு இவைதான் காரணம். இந்த நிலையில் இரண்டு தரப்பையும் சமாளிக்கும் வகையிலான தீர்மானம் ஒன்றை எடுப்பதற்கு இந்தியா முற்பட்டது. பிரதமர் மன்மோகன் சிங் தலைமையிலான ஒரு குழுவை அனுப்பாமல் இரண்டாம் மட்டக்குழு ஒன்றை மாநாட்டுக்கு அனுப்புவதுதான் அந்தத் தீர்மானம். ஆனால், அதனை ஏற்றுக்கொள்வதற்குக் கூட தமிழகம் தயாராகவில்லை. இந்தியாவின் பிரதிநிதித்துவம் எந்தவகையிலும் இருக்கக்கூடாது என்பதில் தமிழக அரசியல் தலைவர்கள் உறுதியாகவுள்ளார்கள். இதற்கான மக்கள் போராட்டங்கள் தமிழகத்தில் முடுக்கிவிடப்பட்டுள்ளன. தமிழக காங்கிரஸ் கட்சியும் இந்தக் கோரிக்கையுடன் இணைந்திருப்பது கவனிக்கத்தக்கது. பொதுத் தேர்தலில் தமது வாக்கு வங்கிகளைப் பாதுகாக்க வேண்டுமானால் இந்தக் கோரிக்கையுடன் இணைந்திருக்க வேண்டும் என தமிழக காங்கிரஸ் கட்சியும் திட்டமிட்டுச் செயற்படுகின்றது. இது காங்கிரஸ் தலைமைக்கான அழுத்தத்தை மேலும் அதிகப்படுத்துவதாக அமையும்.

இலங்கை குறித்த தன்னுடைய கொள்கையை வகுத்துக்கொள்வதில் இரண்டு விடயங்களையிட்டு இந்தியா எப்போதும் கவனத்திற்கொண்டிருந்தது. ஒன்று - தமிழகத்தின் உணர்வுகள். இரண்டு - இலங்கையின் கேந்திர முக்கியத்துவம். மற்றும் இலங்கையுடனான உறவு. இந்த இரண்டும் ஒன்றுடன் ஒன்று முரண்படும் நிலையில்தான் இப்போது ஒரு தீர்மானத்தை எடுப்பதில் இந்தியா தடுமாறுகின்றது. கொழும்பு மாநாட்டில் பங்குகொள்வதில்லை என்ற தீர்மானத்தை இந்தியா எடுத்துக்கொண்டால், அவ்வாறான முடிவை எடுத்த நாடாக இந்தியா மட்டும் இருக்காது. கனடா இவ்வாறான தீர்மானத்தை ஏற்கனவே எடுத்திருக்கின்றது. இலங்கையில் இந்த மாநாடு நடைபெறுவதை ஆரம்பம் முதலே கனடா எதிர்த்துவந்திருக்கின்றது. இந்த மாநாட்டில் கலந்துகொள்வது என்பது மனித உரிமைகள் விடயத்தில் சர்வதேசத்தின் கரிசனைகளையிட்டு கவலைப்படாமல் செயற்படும் மகிந்த ராஜபக்ஷ அரசுக்கு வழங்கப்படும் அங்கீகாரமாக அமைந்துவிடும் என்பதுதான் கனடாவின் கருத்து. இந்த மாநாட்டில் பங்குகொள்ளக் கூடாது என்ற அழுத்தத்துக்குள்ளாகியிருக்கும் மற்றொரு நாடு பிரித்தானியா. ஆனால், மாநாட்டில் பங்குகொண்டு மனித உரிமைகள் குறித்து கேள்வி எழுப்பப்போவதாக பிரித்தானியப் பிரதமர் அறிவித்திருக்கின்றார்.

கனடா மற்றும் பிரித்தானியாவை விட இலங்கை விவகாரம் இந்தியாவுக்கு முக்கியமானது. ஆனால், இலங்கை விவகாரத்தில் ஒரு உறுதியான தீர்மானத்தை எடுக்கக்கூடிய நிலையில் இந்தியா இல்லை. இராஜதந்திர ரீதியில் இலங்கையிடம் இந்தியா எப்போதும் தோல்வியடைந்தே வந்திருக்கின்றது. தமிழர் நலன்கள் குறித்து தமிழகத்திலிருந்து வரக்கூடிய அழுத்தங்களை தமது நலன்களைப் பாதுகாப்பதற்கான துருப்புச் சீட்டாகவே இந்தியா பயன்படுத்திவருகின்றது. இப்போது கூட, சம்பூரைப் பெற்றுக்கொள்வதில் இந்தியா காட்டிய அக்கறையில் ஒரு வீததத்தைக் கூட சம்பூரிலிருந்து வெளியேற்றப்பட்ட மக்களின் எதிர்காலம் குறித்து காட்டவில்லை. கொழும்புக்குக் கிடைத்த வெற்றி இதுதான். இந்த நிலையில் தமிழக சட்டப்பேரவைத் தீர்மானம் மற்றும் தமிழகத்தில் உருவாகியிருக்கும் எழிச்சி என்பனவற்றை இந்தியா எவ்வாறு பயன்படுத்திக்கொள்ளப்போகின்றது?

(ஞாயிறு தினக்குரல் ஆசிரியர் தலையங்கம்: 2013-10-27)

No comments:

Post a Comment