Tuesday, November 19, 2013

விழாக் கோலமும் போர்க் கோலமும்

பொதுநலவாய அமைப்பு நாட்டுத் தலைவர்களின் உச்சி மாநாட்டுக்காக தலைநகர் கொழும்பும், தென்பகுதியும் விழாக்கோலம் பூண்டிருந்த அதேவேளையில் வடபகுதி மக்கள் போர்க் கோலம் பூண்டிருந்தமையைக் காணமுடிந்தது. உலகத் தலைவர்களினதும் ஊடகவியலாளர்களதும் கவனத்தைக் கவரும் வகையில் தென்பகுதி அலங்கரிக்கப்பட்டு கோலாகலமாகக் காணப்பட்டது. ஆனால், போரால் உறவுகளை இழந்தவர்களும், படையினரிடம் தமது நிலங்களைப் பறிகொடுத்த மக்களும் வடபகுதியில் நடத்தியுள்ள போராட்டங்கள் சர்வதேச கவனத்தைப் பெரிதும் ஈர்ந்துள்ளது. குறிப்பாக பிரித்தானிய பிரதமர் டேவிட் கமரூன் யாழ்ப்பாணத்தில் இந்த நிலைமைகளை நேரில் பார்வையிட்டுள்ளதுடன், மக்களை நேரில் சந்தித்து அவர்களுடைய பிரச்சினைகளைக் கேட்டறிந்துகொண்டுள்ளார். வடக்கு நிலைமைகளை மூடிமறைப்பதற்கு மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் தோல்வியடைந்துள்ளன. 

பொதுநலவாய நாடுகளின் உச்சி மாநாட்டை இலங்கையில் நடத்த வேண்டும் என ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அரசாங்கம் எடுத்த முயற்சிகளுக்கு பிரதான காரணமாக இருந்தது சர்வதேச சமூகத்தின் முன்பாக தம்மை ஒரு பொறுப்பு வாய்ந்த அரசாங்கமாகக் காட்டிக்கொள்ள வேண்டும் என்ற அவர்களின் அவாதான். போர்க் குற்றங்கள் பற்றிய நெருக்கடிகள், மனித உரிமை மீறல் பற்றிய பிரச்சினைகள் சர்வதேச அழுத்தங்களை அதிகரித்திருக்கும் நிலையில்தான் இந்த மாநாட்டை அரசாங்கம் நடத்தியது. போர் முடிவுக்கு வந்து நிலைமைகள் வழமைக்குத் திரும்பிவிட்டது என்பதைக் காட்டிக்கொள்ள வேண்டிய ஒரு தேவை அரசாங்கத்துக்கு இருந்தது. அதேவேளையில் பொதுநலவாய தலைமையைப் பெற்றுக்கொள்வதன் மூலம் சர்வதேச அழுத்தங்கள் குறையும் என்ற எதிர்பார்ப்பும் அரசிடம் காணப்பட்டது. அதற்காகத்தான் பாரியளவிலான பணச் செலவில் இந்த மாநாடு நடத்தப்பட்டது. 

பொதுநலவாய உச்சி மாநாடு முடிவடைந்திருக்கும் நிலையில் இதன் தலைமைப் பொறுப்பு இப்போது இலங்கைக்குக் கிடைத்திருக்கின்றது. இதனை ஒரு வரப்பிரசாதமாக மாபெரும் வெற்றியாகக் காட்டிக்கொள்வதுதான் இலங்கை அரசாங்கத்தின் நோக்கம். ஆனால், இது வெறுமனே ஒரு சம்பிரதாயம்தான். உச்சி மாநாட்டை நடத்தும் நாட்டிடம் அடுத்த இரண்டு வருடங்களுக்குத் தலைமைப் பதவி ஒப்படைக்கப்படுவது ஒரு வழமை. ஆனால், உண்மையில் இந்தத் தலைமைப் பதவியைப் பெற்றுக் கொண்டிருப்பதன் மூலம் இலங்கைக்கான பொறுப்பு அதிகரிக்கப் போகின்றது. பல கடப்பாடுகளை நிறைவேற்ற வேண்டிய நிர்ப்பந்தம் அரசாங்கத்துக்கு ஏற்படப்போகின்றது. மனித உரிமை மீறல், ஊடக சுதந்திரம், நல்லாட்சி, சட்டத்தின் ஆட்சி உட்பட பல விடயங்கள் குறித்து சர்வதேசத்தின் கவனம் இலங்கை மீது குவியப்போகின்றது. இது இலங்கைக்கு ஒரு நெருக்கடியாகத்தான் இருக்கும்.

பொதுநலவாய மாநாட்டு அமர்வு உத்தியோகபூர்வமாக வெள்ளிக்கிழமை ஆரம்பமாகிய நிலையில், அதன் சம்பிரதாய நிகழ்வுகளின் காட்சிப் பதிவுகளை பின்தள்ளிவிட்டு வடக்கில் இடம்பெற்ற மக்கள் போராட்டங்களில் அனைத்துலக ஊடகங்களும் தமது கவனத்தைக் குவித்தன. பிரித்தானிய பிரதமர் டேவிட் கமரூனும் நண்பகலுடனேயே உச்சி மாநாட்டு மண்டபத்திலிருந்து புறப்பட்டு யாழ்ப்பாணம் சென்ற போது பெருமளவிலான ஊடகவியலாளர் குழு ஒன்றும் அவருடன் சென்றது. உச்சி மாநாட்டு நிகழ்வுகளுடன் மட்டும் ஊடகவியலாளர்களின் செயற்பாடுகளைக் கட்டுப்படுத்திவைப்பதற்கு அரசாங்கம் மேற்கொண்ட முயற்சிகள் தோல்வியடைந்தன. வடக்கின் உண்மை நிலை என்ன என்பதை சர்வதேச ஊடகவியலாளர்கள் நேரில் பார்ப்பதை அரசாங்கத்தினால் தடுக்க முடியாமல் போய்விட்டது. இலங்கையில் காணப்படும் இரு வேறு உள்ளக சூழலை சர்வதேசம் இப்போது நேரடியாகப் பார்த்திருக்கின்றது. 

போர் முடிவுக்கு வந்திருந்தாலும், பொறுப்புக் கூறல் இடம்பெறவில்லை என்பதையும், நாட்டில் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதில் ஒரு அங்குலம் கூட முன்னேற்றம் இடம்பெறவில்லை என்பதையும் வடக்கில் இடம்பெற்ற மக்களி போராட்டங்கள் உணர்த்தியுள்ளன. பொறுப்புக் கூறல் நடைபெறாமல் நல்லிணக்கம் சாத்தியமில்லை என்பதுதான் தமிழர் தரப்பின் வாதமாகவுள்ளது. போரின்போது இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள், மனிதாபிமானமற்ற செயற்பாடுகள் குறித்து வெளியாகும் ஆதாரங்களை உடனடியாக நிராகரிப்பதைவிட அரசாங்கம் எதனையும் செய்யவில்லை. இவை தொடர்பில் சர்வதேச விசாரணை ஒன்றுக்கு அரசாங்கம் தயாராகவில்லை. அதேவேளையில், வடக்கில் பொதுமக்களின் காணிகள் ஆக்கிரமிக்கப்பட்டு இராணுவ மயமாக்கல் இடம்பெற்றிருப்பதையும், காணாமல் போனவர்கள் குறித்த பொறுப்புக் கூறல் இடம்பெறவில்லை என்பதையும் வடக்கில் வெடித்த மக்கள் போராட்டங்கள் உணர்த்தியுள்ளன.

நாட்டின் எந்தப் பகுதிக்கும் சென்று வரலாம். நிலைமைகளை நேரில் வந்து பாருங்கள் என சர்வதேசத் தலைவர்களுக்கும் ஊடகவியலாளர்களுக்கும் அழைப்பு விடுத்த அரசாங்கம், அதற்கான பாதுகாப்பை வழங்கவில்லை. சனல் -4 ஊடகவியலாளர்கள் வடக்கு நோக்கிச் சென்றபோது அனுராதபுரத்தில் தடுக்கப்பட்டனர். ஊடகவியலாளர்கள் சென்ற ரயிலைத் தடுத்தவர்களைக் கலைப்பதற்கு பொலிஸார் எந்த நடவடிக்கையையும் மேற்கொள்ளவில்லை. பதிலாக சனல் 4 ஊடகவியலாளர்களை திரும்பிச் செல்லுமாறு பொலிஸார் வலியுறுத்தினார்கள். ஆக, வடக்கே சுதந்திரமாக சென்று செய்தி சேகரிப்பதற்கான சூழ்நிலை இருக்கவில்லை. அரசாங்கமும் அதனை விரும்பவில்லை. பிரித்தானியப் பிரதமருடன் சென்றதால்தான் பெருமளவு வெளிநாட்டு ஊடகவியலாளர்களால் யாழ். மண்ணில் கால் பதிக்க முடிந்தது. உண்மை நிலைமைகளை சர்வசேத்தின் கவனத்துக்குக் கொண்டுவர முடிந்தது.

பொதுநலவாய மாநாட்டை வெற்றிகரமாக நடத்திவிட்டோம் தலைமைப் பதவியை வசப்படுத்திவிட்டோம் என அரசாங்கம் இறுமாப்பில் இருந்துவிட முடியாது என்பதைத்தான் இந்தச் சம்பவங்கள் உணர்த்ததுகின்றன. பொறுப்புக் கூறல் முக்கியமானது. போரின் போது யாருமே காணாமல் போகவில்லை என சர்வதேசத்தின் முன்பாக அரசாங்கம் தொடர்ந்தும் சொல்லிக்கொண்டிருக்க முடியாது. யாழ்ப்பாணத்தை கண்ணீர்க் குளமாக்கிய தாய்மார்களின் துன்பம் பொய்யானது அல்லது போலியானது என அரசாங்கம் கூறிவிட முடியாது. மக்கள் இன்னும் அகதிகளாக முகாம்களில் இருக்கும் நிலையில் உயர் பாதுகாப்பு வலயம் என ஒன்று இல்லை. மக்களை முழுமையாக மீளக்குயேற்றிவிட்டோம் என அரசாங்கம் சொல்வதை இனியும் உலகம் நம்பாது. பிரித்தானிய பிரதமரே நிலைமைளை நேரில் பார்த்துள்ளார். பொதுநலவாயத்தின் தலைமைப் பொறுப்பை ஏற்றுக்கொண்டுள்ள இலங்கைக்கான கடப்பாடுகள் இப்போது அதிகரித்துள்ளன.

(ஞாயிறு தினக்குரல் 2012-11-17: ஆசிரியர் தலையங்கம்)


No comments:

Post a Comment