Sunday, October 20, 2013

இராஜதந்திர நகர்வு!

வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ முன்னிலையில் மீண்டும் ஒரு முறை சத்தியப்பிரமாணம் செய்திருக்கின்றார். வடமாகாணத்துக்கான அமைச்சுப் பொறுப்புக்களுக்காகவே அவர் இப்போது இந்தப் பதவிப் பிரமாணத்தை மேற்கொண்டிருக்கின்றார். விக்னேஸ்வரன் வடமாகாணத்தின் முதலமைச்சராகவுள்ள அதேவேளையில் முக்கியமான 16 அமைச்சுப் பொறுப்புக்களையும் தன்வசம் எடுத்துக்கொண்டிருக்கின்றார். இதில் கவனிக்கப்பட வேண்டிய முக்கிய விடயம் ஒன்றுள்ளது. சட்டம், ஒழுங்கு மற்றும் காணி போன்ற சர்ச்சைக்குரிய விடயங்களுக்கான அமைச்சுப் பொறுப்புக்களையும் அவர் தன்வசம் எடுத்துக்கொண்டிருக்கின்றார் என்பதுதான் அது. எதனைச் செய்யக்கூடாது என ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ நினைத்திருந்தாரோ அதனைச் செய்வதற்கு நிர்ப்பந்திக்கப்பட்டிருக்கின்றார்.

வடமாகாண சபைக்கு இந்த அதிகாரங்கள் கொடுக்கப்படக்கூடாது என்பதற்காக ஜனாதிபதியும், அவரது அரசாங்கமும் சிங்கள தேசியவாதக் கட்சிகளுடன் இணைந்து செயற்பட்டனர் என்பது இலகுவில் மறந்துவிடக்கூடியதல்ல. இதற்காக 13 ஆவது திருத்தத்தை மாற்றியமைப்பதற்கான பிரேரணை ஒன்றும் பாராளுமன்றத்துக்குக் கொண்டுவரப்படவிருந்தது. இந்த மாற்றத்தைச் செய்யாமல் வடமாகாண சபைக்கான தேர்தலை நடத்தினால் பதவி துறக்கப்போவதாக அமைச்சர் ஒருவரும் அதிரடியாக அறிவித்திருந்தார். இவ்வளவுக்குப் பின்னரும் சட்டம், ஒழுங்கு காணி அதிகாரங்களை உள்ளடக்கிய அமைச்சுப் பொறுப்புக்களை விக்னேஸ்வரனிடம் கையளித்து ஜனாதிபதி கைச்சாத்திட்டிருப்பது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் இராஜதந்திர காய்நகர்த்தல்களுக்குக் கிடைத்த ஒரு வெற்றியாகக் கருதலாம். ஆனால், இந்த அதிகாரங்களை மாகாண சபையால் பயன்படுத்தக்கூடியதாக இருக்குமா அல்லது இதனைப் பயன்படுத்துவதற்காகப் போராட வேண்டியிருக்குமா என்ற முக்கியமான கேள்வியும் இங்கு எழுகின்றது.

ஆனால், உண்மையில் இதனை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் இராஜதந்திர வெற்றி என மட்டும் கூறிவிட முடியாது. சர்வதேச அரங்கில் உருவாகியிருக்கும் இலங்கைக்கு எதிரான நெருக்குதல்களே இதற்கான கள நிலையை கூட்டமைப்புக்கு ஏற்படுத்திக்கொடுத்திருந்தது. விடுதலைப் புலிகளுடனான போரை அரசாங்கம் முடிவுக்குக் கொண்டுவந்திருந்தாலும், அதன்போது இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள், போர்க் குற்றங்கள் என்பன சர்வதேச அரங்கில் இலங்கை மீதான அழுத்தங்களைத் தீவிரமாக்கியிருக்கின்றது. பொறுப்புக் கூறல், நல்லிணக்கம் என்பவற்றின் அடிப்படையில் எதனையாவது செய்தாகவேண்டிய நிர்பந்தம் கொழும்புக்கு உள்ளது. அரசாங்கம் விரும்பாத போதிலும் வடமாகாண சபைக்கான தேர்தலை நடத்தியமைக்கும் இந்த நிர்ப்பந்தமே காரணம். மாகாண சபையின் அதிகாரங்களைப் பிடுங்கிக்கொள்ளாமல் விட்டதன் பின்னணியும் அதுதான். போரின் பின்னர் ஏற்பட்டுள்ள இந்தக் கள நிலைமைதான் கூட்டமைப்பு இலகுவாக காய்நகர்த்துவதற்கான  வாய்ப்பான நிலையை ஏற்படுத்திக்கொடுத்திருக்கின்றது.

இலங்கை அரசாங்கம் தன்னுடைய சிங்கள தேசியவாத கடும்போக்கைத் தளர்த்திக்கொண்டுள்ளமைக்கு தற்போதைய நிலையில் இரண்டு விடயங்கள் காரணமாகவுள்ளன. ஒன்று - அடுத்த மாதம் நடைபெறவிருக்கும் பொதுநலவாய நாட்டுத் தலைவர்களின் உச்சி மாநாடு. இரண்டாவது - மார்ச் மாதம் நடைபெறவிருக்கும் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் ஜெனீவா கூட்டத் தொடர். பல நெருக்கடிகளுக்கு மத்தியில்தான் பொதுநலவாய உச்சி மாநாடு கொழும்பில் நடைபெறவுள்ளது. சர்வதேச சமூகத்தில் தான் ஓரங்க்டப்பட்டுவிடவில்லை என்பதைக் காட்சிப்படுத்துவதற்கு இலங்கை அரசாங்கத்துக்கு இந்த மாநாடு அவசியமானதாகவுள்ளது. ஆனால், இந்த மாநாட்டுக்கு வருகைதரவுள்ள பிரித்தானிய போன்ற நாடுகளின் தலைவர்கள் கேள்விக் கணைகளுடன்தான் வரவுள்ளார்கள். கனடா வரப்போவதில்லை என திட்டவட்டமாக அறிவித்துவிட்டது. இந்தியா நிலைமைகளை உன்னிப்பாக அவதானித்துக்கொண்டிருக்கின்றது.

இலங்கைக்குள்ள இரண்டாவது பிரச்சினை ஜெனீவா! ஜெனீவாவில் இலங்கைக்கு எதிராகக் கொண்டுவரப்பட்ட இரண்டு பிரேரணைகள் நிறைவேற்றப்பட்டிருந்தாலும், அந்தத் தீர்மானங்கள் பலவீனப்படுத்தப்பட்டமைக்கு இந்தியாவே பின்னணியில் செயற்பட்டது. ஆனால், அடுத்த மார்ச் மாதத்தில் அதேபோன்ற ஒரு பங்களிப்பை வழங்க இந்தியாவினால் முடியாது போகலாம். ஏப்ரல் மாதத்தில் இந்தியப் பொதுத் தேர்தல் நடைபெறவிருப்பது இதற்குக் காரணம். இந்தத் தேர்தலின் போது தமிழகத்தின் அதிகரித்த நிர்ப்பந்தத்தை எதிர்கொள்ள வேண்டிய நிலை  டில்லிக்கு இருக்கும். தமிழர்களை அரவணைக்கும் வகையில் பிரதான எதிர்க்கட்சியான பாரதிய ஜனாதா கட்சி வியூகங்களை அமைப்பது காங்கிரஸ் அரசுக்கு மேலும் நிர்ப்ந்தங்களை ஏற்படுத்தும். இதனால் இம்முறை ஜெனீவாவில் இலங்கையைப் பாதுகாக்க இந்தியா முற்படும் என எதிர்பார்க்க முடியாது.  ஆக, பொறுப்புக்கூறல் மற்றும் நல்லிணக்கம் போன்றவற்றில் கணிசமான முன்னேற்றத்தைக் காட்டாத வரையில் வரப்போகும் ஜெனீவா கூட்டத் தொடர் இலங்கைக்கு நெருப்பாறாகத்தான் இருக்கும்!

இந்தப் பின்னணியில் வடமாகாண சபையின் செயற்பாடுகளைப் பாதிக்கும் வகையில் எதனையாவது செய்யப்போவது ஆபத்தானதாக அமையும் என்பதை கொழும்பு  உணர்ந்துகொண்டுள்ளதாகவே தெரிகின்றது. இனவாதத்தைக் கக்கும் அரசாங்கத்தின் பங்காளிக் கட்சிகளின் அசாதாரண மௌனம் கூட இதனை உறுதிப்படுத்துவதாகத்தான் உள்ளது. இதனை மற்றொருவகையில் சொன்னால், மாகாண சபைகளுக்கான அதிகாரங்கள் உட்பட தமிழர்களின் நலன்சார்ந்த விடயங்களைப் பொறுத்து காய் நகர்த்துவதற்கான ஒரு சிறப்பான வாய்ப்பாக இதனைக் கருதலாம். தான் விரும்பாவிட்டாலும், சட்டம், ஒழுங்கு மற்றும் காணி போன்ற விடயங்களை உள்ளடக்கிய அமைச்சுப் பொறுப்புக்களை விக்னேஸ்வரனிடம் கொடுக்க நிர்ப்பந்திக்கப்பட்டதைப்போல இன்னும் பல நிர்ப்பந்தங்கள் ஜனாதிபதிக்கு ஏற்படலாம். உட்கட்சிப் பூசல்களைத் தவிர்த்து திட்டமிட்ட முறையில் காய்களை நகர்த்துவதன் மூலம் மேலும் பலவற்றை கூட்டமைப்பினரால் சாதிக்க முடியும். ஆதற்கான கள நிலமையை சர்வதேசம் இப்போது ஏற்படுத்திக்கொடுத்திருக்கின்றது. சாதிப்பார்களா கூட்டமைப்பினர்?

(ஞாயிறு தினக்குரல் ஆசிரியர் தலையங்கம்: 2013-10-20)

No comments:

Post a Comment