Monday, July 1, 2013

19 ஆவது திருத்தம் எதற்காக?

அரசியலமைப்புக்கான 13 ஆவது திருத்தத்தை மாற்றியமைத்து மாகாண சபைகளுக்கான அதிகாரங்களைக் குறைக்கும் முயற்சியில் இறங்கியிருக்கும் அரசாங்கம், அதில் மிகப்பெரிய தடை ஒன்றை எதிர்கெண்டுள்ளது. அடுத்த வாரம் இடம்பெறும் பாராளுமன்றக் கூட்டத் தொடரின் போது 13 ஆவது திருத்தத்தை மாற்றியமைப்பதற்கான 19 ஆவது திருத்தத்தைக் கொண்டுவருவதற்குத் திட்டமிட்டுள்ள அரசாங்கம், அதற்கு முன்னதாக மாகாண சபைகளின் அங்கீகாரத்தைப் பெற்றுவருகின்றது. இந்த வகையில் ஏழு மாகாணங்கள் குறிப்பிட்ட திருத்தத்துக்கான அங்கீகாரத்தை வழங்கியுள்ள போதிலும், கிழக்கு மாகாண சபையின் அங்கீகாரத்தைப் பெற்றுக்கொள்வது என்பதுதான் அரசாங்கத்துக்கு இப்போது பெரும் சவாலாக அமைந்திருக்கின்றது. இந்த சவாலை அரசாங்கம் எவ்வாறு சந்திக்கப்போகின்றது என்பதுதான் இலங்கை அரசியலில் இன்று எழும் முக்கிய கேள்வி.

பாராளுமன்றம் அடுத்தவாரம் கூடும் போது அரசியலமைப்புக்கான 19 ஆவது திருத்தச் சட்டமூலத்தை ஒரு அவசர பிரேரணையாகக் கொண்டுவந்து நிறைவேற்றுவதற்கு கடந்த வாரம் அரசாங்கம் தீர்மானித்தது. இந்த 19 ஆவது திருத்தம் இரண்டு விடயங்களை உள்ளடக்கியுள்ளது. ஒன்று - இரண்டு மாகாண சபைகள் எதிர்காலத்தில் ஒரே மாகாண சபையாக இணைந்து செயற்படுவதைத் தடுத்தல். இரண்டு - மாகாண சபைகள் தொடர்பான சட்டமூலங்களை நிறைவேற்றும் போது மாகாண சபைகள் அனைத்தினதும் அங்கீகாரம் பெறப்பட வேண்டும் என்ற தற்போதைய நிலையை மாற்றி, பெரும்பான்மையான மாகாண சபைகளின் அங்கீகாரத்தைப் பெற்றுக்கொண்டால் போதுமானது என மாற்றியமைத்தல். இந்த இரண்டு விடயங்களையும் அரசியலமைப்புத் திருத்தத்தில் உள்ளடக்க வேண்டும் என அரச தரப்பினர் துடிப்பதற்கான காரணம் புரிந்துகொள்ள முடியாத ஒன்றல்ல!

இந்த விடயங்கள் அமைச்சரவையில் ஆராயப்பட்டு அதன் அங்கீகாரத்தைப் பெற்றிருக்கின்றது. இதனைவிட மாகாண சபைகளுக்கான காணி, பொலிஸ் அதிகாரங்களை இல்லாமல் செய்வதற்கான யோசனை அமைச்சரவைக்குள் காணப்பட்ட கடுமையான எதிர்ப்பையடுத்து பாராளுமன்றத் தெரிவுக்குழுவுக்குப் பாரப்படுத்தப்பட்டுள்ளது. அமைச்சரவையின் அங்கீகாரத்தைப் பெற்றுக்கொண்ட இரு விடயங்களையும் அரசியலமைப்புக்கான 19 ஆவது திருத்தமாகக் கொண்டுவருவதுதான் அரசாங்கத்தின் திட்டம். அதற்காக அவை மாகாண சபைகளின் அங்கீகாரத்தைப் பெற்றுக்கொள்வதற்காக எட்டு மாகாண சபைகளுக்கும் அனுப்பிவைக்கப்பட்டுள்ளன. இதற்கு ஏழு மாகாண சபைகளினதும் அங்கீகாரத்தை அரசாங்கம் பெற்றிருக்கின்றது. வடமாகாண சபை உருவாக்கப்படவில்லை என்பதால், கிழக்கு மாகாண சபையின் அங்கீகாரத்தைப் பெற்றுக்கொள்வது என்பதுதான் அரசாங்கம் இன்று எதிர்கொள்ளும் மிகப் பெரிய நெருக்கடி!

கிழக்கு மாகாண சபையின் அங்கீகாரத்தைப் பெற்றுக்கொள்வதில் அரசாங்கத்துக்கு இரண்டுவிதமான பிரச்சினைகள் இருப்பதாகத் தெரிகின்றது. முதலாவது, கிழக்கு மாகாண சபையின் அடுத்த கூட்டத் தொடர் ஜூலை 23 ஆம் திகதியே நடைபெறவிருக்கின்றது. அதனால் அரசாங்கம் எதிர்பார்ப்பதுபோல பாராளுமன்றத்துக்கு இந்தப் பிரேரணையைக் கொண்டுவருவதற்கு முன்னதாக கிழக்கு மாகாண சபையின் அங்கீகாரம் கிடைத்துவிடப்போவதில்லை. இரண்டாவது பிரச்சினை கிழக்கு மாகாணத்தில் நிர்ணயிக்கும் சக்தியாகவுள்ள சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் இந்தத் தீர்மானத்தை ஏற்றுக்கொள்ளுமா என்பது. இவ்விடயத்தில் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸின் நிலைப்பாடு அரசாங்கத்துக்கு ஏமாற்றத்தைக் கொடுப்பதாகவே அமைந்திருக்கின்றது. பாராளுமன்றத் தெரிவுக்குழுவில் தமக்கு இடம் ஒதுக்கவில்லை என்பதால் சீற்றமடைந்திருக்கும் சிறி லங்கா முஸ்லிம் காங்கிரஸ், 13 ஆவது திருத்தத்தைப் பலவீனப்படுத்தும் முயற்சிகளுக்கு ஆதரவளிக்கப்போவதில்லை என்பதை ஏற்கனவே தெளிவாகத் தெரிவித்திருக்கின்றது. குறிப்பிட்ட பிரேரணையை கிழக்கு மாகாண சபையில் நிறைவேற்ற முடியாத நிலையை இது ஏற்படுத்தியிருக்கின்றது. இந்த நெருக்கடியிலிருந்து மீள்வதற்கு அரசாங்கத்துக்கு இருக்கக்கூடிய ஒரேயொரு வழி உயர் நீதிமன்றத்துக்குச் செல்வதாக இருக்கலாம்.

19 ஆவது திருத்தத்தை ஒரு அவசர சட்டமூலமாகக் கொண்டுவர வேண்டும் என அரசாங்கம் தீர்மானித்தமைக்கு உடனடியான நியாயமான காரணங்கள் எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை. மாகாண சபைகள் பலவீனப்படுத்தப்பட வேண்டும் என உரத்துக் குரல் கொடுக்கும் சிங்கள - பௌத்த தேசியவாதிகளைத் திருப்திப்படுத்துவது மட்டும்தான் இதன் நோக்கமாக இருக்க முடியும். காணி, பொலிஸ் அதிகாரங்களை மாகாண சபைகளிடமிருந்து பறிப்பது உடனடியாகச் சாத்தியமாகப் போவதில்லை என்பது வெளிப்படையாகத் தெரிந்த ஒரு நிலையிலேயே இந்த நகர்வை அரசாங்கம் மேற்கொண்டது. 19 ஆவது திருத்த நகலில் இரு மாகாணங்கள் எதிர்காலத்தில் இணைந்து செயற்படுவதைத் தடுத்தல் எனப் பொதுவாகக் கூறப்பட்டிருந்தாலும் அது வடக்கு, கிழக்கைத்தான் சுட்டிக்காட்டுகின்றது என்பதில் எந்த சந்தேகமும் இருக்கத் தேவையில்லை. வடக்கு கிழக்கு மாகாணங்கள் அண்மைய எதிர்காலத்தில் இணைந்து செயற்படுவதற்கான சூழ்நிலை ஒன்று காணப்படவில்லை என்பதுடன், அது தேசத்தின் பாதுகாப்பைக் கேள்விக்குள்ளாக்கும் ஒரு விஷயமாக இருக்கப்போவதில்லை என்பதும் அனைவருக்கும் தெரிந்தது. வடக்கு - கிழக்கு இணைவது நாட்டின் ஒருமைப்பாட்டையும், இறைமையையும் பாதிக்கும் எனக் கூக்குரலிடுவதன் மூலம் தமது தேச பக்தியை வெளிப்படுத்த சிங்கள தேசியவாத அமைப்புக்கள் மட்டுமன்றி அரசாங்கமும் முற்படுவதாகவே கருத வேண்டியுள்ளது.

மாகாண சபைகள் தொடர்பான சட்டங்களை இயற்றும் போது அனைத்து மாகாண சபைகளினதும் அங்கீகாரத்தையும் பெற்றுக்கொள்ள வேண்டும் எனக் கூறப்பட்டிருப்பதை மாற்றியமைப்பதற்கு அரசாங்கம் முற்படுவதன் பின்னணியும் புரிந்துகொள்ள முடியாத ஒன்றல்ல. திவிநெகும சட்டமூலம் கொண்டுவரப்பட்டபோது வட மாகாண சபையின் அங்கீகாரத்தைப் பெற்றுக்கொள்வது என்பது அரசாங்கத்துக்கு நெருக்கடியைக் கொடுத்தது. மாகாண சபைகள் தொடர்பான சட்டங்களை மாற்றும் போது அனைத்து மாகாண சபைகளினதும் அங்கீகாரத்தைப் பெற்றுக்கொள்வது என்பது சாத்தியமற்றதாகிவிடலாம் என்ற அச்சத்தை இது அரசாங்கத்துக்கு ஏற்படுத்தியிருந்தது. அதனால்தான் இந்தத் திருத்தத்தை அரசு விரும்புகின்றது. ஆனால், கிழக்கு மாகாணத்திலிருந்து இதற்கு இப்போது நெருக்கடி உருவாகும் என்பது அரசாங்கம் எதிர்பார்க்காத ஒன்று. அரசாங்கத்தைப் பொறுத்தவரையில் இதனை அவசரமாகச் செய்ய வேண்டும் என நினைப்பதற்கு இரண்டு காரணங்கள் உள்ளன. ஒன்று வடமாகாண சபை அமைக்கப்பட்டால் அதன் பின்னர் இவற்றைச் செய்வது சாத்தியமற்றதாகிவிடலாம். இரண்டு - வடமாகாண சபைத் தேர்தலுக்கு முன்னதாக சிங்கள - பௌத்த தேசியவாதிகளைத் திருப்திப்படுத்தும் வகையில் எதனையாவது செய்தாகவேண்டும் என்பது.

-2013-06-30 ஞாயிறு தினக்குரல் ஆசிரியர் தலையங்கம்

No comments:

Post a Comment