இலங்கையின் தற்போதைய அமைச்சர்களுக்கிடையில், நாட்டிற்குள் இனவாதம்
மற்றும் மதவாத தீயை அணைப்பதற்காக நேர்மையாக முயற்சிப்பவர்கள் 50 வீதமானவர்களே என அமைச்சர்
வாசுதேவ நாணயக்கார அண்மையில்
தெரிவித்திருந்தார். ஏனையவர்களில்
பெருபாலானவர்கள், இனவாத, மதவாத செயற்பாடுகளில் நேரடியாக ஈடுபடாவிட்டாலும் அதற்கு இரகசியமான முறையில்
பங்களிப்பு செய்து வருகின்றனர்
என்பது அவரது குற்றச்சாட்டு.
தமது இனம் மற்றும் மதம் தொடர்பில் கொண்டுள்ள குருட்டுத்தனமாக பக்தி காரணமாவே அவர்கள்
அவ்வாறு செய்யப்பட்டு வருகிறார்கள்
என்பது வாசுதேவாவின் கருத்து.
போரில் வெற்றிகொண்டு
இனவாதத்தையே அடிப்படையாகக்கொண்டு அரசியல் நடத்தும் அரசாங்கம் ஒன்றுக்குள் அமைச்சராக
இருந்துகொண்டு இவ்வாறான கருத்துக்களை பகிரங்கமாகக் கூறக்கூடிய துணிச்சல் அமைச்சர் வாசுவை
விட வேறு யாருக்கும் வராது எனக்கூறலாம். அரசியலமைப்புக்கான 13 ஆவது திருத்தத்தை நீர்த்துப்
போகச் செய்வதற்கான செயற்பாடுகளில் அரசாங்கம் ஈடுபட்டுள்ள நிலையில், அதற்கு எதிராக அமைச்சரவைக்குள்ளேயே
குரல் கொடுக்கும் முக்கியமானவர் அவர்தான். 13 இல் கைவைத்தால் அரசிலிருந்து வெளியேறுவேன்
என்பது அவரது பிந்திய எச்சரிக்கை. இந்த நிலையில் அவரது அரசியல் பற்றி இந்த வாரம் சுருக்கமாகப்
பார்ப்போம்.
13 ஐப் பாதுகாப்பதற்கான
போராட்டத்தில் இடதுசாரி அமைச்சர்கள் பலர் இணைந்திருந்தாலும், 13 ஐப் பாதுகாக்க முடியாவிட்டால்
அரசாங்கத்திலிருந்து விலகுவேன் என்ற அச்சுறுத்தலை விடுக்கக்கூடிய துணிச்சல் உள்ளவராக
வாசு மட்டுமே உள்ளார். மற்றவர்கள் அரசுக்கு எச்சரிக்கை விடுத்தாலும் இல்லையெனில் பதவியைத்
துறப்போம் என்ற வகையில் எச்சரிக்கைகளை வெளியிட தயாராக இருக்கவில்லை. கொள்கைகளை விட
பதவி முக்கியம் என்பதில் அவர்கள் கவனமாக உள்ளார்கள்.
நீண்டகால இடதுசாரிப்
பாரம்பரியத்தைக் கொண்டுள்ள அமைச்சர் வாசு ஒரு சட்டத்தரணி. என்.எம். பெரேரா, கொல்வின்
ஆகியோரின் கருத்துக்களால் ஈர்க்கப்பட்டு இளமைக் காலத்திலேயே லங்கா சமசமாஜக் கட்சியில்
இணைந்து தீவிர அரசியலை முன்னெடுத்தவர். இருந்த போதிலும் கட்சித் தலைமையுடன் ஏற்பட்ட
முரண்பாடுகாளால் பின்னர் அதிலிருந்து விலகி விக்கிரமபாகு கருணாரட்ணவுடன் இணைந்து நவ
சமசமாஜக் கட்சியை ஆரம்பித்தார். பின்னர் அதிலிருந்தும் விலகினார். இரண்டு தடவை ஜனாதிபதித்
தேர்தலில் போட்டியிட்டுத் தோல்வியடைந்தவர். இப்போது ஆளும் கூட்டணியில் இணைந்து அமைச்சராகியிருக்கின்றார்.
ஆளும் கட்சியுடன் இணைந்து களம் இறங்கினால்தான் தேர்தலில் வெற்றி பெற முடியும் என்ற
நிலையும் அவருக்குத் தெரியும்.
சந்திரிகா ஆட்சிக்
காலத்திலும் இப்போது மகிந்த ஆட்சிக் காலத்திலும் அரசுக்குள் இருந்துகொண்டே அரசை விமர்சிப்பதற்கு
அவர் தயங்கியதில்லை. ஜனாதிபதி ராஜபக்ஷவினால் அவருக்குக் கொடுக்கப்பட்ட அமைச்சர் பதவியும்
முக்கியமானது. தேசிய மொழிகள் அமுலாக்கல், சமூக ஒருமைப்பாட்டு அமைச்சு அவருக்குக் கொடுக்கப்பட்டது.
போர் முடிவடைந்திருக்கும் நிலையில் இந்த அமைச்சு முக்கியமான ஒன்றாகக் கருதப்பட வேண்டியது.
இனங்களுக்கு இடையில் நல்லிணக்கத்தையும் நம்பிக்கையையும் ஏற்படுத்துவதில் முக்கிய பொறுப்பை
ஏற்கவேண்டிய அமைச்சு. தேசிய மொழிகள் அமுலாக்கலில் அவர் அதிகளவுக்கு அக்கறை கொண்டுள்ளார்
என்பதற்கு பல உதாரணங்கள் உள்ளன. குறைந்தளவு பட்ஜெட்டில் அரச இயந்திரங்கள் அனைத்தும்
சிங்கள மயப்பட்டவையாக உள்ள நிலையில் இதனைச் செயற்படுத்துவது என்பது எந்தளவுக்கு கடினமானது
என்பது புரிந்துகொள்ளக் கூடிய ஒன்றுதான். ஆனால், இவற்றுக்கு மத்தியிலும் அதனைச் செய்ய
வேண்டும் என்பதற்காக அவர் கடுமையாகப் போராடுகின்றார் என்பது உண்மை!
13 ஆவது திருத்தம்
தொடர்பில் வாசு வெளிப்படுத்திவரும் இறுக்கமான நிலைப்பாடு ஆச்சரியமான ஒன்றல்ல. தன்னுடைய
அரசியல் வாழ்க்கையில் ஆரம்பம் முலலே சிறுபான்மையினருக்கு சம உரிமை வழங்கப்பட வேண்டும்,
அதிகாரப் பரவலாக்கல் என்பவற்றுக்காக கடுமையாக தீவிரமாகக் குரல் கொடுக்கும் ஒருவராகவே
வாசு இருந்துள்ளார். இருந்தபோதிலும், இரு மாகாணங்கள் இணைவதைத் தடுப்பதற்கான அரசாங்கத்தின்
யோசனைக்கு அவர் ஆதரவை வெளிப்படுத்துகின்றார். இந்த இடத்தில் அவரது கொள்கையில் தடுமாற்றம்
தெரிகின்றது. இடதுசாரி அரசியல்வாதிகளிடம் வழமையாகக் காணப்படும் தடுமாற்றம்தான் அது.
கொள்கை என்பதற்கு அப்பால் தமது அரசியல் இருப்பைப் பாதுகாத்துக்கொள்வது என்பது இடதுசாரிகளுக்கு
எப்போதுமே பிரச்சினையாகத்தான் இருந்துள்ளது. இந்த நிலையில் இப்போது எழும் கேள்வி என்னவென்றால்
அரசு 13 இல் கை வைத்தால் வாசு பதவியைத் துறப்பாரா?
(தினக்குரல்- 2013-06-07))
No comments:
Post a Comment