Saturday, December 24, 2011

ரணில் முன்னுள்ள அடுத்த சவால்

ரணில் விக்கிரமசிங்கவின் தலைமைக்கு எதிராக ஐக்கிய தேசியக் கட்சியில் எழுந்த கிளர்ச்சி இறுதியில் அவரது தலைமையைப் பலப்படுத்துவதிலேயே முடிவடைந்திருக்கின்றது. யார் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும், ஐ.தே.க.வில் சர்ச்சைகளுக்கு அப்பாற்பட்ட ஒரு தலைவராக ரணில் விக்கிரமசிங்க இப்போது உருவாகியிருக்கின்றார். அவரது தலைமைப் பதவி பலவீனமானது என கட்சிக்குள் இப்போதைக்கு குற்றச்சாட்டுக்களை முன்வைக்க முடியாத நிலை உருவாக்கப்பட்டிருக்கின்றது.

அவருக்கு மாற்றாக மற்றொருவரை முன்னிலைப்படுத்த முடியாத நிலைமையும் கட்சியில் மறுசீரமைப்பை வலியுறுத்தும் குழுவினருக்கு ஏற்பட்டிருக்கின்றது!

கரு ஜயசூரியவைப் பொறுத்தவரையில் பட்டுவேட்டிக் கனவில் இருந்தபோது கட்டியிருந்த கோவணமும் காணாமல் போன நிலைமை. தலைமைப் பதவிக் கனவில் இருந்தபோது அவரிடமிருந்த பிரதித் தலைவர் பதவியும் இப்போது காணாமல் போய்விட்டது. கட்சியின் இரண்டாவது நிலையில் இருந்த அவர் இன்று ஒரு சாதாரண செயற்குழு உறுப்பினராகியிருக்கின்றார்.

கட்சித் தலைமைக்கான போட்டியில் நன்மையடைந்திருப்பவர்களில் குறிப்பிடக்கூடியவர் சஜித் பிரேமதாசதான். 44 வயதான சஜித், ரணிலுக்கு அடுத்த தலைவர்தான் என்பதை உறுதிப்படுத்தும் வகையில் கட்சியின் பிரதித் தலைவர் பதவியைக் கைப்பற்றிக்கொண்டுள்ளார். பாராளுமன்றத்தில் கட்சிப் பிரதித் தலைவர் பதவிக்கான அலுவலகத்தில் சஜித் விரைவில் குடியேறுவார் என எதிர்பார்க்கலாம்.

கட்சியின் தலைமைப் பதவிக்காக திங்கட்கிழமை இடம்பெற்ற தேர்தலில் ரணில் விக்கிரமசிங்க வெற்றிபெற்றிருப்பது ஆச்சரியமான ஒன்றல்ல. ஏனெனில் ஐ.தே.க.வின் முக்கிய பதவிகளுக்கு போட்டி ஏற்படும் போது, கட்சியின் உயர் மட்டக்குழுவாக உள்ள செயற்குழுதான் இறுதி முடிவை எடுக்கின்றது. இவ்வாறான பதவி ஒன்றுக்கு தேர்தல் நடைபெறுமாயின் அதில் வாக்களிப்பதற்கான உரிமையும் செயற்குழு உறுப்பினர்களுக்கு மட்டும்தான் உள்ளது.

கரு ஜயசூரியவைப் பொறுத்தவரையில் கட்சியின் செயற்குழுவுக்கு வெளியே தனது ஆதரவைப் பெருக்கிக்கொள்வதில் செலுத்திய கவனத்தை கட்சியின் செயற்குழுவின் ஆதரவைத் தக்கவைத்துக்கொள்வதில் செலுத்தவில்லை என்பது உண்மை. இலங்கை அரசியலில் அதிகளவு ஆதிக்கத்தைச் செலுத்தக்கூடியவர்களாகவுள்ள மகாநாயக்கர்களின் ஆதரவைப் பெற்றுக்கொண்ட அவரால், அதற்கான ஆதரவுத் தளத்தை செயற்குழுவில் உருவாக்க முடியாமல் போய்விட்டது.

கட்சித் தலைமையகம் முன்பாக கரு
கட்சியின் செயற்குழு ரணில் விக்கிரமசிங்கவை மீண்டும் தலைவராகத் தெரிவு செய்திருப்பதன் மூலமாக கட்சிக்குள் நீண்டகாலமாக இருந்துவந்த தலைமைத்துவப் போட்டி தற்போதைக்கு முடிவுக்கு வந்திருக்கின்ற போதிலும், செயற்குழுவின் முடிவு ஒட்டுமொத்தமாக கட்சி ஆதரவாளர்களின் முடிவல்ல. தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டபோது, ஐ.தே.க. தலைமையகமான சிறிகொத்தவின் முன்பாக இடம்பெற்ற வன்முறைகள் இதனைத்தான் பிரதிபலிப்பதாக அமைந்திருந்தது.

ரணில் விக்கிரமசிங்கவைப் பொறுத்தவரையில் கட்சியின் தலைமைப் பதவிக்கான தேர்தலில் வெற்றி பெறுவதற்கு அவருக்கு வாய்ப்பான சூழ்நிலை ஒன்று உருவாக்கப்பட்டிருந்தது. கட்சியின் செயற்குழு உறுப்பினர்களைப் பொறுத்தவரையில் அவர்கள் அனைவரும் கட்சியின் தலைவராலேயே நியமிக்கப்படுகின்றார்கள். அதேவேளையில், ஐ.தே.க.வின் செயற்குழுவில் சுமார் 20 வெற்றிடங்கள் இருந்து தேர்தலுக்கு ஒரு வாரத்துக்கு முன்னர்தான் அதற்கான உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டனர். தேர்தலைக் கருத்திற்கொண்டுதான் இந்த நியமனங்களை ரணில் மேற்கொண்டிருப்பார் என்பது சாதாரண அரசியல் தெரிந்த எருக்கும் புரியும். இந்த நிலையில்தான் தேர்தல் முடிவுகள் ஆச்சரியமான ஒன்றாக இருக்கவில்லை.

ஐ.தே.க. வின் தலைமைத்துவப் போட்டியைப் பொறுத்தவரையில் அது கட்சியின் பாராளுமன்றக் குழுவின் பிரச்சினையாகத்தான் இருந்துள்ளது. செயற்குழு ரணில் விக்கிரமசிங்கவுக்குப் பின்பாக அணிவகுத்து நின்றுள்ளது என்பதைத் தேர்தல் முடிவுகளும் உணர்த்தியிருக்கின்றது.

செயற்குழுவின் நிலைப்பாடு எவ்வாறானதாக அமையும் என்பதை நன்கு தெரிந்திருந்துகொண்டிருந்தும், ரணிலுடன் மோதுவதற்கு கரு ஜயசூரிய ஏன் களமிறங்கினார் என்பதுதான் புரியவில்லை.

சஜித், கரு, தயாசிறி கட்சி அலுவலகம் முன்பாக
சிங்கள - பௌத்த ஆதரவுத் தளத்தை வளைத்துப்போடுவதன் மூலம், தனது செல்வாக்கைக் காட்டி செயற்குழு உறுப்பினர்களின் ஆதரவைத் தனதாக்கிக்கொள்ள முடியும் என கரு கணக்குப் போட்டிருக்கலாம். ரணிலைப் பொறுத்தவரையில், அவர் பெருமளவுக்கு சிறுபான்மையினருக்கு ஆதரவான ஒருவர் என்ற கருத்து ஒன்றும் காணப்படுகின்றது. ரணிலின் அண்மைக்கால அரசியல் தோல்விகளுக்கு அதுவும் ஒரு காரணமாகக் கூறப்படுகின்றது. இந்தப் பின்னணியில்தான் மகாநாயக்கர்களின் ஆதரவைப் பெற்றுக்கொள்வதில் கரு ஜயசூரிய வெற்றி பெற்றார்.

இலங்கையின் அரசியலானது பெருமளவுக்கு பௌத்த - சிங்களக் கோட்பாடுகளால் கட்டியமைக்கப்பட்ட ஒன்று. அதில் மகாசங்கங்களுக்கு மிகவும் பிரதானமான புனிதமான ஒரு இடம் வழங்கப்பட்டிருக்கின்றது. தன்னுடைய வெற்றியை உறுதிப்படுத்துவதில் மகாநாயக்கர்களின் ஆதரவு முக்கிய இடத்தை வகிக்கும் என கரு கருதியிருக்கலாம். அதனால்தான் தலைமைப் பதவிக்கான போட்டியில் இறங்குவது எனத் தீர்மானித்த உடனடியாகவே கண்டிக்குச் சென்று மகாநாயக்கர்களின் ஆசீர்வாதத்தையும், ஆதரவையும் கரு பெற்றுக்கொண்டார்.

இதனைவிட, கரு கொழும்பு திரும்பிய உடனடியாகவே ரணில் விக்கிரமசிங்கவுக்கு கடிதம் ஒன்றை அனுப்பிவைத்த மகாநாயக்கர்கள், தலைமைப் பதவிக்கான போட்டியிருந்து விலகுமாறு ரணிலை வலியுறுத்தியிருந்ததுடன், கரு ஜயசூரியவைத் தலைமைப் பதவிக்கு நியமிக்க வேண்டும் என்பதையும் வலியுறுத்தியிருந்தார்கள். கட்சி விவகாரம் ஒன்றில் மகாநாயக்க தேரர்கள் வெளிப்படையாகக் கருத்து வெளியிட்டிருந்தமை இதுதான் முதன் முறையாகும். மகாநாயக்கர்களின் கருத்துக்களைப் புறக்கணித்துச் செயற்படக்;கூடிய துணிச்சல் சிங்கள அரசியல் தலைவர்கள் எவரிடமும் இருப்பதில்லை என்பதால், இது தமக்குச் சாதகமான நிலையை ஏற்படுத்தும் என கரு ஜயசூரிய தரப்பினர் எதிர்பார்த்தனர்.

இருந்த போதிலும், ரணில் விக்கிரமசிங்க அசைந்துகொடுக்கவில்லை. உறுதியாக இருந்து வெற்றியும் பெற்றிருக்கின்றார்.

திங்கட்சிழமை இடம்பெற்ற தேர்தலின் முடிவு கட்சிப் புனரமைப்பை வலியுறுத்தும் குழுவினருக்குப் பலத்த அடியாக விழுந்திருக்கின்ற போதிலும், அவர்கள் கட்சிக்குள் தொடர்ந்தும் தனியான ஒரு குழுவாகவே இயங்குவதைக் காணமுடிகின்றது. “தலைமைப் பதவிக்கான தேர்தலின் முடிவு உண்மையில், கட்சியின் ஒட்டுமொத்தமான நிலைப்பாட்டை பிரதிபலிப்பதாக அமையவில்லை“ எனத் தெரிவிக்கும் கரு ஜயசூரிய, எது எப்படியிருந்தாலும் தான் கட்சியைவிட்டு வெளியேற்போவதில்லை என்பதையும் வலியுறுத்தியிருக்கின்றார்.

வெற்றிக்களிப்பில்...

இருந்தபோதிலும், கட்சி இரண்டாகப் பிளவுபட்டுச் செயற்படும் நிலை தொடர்கின்றது. மீண்டும் கட்சியின் தலைமைப் பதவியைப் பொறுப்பேற்றுக்கொண்டிருக்கும் ரணில் விக்கிரமசிங்கவைப் பொறுத்தவரையில், கட்சியில் ஒற்றுமையை நிலைநாட்டுவதுதான் அவர் முன்பாகவுள்ள பிரதான சவால். தலைமையை மீண்டும் கைப்பற்றிக் கொண்டுள்ள போதிலும், தனித் தனியாகச் செயற்படும் பிரிவினரை  ஒற்றுமைப் படுத்துவதில் அவர் நெருக்கடிகளைத்தான் எதிர்கொண்டுள்ளார் என்பது தெளிவாகத் தெரிகின்றது. இந்தப் பிரச்சினைகளைத் தீர்த்து கட்சியை மீண்டும் கட்டுக்கோப்பான ஒரு தலைமையின் கீழ் இயங்கச் செய்த பின்னரே அரசுக்கு எதிரான போராட்டங்களை இவர்களால் வெற்றிகரமாக முன்னெடுக்கக்கூடியதாக இருக்கும்.

No comments:

Post a Comment