Sunday, December 18, 2011

சர்வதேச சமூத்தின் எதிர்பார்ப்புக்களும் நல்லிணக்க ஆணைக்குழு அறிக்கையும்

எதிர்பார்க்கப்பட்டதைப் போலவே அரசாங்கத்தினால் நியமிக்கப்பட்ட கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு தன்னுடைய இறுதி அறிக்கையின் மூலம் இராணுவத்தைப் பாதுகாப்பதற்கு முற்பட்டிருக்கின்றது. பொதுமக்கள் மீது திட்டமிட்ட முறையில் தாக்குதல்கள் எதுவும் நடத்தப்படவில்லை என நல்லிணக்க ஆணைக்குழுவின் இந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ள போதிலும், இராணுவத்தின் மீது தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டுக்கள், சரணடைந்த விடுதலைப் புலி உறுப்பினர்கள் காணாமல் போனமை தொடர்பான விடயங்களையிட்டு விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆக, இராணுவத்தைப் பாதுகாக்கும் அதேவேளையில், சர்வதேச ரீதியாகத் தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டுக்களுக்கும் ஏதோ ஒருவகையில் பதிலளிப்பதற்கும் ஆணைக்குழு முற்பட்டிருப்பதாகவே தோன்றுகின்றது.

சர்வதேச சமூகத்திலிருந்து உருவாகிய அழுத்தங்களைச் சமாளிப்பதற்காகவே இந்த ஆணைக்குழு அமைக்கப்பட்டதாயினும், நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை பாராளுமன்றத்தில் வெளியிடப்பட்ட இந்த இறுதி அதன் இறுதி அறிக்கை, சர்வதேசத்திகால் ஏற்றுக்கொள்ளப்படுமா என்பதும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ள பரிந்துரைகள் றடைமுறைப்படுத்தப்படுமா என்பதும்தான் இன்று எழுப்பப்படும் பிரதான கேள்விகள். சர்வதேச ரீதியாகவும், உள்நாட்டிலும் பெரும் எதிர்பார்ப்புக்களை ஏற்படுத்தியிருந்த இந்த 407 பக்கங்களைக் கொண்ட அறிக்கை நேற்று முன்தினம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவே இதனை பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பார் என முதலில் அறிவிக்கப்பட்டிருந்த போதிலும், அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவே இதனை சமாப்பித்தார்.


முன்னணி சட்ட நிபுணரான சி.ஆர்.டி சில்வா தலைமையிலான இந்த ஆணைக்குழு, நாடு முழுவதும் பல அமர்வுகளை நடத்தி மக்களிடம் நேரடியாக விபரங்களைக் கேட்டறிந்தனர். விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முக்கியத் தலைவர்களின் உறவினர்கள் உள்ளிட்ட பலர் இந்த ஆணைக்குழு முன்பாக சாட்சியங்களை வழங்கியிருந்தனர். இருந்தும் இந்த ஆணைக்குழுவின் அதிகார வரம்பு மற்றும் இதன் பயன் குறித்து எழுந்த யப்பகேள்விகள் காரணமாக சர்வதேச மன்னிப்பச் சபை,  ஹியூமன் ரைட்ஸ் வோட்ச் உள்ளிட்ட மனித உரிமை அமைப்புக்கள் இந்த ஆணைக்குழுவின் அமர்வில் பங்கு கொள்ள மறுத்துவிட்டன. 2010 ஆம் ஆண்டு மே மாதம் 15 ஆம் திகதி ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவினால் நியமிக்கப்பட்ட இந்த ஆணைக்குழுவின் இறுதி அறிக்கை கடந்த நவம்பர் மாதம் 20 ஆம் திகதி ஜனாதிபதியிடம் சமர்ப்பிக்கப்பட்டிருந்தது.

இறுதிப் போரின் போது பொதுமக்கள் இலக்கு வைத்துக்கொல்லப்படவில்லை என்பதுதான் இலங்கை அரசாங்கத்தின் நீண்டகால நிலைப்பாடாக வெளிப்படுத்தப்பட்டுவந்தது. ஒரு கையில் மனித உரிமைகள் சாசனத்தையும் மறுகையில் துப்பாக்கியையும் வைத்துக்கொண்டுதான் படையினர் போரில் ஈடுபட்டார்கள் என்பதைத்தான் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவும் போர்க் குற்றங்களுக்கான பதிலாக முன்வைத்து வைத்;திருந்தார். ஆனால், இறுதிப் போரின் போது பெருந்தொகையான பொதுமக்கள் கொல்லப்பட்டிருப்பதை இந்த ஆணைக்குழு பதிவு செய்திருக்கின்ற போதிலும், இலங்கை அரசின் உத்தியோகபூர்வ நிலைப்பாட்டை உறுதிப்படுத்துவதாகவே அதன் அறிக்கை அமைந்திருக்கின்றது. அதாவது பொதுமக்கள் இராணுவத்தினால் வேண்டுமென்றே கொல்லப்படவில்லை என்பதுதான் இந்த ஆணைக்குழுவின் முடிவு.

இலங்கை அரசாங்கத்தின் இராணுவ யுக்திகள் மிகவும் கவனமாக திட்டமிடப்பட்டிருந்ததாகவும், அதில் பொதுமக்களின் பாதுகாப்புக்கே முக்கியத்துவம் வழங்கப்பட்டிருந்ததால், பொதுமக்கள் இழப்பை தவிர்ப்பது அல்லது குறைப்பதை அந்த யுக்திகள் மையமாகக் கொண்டிருந்ததாகவும் ஆணைக்குழுவின் அறிக்கை குறிப்பிட்டுள்ளது. அதாவது அரசாங்கத்தின் நிலைப்பாட்டைத்தான் ஆணைக்குழுவின் அறிக்கை பிரதிபலித்துள்ளது.

அரசாங்கப் படைகள் நல்ல முன்னுதாரண அடிப்படையில் செயற்பட்ட போதிலும், அங்கு பெருமளவிலான காணமல்போதல்கள், கடத்தப்படுதல் மற்றும் சட்ட விரோத தடுத்து வைப்புக்கள் இடம்பெற்றுள்ளதாகவும் ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது. இவை குறித்து விசாரிக்க காணாமல்போனவர்களுக்கான ஒரு சிறப்பு ஆணைக்குழு அமைக்கப்ப்பட்டு, சூத்திரதாரிகள் தண்டிக்கப்பட வேண்டும் என்றும் அது கூறியுள்ளது.

இந்த விடயங்களைப் பொறுத்தவரையில், பெருமளவு குற்றச்சாட்டுக்கள் சர்வதேச ரீதியாகத் தெரிவிக்கப்படும் நிலையில், அவை தொடர்பாக விசாரணை நடத்தப்பட வேண்டும் என்ற பரிந்துரையைத் தவிர்ப்பது இந்த ஆணைக்குழுவுக்கு சற்று கடினமானதாகவே இருந்திருக்கும் என்பது புரிந்துகொள்ளக் கூடிய ஒன்றுதான். இருந்த போதிலும், இது தொடர்பில் ஏதாவது செய்தாகவேண்டும் என்ற அழுத்தத்தை இந்தப் பரிந்துரை அரசாங்கத்துக்கு அதிகப்படுத்துவதாகவும் இது அமைந்திருக்கும்.

பொதுமக்கள் திட்டமிட்ட முறையில் இலக்குவைத்துக்கொல்லப்படவில்லை எனக் கூறுவதன் மூலமாக போர்க் குற்றச்சாட்டுக்களை நிராகரிப்பதற்கு இந்த அறிக்கை முற்பட்டிருக்கின்றது. இருந்தபோதிலும், தனிப்பட்ட முறையில் இராணுவத்தினர் இவ்வாறான சம்பவங்களில் ஈடுபட்டிருக்கலாம் எனக் குறிப்பிடுவதன் மூலம் இவற்றை தனிப்பட்ட சம்பவங்களாகக் காட்டிக்கொள்ள ஆணைக்குழு முற்பட்டுள்ளமை புரிகின்றது.

காணாமல் போனவர்களை கண்டுபிடிப்பதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் எடுக்க வேண்டும் என்றும், பயங்கரவதாத் தடுப்புச் சட்டத்தின் கீழ் நீதிமன்றங்களில் குற்றஞ் சுமத்தப்படாமல், பல வருடங்களாக தடுத்து வைக்கப்பட்டிருப்பவர்களின் விவகாரங்களை ஆராய சுயாதீன ஆலோசனைக்குழு ஒன்று நியமிக்கப்பட வேண்டும் என்றும் ஆணைக்குழு பரிந்துரைத்துள்ளது.

பெரும் சர்ச்சைகளை ஏற்படுத்தியிருந்த பிரிட்டனின் சானல் 4 தொலைக்காட்சியால் வெளியிடப்பட்ட இலங்கையின் கொலைக் களம் விவரணப் படத்தின் நம்பகத் தன்மை குறித்து ஆணைக்குழு கேள்வி எழுப்பியுள்ளது. இருந்தபோதிலும் இந்தஆவணப்படத்தின் நம்பகத் தன்மையை ஐ.நா. சபை உறுதிப்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.  ஐ.நா. உறுதிப்படுத்திய ஆவணப்படத்தை ஆணைக்குழு சந்தேகிப்பதை சர்வதேச சமூகம் ஏற்றுக்கொள்ளும் என்பது எதிர்பார்க்கக்கூடியதல்ல.

வடமாகாணத்தில் சிவில் நிர்வாக நடவடிக்கைகளில் இராணுவம் தலையீடு செய்வதாக அடிக்கடி வரும் குற்றச்சாட்டுக்கள் குறித்து கருத்துக் கூறியுள்ள ஆணைக்குழு, சிவில் நடவடிக்கைகளில் இராணுவத் தலையீடு இல்லாது செய்யப்பட வேண்டும் என்று பரிந்துரைத்துள்ளது.

அதேவேளையில், தமிழ் மக்களுக்குப் பொருத்தமான அரசியல் தீர்வு தொடர்பாகவும் ஆணைக்குழு குறிப்பிட்டிருக்கின்றது. தமிழ் மக்கள் மத்தியில் காணப்படும் தற்போதைய வன்செயல்கள், சந்தேகங்கள், தாம் பாரபட்சமாக நடத்தப்படுவதான உணர்வு ஆகியவற்றை நீக்க, மக்களை மையமாகக் கொண்ட அதிகாரப் பகிர்வு முறைமை ஒன்று கொண்டுவரப்பட்டு, அதன் மூலம் உள்ளுராட்சி சபைகள் பலப்படுத்தப்படுவதுடன், தற்போதைய மாகாண சபைகள் முறை திருத்தப்பட்டு, மத்தியில் அதிகாரம் பகிரப்பட வேண்டும் என்றும் நல்லிணக்க ஆணைக்குழு பரிந்துரைத்துள்ளது.

அதாவது நல்லிணக்க ஆணைக்குழுவானது போர்க்காலத்தில் இடம்பெற்ற சம்பவங்களுக்குப் பொறுப்புக்கூறல் மற்றும், அரசியல் தீர்வு என்ற இரு விடயங்கள் தொடர்பாகவும் ஆராய்ந்து தனது அறிக்கையை வெளியிட்டிருப்பதுடன், அவை தொடர்பில் தமது பரிந்துரைகளையும் மேற்கொண்டிருக்கின்றது.

இருந்தபோதிலும், பொறுப்பேற்றல் என்ற விடயத்தைப் பொறுத்தவரையில் பொதுப்படையாகவே தனது கருத்துக்களையும் பரிந்துரைகளையும் ஆணைக்குழு வெளியிட்டுள்ளதே தவிர, தனிப்பட்ட சம்பவங்கள் தொடர்பாகக் கவனம் செலுத்தப்பட்டு விசாரணைகள் முன்னெடுக்கப்படவில்லை என்பதும் கவனிக்கக்கூடியதாக உள்ளது. ஆணைக்குழு முன்பாக பலர்  சாட்சியமளித்திருந்த போதிலும், அவற்றின் அடிப்படையிலான விசாரணைகளை முன்னெடுப்பதற்கான ஆணை இந்த ஆணைக்குழுவுக்கு வழங்கப்பட்டிருக்கவில்லை.

இந்த நிலையில் சர்வதேச ரீதியாக எழுப்பப்பட்டுள்ள பல சர்ச்சைகளுக்குப் பதிலளிப்பதற்கு இந்த ஆணைக்குழுவின் அறிக்கை தவறியுள்ளது.

அதேவேளையில், அரசியல் தீர்வைப் பொறுத்தவரையிலும் கூட, ஆணைக்குழு முன்வைத்துள்ள பரிந்துரைகள் மேலோட்டமானவையாக உள்ளனவே தவிர பிரச்சினை எவ்வாறு உருவாகியது ஏன் இந்தளவுக்கு மோசமடைந்துள்ளது என்பவற்றை ஆழமாக ஆராய்ந்து நிரந்தரமான ஒரு தீர்வை முன்வைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளதாகத் தெரியவில்லை. உள்ளுராட்சி சபைகளைப் பலப்படுத்துவதோ அல்லது மாகாண சபை முறை திருத்தப்படுவதோ மட்டும் பிரச்சினைகளுக்குத் தீர்வாகிவிடமுடியாது என்பதுதான் வரலாற்றிலிருந்த கற்றுக்கொண்ட பாடம். அரசியலமைப்பைத் திருத்தாமல் இந்தப் பிரச்சினைக்குத் தீர்வைக்காண முடியாது என்பதைத்தான் கடந்த காலப்பேச்சுவார்த்தைகள் உணர்த்தியிருக்கின்றது. ஆனால், ஆணைக்குழுவின் பரிந்துரைகளோ வெறும் மேலோட்டானவையாகவே உள்ளன.

காணாமல் போனவர்களைக் கண்டுபிடிப்பது, இராணுவத்தினர் யாராவது குற்றமிழைத்திருந்தால் அவர்களை விசாரணைக்கு உட்படுத்துவது போன்ற சில சிபார்சுகளை இந்த ஆணைக்குழு தெரிவித்திருந்தாலும், அவை அரசாங்கத்தினால் நடைமுறைப்படுத்தப்படுமா என்பதுதான் அடுத்ததாகவுள்ள மிகப்பெரிய கேள்வி.

நல்லிணக்க ஆணைக்குழு 2010 செப்டம்பர் 13 ஆம் திகதி தனது இடைக்கால அறிக்கையை வெளியிட்டிருந்தது. அதிலும் இது போன்ற சில சிபார்சுகள் தெரிவிக்கப்பட்டிருந்தன. குறிப்பாக தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்கள் பிரச்சினை, நீண்டகாலமா விசாரணைகள் இன்றி சிறையிலுள்ள தமிழ் இளைஞர்களின் விடுதலை மற்றும் காணாமல்போனவர்கள் விவகாரம் உட்பட பல விடயங்களில் ஆணைக்குழு பரிந்துரைகளை வெளியிட்டிருந்தது. இதனை நடைமுறைப்படுத்தவதற்கான குழுக்களும் அமைக்கப்பட்டன. இருந்த போதிலும், அதனை நடைமுறைப்படுத்துவதற்கான எந்தவிதமான நடவடிக்கையும் அரசாங்கத்தினால் பின்னர் எடுக்கப்படவில்லை.

இருந்த போதிலும் சர்வதேச சமூகத்தின் அதிகரித்த அழுத்தங்கள் காரணமாக இப்போது வெளியிடப்பட்டுள்ள இறுதி அறிக்கையின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதற்கு அல்லது நடைமுறைப்படுத்துவது போலக் காட்டிக்கொள்வதற்கு அரசாங்கம் முற்படலாம். அவ்வாறு நடைமுறைப்படுத்த முற்படுவது மேற்குலகின் அழுத்தங்களை மேலும் மென்மைப்படுத்துவதற்கு வழிவகக்கலாம். ஆனால், அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படக்கூடிய இவ்வாறான விசாரணை ஒன்று உண்மைகளைக் கண்டறிவதை நோக்கமானதாகக் கொண்டிருக்குமா அல்லது சர்வதே சமூகத்தின் அழுத்தங்களை மென்மைப்படுத்துவதை மட்டும்தான் இலக்காகக் கொண்டதாக இருக்குமா என்பதை நாம் சொல்லித்தான் நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டுமென்பதில்லை.


- சபரி
ஞாயிறு தினக்குரல்

No comments:

Post a Comment