Thursday, December 1, 2011

நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை அரசை உலக அரங்கில் பாதுகாக்குமா?

கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு தனது அறிக்கையை கடந்தவாரம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவிடம் கையளித்துள்ளது. 

388 பக்கஙகளை உள்ளடக்கியுள்ள இந்த அறிக்கையில் தொழில்நுட்ப மற்றும் வரைபடங்களும் இணைக்கப்பட்டுள்ளன. 5100 பேரிடமிருந்து பெறப்பட்ட எழுத்துமூல வாக்குமூலங்கள், ஆயிரம் பேரிடமிருந்து பெற்ற நேரடி வாக்குமூலங்கள், 52 பொது அமர்வுகள் மற்றும் 12 களவிஜயங்களை கொண்டும் தயாரிக்கப்பட்டதே இந்த நல்லிணக்க ஆணைக்குழு அறிக்கையாகும்.
முன்னாள் சட்டமா அதிபர் சீ.ஆர்.டி.சில்வா தலைமையில் முன்னாள் வெளிவிவகார அமைச்சசு செயலாளர் பலிகக்கார, முன்னாள் வெளிவிவகார அமைச்சின் சட்ட ஆலோசகர் கலாநிதி ரொஹான் பெரேரா, மூத்த சட்டத்தரணி பாயிக், திறைசேரி முன்னாள் உதவிச் செயலாளர் சந்திரபால் சண்முகம், பேராசிரியர் கருணாரட்னா கங்காவத்த, முன்னாள் மேல் நீதிமன்ற நீதிபதி மக்ஸ்வெல் பாராக்கிரம பரணகம, முன்னாள் பிரதி சட்டவரைஞர் மனோகரி ராமநாதன் ஆகியோர் உள்ளிட்ட 8 பேர் இந்த ஆணைக்குழுவில் இடம்பெற்றிருந்தனர்.

ஆணைக்குழுவின் அறிக்கை தொடர்பில் உள்நாட்டிலும், சர்வதேசத்திலும் பலத்த எதிர்பார்ப்பு நிலவியிருந்த நிலையில், அறிக்கை சகல மொழிகளிலும் தயார் செய்யப்பட்டதன் பின்னர் அதனை பாராளுமன்றத்தில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ சமர்ப்பித்து, நாட்டு மக்களுக்கு பகிரங்கப்படுத்துவாரென வெளிநாட்டு அமைச்சர் போராசிரியர் ஜீ.எல். பீர்pஸ் அறிவித்துள்ளார்.

ஜனாதிபதியிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ள நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையில் எவ்வாறான விடயங்கள் உள்ளடங்கியுள்ளன, என்ன சிபார்சுகள் முன்வைக்கப்பட்டுள்ளன என்ற விவகாரம் வெளியே வராதபோதும் தற்போதைய அரசாங்கத்திற்கு வெள்ளையடிக்கும் பததிரிகையாக வர்ணிக்கப்படும் தே ஐலண்ட், அதிகாரபூர்வ தரப்பிடனரிடமிருந்து பெற்றதாககூறி ஆணைக்குழுவின் அறிக்கையில் அடஙகியிருக்கும் சில விவகாரங்களை பகிரங்கப்படுத்தியுள்ளது.

இந்நிலையில் கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையிலிருந்து கசிந்துள்ள விடயங்களை சர்வதேசத்துடன் தொடர்புபடுத்தி ஆராய்வதே இந்தக்கட்டுரையின் நோக்கமாகும்.

பயங்கரவாத அமைப்பொன்று பலவந்தமாக தடுத்துவைக்கப்பட்டிருக்கும் பொதுமக்களை மீட்பதை நோக்கமாககொண்ட இராணுவ நடவடிக்கைகளை இடைநிறுத்துமாறு இறைமையுள்ள அரசாங்கத்தை கேட்கக்கூடாதென கூறும் ஆணைக்குழு, இத்தகைய நடவடிக்கைகளை முன்னெடுப்பதில் அரசாங்கம் தவறுசெய்யுமாயின் அவ்விடயமானது பயங்கரவாதிகள் கடுமையாக வன்முறைகளை மேற்கொள்வதற்கு வழிவகுக்குமென கூறுகிறது.

அத்துடன் பொதுமக்களின் இலக்குகளை திட்டமிட்டு இலக்கு வைப்பதையே சர்வதேச மனிதாபிமானச் சட்டம் தடைசெய்வதாகவும், ஆனால் பணயக்கைதிகளாக வைக்கப்பட்டிருப்போரை மீட்பதற்காக அரசாங்கம் முன்னெடுக்கும் யுத்த நடவடிக்கைகள் தொடர்பாக இந்த சர்வதேச மனிதாபிமானச்சட்டம் பிரயோகிக்கப்படுவதில்லை என்றும் யுத்த நடவடிக்கைகளை வாபஸ் பெற்றுக்கொள்வதானது நெருக்கடியை மேலும் வலுக்கச்செய்யுமெனவும் ஆணைக்குழு தெரிவிக்கிறது.

நல்லிணக்க ஆணைக்குழுவின் இந்த வாதமானது விடுதலைப் புலிகளிடமிருந்து மக்களை மீட்கவே  இராணுவ நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக விளக்குவதுடன், அதனை நியாயப்டுத்தியுமுள்ளது.

விடுதலைப் புலிகளுக்கெதிரான இராணுவ நடவடிக்கையை சர்வதேச சமூகம் விமர்சித்திராத நிலையில், இராணுவ நடவடிக்கைகளின் போது பொது மக்களின் இழப்புகள் குறித்தே சர்வதேசம் இலங்கை அரசாங்கத்தை குற்றம்சுமத்தியிருந்தது. எனவே சர்வதேசத்தின் அந்த குற்றச்சாட்டுக்களுக்கு பதிலாகவே மேற்சொன்ன வாதத்தை நல்லிணக்க ஆணைக்குழு முன்வைத்துள்ளது.

மேலும் பிரிட்டனின் சனல் 4 தொலைககாட்சியின் கொலைக்களங்கள் என்ற 59 நிமிட ஆவணப்படத்தை உறுதிப்படுத்த நாஸா நிபுணர்களின் சேவையை பெற்றுக்கொண்டதாக குறிப்பிடும் நல்லிணக்க ஆணைக்குழு, சனல் 4 தொலைககாட்சியின் அந்த ஆவணப்படத்தை முற்றுமுழுதாக நிராகரிக்கவும் செய்துள்ளது.

நோர்வேயின் ஏற்பாட்டில் மேற்கொள்ளப்பட்ட போர்நிறுத்த உடன்படிக்கையானது அரசாங்கத்திற்கும், அரசாங்கத்தைச் சாராதவர்களுக்கும் இடையேயான மோதல்களை முகாமைப்படுத்துவதற்கான முன்மாதிரியாக அமையாதென்றும் நல்லிணக்க ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

போதியளவு பாதுகாப்பு முன் ஏற்பாடுகளை செய்யாமல் அன்றைய அரசாங்கமானது புலிகளுடனான போர்நிறுத்த ஏற்பாட்டுக்கு இணக்கம் தெரிவித்ததாக கூறும் நல்லிணக்க ஆணைக்குழுவானது, அதனை விமர்சித்துள்ளது.

அதேநேரம் நல்லிணக்க ஆணைக்குழுவானது தாம் அறிக்கையில் முன்வைத்துள்ள பரிந்துரைகளை அப்படியே அமுல்படுத்தினால் இலங்கையின் உள்விவகாரங்கள் தொடர்பாக விசாரணைகளை மேற்கொள்வதற்கு சர்வதேச பொறிமுறையொன்று அவசியப்படாது எனவும் தெரிவித்துள்ளது.

அதேவேளை லங்கா நியூஸ் வெப் என்ற இணையத்தளம் மற்றுமொரு தகவலையும் தெரிவித்துள்ளது. நல்லிணக்க ஆணைக்குழு தமது அறிக்கையை யைளித்துவிட்டநிலையில், அதன் சிபார்சினடிப்படையில் மற்றுமொரு ஆணைக்குழுவை நியமிக்க மஹிந்த ராஜபக்ஸ திட்டம் வகுத்துள்ளதாக குறிப்பிட்டுள்ளது.

தென்னாபிரிக்காவில் இன, நிற ஒதுக்கல் முடிவுக்கு கொண்டுவரப்பட்டதன் பின்னர் அமைக்கப்பட்ட ஆணைக்குழுவைப் போன்று, சர்வதேச பிரதிநிதிகளை உள்ளடக்கிய ஆணைக்குழுவொன்றை நியமிக்க மஹிந்த ராஜபக்ஸ திட்டமிட்டுள்ளார். அணிசேரா நாடுகளிலிருந்தும் இதற்கு உறுப்பினர்கள் நியமிக்கப்படுவர்.

சர்வதேச சமூகமானது மஹிந்த ராஜபக்ஸ நியமித்த நல்லிணக்க ஆணைக்குழு தொடர்பில் நம்பிக்கையீனத்தை வெளிப்படுத்தியிருந்தமையால் அதனை போக்கிக்கொள்ளும் பொருட்டு, இவ்வாறு திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அவ்விணையத்தளம் மேலும் குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையில் சர்வதேசத்துடன் தொடர்புடையதாக விடயங்கள் இவ்வாறு அமைந்திருக்கையில், அறிக்கை ஜனாhதிபதியிடம் கையளிக்கப்பட்ட பின்னர் அதுகுறித்து பிரதிபலிப்பை வெளிப்படுத்தியிருப்பது பிரிட்டன் ஆகும்.

பிரிட்டன் வெளிவிவகார மற்றும் பொதுநலவாய அமைச்சர், அலிஸ்லெயர் பேர்ட் கடந்த திங்கட்கிழமை வெளியிட்ட அறிக்கையொன்றில், நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையை பகிரங்கப்படுத்துமாறு நாம் இலங்கை அரசாங்கத்திடம் கோரிக்கை விடுக்கிறோம். மோதல்களிலிருந்து இலங்கை மீளுவதற்கு இந்த அறிக்கை ஒரு முக்கியமான மைல்கல்லாக அமையுமென்று பலரும் நம்பிக்கை கொண்டுள்ளனர். தேசிய நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக்கூறும் கடப்பாட்டை நிரூபிப்பதற்கான இந்த வாய்ப்பை இலங்கை அரசாங்கம் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.

நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையை விரைவாக பகிரங்கப்படுத்துவதானது இந்த உறுதிப்பாட்டின் பிரதான அம்சமாகும். நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையின் அடிப்படையில் இலங்கை அரசாங்கம் நடவடிக்கைகளை மேற்கொள்ளுமென எதிர்பார்ப்பதாகவும் அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவுஸ்திரேலியா அரசாங்கமும் நல்லிணக்க ஆணைக்குழவின் அறிக்கை தொடர்பில் தாம் ஆர்வம் கொண்டுள்ளோம் என்பதை வெளிப்படுத்தும் நோக்குடன் கருத்துக்களை முன்வைத்துள்ளது. அந்நாட்டு வெளிவிவகார அமைச்சர் கெவின் ரூட், நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை பகிரங்கமானதன் பின்னர் அதுதொடர்பில் கருத்துரைக்கப்படுமென கூறியுள்ளதுடன், அவுஸ்திரேலியாவின் எதிர்பார்ப்பு குறித்து ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவிடமும், பேராசிரியர் பீரிஸிடமும் தாம் முன்கூட்டியே விளக்கமாக கூறிவிட்டதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

அதேவேளை முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேக்காவை யுத்தக் குற்றஙகளில் தொடர்புபட்டவராக வெளிப்படுத்த இலங்கை அரசாங்கம் சிலவேளைகளில் முயற்சிக்கலாமென்ற தகவல்கள் கசிந்திருந்நிலையில், அமெரிககாவின் எச்சரிக்கையும் வெளியாகியுள்ளது.

அதாவது சிறையில் அடைக்கப்பட்டுள்ள சரத் பொன்சேக்காவை விடுவிக்காவிடின் எதிர்வரும் மாதஙகளில் ஜெனீவாவில் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் அமர்வில் இலங்கைக்கு எதிராக செய்றபடவேண்டி ஏற்படும் என்று அமெரிககா எச்சரித்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

அமெரிகக ராஜதந்திரி ஒருவர் மூலமாக இலங்கை அமைச்சரொருவருக்கு அமெரிககாவின் இந்தத் தகவல் சொல்லப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
அதேவேளை சர்வதேச ஊடகங்களும் நல்லிணக்க ஆணைக்குழு குறித்த தகவல்களை வெளியிட்டுளளன. அமெரிககாவின் ஜொய்த் தொட்டம் என்பவர் டைம் சஞ்சீகையில் எழுதியுள்ள கட்டுரையொன்றில், பொறுப்புக்கூறும் தன்மை, அரசியல் விட்டுக்கொடுப்புகளே முடியுமென்பது இராணுவத் தீர்வின் மூலம் யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்ததற்கான உண்மையாக விலையாக இருக்கமுடியுமென்பது இலங்கை பெற்றுக்கொண்ட அனுபவத்தின் மூலம் வெளிப்படுகிறது.

புலிகளை போரில் வெற்றி கொண்டதன் மூலம் மஹிந்த ராஜபக்ஸவின் அரசாங்கம் புகழின் உச்சத்தில் இருக்கின்றபோதும், அரசியல் இணக்கப்பாட்டிற்கான எந்தவொரு முயற்சிகளையும் மேற்கொள்வதற்கான ஊக்கத்தை அது குறைத்துவிட்டுள்ளது. இலங்கையில் இடம்பெற்ற யுத்தத்தின் இறுதிக்கட்டத்தில் இடம்பெற்ற யுத்தக்குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக கற்றுக்கொண்ட படங்களுக்கான நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையில் வெளிச்சமிட்டுக் காட்டவில்லையெனவும் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையை சர்வதேச அழுத்தங்களிலிருந்து தப்பிப்பதற்காக பயன்படுத்திக்கொள்ள இலங்கை அரசாங்கம் உபாயங்களை வகுத்திருந்த நிலையில், சர்வதேச சமூகமானது நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையை முழுமையாக ஏற்றுக்கொள்ளுமா என்பது தொடர்பில் சந்தேகம் நிலவுவதுடன், நல்லிணக்க ஆணைக்குழு முன்மொழிந்துள்ள சிபார்சுகளைக்கூட அரசாங்கம் கவனத்திற்கொள்ளுமா என்பதிலும் கேள்விகள் உள்ளன.

இதனையே டைம் சஞ்சீகையின் கட்டுரையும் சுட்டிக்காட்டுகிறது. எனவே அடுத்துவரும் காலங்கள் இலங்கை அரசாங்கத்தைப் பொருத்தவரையில் முக்கியத்துவமிக்கதாக அமையுமென எதிர்பார்க்கலாம். அந்தவகையில் சர்வதேச சமூகமும் அரசாங்கத்தின் நகர்வுகளை உன்னிப்பாக கவனித்துக்கொண்டிருக்கிறது என்பது மட்டும் தெளிவாக புலப்படுகிறது.

- ஏ.ஏ.மொஹமட் அன்ஸிர்.
  ஞாயிறு தினக்குரல் 

No comments:

Post a Comment