Sunday, December 11, 2011

போர்வெற்றி மனேபாவத்துடன் பேச்சுக்களை அணுகும் அரசு

அரசுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையில் கடந்த சுமார் ஒருவருட காலமாக இடம்பெற்றுவரும் பேச்சுக்களில் உடன்பாடு எதுவும் ஏற்படப்போவதில்லை என்பது இப்போது தெளிவாகத் தெரியத் தொடங்கியுள்ளது. கடந்த சனிக்கிழமை இடம்பெற்ற பேச்சுக்களில் முரண்பாடுகள் உருவாகி, பேச்சுக்கள் முறிவடையும் நிலைக்குச் சென்றமையும், செவ்வாய் கிழமை இடம்பெற்ற பேச்சுக்களின் போது கூட்டமைப்பின் யோசனைகளை அரச தரப்பு திட்டவட்டமாக நிராகரித்திருப்பதும் பேச்சுக்களில் இனிமேலும் நம்பிக்கை வைக்க முடியாது என்ற உணர்வைத் தமிழர்களுக்கு ஏற்படுத்தியிருக்கின்றது. 

போரில் வெற்றி பெற்ற மனோபாவத்துடனேயே கூட்டமைப்புடனான பேச்சுக்களையும் அரசாங்கம் அணுகுவதால், தமிழர்களின் அடிப்படை அபிலாஷைகளைக் கூட அதனால் ஏற்றுக்கொள்ள முடியாதிருக்கின்றது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் பேச்சுக்களை நடத்துவது என்பதோ, அதிகாரப் பரவலாக்கலை தமிழர்களுக்கு வழங்குவது என்பதோ அரசாங்கத்தின் விருப்பத்துக்கு உட்பட்ட விடயங்களல்ல. அரசாங்கத்தின் நிகழ்ச்சிநிரலிலும் அதற்கு இடம் இருக்கவில்லை. இருந்த போதிலும் இந்தியாவின் நிர்ப்பந்தத்தினாலும், மேற்குநாடுகளிலிருந்து எழும் போர்க்குற்றங்களின் கனதியை மழுங்கடிப்பதற்காகவும் பேச்சுவார்த்தை என்ற உபாயத்தை வகுத்துக்கொள்ள வேண்டிய தேவை அரசுக்கு இருந்தது. இருந்தபோதிலும், இதன்மூலமாக தமிழர்களுக்கு எதனையும் கொடுத்துவிடக் கூடாது என்பதில் அரசாங்கம் ஆரம்பம் முதல் அவதானமாகவே இருந்துவருகின்றது.

சனிக்கிழமை இடம்பெற்ற பேச்சுக்கள் முறியடையும் கட்டத்துக்குச் சென்றிருந்த போதிலும், செவ்வாய்கிழமை பேச்சுக்களுக்கு அரசாங்கம் வந்தமைக்கு சர்வதேச ரீதியாக உருவாகியிருக்கும் நிர்ப்பந்தங்கள்தான் காரணம் என்பதைப் புரிந்துகொள்வது கடினமானதல்ல. அத்துடன், பாராளுமன்றத் தெரிவுக்குழுவுக்கான தமது பெயர்களை கூட்டமைப்பு கையளித்தால் மட்டுமே அதனுடனான பேச்சுக்களைத் தொடரமுடியும் என சனிக்கிழமை உறுதியாகத் தெரிவித்த அரச தரப்பு பிரதிநிதிகள், அதனை சத்தம் போடாமல் கைவிட்டுவிட்டு பேச்சுவார்த்தை மேசைக்கு செவ்வாய்கிழமை வந்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது. சர்வதேச ரீதியான அழுத்தங்கள்தான் இதற்குக் காரணம் என்பதுதான் உண்மை.

கூட்டமைப்பினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளில் மூன்று விடயங்கள் தொடர்பில் தம்மால் உடன்படமுடியாதிருப்பதாக அரச தரப்பினர் இதன்போது தெரிவித்தனர். அதாவது, வடக்கு கிழக்கு இணைப்பு, மாகாண சபைகளுக்கான பொலிஸ் அதிகாரம், மற்றும் காணி அதிகாரத்தை மாகாண சபைகளுக்கு வழங்குதல் ஆகிய விடயங்களில் தம்மால் இணங்கமுடியாதிருப்பதாக அரச தரப்பு தெரிவித்தது. இருந்தபோதிலும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைப் பொறுத்தவரையில் இந்த அதிகாரங்கள் முக்கயமானவை என்பதால் அதனை விட்டுக்கொடுக்க அவர்கள் தயாராக இருக்கவில்லை.

இந்த மூன்று விடயங்களையும் தாம் வலியுறுத்துவதற்கான காரணம் என்ன என்பதையும், பண்டா - செல்வா உடன்படிக்கை முதல் அரசியலமைப்புக்கான 13 வது திருத்தச் சட்டம் வரையில் இந்த மூன்று விடயங்களும் உள்ளடக்கப்பட்டுள்ளமையைச் சுட்டிக்காட்டிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், இவற்றை முன்னைய அசாங்கங்களும் பிரதான அரசியல் கட்சிகளும் ஏற்கனவே ஏற்றுக்கொண்டிருந்தன என்பதையும் குறிப்பிட்டுக்காட்டினார். இதனை அரசாங்கம் ஏற்கமறுப்பதற்கான காரணம் என்ன என்பதை தெரியப்படுத்த வேண்டும் என்ற அவரது கோரிக்கைக்கு அரச தரப்பிலிருந்து பதிலளிக்கப்படவில்லை.

இந்த நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக அடுத்த சுற்றுப்பேச்சுக்களில் ஆராய்வதாக இரு தரப்பிலும் இணக்கம் காணப்பட்ட நிலையில் பேச்சுக்கள் எதிர்வரும் 14 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. ஏதிர்வரும் 14 மற்றும் 15 ஆம் திகதிகளில் இடம்பெறும் பேச்சுக்களின் போது இது தொடர்பாக ஆராயப்பட்டு இறுதி முடிவு ஒன்றைக் காண்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளும் எனத் தெரிகின்றது. இந்த இரு தினங்களிலும் இடம்பெறும் பேச்சுக்களில் இணக்கப்பாடு ஒன்று காணப்படாவிட்டால் பேச்சுக்கள் அடுத்த வருடத்துக்கும் நீடிப்பது தவிர்க்க முடியாததாகிவிடலாம்.

இந்த இரு தினங்களிலும் இடம்பெறும் பேச்சுக்களில் என்ன பேசப்படப்போகின்றது என்பதில் அரசியல் மற்றும் இராஜதந்திர வட்டாரங்களின் கவனம் திரும்பியிருக்கின்றது. சுமாதான முயற்சிகள் எந்தத் திசையில் செல்லப்போகின்றது என்பதைக் காட்டுவதாக அந்தப் பேச்சுக்கள் அமைந்திருக்கும் என்பதால் அவை முக்கியத்துவம் பெறுகின்றன.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைப் பொறுத்தவரையில் அதிகாரப் பரவலாக்கலைப் பொறுத்தவரையில் அவர்கள் மூன்று யோசனைகளும் முக்கியமானவை. விட்டுக்கொடுக்க முடியாதவை. இந்த மூன்று விடயங்களையும் உள்ளடக்காத எந்த ஒரு தீர்வும் தமிழர்களுடைய அபிலாஷைகளைப் பொறுத்தவரையில் அர்த்தமுடையதாக இருக்கப்போவதில்லை.

அரசியலமைப்புக்கான 13 வது திருத்தத்தின் மூலமாக வடக்கு – கிழக்கு மாகாணங்கள் இணைக்கப்பட்டபோதிலும், பின்னர் நீதிமன்றத் தீர்ப்பு ஒன்றின் மூலம் அவை பிரிக்கப்பட்டன. தற்போது கிழக்கு மாகாணத்தின் முதலமைச்சராக தமிழர் ஒருவர் இருக்கின்ற போதிலும், எதிர்காலத்தில் நடைபெறக்கூடிய தேர்தல் ஒன்றில் கிழக்கு மாகாண முதலமைச்சராக தமிழர் ஒருவர் வருவதற்கான சாத்தியக்கூறுகள் குறைவடைந்துள்ளன. காரணம் கிழக்கு மாகாணத்தில் தமிழர்களின் சனத்தொகை கணிசமானளவு குறைவடைந்திருக்கின்றது. கிழக்கு மாகாணம் தனியாக இருக்கும் பட்சத்தில் தமிழர்கள் அங்கு சிறுபான்மையினராக்கப்படுவது தவிர்க்க முடியாததாகவே இருக்கும் என்பதைத்தான் அங்கு தற்போது இடம்பெறும் நிகழ்வுகள் உணர்த்துகின்றன. 


இரண்டு மாகாணங்களும் இணைக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை கூட்டமைப்பு வலியுறுத்துவதற்கு பிரதான காரணமாக இருப்பதும் இதுதான்.

அதேவேளையில், மாகாண சபைகளுக்கான பொலிஸ் மற்றும் காணி அதிகாரங்கள் அரசியலமைப்பில் காணப்படுகின்ற போதிலும் அதனை அரசாங்கம் வழங்காமல் இருக்கின்றது. அரசியலமைப்புக்கான 13 வது திருத்தத்தில் இவை உள்ளடக்கப்பட்டுள்ளன. அதிகாரப் பரவலாக்கலைப் பொறுத்தவரையில் இந்த இரண்டு அதிகாரங்களையும் தவிர்த்துவிட்டால் அதிகாரப் பரவலாக்கல் என்பதிலேயே அர்த்தமிருக்கப்போவதில்லை. காணி அதிகாரத்தைப் பெறாத வரையில் திட்டமிட்ட குடியேற்றங்களைத் தவிர்க்க முடியாது. அதேபோல, பொலிஸ் அதிகாரம் இல்லாமல் சட்டம் ஒழுங்கை மாகாண சபையால் கையில் எடுக்க முடியாது. மாகாணங்களின் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டும் அதிகாரம் மத்திய அரசிடம் இருப்பது மாண சபைகளைப் பலவீனப்படுத்துவதாகவும், மக்களின் விருப்பத்துக்கு முரணான விடயங்கள் திணிக்கப்படுவதற்கு வழிவகுப்பதாகவுமே அமையும். ஆக, இவற்றை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு விட்டுக்கொடுக்கப்போவதில்லை.

அதேவேளையில், அரசாங்கத்தைப் பொறுத்தவரையில் அது போரில் வெற்றிபெற்ற மனோபாவத்துடனேயே தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடனான பேச்சுக்களையும் அணுகுகின்றது. அதாவது, விடுதலைப் பலிகளை அழித்தொழித்துவிட்டோம். இப்போது நாம் தருவதைப் பெற்றுக்கொண்டு சென்றுவிடுங்கள் என்ற தொனி இது தொடர்பாகக் கருத்துவெளியிடும் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளிடம் கணப்படுகின்றது.

இது தொடர்பாக கருத்துவெளியிட்ட அரசாங்கத்தின் மூத்த அதிகாரி ஒருவர், ''கூட்டமைப்பின் கோரிக்கை நியாயமற்றதும், யதர்த்தமற்றதுமாதகும்" எனத் தெரிவித்திருப்பதுடன், "போர் இடம்பெற்ற போது அரசாங்கம் சமரசத்துக்குப் போகவில்லை. போரில் ஈடுபட்டு அதில் அரசாங்கம் வெற்றியும் பெற்றது. இதனை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு புரிந்துகொள்ள வேண்டும்" எனக் குறிப்பிட்டிருந்தார். (ஆதாரம்: சிலோன் ரூடே டிசெம்பர்8) அவரது இந்தக் கருத்தின் அர்த்தத்தைப் பரிந்துகொள்வது கடினமானதல்ல.

அதாவது போரில் வெற்றிபெற்ற மனோபாவத்துடன்தான் அரசாங்கம் பேச்சுக்களை அணுகுகின்றது என்பதுடன், போரில் தோல்வியடைந்த மனோபாவத்துடன் கூட்டமைப்பு அடங்கிப்போய்விட வேண்டும் என்ற எதிர்பார்ப்பும் அரச தரப்பிடம் தாரளமாகவே காணப்படுகின்றது. அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல மற்றும் அரச தரப்பில் பேச்சுக்களில் பங்குகொண்ட சஜின் வாஸ் குணவர்த்தன, பேராசிரியர் ராஜிவ விஜயசிங்க ஆகியோர் தெரிவித்துவரும் கருத்துக்களிலும் இந்தத் தொனியைக் காணக்கூடியதாக இருக்கின்றது.

அத்துடன், சிங்கள மக்களின் ஆதரவில் தங்கியுள்ள அரசாங்கம்  தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கேட்பதைப்போல இணைப்பு, பொலிஸ், காணி அதிகாரங்களை   எல்லாம் இலகுவாகத் தந்துவிடும் என்பதும் எதிர்பார்க்கக்கூடியதல்ல. கூட்டமைப்பைப் பொறுத்தவரையில் இந்த அரசாங்கம் தமிழர்களின் நியாயபூர்வமான, சட்ட ரீதியான உரிமைகளை வழங்குவதற்குத் தயாராக இல்லை என்பதை சர்வதேச சமூகத்துக்கு வெளிச்சம் போட்டுக்காட்டுவதற்கு இந்தப் பேச்சுக்களைப் பயன்படுத்திக்கொள்ளலாம். அதனைவிட கூட்டமைப்பு இதன் மூலமாக எதனையாவது பெற்றுக்கொள்ளுமா என்பது கேள்விக்குறியாகத்தான் இருக்கும்.

இந்த நிலையில்தான் கூட்டமைப்புடனான பேச்சுக்களை நிறுத்திக்கொண்டு பாராளுமன்றத் தெரிவுக்குழுவுக்குச் செல்வதற்கு அரசாங்கம் முற்பட்டது. கூட்டமைப்புடனான பேச்சுக்களின் மூலமாக காலத்தைக் கடத்துவதைவிட பாராளுமன்றத் தெரிவுக்குழுவின் மூலமாக காலத்தைக் கடத்துவது இலகுவானது என அரசாங்கம் கணக்குப் போடலாம். ஆனால்,  சர்வதேச அழுத்தங்களும் அதிகமாக உள்ளதால் கூட்டமைப்புடனான பேச்சுக்களை அவசரமாக முறித்துக்கொள்ளும் நிலையில் அரசாங்கம் இல்லை.  

மார்ச் மாதம் நடைபெறவள்ள ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தில் போர்க் குற்றம் தொடர்பில் இலங்கை பெரும் நெருக்கடிகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என மேற்கு நாடுகள் கொழும்புக்கு சமிஞ்ஞைகளைக் காட்டிவருகின்றன. முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவின் விடுதலை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடனான பேச்சுக்கள் என்பனவற்றை மேற்குலகம் எதிர்பார்ப்பதாகணவும் தெரிகின்றது. இந்தப் பின்னணியில்தான் பொன்சேகாவின் குடும்பத்தினர் கோரிக்கை விடுத்தால் அவருக்கு மன்னிப்பளிப்பது தொடர்பாக ஆராயத் தயாராக இருப்பதாக ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவும், அமைச்சர் ராவூப் ஹக்கீமும் இப்போது அறிவித்திருக்கின்றார்கள். கூட்டமைப்புடன் முரண்பாடுகள் ஏற்பட்டாலும் பேச்சுக்களைக் கொண்டு செல்ல வேண்டும் என அரசு நினைப்பதற்கும் அதுதான் காரணம்!

இந்த நிலையில் இன்னும் சில மாதகாலத்துக்கு கூட்டமைப்புடனான பேச்சுக்களை இழுத்துச் செல்வதும், பாராளுமன்றத் தெரிவுக்குழுவின் மூலமாக தேசிய நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கான முயற்சிகளை மேற்கொள்வதாக சர்வதேசத்துக்குக் காட்டிக்கொள்வதும்தான் அரசின் நிகழ்ச்சி நிரலில் உள்ள விடயங்கள்!

- சபரி
  ஞாயிறு தினக்குரல் (11-12-2011)

No comments:

Post a Comment