Monday, December 5, 2011

சர்வதேசத்தின்; நலன்சார்; போட்டியில் இலங்கைத் தீவின் முக்கியக்கியத்துவம்

சீனாவின் பொருளாதார போட்டி, இந்தியாவின் பாதுகாப்பு போட்டி, அமெரிக்காவின் வல்லரசுப் போட்டி,  என இலங்கையை மையப் படுத்திய சர்வதேச அரசியல் போட்டிகள், தமிழர் தரப்பிற்கு  சாதகமான அரசியற் சூழலையையே  தக்க வைத்துள்ளது.

இலங்கைத் தீவில் தமது நலன்களை நிலை நிறுத்துவதற்கான கருவியாக தமிழ் அரசியலை சர்வதேச சமூகம் எவ்வாறாகப் பயன்படுத்தும்; என்பதனைக் கடந்த கட்டுரையில் தெரிவித்திருந்தேன்.  ஏற்கனவே எழுதியிருந்த கட்டுரைகளில் இலங்கையில் தமது நலன்களை நிலைநிறுத்துவதற்காக முனைகின்ற சர்வதேச நாடுகளை, அமெரிக்கா தலைமையிலான மேற்குஇஇந்தியாஇ சீனா என முத் தரப்பாக பிரித்துக் காட்டியிருந்ததுடன்இ அந்தத் தரப்புக்கள் தத்தம் நலன்களை பாதுகாத்துக் கொள்வதற்கும், முன்நகர்த்துவதற்கும் எவ்வாறான உத்திகளைக் கையாள்வர் என்பதனையும் விளக்கியிருந்தேன்.

இலங்கையில் இடம்பெற்ற சமாதான முயற்சிகள் தொடர்பாக, நோர்வே வெளிவிவகார அமைச்சால் நடத்தப்பட்ட நிகழ்வொன்றில் எழுப்பப்பட்ட கேள்வியொன்றுக்குப் பதிலளித்த அமெரிக்காவின் முன்னாள் துணை இராஜாங்கச் செயலாளர் ரிச்சட் ஆமிடேச், இதுவரை காலமும் இராஜதந்திர வட்டங்களால் மூடிமறைக்கப்பட்ட உண்மையொன்றை வெளிப்படுத்தியுள்ளார். அதாவது இலங்கைத் தீவில் தற்போது சர்வதேச சமூகத்தினுடைய அக்கறை அதிகரித்து வருகின்றது எனவும், அதற்கு வல்லாதிக்க சக்திகளின் போட்டித் தன்மையே காரணமெனவும் அவர் சுட்டிக்காட்டியிருந்தார்.
 
இவ்விடயம் பற்றி மேலும்  கருத்துத் தெரிவித்த ரிச்சட் ஆமிடேச்இ இந்தியா ஏற்கனவே இலங்கை மீது நிரந்தரமான அக்கறையினையே செலுத்தி வந்திருக்கிறது. இது வெளிப்படையாகத் தெரிந்த விடயமும் கூட. ஆனால், தற்போதைய நிலையில் இலங்கைத் தீவை மையப்படுத்தியதாக போட்டித் தன்மையொன்று காணப்படுகின்றது. இலங்கையை மையப்படுத்திய இந்தியா, சீனா, அமெரிக்கா போன்ற சர்வதேச சக்திகளின் போட்டியானது, இலங்கையினை முன் வரிசையின் மையத்தில் நிறுத்தியுள்ளது எனவும் அவர் தெரிவித்திருந்தார்.
 
ரிச்சட் ஆமிடேச் வலியுறுத்திய மேற்கூறிய கருத்தினை இங்கு மீள நினைவு படுத்துவதானது, ஏற்கனவே என்னால் எழுதப்பட்ட பத்திகளிலும், அதற்கு முன்பான சந்தர்ப்பங்களில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியால் வலியுறுத்தப்பட்ட கருத்தினை மீள நிரூபிப்பதாகவே அமைகின்றது.
எனவே இலங்கைத் தீவினுள் தமது நலன்களின் அடிப்படையில் தலையிடுகின்ற மூன்று சர்வதேசத் தரப்புக்களினதும் நிகழ்ச்சி நிரல் பற்றி ஆராய்வதாக இவ் வார பத்தி அமைகின்றது. முதலாவதாக இலங்கைத் தீவினுள் தலையீட்டைக் கொண்டுள்ள சர்வதேசத் தரப்புக்களுக்கு இத் தீவு எவ்வாறான பூகோள முக்கியத்துவம் உடையதாகக் காணப்படுகின்றது என்பதை இவ்விடத்தில் ஆராய்வது அவசியமாகும்.
 
உலகின் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இந்து சமுத்திரத்தின்  மத்தியில், புவியல் ரீதியாக முக்கியத்துவம் மிக்க ஓர் இடத்தில் இலங்கைத் தீவு அமைந்துள்ளமையானது, அதற்கு பூகோள அரசியலில் அதி முக்கிய வகிபாகத்தை வழங்குகின்றது.
 
சர்வதேச கடல்வழிப்பாதைகளில்; இந்து சமுத்திரமானது மிக முக்கியத்துவமானதாக உள்ளது. இதனை பின்வரும் உதாரணங்கள் வாயிலாக நாம் புரிந்துகொள்ள முடியும். உலகின் எண்ணை விநியோகக் கப்பல்களில் மூன்றில் இரண்டு பங்கானவையும், கொள்கலன் கப்பல் சேவைகளில் ஐம்பது வீதமானவையும், இந்து சமுத்திரத்தின் வாயிலாகவே பயணிக்கின்றன. மூன்றிலொரு பங்கான பேரளவுக் கப்பல்களும் இந்து சமுத்திரத்தின் வாயிலாகவே போக்குவரத்தில் ஈடுபடுகின்றன. இவ்வாறாக முக்கியத்துவம் வாய்ந்த பல்வேறுபட்ட கடல்வழிப் போக்குவரத்துக்கள் இந்து சமுத்திரத்தில் முக்கியத்துவம் மிக்க இலங்கைத் தீவினை மையப்படுத்தியே இடம்பெறுகின்றன. இவற்றை விட உலகில் நாற்பது சதவீமான கனிய எண்ணை உற்பத்தியும் இந்து சமுத்திரத்திலேயே நடைபெறுகின்றது.
 
பொருளாதர கடல்வழிப் போக்குவரத்து என்பதற்கு அப்பால், இந்து சமுத்திரத்தின் கேந்திர முக்கியத்துவம் என்பது பாதுகாப்பு விவகாரங்கள் என்பதன் அடிப்படையிலும் பார்க்கப்படவேண்டிய விடயமாகும். இந்து சமுத்திரத்தில் யார் ஆதிக்கம் செலுத்துகின்றார்களோ அவர்களே ஆசியாவிலும் ஆதிக்கம் செலுத்தத்தக்கதாக அமையும் என பத்தொன்பதாம் நூற்றாண்டின் அமெரிக்காவின் தலைசிறந்த பூகோள அரசியல் நிபுணராகக் கருதப்படுகின்ற ரியர் அட்மிரல் அல்பிரட் தயர் மாகன் வலியுறுத்தியுள்ளார். ஆகவே, உலகின்;  தலைவிதியானது இந்து சமுத்திரத்திலேயே தீர்மானிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. அடுத்து இப் பத்தியில் இலங்கை மீது தமது நலன்களை நோக்காகக் கொண்டு தலையிடுகின்ற நாடுகளின் நலன்சார் போட்டிகள் குறித்து தனித் தனியே விளங்கிக் கொள்ளவேண்டியுள்ளது.
 
சீனாவின் நலன்சார் போட்டி  
சீனாவின் பொருளாதாரத்தில் இந்து சமுத்திரம் முக்கிய வகிபாகத்தைக் கொண்டுள்ளது. சீனாவின்  பெருளாதரத்திற்கு வேண்டிய பெரும்பாலன அளவு  கனிய எண்ணை போன்ற சக்தி வளங்கள் இந்து சமுத்திரத்தின் வாயிலாகவே எடுத்துச் செல்லப்படுகின்றன. மீண்டும் சீனாவில்; உற்பத்தி செய்யப்பட்ட முடிவுப் பொருட்களை சர்வதேச சந்தைக்கு அனுப்புவதற்கும் இந்து சமுத்திரமே கடல்வழிப் பாதையாகவுள்ளது. இவ்வாறாகப் பொருளாதார ரீதியில் முக்கியத்துவமுடைய கடல்வழி மார்க்கத்தின் பாதுகாப்பினை உறுதிப்படுத்தவேண்டியது  சீனாவின் தற்போதைய இருப்பினை நிலைகொள்ளச் செய்வதற்கும், எதிர்கால வளர்ச்சிக்கும் அடிப்படையானது.
 
இதனடிப்படையில் தனது நாட்டின் கடல்வழிப் போக்குவரத்திற்கு முக்கியமானதென இனங்கானப்பட்ட இடங்களில் சீனா அதிக அக்கறையைச் செலுத்தி வருகின்றது. இவ்வாறாக அக்கறைக்கு உரிய இடங்கள் “முத்துக்கள்” எனவும், அவற்றை ஒருங்கிணைத்து தமது கட்டுப்பாடுகளின் கீழ் கொண்டுவரும் திட்டத்தினை “முத்துமாலை”திட்டம் எனவும் வர்ணிக்கப்பட்டு வருகின்றது. சீனாவின் இம் முத்துமாலைத் திட்டத்தின் கீழ், தென் சீனக் கடல் மலாக்கா நீரினை வழியாக, இந்து சமுத்திர கடல் வழியைத் தாண்டி அரேபியக் கடல், பாரசிகக்குடா வரையான கடல் வழிப்பாதைகள் உள்ளடக்கப்பட்டு முத்துமாலைத்திட்டம்   முன்னெடுக்கப்படுகின்றது. 

சீனாவின் “முத்துமாலை” திட்டத்தில் முத்துக்களாக கைனான் தீவு, வியடனாமின் மேற்குக் கரையை அண்மித்த வுடி தீவு, மியன்மாரில் சிட்வே எனும் இடம்இ பங்களாதேசின் சிட்டகோங், மாலைதீவில்  மரா ஒ தீவு,  இலங்கையில் அம்பாந்தோட்டை,  பாக்கிஸ்தானில் குவார்டா போன்ற இடங்களை நாம் குறிப்பிட்டுக் கூறமுடியும். இந்த இடங்களிளை மையமாகக் கொண்ட நாடுகளில் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த உறவுகளைக் கட்டியெழுப்புவதுடன் தனது ஆதிக்கத்தினை நிலை நிறுத்தத் தக்கவகையிலும் தனது திறன்களை சீனா அதிகரித்து வருகின்றது.
 
இந்தியாவின் நலன்சார்போட்டி 

சீனா போன்று இந்தியாவும் உலகத்தில் வளர்ந்து வருகின்ற ஓர் வல்லரசாகவே கருதப்படுகின்றது. தன்னுடைய அயல் பிராந்தியத்தில் இருக்கின்ற நாடுகள் தனது ஆதிக்கத்தின் கீழ் மட்டுமே இருக்கவேண்டும் என்ற தேவை இந்தியாவுக்கு உள்ளது. இதற்கு இந்தியாவின் பாதுகாப்பு நோக்கமே காரணமாகும். இந்த வகையில் தனது அயல் பிராந்தியங்களில் வேறு எந்தவொரு வல்லரசும் இருப்பினைக் கொண்டிருப்பதோ அல்லது செல்வாக்கினைக் கொண்டிருப்பதோ, தனது பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக அமையும் என இந்தியா கருதுகின்றது.
 
இவ்வாறான காரணங்களோடு, இப் பத்தியில் முன்னர் குறிப்பிடப்பட்ட சீனாவின் “முத்துக்களாக”க் கருதப்படுகின்ற இடங்களை எடுத்துக்கொண்டால், அவை இந்தியாவை சுற்றிவளைப்பதாக இருப்பது கவனத்தில் கொள்ளப்பட வேண்டிய விடயமாகும். இந்தச் சூழ்நிலையில் தனது “முத்துமாலை” வியூகம் இந்தியாவை இலக்கு வைத்ததல்ல எனச் சீனா கூறிக்கொண்டாலும், இந்தியாவைச் சுற்றியிருக்கும் “முத்துக்கள்”; இந்தியாவை பலவீனப்படுத்துவதற்காகவே அமையும் என இந்திய கொள்கை வகுப்பாளர்களால் பரவலாக நோக்கப்படுகின்றது.
 
சீனாவின் “முத்துமாலை”த் திட்டத்தினால் தற்போது இந்தியாவுக்கு ஆபத்து இல்லாவிட்டாலும், அது பின்னரான காலப்பகுதியில் இந்தியாவின் சுயபாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாகவே அமையும் என இந்திய கொள்கை வகுப்பாளர்களால் கருதப்படுகின்றது. இலங்கையில் வளர்ந்து வரும் சீன ஆதிக்கம் தொடர்பில் இந்தியாவிற்கு குறிப்பிட்டதோர் பிரச்சினையுண்டு. 

தனது வட மேற்கு, வடக்கு, வட கிழக்கு எல்லைகளில் இந்தியாவிற்கு அதிகளவு பாதுகாப்பு அச்சுறுத்தல் இருப்பதால் தமது மிக முக்கியமான தந்திரோபாயம் சார்ந்த வளங்களை தென்னிந்தியாவில் நிலைப்படுத்திவருகின்றது. இந்நிலையில்; இலங்கையில் சீன ஆதிக்கம் வளர்வதானது தென் இந்தியாவில் உள்ள இவ் வளங்களுக்கு பாதுகாப்பு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் என இந்திய பாதுகாப்பு ஆய்வாளர்கள் கருதுகின்றனர். 1980 காலப் பகுதியில் இந்தியாவின் நலன்கள் பாதிக்கப்படும் வகையில் இலங்கைத்தீவு அமரிக்காவுடன் நெருக்கமான தொடர்பினை ஏற்படுத்த முயன்றபோது அதனைக் கட்டுப்படுத்துவதற்காக தமிழ் ஆயுதப் போராட்ட அமைப்புக்களைப் பலப்படுத்தி இந்தியா நொருக்கடிகளை ஏற்படுத்தியமை இங்கு நோக்கத்தக்கது.
 
எனவே தான்இ தனது ஆதிக்கத்தின் கீழ் இருக்கவேண்டிய நாடுகளில் வேறு சக்திகள் ஆதிக்கம் செலுத்தக்கூடாது என்பதுவே இந்தியாவின் தேவையாகும்.
 

அமெரிக்காவின் நலன்சார் போட்டி 
இரண்டாம் உலக மகாயுத்தத்திற்கு பின்னரான காலப் பகுதியில், சோவியத் யூனியனையும் அமெரிக்காவையும் மையமாகக் கொண்டு உலகம் இரு துருவமாக இருந்த கால கட்டத்திலும், இந்து சமுத்திரக் கடல்பரப்பில் அமெரிக்காவே ஆதிக்கம் செலுத்தியது. பனிப்போருக்குப் பின்னரான காலப்பகுதியில் அமெரிக்கா தனிப் பெரும் வல்லரசாக உருவெடுத்தபோது இந்நிலை மேலும் உறுதிப்படுத்தப்பட்டது. அண்மைக்காலமாக அமெரிக்காவின் இந்த முழுமையான ஆதிக்கப்பிடிக்கு சவால் விடுக்கும் வகையில் தாமும் வல்லரசாகும் கனவுகளோடு பல சக்திகள்(குறிப்பாக சீனா, இந்தியா ) வெளிக் கிளம்பியிருக்கும் காலமிது.   இதற்கான வாய்ப்புக்களும் உள்ளதாகவே தோன்றுகின்றது.
 
தற்போதைய வளர்ச்சி வேகத்தினை சீனா தக்கவைக்குமாயின்  2035-2050 காலப்பகுதியில் அமெரிக்காவை விஞ்சிய மிகப் பெரும் பெருளாதார பலம் கொண்ட நாடாக சீனா அமையலாம் என ஆய்வாளர்களால் மதிப்பிடப்படுகின்றது.
 
அமெரிக்கா தன்னுடைய வல்லரசு ஆதிக்கத்தினை உலக ஒழுங்கில் நீடிப்பதற்கும், ஏற்கனவே இருக்கின்ற நலன்களை இலங்கைத் தீவில் பாதுகாப்பதற்கும் ஏற்றவாறு இன்று செயற்படவேண்டியுள்ளது. அமெரிக்கா தனது தனியாதிக்கத்தினை தக்கவைப்பது என்ற இடத்திலேயே அமெரிக்காவுக்கும் சீனா போன்ற நாடுகளுக்கும் இடையில் போட்டித் தன்மை ஏற்படுகின்றது.
 
அண்மைக்காலம் (விசேடமாக 2005 இறுதி காலப்பகுதி) வரைக்கும் இலங்கைத் தீவானது அமெரிக்காவின் ஆதிக்கம் செலுத்தப்படத் தக்க நாடாகவும், அமெரிக்காவின் நலன்களைப் பாதுகாத்துக்கொள்ளத் தக்கதாகவுமே நிலைமைகளைக் கொண்டிருந்தது. அதேவேளை அமெரிக்காவின் நலன்கள் பாதுகாக்கப்படத்தக்க வகையில் மாற்றங்களுக்கும் இலங்கை இசைந்து கொடுத்திருந்தது. எனினும் 2005 இறுதிக்காலப் பகுதிக்குப் பின்பான நிலையில் (மகிந்த ராஜபக்ச பதவியேற்றதன் பின்), இலங்கைத் தீவில் சீனாவின் ஆதிக்கம் அதிகமாகச் செலுத்தப்படுவதற்கு இடமளிக்கப்படும் நிலையுள்ளது. மறுபுறம், இதேகாலப்பகுதியில் இலங்கைத் தீவின் சிங்கள தேசத்தவர்கள் மத்தியில் அமெரிக்கா தலைமையிலான மேற்குலக நாடுகள் தமது எதிரிகள் என்ற கருத்தும் வலுப்பெற்றுவருகின்றது.
 
இலங்கையை மையப்படுத்திய 
சர்வதேச அரசியல் போட்டிகள் 

தற்போதைய சர்வதேச அரசியல் ஒழுங்கில் இந்தச் சக்திகளினது போட்டியானது நேரடி யுத்தமாக வருவதற்கான சந்தர்ப்பங்கள் குறைவு. ஆகவே தாம் ஆதிக்கம் செலுத்த விரும்பும் நடுகளின் உள்ளுர் நிலைமைகளை (அரசியல் தரப்புக்கள் உட்பட) தமக்கு ஏற்றவாறு பயன்படுத்தி இம் மோதல் நடைபெறுகின்றது. இவைகள் தான் இலங்கைத் தீவை மையப்படுத்திய சர்வதேச அரசியலும் போட்டியுமாகும். 
 
எனவே தான் இந்தப் போட்டியில் இந்தியாவும், அமெரிக்கா தலைமையிலான மேற்கும் தமிழ் அரசியலை தமது நலன்களை நோக்காகக் கொண்டு சிறந்த ஓர் கருவியாக பாவிக்கும் நிலையுள்ளது. அமெரிக்காவைப் பொறுத்தவரையில், அது உலகில் இப்போதைக்கு இருக்கும் வல்லரசு என்ற வகையில், தன்னிடம் இருந்து விலகிச் செல்லும் இலங்கைத் தீவை தனது நலன்சார்ந்ததாக கொண்டுசெல்வதற்கு முயற்சிக்கின்றது. இதற்கு தமிழ் அரசியல் உட்பட பல அழுத்தங்களை கருவிகளாகப் பிரயோகிக்கும் நிலையிலும் அது உள்ளது. இந்தியா இலங்கை மீது தமது நலன்களை காப்பதற்கு வழியாக பல கருவிகள் தன்வசம் கொண்டிராத நிலையில் அது தமிழ் அரசியல் என்ற ஒன்றையே சிறந்த கருவியாகப் பிரயோகிக்கக் கூடியதாக உள்ளது.
 
இவ்வாறான ஒரு சூழ்நிலையில் தமிழ் அரசியலுக்குக் கிடைக்கின்ற முக்கியத்துவத்தினை சரிவர விளங்கிக் கொண்டு எமது மக்களின் அரசியலை முன்னெடுக்கவேண்டும். இதனை அனைத்துத் தமிழ் மக்களும் புரிந்துகொள்ள வேண்டும். இதுவே தமிழ் அரசியல் தலைவர்களால் எம் மக்கள் தவறாக வழிநடத்திச் செல்லப்படுவதைத் தடுப்பதற்கான வழியாகும். எம்முடைய தேசத்தின் வெற்றி எம்முடைய அரசியல் கொள்கை உறுதிப்பாட்டிலேயே தங்கியுள்ளது.

- கஜேந்திரகுமார் பொன்னம்பலம்

No comments:

Post a Comment