Saturday, December 10, 2011

கருவா? ரணிலா?

கட்சித் தலைமைப் பதவிக்கான போட்டியில் தானும் களத்தில் குதிக்கப்போவதாக ஐக்கிய தேசியக் கட்சியின் இணைப் பிரதித் தலைவர் கரு ஜயசூரிய அறிவித்ததைத் தொடர்ந்து கட்சியின் தலைமைப் பதவிக்கான போட்டி சூடு பிடித்திருக்கின்றது.

கட்சியின் தலைமைப் பதவிக்குப் போட்டியிடுமாறு கட்சி அதிருப்தியாளர் குழுவின் தலைவரான சஜித் பிரேமதாச முன்வைத்த கோரிக்கையை தான் ஏற்றுக்கொண்டு களத்தில் குதிப்பதாக கரு ஜயசூரிய திங்கட்கிழமை வெளியிட்ட அறிக்கை உட்கட்சி மோதல்களை மீண்டும் கொதி நிலைக்குக் கொண்டுவந்திருக்கின்றது.

தலைமைப் பதவிக்கு மீண்டும் போட்டியிடும் தமது விருப்பத்தை ஏற்கனவே தெரிவித்திருந்த ரணில் விக்கிரமசிங்கவுக்கு கருவின் இந்த அறிவிப்பு நிச்சயமாக அதிர்ச்சியளிப்பதாகவே அமைந்திருக்கும். கருவின் அறிவிப்பைத் தொடர்ந்து ஐ.தே.க.வின் உயர் குழுவான செயற்குழு இரண்டு முகாம்களாகப் பிளவுபட்டுள்ளமை தெளிவாகத் தெரிகின்றது. இரண்டு தரப்பினரும் தமக்கு ஆதரவைத் திரட்டும் முயற்சிகளில் தீவிரமாக இறங்கியிருக்கின்றார்கள்.

கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்களான கட்சிப் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க, தேசிய அமைப்பாளர் ரவி கருணாநாயக்க, எதிர்க் கட்சிகளின் பிரதம கொரடா ஜோன் அமரதுங்க, மற்றும் ஜோசெப்  மைக்கல் பெரேரா போன்றவர்கள் ரணில் விக்கிரமசிங்கவின் பின்பாக அணிவகுத்து நிற்கின்றார்கள். கரு ஜயசூரியவின் பின்பாக பிரேமதாசவின் அணி நிற்கின்றது. இந்த நிலையில் கட்சி இரண்டு முகாம்களாகப் பிளவுபட்டுப்போயிருப்பது தெளிவாகத் தெரிகின்றது.

இலங்கையின் பலம்வாய்ந்த பழம்பெரும் கட்சி என வர்ணிக்கப்படும் ஐ.தே.க.வின் நீண்டகால வரலாற்றில் இவ்வாறான பிளவு ஒன்று ஏற்பட்டிருப்பது இதுதான் முதன்முறையல்ல. நீண்டகாலத்தின் பின்னர் இவ்வாறான பாரிய நெருக்கடி ஒன்றை ஐ.தே.க. சந்திக்கின்றது. இந்த நெருக்கடியின் இறுதியில் கட்சி இரண்டாகப் பிளவுபடுவது தவிர்க்க முடியாமற்போகலாம் என அரசியல் ஆய்வாளர்கள் சிலர் இப்போதே கருத்துக்களை வெளியிட்டுவருகின்றார்கள்.
ரணில் ஆர்ப்பாட்டம் ஒன்றில்...

கட்சின் தலைவரும், பிரதித் தலைவரும் தலைமைப் பதவிக்குப் போட்டியிடப்போவதாக அறிவித்திருப்பதால் தலைமைப் பதவிக்கான தேர்தல் தவிர்க்க முடியாததாகவே இருக்கப்போகின்றது. இதற்கு முன்னர் 1994 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தல் எதிர்கொள்ளப்பட்டபோதும் இதேபோன்ற ஒரு போட்டியை ஐ.தே.க. சந்தித்தது. அப்போது காமினி திஸாநாயக்கவும் ரணில் விக்கிரமசிங்கவும் தலைமைப் பதவிக்காகப் போட்டியிட்டார்கள். அதில் காமினி திஸாநாயக்கதான் வெற்றிபெற்று கட்சித் தலைமைப் பதவியைக் கைப்பற்றிக்கொண்டதுடன், அவ்வருடம் இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தலிலும் ஐ.தே.க. வேட்பாளராக நிறுத்தப்பட்டார்.

ஆனால், ஜனாதிபதித் தேர்தல் பிரச்சாரத்தின்போது இடம்பெற்ற தற்கொலைக் குண்டுத் தாக்குதல் ஒன்றில் காமினி திஸாநாயக்க கொல்லப்பட்டதையடுத்து கட்சித் தலைமை தானாகவே ரணில் விக்கிரமசிங்கவிடம் வந்துசேர்ந்தது. அப்போது காமினி திஸாநாயக்கவிடமிருந்து உருவாகியதைப் போன்றதொரு நெருக்கடியைத்தான் இபப்போதும் ரணில் விக்கிரமசிங்க எதிர்கொள்கின்றார்.

ஐ.தே.க.வின் யாப்பின்படி கட்சியின் செயற்குழு உறுப்பினர்களும், கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களும் கட்சித் தலைவரைத் தெரிவு செய்வதற்கான தேர்தலில் வாக்களிக்க முடியும். அத்துடன் டிசெம்பர் 31 ஆம் திகதிக்கு முன்னதாக இந்தத் தேர்தல் நடத்தப்பட்டு பிறக்கப்போகும் புதுவருடத்தில் புதிய தலைவர் பதவியேற்றுக்கொள்ள வேண்டும். இருந்தபோதிலும், கட்சியின் செயற்குழுவில் காணப்படும் வெற்றிடங்களை நிரப்பிய பின்னரே இந்தத் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்பதால் தேர்தல் தாமதமாகின்றது. செயற்குழு உறுப்பினர்களை நியமிக்கும் விவகாரத்துக்கு 10 நாட்களுக்குள் தீர்வைக்காண்பதாக இவ்வார முற்பகுதியில் இடம்பெற்ற செயற்குழுக் கூட்டத்தில் வைத்து ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
கரு ஜயசூரஜயவின் இணையத்தள அங்குரார்ப்பண நிகழ்வில்

கட்சி யாப்பின்படி கட்சிச் செயற்குழு உறுப்பினர்களின் எண்ணிக்கை 92 எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி இன்னும் சுமார் 20 உறுப்பினர்களை செயற்குழுவுக்கு நியமிக்க வேண்டிய தேவை உள்ளது. உள்ளுராட்சி மன்றங்களின் பிரதிநிதிகளாக 9 உறுப்பினர்கள் நியமிக்கப்படவுள்ளனர். ஏனையவர்கள் கட்சியின் தொழிற்சங்கப் பிரநிதிகளாக இருப்பார்கள். இந்த உறுப்பினர்களை உடனடியாக நியமிக்குமாறு கரு ஜயசூரியவும், சஜித் பிரேமதாசவும் கட்சித் தலைவரைக் கேட்டுக்கொண்டிருப்பதாகத் தெரிகின்றது. இந்த நியமனங்கள் ஒருவார காலப்பகுதியில் இடம்பெறும் எனத் தெரிகின்றது. அதன்பின்னர் புதிய உறுப்பினர்களையும் உள்ளடக்கிய செயற்குழுக் கூட்டத்தில் கட்சித் தலைவர் உட்பட கட்சியின் புதிய நிர்வாகிகள் தெரிவு செய்யப்படுவார்கள்.

இந்தத் தெரிவுகள் டிசெம்பர் 20 ஆம் திகதி நடைபெறும் என கட்சி வட்டாரங்களிலிருந்து கசிந்துள்ள சில தகவல்கள் தெரிவிக்கின்ற போதிலும் அச்செய்தி உறுதிப்படுத்தப்படவில்லை.

கட்சியின் செயற்குழுவைப் பொறுத்தவரையில் அதற்கான உறுப்பினர்களை நியமிப்பதில் கட்சித் தலைவர் தனது அதிகாரத்தைப் பயன்படுத்த முடியும். அந்த வகையில் செயற்குழுவில் ரணில் விக்கிரமசிங்கவுக்கே ஆதரவு அதிகமாக இருப்பதாக ஒரு தரப்பினர் குறிப்பிடுகின்றார்கள். ஆனால், தம்மால் வெற்றிபெற முடியும் என்ற நம்பிக்கையுடனேயே அதிருப்தியாளர்களும் காய்நகர்த்துவதைக் காணக்கூடியதாக இருக்கின்றது!

இதேவேளையில், ரணில் விக்கிரமசிங்கவின் ஆதரவாளர்கள் மேற்கொள்ளும் மற்றொரு காய்நகர்த்தல் அவர்கள் கரு ஜயசூரியவின் வருகையையிட்டு அஞ்சுகின்றார்களா என்ற கேள்விiயுயும் எழுப்புவதாக உள்ளது. கட்சியின் முக்கியமான பதவிகளுக்குப் போட்டியிடுபவர்களுக்கு இருக்க வேண்டிய குறைந்த பட்ச தகைமை ஒன்றை அறிமுகம் செய்ய வேண்டும் என வலியுறுத்தும் அவர்கள் அதற்கான யோசனைகளையும் தயாரித்து வைத்துள்ளார்கள். ரணில் விக்கிரமசிங்கவின் தலைமைத்துவத்துக்கு அச்சுறுத்தலாக உருவாகியிருக்கும் கரு ஜயசூரியவை இலக்குவைத்துத்தான் இந்த குறைந்த பட்ச தகமைக்கான யோசனைகள் தயாரிக்கப்பட்டிருப்பதாகத் தெரிகின்றது.
தனது இணையத் தளத்தை கரு வெளியிட்ட போது...

இருந்தபோதிலும் கரு மற்றும் சஜித்தின் ஆதரவாளர்கள் இந்த குறைந்த பட்ச தகைமையை திட்டவட்டமாக நிராகரித்துள்ளார்கள். உட்கட்டசி ஜனநாயகத்தைப் பாதிக்கும் வகையில் அது அமைந்திருக்கும் என்பதுதான் அவர்களின் நிலைப்பாடு!

இந்த யோசனைகள் கட்சியால் இன்னும் ஏற்றுக்கொள்ளப்படவில்லை. ஆனால், கருவின் வருகை ரணில் ஆதரவாளர்களிடையே அச்ச நிலை ஒன்றை உருவாக்கியிருப்பதை இது வெளிப்படுத்துகின்றது.

கருஜயசூரிய தலைமைப் பதவிக்குப் போட்டியிடும் நிலையில், கட்சியின் முக்கிய பதவிகள் அனைத்தையும் கைப்பற்றும் வகையில் அதிருப்தியாளர் குழு தமது வேட்பாளர்களை நிறுத்துவதற்குத் திட்டமிட்டுள்ளது. கட்சியின் பிரதித் தலைவர் பதவிக்கு சஜித் பிரேமதாச போட்டியிடுவார். சேயலாளர் பதவிக்கு இம்தியாஸ் பாக்கீர் மாக்கார் போட்டியிடுவார் என அதிருப்தியாளர்களிடமிருந்து கசியும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

எது எப்படியிருந்தாலும், டிசெம்பர் மாதம்  ஐ.தே.க.வைப் பொறுத்தவரையில் முக்கியமானதாகவே இருக்கப்போகின்றது. நாட்டின் பிரதான எதிர்க்கட்சியின் எதிர்காலம் எவ்வாறானதாக அமையப்போகின்றது என்பதை இந்த மாதத்தில் அறிந்துகொள்ள முடியும். உயிர்த்துடிப்புடன் ஜனநாயகம் செயற்படுவதற்கு பலமான எதிர்க்கட்சி அவசியம். ஊட்கட்சி மோதல்களால் அவ்வாறு பலமான ஒரு எதிர்க்கட்சியாகச் செயற்பட முடியாத நிலையிலேயே ஐ.தே.க. நீண்ட காலமாக இருந்துள்ளது. ஆந்த நிலை முடிவுக்குக் கொண்டுவரப்படுவது நாட்டுக்கும் அவசியம்.!

No comments:

Post a Comment