மனோ கணேசன் முன்வைத்த இரண்டு கோரிக்கைகளையும் தாம் ஏற்றுக்கொள்வதாக எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க உறுதியளித்திருந்த போதிலும், கடந்த செவ்வாய்கிழமை கொழும்பில் ஐ.தே.க. நடத்திய ஆர்ப்பாட்டத்தில் சரத் பொன்சேகாவை விடுதலை செய் என்ற கோஷமே மேலோங்கியிருந்தது. வருடக்கணக்காக சிறை வைக்கப்பட்டுள்ள தமிழ்க் கைதிகளின் நிலை தொடர்பாகவோ அல்லது, இனநெருக்கடிக்கு விரைவாகத் தீர்வு காணப்பட வேண்டும் என்றோ முழக்கங்களை ஆர்ப்பாட்டப் பேரணியில் கேட்கக்கூடியதாக இருக்கவில்லை.
அரசாங்கத்துக்கு எதிராக நீண்ட காலத்தின் பின்னர் தமது ஆதரவாளர்களைத் திரட்டி ஆர்ப்பாட்டப் பேரணி ஒன்றை பிரதான எதிர்க்கட்சியான ஐ.தே.க. கொழும்பில் நடத்திக்காட்டியிருநதாலும், இது எந்தளவுக்கு வெற்றிபெற்றது என்பதில் இரண்டு கருத்துக்களே உள்ளன.
மூன்று விடயங்களே இந்த ஆர்ப்பாட்டத்தில் ஐ.தே.க.வினால் பிரதானமாக முன்னிலைப்படுத்தப்பட்டன. சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ள முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா விடுவிக்கப்படவேண்டும்;. மக்களுக்கு நிவாரணம் எதனையும் வழங்காத வரவு செலவுத் திட்டத்தை எதிர்ப்பது. மற்றும் நட்டத்தில் இயங்கும் தனியார் நிறுவனங்களை அரசாங்கம் பொறுப்பேற்பதை எதிர்ப்பது என்பனவே அவை!
இதேவேளையில் இந்தப் பேரணியில் பங்குகொள்வதற்காக மனோ கணேசன் தலைமையிலான ஜனநாயக மக்கள் முன்னணி முன்வைத்த நிபந்தனைகளும் ஐ.தே.க. தலைமைக்கு சங்கடத்தைக்கொடுப்பதாகவே இருந்தது என்பதையிட்டு கடந்த வாரமும் பார்த்தோம். சரத் பொன்சேகாவை மட்டுமன்றி - சிறையிலுள்ள தமிழ் அரசியல் கைதிகள் அனைவரும் விடுவிக்கப்பட வேண்டும். தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடனான பேச்சுக்கள் துரிதப்படுத்தப்பட்டு இனப்பிரச்சினைக்கு விரைவில் தீர்வு காணப்பட வேண்டும் என்பனவும் இந்தப் போராட்டத்தில் உள்ளடக்கப்பட வேண்டும் என்பதுதான் மனோ கணேசனின் கோரிக்கையாக இருந்தது.
இதனை ஐ.தே.க. தலைமை ஏற்றுக்கொண்டால் தமது கட்சியும் பேரணியில் பங்குகொள்ளும் என மனே கணேசனும், நவ சமசமாஜக் கட்சித் தலைவர் கலாநிதி விக்கிரமபாகு கருணாரட்ணவும் அறிவித்திருந்தார்கள்.
அனைத்துக் கட்சிகளையும் இணைப்பது ஐ.தே.க. தலைமைக்குத் தேவையாக இருந்தாலும், சிங்களத் தேசியவாதிகளின் ஆதரவுத் தளத்தையும் தக்கவைத்துக்கொள்ள வேண்டும் என்பதால் இந்தக் கோரிக்கைகளை ஏற்க ஐ.தே.க. தலைமை முதலில் தயங்கியது.
பின்னர் கடந்த ஞாயிறுக்கிழமை மனோ கணேசனுக்கும் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இடையில் நடைபெற்ற நேரடிச் சந்திப்பையடுத்து ஐ.தே.க. தலைமை இந்தக் கோரிக்கைகளை ஏற்றுக்கொண்டது. கோரிக்கை முன்வைக்கப்பட்டு நான்கு நாட்களின் பின்னரே ஐ.தே.க. தலைமை அதனை ஏற்றுக்கொண்டது என்பது வேண்டா வெறுப்பாக ஓம் என்று சொன்னாதாகவே கருதப்பட வேண்டும்.
ஐ.தே.க.வைப் பொறுத்தவரையில் தமது செல்வாக்கைக் காட்டுவதற்கு மட்டும்தான் தமிழர்கள் தேவை. ஆனால், அவர்களுடைய பிரச்சினைகளுக்கான போராட்டம் ஒன்றுக்கு அவர்கள் தயாராகவில்லை. தமிழர்களை இவ்விதம் கருவேப்பிலைகளாக ஐ.தே.க. பயன்படுத்துவதை தொடர்ந்தும் அனுமதிக்க முடியாது என்ற நிலையிலேயே மனே கணேசன் தனது நிலைப்பாட்டில் உறுதியாக இருந்தார்.
ஆனால், உறுதியளிக்கப்பட்டதுபோல ஆர்ப்பாட்டப் பேரணியில் இந்தக் கோரிக்கைகளை பெருமளவுக்கு முன்னெடுக்கப்படவில்லை. பொன்சேகாவின் விடுதலை என்ற கோஷத்தையே பெரிதாகக் கேட்கக்கூடியதாக இருந்தது. இருந்த போதிலும் மனோ கணேசனின் கட்சியைச் சேர்ந்த பலரும் இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்குகொண்டிருந்தார்கள்.
ஐ.தே.க.வைப் பொறுத்தவரையில் கட்சியின் செல்வாக்கை உயர்த்திக் காட்டுவதற்கு இதுபோன்ற ஆர்ப்பாட்டங்கள் எதனையாவது நடத்தி மக்களைக் கவரவேண்டிய ஒரு தேவை அதற்கு இருக்கின்றது. அதற்காகக் கிடைத்த இந்த சந்தர்ப்பமாகத்தான் இந்த 3 விடயங்களையும் பயன்படுத்திக்கொள்வதற்கு கட்சித் தலைமை முற்பட்டது. தாம் தனித்து இதனை நடத்துவதைவிட ஏனைய கட்சிகளுடன் இணைந்து நடத்துவதற்கு அவர்கள் முற்பட்ட போதிலும், அதற்கான போதிய ஆதரவை அவர்களால் பெற முடியவில்லை.
குறிப்பாக ஜே.வி.பி. இதில் பங்குகொள்ள மறுத்துவிட்டது. சரத் பொன்சேகா தலைமையிலான ஜனநாய தேசிய முன்னணியும் இதில் கலந்துகொள்ளவில்லை. சரத் பொன்சேகா விவகாரத்தை ஐ.தே.க. தமது அரசியல் நலன்களுக்குப் பயன்படுத்துகின்றார்கள் என்ற ஒரு அதிருப்தி இவர்களிடம் காணப்படுகின்றது. பொன்சேகாவின் கட்சியே கலந்துகொள்ளாத நிலையில் அவரை விடுவிக்குமாறு ஐ.தே.க. நடத்திய போராட்டம் சோபிக்கவில்லை என்றுதான் சொல்ல வேண்டும்.
கடந்த ஜனாதிபதித் தேர்தலில் காணப்பட்டது போல எதிர்க்கட்சிகளிடையே பொதுவான இணக்கப்பாடு ஒன்றை ஏற்படுத்தி அரசுக்கு எதிரான போராட்டங்களை முன்னெடுப்பதற்கு ஐ.தே.க. தலைமை விரும்புவதுபோலத் தெரிகின்றது. இருந்த போதிலும் ஐ.தே.க. என்பதை விட்டுக்கொடுத்து பொது முன்னணி ஒன்றை உருவாக்க ரணில் விக்கிரமசிங்க தயாராகவில்லை. கட்சிக்குள் காணப்படும் நெருக்கடிகள் இவ்வாறான பொது அணி ஒன்றை உருவாக்குவதற்கு அவருக்குத் தடையாக இருக்கின்றது.
அரசுக்கு எதிராக ஐ.தே.க. முன்னெடுத்த இந்தப் போராட்டம் தொடரும் என ஐ.தே.க. தலைவர்கள் அறிவித்திருக்கின்ற போதிலும், இது எந்த வகையிலும் அரசுக்கு அச்சுறுத்தலாக அமையப்போவதில்லை என்பதையும் உணரக்கூடியதாக இருக்கின்றது. காரணம். போதியளவு எதிர்க்கட்சிகளின் ஆதரவைப் பெற்றுக்கொள்வதில் ஐ.தே.க. தவறிவிட்டது. அத்துடன், பொதுவான வேலைத் திட்டம் ஒன்றுக்குள் எதிர்க்கட்சிகளைக் கொண்டுவருவதற்கான முயற்சிகள் எதுவும் இடம்பெறுவதாகவும் தெரியவில்லை. இந்தப் பின்னணியில் அரசாங்கம் இதனை ஒரு பொருட்டாக மதிக்கும் என எதிர்பார்க்கவும் முடியாது.
இருந்தபோதிலும், இப்போதுதான் முதல் தடவையாக ஐ.தே.க. தலைவர் அரசுக்கு எதிராக பாராளுமன்றத்திலும் சீறிப் பாய்ந்திருக்கின்றார். பாராளுமன்றத்தில் அவர் வெளியிடவிருந்த அறிக்கை ஒன்று தடுக்கப்பட்டதையடுத்து தனது கழுத்துப் பட்டியை களற்றி தனது எதிhப்பை அவர் வெளிப்படுத்தினார். பாராளுமன்ற சம்பிரதாயங்களில் உடை முக்கியமானதாகும். அ;த வகையில் கழுத்துப்பட்டியை அவர் களற்றியமை பாராளுமன்ற சம்பிரதாயங்களுக்கு முரணானது எனவும், அதனால் ரணில் விக்கிரமசிங்கவை பாராளுமன்றத்திலிருந்து இடைநிறுத்துவதற்கு ஆலோசிக்கப்பட்டதாகவும் கூட செய்திகள் வெளியாகியிருந்தன.
ரணிலின்இந்தப் போராட்டங்கள் கட்சித் தலைமையை அவர் பாதுகாப்பதற்கு உதவலாம். ஆனால், அரசுக்கு இது ஒரு அச்சுறுத்தலாக இருக்கப்போவதில்லை என்பது மட்டும் உண்மை. ரணிருககும் இப்போதைக்குத் தேவையாக இருப்பது அது மட்டும்தான்!
No comments:
Post a Comment