0 தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் பேச்சுக்களை தொடர்ந்தும் நடத்துவது அர்த்தமற்றது: அமைச்சரவைப் பேச்சாளர் கெஹலிய ரட்புக்வெல
0 தொடர்ந்தும் பேசுவதில் ஏதாவது அர்த்தமுள்ளதா என்பதை ஆராய வேண்டிய நிலையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு: சுரேஷ் பிரேமச்சந்திரன்
அரசுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையிலான முறுகல் நிலை தீவிரமடைந்திருக்கும் நிலையில், ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் புதன்கிழமை இரவு சபாநாயகர் வழங்கிய இராப்போசன வைபவத்தில் சந்தித்தப் பேசியிருக்கின்றார். இருந்த போதிலும் இந்த சந்திப்பில் பேச்சுவார்த்தைகளில் ஏற்பட்டுள்ள முறுகல் நிலை தொடர்பில் இருவரும் பேசிக்கொள்ளவில்லை எனத் தெரிகின்றது.
அரசு - கூட்டமைப்பு பேச்சுக்களில் இறுக்க நிலை ஏற்படும் நேரங்களில் மகிந்தவுக்கும் சம்பந்தனுக்கும் இடையிலான சந்திப்புக்கள் சகஜ நிலையை ஏற்படுத்துவதற்கு வழிவகுத்திருக்கின்ற போதிலும், இப்போது அவ்வாறான ஒரு நிலை காணப்பட்டதாகத் தெரியவில்லை. பேச்சுக்களை புதிய வருடத்திலும் முன்னகர்த்த முடியுமா என்பதைக் கேள்விக்குறியாக்கும் நகர்வுகள்தான் இப்போது தீவிமடைந்திருக்கின்றது.
2011 ஆம் ஆண்டு முடிவுக்கு வரும் நிலையில் இவ்வருடம் ஜனவரி 10 ஆம் திகதி முதல் இடம்பெற்றுவந்த பேச்சுக்கள் எந்தப் பலனையும் தராத ஒரு நிலையே இப்போது காணப்படுகின்றது. இந்த நிலையில், அரச தரப்பிலிருந்து கடந்த ஒரு வார காலப்பகுதியில் வெளியாகியிருக்கும் நான்கு அறிவிப்புக்கள் தமிழ்த் தரப்பினருக்கு இருக்கக்கூடிய சொற்ப நம்பிக்கையையும் இல்லாமல் செய்வதாகவே அமைந்திருக்கின்றது.
1. பாராளுமன்றத்தில் இடம்பெற்ற வரவு செலவுத் திட்ட விவாதத்தின் இறுதிநாள் விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ, வடக்கு கிழக்கிலிருந்து இராணுவ முகாம்கள் எதுவும் மூடப்படாது எனத் தெரிவித்திருக்கின்றார். அந்தப் பகுதிகளில் இராணுவம் தொடர்ந்தும் இருக்கும் என்ற அரசாங்கத்தின் நிலைப்பாட்டையும் அவர் வெளிப்படுத்தினார்.
2. செவ்வாய்கிழமை தினசரிப் பத்திகைகளின் பிரதம ஆசிரியர்களுடனான சந்திப்பின்போது பொலிஸ் மற்றும் காணி அதிகாரங்களை மாகாண சபைகளுக்குக் கொடுக்க முடியாது என ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ கூறியிருக்கின்றார்.
3. ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும், பொருளாதார அபிவிருத்தி அமைச்சருமான பசில் ராஜபக்ஷவும் பத்திரிகை ஆசிரியர்களுடனான சந்திப்பு ஒன்றில் காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்களைக் கொடுக்க முடியாது என்பதை திட்டவட்டமாகக் கூறியிருக்கின்றார்.
4. அமைச்சரவையின் பேச்சாளர் கெஹலிய ரம்புக்வெலயும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் பேசுவது அர்த்தமற்றது. அவர்கள் விடுதலைப் புலிகளைப் போல கோரிக்கைகளை முன்வைப்பதைக் கைவிட வேண்டும் எனக் கூறியிருக்கின்றார். அதாவது அரசாங்கம் கொடுப்பதைப் பெற்றுக்கொண்டு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு போய்விட வேண்டும் என்பதே அரசாங்கத்தின் நிலைப்பாடு என்பதைத்தான் அமைச்சரவைப் பேச்சாளரின் இந்தக் கருத்து புலப்படுத்துகின்றது.
இந்தக் கருத்துக்கள் சாதாரணமானவர்களால் தெரிவிக்கப்பட்டவையல்ல. ஜனாதிபதியினாலும் சக்தி வாய்ந்த அமைச்சர்களாலும் தெரிவிக்கப்பட்டவை. அதாவது அரசாங்கத்தின் கருத்துக்களாகவே இவை வெளிப்பட்டுள்ளன.
பேச்சுவார்த்தை மேசையில் தீர்மானிக்கப்பட வேண்டிய விடயங்களை பொது மேடைகளில் அச்சுறுத்தல் விடுக்கும் பாணியில் ஜனாதிபதியும் முக்கிய அமைச்சர்களும் அறிவித்துவருவது போரில் வெற்றிபெற்ற மனோபாவத்துடன் அவர்கள் பேச்சுக்களையும் அணுகுகின்றார்கள் என்பதைத்தான் உறுதிப்படுத்துகின்றது. முள்ளிவாய்க்காலில் முடிவுக்கு வந்த போருடன் தமிழ் மக்களுடைய அரசியல் கோரிக்கைகளும் குழிதோண்டிப் புதைக்கப்பட்டுவிட்டன என்பதுதான் அரசாங்கத்தின் மனோபாவமாக இருக்கின்றது. உரிமைகள் பற்றிப் பேசமுடியாது என்பதுதான் அரசின் நிலைப்பாடாக வெளிப்படுகின்றது.
கூட்டமைப்புடனான பேச்சுக்கள் ஆரம்பமாகி, இன்று சுமார் ஒருவருடம் பூர்தியாகும் நிலையில், இந்தப் பேச்சுக்களை அரச தரப்பு எவ்வாறு நோக்குகின்றது என்பதையும், பேச்சுக்களை புதுவருடத்தில் அரசு எவ்வாறு அணுகப்போகின்றது என்பதையும் இந்த அறிவிப்புக்கள் வெளிப்படுத்தியிருக்கின்றது. டிசெம்பர் மாதத்தில் இடம்பெற்ற பேச்சுக்களில் எந்தவிதமான முன்னேற்றமும் ஏற்படாத ஒரு நிலையில், அரச தரப்பிலிருந்து வெளிப்படும் இவ்வாறான கருத்துக்கள் புதுவருடம் தொடர்பில் தமிழ் மக்கள் நம்பிக்கை வைக்க முடியாத ஒரு நிலையைத்தான் காட்டுகின்றத.
அரச தரப்பிலிருந்து இவ்வாறு நம்பிக்கையீனத்தைக் கொடுக்கக்கூடிய கருத்துக்கள் வெளிவரும் நிலையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எவ்வாறான அணுகுமுறையைக் கையாளப்போகின்றது என்பதுதான் இன்று எழும் பிரதான கேள்வியாகும்.
இது தொடர்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் சுரேஷ் பிரேமச்சந்திரனிடம் தொடர்புகொண்டு கேட்ட போது, ~~இவ்விடயம் தொடர்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் சந்தித்து தீர்க்கமான ஒரு முடிவை எடுக்க வேண்டியிருக்கின்றது|| எனத் தெரிவித்தார். அரசுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையிலான அடுத்த சுற்றுப் பேச்சுக்கள் ஜனவரி 17,18,19 ஆம் திகதிகளில் நடைபெறும் என ஏற்கனவே இணக்கம் காணப்பட்டுள்ளதால், அதற்கு முன்னதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்றக் குழு கூடி தீர்க்கமான முடிவுகளை எடுக்கவேண்டியிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
அடுத்த கட்டப்பேச்சுக்களுக்கான திகதி நிர்ணயிக்கப்பட்டுள்ள நிலையில்தான் ஜனாதிபதி மற்றும் முக்கிய அமைச்சர்கள் பேச்சுவார்த்தைகளை எவ்வாறு நோக்குகின்றார்கள் என்பதை உணர்த்தும் அறிவிப்பக்கள் வெளியாகியுள்ளன. இந்த நிலையில் அடுத்த கட்டச் சந்திப்புக்களில் கலந்துகொள்வதா இல்லையா என்பதையிட்டும், இல்லையெனில் அதில் கலந்துகொண்டு தமது கருத்துக்களைத் தெரிவிப்பதா என்பதையிட்டு ஆராயவேண்டியிருப்பதாகவும் பிரேமச்சந்திரன் தெரிவித்தார். அதனால் அதற்கு முன்னதாக கூட்டமைப்பு உறுப்பினர்கள் சந்தித்து இது தொடர்பில் தீர்க்கமான முடிவுகளை எடுக்க வேண்டியிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
அரச கூட்டமைப்புப் பேச்சுக்களைப் பொறுத்தவரையில் காணி அதிகாரம் தொடர்பான விடயமே தற்போது ஆராயப்பட்டுவரும் விடயமாக உள்ளது. டிசெம்பர் மாதத்தில் இடம்பெற்ற ஐந்து சுற்றுப்பேச்சுக்களின் போதும் இது தொடர்பாக ஆராயப்பட்ட பொதிலும் அது தொடர்பான இணக்கப்பாடு எதுவும் ஏற்படவில்லை. மாகாண சபைகளுக்கான காணி அதிகாரத்தைப் பொறுத்தவரையில் தற்போதைய 13 வது திருத்தத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளதைவிட அதிகளவு அதிகாரங்கள் தேவை என்பதை கூட்டமைப்பு வலியுறுத்துவதாகத் தெரிகின்றது.
அரச தரப்பு இவ்விடயத்தை ஏற்றுக்கொள்வதற்குத் தயாராக இருக்கின்ற போதிலும், தற்போதைய அரசியலமைப்பில் மாற்றங்கள் எதனையும் செய்வதற்குத் தயாராக இல்லாத ஒரு நிலைமைதான் காணப்படுகின்றது. அதாவது அரசியலமைப்பில் எந்தவிதாமான மாற்றங்களையும் செய்யாமல் இந்தப் பிரச்சினைக்குத் தீர்வுகாணப்பட வேண்டும் என்பதுதபான் அரசின் நிலைப்பாடாக வெளிப்பட்டது. அதாவது அரசியலமைப்பில் காணி தொடர்பாக இருக்கக்கூடிய சொற்றொடர்களை மாற்றாமல் இதனைச் செய்ய வேண்டும் என்ற ஒரு கருத்து காணப்பட்டது.
இருந்தபோதிலும், ஜனாதிபதியும், பொருளாதார அபிவிருத்தி அமைச்சரும் வெளிப்படுத்தியிருக்கும் விடயங்கள் அரச தரப்பு அடுத்த கட்டப்பேச்சுக்களை எவ்வாறு முன்னெடுக்கப்பேகின்றது என்பதற்கான ஒரு முன்னறிவித்தலாகவே உள்ளது. அதாவது அரசாங்கத்தைப் பொறுத்தவரையில் இரு விடயங்களை அது எதிர்பார்க்கின்றது.
1. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்றத் தெரிவுக்குழுவில் பங்குபற்ற வேண்டும்.
2. இணைப்பு, மாகாணங்களுக்கான காணி மற்றும், பொலிஸ் அதிகாரங்களை கூட்டமைப்பு கைவிட வேண்டும்.
இதற்கான நிகழ்ச்சி நிரலுக்குள் கூட்டமைப்பையும் கொண்டுவருவதுதான் அரசாங்கத்திட்டம். ஆதற்காகத்தான் அச்சுறுத்தும் பாணியிலான கருத்துக்களை அரசு முன்வைத்து வருகின்றது. ஊண்மையில் அரசாங்கத்தைப் பொறுத்தவரையில் எதனையும் கொடுப்பதற்கான திட்டத்துடன் அது இல்லை. சுpங்கள- பௌத்த வாக்க வங்கியைத் தொடர்ந்தும் தக்கவைத்திருக்க வேண்டுமானால் தமிழர்களுக்கு எதனையும் கொடுக்கக்கூடாது என்ற நிலையிலேயே அரச தரப்பு உள்ளது என்பது தெளிவாகத் தெரிகின்றது. இதில் அரசாங்கம் மிகவும் கவனமாக உள்ளது.
1958 ஆம் ஆண்டு பண்டா செல்வா உடன்படிக்கை முதல் அனைத்து உடன்படிக்கைகளிலும் காணி அதிகாரம் முன்னிலைப்படுத்தப்பட்டிருந்தது. இந்த நிலையில், காணி அதிகாரம் இல்லாத ஒரு தீர்வை தமிழர்கள் ஒரு போதும் ஏற்கமாட்டார்கள் என்பதுடன், அது ஒரு தீர்வாகவும் இருக்கப்போவதில்லை. இவற்றைத் தர முடியாது என்பது அரசின் உறுதியான நிலைப்பாடாக வெளிப்படுத்தப்படும் நிலையில் அரசுடன் தொடர்ந்தும் பேசுவதால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பால் தமிழ் மக்களுக்கு எதனையும் பெற்றுக்கொடுக்க முடியாது என்பதே உண்மை!
- சபரி,
ஞாயிறு தினக்குரல்.
ஞாயிறு தினக்குரல்.