இராஜதந்திரிகளின் வருகையும் இராணுவ வெற்றி விழாவும்
விடுதலைப் புலிகள் அமைப்பை இராணுவ ரீதியாகத் தோற்கடித்த முதலாவது ஆண்டு நிறைவுக் கொண்டாட்டங்களால் கொழும்பு களைகட்டியிருந்த ஒரு பின்னணியில் முக்கிய இராஜதந்திரிகளின் விஜயங்கள் இந்த வாரத்தில் அரசாங்கத்தை சுறுசுறுப்பாக்கியிருந்தது. இந்த விஜயங்களின் மூலமாக போரின் இறுதிக்கால கட்டத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் போர்க் குற்றங்கள் தொடர்பில் சர்வதேசம் எவ்வாறான நிலைப்பாட்டை எடுக்கப்போகின்றது என்ற கேள்வி ஒரு புறம் எழுப்பப்பட, மறுபுறத்தில் சர்வதேசத்தின் எந்த நிபந்தனைகளுக்கும் அடிபணியப் போவதில்லை என்ற செய்தியை போர் வெற்றி நிகழ்வின் போது ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அறிவித்தார்.
அமெரிக்கா, ஜப்பான் நாட்டு உயர் இராஜதந்திரிகளுடன் ஐ.நா. சபையின் விஷேட பிரதிநிதி ஒருவரும் இந்த வாரம் கொழும்பை வந்தடைந்து முக்கிய பேச்சுக்களை நடத்தியிருக்கின்றார்கள். வடபகுதிக்குச் சென்று நிலைமைகளை நேரில் பார்வையிடுவதிலும் அவர்கள் அக்கறை காட்டியது கவனிக்கப்பட வேண்டிய ஒன்றாகவே உள்ளது. இந்த இராஜதந்திரிகளின் கொழும்பு விஜயங்களின் நோக்கங்கள் எவையாக இருந்துள்ளன, இதன் அடுத்த கட்டத்தில் இடம்பெறப்போவது என்ன, இவர்களைச் சமாளிப்பதற்கு கொழும்பு கையாண்ட உபாயங்கள் என்ன என்பது தொடர்பாக சுருக்கமாகப் பார்ப்போம்.
அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவின் பல்கலாச்சார மற்றும் மனித உரிமைகளுக்கான சிறப்பு உதவியாளர் சமந்தா பவர் மற்றும் அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு அவையின் யுத்த குற்றவியல் மற்றும் வன்கொடுமைகளுக்கு பொறுப்பான டேவிட் பிரஸ்மேன் ஆகியோர் திங்கட்கிழமையன்று கொழும்பை வந்தடைந்தார்கள். இவர்கள் நான்கு நாட்கள் இலங்கையில் தங்கியிருந்து முக்கிய சந்திப்புக்கள் பலவற்றில் பங்குகொண்டனர். இதனைவிட ஜப்பானின் இலங்கைக்கான விசேட பிரதிநிதி யசூசி அகாசி செவ்வாய்க்கிழமை இரவு கொழும்பை வந்தடைந்து ஞாயிற்றுக் கிழமை வரையில் தங்கியிருந்து சிங்கள, தமிழ் தலைவர்களுடன் சந்திப்புக்களை மேற்கொண்டுள்ளார்.
இன்னுமொரு முக்கிய விருந்தினர் ஐக்கிய நாடுகள் சபையின் அரசியல்துறை உதவிச்செயலாளர் லின் பெஸ்கோ. இவர் புதன்கிழமை அதிகாலை கொழும்பை வந்தடைந்தார். சனிக்கிழமை வரை இலங்கையில் தங்கியிருந்த இவர், அரசியல் தலைவர்களையும் மற்றும் பாதிக்கப்பட்ட மக்களையும் சந்தித்துள்ளார். வியாழக்கிழமை கொழும்பில் இவர் நடத்திய ஊடகவியலாளர் மாநாட்டில், போர்க் குற்றங்கள் தொடர்பில் ஐ.நா. செயலாளருக்கு ஆலோசனை வழங்குவதற்கான குழு ஒரு வார காலப்பகுதியில் அமைக்கப்படும் என அறிவித்தமை கொழும்புக்கு சற்று அதிருப்தியைக்கொடுப்பதாக அமைந்திருந்தது.
இலங்கை விஜயத்தின் பின்னர் ஐ.நா. செயலாளர் நாயகத்திடம் இவர் கையளிக்கும் அறிக்கையின் பின்னர் தான் ஐக்கிய நாடுகள் சபை இலங்கை மனித உரிமை விடயத்தில் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கும் என எதிர்பார்க்கப்படுவதால், இவரது வருகையும் கொழும்பில் அவர் நடத்தியிருக்கும் பேச்சுவார்த்தைகளும் மிகவும் முக்கியமானதாகவே பார்க்கப்படுகின்றன.
இலங்கை வந்தடைந்த அமெரிக்க இராஜதந்திரிகள் மறுதினமே ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை சந்தித்தனர். அவர்களின் சந்திப்பில் போர்க்குற்றங்கள் பற்றியதாக எந்தவொரு கருத்துப் பரிமாற்றமும் இடம்பெறவில்லை. ஆனால் இரு சாராரும் போருக்கு பின்னரான நிலை தொடர்பாக கலந்துரையாடினர். அத்துடன் இரு நாடுகளுக்கிடையேயும் உள்ள இராஜதந்திர உறவு முறைகளை வலுப்படுத்தவேண்டிய விடயம் குறித்து இரு தரப்பினரும் ஆலோசனைகளை நடத்தியதாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
கடந்த சில வருடங்களாக இலங்கை அரசு மீது அமெரிக்க அரசு மனித உரிமை பிரச்னையை முன்வைத்து கண்டன அறிக்கைகளை வெளியிட்டு வந்திருக்கின்றது. அதற்கு பதிலாக இலங்கை அரசும் அமெரிக்கா மீது கடுமையான தாக்குதல்களை நடத்தி பதில் அறிக்கைகளை வெளியிட்டது. விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரில் அமெரிக்கா கணிசமான உதவிகளை இலங்கைக்கு வழங்கியிருப்பினும், மனித உரிமைகள் விவகாரத்தில் கடுமையான நிலைப்பாட்டையே வெளிப்படுத்தி வந்திருக்கின்றது. விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக அமெரிக்கா செயற்படுகின்றது என சிங்கள தேசியவாதிகள் குரல் கொடுப்பதற்கு இதுவே காரணமாக அமைந்திருக்கின்றது.
இருந்தபோதிலும், இலங்கையில் சீனாவின் ஆதிக்கம் அதிகரித்துவரும் நிலையில் சமாதான வழிமுறைகளின் மூலமாக, இலங்கையுடன் சுமூகமான உறவுகளைப் பேணுவதற்கே அமெரிக்க இப்போது விரும்புகின்றது.தன்னுடைய பிராந்திய நலன்களைப் பொறுத்தவரையில் கொழும்புடன் சுமூகமான உறவுகளை வைத்திருப்பது அமெரிக்காவுக்கு அவசியம். ஆனால், இலங்கையில் அதிகரித்துவரும் சீனாவின் ஆதிக்கம்தான் அமெரிக்காவுக்கு சங்கடத்தைக் கொடுப்பதாக இருக்கின்றது. இலங்கைக்கு அழுத்தத்தக் கொடுத்து அதனைப் பணியவைப்பதற்குப் போர்க் குற்றச்சாட்டுக்களைப் பயன்படுத்தும் அமெரிக்கா, மறுபுறத்தில் அது சாத்தியமாகாத பட்சத்தில் பொருளாதார உதவிகள் மூலம் தமது நல்லெண்ணத்தையும் வெளிப்படுத்திவருகின்றது.
இதேவேளையில், ஐ.நா. பிரதிநிதியின் இலங்கை விஜயமும் முக்கியமானதாகும். இலங்கை வந்தவுடன் ஐ.நா.வின் அரசியல்துறை உதவி செயலாளர் முல்லைத்தீவுக்கு விஜயம் செய்தார். இந்த விஜயத்தின் மீள்குடியமர்த்தப்பட்ட மக்களின் நிலைமைகளை அவர் நேரில் அறிந்துகொண்டார். கொழும்பு திரும்பியவுடன் ஜனாதிபதி ராஜபக்சவை சந்தித்துப் பேசினார்.
இச்சந்திப்பின் போது இடம்பெயர்ந்துள்ள தமிழ் மக்களின் மீள்குடியேற்றம், அரசியல் தீர்வு மற்றும் மனித உரிமைகள் சம்பந்தப்பட்ட விடயங்கள் கலந்துரையாடப்பட்டன. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பையும் சந்தித்து மீள்குடியேற்றம், அரசியல் தீர்வு குறித்துக் கலந்துரையாடினார். மீள்குடியேற்றப்படும் மக்களுடைய அவல நிலை தொடர்பாக தமிழ்க் கூட்டமைப்பு விரிவாக விளக்கிக் கூறியதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இந்த நிலையில் இலங்கை தொடர்பாக ஐ.நா. அடுத்ததாக எவ்வாறான காய்நகர்த்தலை மேற்கொள்ளப்போகின்றது என்பதிலேயே அனைவரது கவனமும் திரும்பியுள்ளது.
மேற்கு நாடுகளின் இராஜதந்திரிகள் ஏதோ ஒரு வகையில் மனித உரிமைகள், போர்க் குற்றங்கள் என்பன தொடர்பில் தமது கவனத்தைச் செலுத்தும் அதேவேளையில், ஜப்பானோ இலங்கை அரசுக்கு சாதகமான நிலைப்பாட்டையே வெளிப்படுத்தியிருக்கின்றது. அதாவது சர்வதேச சமூகம் இலங்கை மீது அழுத்தங்களைக் கொடுக்கக்கூடாது என ஜப்பானிய தூதுவர் அகாசி கொழும்பில் தெரிவித்திருக்கின்றார். மேற்கு நாடுகளால் வரக்கூடிய அழுத்தங்களை சமப்படுத்தக்கூடியளவுக்கு கிழக்கு நாடுகளின் ஆதரவு இலங்கைக்கு உள்ளது என்பதைத்தான் அகாசியின் இந்தக் கருத்துக்கள் வெளிப்படுத்துவதாக அமைந்திருக்கின்றன.
இந்தப் பின்னணியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற போர் வெற்றிக் கொண்டாட்டங்களில் உரையாற்றிய ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ, தன்னுடைய தேசியவாத நிலைப்பாட்டையே மீண்டும் ஒரு முறை வெளிப்படுத்தினார். “நிபந்தனைகளுக்கு அடிபணிந்து நாட்டின் சுதந்திரத்தைக் காட்டுக்கொடுத்து உதவி பெறும் நிலைக்குச் செல்ல நாம் தயாராகவில்லை” எனத் தெரிவித்த ஜனாதிபதி, “உதவிகளாலும் நிவாரணங்களாலும் இந்த நாட்டை பயமுறுத்திய யுகத்துக்கு முற்றுப்பள்ளி வைக்க வேண்டும்” எனவும் குறிப்பிட்டிருக்கின்றார்.
சர்வதேச நிர்ப்பந்தங்கள் எதற்கும் தாம் அடிபணியப் போவதில்லை என்பதுதான் இந்த உரையில் மூலம் மகிந்த தெரிவித்திருக்கும் செய்தியாகும். குறிப்பாக அமெரிக்க மற்றும் ஐ.நா. உயர் இராஜதந்திரிகள் கொழும்பு வந்து சென்றிருக்கும் நிலையில் ஜனாதிபதி வெளிப்படுத்தியிருக்கும் இந்தக் கருத்துக்கள் சர்வதேசத்துக்கு விஷேடமாக மேற்கு நாடுகளுக்குத் தெளிவான சில செய்திகளைச் சொல்லியிருக்கின்றது. இந்த நிலையில் மேற்கு நாடுகளின் பிரதிபலிப்பு எவ்வாறானதாக இருக்கும் என்பதுதான் இப்போது எதிர்பார்க்கப்படுவதாக இருக்கின்றது.
No comments:
Post a Comment