சிங்கள பௌத்த மயமாகும் வடக்கு
போர் முடிவுக்கு வந்திருக்கும் பின்னணியில் யாழ்ப்பாணத்துக்குப் படையெடுக்கும் பெருந்தொகையானவர்களில் சிங்களவர்களே அதிகமாக உள்ளனர். பௌத்தர்களின் முக்கிய இடங்களாகக் கருதப்படும் பகுதிகளுக்கு இவர்கள் கிரமமாக விஜயம் செய்வதுடன், அப்பகுதிகளில் பௌத்த விகாரைகளையும் அமைப்பதில் அக்கறை காட்டுவதால் யாழ்ப்பாணம் விரைந்து பௌத்த பூமியாக மாற்றமடையத் தொடங்கியிருக்கின்றது. இந்தப் பின்னணியில் தொல்பொருள் திணைக்களத்தின் முக்கிய அதிகாரிகள் குழு ஒன்றும் யாழ்ப்பாணம் செல்லவிருப்பதாக வெளியாகியிருக்கும் செய்தி குடாட்டின் பௌத்த தலங்களுக்கான அங்கீகாரத்தை வழங்குவதற்காகவா என்ற கேள்வியும் எழுப்பப்பட்டிருக்கின்றது. ஏ-09 பாதையின் ஊடாக யாழ்ப்பாணத்துக்குச் செல்லும் போதே வடபகுதியில் உருவாகியிருக்கும் புதிய மாற்றங்களை நேரில் காணக்கூடியதாக இருக்கின்றது. ஓமத்தைச் சோதனைச் சாவடிக்கு அண்மையில் காணப்பட்ட தமிழ் காணாமல்போய்விட்டது. ஓமந்தையை அறிவிக்கும் பெயர்ப்பலகையில் ஆங்கிலமும் சிங்களமும் மட்டுமே இடம்பெற்றிருக்கின்றது. மெல்லத் தமிழ் சாகத் தொடங்கியிருக்கின்றது. ஏ-09 வீதியின் இரு மருங்கிலும் இராணுவ மயம். அங்காங்கே மீள் குடியேற்றம் என்ற பெயரில் அமைக்கப்பட்டுள்ள சிறிய கொட்டகைகள். கிளிநொச்சியில் பாரிய பௌத்த விகாரைதான் இப்போது வரவேற்கின்றது. விகாரையை மையப்படுத்திய சிங்கள மயமாக்கல். இந்த விகாரை எவ்வளவு காலமாக இருக்கின்றது என்பதற்கு புதிய கதைகள் சொல்லப்படலாம்
யாழ்ப்பாணத்துக்குத் தினசரி படையெடுக்கும் சிங்களவர்களில் பெரும்பாலானவர்கள் இப்போதுதான் முதன் முறையாக அங்கு செல்கின்றார்கள். வணக்கத்தலங்களுக்குச் செல்வதில் அதிகளவுக்கு அக்கறை காட்டும் அவர்கள், 'புதிதாக அமைக்கப்பட்ட" பௌத்த விகாரைகளைத் தவற விடுவதில்லை. நல்லூர், மாவட்டபுரம், கீரிமலை, நயினாதீவிலுள்ள நாக தீப மற்றும் கந்தரோடை போன்ற பகுதிகளை அவர்கள் தவறவிடுவதில்லை. யாழ்ப்பாண வரலாற்றுச் சின்னங்கள் பலவற்றைக் கொண்டுள்ள கந்தரோடைக்கு இவர்கள் அதிகளவுக்குச் செல்வதற்கான காரணம் என்ன என்பது ஆராயப்பட வேண்டியதாகவே இருக்கின்றது. யாழ்ப்பாணத்துக்குச் செல்லவுள்ள தெல்பொருள் திணைக்கள அதிகாரிகள் இந்தப் பகுதிகளிலும் ஆய்வுகளை மேற்கொள்ளவிருப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
குடாநாட்டின் வட கடல் பகுதியான மாதகல் பகுதியில்தான் சங்கமித்திரை அரச மரக்கிளையுடன் வந்திறங்கியதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இப்பகுதியிலுள்ள தம்பகோலா பட்டுன எனற இடத்தில் புதிய பௌத்த விகாரை ஒன்று அமைக்கப்பட்டிருக்கின்றது. இராணுவத்தினருடைய பாதுகாப்புடன் அரசாங்கத்தின் ஆதரவுடன் அமைக்கப்பட்ட இந்த விகாரையும் சிங்கள மக்களை அதிகளவுக்குக் கவரும் இடமாக மாற்றமடைந்திருக்கின்றது. கடற்கரையுடன் மிகவும் ரம்மியமான இயற்கைச் சூழலில் அமைக்கப்பட்டிருக்கும் இந்த விகாரையையடுத்து சில சிங்களக் கடைகளும் அமைக்கப்பட்டுள்ளன. இலங்கைத் தீவில் பௌத்த மதத்தைப் பரப்புவதற்காக வந்த முக்கிய பிக்குணியாகக் கருதப்படும் சங்கமித்தை கால் பதித்த மண்ணாக அந்தப் பகுதி கருதப்படுவதால் அதனை புனித பூமியாக பௌத்தர்கள் கருதுகின்றார்கள்.
சிறிய ரக டகோபாக்கள் கண்டுபிடிக்கப்பட்ட கந்தரோடைப் பகுதிக்கு புதிய சிங்களப் பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்தப் பகுதிகளில் பெயர்ப் பலகைகள் மட்டுமன்றி அறிவித்தல் பலகைகள் அனைத்தும் சிங்கள மொழியிலேயே வைக்கப்பட்டுள்ளன. தென்பகுதியிலிருந்து படையெடுக்கும் சிங்களவர்களுக்கு இது பெரும் வசதியாக இருப்பதுடன் அவர்கள் தமது சொந்த ஊரில் இருப்பது போன்ற உணர்வையே பெற்றுக்கொள்கின்றார்கள் என சமீபத்தில் அங்கு சென்றுவந்த சிங்கள நண்பர் ஒருவர் தெரிவித்தார். பெருமளவில் படையெடுக்கும் சிங்களவர்களுக்குப் பாதுகாப்பு உணர்வைக் கொடுக்கும் வகையில் படைnயினரும் யாழ்ப்பாணத்தில் குவித்துவைக்கப்பட்டுள்ளார்கள்.
நல்லுர், நயினாதீவு மற்றும் மாதகல் போன்ற பகுதிகளுக்குச் செல்லும் சிங்களவர்கள் அங்கு மத வழிபாடுகளில் மட்டும் ஈடுபடுவதில்லை. பொருட்களைக் கொள்வனவு செய்வதிலும் அவர்கள் தமது கவனத்தைப் பெருமளவுக்குக் குவிக்கின்றார்கள். அவர்களுக்கு வசதியாக பெருமளவுக்கு சிங்களர்களே இந்தப் பகுதியில் கடைவிரித்திருப்பதையும் காணக்கூடியதாக இருக்கின்றது. நல்லார் மற்றும் நயினாதீவுப் பகுதிகளில் 'லாபய், லாபாய்..." போன்ற குரல்கள் நாம் அப்பகுதிக்குச் சென்றவுனனேயே ஒலிக்கின்றது. நாம் ஏதோ புறக்கோட்டைப் பகுதியில் நிற்கின்றோமோ என்ற உணர்வுதான் உடனடியாக ஏற்படுகின்றது. இப்பகுதித் தமிழர்களும் சிங்களம் தெரிந்தால்தான் வியாபாரம் செய்லாம் என்பதை உணர்ந்துகொண்டுவிட்டனர்.
குடாநாட்டுக்கு வரும் சிங்களவர்களுக்கு தங்குமிடம்தான் பெரும் பிரச்சினையாக உள்ளது. வாராந்தம் சுமார் 4,00,000 பேர் குடாநாட்டுக்கு வந்து செல்வதாக பிந்திய மதிப்பீடு ஒன்று தெரிவிக்கின்றது. அனேகமாக ஜனவரி மாதத்திலிருந்து இவ்வாறு பெருமளவுக்கு சிங்களவர்கள் வந்துகொண்டிருக்கின்றார்கள். யாழ். நகரிலுள்ள மூன்று பிரதான பெரிய ஹொட்டல்களும் இராணுவத்தினால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. ஹொட்டல் சுபாஸ், ஹொட்டல் ஞானம்ஸ் மற்றும் மணிக்கூண்டுக் கோபுர வீதியிலுள்ள ஹொட்டல் அசோக் என்பனவே படையினரால் ஆக்கிரமிக்கப்பட்டு பொது மக்களால் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளன. இதனால் சிறிய ஹொட்டல்களை நாடியே மக்கள் செல்ல வேண்டியிருக்கின்றது. தங்குமிடப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்காக குடாநாட்டிலுள்ள பெரிய வீடுகள் பல ஹொட்டல்களாக மாற்றப்பட்டுள்ளன.
இதன் மூலமாகவும் தங்குமிடப் பிரச்சினை தீர்க்கப்படாத நிலையில் யாழ. ருயில் நிலையம் தங்குமிடமாகப் பயன் படுத்தப்படுகின்றது. ஆந்தப் பகுதியில் பயணிகளின் வசதி கருதி கழிப்பறைகள் சிலவும் அமைக்கப்பட்டிருக்கின்றது. இதனைவிட துரையப்பா விளையாட்டரங்கமும் திறந்த தங்குமிடமாகியிருக்கின்றது. ஏந்தவிதமான அச்சமும் இன்றி மிகவும் சுயாதீனமாக இந்தப் பகுதிகளில் சிங்களவர்கள் வந்து செல்வதைக் காண முடிகின்றது.
அரசாங்கத் திணைக்களங்கள் மற்றும், தேர்தல் தொகுதி மட்டத்தில் மக்கள் குழுக்களாக யாழ்ப்பாணச் சுற்றுப் பயணத்தை மேற்கொள்கின்றார்கள். மாதகலில் அமைக்கப்பட்டுள்ள புதிய பௌத்த விகாரையும், கந்தரோடைப் பகுதியில் மேற்கொள்ளப்படும் புதிய ஆய்வுகளும் குடாநாட்டின் வரலாறு திருத்தி எழுதப்படுவதற்கான ஒரு மறைமுக முயற்சி முன்னெடுக்கப்படுவதையே வெளிப்படுத்திக்காட்டுவதாக அமைந்திருக்கின்றது.
No comments:
Post a Comment