பாடசாலைக் கல்வியைப் பெற்றுக்கொள்வதில்
முகாம் சிறுவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினை
இலங்கையில் மூன்று தசாப்தகாலமாக இடம்பெற்ற போரினால் இடம்பெயர்ந்தவர்களுக்காக என அமைக்கப்பட்ட முகாம்களைப் பொறுத்தவரையில் கோப்பாய் உதவி அரசாங்க அதிபர் பிரிவில் உள்ள முகாம்தான் மிகவும் பழைமையானது எனத் துணிந்து சொல்லமுடியும். 1990 ஆம் ஆண்டு ஆரம்பமான இரண்டாவது ஈழப் போரைத் தொடர்ந்து இடம்பெயர்ந்த வலிகாமம் வடக்குப் பகுதி மக்களுக்காக அமைக்கப்பட்ட முகாம்களில் இதுவும் முக்கியமானது. இதனைவிட உரும்பிராய் மற்றும் ஏழாலை ஆகிய பகுதிகளிலும் வலி வடக்குப் பகுதியிலிருந்து இரு தசாப்த காலத்துக்கு முன்னர் இடம்பெயர்ந்தவர்களுக்கான முகாம்கள் ள்ளன.
"எங்களை எங்களுடைய காணிகளில் குடியிருக்க அனுமதிக்க வேண்டும். போர் முடிவடைந்திருப்பதால் எங்களை எங்களுடைய பழைய இடங்களில் குடியமர்த்தலாம். எமது சொந்த இடங்களில் குடியேறுவதன் மூலமாக மட்டுமே எமக்கு மீண்டும் பழைய வாழ்க்கைக்குத் திரும்பக்கூடியதாக இருக்கும்" எனக் கூறும் இந்த முகாம் மக்கள், தமது சொந்தக் காணிகளில் தம்மால் தொழில் செய்து தமது குடும்பத்தினரைப் பாதுகாக்க முடியும் எனவும் குறிப்பிடுகின்றார்கள். தமது எதிர்காலம் தமது சொந்த மண்ணுக்குத் திரும்புவதிலேயே தங்கியுள்ளது என்பதுதான் இவர்களின் நிலைப்பாடு.
தம்மை தமது சொந்த இடங்களுக்குச் செல்ல முடியாமல் தடுத்துவைத்திருப்பதற்கு எந்தவிதமான நியாயமும் இல்லை என இவர்கள் சுட்டிக்காட்டுகின்றார்கள்.
கோப்பாய் உதவி அரசாங்க அதிபர் பிரிவில் அமைக்கப்பட்டுள்ள இந்த முகாமில் 96 குடும்பங்கள் உள்ளன. முன்னர் இருந்தது 80 குடும்பங்கள். பின்னர் வன்னியிலிருந்து வந்த 16 குடும்பங்களையும் சேர்த்து இப்போது 96 குடும்பங்கள். வவுனியா மெனிக் பாம் முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்த வலி. வடக்குப் பகுதியைச் சேர்ந்த 16 குடும்பங்கள் மீள் குடியேற்றம் என்ற பெயரில் அங்கிருந்து விடுவிக்கப்பட்டாலும் அவர்களை மீளக் குடியேற்றுவதற்கான எந்விதமான ஏற்பாடுகளும் அரசாங்கத்தினால் செய்யப்படவில்லை. பதிலாக இந்த முகாமில் அவர்கள் வைக்கப்பட்டுள்ளனர்.
முகாமில் இடநெருக்கடி
இந்த முகாமில் 410 பேர் இருப்பதாக வலி வடக்கு இடம்பெயர்ந்த மக்கள் குழுவின் தலைவர் ஆ.சி.நடராஜா தெரிவித்தார். ஆனால், உரும்பிராய் மற்றும் ஏழாலை போன்ற இடங்களிலுள்ள முகாம்களில் இதனைவிட அதிகமான இடம்பெயர்ந்த மக்கள் உள்ளனர். 1990 ஆம் ஆண்டு வலிவடக்கில் மேற்கொள்ளப்பட்ட இராணுவ நடவடிக்கைகளுடன் அங்கிருந்து வெளியேறியவர்கள் பின்னர் 1992 ஆம் ஆண்டு இந்த முகாமுக்கு வந்தனர். அன்று முதல் இந்த முகாமிலேயே இவர்கள் வசித்து வருகின்றார்கள். இந்தளவுக்கு நீண்டகாலமாக முகாம் வாழ்க்கையை நடத்துபவர்கள் இலங்கையில் இவர்களாக மட்டும்தான் இருக்க முடியும்.
வயதானவர்கள், குடும்பத்தவர்கள், சிறுவர்கள், குழந்தைகள் என அனைத்துத் தரப்பினரும் இங்கு அமைக்கப்பட்டுள்ள குடிசைகளில் பெரும் இடநெருக்கடிக்கு மத்தியில் வசிக்கின்றார்கள். இந்தக் குடிசைகள் பெரும்பாலும் இடம்பெயர்ந்த மக்களாலேயே அமைக்கப்பட்டிருக்கின்றது. இதற்காக அரசாங்கம் எந்த விதமான நிதி உதவிகளையும் வழங்கவில்லை என்பது கவனிக்கத்தக்கது. அடிப்படை வசதிகள் கூட இல்லாத நிலையில் வாழும் இவர்களைப் பொறுத்தவரையில் போர் முடிவுக்கு வந்துவிட்டதாகக் கூறப்பட்டாலும், இவர்களுடைய வாழ்க்கையில் எந்தவிதமான விடிவும் இல்லை.
இந்த முகாம் பொறுப்பாளரான வேலன் சிவராஜாவை முகாமில் வைத்துச் சந்தித்த போது அந்த முகாமின் நிலை தொடர்பாகவும், தமது ஆதங்கத்தையும் அவர் வெளிப்படுத்தினார்.
வலிகாமம் பகுதியில் இராணுவ நடவடிக்கை ஆரம்பமானதையடுத்து இடம்பெயர்ந்துவந்த தாம் பல இடங்களில் இருந்துவிட்டு 1992 இல் இந்த இடத்துக்கு வந்ததாகக் குறிப்பிடும் அவர் அப்போது அந்த இடத்தில் கிறேசர் இருந்ததாகக் குறிப்பிடுகின்றார். ஆரம்பத்தில் இடம்பெயர்ந்தவர்களுக்காக இங்கு 43 குடிசைகள் அமைக்கப்பட்டன. பின்னர் வந்தவர்களுக்காகவும் திருமணம் செய்து தனிக் குடித்தனம் செல்பவர்களுக்காகவும் மேலும் சில குடிகைள் பின்னர் அமைக்கப்பட்டதாகவும் அவர் கூறுகின்றார்.
இங்குள்ள சிறுவர்கள் பாடசாலைகளில் படிப்பதற்கான அடிப்படை வசதிகள் இல்லை எதுவும் இல்லை எனக் குறிப்பிடும் வேலன் சிவராஜா, சிறுவர்கள் பாடசாலைகளுக்குச் செல்லும் போது ஏனைய சிறுவர்களுடன் இணைந்து படிப்பதில் பல நெருக்கடிகளை எதிர்நோக்குவதாகக் கவலை தெரிவிக்கின்றார். குறிப்பாக இவர்கள் முகாம் சிறுவர்கள் எனக் குறிப்பிடப்படுவதால் ஒதுக்கிவைக்கப்படும் நிலையும் பாடசாலைகளில் காணப்படுவதாக அவர் வேதனைப்படுகின்றார்.
இடம்பெயர்வதற்கு முன்னர் தாம் தமது காணிகளில் உழைத்தே தமது வாழ்வாதாரங்களைத் தேடிக்கொண்டதாகவும், அதனைவிட கூலி வேலைகளைச் செய்யக் கூடிய வசதிகள் தமக்கு அப்போது இருந்ததாகவும் கூறும் சிவராஜா, தற்போது சிறிய முகாமில் அடைக்கப்பட்ட வாழ்க்கையை நடத்த வேண்டியிருப்பதால் தொழில் எதனையும் செய்ய முடியாதருப்பதாகவும் தெரிவித்தார். இதனால் தமது குடும்பங்கள் வாழ்வாதாரங்களைத் தேடிக்கொள்வதில் பெரும் நெருககடிகளை எதிர்கொள்ள வேண்டியிருப்பதாகவும் அவர் குறிப்பிடுகின்றார்.
அரசாங்க நிவாரணம்
அப்படியானால் அரசாங்கத்தின் சார்பில் உங்களுக்கு நிவாரணம் ஏதாவது வழங்கப்பட்டதா? உங்களுடைய குடும்பங்கள் எவ்வாறு வாழ்க்கையை நடத்துகின்றன எனக் கேட்டபோது,
"அரசாங்கத்தின் சார்பாக எமக்குத் தரப்படும் நிவாரணம் 1,200 ரூபா மட்டும்தான். அதாவது மாதம் ஒன்றுக்கு ஐந்து பேரைக் கொண்ட குடும்பம் ஒன்றுக்கு இத்தொகை வழங்கப்படுகின்றது. 1998 ஆம் ஆண்டு வழங்கப்பட்ட இந்தத் தொகைதான் இன்றும் கிடைக்கின்றது. அரசாங்க மற்றும் தனியார் துறை ஊழியர்களுக்கான சம்பளத்தை ஒவ்வொரு வருடமும் கூட்டுகின்றார்கள். ஆனால் இந்த நிவாரணத்தைக் கூட்டுவதற்கு எந்த நடவடிக்கையும் இல்லை. 12 வருடமாக ஒரே தொகைதான் எமக்குக் கிடைத்துக்கொண்டிருக்கின்றது.
ஐந்து உறுப்பினர்களைக் கொண்ட குடும்பம் என்றால்தான் இந்த 1,200 ரூபா கொடுப்பனவு. குறைந்த எண்ணிக்கையைக் கொண்டுள்ள குடும்பங்களுக்கு இந்தத் தொகை கிடைக்காது. அவர்களுக்கு குறைந்தளவு கொடுப்பனவே வழங்கப்படுகின்றது. 12 ரூபா அரிசி விற்பனையான அந்தக் காலத்தில் இந்தக் கொடுப்பனவு சரி. இப்ப அரிசி 120 ரூபா விற்பனையாகும் போது இந்தத் தொகையை வைத்துக்கொண்டு எவ்வாறு சமாளிக்க முடியும்?" எனக் கேள்வி எழுப்புகின்றார் செல்வராஜா.
"இங்கு எங்களால் தொடர்ந்தும் இருக்க முடியாது. எங்களை விடச் சொல்லித்தான் நாங்கள் கேட்கின்றோம். யுத்தம் முடிந்துவிட்டமதாகச் சொல்கின்றார்கள். ஆனால் எம்மை எமது சொந்த இடங்களுக்கு எதற்கான அனுப்ப மறுக்கின்றார்கள்? பிள்ளைகள் முகாம் பிள்ளைகள் எனக் கூறப்படுவதால் பாடசாலையில் படிக்க பிரச்சினையாகவுள்ளது" எனக்குறிப்பிடும் அவர், வவுனியாவிலிருந்து வந்த குடும்பங்களும் இந்த முகாமிலேயே தங்க வைக்கப்பட்டுள்ளதால் இப்போது பெரும் இட நெருக்கடி உருவாகியிருப்பதாகக் குறிப்பிடுகின்றார்.
சுயதொழில்களைச் செய்வதற்கான வசதிகள் வாய்ப்புக்கள் எதுவும் இல்லை என்பதால், நிவாரணத்தைத்தான் பெருமளவுக்கு நம்பியிருக்க வேண்டியவர்களாக இந்த முகாம் மக்கள் உள்ளனர். ஆனால் இவர்களுக்காக அரசாங்கத்தினால் வழங்கப்படும் நிவாரணம் போதுமானதாக இல்லை. அரசாங்கத்தினால் வழங்கப்படும் 1,200 ரூபாவைவிட வேறு எந்தவிதமான உதவிகளும் இவர்களுக்கு நிரந்தரமாகக் கிடைப்பதில்லை. எப்போதாவது அரச சார்பற்ற நிறுவனங்கள் சில உதவிகளைச் செய்வதாகக் கூறும் முகாம் வாசிகளும், ஆனால் அதனை நம்பியிருக்க முடியாது எனவும் கூறுகின்றார்கள்.
சமூகப் பிரச்சினைகள்
இதேவேளையில் இந்த முகாமல் இடநெருக்கடி அதிகமாக இருப்பதாலும், பொதுவான கழிவறைகளையும், கிணற்றையுமே அனைவரும் பயன்படுத்த வேண்டியிருப்பதால் பெண்கள் பல பிரச்சினைகளை எதிர்நோக்க வேண்டியிருப்பதாகக் கூறுகின்றார் இம்முகாமில் வசிக்கும் மகேஸ்வரி செல்வராஜா.
"முகாமில் மிகவும் நெருக்கடியான நிலையில் வசிப்பதால் இளவயதுத் திருமணங்கள் அதிகரிக்குது. இதனால் சிறுவர்கள் பெருமளவுக்குப் பாதிக்கப்படுகின்றார்கள். நாங்கள் எங்களுடைய சொந்த இடங்களில் இருந்த போது மிகவும் நல்ல நிலையில் இருந்த நாங்கள். எங்களுடைய பிள்ளைகளுக்குத் திருமணம் செய்யும் போதும் அவர்களுக்கு வீடு வளவுகளுடன் சீதனம் கொடுக்க வேண்டும் என்று எங்களுக்கு ஆசை இருக்குது. இப்ப என்னெண்டால் முகாம்களுக்குள்ளேயே திருமணம் செய்து முகாமுக்குள்ளேயே அவர்கள் வாழ வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படுகின்றது. நாங்கள் எங்களுடைய சொந்த இடத்துக்குச் சென்றால் அவர்களுக்கு வீடுவளவைக் கொடுத்து அவர்களை நல்ல ஒரு வாழ்க்கையை வாழச் செய்ய முடியும்" என தனது ஆதங்கத்தை வெளிப்படுத்துகின்றார் பரமேஸ்வரி.
"இங்கு முகாம்களுக்குள்ளேயே வாழ்ந்துகொண்டிருப்பதால் எங்களுடைய பிள்ளைகளின் பாடசாலைப் படிப்பு எல்லாம் பாதிக்கப்படுகின்றது. இங்கையிருந்து பாடசாலைகளுக்குச் சென்றால் அவர்களை முகாம் பிள்ளைள் என கேலியாகச் சொல்கின்றார்கள். அதனால் அவர்கள் பாடமசாலைகளில் கல்வியைத் தொடர்வதற்குப் பெரும் நெருக்கடிகளை எதிர்கொள்ள வேண்டியவர்களாக உள்ளனர்"எனக் கூறும் பரமேஸ்வரி, இதனைவிட பாடசாலை உபகரணங்களை வாங்குவதற்கும் தாம் பல இடர்பாடுகளைச் சந்திக்க வேண்டியிருப்பதாகக் குறிப்பிடுகின்றார்.
முகாமில் பொதுவான கிணறுதான் உள்ளது. எல்லாரும் அங்குதான் போய்நின்று குளிக்க வேண்டும். இதனால் இங்குள்ள பெண்கள் பல நெருக்கடிகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கின்றது எனவும் அவர் சுட்டிக்காட்டுகின்றார். இதனால் பல சமூகப் பிரச்சினைகள் உருவாகின்றது. இளவயதுத் திருமணங்கள் அதிகமாக இடம்பெறுகின்றது. எமது பிள்ளைகளை வெளியே உள்ளவர்களுக்குத் திருமணம் செய்து கொடுக்க முடியாதிருக்கின்றது. முகாம் பிள்ளைகள் என்ற பெயரில் இவர்கள் இருப்பதால் அவ்வாறான திருமணங்களுக்கான வாய்ப்புக்கள் இல்லாமல் போய்விடுகின்றது. அதனால் எமது பிள்ளைகள் முகாமுக்குள்ளேயே திருமணத்தைச் செய்துகொண்டு இங்கேயே வாழ வேண்டியவர்களாக உள்ளார்கள்.
"ஒவ்வொரு தேர்தல் வரும் போதும் எங்களை ஊருக்கு விடுவார்களோ என்று ஏக்கத்துடன்தான் காத்திருக்கின்றோம். தேர்தல் காலத்தில் அவ்வாறு சொல்கின்றார்கள். புpன்னர் அனைவரும் மறந்துவிடுகின்றார்கள். எங்களுக்கு சுயதொழில் செய்வதற்கு வசதியில்லை. வன்னியாலை வந்த 16 குடும்பங்கள் இப்ப இந்த முகாமில் வாழுது. ஏற்கனவே இடநெருக்கடி இருக்கும் போது அவர்களுடைய வருகை மேலும் இடநெருக்கடியை அதிகரித்திருக்கின்றது. வன்னியில் அவர்கள் வீடுகட்டி வசதியான தொழல்களையும் செய்துகொண்டு வாழ்ந்தவையள். இப்ப சமைப்பதற்குக் கூட இட வசதி இல்லாத ஒரு பரிதாபமான நிலையில் இருக்கின்றார்கள்" எனவும் குமுறுகின்றார் பரமேஸ்வரி.
இந்தக் குழுறல் மகேஸ்வரியினுடையது மட்டுமல்ல...முகாமிலுள்ள அனைவருடைய குமுறலும் இதுதான். இது தொடர்பாக அரசாங்கத்தின் பிந்திய அணுகுமுறை என்ன என்பது பற்றிய தகவல்களுடன் அடுத்த வாரம்...
No comments:
Post a Comment