ஐ.தே.க.வின் புதிய பாதை!?
பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியின் செல்வாக்கு மிக்க முக்கிய தலைவர்களில் ஒருவரான ரவி கருணாநாயக்க அண்மையில் தெரிவித்த கருத்துக்கள் அரசியல் ரீதியாகப் பெரும் சர்ச்சைகளை உருவாக்கியிருக்கின்றது. ஐ.தே.க. எந்தப் பாதையில் செல்லப் போகின்றது என்ற கேள்வியை மட்டுமன்றி, கட்சியின் இரண்டாம் மட்டத் தலைவர்கள் தமக்குத் தேவையான பாதையில் கட்சியைக் கொண்டு செல்வதற்கு முற்படுகின் றார்களா என்ற கேள்வியையையும் அவருடைய கருத்துக்கள் எழுப்பியிருக்கின்றது.
இலங்கை விவகாரம் தொடர்பில் இந்தியாவின் தற்போதைய அணுகுமுறை தொடர்பாகக் கருத்து வெளியிட்ட கருணாநாயக்க, இலங்கையின் உள்நாட்டு விவகாரங்களில் இந்தியா தேவையற்ற வகையில் தலையீடுகளை மேற்கொள்வதாகக் குற்றஞ்சாட்டினார். சிறுபான்மையினக் கட்சிகளுடன் பேச்சுக்களை நடத்துவதற்கு முற்படுவதன் மூலமாக இலங்கையில் இன ரீதியான பிளவுக்கு இந்தியா வழிவகுப்பதாகவும் அவர் குறிப்பிட்டிருக்கின்றார்.
இந்தியா தமிழர்களுக்கு எப்போதும் துரோகமிழைத்தே வந்திருக்கின்றது எனவும் அவர் குறிப்பிட்டிருக்கின்றார். தமிழர்களுக்காக ரவி கருணாநாயக்க முதலைக் கண்ணீர் வடிப்பதாக தமிழ் வட்டாரங்கள் இதனைக் குறிப்பிடுவதில் தவறிருப்பதாகவும் தெரியவில்லை.
பாராளுமன்றத்தில் நிகழ்த்திய உரை ஒன்றின் போதுதான் அவர் இதனைத் தெரிவித்திருப்பதால் அவரது கருத்துக்களின் முக்கியத்துவம் அதிகரிப்பதுடன், மும்மொழிப் பத்திரிகைகளும் இது தொடர்பான செய்திகளை முக்கியத்துவம் கொடுத்து வெளியிட்டிருந்தமையையும் காணக்கூடியதாக இருந்தது.
ரவி கருணாநாயக்கவின் கருத்துக்கள் அவரது சொந்தக் கருத்துக்களா அல்லது கட்சியின் கருத்துக்களா என ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் எழுப்பிய கேள்விக்கு இதுவரையில் சம்பந்தப்பட்ட தரப்புக்களிலிருந்து பதில் இல்லை. ஐ.தே.க. தலைமை இவ்விடயத்தில் மௌனமாகவே இருக்கின்றது. கட்சி உயர் மட்டத்தில் தற்போது உருவாகியிருக்கும் நெருக்கடிகளின் மத்தியில் இது தொடர்பில் கருத்துக்களை வெளியிடுவது பாதகமான விளைவுகளை ஏற்படுத்தும் என்பது கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுக்குத் தெரியாமலிருக்காது!
சிறுபான்மையினக் கட்சிகளுடன் மட்டுமன்றி, அரசாங்கத்துடனும், ஐ.தே.க. தலைமையுடனும் கூட இந்தியா அடிக்கடி பேச்சுக்களை நடத்தியே வருகின்றது. புதுடில்லியில் பேச்சுக்களை நடத்துவதற்காக ரணில் விக்கிரமசிங்க கடந்த மாதம்தான் இந்தியா சென்றுவந்திருந்தார். அதேபோல ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவும் கடந்த வாரம்தான் புதுடில்லி சென்றுவந்திருந்தார். இந்த இருவருடைய விஜயங்களின் போதும் இன நெருக்கடிக்கான தீர்வு முயற்சிகள் தொடர்பில் முக்கியமாக ஆராயப்பட்டதாக செய்திகள் வெளியாகியிருந்தது.
இந்த நிலையில் இவ்வாறு அதிரடியான தேசியவாதக் கருத்துக்களை ரவி கருணாநாயக்க முன்வைக்க வேண்டிய அவசியம்தான் என்ன?
இது ஒருவகையில் கட்சியில் உருவாகியிருக்கும் தலைமைத்துப் போட்டியைப் பிரதிபலிப்பதாகக் கொள்ளலாம். ரணிலின் தலைமைத்துவத்துக்கு எதிராக நிறுத்தப்பட்டிருக்கும் சஜித் பிரேமதாச ஓரளவுக்குச் சிங்களத் தேசியவாதியாகவே கருதப்படுகின்றார். இனவாதத்தை அடிப்படையாகக் கொண்டுள்ள தேசியவாதப் போக்குத்தான் மகிந்த ராஜபக்ஷவின் அண்மைக்கால தேர்தல் வெற்றிகளுக்குக் காரணம் எனக் கூறப்படுவதால் அவ்வாறான நிலைப்பாட்டை முன்னெடுக்கக்கூடிய சஜித் பிரேமதாசதான் ரணிலுக்கு மாற்றானவர் என்பதுதான் கட்சியின் ஒரு தரப்பினரது கருத்தாக உள்ளது. மகிந்தவின் தலைமைக்கு ஈடுகொடுக்கக் கூடியவரகவும் அவரே இருப்பார் எனவும் இவர்கள் கூறுகின்றார்கள்.
சஜித்துக்கு எதிரான பிரச்சாரங்களை முன்னின்று நடத்தும் ரவி கருணாநாயக்க, ஐ.தே.க.வில் தற்போது மேற்கொள்ளப்பட்டுவரும் புனரமைப்பு நடவடிக்கைகளுக்கு எதிரானவர். ரணிலின் தலைமைத்துவம் தொடர வேண்டும் என்பதை விரும்புபவர். அவ்வாறு அவர் வரும்புவதற்கு சில காரணங்கள் உள்ளன. ரணிலின் தலைமை தொடர்ந்தால் மட்டும்தான் தன்னுடைய இருப்பை ஐ.தே.க.வில் பாதுகாத்துக்கொள்ள முடியும் என அவர் நம்புவது இதற்கு முதல் காரணம். அத்துடன் கட்சியின் உபதலைவராகவும் இருக்கும் அவர், ரணிலுக்குப் பின்னர் கட்சித் தலைமை தனக்குக் கிடைக்க வேண்டும் என்பதை இலட்சியமாகக் கொண்டவர்.
சஜித் கட்சித் தலைமையைப் பொறுப்பேற்றால் கட்சியில் தனக்கு இடம் இல்லாமல் போய்விடும் என ரவி கருணாநாயக்க கருதுவதற்கும் காரணம் உள்ளது.
இந்தக் காரணங்களால்தான் தேசியவாதக் கருத்துக்களை முன்வைத்து சஜித் பிரேமதாசவின் தேவையை இல்லாமல் செய்வதற்கான முயற்சிகளில் ரவி கருணாநாயக்க ஈடுபட்டிருப்பதாக ஐ.தே.க. வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ரணிலின் தலைமைக்கு மாற்றாக சஜீத் கருதப்படுவதற்குக் காரணம் அவரது தேசியவாதக் கருத்துக்களும், சிங்கள மக்களைக் கவரக் கூடிய தன்மையும் என்று கூறப்படுகின்றது. இதனால் சஜித் வகிக்கக்கூடிய பாத்திரத்தை தானே எடுத்துக்கொண்டால், சஜித்துக்குப் பதிலாக தன்னை முன்னுறுத்திக்கொள்ள முடியும் என ரவி கருதுகின்றார் போலும்.
ஜே.வி.பி.யிடம் கடன் வாங்கிய கருத்துக்களையே ரவி கருணாநாயக்க முன்வைத்திருக்கின்றார் எனக் கூறப்படுகின்றது. ஜே.வி.பி.தான் இவ்வாறாக இந்தியாவுக்கு எதிரான கருத்துக்களை வழமையாக முன்வைத்து தமது அரசியல் செயற்பாடுகளை மேற்கொள்கின்றது. ஜே.வி.பி. நீண்டகாலமாகக் கடைப்பிடித்துவரும் தேசிய வாதக் கருத்துக்களுக்கு இது ஏற்புடையதுதான். ஆனால், ஐ.தே.க.வின் கொள்கைகள் மற்றும் அது கடந்துவந்திருக்கும் பாதையைப் பொறுத்தவரையில் இந்தக் கருத்துக்கள் பொருத்தமானவையாகத் தெரியவில்லை.
ரவியின் கருத்துக்கள் கட்சித் தலைவருக்கு நிச்சயமாக சங்கடமான ஒரு நிலையைக் கொடுத்திருக்கும்!
இனவாத, தேசியவாதப் போக்கில் மகிந்த முன்னெடுக்கும் யெற்பாடுகள்தான் அவரது வெற்றிக்குப் பெரிதும் துணையாக இருந்துள்ளன எனத் தெரிவிக்கப்படும் பின்னணியில், ஐ.தே.க.வும் அதே பாதையில் சென்றால் மட்டும்தான் தேர்தல்களில் வெற்றியைப் பெற்றுக்கொள்ள முடியும் எனத் தெரிவிக்கப்படும் சில கருத்துக்களின் பின்னணியில்தான் ரவி கருணாநாயக்கவும் தன்னுடைய அணுகுமுறையை மாற்றிகொள்வதற்கு முற்பட்டிருக்கின்றார் போலத் தெரிகின்றது.
வழமையாக கோட்டும் சூட்டுமாகவே அனைத்துக் கூட்டங்களுக்கும் சமூகமளிக்கும் ரவி கருணாநாயக்க, அண்மையில் இடம்பெற்ற வைபவம் ஒன்றில் வேட்டியும், நாஷனலுமாக வந்திருந்தமையையும் காண முடிந்தது. அதாவது இலங்கையைப் பொறுத்தவரையில் தேர்தலில் வெற்றிபெற வேண்டுமானால் கோட்டும் சூட்டும் பொருத்தமற்றது என்பதை அவர் புரிந்துகொள்ளத் தொடங்கியிருப்பதை இது உணர்த்துகின்றது. அதேவேளையில் ரணிலுக்கு அடுத்ததாக தான்தான் என்பதை உணர்த்துவதற்கு அவர் முற்பட்டிருப்பதையும் இது காட்டுகின்றது.
சிங்கள மக்களைகன் கவர்வதற்கு இவ்வாறான வேஷம் பொருத்தமானது என ரவி கருணாநாயக்க கருதலாம். ஆனால், ஐக்கிய தேசியக் கட்சியைப் பொறுத்தவரையில் அது நீண்டகாலமாகவே சிறுபான்மையினருடைய வாக்கு வங்கிகளையே தமது தேர்தல் வெற்றிகளுக்காக நம்பியிருந்தது. இந்தக் கொள்கை மாற்றம் மட்டும் ஐ.தே.க.வை வெற்றியை நோக்கிக் கொண்டு செல்வதாக அமைந்துவிடும் எனக் கருத முடியாது.
No comments:
Post a Comment